வெள்ளி, 4 மே, 2012

"மேரி சுமந்த சிலுவை"



கணேசக் குமாரனின் - பெருந்திணைக்காரன் (சிறுகதைத் தொகுப்பு ) - (புத்தக மதிப்புரை )






-------------------------------------------------------------------------------------------------------------------------


"மேரி சுமந்த சிலுவை" என்று இந்தக் கட்டுரைக்கு தலைப்பு வைக்க விளையும் போதே, என் மனதில் இறுக்கமான வலி ஒன்றும் உடனே வந்து ஒட்டிக் கொள்கிறது.


என்னைப் போன்ற ஒரு வாசகன் சிறுகதைகளில் அதிகப்பட்சம் எதிர்பார்க்கும் விசயமே திருப்பங்கள் தான், இந்தத் தொகுப்பில் மிகவும் அபாயகரமான திருப்பங்கள் வந்துக் கொண்டே இருக்கின்றன, அவையாவுமே கொண்டை ஊசி வளைவுகளாக இருக்கின்றன. ஒவ்வொரு கதாப் பாத்திரமும் நம் சமூகம் விரித்த மாய வலையில் சிக்கி அவல நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு சோக இழையை அடிநாதமாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. விதி, சூழ்ச்சி, இயற்கை, நோய்மை என ஏதோ ஒன்று ஒரு மனிதனை உருக்குலைப்பதை நாம் எல்லாக் கதைகளிலும் உணரலாம்.


புறத் திணைகளில் வரும் பொருந்தாக் காமம் தான் "பெருந்திணை" என்று அழைக்கப் படும், ஆனால் அது உள்ளுணர்வுகளைச் சொல்வதால் "புறத்தில்" சேராது என்று பலர் கூறுவதுண்டு, அதேசமயம் அகத் திணையிலும் சேராமல் இருக்கிறது (கைக்கிளைத் தினையும் அப்படியே). இப்படி இருபுறங்களும் மறுக்கப் பட்ட கையறு நிலை போலத் தான் இந்த கதைத் தொகுப்பும் வேவேவேறு சூழலில் இருக்கும் கையறு நிலையிலேயே மையம் கொள்கிறது. மனச் சிதறலில் மாறிய தாயும், காட்டினையிழந்த யானையும் , குடும்பமே துரத்திய திருநங்கையும், ஒரு வறுமை நோய்த் தீண்டிய கவிஞனும் , உடை விற்கும் ஒரு அபலையும், ஒரு முதிர் கண்ணியும், சித்தப்பாவை காதலிக்கும் பரமுவும் , மாநகரத்தில் வசிக்கும் சாபம் பெற்றவனின் தனிமையும், இளம் வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவளின் துயரங்களையும் எல்லாம் சேர்த்து ; புகழிலும், செல்வாக்கிலும், அதிகாரத்திலும், தன் முழு உருவம் காட்டாத கலாசாரத்திலும் ஊறிய உல்லாச சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்துப் பதிந்துள்ளார்.




அவரது கதாப்பாத்திரங்கள் யாவிலும் நேர்மை ஒன்று தென்படுகிறது, நேர்மை என்பதை விட வைராக்கியம் என்றோ, திமிர், செருக்கு என்று சொல்வதும் சிறப்பு.


முதல் கதை, ஒரு மனிதனுக்கு தன் தாய் தான் "காதல்"என்ற உணர்வின் முழு முதல் விதையென உணர்த்துகிறது. தாயின் இல்லாமை அவனோடு சேர்ந்து நம்மையும் உருக்குகிறது, உருக்குலைக்கிறது. மறுபடியும், அவன் தாயினைக் கண்ட பின் அவனின் மாற்றம் (சங்கிலியால் பிணைக்கும் நிலை ) யதார்த்தம் என்றால்; தாயுடன் அவன் மழையில் நனையும் பொழுது, அவர்களை மூடியிருக்கும் கார்முகில் அவன் நினைவில் கருவாக மாற , அவன் குழந்தையாக மாற்றம் பெற்று தாயை தொடுகிறான், அவன் தாயின் உடலுக்குள் செழுத்துவதும். அவன் தாயின் உடலோடு அங்கமாய் இருப்பதும் அறமே !!. இக்கதையை வாசித்து முடிக்கும் பொழுது "ஒரு பள்ளத்தில் வீழ்ந்து விட்டோமோ ? "என்று தோன்றினாலும், ஒரு சிறிய நிதானத்தின் மூலம் அக்கதையில் பூரணம் வெளிப்படுவதைப் பார்க்கலாம். தாயைப் பிணைக்கப் பட்ட சங்கிலி பின்னர் அறுந்தெறியப்படுகிறது .


கொம்பன் எனும் சிறுகதையில் வரும் "போர்" காட்சி மிகவும் குறிப்பிடவேண்டியது , அனேகமாக நான் வாசித்துவிட்ட எந்த ஒரு சரித்திர நாவலிலும் இவ்வளவு தூரம் வாள் உரையும் சப்தமும் , யானைகள் , மனிதர்களின் ஓலமும் , இரத்தமும் கண்டதில்லை(சங்க இலக்கியங்கள் தவிர்த்து). பரணி இலக்கியங்களுக்கு ஈடாக தோற்றவனின் பக்கம் நிற்கும் இந்தப் புலவனின் புதுப் பார்வை , " நமக்குப் போரின் இரத்தவாடையைக் கொண்டும், மனிதப் பலிகளின் எண்ணிக்கையைக் கொண்டும் நம் சமூகப் பெருமை பேசக் கூடாது " என்று நமக்கும் தோன்றச் செய்யும் அதே வேளையில் , அந்த மன்னராட்சியிலிருந்து, இன்றைய நாகரிக கேலிச் சமூகம் வரை அழிந்துவரும் விலங்கினத்தின் ஒரு கடைசிப் பிரதிநிதியாய் மாண்ட "கொம்பன்" எனும் யானை மூலம் மனிதமாக நாம் பரினாமித்ததின் மற்றொரு மோசமான விளைவாக இதைக் காட்டுகிறது


மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவன் தன் குடும்பத்தில் இருந்தால்கூட ஒதுக்கத் தயங்காத பெற்றோர்களும், சொந்தங்களும் வாழும் சமூகக் கட்டமைப்பில் எப்படி அந்த சகாயத்தை நேசிக்கவும் ஒருவன் இருக்க முடிகிறது என்று அடுத்து சிந்திக்க ? பணத்திற்காக உடலை விற்கும் ஒரு பெண் ராணியாகவே இருக்கிறாள்!! அவளே ஒருவனிடம் மனத்தை எதிர்பார்க்கும் பொழுது அவள் கனவில் சீழ் படிகிறது, தண்டவாளம் நோக்கி செல்கிறாள். தண்டவாளங்கள் பிரித்த உடல்களுக்கும் தலைகளுக்கும் நடுவே இப்படி எத்தனைக் காதல்கள் நசுங்கியிருக்கும் ??




தன் எழுத்துகளுக்காகவே வாழ்ந்துக் கொண்டிருப்பவனை விட ஒரு பத்து ரூபாய் விலை உயர்ந்தது என்று நெஞ்சடைக்கும் கதை தான் "கையறு மனம்" , இதற்கு கூட கண்ணீர் வராத என் கண்கள் குருடாகட்டும். பாடல்கள் நிரம்பிய ஆறாவது கதை ஒன்று தான், முடியும் பொழுது கொஞ்சம் நிம்மதி கொடுத்தது. அடுத்ததாக, புறவொழுக்கத்தின் எதிர் புறம் நிற்கும் "பெருந்தினைக்காரன்", ராணுவத்தில் பணிபுரியும் சித்தப்பாவின் அன்பிற்கும், அண்ணன் மகன் பரமுவின் அன்பிற்கும் இடையே இருந்த வேறுபாடுகளைக் கூடத் தெளிவாய்க் காணலாம். ஒருவன் தன் வேலையின் காரணமாய் தெரிந்துவைத்தப் பழக்கமும், மற்றொருவன் தனக்கு விளைந்ததை மட்டும் ஏற்றுக் கொண்டு அதில் உண்மையாய் வாழ்வதைப் பார்க்கலாம். பரமு தன் சித்தப்பாவாக மாறுவது, தவமிருக்கும் ரிஷிகள் கடவுளாக மாறுவது போல் பௌதீகமே !!


மாநகரத்தில் வாழ்வதே ஒரு மனிதனுக்கு சாபம் தான் என்றாலும், வறுமையும், தனிமையும் இரு கரங்களாய் தொண்டைப் பிடிக்கும் பொழுது அவன் விதி சமைக்கும் விருந்தாகிறான், அவன் பெரும்பாலும் இலக்கியத்திலோ அல்லது இலக்கியம் சார்ந்த இடத்திலோ வசிப்பவனாகவும் இருக்கிறான் (உன்மத்தம் பூவில் பெய்யும் மழை - மிகவும் ரசித்த தலைப்பு ). தன் உடல் தோற்றத்தினால், பருவம் தாண்டியும் மனமாகாதவள் - அழகு என்ற அர்த்தமற்ற போதையில் சிக்கி சுயத்தை இழந்த நம் பண்பாட்டின் பிரதிநிதியாகிறாள்.


ஸ்பானியர்களின் தங்கவேட்டை , கண்டிப்பாக எல்லோரையும் "அட!!" போட வைக்கும். அந்தக் கதை சொல்லும் விதமும், கதையில் திடீரென்று முளைக்கும் கொலம்பசும் ஆச்சரியமாய் இருந்தாலும் .. இல்லாத தங்கத்தின் மீது பேராசை கொண்டு நடந்த உயிர்ப்பலிகள் மிகக் கொடூரமானவையே !!.. கொடுரம் சிறிதும் பிசகாமல் இருக்க குருதி குடிக்கப்பட்டுவிட்டது.


கடைசியாய் வரும் கதையில் வன்புணர்வுக்கு ஆளான மேரி மனச்சிதைவு பெற்று, தன் குடும்பத்தையும் பிரிகிறாள்(தொலைந்துப் போகிறாள் ). அவளை அவ்வூரில் தேர்தல் பணிக்காக வந்த சில ராணுவத்தினர் மறுபடியும் பலாத்காரம் செய்ய அவளும் கருவுருகிறாள், அவளைத் தன் இறந்துபோன பேத்தியின் இடத்தில் வைத்து அவளை வளர்க்கிறாள். இந்தக் கதையில் வரும் மேரி கரைதல் அகிலாண்டேஸ்வரிக்கு எதிரானவள், சமூகம் இந்த அழகு என்கிற அளவுகோலில் ஒரு பெண்ணை எந்த அளவிற்கு நசுக்கிகிறது என்பதற்கு ஏழாம் கதையில் வரும் அகிலாண்டேஸ்வரியும், கடைசிக் காதில் வரும் மேரியும் போதும்.முதலாமவள் தன் அழகில்லாமை எனும் தர்கத்தில், ஆயிரம் அவமானங்களுக்குப் பின் தன் கட்டுப்பாடுகளை எல்லாம் ஒரு நாள் ஒருவனிடம் இழக்கிறாள், அதே அழகிற்கு கூலியாக மேரி சிலுவை சுமக்கிறாள்.




சமூகத்தில் ஒதுக்கப் பட்ட , புறக்கணிக்கப் பட்ட்டவர்களைப் பற்றிய கதைத் தொகுப்பில் சில மெல்லிய மனதை அன்பு வெளிக்குள் நட்சத்திரமாய் தன் கதைகளில் தெளித்திருக்கிறார். முதல் கதையில் வரும் மகன், சகாயத்தை நேசிக்கும் பாலு, சித்தப்பாவை காதலிக்கும் பரமு, மேரியை அரவணைக்கும் கிழவி என்ற பாத்திரம் மூலம் எத்துனை துன்பங்களிலும், அன்பின் மீதுள்ள நம்பிக்கை தான் வாழ்வை இயக்குகிறது ஏறுப் புலனாகிறது.


முக்கியமாக அவர் கதை சொல்லும் விதம் மிகவும் ஈர்த்தது, ஒரு நிகழ்வைச் சொல்லி அடுத்த ஒன்றை விட்டு, அதற்கு முந்தைய நிகழ்வு ஒன்றை சொல்லி ஆங்கில எழுத்தான "V " என்ற வடிவத்தில் இருக்கிறது.
உதாரணம் :-
வேறு ஒரு ஊரில் தொலைந்துப் போன , ஏற்கனவே மனநலம் குன்றிய மேரியின் நிலையில் அவள் நடுத்தேரிவில் படுத்திருக்கும் கோலத்தில் ஆரம்பித்து(இடதுபக்க தொடக்கம் ) , அடுத்த பத்தியில் மேரிக்கு முதலில் என்ன நேர்ந்தது என்பதில் தொடங்குகிறது ((வலது பக்க தொடக்கம் ), இரண்டு கதைகளில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மேரி எப்படித் தொலைந்தால்(கீழிருக்கும் மையப் புள்ளி என்ற மத்தியில் முடிகிறது.இந்த மாறுதலான பயணமும் கதையை வசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்தத் தொகுப்பில் அடுத்த சிறப்பாய் நான் சொல்ல விளைவது அவர் சொல்லாடல்கள் நான் மிகவும் ரசித்த சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கவிதைத் தழும்புகள் இருப்பதாய் நான் உணர்கிறேன்.
"மேரியை சிலுவை முழுமையாய் மூடும் தருணம் அவள் மார்புகளில் பால் வந்துக்கொண்டிருந்தது "
"ஆற்றில் அங்கங்கே மணல் தோண்டியதில் அம்மைத் தழும்புகள் நிறைந்திருந்தன"
"எப்படியாவது பாவம் தொலைந்தால் போதும் என்று வருபவர்கள் பிச்சை போடுவதால் பாவம் தீர்ந்துவிடும் என்றெண்ணி காசினை எறிந்து புதியபாவம் பெற்றுக் கொள்வார்கள் என்பதும் மிகச்சரியே ??"
"அம்மா நீர் சூலம் எடுத்து நீரைக் குத்தினாள், மழையைப் பிடுங்கி எறிந்தாள்".

அவர் கதைகளில் சில திருப்பங்கள் ஒரே வார்த்தையில் நிகழ்ந்துவிடுகின்றன, அதை கவனிக்காமல் விட்டு விட்டால் கதைத் திசைமாறி செல்வதை உணர முடியாமல் குழம்ப நேரிடும் , கையறு நிலையில் வரும் "இவன் தீர்மானித்தான்" எனும் சொற்களில் ஒரு மனிதன் ஒரு சூழ்நிலையில் தனக்கு நேரும் மிகப் பெரிய மனப் போராட்டத்தை கடந்து விளைவுகளைத் தீர்மானித்து எடுக்கும் முடிவை அடக்கி வைத்துள்ளார். உண்மையில் கையறு நிலையின் உச்ச நிலை நமக்குப் புலனாகும்.




இது வரை வந்த சிறுகதைத் தொகுப்புகளில் பெருந்திணைக்காரன் தனக்கென்ற ஒரு இடத்தில் கம்பீரமாக இருப்பான் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. மேரி சுமந்த சிலுவைகள் மிகவும் பாரமானது, துயர்மிக்கது, மனித வாழ்வில் துயரங்கள் தான் சந்தோசம் பற்றிய அளவீடுகளை கணிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை மேரியை ரட்சிக்கும் ஆண்டவனாக ஒரு கிழவி வாழ்வதில் தெரிகிறது . இந்தத் தொகுப்பின் , எல்லாக் கதைகளிலும் விரவியிருக்கும் வலிகள் தான் இந்தப் படைப்பின் வெற்றிக்கு சாட்சி சொல்லும்.


வெளியீடு : உயிரெழுத்துப் பதிப்பகம்



  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக