வியாழன், 29 மே, 2014

ஆகவே.....ஜல்லிக்கட்டு வேண்டும். (பஜ்ஜி - சொஜ்ஜி -70)

ப்ளுக்ராஸ் அமைப்பில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்தபடி இருப்பது எனது வாடிக்கைகளில் ஒன்று, ஒரு நாள் அவர்கள் பதிந்த செய்தியில்  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் எதிரொலியாக காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டுகளில் இருந்து காப்பாற்றப் பட்ட காளைகள் கேரளாவில் அடிமாடுகளாகக் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை பகிர்ந்திருந்தது. இதில் இரண்டு அதிர்ச்சிகள் 

1. காளைகளினால் வேறு பயனில்லாததால் அவை அடிமாடுகளாகிப் போன துயரம்.
2. நமது வாழ்க்கை முறை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக ஜல்லிக்கட்டினை தவறாகப் புரிந்து கொண்ட ஒரு மேட்டிமைத்தனம் உருவாகியிருப்பது.

*
சுதந்திரம் அடையும்போது நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்த இந்தியாவில், இன்றைக்கு கிட்டதட்ட 30 வகையான நாட்டு மாடுகளே இன்றைக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் ஒரு இனம் அழிந்த வரலாற்றை உங்களுக்கு சொல்கிறேன், காங்கயம் காளைகளைப் போல் ஒரிஸ்ஸாவின் தட்பவெப்பத்திற்கும் வறட்சியில் வாழ்வதற்கு ஏற்ற அவ்வூரின் பூர்வீகக் காளை இனம் - காரியார் காளைகள்.

அந்த ஊரின் வறட்சிக்கு நிவாரணத் திட்டம் வழங்குவதற்காக சாமன்விதா எனும் திட்டத்தை ஒரு தொண்டு நிறுவனம் கொண்டுவந்தது. இதன்படி அவ்வூர் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் நிலமும், அதில் பயிரிடுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட கொன்றை மரக் கன்றுகளைத் தந்தது.(1970-80களில் கிழக்காசிய நாடுகள் முழுவதும் வறட்சி நிவாரணமாகவும், காடுகள் வளர்ப்பிறகாகவும் வளர்ககப்பட்ட மரவகை - எதிர் விளைவுகளையே கொடுத்தவை).

இப்படி இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டவர்களுக்கு மற்றொரு நிபந்தனை, விளம்பரமாக அம்மக்கள் கண்ணுக்குத் தெரிந்தது. அவர்களின் பசுக்களுக்கு அதிக பால் சுரக்கும் என்று ஜெர்ஸி காளைகளின் உயிரணுக்கள் செலுத்தப்பட்டன, காரியார் காளைகள் விதையறுப்பு செய்யப்பட்டன. அவர்கள் சொன்னது போல அதிக பால் சுரக்கவில்லை, வளர்த்து வந்த மரக்கன்றுகள் ஒரு முறை வெட்டப் பட்டாலும் மறுபடியும் துளிர்க்கும் என்று அவர்கள் சொன்ன வாக்குறுதியும் பொய்த்தது. தனது திட்டத்தை நிறைவேற்றியவுடன் சாமன்விதா திட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் திட்டம் - காரியார் எனும் காளை இனத்தை அழிப்பது. இந்த திட்டத்தின் தோல்வியினால் அந்தப் பகுதியில்ஏற்பட்ட வறட்சி கடுமையாக பத்தாண்டுகள் வரை நீடித்தது என்கிறார் இதழாளர் திரு.பி.சாய்நாத் அவர்கள்.

1970களில் ஆரம்பிக்கப்பட்ட வெண்மைப் புரட்சி  வெளிநாட்டு ஜெர்ஸி பசுக்களைப் போன்ற இறக்குமதி இனங்களை இந்தியாவில் கொண்டு வந்து, அரிய இனங்கள் பலவற்றை முழுதுமாக அழித்ததற்கு மேற்சொன்ன கதை ஒரு சோறு பதம்.

*
உண்மையில் வெண்மை புரட்சி, பசுமைப் புரட்சி போன்ற திட்டங்கள் எல்லாம் இந்த தேசத்தின் சுயத்தை, அதன் மரபின் தொடர்ச்சியை, பன்முகத் தன்மையை அறுத்தெரியும் முயற்சிகளாக இருந்து வருகின்றன என்றே உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஜல்லிக்கட்டு எனும் ஏரு தழுவுதல் விளையாட்டு மீது இன்றைய நாகரிகத்தின் கண்ணோட்டத்தில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். மிருக வதை, சாதியத்தை ஆதரிக்கின்றது என்று பல குற்றச்சாட்டுகள் நியாங்களின் கூறுகளோடு இருக்கலாம். ஆனால், அந்த விளையாட்டுகளில் பொதிந்திருக்கும் சமூகக் கட்டமைப்புகளை ஆராய்ந்தால், இதன் முக்கியத்துவம் தெரியும். தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டு முழுதும் நீர் செழிப்பான மாநிலமாக இருந்தது கிடையாது. 

விவசாயத் தொழில் மாடு வளர்த்தலோடு தான் நிறைவான சுழற்சியைத் தந்து ஒரு குடியானவனைக் காப்பாற்றுகின்றது. வெறும் விவசாயியாகவோ அல்லது மாடுகளை வளர்ப்பவனாகவோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வது மிகக் கடினமானது. விவசாயத்தில் களைகள், வைக்கோல் என்று நிலத்தில் உபரிகளையும், தேவையற்றதுகளையும் மாடுகளுக்குக் கொடுத்து, அவற்றை விவசாயத்திற்குப் பயன்படுத்தி உழுவதற்கும், உரத்திற்கும் என தமிழர்களின் வாழ்க்கைச் சூழலில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கும் மாடுகளைப் பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே.

மாடுகளுக்கு வரும் நோய்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கு அதன் மரபணுவிலிருந்தே அடிப்படை எதிர்ப்பு சக்தி அமைய வேண்டும். அதற்கு உள்ளூரின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ற மாதிரியான திடகாத்திரமான சந்ததியாக கன்றுகளைத் தான் மாடுகள் ஈன வேண்டும். இவை யாவுமே காளைகளைப் பொறுத்து தான் அமையும். விளையாட்டுகளில் பங்கேற்கும் காளைகள் மூர்கமாக, காட்டு விலங்கினைப் போல் இருக்கும். அதற்குத் தரப்படும் உணவுகளும், அதைப் பராமரிக்கும் விதமும் தலைமுறை தலைமுறையாக நாம் பெற்ற அனுபவத்திலிருந்து தான் உருவாக்க முடியும். வருடத்தில் ஒரு மாதம் மட்டும் இது போன்ற விளையாட்டில் பங்கேற்கும் காளைகள் அதன் பின்னர் இனவிருத்திக்காக பயன்படுத்தப்படும், அதுவே நாட்டு மாடுகளை ஆரோக்கியமாக வளர்க்க அடிப்படை.

இப்பொழுது உச்சநீதி மன்றம் விதித்திருக்கும் தடை ஒரு விளையாட்டு மீதான தடை இல்லை, விவசாய நாடான இந்த நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மீதான தடை. கலாச்சாரம், பண்பாடு போன்ற விழுமியங்களை நாகரிகம், நவீனம் என்ற கருத்துகளைக் கொண்டு ஒரேடியாகப் புறந்தள்ளுவது என்பது அபத்தமானது. இந்த தீர்ப்பினை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால், இன்றைய சமூகத்தின் நவீன தர்கங்களின் எதிர்வினையாகத் தான் பார்க்க வேண்டும். கிராமங்களின் சமூக அமைப்பினை ஒரே ஒரு காரணம் சொல்லி புறந்தள்ளுவது எதிர்காலத்தில் பல ஆபத்துகளை விளைவிக்கும்.

சங்ககாலத்தில் இருந்து, சிந்துச் சமவெளிகாலத்திலிருந்தே மாடுகளுக்கும் ந்மக்குமான தொடர்பினைப் பறைசாற்றும் தொடர்ச்சியாக இந்த ஏறு தழுவுதல் விளையாட்டைப் பார்த்திருந்தால், ஜல்லிக்கட்டு விளையாட்டினை நவீனப்படுத்தி சுற்றுலாத் தளமாக மாற்றியிருக்கலாம், அல்லது விதிமுறைகளைக் கடுமைப்படுத்தியாவது இப்போதிருக்கும் வடிவத்திலேயே செயல்படுத்த அனுமதிக்கலாம். பொறுப்புள்ள அரசு என்ற ஒரு அரசாவது இந்த ஜனநாயகத்தில் சாத்தியப்பட்டிருந்தால் இவ்விளையாட்டு இன்று உலக அரங்கில் பேசப்பட்டிருக்கும்.

இன்று வேண்டுமானால் நம் அன்றாடப் பிரச்சினைகளை அடிக்கோடிட்டு விட்டு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறைவு என்று பேசிக் கொள்ளலாம். ஆனால் இது போன்ற முன்னுதாரணங்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை விவாதிக்க வேண்டியது மிக்க அவசியமான ஒன்று. இந்தப் பிரச்சினையின் அடிப்படை ஜல்லிக்கட்டினைப் பற்றிய தவறான பார்வை மக்களுக்கு இருப்பதே, சட்டங்கள் பெரும்பான்மை மக்களின் பொதுபுத்தியில் தான் இயங்க விரும்புகிறது. வடஇந்தியாவில் ஜல்லிக்கட்டினை அவர்கள் மதச்சடங்குகளுக்கு எதிரானதாகவும் காட்டுமிராண்டித்தனமாகப் பார்க்கப்படலாம். ஆனால், அதை மட்டுமே பொதுவானதொரு கருத்தாக வைத்துக் கொண்டு இவ்விளையாட்டை ஒரு அநீதியாக பாதித்து அதை தடை செய்யும் முறை, இந்தியா முழுமைக்குமான ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆகும். உண்மையில் இந்த அளவுகோல் தான் காட்டுமிராண்டித் தனமானது.

ஆகவே.....ஜல்லிக்கட்டு வேண்டும்.

-ஜீவ.கரிகாலன்

சனி, 24 மே, 2014

அன்பு சிவன் எப்படிப் பறந்தான்??

அன்பு உனக்கு நான் இரங்கற்பா பாட முடியாது ஏனென்றால் எனக்குத் தெரியாது.அன்புக்கு வேறு என்ன தெரியும்?? அன்பைத் தவிர யாராவது அன்பானவர்களைப் பற்றி பேசினேன் என்று தான் அநேக நாட்களில் இப்படி உறையாடல் துவங்கும்.

அய்யப்ப மாதவனிடம் அந்த நாவலை முடிங்கன்னு சொன்னேன், வேல்ஸ் என் கவிதைக்கு லைக் போட்ருக்கார் பார்த்திங்களா, நாளைக்கு ஜிந்தாவா பார்க்க அங்க வர்றேன் கரிகாலன், அமுதா தமிழ் கிட்ட சேட் பண்ணா எவ்ளோ உற்சாகம் வரும் தெரியுமா - such an energetic girl she is, கணேசகுமாரன் கிட்ட பேசினேன்,ரமேஷ் ரக்சன்னு புதுசா ஒருத்தன் கவிதைய வாசிச்சேன் அவன் டைம்லைன்ல பாருங்க, வாசு தான் என் புத்தகம் போடனும்னு அக்கறையா கேக்குற மனுசன் நீங்களும் இருக்கிங்களே, பாலசுப்ரமணியன் பொன்ராஜை ஏர்போர்ட்ல பார்த்தேன் - ரொம்ப ஸ்மார்டா இருக்காரு அந்த மனுஷன், மஹேந்திரன் என்ன அப்பா மாதிரின்னு சொல்லுவான், மழைக்காதலன் என் மகன் மாதிரி தான் அவன் என் மேல கோபப்பட்டால் கூட அதைப் பத்தி நான் கவலப்படல - ஆனா காலம் கொஞ்ச காலம் அவனோட அன்பு பாராட்டாம இருக்கச் சொல்லுச்சு, அ.மார்க்ஸ் - தமிழச்சி தங்கபாண்டியன் ரெண்டு பேர்களோட பேச்சைக் கேட்பதற்கு மட்டும் தான் ஒரு கணம் கூட நான் யோசித்துப் பார்த்தது இல்லை, MP உதயசூரியன் மாதிரியான ஜெண்டில் மேநை பார்ப்பது கஷ்டம், ராமச்சந்திரன் அவரு கொழந்த மாதிரி, கவிதைக்காரன் டைரி அதெல்லாம் வாசிச்சுட்டா கவுத எழுத முடியுங்கற அளவுக்கு நான் வொர்த் இல்லப்பா, இந்தக் கண்ணதாசன் பையன் எழுதவே மாட்டானா? ஈரோடு கதிர பார்த்துவிட்டுத் தான் வந்தேன், , பாலா ஒரு கொழந்தப்பய, சுந்தரபாண்டியனும், தினகரனமும் தான் என் வாழ்வின் பெரும் சம்பாத்யங்கள், அடுத்த உறவுகள் கூட்டத்திற்கு உங்களைக் கூட்டிட்டு போறேன், யவனிகா எங்கையோ இருக்காரு, ஆனா எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி, இந்த அமிர்தம் சூர்யாக்குன்னே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும், புகழேந்தியோட பேச்சக் கேட்டேன் நைட்டெல்லாம் தூங்கமுடியல, கரிகாலன் - வா.ம ஒரு இண்ட்ரெஸ்டிங் கேரக்டர்..கரிகாலன் நம்ம சீக்கிரமா பப்ளிஷிங் ஆரம்பிக்கனும், தனியிதழ் ஆரம்பிக்கனும் கண்மணி குணசேகரன், பெருமாள் முருகனல்லாம் கூப்பிடனும் - எனக்குத் தான் சில பேரோட பிணக்கு வந்துவிட்டது நீங்க அவுங்களுக்காக தாராளமாக கூட்டங்கள் நடத்தலாம் நான் அதுல interfere ஆகமாட்டேன்.

எல்லோருக்கும் ஏதாச்சும் செய்யனும் போல இருந்துச்சு அதான் இந்த பேக்காவது ஆளுக்கு ஒன்னு கொடுக்கலாமே என்று இருந்தேன்..

நாம எல்லாருமே ஒரு நாள் வெளியில் எங்காவது போகனும்....

எனக்கும் சாத்தப்பனுக்கும் ஆயிரம் இருக்கும் அத நாங்களே பார்த்துப்போம்.

கரிகாலன் கடைசி வரைக்கும் என் கவித புத்தகத்த வரவிட மாட்டிங்க போலிருக்கே என்ற பிராண்டட் சிரிப்பு சத்தம்

இறுதியாக ஒன்று ஞாபகம் வந்தது

 “கரிகாலன் நான் எடைய கொறைச்சுட்டேன் அடுத்தது நீங்கதான்.. ”

******

உச்சியைத் தொட்டிராத சூரியனின் வெப்பம் நினைவில் இருந்தது. கிழக்கில் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு தூர தேசத்துப் பறவையின் குரல், அந்த மலைப் பிரதேசம் முழுவதும் எதிரொலித்தன. எப்போதும் கூட்டமாகவே பறக்கின்ற இயல்பை உடைய பறவை அரிதாகத் தான் தனியாகப் பறக்கும், தன் கூட்டாளிகளோடு வரும் பொழுது பாதையைத் தொலைத்து விட்டதோ!! மனிதர்களின் மனநிலையா பறவைகளுக்கு, பின்னர் அவை எப்படி பாதையை தொலைக்கும்? அது புதிய பாதையிலோ வேறு பாதையிலோ போய்க் கொண்டிருக்கிறது. குரல் ஒன்றினை வைத்துக் கொண்டே தான் அதனைப் பறவை என்று நினைத்துக் கொண்டேன், அருகில் வந்தால் தான் அது பறவை என்று உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியும். மிக வேகமாகத் தான் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது அது. ஆனால் அது தலைகீழாகத் தெரிந்தது. இல்லை நான் தலைகீழாக மலை முகட்டில் இருக்கின்றேன், அத்தனை வேகமாக வந்துகொண்டிருக்கும் பறவை தான் அத்தனை நிதானமாக ஒவ்வொரு அங்குலமாக நகர்வதையும் என்னால் உள்வாங்கிக் கொண்டிருந்தது, அது எனக்கான பறவையல்ல என்று எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பறவை என்ற கணக்கு பற்றி இன்னும் சில விநாடிகள் கடக்கும் வரை தெரியவில்லை தான். அந்த வெயிலில் மலை முழுதும் படர்ந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ குளிரான பனித்திரை மூடிக்கொண்டிருந்தது, எனக்குத் தெரியவே தெரியாது பனித்திரைக்கு இப்படி ஒரு சுகந்தம் இருக்குதென!! என்ன நறுமணம். அது இப்பொழுது நெருங்கிவிட்டது, அது பறவையே தான், என்ன விநோதமான ஓசை அதனுடையது..

ஆம் நேராக பறந்துக் கொண்டிருக்கும் பறவை ஏன் அந்தரத்திலேயே நிற்கிறது அதுவும் எனக்கு நேராய்!!

அந்த விநாடி வந்து விட்டது - பறவையானது என் முகத்தை பார்த்ததும், அது என்னை நோக்கு வர ஆரம்பித்தது அது எனக்கான பறவை..

அன்பு சிவனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்

- ஜீவ கரிகாலன்

வியாழன், 22 மே, 2014

ப்ராஜக்ட் சாரு நிவேதிதாசென்ற புத்தகச் சந்தை நிறைவடையும் பொது என் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த விஷயம் light reading எனும் வாசிப்புத் தன்மை பற்றி உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? Light reading என்று சொல்லப் படும் புத்தகங்களை ஒரு நல்ல வாசகன் திரும்ப வாசிக்கவே கூடாதா? எல்லா வாசகனுமே இந்த வாசல் வழியாகத் தான் வந்திருப்பார்களா என்றெல்லாம் வாசித்தபடி தேநீர் கடைக்காரனின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தோம்.

அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன் - அது புத்தக வாசிப்பைப் பற்றிய என் நண்பனுடைய அனுபவக் கதை


*

நண்பர்களுடன் தங்கி ஒரு நான்காண்டு காலம் பேச்சிலர் ரூம் வாழ்கை. எந்தக் கட்டுப்பாடுகளுமற்ற வாழ்க்கை, பெருநகரங்களில் வாழும் பேச்சிலர்களுக்கான எல்லா இலக்கணங்களுடனும் வாழ்ந்த காலங்கள் அவை. அந்த அறையின் ஐடியா மணியாக அடியேனே இருந்தேன். அது என்ன ஐடியா மணி என்கிறீர்களா?, ஐடியா மணி என்பவன் தான் ரூமைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.  அது அதிகாரத்தின் தொனியல்ல, ஐடியாவின் தொனி.

ஐடியா மணியின் இலக்கணங்கள் யாவை?, அவனின் தகுதிகள் என்னென்ன??
ஐடியா மணி என்பவன், தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் யோசனைகளுக்காக அனுக வேண்டியவன் அவனே. எல்லாமும் தெரிந்தவன் என்கிற பிம்பம் எப்போதும் அவன் மீது படிந்திருக்கும். ஆனால் ஐடியா மணியாக உருவாகுவது அத்தனை எளிதல்ல முதலில் அளவு கிடந்த மொக்கை போட வேண்டும், நம்ம பேச ஆரம்பித்தால் அதற்கு பயந்தே நாம் சொல்ல வந்த விஷயத்தை ஒப்புக் கொள்வார்கள். அதே சமயம் அதற்காக சில இழப்புகளையும் சந்திக்க வேண்டு வரும், வீட்டு ஓனரைச் சரி கட்டுவது, ஏதாவது குறைகள் சொன்னால் சமாளிப்பது போன்ற இது போன்ற பிரச்சினைகளை முன்னின்று தலையிட வேண்டும். இப்படி எல்லாம் செய்து பட்டம் வாங்கினால் என்ன லாபம் ? 

“மூணே மூணு இட்லி, ஒரு வடை, கொஞ்சமா கட்டிச் சட்னி” என்று இலவசமாக ஆர்டர் செய்து கொள்ள முடியும். இது போன்ற லாபத்திற்காகத் தான் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்தேன்.

ஆனால் இந்த பதவி அவ்வளவு சீக்கிரமாக உங்களுக்கு கிடைத்து விடாது? அதற்கு நீங்கள் அதிகம் புத்தகங்கள் படிக்க வேண்டும்!! புத்தகம் என்றால் ஒரே வெரைட்டியாக இருக்கக் கூடாது கன்னாபின்னாவென்று வேறு வேறு வெரைட்டிகளைப் படிக்க வேண்டும். பேசும்பொழுது அடிக்கடி “இந்த புத்தகத்துல இந்த Author என்ன சொல்ல வர்றார்னா ” என்கிற மாதிரியான reference தர வேண்டும்.  சாதாரணமான ராஜேஸ்குமார் புத்தகம் படிக்கிறீர்கள் என்றாலும் அதை “ராஜ தந்திர யுத்த களப் பிரசங்கங்கள்” போன்ற புத்தகத்திலோ அல்லது “Angels and demons” போன்ற புத்தகத்திலோ வைத்து படிக்க வேண்டும்.

நண்பர்கள் யாராவது கண்டுபிடித்தால் கூட சலனமே இல்லாமல்,  “இந்த ரா.கு SEMIOTICS பத்தி ஒரு நாவல் எழுதியிருக்கிறதா ஒரு நண்பன் சொன்னான், அதான் இதை வாசிச்சு டான் பிரவுன் கிட்ட இருந்து எங்கவெல்லாம் இவர் காப்பியடிச்சு இருக்கிறார் என்று நோட்ஸ் எடுக்கிறேன் மச்சி” என்று நிதானமாக சொல்லியவாறே அவன் சந்தேகம் தீரும் வரை கொட்டாவியைக் கட்டுப்படுத்திக் கொண்டாவது Angels and Demonsஐ வாசிக்க வேண்டும். இப்படியெல்லாம் தான் இமேஜை தக்க வைக்க வேண்டும். ஆனால் ஒரு சில நபர்களை நீங்கள் என்ன செய்தாலும் கவர முடியாது.

அப்படித்தான் புதிதாக ஒரு நண்பன் எங்கள் அறைக்கு வந்தான். அவன் அந்த அறையில் அதுவரை வசித்து வந்த மற்றொரு நண்பனின் அண்ணன். அவன் வெளிநாடு போகவும், இந்த அறையில் இடம் காலியாவதை அறிந்து அவன் அண்ணனைச் சேர்த்து விட்டான். மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் சுபாவமற்றவனாக இருந்தான். சேர்ந்து சாப்பிடும் பொழுது கூட சரியான கூட்டாளியாக இருக்க மாட்டான், யாரிடமும் அதிகமாகப் பேசவும் மாட்டான். ஏற்கனவே ஐடியா மணியாக இருந்த என்னை அவன் சட்டை செய்வதேயில்லை. மூன்று வருடங்களுக்கு முந்தைய புத்தகச் சந்தைக்கு சென்று புத்தகங்கள் வாங்கத் திட்டமிட்டோம் ( அப்போது எல்லா நண்பர்களும் சேர்ந்து வாசிக்க ஆரம்பித்து இருந்தோம் இவனைத் தவிர) நானும் மற்ற அறை நண்பர்களும் செல்வதற்கு திட்டமிட்டோம். அவனும் உடன் வருகிறேன், நானும் சில புத்தகங்கள் வாங்கி வாசிக்க ஆரம்பிக்கிறேன் என்றான்.

இது தான் அவனைப் பழி வாங்குவதற்குத் தக்கச் சமயம் என்று திட்டம் தீட்டினோம், அதற்குப் பெயர் தான் ப்ராஜக்ட் சாரு நிவேதிதா. ஒரு முன் கதை- நாங்கள் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பின் அடிக்கடி ப்ளாகில் வசைபாடப்பட்டுவரும் பெயர் இது என்று தெரிந்தவுடன், முதன் முதலில் “ஜீரோ டிகிரி” எனும் புத்தகத்தை வாங்கி ஆளுக்கு இருபது பக்கங்கள் என கிழித்துக் கொண்டோம். இப்போ தான் எக்ஸைல் வந்திருக்காமே!! அதைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வாங்கிவிடச் செய்து விடுவோம். அதோடு நம்ம ஏரியாவுக்கே வர மாட்டான் என்று திட்டம் தீட்டினோம்.

இரவெல்லாம் சாருவைப் பற்றி தான் பேச்சு, “அவரைப் படித்த பின்னர் இசை, கலவி, சமூகம், இஸ்பானியக் கலாச்சாரம் என்றெல்லாம் நம் ரசனை மாறிவிட்டது அல்லவா??” என்று எங்களுக்கும் பேசிக் கொண்டோம் அவன் காது கொடுத்து கேட்குமாறு.

 “ஜீரோ டிகிரி எனும் நாவல் போஸ்ட் மாடர்னிசம் என்று சொல்கிறார்கள் தெரியுமா?”

 “ம்ம்ம்!!”

“அதில் ஒரு வரி வருது பாரு... அதை வாசிக்கும் பொழுது போரைச் சந்திக்கும் எந்த இனத்திலும், ஒரு பகுதி மோசமான அழிவைச் சந்திக்கும் பொழுது நடைபெறும் விஷயங்கள் உலகம் முழுக்க ஒன்றாக இருக்கின்றது என்று அந்த வரியை வாசிக்கும் போது தான் டா உணர்ந்தேன்”

“ம்ம்ம்!!”

“இந்த முறை சாருவோட இன்னொரு மகத்தான் நாவல் வந்துருக்கு டா.. அத நான் என் காசு போட்டு வாங்கிக்கிறேன். ஏன்னா எல்லாரும் வாசிச்சதுக்கப்பறமா நான் அதை பத்திரப்படுத்தி அப்பப்போ வாசிக்கனும் என்றேன்”

“ம்ம்ம்!!” என்றான். ஆனால் இந்த முறை என் நண்பன் இல்லை, எங்கள் திட்டப்படி நாங்கள் பேசிக் கொண்ட சுவாரஸ்யத்தில் எங்கள் வலையில் விழுந்த டார்கெட்.

அடுத்த நாள், புத்தகக் கண்காட்சிக்கு சென்றோம், இவனைக் கவிழ்ப்பதற்கான சரியான இடம், அந்த சந்தையில் புதிதாகக் கடை போட்டிருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் தான் என்று முடிவெடுத்தோம். ஏற்கனவே எங்கள் பட்டியலில் இருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டே டிஸ்கவரி புக் பேலஸிடம் சென்றோம். வேடியப்பன் அப்பொழுது ஒரு ஸ்டால் மட்டும் தான் புக் பண்ணி அரங்கு அமைத்திருந்தார், இருந்தபோதும் கையில் அரிவாள் இல்லாத குறையாய் அந்த பக்கம் போவோர், வருவோரை எல்லாம் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். நாங்களே உள்ளே சென்றோம்,  என் நண்பன் என்னைப் பார்த்து கண் சிமிட்டினான், நான் அவனுக்கு வலை விரிக்கலானேன்.

“அந்த போஸ்ட் மடர்னிசத்தில புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறதே!! அதன் பெயர் என்னவென்று சொன்னாய்??” என் நண்பன் என்னிடம் கேட்டேன்

“யாரு சாரு புக்கா” -இது நான்

“எக்ஸைல் தான” - இது எங்கள் டார்கெட்.

நானும் என் நண்பனும் கை குலுக்கிக் கொண்டோம்.

“ஆஹா!! அமௌண்ட் கொறையுதே ” என்று பர்ஸைத் தடவினேன்.

“பரவாயில்ல, இத நான் வாங்கிக்கிறேன், நானும் புத்தகம் வாசிக்கலாம்னு ஆசப்படுறேன்” என்றேன்.

“இதாண்டா நீ வாங்கும் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்டு புக் ” என்றேன். வேடியப்பனின் தம்பி சஞ்சய் எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

“பாஸ் கண்டுக்காதிங்க!! எப்டியோ உங்களுக்கு சேல்ஸ் ஆகுதுல்ல” என்று சிரித்துக் கொண்டே வெளியேறினோம்.

ஆப்ரேஷன் சாரு நிவேதிதா சக்ஸஸ்.

“என்னங்கடா இது செக்ஸ் புக் மாதிரி இருக்கு?? நீங்க என்னென்னமோ சொன்னிங்க??”

நாங்கள் இதுவரை தொடாத அந்த புத்தகத்தை, அவன் முதன் முதலாக வாசிக்க ஆரம்பிக்கும் போது - புலம்பிக் கொண்டே தான் வாசித்தான். நாங்கள் அவன் புலம்பல்களை ரசித்துக் குதூகலித்துக் கொண்டோம் அவனுக்குத் தெரியாமலே.

திடீரென்று அடுத்த வாரம் ஒரு நாள் அறைக்குத் திரும்புகையில் அவன் கையில் மகாபாரதம்.

“எக்ஸைல் என்னாச்சு??” என்றேன்

“முடிச்சுட்டேன், இனிமே சினிமா போறத கொறைச்சுட்டு புக் வாசிக்கனும்” என்றான்.

***

இந்தக் கதையை முடிக்கும் பொழுது என் அருகில் இருந்த நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“Light Reading, Entrance Exam, Channel என்றெல்லாம் வாசிப்பிற்கு எந்த அவசியமும் இல்லை.. எவனுக்கு எந்த கதை தன் சொந்த அனுபவத்தையோ இல்லை தான் கண்டிருந்ததை/அறிந்ததைப் பற்றிப் பேசி மறுத்தோ அல்லது ஒப்புக்கொள்ளவோ செய்கிறதோ?? அது தான் அவனைத் தொடர்ந்து வாசிக்கத் செய்யும், என்றபோதும் இங்கே யாராலும் வாசகனின் pulseஐ பிடித்துப் பார்க்க முடியாது. ஒரு வாசகன் எவனை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவோ!! மறுத்து போகவோ முடியும் - அவனை கட்டுப்படுத்த முடியவே முடியாது” என்றேன்.

மேலும் “ இல்லாவிட்டால், வாசகனாகக் கூட இல்லாதவன், வாசிப்பினால் ஈர்க்கப்பட்டு இன்று பதிப்பாளனாக வரும் வரை மாறுவதற்கு சாரு நிவேதாவின் எக்ஸைல் தன் காரணம் என்று ஒருவன் இருக்கிறான் என்றால் நம்புவீர்களா?” என்று கேட்டேன். THUS PROVEN YOU CAN'T IGNORE CHARU

யாரைச் சொல்கிறேன் என்று எல்லோரும் என்னைப் பார்க்க என் பக்கத்து டேபிளில் - டிஸ்கவரி புக் பேலஸில் மட்டும் 3000 ரூபாய்க்கு கார்டு தேய்ச்ச ட்ரூத் ப்ரெஷ்ஷைப் பார்த்தேன். அநேகமாக என் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் அவனைத் தெரியும் தான். அவன்.... (இந்த சுட்டியை க்ளிக்கி பாருங்கள்)


ஜீவ.கரிகாலன்
புதன், 21 மே, 2014

யாவரும் நிகழ்வு - 21

         சித்திர அன்ன விருந்தும் - இஞ்சி மரப்பாவும்

சகோதரி ரேவா அவர்கள் என்னிடம் ஃபேஸ்புக்  தனிச்செய்தியில் ஒரு கோரிக்கை வைத்தார்கள். //தொடர்ந்து நிகழ்வுகள் நடத்துகிறீர்கள், ஆனால் அதைப் பற்றி சுருக்கமாகக் கூட எழுதாமல்/பதியாமல் இருப்பது// குறித்து கவலைப் பட்டார். உண்மையில் எனக்கு அந்த கோரிக்கை மிகவும் வருத்தம் அளித்தது. 21 நிகழ்வு வரை நடத்தியும் க்ரூப் போட்டோவைத் தவிர வேறு என்ன ஆவனப்படுத்தியிருக்கிறோம் என்கிற போது கொஞ்சம் வருத்தம் வரவே செய்தது.

*
17 மே சனிக்கிழமை மாலை, வழக்கம் போலவே டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடைக்கு கீழேயுள்ள தேநீர் கடையில் வழக்கம் போலவே சரியான நேரத்தில் முதலாம் அமர்வு ஆரம்பித்தது. நிகழ்வின் இறுதி அமர்வும் இங்கே தான் நடக்கும் என்பது கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் தெரியும். நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர், மோடியின் வெற்றி தமிழகத்தில் அநேக பேரைக் களைப்படையச் செய்திருந்தது. தி.மு.கவைப் பற்றியும், விஜயகாந்தைப் பற்றியும் தமிழகமே உற்சாகமாக பரிகாசம் செய்து கொண்டிருந்த உற்சாகமான நாள் அது. ஆனால் இலக்கியம் பேச வேண்டுமென்று வந்திருப்பதால் முதலாம் அமர்வை முடிந்த அளவுக்கு சீக்கிரமாக முடித்து விட்டு, கடைக்கு சென்றோம்.

...

இரண்டாம் அமர்வு - முதலாம் அமர்வினைப் போல் சரியான நேரத்தில் இது தொடங்குவதில்லை, அமிர்தம் சூர்யா, நறுமுகை தேவி, ஐயா குமரேசன், பத்மஜா, சக்தி ஜோதி, ஐயப்ப மாதவன், நர்மதா குப்புசாமி என்று ஒவ்வொருவராக வந்து சேர்வதற்குள் 06.30 தாண்டிவிட்டது. முதன் முதலாக ஃபேஸ்புக் ஈவெண்ட்ஸ் அழைப்பிலேயே 65 பேர்கள் வருவதாக போட்டிருந்ததால் இந்த முறை அரங்கு நிறையும் என்று நம்பினோம் (70க்கும் குறையாமல் வந்திருந்தனர்).

யாவரும்.காம் பற்றிய ஒரு சின்ன அறிமுகத்தோடு(50 பேருக்கும் மேல் வந்திருக்கிறார்கள் இல்லையா??) உற்சாகமாக அண்ணன் அய்யப்ப மாதவன் ஆரம்பித்து வைத்தார். அதற்கு முன்னர், இந்த புத்தகச் சந்தையில் வெளியான இம்மூன்று புத்தகங்களையும் எளிமையாக அறிமுகப் படுத்துவது அவசியம் என்று அய்யப்ப மாதவன் முன்மொழிந்தார். எதிர்பார்க்காத வரவாக இருந்த கவிஞர்.ஃபிரான்சிஸ் கிருபா அவர்களை வைத்து சாத்தானின் அந்தப்புறம் , தெரிவை என்னும் இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. சொல் எனும் தானியம் - இந்நூலை இயக்குநர்/கவிஞர் சூரியதாஸ் வெளியிட்டார் -கவிஞர் ஆதிரா முல்லை பெற்றுக் கொண்டார்.

**
முதலில் தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் நறுமுகை தேவியின் “சாத்தான்களின் அந்தப்புரம்” பற்றி பேச ஆரம்பித்தார்.

கிட்டதட்ட இரண்டு மாதங்களாக - நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கட்டுரைகளும், பேச்சுகளும், நேர்காணல்களுமாக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஐயாவுக்கு இரண்டு நாட்களாக தன் கைகளில் ஒரு கவிதை புத்தகம் இருப்பது உற்சாகமாய் இருக்கிறது என்று  தன் பேச்சினை ஆரம்பித்தார். கவிதைகளை முழுக்க முழுக்க தனது அரசியல் கண்ணோட்டத்தில் தனது பார்வையாக முன்வைத்தார். கவிதை நூலில் இருக்கும் கவித்தன்மைகளைச் சுட்டிக் காட்டதவும் அவர் தவறவுமில்லை , எனினும் நறுமுகையின் கவிதைகளை அரசியல் பார்வையுடனும், அதில் பெண்ணியப் பார்வையுடனும் சுட்டிக் காட்டுவதைத் தான் அவர் விரும்புகிறார் என்று தெரிந்தது.

“சமூகத்தின் பிரச்சினைகளை நான்கு பக்கங்களில், தலையங்களில் அலசி அதற்கு தீர்வினையும் எழுதும் என் கர்வம் - சில நேரங்களில் ஒரு நான்கு வரிக் கவிதையில் காணாமல் போகிறது” என்று சொல்லும் பொழுது கவிதை மீதான அவர் காதல் தெரிந்தது. நிகழ்வின் இறுதியில் ஏற்புரை வழங்கிய நறுமுகை தேவி - உணர்ச்சி வயப்பட்ட நிலையிலும், கவிதைகளை தன் ஆயுதமாக(சாட்டையாக) பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் எதனால் வந்தது என்று அழுத்தமாகக் கூறினார். அதனால் தொடர்ந்து சமூகத்தின் மீதான என் கோபத்தினை வெளிப்படுத்தும் கவிதைகள் எழுதுவது தான் என் இயக்கமாக இருக்கும் என்று ஏற்புரை வழங்கினார்.

**
அடுத்தது பத்மஜாவின் தெரிவை நூலுக்கான விமர்சனம், கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட நண்பர் அமிர்தம் சூர்யாவின் விமர்சனம்.

வழக்கம் போலவே எதிர்பார்ப்புடன் வந்திருந்த தன் ரசிகர்களுக்கு ஒரு குறையும் வைக்காத நிறைவான போஜனம் சூர்யாவால் அளிக்கப்பட்டது. “கவிதை நூலினை ஒரு பாதி பத்மஜாவின் கவிகளும், மற்றொரு பாதி மொழிபெய்ரப்புமாகக் கொண்டு வந்தது ஏன்?” என்று விமர்சனத்துடன் ஆரம்பிக்கப் பட்ட இவர் பேச்சு. சமகாலத்தில் பெண்கள் எழுத வேண்டிய கட்டாயம் பற்றி பேச ஆரம்பித்த சூர்யா, சில மொழிபெயர்ப்புகளை முன் வைத்து ஆரம்பித்தார் Anne Sexton குறித்து பேச ஆரம்பித்தார். அவரின் வரிகளில் இருந்து பெண்கள் எழுதுவதற்கான தடைகள் பற்றி என இந்த நூலிற்கான புற வெளிகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டு, புத்தகத்திற்குள் நுழைந்தார்.

ஒரு கவிதையில் வரும் “கொல்வாயா” என்னும் வார்த்தைக்கு, ஒரு பெண் “கொல்வாயா?” என்று சொல்வது என்னவாக இருக்கக்கூடும் என்று விவரிக்க ஆரம்பித்தார். தொல்காப்பியர் பெண் கவிஞர்களின் செயல்பாடுகளை வரையறுக்க, அதை எப்படி தகர்த்து எறிந்த பெண் கவிஞரான வெள்ளி வீதியாரின் முதல் முயற்சியை வியந்தபடி வந்த அவர்,  “கொல்” எனும் வார்த்தை காமமாக இங்கே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

 “கவிதை எழுதுபவர்கள் முடிந்த அளவிற்கு எவ்வளவு விரைவாக முதல் புத்தகம் போட முடியுமோ போட்டு விடுங்கள், அது தான் உங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கும், அதைப் போட்டு விட்டு வேண்டுமானால் சில வருடங்களுக்குப் பின்னர் அது நான் எழுதியதில்லை என்று தப்பித்துக் கொள்ளுங்கள்!!” என்று பதிப்புலகிற்கு லாபகரமான இந்த அறிவுரையை சூர்யா வழங்கிய போது ஒரு பெரிய கைதட்டல் ஒன்று வந்தது. அவர்களில் பல பேர் முதல் புத்தகம் அல்லது அதைப் போடுவதற்காக யோசித்துக் கொண்டிருப்பவர்கள் என்று தோன்றியது.. நானும் கைதட்டினேன் கவிஞன் என்பதால் அல்ல, பதிப்பகம் ஆரம்பித்து விட்டதால் :).

முத்தம் பற்றிய ஒரு கவிதைக்கு - முத்தம் பற்றி சுவாரஸ்யமான தகவல்களுடன் அரங்கத்தை கலகலப்பூட்ட, தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அய்யப்ப மாதவன் அங்கே அரங்கில் இருந்தோர் பலரை பகடி செய்து (குறிப்பாக அடியேனை) கலகலப்பாக மாற்றிவிட்டார். முத்தம் பற்றிய கவிதைக்கு சுகுமாரனின் கவிதையும், வீடு பற்றிய கவிதைக்கு மாலதி மைத்ரி எனவும் பல கவிதைகளை குறிப்பிட்டு. பெண் கவிஞர்களில் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களில் என முக்கியமான இடத்தை நோக்கி செல்லும் பத்மஜாவை வாழ்த்திய படி நிறைவு செய்தார்.

பத்மஜா தன் விமர்சனத்திற்கு ஏற்புரை வழங்கிய போது, தன் கவிதைகள் தனிமை குறித்த பதிவாகத் தான் எழுதியதாக விளக்கமளித்தார்.

*
இறுதியாக சக்தி ஜோதியின் நூல் குறித்த விமர்சனத்தை நர்மதா குப்புசாமி அவர்கள் முன்வைத்தார்.

முதல் முறை அவர் பேசுவதாக சொல்லிக் கொண்டாலும், கவிதைகளோடு அவருக்கு இருந்த நீண்ட பரிச்சயம் அவர் கவிகளின் nuances பற்றியும் கவிதைத் தன்மை குறித்த பேச்சிலும் நிறைய முதிர்ச்சி வெளிப்பட்டது. தன்னுடைய வாழ்வுடன், தன்னனுபவத்துடனும் மிகவும் நெருங்கிய கவிதைகளாக அவர் குறிப்பிட்டார்.

ஆத்மாநாமின் கவிதைகளையும், வான்காவின் சில குறிப்பிட்ட ஓவியங்களுக்கு மிடையேயான தொடர்பினைக் குறிப்பிடவும் செய்தார். சக்தி ஜோதியின் கவிகளில் காணப்படும் எல்லையற்ற அன்பினை வர்ணித்தார்.

இதற்கு ஏற்புரை வழங்கிய சக்தி ஜோதி தன் கவிதை மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக தனது வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எல்லையற்ற காதலுக்கும், அன்பிற்கும் காரணமாக தனது POSITIVE அனுகுமுறையைப் பற்றிக் கூறினார். ஒரு சதவீதமாவது நல்ல குணம் உள்ள எந்த மனிதரையும் நான் நேசிக்கத் தவறுவதில்லை என்றார். மேலும் தன் கவிகளில் வரும் இயற்கையைப் பற்றிய வர்ணிப்பகளுக்கு தன் சிறு வயதிலேயே தான் வாழ்ந்து வந்த மலை மற்றும் நதிகளின் பிரதேசங்களைப் பற்றிச் சொல்லி முடித்தார். தான் வாழ்ந்த ஊர் இன்று ஒரு அணைக்குள் மூழ்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவரது கவிகளின் தனித்தன்மை என நான் நம்பக் கூடியவை மீதான என மனதிலிருந்த கேள்விகளுக்கு அவரிடமிருந்த பதிலாக அந்த ஏற்புரை இருந்தது.

(சமூகம் பற்றிய அக்கறை அவர் கவிகளில் இல்லையா என்று யாரும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் இன்னமும் அழுத்தமான கதை ஒன்று அவரிடமிருந்து வரும் என்பதும் எனக்குத் தெரியும்)

இப்படியாக வேல்கண்ணனின் உரையுடன், அருந்திய லெமன் டீ மற்றும் இந்த சிந்திர அன்னவிருந்தின் நினைவாக சில குழு போட்டாக்கள் க்ளிகிடப்பட்டது.  விழாவுக்கு முக்கியமான படைப்பாளிகள் நிறைய பேர் வந்திருந்தனர். பெரும்பாலான நண்பர்கள் இந்த அமர்வுடன் கலைந்து சென்று விட்டனர் - இரவு 10.00 மணி.

***
சற்றுத் தாமதமாக ஆரம்பிக்கப் பட்ட இறுதி அமர்வு மீண்டும் தேநீர் கடையில் ராகி மால்ட்டுடன் ஆரம்பித்தது சினிமா, அரசியல், கம்யுனிஸ்டுகள் என்ற தலைப்புகளில் சிறு சிறு குழுக்களாக கு.பட்சம் மூன்று குழுக்களாவது பேசிக் கொண்டிருந்தது. இறுதியில் கவிதையிலேயே இந்த அமர்வும் தன்னை முடித்துக் கொண்டது. கவிதைகளைப் பற்றி அதன் கோணங்கள் பற்றி என்று, சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கும் அர்விந் கவிதைகள் பற்றி நிறைவுரையாற்றினார்.

இஞ்சி மரப்பா குறித்து தலைப்பிட்டு விட்டு அதை விளக்காமல் போனால் எப்படி - வழக்கம் போல சூர்யாவின் ஒவ்வொரு பேச்சிலும் சலசலப்பிற்கும் குறைவில்லாமல் ஏதோ ஒரு விஷயம் அசை போடுவதற்கு கிடைக்கத் தான் செய்யும். இந்த முறையும் ஒரு நண்பர் சூர்யாவின் பேச்சில் புராணங்களில் இருந்து தரவுகளை( ஒரு கவிதையில் காதலை பிரம்மஹத்தி தோஷம் என்று பத்மஜா குறிப்பிட்டமைக்காக - பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், சதாசிவம் எனும் புராணத்தில் வரும் சிவனின் உடலமைப்பைப் பற்றியும்) எடுத்துப் பேசியமைக்காக தன் கண்டனங்களை பதிந்து விட்டுப் போனார். அதைச் சொல்லி சொல்லி நண்பர்களுடன் சிரித்துக் கொண்டே சபையை கலைக்கும் முடிவுக்கு வந்தோம்.நான்கு இரண்டு சக்கர வாகனங்கள் ஒவ்வொரு திசையில் கிளம்பியது.

சூர்யா - பனங்காட்டு நரி இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது, அது தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கும்.

இந்தக் கட்டுரையை எழுதச் சொன்ன சகோதரி ரேவா பக்கங்களுக்கே சமர்பிக்கிறேன்.


இதை வாசிப்பவர்களுக்கு இலவசமாக இந்த காணொளிக் காட்சியும் காட்டப்படுகிறது
https://www.youtube.com/watch?v=4hYXmgEwbh0

- ஜீவ.கரிகாலன்


சனி, 10 மே, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி - 67 - சரஸ்வதி எனும் தேவதை

*Content not suitable for all - Myth is associated with curse :P

இவள் ஏன் முக்கியமானவள். உலகில் வாழ்ந்து வந்த மொத்த மனித இனத்தையும் வேட்டைச் சமூகத்திலிருந்து நாகரிகம் நோக்கி நகர்த்தி செல்வதற்கு பெருமனே உதவியவள் இவள். எல்லா தொல் மதங்களையும் இணைக்கும் புள்ளிக்கான மற்றொரு ஆரம் அவளே. அவள் அழகானவள், ஆயுதம் கொண்டவள், ஆற்றல் நிறைந்தவள் புத்தி படைத்தவள்.
*

இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய மியான்மர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பண்டைய நாகரிகங்களான ரோமன், கிரேக்க மற்றும் பாரசீக(zorastrian)பழங்கதைகளிலும் அதன் வழி வந்த மத நம்பிக்கைகளிலும், கலை வடிவங்களிலும் காணப்படும் ஒரு முக்கியமான பாத்திரம்/தேவதை தான் இவள்
*

இவளைப் பற்றிய கலை வரலாறு ஒன்றை தொகுப்பது மிக முக்கியமான வேலை என்று பேராசிரியர் வரதராஜன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கலை வரலாறு குறித்து பேச்சு திரும்பியது. அதில் எனக்கு நாட்டமிருக்கிறது என்பதைப் புரிந்த கொண்ட அவர். குறிப்பிட்ட ஒரு அம்சம்/தத்துவம்/கதை புராணக் காலங்களில் இருந்து சமகாலம் வரை கலை வடிவங்கள் மூலம் அடைந்த  மாறுதல்களைப் பதிவதன் முக்கியத்துவம் பற்றிக் கூறினார். அதற்கு உதாரணமாக சரஸ்வதியின் கலை வடிவத்தினைப் பற்றி, இந்திய தேசம் முழுக்க இருக்கும் அதன் வெவ்வேறு அம்சங்கள் குறித்து என்று தேடிப் பார்த்தால் இந்த துறை மீதும், myth மீதும் அபார ஈடுபாடு வந்துவிடும் என்றார். அவர் கூறிய உதாரணம் சரஸ்வதியின் வடிவங்களைப் பற்றி, இக்கட்டுரையும் அந்த கலை வரலாற்றை தெரிந்து கொள்ளத் தேவைப் படும் புவியியல் வரைபடம் ஒன்றை வரைந்து பார்க்கும் நோக்கம் தான் இக்கட்டுரை.

அது என்ன சரஸ்வதி பூஜை முடிந்த பின்னர் ஆயுத பூஜை என்று எதன் பொருட்டு ஆயுதம் ஏந்தாத தேவதையை பிரதானப் படுத்தி பூஜைகள் செய்கிறோம்??

*

Syncretism என்பது பல்வேறு தத்துவங்களை ஒரே/வேறொரு தத்துவத்தின் அடிப்படையாக /சாரம்சமாகப் பார்க்க வைக்கும் தன்மை ஆகும். அதன்படி மதங்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும் பொழுது ஒரே ஒரு பொருளை / பரம்பொருளை / மீப்பொருண்மையை நோக்கி தான் அதன் மைய நீரோட்டம் அமைந்திருக்கும், அதனில் இருந்து அம்மதத்தை பின்பற்றுபவர்களுக்கான சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் .சரஸ்வதியை உலகம் முழுக்க உள்ள அனைத்து தொல்நாகரிங்களிலும் வணங்கப்பட்டிருக்கும் விதம் அடிப்படையில் ஒரே மாதிரியானது. கோயில்களில் தேவதைகளுக்கு அணிவிக்கப்படும் ஆடை ஆபரணங்களில் இருக்கும் மாற்றம் மனித நாகரிகத்தோடு தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்களா?

19ம் நூற்றாண்டு வரை எல்லாம் நம் சமூகத்தில் பெண்களுக்கான மேல்சட்டை அணியும் பழக்கம் பெரும்பாலும் இருந்தது இல்லை. மேல்தட்டு வர்கத்தினர் மற்றும் நடுத்தர வரகப் பெண்கள் அணியும் போதே தங்களது கடவுளர்க்கும் அது போன்ற உடைகளை அணிவிக்க ஆரம்பித்து விட்டனர். நாம் வணங்கும் தேவதைகளை இப்படித் தான் நம் காலத்திற்கு ஏற்றவாறும், நமக்கு ஏற்றவாறும் மாற்றிக் கொண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டில் தான் ராஜா ரவி வர்மாவின் சரஸ்வதி ஓவியம் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்ட புரட்சி மிகு காலம். பின்னர் வரையப்பட்ட எல்லா ஓவியங்களிலும், காலண்டர் அட்டைகளிலும், நாடகங்கள், திரைப்படங்கள் என தேவியர்களின் ஆடை முறை மாறிவிட்டது. அதற்குமேல் நிர்வாணங்களில் வரைபவர்கள் கண்டிக்கப்படவும், தண்டிக்கப் படவும் ஆரம்பித்தார்கள்.

ஆடை ஒரு புறமிருக்க, சரஸ்வதி கையில் நூல் எப்படி வந்தவை என்று பார்த்தல் நலம். கணாபத்யம் எனும் தனி மதத்திலிருந்து பிள்ளையார் வழிபாட்டை ஸ்வீகரித்துக் கொண்ட இந்து மதத்தின் மரபு போன்று தான், சரஸ்வதிக்குப் பின்னால் இருக்கும் கதையும் இருக்க வேண்டும்.  சரஸ்வதியின் கைகளில் இருக்கும் சுவடியின் வயதுக்கும், சரஸ்வதி வழிபாட்டின் ஆரம்ப நிலைக்கும் இடையே கால வித்தியாசம் இருக்கும் என்று நம்புகிறீர்களா??

மனித நாகரிகம்  வளர்ச்சி பெற ஆரம்பித்த பின்னர் கல்வி பயிலும் முறை, ஓலைச் சுவடிகளை கையாளும் முறை என்பனவெல்லாம் நன்றாக நாகரிகம் அடைந்த நாகரிகங்களில் தான் தோன்ற ஆரம்பித்தன. நன்றாக நாகரிகம் - என்பது வேட்டைத் தொழிலிருந்து விவசாய முறைகளைக் கையாளத் தெரிந்த நாகரிகம் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டியது.

விவசாய முறைகளைக் கையாள  ஆற்றோரங்களில் உகந்த நிலங்களைக் கையகப் படுத்துவது, பின்னர் அந்நிலத்தைப் பண்படுத்துவது, விவசாயம் மூலமாக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, அதை பாதுகாப்பது, பாதுகாக்க வேண்டி இருப்பதால், போர் செய்யவும் பழகுவது என இத்தனை செயல்களை புரிவதற்கான ஒரு சமூக அமைப்பினை உருவாக்குவது. ஒரு சமூக அமைப்பினை கட்டமைப்பிற்குள் கொண்டு வர மதகுரு உருவாக்கும் வழிபாட்டு முறைகளில் தான் மக்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், கருவிகள் தெய்வங்களிடமிருந்து கொடையளிக்கப் பட்டதாகக் கருதப்பட்டவை.

பெண் தெய்வ வழிபாடு  மிகப் பழமையான எல்லா நாகரிகங்களிலும் இருந்தே வந்தன. சரஸ்வதியின் கைகளில் உழுவதற்கு தேவைப்படும் ஏர் போன்ற ஆயுதமும், போர் கருவிகளும் என அளிக்கப்பட்டிருந்தது. நாகரிகமடைந்திருந்த சமூகத்தில் ஏரினை வீணையும், போர் கருவியை சுவடிகளும் மாற்றாகப் பொருந்தின, இன்னும் இரண்டு கரங்களில் மாலை என்று தவக்கோலத்திற்கான வடிவத்துடன் பிரம்மனின் இணையாக இன்று நாம் பார்க்கிறோம்.

முதலில் நமது சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு தகுந்தவாறு - வேளான் மற்றும் போர்த் தொழிலுக்கு ஏற்றவாறு ஒரே பெண் தெய்வமே இரண்டாகப் பகுக்கப் படுகிறாள்(சரஸ்வதி -பார்வதி). உற்பத்தி முறை சமூகத்திலிருந்து, பண்ட மாற்று முறைகளை கற்றுக் கொண்ட பிறகு சமூகத்திற்கு தேவைப்படும் மற்றொரு தெய்வமென செல்வத்திற்கான ”லட்சுமி” எனும் வடிவம் பொருளாதாரத்திற்கான தேவதையாக உருவெடுக்கிறது. இத்தகைய மாற்றத்தைப் போலவே ஜப்பான் மற்றும் கிழக்குச் சீனாவில் வணங்கப் பெற்று வரும் BENZAITEN எனும் பெண் தெய்வமும் இப்படி ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு ஒரு கம்பித்தந்தி இசைக்கருவியை எடுத்துக் கொண்டாள்.


அனாஹிதா
பார்ஸி இனத்தில் - ஜொராஸ்ட்ரிய மரபில் அனாஹிதா என்றும் , கிரேக்கத்தில் எதேனா என்றும், ருமானியத்தில் மினர்வா என்றும் அறிவின் தேவதையாக (GOD OF WISDOM) வணங்கப்படும் தேவதை , தாய்லாந்திலும், பிலிப்பைன்ஸிலும் சரஸ்வதியாகவே(suraswadee) வணங்கப்படுகிறாள்.

மினர்வா
இப்பொது என் கையில் ஒரு நில வரைபடம் இருக்கிறது, சரஸ்வதி எனும் பெண் தெய்வம் / தேவதை வழிபடப்படும் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள். ஆனால் நான் தெரிந்து கொள்ள விரும்புவது சரஸ்வதி எனும் தேவதை இந்தியா முழுக்க எவ்வாறெல்லாம் வணங்கப்பட்டு வருகிறாள்? அவளது உருவங்களில் இருக்கும் வேறுபாடுகள் என சேகரிக்க விரும்புகிறேன். அவற்றினைக் கொண்டு வேறுபாடுகளுடைய ஒவ்வொரு பகுதிகளிலும் சரஸ்வதி தன் சமூகத்தை எப்படிப் பிரதிபலிக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதற்கான முதல் முயற்சி - சரஸ்வதி எனும் நம்பிக்கையை(myth), அதன் அடிப்படையை உணர்ந்து கொண்டு நெருங்கிச் செல்வது. இப்போது அவள் எனக்கு மிக அருகில் இருக்கிறாள்.

-ஜீவ.கரிகாலன்