சனி, 30 மார்ச், 2013

மரணம் - 1

இப்பொழுது நான் மரணம் பற்றிக் கேட்கப் போகிறேன், பேசப் போகிறேன், எனக்கு நானே நிறைய விவாதிக்கப் போகிறேன் .. சுவாரஸ்யம் பற்றிய அக்கறை இதற்கு தேவைப் படாது என்கிற முன் முடிவை வைத்து எழுதப் போகிறேன். இது எந்த இசத்தை நோக்கி என்னை இட்டுச் செல்லும் என்கிற கேள்வி மட்டும் அழுத்தமாய்.

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி



கடந்து செல்லுதல்



வாழ்வில் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம், திரிந்து கொண்டே, நகர்ந்து கொண்டே இருக்கின்றோம், பயணப் பட்டுக் கொண்டிருக்கிறோம், சுற்றி வருகிறோம் இவை எல்லோராலும் முடிகிறது, ஆனால் கடந்து செல்லத் தான் முடிவதில்லை... முதலில் சொன்ன எல்லாவற்றிற்கும் இயக்கம் என்ற பொருள் படும் ஒரே அர்த்தம் தான் இருக்கின்றது. ஆனால் கடந்து வருதல் என்பது பல அர்த்தங்கள் உடையது, அவற்றிற்கு பல கோணங்கள் உண்டு. மற்ற சொற்கள் யாவுக்கும் இல்லாத உணார்வு கடந்து வருதலுக்கு உண்டு, அதற்குள் வலி இருக்கின்றது, வைராக்கியம், தெளிவு, அறிவு, ஞானம், முதிர்ச்சி, கணம், அனுபவம் என நிரம்பியிருக்கிறது.

வாழ்வில் ஒன்றைக் கடந்து வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
நான் பார்த்த மனிதர்களைக் கொண்டு அவர்கள் கடந்த விசயங்களை அவதானித்து......
*மது, புகை போன்ற தீய பழக்கங்களை அறவே கடந்து வருபவனின் மனம் பக்தியில் திளைத்திருக்கிறது.
*காதலை, தோல்வியை, பிரிவை கடந்து வருபவன் மனிதர்களை நம்புவதை கைவிடுகிறான்
*தொழிலில், போட்டியை, சரிவை, வெற்றி-தோல்வியைக் கடந்து வருபவன் நிலைத்து நிற்கிறான்
*நட்பை, உதவியை, துரோகத்தை கடந்து வருபவன் இயல்பை ஏற்றுக் கொள்கிறான்
*மரணத்தைக் கடந்து வருபவன்..............................................


மரணத்தை எப்படி கடந்து செல்ல முடியும்..

மரணம் என்ன ஏற்படுத்தும், ஒரு இழப்பை அல்லது ஒரு வெற்றிடத்தை.

நம்முடைய காதலோ, நட்போ, உறவோ யாரோ ஒருவர், அவர்கள் இடம் மாறும் போதோ, பணிக்கு செல்லும் போதோ, அல்லது திருமணத்திலோ, மண முறிவிலோ அல்லது வேலைக்கு செல்லும் போதோ, வெளிநாடு செல்லும்போதோ நாம் இதே போல் ஒரு இழப்பையும், வெற்றிடத்தையும் உணரலாம். நம் வாழ்க்கையில் அவர்கள் ‘பிரிவு’ மட்டும் ஒரு மாற்றமாக இருந்தால் அது இழப்பு தான். ஆனால் அதுவே வேலைக்கு செல்பவருக்கோ, படிப்பிற்காக வேறு ஊர், அல்லது பணி மாற்றம் ஆனவர்களுக்கோ முற்றிலுமாக மாற்றம் வந்து விடுகிறது. அந்தப் புதிய சூழல், ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மீது ஒரு ஆர்வத்தைக்(excitement) கொடுக்கிறது. அந்த மாற்றம் ஆர்வத்திற்கு ஏற்ப இல்லாமல் ஏமாற்றமடைந்தாலொழிய அவர்களுக்கு வெற்றிடமோ, இழப்போ இருக்காது.

மரணமும் அது போலத் தான், அது வெற்றிடமும், இழப்பும் ஈடுகட்ட முடியாத துக்கம் ஒன்றைத் தந்து விடுகின்றது. ஆனால் நேர்பவர்களுக்கு ? ”யார் அறிவார்?”. மேற்கண்ட கூற்றின் படியே மரணமும் ஒரு excitement ஆக இயற்கையாக மரணமடையும் பலருக்கு இருக்கின்றது என்று நான் அறிகிறேன். நம் கலாச்சாரங்களில் பக்தி இலக்கியத்திலோ, மத நம்பிக்கைகளிலோ மரணம் முழுமையாக ஏற்கப்பட்டு விட்டது. எல்லோரும் நல்ல சாவுஎன்ற வார்த்தைக்கு உடன்பட்டிருக்கின்றனர். இந்த excitement பற்றி உணர்ந்து தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் பகிர????

 மரணங்களில் சிலருக்கு மட்டும் வலியும், வெற்றிடமும், இழப்புமாக இருக்க, பலருக்கு அது ஒரு தரிசனமாகத் தான் இருக்கின்றது. இப்படித்தான் என் சிறு வயதில் கூட என் தாத்தாவின் மரணத்தை என்னால் உணர முடியாது போனது.  “அவர் முடியாது இருக்கிறார், உடனே புறப்பட்டு வரவும் என்று போன் அழைப்பு வந்திருந்தது. நாங்கள் எங்களுடைய சொந்த ஊருக்குக் கிளம்பினோம். ஆனால் எனக்கு ஊருக்குச் செல்கிறேன் என்ற மகிழ்ச்சி தான் இருந்தது. நானும், என் தம்பியும் ஊரைப் பற்றிய கனவில் தான் இருந்தோம்.  “அம்மாவிடமும் “அத்தைவந்திருப்பாரா? அண்ணா வந்திருப்பானா? அம்மு அங்கே தானே இருக்கா? சிவாவும் வருவான்ல என்ற படி பயணித்திருந்தேன்.

கம்பீரமாய் நடந்து செல்பவர், படுத்தபடி இருக்கிறார் என்று பார்த்த போது அது ஒரு காய்ச்சல் போன்ற ஒன்றாகத் தான் தோன்றியது, எல்லோரும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு ஸ்பூனில் பாலை எடுத்து அவருக்கு ஊட்டும் பொழுது என் முறை எப்பொழுது என்றபடி தான் இருந்தேன்.அவருக்கு ஊட்டும் பொழுது அது அவர் பசி போக்கும் என்ற நம்பிக்கையில் ஊற்றினேன். ஊற்றி முடித்து வரும் பொழுது என் நெற்றிக்கு யாரோ முத்தம் வைத்திருந்தனர்.

அன்றிரவு தூங்கச் சென்றேன், அழுகை ஒலியால் என் வீட்டுப் பெண்கள் ஓலமிட்டு என்னை எழுப்ப, நான் திரு திருவென முழிப்பதைக் கண்டு “தாத்தா செத்துப் போயிட்டார் என்றும் பின்னர் சாமிக்கிட்ட போயிட்டார் என்றும் சொன்னார்கள். தாத்தாவைக் குளிப்பாட்டி, ஒரு நாற்காலியில் அமர வைத்து மாலையிட்டிருந்தனர். போய் வணங்கச் சொன்னார்கள் பயமாய் இருந்தது, கால்களைத் தொட்டுப் பார்த்தேன், தாத்தாவுக்கு சந்தனம், குங்குமம், விபூதி இட்டிருந்தார்கள், தாத்தா கடவுள் இல்லை என்று சொன்ன சிவப்புத் துண்டுக்காரர்களில் அந்த பிராந்தியத்தின் முக்கியமானவர் என்று தெரியாததால், வெறுமனே தொட்டுப் பார்த்துவிட்டி நகர்ந்து விட்டேன். என் கவனம் எல்லாம் விடுமுறையில் வந்திருந்த என் அத்தைப் பையன், அக்கள், அண்ணனிடம், மதினிமார்களிடமும் தான் இருந்தது. ஆனால் என் அத்தைப் பையன் சிவாவைத் தவிர எல்லோரும் அழுதுக் கொண்டிருந்தனர். நான் எனது அத்தைப் பையனுடன் சேர்ந்து நாளை உனக்கு லீவுதானே என்று விசாரித்து தெரிந்து கொண்டேன், குறைந்தது ஒரு வாரம் நாம இங்கே தான் இருப்போம் என்றான். நாளை என்ன விளையாடலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். அவன் நகரவாசி அவனுக்கு என்னை விட நிறையத் தெரியும் என்று என் அனுமானம். நாங்கள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டோம்.

தாத்தாவைக் காண அன்று ஊரே ஒன்று கூடி வந்தது, பல பெண்கள் விழுந்துப் புரண்டனர். சில பெண்களைப் பார்க்க எனக்கு சிரிப்புத் தான் வந்தது. ஆனால் நான் சிரிக்கக் கூடாது என்றும் உணர்ந்திருந்தேன். கொட்டு மேளம் எல்லாம் கொண்டு வந்தார்கள், அவர்கள் வாசிக்க ஆரம்பித்த உடனே எனக்கு ஏதோ பயம் வந்து விட்டது. என் அண்ணனும் (பெரியப்பா மகன்), அம்மு மதினி, அக்கா எல்லோரும் சத்தம் போட்டு அழுதுக் கொண்டிருந்தனர். அப்போ நாமும் அழனுமா என்று யாரிடமாவது கேட்கணும் போலிருந்தது. ஆனால் சிவாவோடு வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தேன், என் தாத்தா மீது சிவப்பு, சுத்தியல், அறுவாள் கொடி போர்த்தப்பட்டது. பெரிய, பெரிய மாலைகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன, நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம்.

எனக்கு ஏறகனவே உடம்பு சரியில்லாமல் இருந்ததால்,  பக்கத்து வீட்டிலிருந்து எனக்கு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்தார்கள், பிஸ்கட்டும் கொடுத்தார்கள். “இன்னும் கொஞ்ச நேரத்தில் தாத்தவை எடுத்து விடுவார்கள்” என்று சிவா சொன்னான். ”எடுத்துக் கொண்டு போய் எரித்து விடுவார்கள்” என்றும் சொன்னான். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது தாத்தாவை எரிப்பார்கள் என்று சொல்லும் போது இதயம் படக் படக் என்று அடிக்கத் தொடங்கியது. சங்கு சப்தம் கேட்கும் போதெல்லாம் அழுதிடுவேனோ என்று பயந்தேன். சாங்கியத்தின் ஊடே என்னை அழைத்து கைகளில் சில நெல் மணிகளை கொடுத்து வாயில் போடச் சொன்னார்கள் என் தாத்தவைப் பார்க்க பயமாகவும், பாவமாகவும் இருந்தது, கண்களில் நீர் முட்டியது, சிறுநீரும் வந்துவிட்டது.

அம்மாவைக் காணவில்லை, பக்கத்து விட்டு ராஜி அக்கா என் கண்ணீரைத் துடைத்து விட்டு,  “உனக்கு தான் உடம்பு சரியில்லையே!! தாத்தாவை எடுக்கும் பொழுது நீயும் கூடே செல்ல வேண்டாம், வா நம் வீட்டிற்குஎன்று அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவள் கை பற்றி தள்ளாடியபடி கூடவே சென்றேன். தாத்தாவுக்கு என் தம்பி செய்ததாய் சொன்ன சடங்குகளை நான் செய்யவில்லை, தாத்தாவை எடுக்கும் பொழுது நீயிருந்தால் உன் உடம்பு தாங்காது சின்னப் பையன் அல்லவா என்று என்னை ராஜி அக்காவிடன் அனுப்பியிருந்தார்கள்.

அக்காவின் கைப் பிடித்து நடந்து வருகையில் ஒரு கணம் என் வீட்டைத் திரும்பிப் பார்த்தேன்.... நான்கரை மணி வெயிலில், பெயர்ந்திருந்த மண் சுவர் கொண்ட பெரிய வீட்டிலன், இரு புறமும் பெரிய திண்ணைகள் கொண்ட படிகளில் என் தாத்தா தன் ஜிப்பாவை சுருட்டி விட்ட படி இறங்கி வரும் அழகை, இன்று என் தாத்தவைப் பற்றி ஒரு நண்பரின் நினைவுகளில் கடந்து வந்திருக்கிறேன் என்று உணர்ந்திருக்கிறேன்.

என் தாத்தா இன்னும் உயிரோடிருந்தால், நாங்கள் எப்படி இருந்திருப்போம், தாத்தா எல்லோரையும் விட என்னையும் என் தம்பியையும் நேசித்திருபார் என்றெல்லாம் என் அம்மா சொல்லியிருக்கிறார், அவர் சொல்லும் கெட்ட வார்த்தையிலிருந்து, அவர் நடை, அவரைப் பற்றிய விமர்சனம், அவர் செய்த நற்செயல், அவர் ஏமாளித்தனம், அவர் சொல்லும் மனக் கணக்கு, ஆடு, புலி ஆட்டம், பிளாஸ்டிக் பால் கிரிக்கெட் என்று எல்லா நினைவுகளும் அவர் போட்டோவோடு சேர்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றது....

புதன், 27 மார்ச், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி 16- ஊடகமும் முகநூலும்



*விஸ்வரூபம் பட விவகாரத்தில் செய்திப் பிச்சைக்காக இங்கேயே டெண்ட் அடித்த ஊடகங்கள், ஈழம் விசயத்தில் மாணவர்களின் உணர்வையும், போராட்டத்தின் அம்சங்களையும், கோரிக்கைகளையும் ஒளிபரப்பியதா? இன்று IPL கை வைத்ததும் குதிக்கின்றன..






*கூடங்குளம் பற்றி பேசினால் இந்தியாவின் மின் பற்றாக்குறை எனவும், மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தமிழக மீனவர்களின் பிரச்சனை என்று பெரிதாகக் கண்டு கொள்வது இல்லை, இன்று வரை.அதிலும் கேரள் மீனவர்களுக்காக மத்திய அரசும், ஊடகங்களும் எடுத்துக் கொண்ட அக்கறையை நம் நிலையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் வருகிறது.






*இந்து, துக்ளக் போன்ற பத்திரிக்கைகளையும் அதன் செய்திகளையும் CNN IBN பயன் படுத்துகிறதோ, ஏன் இருக்காது? CNN-IBN Chief News Editor சுஹாசினி ஹெய்டர் மாண்புமிகு சுனாசானாவின் மகள் என்பது போதுமான காரணம் தானே..






*NDTV, CNN-IBN போன்ற செய்தி வலைதளங்களில் பார்க்கும் பொழுது தான் தெரிகிறது. பிற மாநிலங்களில் தமிழன் மீது இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.






*எல்லாவற்றிற்கும் மேலே இருக்கும் தலையாயப் பிரச்சனை நமது மாநிலத்தின் நிலை சன் டீவீ ஒரு அப்பட்டமான வியாபாரி, மற்ற எல்லா சேனல்களும் துதி பாடிக்ளாகவே வலம் வருகின்றனர். புதிய தலைமுறை, முகநூலைத் தவிர வேறு வழிகள் இல்லை செய்திகள் பரப்பிட.




* முகநூலை சரியாகப் பயன்படுத்திய வேண்டிய காலம் இது எனபதை முதலில் உணர வேண்டும்.


*வெறும் வணிக நோக்கினை மனதில் வைத்து தமிழர்களையும் , அவர்கள் நலன்களையும் சிறுமை படுத்தும் ஊடகங்கள் , தமிழ் தேசியவாதிகள் மற்றும் காங்கிரஸை விட பிரிவினை கோரவேண்டிய நிர்பந்தத்தை திணிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை


* தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து வரும் வட இந்தியச் செய்தி ஊடகங்களுக்கு இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிர்வினை, கருத்துகள் பதிவதன் மூலம், இன்னும் நாம் இந்தியாவின் தென் திசை மூலையில் தான் இருக்கிறோம் என்று தெரியப் படுத்துவோம்....


எகிப்தில், லிபியாவில், ஈரானில் எல்லாம் புரட்சி வர முதன்மையானக் காரணமாக முகநூல் இருந்தது எனும் செய்தி, டில்லி பெண் பாலியல் பலாத்காரத்தில் எழுந்த போராட்டத்தில் நாமும் பார்த்திருப்போம். இன்று மாணவர்கள்  போரட்டத்திற்கு நாமும் உதவி செய்துக் கொண்டிருக்கிறோம், இதனால் தான் முகநூல் எனும் மாபெரும் ஊடகத்தை சரியான வழியில் பயன்படுத்துதல் அவசியமாகிறது. அதே சமயம் இணையம் வாயிலாகக் கொண்டு செல்லும் செய்தி மிக எளிதாகவும் சென்றடைகிறது... வாருங்கள் பதிவிடுவோம்...................







சனி, 23 மார்ச், 2013

# tag கதைகள் (part -2)

# tag கதைகள் (part -1)


###07
நள்ளிரவு வரை கடிதம் எழுதியது நீதான்
அவள் கைகள் கிழித்துப் போட்ட துண்டுகளில்
எப்படி என் பெயர் இருக்கின்றது?


###08
ஒற்றை வார்த்தை பேசியதிற்கா அந்தரத்தில் பறக்கிறாய்
விழுந்துவிடாதே எனக்கு நாளையும் அலுவலகம் உண்டு


###09
நான் கிட்டாரை வாசிப்பது போல் நோண்டுவது,
அவளைப் பற்றிய உன் புலம்பல்களைத் தவிர்க்கவே.
ஆனால் எனக்குத் தெரியாது - இன்று
நீ ஒரு முழுப் பாடலை அப்லோடு செய்துவிட்டாய் என்று



###10
கோயிலுக்கு செல்வது எனக்கு பிடிக்கும் தான்
ஆனால் நீ சிற்பங்களைப் பார்த்தால் ஒட்டிக் கொள்கிறாய்
பின்னர் அன்றிரவெல்லாம் உளியின் சத்தமும் அவளுடைய முனகலும்


###11
கடற்கரை மணலில் நான், அலைகளில் நீ, மணற் கோலங்களில் அவள்
யாரும் எதுவும் செய்யவில்லை, எல்லாம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது,
இன்றும் அப்படியே இருக்கின்றது. நான் மட்டும் வீடு திரும்புகிறேன்


###12
எண்ணிக்கைகள் ஒழுங்காக இருக்கின்றது என்று பெருமிதம் – நான்
ஒழுங்காக இருப்பது தான் சோம்பேறித்தனம் –இது நீ
ஆம். காதல் இதனால் தான் எனக்குக் கைகூடவில்லை

###13
உன்னைக் கொன்றுவிட எண்ணிதான், அவளிடம் என் காதலை சொன்னேன்
அவளோ “கொஞ்சம் அவகாசம் கேட்கிறாள்
 இன்றும் உன் எள்ளலுக்கு நான் தான் ஆளாகிறேன்

###14
கவிதையில் தான் நான் உனை வென்று விட்டேன் என்று நினைத்தேன்
நீயோ என்னைப் பரிதாபமாக பார்க்கிறாய்.. அதுவும் சரிதான்                     
என் பாடுபொருளுக்கு தான் நாளை திருமணமாயிற்றே

- ஜீவ.கரிகாலன்



வெள்ளி, 15 மார்ச், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி 15 - கவர்ச்சி உடையும் தடையும்


டெல்லியில் நேர்ந்த பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பின் இப்பொழுது தொடர்ந்து பெண்கள் மீதான் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பொது மக்களின் மீதும் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஒவ்வொருவரும் அலச வேண்டிய, கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை சூழலாக ஊடகங்கள் உருவாக்கி விட்டன. பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பரவலாக எல்லோருமே கருத்து ஒன்றை வைக்கும் அளவிற்கு சூழல் உருவாகிவிட்டது.

இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு பல பிரிவுகள் தங்கள் கொள்கைகளை தங்கள் வழியில் பரப்புகின்றனர். ஒரு பக்கம் நீதி கேட்டு இது போன்ற குற்றச் செயல் புரிவோருக்கு அதிகப் பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற போராட்டம், இன்னொரு பக்கம் சூழலின் கருவியாகத் தான் சமூகக் குற்றங்கள் நடைபெருகின்றன. ஆதலால், மரண தண்டனையை இவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று மற்றொரு புறம். பெண்களுக்கான பாதுகாப்பை முன்வைத்து மத்திய அரசும் தனி சட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்தப் பிரச்சனை ஏற்படக் காரணங்களை விவாதிக்கும் பொழுதெல்லாம் மிக முக்கியமாக ஒரு சர்ச்சை வந்து விடுகிறது அது தான் உடைகள். உடைகள் விசயத்தில் வரும் விவாதங்கள் தான் அதிகமான அளவு முக்கியத்துவம் பெருகிறது.

Don't Teach Me How To Dress, Tell your Son Don't Rape" என்கிற அட்டைகளை தாங்கியிருக்கும் பெண்ணிய வாசகங்கள் எவ்வளவு தூரம் சமகாலத்தின் தீர்வு என்று எடுத்துக் கொள்ள முடியும் என்கிற வினாவிற்கு பெண்ணிய வாதிகளிடமிருந்து நடைமுறைக்கு தக்க பதில் இன்னும் வரவில்லை. நாகரிகமடைந்துவிட்ட சமூகம் என்று கல்வி, அறிவியல், விஞ்ஞானம், தொழிற்நுட்பம் என இந்தக் கணினி யுகத்தில் எந்த பெற்றோரும் தம் மகனை பாலியல் வன்முறை செய்ய கற்றுக் கொடுப்பதில்லை.Tell your Son How To Treat Women”- சமூகத்தில் ஒருவன் பெண்களிடம் வன்முறை செய்யத் தூண்ட எத்தனைக் காரணங்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன?? சினிமா, ஊடகங்கள், மதுக்கடை, போதைப் பொருள், கூடாநட்பு, இந்தப் பட்டியலில் ஆபாசமான உடைகளை மட்டும் சேர்க்கலாமா??

இது போன்ற கேள்விகளுக்கு, இரு தரப்பு பதில்களும் வருமுன்னே பெண்களின் உடைபற்றி பேசுபவர்களை ஆணாதிக்கவாதி, நாகரிமற்ற, கிராமவாசிகளாக, காட்டுமிராண்டிகளாக, பழமைவாதிகளாக சித்தரித்து தடுக்கும் விமர்சனங்கள் வந்து விடுகின்றன. அப்படி தடுக்கும் பொழுது முக்கியமாக மேலை நாட்டு பெண்ணியக் கருத்துகளும், அவர்கள் உடைகளுக்கான சுதந்திரம், அரசியல் பங்களிப்பு என்று கதைகட்டவும் ஆரம்பிக்கின்றனர்.  


பல புள்ளிவிவரங்கள் வாரியாக பெண்கள் அதிகம் சுதந்திரமாக நடமாடும் தேசங்கள் என பெண்ணியவாதிகள் கொண்டாடும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பெண்கள் மீதான வன்முறைப் பட்டியல் மற்றும் புள்ளிவிவரங்களைப் பார்க்கும் பொழுது அவர்கள் கூற்று தவறாகிப் போகிறது.
  1. அமெரிக்காவிலுள்ள மிசௌரி மாகாணத்தில் பெண்களின் மேலாடை கண்ணியமாக இருக்க வேண்டும் என்று.Dress Code வகுத்துள்ளது –பிப்ரவரி -7
  2. இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்சைட் மாஹாணத்தில் மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர்கள் உடையில் ஆபாசம் இருந்தால் பணிநீக்கம் செய்யப் படுவர் – டெலிகிராஃப் செய்தி (மேலும் அவர்கள் டாட்டூ, முடிகளை கலரிங் செய்வது போன்றவையும் தடை செய்யப் பட்டது)
  3. சென்ற வருடம் US ஏர்லைனில் லாஸ்வேகஸில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஒரு பெண்மணிக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.- தி சன், இங்கிலாந்து
  4. சென்ற வருடம் நடந்த ஐரோப்பிய செஸ் போட்டியில் கவர்ச்சியாக ஆடை அணிந்து வர தடை விதித்தது
  5. இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, உலகப் புகழ் பெற்ற இசைக்கான விருது வழங்கும் விழாவான கிராமி விருது வழங்கும் விழா இந்த வருடம் ஜெர்மனியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பெண்களுக்கான ஆடை நிபந்தனைகள் மிகப் பெரிய பட்டியல். அவர்கள் மேலாடை, ஆடைகளின் இறுக்கம், முதுகுப் பகுதி, பின் பகுதி, கால்கள் என ஒவ்வொரு உடைக்கும் வரையறை வகுத்திருக்கிறது – சேனல் 2 (பார்க்க கீழே பெட்டிச் செய்தி)
மேற்கண்ட இந்தப் பட்டியலைக் கொண்டு மேலை நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையை அடையாளம் காண முடியாது. ஆனால் ஆடைகளால் ஏற்படும் பெண்களுக்கான மரியாதையைக் காணலாம். ஆபாசமாக, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமாக ஆடை அணிவதை மரியாதை குறைவாகக் கருதும் நிலைமை இன்று உலகம் முழுக்கவும் இருக்கிறது

பெண்களுக்கான புதுப் புது தியரிகளை உருவாக்கி பெண்ணியத்தை மிகவும் கடினமான வேதியல் சமன்பாடு போல் மாற்றுகின்றனர். ஆடைகளைப் பற்றி ஒருவன் குறை கூறும் பொழுது அவர்களிடம் சில கேள்விகள் எழுகின்றன :
1.  “உமக்கும் சகோதரிகள் இருந்து, அவர்கள் ஆடைகளால் கூட நீ காமுறுவாயா?? என்றும்,
2. கிராமத்திலும், நாகரிகமாக – கண்ணியமாக உடையணியும் பெண்கள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனரே அதற்கு என்ன காரணம்?? எப்படி நீங்கள் உடைகளைக் காரணம் கேட்கலாம்? என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.


உண்மை தான் இப்படிப் பார்க்கும் பொழுது பெண்கள் மீதான வன்முறைக்கு உடைகளை மட்டும் சொல்ல முடியாது தான். அதனால் தான் ஒரு காலத்தில் நம் நாட்டில் வேத பாட சாலைகளில் இருந்து, சங்கங்களிலும், அரசவையிலும் பணிபுரிந்து வந்தப் பெண்களை அந்நியப் படையெடுப்பிற்குப் பின் வீட்டில் பூட்டி வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் பெண்கள் மீதான வன்முறையை உடல்ரீதியான பலாத்காரம் என்று நினைத்துக் கொண்டால் உடைகளைக் குற்றம் சொல்வதை தவிர்க்கச் சொல்லும் பெண்ணியக் கூற்றுகள் சரியானவையே.

ஆனால் ஒரு பெண் மனதளவில் எத்தனை விதமாக வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறாள். ஆபாச/கவர்ச்சி உடை அணியும் பெண்களை மிக மோசமாக எப்படியெல்லாம் சித்தரிக்கின்றது இன்றைய ஊடகங்கள், ஒரு ஆணிற்கு சவரம் செய்யும் பிளேடு விளம்பரத்திலிருந்து, டியோடரண்ட், சோப்பு, ஆடை, கார், பைக் என நுகர்வு மாயையை உருவாக்க ஆபாசமாக உடையணிந்த பெண்களை உபயோகப் படுத்துவது எவ்வளவு பெரிய வன்முறை? ஒரு கவர்ச்சியான உடையணிந்த பெண்ணுடன் ஒரு சகோதரனோ, நண்பனோ செல்லும் பொழுது கிடைக்கும் மோசமான கருத்துகள் வன்முறையில்லையா?? உரிமை தான் பிரதானம் என்று கோரும் பெண்களுக்கு மரியாதை தேவையில்லாத ஒன்றா?.

இப்பொழுது உளவியல் ரீதியாக பார்க்க ஆரம்பித்தால், உடைகளுக்கும் பாலியல் தூண்டல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்பதை மறுக்கவே முடியாது. உடல் பாகங்களை தெளிவாக, மெல்லியதான துணி வழியூடே காட்டும் ஆடைகளைத் தேர்வு செய்வதன் உளவியல் என்ன? பெரும்பாலும் வெப்பத்திலேயே வாழும் நம் நிலத்தில் ஜீன்ஸ் துணியின் தேவையென்ன? அதுவும் மிக இறுக்கமான ஆடைகளின் வழியே நாம் தேடும் அங்கீகாரம் என்ன? உயர் அந்தஸ்த்து கொண்ட மக்களைப் பார்த்தும், சினிமா, டீவியின் வழியாகவும் உந்தப்பட்டு அவர்களைப் போலவே நாமும் வலம் வரவேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. அதாவது இன்றையப் போலி நவநாகரிக உலகில் அழகியல் பற்றியத் தவறான கூற்றுகளும், கற்பிதங்களும் தான் உடைகளில் கவர்ச்சியையும், முகத்திலும்,அகத்திலும் வேஷம் கட்டக் காரணமாகிறது.


ஆபாசக்/கவர்ச்சி உடைகளை பொது இடங்களிலும், சமூக விரோதிகளின் முன்னேயும், குடிகாரர்கள் மத்தியிலும் அணிந்திருக்கும் போது நம் பாதுகாப்புக்கு நாம் தானே கேடு விளைவிக்கும் பிரதானக் காரணம்.எப்படியிருப்பினும் ஒரு பெண்ணுக்கு தொல்லைகள் தரும் அதிகாரத்தை எந்தச் சமூகமும் அங்கீகரிப்பதில்லை தான், ஆனால் அவர்களாகத் தொல்லைகளைத் தேடிச் செல்வதை தடுப்பதில் தவறில்லையே. ஏனென்றால் இன்றைய சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு, சமூகத்தோடு சேர்ந்து அவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும்


கிராமி விருதுக்கான ஆடை நிபந்தனைகள்:-

Please be sure that buttocks and female breasts are adequately covered. Thong type costumes are problematic. Please avoid exposing bare fleshy under curves of the buttocks and buttock crack. Bare sides or under curvature of the breasts is also problematic. Please avoid sheer see-through clothing that could possibly expose female breast nipples. Please be sure the genital region is adequately covered so that there is no visible "puffy" bare skin exposure. 

Please avoid commercial identification of actual brand name products on T-shirts. Foreign language on wardrobe will need to be cleared. OBSCENITY OR PARTIALLY SEEN OBSCENITY ON WARDROBE IS UNACCEPTABLE FOR BROADCAST. This as well, pertains to audience members that appear on camera. Finally, The Network requests that any organized cause visibly spelled out on talent's wardrobe be avoided. This would include lapel pins or any other form of accessory.

Sources:


ஜீவ கரிகாலன்

நன்றி

புதன், 13 மார்ச், 2013

# tag கதைகள்

அது காதல்


# 01 :

இத்தனை நாளாய் வசைபாடித் தீர்த்துவிட்டு, மறுகணமே , உன் பெயரை அது உச்சாடனம் செய்ய ஆரம்பித்துவிட்டது ...
மீண்டும் அதை நீ கொல்ல வேண்டும் - வரம் கொடு....###01

# 02 :

”சாகா வரம் பெற்றேன்” என்று கொக்கரித்துக் கொண்டு தான் உன் மேல் மையல் கொண்டதாம்.
பின்னர் ஒரு நாள் என்னிடம் சொல்லியது “சாவு தான் எனக்கு வேண்டிய ஒரே வரம்” என்று... ###02

# 03

உன் வாசம் அதற்கு மிகவும் பிடித்து விட்டதாம் , உன் வாசத்தின் வேதியல் சமன்பாட்டை என்னிடம் வந்து கேட்கிறது.
“விக்கிபீடியாவுக்கோ, அண்ணா நூலகத்திற்கோ போய்த் தொலை!” என்று சபித்து விட்டேன் நான்... பாவம் அது நம்பிவிட்டது...###03

#04

தினமும் என்னைத் தூங்க விடாமல் ஓலமிட்டுத் தொந்தரவு செய்கிறது என்று சங்கிலியால் பிணைத்து வைத்தேன்.
இன்றிரவு மறுபடியும் அவள் பெயரை உச்சாடனம் செய்கிறது, கூடுதலாக சங்கிலியையும் “தரதர” வென இழுத்துக் கொண்டே...###04

#05

ஒரு காகிதத்தில் கோழி முட்டை போல வரைந்து வைத்து, “இது அவளுடைய ஓவியம் எப்படி இருக்கிறது”என்று கேட்டது.
நான் கோபத்துடன் அதன் மீது சில கிறுக்கல்கள் செய்தும், சில முட்டைகள் வரைந்தும் காண்பிக்க.
அது சிரித்த படியே ”நன்றி” சொல்கின்றது...###05

#06

திடீரென்று ஒருநாள், “தற்கொலை பண்ணப் போகிறேன்” என்றது. காலில் விழுந்து சமாதானம் செய்து என்னைக் காப்பற்றினேன்.
பின்னர் ஒருநாள் “அவளைக் கொலை செய்யப் போகிறேன்” என்றது, வேறு வழியில்லை “பொய் சொன்னேன்”...###06



செவ்வாய், 12 மார்ச், 2013

நான்

முக்கோணத்தின்
குறும்பகுதியாக, அளவுகளில் ஒரு பின்னமாக
வாழும் துர்பாக்கிய நிலையில் 
நான் உழன்று 
கொண்டிருக்கின்றேன்.

என்னை அறியாமல்,
என்னிடம் கேட்காமல்.
நான் கணக்கெடுக்கப் பட்டுள்ளேன்
சமூகச் சலனங்களின்
என்னை வகுத்துப், பெருக்கிக்
கூட்டிக், கழித்து அழிக்கின்றனர்.

பண்பாட்டுச் சமன்பாடுகளில்
நிறுவிய என் ஆன்மா
சித்தரவதை அனுபவிக்கின்றது.

தசம புள்ளிகளில்
என் ஆசைகள் விலைபேசப் படுகின்றன.
எண்ணிக்கைகளின் பற்றாக்குறையில்
காதலின் கணக்கு பிழையாகிறது.
பிரிந்த பின்னும் காயப்படுத்தும்
அல்ஜீப்ரா கனவுகள்.

பூஜ்யமாய் என்னை சுவீகரித்து
வாழ்கிறேன் முழுமையாய் இருந்தும்
அருகில் ஒரு இலக்கம் வைத்தே
மதிப்பீடு செய்கிறது.
புள்ளியியல் தகவல்களாக
என் தோல்விகளைக் கண்டெடுக்கிறது
இச்சமூகம்

கணித விளக்கங்களில்
வாழ்வின் சூத்திரம்
என்னிடம் கேளாமல் 
திருத்தி எழுதப் பட்டு விட்டது

- ஜீவ கரிகாலன்