வியாழன், 3 மே, 2012

காதலும்,காதல் நிமித்தமும்பிணைந்திருப்பதால் 
அழுந்தப் பிடித்திருக்கும்  
என் முரட்டுக் கரங்கள் மீது,
வியர்த்திருக்கும் 
உன் சிறு விரலும், நகமும் 
என் விரலின் 
நிக்கோடின் கரைகளை அழித்தது!
அது புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.....

எனக்காகவே பெய்யும் 
மழையில் கரைவதர்க்குப் 
பிடித்திருந்தும்;
ஒரு குடையை ஏந்தி 
உன்னுடன் நடந்தால் ;
உன் மீது பட்டுத் தெறிக்கும் 
ஒரு துளி மழை நீரில் 
'உயிர்த் தாகம்' தீரும் என்று 
காத்திருந்தேன் .
அது இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.... 

ஆரத் தழுவ ஆசையிருந்தும் 
நீயாக தலை சாயும்வரை,
என் நெஞ்சம் காத்திருக்க,
தீராத வடுவை இதயத்தில் 
நெருப்பாய்க் கொளுத்தின,  
அற்பக் காகிதங்களில் எழுதிய 
உன் வர்க்கச் சமன்பாடுகள்.
இது ஊடலும் ஊடல் நிமித்தமும் ...


அடுத்தமுறை சூடாததால் 
பூக்காத என் வீட்டு ரோஜாவும் !!
முத்தங்கள் இல்லாமல் 
வாடிய என் இதய மலரும் !!
உன் மணமேடையின்
அலங்காரத்தில் நீ பார்த்துக் 
கொண்டிருப்பாய் இந்நேரம்  !!
இது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் 

இச்சைகள் மீட்டும் 
காதல் வீணையின் ஆதார 
சுருதி காமம் தான் என்றாலும் ,
மோகங்கள் பொருந்திய 
மீட்டலில் தான் வாழ்க்கை 
இசையாகிறது ..
நான் ஒரு அறுந்த தந்திக்கம்பி!!
விறகுக்கு தேவைப்படும் 
பாலையின் ஒற்றை இருப்பை மரம் !!
பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக