கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மகிஷாசுர மர்தினி - நமது வரலாற்றில்



போர் மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான் வரலாற்றை வாசிக்கத் தூண்டும் வஸ்துக்கள். புராணங்கள், இதிகாசங்கள், மத வரலாறு, கலைப் படைப்பு என வரலாற்றின் அடுத்த அத்தியாயங்கள் இந்த இரண்டில் ஒன்றைப் பற்றியபடி தான் அடுத்தடுத்து நகர்கின்றன. அதே சமயம் ,

வரலாறு என்பது உண்மை மீது சுதை பூசி, வெள்ளையடித்து, வர்ணம் தீட்டுவது...
*அதிகாரம் கொண்டு சுரண்டிப் பார்த்தால், உண்மையை உயிருடன் மீட்க முடியாது.
*சில சமயம் அந்த உண்மையை மீட்பதாய் சொல்லி,  அவற்றின் மீது SAND BLAST செய்யப் படலாம்
*காலத்தின் கணக்குகளில் எல்லா லேயர்களும் உரிந்து நிர்வாணம் அடைந்து விடும்

#நாம் செய்ய வேண்டியது எல்லாம் 35 மார்க் வாங்கி பாஸாகிவிட வேண்டும் என்பது தான்..
***************************************
கொஞ்சம் பெரிய இடைவெளி தான் மாமல்லை சிற்பங்களைப் பற்றி பேசுவது என்பது என்னைப் பொருத்தவரை எந்த அளவு மகிழ்ச்சி தரக்கூடியதோ, அதே அளவு பொறுப்பினையும் தந்துவிடுகிறது. தவறான விவரனைகள் ஜோடனைகளான வார்த்தைகளிலோ, தவறான குறிப்புகள் அல்லது தரவுகளையோ தந்து செல்லும் கட்டுரையாக இருப்பது மிக ஆபத்தானது. வாசிப்பின் சௌகரியத்திற்காக வரலாறு மட்டுமல்ல தவறான பின்புலத்தோடும், சரியான அளவீடுகள் கொண்டு பார்க்கப்படாத அறிவியல் தகவல்களும் கூட ஒட்டு மொத்தமாக நோக்கத்தை சிதறடித்து விடும்.
அது எப்படி அறிவியல் முடிவுகள்/தகவல்கள் கூட ஒரு கலை விமர்சனம் பற்றிய தீர்ப்புகள்/வரைவுகள்/கருத்துகளுக்கு ஆபத்தாகின்றன என்றால், அது அப்படித் தான்:

 ரோமன் தகவல் களஞ்சியத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் நிறைய அறிவியல் கூற்றுகள், தேற்றங்கள், கண்டுபிடிப்புகள் பொய்த்துப் போயிருக்கும் அல்லது காலாவதியாயிருக்கும். இதற்கு காரணம் அறிவியல் தன்னை பாம்புச் சட்டையைக் கழட்டுவது போல் தன்னிடமிருந்தே தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தேர்ந்த உயர்ரக மற்றும் எளிமைப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அறிவியலை எந்தப் பக்கமும் எளிதில் சாய்த்து விடுகிறது.


சரி, உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?? மாமல்லை சிற்பங்கள் பற்றிப் பேசுவதற்கு எதற்கு இத்தனை சுத்தி வளைப்புகள் என்று கேட்கிறீர்களா??
ஆமாங்க அரசியல் இருக்கு, புரானங்களை இப்படிப் பார்ப்பதற்கு உங்கள் மனம் இடமளிக்கிறதா என்று உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்க ஒரு வழி:
அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றைப் பதிந்து வைப்பதற்கான Toolகள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். . இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் இதிகாசம் மட்டும் புராணங்களை அன்றைய வரலாற்றை தொகுக்கப் பயன்படுத்திருக்கும் கருவியாக நான் பார்க்கிறேன், என்ன அவற்றிற்கு அழகியல்(Aesthetic) மற்றும் கலை(Artistic) முலாம்கள் பூசப்பட்டிருக்கும். என்னளவில் தெளிவாக சொல்ல முடிந்ததெல்லாம் பெரிய புராணம் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவனம் என்று சொல்ல முடியும், ஆனால் இன்றைய அறிவியல் மற்றும் கல்விக் கொள்கைக்கு அவை எதிரானது. நிற்க.. மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள் புராணங்களும், இதிகாசங்களும் முன்வைக்கும் வரலாற்று செய்திகள் இன்றைய கல்விக் கொள்கைகளின் காரணமாகவே நீக்கப் படுகின்றன.


”இது என்ன அபத்தம் கல்வியைச் சாடுகிறாய்?” என்ற கேள்வி வரலாம். பின்நவீனத்துவம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனையான குறியீட்டுத் தன்மை எனும் படிமம் நமது புராண,இதிகாச/பக்தி இலக்கியங்களில் கூட நிறைந்திருக்கிறது. பாரதத்தில் யமுனா நதிக்கரையோர யாதவப் பெண்களுடனே உல்லாசமாக வாழும் கிருஷ்ணன் தன் கையில் வைத்திருக்கும் குழல் மாடு மேயத்தலின் போது பாடுவதற்காக வைத்திருக்கிறான், பலராமர் ஏந்திக் கொண்டிருக்கும் ஏர் உழவனுக்கானது.. ஒரு உழவனும், ஆயரும் சேர்ந்து வாழ்ந்த யமுனா நதிக்கரையின் வாழ்வியலை இது போன்ற ஆயுதங்களைப் பற்றிய அறிவினைக் கொண்டு  தெரிந்து கொள்ளலாம், ஒரு விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டுமென்றால் அதற்கு முக்கியப்பங்கு மாடுகளுக்கு தான் இருந்தது என்பது இன்றளவும் கூட உண்மையான விஷயம் தான்.. ஆற்றோரங்களிலே விவசாயம் எனும் தொழில் மூலம் நாகரிகம் அடைந்து விட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக அவர்கள்(க்ருஷ்ண - பலராமன்) காட்டப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அவதாரங்களிலும் ஹீரோக்களின் வதம் செய்யும் ஆய்தங்களைல் கொண்டு அவர்கள் வாழ்ந்திருப்பதாய் நம்பப்படும் காலத்தை நாம் புரிந்து கொள்ள இடமளிக்கிறது.. Symbolism என்பதை நவீன இறக்குமதிச் சிந்தனையாகப் பார்ப்பது எத்தனை கயமைத் தன்மை கொண்டது. தசாவாதாரத்தில் தனது உடல் பலத்தால் முதல் மூன்று அவதாரங்களிலும், நான்காவது அவதாரத்தில் நகங்களாலும் வதம் செய்திருப்பது மிகப் பழமையான  காலத்தை காட்டுகிறது (Pre-Historic Times: Upper Paleolithic to Neolythic), அடுத்து ஞானவதம் (வாமண) அதற்கடுத்த காலம் கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனிடமிருந்து உலோகக் காலம் ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து  வருபவை வில், அம்பு, சக்கரம் என்றெல்லாம் கொண்டு வரும் குறியீடுகள் காலத்தை கண்டரிய உதவும்.


இப்படித் தான் மஹிசாசுரனை வதம் செய்யும் துர்கையின் சக்தியை வியந்து பார்ப்பதோடு அவள் காலத்தின் போர் செய்தியை, இந்த சிற்பத் தொகுதியின் உதவியோடு தெரிந்த கொள்ள இடமிருந்தால் தேடுவதும் /பரப்புவதும்; இல்லா விட்டால் கலை விமர்சனம் செய்வதோடும் நகர்ந்து விடுதல் நல்லது தான். அப்படிப் பட்ட ஒரு முக்கியமான சிற்பத் தொகுதி தான்  மகிஷாசுரமர்த்தினி செய்யும் யுத்தக் காட்சி, இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று தனியாகவே மாமல்லை சென்று திரும்பி வந்தது உண்டு. அதுவும் வெறும் மகிஷாசுர மர்த்தினியின் சிற்பக் காட்சியை மட்டும் பார்த்து விட்டு (சில மணி நேரங்கள்) கிளம்பி வந்துள்ளேன்.


அடுத்தப் பகுதியில் மகிஷியின் சிற்பத் தொகுதியை அருகில் நின்று பார்ப்போம்...

ஜீவ.கரிகாலன்

சனி, 21 செப்டம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 37

  வரமா ?? சாபமா? - Street Vendors Bill /2013

மத்திய அரசு கடந்த செப்டம்பர் 06ம் தேதி நிறைவேற்றிய 19 மசோதாக்களில் முக்கியமான Street Vendors Bill எனப்படும் நடைபாதை அல்லது நடமாடும் சிறு வியாபாரிகளுக்கான நலச்சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்த சட்டத்திற்காக கிட்டதட்ட பத்து வருடங்களாகப் போராடி வந்த NASVI (National Association of Street Vendors of India)அமைப்பிற்கு இந்த வருடம் வெற்றி கிட்டியுள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசிடமிருந்து போராடிப் பெற்றுள்ள இந்த சட்டம் சிறுவர்த்தக(petty business) பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதில் எந்த சந்தேகம் இல்லை.



இந்த சட்டத்தின் படி நாடு முழுவதுமிருக்கும் இது போன்ற சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளு வண்டி, நடமாடும் வியாபாரிகள் என எல்லோரின் விவரங்களும் சேகரிக்கப் பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப் பட்டுவிடும். ஒவ்வொரு ஊரிலும் மக்கட்தொகைக்கேற்ப நகர வியாபார செயற்குழு(Town Vending Committee) அமைக்கப்பட்டு, நகரத்தில் வியாபாரம் செய்ய உகந்த இடங்கள் யாவும் மறு வரைவுக்குள்ளாக்கப்பட்டு விற்பனை மண்டலம்(vending zones) வரையறுக்கப் பட்டு விடும்.

Town Vending Committee :
நகர விற்பனையாளர்கள் செயற்குழு என்பது மக்கட்தொகைக்கேற்ப ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப் படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கட்தொகையுள்ள ஊர்களில் 30லிருந்து 40பேர் வரை செயற்குழு உறுப்பினர்களாகவும், அதற்கு கீழே மக்கட்தொகையுள்ள ஊர்களில் வெறும் 20 பேர் வரை செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதுவே மாநகரங்களில் ஒன்றுக்கும் மேர்பட்ட மண்டலங்கள் பிரித்து அதில் செயற்குழுக்கள் செயல்படும். இந்த அமைப்பின் தலைவராக நகராட்சி, மாநகராட்சி அல்லது உள்ளூர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இருப்பார், இந்த செயற்குழுவில் 40% வியாபரிகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (இதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33%) இருப்பார்கள், இது போக இந்த அமைப்பில் அரசாங்கத்தின் சார்பாக மட்டுமில்லாத உள்ளூர் அமைப்பு, சந்தை மற்றும் வணிக அமைப்பு, உள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்போர் நலச்சங்கம், வங்கி மற்றும் தொண்டு நிறுவனத்தில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவர்.

 அதே போல ஒரு ஊரின் மொத்த சிறுவியாபரிகளின் உறுப்பினர் எண்ணிக்கை மக்கட்தொகையில் இருந்து 2.5% சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.


விற்பனை மண்டலம்:
பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாறும், வேறு எந்த குடியிருப்பு பகுதியிலோ பாதுகாக்கப்படும் பகுதியிலோ, சுற்றுப்புறச் சூழலுக்கும்  நகரத் தூய்மைக்கும் பங்கம் விளைவிக்கும் வண்ணம் விற்பனை மண்டலம் அமைக்கப்படும், அதில் மட்டுமே உறுப்பினர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். இது போக இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாக மாற்றப்பட்ட இந்த வணிகத்தில் வேறு எந்த சட்டத்திற்கு புறம்பான, தடை செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அவய்ப்பிருக்கிறது, இது இதன் முக்கியமான சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இந்திய பொம்மைச் சந்தையினை அழித்த சீன பொம்மைகளின் விற்பனை பெரிய அளவில் இது போன்ற சந்தையில் தான் நிகழ்ந்தது என்பதும் உண்மை.
NASVIஐப் போலே சிறுவணிகத்தின் பலமறிந்த நாமும் இதை ஒரு பாதுகாப்புச் சட்டமாக இதை ஆதரிக்கலாம், ஆனால் நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் தவறாகப் பயன்படுத்தப் பட்டால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்.

ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாக மாற்றப்பட்ட இவ்வணிகம், தளர்த்தப்பட்ட சந்தைக்கு தேவைப்படும் மாற்றமாக இந்த சட்டத்தினை பார்ப்பதற்கு நிறையவே இடமளிக்கின்றது.

*முதல் பிரச்சினையாக,  வணிகப் பகுதி பெரிய பெரிய வணிக மால்கள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளின் தலையீட்டால் சிறு மற்றும் தெரி வியாபரிகளுக்கு பொருந்தாத இடமாக வரையறுக்கப்பட வாய்ப்புள்ளது.

*இந்த சட்டத்தின்படி, 40% வியாபாரிகளை உறுப்பினராகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு இடம் வரையறுப்பது, தொழில் நிர்ணயம் மற்றும் உரிமம் வழங்குவது, தேவைப்பட்டால் மறுவரையறை செய்வது போன்றவற்றில் இவர்களுக்கான உரிமை போதிய அளவு இல்லாமல் இருக்கின்றது என்பது மிகப்பெரிய குறையாகும்

*மிக முக்கியமாக இந்த சட்டத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலம் குறித்த தெளிவான வரையறை இல்லாததும் முக்கியமான குறை என்பது வல்லுனர்களின் கருத்து.

*இதில் செயற்குழுவானது அரசியல்கட்சிகளின் தலையீடு இல்லாமல் அமைப்பது மிக அவசியம், ஆனால் இதன் சாத்தியம் குறித்து அச்சம் எழுகின்றது, ஆளுங்கட்சியோ அல்லது பிரதான சாதிக் கட்சியோ இந்த செயற்குழுவில் அங்கம் வகித்தால், அது உள்ளூரின் சந்தையை கடுமையாக பாதிக்கும்.

*நம் நாட்டில் மிகப்பெரிய எண்ணிக்கையில் சுயதொழில் வாய்ப்பை உருவாக்கித் தருவதே இது போன்ற சிறுவியாபாரிகளுக்கான சந்தை தான். இது போல சந்தை இடர்கள் ஏதுமில்லாது எளிதில் ஒரு தொழிலைத் தொடங்கவோ அல்லது நடத்திவரும் தொழிலில் இருந்து வெளியேறவோ இல்லை இடம்பெயரவோ அல்லது தொழிலில் மாற்றம் செய்யவோ எந்த ஒரு புறக்காரணிகளின் அனுமதிக்கும் காத்திருக்கத் தேவையில்லாதது தான். ஒரு Seasonal, Part-time வியாபாரியாகக் கூட எந்த தடையும் செய்ய யாருமில்லாது இருந்து வந்த சந்தையில் இப்படிப்பட்ட உரிமங்களின் தேவை கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஒருவருக்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டால் அவரால் முறையான அனுமதியின்றி வேறு எந்தவொரு மாற்றத்தினையும் தன் தொழிலில் செய்ய முடியாது.


சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் தள்ளுவண்டி, சாலையோர வியாபாரங்களில் தங்கள் லாபத்தில் 10-30% வரை, மாநகராட்சி வரி, அரசியல் ரௌடிகளின் மாமூல், காவல்துறையினருக்கு கொடுக்கப் படும் லஞ்சம் (பெட்டி கேஷ் என்ற பெயரில் மாதாந்திரக் கட்டணமாக காவல் நிலையங்கள் வசூலிக்கின்றன என்பதும் கூடுதல் செய்தி) போன்றவற்றால் இழப்பாக இருந்தும் சுயதொழிலாக உழைத்து வீடு சேர்க்கும் இவ்வியாபரிகளுக்கு நலனுள்ளதாக இல்லாமல் அதே அரசியல் தலையிடு, காவல் துறையினர் மற்றும் பெரிய வணிகர்களின் செல்வாக்கு ஆகியன இந்த செயற்குழுவில் தலையிட்டு லாபம் காட்டத் தொடங்கினால் நிச்சயம் இந்த சட்டம் ஒரு சாபமாகவே அமையும்.

உடனடியாக அமுல்படுத்தப் படுவதைக் காட்டிலும், அதை சரியான முறையில் செயல் படுத்த வேண்டும். ஏனென்றால், பார்கோடுகள் பதித்த MRP பொருட்களை மட்டுமே நுகர்வு செய்து, இந்த விலைவாசியில் நம் எல்லோராலும் வாழ்க்கையை நடத்த முடியாது தானே!!

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

அசுரன் ஆளும் புதிய உலகம் -02 / All Seeing Eye

சென்ற பகுதியில் ஆதார் கார்டு ஒரு ஆபத்து என்று அறிமுகப் பகுதியாகப் பார்த்தோம்,  அது எப்படி நமது நலனுக்கு எதிரானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதன் அடிப்படைத் தன்மை மற்றும் வரலாற்றில் நடந்த வேறு சில தவறுகளையும் இதே நோக்கில் ஆராய வேண்டும். இதனை எதிர்ப்பது என்பது ஒரு தொழிற்நுட்பத்திற்கு எதிராக நிற்கும் செயல், ஒரு திட்டக் குழு பரிந்துரைத்த திட்டத்தின் வடிவத்தை எதிர்க்கும் கருத்துகள். இன்றைய நிலையில், தமிழ்ச் சூழல் ஏற்கனவே மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பத்திற்கு எதிராக தன் கருத்தை உலக அரங்கில் பதிவு செய்துக் கொண்டிருக்கிறது என்பதே என்னை எழுதத் தூண்டுகிறது.

ஆதார் கார்டு அல்லது UID (unique identification (UID) number) என்பது நாட்டிற்கே பொதுவான, குடிமகன்களுக்கான அடையாள அட்டை ஆகும். நாட்டிற்கே பொதுவான அட்டையாக வாக்கு அட்டை, கடவுச் சீட்டு, மாநில அரசு வழங்கும் குடும்ப அட்டை என எத்தனையோ அட்டைகள் இருக்க, ஆதார் அட்டை ஏன் அவசியம் ஆகிறது? என்றால். இன்றைய நாட்களில் பொதுவாக நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் முயற்சிக்கு உதவக் கூடிய தொழிற்நுட்பம் தான் UID எனப்படும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை.  இந்த அட்டையின் மூலம் ஒவ்வொரு குடிமகனின் முழு அடையாளங்கள் சேமிக்கப் படுகிறது, கைவிரல் ரேகை, விழி மற்றும் முகத்தோற்றம் போன்றன சேமிக்கப் படுகிறது. கார்கில் போருக்குப் பிந்தைய சூழலில் தேசிய அளவில் ஒரு பொது அடையாள அட்டை பாதுக்காப்பிற்கென நிதி ஒதுக்குவதன் அவசியம் சரியானது தான். ஆனால் அது நடைமுறைப் படுத்தப் படும் முறையில் தான் பெரிய சிக்கல் வந்திருக்கிறது.

இந்தச் சிக்கலைப் பற்றி கவனிப்பதற்கு முன் ஒரு சிறிய வரலாற்றைப் பார்க்க வேண்டும், அது 1992-இல் இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறையில் கட்டுமானப் பணிகளை முடுக்கி விட்டிருந்த ராஜீவ் காந்தி அரசின்(இன்று வரை -அதை சாதனையாகச் சொல்லி வரும் கட்சி அறிக்கைகள் ஒரு புறம்) திட்டத்தின் மூலம் தனது முதல் காலடியை எடுத்து வைத்தது ஒரு பிரபல நிறுவனம். எடுத்த எடுப்பிலேயே PPP மூலம் கால் பதித்ததால் தனது வளர்ச்சியை பத்து ஆண்டுகளுக்குள் மிகப் பிரபலம் ஆக்கிவிட்டது, அதன் பெயர் தான் HMTL (HUTCHISON MAX TELECOM LIMITED). இப்படி நம் நாட்டினில் நுழைந்த நிறுவனம் பத்து ஆண்டுகளில் நாடு முழுமைக்கும் பரவி, இறுதியில் BPLn பங்குகளை வாங்கி சந்தையில் பிரதான நிறுவனமாக வலம் வந்தது. அது ஹட்சிசன் எஸ்ஸார் டெலிகாம் லிமிடட்.
ஒரிஜினல் பில்லா -லி கா ஷிங்


ஹட்ச் என்று தும்மல் போடாத டீவி சேனல்களின் வணிக இடைவேளை ஏதேனும் ஒன்றை அந்நாட்களில் நீங்கள் கண்டதுண்டா?? அந்த ஹட்ச் நிறுவனத்தின் தலைவர் லி கா ஷிங் (Li ka Shing), உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் செய்யும் இவர் உலகின் எட்டாவது மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரர் என்றுக் கருதப்படுகிறார். ஹாங்காங் பங்குச் சந்தையின் 15%விதம் முதல், இவரது பங்கில் இருந்து தான் பரிவர்த்தனைக்குள்ளாகிறது. சீனாவிற்கு ஆதரவு நிலையில் இருக்கும் அவர், ஒரு வருடம் வரை சீன அரசின் நிதி நிறுவனமான CITIC இல் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அதன் மூலம் அவர் பாலி டெக்னாலஜீஸ் போன்ற உலகளாவிய ஆயுத வியாபாரிக்கு மறைமுகமாக உதவியுள்ளார் என்பது அவரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் கண்டறிந்த ரிப்போர்ட். இது அவர் நேரடியாக சீன இராணுவத்தோடு (People's Legislative Army of China) தொடர்பு வைத்திருந்ததற்கு சமம். அப்படியென்றால் நம் படுக்கையறை வரை சீன இராணுவத்தின் கண்கள் வந்து போயிருக்கின்றன என்று தானே அர்த்தம்??!! அதில் சந்தேகமே இல்லை.


இப்போது புரிகிறதா இந்த நாய் ஏன் நம்மைத் தொடர்ந்து வருகிறது என்று!!


தன் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும் - விற்று விட வேண்டும். இப்போது உரிமம் யாருடைய குறுக்கீடுமின்றி மற்றுமொரு அந்நிய(இங்கிலாந்து) நாட்டு கம்பெனியிடம் விற்று விட்டு, ஹட்ச் நடையைக் கட்டிவிட்டது. இதில் நமது அரசுக்கு வரி என்ற பெயரில் ஒரு ரூபாய் தேறாத அளவுக்கு நம்து நாட்டு எல்லைக்கு வெளியிலேயே நமது அலைக்கற்றை, நிலம் என வர்த்தகம் செய்யப்பட்டது. மத்திய அரசு இதற்கு வரி விதித்த போது கூட நாட்டு நலனில் அக்கறை கொண்ட பா.சி அவர்கள் வழக்கில் போராடி வெற்றி பெற்றார். இதனால் நமது அரசிற்கு இழப்பு வெறும் 12,000 கோடிக்கான வரித்தொகை.

தகவல் தொழில் நுட்பத்தின் மிக உயர்ந்த கட்டத்தில் நாம் இன்று நிற்கிறோம், ஆனால் வளர்ச்சி என்கிற கொள்கையை அடிப்படையாய் வைத்து உருவான வழிமுறைகளைப் பார்த்தால் நம்மைச் சூழ்ந்திருக்கும் வலை என்னவென்று தெரியாது, ஐந்தாயிரம் ஊதியம் வாங்கும் ஒருவன் கைகளில் 20000 மதிப்புள்ள செல்போன் வளர்ச்சியின் அடையாளமா ? வீக்கத்தின் அடையாளமா? என்று யோசித்துப் பார்க்க இடமிருந்தால். 

ஆதார் அட்டையின் அடிப்படையாக நமக்கு வழங்கப் படுவதன் பின்னனி என்ன?, அதன் மேல கட்டமைக்கும் பொது மக்கள் நலனுக்கு அல்லது தேசத்திற்கு எதிரான ஆபத்து எப்படியிருக்கும்? இதை நடைமுறை படுத்துவது யார்? அவர்களின் பின்னணியென்ன என்றெல்லாம் ஆராய் விலகும் திரைக்குப் பின் நிற்பது யார்?? இதற்கு பீடிகை எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை. 

அவர்கள் உலகின் மீட்பர்களாக தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் பீனிக்ஸ் பறவைகள் தான்



தொடரும்......

வியாழன், 25 ஜூலை, 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -01 / All Seeing Eye

(புதிய தொடர்)

எல்லாவற்றையும் பார்க்கும் கண்கள் (All Seeing Eye)

 “நாம செய்றது எல்லாத்தையும் மேலெ ஒருத்தன் பார்த்துக்கிட்டு இருக்கிறான்ல அவன் பதில் சொல்லுவான்” என்று கடவுளை நோக்கி நாம் சொல்லுவோமே அந்தக் கண்களைப் பற்றியல்ல இந்தக் கட்டுரை. ஆங்கில திரில்லர் படங்களைப் போல அல்லது ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல உலகின் அத்தனைப் பகுதியினையும் ஒரே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்பும் ஒரு அசுர சக்தியின் கண்களாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

எதற்காக இதைப் பற்றி பேச வேண்டிய அவசரம் என்றால், அவசரம் தான் இது பேச வேண்டிய நேரம் தான். ஒரு வகையில் எல்லா நாடுகளுமே தம்மை ஒரு வலிமையான நாடாக உலகில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரயர்த்தனம் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, ரஷ்யாவிடம் மட்டும் தான் அந்த சாத்தியம் இருந்தது. ஆனால் பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் அடைய முடியாத ரஷ்யாவை பின்னுக்கே தள்ளிவிட்டு சீனா எதிரில் நிற்கிறது, மற்ற ஐரோப்பிய, ஆசிய எல்லாமும் இதற்குப் பின்னர் தான் வருகிறது.

National Treasure படத்தில் வரும் இந்த  All Seeing Eye, அதாவது கட்டி முடிக்கப் படாத பிரமிட் ஒன்றின் முகட்டின் மீது அமைந்திருக்கும் இந்த ஒற்றைக் கண்ணானது அமெரிக்காவின் சின்னம் ஆனது. அது அமெரிக்கா கரன்சியான டாலர் நோட்டிலும் இருக்கும் அதன் அடியில் ஒரு வாக்கியம் Novus Ordo Seclorum அப்படியென்றால் "New Order of the Ages". அதாவது இது free mason என்று அழைக்கப்படும் ஐரோப்பிய சகோதர்கள் சபையின் முக்கிய குறிக்கோளான புதிய உலகை படைப்போம் (New Old Order) என்ற கொள்கையை ஒத்து இருக்கிறது. அதாவது இந்த சபையினரால் தான் கனவு தேசமான அமெரிக்கா எனும் நாடே உருவாக்கப்பட்டது என்றும் கூறுவார்கள் (G.W.வாசிங்டனில் இருந்து அமெரிக்கா Free Mason வசம் வந்தது என்று நம்பப்படுகிறது). அதற்கேற்றார் போல் இன்றைய அதிபரான ஒபாமா வரை தனது முதல் அதிபர் உரையில் உலகை நல்ல முறையில் ஆள வேண்டும் என்று தன்னை உலகின் பிரதிநிதியாக பாவிக்கும் வழக்கம் இருக்கிறது.



இங்கு மறுபடியும் அமெரிக்க சினிமாக்களைப் பற்றியும் பேச வேண்டும், பெரும்பான்மையான படங்களில் உலகிற்கு வரும் ஆபத்துகளை எல்லாம் அமெரிக்காவே ரட்சிப்பது போல இருக்கும். இந்த லட்சியத்தில் இன்றைய நிலையில் கிட்டதட்ட ஒரு நூறு ஆண்டுகள் வந்த அமெரிக்காவின் வெற்றிப் பயணத்தில் 2008 பொருளாதாரச் சரிவு மட்டும் அமெரிக்காவிற்கு ஏற்படாமல் இருந்திருந்தால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளுக்குள் உலகின் ஒரே நாட்டாமையாக அமெரிக்கா வந்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஆனால் அந்தச் சரிவில் அமெரிக்கா பெரிய அளவில் நிலை குலைந்துப் போனது. அங்கிருக்கும் பல குடிமகன்களுக்கும் நமது அரசு, நமது வாழ்க்கை முறை, நமது எதிர்காலம் குறித்த கேள்விகள் எழத் தொடங்கின.

ஒரு சில மனிதர்கள் தன் தேசமாக இருப்பினும் அது செய்யும் கேடுகளை உலகிற்கு வெளிக்கொணர முயற்சித்தனர். அதில் இரண்டு பேர்கள் மிக முக்கியமானவர்கள் :
அசாஞ்சே

ஸ்னொடென்
இந்த இருவரும் தங்கள் உயிருக்கு  இருக்கும் ஆபத்தினையும் பொருட்படுத்தாது அமெரிக்காவின் உண்மை முகத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி மற்ற நாடுகளை எச்சரித்தனர். இது 2008ல் வந்தப் பொருளாதார சரிவிற்கு பின் இன்னும் எத்தனை தூரம் அமெரிக்கா தன் எதிர்காலத் திட்டங்களை வீரியத்துடன் கொண்டு வர இருக்கிறது என்பதை உணர்த்தியது. தமிழ் ஈழத்தை தகர்ப்பதிலிருந்து, தென் அமெரிக்க வளங்களைச் சுரண்டுவது, சீனாவை சமாளிப்பது, வடகொரியாவைக் கைக்குள் கொண்டு வருவது, இந்தியாவில் தன் கோட்டையை எழுப்புவது என்று பல திட்டங்களை வெளிக் கொணர்ந்தது. இதில் அமெரிக்கா - இந்தியாவில் வைத்திருக்கும் திட்டங்கள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகவே செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்தியா போன்ற மனிதவள மிக்க ஜனநாயக நாட்டினைக் கைபற்றுவதிலேயே தனது உலகை ஆளும் கனவில் ஒரு பெரும்பகுதி முடிந்து விடும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. அதற்கான திட்டத்தில் முதல் படியாக, அமெரிக்கா இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு கையினையும், பாதுகாப்பில் மற்றொரு கையினையும் வைத்து விட்டது.

முதலில் வால்மார்ட், டெஸ்கோ போன்ற சில்லறை வணிக முதலைகள் பத்து ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் ஒரு பெரிய கபளீகரம் செய்து விடும். அது நம் நாட்டின் பெரும்பானமையான மக்களை சொந்தத் தொழிலிருந்து, Salary class மக்களாக மாற்றிவிடும் என்பதால், நம் நாடு பின்னர் சுதாரித்தாலும் கூட திரும்பி எழுவதற்கு பல வருடங்கள் ஆகலாம், ஏன் அதுவும் கூட முடியாமல் போகலாம்.

மேலும் நடைமுறையில் இருக்கும் அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா நம்மீது மேற்சொன்ன இரண்டு வகையான நெருக்கடியும் கொடுக்க முடியம், ஒன்று நம் ஆயுத பலத்தை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் (இது ஒப்பந்ததின் நேரடிச் செயல்பாடு), இரண்டாவது இதற்காக ஒரு பெரும் தொகையினை அமெரிக்க பாண்ட்களில் குறைந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தது மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது. அதாவது அந்த நாட்டின் பெரும் வணிக் மையங்களை அழைத்து வந்து நம் உள்ளூர் சந்தையை சூரையாடச் செய்வது.

அத்தனைக்கும் மேலே மொத்த இந்தியர்களின் கோப்புகளையும் அமெரிக்கா தன் வசப்படுத்தும் முயற்சி தான் All Seeing Eye என்று சொல்ல் வருகிறேன். அது எப்படி சாத்தியம் என்று சொல்கிறீர்களா?? அது தான் Aadhar அட்டை.
அந்நியன் படத்தில் விக்ரம் சொல்வது போலே “உங்க மொத்த Databaseம் எங்கிட்ட இருக்குது டா!!!” என்று அமெரிக்கா சொல்லாத செய்தியைத் தான் ஸ்நோடென் சொல்கிறார்.

அது எப்படி சாத்தியம்  என்கிறீர்களா ?? 

அதற்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள்
ஜீவ.கரிகாலன்


செவ்வாய், 14 மே, 2013

ஸ்டெரிலைட் - அடுத்த யூனியன் கார்பைடு??

ஸ்டெரிலைட் - அடுத்த யூனியன் கார்பைடு??

ஒரு நச்சு ஆலை பற்றிய ஆய்வுக் கட்டுரை (விமர்சனங்கள்/கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)



ஸ்டெரிலைட், பெரிய அளவில் சுற்றுப்புற சீர்கேட்டிற்கு காரணமாக இருக்கும் இந்த ஆலையை எதிர்த்து வரும் போராட்டங்கள் எந்த ஊடகங்களிலும் போதிய கவனம் கொடுக்கப்படாமல் உள்ளூர் மக்களின் ஞாயமான கோரிக்கைகள் எதுவும் மக்கள் மன்றத்தில் வைக்கப்படாமல் ஒரு பிராந்தியப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு உதாசீனப்படுத்தப் பட்டு வருகிறது. ஒரிசா மக்களைப் போல ஒற்றுமையாய் தங்கள் உரிமைக்காகப் போராடி வெற்றி கொள்ள முடியாத தூத்துக்குடி மக்களின் நிலைக்கு காரணம் என்ன ??




ஸ்டெர்லைட் ஆலையினை மூடிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையை நீக்கி கடந்த 2ஆம் தேதி வந்த உச்சநீதிமன்றத்தின் ஆனை, தூத்துக்குடி மக்களை மட்டுமல்லாமல், பல இயற்கை ஆர்வலர், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்தது ஒரு புறமிருக்க, வழக்கை விசாரிப்பதில் உள்ள சிக்கல்களை காரணப்படுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இன்னும் தொய்வடைந்து போய் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலே NEERI {National Environmental Engineering Research Institute}எனப்படும் அமைப்பு பசுமைத் தீர்ப்பாயத்தில் கொடுத்த மாசு பற்றிய அறிக்கையில் அரசு விதித்த மேலே மாசு அடையவில்லை என்ற அறிக்கை வருகிறது. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்கள் குறித்து சில கேள்விகளை பொதுவில் வைப்பது மிக அவசியமாகிறது.

ஸ்டெரிலைட்டின் செயல்பாடுகளில்/உரிமத்தில் எழும் சந்தேகங்கள்:
இப்பொழுது ஸ்டெரிலைட் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்  இருக்கிறது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு தனியார் தாமிர உறிஞ்சு(Copper Smeltor) ஆலை. 1992ல் திறந்து விடப்பட்ட தாராளமயமாக்கலில், தாமிர, அலுமனியம் உற்பத்தி செய்யும் துறைகளில் தனியார் பங்கு பெற அனுமதியளித்தது.1994ல் மஹாராட்டிரத்தின் இரத்தினகிரி மலைப் பகுதியில் அந்த ஆலை நிறுவக் கிளம்பிய எதிர்ப்பில், தமிழகத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது, கூடுதலாக துறைமுக வசதியும் சேர்ந்தே கிடைத்தது

ஆனால் தமிழ்நாட்டில் உரிமம் பெறும் இடத்தில் இருந்தே ஸ்டெரிலைட்டின்
சட்டவிரோதப் போக்கு தெரிகிறது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25
கிலோமீட்டர் தொலைவிற்குள் இது போன்ற பெரிய ஆலைகள் நடத்த மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத்திடமும், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் எப்படி அனுமதி வாங்கியது என்கிற 19 ஆண்டு கால விடை தெரியா கேள்வி ஒன்றிருக்கின்றது.

தெரியுமல்லவா மன்னார் வளைகுடா எவ்வளவு முக்கியமான பாதுகாக்கப்பட
வேண்டிய பகுதியென்று?? 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா  தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டர் முதல் 125 ஹெக்டர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் (2200இந்திய மீன் வகைகளில் 510 மன்னார் வளைகுடாவில் தான் இருக்கிறது) இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. இந்த ஆலை நல்லதண்னித் தீவு, வந்தீவு, காசுவார் தீவு, விலங்குச் சல்லி ஆகிய தீவுகளுக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்த ஒரு காரணமே ஸ்டெரிலைட்டை மூடுவதற்கு போதிய காரணம் தான்.(#01) Rule 5 of the Environment (Protection) Rules 1986.

வணிகத்தில் Backward Integration என்று தொழில் முறையைப் பற்றி சொல்லுவதுண்டு, தாமிர ஸ்மெல்டர் ஆலையாக மட்டுமே செயல்பட்ட ஸ்டெரிலைட், இன்னும் சில பொறித் தொகுதிகளை(Plant) கந்தக ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் பொறி, ஆனோடு  பொறித் தொகுதிகளையும் சட்டவிரோதமாக – அனுமதி பெறாமல் தன்னுடன் இணைத்துக் கொண்டது என்றும் சொல்லப் படுகிறது, இந்தக் குற்றத்தையும் சேர்த்து  தான் 2010-லேயே ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால்  இறுதியில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எல்லாம் வேலை வாய்ப்பு என்கிற காரணத்துடன், ஸ்டெரிலைட் நிறுவனம் மேற்கொள்ளும் சமூகப் பணிகளையும், தொழிற்சாலை விதிகளை தற்பொழுது கடைபிடித்து வருகிறதுஎன்றும் கருதியதாகக் கூறப்பட்டது.

இந்த இடத்தில் தான் அரசின் புள்ளியியல் விவரங்கள் மீதும் தணிக்கை முறை மீதும்  சந்தேகம் வருகிறது .இந்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் சில முரண்கள்:-

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழிற் வகைபடுத்துதலில் ஸ்டெர்லைட்
நிறுவனத்திற்கு அட்டவணையில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிவப்பு நிற வகையில் உள்ள ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு (இந்திய தொழிற்சாலைகள் வகை குறியீட்டு எண் :1012 – சிவப்பு) மாதத்திற்கு ஒருமுறை நேரடிச் சோதனையும், மாதிரிச் சேகரிப்பும் கட்டாயம் எடுக்க வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலிருந்து இந்திய தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இறக்குமதி
செய்யப்பட்டு தூத்துக்குடியில் நிறுவப்பட்ட அந்த மூன்றாம் அதிநவீன
கண்காணிப்பு நிலையத்தின் நிலை என்ன? (இதில் வைத்திருக்கப் பட்டிருக்கும்
இயந்திரமும் பரிந்துரைக்கப்பட்ட காற்றுக்கு எதிர்திசையில் வைக்கப் பட்டிருக்கிறது  என்று இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சரியான அளவு காற்றில் ஏற்பட்டிருக்கும் மாசுக்களை கண்டறிய முடியாது போகும் என்பது உறுதி)


நகரங்களில், புறநகரங்கள்/ தொழில் மையம்/ குடியிருப்பு பகுதிகளில்
காற்று மாசடைவதைக் கண்காணிக்க வைக்கப் படும் கண்காணிப்பு நிலையத்தை ஏன் தூத்துக்குடி சிப்காட்டில் நிறுவவில்லை என்பது முதல் கேள்வி?, ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் (Reuters) ஐந்து கிலோமீட்டர் தள்ளியே கண்கானிப்பு நிலையம் இருக்கின்றதை சுட்டிக் காட்டுகிறது. இந்தக் கண்கானிப்பு நிலையம் 2008ன் மாசுக் காட்டுப்பாட்டு அறிக்கையில் தூத்துக்குடியில் மொத்தம் 03 நிலையங்களாக இருக்கின்றது, அதுவே 2010ம் ஆண்டின் அறிக்கையைப் பார்க்கும் பொழுது எண்ணிக்கை மூன்று என இருந்தும். அதன் ரீடிங் (reading) கணக்கெடுத்துக் கொள்ளப் படவில்லை. SO2, NO2, PM10 என எல்லா பட்டியலிலும் இரண்டு நிலையங்களில் (இடம்: ராஜா ஏஜன்ஸீஸ், fisheries college) இருந்து தான் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நிலையத்தின் (இடம் :ஏ.வி.எம் நகைக்கடை) கதி என்ன? என்பது இரண்டாம் கேள்வி SO2 எனப்படும் சல்ப்யூரிக் ஆக்ஸைடு அளவு 2008ன் நிலையை விட 2010ல் உயராமல் இருக்க, கட்டுக்குள் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது மூன்றாம் கேள்வி? ஏனெனில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது, மார்ச் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காற்றில் கலந்திட்ட ஒரு கனமீட்டரில் 2941.82 மில்லிகிராம் அளவு, கண்காணிப்பு நிலையத்தின் சென்சாரின் அதிகப்பட்ச பதியும் திறனே 3000 மில்லிகிராம்/ஒரு கன மீட்டர் தான். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கேள்வி ஸ்டெரிலைட் ஆலையை ஆய்வு செய்த குழுவில் அங்கத்தினராக அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவரை சேர்த்தது எந்த விதத்தில் நியாயம் என்பது முக்கியமான கேள்வி ?

ஏற்கனவே சொன்னது போல, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாதம் ஒரு முறை தணிக்கை செய்து வரும் பொழுது, அவர்கள் ஆய்வு செய்யும் தகவல்கள் சரியானது தானா என்பதற்கு உத்திரவாதம் உண்டா ? இது போன்ற நவீன ஆலைகளில் மிக முக்கியமான பணி கருவிமயமாதல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் பங்கு. இதன்படி ஆலையின் மொத்த செயல்பாட்டையும் நவீன முறையில் கருவிமயமாக்கப் பட்டு அதை தொழிற்சாலை தரக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், கழிவு வெளியேற்றம், சுத்தகரிப்பு போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். அது போலத் தான் ஸ்டெரிலைட்டிலும் இது போன்ற கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டு காற்றில் கலக்கும் மாசுகளை, கழிவுநீரை என கட்டுப்படுத்த இயலும். அதே சமயம் இதைக் கண்காணிக்கும் உணரி(சென்சார்)யின் தகவல்களையும் மாற்றவும் இயலும் என்பது சாத்தியமே. ஒரு நவீன ஆலை தமது தவறுகளை மாற்றியமைக்கும் (மறைக்கும்) தொழில்நுட்பம் இருக்கிறது என்பதால் அரசின் தீவிர கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும் என்பதும் உண்மை.

சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த நூறு கோடிகள் அபராதம் கூட 2005ல் எடுக்கப்பட்ட ஆய்வில், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகப்பட்ச நிர்ணயங்களை விட எட்டு மடங்கு அதிகமான அளவு தண்ணீரில் மாசடைய, கன உலோகங்கள் கலப்பதற்கு காரணமாய் ஸ்டெரிலைட் ஆலை இருக்கிறது என்று கூறிய 15 வருட தகவல்களை உடைய அறிக்கை தான் அபராதம் விதிக்கக் காரணமாகிறது. இதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த அபராதம் (அதுவும் ஐந்து வருட அவகாசத்துடன்) பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் இருக்கும் மூன்று கோடி பங்குகளின் EPS (Earning Per Share)-இல் வெறும் ரூபாய் 0.3-ஐ மட்டுமே எடுத்துக் கொள்வதால் முதலீட்டாளர்கள் இதைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பது மேலும் வருத்தம் தருகிறது.

உலக அளவில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள்:-



தூத்துக்குடியைப் போலவே வேதாந்தா நிறுவனம்(ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம் 54% வீத பங்குகளை வைத்திருக்கிறது), உலகம் முழுவதும் சுரங்கங்களையும், ஆலைகளையும் நிறுவியும், வாங்கியும் உள்ளது, அதே போல உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் வலுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலேயே ஒடிஸ்ஸா மாநிலத்தில் வரவிருக்கும் பாக்ஸைட் சுரங்கத்திற்கான திட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நிகழ்ந்து, தற்காலிகமாக அந்த ஆலை மூடப் பட்டது. அது போல கோவாவிலும் இந்நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நிகழ்ந்தது. ஒடிஸ்ஸாவில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக உள்ளூர் போலீஸை வைத்து மிரட்டியும், பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியும் கொடுமைப் படுத்தியதைக் கண்டு இங்கிலாந்தில் உள்ள தலைமை அலுவலகத்திலும், நியூயார்க்கிலும், ஒடிஸாவிலும் கடந்த ஜனவரி 11ல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் போராட்டங்கள் செய்து கண்டனம் தெரிவித்தன.

ஸ்டெரிலைட் நிர்வாகமோ இது போன்ற கசிவினால் யாரும் இதுவரை உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்று தனது வலைதளத்தில் எழுதி வைத்திருக்கிறது. அப்படியானால இதுவும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும் பொழுது மாசடைவதைக் குறைவாக காட்டுவது போலான கண்கட்டு வித்தை தானோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் கடந்த மே 11ம் தேதி அன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த ஆலைக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பினர் (NTCE) கிட்டதட்ட 2400க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள் ஒரு நகர எல்லைக்குள் ஒரே வருடத்தில் (ஒரே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தகல் உரிமை ஆவனம்) உருவாகியுள்ளனர் என்று அச்சுறுத்தும் தகவல் ஒன்றை எடுத்து வைத்தனர்.

அடுத்ததாக ஸ்டெரிலைட்டின் கழிவுகள் ஏற்படுத்திய மண் மற்றும் நீரின் நிலை எப்படி இருக்கிறது என்று அவ்வூர் மக்களிடம் கேட்டறியும் பொழுது இந்நிறுவனம் பல பொது நீர் நிலைகளை, கிணறுகளை உபயோகப்படுத்த முடியா வண்ணம் ஆக்கியுள்ளது என்று சொல்லப் படுகிறது. அவ்வாலையின் திடக் கழிவு மேலாண்மையைப் பார்க்கும் பொழுது அது மண்ணில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தெளிவாக விளங்கும். தாமிர உற்பத்திக்குப் பின் கழிவாக வரும் மண் போன்ற துகள்கள் பாதுகாப்பாக அடுக்கிவைக்கப் பட வேண்டும். அதற்கு பெரிய அளவில் இடவசதியும், அதை பராமரிக்க கண்காணிப்பும் அவசியம். ஏனென்றால் அந்த மண்ணிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவார்கள் (பார்க்க பட்ம் -2). ஆனால் சுற்றியிருக்கும் கிராமங்களில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அங்கிருக்கும் குளங்களை அடைப்பதற்கு உதவுவதாக தன் செல்வுகளைக் குறைத்து லாபம் அடைந்திருக்கிறது. (படம் – 3)






(படம் -3)
ஸ்டெரிலைட்டை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் உற்பத்தித் திறன் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் மிக ஆபத்தானவை. நீர், நிலம், மட்டுமில்லாமல் மண்ணிலும் விளைவை ஏற்படுத்திருயிருக்கிறது, பருவநிலையிலும் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தள்ளியிருக்கும் சமூக ஆர்வலர் தர்மராஜ் அவர்களின் வீட்டிலிருந்து பரிசோதனைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட மண்ணில் கலந்துள்ள ஒரு ரசாயன மூலகம் பிரிட்டனின் தர நிர்ணய அளவைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம் கலந்திருக்கிறது என்றும் தெரிய வந்தது.

அது போல தூத்துக்குடியின் கடலோரங்களில் அடிக்கடி மீன்கள், கடல்குதிரைகள் போன்றன அதிக அளவில் செத்து ஒதுங்குகிறது என்பதை உள்ளூர் மக்கள் அறிவர், பவளப் பாறைகளின் இன்றைய நிலைமையும் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே. தொழிற் கழிவுகளால் மாசடைந்து வரும் கடலில் வாழும் மீன்களை அன்றாட உணவாய் உட்கொள்ளும் பாமர மனிதர்களும் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்பது இன்னும் தீவிரமாக ஆராயப் பட வேண்டிய விசயம். ஏனென்றால் மாசடைந்த நீரில் வாழும் மீன்களை தினமும் உணவாக ஒருவன் உட்கொள்ளும் போது அதில் அதிக அளவு கன உலோகமான க்ரோமியம், கேட்மியம் போன்றன இருந்தால், அவனை கேன்சர் போன்ற கொடிய நோய்கள் தாக்குவது எளிது. நமக்குக் கிடைத்த தகவலின் படி அதே போன்ற ஒரு சூழ்நிலையைத் தான் இன்றைய நிலை இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. நமது சட்டப் படி மனிதனை வைத்து இத்தகைய ஆராய்ச்சி செய்வதற்கு அவ்வளவு எளிதாக நம் அரசு அனுமதி கொடுக்காது, அதைத் தான் இது போன்ற ஆலைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன

உச்சநீதிமன்றம் முன்வைத்தது இதைத் தான்: வளர்ச்சி எனும் நோக்கில் பெரிய அளவில் வேலைவாய்ப்பைத் தருவதையும், அரசுடன் சேர்ந்து நலத் திட்டங்கள செய்வதையும், இரண்டு ஆண்டுகளாக மாசுபடுதலை குறைப்பதற்கான முயற்சி எடுத்தலையும் மேற்கோள் காட்டி, மூடிய ஆலையைத் திறக்க உத்தரவிட்டது. தூத்துக்குடியின் பூகோள அமைப்பும், உலக மயமாக்கலில் மாறிவிட்ட தொழில் நிலைமையும் வேறு எந்தத் தமிழக நகரங்களுக்கும் இல்லாததால். தூத்துக்குடியின் வளர்ச்சியை ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியால் மட்டுமே மாற்றிட முடியாது என்பது திண்ணம்

பொருளாதார பாதிப்பு மற்றும் அதன் தீர்வு
இத்தனை ஆபத்துகளிலும் ஸ்டெரிலைட்டை உச்ச நீதி மன்றம் அனுமதித்திட காரணங்கள் நேரடியாக 1300 தொழிலார்களும், மறைமுகமாக சில ஆயிரம் தொழிலாளர்களும் சில ஒப்பந்தகாரர்களுக்கும் ஏற்ப்படும் பணியிழப்பு தான் என்றால், தூத்துக்குடியின் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், புதிய வேலை மற்றும் வருமான வாய்ப்புகளையும் மாநில அரசு சார்பில் சுட்டிக் காட்டவில்லை என்பது மிகப் பெரிய வருத்தத்தை தருகிறது. அதாவது தென்னிந்தியாவில் கப்பல் கட்டும் தளத்தோடு புதிப்பிக்க இருக்கும் துறைமுகமும் அது சார்ந்த துறைகளுமே இந்த வேலை வாய்ப்பினை ஈடுகட்ட வல்லது என்பது சாத்தியமே. இன்னும் அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து தூத்துக்குடி வரையிலான சாலை வழித்தடங்கள் விரைவு சரக்குப் போக்குவரத்திற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தாலே இன்னும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதும் உறுதி.

இதன் உற்பத்தியை நிறுத்தும் பொழுது வரும் தாமிரத்திற்கான உள்நாட்டுத் தட்டுப்பாடு, ஏற்றுமதிக் குறைவு, அரசின் வருமானக் குறைவு, வேலைவாய்ப்பு போன்றவற்றை வாதமாக முன்வைக்கும் பொழுது, அந்நிறுவனத்தின் நிதியறிக்கையைப் பார்க்கும் அவசியம் ஏற்படுகிறது.

1. வேலைவாய்ப்பு :- 2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே அதன் விற்பனை வருமாந்த்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், மிகப் பெரிய மீன்பிடித் துறைமுகம், வளமிக்க பவளப் பாறைகள், விலையில்லா காற்று,நீர் போன்றவற்றை மாசடையச் செய்வதன் மதிப்பைக் கணக்கிட்டால். ஸ்டெரிலைட்டை மூடுவதில் தவறில்லை

2. ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய வரிச்செலவுகளையும் மேல் சொன்ன காரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்

3. அந்நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பு முறையினைப் பார்த்தால், அந்நிறுவனத்தின் நிகர லாபத்தில் அதன் தாய்க் கம்பனியான வேதாந்தா குழுமத்திற்கு 57.24% சதவீதமும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) 16.18% போக மீதமிருக்கும் 16.11 % தான் பொது மக்களுடைய லாபம் . (அதுவும் 8.21 சதவீதம் தான் நேரிடையான பங்குகள்)

4. இந்தியாவில் தாமிரமானது பாதுகாப்பு, எரிசக்தி, மின்சாதனம், வாகனம், கட்டமைப்புத் துறைகளுக்கெல்லாம் அத்தியாவசியமாகத் தேவை படுவதால் இந்த ஆலை மிகப்பெரிய தேவையை உருவாக்கிவிடாதா என்றால் அதற்கும் பதில் இருக்கிறது. இந்தியாவைன் தற்பொதைய தேவை வெறும் 5,75,000 டன் தான். 2008லேயே படி நம் நாட்டின் உற்பத்தி 900000 டன்களுக்கும் மேலே வந்ததால், இந்த ஆண்டும் அது 7-11% சதவீதம் அதிகரிக்கும். ஸ்டெரிலைட் உற்பத்தி செய்யும் 400000 டன்களால் எந்த உள்நாட்டுத் தேவையும் பாதிக்கப் படாது.


ஸ்டெரிலைட்டின் அக்கறை போன்ற சூழ்ச்சி:-

ஸ்டெரிலைட்டின் நிறுவன-சமூகப் பொறுப்பு(Corporate Social Responsibility):-
தொடர்ந்து ஊடகங்களுக்கு விளம்பரம், கிராம அமைப்புகளுக்கு அடிப்படை வசதி, அரசியல்வாதிகளுக்கு நன்கொடை, தொண்டு நிறுவனங்கள், கோயில்களுக்கு தாராள நிதி, கல்வி நிறுவனங்களுக்கு கொடை என அக்கறை காட்டுவதை ஆவனப் படுத்தியது தான் சுப்ரீம் கோர்ட்டின் தடையை நீக்கக் கோரிய வழக்கில் வெற்றி கிட்டிடப் பெரிதும் உதவியது.

பொதுவாக உலகெங்கும் உள்ள எல்லா பெரிய நிறுவனங்களும் நிறுவன-சமூகப் பொறுப்பு எனும் விசயத்தில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் காண்பிக்கும். இன்றைய டோவ் கெமிக்கல் (போபால்-யூனியன் கார்பைட்) நிறுவனமும் இத்தகையப் பணியை செய்து வருகின்றது. ஒரு நிறுவனம் அமைவதற்கும் நிலம் கொடுக்கும் சமூகத்திடமிருந்து அந்நிறுவனம் நிலமட்டுமின்றி அங்கு தொழிலாளர்கள், வாழ்வியல் சூழல், உபதொழிலகள், போக்குவரத்து, இயற்கை வளங்கள் போன்ற பல வசதிகளை எடுத்துக் கொள்கின்றது (தினமும் இந்த ஆலைக்கு தாமிரபரணி அணையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர்கள் கொண்டு வரப்படுகின்றன), இதே சமுதாயத்திற்கு அந்த நிறுவனங்கள் ஓரளவுக்குத் திருப்பித் தரும் கடமையைத் தான் தாமாக முன்வந்து சமூகப் பொறுப்பாக நலத்திட்டங்கள் செய்கின்றது. இதைத் தான் ஸ்டெரிலைட்டும் செய்கின்றது, இது நமக்கு அண்டை வீட்டு மளிகைக் கடைக்காரர் நம் வீட்டின் சுகதுக்கங்களில் கலந்து கொள்வது போன்ற சாதாரண நிகழ்வே, இதைத் தான் எல்லா நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஆனால் ஸ்டெரிலைட் இதை மிகைப் படுத்தி தன்னை ஒரு அரசியல்வாதி போல காண்பிக்கின்றது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி
மேலும் ஸ்டெரிலைட் நிறுவனமும் தனது உரிமத்தினை சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு 1994ன் (Environmental Impact Assessment Notification)படி எந்த ஒரு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமல் ஆலையை நிறுவ முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது. அதற்கேற்றார் போல் இதற்கு பதிலளித்த மாசுக்கட்டுப்பட்டு வாரியமோ, வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்பட்ட 30 சுற்றுசூழல் பாதுகாப்பு அம்சங்களில் 29 வழிமுறைகளை ஸ்டெரிலைட் பின்பற்றுவதாக ஸ்டெரிலைட்டிற்கு ஆதரவான தகவல்களை அறிக்கையாகத் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. ஸ்டெரிலைட் போன்ற பெரிய ஆலைகளைச் சுற்றி இருக்கவேண்டிய பசுமை வளையங்களை(Green zone) மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 250 மீட்டரிலிருந்து 25 மீட்டராகக் குறைத்தது ஏன் என்று தெரியவில்லை. இதுவே நீதிமன்றத் தீர்ப்பு ஸ்டெரிலைட்டிற்கு சாதகமாக அமைய முக்கியக் காரணம். இப்படி பொது மக்களின், சுற்றுப்புறச் சூழலின் நலனுக்கு எதிரியாக இருக்கும் இந்த ஸ்டெரிலைட் ஆலை மூடப்பட வேண்டியது மிக அவசியம் என இக்கட்டுரை முன் வைக்கிறது.


ஆனால் வளர்ச்சி என்பதை ஒரு தவறான அலகாகக் கொண்டு பல பன்னாட்டு நிறுவனங்கள் நமது சூழலினையும், உடல்நலத்தையும் விலையாகக் கேட்கிறது என்றால் அந்த வளர்ச்சியின் தேவை குறித்த வாதங்கள் எழ வேண்டும். பொதுமக்களுக்கு இந்த உண்மைகள் எடுத்துச் செல்லப் படவேண்டும், அவ்வூர் பொதுமக்களிடம் பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற வேண்டும்.

அப்பொழுது தான் செயல்படாத மாசு கண்டறியும் நிலையத்தின் நிலையினையும், அதன் செயல்பாட்டையும் கண்டிப்பதுடன் ஆலையை மூடிவதற்கான பொது மக்களின் எழுச்சியைக் காண வேண்டும். ஒடிஸாவில் பொது மக்களின் எழுச்சியின் விளைவாக ஸ்டெரிலைட் சுரங்கத்தை மூடிய வரலாற்றை மறுபடியும் எழுதிப் பார்க்க வேண்டும். நமக்கு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சுத்தமான நீரையும், காற்றையும் நம் சந்ததிகளுக்கும் கொடுக்க வேண்டும் அல்லவா??

- ஜீவ.கரிகாலன்

புதன், 17 அக்டோபர், 2012

பேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம். கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது அமெரிக்கா தான். உலகின் எந்த மூலையில் தோன்றும் சித்தாந்தங்களும் ஒன்று - இங்கு தான் போய் முடியும்/அல்லது இங்கிருந்து தான் தொடங்கும். ஒரே கூரையின் கீழ் உலகின் அத்தனை தேசங்களையும் சேர்க்க கனவு காண ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மில் எத்தனை பேருக்கு  New World Order எனும் புதிய உலகைப் பற்றிய சிந்தனைகள் பற்றி தெரியும்?? என்னடா இது பேட்மேனுக்கும் New World Orderக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா?

சமீபத்தில் வெளியான பேட்மேனின் வரிசைப் படமான “The Dark Knight Rising” எனும் திரைப்ப்டத்தில் வரும் சில காட்சிகளின் பாதிப்பை நம் சமகாலப் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். சரி, அது என்ன New World Order? இது பாரதியின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பது போலவா? இல்லை. ஒவ்வொரு சமூகமும், அது சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தான் அதற்கு தேவைப்படும் மாற்றங்கள் குறித்து சிந்தித்து, விவாதித்து தேவையானவற்றைக்(தீர்வினை) கட்டுவித்துக் கொள்ளும், இப்படித் தான் சமூகத்தின் ஒவ்வொரு மாற்றங்களும் நடைபெறும். New World Order - மேலை நாடுகள் முதல் வல்லரசு கனவில் இருக்கும் எல்லா நாடுகளும் தத்தமது பாணியில் சிந்தித்து வருகிறது, அவை உலகின் உள்ள அனைத்து நாடுகளை விட தன்னை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்ட முயன்று வருகின்றன.

இந்த இடம் தான் மாற்றத்தின் விளைவுகளை தீர்மானிக்கும் இடம். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான் தீர்வாகக் கிடைக்கும் மாற்றம், அதன் அடிவேரிலிருந்து மாறாமல் மேலோட்டமாக இருந்தாலோ அல்லது அந்த சமூகம் பிற பிராந்திய மாற்றங்களை கடன் வாங்கிக் கொண்டாலோ அதனால் எந்தத் தீர்வும் கிட்டாமல், அதுவே ஒரு புதிய பிரச்சினைக்கு அடிவகுக்கும். சரி பேட்மேன் போன்ற கற்பனைக் கதைகள் இந்த இடத்திற்கு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
******************************************************************
பொதுவாக இந்த மாதிரியான அதிசய மனிதர்களின் உருவாக்கம் குறித்து அலசிப் பார்ப்பது இக் கட்டுரைக்கு மிக அவசியமாகிறது. குழுவாய் வாழத் தொடங்கிய மனித இனத்திற்கு வாழ்தல் மீதான அவநம்பிக்கை தோன்றும் போதெல்லாம் அவர்கள் கடவுளையோ, தேவதைகளையோ வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அதைப் போலே நேரே அணுகமுடியாத தேவதைகளுக்கு பதிலாக மதத் தலைவர்களோ அல்லது மந்திரவாதிகளோ, அற்புத சக்தி படைத்தவர்களோ மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாக இருந்தனர். அவர்கள் சக்தி மீது இருந்த பயமும், நம்பிக்கையும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வந்தது, அதற்கு பின் அந்த மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமானவர்கள் ஆயினர்.

புராணக் காலங்களில் இந்த மனிதர்கள் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு, அவர்களுடைய வடிவங்களில் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து அதிசய மனிதர்களாக உருவெடுத்தனர், இது தான் சூப்பர் மேன்கள் உருவான உண்மையான காலம். இதற்கு முதன்மையான உதாரணம் என்று எளிதாக ஹனுமானைச் சுட்டிவிடலாம், கருடன், பீமன் எனத் தொடங்கும் வரிசையில் கிராமப் புறத் தெய்வங்களான அய்யனார்,முனீஸ்வரர் போன்றோரையும் பட்டியலுக்குள் சேர்க்கலாம். சீனத்தில் கூட புத்தனையும், போதி தர்மனையும் மாயங்கள் செய்யும் ஒரு மஹாபுருசராகவே வணங்குகின்றனர். இயேசுவின் போதனைகள் கூட அவர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கொண்டு தான் மக்களிடம் வருகின்றன நிற்க, இப்படிப் பட்ட வரிசையில் தான் கற்பனைக் கதாப்பாத்திரங்களாக காமிக்ஸ் புத்தகங்களிலும், திரைப் படங்களிலும் வரும், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கேப்டன் ப்ளானட், எக்ஸ் மேன், இக்கட்டுரையின் நாயகன்.
*****************************************************************
பதினாறாம் நூற்றாண்டுக்கு பின் அதிவேக மாற்றங்களுக்கு காரணமாக தொழிற்புரட்சியும், கம்யுனிச சித்தாந்தங்களும், அதற்கு பின் ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய காலனிகளும் வந்து முற்றிலுமாக மாறிய உலகம் கண்ட இரண்டு உலகப் போர்களின் வடுக்களும் மனித வரலாற்றை சிதைவு படுத்தின. மூன்றாம் உலகப் போர் ஒன்று வந்து விட்டால் மனித இனத்தின் வரலாறும் டைனோசருடன் சேர்ந்து பாறைகளின் படிமங்களாகிவிடும் என்கிற அபாயத்தை உணர்ந்ததால், ஒன்றை ஒன்றுத் தீண்ட முடியாத இரண்டு ராஜநாகங்களின் சீற்றங்களாக இருக்கின்றன, ஆன போதும் உலகையே ஒரு சந்தைக் கடையாக்கிவிட்டு ஒன்றை ஒன்று விழுங்கிடவும் உலகின் வல்லரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கிருத்தவம், இசுலாமியம், கம்யுனிசம், காலனியாக்கல், உலகமயமாக்கல் போன்ற தத்துவங்கள் எல்லாமுமே இப்படி உலகம் முழுவதும் ஒரே அரசை நிறுவுவதை தமது இலட்சியமாக கொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றன.

இப்படி ஓரளவு உலகை கைப்பற்றும் சித்தாந்தங்களை எல்லாம் இன்று நடைமுறைப் படுத்துவதிலும், அவற்றின் சில நவீன கோட்பாடுகளின் வரையறுத்ததில் (உலகமயமாக்கல், அணு ஆயுதம்) மிக அதிகப் பங்கு உடைய, அமெரிக்கா தான் New World Order எனும் கோட்பாடின் தந்தை.

இதன்படி உலகின் ஒரே நாட்டாமையாக தன்னை நிலைப் படுத்த வேண்டும் என்பது இதன் எளிமையான விளக்கம், அமெரிக்க டாலரை உலகின் பொது செலவானியாக பல வர்த்தகத்தில் வைத்திருப்பது போல (உ.ம். கச்சா எண்ணை), வேளாண்மை, வின்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு(ரக்பி,சாஃப்ட் பால்,WWE,ஐஸ் ஹாக்கி), உடை நாகரிகம், சினிமா, வர்த்தகம் என எல்லாவற்றிலும் உலகின் செயல்பாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அதன் விரிவான விளக்கம். இவற்றோடு சில நாடுகளுடனும், உள்நாட்டிலும் நடைபெற்று வரும்/வந்த போர்களுக்கும் அமெரிக்கா தான் மூலம். ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இல்லாத ஒரு அமைப்பு, இப்போது உலகையே ஆளும் ஆசையை சுரக்க வைக்க என்ன காரணம் என்பது தான் ஆச்சரியம்.
***************************************************************************
கதை
இந்த படம் பேட் மேன் -3, மிக முக்கியமாக மற்ற வகை அதிசய மனிதர்களோடு சற்று வித்தியாசமானவன். ஆம் இவன் ஒரு சராசரி மனிதன் தான், அதே சமயம் உலகத்தைக் காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரசாங்க ஏஜன்சி உளவாளியும் கிடையாது. பேட் மேன் அமெரிக்காவின் ஒரு பிரபல தொழிலதிபர், அதே சமயம் மக்களுக்கு ஆபத்தாண்டவனாகவும் விளங்க தனக்கென ஒரு அறிவியல் கூடத்தை நிர்மானித்து, அதில் அதிநவீன கேட்ஜட்கள், மோட்டர்கள், ஆயுதங்கள், கணிணி போன்றவற்றை உற்பத்தி செய்து, தன்னையும் சூப்பர்மேனாக நிர்மானித்துக் கொண்ட ஒரு கோடீஸ்வர மனிதன். பொதுவாக இவர் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவது எல்லாம் கிடையாது. எப்போதும் மெல்லிய வயலின் கீச்சலுடன் சோக இழை அவர் கதையில் மையம் கொண்டிருக்கும் (அது பேட்மேனின் குடும்பத்து சோகப் பிண்ணனி).

தற்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடிமுடித்த தி டார்க் நைட் ரைஸஸ் சமகாலப் பிரச்சினைகளை நாம் அணுகிட எவ்வாறு உதவுகிறது. படம் ஆரம்பிக்கும் பொழுது எட்டு வருடப் பகைக்காக ”பேன்” எனும் ராட்சத உருவ நிழற்படை ஒன்று கற்பனை நகரான(திரைப்படத்திற்காக) கோதம் நகருக்கு வருகிறான். கோதம் நகரின் நிலை பொருளாதார மந்த நிலையில், குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில், அரசங்கமும் அதைக் கட்டுப் படுத்த இயலாமல் தவிக்க, மக்களும் அவநம்பிக்கையுடன் திடீரென்று மறைந்து போன தங்கள் ஹீரோ பேட்மேனின் வருகைக்கு காத்திருக்க. அந்த நகருக்குள் இருள் பரவுகிறது, ஓய்விலிருக்கும் பிரபல தொழிலதிபரான ப்ரூசின்(பேட்மேனின்) நிறுவனமோ மிகப்பெரிய வீழ்ச்சியில் இருக்கிறது, இருந்த போதும் மிராண்டவின் மேல் கொண்ட ஈர்ப்பில், அவளுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு மின்னாற்றல் திட்டத்தில் முதலீடு செய்ய முனைகிறார், அந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஒரு ஆற்றல் மிகு இயந்திரத்தை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ப்ரூஸ் அது அணுஆயுதாமாகவும் உபயோக்கும் அபாயம் இருப்பதால் அதைச் செயல்படுத்தாமல் ஒரு நதிக்கு அடியே மறைத்து வைத்திருக்கிறார்.

நகருக்குள் புகுந்த சதிகாரக் கும்பல் முதலில் அங்கிருக்கும் பங்குச் சந்தைக்கு சென்று சில நிமிடங்களில் பெரிய அளவில் ப்ரூஸின் நிறுவனப் பங்குகளை விற்று அவரை அந்நிறுவனத்திலுருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாயுதத்தையும் கைப்பற்றுகிறான், அத்துடன் அந்த தீவு நகரத்தையும் நாட்டுடன் இருக்கும் எல்லா இணைப்புகளையும் துண்டித்து தன் படையின் உதவியால் கட்டுக்குள் கொண்டுகிறான்.ப்ரூஸ் எனும் பேட்மேனைப் பிடித்து மீள முடியாத மரணச் சிறைக்குள் தள்ளுகிறான்.

நகரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் “பேண்”  அந்நகரத்தைப் பழி வாங்கிட அதை அழிக்கும் முன் வேறு ஒரு காரியம் செய்கிறான், அது தான் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் நம்பிக்கையைக் குழைப்பது. இதுவரை அரசாங்கம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும், மக்கள் அதிகம் நம்பிய அரசாங்க அதிகாரிகள் கயவர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறான்.
மேலும் “பொது மக்கள் யாவரும் சுரண்டப் படுகிறார்கள்” என்றும், சிலர் வசதியுடன் வாழ்ந்திடவே பெரும்பாலோர் கஷ்டப் படுகிறீர்கள் என்றும் கூறுகிறான். அந்நகரத்திலிருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவிக்கிறான், அந்தக் கைதிகளையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் பணக்காரர்கள், அரசாங்க அதிகாரிகள் தான் என்று அடையாளம் காட்டி அவர்களை தண்டிக்க சொல்லிவிட்டு, ஊருக்குள் கலவரத்தை உண்டு பண்ணுகிறான். அதுதான்
மக்களுக்கான ஆட்சி என்று சமத்துவம் சொல்வதாக காட்சிகள் வருகிறது. அவன் அவ்வூரையே அழிக்கத் துணிந்தவன் என்றுத் தெரிந்தும் பெரும்பான்மையான மக்களும் அவனை நம்புகின்றனர், அமெரிக்கர்கள் தான் அதிகமாக தங்களை புதுப்பித்து வரும் மனித இனம் என்பதால் இந்த மாற்றம் சாத்தியம் ஆகிறது இத்திரைப்படத்தில்.
CHANGE”  எனும் வார்த்தையை அமெரிக்காவின் தாரக மந்திரமாகி ஒரு குடியரசுத் தலைவரை(2008) உருவாக்கியதும் பின்னர் அவரால் அப்படி எந்த ஒரு மாற்றம் இது நாள் வரை நம் கண்ணுக்குள் புலப்படாமல் அமெரிக்காவின் பொருளாதார நிலை தொங்கிக் கொண்டிருப்பதும், இப்பொழுது அவர் பதவிக் காலமே சிறிது நாளில் முடிந்து அடுத்த தேர்தலில் என்ன வார்த்தையை அமெரிக்கர்களுக்கு (CHANGE) மாற்றப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறது உலகம். படத்திலும் பெரிய புரட்சி ஒன்று நிகழ்ந்து வெற்றி பெற்ற வேளையில்(மக்களின் மனமாற்றம்), அதனை அழித்து  நீதியைக் காப்பாற்ற மீண்டும் பேட்மேன் அச்சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் தர்மத்தை நிலைநாட்டிய வழக்கமான கதை தான் என்றாலும், இது மிக முக்கியமாய் கவனிக்கப் பட வேண்டிய திரைப்படம்.

இதனால் இந்தப் படம் முக்கியமாகிறது
  • கம்யுனிசம் போன்ற சித்தாந்தங்கள் எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு மட்டும் ஒரு புரட்சியாகவும் அதுவே மேல் நிலையில் உள்ளவர்களுக்கு கட்டற்ற அதிகாரம் கொடுத்தும் விடுகிறது என்று காட்சியமைகப் பட்டுள்ளது.
  • மக்களைப் பொருத்தமட்டில் அரசங்கம் மீதான நம்பிக்கை என்பது எல்லா தேசங்களிலும் ஒன்று தான் அது காணாம்ல் போய்விட்டது, இதற்குத் தீர்வாக ஒன்று அவர்கள் புரட்சியை நம்ப வேண்டும் அல்லது பேட்மேன் போன்ற ஆபத்தாண்டவனை(அல்லது கடவுளரை) நம்ப வேண்டும்.
  • பேட்மேன் மட்டுமல்லாது அனேகமாக எல்லா அதிசய ஹீரோக்களும், உலகைக் காப்பாற்றுவதாக இருக்கும் பிண்ணனியில், உலகத்தை ஒரே ஒரு இயக்கத்தில் கட்டுப்படுத்த பல தேசங்களிலிருந்தும் விதை தூவப் படுகின்றன.
  • இந்த படத்தில் வருவதுபோல “ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப் பங்குச் சந்தையில் கை வைப்பது (இரட்டை கோபுரத் தகர்ப்பான 09/11ல் இருந்து பேட்மேன் திரைப்படம் வரை) இது போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு மிக அவசியமானது” என்று விடுக்கும் ஒரு செய்தி நம்மைப் போன்ற நாடுகளுக்கும் பங்கு சந்தை போன்ற மாயவலையில் மொத்தமாக நம் சேமிப்பு தொலையாமல் இருக்க வேண்டும், அமெரிக்காவில் எழுபத்தைந்து சதவீத மக்கள் பங்குச் சந்தயில் முதலீடு செய்கின்றனர். ஆனால், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏழு சதவீதத்திற்கும் குறைவே.
  • New world order குறித்த அறிவு நமக்கு இல்லையென்றாலும், இது போன்ற ஹாலிவுட் படங்களில் சில சமயம், நம் உலகம் எதிர் நோக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள பெரும்பாலும் உலகின் பிரதிநிதியாய் வருவது அமெரிக்க அதிபரே. இது போன்ற திரைப் படங்கள் உங்களுக்கும் இது போன்ற செய்தியை கொண்டு சேர்த்திருக்கும் தானே.
  • அவதார் எனும் திரைப்படம் நம் புராணக் கதைகளில் இருந்து கதாப்பாத்திரங்களின் வடிவம், பெயர் போன்றவற்றை எடுத்துக் கொண்டதாய் தோன்றியிருக்கும், ஆனால் அதன் கதை கூட நம் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் மலை, காடுகளில் இருக்கும் வளங்களைச் சுரண்டிப் பெரும் லாபம் ஈட்டிட பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய அளவில் மலைவாழ் மக்கள், பழங்குடியினரை அப்புறப் படுத்தும் கதையோடு பொருந்திப் போகும்.
  • Change –மாற்றம் என்பது இரு பக்கம் கூர்மையான கத்தி போல மிக மிக ஆபத்தானது என்று உணர்வு தருகிறது.
  • எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும், இது போன்ற அதிசய மனிதர்களைத் தொட்டுக் கொண்டு முக்கியமான விசயம் எதை வேண்டுமானாலும் கட்டுரை, கதை வழியே எளிதில் மக்களுக்கு கடத்தி விடலாம் தானே??

பேட்மேன் மூன்றாம் பாகத்துடன் இந்த சூப்பர் ஹீரோ வரிசை முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக அச்சத்துடனே வாழும் நம் இனத்திற்கு, கற்பனையிலாவது மக்களுக்கு இது போன்ற அசகாய சூரர்கள் என்றுமே தேவைதான், ஆக புதிய ஹீரோக்கள் இனி வலம் வருவர்.


ஜீவ.கரிகாலன்

நன்றி யாவரும்.காம்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

அம்மாவின் கைப்பேசி


அம்மாவின் கைப்பேசி , இந்த வார்த்தையை பார்க்கும் போதெல்லாம் மனம் பதறுகிறது.. ஏதோ ஒரு ஆழ்ந்த அவதானிப்பு, கால இடைவெளியை இல்லாது போகச் செய்த மாயையாய் இன்று எத்தனையோ முதியவர்கள் கையில் கைபேசி வைத்திருப்பதைக் காண்கிறோம். அவர்களின்(படிக்காத கிராமத்து) நிலையில் கைப்பேசியை எப்படி உபயோகிக்கின்றனர். ?

*இந்த நம்பரைப் போட்டுக் கொடுங்க
*இந்த போன்ல சார்சு ஏத்தி விடுங்க
*எனக்கு யாரு கூப்பிட்டிருக்காகன்னு பாத்து சொல்லுங்க
*(கடைக்காரரிடம்) ஒரு அம்பது ரூபா ஏத்தி கொடுங்க
*நான் பேசவேயில்லை எப்படி காசு தீர்ந்து போச்சுன்னு தெரியல

இப்படி எத்தனையோ பேர் சாதாரணமாக கேட்கும் உதவிக்கு பின்னர் கண்டிப்பாக ஒரு நல்ல கதையிருக்கும்.... இந்த படத்தை பார்ப்பதற்காக் நான் காத்திருக்கிறேன்.




ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

எலியின் வாட்டமும் பூனையின் கவலையும்

சுதேசிச் செய்தி இதழில்(அக்டோபர்) மாதம் வெளிவந்த கட்டுரை

நம் வழக்கில் ஒரு பழமொழி ஒன்று உள்ளது “எலி ரொம்ப வாடுதேன்னு பூனை கவலை கொண்டதாம். ஆம், பெண்கள மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிரிஷ்ண திராத் வெளியிட்ட ஒரு அறிக்கை தான் மத்திய அரசை இந்த பழமொழியோடு ஒப்பீட்டு பார்க்க வைக்கிறது. இதன்படி “இனி குடும்பத் தலைவிகள் செய்யும் பணிகளுக்கு சம்பளமாக அவர்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு ஒன்றை நிறுவி அதில் 10-20 சதவீதம் மாத வருமானத்தை அவர்கள் பெயரில் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அடுத்த கவர்ச்சிகரமான மற்றுமொரு பல்நோக்கு திட்டம் தான் அது.  


இந்த அதிநவீன சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசிற்கு காரணங்களா இல்லை? வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வளவு வேலை பார்க்கின்றனர், வீட்டினை சுத்தமாக வைப்பது, சமைப்பது, குழந்தைகளை கவனிப்பது, துனி துவைப்பது என நீண்டு செல்லும் உழைப்பிற்கு கூலி கொடுப்பதாகும் என்று முதலில் சொன்ன அமைச்சகம், பின்னர் “இந்த தொகையை ஒரு பெண்ணிற்கு விவாகரத்து ஆனாலோ, கணவனை இழந்தாலோ அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு ஆக இதை சம்பளமாக கருதாமல் அவர்களுடைய சேவைக்கு இதை ஒரு கௌரவப் பரிசாகவோ, நன்கொடையாகவோ கருதி கொடுக்க வேண்டும் என்று இதற்கு கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு சம்பளம் என்ற வார்த்தையை அதில் இருந்து நீக்கியது.

அடிப்படையில் குடும்பப் பொருளாதாரமே நம் சமுதாயத்தின் தனிப் பெரும் பலம் என்பதை உணராத அரசு இது போன்ற சட்டங்களை இயற்றுவதில் ஒன்னும் ஆச்சரியம் இல்லை தான். ஆனால் இதைப் பெண்கள் நலன், சமூக
நலன் என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசு பிரச்சாரம் செய்யும் விதம் தான் மிகவும் கண்டிக்கதக்கது. அவர்கள் கூற்றுப்படியே பார்ப்போம், அவர்கள் முன் வைக்கும் காரணங்கள் விவாகரத்து ஆனாலோ இல்லை கணவனை இழந்தாலோ அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும், உழைக்கும் பணத்தை வீட்டிற்கு தராமல் குடித்திடும் ஆண்களிடமிருந்து காப்பதற்க்கும் என்றும் காரணம் சொல்கிறது. பணி செய்து ஈட்டும் பணத்தை குடும்பத்திற்கு நூரொ சதவீதம் தராதவன், இருபது சதவீதம் தந்தால் போகும் என்கிறதா அரசு?

இந்த சட்டம் சமீபத்தில் பல நாடுகளில் (அமெரிக்கா, ஐரோப்பா) கொண்டு வரப்பட்டதற்கு காரணமும், நம் நாட்டில் கொண்டு வரப்பட்டதற்கு காரணமும் ஒன்று தான். ஆனால் அழகாக அரசு சொல்லும் சந்தர்ப்பவாதம் பெண்கள் நலன் என்ற பொய். இந்த திட்டம் 2011ல் நடைபெற்ற OECDநாடுகள் கூட்டத்தில், அந்த அமைப்பின் 28 நாடுகளிலும், மேலும் வளரும் பொருளாதார சக்தியான சீனா, இந்தியா, தென் அமெரிக்க நாடுகளிலும் ஒரு ஆராய்ச்சியை நிகழ்த்தியிருந்தது. இந்த உறுப்பினர் நாடுகளோடு இந்தியா, சீனாவை சேர்த்துக் கொண்டமைக்கு காரணம் அவர்களின் வளர்ச்சிப் பொருளாதாரம் மட்டுமல்ல அவர்களுடைய குடும்ப அமைப்பு தான் முக்கிய காரணம், இதன் படி இங்கிருக்கும் குடும்பத் தலைவிகளின் வேலைகளை சம்பளமற்ற பணி என்று எடுத்துக் கொண்டால் சராசரியாக தினமும் நாலரை மணி நேரம் ஆகிறது, ஆக இதை ஒரு வலுவான காரணமாகக் கொண்டு புதிய திட்டம் ஒன்றை அரசாங்கங்கள் உருவாக்குகின்றன.


இதற்கு இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ஜோசெப் ஸ்டிக்லிட்ஜ் போன்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதாரக் குழு ஒரு அறிக்கையை சமர்பிக்கிறது, இதன்படி உலகமயமாக்கலில் சரிந்து போய் சம்மனமிட்டு அமர்ந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்காவின் குடும்பங்களில் நடைபெறும் மொத்த உற்பத்திகளையும் சேவைகளையும் கணக்கிட்டால் (household production) அமெரிக்க கூலி விகிதப் படி (wage rate) 3.8 ட்ரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் அதாவது மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product-il) சேரும் என்று சொல்கிறது. அவர்கள் சொன்னது தான் தாமதம் என்று எல்லா OECDநாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டின. இங்கிலாந்தோ தங்கள் குடும்பப் பெண்மனிகளின் மணி நேரக் கூலி எட்டு பவுண்டுகள் என்றும் ஆண்டுக்கு கிட்டதட்ட 30000 பவுண்டுகள் என்றும் சொல்லிட எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் மொத்த உற்பத்தியை உயர்த்திக் காட்ட களத்தில் இறங்கின.


மக்களுக்காக சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கு கங்கனம் கட்டி அமர்ந்திருக்கும் நம் மத்திய அரசு இதைப் பார்த்து சும்மா இருக்குமா? ஏற்கனவே இந்த திட்டம் ஆரம்பிப்பதற்கு இந்தியப் பெண்களின் உழைப்பை முன்னுதாரனமாகக் கணக்கிட்டனர் தானே, ஆக அடுத்த திட்டம் தயாரானது. ஆனால் மிக விழிப்போடும், தந்திரத்தோடும் நம் மத்திய அரசு இதை அறிவிக்கும் போதே நம் நாட்டில் இருக்கும் பெண்களின் பிரச்சனையை கணக்கிட்டு அதற்கு சாயம் போட்டுக் காட்டியது. பிரிட்டீஷ் நாட்டு சர்வேயினை வைத்துப் பார்க்கும் போது நம் நாட்டில் இனி எல்லா தாய்மார்களையும் தாதிப் பெண்களாக மாற்றும் நம் அரசின் லட்சனமாக இதைக் கண்டிக்கத் தோன்றுகிறது. உற்பத்தி என்று நம் குடும்பத் தலைவிகளின் எத்தனை சேவைகளை இவர்களால் GDPயில் சேர்க்க முடியும், மற்ற நாட்டுப் பெண்கள் போல சமையல், வீட்டை, குழந்தைகளைப் பராமரித்தல் என்று முடிந்துவிடுகிறதா, இன்னும் நம்மிடம் இருக்கும் கூட்டுக் குடும்ப வாழ்வில் அவர்களின் பணி எத்தகையது? இது போன்ற சட்டங்கள் முதலில் உடைப்பதே கூட்டுக் குடும்பங்களின் அமைப்பைத் தான். இல்லை சில பொறுப்பற்ற கணவன்மார்களின் பணி 20 சதவீதம் கொடுப்பது மட்டுமே சட்டம் என்றால் அத்தோடு அந்த குடும்பங்களின் நிலை? பின்னாளில் தாலாட்டிற்கும்? தாம்பத்தியத்திற்கும் ஆராய்ச்சியையும் யாராவது தொடங்கி விட்டால் அதற்கும் செவி சாய்க்குமா நம் அரசு?

உலகமே பொருளாதார மந்தத்தில் ஸ்தம்பித்துப் போய் நிற்க, நம் குடும்பங்களை நிர்வாகிக்கும் பொறுப்பு (முக்கியமாக மத்திய தர வர்க குடும்பங்களில்) பெண்களிடம் இருப்பதாலேயே நாம் இன்னும் இந்த விலைவாசியுயர்வு, கலாச்சார மற்றும் அரசியல் சுரண்டல்கள் போன்ற எல்லாவற்றையும் தாண்டி ஒரு சேமிக்கும் பொருளாதாரமாகவே நம்மை இன்னும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சேமிப்பிலும் கூட இன்னும் பங்கு வர்த்தகம் போன்ற குப்பைகளில் வீழ்ந்துவிடாமல் தங்க ஆபரணங்களாக மாற்றி அதையும் நம் கலாச்சாரத்தில் வடித்து வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளை, அனேக நடுத்தர வர்கத்தில் முழுச் சம்பளமும் முதலில் தாயிடமோ அல்லது மனைவியிடமோ தான் கொடுக்கப் படுகிறது, அதில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க சொல்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கயமைத் தனமும் கூட.

     ஆம், மாதம் பதினைந்தாயிரம்(15000) வாங்கும் கணவன் மொத்தமாக தன் மனைவியிடம் கொடுக்கும் சம்பளத்தில் ஒரு மூவாயிரம்(3000) ரூபாய் தன் மனைவியின் பணிவிடைக்கென்று கொடுக்கும் பட்சத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் (18000)ரூபாயாக அரசு கணக்கெடுத்துக் கொள்ளும் இதில் நம் பொருளாதரம் திடீர் 20 சதவீத உயர்வைக் காணும். பிற்காலத்தில் இந்த கூடுதல் 3000 ரூபாய்க்கு வருமான வரியும் விதிக்கலாம், அல்லது சேவை வரியையும் விதிக்கலாம். எப்படியோ இது போன்ற சட்டத்தின் மூலம் குடும்பம் என்கிற அமைப்பு உடைவது மட்டும் நிச்சயம். இந்த சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பதோடு நின்றுவிடாமல் , ஆடம் ஸ்மித் சொன்ன தேசங்களின் சொத்துகள் (wealth of nations) இப்படித் தான் எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக பணத்தின் அளவு கொண்டு பார்த்து வரும் (monetary measures) என்று சொன்னால் அவற்றை நம் பாடத் திட்டங்களில் இருந்து நீக்கிவிட்டு, நமது தத்துவயியல் சார்ந்த மரபின் அடிப்படையில் புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையும் அவசியம் வேண்டும்.
 
பின்குறிப்பு:
மனைவியின் பெயரில் வங்கிக் கணக்கு வைத்து அதில் சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை சேர்க்க வேண்டும் என்று சொன்ன அரசு வங்கிக் கணக்கிற்கு கொடுக்கும் ATM கார்டுகளை யார் வைத்திருக்கலாம் என்று எந்த தீர்மானமும் சொல்லவில்லை என்பதை வைத்து சற்று ஆறுதல் கொள்ளலாம்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

How to be a sanyasi?

‎* Devotee: 
   Maha Guruji!! How to be set free from the worldly things.!! Where is eternal freedom??
*Guruji: 
  Here is!! You have to be a Saint to enjoy the eternal freedom!!
*Devotee:
  Swamiji! Even I can be, can't I? But How?
*Guruji: 
  It's Simple first you have to secure minimum percentage in our devotional training camp, Once you cleared the    exam you have to apply for the assessment.In assessment, you'll be assessed your eligibility in front of any of our senior sanyasi bench for that you have to get the sponsorship from any of our lifetime member who gave lumpsum payment to our trust which would be treated as collateral security. After the assessment, you'll be given Sanyas training in our head branch where you have to obey our fifteen conditions in order. At the end of the successful training. You'll get the clearance of fitness and mental stability. Finally, you need to get the NOC from your Family and our Legal advisory body will arrange the documents as per your family and economical background. When the Legal authorities give you permission you'll be under this Mahaguruji's beloved Sanyaasi's and It will let free from the all Mayas.
*Devotee: OHhhh maha Guruji!!
  Thank you for the enlightment.. Goodbye forever :(

புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் மட்டுமா வேண்டாம் நமக்கு





1.உலகிலேயே அதிகமாக மாசு படுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்றான NTPC ஆறாவது இடத்தில் இருக்கிறது. கூடங்குளத்தை வேண்டாம் என்று சொல்வதற்கான அத்தனை நியாங்களும் நம் மாநிலத்தில் உள்ள தெர்மல் பிளாண்டுகளை வேண்டாம் என்று சொல்வதற்கு உள்ளன. 2. அதனால் ஏற்படும் மின்சார இழப்பை சரிகட்ட SEZ, MNC தொழிற்சாலைகளை மூட வேண்டும்.3.மேலும் கடலோரம் இருக்கும் ஸ்டெர்லைட், கடலூரில் இருக்கும் கெமிக்கல் தொழிற்சாலை என அனைத்தையும் மூட வேண்டும்..


ஆக மொத்தம் தொழிற் கொள்கைகள் முற்றிலுமாக நம் நாட்டில் மாற வேண்டும். என்னைப் பொருத்த வரை இந்த எல்லா setbackகளும் அவசியம். கண்டிப்பாக உலகமயமாக்களுக்கு எதிரான சரியான அடியாக இருக்கும் இது வரவேற்கத்தக்கது.


மற்றபடி அறவழியில் போராடுவது என்று வரலாற்றுக்கு அறிமுகப் படுத்திய நம் முகத்தில், இன்று நாமே கரியைத் தான் பூசிக் கொள்கிறோம் என்று உணர்கிறேன். நூறு வருடங்களுக்கு பிந்தைய உலகு நமக்கு போதுமென்றால் இது போன்ற ஆலைகளை முற்றிலுமாக மூடிவிடலாம்


என் பழைய பதிவு இதே தலைப்பில் :





கூடங்குளம் மட்டுமா வேண்டாம் நமக்கு ??


மன்னித்துக் கொள்ளுங்கள் ..... இப்பொழுது நான் வசை பாடுவது என்னையும் சேர்த்துத் தான் அடிப்படையில் எந்த ஒரு பெரும் தொழிற்சாலையும் மனித இனத்திற்கு விரோதமானது என்பதை முன் வைத்து தான் எழுதுகிறேன், ஜடுகோடா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் அணுக்கழிவினால் பாதிக்கப் பட்டு வரும் நம் மக்களை பற்றி நான் கிட்ட தட்ட ஐந்து வருடங்களாகவே பேசி வருவதை என்னோடு தனிப்பட்ட முறையில் பழகியவருக்கு நன்கு தெரியும்.



இங்கு கூடங்குளம் பிரச்சனையை அணுகும் முறை குறித்து நான் உங்களிடம் முக்கியமான விவாதம் எடுத்து வைக்கிறேன் ...


கூடங்குளம் அணுவுலை , இன்று நம்முள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் உளவியல் ரீதியாக வீரியம் கொண்டதாய் தோன்றும் அதே வேளையில் இதுவும் ஒரு விளம்பர மாயைக்குள் சிக்கியத் தந்திரமாய் பாவிக்க நமக்கு இடம் தருகிறது என்பதைத் தான் இந்த கட்டுரை வழியாக சொல்ல விளைகிறேன்.......



இரண்டுப் பெரிய அறிவார்ந்தோர் கூட்டம் கூடங்குளம் வேண்டாம் என்றும், வேண்டும் என்றும் வாதம் செய்து வருகின்றனர். பொதுமக்களோ இந்த அணியில் ஏதோ ஒன்றில் பலவந்தமாகவாவது தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே வருகின்றனர்..உளவியல் ரீதியாக இதை எடுத்துக் கொள்ளும் பொழுது, இந்த பிரச்னையில் நாம் அணுகும் முறை மீது மிக முக்கியமான கேள்விகளை சிலவற்றைக் கேட்க வேண்டும் என்றுத் தோன்றுகிறது. இன்று இந்த பிரச்னை சுற்றுச் சூழல், மற்றும் தனி மனிதனின் பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் படும் போது கீழே வரும் செய்தியுடன் ஒப்பிடுதல் அவசியமாகிறது.



தினமலர் பிப்ரவரி 22 ஆம் தேதி காரைக்கால் கடல் பகுதியில் கூட்டம் கூட்டமாய் செத்து ஒதுங்கிய மீன்கள் பற்றிய செய்தி ஒன்று தான். அநேகமாக, இந்த செய்தி மற்ற செய்தித்தாள்களிலோ, மற்ற ஊடகங்களிலோ வராமல் போயிருக்கலாம், இந்த செய்தி அதே நாளிதழில் கூட மறுபடியும் வராமல் போயிருக்கலாம்.



sensational பகுதிக்கு வராமல் போனதற்கு என்ன காரணம் என்று புலனாய்வு செய்யத் தேவையில்லை, அதே சமயம் பன்னாட்டு குளிர்பானக் கம்பெனியில் அடிக்கடி வரும் ரெய்டுகள் போல இது மூடி மறைக்கப்படும் அளவிற்கு மக்களுக்கு இன்றியமையாத பானங்களாக இல்லாதபடியால் கவனிப்பாரற்றுப் போய்விட்டது என்று சொன்னால் வெட்கக் கேடு.


* ஆம், மீன் பூமியில் தோன்றிய மனிதனின் முதல் உணவு என்றும், பூமியின் கடைசி மனிதனின் உணவும் இதே மீன் தான் என்றும் சொல்லக் கேட்டுள்ளோம்.
*இன்றைய உலகில் பாமர மக்களுக்கு கிடைக்கவேன்டியப் புரதச் சத்துக்கள் அதிக அளவில், குறைந்த விலையில் மீன்களாலே சாத்தியம்.
*சில கலாச்சாரங்களில் மீன் சைவப் பொருளாகவும், உயர்ந்த உணவாகவும் போற்றப்பட்டு வருகிறது.
*எந்த ஒரு நாட்டிலும் விவசாயம் இன்றி ஏற்படும் பஞ்சம் கூட மீன்களால் மீட்கப் படலாம். ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்தே, அந்நாட்டின் கடலில் வாழும் உயிரினங்களும், அதன் பாறைப் படிமங்களும் தான்


இன்று அந்த இடத்தில் தான் நாம் பெரிய அளவில் பிரச்சனையை சந்தித்து வருகிறோம், ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்துக் கரை ஒதுங்கக் காரணம் என்ன என்று சில கடல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட பொழுது சொல்லும் தகவல் தான் நெஞ்சை உறைய வைக்கிறது.
நம் கடல் பகுதியில் பெரிய அளவில் மீன்கள் வாழும் நிலையை இழந்துக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி தான் அது.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன என்றும், இந்த முறை காரைக்காலில் ஒதுங்கிய மீன்களில் ஹெவி மெட்டல் என்று சொல்லப் படும் உலோகமான காட்மியம் (cadmium) அளவு அதிகரித்துள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.அதுவும் அதிகப்பட்சம் புள்ளி அரை சதவீதம் வரை தான் இருக்கலாம் என்றும், இதில் இரண்டு சதவீதம் வரை இருப்பதாகவும் கூட சொல்கின்றனர், (ஒவ்வொரு வகை மீன்களுக்கும் ஒவ்வொரு அளவீட்டில் இதன் வரையறை இருக்கும்).



இப்படிப்பட்ட உலோகங்கள் மீனின் வாயிலாக நமக்கு உணவாகச் செல்லும் பொழுது அது நடத்தும் விளைவுகளோ மிகப் பயங்கரம். புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மனிதன் கூட இத்தகைய மீன்கள் சாப்பிடுவதன் மூலம் கான்சர் போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகிறான். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நாம் எப்படிப் பட்ட வலிமையான பாரதத்தை கட்டுமானம் செய்து வருகிறோம் என்று, ஏற்கனவே அரிசியிலிருந்து, தண்ணீர் வரை அவ்வளவும் வணிக ரீதியிலும், கலப்படத்துடனும், ரசாயன தாக்கத்துடனும் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கின்றன.



காரைக்காலைப் பொறுத்த வரை, பல ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்திருப்பதை நாம் அறிவோம். இப்படி ரசாயனத் தொழிற்சாலைகள், சிமென்ட் தொழிற்சாலை ஆகியவற்றுடன் ஒவ்வொரு தனி மனிதனின் மாறிவிட்ட கலாச்சாரமும் இந்த சீர்கேடுகளுக்கு காரணம் எனலாம். நமது நுகர்வுத் தன்மை மாறிவிட்டது, பிளாஸ்டிக் என்றும் அரக்கனை நாம் எல்லோரும் உபசரிக்க ஆரம்பித்துவிட்டோம் , தேவைக்கு அதிகமான, ஆடம்பரமான நுகர்வு போதை நம்மை இந்த சீர்கேட்டினை உருவாக்கும் காரணிகளாய் அமைந்துவிட்டதை நாம் ஒத்துக் கொள்ளும் மனப் பக்குவம்
வந்து விட்டதா?? இல்லையா ??



இந்தப் பிரச்னை வெறும் காரைக்கால் பகுதி கடல் சார்ந்தது என்று நீங்கள் எடுத்துக் கொண்டால், கூடங்குளம் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி இல்லை. ஏன் கூடங்குளம் கூட ஒரு பிராந்திய பிரச்னையாக மட்டுமே பல சந்தர்ப்பவாதிகளால் கையாளப் படுவதை மறுக்க முடியுமா ? ஜார்கண்ட் -ஜடுகோடா அணுக்கதிர்வீச்சு பற்றி ஊடங்கங்களில் செய்தி வரும் பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பெரும்பான்மைச் சமூகம் என்ன செய்துக் கொண்டிருந்தது?


காரைக்காலிலோ, தூத்துக்குடியிலோ இது போன்ற தனியார் நிறுவனகளுக்கு எதிராக உங்களால் போராட்டம் செய்ய இயலுமா? செய்தித்துறை ஊடகங்கள் கூட கண்டு கொள்ளாத இந்த நிகழ்ச்சிகளில் உங்கள் நேரங்களை அறிவார்ந்தோர் கூட்டங்களிலும், வதனபுத்தக போராட்டங்களிலும் (Facebook Campaigns) செலவிடுவீர்களா?
அணுவுலை கதிர்வீச்சு மற்றும் அதன் கழிவுகளைக் காட்டிலும் இது ஆபத்தானது என்பதை உணர்ந்து, உங்கள் நுகர்வுக் கலாச்சாரத்தை மாற்றுவீர்களா?


காரைக்கால் பிரச்சினை அவர்கள் மாநிலத்திற்குத் தான் என்றும், தூத்துக்குடிக்கு இது போன்ற பிரச்சினை வரும் வரை பொறுத்திருப்போம் என்று சொன்னால் , அது , கடையில் விலை கேட்டு விலை அதிகம் என்பதால் அடுத்தமுறை வாங்கலாம் என்று நினைத்த CFL பல்புகளைப் போல் அல்லவா இருக்கும் ?


"அணுசக்திக்கு" பதிலாக "மாற்று சக்தி " என்று விலை அதிகமான சோலார் முறையையோ, இல்லை உலக சுகாதார நிறுவனத்தால் உலகை மாசுபடுத்தும் நிறுவனம் என்று விருது அளித்த NTPC (மாசுபடுத்துதலில் உலக அளவில் 6ஆம் இடம்) போன்ற வகைகளை ஆதரிப்பது போல், நீங்கள் மீன்கள் வாங்குவதை தவிர்த்து புரதச் சத்திற்காக பன்னாட்டு மார்கெடிங் நிறுவனம் ஒன்று விற்கும் ப்ரோட்டீன் பவுடரை நீங்கள் அந்த ஏழைகளுக்கு வாங்கிக் கொடுப்பீர்களா ??
இல்லை இதில் உங்களது கண்டனங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்து, கவிதைகள் பாடி இந்தியாவைத் துண்டாடும் ஆருடம் பேசுவீர்களா ??


இதோ தன்மானத் தமிழினத் தலைவர் கலைஞர் ஆதரித்ததால் நீங்களும் கூடங்குளத்தை ஆதரித்துவிட்டு உங்கள் வேலையைப் பார்க்க சென்று விடுவீர்களா ? இல்லை அதை உடனடியாக திறப்பதற்கு அவரையே உண்ணாவிரதம் இருக்க நீங்கள் வேண்டுவீர்களா?



இதில் மிக முக்கியமாய் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், காரைக்கால் பகுதியில் கடலை ஒட்டிய கிராமங்களில் வாழும் பெரும்பான்மையோர் தங்கள் வீட்டில் வாரத்தில் ஆறு நாட்கள் கட்டாயம் தங்கள் உணவில் மீனைச் சேர்த்து வருகின்றனர். இதற்கு வெறும் மத்திய அரசையும், மாநில அரசையும், தனியார் முதலைகளையும் மட்டும் குறை கூறாதீர்கள், சற்றே கண்ணாடியைப் பாருங்கள் ஒரு முக்கியப் புள்ளியும் அகப்படுவான் ..


சில சுட்டிகள்: அவசியம் பார்க்க வேண்டியது
பாஸ்!அணு ஆற்றல் ரொம்ப அவசியம்



கூடங்குளம் – கிட்டப்பார்வையும் /எட்டபார்வையும்..



புதன், 8 ஆகஸ்ட், 2012

கணம் பொருந்திய மீடியாக்களே, கொஞ்சம் அடக்கி வாசிங்க !!



என்னங்க உங்க விளம்பர வருமானம் எல்லாம் திருப்திதானா?? இப்போ சென்சேஷனல் செய்தி ஒன்னு கிடைத்துவிட்டது, உங்களுக்கு என்ன ? ”நான் அப்பவே சொன்னேன், தலையங்கம் எழுதினேன்” என்று எங்கள் நடுத்த்ர மக்களை சாடுவீர்கள். 


PANIC SELLING என்று ஷேர் மார்கெட் சரியும் பொழுது ஒரு நிகழ்வு வரும். அதாவது ஒரு நிறுவனத்தின் வியாபரத்தில் எந்த ஒரு குறிப்பிடத் தகுந்த சரிவும் இல்லாமல் இருப்பினும், மார்கெட் மீது கொண்ட அவநம்பிக்கையில் எல்லா முதலீடுகளையும் விற்பதற்கு பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் முனைவார்கள் , அதனால் மார்கெட் சரிவு மிகவும் ஆழமாகப் போய்விடும். அதுபோல இந்த நிதி நிறுவனம், சிட் ஃபண்ட், நகைச் சீட்டு, ஏலச் சீட்டு நிறுவனங்கள் என சில நல்ல நிறுவனங்கள் கூட இதைப் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிவிடும்.
எல்லா முதலீட்டாளர்களும் ஒரே சமயத்தில் எல்லா முதலீடுகளையும் திரும்பப் பெற்றிட வலியுறுத்தினால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது.. இந்த தொழில் உடனடியாக முடக்கப்பட்டால் எத்தனை தற்கொலைகள் வருமென்று உறுதியாய்ச் சொல்ல முடியாது. ஷேர் மார்கட்டில் ஃப்ரீஸ் பண்ணுவதுபோல் இந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து செயல்பட வைக்கவும் முடியாது.. முதலில் போலீஸ், அப்புறம் சிபிஐ அதன் பின் பொருளாதரக் குற்றப் பிரிவு என்று அலைய வேண்டும்.

விளம்பரம் என்றால் வாயைப் பிளந்து வாங்கிய பத்திரிக்கைப் பெரு மக்களே இதை sensation ஆக்கிட இதன் எதிர்வினை மிரட்டப் போவது முதலீட்டாளார்களைத் தான்...

செவ்வாய், 3 ஜூலை, 2012

முகநூல் கவிஞன்

ஓலைச் சுவடியில் இருந்து, எழுத்துகள் அச்சில் ஏறும்போதும் இப்படித் தான் இருந்திருப்பார்களா 
இந்தப் பெருமக்கள் ?? முகநூல் கவிஞன் என்று தீண்டத்தகாதவனைப் போல் பார்க்கிறார்கள்.

முகநூல் வந்த பின் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது , படைப்பாளிக்கும் - வாசகனுக்கும் உண்டான இடைவெளி குறைகிறது , போலிகள் எளிதில் விமர்சிக்கப் படுகின்றன, உலகம் முழுக்க வாசகர்கள் இணைவதற்கு ஒரு தளம் கிடைத்துள்ளது. வெகு சீக்கிரம் அவனுக்கு பல தளங்களில் வாசிப்புகள் சாத்தியமாகின்றன, அவனது சந்தேகம் தீர்த்து வைக்கப் படுகின்றன .

இதில் என்ன பிரச்சனை, அதே சமயம் அவன் சீக்கிரமே எழுத முயல்கிறான், அதைப் படைப்புகள் என்று நினைக்கிறான், உடனே இலக்கியம் பற்றிப் பேசுகிறான், அது தானே உங்கள் பிரச்னை ?? படைப்புகள் என்ன தான் உருவானாலும், சிறந்த படைப்புகள் தானே தொடர்ந்து நிற்க முடியும் ஒருவன் அரைகுரயைத் தெரிந்தால் அவன் எளிதாக இங்கும் ஓரங்கட்டிவிடப் படுவான், அப்படியிருக்க உங்களுக்கு ஏன் இத்தனை கோபம் , வஞ்சம்??

இது பரிணாமம், நவீனத்தை நம்பினால் இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு கவிஞர் வெளியிடப் போகும் கவிதைத் தொகுப்பு உங்கள் வயித்தெரிச்சலைக் கிளப்பும் அபாயம் இருக்கிறது.