அது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அது - 9

”எதுவொன்றைப் புரிந்துகொண்டால் எல்லாமுமாக இருக்கமுடியுமோ அந்த ஒன்று தான் அதுவாக இருக்கிறது”


படிக்கட்டுகள் வழியே கீழிறங்கி வந்தால் அந்த அறையின் கதவு தென்படும். அறை முழுதும் ஆப்பிளின் நறுமணம் கமழ்ந்திருந்தது. பச்சை வண்ண விளக்கொளியில் அறையின் மையத்தில் ஒரு நீண்ட மீன் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. மீன் தொட்டிக்கு அருகிலேயே நீச்சல் குளம், கண்ணாடியாலன்றி பெரிய பெரிய கற்களால் ஆன நீச்சல் குளம். நவீனமயமாகக் கட்டப்பட்டிருக்கும் இவ்வறைக்குள்ளே, பாரம்பரியமான குளம். மேல்தளத்திலிருந்து சூரிய ஒளி படுவதற்குப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூரை நீச்சல் குளத்திற்கு சரியாக மேற்புறம்.


அந்திவேளையின் வீரியம் குறைந்த சூரியன் ஒளி, சாளரங்களற்ற அந்த அறையின் பச்சை விளக்குகளின் ஒளியை FLOUROSCENTஆக மாற்றியிருந்தது.

சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்துஸ்தானி இசைக்கு காதுகொடுத்தும், குமார சம்பவத்திற்கு கண்களைக் கொடுத்தபடி நான் தரையில் படுத்திருந்தேன்.

துவட்டாத மேனியோடு சாய்ந்து கொண்டாள் என் மீது.

மீன் தொட்டியைப் பார்த்தபடியே நீந்துவது அவள் வாடிக்கை. அவள் நீந்தும் போது அத்தொட்டியில் இருக்கும் தங்க மீனும் அவளோடு போட்டிபோடும். அவளுக்கு இணையாக மெதுவாக நீந்துவது தான் போட்டி. இந்த முனையிலிருந்து அந்த முனை வரை அவள் செல்லும் நேரத்தில், தங்க மீனும் இந்தப் புறத்திலிருந்து அந்தப் புறம் சென்றிருக்கும். இரவரும் நீந்திக் கொண்டிருப்பதை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பது இவன் வழக்கம்.

அவளுக்குப் பிடித்ததாக தன் வீட்டினை மாற்றிக் கொண்டே வந்தான். விளக்கொளி, நறுமணம், நீச்சலறை, மீன்தொட்டி எல்லாமுமே அவளுக்குப் பிடித்த்தென அவன் அறிந்து வாங்கியவை. அவளிடம் இவை பிடித்திருக்கிறதா என்று கேட்டதும் கிடையாது. அவளும் சொன்னது இல்லை.

எப்பொதும் அப்படித்தான் நான் பேசிக்கொண்டிருப்பவனாகவும், அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவுமே இருக்கிறாள். உண்மையில் அவள் குரல் மிக மிக வசீகரமானது. வசீகரமானது என்றால் அதை விவரிக்க முடியாது. விவரிக்க முடியாத உலோக உருளைக்குள் உருண்டுக் கொண்டிருக்கும் வாயுவின் ஓசையாக, ஆனால் வேக வேகமாகப் பேசக் கூடியவள். இருந்தும் நானே அதிகம் பேசுபவனாகவும். அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவும் இருக்கிறாள்.

அவளிடம் நான் என்ன கேட்பது, அவளைப் பற்றி நான் தெரிந்து கொள்வது. அவள் இப்பொழுது வாழும் காலத்தில் மட்டும் அவளுடைய தேவைகள் பற்றி அறிந்துவந்தால் போதுமா? அவளுக்கு முன்னர் எது தேவையாக இருந்தது, இனிமேல் என்னென்ன தேவையாக இருக்கும், அதற்கும் அப்பால் அவளுக்குத் தேவைப்படுவது என்ன என்று யுகங்களைக் கடந்து தெரிந்து கொள்ளும் சாத்தியம் இருந்திருந்தால் நான் ஒரேடியாகக் கேட்டுத் தெரிந்திருப்பேன். அதுவரை அவள் உணர்த்துவதைத்தான் நான் செய்ய முடியும்.

அந்த தங்கமீன் எங்களைப் பார்த்தபடி, கண்ணாடித் தொட்டியின் சுவர்களை முட்டிக்கொண்டிருப்பதாய் தோன்றியது. அது முட்டுவது போலவும் இல்லை, பசியோடு இருக்க வேண்டும், வாயை நன்றாகப் பிளந்து கொண்டிருந்தது

அவள் தலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஈரம் என் இதயத்திற்கு மேற்புறம் நின்று கொண்டிருந்தது. கைகளிலிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு. அவள் கீழ்தாடையைப் பற்றிப் பிடித்தபடி அவளைத் தூக்கி என் பக்கம் இழுக்க முயன்றேன். அவள் உடல் வலுவாக இருந்தது. தலையின் கணம் என் நெஞ்சை அழுத்தியது. பச்சை நிற அறை அடர்த்தி மிகுந்திருந்தது. அவள் இன்னும் என் நெஞ்சை அழுத்தினாள், உடல் அழுந்தியது. ஆப்பிள் நறுமணம் திண்மையாகவும், தாங்க முடியாத நெடியுடனும் மாறியது. மீன் தொட்டியின் கண்ணாடிச் சுவர்களை, அந்த மீன் தன் பற்களால் கடித்துக் கொண்டிருந்தது. தொட்டியில் விரிசல் பெரிதாகிக் கொண்டிருந்தது.

நீச்சல் குளத்தில் யாரோ கைகளையும் கால்களையும் தண்ணீரில் அடித்துக் கொள்வது போல சப்தம். எழுந்து என்னால் பார்க்க முடியவில்லை. மீன் தொட்டியில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. சூரியன் முழுமையாக மறைந்து இருந்தது. என் நெஞ்சில் தலை சாய்த்தவள் முழுமையாக மேலேறினாள் உடல் அவளைத் தாங்க முடியாமல். சுவாசத்தைத் தடுத்தது. முகத்தில் யாரோ அறைந்தது போல் இருந்தது.

தலையைச் சுற்றிப் பிடித்திருந்த ஏதோவொன்று அகன்றுவிட்டதாய் விழித்துப் பார்க்க, அதே நாற்றத்துடன் கூடிய தண்ணீர் என் முகத்தில் வழிந்துக் கொண்டிருக்க, என் எதிரேயிருந்தப் பெண்மணி நான் விழித்ததைக் கண்டு புன்முறுவலித்தாள்.

”சார் , காலைல இருந்து எதுவும் சாப்பிடலையா சார்” என்று என் முகத்தில் தண்ணீர் தெளித்த தேநீர்கடைப் பையன் என்னைக் கேட்டேன் அவனுக்கும் பின்பு நான்கைந்து பேர் நின்றுக் கொண்டிருந்தனர். தண்ணீர் தெளித்தும் கண் விழிக்காததால், அவள் என்னை அறைந்திருக்கிறாள். கன்னம் வலித்தது. வயிற்றிலிருக்கும் கட்டியையும் தடவிப் பார்த்தேன், மருத்துவமனை என்னை அவ்வளவு எளிதில் விடாது என்று தோன்றியது.

நான் இப்போது என்ன செய்யட்டும்
தூக்கத்தை தேடட்டுமா?
மனநோய்க்கு மருந்து தேடவா?
வயிற்றை பரிசோதனை செய்யவா?

*
வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
சிரசாசனம் செய்துகொண்டிருந்தது அது.

ஒன்றும் பேசாமல் கட்டிலில் விழுந்தேன். என்னைப் பார்த்து உரத்தக் குரலில் கேட்டது?

“ மீன்களுக்கு அத்தனை வலிமையான பற்களா? ”

அடுக்களையில் ஏதோ ஒரு பாட்டில் விழுந்துடையும் சப்தம்.


அதனைப் புரிந்துக் கொள்ளுதல் என்பது ஒரு நாளும் அதுவாக ஆக முடியாது 







(மன்duk0101)

வியாழன், 7 ஏப்ரல், 2016

அது - 8

திங்கள் காலை : 11:30
“ம்ம்.. என்ன அந்த லெட்டர அவ படிச்சாளா?”
நான் பதில் சொல்லவில்லை. அது காலாட்டிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு,
“ஓகே நான் செத்தொழிஞ்சா பரவால்லனு தோணுதோ”
ஆமாம் எனக்கு தோணுது.
“அவளுக்கும் தோணுதா?”
அதிலென்ன சந்தேகம் உனக்கு
“சரி… நான் தூங்கப் போறேன்”.
முதன்முறையாக ஓர் இரவில் தூங்கச் செல்கிறது அது.
“இந்த இரவில்… நீ சந்தோஷமாய் இரு” சபித்தலின் மிக இளகிய குரல் அது.

*

(அது இல்லாத இரவு)

நான் ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை என்று மனம் சொல்கிறது


அந்த விபத்திற்குப் பின்பு, அது இல்லாத இரவாக இன்று கிடைக்கப்பெற்றிருக்கிறது. முகம் கழுவிவிட்டு என் அறைக் கதவை திறக்கும் போது, என் அறையின் நிறம் மாறியிருந்தது.

நிறம் மாறிய அறை குறித்த கவலைப்பட அவகாசம் இல்லை. என் எழுது மேஜக்கு கீழே படுக்கையை விரித்து, நானும் படுத்துக் கொண்டேன். அது இல்லாத இரவில், கண்களை மூடினால் தூக்கம் வந்துவிடும் என்று யாரோ சொல்லியது போன்ற ஞாபகம். விசித்திரமான இரவாக இருந்தாலும், ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட இரவு தான். வயிற்றில் கூடியிருக்கின்ற சின்ன கட்டியை தடவிப் பார்த்தேன். சதைக்குள்ளே சட்டை பொத்தான் அளவு உருண்டிருந்தது.

படுக்கைக்கு எதிரே நான் படிக்கும்/எழுதும் மேஜையும், நாற்காலியும் இருந்தது. இப்போதெல்லாம் எதையும் உருப்படியாக எழுதுவது இல்லை, ஏன் வாசிப்பது கூட இல்லை.

அது இல்லாத இரவில், தூக்கம் எளிதானது தான் என்றாலும், உடனேயே கண்களை மூடக் கூடாது என்று கவனமாய் இருந்தேன். இந்த தனிமையை, இந்த வெற்றிடத்தை, இந்த நிசப்தத்தை உணர வேண்டும். எத்தனைக் கொடுமையான இரவுகளைக் கடந்திருக்கேன்?. ஒருநாள் ‘அது’ தொல்லை பொறுக்க முடியாமல் அதன் கைகளையும் கால்களையும் சங்கிலியால் கட்டிப்போட, அது சங்கிலியைத் தரதரவென இழுத்தபடி என்னைத் தொல்லை செய்தது. எத்தனையோ ஸ்லீப்பிங் ப்பில்களை ஜெம்ஸ் சாக்லேட் போல் கடித்துத் தின்றும், அது தூங்காமல் என்னை வாட்டி வதைத்த இரவுகள் எத்தனையோ.

வெற்று மேஜையை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும், ரொம்ப நாட்களுக்குப் பிறகு முதல் கொட்டாவிக்கே மரியாதை செலுத்தி கண்ணயர்ந்தேன்.

ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை என்று மனம் சொல்கிறது. ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளி, தூண்டி விடும் அரிக்கேன் விளக்கைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக அறையை வெளிச்சத்தில் நிரப்ப ஆரம்பிக்கின்றது. கண்களைத் திறக்க முடியாமல் தவிக்கிறேன். திறந்தால் குருடாகும் சாத்தியமிருப்பதாய் தோன்றியது. இந்த இரவு ஏன் இத்தனை குரூரமாக மாறியது? ஜீரோ வாட்ஸ் விளக்கிருக்கும் திசைக்கு எதிரிபுறம் ஒருக்களித்துப்படுத்தேன்.  என் தனிமையைப் போன்ற மேஜையின் தோற்றம் ‘உம்’மென்று இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக எரிந்துக்கொண்டிருந்த  விளக்கு, தன் பழைய ஒளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் அறை எப்போதும் போல இயல்பாக மாறிவிட, கண்களை மூடிப் புரண்டு படுத்தேன்.

கொசுவர்த்திச் சுருளின் நாற்றம், வீட்டில் தான் கொசுவர்த்திச் சுருள் இல்லையே, பக்கத்து வீட்டிலிருந்து நீள்கிறதா என்று செயற்கையான முடிவுடன். உறக்கத்திற்குத் திரும்பினேன். ஃபேன் சப்தம் இரைச்சல் மிகுந்ததாய் தோன்றியது. ஆனாலும் கடிகாரத்தின் நொடிமுள்ளின் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தது.

கண்களைத் திறந்து பார்த்தேன் கண்முன்னே என் மேஜையும், நாற்காலியும்.
எதிர்புறம் ஒருக்களித்துப்படுத்து மீண்டும் கண்களைத் திறந்தேன் மேஜையும், நாற்காலியும்
மீண்டும் எதிர்புறம் படுத்துப் பார்த்தேன் அதே காட்சி.

சரி மல்லாக்க படுத்துப்பார்க்கலாம் என்று தோன்றிட அதே காட்சி. என் மேலே விழுந்துவிடுமோ என்று  பயந்தபடி எழ முயலும் போது, தலையில் தட்டியது நாற்காலி.

பீதியில் கரைந்து கொண்டிருந்தது இரவு. இருள் புதிய நிறத்தில் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

சங்கிலியோடு பிணைக்கப்பட்டிருந்த அது தரதவென்று இழுத்ததைப் போல, இந்த மேஜையையும், நாற்காலியையும் இழுத்து அறையின் வெளியே போட்டேன்.

வெறும் அறை ஃபேனின் சப்தத்தை மட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. கொஞ்ச காலமாகவே சரியாகத் தூங்காமல் இருக்கும் எனக்கு, தூக்கம் மிக அவசியமானதாகத் தோன்றியும் தூங்க முடியாமல் என்னை மிரட்டுகின்ற இந்த உருவங்கள், திகிலூட்டுகின்றன. இப்போது அறையில் எந்தப் பொருளும் இல்லை. கண்ணயர்ந்தேன்.

கனவு உலுக்கிக்கொண்டு விழித்துப் பார்க்கத் தூண்டியது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன் அந்த மேஜை இப்போது எப்படியும் என்னை மீண்டும் மிரட்டும் என்று நம்பினேன். என் கண்களைத் திறப்பதர்காக மேஜை முயற்சிப்பதாகத் தோன்றியது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த மேஜையும், நாற்காலியும் இங்கும் அங்கும் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

நரநரக்கும் சப்தங்கள் ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் மூளையை இன்னும் உஷ்னப் படுத்த, நரம்புகளுக்கு மூளை இடும் கட்டளைகள் வீபரீதத்தை துவக்கியிருந்தது. கை கால்கள் வெட்டி இழுக்க ஆரம்பித்தன. இறுதியில் நான் ஓலமிட்டேன்.

என்னைக் ரட்சிக்கப் போகும் கடவுள் யார் ?


*

மனநல மருத்துவரிடம் சென்ற விஷயத்தை அவளுக்கும், அதுவுக்கும் தெரியாமல் மறைக்க வேண்டும் என்கிற பதட்டம் வேறு. ஸ்லீப்பிங் டிஸ் ஆர்டர் என்று சொல்கிறார்கள், இன்சோம்னியா என்று சொல்கிறார்கள்.

ஆனால் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் கூட அந்த மருத்துவர் நான் சொன்னதைக் கேட்கவில்லை. தூங்க முடியவில்லை என்றதும் அவர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

”ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்றிங்களா?, சூசைடல் பத்தி யோசிக்கிறிங்களா?”
அதற்கு சரியான பதிலைச் சொல்லும் முன் ‘அது’வைப் பற்றி முதலில் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் என் பதிலுக்காகக் காத்திராமல் ஏழு எட்டு மாத்திரைகளின் பெயர்களை அந்தத் தாளில் எழுத ஆரம்பித்தார். மனம் கூடுதலாக எரிச்சலடைந்தது. அந்த மருத்துவர் கொடுத்த குறிப்பைத் தூர எறிந்துவிட்டேன்.

மாத்திரை சாப்பிட்டு அல்சரில் சாவதைவிட, இன்சோம்னியா நோயாளியாகவே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறது. அதே போல இன்சோம்னியாவாக இருப்பதற்கு பதில் ‘அது’வுடன் இருந்துவிடலாம் என்று தோன்றியது. ’அது’ – ஆனால் நான் நோயாளியாக ஆனதற்கும் அது தானே காரணம்.  

நண்பர்களை விட்டு வெகு தூரம் வந்துவிட்டேன். ஒருவேளை அவர்கள் என்னுடனிருந்தால் எனக்கு இவை நேராமல் இருந்திருக்கலாம், அதுவும் தான். ஏதோ ஒன்றைக் கையில் கொடுப்பதும், பின்னர் அதைப் பிடுங்கிக் கொள்ளவும் செய்கிறது காலம். இப்போதும் அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியும், அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஏதோ தடுக்கிறது. ஆரம்பத்தில் ‘அது’ நண்பர்களின் பிரிவை ஈடுகட்டியது, இப்பொது ‘அது’வைப் பிரிந்தால் நண்பர்கள் தான் ஈடுகட்ட முடியும். ஆனால் நான் அவர்களிடம் செல்லும் பொழுது, இப்படியான நிலையில் செல்லக் கூடாது. தூங்காத விழிகள், வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுனங்கிக் கொண்டிருந்தது.

ஒரு தேநீர் கடையில் பழச்சாறு ஆர்டர் செய்தேன்.

அவள் என்னை அழைத்தாள், இன்னும் ஆறுநாட்கள் தான் இருக்கிறது என்றாள்.

அவள் ஏன் என்னை விட ‘அது’ இறந்துப் போவதை விரும்புகிறாள் என்று எனக்கு வியப்பளித்தது. நான் அவளிடம் என் அவதிகளைச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். உண்மையில் அவள் எனக்காகத் தான் சொல்கிறாளா? இல்லை ‘அது’ அவளையும் துன்புறுத்தியிருக்கிறதா? வாய்ப்பில்லையே. ஆர்டர் பண்ணியிருந்த பழச்சாறு என் மேஜையில் வைக்கப்பட்டது
அருகில் அமர்ந்திருந்த நடுத்தரவயதுப் பெண்மணியின் மொபைல் அந்தப் பாடலை ஒலிபரப்பியது. அந்த மெல்லிய பியானோவும், கிட்டாரும் என்னுள் கணமாக இறங்க ஆரம்பிக்க. கண்களை மூடினேன்.


தொடரும் - அது






வெள்ளி, 25 மார்ச், 2016

அது - 7

அவள் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டாள் என்கிற உணர்வும், அவள் என்னிடம் ஏதோ மறைக்கப் பார்க்கிறாள் என்கிற உணர்வும் ஒரே நொடியில் கிளர்த்தது. புன்னகைத்தபடி அந்தக் கடிதத்தைக் கையில் கொடுக்கும் போது, அதை அவள் இப்போது படிக்கவில்லை என்றும், தேவைப்படும் பொழுது சொல்கிறேன் என்றும் அவளைப் பொய் சொல்ல வைத்தது. ’அது’ அவளையும் மாற்றியிருக்கிறது. ஆனாலும் அவள் சொல்வதால் அவற்றை ஏற்றுக் கொண்டேன்.

குணப்படுத்த முடியா புற்றுநோய் உலகில் உருவான  கதை பற்றி சாகக்கிடந்த காதல்காரன் ஒருவன் சொன்ன கதையொன்று ஞாபகம் வந்தது.
***
எல்லா உயிர்களுக்குமாக படைக்கப்பட்ட இவ்வுலகு டைனசர்களால் ஆளப்பட்ட போது, சர்வ வல்லமை பொருந்திய சாத்தான் மற்றும் தேவதைகள் ஆகிய இருவரின் தேவையையும் போக்கியது. மற்ற உயிர்கள் டைனசர்களின் ஆட்சியில் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை நடத்தின. படைப்பின் அம்சப்படி டைனர்களின் ஆட்சி வியப்பில்லாத ஒன்று தான். ஆனால், கடவுளையோ அல்லது சாத்தானையோ உயிர்கள் மறந்து போனது அதிர்ச்சியான ஒன்று. டைனசர்களை அழிக்கவேண்டிய நிர்பந்தம் சாத்தானுக்கும், கடவுளுக்கும் இருந்ததால். கூட்டு நடவடிக்கையில் அவ்வினத்தை அழித்துவிடலாம் என்று கடவுளுக்கும் சாத்தானுக்கும் ஏகமனதுடன் உடன்படிக்கை ஏற்பட்டது. 

பின்னர் பூமியின் ஈகோ சிஸ்டம் அழிந்துகொண்டிருந்ததால் நாங்கள் அதை அழித்தோம் என்று மேலதிகாரிகளிடம் பொய் சொல்லிக் கொள்ளலாம் என்றும் முன்தீர்மானம் செய்தாயிற்று. அதுவும் முதல் தகவல் அறிக்கையிலேயே இப்படித் தான் எழுத வேண்டும் என்று ஆட்களைத் தயார் செய்துவிட்டு தான். அவர்கள் என்கவுண்டர் ஆப்ரேஷனைத் தொடங்கினார்கள்.

டைனசர்கள் அழித்தொழிக்கப்பட்டன. ஆட்சி பீடம் வெற்றுக்கட்டிலானது. ஆனால், டைனசர்களால் ஆளப்பட்ட உலகத்தில் மற்ற உயிர்கள் மறந்து போன சாத்தானும் கடவுளும், அவ்வுயிர்களுக்கு முன்னே தோன்றினாலும் உலவினாலும் அவர்களும் இவ்வுலகத்தின் மற்றொரு ஜீவனைப் போலவே எடுத்துக் கொள்ளப்பட்டது. மிகுந்தக் கவலைக்குள்ளான அவ்விருவர்களும், டைனசர்களுக்கு பதிலாக இவ்வுலகை ஆளப் போகும் புதிய இனத்தை தோற்றுவிக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்தனர்.

சாத்தானும், கடவுளும் கலந்த ஒரு உருவ அமைப்புடன் மனிதன் உருவானான். அதன் வாயிலாக கடவுள் மற்றும் சாத்தான் அவர்களின் திட்டம் வெற்றியானது.

1.   அவன் உலகை ஆளும் பொழுது உலகத்தின் ஈகோ சிஸ்டம் பாதிக்கப்படும்.
2.   மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதனே தலைவன் ஆவான்.

3.   மனிதன் வாழும் வரை மற்ற ஜீவராசிகள் தங்களைக் காப்பாற்ற ரட்சகர் வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கும், மனிதனும் நம்புவான்
ஆனால் இதில் ஒரு குழப்பமும் இருந்த, இந்த படைப்பிலும் அதே மானுஃபாக்ச்சரிங் டீஃபால்ட் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற சந்தேகம் சாத்தானுக்கு வந்தது. சாத்தான் தான் சந்தேகத்தின் மூலக்கூறு ஆகிறான். ஆனால், அந்த சிருஷ்டியே  சந்தேகத்தின் தர்கத்தில்  தான் உருவாகிறது (அஃப்கோர்ஸ் வித் எக்ஸ்பைரி டேட்).

மனிதன் தங்களில் யாரோ ஒருவரையாவது குறைந்தபட்சம் மறக்காமல் இருக்க வேண்டும் என்றால் அவன் வாழ்நாளில் ஏதாவது ஒரு ஆபத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

”ஆம், மனிதன் தன்னை நினைத்துக் கொண்டே இருக்கும்படி நான் அவனுக்கு ஒன்றை தரப்போகிறேன் அவன் சாகும்வரை அதனால் என்னை நினைத்துக் கொண்டிருப்பான்” என்றது கடவுள்.

சாத்தான் அப்படியேதும் ஒன்றை அறிந்துவிடவில்லை. கடவுள் அளவிற்கு சாத்தானுக்கு புத்தி போறாது. கடவுள் வீட்டிற்கு எத்தனை முறை போய் வந்தாலும் கடவுளின் புத்திசாலித்தனத்தில் கொஞ்சம் கூட சாத்தானுக்கு வரவில்லை. சாத்தான் ஆர்வமுடன் கடவுளிடம் கேட்டான்.

“அப்படியா என்ன விஷயம் அவனை அப்படி பயமுறுத்தச் செய்து வாட்டி வதைக்கும்?”

“அதற்கு மனிதர்கள் கேன்சர் என்று பெயர் வைப்பார்கள்”

கடவுள், அதை சொல்லி முடித்ததும்வெடித்துச் சிரித்ததில், ஏராளமான மின்னல்களும் இடிகளும் பூமியில் தோன்றி மறைந்தன. அந்த வெளிச்சத்தில் கடவுளும், சாத்தானும் கூட்டுக்களவானிகள் என்று உலகமே அறிந்து கொண்டது. தப்பித்த ஒரேயொரு குட்டிடைனசரும், ”சனியனுங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டாய்ங்க” என்று சொல்லிக் கொண்டே அவர்களைச் சபித்தபடி மலையில் இருந்துக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டது.

சாத்தானும் இப்போது புன்னைகையோடுஇ ருக்க, புத்திசாலி கடவுளுக்குப் புரிந்து போனது.

“என்ன நீயும் அப்படி ஒரு விஷயத்தை மனிதனுக்குத் தரப்போகிறாயா?, அப்படி என்ன ஒரு அம்சம் கேன்சருக்கு இணையாக மனிதனை வாட்டி வதைக்கப் போகிறது?!!”

“அதற்கு அவர்கள் காதல் என்று பெயர் வைப்பார்கள், கேன்சரெல்லாம் இரண்டாமிடம் தான்”.

ஆனால் சாத்தானுக்கு பெருமிதம் மட்டுமே இருந்தது. கடவுளைப் பரிகசிக்கவில்லை.

”எப்படி இந்த யோசனை எனக்கு வாராமல் போய்விட்டதே!!” 

என்று கடவுள் தன்னைத் தானே திட்டிக் கொண்டது.சாத்தான் கடவுளின் வீட்டிற்கு வந்து செல்வதை நினைத்துப் பார்த்தது.

”காதல் . நிம்மதி ..  ஆவ்சம்”
***
நினைவில் புரண்டோடிய பழைய கதையுடன், வீடு வந்து சேர்ந்தேன். “அது” கால் மேல் கால் போட்டுக் கொண்டு, விசில் அடித்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் அப்பியிருந்த அதே போல் புன்னகை.
வலப்புற வயிற்றில் சிறிது நாட்களாக, வலி இருந்து கொண்டிருந்தது.  இப்போது அங்கே லேசான வலி கொஞ்சம் மிதமாக முன்னேறியது. தடவிப்பார்த்துக் கொண்டேன், அந்த இடத்தில் ஒரு கட்டி தென்பட்டது.

அது
அது என் காதலு
அது என் கடவுளு
அது என் சாத்தானு
அது என் கேன்சரு...

கேவலமான கானா பாடல் ஒன்று, ஆனால் அந்த உண்மை கசந்தும் இருந்தது. ஆடவேண்டும் போல இருந்தது.

திங்கள், 14 மார்ச், 2016

அது - 06

14/03/2016 திங்கட்கிழமை இரவு -10.53

வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு வெளியேறும் வரை எந்த சத்தமும் இன்றி வெளியேறியதால், ‘அதுதூங்கிக்கொண்டிருப்பதை கலைத்துவிடாமல் வந்துவிட்ட சந்தோசம் எனக்கு. அவள் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்ட நாளொன்றின் நிபந்தனையாகக் காலண்டரில் நான் குறித்து வைத்தது அது தான்.

அது உன் கூட வரக்கூடாது, நீ மட்டும் தான் வரனும்

அவள் வந்துகொண்டிருக்கின்றாள், எப்பொழுதும் போல எனக்கு படபடப்பு வரவில்லை இயல்பாய் இருக்கிறேன் என்பதே, எனது இப்போதைய ஆச்சரியம். என் இயல்பு அவளையும் சந்தேகிக்க வைக்கிறது. அவள் முகத்தில் பல கேள்விகள் பளிச்சிட்டன. அவைகளும் அவளைப் போலவே அழகாக இருந்தன..

அவளை உற்றுப் பார்த்தவுடன்,  ’அதுவின் ஞாபகம் வந்தது. எழுந்துவிடுமா??.. வேண்டாம் வேண்டாம். மீண்டும் இயல்புக்குத் திரும்பினேன்.

அவள் எனக்குள்ளே நான் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே என்னிடம் கேட்டாள்.

எப்படி நீ மட்டும் வந்தாய்அதுவரவில்லை?”

ஆஹா அவளே எழுப்பிவிடுகிறாளே, அவளையும் ஞாபகப்படுத்தி எழுப்பிவிடாதே என்று சொன்னேன். எத்தனை நாள் தான் அவஸ்தைகளை அனுபவிக்கப்போகிறாய் என்று அவள் எனக்குக் கேட்கும்போது, அவள் பேசுவதில் உள்ள நியாயங்கள் தெரிந்தது. ஆம் எத்தனை நாள் தான் இப்படியே இருப்பது. என் முகத்தின் மாற்றங்களை, அவ்வளவு எளிதாக ஸ்கேன் செய்துவிடுகிறாள் என்று அது என்னிடம் எச்சரித்தவைகள் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தன. ஆம் அவள் ஸ்கேன் தான் செய்கிறாள்

ஆம் எத்தனை நாள் தான் இப்படியே இருக்கமுடியும்.. வாழ்க்கைய ஓட்டித்தான ஆகனும். கடமைகள்னு உனக்கும் சில இருக்குல்ல?

என்ன தான் செய்யனும்என்று தீவிரமாக யோசித்தேன்நித்தமும் இப்படி யோசிப்பது தான், இன்று அவளோடும் சேர்ந்து இதை யோசிக்கிறேன் என்பதில் தான் கூடுதல் லைட்டிங் எஃபக்ட் வந்துவிடுகிறது, நான் என்ன செய்யட்டும்?

கரிசனமிக்க அந்த கண்கள், இப்படி சொற்களை உதிர்க்க தயாராகி இருக்கிறாள் என்று காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை நான் கேட்காமல் இருந்திருப்பேன். ஆனால் சொல்லிவிட்டாள். நானும் இசைந்துவிட்டேன்.

தோள்களில் தட்டிக் கொடுத்தாள்…. தீர்கமாய் செயல்படவேண்டும்.

1.   அது கொல்லப்பட வேண்டும்
2.   அதற்கு காரணம் அவளில்லை நான் தான்என்று உலக்குக்கு அறிவிக்க வேண்டும்
3.   அவ்வளவு தான்.. முதல் இரண்டு நடந்தாலே வெற்றி தான்

வெற்றி, ’வெற்றி தான்’. ’ஆனால் யாருக்கு?’ பதில் தெரியாது. ஆனால் அவள் சொன்ன ஆலோசனை, நான் கேட்க வேண்டும். “அதுஇருக்கும் வரை அவள் சொன்னதைக் கேட்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா?

’அதான் இப்பொதும் கேட்கிறேனே..’ 

எல்லாக் கட்டளைகளிடமிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும். விடுதலையின் தெவிட்டாத ருசி எனக்கு வேண்டும். கொல்வதற்கு யத்தனிக்கும் என் மனது, உடலின் ஸ்திரத்தை, கழுத்தை நெறிப்பதற்கு ஏதுவாய் கரங்களுக்கே கடத்திக்கொண்டிருக்கிறது.
*
அதிர்ச்சி, வீட்டை நெருங்கவும் தான் தெரிகிறது. வீடு திறந்திருக்கிறது என்று. கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு என் படுக்கையறையில் இங்கேயும் அங்கேயுமாக நடந்துக் கொண்டிருக்கிறது. நான் ஒளிந்து கொண்டே, இப்போது உள்ளே சென்றவுடன். அதை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வேர்த்திருக்கும் என் உடலில் யாரோ ஊதுவது போல் இருக்கத் திரும்பிப் பார்க்கலானேன். அது தான் ஊதிவிட்டிருக்கிறது.

சத்தமில்லாமல் அதன் பின்னேயே நடந்து சென்றேன். தூங்குவது பாவ்லா செய்தேன். போர்வையைப் பிடுங்கியது. ‘அதுதான் அசலானத் தூக்கத்தையே பலிகேட்கும். இப்போது நடிப்பது தெரியாமலா போய்விடும். எதற்கு எழுப்புகிறாய் என்று கேட்ட போது தான். நான் ரகசியமாய் சென்று வந்ததை தெரிவித்தேன். எப்பவும் தலை கவிழ்ந்தே பேசுவது எரிச்சலாக இருந்தது, அவள் சொல்வது போல அதனைக் கொல்வது தான் சரியென்று மனசு ஒப்புக்கொள்கிறது. அவளை விட வேகமாக என் மனதைப் படிக்கும் திறன்பெற்றதுஅது’.

உன்னால் என்னைக் கொல்ல முடியாது

என்ன முழிக்கறே!! உன்னால் என்னைக் கொல்லவே முடியாது முட்டாள்

நான் சாக வேண்டும் என்று விரும்புகிறாயா?”

ஆம்என்று சொல்லும் போது இதயம் துடிக்கும் ஓசை உடலுக்கு வெளியேயும் கேட்குமளவுக்கு தாறுமாறாக மாறிக்கொண்டிருந்தது. கொஞ்சம் பெருமூச்சு இழுத்துவிட்டுக் கொண்டிருந்தேன்.

ஆமாம் நீ சாக வேண்டும்

அப்படியென்றால் இந்தக் கடிதத்தை கொடுத்துவிடு, இதை அவள் வாசித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை இன்னும் 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி அவள் செய்தால் நானே என்னை மாய்த்துக் கொள்வேன். எந்த மானிடப் பதர்களாலும் என்னைக் கொல்ல முடியாது முட்டாளே!!”

கடிதத்தை என் தலையணைக்கு அடியில் தான் அது ஒளித்து வைத்திருக்கின்றது இதுநாள் வரை. இல்லை ஒருவேளை இன்று தான் எழுதியதா. திறந்து பார்க்கலாமா என்று தோன்றிய மனதோடு அதனை நோக்க, அது கூடாது என்று தலையாட்டி மறுத்தது.

நீட்டிய கரங்களிலிருந்து தென்பட்ட கடிதச்சுருளினை எடுத்துக் கொண்டு, அவள் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். வியர்த்தொழுகும் போதோ, திடீர் மழையோ இக்கடிதத்தை அழித்துவிடும் முன், நான் அவளிடம் இதனைக் கொடுத்து விட வேண்டும் என்று விரைந்துக் கொண்டிருக்கின்றேன். கடிதம் எனும் ரகசியம் என் கையில் தான் சுருண்டுக் கிடக்கிறது, விதி எனும் கயிறு கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனாலும் கட்டுண்டதாகவும், கட்டுப்பட்டதாகவும் மனதை எங்கோ நிலை நிறுத்தியிருக்கிறது. தொலைந்து போகட்டும்.

இதோ வந்துவிட்டேன்

இந்நேரம் விழித்திருப்பாளா? என்றபடி கதவருகில் நின்றுக் கொண்டு கதவைத் தட்ட யோசித்துக் கொண்டிருந்தேன்..

கதவைத் தட்ட கைகளை நீட்டும் முன்னே, கதவுத் திறக்கப்பட்டது. சிவப்பு நிற ஆடையில் அவள்.

அந்தச் சிவப்பு நிற ஆடையில் ஆச்சரியப்படும் விதத்தில் நீல வாசமும், வெள்ளை வாசமும் நறுமணமாய் திகழ்ந்தன. ஓடிவந்த மூச்சிரைப்பும் அவளைப் பாத்த பிரமிப்பும் குறைவதற்குள். அவள் மிக இயல்பாய் பேசினா:ள்.

ம்ம் கொண்டு வந்துட்டாயா அந்தக் கடிதத்தை?

ம் ? என்ன இப்படி ஈரமாக இருக்கின்றது

என் கைகளில் இருந்து அவளுக்கு அக்கடிதச் சுருள் இடமாறியது
*

பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு துணுக்கு கோள் எதிர்பாராத விதமாகப் பற்றியெரியத் தொடங்கியதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று இன்னிக்கு சாமக் கோடங்கி சகுனம் சொல்லுவானாக்கும்

அது - 05

08/03/2016.     12:56 pm..    செவ்வாய்க் கிழமை:

இந்த வெயிலில்… உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது… யாரோ பேஸ் கிட்டார் கொண்டு வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்… அதன் நோட்ஸ்களைப் பற்றி வேறெதுவும் எனக்குச் சொல்லத் தெரியாது.
சூழ்ந்துள்ள சப்தங்களை விழுங்கிவிட்டு மற்றவற்றை எழுதிப்பார்க்கும் துர்பாக்கியம் தான் என் முயற்சி என்றாலும்… நான் அதிர்ஷடசாலியும் தான். ஏனென்றால் அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா?
ஆமாம் நீ என்ன அமானுஷ்யமா?  பூக்கள் பற்றி எழுதினாலும், புயல் பற்றி எழுதினாலும் வந்துவிடுகிறாயே நீ.
நல்லவேளை இங்க் கேட்ரிட்ஜ்களைக் கொண்ட பேனாக்களை நான் உபயோகிப்பதில்லை, எழுதும் முன் தெளித்துப் பார்த்தாலும், அதில் நீ வந்துவிடுவாய் என்று அஞ்சியதால் சொல்கிறேன்.
அவலங்களுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள், உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்போதும் வருவது துரதிர்ஷடத்தின் நிழல் தான். ஆனால் அந்த அவலங்களும் என்னைப் போலவே இளைப்பாறத் துடிக்கின்றன. உன்னிடத்தில்.
After all, என்னைச் சுற்றியிருக்கும் அவலங்கள் என்னை விட பருமனானது தெரியுமா? இதுவும் எனக்கு ஓர் ஆறுதல் தான்.
நீ கேட்கிறாய்.. நான் தேடியது அந்த மூன்று வார்த்தைகளையா என்று?? இல்லை நான் தேடுவது நான்கு வார்த்தைகளை.
மூன்று, காலத்தால் சமைக்கப்பட்டு நான்காகிவிட்டது.. வேடிக்கையாய் இருக்கிறது அல்லவா?
“………………….”
இங்கே என்ன அபத்தமாய் இருக்கிறது என்கிறாயா?
காதலைச் சொல்வது கூட ஒரு காலத்தில் அபத்தமாய் இருந்திருக்கவேண்டும் என்று என் நண்பர் சொல்லியிருக்கிறார்.
ஆம். அது காதல் .. அது அரூபம்.. அது காற்று.. அது… அது தான்
அது இப்போது நான்கு வார்த்தைகளாக..
நான்கு வார்த்தைகளாக மாறும்பொழுது, காதல் தன்னை பரிணமித்திருக்கிறது.. அது தன்னைத் தானே ஜீவிக்கத் தெரிந்திருக்கிறது.
பிரிவுகளுக்கு அங்கீகாரமும், முன்னுரிமையும், வாழ்த்தும் கொடுக்கும் அதிகாரப் பீடங்களாக ஜனநாயகம் என்ற பெயரில்…. மாசாகும் சூழலைக் கண்டு மூக்கைப் பொத்திக்கொள்ள மட்டுமே சட்டம் பிறப்பிக்கின்றது.
காதல் எனும் உணர்வை, உணர்த்த இயலாமல், மொழியின் உதவியை நாடுவதே முதலில் காதலுக்கு காலம் கொடுத்த இறங்குமுகம் தான்.
சொல்லித்தான் புரிய வேண்டும்..
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்லத் தெரிய வேண்டும்
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்ல வேண்டும்
புரிய வேண்டும்
ஏனென்றால் வேண்டும். அது வேண்டும்.
அதற்கும் அது வேண்டும்
இப்போது அது
ஐந்து வார்த்தைகளாகவும் ஆகிறது
”AM IN LOVE WITH YOU” … It’s purely unconditional state.

நீ மறுத்தாலும், பிரிந்தாலும்… “AM IN LOVE” ஆக இருக்கும். மொழி தோற்கும் இடங்கள் உனக்குத் தெரியுமா?
·         பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவது
·         கடவுளைப் பற்றி புரிய வைப்பது
·         உணர்கின்ற காதலை மொழியாக சொல்லிப் பார்ப்பது
என்ன செய்ய முடியும் இந்த அற்ப உயிரியால்.. அவனுக்கு மொழி மட்டுமே ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது.
பால்யத்தில் நம்மோடு நெருங்கி இருந்தவர்களோடு மொழியாலா வாழ்ந்தோம்?
மொழியாலா ஸ்நேகித்தோம்?
விளையாடினோம்?
சண்டையிட்டோம்?
முத்தங்கள் கொடுத்தோம்?
திரும்பப் பெற்றோம்?
ஆனால், அவையெல்லாமே காதல் தான்.. மொழி பிறந்ததும்.. எல்லாவாற்றுக்கும் அந்தந்தப் பெயர் வைக்கத் தெரிந்ததும் விலக ஆரம்பிக்கிறோம். மனிதர்களாகிய நாம் பிரிந்துக் கிடக்கிறோம். சேர்ந்திருக்க வேண்டிய நாம், இத்தனை ஆண்டுகளாய் பார்த்திருக்கவில்லை என்பதே உலகம் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்.
உலகம் மாசுபட்டிருக்கிறது.. மனிதம் மாசுபட்டிருக்கிறது.
அமானுஷ்யமே மீட்க இயன்ற ஒரே சக்தி.
காதலே அமானுஷ்யம்
நீயே என் அமானுஷ்யம்
அதுவும் அமானுஷ்யம்….
உன் பாதங்களை எனக்குக் காட்டாதே. இரண்டு பிரச்சனைகள் வரக்கூடும்..
கவிதை எழுதுவேனா என்று கேட்கிறது வேறு பிரச்சனை…. அது சுவாரஸ்யமற்ற இரக்கமற்ற இலக்கிய உலகத்திற்காக வெட்டப்படப்போகும் காகிதக்கூழ் சூல்கொண்ட மரத்தின் வேதனை.
உன் பாதங்களை எனக்குக் காட்டினால், இருவருக்குப் பிரச்சினை. எனக்கும் ”அது’-க்கும்
நான் பாதங்களை நைஸாக ஸ்பரிஸித்து விடுவேன்
’அது’ உன் இருப்பைக் கண்டுவிடும்… துரத்த ஆரம்பிக்கும்..
ஆகவே நீ அமானுஷ்யமாக இரு..
நான் அமானுஷ்யமாக மாறி உன்னைக் கெஞ்சும் வரை, நீ திமிர்ப் பிடித்தவளாகவாவது நடி!!
ஏனென்றால், நாம் இக்காலத்தின் விதைகள். உன் உணர்வுகளை என்னால் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு இறுக்கமானவளாய் இருக்க வேண்டும்.
*
டெடி பியர், ஆட்டுக்குட்டியாக மாறியதன் பெயர் ரசவாதமா.

“………………….”

!! அது தான் காதலா.. மீண்டும் சொல்கிறேன் கேள்!
*

டெடிபியர் ஆட்டுக்குட்டியாக மாறியது.
இந்தப் பிரபஞ்சத்தில் புதிய நடுகற்களை நட்டு வைத்திருக்கிறாள் நிமினி..
இப்போது பேஸ் கிட்டாரோடு சேர்ந்து, லீட் கிட்டார், ட்ரம்ஸ், சிந்தஸைசர் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.. எல்.ஈ.டி விளக்குகள், பல வண்ணங்களில் ஒளிரும் ஃபவுண்டெயின் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றது.
போதை வஸ்து நிரம்பியிருக்கும் பாட்டிலை வேண்டாமென, ஒரு கிட்டாரிஸ்ட் சுவற்றில் வீசி எறிகிறான். பட்டுத் தெறிக்கிறது அது.. பாட்டும் தெறிக்கின்றது..
He is weird.. just like me..
அந்தக் கலைஞனும் காதலிக்கிறான்… மொழி தேவையில்லை.


*

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அது - 04

எழுதப்படுபவைகளும் வாசிக்கப்படுபவைகளும் விதிவசத்தாலே தான் நிகழ்கிறது என்று முன்னாள் காம்ரேட் ஒருவன் சொன்ன நாளொன்றில் தான் இது நிகழ ஆரம்பித்தது.

எது
அது தான்

சொற்களில் இருக்கின்ற அயற்ச்சிக்கு மொழியையும் பயிற்றுனரையும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை, நாற்பது நாட்களுக்கொருமுறையாவது முடிவெட்டுவதற்கு சலூன் செல்பவர்களால் இவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வெட்டுவது, வளரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதலீட்டு அனுமதி தான். அந்த முன்னாள் காம்ரேடின் பயணத்தில் ஒன்றில் சூனியக்காரி ஒருத்தியைக் கண்டதில் அவன் வியந்ததாகச் சொல்லியிருந்தான்.  அன்றிலிருந்து நான் அவனை நம்ப ஆரம்பித்தேன். அதுவரை இல்லாமல் இப்போதுவரை நான் அவனை காம்ரேட் என அழைக்க ஆரம்பித்தேன். இப்போது அவன் சொன்ன வாக்கியம் எனக்கு முக்கியமாகத் தெரிகிறது

இதில் சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த எழுத்துகளுக்கு ஆதாரமாக அவர் சொன்ன வாக்கியம் அமைவது தான். இன்று தன் ஆதர்ஸங்களின் ஒருவனின் மறைவை அனுஷ்டிப்பதற்காக மதுபுட்டியை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் அவன் என்னோடு பேசினார். அப்போது தான் அந்த வாக்கியத்தை உணர்வுவயப்பட்ட நிலையில் பேசினார். உணர்வுவயப்பட்டால் அதில் பொய் கலந்திருக்கமுடியாது அல்லவா? அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எந்த புத்தகம் வாசிக்கப்படவேண்டும் என்பதை உங்கள் விதி தான் தீர்மானிக்கிறது. என்ன நம்பவில்லை, ஆகச்சிறந்த்தென நீங்கள் நம்பும் ஏதோவொன்றினை விட்டுவிட்டு இப்போது இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை விதி தானே அனுப்பிவைக்கிறது. துரதிர்ஷடமாக இந்த வரிகளில் என் நண்பர் என்று அவரைக் குறிப்பிட்டதால், இவற்றிட்கு கொஞ்சமும் சம்பந்தமற்ற என்னை இந்தப் பக்கங்களில் நுழைத்து விட்டதற்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனென்றால் நான் மட்டும் இங்கே தனியாக வரவில்லை, அதுவும் உடன்வந்துவிட்டது.

ஆர்கெஸ்ட்ராவில் ஒருங்கிணைப்பாளரின் கைகளைப் பார்த்துக் கொண்டே இசைப்பவனாய் என்னை இங்கே எழுதவைத்துக் கொண்டிருக்கும் ’அது’வே, உம்மை மன்றாடிக் கேட்கிறேன் என்னை இந்த சம்பாஷனைகளில் இருந்து உதிர்த்துவிடு, அப்படிச் செய்தால் இதை வாசிப்பவர்களுக்கு உன்னதமானது என்று நம்பும் ஏதோ ஒன்றினை கட்டமைத்துத் தரயியலும். அது இயல்பாகவே என்னை ஏளனமாகப் பார்க்கும், இப்போது அதனிடம் மன்றாடிக் கேட்கும் நிலையில் நான் இறங்கி வந்ததைப் பார்க்கும் போது அதன் சந்தோஷம் பன்மடங்கு பெருகிவிட்டதை உணர்கிறேன்.

வாசிப்பதன் வழியாக வருத்தப்பட்டு பாரஞ் சுமப்பவர்களே, இறைவன் இருப்பதை நம்புங்கள். விதி இருப்பதை நம்புங்கள்.. நீங்கள் வாசிப்பதை நிறுத்திவிட ஊழி மழை பெய்ய ஆரம்பிக்கலாம், பூமி அதிரலாம், கடல் பொங்கலாம் வேறெதுவும் ஆகலாம்… அப்போது உங்களுக்கும் எழுதுவதற்கு நிறைய கிடைக்கலாம். ஆம்..

இலக்கியத்தில் இருக்கும் PATTERN படி நான் இப்போது ஒரு ஃபிளாஷ் பேக் காட்சியைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நான் அந்த பேட்டர்ன்களை நம்பவில்லை, இந்த எழுத்துகள் யாவும் பிழைகள் கூட திருத்தப்படாமல் அப்படியே வரவேண்டும். ப்ரூஃப் ரீடர்கள் இந்த எழுத்துகளை பார்த்தால் விரைப்புவந்த சேவலாய் மாறி இந்த அற்பக் கோழியினை வன்புணர்வு செய்வார்கள். கோழிக்கு முட்டை போடும் ஆசையெல்லாம் வரவில்லை, அது தினமும் ஃபெமினிஸம் பேசும் ஆண்டி ஒருத்தி வீட்டின் கூரைக்கு சென்று வருவதால் அதன் நிலை அப்படி. ப்ரூஃப் ரீடரோ, எடிட்டரோ கைகளால் தொட்டுப்பார்க்காத கன்னியாகத் தான் இவ்வெழுத்துகள் உங்கட்கைகளைத் தேடி வரவேண்டும். ஏனென்றால், என்னால் முடிந்த குறைந்தபட்ச அன்பு அதுமட்டுந்தான். இந்தப் பகுதியை முன்னுரையாக எடுத்துக் கொள்ளுங்கள் இதற்கு முன்னே எழுதியிருக்கும் மூன்று பகுதிகளை ‘அது’ என் மீது செலுத்தி வரும் அதிகாரத்தின் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.


இனி நானும் உங்களுக்கு ஊழிகாலத்தின் கதை ஒன்றினை அறிமுகம் செய்யப்போகிறேன். ஆம் கிட்டதட்ட அதன் விளிம்புக்குள் நின்று கொண்டிருக்கும் நமக்கு அந்த காலத்தை முன் கூட்டியே அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

(முற்றும்)