சனி, 20 ஜூலை, 2013

பஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்


பஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொல்லப் போனால் focused ஆக எதையும் எழுதாமல் வேறு வேறு தலைப்புகளில் எழுதுவதில் ப்ளாக் ரீடர்ஸ் இந்த 6 மாதங்களில் எனக்கு முன்பிருந்ததை விட 1 மடங்கு அதிகமானார்களே தவிர உறுப்படியாக ஒரு consistency-யுடன் எழுத முடியவில்லை என்ற குறை இருக்கவே செய்கிறது. ஆகவே பஜ்ஜி- சொஜ்ஜி சங்கத்தை களைத்து விட்டு எதையாவது உளறாமல் ஒரு தலைப்பு எடுத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று அவசரகால சபதம் ஒன்றை எடுத்துள்ளேன். So வகைகளை # போட்டு பயன்படுத்தி பகுத்துக் கொள்ளலாம்.


# சிற்பம்/ஓவியம் - ரசனை

எனது பள்ளிக் காலங்களில் எதைப் பார்த்து பயந்து இருந்தேனோ, ஒளிந்து கொண்டேனோ,(அறிவியல் படங்கள் வரையப் பிடிக்காமல் தான் வணிகப் பாடத்தை தேர்ந்தெடுத்தேன்)  இன்று அதே ஓவியங்கள் மீதும் சிற்பங்கள் மீதும் தீராக் காதலோடு இருக்கிறேன். உண்மையில் இதற்காகவாது தேசாந்திரம் சென்று பல கோயில்களையும் சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்கிற  பேராசை என்னுள் இருக்கிறது.

உண்மையில் நான் முதல் முறை மஹாபலிபுரம் வந்த போது, அது ஒரு போரிங்  பிக்னிக் ஸ்பாட்டாகவே எனக்குத் தோன்றியது; “வெறும் சிற்பங்களைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?” என்று தோன்றியது; நண்பர்களோடு சென்று கடற்கரை மணலில் அமர்ந்து பேசிவிட்டு திரும்பியதே போதும் என்று இருந்தது. மற்ற படி பெரும்பான்மையான மக்களைப் போலவே, நாம் பார்க்கும் சிற்பங்களில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தாலே போதும், டிஜிட்டல் யுகத்தில் பிரிண்ட் போட அவசியம் இல்லாததால் சகட்டு மேனிக்கு நிழற்படங்கள் எடுத்துக் கொள்கிறோம். யானையின் தந்தத்தை பிடித்தவாறு, சிங்கத்தில் சவாரி செய்தவாறு,  கருவறைக்குள் சென்று கடவுள் போஸ் கொடுத்தவாறு கடந்து விடுகிறோம் மஹாபலிபுரத்தை. இந்த நகரத்தினை ஓரளவுக்கு களவு செய்யும் காதலர்கள் தான் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.

      ஆனால் முதன் முதலாக சிவகாமியின் சபதம் வாசித்து முடிக்கையிலேயே மீண்டும் மஹாபலிபுரம் செல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். அதை வாசித்த மனநிலை ஒரு ஃபிக்‌ஷனை உள்வாங்கியிருக்கிறது. ஆடும் பெண் சிலைகளில் சிவகாமியைத் தேடினேன்.  ஆயனச் சிற்பியின் உளியின் ஓசை அகச்செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. கருவறைக்குள் இல்லாத தெய்வங்களில் ஏசுவிற்கும் இடம் இருக்குமோ என்ற கல்கியின் உணர்வுகள் வராமல் இல்லை. சரித்திரத்தில் ரோமானியர்களும், பிற நாட்டினர்களும் வணிகம் பொருட்டு பல நூறு வருடங்கள் முன்னரே வந்து சென்ற மண்ணில் கடலலைகள் சரித்திரம் பேசின, ஆனாலும்  இவை எல்லாம் புனைவே. அதுவும், வேறு ஒருவருடைய புனைவு.

     இன்னும் சில சரித்திர புத்தகங்கள் வாசித்தேன், அருமையான கலைஞர்களின் நட்புக் கிட்டியது ஓவியங்கள் குறித்தும் சில புத்தகங்கள் வாசித்தேன். மீண்டும் சென்றேன் மஹாபலிபுரத்திற்கு, ஒரு மன்னன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டியும் தன்னையும், தன் மண்ணின் பெருமை என தான் நம்பியதையும், தன் அரசாட்சியை மக்களுக்கு சொல்ல முடியுமென்றால் அது கலைகளின் வழியே தானே சாத்தியமாகிறது ??. அதனால் தான் பல்லவ நாட்டின் முக்கியமான துறைமுகமாக விளங்கிய இவ்வூரிலேயே இந்தப் பணிகளை அவன் துவங்கியிருக்கிறான் என்று தோன்றியது.

தொடர்ந்து வரும் எல்லா ஞாயிறுகளிலும் மாமல்லபுரம் செல்ல ஆரம்பித்தேன். இந்த நாட்களில் சிற்பங்களோடு இப்பொழுது என்னால் பழகவே முடிகிறது, கலைகளின் வழியே நான் பிரதானமாக எழுதி வரும் இதற்கு சம்பந்தமே இல்லாத பொருளாதார கட்டுரைகளுக்கோ, சமூகக் கட்டுரைகளுக்கோ, அறிவியல் புனைவுகளுக்கோ அந்த சிற்பங்கள் உதவக் கூடும் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. வராக மண்டபத்தில் எதிரொலித்த என் குரலின் மாத்திரைகளில் இருந்த விநோதம் என் கதைகளில் பயன்படலாம்; கடற்கரைக் கோயிலில் ஜலகிரிடை செய்யும் மாய சிற்பங்கள் என் கனவுகளைச் சூறையாடலாம்; அர்ஜுனனனின் தவக் கோலம் என் சுயம் பற்றிய சிந்தனைகளை மறு கட்டமைக்கலாம்; பாண்டவ ரதத்தில் படைக்கப்பட்டிருக்கும் சில காதல் காட்சிகள் என் வாழ்விலும் வரலாம்; நகரத்தை சுற்றியிருக்கும் ஆறு போலே ஒரு அரசியல் என்னைச் சூழலாம். நகரத்திலிருந்து அப்புறப் படுத்தப் பட்டிருக்கும் பல பவுத்த, சமண சின்னங்களைப் போல நான் கூட என் கனவுப் பாதையில் இருந்து தூக்கி எறியப் படலாம் தான்.

இதனால் தான் நான் மாமல்லபுரம் பற்றி கொஞ்சம் பதிவிட விரும்புகிறேன். இவையாவும் என் ரசனைகள். என் நுகர்வு:


01. மஹாபலிபுரம் - திருமூர்த்தி குகை
கோயிலின் வெளித் தோற்றம்
மஹாபலிபுரத்தில் ரசித்துப் பார்ப்பதற்கு என பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளாத இடம் என்றால் அது இந்த திருமூர்த்தி குகை தான். அர்ஜுனன் தபசு செய்யும் குன்றின் கீழ் திசையில் இருக்கின்றது, இந்தக் கோயிலின் புறத்தோற்றம் மூன்று அறைகளாகத் தெரியும்.இதற்கு இடபுறம் துர்கையின் சிலை ஒன்று இருக்கிறது. இது 07ஆம் நூற்றாண்டில் உருவானது என்று கல்வெட்டு கூறுகிறது. திருமூர்த்தி என்பது சிவனைக் குறிக்கும், மூன்று அறைகளிலும் ஒரே மாதிரியான புடைப்புச் சிற்பங்கள் பார்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றும். அதன் மைய அறையில் ஒரு லிங்கம் பதியப்பட்டிருக்கும்.

முதலில் நாங்கள் சென்ற குழுவில் இருந்தவர்கள் பார்ப்பதற்கு மூன்றுமே ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்கள் உற்று கவனித்தால் தான் தெரியும், மூன்று அறைகளிலும் உள்ள சிற்பங்களில் இருக்கும் சிலைகள் காட்சிப்படுத்துபவை என்ன என்று மையத்தில் நின்ற நிலையில் ஒரு சிலை, இட, வல புறங்களில் அமர்ந்த நிலையில் இரு சிலைகள். மையத்தில் இருக்கும் சிலை திருமூர்த்தி - சிவன் என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடியும். முதல் அறையில் சிவனுக்கு இட புறம் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையின் நெற்றியில் இருக்கும் நாமம் இன்னும் சிதிலமடையாததால் (மற்ற அறைகளில் இருக்கும் சிற்பங்களில் நாமம் தெரியவில்லை) விஷ்னு என்று கண்டு கொள்ளலாம்.

பின்னர் விஷ்னுவிற்கு சமமான ஆண் தெய்வமாக பிரம்மன் ஒருவனே இருக்க முடியும் (சைவ மரபில்) என்பது தெளிவு.  ஆக, இந்த மூன்று அறைகளையும் மாற்றி மாற்றி கவனிக்கும் பொழுது. இந்த குகை ஒரு ஒளிக்காட்சி(அனிமேஷன்) போன்ற ஒரு பிம்பத்தை மனதில் ஏற்படுத்துகிறது.

புராணங்களின் அறிவு எனக்கு பெரிதாக  இல்லை தான், மற்ற மதத்தில் இருப்பவர்களுக்கு கிடைப்பது போல் (அவர்களாக இறைவனுக்கு என்று நாட்களை ஒதுக்குவது), என் மதம் என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோளையோ, கட்டளையினையோ பிறப்பித்தது இல்லை. சில நேரங்களில் பெரியவர்கள் மூலம் அதை ஊட்டும் பொழுது, நான் அதை மறுத்தும்  வெளி வந்து விடுகிறேன்.

ஆயினும் இவற்றை தெரிந்து கொள்ள குழந்தைமை எனும் அற்புதப் பருவம்  இடம் கொடுத்தது, கதைகளின் வடிவில் என் அன்னையிடம், என் பாட்டியிடம் இருந்தன .அங்கிருந்து மனதில் புதைந்த பாத்திரங்கள் பின்னர் இந்த நாள் வரை காத்திருந்து வெளியே எழுந்தது . யார் பெரியவன் என்கிற போட்டியில் சிவனின் ஆதி, அந்தம் தேடி புறப்பட்ட விஷ்னுவும், பிரம்மனும் இறுதியில் தோற்று, தன் தோல்வியை ஒப்புக் கொண்டு , சரணடைந்து, வரம் பெற்ற காட்சிகளாய் விரிந்தது இந்த சிற்பங்கள். காமிக்ஸ் எனும் படக் கதை போல, ஒரு புராணக் கதையினை எலிமையாக நினைவுகளிலில் இருந்து பின்னர் மீட்டெளச் செய்தது.

கீழேயுள்ள படத்தில் கவனித்தால் தெரியும், அந்த மூன்று காட்சிகளிலும், முதல் அறையில் சிவனிடம் உபதேசம் பெருவது போலவும், அடுத்த  காட்சியில் பூஜிப்பது(நமஸ்கரிப்பது போலவும்), மூன்றாம் அறையில் இறைவன் அருள் செய்வது போலவும் முடிகிறது.


நம்மைப் போன்றவர்கள், சிற்பங்களை ரசிப்பதற்கு அதன் தொழிற்நுட்பங்கள் பற்றிய அறிவு கூட தேவையில்லை, அது உணர்த்தும், காட்சி படுத்தும் செய்திகள், வரலாறு பற்றிய பின்புலம் அறிந்திருந்தாலே போதும். மஹாபலிபுரத்தில் இப்படி நிறையக் கதைகள் இருக்கின்றன, இங்கே இருந்து நோவா வெள்ளம் பற்றி கூட சிந்திக்க முடிகின்றது (வரும் தொடர்களில் இது பற்றி பதிவு செய்கிறேன்).

நீங்கள் யாரேனும் திருமூர்த்தி குகையில் இதைப் போன்ற காட்சியை உணர்ந்து இருந்தால் சொல்லுங்கள், ஒருவேளை உங்களுக்கு அவர் வேறு கடவுளர் போலவோ!! அல்லது வேறு புராணம் என்று கூடத் தெரியலாம். கலை அப்படிப் பட்டது தான், அது அத்தனை பரிமாணங்கள் உடையது.


அடுத்த பகுதியில் வராக மண்டபம் பற்றி காண்போம்.

சிற்பம்/ஓவியம் - ரசனை
தொடரும்....






முதல் அறை

                                           இரண்டாம் அறை                                               மூன்றாம் அறை

6 கருத்துகள்:

  1. தங்களது புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    அப்ப இனிமேல் பஜ்ஜி பார்சல் கிடைக்காதா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பரே..!!!!

    பெயரில் என்ன இருக்கிறது, வகை பிரித்து எழுதுவதற்காகத் தான் அப்படிப் பதிவிட்டேன்....!!

    ஒரு கமெண்ட் கிடைத்தாலே மூன்று நாஙு பாகம் எழுதும் சந்தோஷம் கிடைத்துவிடும் .. அதற்காகவே நன்றி

    பதிலளிநீக்கு
  3. வர்ணனையில் அந்த கவியரசையும் மிஞ்சி விட்டிர்கள் போங்கள் ...PBSC Engineering college

    பதிலளிநீக்கு
  4. தங்கள் அன்பிற்கு நன்றி சகோதரர்... இன்னும் தூரங்கள் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான ,காலத்தால் (இதுவரை)அழிக்கமுடியாத பல்லவன் வடித்துவைத்த குடைவரைச் சிற்பங்களைப் பற்றி அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் ,பதிவிற்கு நன்றிகள் ஆயிரம் ....கோவையிலிருந்து சோமு .

    பதிலளிநீக்கு

  6. மிக்க நன்றி திரு.சோம சுந்தரம். தொடர் முழுமையும் வாசித்து கருத்தளித்தால் மகிழ்வுறுவேன் நன்றி

    Pls go thru the following link for full thread on Mahabalipuram

    http://kalidasanj.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு