வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 34 / ஒரு தொண்டனின் கதை

ஒரு தொண்டனின் கதை

(எப்படி எழுகிறது பிரிவினை கோரிக்கை?? )


 நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பிரதான தொழில் அரசு இலாகவோடு தொடர்புடையது தான். ஆனால், அதில் நமக்கு பைசா தேறாது என்றாலும், இந்த நாட்டின் ரியலெஸ்டேட் தொழில் போன்ற கருப்பு விவாகரங்களுக்கு ஆதாரமான தரகினை செய்து சுபிட்சமான நாடாக மாற்றும் பணி தான் எங்களுக்குத் தலையானது. எங்களுக்கும், நான் சொல்லப் போகும் அதிகாரிகளுக்கும் இடையே அரசாங்க வேலை என்கிற அந்தஸ்து மட்டும் தான் வித்தியாசம். ஆனால் அதை அதிகாரம் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் போடும் ஆட்டம், தினமும் ஈட்டும் வருவாயோடு தாராளமாக சாபத்தையும் கொண்டு செல்லும் அளவுக்கு அதி உன்னதமானது. ஒரு முதுகலைப் பட்டம் பெற்ற 50 வயதுள்ள நபர் கூட 25-28 வயது சிப்பாய் மற்றும் office assistant ஆகியோரை சார்!! சார்!! என்று அழைத்துச் செல்லும் அவலங்களை கண் கூடப் பார்த்திருக்கிறேன்.

பொது அறிவு என்பது துளியும் இல்லாத நான்காம் கிரேடு ஆஃபிசர்கள் கூட தினமும் 1000 முதல் 2000 வரை சம்பாதிக்கும் நிலையை இந்தியாவிலேயே இந்தத் துறையில் மட்டுமே பார்க்கலாம், அது போன்ற பொறம்போக்கிடம் தமது அடையாள அட்டை வாங்குவதற்காக, MNCயில் வேலை பார்க்கிறேன் என்று சொல்லி தினமும் டூவிலரை ஸ்டார்ட் செய்யும் இளைஞனின் பொழுது, அவன் நம்பிக்கையைப் போலே இழுத்து அடிக்கும் இது போன்ற லஞ்சப் பேய்களிடம்.

லஞ்சம் என்ற வார்த்தையை எல்லாம் இப்பொது பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதையும் கூட இப்பொழுது கௌரவமான மாடர்ன் பெயர்களில்  ஸ்பீட் மணி, எக்ஷ்ட்ராடினரி மணி, பெட்டி காஷ், Annexure என்று வெவ்வேறு அரசு இயந்திரங்களை தொய்வு இல்லாமல் இயங்க வைக்கும் க்ரீஸ் டப்பாவாக லஞ்சப் பணமானது செயல்பட்டு வருகிறது. இன்னும் எழுதினால் ஏதாவது ஷங்கர் படம் வசனம் போல் ஆகிவிடும்.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில்  தணிக்கை சம்பந்தமாக ஒரு அந்த இலாகாவைச் சேர்ந்த ஒரு அதிகாரியை அழைத்து வந்தோம், என்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்த நண்பர் அந்த அதிகாரியை அழைத்து வரச் சென்றார். அந்த அதிகாரியோ வயது மிகவும் குறைந்த ஒரு வடநாட்டு அதிகாரி (பெண்). அவரை அந்த அதிகாரி பின்னர் பயந்தவாறே தொடர்ந்து வந்தது மிகவும் கடினமாக இருந்தது. (அவர் பெண் என்பதால் அல்ல).ஏனென்றால் அவர் எங்கள் அலுவலகம் வந்து சில நிமிடங்களில் புரிந்து கொண்டேன் அவருக்கு பொது விஷயம் என்று ஒரு இழவும் தெரிந்து கொள்ளவில்லை என்று, அது அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

மத்திய அரசில் வேலைக்கு சேர்வதற்கு இந்தி தெரிந்தவர்களுக்கு ஒரு கூடுதல் Advantage ஆகவோ, அவர்கள் ஆங்கிலத்தில் தேர்வு எழுதவோ அல்லது வல்லுனராகவோ இருக்கத் தேவையில்லை. பாம்பேயிலோ, டெல்லியிலோ இருக்கும் எங்கள் கூட்டு நிறுவனங்களில் இருக்கும் பெரிய அதிகாரிகள் கூட சாதாரணமாக ஹிந்தியில் உரையாட, நாம் தான் ஆங்கிலத்தைப் பிடித்து தொங்கி, ஊசலாடி, பாடை கெட்டி வாழ்கிறோம். போதாதைக்கு Spoken English வகுப்புகளிலும் Repidex வாங்கிப் புரட்டி எடுத்தாலும், First in First out methodஇல் நாம் இன்று புதிதாகக் கற்கும் ஒரு ஆங்கிலச் சொல்லிற்கு இணையாக ஒரு சொல்லை மறந்தும் போகிறோம்... இதை எல்லாம் நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு மைனாரிட்டி - மைனாரிட்டியாய் இருந்த போதும் நீங்கள் தான்  இந்த சமூகத்தின்(Working Class People) ஆதிக்க சாதியாகவும் இருக்கிறீர்கள்.

இது மத்திய அரசு நிறுவனம் என்பதால்  வடநாட்டு ஆஃபிஸர்களை நிறையவே  பார்க்கலாம், அதுவும் சென்னையென்றால் - பாதுகாப்பு மற்றும் நிறைய ஸ்பீடு மணி என்கிற இரண்டு லட்டுகள் இருப்பதால், அருணாச்சல் பிரதேசத்தில் கால் வைக்கும் சீனர்கள் போல, அரசு அதிகாரிகள் சென்னையில்  இடம் மாற்றம் கேட்டு வந்து குவிகிறார்கள். நான் வந்த ஆறு வருடத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு நானும் கூட ஒரு சாட்சி தான்.

சம்பவம் நடந்த அன்றும் அப்படித் தான் அந்த அதிகாரி, எங்கள் அலுவலகம் நோக்கி காரினுள் நுழைவதற்குள்ளேயே ஆயிரம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுக்கிறார் என்று என் நண்பர் என்னிடம் சொன்னார். அவர் வரும் தோரணையிலும், நம்மை சட்டை செய்யாத அலட்சியப் போக்குமே “சரி!! இது வேலைக்கு ஆகாத கேஸ்” என்று முடிவு செய்து விட்டேன். நினைத்தது போலவே என்னிடம் துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்தார். என் நண்பர் ஒரு B.A. Tamil (நல்லவேளை அவர் MA தமிழ் படிக்கவில்லை).
அவர் கேள்விக்கு நான் பதில் சொல்லும் போது கிடைக்கும் CLUEவைக் கொண்டு அடுத்த கேள்விக்கான கொக்கி போட்டார், நானும் அவருக்குத் தகுந்தார் போல் கொஞ்சம் அதிகமான தகவல்களைச் சொல்லி முடித்து எப்படியோ சரி கட்டினேன். ஆனால் என்னாலே அவரை ஏதாவது குத்திக் காண்பிக்க வேண்டும் எனப்து போல் இருக்க, அவருக்கு தேவையான பதிலைச் சொல்லிவிட்டு “It's very common and fundamental thing, usually ignored in such inspections”என்று சொல்லிவிட்டு அந்த அம்மையாரின் ஈகோவைக் கீரிவிட்டேன். அந்நேரம் பார்த்து அவர் அதிர்ஷ்டம் என்னைப் பழி வாங்கும் சந்தர்பத்தினைக் கொடுத்தது, அவரும் எங்கள் அலுவலக முகவரியில் இருந்த ஒரு சிறிய தவறினை கண்டுபிடித்து, ஊதி ஹைட்ரஜன் பலூனாகப் பெரிதாக்கினார். நம்மிடம் எல்லாமும் சரியாக இருக்கிறது என்றாலும்,  இதைச் சொல்லி மட்டும் அவரை அவ்வளவு எளிதாகச் சரிபடுத்த முடியாது என்று தோன்றியது. எங்கேயோ போற மாரியாத்தா என்மேல வந்து ஏறு ஆத்தா” என்கிற கதையாகிவிட்டது

நம்மிடம் பிரச்சினை என்பதை உணர்தவுடன் பதட்டம் ஆகிவிட்டது. எனக்கு டென்சன் கிட்ட வந்தால் ஆங்கிலம் ஊருக்குப் போயிரும், அப்படியே செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்க, திடீரென்று உள்ளே நுழைந்த என் சீனயர்.. திஸ், தட் என்று சைகை சொல்ல ஆரம்பிக்க, “பாப்ரே!! பாப்ரே ..டுமாரோ மீட் மீ இன் மை ஆஃபிஸ்” என்று ஆய்வினை முடித்து விட்டுக் கையெழுத்திட்டார். அடக்கி வைத்திருந்த யூரினை எல்லாம் கியூவில் நின்று டிஸ்போஸ் செய்து விட்டு, டீக் கடைக்குச் சென்றோம்.

அவர் என்னிடம் கேட்டார்,  “ஆமா அவங்க ஏதோ நம்ம ஆஃபிஸ் ரெஸிடன்ஸ் என்றெல்லாம் பேசினாங்களே அதுக்கு என்ன அர்த்தம்??” என்றார்.

“ நம் அலுவலகத்தை வணிக கட்டடத்தில் வைக்காது, ஒரு குடியிருப்பில் ஏன் வைத்திருக்கிறீர்கள் ??” என்று அவர் கேட்டதற்கான அர்த்தம் சொன்னேன்.

“ஓஹோ அதனால தான் நான் கடைசியாகப் பேசும் போது போதும்டா சாமி என்று ஓடிட்டாங்க போலிருக்கு??” என்று சொன்னார்.

அப்பொழுது தான் விளங்கியது அந்த அதிகாரி போனதற்கு என் நண்பர் தான் காரணமாக இருக்கும் என்று , ஆனால் அது எப்படி??.. அப்படி என்ன பதில் சொல்லியிருப்பார் என்று அறியும் பொருட்டு “நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?” என்று ஆர்வத்துடன் நான் கேட்டேன்.

 “அதற்கு நான் சொன்னேன் ஆஃபிஸ் இன்னும் அஞ்சு நிமிஷத்துல் வந்துடும், ரெசிடன்ஸ் இன்னும் பத்து கிலோமீட்டர் ஆகும்”.என்றார் அவர்.

 சத்தியமே வெல்லும் என்று பல சோக காலங்களில் ஒரு ஆறுதல் Dialogue சொல்வோம். இப்போது இப்படிச் சொன்னால் Better ஆக இருக்கும்- “ சாமர்த்தியமான சத்தியமே வெல்லும்”.

”ஆஹா எப்படியோ பிராப்ளம் சரியான ஓகே!! எப்படியும் காசு வாங்கத் தானே போகிறார்கள், நீங்களும் தயவு செய்து இங்க்லீஷ் கத்துக்கிறேன்னு செலவு செய்ய வேண்டாம், கத்துக் கிட்டாலும் வெளிய காட்டாதிங்க, இது தான் நமக்கு இருக்கும் ப்ளஸ் பாயிண்டே” என்றேன். சென்னையில் இந்தத் துறையில் இருக்கும் அநேக முகவர்களின் அலுவலகத்தில் இதே நிலைமை தான்..

“எம் பையன இதே துறையில ஆணையர் ஆக்கனும்னு நினைச்சேன் ஆனா அது மட்டும் பத்தாது , உண்மையிலேயே இந்த மாதிரி ஆஃபிசர்களிடம் இருந்து இதற்கு ஒரு அரசியல் தீர்வும் காண வேண்டும் என்று எனக்குத் தோணுது” என்றார்.

“அப்போ இதற்குத் தீர்வு??” - இது நான்

“தமிழ்நாடு தமிழருக்கே என்கிற நிலை வரணும்!!” , இது வரை அவர் தி.மு.க அனுதாபி, இப்பொது அவர் சீமானின் பேச்சுகளைத் தான் விரும்பிக் கேட்கிறார் - ஆனால் இவரா பிரிவினைவாதி ???

நம் வாழ்வில் எதிர்பாராத சில அபத்தமான தருணங்களில் இருந்து கிடைக்கப்பெறும் பாடம் மிக முக்கியமானதாய் இருக்கும். ஒரு கட்டுரைக்குத் தேவையான வழக்கமான நீதி சொல்லம் முடிவுரை தான் என்றாலும், போகிற போக்கில் நாம் உதறித் தள்ளுகிற, அசட்டை பண்ணாத, சாதாரண்மாய்த் தோன்றும் விஷயங்களை ஆராய்ந்தால் ஒரு பெரிய System பற்றிய அல்லது நம்மை நிர்பந்திக்கும் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத Patterns பற்றியும் நாம் விவாதிக்க வேண்டிய பெரிய வெளி (Space) இருப்பது தெரியும்.

A true patriot save his nation from the government - எட்வர்ட் அபி


--
தொடரும்
ஜீவ.கரிகாலன்

புதன், 28 ஆகஸ்ட், 2013

புனர்ஜென்மம்

             
             அன்று நான் திட்டமிட்டபடி நண்பர்களை வெளியேற்றி இருந்தேன், அந்த நீளமான அறையில் நானும் அவளும் மட்டும் தனித்திருந்தோம், அவளும் நான் செய்த முன்னேற்பாட்டினை அறிந்திருந்தாள், ஆனால் அவள் அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை, அவள் என்ன சாதாரணமானவளா? இதுவரை  நான் அவளிடம் இருந்து எத்தனை அடிகள் தள்ளியிருக்க வேண்டும் என்பதை அவள் கண்கள் மூலம் தான் ஒவ்வொரு முறையும் எனக்கு தெரியப் படுத்துவாள். அதற்கு எந்தப் பேச்சும் தேவையில்லை, அவள் கண்கள் தான் அவளருகில் நான் அமர்வதற்கோ, நிற்பதற்கோ, கூட நடப்பதற்கோ அனுமதிக்கும். ஏன், அவளை வண்டியில் அழைத்துச் செல்வதற்கு முன் நான் கேட்கும் “If you don't mind?” என்று கூட அவள் கண்கள் அனுமதித்த பின்னர் தான் என்னால் கேட்க முடியும்.

“If you don't mind அமுதா.. நான் உன்னை Drop பண்ணட்டுமா”?? :
#“உனக்கு ஏன் சிரமம்”,
‘எனக்கு இதுல என்ன சிரமம்’ என்று நான் பதில் சொல்லுவேன், அன்று அவள் என்னோடு வரச் சம்மதித்து விடுவாள்
#“இல்ல..பா நானே போயிடுவேன்”,
அவள் என்னோடு வருவதற்கு யோசிக்கிறாள் என்று அர்த்தம், ஆனால் கொஞ்சம் அதிகமாகக் கெஞ்சினால் என்னோடு வரலாம்
#“ஐயோ எனக்கு டைம் ஆயிடும்மே”,
‘மடையா! இன்னும் ஏண்டா இன்னும் வெயிட் பண்ணுற, சீக்கிறம் அவளை ஏத்திட்டுக் கிளம்பு
#“ஐயோ எங்க அண்ணன், பார்த்துடுவான்”
‘கருநாக்கு தேவதை , அவள் வாய் வச்சா கண்டிப்பா நடக்கும், அடி வாங்காம் வீடு போய் சேரனும்,  “you reached safe??”என்று 2,3 மெஸேஜ் மட்டும் தட்டுனாலே போதும்.

இப்படிப் பட்ட அவளையும்,, ஒரு இரவு போனிலேயே புரபோஸ் பண்ணி,convince பண்ணி அடுத்த நாளே சம்மதம் வாங்கி, இந்த சந்திப்பு நிகழ்ந்திருந்தது. அதிசயமாக என் நண்பர்கள் என் காதலுக்கு உதவி செய்கிறேன் என்று கைகளைக் குலுக்கிவிட்டு அங்கு இடமளித்தனர். அந்த அறையில் இப்போது நானும் அவளும் மட்டுமே, எங்களுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. ஆனால், இப்படியே அவளிடம் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி ஒரு மணி நேரமாக எதிரினில் இருந்த இருக்கைகளின் ஒன்றில் அமர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த இருக்கையைக் கூட அவள் பார்வை யால் தேர்ந்தெடுத்தது தான், என்னைத் துளியும் சட்டை பண்ணாமல் கணிணியில் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் மிகவும் பதட்டமாய் இருக்கிறாள் என்று அவள் மீது வீசிய ஒரு வாசம் எனக்குச் சொன்னது.

வாசனை எப்படிச் சொல்லும் அவள் உணர்வை?? எனக்கு அந்த வாசனையின் வேதியல் சமன்பாடு எல்லாம் தெரியாது. ஆனால் அது ஒரு நறுமணம் தான் அதில் வியர்வையும் கலந்திருக்கிறது, அது தான் முக்கிய மூலக்கூறு போல. என்னைப் பார்க்க வருவதால் மிகவும் நேர்த்தியாக பட்டும் படாமல் முகத்தில் அப்பியிருந்த பூச்சு அவள் பதட்டமடைந்ததை வெளிக்காட்டியது. நான் இப்பொழுது என்ன செய்யட்டும்??, அவள் அனுமதியின்றி, எழுந்து அவள் பின்புறம் வந்து நின்றேன். அவள் நான் நின்றிருப்பதை உணர்ந்திருக்க வேண்டும், தாவித் தாவிக் குதித்து அடுத்த லெவல்களைக் கடந்து வந்த அந்த Super Mario, விஸ்வரூபத்தில் இருந்து வாமணனாகக் குறைந்தான். அவன் ஓட்டத்தின் வேகம் வெகுவாகக் குறைந்தது.

அப்படியே வைத்திருந்த Life optionகள் ஒன்றன் பின் ஒன்றாகக் குறைந்து வந்தது. இது தான் கடைசி வாய்ப்பு, மொத்த விளையாட்டும் முடிந்து விட்டால் அவளுக்கு என் மீது கோபம் வந்து விடக்கூடும், இல்லை என்னை அமரச் செய்துவிட்டு மறுபடியும் முதலில் இருந்து ஆடுவாள். ”ஒருவேளை நான் கிளம்புறேன், அண்ணா வெய்ட் பண்ணுவார்” என்று கிளம்பிடும் ஆபத்தும் இருக்கிறது. இப்படியே கொஞ்ச நேரம் தாமதித்தால் கூட நண்பர்கள் வந்து விடுவார்கள். அப்படியென்றால் நான் என்ன செய்யனும், நான் என்ன செய்ய முடியும்?? அவளருகில் சென்று, இல்லாத தைரியத்தை எங்கிருந்தோ கையிறு கொண்டு கட்டி இழுத்து, அமர்ந்திருந்த அவள் தோள்களில் என் இரு கைகளையும் வைத்து விட்டேன்.

என் கைகள் பட்ட அந்த கணமே அவள் எழுந்து நின்றாள், என் பக்கம் திரும்பாமல் நின்று கொண்டிருந்தாள். என் கைகள் தோளில் இருந்து கைகள் வழியே படர்ந்து கீழிறங்கியது, இரண்டு கைகளையும் உரசிக் கொண்டே என் கைகள் இறங்கியது, எங்கள் கைகளின் வழியே எங்கள் உடல்கள் முதன் முதலாக் ஸ்பரிசித்துக் கொண்டன. எந்த நொடியும் அவள் என்னை அறையவோ, இல்லை அறையினை விட்டு செல்லவோக் கூடும். ஆனால் அவள் கைகள் சில்லிட்டு இருந்தன, எனக்கோ கொதித்துப் போய் இருந்தது.

 யார் உடல் சில்லிட்டும், யார் உடல் கொதித்துக் கொண்டும் இருந்தது? என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை, ஒருவேளை என் இதயம் சில்லிட்டும், என் மூளை கொதித்தும் போயிருக்கலாம், இல்லை எனக்குக் கேட்கும் இதயத் துடிப்பு அவளுடையதாய் இருக்கலாம். அடுத்து நான் என்ன செய்வது?.

 எத்தனை கோடி அணுக்களால் நான் ஆனவன் என்று இப்பொழுது தான் உணர்கிறேன், அத்தனை அணுக்களும் அவளுக்கு முத்தம் கொடுக்கச் சொல்லிக் கொஞ்சின, கெஞ்சின, மிரட்டின. நானும் இன்னும் சற்று அருகில் அவள் பின்னால் வந்து, பின்னலிடாத அவள் கூந்தலை ஒரு புறமாக விலக்கி, சிறிய ரோமங்கள் இருந்த அவள் வலப்பக்கத் தோள் மீது என் முத்தம் வைத்தேன், என் உதடுகள் பணித்த இடம் வேறு, ஆனால் நான் அவள் தோள்களில் தான் ஈரம் வைத்தேன், ஆனால் இதழ்களை அவள் தோளில் இருந்து உடனேயே எடுக்க எந்த நரம்பு மண்டலமும் அனுமதிக்கவில்லை. மெதுவாக என் உதடுகளால் உராய்ந்துக் கொண்டே அவள் பின் கழுத்தில் ஊர்ந்து ,அங்கே சில நொடிகளும்; காது மடல்களைத் தொட்டு, அங்கே சில நொடிகளும் அது தொடர்ந்தது.

காதில் இருந்து கீழிறங்கி அவள் கன்னத்தின் எல்லை அடைந்திருந்த போது அதன் சுவை மாறியிருந்தது. மெதுவாக அவள் என் புறம் திரும்பத் தொடங்கியிருந்தாள்?? இல்லை இல்லை நான் தான் அவளை இயக்கிக் கொண்டிருந்தேன்!! இத்தனை முத்தத்திலும் என் ஈகோ விழிப்போடு தான் இருக்கிறது பாருங்கள்!! அவள் கண்கள் அப்பொழுது மூடியிருந்தது. கன்னத்தின் மையத்தில் என் இதழ்கள் வந்திருந்தபோது தான் அவள் போட்டிருக்கும் வாசனைப் பூச்சுகளைத் தாண்டியும் அவளாய் இருக்கின்ற அவள் மணம் எனக்குக் கமழ்ந்தது, அது என் அடுத்த ஜென்மத்திலும் என் நினைவில் தங்குமாறு என் மூளையின் நியூரான்கள் சேமித்து வைத்திருந்தன. கன்னத்தின் மையத்தில் இருக்கும் பொழுது நான் அவளை பக்கவாட்டிலிருந்து அணைத்திருக்கிறேன். அவள் மேலுதடு மட்டும் என் கண்களில் தெரிந்தது, கீழுதட்டைக் காணவில்லை. சட்டென்று அவள் கண்களைக் கண்டேன், நான் பார்க்கிறேன் என்று அவளும் உனர்ந்திருப்பாள் போல அவளும் என்னைப் பார்க்க, அடுத்த கணத்திலேயே ஒரு மீட்டர் இடைவெளி.

மறுபடியும் அவளை நோக்கி முதல் அடியை நான் எடுத்து வைக்க,.........ஆ..........ஆ.........உயிர் போகும் வலியால் என் வலது கால் துடித்தது. அந்தக் காலில் ஏதோ ஒரு எலும்பு உடைந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

மீண்டும் அதே கனவில் இருந்து தான் விழிக்கிறேன், ஆனால் என் இடது காலில் மட்டும் மெய்யான வலி, கண்களில் வலி பொறுக்க முடியாது நீர் வழிந்தோடியது. கணுக்காலிற்கு சற்று மேலே காலெலும்பு உடைந்திருக்க வேண்டும். வலியில் காலினையே வெட்டி எரியும் வெறி இன்னும் சற்று நேரத்தில் வந்திடலாம், ஆனால் வலி கால்களில் மட்டும் இல்லையே. பழைய துனியில் ஏதேதோ இலைகளை வைத்து கட்டு போடப்பட்டிருந்தது. ஒரு குடிசை போன்ற சிறு இடத்தில் ஒரு பக்கம் மட்டுமே தட்டியும் மற்ற மூன்று பக்கமும் மலைப் பாறைகளே பக்கச் சுவராக இருந்தது.

“நான் எங்கே இருக்கிறேன்”

ஆம் நான் தனியாகத் தான் இறங்கினேன். அது நான் தான் ப்ளான் பண்ண ட்ரெக்கிங், நண்பர்களோடு கோபம் கொண்டு தவமுனிப் பாறையிலிருந்து தன்னந்தனியாக இறங்கி வந்தேன். நினைவுகள் திரும்பின.

என் பெயரை அழைத்தபடியே, என் நண்பர்களும் என்னை சற்றே பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தது, அதனால் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தேன். திடிரென்று நான் இறங்கிக் கொண்டிருந்த பாதை தவறென்று தோன்றியது, நண்பர்களின் குரலும் கேட்கவில்லை. வேறு வழியின்றி, வந்த வழியே மேலேறினேன், சரியான பாதையில் தான் ஏறினேன் என்றும் தெரியவில்லை, கோரைப் புற்களாக இருந்த மலைப் பகுதியாக மாறியது. அந்த இறக்கத்தில் பார்க்கும் பொழுது சற்று தொலைவில் என் நண்பர்கள் எனக்கு முன்பாக கீழிறங்குவது தெரிந்தது, என் நண்பன் பெயரை “கனா....” என்று அழைப்பதற்குள் அந்தப் புற்களின் பலமான் வேர் பகுதியில் இடறி விழுந்து உருண்டேன்.

இன்னும் தெளிவாக நினைத்துப் பார்த்தேன், கீழே விழுந்து உருளும் போதே!! நான் மூர்ச்சையடைந்திருக்க வேண்டும். கால் வலித்த்து. ஆம் என் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த பனி மூட்டம், எனக்கு நினைவைத் தந்தது, அந்த மலைகளுக்கு இடைவெளியில் இருந்த பள்ளத் தாக்கு என் தலைக்கு மேலே இருந்தது. ஆமாம் நான் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தேன். கண்களின் வழியே இரத்தம் வருவது போல் இருந்தது. என் மூலாதாரம் சுருங்கிக் கொண்டிருந்தது, பல மரங்களின் கிளைகளும், கூரிய பாறைகள் சிலவற்றையும் நான் பார்க்க முடிந்தது. பாறையின் இடுக்குகளில் என் இரண்டு கால்களும் சிக்கியிருந்தன. தாங்க முடியாத வலி, ஒரு மரத்தின் வேரினைப் பிடித்தேன். அதைப் பிடித்தபடியே மேலே செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

அந்த வேரினை இறுகப் பற்றிக் கொண்டு வலது காலினை மெதுவாக எடுக்கும் பொழுது, இடது கால் மீது மொத்த பாரமும் செல்ல, வலியும் பன்மடங்கு அதிகரித்தது. வலியைப் பொறுக்க முடியாமால் வேரினைக் கடுத்தபடி கத்தினேன். ஆஅ...ல்ல்ல்..ஆம் ஞாபகம் இருக்கிறது, அப்பொழுது இறுதியாக ஒரு பூவின் வாசம் வீசியது, அப்படியே என் நினைவுகள் தப்பியிருக்க வேண்டும். அதற்குப் பின் எதுவும் ஞாபகம் இல்லை. மிகவும் பசிக்கவும் செய்தது. அந்தக் குடிலில் வேறு யாரும் இல்லை. அதுவரை தான் படுத்திருந்தது கூட ஒரு கட்டில் இல்லை பாறை தான் என்று தெரிந்து கொண்டான்.

“ஹலோ!!! யாராவது இருக்கிங்களா?? ஹளோ!!!”
“எனக்குப் பசி உயிர் போகுது!! யாராவது இருக்கிங்களா??”
யாரோ வரும் ஓசை கேட்டது.

மெதுவாக வாயிலின் வழியே எட்டிப் பார்த்தேன், ஒரு கூடையைத் தூக்கியபடி ஒரு பெண் வந்துக் கொண்டிருந்தாள், என்னை விட வயதுக் குறைந்தவளாகத் தான் தெரிந்தாள்
“ஹலோ....!!”
அவள் நேராக என் குடிலுக்கு தான் வந்துக் கொண்டிருந்தாள். வெறும் சேலை மட்டும் அணிந்து கொண்டிருந்த அவள் கழுத்தில் ஒரு கருப்பு கயிறு மட்டும் தொங்கியது. நேராக, உள்ளே வந்து அவள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தப்டியே இருந்தாள். அதற்குள் நான் எழுந்து விட்டேனென்று ஆச்சரியமாகப் பார்த்திருக்க வேண்டும். அவளும் அதிகமாய வியர்த்திருந்தாள், ஏதோ வேலை செய்திருக்க வேண்டும், இல்லை மலை ஏறியிருக்க வேண்டும். தன் கையிலிருந்த கூடையில் இருந்து ஒரு நழுங்கிய பிரெட் பாக்கெட்டை நீட்டினாள்.
”தேங்க்ஸ்”
வாங்கிப் பிரித்து, உண்டேன். வெறுமனே உண்பதற்கு பிடிக்கவே இல்லை, ஆனாலும் வேறு வழியில்லை உண்டேன். கொஞ்சம் பசியின் தீவிரம் குறைந்தது, அதனால் கால் வலியை மட்டும் இப்பொழுது தெளிவாக , தனியாக உணர முடிந்தது. இந்தப் பொல்லாத பசி உடைந்து போன காலின் வலியினை விட மோசமானது தானோ, இப்போது  வலியின் தீவிரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. உண்மையில் கால் உடைந்து தான் போயிருக்குமா என்ன? அவளிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது

“ஹலோ... எனக்கு என்ன ஆச்சு”
“..”
“நான் எங்க இருக்கேன்?”
“....”
“என் கால் என்ன உடைஞ்சு போச்சா??”
“....” தலையசைத்தாள்
“தமிழ் தெரியும்ல,, உனக்கு பேசத் தெரியுமா??”, அவளை ஒருமையில் பேசினேன்.  எனக்கு முன் பின் தெரியாதவர்கள், மேலும் எனக்கு உதவி பண்ணியவர்கள் அவர்களை நான் ஒருமையில் பேசுகின்றேனே என்று சங்கடமாக இருந்தது, பொதுவாக நான் நண்பர்களைத் தவிர யாரையும் அப்படி அழைப்பதில்லை.

“ப்ளீஸ் கொஞ்சம் பேசுங்க, இல்லை யார் என்னை தூக்கி வந்தாங்களோ அவுங்கள கூப்பிடுங்க”
“...” சிரித்தாள்
“ஹலோ என்ன சிரிக்கிரிங்க, யாரையாவது கூப்பிடுங்க”
”இங்க நான் மட்டும் தான் இருக்கேன்”, “இப்ப நாம மட்டும் தான் இருக்கோம்”.....

(தொடரும்......)

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

வாள் நட்சத்திரம் எனும் CRUXன் கதை - மகாபலிபுரம் -06

வாள் நட்சத்திரம் CRUX - த்ரிவிகர்ம சிற்பத் தொகுதி - மகாபலிபுரம் -06

(பஜ்ஜி சொஜ்ஜி - 33 சிற்பம் ஓவியம் ரசனை)

கவனிக்க : இது  ஒரு வால் நட்சத்திரம் அல்ல, வாள் நட்சத்திரம் ஆகும்

என்னடா இது நட்சத்திரக் கூட்டத்தைக் காண்பித்து ஒரு சிற்பத்தின் குறியீடாகக் காட்டுகின்றேனே என்று குழப்பம் அடைய வேண்டாம். இதைக் குறியீடாக நான் புனைவு கொள்ளும் போது தான் இந்த சிற்பத் தொகுதியின் பிரம்மாண்டம் விஸ்தீரனமாகின்றது.
குறிப்பு: வலது புறம் கீழ் இருப்பவன் இந்திரன் (வாளின் பிடியில் கைவைத்தபடி)

சென்ற பதிவில் நாம் விவரித்தோமே!! விஸ்வரூபம் கொண்ட திருமாலின் இரண்டடிகளைக் கண்டு அசூரர்கள் கவலை கொண்டிருக்க அவர்களைப் பார்த்துக் கொண்டு சற்றுத் திரும்பியபடி இருக்கும் சிற்பமான இந்திரனைக் கொல்லத் துடிப்பது போல அந்தரத்தில் நிலையில்லாத ஒருவன் கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரியும்.

அவனை நன்றாகப் பார்த்தால், அவன் தொங்கிக் கொண்டிருக்கும் உயரம், தேவர்களான சூரியன், சந்திரன் ஆகிய இருவருக்குமான மேலோகம் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம், ஆனால அவன் அதே திசையில் தொங்கவில்லை, மேலுலகத்தில் ஈர்ப்பு விசை இல்லை என்றாலும் அவன் மற்றவர்களுக்கு எதிரான திசையில் தொங்குவது போல் தெரிகிறது... இந்தச் சிற்பத் தொகுப்பைப் பற்றி சில நூலகள் மற்றும் இணையம் வாயிலாகத் தேடியதில் ஒரே மாதிரியான தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை, அதாவது அங்குத் தொங்கிய வண்ணம் இருப்பவனைப் பற்றி பல்வேறு கருத்துகள் வருகின்றன, முனைவர் சா.பாலுச்சாமியின் ”அர்ச்சுனன் தபசு” எனும் நூலில் அவனை நமுச்சி எனும் அசுரனாகவும், அவனை மகாபலியின் மகன் என்றும் கூறுகின்றார். ஆனால் மாபலிச் சக்ரவர்த்தியின் ஒரே மகன் என்று சொல்லப் படுபவன் பானாசுரன் என்று சொல்லப் படுகிறது.

சில நூல்களில் மாபலியின் மகனாக வாமணன் மீது கோபம் கொண்டு வருபவனை, வாமணன் எட்டி உதைத்து விட அவன் அந்தர லோகத்தில் பறக்கிறான் என்று சொல்லப் படுகிறது, நான் ஏற்கும் கூற்றாக இவனை திரிசங்கு என்று வைத்துக் கொள்ளவே இச்சிர்பம் இடமளிக்கிறது. திரிசங்கு எனப்படும் மன்னன் பூதவுடலோடு சொர்க்கம் செல்லும் பேராசையில், விஷ்வாமித்ரரின் ஆசை பெற்று சொர்கத்திற்கு செல்லும் பொழுது அவன் இந்திரனால் தடுக்கப் படுகிறான், பின்னர் அவனுக்கு மேலுலகமும் அல்லாமல் பூவுலகும் இல்லாமல் அந்தரத்தில் ஒரு சொர்க்கம் விஸ்வாமித்ரரால் சிருஸ்டித்துத் தரப் படுகிறது. அந்த திரிசங்கு தான் மகாபலியின் அசுர கணங்களை எதிர்க்க தயாராக இருக்கும் இந்திரனின் சிலைக்கு மேலே கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருக்கும் சிற்பம் என்று சொல்வது சிறப்பான பதிலாகக் கிடைக்கிறது.

Fiction:
புராணங்களில் மறைந்திருக்கும் அல்லது மறைந்திருப்பதாகத் தோன்றும் குறியீடுகள் யாவுமே சமகாலத்து வாசிப்பிற்கான இடத்தை அளிக்கின்றன என்பது என் கருத்து, அதன் மூலம் நமது அறிவியல், சமூகப், பொருளாதார வாழ்க்கை முறைமை பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன. அசுரர்கள் யாவருக்கும் (தலித்தியக்) குறியீடுகள் பொருந்திப் போகின்றன, இணையத்தில் மகாபலியை நான்காம வர்ணத்தைச் சேர்ந்தவனாகவே காட்டுகின்றனர், இராவணனை அந்தனர் என்று சொல்லியும் கேட்டிருக்கிறேன், பிறப்பால வேறு வர்ணத்தைச் சார்ந்தவன் வேறு தொழில்களில் இருப்பதை இப்புராணங்கள் காட்டுகிறது. கிருஷ்ணனும், பலராமனும், வராக மூர்த்தியும், மாருதியும் நான்காம் வர்ணம் தானே!! இறைவனுக்கு பெரும்பாலும் நடக்கும் திருமணம், பெரும்பாலும் வேறு ஒரு குடி(Clan)யைச் சேர்ந்த தலைவியோடு தான். ஆனால் அவர்கள் ஏன் அசுரர்களாகவே சித்தரிக்கப் படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறதே!! அதே சமயம் அவர்கள் எல்லோருமே வினை முடித்து நட்சத்திரமாகுவதாகவும், இறைவனோடு சேர்ந்து விடுவதாகவும் வருகின்றது.

இந்த நட்சத்திரம் பற்றி தானே போன தொடரில் விவாதித்தோம் எதற்காக நட்சத்திரத்தின் குறியீடாக அங்கு அந்தரத்தில் தொங்குபவனைக் காட்டினோம்?? திரிசங்கு என்று சொல்லப் படுதல் ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை வெறும் கட்டுக்கதை என்று புறக்கணித்தல் ஆகாது, உலகம் முழுவதுமுள்ள பண்டையக் கலாச்சாரங்களில் த்ரிசங்கு என்று சொல்லப் படும் நட்சத்திரக் கூட்டம் பற்றிய புராணக் க்தைகளும், நம்பிக்கைகளும் இருக்கின்றன.

சொல்லப் போனால் கி.மு 15ம் நூற்றாண்டுக்கு முந்தைய பாபிலோனிய, கிரேக்க, எகிப்திய சீன் நாகரிகங்களிலும், தொல் ஆஸ்திரேலியப் பழங்குடி, மாயன், அரிஜெண்டினா என்று இந்த நட்சத்திரக் கூட்டம் (CRUX) பற்றிய கதைகள் இருக்கின்றன.இன்று வரை இந்த ந்ட்சத்திரக் கூட்டத்தின் முக்கியத்துவம் இருக்கிறது, இதை நீங்கள் இந்த நாட்டுக் கொடிகளில் காணலாம்.


எப்படி இந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்தது என்று பார்த்தோமேயானால்? அதற்கு கிடைக்கும் விடை மிக எளிமையானது, இரவு நேரங்களில் சம வெளியிலோ அல்லது பாலைவனத்திலோ ஏன் முக்கியமாக கடல் பயணங்களில் கூட இந்த நட்சத்திரக் கூட்டம் தான் தெற்கு திசையினைக் காட்ட உதவும், அதனால் தான் இதனை Southern Cross என்றும் சொல்லுவர்.  கிரேக்க மற்றும் எகிப்திய நாகரிகங்கள் அதை ஒரு (இறந்த பின்னும் அவர்களைக் காக்கும்)அரசன் கையில் வாள் ஏந்தி நிற்பது போல உருவகப் படுத்தினர், என்ன இத்தொகுப்பில் தொங்கும் திரிசங்கும் அப்படித் தானே இருக்கிறான். சமீபத்தில் இந்தக் கதையினை (Ancient Aliens) எனும் tv Seriesலும் இதைப் பார்த்தேன்.

சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் அவன் தலை கீழாகத் தான் தொங்கிய படி இருப்பான், நமது நம்பிக்கைகளின் படி 88 நட்சத்திரக் கூட்டம் இருக்கும் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் (அது உண்மையில் நட்சத்திரத் தொகுப்பு) தானே பெயர் சொல்லியுள்ளோம், அப்படியென்றால் இந்த CRUX  எனும் நட்சத்திரக் கூட்டம் என்ன நட்சத்திரமாக இருக்கும், அந்த 22வது நட்சத்திரமா ?? ஆமாம் அதன் பெயர் என்ன திருவோணம்...

அட அது தான் திருவோணம்!!! வாமணனின் மூன்றாவது அடியால தலைக்கணம் ஒழித்த மாபலிச் சகரவர்த்தி, இறந்த பின் தன் பாட்டனாராகிய பிரகலாதனைப் போன்று நட்சத்திரமாக இறைவன் வரமளிக்கிறார், அது தான் திருவோணம் என்று கூறுகின்றனரே என்றும் கேள்வி எழுந்தது என்னுள். ஆம் அதுவும் சரி தான் பிரகலாதன், மாபலியைப் போல நட்சத்திரமாகுவதும், திரிசங்கு எனும் நட்சத்திரமும் அவர்களோடு சேர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் CRUX என்பது நட்சத்திரக் கூட்டம் தானே!! இப்படி வெவ்வேறு புராணங்களில்; நம்பிக்கைகளில் நட்சத்திரங்களும், மண்டலமும், வெளியுமாக பரந்து கிடக்கும் பாரத நம்பிக்கைகள் ஒரு மதத்திற்கானவை மட்டுமன்று, ஏனென்றால் இந்நாடு பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிகப் பெரியது..

ஒரு சிற்பத் தொகுதியானது, புராணத்தின் கதையினை மெருகூட்டி செதுக்கப்பட்டப் படைப்பாகவே இருக்கிறது என்று நான் உணர்கிறேன். ஆனால் புவியில் துருவ மாற்றம் மற்றும் பூமியின் சுற்றுப்பாதையின் இடப்பெயர்வு என்று 26000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழக்கூடிய shift-ஆக இதைப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் ஏற்றுக் கொள்ள இடமளிக்கிறது. இதைத் தான் Precession of Equinox என்று சொல்வார்கள். அந்த 26000 வருடங்களுக்கு ஒரு முறை பூமியின் நிலத்தட்டுகளிலும் பெரியதொரு மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆன்மிகம் மற்றும் புராணங்களில் மட்டுமல்லாது எல்லா பேரிடர்களிலும், துயரங்களிலும் இறைவன் மீது இருக்கும் நம்பிக்கை தான் கடைசி முயற்சியாக இருக்க முடியும், சமீபத்தில் ரிஷிகேசில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஒரு கோயிலின் மணியைப் பிடித்தாவாறே பல மணிநேரங்கள் தொங்கிக் கொண்டிருந்தவனை நினைவு கூர்ந்தேன்.


தொடரும்....

ஜீவ.கரிகாலன்

ஒரு திருத்தம் :ஒரு திருத்தம் : //சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் ”அவன் தலை கீழாகத் தான் தொங்கிய படி இருப்பான்” // இதில் மாற்றுக் கருத்தும் இருக்கிறது , நட்சத்திரங்களை இணைத்து வரையும் பொழுது அவன் கையில் வாள் ஏந்தியபடி தான் இருப்பான், ஒரு சமவெளியில் நின்று இதைப் பார்க்கும் பொழுது அவன் தலை கீழாய் தொங்குவான் என்கிற உருவாகம் சரியானது என்று சொல்ல முடியாது.
ஒருவேளை அவன் தெற்கு திசை நோக்கி வாள் நீட்டி இருப்பதால்... அது இச்சிற்பத் தொகுதியில் வடிக்கப் பெறும் போது தெற்குத் திசையினைக் குறிப்பதற்குப் பயன்பட்டிருக்கும்.

தகவலுக்கு நன்றி.ராஜகுரு ஜீவானந்தம்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

விஸ்வரூபம் - த்ரிவிகர்ம சிற்பத் தொகுதி - மகாபலிபுரம் -05

(பஜ்ஜி சொஜ்ஜி - 32 சிற்பம் ஓவியம் ரசனை)

           விஸ்வரூபம்

வெறும் உற்று நோக்குதலில் ஆரம்பித்தது தான், ஆனால் இப்பொழுது சிலைகள் என்னோடு பேச ஆரம்பித்து விட்டன, ஏனென்றால் புராணங்களை தொன்மை வடிவத்திலேயே பார்க்காமல் என் இன்றைய வாழ்வோடு பொருத்திப் படுத்திப் பார்க்க முடிகின்றது, அதனை அறிவியல் தத்துவத்துடனோ அல்லது முரண்களுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு அலாதிப் பிரியம் இருக்கிறது.

ஆயிரமாண்டுகளைத் தாண்டி நிற்கும் இது போன்ற கலை படைப்புகள் வரலாற்றைத் தாண்டி வேறு என்னவெல்லாம் சொல்கின்றன?. அதை அறிந்து கொள்ளப் பெரிய அளவிலான சிற்ப அறிவோ, புராண-வேத ஞானமோ, இல்லை அறிவியல் கோட்பாடுகளையோ அறிந்திடாத சாமான்யனாலும் எவ்வளவு தான் ஒன்றிட முடியுமோ?

விஸ்வரூபம் என்பது மனிதன் தன் அகந்தையை அழிக்க உதவும் காட்சி, அகந்தை அழியும் போது அவன் இதுவரை வாழ்வில் தீர்மானித்து வைத்த அத்தனை ஒப்பீடுகளும், வேறுபாடுகளும், சுயகௌரவமும் அழிந்து போய் விடும் தான் என்பது ஒன்றுமில்லை என்று தெரிந்து கொள்ளும் பொழுது. தன் கர்வத்தை அழிப்பதற்கு, தான் ஒன்றும் விஷேடமானவனில்லை, தன்னால் மட்டும் எல்லாம் முடிவதில்லை என்று எண்ணுவதற்கு, நாம் சிறியவனாக, வரியவனாக தெரிவதற்கு நம்க்கு முன் ஒரு பிரம்மாண்டம் இருக்க வேண்டும், அந்த பிரம்மாண்டம் நம் கண்களுக்கு புலனாவதில்லை எறும்பினைப் போன்று.

  ஆம், எறும்பின் பார்வையில் எதிரில் நிற்கும் நமது முழு உருவமும் தெரியுமா என்ன?? ஆனால் இங்கு ஒரு ரூபம் விஸ்வரூபம் அடைந்திருக்கிறது என்பதை உணர மட்டும் முடியும், ஏனென்றால் நாம் எல்லோரும் அகந்தை ஒழியவே விரும்புகிறோம், அதுவே உன்னதமான தேடலாக ஒரு மனிதனுக்கு இருக்க முடியும். தன்னைப் பற்றி இனிமேல் வியப்பதற்கோ, பேசுவதற்கோ இனி ஒன்றுமில்லை என்று உணரும் கணம் தான் எத்தனை விஷேசமானது?? - கடினமானது.. அதை ஒரு மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ படுத்துக் கொண்டே ஒரு அகண்ட குடையாய் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை பார்க்கும் போதும் நிகழும், அந்தக் குடைக்குப் பின்னும் மிகப்பெரிய பிரபஞ்சத்தை நாம் உணரும் பொழுது அதே மாதிரி அகந்தை அழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வராக மண்டபத்தின் இடப்பக்கச் சுவற்றில் இருக்கும் த்ரிவிகர்ம சிலைத் தொகுப்பில் இப்படி உலகை வென்ற பேரரசனினின் அகந்தை அழிந்த காட்சி புடைக்கப் பட்டிருக்கிறது. இந்தச் சிற்பக் காட்சி வடிப்பதற்கு மிகக் கடினமான நிகழ்வாக பதிந்துள்ளது என்பது மறுக்கமுடியா உண்மை. காரணம் இதை காட்சிப்படுத்தத் தேவைப் படும் கற்பனைத் திரன் தான் இதற்கு அடிப்படை, மகாபலியினை வதம் செய்யும் பொருட்டு இரண்டடியில் உலகத்தையும், விண்ணையும் அளக்கும் வாமனனின் விஸ்வருபத்தை வடிக்க வேண்டும் என்றால் எளிதாகக் கிட்டுமா கற்பனை.

இந்தப் 19ம் நூற்றாண்டு நேபாள ஓவியத்தில் பார்க்கும் பொழுது, மூன்று கால்கள் மட்டுமே தெரியும், மூன்று அடிகளையும் காட்சிப் படுத்த வேண்டும் என்பதால் முதல் அடியை நிலத்திலும், இரண்டாம் அடியை விண்ணிலும், மூன்றாம் அடியை மூன்றாவதாக ஒரு காலினைக் கொண்டு மகாபலியின் தலையில் வைப்பதாக இதன் ஓவியர் கற்பனை செய்திருக்கிறார். மிகக் கடினமான கற்பனை தான், ஆனாலும் மூன்றாவது காலுக்கு இணையாக மற்றொரு காலினை இவரால் காட்ட முடியாது போய் விட்டது. ஏனென்றால் அது நான்காவது அடி என்று சொல்லிவிடும், அதற்காக வெறும் மூன்று கால்களை மட்டும் வரைந்து வைத்துள்ளார் ஓவியர்.

மகாபலிபுரம் எனும் பெயர்க் காரணத்திற்கான மகாபலியின் சிற்பத் தொகுதி இந்த வராக மண்டபத்தில் தான் அமைந்திருக்கிறது, குரு சுக்ராச்சாரியாவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, அந்தணச் சிறுவனான வாமனனிடம் வாக்கு கொடுக்கிறான். வாமனன் விஸ்வரூபம் எடுக்க முதலடியில் உலகையும், இரண்டாமடியில் விண்ணையும் அளக்கிறான். இதே போன்று தத்ரூபமாக வராக மண்டபத்தில் அந்த இரண்டடியினையும் வைத்து விட்ட திருமாலின் விஸ்வரூபம் படைக்கப் பட்டுள்ளது, அப்படியென்றால் மூன்றாவது அடி??

மூன்றாவது அடி இங்கே தேவைப்படுமா என்ன? தன் கர்வம் அழிந்து சக உயிர்களில் ஒருவனாக தன்னை ஒரு பேரரசன் உணர்ந்து கொள்ளும் இடம் தானே மூன்றாவது அடி, மூன்றாவது அடி என்பது அவன் தலையில் அல்ல தலைக்கணத்தில். திருமாலின் இடப்புறம் அமர்ந்திருக்கும் சிலை தான் ம்காபலியாக இருக்க வேண்டும் அவனது இடப் புறம் குரு சுகராச்சாரியராகவும் காலின் வலது புறம் இருப்பவர்கள் மகாபலியின் ஆரவாரங்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம, அல்லது நாக ராஜனும், இந்திரனும் என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்திரன் தன் உடைவாளில் கை வைத்திருக்கிறான். ஒருவேளை இந்த அவதாரம் வாயிலாக சகோதரனாகிய திருமாலினை சரணடையாவிட்டால் அவனிடம் போர் செய்யும் பொருட்டு இப்படி வாளினில் கை வைத்த படி இருக்கலாம்.

மொத்தம் மூன்று வரிசைகளில் இச்சிற்பத் தொகுதி படைக்கப் பட்டிருக்கிறது, அதில் கீழ் வரிசையில் நமக்கு வலப்புறம் உள்ள இந்திரனைத் தவிர மற்ற மூவரும் துயரில் இருப்பதாகக் காட்டுகிறது. இந்திரனுக்கு சொர்கத்தை மீட்டுத் தரும் பொருட்டு தான் வாமன அவதாரத்தினை இறைவன் எடுப்பதால் அந்தச் சிற்பம் இந்திரனாகவே இருக்கட்டும். மேலிருக்கும் முதல் வரிசையில் மொத்தம் மூன்று சிற்பங்கள், நமக்கு இடப்புறத்தில் தாமரையில் அமர்ந்திருப்பது சிவன், தாமரை மீது அவர் அமர்ந்தபடி ஆசி வழ்ங்குவது போல் படைக்கப் பட்டிருக்கிறது, அதற்கு எதிரே மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் விண்ணில் அடியெடுத்து வைத்த விஸ்வரூபப் பெருமானின் பாதம் தொட்டு வணங்குவது போன்று படைக்கப் பட்டிருக்கிறது, பிரம்ம தேவனும் தாமரை மீதமர்ந்தபடி பக்தியோடு திருமாலின் திருவடியை வணங்க அவருக்கு எதிரே கையில் நீர்க்குடத்தோடு ஒரு கரடி உருவம் ஒன்று, திருவடிக்குப் பாதாபிஷேகம் செய்ய கொணர்ந்து வந்தது போல் இருக்கின்றது, அது பிரம்ம தேவனுக்கு உதவியாக இருக்கலாம். அந்தக் கரடி , இமயத்தின் அரசனாகிய சம்புவதன் (ஜாம்பவானாக இருக்கக் கூடும்), இரண்டடியில் உலகை அளந்த இறைவனை ஏழுமுறைச் சுற்றி வலம் வந்ததாகக் கதை இருக்கிறது அல்லவா??

இராண்டாம் வரிசையில் எதிரெதிரே இரண்டு தேவர்கள், பார்த்தவுடனே எளிதாகச் சொல்லிவிடலாம அவர்கள் சூரியன் சந்திரனென்று. மேலே நாம் விவரித்த நேபாளச் சித்திரத்தில் விண்ணை அளப்பதற்காக உயர்த்தியிருக்கம் காலகளை தமது கரங்களில் ஒன்றைக் கொண்டு பற்றியிருப்பது போல் வரையப் பட்டிருக்கும். அது அவர் தன் கால்களை அந்தரத்தில் தூக்கியிருப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஒரு கரம் காலினை பிடித்துக் கொண்டிருக்கும், இந்தச் சிற்பத் தொகுதியில் அப்படியல்ல, ஒரு காலினைத் தூக்குவதற்கு ஏதுவாக தனது வலது கரத்தினையும் தூக்கியிருப்பது போல் காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் (well balanced), நாட்டிய முத்திரை போல.

தன் எட்டுக் கரங்களில் இரு கரங்களைத் தவிர சக்கரம், சங்கு, குத்துவாள், வாள், கேடயம் மற்றும் வில் ஆகிய ஆயுதங்களை ஏந்திய படியும், ஒன்றினை காலைனைத் தூக்குவதற்கு ஏதுவாக மேலே தூக்கியபடியும், மற்றொன்றினால் ஆசி வழங்க்வும் செய்யும் விஸ்வரூபத்தின் அழகு இதற்கு ஒப்ப வேறெந்தச் சிற்பத் தொகுதியிலும் கிடைக்கவில்லை (இணையம் வாயிலாக மட்டுமே தேடினேன் என்பது வருத்தமே!!). சிலவற்றை பின்னிணைப்பாகத் தருகிறேன். புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் குகைச் சிற்பங்களை இதற்கு ஒப்பாகவும் தனிச் சிறப்புடனும் வியப்பதற்கு இடமுண்டு, ஆனால் மாமல்லையைப் போல் நாமக்கலில் ஒரு பார்வையாளனுக்கு அனுமதியில்லை அங்கு வழிபடப்பட்டுக் கொண்டிருக்கிறது, புதுக் கோட்டையிலோ அழிந்துக் கொண்டிருக்கிறது..

ஆனால் இந்தச் சிற்பத் தொகுதியில் எனக்குக் கிடைக்கும் புனைவுக்கான இடம் இங்கு இல்லையோ என அஞ்சினேன்...... நல்ல வேளை, என் Fictionக்கு இடமளித்தான்.... இரண்டாம் வரிசையில் தலைகீழாக ஈர்ப்புவிசைக்கு எதிராக கையில் குறுவாள் ஏந்தியபடி ஒருவன். பரவசத்துடன் அதை அடுத்த பகுதியில் சொல்ல விரும்புகிறேன்....அதுவரை உங்களுக்கு அவனைப் பற்றி ஒரு துப்பு இந்தப் படத்தில்.
அந்தரத்தில் தொங்கும் பேரரசன்

பிற வாமனச் சிற்பங்கள்:
-------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் குகை சிற்பம்
Taken at Rani ki Vav, Patan, Gujarat.

கோசல சிற்பம் -கர்நாடகா

பட்டடக்கல் சிற்பம் - கர்நாடகா

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஒரு புளியமரத்தின் கதை

ஒரு ஊர்ல ஒரு புளியமரம் இருந்தது, அது ஒரு பெரிய மரம்...............

அந்த 150 காலப் பழமையான புளியமரத்தைப் பற்றி பேசும் போது என்னில் வரும் சொற்கள் எல்லாம் சித்திரமாக எத்தனித்து மாறி விட, அவை என்னை விட்டு விடுதலை அடைகின்றன. எஞ்சியிருக்கும் நினைவுகளில் தங்கும் கிளைகளின் வாசனையை பகுத்துப் பார்க்க ஒரு பெரிய பட்டியல் கிடைக்கிறது..
நாகலாபுரம் -பள்ளிவாசல்பட்டி-தூத்துக்குடி மாவட்டம்

# சிட்டுக்குருவி, மைனா, காடை, பச்சைக்கிளி, ஆந்தை, அணில் கூட்டங்கள்
# உடைந்துக் கொண்டிருக்கும் புளியம்பழ ஓடுகள்
# பறவையின் எச்சங்கள்
# கள்ளன் - போலீஸ் விளையாட்டின் விதிமீறல்கள்
# புளிப்போடு வாண்டுகள் தேடும் கல் உப்பும், மிளகாய் வற்றலும், கருப்பட்டியும்
# வௌவால் சப்தம்
# ஊர்ந்து செல்லும் சுள்ளெறும்பும், கட்டெறும்பும்
# பொந்தில் இருந்து வெளியே வந்து பிடறி தட்டிக் கொல்லும் பேய் ஒன்று
# மசூதியின் சாம்பிராணி வாசனை
# தேவாலயத்தின் மணிச் சப்தம்
# தவறு விழும் பொழுது தெரித்த பாண்டியின் பற்கள்
# கூட்டில் இருக்கும் முட்டையைக் குடிக்க வரும் பாம்புகள்
# ஆயிரம் காக்கைகள்
# சில பத்து மயில்கள்
# மொத்த மரத்தையும் குத்தகைக்கு எடுத்த அண்ணாச்சியின் பிரம்படி அல்லது காது திருகுதல்
# சுற்றி வந்து விளையாடும் பொண்டு பொடுசுகள்
# கீழே விழுந்த புளியங்கொட்டையின் ஒரு பக்கம் சிரைத்து விளையாடப் போகும் தாயக் கட்டங்கள்
# சூரக் காத்தில் போடும் பேயாட்டமும்
# அருகிலிருந்து விறகாகிப் போன 6 புளியமரங்களும், பஞ்சம் பிழைக்கச் சென்ற 16 குடும்பங்களும்.
# பழத்தைப் பறித்துக் கொடுத்தவுடன் கடித்தபடியே முகஞ்சுளித்து பேரழகியாய் மாறிய அவள் நினைவுகள்

நிலவுக்கு முன்னே அந்த மரத்தை வைத்து அல்லது அருகில் வைத்து பாடுவதற்கு ஆட்கள் இல்லை, மேலேறி விளையாடும் பிள்ளைகளுக்கு கிரிக்கெட்டும் வீடியொ கேமும்.. மரம் ஆடுகிறது, அசைகிறது, வாடுகிறது, நனைகிறது, காய்க்கிறது, கனிகிறது, உதிர்க்கிறது...

மரத்தைத் தழுவி முத்தம் இட இன்னும் நான்கு ஜோடி கரங்கள் வேண்டும், அவளுக்குச் செய்தி அனுப்புங்கள்!!!


-ஜீவ.கரிகாலன்

அசுரன் ஆளும் உலகு - 03 (All seeing eye - Aadhar card)


தகவல்கள் கடத்தப் படும் பாதை - ஆதார் கார்டு{முழுத் தொடரையும் வாசிக்க இங்கே சுட்டவும் (கீழிருந்து வாசிக்கவும்)}

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவில், சி.ஐ .ஏ-வுக்கும் ஆதார் அட்டைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் போது  இதன் (UIDAI) தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்  முன்னாள் இன்பொசிஸ் தலைவர் நந்தன் நில்கெனி. அவர் தலைமையில் நாடு முழுவதும் இந்தத் திட்டத்தினை அமுல் படுத்துவதற்கும் , செயல் படுத்தி, கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்த வேலைகளை சில நிறுவனங்களிடம் ஒப்படைத்தார்.

அந்த நிறுவனங்களில் முக்கியமானவை மஹிந்திரா-சத்யம் , அக்சென்சர் மற்றும் ஹெச்.பி  நிறுவனங்கள் தான் பிரதானம், இந்த நிறுவனங்கள் தமது தொழில்நுட்பப் பங்குதாரர்களாக முறையே, Morpho,  Mindtree மற்றும்  L1 Solutions (4G identity) ஆகிய வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களோடு கூட்டு வைத்திருந்தது தெரிய வந்தது.

 L1 solutions, இந்த நிறுவனத்தின் வரலாற்றைப் பார்த்தோமேயானால்: 2006ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆஃப்கன் மற்றும் ஈராக் போரின் போது அந்நாட்டு மக்களின் மொத்த தகவல்களையும் தமது நாட்டின் பாதுகாப்பிற்காக சேமித்து வைக்க முடிவு செய்தது, இது போன்று திரட்டப் படும் தகவல்கள் அந்நாட்டிற்கு வரும்  ஆபத்தான் ஊடுறுவல் மற்றும் சதிச்செயல்கள் நிகழ்ந்திருப்பின் அல்லாது நிகழா வண்ணம் பாதுகாப்பதற்கு உதவக்கூடும் என்று உறுதியாக நம்பியது. அதன் விளைவாக இந்த் (bio-metric)உயிரியளவு அடையாளப்படுத்தும் (identification) முறை சரியான தொழில்நுட்பமாகக் கருதியது, L1 solutions இந்த நேரத்தில் மிகப் பெரிய அளவில் இந்த வேலையைச் செய்து தரும் இந்தப் பணியை பெற்றிருந்தது.

George Tenet, முன்னாள் CIAவின் மூத்த அதிகாரி, ஈராக் போரின் போது நிறைய ஊழல் புகாரால் குற்றம் சுமத்தப் பட்டவர், ஒரு வருடம் இந்நிறுவனத்தின் இயக்கனராக இருந்திருக்கிறார். அதற்குப் பின்னர் தான் L1 Solutions நிறுவனத்திற்கு ஈராக், ஆஃப்கன் மற்றும் அமெரிக்காவின் சிவில் அடையாள அட்டைக்கான பெரிய பெரிய தொழில் வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. வலைதளங்களில் தேடினாலே கிடைக்கின்றன, L1 solutions மற்றும் அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பைப் பற்றிய செய்திகள் எளிதாகக் கிடைக்கின்றன. அப்படித் தான் இந்திய நிறுவனமான சத்யம் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவிலும் தன் காலைப் பதித்தது இந்நிறுவனம்.

இந்தியா மட்டுமல்லாது, சீனாவிலும் தேசிய குடிமகன்களுக்கான் அடையாள அட்டை வழங்கும் பணியில் பெருவாரியான சதவீதத்தை பெற்றுக்கொண்டது இந்நிறுவனம். மார்ஃபோ எனும் நிறுவனம் L1 solutions நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தன்னோடு இணைத்த பின்னர் சாஃப்ரான் குழுமம் எனப்படும் மார்ஃபோ அறக்கட்டளை, உலக அளவில் தன் கிளை நிறுவனங்கள் மூலம் பெற்ற தரவுகளை ஒருங்கிணைத்தது. இதன் மூலம் உலகம் முழுமைக்கும் மிக முக்கியமான ஆவனமாக இந்த தரவுகள் ஒரே சர்வருக்குள் தகவல்களாக சேமிக்கப் பட்டன. லத்தீன் -அமெரிக்க, சீனா, இந்தியா, அரேபியா, வளைகுடா என பல நாடுகளின் மொத்த குடிமகன்களாக அந்தத் தரவுகள் இருக்கும் என்பது மற்றும் உறுதி.

உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஸ்நோடென் பற்றிய செய்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அமெரிக்கப் புலனாய்வு ஏஜன்சியில் பார்த்து வந்த வேலையில் தெரிந்து கொண்ட தகவல்களின் படி பார்த்தால், அமெரிக்க மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் மற்ற நாடுகளின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு, இணையம் வாயிலாக தகவல்கள் திரட்டுதல் என மிக ஆபத்தான விளைவுகளைத் தரும் அளவிற்கு சேகரித்துள்ளது. அசட்டையான நமது இந்திய அரசின் செயல்பாடுகளில் இருந்து வரும் பல ஓட்டைகளில் ஒன்று தான் இந்த் ஆதார் கார்டு.

இதுவரை எப்படி இந்த தகவல்கள் திருட்டினால் ஏற்பட இருக்கும் ஆபத்துகள் குறித்துப் பார்த்தோம், இதற்கு முன்னர் நம் நாட்டிற்குள்ளேயே இந்த அட்டைகள் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்று பார்த்து விடுவோம்.


- ஜீவ கரிகாலன்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி -சொஜ்ஜி 31 / வராகியின் காதல் (சிற்பத் தொகுதி) -மஹாபலிபுரம் -04

வராகியின் காதல்

சிற்பம்/ஓவியம் - ரசனை - மகாபலிபுரம் சிற்பங்கள் 04


சென்ற பகுதியில் கஜலட்சுமி தலைவனுக்காக காத்திருப்பது போன்ற காட்சியாக நான் உணர்ந்திருந்ததை, இந்த வராக மூர்த்தியின் தொகுதியுடன் எப்படி சம்பந்தப் படுத்துகிறேன்? ஏற்கனவே சொல்லியிருந்தது போல கஜலட்சுமியும், திருமாலும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற புனைவு கிடைத்திருந்தை இங்கு நினைவு கொள்ள வேண்டும். ஏனென்றால்  "உண்மையில் புனைவு என்பது என்ன?" என்று விளங்கும் முன்னரே, "உண்மையில் எது உண்மையானது" என்று அறிவது இன்னும் கடினமாகிறது. ஆக என்னைப் பொருத்தவரை உண்மை, புனைவு இரண்டுமே நம்பிக்கை. அவ்வாறே மதமும், ஆன்மீகமும்.

தலைவியின் காதல் ஒரு தலைவனுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா என்ன?? அதுவும் வேற்றினத் தலைவனுக்கு.  ஒரு சாகசம், அல்லது இரு யுத்தம்/போர்,  தலைவியை மீட்டல், கலைத தேர்ச்சி  என ஏதாவது ஒரு வலிய காரணம் வேண்டுமே, தலைவியின் காதல் கிடைக்கப் பெற . இந்த வராக மூர்த்தியின் சிலைத் தொகுப்பில் காதல் காட்சியைப் பற்றி விவரிப்பதற்கு முன், மற்றவைகளைப் பார்த்து விடுவோம். இத்தொகுதியை முழுமையாகப் பார்க்கும் பொழுது திருமாலின் தசாவதாரங்களுள் ஒரு அவதாரமான வராக அவதாரம் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பின்னர் நடந்த காட்சியாகப் படைக்கப்பட்டுள்ளது தெரியும்( அதாவது அந்த அவதாரத்தின் climax காட்சி).

பிரளயத்தின் போது நீரில் மூழ்கிய பூமாதேவியைக் காப்பாற்றிய வராக அவதாரம், தன் வலது காலினை பாதாள வாசிகளின் தலைவனின் (அவன் நாகர்களின் தலைவனாக இருத்தல் வேண்டும்) தலை மீது  ஒரு கால் வைத்து, அவ்வலக்காலின் மடியில் பூமாதேவியை அமர்த்தி, அவள் முகம் நோக்கிப் பார்க்கும் தலைவனின் சிற்பம். வராக மூர்த்தியின் வலப்பக்கம் ஒரு பெண்ணும், ஒரு ரிஷியும் வராக மூர்த்தியின் செயலுக்கு நன்றியுரைப்பது போல  இருக்கின்றது, நாக ராசனும் தன் தலையில் கால் வைத்திருக்கும் திருமாலை வணங்குவது போல்(ரட்சித்து அருள வேண்டுவது போல) கைகூப்பியிருக்கின்றான்.

தொகுதியின் மேற்புறத்தின் இரு மூலையிலும் சந்திரனும், சூரியனும் வானுலகத்திலிருந்தபடியே  வராக மூர்த்தியை வணங்குகின்றனர். இதே தொகுதியில் வராக மூர்த்தியின் இடது புறம் இருக்கும் இரு சிலைகள் பிரம்மனும் மற்றொரு முனிவர்(அது ஆண் சிற்பமா, பெண்ணின் சிற்பமா என்று கண்டறிவதே மிக சிரமம் -எனினும் ஒரு ரிஷியின் முகம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நம்ப முடியும்) என்றும் தெரிகிறது.
இதைப் புராணச் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, வைகுண்டத்தின் காவலர்களான ஜெயா-விஜயா ஆகிய இருவரும் பிரம்மக் குமாரர்களை வழி மறித்ததால்,   பிரம்மா குமாரர்களால், அவர்களுக்கு அசுரர்களாகப் பிறக்கும் சாபமிடுகின்றனர். அதனால், அவர்கள் காஷ்யப முனிவருக்கு மகன்களாகப் பிறக்கின்றனர். அசுரர்களாக பிறந்ததால் அவர்கள் பல தீமைகளைச் செய்ய, அவர்களில் ஒருவனான ஹிரன்யாக்‌ஷன்(மற்றொரு இரணியன் எனுன் ஹிரண்யசிபு நரசிம்மரால் வதம் செய்யப்படுகிறான்) பூமியை பிரளயம் ஏற்படுத்தி மூழ்கடித்து விடுகிறான். இங்கு பூமியை நிலப் பரப்பு என்று எடுத்துக் கொள்ளவும். பின்னர் திருமால் பூமாதேவியை நீரில் இருந்து மீட்டு மக்களையும் காக்கிறார்.  இந்தக் காட்சியை முழுவதுமாக நாம் புரிந்து கொள்வதற்கு  ஏதுவாக, இத்தொகுதியினை அவதாரத்தின் இறுதிக் காட்சியை வடித்துக் காட்டியிருப்பதன் மூலம் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள்.

இந்தக் காட்சியை புரிந்து கொண்டால், வராக மூர்த்தியின் இரு புறமும் இருக்கும் ரிஷியிம், பெண்ணும் காஷ்யப முனிவரும் என்று புரிந்து கொள்ளலாம். பின்னர் நாக ராஜன் போல கடலில் இருந்து தன் தவறை உணர்ந்து சாபல்யமடைபவன் நாக ராஜன் இல்லை ஹிரண்யாக்‌ஷன் என்றும்  புரிந்து கொள்ளலாம். அருகில் இருக்கும் பிரம்ம தேவனின் தலை சிதிலமடைந்து இருந்தாலும் நமக்கு இது புராண ங்கள்  மூலம் அறியும் வாய்ப்பு கிட்டுகிறது. அவர் நிற்கும் தொனி-யானது  சிற்பிக்கு மூன்று தலைகளைச் செதுக்கும் அவசியத்திற்கு பதிலாக இரண்டு தலைகளே தெரிந்தால் போதும் என முடுவெடுத்து காட்சிப் பரிமாணத்தை உணர்ந்து வடித்திருக்கிறார்கள், எனினும் துரதிர்ஷ்டவசமாக வலப்புறத் தலை முற்றிலுமாக சிதிலாமாகிவிட்டது. அவர் அசுரனுக்கு(ஹிரண்யாக்‌ஷ்னுக்கு) வரமளித்த - சாபல்யம் கொடுக்கும் காட்சியின் மற்றொரு பகுதியும் இத்தொகுதியில் அமைக்கப் பட்டிருக்கிறது. 
பிரம்ம தேவனின் கையில் கமண்டலமும், வராக மூர்த்தியின் இரு கைகளில் சங்கும், சக்கரமும் இருக்கின்றது. இவை எல்லாம் நாம் சிலைகளை அடையாளம் தெரிந்து கொள்ள உதவும் பொருட்கள் (objects).

கி.பி. நான்காம் நூற்றாண்டில் வடிக்கப்பெற்ற உதயகிரிக் குகைச்சிற்பத் தொகுதி, இச்சிற்பத் தொகுதியைக் காட்டிலும் முன்னோடியாக இருந்தாலும். மாமல்லையின் சிற்பத் தொகுதியின் நுட்பமும், அழகியலும் தனித்துவமிக்கது. ஆம். உதயகிரிக் கோட்டையின் சிற்பம் பிரம்மாண்டம் என்றால் இது மிகவும் அழகியல் தன்மைக் கொண்டது (Romantic). மற்ற எந்தச் சிற்பங்களிலும் இல்லாதது போல், இதில் வராகமூர்த்தி வலப்புறம் திரும்பியிருக்கிறார். அது மட்டுமின்றி மற்ற ஓவியங்களிலும், பிற சிற்பங்களிலும் தனது தந்தங்களால் மட்டுமே பூமியைத் தாங்கி இருப்பதாக  இருக்க, இத்தொகுப்பில் மட்டும் தன் மடியில் அமர்த்தி பின் புறமாய் தன் கரங்கொண்டு பூமாதேவியை அணைத்தபடி இருப்பார் வராக மூர்த்தி. வலது கரம் தேவியை அணைத்தபடியும், இடது கரம் தேவியின் கால்களை பற்றியடியும் இருக்க, வராக மூர்த்தியின் தேவியின் முகம் நோக்குகிறார். தலைவியும் தலைவனிடம் காதற்வயப்பட்டு முகம் மலர்ந்து இருக்க, தன் ஆடை நெகிழ்வதையும் மறந்து காதலில் மூழ்கியிருக்கிறாள். சற்று முன்னர் கடலில் மூழ்கியிருந்தது போலே!! (ஆடையின் ஒரு பகுதி தொடை தனில் வீழந்தது போல் இருக்கின்றது).

fiction: -
 யுத்தம் , போர், சாகசம், மீட்பு என சம்பவங்கள் பல  நிகழ்ந்திருக்கிறது வலிமையான ஒ ரு தலைவனின் அண்மை, அங்கும்  காதல் வாராது எப்படி இருக்க முடியும் ??? மற்ற வராக சிற்பங்களில் இல்லாத கலையம்சமாக நான் இந்த மாமல்லை வராஹ மண்டபத்து சிற்பத் தொகுதியைப் பார்க்கும் பொழுது அத்தகைய உணர்வைப் பெறுகிறேன். (மற்ற சிற்பங்களை என்னால் இணையம வாயிலாக மட்டுமே பார்க்க இயன்றாலும் நான் இதை ஆழ உணர்கிறேன்). வராகம் வலது புறம் திரும்பியிருப்பது ஆகட்டும், இந்த காதல் உணர்வு ஆகட்டும் ஒரு இக்காலக் கட்டத்தின் சிற்ப வேலைகளில் நடந்த ஒரு புதிய முயற்சியாக நான் பார்க்கிறேன்.

பெருவெள்ளம், தொடர் மழை, கடற்  தாக்குதல்,  புயல், பிரச்சினை , புயல்  பயம் கடலில் மூழ்கிவிடுதல், பிரளயம் குறித்த செய்திகள் மாமல்லையின் சிற்பங்களில் அநேக இடங்களில் வருகிறது. கடற்கோளினால் அதிகம் பாதிப்புகள் தமக்கு நேரும் என்பதை அறிந்து வைத்து தான், இம்மன்னன் இதை தன் சிற்பங்களில்  பதிய விரும்பினனோ?? இந்தப் பகுதியை இன்னொரு தொடரில், குன்றை விட்டு கீழிறங்கிய பின்னர் பார்த்துக் கொள்வோம். 

சிற்பத் தொகுதியில் வரும் இந்தக் காதல் போல, புராணங்களில் அநேகக் காதல்கள் இனக்கலப்பையும், களவு வாழ்க்கையையும் நம் வாழ்வின் அங்கமாகப் பதிகின்றன. காதல் என்பது திருமணத்திற்கு பிந்தைய வாழ்வாகவும், களவு என்பது திருமணத்திற்கு முந்தைய வாழ்வாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. இதில் களவு வாழ்க்கை மிக அழகானது, அதில் தான் அநேகக் கலைகள் முழுமையாக லயித்திருக்கின்றன.இப்போது இந்தச் சிற்பத் தொகுதியை அடுத்து புடைக்கப்பட்டிருக்கும் சிற்பத்துடன்  இத்தொகுதியை இணைத்துப் பார்க்க உங்களால் முடிகிறதா??? ஆனால் என்னால் முடிகிறது..... 

சமகாலத்தில் இவையாவுமே அந்நியப்பட்டுவிட்டன, சிற்பங்கள் பாதுகாக்கப்படாமல் இருப்பதை மட்டும் நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தப் பகுதியில் திரிவிகர்ம சிலைத் தொகுப்பை பார்த்து விடுவோம்.

நன்றிகளுடன் -
 ஜீவ.கரிகாலன்
பிற சிற்பங்கள் மற்றும் ஓவியம் : நன்றி விக்கிப்பீடியா
------------------------------------------------------------------------------------------------------------

1740-ஓவியம் - ஹிரன்யாக்‌ஷ்கா நன்றி :விக்கிபீடியா

உதயகிரிக் குகைச் சிற்பங்கள் CE 380-415
CE.850-900 ஆண்டு நாணயம்
ஹோசலேஷ்வரன் கோயில், கர்நாடகம்
12ம் நூற்றாண்டு


கஜுரஹோ வராகச் சிற்பம்
ஜெயா-விஜயா வைகுண்டத்தின் காவல் தேவர்கள்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 30, கஜலட்சுமி எனும் தலைவியின் நீராடல்

 #சிற்பம்/ஓவியம் -ரசனை - 03 /           மகாபலிபுரம்

      வராக மண்டபம் - கஜலட்சுமி மற்றும் பூமாதேவி

முதல் பகுதி

முதல் பகுதியில் நாம் பார்த்த கொற்றவை சிற்பத்திற்கு சமமாக, கர்பகிரஹத்தின் வலப்பக்கம் இருக்கும் கஜலட்சுமியின் சிற்பம் மிக அழகுணர்ச்சி உடையது. இதன் இடது பக்கம் இருக்கும் துர்கை சிற்பம் தரும் உணர்வுகளில் இருந்து மிகவும் வேறுபட்ட உணர்வை கஜலட்சுமியின் சிற்பம் தருகிறது. இந்த காட்சியானது கஜலட்சுமியின் நீராடல், இதைப் புனித நீராடல் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். இத்தொகுதியில் யானை குடங்களில் தண்ணீர் மொண்டு தன் எஜமானியைக் குளிர்விப்பதும், தோழிகள் மலர்ந்த முகத்துடன் பூக்களும், வாசனை திரவியங்களும், மலர்களும் கொண்டு தலைவியை குளிர்விப்பது மிகவும் அழகியல் ததும்பும் காட்சியாகத் தோன்றுகிறது.

கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரை இருக்கை முழுவதுமாக மலர்ந்திருக்கிறது. இந்த நிலையானது,  தேவி தலைவனை எதிர்கொள்ளும் முன்னே ஆயத்தமாகி இருக்கும் பாவனையாக என்னிடம் காட்டுகின்றது. அதனால் தான் தாமரை முழுவதுமாக மலர்ந்திருக்கும் நிலை எனக்கு ஒரு குறியீடாகத் தோன்றுகிறது.இந்தப் புரிதலில் ஒருவேளை உங்களுக்கும் எனக்கும் சில பிரச்சினைகள் வரலாம், எவ்வாறு நாங்கள் வணங்கும் தேவியை இப்படித் தவறாக நீ பார்க்கிறாய் என்று கூட யாரேனும் கேட்கலாம்?. இறைவழிபாடு மீது எனக்கும் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் சிற்பங்கள் வெறுமனே வணங்குவதற்கு என்று மட்டும் தோன்றவில்லை. அந்தச் சிற்பம் மீது ஆடைகள் சாத்தி வணங்குவதைக் கூட நான் வன்முறையாகத் தான் பார்க்கிறேன். இந்த இடைவெளி தான் கலைஞர்களை மக்கள், தங்களிடம் இருந்து அந்நியப் படுத்தும் இடமாக நான் பார்க்கிறேன், இது இன்றைய நவீன கலைஞர்களுக்கும் பொருந்தும் நிலை தான்.

என்னைப் பொருத்தவரை சிற்பங்களில் தெரியும் நிர்வாணம் நமது தொன்மையைப் பேசுகின்றது. இது போன்ற சிற்பங்களின் வாயிலாக மட்டுமே  நாம் வழிபடும் தெய்வங்களை நமது வரலாற்றோடு இணைத்துப் பார்க்க சாதாரன மனிதர்களாலும் முடிகிறது. அவற்றின் வாயிலாக புராணங்களை நிதானமாக அனுக முடிகின்றது. இது இன்னும் சில கதவுகளைக் கடந்து நமக்கும் புராணத்திற்குமான இடைவெளியை குறைக்க உதவும். சரி, மீண்டும் கஜலட்சுமியைப் பார்க்கச் செல்வோம்.

இந்தப் புனித நீராடல் ஒரு தலைவியை, தலைவனோடு வழியனுப்புதல் பொருட்டு நடக்கும் ஒரு சடங்கினைப் போன்ற காட்சியைத் தருகின்றதால் , தலைவியை -அதாவது கஜலட்சுமி எனும் தத்துவம் பற்றி நாம் சிறிது கவனிக்க வேண்டிய அவசியம் வருகிறது, அவள் சமுத்திரத்தின் மகள் என்றும், செல்வத்தின் மூலம் என்றும் கிடைக்கிறது. கடலில் இருக்கும் செல்வம் பற்றி இன்னும் அறிவியலாலேயே முழுவதும் அறிந்து கொள்ள முடியவில்லை தானே!!

ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில் இது போன்ற குறியீடுகளைப் பற்றியும் பேச்சு எழுந்தது, நிறையவே நம் பழைய கலைகளில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி பேசினார். கடல் என்று பல இடங்களில் புராணம் காட்டுவதும் ஒரு குறியீடு தான், அவர்கள் ‘அண்டத்தையே கடல்’ என்று குறிக்கிறார்கள் என்றார். அப்படியென்றால் திருப்பாற்கடலில் மலையைக் கடையும் கதை - அவை எல்லாமுமே ஒரு குறியீடுதான், சமுத்திரம் என்பது அண்டமாக, அதில் பாற்கடல் எனும் ஒரு பகுதி மட்டும் (மில்கிவே) உருவாகிறது, கடைதல் என்பதே ஒரு பிக்பேங்க மாதிரி என்றார் அவர். இது அறிவியல் பார்வையில் அபத்தமாகத் தோன்றினாலும், அந்தக் குறியீடுகள் என்ற பதம் ஆற்றும் செயல், முக்கியமாக புராணத்தின் மையத்தை (நம்பிக்கை) தகர்க்கிறது என்றால் அவை ஏன் அறிவியலாகவும் இருக்கக் கூடாது என்று எண்ணிப் பார்க்க இடமளிக்கிறது (Art is a Science). சிறிய எறும்புகளுக்கு நம் உருவம் புலப்படாதது போல் நம்மாலும் பார்க்க இயலாத பரிமாணங்கள் இருக்கத் தானே செய்கின்றன, இந்த மர்மம் கலைகளாகவே எடுத்துரைக்கவும் படுகின்றன (Science is an Art).

இந்தச் சிற்பத்தில் கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரைக்குக் கீழே அலைகள் இருப்பதை கவனித்துப் பாருங்கள்!! கடலில் தாமரை மலருமா என்ன?? புராணங்களின் படி இது பாற்கடல், அப்படியென்றால் இந்தக் குறியீடு இன்னும் பல விளக்கங்களைக் கோருவதற்கு இடமளிக்கின்றது.

அதுபோல காலங்காலமாக நாம் புராணங்களில் அழித்து வரும் நாகர்கள் குறியீடுகளா? அது என்ன வரலாற்றை எல்லாம் சொல்கிறது என்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இம்மல்லைச் சிற்பங்கள் வேறு சில இடங்கள் குறிப்புணர்த்துகின்றன, அதைப் பற்றி வேறு ஒரு பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரில் குறியீடு, சரித்திரம், புராணம் பற்றியெல்லாம் பேசினாலும், ஒரு சாதாரண பார்வையாளனாய் என்னை அல்லது என்னைப் போன்றவர்களை இச்சிற்பங்கள் எப்படிக் கவர்கிறது? அதை எப்படி எல்லாம் நாம் பார்த்து ரசிக்க இடமளிக்கிறது? அதனோடு எவ்வாறு உரையாட முடியும் என்கிற நிலைகளை புனைவோடு நிரப்புவதற்கு தான் முயற்சி செய்து வருகிறேன்

மீண்டும் சிற்பக் காட்சிக்கே வருவோம், இதைக் குறியீடாகப் பார்க்காமல், புராணமாகவும் பார்க்காமல் அந்தச் சிற்பத் தொகுதியின்(panel) objects. அதாவது மையமாக இருக்கும் தேவியின் பின்புறம் நிற்கும் யானைகள், தோழிகளின் கைகளில் இருக்கும்  பொருட்கள் எல்லாம், அவளை ஒரு tribal (பழங்குடி) இனத் தலைவியாக அடையாளம் காட்டுகிறது - முக்கியமாக தோழமையுடன் அருகில் நிற்கும் யானைகள். அவ்வாறன்றி ஒரு பழங்குடி இனத்திற்கே அவள் மணமுடித்து சென்றிருக்கலாம். அவள் தலைவனை (திருமால்) மணமுடித்தோ அல்லது வினை முடித்து அகத்தே திரும்புபவனை (அவதாரம் முடித்து) எதிர்நோக்குவதற்காக தலைவி தயாராகிக் கொண்டிருக்கிறாள் மிக அழகாக, நறுமணத்துடன்.

அந்தத் தலைவன் எப்படி தலைவியை அடைந்திருக்கிறான்?, எப்படி வினை முடித்திருக்கிறான் ?அல்லது எந்த அவதாரத்தில் இருந்து திரும்புகிறான்? என்பதை அருகில் இருக்கும்  சிற்பக் காட்சி விளக்குகிறது.

?அடுத்த பகுதியில் அதை தரிசிப்போம்
ஜீவ.கரிகாலன்..........

தெரியுமா உங்களுக்கு:
பல்லவர்களுக்கும் பவுத்த சமயத்திற்கும் தொடர்பு இருந்தமைக்குப் பல சான்றுகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் கஜலட்சுமியைப் போன்ற சித்திரம் புத்தனின் பிறப்பைக் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது.

19ம் நூற்றாண்டு படங்களில் திருப்பாற்கடல் பற்றிய ஓவியங்கள் - ஓவியர் பெயர் தெரியவில்லை.வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

சென்ற பகுதியில் ஆதார் கார்டு ஒரு ஆபத்து என்று அறிமுகப் பகுதியாகப் பார்த்தோம்,  அது எப்படி நமது நலனுக்கு எதிரானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதன் அடிப்படைத் தன்மை மற்றும் வரலாற்றில் நடந்த வேறு சில தவறுகளையும் இதே நோக்கில் ஆராய வேண்டும். இதனை எதிர்ப்பது என்பது ஒரு தொழிற்நுட்பத்திற்கு எதிராக நிற்கும் செயல், ஒரு திட்டக் குழு பரிந்துரைத்த திட்டத்தின் வடிவத்தை எதிர்க்கும் கருத்துகள். இன்றைய நிலையில், தமிழ்ச் சூழல் ஏற்கனவே மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பத்திற்கு எதிராக தன் கருத்தை உலக அரங்கில் பதிவு செய்துக் கொண்டிருக்கிறது என்பதே என்னை எழுதத் தூண்டுகிறது.

ஆதார் கார்டு அல்லது UID (unique identification (UID) number) என்பது நாட்டிற்கே பொதுவான, குடிமகன்களுக்கான அடையாள அட்டை ஆகும். நாட்டிற்கே பொதுவான அட்டையாக வாக்கு அட்டை, கடவுச் சீட்டு, மாநில அரசு வழங்கும் குடும்ப அட்டை என எத்தனையோ அட்டைகள் இருக்க, ஆதார் அட்டை ஏன் அவசியம் ஆகிறது? என்றால். இன்றைய நாட்களில் பொதுவாக நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் முயற்சிக்கு உதவக் கூடிய தொழிற்நுட்பம் தான் UID எனப்படும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை.  இந்த அட்டையின் மூலம் ஒவ்வொரு குடிமகனின் முழு அடையாளங்கள் சேமிக்கப் படுகிறது, கைவிரல் ரேகை, விழி மற்றும் முகத்தோற்றம் போன்றன சேமிக்கப் படுகிறது. கார்கில் போருக்குப் பிந்தைய சூழலில் தேசிய அளவில் ஒரு பொது அடையாள அட்டை பாதுக்காப்பிற்கென நிதி ஒதுக்குவதன் அவசியம் சரியானது தான். ஆனால் அது நடைமுறைப் படுத்தப் படும் முறையில் தான் பெரிய சிக்கல் வந்திருக்கிறது.

இந்தச் சிக்கலைப் பற்றி கவனிப்பதற்கு முன் ஒரு சிறிய வரலாற்றைப் பார்க்க வேண்டும், அது 1992-இல் இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறையில் கட்டுமானப் பணிகளை முடுக்கி விட்டிருந்த ராஜீவ் காந்தி அரசின்(இன்று வரை -அதை சாதனையாகச் சொல்லி வரும் கட்சி அறிக்கைகள் ஒரு புறம்) திட்டத்தின் மூலம் தனது முதல் காலடியை எடுத்து வைத்தது ஒரு பிரபல நிறுவனம். எடுத்த எடுப்பிலேயே PPP மூலம் கால் பதித்ததால் தனது வளர்ச்சியை பத்து ஆண்டுகளுக்குள் மிகப் பிரபலம் ஆக்கிவிட்டது, அதன் பெயர் தான் HMTL (HUTCHISON MAX TELECOM LIMITED). இப்படி நம் நாட்டினில் நுழைந்த நிறுவனம் பத்து ஆண்டுகளில் நாடு முழுமைக்கும் பரவி, இறுதியில் BPLn பங்குகளை வாங்கி சந்தையில் பிரதான நிறுவனமாக வலம் வந்தது. அது ஹட்சிசன் எஸ்ஸார் டெலிகாம் லிமிடட்.
ஒரிஜினல் பில்லா -லி கா ஷிங்


ஹட்ச் என்று தும்மல் போடாத டீவி சேனல்களின் வணிக இடைவேளை ஏதேனும் ஒன்றை அந்நாட்களில் நீங்கள் கண்டதுண்டா?? அந்த ஹட்ச் நிறுவனத்தின் தலைவர் லி கா ஷிங் (Li ka Shing), உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் செய்யும் இவர் உலகின் எட்டாவது மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரர் என்றுக் கருதப்படுகிறார். ஹாங்காங் பங்குச் சந்தையின் 15%விதம் முதல், இவரது பங்கில் இருந்து தான் பரிவர்த்தனைக்குள்ளாகிறது. சீனாவிற்கு ஆதரவு நிலையில் இருக்கும் அவர், ஒரு வருடம் வரை சீன அரசின் நிதி நிறுவனமான CITIC இல் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அதன் மூலம் அவர் பாலி டெக்னாலஜீஸ் போன்ற உலகளாவிய ஆயுத வியாபாரிக்கு மறைமுகமாக உதவியுள்ளார் என்பது அவரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் கண்டறிந்த ரிப்போர்ட். இது அவர் நேரடியாக சீன இராணுவத்தோடு (People's Legislative Army of China) தொடர்பு வைத்திருந்ததற்கு சமம். அப்படியென்றால் நம் படுக்கையறை வரை சீன இராணுவத்தின் கண்கள் வந்து போயிருக்கின்றன என்று தானே அர்த்தம்??!! அதில் சந்தேகமே இல்லை.


இப்போது புரிகிறதா இந்த நாய் ஏன் நம்மைத் தொடர்ந்து வருகிறது என்று!!


தன் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும் - விற்று விட வேண்டும். இப்போது உரிமம் யாருடைய குறுக்கீடுமின்றி மற்றுமொரு அந்நிய(இங்கிலாந்து) நாட்டு கம்பெனியிடம் விற்று விட்டு, ஹட்ச் நடையைக் கட்டிவிட்டது. இதில் நமது அரசுக்கு வரி என்ற பெயரில் ஒரு ரூபாய் தேறாத அளவுக்கு நம்து நாட்டு எல்லைக்கு வெளியிலேயே நமது அலைக்கற்றை, நிலம் என வர்த்தகம் செய்யப்பட்டது. மத்திய அரசு இதற்கு வரி விதித்த போது கூட நாட்டு நலனில் அக்கறை கொண்ட பா.சி அவர்கள் வழக்கில் போராடி வெற்றி பெற்றார். இதனால் நமது அரசிற்கு இழப்பு வெறும் 12,000 கோடிக்கான வரித்தொகை.

தகவல் தொழில் நுட்பத்தின் மிக உயர்ந்த கட்டத்தில் நாம் இன்று நிற்கிறோம், ஆனால் வளர்ச்சி என்கிற கொள்கையை அடிப்படையாய் வைத்து உருவான வழிமுறைகளைப் பார்த்தால் நம்மைச் சூழ்ந்திருக்கும் வலை என்னவென்று தெரியாது, ஐந்தாயிரம் ஊதியம் வாங்கும் ஒருவன் கைகளில் 20000 மதிப்புள்ள செல்போன் வளர்ச்சியின் அடையாளமா ? வீக்கத்தின் அடையாளமா? என்று யோசித்துப் பார்க்க இடமிருந்தால். 

ஆதார் அட்டையின் அடிப்படையாக நமக்கு வழங்கப் படுவதன் பின்னனி என்ன?, அதன் மேல கட்டமைக்கும் பொது மக்கள் நலனுக்கு அல்லது தேசத்திற்கு எதிரான ஆபத்து எப்படியிருக்கும்? இதை நடைமுறை படுத்துவது யார்? அவர்களின் பின்னணியென்ன என்றெல்லாம் ஆராய் விலகும் திரைக்குப் பின் நிற்பது யார்?? இதற்கு பீடிகை எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை. 

அவர்கள் உலகின் மீட்பர்களாக தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் பீனிக்ஸ் பறவைகள் தான்தொடரும்......

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 29, #சிற்பம்/ஓவியம் -ரசனை - 02 / மஹாபலிபுரம்

  #சிற்பம்/ஓவியம் -ரசனை - 02 /  மஹாபலிபுரம்  -02.வராக மண்டபம்

உலகின் தலைசிறந்த சிற்பங்களினூடே நான் என்ன செய்யப் போகிறேன்?அல்லது என்னால் என்ன செய்து விட முடியும்? நான் என்ன வரலாற்றாய்வாளனா? நான் - கல்வெட்டு, சிற்ப சாத்திரம் மட்டுமல்ல இறை வழிபாடு, புராண அறிவு என்று கூட பெரிதாகக் கற்றுக் கொள்ளாதவன். ஆனால் கொஞ்ச நாட்களாக என்னால் சிற்பங்களோடு பேச முடிகிறது, என் கற்பனையை இங்கே காட்சிப்படுத்திப் பார்க்க முடிகிறது, சில புதிய கதைகளை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடிகிறது. ஏடுகள், நவீன தியான முறைகள் போன்றவற்றில் கிடைக்காத அமைதி சித்திரங்களோடும், சிற்பங்களோடும் நான் இருக்கையில் கிடைக்கின்றது. இவற்றோடு என்னால் மட்டுமல்ல, உங்களாலும் பேச முடியும், சிரிக்க முடியும், உரையாட முடியும். அலங்காரச் சொற்களால் நிறைந்த போலித் தன்மை நிறைந்த மனிதர்களிடையேயான உரையாடல்களில் இல்லாத நிர்வாணம் தான் நம்மிடம் உண்மைகளைப் பற்றிப் பேசும், அதுவும் நிறையவே பேசும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான் காது கொடுத்துக் கேட்க வேண்டும், அதற்காகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்ம் -உற்று நோக்குதல் தான் சிற்பம் பயிலும் மொழி.

முதற்பகுதியில் திருமூர்த்தி குகைக் கோயிலைப் பார்த்தோம்!! இப்பொழுது நாம் செல்வது வராக மண்டபத்தில், திருமூர்த்திக் கோயிலில் இருந்து தென் புறமாகக் குன்றிலிருந்து கீழிறங்கி நடக்கும் பொழுது, முதலில் வருவது விநாயகர் சன்னதி, பெரும்பாலும் பூட்டப்பட்டு இருக்கும் அறையில் கம்பிகளின் ஊடே ஐங்கரன் அருள்பாளிக்கிறார், அங்கே மட்டும் இறைவனாக இருப்பதால் இன்று வரை கன்னத்தில் ஒத்திக் கொண்டு நகர்ந்து விடுகிறேன். கொஞ்சம் அவ்வழியே மேலேறினால் முதலில் வருவது வராக மண்டபம். இதை நான் சன்னதி என்று சொல்லவே விரும்புகிறேன்.


வராக மண்டபம் முன் தோற்றத்தில் நான்கு தூண்களால் ஆன மண்டபமாக குடையப்பட்டிருக்கிறது, இரண்டு தூண்கள் முழுமையாகவும், இரண்டு பாதி மட்டும் செதுக்கப்பட்டும் இருக்கும், நான்கு தூண்களும் யாளியின் முதுகில் நிற்பது போல வடிக்கப்பட்டிருக்கும். மண்டபத்திற்குள் நுழையும் பொழுதே நாம் இதில் கால் நனைப்பதற்கு ஏதுவாக வாயிலின் முகப்பில் ஒரு தொட்டி போன்ற அமைப்பு தோற்றமளிக்கிறது. இது தற்கால மல்லைக்கு மிக முக்கியமான மண்டபம், மஹாபலிபுரம் என்ற பெயருக்கு பொருந்தும் சிற்பம் இச்சன்னதியில் இருப்பதால், இதைக் கட்டிய மன்னன், இதைத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதியிருக்கிறான். இதன் காரணமாகவே இச்சன்னதியில் நுழைவதற்கு கால்களைச் சுத்தம் செய்ய ஏதுவாக ஒரு தொட்டியும் அமைக்கப்ப்ட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.


உள்ளே மூலவருக்கான சன்னதி வழக்கம் போல வெற்றிடத்துட்ன் இருந்தாலும், அதைச் சுற்றிலும் மொத்தம் நான்கு புடைப்புச் சிற்பக் காட்சிகள் இருக்கும். ஒன்று வராகச் சிற்பம், இரண்டு  மஹாபலி-வாமன சிற்பம், மூன்று -கஜலட்சுமியின் சிற்பம், நான்கு-துர்கை. இது போக கர்பகிரகத்தின் வெளிப் புறத்தில் இரு மருங்கிலும் துவார பாலகர்களின் சிலை இருக்கும், அது போக இந்த மண்டபத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அது பெரும்பாலும், வந்து செல்லும் அநேகருக்கும், ஏன் பல வழிகாட்டிகளும் அறிந்திடவில்லை, இல்லை அதைப் பற்றி சட்டை செய்து கொள்ளாமலே இருக்கலாம். இதனாலேயே நான் சில மணி நேரம் வரை அந்த மண்டபத்தில் சிற்பங்களோடு தேங்கியபடி நின்றிருந்தேன்.

முதலில் துர்கையை தரிசிப்போம், பல்லவர் சிற்பங்களில் துர்கைக்கு மிக உயர்ந்த இடம் உண்டு, பெரிய அளவில் ராஜ்ஜியத்திற்கான போர்ச் சூழலில் எதிரிகளால், பல்லவர்கள் ஆண்டு வந்த 2  9ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் இருந்து வந்ததால். கொற்றவை அவர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெருகிறாள். கொற்றவை வழிப்பாட்டை, காளியுடன் சேர்த்து பலர் குழப்பிக் கொள்கின்றனர். கொற்றவை வேறு, காளி வேறு - கொற்றவையை நோக்கும் பொழுது அவளது இனம்(CLAN) குறித்த வரையறைகளை ஒருவரால் குறிக்க முடியும், காளியோடு அப்படி பொருத்திப் பார்க்க முடியாது. சுருக்கமாக சொல்லப் போனால், கொற்றவை மனித வரலாற்றோடு மிக நெருக்கம் கொண்டவை, அவை புனையப்பட்டதாகக் கூறினாலுமே நெருக்கமுடையது தான்.
படத்தில் இருப்பது போல, மையத்தில் இருக்கும் துர்கை, பக்தனுக்காக காட்சியளிப்பது போன்ற நிலையில்(வரமளிக்கும்), தாமரை போன்ற பீடத்தில் நின்றவாறு புடைக்கப் பட்டிருக்கிறது. நான்கு கரமுடையவளாக, சங்கையும், வட்டினையும் ஏந்தியபடி நிற்க அவள் இடது புறம் அவளை நமஸ்கரிக்கும் சிற்பமும் அதற்கு நேரே எதிரே தன் தலையை வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு பலியாளின் சிற்பமும் இருக்கின்றது. போர்க் காலங்களில் இத்தகைய பலி கொடுக்கும் சம்பவங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இது மிகவும் உணர்ச்சியமயமான சிற்பக் காட்சி எனலாம். துர்கை பலியாகின்றவனுக்கு அருள் செய்யக் காட்சியளிக்கும் அதே வேளை, நான்கு கனங்கள் இந்தக் காட்சிக்கும் பின்புலத்தில் அதாவது இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பூதகணங்களாக படைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் இருக்கும் நான்கு பூதகணங்களை, இரண்டு விதமாக என்னால் பார்க்க முடிகிறது. அதாவது பூதகணங்கள் ஒரு உயிர் பிரிவதைக் (அவர்கள் உலகமான மேலுலகத்திற்கு வருவதால்) கொண்டாடுவதைக் காட்சிப் படுத்த அவர்கள் நடனம் ஆடுவது போல மெய்மறந்த நிலையில் கொண்டாடும் காட்சியாகத் தோன்றியது. அது ஒருவேளை - நான்கு கணங்களும் சேர்ந்து போடும் ஆட்டமாகவும் இருக்கக் கூடும். அதேநேரம் - அங்கே ஒரே ஒரு பூதகணம் மட்டும் துள்ளிக் குதித்து வர இருக்கும் புதிய ஆன்மாவை எதிர்பார்த்து மகிழ்வதாகவும், நடனமாடுவதாகுவும்(கூத்து) புரிந்து கொள்ளலாம். நான் இரண்டாவதாக சொன்னது போல் பார்ப்பது தான் இந்தச் சிற்பக் காட்சியை மிகவும் முக்கியமாகக் காட்டுகிறது, அதாவது ஒரே சிற்பத்தின் பல்வேறு நிலைகள் படக்காட்சி போல விரிகின்றது, காமிக்ஸ் கதைகளுக்கெல்லாம் முன்னோடியாக இவற்றைப் பார்க்கலாம். தன்னைத் தானே பலியிடல் தான் இந்த சிற்பக் காட்சியின் மையக்கரு என்பதை உணர முடிகிறது.

யுத்தகளத்தில் வெற்றிக்காக விழும்/பிரியும் முதல் உயிர் அந்த நாட்டின் சரித்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா பண்டைய நாகரிகங்களிலும் (மாயன்,எகிப்திய) இது போன்ற உயிர்ப்பலிச் சடங்குகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். யுத்தத்தின் போது, காலாட்படையில் முதல் சில வரிசைகளில் அணிவகுத்துச் செல்லும் எல்லோருமே கிட்டதட்ட பலி கொடுக்கப்படுபவர்கள் தான். இப்படிக் கொடுத்துதான் சாம்ராஜ்யங்கள் உருவாக்கப் படுகின்றன. இதைப் போன்ற சடங்குகளை பின்னாளில் வரும் சமூகத்திற்கு ஆதாரப் படுத்துவதற்காக மட்டுமன்று, மிகவும் சக்தி வாய்ந்த, புனிதம் மிக்க இந்த மண்டபத்தில் ஒரு பலி கொடுக்கும் நிகழ்வையும் பதிந்ததன் மூலம் அவன் போன்ற எண்ணற்ற வீரர்களுக்கு அம்மன்னன் அஞ்சலி செலுத்துகின்றான்.இன்றும் இது போன்ற உயிர்ப்பலிகள் நம் காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன, ஆனால் தேசத்திற்காக தன்னைத் தானே கொடுப்பவர்கள் என்ற தியாக நிலை எல்லாம் மாறிவிட்டது. இதுவரை ஒரு அரசு நிகழ்த்தும், அரசின் நலனுக்காக நிகழ்ந்து வந்த இது போன்ற பலிகள், இன்று நிறுவனங்களின் லாபத்திற்காக, வளர்ச்சி என்ற பெயரில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்ற அரசியல் சிந்தனையும் அம்மண்டபத்தின் உள்ளே வந்து போனது. ஏனென்றால் நான் சிற்பத்தினோடு பேசுகிறேன், “உங்கள் காலத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது தெரியுமா?? நீ எங்களைக் குறை கூறாதே” என்று அந்தப் பலியாள் என்னைப் பார்த்து அரசியல் பேசியது.


அந்த மண்டபத்திற்குள் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன?? அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்

அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்
(உங்கள் கருத்துகள் அவசியம்)
ஜீவ.கரிகாலன்

(சிற்பம் பற்றிய எந்தத் தவறான புரிதல்களாக இப்பதிவில் கண்டறிந்தால் தெரியப் படுத்தவும்)