செவ்வாய், 22 மே, 2012

ஃபிளாஸ் பாக் -1




ஃபிளாஸ் பாக் -1


கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த காலங்களில் ஏதாவது ஒரு காதல் பேசும் திரைப் படங்கள் வெளிவந்து பல காதல்களை கனிய , உதிர, உணர வைத்திருக்கும் .. ... அதுவும் கல்லூரியை கதைக் களமாக வைத்து வரும் படங்கள் என்றால் அதன் பாதிப்பே அதி பயங்கரமானது தான் ...

நான் கல்லூரி படிக்கும் போது வந்த திரைப் படம் சேரனின் ஆட்டோகிராப் - (சிலர் கமலா, லத்திகா என்று காதல் கதையுடன் முதல் பாதியும், இரண்டாம் பாதியில் வரும் சிநேகா என்ற தோழியுடன் இரண்டாம் பாதையும் பயணிக்கும்). என் நண்பர்களில் பெரும்பாலோர் "சிநேகா போல ஒரு தோழி இருந்தால் எப்படி இருக்கும்" என்று கற்பனை/தவம் செய்துக் கொண்டிருந்தனர்.

பட்டாம்பூச்சிக் காதல் போல பள்ளிக் காதலும், பூக்களால் கோர்த்த வண்ணச் சித்திரமாய் கல்லூரிக் காதலும், வாழ்க்கையை மீட்டெடுக்கும் தோழமையும் நாம் வாழுகின்ற/நமக்கு நேர்கின்ற சாதாரண சூழல்களை பிண்ணிக் கொண்டு மனத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்களோடு எங்களை மலைக்க வைத்த சினிமா. எங்கள் வகுப்பில் ஆண், பெண் என்ற பேதமின்றி (கிராமம் என்பதால் அது அதிசயம் ) எல்லோரும் சேர்ந்து ரசித்தோம்.

1 . "கிழக்கே பார்ப்பேன்" என்ற பாடலும், "ஒவ்வொருப் பூக்களுமே" என்றப் பாடல்களை பாடாத நாட்களில் மட்டுமே கல்லூரிப் பேருந்து ஓடாமல் இருந்தது, அன்றெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகள்.
2 . சில காதல்கள் சாதாரண கிராமத்து பெண்களையும் கோபிகா ஆக்கியது, ஆட்டோகிராப்பை அடுத்து வந்த எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் எங்கள் கல்லூரிப் பெண்களின் ஈரம் படிந்திருக்கும் கூந்தலில் கோபிகாக்கள் தெரிந்தனர்.
3 . சில காதல்கள் சினேகாவை அடையாளம் காட்டி கிள்ளி எறியப் பட்டது "(நாம இனிமேல் சேரன் , சிநேகா மாதிரி இருப்போம் "என்று காதலை நட்பாக சில புத்திசாலிப் பெண்கள் மாற்றிவிட ..சில ஆண்கள் மட்டும் இயக்குனர் சேரனை வசை பாடிக் கொண்டிருந்தனர்.
4 .இந்தப் படம் பார்க்க மிகவும் கண்டிப்பான அந்தக் கல்லூரியிலேயே எல்லா டிபார்த்மன்ட்டுகளிலும் மாஸ் கட் அடித்து சென்றனர்.
5 . படத்தில் வராத "ரொம்ப ரொம்ப மோசமுங்க பொம்பள ஜாதி" என்றப் பாடல் மினிபஸ்களில் திரும்ப திரும்ப தேய்க்கப் பட்டு கொண்டாடப் பட்டது.
6 .எங்கள் கல்லூரி வாழ்க்கையோடு கலந்துவிட்டப் படம் அது , நாங்கள் பட்டம் வாங்கி செல்லும் பொழுது கண்ணீர்த் தாரைகளுடன் வெளியேறும் பொழுது "ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! என்று நெஞ்சைக் கசக்கியது.

இன்றும் எங்காவது இந்தப் படத்தின் பாடல்களைப் பார்க்கும் பொழுது , கல்லூரிக்குள் சென்று அமர்ந்து விடுகிறது என் மனம். என் இரு நண்பர்கள், எங்களுடைய காதல்கள் ,எங்கள் நட்பு என நிலவு போல ஒரே கணத்தில் வளர்ந்து தேயும்...அப்பொழுது நான் , எங்கள் வகுப்பு இருக்கையில்அமர்ந்து இரும்பு மேஜையில் ஒரு ருபாய் காசைக் கொண்டு எங்கள் எழுவர் நட்பின் முதல் பெயர்களை சுரண்டிப் பதிந்திருந்த எங்கள் குழுவின் பெயரை (KAMP) தடவிப் பார்க்கிறேன்.


மெல்லிய மனித உணர்வுகளில் வாழும் உள்ளங்களுக்கான அந்தப் படம், அதன் நினைவுகள் என்னை விட்டு எந்நாளும் அகலாது ...நான் நெடுங்காலமாய் வைத்திருந்த காலர் டியூன் "மனமே நலமா, உந்தன் மாற்றங்கள் சுகமா" என்ற கியூட் சாங்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக