வெள்ளி, 29 மே, 2015

பஜ்ஜி - சொஜ்ஜி 79 / பேஸ்புக் கவிதைகளும் பிரெட் ஆம்லெட்டும்
நேற்றிரவு இரண்டாவது முறையாக பிரெட் ஆம்லெட் வாங்கும் போது சற்றே யோசித்திருக்க வேண்டும். ஹெவி லோட் பண்ணதுக்கப்புறம் உடனேயே தூங்க முடியாது என்பதாலும் கைகள் வேறு பரபரத்துக் கொண்டிருந்தாலும் இதை எழுதியாக வேண்டும்.

சென்றே ப்ளீட்ஸிலே இது பற்றி விவாதிக்கனுமென்று நினைத்தேன் முடியவில்லை. அது போல ஒரு நாள் சூர்யதாஸ் அண்ணன், அமிர்தம் சூர்யா இவுங்க ரெண்டு பேரோடு இணையத்தில் தீவிரமாக இயங்கும் 2010க்குப் பிறகான புதிய கவிஞர்களின் படைப்புகளைப் பற்றித் தான். சூர்யாவோடு அந்த டாபிக்கில் ஒரு நாலைந்து முறை விவாதித்திருப்போம். சூர்யாவும் – இணையத்திற்கு முன்னும்,பின்னுமான வாசக – படைப்பாளி மனோநிலை என்கிற தலைப்பில் பிரமாதமாக ஒரு உரை நிகழ்த்திய பின்பும் தொடர்ந்த விவாதம் அது.

இணையத்திலிருக்கும் வசதி – சீக்கிரம் கிடைக்கும் அங்கீகாரம், ஆழ்ந்த வாசிப்பு அல்லது நிறைய வாசிப்பு, இலக்கியச் சூழல் பற்றிய அறிவு, அனுபவங்கள், பயணங்கள் என எதுவுமே தேவைப்படாது போனதால். இணையம் வந்த பிறகு எழுதப்பட்டு வரும் கவிதைகள் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதை முழுமையாக ஒத்துக் கொண்டோம். இணையம் வாயிலாகத் தான் எனது முழுவளர்ச்சியும் நடந்தேரியது என்பதை ஒத்துக் கொண்டு தான் நானும் தலையசைத்தேன்.

வாசிப்பில் – ஆழ்ந்து வாசிப்பது குறைந்தாலும், நமக்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிக்க முடிகின்றது என்பது இணையத்திற்குப் பின்பாக உருவெடுத்த வசதி தான். அதற்கு முன்னர் வரை – ராமாயணத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் கையாளும் ஒருவருக்கு இராமயணத்தை குறைந்தது ஒருமுறையாவது வாசித்திருக்க வேண்டும். இன்று எனக்குத் தேவைப்படும் அந்த ஒரு உதாரணத்தை சரிபார்க்க இணையத்தின் வாயிலாகக் கிடைக்கப்பெறும் அத்தனை இலக்கியங்களிலிருந்தும் அந்த REFERENCEஐத் தயாரிக்க முடியும். கவனிக்க கிடைக்கப்பெறும் எனும் சொல்லில் UNDERLINE பண்ணியிருக்கிறேன். அந்த உதாரணத்திற்கு மிகப்பொருத்தமான இலக்கியம் பற்றிய எந்தத் தகவலும் இணையத்தில் கிட்டவில்லையென்றால். இணையவாசிகள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை – “கல்லாதது செல்லளவு” என்று கமலஹாசன் ஸ்வாமிகள் சொன்னது போலாயிற்று.

நேற்றும் ஒரு விவாதம் தான் – வேல்கண்ணனின் ஃபேஸ்புக் சுவற்றில் – படிமத்தை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தி எழுதும் கவிதைகள் குறித்து விசனப்பட்டு ஒரு ஸ்டேட்டஸ் – நானும் தெரியாத்தனமா மூக்கை நுழைக்க – இப்படி ஒரு பதிவு. கவிதைக்கான வரையறுத்தலை ஒருவனால் முன்வைக்கவே முடியாது எனும் போது. இப்படியான விவாதங்கள் தேவைதானா என்று ஐயப்படவில்லை.

ஏனெனில் - விவாதமில்லாமல் – எந்த நகர்வுமில்லை என்பது தெளிவு. நான் ஏன் விமர்சிக்கனும் அல்லது விமர்சிக்கப்படனும் என்று கேட்பவர்கள் நிச்சயமாக யாருக்குமே டேக் இட மாட்டார்கள் என்று நம்புவோமாக. கவிதைகளுக்காக டெஸ்க் ஒர்க் பண்ணி பதிவேற்றும் நண்பர்களைப் பற்றி நான் இங்கே பேசவில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு கவிதை போட்டே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரிபவர்களைத் தான் சொல்கிறேன். அவற்றை ஒரு COLLAGE போல தான் பார்க்கிறேன். மெனக்கடலே இல்லாமல் பிரவாகமாக மகாகவிக்குத் தான் ஓடும். மகாகவியும் தன் வாழ்நாளிலே மகாகவி என்று அழைக்கப்படப் போவதில்லை என்பதை அறிந்தவன் தான்.

நட்பு மட்டுமே காரணமாக என்று வைத்துக்கொள்வோம் (லைக்ஸ் கொடுத்து லைக்ஸ் வாங்கும் – இன்னொரு வழக்கமும் உண்டு) – இதில் நன்னா கவிதையெழுதும் பெரியவா கூட ஆறுதலாகவோ அல்லது உற்சாகப் படுத்தும் விதத்திலோ பாராட்டிவிட்டால், அவ்வளவு தான் – நம் கவிஞர்கள் VIRTUAL பீடாதிபதிகளாகிவிடுகிறார்கள். அப்புறம் அந்த வருட டிசம்பருக்குள் குறைந்தபட்சம் ஒரு இருபதினாயிர ரூபாயுடன் “கவிதைத் தொகுப்பு ரெடி”.

இவர்களின் எழுத்தை நான் மறுக்கவில்லை – ஏனென்றால் இவர்கள் தான் இன்றைய காலத்தின் உற்பத்திப் பொருட்கள். 2010க்குப் பின் என்று சொன்னால் இவர்கள் தான் தெரிவார்கள் – ஆனால் சமகாலத்தின் பலவீனமான படைப்புகளுடன் - தொடர்ச்சியாக 80-90களில் இருந்த கவிதைக்கான உச்சக்காலத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கப் போகின்றோமோ??

படிமம் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படவேண்டும். பிற கவிதைகளில் இருந்து அல்ல – சுகிர்தாராணியின் ஃபேஸ்புக் சுவற்றிலும் இதைப்போன்ற ஒரு பதிவு – கவிதைகளில் இருந்து சொற்களை மாற்றிப் போட்டு உருவாக்கும் போலிக் கவிஞர்கள் பற்றி. சுகிர்தராணியாவது முக்கியமான கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர் திருடுவதில் ஒரு கு.பட்ச நியாயமாவது இருக்கலாம். ஆனால் தான் சில வருடங்களாக எழுதிய கவிதைகளை நிராகரித்துவிட்டுக் கதைகளை நோக்கிச் செல்லும் என் நண்பன் ஒருவனின் கவிதைகளையும் போலி செய்து போடும் சில நபர்களின் கவிதைகளை வாசித்தேன். ஆரம்பத்தில் சிலரது கவிதைகள் வாசிக்கப்படும் போது நன்றாகத் தான் தோன்றுகிறது, புதிதாக இருப்பது போல் தெரியும் அப்புறம் சில நாட்களிலேயே தன் அசல் கவிதைகளை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதைக் காட்டி விடும்.

அந்த விவாதத்தின் போது – இப்படி நிறைய பேரை ஏத்தி வுடுதிங்களே என்று நரநரத்ததற்கு – சூர்யா சொன்ன பதில்களில் சில நியாயம் இருக்கத் தான் செய்கின்றன. ஆனாலும் உற்சாகப்படுத்துவதில் சில * மார்க்குகள், அடிக்குறிப்புகளெல்லாம் வைக்காமல் விட்டால் ஆபத்துதான். அதிலும் கவிதைக்கு அடியில் இருக்கும் பெயரை நீக்கிவிட்டால், கவிதை யாருடையது என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது என்று சூர்யா சொல்லும் போது, நானும் அவ்வாறே உணர்ந்திருப்பதை இன்னும் உறுதியாக நம்பமுடிந்தது. ஆம் அதில் உண்மையிருக்கிறது. ஏனென்றால் நாங்கள் எங்கள் நட்பிலிருந்து தான் ஆரம்பித்தோம்.

கவிதையில் மரியாதையும், அக்கறையுமில்லாதது தான் – ”எனக்குப் பிடித்திருக்கிறது  நான் எழுதுகிறேன், யாரும் விமர்சிக்கத் தேவையில்லை, என் படைப்புகளில் நான் திருப்தியாகத் தான் இருக்கிறேன், உனக்கு என்னத் தெரியும், எங்கே கவிதையின் அளவுகோலைச் சொல்லு பார்ப்போம்” என்கிற டைலாக்ஸ்.

இளங்கோ வீட்டிற்கு செல்லும் போது அங்கங்கே தொங்கும் கவிதைச் சுருள்களைக் கண்டேன். ” சரியான நேரத்திற்காகவும், டெஸ்க் ஒர்க்கிற்காகவும் பல மாசங்களா அவனுங்க ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கானுங்க” என்று சொன்னார். இந்த டெஸ்க் வெர்க் என்கிற சொல்லைக் கேட்கவும் தான் ஒரு யோசனை தோன்றியது அன்றைய விவாதத்தில், அதன்படி.

டேக் இட்டுக் கருத்துக் கேட்கும் ஃபேஸ்புக்கிற்குப் பின்னான கவிதையெழுதும் கணவான்களே!! (இருபாலருக்கும் பொருந்தும் தானே!!) – உங்கள் கவிதைகள் எந்த பதிப்பிப்பதற்கான அவசரமும் கோரவில்லை, கவிதைக்கான குறைந்த பட்ச நியாங்களாக டெஸ்க் வொர்க் பண்ணியுள்ளோம், கவிதையை வெறுமனே லைக்ஸ், கமெண்ட்ஸ் மண்ணாங்கட்டிக்காக எழுதவில்லை என்பவர்களுக்கு நான் வைக்கும் CHALLENGE -


‘ONLY ME’ optionஐ பயன்படுத்தி பதிவேற்றுங்கள் – பதிவேற்றி ஐந்து நாட்கள் கழித்து தான் நீங்கள் பப்ளிக் ஆப்ஷனுக்கு மாற்ற வேண்டும். அதன் பிறகு நீங்கள் டேக் செய்யலாம். குறைந்தபட்சம் 48 மணி நேரம். இது உங்கள் பக்கமிருந்து ஃபேஸ்புக் கவிஞர்கள் மீதான விமர்சனத்திற்கு நான் சொல்லும் பதிலாகக் கூட இருக்கும். எந்த அவசரத்திலும், நிர்பந்தத்திலும் நாங்கள் கவிதை எழுதவில்லை என்று நிரூபிக்க முடியுமல்லவா. இது ஆரோக்கியமானது தானே. இது எந்தச் சுதந்தரத்தையும் தடுப்பதாக எண்ணுபவர்கள் – இந்தப் பதிவையே மறந்துவிட்டுப் போகலாம் இன்று உங்கள் கவிதையைப் பதிவேற்ற வேளை வந்து விட்டது. ஆனால் இந்த CHALLANGEஐ எடுத்துக் கொண்டால் – என்ன நடக்கும் ????


கவிதை தொடர்பாக நடக்கும் மொத்த விவாதங்களையும் இரண்டு கோணங்களில் பார்த்து விட முடியும் :

      1.   What is poetry?

      2.   What you believe as a poetry

    3.   ரெண்டு கோணம் தானே சொன்னேன். அதற்கு மேல் ஏன் வாசிக்கிறீர்கள் ? மூணாவது ஒன்னுமில்லை நான் இந்தப் பதிவில் ப்ரெட் ஆம்லேட்டை ஒரு படிமமாகப் பயன்படுத்தியிருக்கிறேன் :D  


hStay Chill & Happy Reading
JJay Kay

திங்கள், 18 மே, 2015

பஜ்ஜி - சொஜ்ஜி - 78 / திரவநிலைக்கு மாறிய பருப்பொருளும் ஒரு பாடலும்

தொடர்ச்சியாக எழுதும் எழுத்துச் சூராவளி இல்லையென்றாலும், மிகுந்த அயற்சிக்கிடையே கமிட் ஆன கட்டுரைகளைக் கூட எழுத முடியாமல் தான் இருந்தேன். சமீபத்தில் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அனுபவங்கள் ஏற்பட்டிருந்தும் எழுதமுடியவில்லை – ஒருவேளை சோம்பேறித்தனமென்றோ அல்லது ஏகாந்தமென்றோ சொல்லலாம். ஆனா இந்த நான்கு வரிகளுமே தேவையற்றது.

ஒரு மனிதரை மூன்று வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் நெருங்கிப் பழகவில்லையென்றாலும், மாதாந்திர ஸ்மைலி எக்ஸ்சேஞ்சுகள் உண்டு. கடந்த ஒரு வருடத்தில் சந்திக்கும்போதெல்லாம் நிறைய பேச ஆரம்பித்தாகிவிட்டது. பெருமையாகச் சொல்லப்போனால் ஒரு அருமையான கும்பல் உருவாகிவிட்டது, ஓரமாக நின்றாலும் அந்த மனிதரின் பேச்சு எப்போதுமே மையத்தில் சுழலும்.

புத்தகமென்றாலும் சரி, சினிமா, நாடகம், இசை என எல்லா ஏரியாக்களிலும் விளாசுவாப்ல. முக்கியமா, நம்ம ஏரியாவுலையும் செம ஸ்ட்ராங் – ஒரு காபிய கண்ணாடி கிளாஸ்ல எப்படி குடுக்க வேண்டும்னு ஒரு பதிவு போட்டாரு பாருங்க. என் இனம் என்று மார்தட்டிச் சொல்லலாம். ஆனா நான் அவர்கிட்ட ஒரு கட்டுரை கேட்டு வாங்குறதுக்குள்ள _________, நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். எனக்கு அந்த மனிதரோடு சேர்ந்து சில விஷயங்களைப் பதிவு செய்யனும்னு ஒரு எதிர்காலத் திட்டமிருக்கு. இதுல அந்த மனுஷன் ஊர்க்குருவி கிடையாது எங்கேயாவது பறந்து கொண்டேயிருப்பார் – அதனால டன் கணக்குல பயண அனுபவமும் இருக்கு. நல்ல பயணக்கட்டுரைகள் தமிழில் மிகக் குறைவு என்று நம்புகிறேன். இல்லை என்று சண்டைக்கு வந்தால் – சமகாலத்தில் என்று டபுள் கோட் போட்டு விடுகிறேன்.

இந்த மனிதனைப் பற்றி புகழ்ந்து கட்டுரை எழுதும் நோக்கத்தோடு இந்த இடுகையைப் பதிவேற்றவில்லை. 


அவருடைய காலர் டியூன் – உஸ்தாத் மேஹ்தி ஹசன் கான் – பாக்கிஸ்தானிய கZAல் பாடகர் ஆவார். அவரது இசையைப் பற்றிக் கேள்விப்படும் முன்னே – பள்ளியில் நடக்கும் விநாடி விநா போட்டிக்காக மனனம் செய்து வைத்திருந்த – ஞாபகம் இருக்கிறது. அந்த நண்பருக்கு அழைத்த போது தான் அவர் வைத்திருந்த காலர் டியூன் அது இந்த இணைப்பில் நீங்களும் கேட்கலாம்..***

Caution : Infected Area
Undefined insanity virus infected mentally as said below:
  • கலை BODY & SOUL இரண்டோடும் சம்பந்தப்பட்டது தான் – ஆனால் உடல் மறைகின்ற வேளைகளை உணரமுடிகின்ற வேளைகளை எவ்வாறு பகுத்துப் பார்ப்பது??
  • KAZAL –ஆன்மாவோடு இத்தனை நெருக்கமனதா??
  • இத்தனை வகை இசைகளைப் போலவே - ஆன்மா  ஒவ்வொரு கனமும் மாறக்கூடிய UNSTABLE STATEல் இருக்கிறதா??
  • எல்லா ரகங்களிலும், அமைப்பிலும், கலைவடிவத்திலும் ECSTACY, உன்னதம் (அ) மஹோன்னதம், என ஒரு நுண்வடிவம் இருக்கத்தான் செய்கிறது – அஹம் பிரம்மாஸ்மி என்கிற ENLIGHTMENT தத்துவங்களெல்லாம் இவ்வாறான இடத்தில் தான் ஒழுகியிருக்க வேண்டும் – கவனிக்க இந்த PROCESS பிறத்தல் என்று சொல்லப்படவில்லை ஒழுகுதல்.

·         இந்த கணத்தில் பரிபூரணமாக நான் நினைப்பவை யாவும் எனக்குப் புலப்படுகின்றன என்பதில் எனக்கு சந்தேகமில்லை.. ஆனால் வேறொரு சந்தேகம் வலுக்கிறது - அந்த சந்தேகம் வலுப்பது என்னுள் தான் – ”நான்” தான் அங்கு இல்லையே. நான் இல்லாத கணம்  - கலை, காதல், காமம், யோகம் என்று கேள்விப்பட்டாலும் இப்போதைக்கு என்னளவில் ரசனையில் மட்டுமே அதை உணர்ந்து இருக்கிறேன். இதை டிவைன் என்று சொல்லுமளவுக்கு ஆன்மீகம் பற்றித் தெரியாது. தெரியாத ஒன்றை ஒப்புமை சொல்வதில் உடன்பாடு இல்லை. ஆக, இசையிடம் தன்னைப் பறிகொடுப்பதை என்னால் எதனோடும் ஒப்பிட்டுப் பேச முடியாது என்பது உறுதி.

  பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றது. பின்னர் அடுத்த அடுத்த பாடல்களுக்கு என்று மாறி ஒரு மாலையே கரைந்து போய் இருள்கிறது. இந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருந்த (எண்ணிக்கை தெரியவில்லை) வேளையில் திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருந்த போனைக் கண்டுகொள்ளவில்லை. பின்னர் எதேச்சையாக பார்த்த போது ஏழு மிஸ்டு கால்கள், ஏழும் ஒரே நம்பரிலிருந்து தான். அழைத்தேன்.


“என்ன சார் பத்து வாட்டி கூப்டேன் எடுக்கவேயில்லை”

“சரி. விடுங்க என்ன ஆச்சு”

“வண்டி சர்வீஸ் பார்த்தாச்சு சார் – இப்போ புது வண்டியாட்டம் ரெடி பண்ணியாச்சு”

“சரி வரேன்.”

நீண்ட நாட்கள் சர்வீஸ் செய்யாத வண்டி, அடையாளம் தெரியாத அளவுக்கு சுத்தமாகவும், இலகுவாகவும் ஆக்கப்பட்டிருந்தது.

மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு – அப்படியே மொபைலிலும் டவுன்லோடு செய்துவிட்டு, மெக்கானிக் ஷாப் சென்று டெலிவரி எடுத்தேன். நினைத்த கணமேஅம்மா அழைத்தார்.

உங்களுக்குத் தெரியுமா இந்த இரவில் வீட்டிற்கு நானும் என் வண்டியும் ஒரே மனநிலையில் தான் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று??


பி.கு

அப்புறம் இந்த நண்பரோடு நீங்கள் பழக்கம் உள்ளவர் எனில், சமீபத்தில் அவரோடு போனில் பேசியிருந்தீர்களாயின் நீங்கள் யாரென்று அறிவீர்கள் – ஆகவே நான் பெயர் சொல்வதற்கில்லை.

சனி, 16 மே, 2015

தமிழக ஓவியங்கள் - ஒரு பார்வை

தமிழக ஓவியங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

நமது வரலாற்றை நாம் தெரிந்துவைத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட மேலை நாடுகளில் இருக்கின்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்தியக் கலை குறித்த ஆய்வு ஆவனங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்த ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழக மண்ணில் இதுவரை ஓவியங்கள், ART MOVEMENTS பற்றிய ஆய்வுகள், வரலாற்று ரீதியான நூல்கள் குறிப்பிடப்படும்படியாக எதுவுமில்லை. அண்மையில் வெளியான ”தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு” அந்த குறையை போக்கியிருக்கிறது. ஒரு ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்நூல், வாசிப்பதற்கு கடினமாக இல்லாமல் ஒரு பரந்த வாசிப்பை உருவாக்கும் வகையில் எளிமையான சொற்களோடும், விளக்கப்படங்களோடும் வந்திருப்பது சிறப்பு.

இந்நூலில் வெறுமனே புராணங்களின் உதவியை மட்டும் நாடாது இலக்கியங்களில் இருந்தும் தகவல்களைத் திரட்டித் தரும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏனெனில், இந்திய மண்ணில் வேறெந்த பிராந்தியங்களையும் விட இலக்கியச் செறிவு மிக்க தமிழக மண்ணில் கலைவரலாற்றைச் சிறந்த முறையில் ஆவனப்படுத்த முடியும் என்று இந்நூல் நிரூபித்திருக்கிறது. இதற்காக சங்க இலக்கியங்களில் இருந்து விஜயநகரக் காலக்கட்டத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘மதுரா விஜயம்’ வரை வெவ்வேறு காலத்தில் வெளிவந்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

காலவரிசைப்படி தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். ஆரம்பத்தில் பாறை ஓவியங்கள் பற்றிய கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கிறார். பாறை ஓவியங்கள், பழந்தமிழர் ஓவியங்கள், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகரக் கால, நாயக்கர் கால, மராத்தியர், கிழக்கிந்திய காலம் என வரலாற்றின் பின்புலத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகள் பற்றிய இவரது எளிமையான விவரணைகள், ஆய்வுகளின் மதிப்பீடுகள், மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான ஓவியங்களின் நிழற்படங்கள் மற்றும் விளக்கப்படங்கள், அழிவு நிலையில் இருக்கின்ற பல கலைப்படைப்புகள் பற்றியத் தகவல்கள் என மிக அரிய தகவல்களை அள்ளித் தரும் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய நூல் என்பதில் சந்தேகமேதும் இல்லை.
நூலில் வெறுமனே தகவல்களாக மட்டும் சொல்லிச் செல்லாமல், பாறை ஓவியங்கள் பற்றிய கட்டுரையில் அவ்வோவியங்களை படைப்பாக அல்லது கலையாகக் கருதுவதன் அம்சங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

இந்நூலை 1350-1650 வரை உருவாகியிருந்த ஓவியங்களை வைத்து உருவாக்கிய ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாய் வைத்து உருவாகிய நூல் என்று குறிப்பிட்டாலும், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பெனி மற்றும் காலனிய காலத்து ஓவியங்களையும், ஓவியர்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு ஆசிரியர் விளக்கியிருக்கும் இடங்கள் மிக முக்கியமானவை. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து - கம்பெனி காலத்து ஓவியங்கள் வரை காலவரிசைப் படி தொகுக்கப்பட்ட நூல் என்பதால் இதை ஓவியங்கள் பற்றிய அடிப்படை வாசிப்பிற்கும் சரி, ஆய்வுக்காகவும் (reference)வைத்துக் கொள்ளலாம். எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நூல் : தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு (கட்டுரைகள் – மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் : ஐ. ஜோசப் தாமஸ்

விலை : ரூ:475


- ஜீவ கரிகாலன்

நன்றி - தினமலர்