வீணாய்ப் போனவர்களின் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீணாய்ப் போனவர்களின் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 மே, 2020

ஸ்வாமிஜி டேல்ஸ் # 01



ங்களுக்கு லொம்பார்ட் லூர்துசாமியை தெரியுமா? அதென்ன லொம்பார்ட் என்கிறீர்களா. இந்தியாவில் +2 பாஸானால் போதும் எக்ஸிகியூட்டிவ் ஆகிவிடலாம் என்றொரு காலம் இருந்தது அல்லவா. அவன் இன்றைக்கும் என் நினைவில் படிந்திருக்கும் அந்நாள் மனிதர்களின் ஒரு சித்திரம்.  டை, ஷூ, செல்ஃபோன், விசிட்டிங் கார்ட், சிகரெட் நாற்றம், அல்சர் வயிறு, பாக்கெட்டில் ரெண்டு மூணு செண்டர் ஃப்ரஷ் சகிதம் எல்லோருக்கும் நண்பனாக  வாழ்வில் ஏதோ ஒருமுறை ஆபத்தில் உதவுவதற்காக தவணை முறையில் நமக்கு நாமே சூடு போட வைக்கின்ற தனியார் வங்கியின் ஆரம்பகால அமோக விளைச்சலும் அறுவடையும் நம்ம லூர்துசாமி போன்ற எக்ஸிகியூட்டிவால் தான் அன்று நடந்தேறியது.  

அவன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் ?  ஒரு மேலாளராகவா, இன்னும் எக்ஸிகியூட்டிவாகவோ, இல்லை அரசு வேலை (அ) வங்கியில் வேலை கிடைத்திருக்குமா, இல்லை சொந்த தொழில் ஆரம்பித்து இருப்பானோ அல்லது அதுவும் நின்று போய் ஏதோ ஒரு தொழில் நகரத்தின் நிறுவனங்களில் அண்டியிருப்பானா? கவிஞனாகவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த ஒல்லியான, உயரமுமற்ற நாலு முழ வேட்டிக்காரன். கொஞ்சம் புது நிறமாக கன்னத்தில் குழி விழும் முகத்தோடு இருந்தாலும் பெண்கள் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை. அவனுக்கு கீழே வேலைப் பார்க்கும் யாராவது இதயம் முரளியாக இருந்தார்கள் என்றால் தாவித் தாவி அடிப்பான்.  ‘சம்பாதிக்கற வயசுல்ல அதான்....’ அவனைப் பொறுத்தவரை அவனுக்கு பிராஞ்ச் மேனேஜர் தான் உச்சபச்ச அதிகாரம். போலீஸிடம் கூட அதைதான் சொல்வான். ”எங்க மேனேஜர் யாருன்னு தெரியும்ல - அவரு ரைட்டர் ராஜேஷ்குமார் பையன்’. இந்தக் காரணத்திற்கெல்லாம் போலீஸ் அவனை மேற்கொண்டு போக அனுமதி கொடுத்ததும் மாயம் தான். இப்படியான மாயம் தான் அவன் கஸ்டமர்களை உருவாக்குவதும். மாவுமில் வைத்திருக்கும் அண்ணாச்சி எடுத்த நான்காவது நாளிலேயே ஹோண்டா பேஷன் டூவிலரை விற்றுவிட்டார், வந்த விலைக்கே. அவருக்கு எப்பவும் - ஹெவி ட்யூட்டி டி.வி.எஸ் 50 தான்.

சாதாரணமாக ரெண்டு சீலிங் ஃபேன், மூனு டேபிள் 12 பிளாஸ்டிக் ஸ்டூல் சகிதம் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் ஒரு செந்தில் மெஸ்ஸில், இந்த லொம்பார்ட் லூர்து வாங்கிக் கொடுத்த ஒரு பெர்சனல் லோன் தான் பக்கத்திலுருக்கும் வெற்றிலை சீவல் கடையை ஆக்கிரமிப்பு செய்ய செந்தில் மெஸ் ஓனரை தூண்டிவிடச் செய்யும் வஸ்து. கூடுதலாக இரண்டு புதிய டேபிள்கள், மொத்தம் ஆறு வால் ஹாங்கிங் பேன், சுவரெல்லாம் வால் பேப்பர், புதிதாக செவ்வக வடிவ பாய்லர் அளவில் சிறிய கண்ணாடி கிளாஸ், பெப்ஸிக்கு ஒரு குளிர்சாதனப்பெட்டியும் (அதில் அடுத்த நாள் வரை ஆக வேண்டிய சட்னியும் இருக்கும்), அண்ணாச்சிக்கு ஹேர் ஸ்டைலும், வெள்ளை சட்டையும் கூட மாறியிருக்கும். வெற்றிலைக் கடை வைச்சிருந்த அம்மா, கிச்சனில் மாஸ்டருக்கு உதவியாக மாறியிருப்பார். அண்ணாச்சி ரிலையன்ஸ் பவர் ஐ.பி.ஓ வந்த புதிதில் டீமேட் அக்கவுண்ட் பண்ணியிருப்பார். ஆறு மாதத்திற்குள் பெருங்கடனும் வாங்கியிருப்பார். லொம்பார்ட் லூர்து அப்போதும் ம்யூச்சுவல் ஃபண்டுகளை வாங்க அவரை கன்வின்ஸ் செய்திருப்பான். 

இன்ஃபேக்ட் லூர்து பெயரைச் சொல்லி சாப்பிடும்போது, ஓட்டல் அண்ணாச்சியே நன்கு கவனித்திருக்கலாம். அண்ணாச்சிக்கு இரத்தத்தில் சர்க்கரை வந்தது கூட இயற்கையே, அவர் அரசாங்க மருத்துவமனையிலோ அல்லது அவர் கடைக்கு வரும் யாரோ ஒருத்தரின் உறவினர் வைத்திருக்கும் நல்ல தனியார் மருத்துவமனையிலோ அவர் சேர்ந்து சிகிச்சை பெற்றிருக்கலாம். லூர்து தான் அவருக்கு ஹெல்த் பாலிஸி எடுத்திருந்தாரே.. அப்போதெல்லாம் தர்ம ஆஸ்பத்திரி என்றே அரசு மருத்துவமனைகளை சொல்லி வந்தார்கள், அந்த காலத்தில் நடக்கும் அறுவை சிகிச்சைக்கு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியிலிருந்து அரசு மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு பணம் போகாது. அரசே பார்த்துக்கொள்ளும். ஆனால் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் க்ளைமுக்காக மாநகரகத்திலிருந்து தன் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்த மருத்துவமனையில் சேர்ந்திருக்க வேண்டாம்.

அண்ணாச்சியின் கால் எடுக்கப்பட்டதற்கும், கடன் சுமை தாங்க முடியாமல் மூடப்பட்ட கடையின் வாசலில் கூடையில் செல்போன் விற்கும் வெற்றிலைக்காரி அம்மாவுக்கும் லொம்பார்ட் லூர்துக்கும் சம்பந்தமில்லை. ஏனென்றால் லொம்பார்ட் லூர்துக்கும், கே.வி.கமாத்-ஐ தெரியாது, அவருக்கும் லூர்துசாமியை தெரியாது.

நான் மட்டுமே அவனை தேடிக் கொண்டிருக்கிறேன்.


திங்கள், 31 ஜூலை, 2017

வீணாய்ப் போனவர்கள் கதை - 12

அவர்கள் கேட்டத்தொகையை அவன் கொடுத்துவிட்டான். தனது தலைவலிக்காக பிரச்சனையை அவன் ஒருநாள் முழுமையாகச் சொன்னபிறகு, அவர்கள் அவனுக்குச் சிகிச்சையளிக்கத் தொடங்கினார்கள்.
அவன் சற்று இலகுவாகத் தன்னை உணர்ந்திருந்தான். ஏதோ அவனை விட்டு இறங்கியதாகத் தெரிந்தது. தான் எதற்காகச் சிகிச்சைக்கு சென்றிருந்தோம் என்பதையே மறந்திருந்தான். அது மருத்துவருக்கும் தெரியும் போல, தான் விடைபெறும் போது தன்னிடம் இருந்த கேஸ் ஹிஸ்டரி கோப்பினை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அவனுக்கு அது ஒரு கோப்பு என்று தான் ஞாபகமிருந்தது. அதில் என்ன இருந்தது என்பது துளி கூட ஞாபகம் இல்லை.

தான் மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது மட்டும் ஞாபகமாய் இருந்தது. மீண்டும் வரத்தேவையில்லை என்று அந்த மருத்துவர் சொன்னவுடன், அவன் விடைபெறும் போது. ஏனோ அந்த மருத்துவர் அவனை ஆரத்தழுவியது ஞாபகமிருந்தது. அவர் ஏன் தன்னைத் தழுவினார் என்று தெரியவில்லை.

சில நாட்களாக அவன் கிளைகளில் இருந்த விடுபட்டிருந்த சுதந்திர இலையாய் உணர்ந்தவன், தான் மெல்ல மெல்ல காய்ந்து கொண்டிருப்பதாய் உணர ஆரம்பித்தான். உண்மையில் அவனுடைய ஏதோ ஒன்று இல்லாமல் போயிருந்தது. சிறிது நாட்களில் அவன் அது குறித்தே தீவிரமாய சிந்தித்துக் கொண்டிருந்தான். தான் எதற்காக மனநிலை மருத்தவரிடம் சென்றோம் எனத் தீவிரமாய் ஆய்வு செய்து கொண்டான். தனக்கு இருந்த டைரி எழுதும் பழக்கம் ஞாபகமிருந்தது. ஆனால் அவைகளைக் காணவில்லை, தனது கைப்பேசி, கணிணி போன்றவற்றில் நிறைய விஷயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தான். அதைத் தானே செய்திருக்கலாம், அதுவும் அந்த மருத்துவரின் ஆலோசனைப்படி தான் அவற்றைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

நிச்சயமாக அவனுக்கு மருத்துவர் மீண்டும் உதவுவாறா என்று தெரியவில்லை. ஆனால் நித்தமும் அவனது சிந்தனை, ஏதோ ஒரு வெற்றிடத்தை நினைவுறுத்திக் கொண்டே இருந்தது. அதையே தொடர்ந்து சிந்திக்க ஆரம்பித்ததும் மீண்டும் தலைவலியால் அவதிப்பட ஆரம்பித்தான். இந்த முறை வேறு ஒரு மருத்துவர், ஸ்கேனிங்கில் ஒன்றும் தெரியாததால். அவர் வெறும் மாத்திரைகள் எழுதி சாப்பிட்டுவரச் சொன்னார். எதுவும் தேறவில்லை. மீண்டும் அந்தப் பெண் மருத்துவரையே சந்திக்கலாம் என்று தோன்றியது.

“you crazy, நீங்க இப்போ நல்லாருக்கிங்க. கொழம்பாம அலட்டிக்காம லைஃப ரீஸ்டார்ட் பண்ணுங்க”

“டாக்டர். ரீஸ்டார்ட்னு சொல்றிங்க. எனக்குத் தெரியல் என் லைஃப நான் எப்படி அழிச்சுக்கிட்டு இருந்தேன்னு. ஆனா தெரிஞ்சுக்காம என்னால இயங்கமுடியாது”

“தட்ஸ் இம்பாசிபில் நான் எல்லார்க்கும். இது போல இவ்ளோ தூரம் இறங்கி வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை. உங்களுக்காகக் கொடுத்திருக்கேன். நீங்க சில விஷயங்களை மறக்க வேண்டியிருந்தது. டெலிட் பண்ணேன். மத்தபடி அது உங்களோட முயற்சில மட்டுந்தான் சாத்தியமானது. சோ உங்கள நீங்களே கொழப்பிக்காதிங்க”

”அதுவும் மூன்றரை ஆண்டுகளாக”

அவன் அந்தக் கால இடைவெளியை சரியாகச் சொன்னபோது. அந்த மருத்துவர் சற்று அதிர்ச்சியானாள்.

“மூன்றரை ஆண்டுகளா சரியாகச் சொல்ல முடியுமா எந்த மாதத்திலிருந்து” என்று.

”ஆம், சரியாகச் சொல்லப்போனால் செப்டம்பர் மாசம் மூணாம் தேதியோ , ஐந்தாம் தேதியோ”

கிட்டத்தட்ட மிகச் சரியாகச் சொல்லிவிட்டான் என்கிற போது, அந்த மருத்துவருக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உடனேயே அவனை மீண்டும் சிகிச்சைக்கு வரச்சொல்லியிருந்தாள். சிகிச்சை ஆரம்பிப்பதற்குள் தன் மூத்தவர்களோடு விவாதித்துக்கொண்டாள்.

அவனுடைய நினைவுகளில் இருந்த அவன் காதலியின் நினைவுகளை முழுவதுமாக ஆழ்மனப்பயணம் மூலம் அழித்துவிட்டிருக்க. அவளை அழித்தபின்பு ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களால் அவன் அல்லலுற்றிருந்தான் என்பதால், அந்த இடைவெளியை அவன் துல்லியமாகக் கணக்கிட்டு, மீண்டும் மனச்சிதைவுக்குள்ளாக ஆரம்பித்திருக்கிறான். இப்போது மீண்டும் அவனை குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த இடைவெளியை மீண்டும் அவனுக்கு நினைவாக மாற்ற வேண்டும்.

அதே கதை தான் சொல்லப்படவேண்டும், ஆனால் அவன் காதலிக்கும் எல்லா கணங்களிலும் காதல் நிகழாதவாறு சம்பவங்களை மாற்றிச் சொல்லி அவனை நம்ப வைக்க வேண்டும். அதே பெண் மீது அவனுக்கு காதல் வர எந்தக் காரணமும் வந்துவிடக்கூடாது. இப்போதெல்லாம் இது போன்ற சிகிச்சை மிகச்சாதாரணமாகி விட்டது.

மீண்டும் அவனுக்கு அட்மிஷன். ஒரு நீண்ட கோர்ஸ் ட்ரீட்மெண்ட் என ஆரம்பித்தார்கள். ரெகார்ட் செய்யப்பட்டிருந்த அவனது கதைகள் மீண்டும் அவனுக்கு மாற்றிச் சொல்லப்பட ஒரு எழுத்தாளரால் ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டு அவனுக்கு ஊட்டப்பட்டன. அந்த கோர்ஸ் முடித்து அவன் வெளியே வருகையில் மிக உற்சாகமாகக் காணப்பட்டான்.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் அந்த மருத்துவரை போனில் அழைத்தான்.

“வணக்கம் டாக்டர். இதை ஏன் நான் உங்ககிட்ட சொல்லனும்னு எனக்குள்ளே மிகுந்த உந்துதல் இருக்கோன்னு தெரியல.. ஆனா நான் இப்பொ என் நிலைமையைப் பற்றி உங்களுக்குச் சொல்லனும்”

மிகுந்த பயத்துடன் அவள் அவனுக்கு ம்ம்ம் கொட்டினாள்.

“டாக்டர் அம் லிவிங் வித் ஹெர் நவ்”
 “என்ன”

“வீ ஆர் லிவிங் டுகெதர்”

புதன், 10 மே, 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 10

ஒரே மாதிரியாக எழுதுகிறாய் என்று விமர்சித்ததற்கு பதில் சொல்வதற்கு அவனுக்கு ஒரு இடம் தேவைப்பட்டது, இது திங்கட்கிழமை என்பதால் அவன் சினிமாவுக்குச் செல்லத்திட்டமிட்டான்.

திங்கட்கிழமை காலையில் சினிமாவுக்குப் போவது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, நல்லபடம் தான் என்றில்லை மிக மோசமான, குப்பையான படமாகவோ அல்லது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் படமாகவோ இருக்கட்டும் திங்கட்கிழமை முதல் காட்சியில் கிட்டதட்ட ஒரே அளவில் தான் மக்கள் வருவார்கள். அதை அவன் முதன்முதலில் கண்டபோது அப்படியான திங்கட்கிழமையினை ஒரு உன்னத மக்கள்களின் உலகமென அவனது குருநாதர் சொன்னவை வந்து போனது.

டிக்கெட் கொடுக்கும் போதே, கவுண்ட்டரில் இருப்பவன் ஒவ்வொருவரது முகத்தையும் பார்த்து பார்த்து தான் குடுப்பான். மனித வாழ்வின் மறைவில் இருக்கின்ற உறவுகள், நட்புகள் ஆகியன அங்கே தென்படும். இப்படியாக அவன் திரை அரங்கில் நுழைந்த போது எல்லோர் முகத்திலும் ஒரு கதை இருந்தது. ஒவ்வொரு முகமும் ரகசியமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் போது தாங்கள் வந்தக் கதை சொல்லப்பட்டது.

வாரநாட்களின் முதல் நாளே, முதல் காட்சியிலே திரைப்படம் பார்ப்பது ஏன்? அவர்களுக்கு என்ன கிட்டுகிறது இதில்?


  • .        முன்சீட்டில் கால்களைப் போட்டுப் பார்க்க முடிகிறது
  •    எச்சில் துப்பிக்கொள்ள முடிகிறது
  • ·         என் தலைவன் படம் அவ்ளோ நாள் ஓடாதுல்ல
  • ·         அந்த இண்டெர்வியூ போக முடியாது
  • ·         மத்தியானம் தான் சீரியல் ஓடும்ல அதான்
  • ·         நாங்க எப்படியும் பாஸாகிடுவோம்
  • ·         என்னது இன்னைக்கு திங்கட்கிழமையா?
  • ·  மேனேஜர் கரெக்டா இண்டெர்வெல் டைம்ல தான் கூப்பிடுவான் சமாளிச்சுடலாம்
  • ·         நேத்து படிச்ச நாவல் செம தலைவலி
  • ·         வெயில்ல நிக்கறதுக்கு இங்க வந்து
  • ·         மது அருந்தினாலும் துரத்தமாட்டான்
  • ·         நான் ஒரு உதவி இயக்குனர்
  • ·         கூட்டம் இல்லாத நாள்ல தான… (இருடி பேரை சொல்லல)
  • ·         அடுத்து என்ன தொழில் தொடங்கலாம்னு யோசிக்க வந்தேன்
  • ·         அவுங்க முன்னாடி ஒக்காந்துருக்காங்க, நான் துணைக்கு வந்தேன்
  • ·         அந்த ஐட்டம் சாங் வரவரைக்கும் தான் தியேட்டர்ல இருப்பேன்.
  • ·         அலாரம் வச்சு படம் முடிவதற்குள் நாங்க போய்டுவோம்
  • ·         தூங்கும்போது எழுப்பிக்கேக்காதிங்கடா
  • ·         முட்டை போண்டா
  • ·         நான் ஒரு எழுத்தாளன்
  • ·         நான் ஒரு உதவி இயக்குனர்
  • ·         நான் ஒரு பிச்சைக்காரன்
  •  திங்கட்கிழமை பாக்குற யதார்த்த படங்கள் எப்போதுமே எனக்குஃபேண்டசியாக தோற்றமளிக்கும் என்கிறான் நமது NARRATOR.


     வீணாய்ப்போனவர்களுக்கு கதை எதற்கு 

ஜீவ கரிகாலன்


வெள்ளி, 5 மே, 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 09

மெய்யுலகு


புருரவஸின் தீராத சோகம் என்று அவனால் நம்பப்பட்டது ஒருநாள் பொய்த்தது என்று காளிதாஸ் எதை வைத்து உறுதியாகச் சொன்னானோ ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால், அது இத்தனை நூற்றாண்டுகளாய் ஒவ்வொரு மனிதனும் சாகும் வரைக்குள்ளாக தீராத தேடலை அவர்களுக்குள் விதைத்து வைத்திருக்கிறது கண்ணம்மா.. சொல்வதைக் கேள் கண்ணம்மா இது அவர்களைப் பற்றியக் கதையில்லை என்று முன்குறிப்பு தருகிறேன். இருந்தபோதும் இதில் மரணத்திற்கு அப்பாலே தான் அது கிடைக்கும் என்று முடித்துக்கொள்பவர்களைப்பற்றி முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு எழுதுகிறேன். மரணம் என்கிற……….. என்ன உருவகப்படுத்த, அது வரும் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் தேடிக்கொண்டிருப்பது மனித நாகரிகத்திற்கான சுவடுகளில் ஒன்று. சிலருக்குக் கிடைக்கிறது, பலரும் கிடைத்திருப்பதை அறியாமலேயே மரித்துப்போகிறார்கள். ஆனால் இவர்கள் யாரைப் பற்றிய கதையும் நான் சொல்லப்போவதில்லை கண்ணம்மா. நான் உனக்கு நடந்தவற்றைக் கூறப்போகிறேன். நீ என்னை மெய்யுலகுக்கு அனுப்பி வைத்த கதையினை உனக்கே சொல்லப்போகிறேன்.

கனவுகளில் ஓங்கி உயர்ந்திருந்த கோட்டைகளும், மிதந்துக் கொண்டிருந்த மாளிகைகளும், நேர்த்தியான தெருக்களில் ஒருங்கே அமைந்த கடைத்தெருவும், குடியானர்வர்களின் இல்லங்கள் எல்லாம் அமையப்பெற்ற ஒரு திட்டமிட்ட நகரத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் சில மரங்களுக்கு நடுவே வேயப்பட்டிருக்கும் பறவைச்சப்தங்களால் மூடப்பட்டிருக்கும் குடிசையைப் போன்ற ஒரு தனியுலகம் அது. நீ தான் அனுப்பி வைத்தாய், கதவைத் திறந்ததும் அந்த உலகம் கண் முன்னே தெரிந்தது.

நீ கொடுத்தனுப்பிய முத்திரை மோதிரத்தை அவ்வூருக்குள் நுழைந்தவுடன் எதிரே நின்றிந்த யட்சியிடம் கொடுத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் , அந்த யட்சி நம் உலகத்திலும் யட்சி தான் கண்ணம்மா. எனக்கு ஒரு மாலைப் பொழுதின் மயக்கத்தை கலைக்கக் கொடுத்த சுலைமானித் தேநீர் போல மெய்யுலகின் தொடக்கத்திலேயே யட்சியைப் பார்த்த மகிழ்ச்சி. அந்த ஆண் தேவதை என் இரண்டாம் கதையிலிருந்து மேலெழுந்து என்னோடு பயணிப்பான் என்று ஆசிர்வாதம் செய்தாள் யட்சி.

என்னை மெய்யுலகிற்கு அனுப்புவதாய் சொல்லிவிட்டு எங்கே அனுப்பினாயோ என்று உன்மேல் கோபம் கொண்டேன் கண்ணம்மா. 

ஐயோ நான் உண்மையைச் சொன்னதற்காகக் கோபம் கொண்டு என்னை ப்ளாக் செய்யாதே. இந்தக் கதையை நான் உனக்குக் கூறியே ஆக வேண்டும்.

அது கனவா? பாதையா? ஒளியா கண்ணம்மா….

என்னை எது? எப்படி? எங்கிருந்து? எங்கு? எதற்காக இயக்குகிறது கண்ணம்மா? கூறியது கூறல் நன்றாக இருக்காது என்று புலம்பும் வாசகனைச் சாபமிடு கண்ணம்மா. அவனும் உன்னையே துதிபாடட்டும்.

ஆண் தேவதையை வழிகாட்டிட அனுப்பிய யட்சி, என்னிடம் இறுதியாக ஒன்றைக் கூறினாள் “எல்லாவற்றையும் யோசித்து முடிவெடு” என்று.

எப்படி யோசிக்க, யோசிக்க என்பது விளைவுகளைப் பற்றியா? விளைவுகளைப் பற்றி யோசிப்பவனுக்கு விடைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும், ஆனால் வினை புரிய இயலுமா. ஒரு வேளை எளிதாக ஒரே வார்த்தையில் விடை கிடைத்தாலும் கூட HENCE PROOVE என்று அடுத்த விளக்கமான பதிலுக்கான கேள்வியாக ஒரு சமன்பாட்டைக் கேட்டுவிடும் இரக்கமற்ற வாழ்க்கை. வழக்கம் போல தேர்வெழுதிவிட்டு வெளியே வந்து போட்டுப்பார்க்கும் விடையே சரியாக இருக்கும் என்பதால் நான் எதனைத்தான் நம்ப?

நல்லவேளை கண்ணம்மா, உன்னைப்போலவே அந்த இரண்டாம் கதையிலிருந்துக் கிளம்பிய ஆண் தேவதையை யட்சியும் நம்பினாள். நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். சுவாரஸ்யம் என்னவென்றால், வேதாளம் என்றால் தான் நான் சுமந்து செல்லவேண்டும், இது தேவதை என்பதால் நான் அவனுக்கு சுமையானேன். ஆனால் நான் வேதாளமாக மாறிக் கேள்விகள் கேட்டுக்கொண்டே அவனோடு வந்தேன். அவன் நான் செல்லுமிடத்தின் காலநிலை, வெப்பநிலை, கொதிநிலை பற்றிய ஆருடங்கள், கணிதத்தேற்றங்கள், புள்ளியியல் மாதிரித் தரவுகள், அனுகூல பலன்கள் ஆகியவற்றைச் சொல்லியபடி வந்தான். நான் கொட்டாவியை மறைத்து அவனிடம் நல்லபடி நடித்து வந்தேன்.

இத்தோடு என் வேலை முடிந்தது என்று ஒரு எல்லைக்கல்லில் நின்றுவிட்டான், அதில் இருந்த எழுத்துகள் என்னால் வாசிக்கமுடியவில்லை கண்ணம்மா. இந்த மத்திய சர்கார் ஏன் இப்படி வன்மம் கொண்டு அலைகிறது கண்ணம்மா, எல்லைக் கல் என்ன சொல்கிறது என்பதை இந்த ஊரில் பயணிப்பவனது மொழியில் தானே சொல்ல வேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியாதா?

கோமாளிகள் அங்கதம் தான் செய்ய வேண்டும், ஆட்சியாளர்கள் செய்யக்கூடாது என்று நீ அவ்வப்போது சொல்வதை நினைத்துப் பார்த்தேன் கண்ணம்மா. நானே நடந்து சென்றேன், மீண்டும் ஒரு கதவு - திறந்தேன். திறந்ததும் வீசிய காற்றில் என் உறக்கத்திற்கும் முன்னரே வேலையைக் காட்டும் கனவின் நாற்றம் வீசியது.

கடந்தேன் அதை. ஒரு கேள்விக்குறியும், ஆச்சரியக்குறியும் எனது ஆழ்மனதில் பதிந்திருந்த காட்சிகளையே என் கனவில் பிரதிபலிப்பதால் அது ஷ்ருஷ்டித்திருந்த தேவதைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அம்மூ இதைத்தான் WESTERN INFLUENCE என்பாள் கண்ணம்மா. கீழைத்திய நாடுகளான சீனாவிலும், ஜப்பானிலும் கூட இப்படி மாறிவிட்டதாம் கண்ணம்மா.

நான் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய சமவெளி, அழகிய வெள்ளை வீட்டைக்கொண்டிருந்த ஒரு பெரிய சமவெளி. உண்மையில் அது சமப்படுத்தப்பட்டிருந்த வெளி. அந்த தேவதைகளால் சமப்படுத்தப்பட்டிருந்தது.  என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தேவதைகள் இருவர் மட்டுமே என் கண்களுக்குத் தென்பட்டார்கள். நிலத்தில் உழுது வேலை பார்ப்பவர்கள் யாவருமே தேவதைகள் தான் கண்ணம்மா. ஆனால் இங்கே தேவைதைகள் உழவு செய்கின்றன. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று சொன்னாலோ, தேவதை என்ற ஒன்றே இல்லை என்று சொன்னாலோ உன்னை அந்தக் கட்சி தன் ஆஸ்தானப்பிரச்சார பீரங்கி ஆக்கிக்கொள்ளும், ஆனால் நீ தான் பொய் சொல்லமாட்டாயே.

துளிர்த்துக்கொண்டிருந்த ஒவ்வொரு செடிகளும் அவைகளால் தொட்டுப்பார்த்த பரவசத்திலோ அல்லது பார்ப்பார்கள் என்கிற பரவசத்திலோ காத்துக்கொண்டிருந்தது. ஒரு விசயம் கவனித்தாயா கண்ணம்மா, இரண்டு பரவசமும் சமமாக இருந்தது.

நேராக மூத்த தேவதையிடம் நின்றேன், என் கண்களில் தெரிந்த யட்சியின், ஆண் தேவதையின் செய்திகளைப் புரிந்துகொண்டாள் கண்ணம்மா. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், நீ தந்த செய்திகளை ஏன் அவள் புரிந்துகொள்ளவில்லை கண்ணம்மா? ஒருவேளை அவளுக்குப் புலப்படவில்லையா அல்லது அது நமக்கான பிரத்தியேக மொழியா.
என்னை சோதித்துப்பார்க்க விரும்பும் என்று யட்சி சொல்லிவைத்திருந்தாள், அந்த ஆண் தேவதை அந்த தேவதைகளைச் சோதித்துப்பார்க்கச் சொன்னது.

நாற்றம் வாசனையாக மாறும் ரஸவாதத்தை இரண்டு பெரிய கதவுகளுக்குப் பின்னால் நின்று கொண்டும், சாவகாசமாக பன்னீர் பட்டர் மசாலா செய்துகொண்டும் நீ செய்ததை என்னால் அப்போது உணரமுடிந்தது கண்ணம்மா.

மூத்த தேவதை என்னை வீட்டிற்குள் அழைத்துச் சென்றது, அதன் கரங்களைத் தொட்டுப்பார்த்தேன், மிகப்பெரிய நிலத்தில் மேடுகளைப் பள்ளைங்களைத் திருத்தி சமப்படுத்து மண்ணின் கசடுகளைப் பிரித்தெடுத்து வளமாக்கி அவ்வப்போது முத்தங்கள் கொடுத்து நிலத்தை பசுமையாக்கிய தேவதையின் உழைப்பை ரேகைகளுக்கு இணையாக சொரசொரப்பாக்கி இருந்தது அதன் விதி.

தேவதையாதல் கூட விதி தானோ கண்ணம்மா?

யட்சியும், ஆண் தேவதையும் சொன்னது அனைத்தையும் மறந்துபோனேன் என்பதை மட்டும் மறக்காவிடில், என் நினைவுகளே என்னைத் தோற்கடித்திருக்கும். ஆனால் நான் கனவுக்குள் பயணிப்பதைப் போன்றே லகுவாக உணர்ந்தேன். அவள் நீட்டிய விரலின் நுனி ஒரு கதவினைச் சுட்டப்பட்டு இருந்தது. நேரே திறந்தேன். நான் வரும்போது உள்ளே சென்ற அந்த இன்னொரு தேவதை என்னைப் பார்க்காமல் குனிந்த படி, யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது. உள்ளே சென்றேன், கதவு சாத்திக்கொண்ட சப்தம் என் நினைவில் இருந்து செவிகளை அறைந்தது. திரும்பிப்பார்த்தேன் கதவு அப்படியே திறந்து தான் இருந்தது.

ஆனாலும் என் செவிகளை நம்பச்சொல்லி, அந்த மெல்லிய மல்லிகை வாசனை அறிவுறுத்த கட்டுண்டேன்.

அந்த தேவதை – மிக அழகாக இருந்தது. அழகிய தேவதை என்பது தேவதைகள் அழகிற்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது தேவதைகளில் சிலர்தான் அழகாக இருப்பார்கள் என்கிற உண்மையா?. இரண்டும் வேண்டாம், அவளை அழகிய தேவதை என்றே அழைப்பது சிறப்பு, அவள் குனிந்துப் பேசிக்கொண்டிருந்தது இன்னொரு தேவதையோடு.
அவளுக்கு நிறைய கடமைகள் இருப்பதால், அவள் தன் துயரத்தையே இறக்கைகளாய் கொண்டிருந்தாள். உனக்கு ஞாபகிமிருக்கிறதா, உன்னிடம் நான் சொல்லியிருக்கிறேன் – தேவதைகள் வரமளிப்பவர்கள், ஆனால் தேவதையாய் வாழ்வது சாபமென்று. அது மீண்டும் நினைவில் வந்துபோனது.

அகச்செவி அறை சாத்தப்பட்டிருப்பதாய் உணர்த்த அவளைப் படுக்கையில் கிடத்தினேன் கண்ணம்மா? அவள் அந்த சிறு தேவதைக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தாள். அந்தக் கதையில் ஒரு ஆச்சரியமிருக்கிறது, அதைச் சொன்னால் நீ கோபித்துக்கொள்ளக் கூடாது. அது உன்னைப் பற்றிய கதை ஒன்று, உன்னைப்பற்றிய கதையில் ஏதோ ஒரு பக்கத்தில் என் பெயரும் எழுதப்பட்டிருப்பதை அறிந்து அந்த தேவதை வாசிப்பதை நிறுத்து முயன்றேன் கண்ணம்மா.

அவளோடு நானும் சேர்ந்து படுக்கையில் அமர்ந்தேன். மும்முரமாகச் சொல்லிக்கொண்டிருந்த கதையைக் கேட்டபடி அந்தப் பேரழகு தேவதை தூங்கிக்கொண்டிருக்க அவள் தலையைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தாள்.  நான் அவள் பின்னே அமர்ந்து அவளைக் கட்டிப்பிடிக்க முயன்றபோது தான் தெரிந்து கொண்டேன், தேவதையாய் வாழ்வது எத்தனை சாபமென்று.

ஒன்று எனக்கும் இறக்கை முளைக்கவேண்டும், இல்லாவிட்டால் அவள் இறக்கைகளைப் பிய்த்து எறிய வேண்டும் என்றுத் தோன்றியது. அவள் காதுகளில் மெல்ல அவற்றைச் சொன்னேன். அவளால் அதை பிய்க்க முடியாதென்று என் உதவியை நாடினாள்.

தேவதையின் இறக்கைகள் பிய்த்தெறியப்பட்டாள் அவள் என்னைப்போன்ற மனிதராகிவிடுவாள் என்று தோன்றியது. எப்படியோ எட்டிப்பிடித்து அவள் காதுமடல்களை முத்தமிட்டபடி, ஒரு இறக்கையை பலம் கொண்டு பிய்த்து எறியத் தயாரானேன். அப்போது உன் குரல் கேட்டது. அதனால் தான் என்னவென்று கேட்க அங்கிருந்து இப்போது வந்துவிட்டேன் கண்ணம்மா.

அந்த தேவதைகள் ஒரு வனத்தை உருவாக்கப் போகிறார்கள் என்று உன்னிடம் சொல்லமறந்துவிட்டேன் கண்ணம்மா, அந்தக் குழந்தைக்குச் சொன்னக் கதையின் முடிவை நினைத்துப்பார்க்கிறேன்.


தேவதையாய் வாழ்தல் சாபம் தான் கண்ணம்மா. அவளை நான் ஒரு மனுஷியாக்கப் போகிறேன்

ஜீவ கரிகாலன்

வியாழன், 13 ஏப்ரல், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 8

கழுத

அவரை அன்று பார்க்கும் போது மிகுந்த மலர்ச்சியுடன் காணப்பட்டார். உங்களைப் புரிய வைக்க ஏனோ உவமை கிட்டவில்லை. ஆமாம் நான் ஏன் புரிய வைக்கப் பிரயாசப்படனும். அவர் என்னை எப்போதும் ஒரு மண் சார்ந்த பிணைப்பு இருப்பதால் “தம்பீ” என்று தான் எப்போதும் அழைப்பார். அது என்னை, நான் பிறந்த மண்ணை, என் சமூகத்தை, என் வாழ்வியலை, நம்பிக்கையை எல்லாவற்றிட்கும் சேர்த்து இணைக்கின்ற ஒரு கயிறு. பிரித்தானிய பேக்கரியில் சுடச்சுட வாங்கிய மிருதுவான பன்னில் வெண்ணையைத் தடவும் உங்களுக்குக் கடுமையான பசியும், அதே சமயம் பன்னின் முதல் கடியில் ஈடுகட்ட இயலா சுவையை தியானித்து செய்யும் பொறுமை கொண்டவராக என்னை இந்த அரசியலில் என்னை வாரிக்கொண்டார். ஊருக்கு வரும்போதெல்லாம் போதனைகள் என்னை மிருதுவான ரொட்டித்துண்டைப் பார்ப்பது போன்ற கனிவு அவர் கண்களில் தெரியும்.

“தம்பீ!!”

“ஐயா சொல்லுங்க ஐயா.”

வீடு வரை அவரை இறக்கிவிடுமாறு கேட்டிட தான் என்னை அழைப்பதாகப் புரிந்தது. என் தாமதத்தை வீட்டிற்குத் தெரியப்படுத்தினேன்.
காரில் ஏசியைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டார்.

“தம்பி…”

“ஐயா”

“தலைவரிடம் உன்னைப் பத்தி நேத்து திடீர்னு பேச வேண்டியிருந்துச்சு”

திடீரென்று தலைவரிடம் என்னைப்பத்தி என்றவுடன், மகிழ்ச்சியில் வாகனம் மழையில்லாமல் வைப்பரைப் போட்டது.

“தலைவரிடம் சொல்லிவிட்டேன்.. தம்பி நம்ம ஆள்தான் என்று… தம்பிக்காக ஒரு முக்கியமான வேலை ஒன்றைக் கொடுக்கனும்னும் சொல்லிருக்கேன்”

தலைவர் என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. தலைவரிடம் எந்தன் பெயர் சொன்னால் போதாதா?. எத்தனை நாட்கள் அவரை வியந்து பார்த்திருப்போம். இன்று நம் பெயரை தலைவரிடம் சொல்லிவிட்டாரே. இதற்கு என்ன கைமாறு செய்யலாம். பணமெல்லாம் கொடுத்தா கோபப்படுவாரே என்று தோன்றியது.

“தம்பி கைவசம் ஏதாவது காசு வச்சுருக்கியா.. ஒரு பத்தாயிரம் தேவை”
என்னடா இது நம் மனதில் நினைக்கவும். அவர் கேட்கவும் அதிசயமாக இருக்கிறதே. என்னை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னதற்கு பணம் கேட்கிறாரா. இல்லவே இல்லை. அவர் அப்படியானவர் இல்லை. ஏதோ ஒரு பிரச்சினையாக இருக்கும் , நமக்காக இவ்ளோ செய்பவர் இது கூட செய்யாவிட்டால் எப்படி. கட்சியின் மூத்த பேச்சாளர் இவர். இருந்தாலும் வண்டிக்கான மாதத் தவணை கெட்ட இன்னும் ஒருவாரம் இருக்குது. ஓய்வில்லாம ஓட்டுனா பணத்தை கொடுத்திடலாம். தலைவர்கிட்ட சொன்னதுக்கு பணத்தைக் கடனாவ கேக்குறது.

“ஐயா வீட்டுல. பணம் இருக்கு. எடுத்துக்கொடுத்துட்டு ட்ராப் பண்றேன்”
வீட்டிற்குள் சென்று பீரோவில் எடுத்து எண்ணிவிட்டு வந்தேன். காபியைக் குடித்துமுடித்தவர்.

“பாப்பா ரொம்ப அழகா இருக்க.. இப்பதான் தம்பிய பத்தி தலைவர்கிட்ட சொல்லிருக்கேன், தம்பி நம்ம ஆள்தான்னு.. முக்கியமான வேலைகேட்ருக்கேன். நம்மாளுக்கு நாம செய்யாம எப்படி… நகைநட்டு வாங்கனும்ல”

“ஐயா அவ க்ரிஸ்டியன்” இரவில் விற்காத காய்ந்து போன ரொட்டியை, அடுத்த நாள் காலை ஆகாரமாக வெறுமனே சாப்பிடக்கொடுத்தால்?

காரில் அவர் வீட்டுக்கு....
நாட்டு நடப்புகளைப் பேசியபடி வந்தார். அவர் வீட்டிற்கு அருகிலே வந்து, இறக்கிவிட்டேன்

“தம்பி”

“சொல்லுங்க ஐயா”

“ஒரு முக்கியமான விஷயம்”

“ரகசியமா இருக்கனும்”

“சொல்லுங்க ஐயா.. கண்டிப்பா வெளிய போகாது”

“தலைவர்… சில முக்கியமான பொறுப்புகளை நம்மாட்களுக்குகொடுக்கனும்னு திட்டம் போட்ருக்கார்…. நான் உன் பேரை சொல்லலாமான்னு யோசிக்கிறேன். நாளைக்கு நமக்கும் சொந்தமா நாலு தொழில் வேண்டும்ல.. ”

“….”

“ இதத்தான் கார்ல ஏறுனப்பவே சொல்லனும்னு நெனச்சுக்கிட்ருந்தேன்… இப்பவாச்சும் ஞாபகம் வந்துச்சே.. நாளைக்கு காலைல போன் பண்ணு. தலைவர பாக்கும் போது ஏதாச்சும் சொல்லி வைப்போம்.” படக்கென்று காரிலிருந்து கீழே இறங்கி கால்களின் விழுந்தேன்..

“நமக்குள்ள என்னப்பா நீ என் புள்ள மாதிரி.. ஒருநா உங்க வீட்டுக்கு வாரேன். அப்ப வெலாவரியாப் பேசுவோம்”

பிக்கப்பிற்காக கால் வந்தது, மொபைல் போனில் அக்செப்ட் பண்ணினேன். ஜீ.பீ.எஸ்ஸில் காட்டிய இடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். முட்டுச்சந்து வந்தது, வந்த வழியே திரும்பும்போது. ஐயா சொன்னது ஞாபகம் வந்தது.. இருந்தாலும் ஏதோ இடிப்பது போல தோன்றியது.

காரை ஓரங்கட்டிவிட்டு போன் பண்ணினேன் மனைவிக்கு
“கழுத… விஷயம் தெரியுமா…”

“சொல்லு”

“ஐயா என்னைப் பத்தி இன்னைக்கு தலைவர்கிட்டப் பேசுனாறாம்.”


- ஜீவ கரிகாலன்


சனி, 8 ஏப்ரல், 2017

வீணாய்ப்போனவர்களின் கதை - 7

செப்டம்பர் மாதம் 04ஆம் தேதி.

ன்று நிலவொளி இத்தனைப் பிரகாசமாயிருந்திருக்கக் கூடாது. அவளோடு வாழ்வதைப் பற்றிய பெருங்கனவின் நிறைவேறாத் துயரத்தை, என் எதிரிலிருக்கும் அந்த பரந்துக்கிடக்கும் ஏரியில் தெள்ளத்தெளிவாய் தெரிவதற்குக் காரனமாக மேகமற்றத் தனிமையில் நீரில் தன் பிம்பத்தை மீன்களுக்குப் புணரத்தரும் நிலவின் வெளிச்சமே கட்டுங்கடங்கா கொந்தளிப்பை என்னுள் எழுப்ப ஆரம்பித்துவிட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் தொழிலில் நாம் செய்த அடிப்படை வேலைகளே மேலே மேலே உந்தவைத்து எங்கேயோ நம்மை நகர்த்திக்கொண்டு போய்விடுகிறது. சட்டென லிஃப்டினைப் போல வாழ்க்கையில் உயரப்பறத்தல் ஆர்கஸமாவதைப் போன்ற பரவசமடைதலைத் தருதல் தான் ஆனால் அது தற்காலிகமானது. ஆனால் மேலே சென்று கொண்டிருக்கும்போது அதெல்லாம் பிடிபடுவதில்லை. இறங்கும் போதும் பரவசத்தோடு இருந்தால் படிக்கட்டுகள் கூட சட்டென விலகி, நம்மைத் தள்ளிவிடும். 

முத்தங்களற்ற இயக்கத்தைப் போல வாழ்க்கை பரிசளித்தவைகளின் யாதொரு உறைகளும் இன்னும் பிரிக்கப்படவேயில்லை. இந்தக் கோடை வாஸஸ்தலத்தில் என் பின்னணியில் ஒரு அபஸ்வரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது அதை உங்களால் கேட்க முடியாது, ஒருவேளை அது உங்களுக்கு இதமான மெல்லிசையாகவோ, இரவினைச் சூடேற்றும் இசையாகவோ இருக்கலாம். அது எனக்கு அபஸ்வரம்.

ரிசார்ட்டின் புல்தரையில் தனியாக ஒரு இருக்கையில் கால்நீட்டியபடி, அந்த ஏரியைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்னை நீங்கள் வெற்றி பெற்றவனாகவோ, பைத்தியக்காரனாகவோ, குடிகாரனாகவோ அல்லது இன்னும் சற்று நேரத்தில் தற்கொலைக்குத் தயாராக இருப்பவனாகவோ என்னை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை இவ்வனைத்துமே உண்மையாக இருக்கலாம். உங்களுக்கு நான் மட்டும் அவளைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினால், நீங்கள் என் மீது இரக்கப்படுவதை விட்டுவிட்டு அவள் மீது ஆர்வம் கொள்வீர்கள். உலகிலேயே மிகவும் வசீகரமான, காமத்தை நொடிப்பொழுதில் தூண்டும் வல்லமை பெற்ற, கோபத்தைப் பொசுக்கும் ஆகிருதியுடைய, தீர்கமான, எதையும் சட்டென எடைபோட்டுவிடும், பொய் சொல்ல அவசியமற்ற, ஒரேயொரு முறை கூட மன்னிக்கத் தயாராகாத, ஆனால் உங்களை வாழவைப்பதற்கான ஆசிர்வாதத்தை அளிக்கும் பரிவான ஒரு பார்வையை வைத்திருக்கும் அவளது கண்களைப் பற்றி நீங்களும் ஒருநாள் என்னைப் போல் புலம்புவீர்கள். 

சைவனென்றால் பாதாதி கேசம் தான் வர்ணிக்க வேண்டுமென்றாலும், அவள் பாதங்களை எனக்கு அவள் காட்டியதேயில்லை, அவள் அணிந்திருக்கும் உடையை சற்றே மேலே தூக்கி அவள் கால்களை தரிசிக்கும் போதெல்லாம், ”சீ ஃபெட்டிஷ்” என்று அவள் என்னை அறைந்து விடுவாள். ஒருமுறை கூட அப்படித்தான் ……

ஆனால் இப்போது நான் உங்களுக்கு கதையல்லவா சொல்லிக்கொண்டிருக்கிறேன்? ஆமாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஒருவன் இரவில், நடுங்கும் குளிரில், காலி மதுக்கோப்பைகளோடு பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டியது தானே! இந்தக் கதையை நீங்கள் தெரிந்து கொள்வதன் வாயிலாக உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. என் சோகத்தைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன். ஒருவேளை அதைத் தெரிந்துக்கொண்டு “நீ ஒரு முட்டாள்” என நீங்கள் என்னைச் சொல்லலாம் அல்லது “அவள் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என நீங்கள் சொல்லலாம். அது கூடப்பரவாயில்லை என் மீது தேவையற்ற கருணை, இரக்கம், பரிதாபம் காட்டுவது கூடப்பரவாயில்லை, எனக்கு ஆறுதலாய் இருப்பதாய் நினைத்து அவளைக் குறைகூறிவிடாதீர்கள். அதற்கு உரிமையில்லை. ஆனால் நீங்களும் என்னைப் போன்ற தவறிழைக்காதீர்கள். பின்னர் ஒருநாள் நீங்களும் இப்படி என்னைப்போலவே உட்கார்ந்து வருந்திக்கொண்டு இருப்பீர்கள், வாழ்வை வெறுத்து முடித்து இருப்பீர்கள், தற்கொலை எண்ணம் உங்களுக்கு வந்து செல்லலாம்.

நில்லுங்கள் பயந்து ஓடாதீர்கள். நான் தான் என் கதையை உங்களுக்குச் சொல்லவில்லையே. நீங்களாக எதுவுமே தெரிந்துகொள்ள முடியாது. நீங்களாகத் தெரிந்து கொண்டதைத் தவறென உணருங்கள். உங்களால் இதிலிருந்து விடுபட முடியும்.

ஹாஹஹ்ஹா.. நீங்கள் இதில் சிக்கவில்லை என்றால் உங்களுக்குப் பிரச்சினையே இல்லை. உலகெங்கும் இப்படி காதல் கதைகள் புவிவெப்பமடைதலைப் போலவே அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதில் மலிந்துபோன ஒன்றாகவே இதை எடுத்துக்கொள்ளுங்கள். என் தோழி ஒருத்தி கிரேட் பேரியர் ரீஃப் பற்றியக் கதையை, அதன் மாறிவிட்ட இயற்கைச் சூழலை உருக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்த போது, நான் என்னையே நினைத்துக்கொண்டிருந்தேன். காதல் நித்தியத்திற்கு இட்டுச்செல்கிறது என்று நம்பியிருந்தும் மனிதத்தவறுகளால் நாம் வாழும் கூடான இந்த நீலக்கோள் தன்னைத் தானே அழித்துக்கொண்டிருப்பது போல் என் கேவலமான எண்ணங்களால் நான் என்னையே அழித்துக்கொண்டிருப்பதாக என் தோழி சொன்னவற்றை கவனிக்காமல் நான் எங்கேயோ கவனித்துக்கொண்டிருந்தேன். நீங்களும் அவ்வாறே நான் சொல்வதை கவனிக்காமல் எளிதாக என்னைக் கடந்து செல்லலாம். மலைகள் சுரண்டப்படுவதை, ஆற்று மணல் கடத்தப்படுவதை, சதுப்பு நிலங்கள் கபளீகரம் செய்வதை நாம் ஹெட்போன் அணிந்து கொண்டு ஜாக்கிங் ஸ்யூட்டில் கடந்து செல்வது போல just like that கடந்து செல்லலாம்.

எனக்காகப் பரிவு கொள்பவர்களே! உங்களுக்காக ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். இதில் துயரம் மிகுந்து இருக்கிறது, வலி, சோதனை, ஏமாற்றம் எல்லாமும் மலிந்து தான் இருக்கின்றன. ஆனால் உண்மையில் சில விஷயங்களை ஆழ்ந்து நோக்கினால், அசல் என்பது பொய்யின் சூக்கும உடலுக்குள் வாசம் செய்கிறது. இப்போது எனது முகத்தில் புன்னகை பூத்திருக்கிறது கவனித்தீர்களா?

இtதனை அபஸ்வர இசை என்று சொல்கிறேனே இது உண்மையில் உங்களுக்குக் கேட்கும் அதே மெல்லிசை தான். ஆனால் இதை அபஸ்வரம் என்று பெயரிட்டு எனக்கு மட்டும் உரியதாக வைத்திருக்கிறேன். இந்தப் பெயர் வைத்ததால் தான் உங்கள் ப்ளூட்டூத் பற்கள் இரவல் கேட்காமல் இருக்கிறது இந்தப்பாடலை. இந்த Possessiveness தான் என் வாழ்க்கையை சூன்யமாக்கியது என்பதை உணர்ந்து கொண்டால், நீங்கள் ஒருவேளை உங்கள் உறவுகளை அசலாக நேசிக்கக் கற்று கொள்ளலாம். ஏன் நானே அப்படித்தானே, அந்த தனிமை, ஏமாற்றம், வலி, சோதனை எல்லாமும் தான் என் வாழ்க்கையில் வேறு எந்த வலியும், சோதனையும், அவமானமும், பற்றும், துரோகமும் என்னை செயலிழக்க, நம்பிக்கையிழக்கச் செய்யாமல் காபந்து செய்துகொண்டிருக்கும் அவள் தந்த பரிசு. எல்லாவற்றிட்கும் மேல் அவள் என் நினைவுகளில் பூரணமாகத் தங்கியிருக்கிறாள். இத்தனை முழுமையாக அவள் தன்னையே உணர்ந்திருக்க மாட்டாள். அவள் அதனை எனக்குப் பரிசாகத் தந்திருக்கிறாள்.

இப்போதும் உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம், "இப்படியான ஒரு பைத்தியக்காரன் எப்படி தற்கொலை செய்யாமலிருக்கலாம்?” என்று, அது தப்பேயில்லை எனக்கும் அதே ஆச்சரியம் தான்..

ஆனால் அவள் எனக்கு ஒரு உறுதிமொழி அளித்திருக்கிறாள், “உன் தலையில் மயிர்கள் இருக்குமோ இல்லையோ, உன் வாய்களில் பற்கள் இருக்குமோ இல்லையோ, உன்னை இறுக்கப்பற்றியபடி அழுத்தமாக உனக்கு நான் ஒரு முத்தம் கொடுக்காமல், நீ சாகவே மாட்டாய்” என்று சொல்லியிருக்கின்றாள். அதை நான் இப்போதும் நம்புகிறேன்.

அதனால் தான் இந்த உன்மத்த நிலையிலும், எப்படியான மனக்கொந்தளிப்பும் சற்றைக்கெல்லாம் அடங்கிவிடுகிறது. பேசுவதற்குத் துணையாக காலி மதுக்கோப்பைகளே போதுமானதாக இருக்கிறது. போதாதைக்கு நிலாவைப் புணர்ந்து கொண்டிருக்கும் மீன் குஞ்சுகள் அவ்வப்போது என்னைப் பார்த்து ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லுகின்றன. ஆனால் அது எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும் விஷயம் தான். உங்களுக்கும் சொல்கிறேன்.

 “வாழ்க்கை மிக அழகானது”

- ஜீவ கரிகாலன்

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 6

 குரோதம்


மாநகரத்தின் புகழ்பெற்ற அந்த ஷாப்பிங் மாலில் திடீரென அத்தனை களேபரம், பலரும் என்னைச் சுற்றி ’உச்’ கொட்டியபடி, பரிதாபப்பட்டபடி, பகடி செய்தபடி சூழ்ந்துகொண்டிருக்க பத்துபதினைந்து செல்போன் கேமிராக்கள் என்னைப் படமெடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் நான் எங்கேயும் ஓடவில்லை ஏனெனில் ஒரு அழகான யுவதி என் வலது காலினை ஏந்திக்கொண்டிருக்கிறாள். அழகான யுவதிக்கும் எனக்கும் ஒரு மாலில் என்ன நிகழ்கிறது என நீங்கள் பார்ப்பது என்னை மேலும் எரிச்சலடையச் செய்கிறது. அது என் கால்களில் ஊற்றப்பட்டிருக்கும் ஆண்ட்டிசெப்டிக் மருந்தைவிட அதிக எரிச்சலைத் தருகிறது. இரத்தத்தை துடைத்து விட்டு கால்களில் ஆண்ட்டிசெப்டிக் ஊற்றிக்கட்டுப்போட்டு முதலுதவி செய்த இந்த பெயர் தெரியாத கண்ணம்மாவைத் தவிர உங்கள் எல்லோர் மேலும் எனக்கு எரிச்சல் இருக்கிறது.

இப்போது அந்த மீனைக் கொல்லாமல் வந்துவிட்ட எரிச்சல் வேறு.
இரண்டாம் நாளும் அந்த மாலிற்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் நான் அந்த பெடிக்யூர் கடையோடு சண்டைபோட வந்திருக்கிறேன் என்ற சமாதானம் செய்ய மாலின் பணியாளர்கள் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிக்கொண்டு என்னைப் பிந்தொடர்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் அந்தப் பெயர் தெரியாத கண்ணம்மாவைத் தேடினேன். காணவில்லை. மீண்டும் அவனிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். காயப்பட்ட கால்களை தண்னீருக்குள் விடக்கூடாது என்றான். எனது இடது காலை மட்டும் நீட்டினால், காசைக் குறைப்பாயா என்றேன். சக மனிதர்களிடமிருந்து எந்தத்தொடுதலுமற்ற ஜீவியாய் இருக்கேனென என்னை உற்றுநோக்கிக் கழிவிரக்கம் கொண்டிருக்கிறான் எனத் தெரிந்தது. யாரோ ஒருவன் என் மீது செலுத்தும் இரக்கம் கூட என்னை ஹிம்சிக்கிறது.

“ஐம்பது ரூபா தாங்க வேறு ஏதும் ரிசிப்ட் கேக்காதிங்க” என்றான்.
இரக்கம் என்பது அப்படித்தான் அதன் மறுமுனை ஒரு ’சந்தர்ப்பம்’ என்கிற ஆதாயம் கொண்டிருக்கிறது.

கோடையில் இறுக்கமான உடைகளணிந்த யுவதிகள் சில நூறுபேரை என் சிறுமூளை பார்த்துக்களித்ததில் ஏறிப்போயிருந்த உஷ்ணம் யாவும் என் இடது காலின் மயிர்க்கால் வழியே வெளியேறிக்கொண்டிருந்தது. மீன்கள் மொய்மொய்யென இடைத்தேர்தலில் வேலை செய்யும் எம்.எல்.ஏக்களாய் என் காலில் மொத்துக்கொண்டிருந்தன.

“இதுவரைக்கும் எந்த மீனும் யாரையும் கடிச்சதில்ல ப்ரோ” என்றான். விநோதமாகத் தான் இருந்தது. அதன் அறிவியல் பெயர் காரா ரூஃபா என்பார்கள். அது எப்படி இரத்தம் வருமளவு கடிக்கப்போகிறது?
மாறிவரும் நுகர்வுக்கலாச்சாரம் எல்லாவிதத்திலும் காசு பார்க்க பழக்கிவிட்டிருக்கிறது. சதுரகிரியில் நண்பர்களோடு மலைஏறி இறங்கும் போது நொந்துபோன கால்களை அந்த நதியில் மீன்களிடம் கடிக்கக்கொடுங்கள் என்று ஒரு சுக்குநீர்க்காரன் சொல்ல, நாங்களும் செய்தோம். வலி பறந்துவிட்டது. அது சாதாரண ஐயிரை மீன் தான். ஆனால் இம்மாதிரியான ஸ்டால்களில் கிடைப்பது டாக்டர் ஃபிஷ் என்றழைக்கப்படும் காரா ரூஃபா. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாலிலும் இதற்கான ஸ்டால்கள் இருக்கின்றன. வீட்டுற்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சுவிட்டது ஒத்தடம் கொடுத்தது எல்லாம் போயே போச்சு. மசாஜ் செய்திடக்கூட 100,150 ரூபாய்க்கு ஒரு நாற்காலி போதும். பதினைந்து நிமிடங்கள் நல்ல சேவை செய்கிறது. அதற்குப் பின்னர் இன்னும் ”கொஞ்ச நேரம்டி” என்றாலோ, ”என் கண்ணுல்ல, ஐயோ உன் கைக்கு மோதிரம் செஞ்சுப் போடனும், ஐயோ பாவம் போதும்மா உன் கை வேற நோகுது நான் சமாளிச்சுக்கிறேன், உன் கைகள்ள ஒரு ஹீலிங் பவர் இருக்கு ஹனி” என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு கூடுதலாக கொசுறு மசாஜ் கிடைக்காது. மீண்டும் ஒரு முறை 150 ரூபாய் கொடுத்து அதனுடன் ஒப்பந்தம் போடனும்.

ஏழெட்டு நிமிஷம் ஆகியிருக்கும். கால்கள் ஊற ஆரம்பிச்சுது. எந்தப்பிரச்சினையும் இல்லை. பலர் என்னை வேடிக்கைப் பார்த்த அவலத்திற்காகவே இன்னொரு முறை நானா? மீனான்னு? பார்த்துவிட முடியு பண்ணி தான் இன்றும் வந்தேன். இத்தனை நேரம் ஒன்றும் ஆகாததால் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று, ’நேற்றுக் கடிச்சது மீனா தான் இருக்குமோ அல்லது வேறு என்னவாக இருக்கும்’ என்று நினைத்த கணமே, மறுபடியும் உயிர் போகும் வலி. இந்த முறை இரண்டு துளைகள். இரத்தம் பீறிட்டு வர. அவன் என்னைத் தூக்கிவிட்டான்.

அருகிலிருந்தவர்கள் கத்தினார்கள். நேற்றைக்கு விட இன்று கூட்டமும், செல்போன் படப்பிடிப்பும் அதிகமாகியது. இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. என்னைக் கடித்த மீன் எது என்று தெரியவில்லை.

கூட்டம் கூட ஆரம்பிக்க. தலை சுற்றியது. முதலுதவி செய்ய ஒரு தடித்த சஃபாரி சூட் ஆசாமி வந்தான். அவனைப் பார்த்ததுமே, சற்று மூர்ச்சையடைந்தால் தேவலை என்று நினைத்………

மூன்றாம் நாள்.

மனம் மிகுந்த மனவுளைச்சலாக இருந்தது. எனக்கிருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் நான் எதனைக் குறிப்பிட்டுச் சொல்ல உங்களிடம்? அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வந்தது. அதிநவீன ட்ராவ்லர் படகு ஒன்று இறக்குமதி செய்துக்கொண்டிருக்கிறோம். உதிரிபாகங்களாகக் கொண்டுவது அதற்கு சுங்கவரியைக் குறைத்து க்ளியர் செய்துவிட்டு அதனை அசெம்பிள் செய்துக்கொடுத்துவிட்டால், வாடிக்கையாளருக்கு நல்ல லாபம். இந்த யோசனையைக் கொடுத்தது நான் தான். இதனால் பெரிய ப்ராஜக்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நிர்வாகம் நிச்சயமாக நல்ல சம்பளம் ஏற்றிக்கொடுக்கலாம், ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
கப்பல் இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடும். அதற்குள் காயங்கள் ஆறிவிடனும்.

நான்காவது நாள் –

ஏற்கனவே இரண்டு முறை ட்டீ.ட்டீ. ஊசி போட்டுருக்கிறேன். மீன்கடிக்கு ட்டி, ட்டி ஊசிப் போட்டவர்கள் யாரும் இருக்கிறார்களா? 
இதுபோன்ற தரமற்ற பெடிக்யூர் பார்லர்களால் ஹெபடைடிஸ் ஸீ தொற்றுகிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஸ்டால் ஓனர் யாரென்று கேட்டு அவர்களிடம் ஏதாவது பிரச்சினை பண்ணும் எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. மறுபடியும் நான் மாலில் செல்கிறேன். என்னைப் பலருக்கு அடையாளம் தெரிந்திருக்கிறது, ஏதோ நாளிதழில் கூட இந்த மீன்கடியைப் பற்றி ஒரு கட்டம் கட்டிப்போட்டிருந்தார்களாம். என்னைப் பின்தொடர்ந்து சிலர் வந்தார்கள்.

இரு கால்களிலும் கட்டுடன் நான் ராஜா மாதிரி நடந்து சென்றேன். இம்முறை அவனிடம் ஒரேயொரு கை மட்டும் என்று ஐம்பது ரூபாய் நீட்டினேன்.

அவன் முடியாது என்றான்.

சண்டையிட ஆரம்பிக்கவும் கூட்டம் கூடியது. மாலில் இருந்து வெளியேற்றினாலும் பரவாயில்லை என்று நான் அவனிடம் சண்டையைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் முதல் நாள் முதலுதவி செய்தவள் வந்துவிட்டாள். கனக்கச்சிதமான அந்தக் கருப்பு யூனிஃபார்ம், என்னை ஜெண்டில்மேனாக நடந்து கொள்ளச் சொல்லாமல் சொல்லியது.
இருநூறு ரூபாய் கொடுத்தேன். நூறு ரூபாய்க்கான ரிசிப்ட் கிடைத்தது. தொட்டியில் வழக்கமான இடத்தில் உட்காராமல் வேறு பக்கம் அமர்ந்தேன். சற்றுத் திரும்பினால், எல்லோரும் கைகளில் செல்ஃபோனுடன் தயாராக இருந்தார்கள். சிகரெட்டிற்கு பதிலாய் பட்டாசு வைக்கும் ஜனகராஜ் போல என்னை நான் உணர்ந்தேன். அந்த சிரிப்புக் காட்சி உண்மையில் எத்தனை வலி மிக்கது என்று தோன்றிற்று. எல்லா மீன்களும் எதிர்புறத்தில் கும்பலாகச் சுற்றிக்கொண்டிருந்தன. நான் நீரில் கையை நீட்ட, அங்கே நிசப்தம் படுபயங்கரமாய் இருந்ததும் என்னைத் திகிலூட்ட ஆரம்பித்தது. தண்ணீர்ல் வைத்த வேகத்தில் கையை மேலே எடுத்துவிட எல்லோரும் சிரித்தார்கள்.

 “ஃபக்”

செத்தாலும் பரவாயில்லை என்று நீரில் கைவிட்டேன். ஒன்றன் பின் ஒன்றாக மீன்கள் மொய்க்க ஆரம்பித்தது. மூளைக்குள் ஒரு புது பரவசம். நான் இருக்கும் நான்காம் தளம் தனியாக சுழல்வதைப் போன்ற பரவசம். எல்லா மீன்களும் மொய்த்ததாக நினைத்துக் கொண்டிருந்த தருணம். ஒற்றை மீன் மட்டும் உடலை ஆட்டியபடி நான் இருக்கும் இடத்திலிருந்து எதிர்புறத்தில் நீர்ல் நின்றுக்கொண்டு என்னை பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் வெறி இருப்பதாகத் தோன்றியது. மிகத்துடிப்பாக இருந்தது, அதே இடத்திலிருந்து நகராமல் உடலை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தது. 


கூட்டம் என் மிக அருகில் வந்து சூழ்ந்துகொண்டது. ஒரு சிறுவன் அந்த மீன் மட்டும் தனியாக இருக்கிறது என்று சுட்டிக்காட்ட எல்லோரும் அதை ஜூம் செய்து படம் பிடித்தார்கள்.


எல்லோரும் நோக்கியது தான் தாமதம். சர்ரென நீரைக் கிழித்துக்கொண்டு வந்து என் மோதிர விரலைக் கடிக்க, ரத்தம் பீய்ச்சியடிக்க.. கத்திக்கொண்டு எழுந்தேன். கூட்டமே பதறியடித்து என்னோடு சேர்ந்து மிரண்டார்கள்.
***
“ட்ராய்லர் போட்னா என்னன்னு தெரியுமாடா தாயோளி”

“சார்.. என்ன சார் இப்படி பேசுறிங்க. நான் ரூல் 9 பாஸ் பண்ணிருக்கேன். ஏ.ஸி கிட்ட கம்ப்ளையன் பண்ணுவன்”

“வேற எப்படி கர்த்தரேன்னு உங்கிட்ட மண்டி போடச் சொல்றியா…. இந்த கஸ்டம்ஸ்லாம் மேல போடுற சட்டை தான், சட்டையக் கழட்டுனா இது மீனவ ஒடம்புதாம்லே. ஒனக்குத் தெரிமா - கடலெல்லாம் எங்களுக்குச் சாமிலே, எங்க ஆத்தா மாதிரிலே. அக்ஸெசரிஸ்னு கள்ளத்தனமா இம்போர்ட் பண்ணி அசெம்பிள் பண்ணி விக்குறியே அது என்ன தெரியுமா? அது கடலைக் கற்பழிக்குற அரக்கனோட ஆண்குறிலே.. உங்களையெல்லாம் அவ்ளோ ஈஸியா விடமாட்டேன்”

- ஜீவ கரிகாலன்


வியாழன், 6 ஏப்ரல், 2017

வீணாய்ப்போனவர்களின் கதை - 5

உச்ச நடிகர்

பெரிய அளவில் ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த கஃபேயினைத் தடை செய்ய வேண்டுமென. இது சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கான உரிமையை மறுப்பதால் சர்வதே அளவில் தொழில் நடத்தும் மற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு இந்த விவகாரம் எடுத்துச்செல்லப்படும் என்று மிரட்டல் வர, அரசு தடை விதிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. காணாமல் போன அந்த உச்ச நடிகரைத் தேடி நாடே கொந்தளித்தது. எல்லோரும் பெரிய பெரிய பட்டங்களைப் பறக்கவிட்டு விமானங்கள் பறப்பதை இடையூறு செய்தனர்.

அஸ்ட்ரல் கஃபே நிறுவனம் எந்நேரமும் தாக்குதலுக்குள்ளாக்கப்படலாம் என்று அரசாங்கத்திடம் போதிய பாதுகாப்பைக் கேட்டிருந்தாலும், எப்படியாவது தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய. அந்நிறுவனத்தின் உயர்மட்ட ஆர்.என்.டி குழு கூட்டம் கூடியது. எப்படி அது சாத்தியமானது என்று யாருக்கும் தெரியவில்லை. அவரது உடல்திறன் சரியாக இருந்ததால் தான் அவரை அனுமதித்தோம் என்று பணி அதிகாரிகள் சான்றிதழைக் காண்பித்தார்கள்.
உலகத்தின் தலையாய METAPHYSICAL COLLIDER என்று அழைக்கப்பட்டு வந்த ஆஸ்ட்ரல் கஃபே உண்மையில் ஒரு டெலிபோர்டல் ஆய்வுகளுக்காக உரிமம் பெற்ற நிறுவனம் மட்டுமே, அதன் நிதித்தேவைகளுக்காக கேளிக்கைச் சுற்றுலா மையமாக இந்த உடலை விட்டு வெளியேறி சுற்றிவரும் அனுபவத்திற்கான ரிசார்டினை இந்தியாவில் முதன்முதலாகத் திறந்தது. தொடங்கி இரண்டே வருடங்களான இந்த கஃபேயிற்கு இதுவரை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பேர்கள் முன்பதிவு செய்திருக்கின்றனர். உலக அளவில் மிகக்கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கும் MOST HATRED COMPANY.

பூமிக்குள்ளாக உடலை விட்டு விட்டு வெளியே உலாவிட்டு வரலாம். அதிகப்பட்சம் மூன்று நாட்கள் தான். ஆர்வமாக முன்பதிவு செய்த அந்த உச்ச நடிகர் ஆஸ்ட்ரல் பயணத்தை ஆரம்பித்து 6 நாட்களாகியும் இன்னும் எந்த முன்னேற்றமும் ஆகாததால். அதற்குப் பின்னர் யாரும் உள்ளே செல்லவில்லை. அந்த இடமே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கப்போகும் பலூன் போல அழுத்தத்தால் ஊதிக்கொண்டிருந்தது.
புலனாய்வு அதிகாரிகள், சர்வதேச புலனாய்வு அதிகாரிகள் என எல்லோரும் தேடிக்கொண்டிருந்தனர்.

தொலைக்காட்சி விவாதங்கள் சூடுபிடிக்கப் பறந்தன, வரப்போகும் அடுத்த திரைப்படத்தை வெற்றி பெறச்செய்யும் யுக்தியென அவரது போட்டி ரசிகர்கள் நக்கலடித்தனர். அதேசமயம் அறிவியல் நிறுவனமாகத் தம்மைக் காட்டிக்கொண்டிருக்கும் டெபிபோர்ட்டல் கார்ப் மீது நிறையவே விமர்சனங்களை விஞ்ஞானிகள் வைத்தார்கள்.

இதற்காக தாய்லாந்திருந்து செயல்படும் நிறுவனம் சில வேலைகளில் இறங்கியது. சமூக ஊடகத்தின் வாயிலாக இந்தச் செய்திகுறித்துப் பேசிய ஒட்டுமொத்த ஜனங்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டன, அவர்களைப் பேசச்செய்யும் ஜெனரேட்டர்கள் மற்றும் அதிகம் பரவச்செய்யும் ட்ரான்ஸ்ஃபார் மனிதர்கள் குறித்த தகவல் திரட்டப்பட்டு ஒரு பெரிய தொகை பங்கிடப்பட்டது. உச்சநடிகரின் பயோ மெட்ரிக் தகவல்களை வைத்திருந்த தேசிய தகவல்கள் பாதுக்காக்கும் கிட்டங்கியில் அவரது தகவல்கள் கரெப்ட் செய்யப்பட்டது குறித்து சில சப்பாணி ஊடகங்கள் மட்டுமே குரல்கொடுத்தன, சமூக ஊடகக்கடத்திகள் அதை கண்டுகொள்ளாமல் தடுத்தனர்.

உச்சநடிகரின் க்ளோனுடன் களவாடப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை பொருத்தி சரிபார்த்தனர். எல்லாம் சரியாக இருந்தது. இருந்தபோதும் அவரை உச்ச நடிகராகவே மாற்றிட சில காலம் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் என்பதால், மக்களை நம்புவதற்காக ஏதாவது செய்ய வேண்டும்.

அரசியல் அழுத்தங்கள் வேறு அந்த நிறுவனத்திற்கு அதிகமாகிக் கொண்டிருந்தது. தன் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அது பிரகடனம் செய்தது. இருந்தாலும் உச்சநடிகரை ஒப்படைப்பதாக வாக்குக்கொடுத்தது. இதற்காக உயர்மட்ட ரகசியக் குழு ஒரு தனி கமிட்டியை உருவாக்கியது. அவர்கள் சினிமா ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து மாஸ் ஹீரோக்களின் நடவடிக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர். சில தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த அந்த மற்றொரு நடிகரைப் பற்றித் தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இருவருக்குமான அத்தனை ஒற்றுமைகள் இருந்தன. அந்த ஹீரோவை ஆனால் மக்கள் மறந்துவிட்டனர், அவரது ஃபார்முலாவில் தான் இவரும் தொழிலில் முன்னேறியவர் என்பதால் அந்த நிறுவனம் தன் செயல்திட்டத்தைத் தொடங்கியது.

இறுதியில் அந்த குழுவின் பரிந்துரை மற்றும் கவனிப்பிற்கிணங்க சமூக ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. உச்சநடிகர் இமயமலையில் தியானத்தில் இருக்கிறார் என்று தகவல்களை ஷேர் செய்ய ஆரம்பித்தன, இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் பேச்சு எடுபடவில்லை. ரசிகர்கள் நம்ப ஆரம்பித்தார்கள், அவர்களுக்குப் பழைய உச்ச நடிகர் கூட இதே போன்ற ஆன்மீக நம்பிக்கை உடையவர் அவரைப் போன்ற அம்சங்களை உடைய இவரும் அவ்வாறான ஆன்மீகப் பயணத்தில் இருப்பதாகவே நம்பவைக்க ஆரம்பித்தனர்.

வேகவேகமாக காலிடருக்குள் தியானம் இருக்கக் கூடாது என்கிற விதிமுறையை வாடிக்கையாளருக்கான ஒப்பந்தப்படிவத்தில் ஏற்றப்பட்டது. க்ளோன் வெற்றிகரமாகத் தயாரானதும் அதனை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். உச்சபச்ச நடிகர் ஆனாலும் யாருடனும் பேசாமலிருப்பதை சில ஊடகங்கள் சந்தேகம் எழுப்பினாலும், எல்லா இடத்திலும் பணம் விளையாண்டுக்கொண்டிருந்தது.
ஒருவழியாக ஒரு முன்னணி ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றினை அந்த நிறுவனமே ஏற்பாடு செய்ந்திருந்தது, கேள்வி பதிலிற்கான ஸ்க்ரிப்டுகளை ஏற்கனவே க்ளோனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தது நிறுவனம். அக்கேள்விகளில் அந்நிறுவனத்தின் எதிர்காலப் பாதுகாப்பும் , சில திடீர் சந்தர்ப்பவாத லாபங்களும் பொதித்து வைக்கப்பட்டிருந்தன, அந்த க்ளோனாகிய உச்ச நடிகரையே தூதுவராக நிறுவும் திட்டமும் அதிலிருந்தது.

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று ஆரம்பித்த கேள்வி, மிகச்சரியாக பதில்சொல்லிக்கொண்டிருந்தது அது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த விபத்து நடந்தது. க்ளோன் தன் சிந்தனையிலிருந்து ஸ்க்ரிப்ட்டில் எழுதப்படாத பதில் ஒன்றைத் தந்தது.

“ நின்று போன உங்கள் திரைப்படத்தை எப்போது மறுபடியும் தொடங்குவீர்கள்? ”

“இல்லை இப்போது வேறு திட்டங்கள் இருக்கிறது”

“அப்படியா ஆச்சரியமாக இருக்கிறது.. அந்தப்படம் அவ்வளவு தானா?”.  ஸ்க்ரிபிடிலிருந்து விலகிய பதிலை ஊர்ஜிதம் பண்ண முயற்சித்தாள் நிகழ்வை நடத்தியவள். 

“ஆம் அவ்வளவு தான் முக்கியமான திட்டமிருக்கிறது”

“அப்படியானால் அது என்ன திட்டம் என்று சொல்ல முடியுமா?”

“இமயத்தில் ஆழ்ந்த யோகத்திலிருக்கும் போது என் பிறவி நோக்கம் புரிந்தது. ஆகவே நான் அரசியலில் இறங்கப்போகிறேன். அடுத்த வாரமே புதுக்கட்சித் தொடங்குகிறேன்”

பல ஆண்டுகளாகக் கேட்டிடாத அந்தச் சப்தம் மீண்டும் நாடு முழுக்க கேட்க ஆரம்பித்தது.

“தலைவா!!! எங்களை ஆளப் பிறந்த ஆண்டவா!!”

ஜீவ கரிகாலன்