செவ்வாய், 29 டிசம்பர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 91 சிற்பம் சொல்லும் ஆருடம்





தமிழகம் 2004க்குப் பிறகு சந்தித்திருக்கும் இயற்கைப் பேரிடருக்கு வெறும் இயற்கையை மட்டும் காரணம் சொல்ல முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தாலும், உலகம் முழுவதும் சென்னை எனும் மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகளைப் பார்த்தது. அதே வேளையில் பாரிஸில் நடைபெற்ற சூழலியல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளுக்கான உதாரணமாகவும், பாடுபொருளாகவும் மாறியது. இந்திய ஊடகங்களால் மிக மிகத் தாமதமாகவே கண்டுகொள்ளப்பட்ட இப்பேரிடர், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை ஊடகங்கள் மட்டுமின்றி பிரதானமாக சமூக ஊடகங்கள் வழியும் அதன் வழியாக இயங்கிய தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள், என்.ஜி.ஓக்கள் எனத் தமிழகத்தில் நடைபெற்ற காட்சிகளில் புதிய அனுபவங்களை உருவாக்கியிருக்கிறது. கட்செவி அஞ்சலிலிருந்தும், சமூக ஊடகங்கள் வழியாகவும் முக்கிய ஊடகங்கள் வழியாகவும் பலயிடங்களில் ஒலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சொற்றொடரை இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது.

 “வரலாறு காணாத வெள்ளம்”.

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிகவும் பயன்படும் சொற்றொடராகவும் மாறிப் போனதில், அவை வளர்ச்சியடையா அல்லது வளர்ந்து வரும் நாடுகளை அச்சுருத்தப் பயன்படுத்தும் சொற்றொடராகவும் மாறிப் போயிருப்பதை நம்மில் அநேகம் பேர் உணர்வதில்லை. “கார்பன் கிரெடிட்” போன்ற சூழலை வைத்து ஆடப்படும் சூதாட்டங்களைப் பற்றிப் பேசும் வெளி கூட நம்மிடம் இல்லாமலிருக்கிறது. இது அதிகாரம் மிக்கவர்கள் அதிகாரத்திற்குக் கீழ் உள்ளவர்களைத் தொடர்ந்து அச்சுருத்தி வைத்திருக்க உதவும் மிகப்பழமையான யுக்திதான் மற்றொரு சொற்றொடர்

உலகம் அழியப் போகின்றது

  ரக்‌ஷிக்க இருப்பது யார்??

  • இயேசுவா, விஷ்ணுவா ?
  • அமெரிக்காவா, சீனாவா ? (ருஷ்யாவா என்ற கேள்வியைக் கேட்க முடியாத எதார்த்தத்தில் இருக்கின்றமைக்கு மன்னிக்க)

உண்மையில் வரலாறாக நமக்குக் கிடைத்தவற்றின் வழியாக இந்தப் பெருமழை ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிகவும் அதிகமானதுதான் என்றாலும் அதையும் நிறுத்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது. அப்படியென்றால் வரலாறு இன்றைக்கும் நம்பத்தகுந்த மதிப்புகளால் கட்டப்பட்டிருந்தாலும் முற்றிலும் உண்மையானவற்றை மட்டுமே சொல்கின்றது என்று நம்புவதற்கில்லை. ஆனாலும் அறிவியல் பூர்வமான அளவீடுகள், புள்ளியியல் விவரங்கள், அணுகுமுறை (Yardsticks, Approach, Datas) ஆகியன மட்டுமே இங்கே கணக்கில் கொள்ளப்படும்.

ஆனால் அசலான கலை, இலக்கியங்கள் வெறுமனே இதனால் கிடைக்கும் தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை, அது தன் சாளரங்களால், புனைவுகளால் பாதை அமைத்துப் பல சமூகப் பிரச்சினைகளை, அமைப்புகளை அகழ்ந்தெடுக்கிறது, அடையாளம் காண்கிறது/ பயன்படுத்துகிறது/ கட்டுடைக்கிறது/ நிர்மாணம் செய்கிறது படைப்புகளின் வழி மாற்றங்களைக் கட்டமைக்க முயல்கிறது.

ஏற்கனவே இருக்கும் கலை வடிவங்களை DECODE செய்வது இத்தகைய முயற்சிகளில் ஒன்று தான். அது நமக்கு விட்டுச் சென்றிருக்கும் செய்தி சமகாலத்துடன் பொருத்திப் பார்க்க முடிகின்றதா என்று? ம.ரா ஐயாவிடம் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் போது ஒரு செய்தி கிடைத்தது அது நெடுநல்வாடையின் பாடல் ஒன்றிலிருந்து.

வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை . . (நெடுநல்வாடை)


இதில் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென என்கிற வரியில் “புதுப்பெயல்” எனும் சொல் புதுமழை எனப் பொருள்பட்டாலும். உரையாசிரியர் வழியாக அதுவரை கிடைத்திருந்தச் செய்தியாக  புதுப்பெயலென்பது அந்தப் பருவத்தின் முதல் மழையாக மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டி, ஆனால் ஒரேநாளில் 350மீமீ மழையைப் புதிதாக்க் கண்டிருக்கின்ற நமக்குப் புதுப்பெயலுக்கான பொருள் மாறியிருக்கிறது என்று சொல்லும் பொழுது, வேறு சில கலைப்படைப்புகளையும் அதன் மடிப்புகளையும் விரித்துப்பார்க்க முடிகின்றதா என்று தோன்றியது.

மேலும் அந்தப் பாடல் ஒர் இடப்பெயர்வையும் காட்சிப்படுத்துகிறது. கோவலர் என்கிற சமூகத்தின் இடப்பெயர்வு அது. மாடுகள் தங்கள் கன்றுகளுக்குப் பால் கொடுக்க மறுக்கின்றன, புள்ளினங்கள் மரங்களிலிருந்து வீழ்ந்து சாகின்றன, மந்திகள் குளிரில் கூனிக்குறுகின, விலங்குகள் மேய்தலை மறக்கின்றன என்கிற செய்தி அது ஒரு சாதாரண வெள்ளம் அல்ல என்று உணரச்செய்கின்றது. இவை எல்லாவற்றையும் “புதுப்பெயல்” என்கிற சொல்லில் கிடைத்த சாவியைக் கொண்டுத் திறந்துப் பார்க்க முடிகின்றது. 2000 - 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்றிருக்கும் பாடல் ஒரு பெருமழையைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் போது. இந்தப் பாடலைச் சுமந்தபடியே உலகம் முழுவதும் ஒரு சுற்று வலம் வர இடமளிக்கவும் செய்கிறது, இது பெருமழை, பெருவெள்ளம், ஊழிக்கால மழை என்று விரிகிறது.

இதிகாச, புராணங்களையும் அதன் தாக்கத்தால் எழுந்த நுண்கலைகளிலிருந்து வடிவங்களாகக் கிடைத்தவற்றிலிருந்து பெருவெள்ளக் கதையை உலகம் முழுவதும் கேட்கமுடிகின்றது என்பது தனியொரு கோட்பாடாகக் கூடப் பார்க்க முடிகிறது, இதில் பல்மதத் தன்மை அடங்கியிருக்கிறது (Syncretism), நவீன அரசியல், மேலாண்மை தத்துவமாகவும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது குடிமக்களின் அச்சமே மூலதனமாகவும், அதிகாரத்தை உறுதி செய்யப் பயன்படுவதாகவும் இருக்கின்றது.

பொதுவான காலத்திற்கு முந்தைய (COMMON ERA) காலத்தைச் சேர்ந்த பத்துப்பாட்டுப் பாடலில் இருந்து கிடைக்கும் குறிப்பு நோவா வெள்ளம் என்று சொல்லப்படும் காலக்கட்டத்தைக் குறிக்கின்றதா என்றால் அடிப்படையில் நெடுநல்வாடை பெருமழையைப் பற்றிக் குறிக்கும் பாடல் அவ்வளவே. ஆனால் படைப்புகள் வழியாகச் சொல்லப்படும் மனிதயினத்தின் தவிப்பு, சூழலின் மாறுபாடுகள் போன்ற செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவற்றினிலிருந்து சமகாலத்திற்கு தேவையான தகவல்கள் அல்லது எச்சரிக்கைகள் கிடைக்கலாம். இல்லாவிட்டாலும் வரலாற்றிலேயே முதன்முறை என்கிற அரசியல் பொய்களையாவது நிறுத்துப் பார்க்க முடியும்.

நோவா வெள்ளம் போன்ற அழிவுக் கோட்பாட்டை அநேக மதங்கள் சொல்லியிருக்கும் விதம் மிக மிக ஆச்சரியமூட்டுமளவுக்கு ஒற்றுமையாக இருக்கின்றது. உலகம் முழுக்க உள்ள புராணங்களில் இருக்கும் இத்தகைய ஒற்றுமைகள் இருப்பதை முற்றிலுமாக யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் உலகம் முழுமைக்கும் உள்ள புராணங்கள் ஒரே ஒரு உண்மையைத்தான் மறைத்துக் (உணர்த்தி) கொண்டிருக்கின்றன. இந்தப் புராணங்களுக்கு மத்தியில் இருக்கும், ஒற்றுமைதான் மனித இனத்தையே ஒன்றாக இணைக்கிறது. நோவா வெள்ளம் பற்றிய கதை பைபிளின் வழியே உலகம் முழுதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இதற்கு முன்னோடியான ஒரு புராணம் இருக்கிறது. புராணம்தான் முன்னோடியே தவிர இந்த நோவா வெள்ளம் என்று குறிப்பிடப்படும் காலத்திற்கு இணையாக மச்சாவதாரத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

உலக அளவில் உள்ளப் பெருவெள்ளக் குறிப்புகளைப் பற்றிய செய்திகளை இன்று தெரிந்து கொள்ள DILUGE GEOLOGY என்கிற ஒர் அறிவியல் துறை இருக்கின்றது. அது நோவா வெள்ளம் எனறு சொல்லப்படும் ஜெனிஸிஸ் புத்தகத்தை ஓரளவுக்கு  ஏற்றுக்கொள்கிறது. அது இஸ்ரேலைப் போல, எகிப்திய, தென்னமெரிக்க, மெசபடோமிய, சிந்துச் சமவெளிகளில் உலவிய/உலவி வரும் புராணங்களில் இருக்கும் பெருவெள்ளக் கதைகளைப் போன்ற பாதிப்புகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கின்றது என்று சொல்கிறது.

அந்தப் பெருவெள்ளத்தில் உலகமே அழியப்போகுமளவு வெள்ளம் ஏற்பட்டு இருந்ததாகவும், அந்த நிலத்தின் மிகவும் உயர்ந்த குணங்களைப் படைத்த ஒரு மனிதனின் குடும்பம் மட்டும் தன் குடும்பத்தாரையும் ஒரு பெரிய படகில் ஏற்றிவிட்டு அவர்கள் பின்னர் வாழப்போகும் நிலத்தில் வாழவேண்டிய உயிர்களின் இணையை மட்டும் அதில் பத்திரப்படுத்தித் தப்பித்துக் கொள்ள இறைவன் வாய்ப்பளித்ததாக ஒரு பொதுவான கதையைப் பண்டைய நாகரிகங்களின் பல்வேறு நிலத்திலிருந்து காண முடிகிறது. அதைக் கலை வடிவங்கள் மூலமாக நாம் இன்றும் காண முடியும்

  •    சுமேரிய அரசனான ஜயுசூத்ராவின் (ZIUSUDRA) பிழைத்தல் இந்த வரிசையில் முதலாவதாகப் பார்க்க முடிகிறது.
  •            சுமேரிய நாகரிகத்தில் கில்காமெஷ் என்றழைக்கப்படும் இதிகாசத்தில் பெருவெள்ளம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
  • பைபிளில் நமக்குக் கிடைக்கும் நோவா பெருவெள்ளம்.
  • நோவா பெருவெள்ளம் பற்றிய தத்தமது சிந்தாந்தங்களுக்கேற்ப – யூத, கிறுத்துவ, இசுலாமிய, யாழிடிப் பழங்குடி கதைகள்.
  • தென்னமெரிக்காவில் கிடைக்கும் சில TRIBAL ARTகளின் வழி கிட்டிய தகவல்களின் படி, இந்நம்பிக்கையும், ஆச்சமும் மிகப்பெரிய அளவில் மாயன்களிடமும் இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது.
  • இந்தியாவில் என்று சொல்வதை விட சிந்துச் சமவெளிப் பகுதியிலும், தமிழகப் பகுதியிலும் என இருவேறு நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டால் மச்ச அவதாரம் எனும் புராணம் நோவோ வெள்ளக் கதைக்கு ஒப்பான கதையினையே சொல்கிறது.
  •   குமரிக் கண்டம் எனும் நிலமழிந்த பேரழிவுக் கதைகளை நாம் அறியாதவர்களாக இருக்க மாட்டோம் என்றாலும் அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படாமலேயிருக்கிறது என்பது வேறு விசயம். ஆனால் கதைகளாக இவற்றுடன் இணைக்க இடமிருக்கிறது
  •   மச்ச அவதாரத்தினை அடுத்து திருமால் தனது எட்டாவது அவதாரத்திலும் கூட்த் தன் இனமான யாதவர்களைக் காப்பாற்றும் கதையும் இதே தன்மையில் காண முடிகிறது என்றாலும் இது பேரிடராக மாறவில்லை தவிர்க்கப் படுகின்றது. இயற்கையை வெல்லும் திறனை ஒரு GOD MAN எடுத்துக் கொள்கிறான். யாதவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். (அது முதல் சுற்று எனக் கொள்க)

பத்துப்பாட்டில் வரும் நெடுநல்வாடைப் பாடலும் இப்படியான ஒர் அழிவின் அச்சத்தால் நிகழ்ந்த புலம்பெயர்தலையே குறிக்கின்றது என்று புரிந்து கொள்வதற்கும் இடமிருக்கிறது. இதுபோன்ற பாடல்களின் நோக்கம் மக்களிடம் அச்சத்தை விளைவிக்க முடியுமா என்றும் இருந்திருக்கலாம். பயத்தில் நடுங்குவோர்கள் தானே அபய முத்திரைகளைக் கண்டு வணங்குவோர்களாக மாறுவர்.

 இதில் கோவர்த்தனகிரியை நினைவுக்கு கொண்டு வர, 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கம் பெற்றிருந்த கலைப்படைப்பான மாமல்லையின் குடைவரைச் சிற்பத் தொகுதியை நினைக்கும் பொழுது, தன் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த பல்லவனின் மனநிலை இந்தச் சிற்பத்தொகுதியை உருவாக்க அவனைத் தூண்டியிருக்கலாம். வெவ்வேறு வகையான பொருளாதார அமைப்பைச் சேர்ந்த தன் நிலத்து மக்களுடன் பசுவினங்கள், மந்தி, நாய், மான் , சிம்மம் என சகல ஜீவ ராசிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தவனாய் இருக்கும் கிருஷ்ணனும் மலை ஏந்திய படி நிற்க, அக்குடைவரையே மலையாக மாற்றப்பட்டு அதைப் பார்க்க வருபவர்களையும் தன் நிழலுக்குள் கொண்டு வரும் அதிகாரம் கொண்டவனாகவும், பாதுகாப்பு அளிப்பவனாகவும் இருக்க,  இது கிருஷ்ணன் செய்யும் மாயமா ? அல்லது சிற்பியின் படைப்பாக்கமா என்கிற மயக்க நிலை ஒரு புறமிருக்கட்டும். பாகவதத்திலிருந்தும், உத்தவ கீதையிலிருந்தும் கிடைக்கப் பெற்ற செய்திகளைக் கொண்டு ஒரு விசயத்தை உணர்த்துகின்றன இப்பெரும் படைப்புகள் முதலில் மக்களுக்கு இந்த உலகம் ஷ்ருஷ்டி என்றும் அது ஆபத்தைச் சந்திக்கும் என்று சொல்லப்படுகின்றன. அச்சம் தான் ஒரு தலைவனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கும்.

இயற்கையின் பேரிடர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது, அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. பிரபஞ்சம் தன்னைத் தானே உருவாக்கியது என்பதுதான் அநேக மேதைகள் ஏற்றுக்கொண்ட அறிவியல் கோட்பாடு, ஜைன, பௌத்த மதங்கள் கூட படைப்பாளி என்கிற ஒருவனையும், படைப்புக் கோட்பாட்டையும் மறுத்து உருவானவையே.

பிரபஞ்சம் தனக்குத் தேவையானவற்றை தானே உருவாக்கிக் கொண்டும், கழித்துக் கொண்டும் இருக்கின்றது. உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகம் என்று நம்பப்படும் பூமியின் செயலும் அதுதான், தன் இருப்பில் அடிக்கடி நிலத்தைக் கூட்டிக் கழித்து சமன்படுத்திக் கொள்கிறது. புயல்களைக் கொண்டு அழிவு, வளம் இரண்டையும் உருவாக்குகிறது.

வாழ்க்கைச் சக்கரத்தில், சூழலில், உணவுச்சங்கிலியில் இடையூறு நிகழ ஆரம்பிக்கும் போது தான் டைனசர்களின் இனமே அழிந்திருக்க வேண்டும். மனிதர்களின் எண்ணிக்கை கூட அவ்வப்பொழுது பேரிடர்கள் சமன்படுத்தப் படுகிறது. என்ன மனிதன் செயற்கையாக அழிவுகளையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டான். புதிய உலகம் (New World Order) என்கிற பெரிய கனவுகள், பிரபஞ்சத்தில் வேறெங்காவது புலம்பெயரும் கனவையும் ஆராய்கிறான், சோதிக்கின்றான். சாவுகளைத் தடுக்கிறான், உணவுச் சங்கலியைத் தன் கையிலெடுத்துக் கொள்கின்றான். மழையை, நதியை, கடலை, காற்றினை மாசு படுத்துகின்றான் கட்டுப்படுத்துகின்றான். ஆனால் உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல.

கோவர்த்தனகிரியில் பெருமழையில் அழிந்துபட வேண்டிய மக்களை, இயற்கையின் பிடியிலிருந்து ஒரு GODMAN காப்பாற்றுகிறான். ஆனால் ஏற்கனவே கிடைத்த ரிஷியின் சாபத்தாலும், பின்னர் காந்தாரியின் சாபத்தாலும், நாட்டின் யாதவ குலமே ஒருவருக்கொருவர் பொறாமை கொண்ட மனிதர்களாகத் தனித் தனியாகப் போரிட்டு மாண்டுகொண்டிருக்கும் தன்னினம் அழியப் போகின்றது என்பதை அறிகிறான் கிருஷ்ணன். பலராமன் தவத்திற்குள் சென்று விடுகிறான். இறுதியில் கோவர்த்தனகிரியில் இயற்கை தன் நோக்கம் பொய்த்ததால், மற்றொரு வாய்ப்பிற்குக் காத்திருந்த கடல் துவாரகையைத் தனக்குள் எடுத்துக் கொள்கிறது.

காவிரியும் கொள்ளிடமும் தன் போக்கினை மாற்றியிருக்கும் செய்தியை நாம் இலக்கியங்கள் வாயிலாகக் கேட்டறிந்திருக்கிறோம். இது போன்ற பேரிடர்களில் பிழைத்துக் கொள்வதற்கு வழியாக அவற்றை ஏற்றுக் கொண்டு, அதற்குத் தயராக இருந்த அரசின் நிர்வாகத்தில் வாழத் தெரிந்திருந்த மக்களிடம் நல்ல கலையும் கட்டுமானமும் இருந்தது. இன்று அவர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள், உலகின் அதிகமான சதவீத நகரமயமாதலைக் கொண்டிருக்கின்ற நகரத்திற்கு வெளியே உழவு செய்துகொண்டிருந்த நிலங்களும், உதவிக்கொண்டிருந்த ஏரிகளும் குடியிருப்பாய் மாறிப் போக,– மழை நீர்ச் சேமிப்பு போன்ற கட்டாயங்களுக்கு எதிராக செயலாற்றும் மனிதனுக்கு அரசின் இலவச போதையும், பேரம்கேட்க இயலாத போதையும் அரசே உருவாக்கித் தர. ஒட்டுமொத்த நாசத்தை விளைவிக்காத கருணை மிக்க இயற்கை அச்சுருத்திப் பார்க்கத்தான் இம்மழை பெய்தது. மனிதனே உருவாக்கிக் கொண்ட இப்பேரிடரில் பெரும்பாலோரால் சாமர்த்தியமாகப் பிழைக்கவும் முடிகின்றது பலர் பலிகடாக்களும் ஆகின்றார்கள்.

அதுவும் சொல்லப் போனால் பேரிடர் என்று சொல்லுமளவுக்கு இயற்கையின் நோக்கம் நடந்தேறவில்லை, இந்த மரண எண்ணிக்கை சில வருடங்களுக்குப் பின்னர் ஒரு ரயில் விபத்தின் கணக்கோடு ஒப்பிடப்படும் பொழுது அது சாதாரணமாகத் தோன்றலாம். அதுகூடப் பரவாயில்லை யாரோ ஒரு அரசியல் தலைவரின் சிறைவாசத்திற்கோ அல்லது இயற்கை எய்துதலுக்கோ உயிர் விடப் போகும் எண்ணிக்கை முன்னர் மிக மிகக் குறைவாக இருக்கப் போகின்றது. இதுவும் இயல்பான இறப்புக் கணக்கு தான். இன்னும் சாதி, மதக் கலவரங்கள், தொழிற்சாலை விபத்துகள் அல்லது யுத்தம் எனக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒருவேளை நாமே பேரிடர் நடந்திருக்கக்கூடும் என்பதை மறந்தேவிட்டிருக்கலாம்.

ஆனால் இது போன்ற காலங்களில் மண்ணை வளமாக்கப் பிறக்கின்ற, வெள்ள நீரில் வடிந்து வரும் மண்புழுக்கள் மண்ணிற்குள் செல்ல முடியாமல் தார்ச்சாலைகளில் சிக்கிக்கொண்டு மனிதனின் கால்கள் பட்டும், சக்கரங்கள் பட்டும் நசுங்கிச் சாகின்றதைப் பார்க்கும் பொழுது ஒருவருக்கொருவர் தங்கள் சமூகத்தின் பெருமையை, மனிதத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும் போற்றிப் புகழ்வது துவாரகாவின் நிலையைப் போலவே இப்பெருநகரத்தையே மாற்றக் கூடும்

அரசின் முகமும், சகமனிதர்களின் மனிதநேயமும் ஒட்டப்பட்டிருந்த நிவாரணப்பொருட்கள் ஏற்படுத்தியிருக்கும் மாசும், குப்பையும் ஒருவேளை அப்புறப்படுத்தப்பட்டால் எப்படியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில்தான் கொட்டப்படும். கொடுத்த பணத்தை வாங்கும் நடுத்தரக் குடும்பங்களில் பழுதாய்ப் போன செல்போன்கள் புதிதாக மாறப் போகின்றன.


மனிதம் மட்டும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கட்டும்!! 

-ஜீவ கரிகாலன்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நகுலன் எழுதாத ஃபேஸ்புக் கவிதை (மெயின் டைட்டில்)

(Staturory warning
1.Subject to editing risks at any point of time
2.Subject to spelling mistakes
3.Content not suitable for all especially those who believe them are poets)

(சப் டைட்டில்) இறுதியில் CTRL + V செய்தால் மதி!!

இப்படியாக இறுதியில்
சரவணன் பேட்டர்ன் ஒன்றைக் கண்டு பிடித்தான்
சரவணன் கவிதை ஒன்றை எழுதினான்
மேலே சொன்ன வரிகள் பல்லவியாக மாறின 
”யாரவள்”
”ஷட் அப்”
சரவணன் பேட்டர்ன் ஒன்றைக் கண்டு பிடித்தான்
சரவணன் கவிதை ஒன்றை எழுதினான்
மேலே சொன்ன வரிகள் பல்லவியாக மாறின 

{பல்லவியை பாடிக்கினு அடுத்த சரணம்} 
CTRL + C ஐ சரவணன் அழுத்தினால்
2 லைக்ஸ் எப்பவாது கமெண்ட்ஸ் 
CTRL + C ஐ நான் அழுத்தினால்
10 லைக்ஸ் மூனு கமெண்ட்ஸ் (சரவணனும் தான்) 

{பல்லவியை பாடிண்டு அடுத்த சரணம்}

CTRL + C ஐ “!!!” அழுத்தினால்
411 லைக்ஸ் 64 கமெண்ட்ஸ் (நானும் சரவணனும் BLOCKED)
 CTRL + C எல்லாம் என்ன பிரமாதம்
”???” ஒரே ஒரு “.” வைத்தால் போதும்
1599 லைக்ஸ் 456 கமெண்ட்ஸ்
சரவணன் : அருமை.. கவிதை மாதிரி இருக்கு
   “J
நான் : புல்லரிக்குதுங்க
    “J
{பல்லவியப் பாடேம்ல இன்னொரு வாட்டி}


பகுதி – 2 ( இது வேற வெர்ஷன் )

இப்பொழுதும் அதே பல்லவி தான்

“இந்த புத்தகச் சந்தைக்கு
சரவணனின் நூல் வெளிவருகிறது”

நான் : யோவ் ராயல்டி கேளுய்யா

சரவணன் :
சார் டெம்போவெல்லாம் வச்சுக் கடத்தியிருக்கேன்

!!! : அதுக்கு
சரவணன் : ராயல்டிலாம் வேணாம்
         ரைட் க்ளிக் டிஸேபிள் பண்ணி,
           கண்ட்ரோல் பட்டனைக்
           கழட்டி கொடுங்க

!!! : முட்டப்பய – கீபோர்ட்ல ரெண்டு கண்ட்ரோல் பட்டன் ஒன்னு தான் கேட்டான்


பின் குறிப்பு அல்லது அடிவாங்குவதற்கு முன் குறிப்பு
( நானே சரவணன், நானே !!!, நானே ???, நானே கவிஞன், நானே பப்ளிஷர், நான் நானாக மட்டுமில்லை)


கடைசியா இன்னொரு தபா ஒரு தலைப்பு
“Sorry  சரவணன்”


ஏதோ ஒன்றில் PATTERNகளை தீவியமாக உருவாக்கி வரும் நண்பருக்கு டெடிகேட் செய்கிறேன்.

“சாவுடா!!”

புதன், 16 டிசம்பர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 90 // MATRIX படமும் பழைய பன்னீர் செல்வமும்

- ஜீவ கரிகாலன்


பெரும்பாலும் அர்விந், இளங்கோ, ரமேஷ் இவர்களுடன் பேசும்போதோ அல்லது வேறுயாருடனுமோ  உலகசினிமா, உலக இலக்கியம் பற்றிப் பேசும் நாட்களில் நான் வெறும் MLAவாகத் தான் நடந்து கொண்டிருக்க வேண்டியிருகிறது. MLA என்றால் Mouth Looking Agent. ஆங்கிலப் படங்களோ வேறெந்த மொழிப்படங்களோ பார்ப்பது என்றால் பெரும்பாலும் வன்முறை, திகில் படங்களைத் தவிர்த்து விடுவதுண்டு. மார்வெல் வரிசை, அறிவியல் புனைவு அல்லது ஃபேண்டசி படங்கள் தான் பெரும்பாலும் பார்த்து வருவது. ரொம்ப காலமாகப் பார்க்க முடியாமல் போன படங்களில் ஒன்று தான் மேட்ரிக்ஸ் வரிசை. இன்று வரை அவற்றை முழுமையாகப் பார்க்கவில்லை. ஆயினும், அதில் ஒரு காட்சி ஒன்றைப் பார்க்கும் பொழுது பிரமித்தேன். இக்கட்டிலிருக்கும் கதாநாயகனுக்கு(நியோ) உபாயமாக இரண்டு மாத்திரைகள் வழங்கப்படும், இக்கட்டிலிருந்து தப்பித்துக்கொள்ள அவற்றில் ஏதாவது ஒன்றை அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று நீல நிற மாத்திரை, மற்றொன்று சிவப்பு நிற மாத்திரை. நீல நிற மாத்திரை அவனது இக்கட்டிலிருந்து கிடைக்கப்பெறும் உடனடி நிவாரணத்திற்கானது, சிவப்பு மாத்திரை அதுவரை அவன் இனம்காண முடியாத தன்னைச் சூழந்திருக்கும் பிரச்சினையை முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கலாம். அவன் இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கிறான்? கதாநாயகன் ஒரு கணம் கூட யோசிக்காது செயல்படுகிறான்.

எனக்கும் சில பிரச்சினைகள் என திங்களன்று ஒரு ஆலோசகரை சந்தித்தேன். உளவியல் ரீதியாக சில அவஸ்தகைகள், அதுவே உடலையும் பாதிக்க ஆரம்பித்த நேரம். மிகச்சரியான நேரத்தில் மீட்கப்பட்டதாய் ஒரு உணர்வு அதனால் தான் எழுத முடிகிறது என்று கூட சொல்லலாம். அந்த 10-13 நாட்களாக இருந்து வந்த பாதிப்பில் என்னை மீட்பதற்கு அவர் என்னிடம் சொன்ன உபாயத்தை ஏற்றேன். அன்றிரவு தான் இந்தப் படத்தைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சிக்குப் பிறகு படத்தைத் தொடர்ந்து பார்ப்பதற்கு முடியவில்லை. அந்த ஆலோசகரிடமிருந்து எனக்குக் கிடைத்தது நீல நிற மாத்திரையா, சிவப்பு நிற மாத்திரையா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

//
"You take the blue pill, the story ends. You wake up in your bed and believe whatever you want to believe. You take the red pill, you stay in wonderland, and I show you how deep the rabbit hole goes." The term redpill refers to a human that is aware of the true nature of the Matrix.
//

கதாநாயகன் என்றால் ஒரு கணம் கூட யோசிக்கத் தேவையில்லை உடனடியாகச் செயல்படலாம், ஆனால் நான் கதாநாயகன் இல்லையே. ஆனால் அந்த ஆலோசகரைச் சந்தித்த பின்னே. மனம் இயல்பாக இருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கிறது. ‘இயல்பு, நம்பிக்கை’ இவ்விரண்டு சொற்களையுமே நிறைய ஆராய வேண்டியிருக்கிறது. மாறுவது தானே இயல்பு என்று யோசிக்க வைப்பது – இயல்பு எனும் சொல்லின் தத்துவமாக இருக்க முடியுமா? இல்லை. மாற்றங்களை எதிர்நோக்கும் போது தான் இயல்பாக இல்லை என்று சொல்வது தேங்கியிருக்கும், வளர்ச்சியுறாத நிலையைத் தான் இயல்பென உணர்த்துகிறதா? இயல்பு என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை காலத்திற்கேற்ப ஏற்றுக் கொள்வதாகவும் – எதிர்பார்க்காத மாற்றங்கள் இயல்புக்கு எதிரானதாகவும் நம்பப்படுகிறதா? அப்படியென்றால் நம்பப்படுவது தான் இயல்பா? சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது என்று சொல்வது உண்மையில் என்ன பொருள். மனிதர்கள் மீண்டும் ஒரு பெருநிலத்தை சீரழிக்கத் துவங்கிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோமா. இந்தப் பெருநிலம் உண்மையில் மனிதர்களுக்கானது மட்டுமா.

இதுபோன்ற பெருவெள்ளம் நிகழ்த்திய வரலாற்றில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது, புதிய கழிமுகங்கள், ஆறு தன் போக்கினை மாற்றிக் கொள்ளுதல், நீரூற்று, சுனைகள், அருவிகள் என புதிதாக தோன்றுபவை இருக்கின்றன தானே!! ஒரு இடத்திலிருக்கும் வளம் மற்றொரு இடத்திற்குப் புலம்பெயர்ந்திருக்கும் தானே. அவை தானே இயல்பு. புயல் ஒரு இயல்பான விசயம் தானே. வெற்றிடத்தை நிரப்பும் காற்று தானே நாளை புயலாக மாறுகிறது. புயலோ, சுழிக்காற்றோ, சூறாவளியோ ஒரு பக்கம் அழிவும் இன்னொரு பக்கம் வளமும் உருவாக்குவது இயல்பு தானே. ஆனால் நாம் இவற்றை இயல்பென நம்பவில்லை.

இரண்டு கிலோமீட்டார் நீளத்திற்கு வடிந்து கொண்டிருக்கும் வெள்ள நீரில் நடந்து செல்கையில் என் கால்களின் கீழிருந்த பல்லாயிரக்கணக்கான மண்புழுக்கள் 10 வருடங்களுங்கு முன்பு விவசாய நிலங்களாய் இருந்த அந்தக் குடியிருப்பினை வளமாக்கியிருக்க வேண்டியது இயல்பாக நடந்திருக்க வேண்டிய ஒன்று தான். ஆனால் தார்ச் சாலைகளைக் கடக்க முடியாமல் ஜல்லிகளில் சிக்குண்டு மடிந்து பூமிக்குள் போய்ச் சேரமுடியாது மிதிபட்டும், சக்கரங்களில் ஒட்டியும் நிகழும் அவற்றின் மரணம் இயல்பானது அல்ல. பேரிடரால் இறந்து போன மனிதர்களின் எண்ணிக்கையைக் கண்டு மட்டுமே அலருவது அவ்வாறே இயல்பானது அல்ல.

joseph gross


சொல்லப் போனால் பேரிடர் என்று சொல்லுமளவுக்கு இயற்கையின் நோக்கம் நடந்தேறவில்லை, இந்த மரண எண்ணிக்கை சில வருடங்களுக்குப் பின்னர் ஒரு ரயில் விபத்தின் கணக்கோடு ஒப்பிடப்படும் பொழுது அது சாதாரணமாகத் தோன்றலாம். அதுகூடப் பரவாயில்லை யாரோ ஒரு அரசியல் தலைவரின் சிறைவாசத்திற்கோ அல்லது இயற்கை எய்துதலுக்கோ உயிர் விடப் போகும் எண்ணிக்கை முன்னர் மிக மிகக் குறைவாக இருக்கப் போகின்றது. இதுவும் இயல்பான இறப்புக் கணக்கு தான். இன்னும் சாதி, மதக் கலவரங்கள், தொழிற்சாலை விபத்துகள் அல்லது யுத்தம் என கணக்கிட்டுப் பார்த்தால், ஒருவேளை நானே பேரிடர் நடந்திருக்ககூடும் என்பதை மறந்தேவிட்டிருப்பேன். ஏனென்றால் அது தான் இயல்பு.

ஆழ்மனதில் இயல்பாக இல்லாத ஒன்று எதையோ உள்வாங்கிச் சொல்ல சொல்கிறது அது என்னவென்றால், தன் நோக்கத்தை இயற்கை நிறைவேற்றியே தீரும் என்பது தான். தான் எடுத்துக் கொள்ள வேண்டிய கணக்குகுகளில் தவறு நிகழ்ந்தால், மீண்டும் முயன்று பார்க்காமலா போகும் அதில் உபரியாகவோ, வட்டியாகவோ கூட எண்ணிக்கை கூடலாம். அது இயல்பான ஒன்று தான். அந்த கணக்கில் நானும் இருக்கலாம், ஏனென்றால் இன்றைய இயல்பான வாழ்க்கைகுத் திரும்பிய சென்னை வாசிகளில் நானும் தானே ஒருவன்.

பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையிலிருந்து, தாம்பரம்-வேளச்சேரி சாலையை இணைக்கும் சாலை வழியாக நேற்று வந்து கொண்டிருந்த போது. ஏரிகள் மீது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அபார்ட்மென்ட் கட்டுமானங்களில் ஒரு கட்டடத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவனுக்கு ஏற்பட்ட விபத்தில், அவனை அள்ளிக் கொண்டு பறக்கும் எத்தனிப்பில் கோவிளம்பாக்கம் சிக்னலில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸில் அவனது மரணம் நிகழ்ந்து கொண்டிருப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான் 15-12-2015 செவ்வாய்க் கிழமை அன்று என்னைப் போலவே சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அரசாங்கத்தையும், சமுதாயத்தையும் கு.பட்சமாக சகமனிதன் வரை குற்றம் காணும் என் பார்வை இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. நானும் சென்னையும் பழைய பன்னீர்செல்வமாகத் திரும்பி வர உத்தேசித்திருக்கிறோம். நீல நிற மாத்திரையை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

(கட்டுரை நிறைவடைகிறது….)

தொண்டையைக் கடந்து செல்லாமல்
சிக்கிக் கொண்ட
நீல நிற மாத்திரையை
என்ன செய்யட்டும் பைரவி,

நீலகண்டனாக நான் மாற வேண்டும்.
என் கழுத்தை நெறி.

நீ தான் என் சிவப்பு மாத்திரை

செவ்வாய், 1 டிசம்பர், 2015

சட்டம் வரையறுத்த மரியாதை நிமித்தம்



தேசிய கீதத்திற்கு
மரியாதை செலுத்தாதது குற்றமில்லை,
எந்த மதத்தின்
பூஜாதிஸ்தோத்திரதொழுகை
சப்தங்களுங்கும்,
புனிதமாக்கப் பட்ட
மொழியை, இனத்தைப்
போற்றுமுணர்ச்சிக் கவிகளுக்கு
நீங்கள் கோஷம் போடுவது
அவசியமில்லை…
எந்தப் புனிதங்களும் இல்லா உலகில்,
யாரையும் மதிக்கத் தேவையில்லை.

ஆனால் அந்த
வார்டு கவுன்சிலருக்கு நீங்கள்
மரியாதை செலுத்தாவிடின்

இன்றிரவுக்குள் கொல்லப்படலாம்