புதன், 15 மே, 2013

பஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்

அம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை, அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் மிக மலிவான விலையில் தங்கள் உணவை எடுத்துக்கொள்ளும் நுகர்வோர் இருந்தாலும். இது போன்ற உணவகங்களின் எண்ணிக்கை கூடுமாயின் இதனால் நஷ்டம் அடையும் சிறு வியாபாரிகளின் (தள்ளுவண்டி, கையேந்தி உணவகங்களிலும், சிறு உணவகங்களிலும்) எண்ணிக்கையும் அதிகரிக்கும். அம்மா உணவகத்திற்கு அருகில் ஏற்கனவே அமைந்துள்ள் காலை நேர இட்லிக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள். எவ்வளவு தூரம் தங்கள் வியாபாரத்தில் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்று. அதுவே அம்மா உணவகங்களில் பொங்கல், சப்பாத்தி என்று புது ஐட்டங்கள் சேரும் போது, ஒரு பக்கம் பொது மக்கள் நலன் என்ற பார்வை இருந்தாலும் இன்னொரு பக்கம் அதை விட சற்றே அதிகம் விலை வைத்து நடத்தப்படும் கடைகள் பல காணாமல் போகும் அபாயம் வந்துவிடும்.

இந்தக் கடுமையான விலைவாசி ஏற்றம் கொண்ட சந்தையில் இது போல ஒரு மலிவு விலை உணவகங்கள் திறப்பதற்கு ஆதாரமாக இருக்கும் நிதியை வழங்கும் துறை எதுவென பார்த்தால் மதுபானக் கடையே (டாஸ்மாக்). ஒரு பாமரன் அம்மா உணவகங்களால் பெற்றிடும் லாபத்தினை விட, டாஸ்மாக்கினால் இழக்கும் உடல் நலம், பண இழப்பு, குடும்ப அமைதி கெடுத்ல என இழப்பின் நிரை மிகுதி. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை பெருமளவு நாம் செய்ய வேண்டி இருந்தாலும், இது போன்ற அரசியல் லாபத் திட்டங்களினால் பாதிக்கப் படும் சிறுவியாபாரிகளின் நலனுக்காகவும் போராட வேண்டும், அது தான் சமூகத்தின் சமநிலையை

அரசியல் லாபங்களுக்காக இது போன்ற நற்பணிகள் செய்யும் நன்மைகளை ஆராய்ந்துப் பார்த்தால் தொலை நோக்குப் பார்வையற்றதாகத் தான் இருக்கும். இப்பொழுது இருபது ரூபாய்க்கு அரிசி கிடைக்க வழிவகுத்தாலும், குடும்ப அட்டையின்றி வாங்கலாம் என்ற சலுகை, அரிசி மூட்டைகளை கட்சிக் கொடி ஏந்திய டாட்டா சுமோக்களின் பின்புறம் ஏற்றுவதற்குத் தான் அதிகம் உதவுகிறது.

மாநகரங்களில் வேலைக்கு அதிகம் செல்லும் மக்களிடையே உணவகங்களில் தங்கள் மதிய உணவை முடித்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்டிருக்கும் நம் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பார்த்தால் எவ்வளவு தூரம் நாம் திசை மாறியிருக்கிறோம் என்று புரியும். தனிக் குடித்தனம் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி என்று இருவருமே வேலைக்கு செல்வதால், மதிய உணவுக்காக உணவகங்களைப் பெரும்பாலும் நாடுவது அவசியமாகிறது.

மாற்றம் 1.

சரவண பவன், ஆனந்த பவன், சங்கீதா போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் மதிய உணவுக்காக ரூபாய் 200 அல்லது அதற்கும் மேலே வசூலிக்கின்றனர். 30 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு கொடுத்து வந்த நடுத்தர உணவகங்கள் கூட இப்பொழுது 60 ரூபாய்க்கும் மேலே கூட்டி விட்டன. 50 ரூபாய்க்கும் கீழே நல்ல சுகாதாரமாக உள்ள உணவகங்களை தேடிப் படித்து உண்பது அரிதான ஒன்றாகிவிட்டது. கலவை சாதங்களுக்கான விலையே ஐம்பதினை எட்டிவிட்டது, பழச்சாறு, தயிர் போன்ற எல்லா மாற்று உணவும் இரண்டு மடங்கு ஏறிவிட்டது. வீட்டில் சமைத்து எடுத்து வர முடியாத அளவுக்கு நேரப் பற்றாக்குறையுடன் வேலைக்கு செல்லும் மக்கள் இனி மதிய உணவிற்கென ஒன்று நாம் சாப்பிடும் அளவைக் குறைக்க வேண்டும் அல்லது மாற்றம் 2 ஐ நோக்கி செல்ல வேண்டும்.

மாற்றம் 2

மெக்.டொனால்டு, பீஷா ஹட், கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு உணவகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மிக முக்கியமாக நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. சாதாரணமாக குறைந்தபட்ச விலையே நூறு ரூபாய்க்கும் குறையாமல் இருந்த அவ்வுணவகங்களின் நிலையினை மாற்றம் பெற்று தீடீரென விலை குறைந்து மாபெரும் புரட்சியாக எழுந்துள்ளது. ஆம் அவர்கள் உற்பத்தி செய்து வந்த எல்லா பண்டங்களிலும் சிறிய அளவில்  பண்டங்கள் செய்து அதை ஐம்பது ரூபாய்க்கும் கீழே விலை நிர்ணயித்துள்ளன.


பீஷா  38 ரூபாய்க்கும், பர்கர் வகையறாக்கள்  25 ரூபாய்க்கும், மில்க் ஷேக்,
ஐஸ்கிரீம், ஃபிங்கர் சிப்ஸ், ஐஸ் டீ மற்றும் மிகவும் விலை உயர்ந்த ஃப்ரைடு சிக்கன் கூட 25 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது இந்திய மக்களுக்காவே செய்யப்பட்ட சிறப்பு பேக்கிங் மற்றும் பேக்கேஜ்கள். டொமினோஸில் ஆரம்பித்த இந்த விலை குறைப்பு புரட்சி இப்பொழுது கே.எஃ.சி வரை பரவியிருப்பது மிகப்பெரிய ஒரு கலாச்சார மாற்றத்தின் அறிகுறி எனச் சொல்லலாம்.

இந்த மாற்றம் கொஞ்சம் வேகமாக மாறி வரும் நம் உணவுப் பழக்க வழக்கத்தை லிஃப்ட்டில் ஏற்றி அருகில் கொண்டு வந்து, முற்றிலுமாகவே நம் அன்றாட உணவுப் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு அருகே கொண்டு வந்துள்ளது. அதுவும் காம்போ பேக்குகளில் 65 ரூபாய்க்கு நீங்கள் ஏதேனும் மூன்று வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருக்கும் பொழுது. அப்போ சரவண பவனில் இட்லி வடை சாப்பிடும் காசில் மோமோ,கோக்,பர்கர் சாப்பிடலாம் என்றால் உங்கள் வாய் திறக்குமா திறக்காதா?? இந்த பண்டங்களே அகல வாய் திறப்பு பண்டங்கள் தானே!!

இப்போது எல்லா மேலை நாட்டு உணவு விடுதிகளும் தம்து ஃபிரான்சைஸ் வணிக யுக்தியில் பெரிய அளாவு வெற்றி கண்டு விட்டன என்று சொல்லலாம். இதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமென்றால் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தினைச் சுற்றி இந்த ஒரே வருடத்தில் முளைத்த சில பன்னாட்டு (கே.எஃப்.சி), மெக்டொனால்டு, டாமினோஸ், பீட்ஷா கார்னர், பீட்ஸா ஹட் மற்றும் சில ஐஸ்கிரீம் கடைகளைச் சொல்லலாம், ஒரு பெருநகரத்தின் வளர்ச்சியில் இது சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம், ஆனால் இந்தக் கடைகளின் வணிகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் பெரும்பானமை மத்திய தர, வேலை பார்க்கும் வர்கத்தின் மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் தெளிவான பட்டியல் விட முடியாது, ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா போல இளைஞர்களின் பீ.எம்.ஐ ஏற்றம், உடல்நலக் குறைவினைக், மிகச் சிறிய அவ்யதிலேயே பூப்படைதல் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்தால் நமக்கு இந்த பாதிப்பு குறித்து நமக்கு தெளிவு பிறக்கும்

இப்பண்டங்கள் பழைய(அதிக) அளவிலும், விலையிலும் விற்ற போது ருசி பார்க்காதவர்கள் கூட தங்கள் அன்றாட மதிய உணவாக மெக் டொனால்டு செல்வதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்கும். அதே நேரம் நம் தென்னிந்திய உணவுகள் நம்மை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கும். இந்த மாற்றத்திற்கு நம் சம்பளத்தில் ஒரு பகுதியை ஃபுட் கார்டுகளாக, சொடெக்ஸோ(SODEXO) பாஸ்களாக கொடுக்கும் முறை வந்ததும் உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலே அந்த போலி பன்னாட்டு மோகம் பர்கர்களையும், பீஸாக்களையும் உண்பது நம் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைந்தது போல எண்ணத்தைக் கொண்டு வருகின்றது. ஆனால் நாம் தான் அவர்கள் விரித்த வலைக்குள் விழுந்திருக்கிறோம் என்பது புரியாது. முதலில் நாம் அடிமையாகி விட்டால் பின்னர் என்ன விலை இருந்தாலும் கொடுத்து வாங்கச் சொல்லும்.
உதாரணம் : இப்படித் தான் நம் சீயக்காயை விரட்டி ஷாம்புக்களும் (சாஷே முதன்முதலில் வந்தது இந்தியாவில் தான்), நீராகாரம், மோர், சுக்குத் தண்ணீரை விரட்டி காபி, டீ போன்ற பானங்களும் இடம் பெயர்ந்தன இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து வந்தாலும், இது மிகப்பெரிய உணவுக் கலாச்சார மாற்றத்தின் அடையாளம் என்பது மறுக்கவியலா உண்மை. இது மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில், ஆரோக்கியத்தில் என நம் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

-- 
ஜீவ.கரிகாலன்

13 கருத்துகள்:

  1. தொலைதூரப் பார்வை பார்க்கத் தவறிவிட்டால் நமது தனிநபர் பொருளாதாரம் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது ,,,நல்ல பதிவு ,,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்து எனக்கு உற்சாகம் அளிக்கிறது, தொடர்ந்து வருகை தாருங்கள்

    பதிலளிநீக்கு
  3. exactly...yesterday v went to KFC but i think for their quality in all regards it costs reasonably . foodies was more than to consume. only after ordered , i realized this. then, i asked them to pack the remained uneaten food to home. one thing, rarely v may go for this. i hope very soon our traditional food items as u have mentioned may be in demand once they will be marketed by foreign corporate giants.

    பதிலளிநீக்கு
  4. உன்னிப்பாக கவனித்தால் இந்தப் பண்டங்கள் உருவாகும் விதம் மற்றும் பரிமாறப்படும் விதம் ஆகியவை குறைந்த நேரத்தில் குறைந்த ஆட்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. தயாராக இருக்கும் மூலப் பொருட்களை சூடு மட்டுமே செய்து தயாரிக்கப்பட்டு நமக்கு நாமே பரிமாறி சாப்பிடும் இவற்றின் விலை மேலும் குறைதல் சாத்தியமே. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. எல்லாவற்றிற்கும் மேலே அந்த போலி பன்னாட்டு மோகம் பர்கர்களையும், பீஸாக்களையும் உண்பது நம் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைந்தது போல எண்ணத்தைக் கொண்டு வருகின்றது. ஆனால் நாம் தான் அவர்கள் விரித்த வலைக்குள் விழுந்திருக்கிறோம் என்பது புரியாது. முதலில் நாம் அடிமையாகி விட்டால் பின்னர் என்ன விலை இருந்தாலும் கொடுத்து வாங்கச் சொல்லும்.//பலே கரிகாலன் சமூக அக்கறை நிரந்த அருமையான கட்டுரை. அம்மா உணவகத்தின் தரம் பற்றியும் எதிர்பார்த்தேன் . இருப்பினும் நல்ல கட்டுரை . .

    பதிலளிநீக்கு
  6. ஜீவா. உங்களின் ப்ளாக்குகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ஷான் மூலமாகவே உங்களின் நட்பு கிட்டியது. சரி, எதையும் ஆழமாய் சிந்தித்து, சிற்பியாய் செதுக்கும் உங்கள் ப்ளாக்குகள் அருமை. இந்த அம்மா உணவகம் பற்றியது மட்டுமே, கொஞ்சம் இன்னும் சிந்திக்க வைக்கிறது. முக்கியமாய், இது ஏதோ ஒரு வகையில் நன்மை பயக்கவே இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தது வரவேற்க கூடியது தான். அதிலும், சாராயக்காசில் வருவதால் மட்டுமே இதை எதிர்ப்பது அத்தனை சிலாகிக்கக்கூடிய ஒன்றல்ல. இப்படி யோசித்து பாருங்கள். இப்போது அடுத்த ஒரு அரசு வந்து, சாராயத்தை ஒழிக்காமல், இந்த அம்மா உணவகத்தை ஒழிக்க முன் வந்தால் அந்த அரசின் நிலைமை கவலைக்கிடமாகிப்போகும். அல்லது, இரண்டையும் ஒழித்தாலுமே, ஆந்திரா சரக்கோடு தள்ளாடித்தான் போவார்கள். ஆனால், உணவு கிடைக்க இயலாது சாமான்யர்கள் திண்டாடித்தான் போவார்கள்.

    இது ஒரு புறம். வெளிநாட்டு வேக வகை உணவுகள், சரவணபவன் போன்ற உணவகத்தின் உணவுகள் ஸ்டேடஸ் சிம்பல்களாகி விட்ட நிலையில், வருமான உயர்வின் ஒரு அங்கமாய், இங்கு போய் தின்று விட்டு வருவது பழக்கமாகி விட்டது. நம் உடல் மீதான இந்த வேக உணவுகளின் தாக்கங்கள், குனிந்து செருப்பை போடும்போது தெரியும். இப்படி ஒரு உணவு கலாசார மாற்றம் கவலைக்குரியது தான்.ஜீவா.இப்படி ஒரு நிலைமையில், சாமான்யனுக்கு என்று நல்ல சோறு கிடைக்கும் அம்மா உணவகத்தை எந்த எதிர்ப்பாளர்களும், கடந்து போகின்றனர் மவுனமாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பதிவு சந்தோஷத்தைத் தருகிறது, இப்போது அவ்வளவாக நான் வலைப்பூவில் அதிகம் எழுதுவதில்லை. தங்கள் கருத்துடன் முழுக்கவே உடன்படுகிறேன். ஒரு கட்டத்தில் இது போன்ற அதிகமான சமூக அழுத்தம் தரும் பதிவுகள் எழுதாமல் 2015 முழுவதும் எந்த செய்திகளும், தினசரிகளும் கூட வாசிக்காமல் இருக்கும் என்று (மன அழுத்தம் காரணமாக) சொல்லிட வெட்கமாக இருந்தாலும் உண்மை அதுவே. ஆயினும் இப்படியான பழைய பதிவுகளை வாசித்துக் கருத்திடும் நண்பர்களைக் காணும் போது மீண்டும் துளிர்விடுகிறது....

      நீக்கு