சனி, 5 மார்ச், 2016

ஆம் இந்த முறை சீமானுக்கு தான்



இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்..

சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும்.
ஆம் ஆதரிக்கின்றேன் என்று சொல்கிறேன். பிடிக்காதவர்கள் இங்கிருந்து கழண்டு கொள்ளலாம்.

ஏனென்றால் நாம் ஓட்டுப் போடும் கட்சி இந்த தேர்தலில் இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற எளிய கணக்கு சலூனிலும், டீக்கடையிலும் அரசியல் பேசும் மக்களின் எளிய நம்பிக்கை.. ஐம்பது ஆண்டுகளில் இரண்டு கட்சிகளைத் தாண்டி வேறு எதுவும் பொது மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது இல்லை. கொள்கை அளவில் பார்த்தால், 1960களுக்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு - ஆரிய எதிர்ப்பு தவிற வேறேதும் பெரிதாக மக்களை பாதிக்கவில்லை. ஈழமும் தான், ஈழம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதை விட, ஏற்படுத்திய பாதிப்புகளை விட, அவ்வுணர்வு முடக்கப்பட்டிருக்கது. நிறைய சந்தர்ப்பங்களில், அதுவும் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நம் காதுகளையும், கவனத்தையும் ஊடகங்கள் திசை திருப்பின.

ஊடகங்கள் என்றால் எல்லா ஊடகங்களும் தான். புன்னகை மன்னன் திரைப்படத்திலிருந்து, அண்மையில் வெளிவந்த பாக்ஸ் நாவல் வரை OVER RATED ஆக ஈழம் குறித்த பார்வைகள் மற்றும் போதனைகள். இவ்வுணர்வை தேர்தலின்போது வாக்களிக்கும் காரணியாக மாற்றவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நுண்ணரசியலில் தான் தமிழ் தேசிய உணர்வின் அடிப்படையிலிருந்தே நசுக்க ஒரு பெரும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் தேசிய உணர்வு என்பது, அடிப்படையில் ஈராயிரமாண்டுகட்கும் முன்பான நம் வரலாற்றிலிருந்து நீள்கின்ற ஒரு தொடர் சிந்தனை… அசோகனை, மௌரிய அரசினை தடுத்து நிறுத்துய “தமிழ் தேசிய சங்காதம்”, மூவேந்தர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பின்காலனியத்தில் பரிணமித்த திராவிடக் கோட்பாட்டில் அந்த தொடர்ச்சி அறுந்துவிட்டது என்றும் சொல்லமுடியும்.

இனவாதியென்று அருவருப்பாகப் பார்க்கப் பழகிக்கொண்டிருக்கும் கணவான்களே.. நீங்கள் இன்னும் இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தால், முக்கியமாக ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். உங்களுக்கு என்று பிரத்யேகமாக இருந்து கொண்டிருக்கும் உங்கள் மதத்தினையோ, தேசியத்தையோ அல்லது சித்தாந்தத்தையோ (வலதோ/இடதோ) முன்வைத்து இந்த மொழியுணர்வை பரிகசித்தால் அது பரிதாபத்திற்குரியது. ஏனென்றால் மொழியுணர்வு மேற்சொன்ன அனைத்தையும் அடக்கியிருப்பது, மொழி ஒரு சமுதாயத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த அடையாளம்.
தொடர்பறுந்து 50 ஆண்டுகள் வரை ஆகிவிட்ட நிலையில், அதனை வரையறுப்பது அத்தனை எளிதான ஒன்றல்ல.. மொழிக்குள் ஒரு பன்மைத்துவம் இருக்கின்றது, பன்மைத்துவம் இருக்கின்ற சமூகத்தின், கலாச்சாரத்தின் தோல் தான் மொழி. 

மொழியை முன்னெடுத்து ஒரு அரசியலைப் பேசுவது என்பது பன்முக பரிமாணங்களோடு அணுகவேண்டிய செயல்.

சீமான் அப்படியான அணுகுமுறையைக் கையாள்கிறார். அவரைத் தலைவராக நான் ஏற்றுக்கொண்டு எழுதவில்லை, பெரியாரியவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த போது, பிராமணர்கள் மீதும் , இந்துத்வர்கள் மீதும் துவேசம் காட்டினார், கம்யுனிஸ்டாக தன்னைக் காட்டிய இடங்களில் எதிர் அரசியல் பேசுவோர்களிடம் துவேசம் காட்டினார், ஈழத்தை முன்வைத்த போது துரோகக் கும்பல்களிடம் எதிர் அரசியலை முன்வைத்தார். அப்போது அவர் சீமானாக மட்டுமே இருந்தார்
நாம் தமிழர் கட்சி அரசியல் கட்சியாகின்றது – கொள்கையாக தமிழ் தேசியம்.
இப்போது நாம் தமிழர் கட்சி – தேர்தலுக்கான அவர்களது உழைப்பு, திட்டங்கள், முன்னெடுப்பு எனப் பார்க்கும் பொழுது. அவர்களது அனுகுமுறையில், அந்தப் போக்கில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவருக்கு மாற்றாக இருக்கும் கட்சிகளாக இருக்கும் .. அதிமுக, திமுக, ம.ந.கூ, பா.ஜ.க ஆகிய கட்சிகள் எடுத்துள்ள அல்லது முன்வைக்கும் கொள்கைகளைக் காட்டிலும் தமிழ் தேசியம் எனக்கு அர்த்தமுள்ள உணர்வாக எனக்குத் தோன்றுகிறது.

யாரையும் வெளியேற்றுவது நோக்கமாகத் தெரியவில்லை, யார் ஆள்வது, ஆள வேண்டியது என்பதைப் பேசும் அரசியல் தான்.
மொத்தக் கட்டுரையின் சாராம்சமாக கொள்கைகளாகப் பிரித்துப் பார்க்கிறேன்.

தலித் என்றாலோ, சிறுபான்மை என்றாலோ ஒடுக்கப்படும்போது எழும் குரல்களில்… நிலம், தொழில், வாழ்வாதாரம், பண்பாடு, கலாச்சாரம், தனிமனித உரிமைகள் என எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழன், தமிழ் இன உணர்வு என்றால் மட்டும் உங்களுக்கு கசக்கிறது இல்லையா??

ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, அரபுப் புரட்சிக் கவிகள் மட்டும் படைப்புகள், தமிழ் தேசியம் பேசினால் அருவருப்பு?

இந்திய அளவில் பேசும் கருத்தியல் புரட்சிவாதிகளைத் தலைவனென்று கொண்டாடலாம், மே17, இளந்தமிழகம், கலகம் அமைப்புகளில் இருந்து ஒலிக்கும் குரல்கள் இனவாதக் குரல்கள்?

விஷயம் இது தான் – எந்த தலைவனோ, கட்சியோ முக்கியம் இல்லை.
தமிழ் தேசியம் ஒரு கருத்தியலாக முன்னெடுத்து வைக்கும் கட்சியை… நான் ஆதரிக்கின்றேன். குறிப்பாக, ஆர்.கே. நகர் தொகுதியின் வேட்பாளருக்காக நான் ஆதரிக்கின்றேன். மற்ற சித்தாந்தங்களை வெறுப்பதற்கான காரணங்கள் தேவையில்லை, தற்பொதைய தேவையை உணர்கிறேன். 

தமிழ் தேசியம் என்பது கனவாகவே இருக்கட்டும்… முதலில் கனவு வரவேண்டும் என்பது தான் என் விருப்பம்….  இந்தக் கனவுக்கான அவசியம் இருக்கிறது.. இப்போதைக்கு நாம் தமிழர் கட்சி அதற்கான மாத்திரைகளைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.
நான் மனிதனாக மட்டுமல்ல, வெறும் உயிரியாக இருக்கவே ஆசைப்படுகின்றேன்.. ஆனால், நான் எந்தப் பெயர் கொண்டு ஒடுக்கப்படுகின்றேனோ, அதைக் கொண்டே தான் எழவேண்டும் என்று நம்புகிறேன்...

ிகாலன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக