வெள்ளி, 7 நவம்பர், 2014

பஜ்ஜி-சொஜ்ஜி 74 / ஓவியர் கே.பாலசுப்ரமணியனுடன்..

சென்னையில் தக்ஷின் சித்ரா இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலை மிக அற்புதமான பல இடங்களைக் கொண்டுள்ளது, அதில் தக்ஷின சித்ரா மிக முக்கியமான இடம். நம்மை, நாம் வாழ்ந்த வாழ்க்கையையே ஆச்சரியமாகப் பார்க்க வைக்கும் இடம். இவ்விடத்தைப் பற்றி வேறொரு இடத்தில் பார்ப்போம்.

*

நண்பர் அகர முதல்வன், கமலபாலா, நந்தன் ஸ்ரீதரன் ஆகியோரின் புத்தகங்களை மட்டுமே சுமந்து கொண்டு அகரமுதல்வனோடு தக்ஷின சித்ராவிற்கு சென்றேன். ஓவியர் பாலசுப்ரமணியனின் ஓவியக் கண்காட்சி, அது ஒரு குழு கண்காட்சி ஓவியர்கள் தனபால் ரவி மற்றும் நரேந்திரபாபு ஆகியோருடன் கே.பாலசுப்ரமணியன் அவர்களும் இணைந்து குழு கண்காட்சியாக வைத்துள்ளனர். அங்கே நான்கு அல்லது ஐந்து கேலரிகள் இருக்கின்றன.

தனபால் ரவியின் அரூப ஓவியங்கள், நரேந்திர பாபு அவர்களின் டெக்ஸ்டைல் டிஸைன், காலம் காரி ஓவியங்கள் போன்ற படைப்புகளுடன் தனது பிரத்தியோகமான கோடுகளால் தாந்த்ரீக உணர்வுகளைத் தரும் பாலசுப்ரமணியனின் ஓவியங்கள் மற்றும் அவரது டெக்ஸ்டைல் டிஸைன்கள் வைக்கப்பட்டிருந்தன.

முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல ஒரு தொண்டு நிறுவனத்திற்கு செல்லவிருக்கும் புத்தகங்கள் எப்படி ஒரு கலை படைப்பாக இருக்கிறது என்று பார்க்க ஆவலாக இருந்தேன். ஓவியர் பாலசுப்ரமணியம் உருவாக்கியிருந்த அந்த இன்ஸ்டாலேஷன் ஒரு புத்தக அலமாரி தான். கடந்த இரு மாதங்களாக இந்த நன்கொடையை முன்னிட்டு பல்வேறு மனிதர்கள் துறைசார்ந்த விற்பன்னர்கள், கலைஞர்கள் என சில நூறு மனிதர்களின் கையொப்பமிட்ட புத்தகங்கள் அவர்கள் கையெழுத்தினை தாங்கியபடி அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. புத்தகங்கள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாத முறையில் அடுக்கியிருக்கும் விதம் அவற்றை கொடையளித்திருக்கும் மனிதர்களை விபரணைப்படுத்தியிருந்தது.

ஐம்பது வருடங்களாக பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஒருவர் கொடுத்திருக்கிறார் என்று அவர் சொன்ன போது அந்த அலமாரி தாங்கியிருக்கும் கதிர்வீச்சுகளை அவதானிக்க முடிந்தது. சிலர் புதிய புத்தகங்களை தந்திருந்தனர். கிட்டதட்ட ஆயிரம் புத்தகங்கள் வரை அவர் சேகரித்து இருக்கிறார், இந்தக் கண்காட்சி முடிந்தவுடன் மதுரையில் இருக்கும் அந்த தொண்டு நிறுவனத்திற்கு சென்றுவிடும். இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் இருப்பதால், நண்பர்கள் கண்காட்சி முடியும் வரை புத்தகங்களைக் கொண்டு சேர்க்கலாம்.


அந்த இன்ஸ்டலேஷனின் வடிவமைப்பு, கண்காட்சிக்குள் நுழைந்தவுடன் உருவாகும் மிக அமைதியான மனநிலையிலிருந்து சற்று கீறிவிட்டு சின்ன சலனம் ஒன்றை ஏற்படுத்துகிறது. எத்தனை புத்தகங்கள்?, எத்தனை கருத்துகள்?, எத்தனை சிந்தனைகள்?, சித்தாந்தங்கள், ஆராய்ச்சிகள், விவாதங்கள் விளக்கங்கள் எல்லாமுமே தேடுவது தான், அது தான் உண்மையைத் தான்(eternal truth). அது பேருண்மை, பிரபஞ்ச உண்மை, இறைத்தன்மை என்று பல interpretationகளுக்கு இடமளிக்கும் ஒரு COSMIC FEEL.

*


இந்த கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை கொடையளிக்க விரும்பும் நண்பர்கள், ஓவியரைத் தொடர்பு கொள்ளலாம் - 9884248369

- ஜீவ கரிகாலன்