வெள்ளி, 23 டிசம்பர், 2011

காத்திருக்கும் காலங்கள்

என்றுமே நிகழாது  ............
எப்படியும் நிறைவேறாது ............
ஒரு போதும் இயலாது என்று தெரிந்தும்.......... 
அவள் -ஏதோ ஒரு 
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் பிறவாத குழந்தையாய், 
வாழ்ந்து முடித்த ஒரு ஆத்மாவாய்,
காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரேயொரு  கணமாய்,
வின்னாய், காற்றாய், வாசனையாய் இருக்கும் 
அவள் - ஏதோ ஒரு 
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

மனித வாடையை உணர முடியாத் 
காதல் கொண்டவள் - உருவத்தில் 
என் தாயின் சாயல் கொண்டவள்,
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

உடல் என்ற கவர்ச்சிக்கும் - அப்பாலே   
உள்ளம் என்ற உணர்வுக்கும் -மேலே 
 ஒரு எச்சமான உயிர்த்துடிப்புடன் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.


மொழியால் சொல்லாத உரையாடலில் 
கைகளால் கூடாத ஒரு தழுவலை 
எச்சில் படாத முத்தங்காளால் - பொழியும் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

என்பிறப்பினையே நின்று  பார்த்தவள்- என்
நிறத்தையும் அழகையும்- ஒருபோதும்
 பார்க்க விரும்பாத விரதம் கொண்ட 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளை ஊரே பழித்தபோதும்
 கொல்லச் சொல்லி கொன்றபோதும்
 தடுக்க முயலாத என் மவுனத்திலும் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

கருவிலேயே கலைக்கப்பட்ட - என் காதலி 
இன்னும் பிறவாமல், காத்திருக்கவும் முடியாமல் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

என் கல்லூரிக் காலங்களில் ஆண்டுமலருக்காக நான் எழுதிய சிறுகதையின் வேறு வடிவம் தான் இது .... (ஆண்டு மலரில் நிராகரிக்கப்பட்டது)
கரிகாலன் 

சனி, 17 டிசம்பர், 2011

Nostalgia

என் நண்பர் சொன்ன இந்த மந்திர வார்த்தை "Nostalgia" , நினைவு மீட்டல் - நம் பசுமையான நினைவுகளுக்கு திரும்பி நாம் இழந்துவிட்டதை திரும்பி பார்ப்பது அன்றாடம் நாம் சந்திக்கும் வலிகளுக்கும் , காயங்களுக்கும் எவ்வளவு பெரிய மருந்து?? இப்பகுதியில் நாம் இழந்து விட்டதை பற்றி கொஞ்சம் எழுதுகிறேன்.

இதில் நம்மையும் மறந்து, நமக்கே தெரியாமல், காலத்தை வென்ற சில கருப்பு வெள்ளைப் பாடல்களை பற்றி முதலில் நான் பதிய விரும்புகிறேன்.எனக்கு பிடித்த தாலாட்டுகள் 
1 .  என் அம்மா என்றும் என்னுள் இருப்பாள், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் , எந்த பாமர எழையும் தன தாய்க்கு ராஜ தன என்று உணர்த்தும் பாடல்.

படம்:கணவனே கண் கண்ட தெய்வம் ,பி.சுஷீலா ..இசை :மெல்லிசை மன்னர்2.மாடி மனை வேண்டாம், கோடி செல்வம் வேண்டாம் -வளரும் பிறையே நீ போதும் !!!!! வேறு என்ன சொல்ல ?? பட்டுக் கோட்டையார் தமிழ் உலகம் மறக்கக் கூடாத ஒரு உன்னத கலைஞர்."நாளை உலகம் நல்லோர்கள் கையில்" தாய் தாலாட்டும் பொது நாட்டைப் பற்றிய கவலையும் தன தாய்ப்பாலுடன் ஊட்டும் வழக்கம் நம்மிடையே உண்டு என்பதை இந்த வரிகளின் மூலம் நாம் அறியலாம்.

படம் : பதிபக்தி , பட்டுக் கோட்டையார், பி.சுஷீலா ..இசை :மெல்லிசை மன்னர்3 . சில நேரங்களில் தாயானவள் தன் மகளுக்கோ மகனுக்கோ தந்தையுடன் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளில் இப்படிப்பட்ட தாலாட்டுகள் பாட வேண்டியிருக்கிறது, பாடல் குழந்தைக்கு மட்டுமில்லை தந்தைக்கும் சேர்த்துத் தான்.
படம் : வண்ணக்கிளி4 . தாய்க்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ இந்தக் காலத்தில் ஆனால் அவள் எந்த காலத்திலும் நமக்காக தாங்கும் வலியினை அறிவியலாளே அறிய முடியாது.... ஆனால் அவளோ  மண்ணுக்கு மரம் பாரமா?? என்று உவமை கொண்டு தன் குழந்தைப் பார்த்து பாடுகிறாள்.. அப்படிப் பாடும் தாய் மட்டும் தான் உலகில் உள்ள ஒரே கடவுள் என்று நாமும் நம்புவோம்5. பானுமதியின் கம்பீரக் குரலில் அருமையான வரிகள், நடிப்பிலும் மிக எளிமையாக நம்மை படத்தில் ஒன்ற வைப்பார்.
படம் : அன்னை


6. சுசிலாவின் குரலும்,மெல்லிசை மன்னரின் இசையும் கண்ணதாசனுடன் இனைந்து உருவாக்கிய மிக அழகான படைப்புகளில் ஒன்று, தாலாட்டுகளில் மிகப் பிரபலம் .


7. இறைவனே இந்த பாடலிக் கேட்டாலும் தனக்கு தாய் இல்லையே என்று வருத்தமடையும் தேனிசை கானம்.

8.பாசமலர் இந்த பாடலில் சிவாஜி , சாவித்ரியின் நடிப்பில் அண்ணன் - தங்கை பாசம் தான் நமக்கு காட்சியாக்கப் படுகிறது... ஆனால், இது ஒரு அற்புதமான தாலாட்டு "சிறகில் எனை மூடி, அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா" என்று தன ஆற்றாமையை பாடிக் கொண்டும், தன் அண்ணன் தன் மகளை எப்படியெல்லாம் சீராட்டுவார் , என்று அசைக்க முடியாத நமது குடும்பச் சமுதாயத்தை இப்பாடலில் காணலாம் 9 .இந்த பாடலும் முன்னர் சொன்ன பாடல் போலத் தான், நமது குடும்ப வாழ்வில் தாயிற்கு அடுத்தப்படியான உறவான தாய் மாமனை பற்றி பாடுகிறது. ஆனால், இந்த கதைக்களம் வறுமையில், பெண்களின் நிலை மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த காலத்தில் இருக்கும். ஒருதடவையாவது கண்ணீர் சிந்தாத கண்களில் கண்டிப்பாக கோளாறு இருக்கும் .
படம் : பராசக்தி 10. தாலாட்டு ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, படம் :பார்த்தால் பசி தீரும் 

11 . தாலாட்டு பாடும் போதே தன் சொந்த சோகத்தையும் இணைத்துப்  பாடுவது தாலாட்டு வகைகளில் உண்டு , தான் காதலில் ஏமார்ந்ததாய் நினைவு கூறும் ஒரு தாலாட்டு. பாடலின் சிறப்பு PBS என்ற ஒரே காரணம்.
படம் : வாழ்க்கை படகு


12.நல்லதங்காளின் கதையைப் போலே உருவான இந்த சிவப்பு படத்தில் வரும் இந்தப் பாடல் எந்த வறுமையிலும், வேதனையிலும் தங்கள் பிள்ளையை சீரட்டுவதும், எளிமையாய் வாழ்வதும் தெரியும் . படம்: துலாபாரம் 


13.தந்தை ஒருவன் அந்த இறைவன் ஆவணும் அன்னை இல்லாதவன் - TMS காலத்தை வெல்லும் குரல் ஜீவனோடு வாழும் பாடல். படம்: எங்க மாமா


14.பாசமுள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் ....
படம் : பாபு


15 . தாய்மை கொண்ட எவரும் தாய் தான், தாலாட்டுகளில் தவிர்க்க முடியாத அத்தை (அல்லது செவிலித் தாய் ) பாடும் தாலாட்டு. படம் : கற்பகம்16 . (நேரடியான காணொளி கிடைக்க வில்லை) தாய்/செவிலித் தாய் குழந்தைப் பாடும் தாலாட்டுகளில் எவ்வளவு அறிவுரைகள் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் பார்க்கலாம்.
எத்தனையோ முறை, நான் - என் வாழ்வில் இடறி விழும் போதெல்லாம் "புயலைக் கண்டு அஞ்ச மாட்டேன் , முயன்று நானே வீரன் ஆவேன்" என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு மீண்டும் எழுந்து வந்துள்ளேன் - தாய்மார்கள் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான பாடல் இதுவே !!!இன்னும் சில பாடல்கள் கிடைக்கவில்லை, இந்த தொகுப்பினை எனது புதிய நண்பர் வனமாமலைக்கு சமர்ப்பிக்கிறேன் 

புதன், 14 டிசம்பர், 2011

ஒருமைப்பாட்டை சிதைத்து விடாதீர்கள்!- பழ. நெடுமாறன்


 
பழ. நெடுமாறன் - அவர்களின் முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்த ஒரு அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது 

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று குரலெழுப்பி, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்த கேரள அரசியல்வாதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்திருப்பதுடன், கேரள அரசு குறிப்பிட்டிருப்பதுபோல, நில அதிர்வுகளால் அணைக்கு ஆபத்து என்கிற கருத்தையும் நிராகரித்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் ஆரம்பம் முதலே, கேரள அரசு வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கிறது என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை நிராகரிப்பதில் முனைப்பும் காட்டி வருகிறது.
கேரள மாநில சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் 9-12-11 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு.
புதிய அணை கட்டப்படும்வரை இப்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்.
2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இந்தத் தீர்மானம் முற்றிலும் எதிரானதாகும். எனவே, உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு கேரள அரசும் ஒட்டுமொத்த சட்டமன்றமும் அனைத்துக் கட்சிகளும் உள்ளாகியுள்ளன.
இந்த இரண்டு கோரிக்கைகளை உள்ளடக்கிய, இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, புதிய அணை கட்டப்பட்டாலும் தமிழகத்துக்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டுகூட குறையாமல் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். கேரளத்துக்குப் பாதுகாப்பு, தமிழகத்துக்குத் தண்ணீர் என்ற புதிய முழக்கத்தையும் அறிவித்துள்ளார்.
கேரள அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்துக்கு நேரானவையாகும். திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்தபோது அதில் குமரிமாவட்டம் இணைந்திருந்தது. அப்போது நெய்யாறு என்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் இடதுபுற கால்வாயின் மூலம் திருவாங்கூர் பகுதிக்கு 19,100 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது. இதில் 9,200 ஏக்கர் நிலம் 1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டபோது தமிழகத்தின் பகுதியாயிற்று. ஆனால், இந்த நிலத்துக்கு அளிக்க வேண்டிய நீரைத் தர கேரளம் பிடிவாதமாக மறுக்கிறது. இந்தக் கேரளமா புதிய அணைகட்டி பெரியாற்று நீரை நமக்குத் தரப்போகிறது?
தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்று ஒருபுறம் கூறும் கேரள அரசு ஆனந்த் குழுவிடம் செப்டம்பர் மாதம் அளித்துள்ள மனுவின் 37-ம் பக்கத்தில் ""முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்துக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே, அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது'' என்றும், அந்த அறிக்கையின் 23-ம் பக்கத்தில் ""தமிழகத்துக்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தது ஆகும்'' எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதாவது கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகம் எப்படித் தர மறுக்கிறதோ அதைப்போல கேரளமும் எதிர்காலத்தில் செய்யும் என்பதுதான் இதன் உட்கருத்து.
புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளம் வலியுறுத்துவது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். புதிய அணை கட்டப்பட்டால் இப்போது உள்ள அணையின் மீது 999 ஆண்டுகளுக்கு நமக்குள்ள உரிமை பறிபோகும். புதிய அணையை தற்போதைய அணைக்குக் கீழே கட்டினால், அதிலிருந்து நமக்குத் தண்ணீர் தருவது என்பது மிகமிகக் குறையும். புதிய அணையின் மீது கேரள அரசின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்.
இப்போதுள்ள அணையை வலுப்படுத்தும் பணியைச் செய்யவிடாமல் 21 ஆண்டுகாலம் இழுத்தடித்தார்கள். புதிய அணை கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் இழுத்தடிப்பார்களோ தெரியாது.
புதியதாகப் போடப்படவேண்டிய ஒப்பந்தம் மிகக் குறைந்த ஆண்டுகளுக்கே போடப்படும். இப்போதைய குத்தகைப் பணம் மற்றும் மின் உற்பத்திக்கான கட்டணம் ஆகியவற்றை அதிகமாகக் கொடுக்க நேரிடும். பணிகள் முடியும்வரை நீர்மட்டம் 120 அடியில் இருக்கும்.
இதன் விளைவாக தென் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அணை பலவீனமாக இருக்கிறது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யான குற்றச்சாட்டு என்பதை அம்மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் கேரள உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள கீழ்க்கண்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்துக்கும் அணையின் பாதுகாப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அணை உடைந்தாலும் அதன் நீர் அதற்குக் கீழ் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகளுக்குப் போய்ச் சேரும். இந்த அணைகள் அந்தத் தண்ணீரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றவையாகும். செறுதோணி அணையின் நீரைத் திறந்துவிட்டால் நேராக அரபிக்கடலுக்குச் சென்றுவிடும் என்று அவர் கேரள அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியாறு ஆற்றுப் பகுதியில் இருந்து 450 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டோம் என்றும் அட்வகேட் ஜெனரல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அணை உடைந்தால் 4 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் செத்து மிதப்பார்கள் என இடைவிடாது புளுகித் தள்ளிய கேரள அரசு 450 குடும்பங்களை மட்டும் வெளியேற்றியிருக்கிறது என்று கூறியதன் மூலம் அது இதுவரை கூறிவந்த பொய் அம்பலமாகிவிட்டது.
கேரள மாநில இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையைச் சென்றடைய 4 மணிநேரமும், செறுதோணி அணை மூலம் அரபிக் கடலைச் சென்றடைய 10 முதல் 12 மணி நேரமும் பிடிக்கும். எனவே மக்களுக்கு எத்தகைய அபாயமும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தன் உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துகள் சதித்திட்டமும், துரோகமும் கலந்தது. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால், விசாரணை நடத்திய, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரைக் கொண்ட ஆயம் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துகள் திருப்திகரமாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, உச்ச நீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையமும் ஆராய்ந்து வருவதால், நாங்கள் இதில் தலையிட மாட்டோம் என கேரள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜே.பி. கோஷியும் அறிவித்திருக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், அதன் நீரை இடுக்கி அணை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். எனவே, பயப்பட வேண்டிய தேவையில்லை. அணை உடைந்தாலும் 106 அடிக்குமேல்தான் உடையும். அவ்வாறு உடையும்போது 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேறும். அவ்வாறு வெளியேறும் நீர் நேராக இடுக்கி அணைக்குப் போகும் வகையில்தான் அணையின் அமைப்பு உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும். எனவே அணை உடைந்தால் வெளியேறும் நீர் முழுவதையும் இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும்.
அணை உடையும் நிலை ஏற்பட்டாலும் தண்ணீர் முழுவதும் அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில்தான் விழும். அங்கு எந்தச் சமவெளிப் பகுதியும் இல்லை. பெரியாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பெரியாறு அணைக்கு மேல்தான் உள்ளன. பெரியாறு அணை நீர் இவற்றுக்குள் ஒருபோதும் செல்லாது.
பெரியாறு அணையின் நீர்க்கசிவு அதிகம் இருப்பது அபாயகரமானது என்றும் கேரளம் குற்றம் சாட்டுகிறது. அணைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீர்க்கசிவு நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆகும்.
முல்லைப் பெரியாறு அணையில் நிமிடத்துக்கு 45 லிட்டர்தான் நீர்க்கசிவு ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நீர்க்கசிவில் இது 5-ல் ஒரு பகுதியாகும். எனவே இது அபாயம் அற்றது.
உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு கூறும்வரை காத்திருக்காமல் அணை உடைந்து பல லட்சம் மக்கள் பலியாவார்கள் என இடைவிடாது கூப்பாடு போடும் கேரள அரசு பெரியாறு அணைப்பகுதியில் படகு சவாரியை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை. பெரியாறு அணையில் கேரள வனத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றின் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், படகு சவாரி செய்கின்றனர். அணை உடையப்போகிறது என்பது உண்மையாக இருந்தால், படகு சவாரியை உடனடியாக கேரள அரசு நிறுத்தியிருக்க வேண்டுமே, ஏன் இதுவரை, நிறுத்தவில்லை?
9-12-11 அன்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் அணை உடைந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என உச்ச நீதிமன்றத்தையே மிரட்டும் அளவுக்குச் சென்றிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் குழு பெரியாறு அணைப் பிரச்னை குறித்து முழுமையாகப் பரிசோதனை செய்து வருகிறது. இக்குழு அணையின் வலிமை குறித்து, நன்கு ஆராய்ந்து தனக்கு அறிக்கை தருவதற்காக மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவுத்துறை, பாபா அணுஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலையம் போன்ற அமைப்புகளின் சேவையைப் பயன்படுத்தியுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் பெரியாறு அணை நீருக்குள் மூழ்கியும் மேலும் பல்வேறுவிதமான சோதனைகளை மேற்கொண்டும் நவீன சாதனங்களைப் பயன்படுத்தியும் உண்மையைக் கண்டறிந்து, ஆனந்த் குழுவினரிடம் கடந்த 5-12-11 அன்று அளித்துவிட்டனர்.
இந்தக் குழுவின் ஆய்வு வேலைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.1.38 கோடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அணை வலிமையாக இருப்பதாக இந்த அறிக்கையில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை அறிந்த கேரள அரசியல்வாதிகள், அவசரஅவசரமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அளித்து, உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தனக்கு எதிராகத் தீர்ப்புச் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அச்சத்தின் காரணமாக அதை எப்படியாவது தடுப்பதற்குக் கேரளம் திட்டமிட்டுள்ளது. கேரளத்தின் சூழ்ச்சிவலையில் சிக்கி தமிழகம் பேச்சுவார்த்தைக்குப் போனால், அதைக் காரணமாகக் காட்டி உச்ச நீதிமன்றத்தை எத்தகைய முடிவும் எடுக்கவிடாமல் தடுக்க முடியும். நல்ல வேளையாக தமிழக அரசு இந்த சூழ்ச்சி வலையில் சிக்க மறுத்துவிட்டது.
1984-ம் ஆண்டில் சோவியத் நாட்டுக்குச் செல்லக்கூடிய நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது சோவியத் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகாலமாக பாலைவனமாக இருந்த ஒரு பகுதியில் அண்டை மாநிலத்தில் இருந்து ஆற்று நீரைக் கால்வாய் வெட்டிக் கொண்டுவந்து சோலைவனமாக்கிவிட்டதை நான் பார்த்தேன்.
துர்க்மேனிய குடியரசுக்கு நான் சென்றபோது வியப்பூட்டும் இக்காட்சியை நேரில் கண்டேன். வறண்ட பாலைவனமாக இருந்த துர்க்மேனியாவுக்கு அண்டை மாநிலத்தில் ஓடும் அமுதாரியா ஆற்றின் நீரை 1,400 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டி திருப்பிக்கொண்டுவந்து மகத்தான சாதனை செய்திருக்கிறார்கள்.
இதன் விளைவாக 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. லெனின்-காரகம் கால்வாய் என்று அழைக்கப்படும் இந்தக் கால்வாய் உண்மையில் பெரிய ஆறு ஆகும். இதில் கப்பல்கள்கூட செல்லுகின்றன. இந்த ஆற்றை வெட்டுவதற்கு சோவியத் நாட்டிலிருந்த பல்வேறு தேசிய இனமக்களும் ஒன்றுசேர்ந்து அளித்த ஒத்துழைப்பும், உழைப்பு மட்டுமே காரணம் அல்ல, அந்த மக்கள் உண்மையான மார்க்சியவாதிகளாக இருந்ததுதான் முக்கியமான காரணமாகும்.
தேசிய ஒருமைப்பாடு பற்றி வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் கட்சியும், விவசாயிகள்-பாட்டாளி வர்க்க நலன் பற்றி ஓயாது பேசும் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியும் இணைந்து பொய்யான தளத்தின் மேல் நின்று பெரியாறு அணைநீரை தமிழக விவசாயிகள் பயன்படுத்தவிடாமல் தடுத்து வருகின்றன. இந்தியா ஒரே நாடு, மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இவர்கள் பேசுவது உண்மையானால் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவது ஏன்?
சோவியத் திருநாடு உடைந்து சிதறியதற்கு வேறு காரணங்கள் இருந்தன. இந்த நிலைமை நீடிக்குமானால், இந்தியா உடைந்து சிதறுவதற்கு உம்மன்சாண்டிகளும், அச்சுதானந்தன்களும்தான் முழுமையான காரணமாக இருப்பார்கள்!
          

செவ்வாய், 13 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு


மேதா பட்கர் கூட முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவுக்கு ஆதரவு கொடுக்கிறார், 
மாற்று அரசியல் பற்றி சொல்லித் தரும் தமிழ் இயக்கங்களோ தங்களுக்குள் ஒன்று படாமல் தனித்து நின்றே போராடி அரசியல் மட்டுமே செய்கின்றனர்.. 

மலையாளிகளையே வெறுக்க சொல்லித் தரும் அரசியல் சரி தானா என்று புரியவில்லை?  ஈழத்து தலைவன் பிரபாகரனுக்கு ஒரு மலையாளியை விட யார் அதிகமாய் ஆதரவு கொடுத்தது. நேற்று வரை சகோதரன் போல் பழகிய ஒரு சக தொழிலாளியை வஞ்சிக்கத் தொடங்கியாகிவிட்டது, சுற்றியிருக்கும் தேநீர் கடைகளில் கூட மலையாளியின் கடை தவிர்த்து, வெந்நீர் ஊற்றும் தமிழன் கடைகளை நோக்கினால் ஒன்று தேவர் டீ ஸ்டால், மற்றொன்று காமராஜர் டீ ஸ்டால், இன்னொன்று அம்பேத்கர் டீ ஸ்டால், தமிழன் என்ற ஒரே கோட்டிற்குள் நாமெலாம் வந்துவிடத் தயாரா??.....

வெள்ளி, 9 டிசம்பர், 2011

புத்தகப் பார்வை -2 சில்லறை வணிகம்

-- அன்புடையீர் அனைவருக்கும் என் வணக்கம் ,


சில்லறை வணிகம்
சுதேசி - வெளியீடு - ஆசிரியர் - வானமாமலை 

அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம், மாறி வரும் நுகர்வு கலாசாரம் நம்மை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறது என்று எளியோருக்கும் புரியும் வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆசிரியர் கூறியுள்ளார். 

அந்நிய நேரடி முதலீடு என்றால் என்ன?
சில்லறை வணிகங்கள் என்பன யாவை?
இந்தியாவில் தற்போதைய சில்லறை வணிகச் சந்தையின் மதிப்பு என்ன ? அதன் வேலை வாய்ப்பு ? அதன் சமூக சூழல்.
அந்நிய நேரடி முதலீட்டால் ஏற்படும் விபரீதங்கள் யாவை?
         உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் 
         சமுதாய சீர்கேடு
         கலாசார சீர்கேடு 
         வேலையின்மை 
 என அந்நிய நேரடி முதலீட்டை நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை எளிமையான உதாரணங்களோடும் , ஆதாரங்களோடும் , முக்கியமாய் வரலாற்று பிண்ணனியோடும் சொல்லியிருக்கிறார்.

மேலும், நாம் நுகர்வு விசயத்தில் கவனம் கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும், எதிர்காலத்தில் வரும் இது போன்று வரும் பிரச்சனைகளுக்கு ஆயத்தம் ஆக வேணிடிய சூழலைக் குறித்தும் சுருக்கமாக கூறுகிறார்.

மொத்தத்தில் சிறு வணிகம் செய்வோர் மற்றும் இல்லாமல் , நுகர்வுப் பண்பை நவீனமாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவரும், சமூக வலைதளங்களில் சம்மூக அக்கறையுடன் விவாதம் செய்வதில் பிரியமுள்ளோரும் படிக்க வேண்டிய புத்தகம் 

படிக்கும் பண்பு நம்மிடையே வெகுவாகவே குறைந்துவிட்டதால் இந்த மாதிரியான   புத்தகங்கள் பற்றிய நம் பார்வை மாற வேண்டும், இலக்கியம் தாண்டியும் நாம் புத்தகங்கள் வாங்க வேண்டும் 


Published by
Swadeshi Jagaran Manch, Tamil Nadu
Books available at
K Block, No. 75, 14th Street,
Anna Nagar East, Chennai - 600 102
Phone : 94448 35513 / 9443140930
Email: swadeshiseithi@yahoo.co.in

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

நான் ஐயப்பனைக் குற்றம் சொல்லவில்லை - பாகம் 1

நான் ஐயப்பனைக் குற்றம் சொல்லவில்லை - பாகம் 1


இது ஒரு சாமான்யன் சொல்லும் மாற்றம் பற்றியக் கதை 


எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றம் ஏன் இங்கே பதிவாக்கப் பட வேண்டும்?நானும் சமூகக் கடலின் ஒரு துளி தானே! சாமான்யர்களின் ஒருவன் தானே! எனக்குள் இருக்கும் மாற்றம் ஒரு சமூக மாற்றத்தின் அடையாளமாய் ஏன் இருக்கக் கூடாது? என்று தோன்றியதில் தான் இதை எழுதுகிறேன்.

மனிதன் தன் வாழ்கையில் எந்த ஒன்றை அடைவதற்காக  ஏறாத மலை ஏறி, எதையோ தேடி அடைந்ததாய் நினைத்துக் கொண்டும் , நம்பிக் கொண்டும் தன் வாழ்க்கையை வடிவமைத்துக்  கொள்கிறான்??  இந்தக் கட்டுரையை எழுதும் நான் நாத்திகன் அல்ல, ஆனால் என்னை அந்த ஒரு சித்தாந்தத்தில் தள்ளும் வேலையை போலி ஆன்மீக வாதிகளும், எதற்கும் உதவாத சடங்குகளும், மதவாதங்களும் , சாதிப் பிரிவினைகளும் தான் செய்து கொண்டிருக்கின்றன. 

சபரிமலை - தென்னிந்திய ஆண்களின் புனிதத் தளம். கோடான கோடி பக்தர்களை ஆட்கொண்ட ருத்ர மூர்த்தி சபரி சாஸ்தா, ஏழைப் பங்காளன் அய்யன் ஐயப்பன், மதங்களைக் கடந்தவன் காட்சி தரும் புனித ஸ்தலம் என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.

இந்த யாத்திரைக்கு நாம் சில நாட்கள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து நம் வயிற்றையும், புலன்களையும் கட்டுப்படுத்தி, பக்தியுடன், தூய்மையுடன் ஒரு மலைப் பயணம் செய்து வரும் போது, அந்த இயற்கை அழகிலும், இறைவன் நமக்கு அருள் செய்வான் என்கிற உறுதியான நம்பிக்கையும் நமக்கு battery- recharge செய்யப்பட்டது போல் ஒரு உணர்வைத் தருகின்றன. எனினும் கடும் விரதம் இருந்து, கடன் வாங்கி கஷ்டப்பட்டு தனக்கு ஒரு விடிவுகாலம் வேண்டும் என்று நம்பிக்கையுடன் செல்லும் சில பக்தர்கள் அந்த மலையிலேயே தங்கள் உயிரை விட்டு, தங்கள் குடும்பங்களுக்கு இன்னல் தருகின்றனரே ?? இது ஏன் ?? அவர்கள் குடும்பம் அதன் பின் யாரால் காப்பாற்றப் படும்??

இன்று நாம் சபரிமலை செல்வது அவசியம் தானா? 
நாம் என்று அரசியல் ரீதியாக நான் தமிழனையேச் சொன்னாலும், ஆண்டவனை நம்பி சிலரின் சுயநலன்களுக்காக பலியாடாகும் யாவருக்கும் இது பொருந்தும். 

நானும் என் முதல் வருடத்தில் எந்த ஒரு பெரிய கஷ்டமும் இன்றி சென்றபொழுது, மெய்மறந்து நின்றேன் , ஐயப்பன் சந்நிதானத்தில் நின்று தரிசிக்கவே நொடிகள் தராத அந்த கோயிலில், அய்யன் முன் உட்கார்ந்து எழும் அளவு எனக்கு கிடைத்த அனுமதியில் அதை பாக்கியமாய்க் கருதி என்னையும் மறந்து அழுதேன், என் குருசாமிக்கு சன்னிதானத்தில் கிடைத்த அறிமுகங்கள் மூலம் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எல்லா தரிசனமும் சிறப்பாய் நடந்து முடிந்தது.அதை நினைக்கும் பொழுது சுகமான ஒரு பயணமாகவே தோன்றியது.

இரண்டாம் முறை நான் செல்லும் பொழுது தான் எங்கள் ஊரார்களுடன்  செல்லும் பொழுது தான் நான் சபரிமலயினைப் பற்றி உணர ஆரம்பித்தேன். அதிலும், ஓய்வே இல்லாமல் பெரும்பாதையில் வந்த நான், சபரிமலையில் ஏறத் திராணியற்று நிற்க, என்னை (95  கிலோ) என்னுடன் வந்த இரு சாமிகள் என் தோள்களில் முட்டுக் கொடுத்து தூக்கிச் சென்றனர் , ஒருவர் என் அண்டை வீட்டு நடுத்தர வயது கொண்டவர், மற்றொருவன் என் பள்ளித் தோழன் சாரதி (50 கிலோவுக்கும் குறைந்தவன்) எங்கள் கூட்டத்தில் எல்லோருக்கும் உதவிகள் செய்து,என்னையும் தாங்கிக் கொண்டு மற்றொரு கையில் பூஜை நெய்யும் கொண்டு வந்தான்.

 சபரிமலையின் சிறப்பே அந்த மலையின் இயற்கை அழகும் அதன் கடுமையும் தான், என்ன தான் வசதிகள் செய்து கொடுத்தாலும் அந்த மலையின் கடினத்தை யாராலும் மாற்ற முடியாது, அந்தக் கடினம் இருக்கும் வரை தான் அம்மலையின் கூட்டம் கட்டுக் கடங்காது போய்க்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன் 


அந்த மலையின் சிறப்பே அது தான், அவ்வளவு கடுமையான மலைகளில் நம் மீதுள்ள நம்பிக்கை குன்றி, பக்தியைத் தவிர வேறு வழியில்லாமல் ஐயப்பனை மட்டுமே நினைத்து கண்ணீர் விட்டு, உருகி, மெய் மறந்து, பார்ப்போரை எல்லாம் அய்யனாக நினைத்து, சந்நிதானம் சென்று தரிசிக்கும் வேளைகளில் நம்மை பாண்டி என்று ஏளனப் படுத்தும் காவலர்களையும், ஐயப்பனுக்கு பூஜை செய்யும் நம்பூதரிகளையும், ஒரு இயற்கைப் பேரழகை கற்பழிக்கும் அவல நிலையையும் பார்க்க நேரும் போதும்.. எல்லாவற்றிற்கும் மேல் பல வருடங்களாக ஏமாற்றி வரும் மகர ஜோதி எனும் ஏமாற்று தந்திரமும்... தத்வமசி எனும் மிகப் பெரிய ஆன்மீகத் தத்துவத்தை பொய்த்துப் போக வைத்து விட்டன ..நானும் என் முதல் வருடத்தில் யாரோ ஒருவருக்கு கிடைக்க வேண்டிய தரிசனத்தினை எனக்குப் பயன்படுத்தியதன் பாவம் தான் இரண்டாம் வருடம் எனக்கு நேர்ந்த கசப்பான சம்பவங்கள்.

நான் சென்ற இரண்டாம் ஆண்டு , என் கண் முன்னே கிட்ட தட்ட 5 பேரின் சடலங்களயாவது நான் பார்த்திருப்பேன், அருந்த மின்சாரம் தாக்கி இரண்டு பேர், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்ற போதும் சிகிச்சை செய்ய அனுமதிக்க தாமதித்ததால் ஒருவர், எல்லாவற்றிற்கும் மேல் பதினெட்டு படிகளில் தூக்கி விடும் பொழுது இடறி விழுந்த ஒரு மனிதர் ஒரு முதிய பாட்டியை தள்ளிவிட அந்த பாட்டியும் ஆவலுடன் நின்றிருந்த ஒரு சிறுவனும் படிகளில் விழுந்து மரணம் என்று என் நெஞ்சை உறைய வைக்க, அந்த கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி மிதி பட்டு, அடி பட்டு , தங்களுக்குள் சண்டையிட்டு, தன்னுடன் அழைத்து வந்த குழந்தைகளை இம்சித்து , அன்று நேர்ந்த துன்பங்கள் முழுதும் சொல்ல என்னால் முடியாது.(தான் நேரடியாக பாதிக்கப் படாதவரை வேறு யாவரின் துன்பங்களும் நம்மால் உணர முடியாது என்ற பேருண்மையையும் அப்பொழுதுக்  கற்றுக் கொண்டேன்)

நான் இதை எழுதுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அன்று தான் எனக்குத் தெரிந்தது, 'சன்னிதானத்திற்குள்  ஒரு மரணம் நிகழ்ந்தால் அந்தக் கதவுகள் அடைக்கப் பட்டு சன்னிதானம் முழுக்க கழுவி விடப்பட்டு சில பூஜைகள் செய்தபின் தான் திறக்கப் படுமாம்', என்ன கேவலம்.??. இறந்த ஒரு பக்தனின் உயிர் ஒரு தெய்வத்திற்கு தீட்டு ஆகும் என்றால், இறைவன் எப்படி மோட்சம் கொடுப்பான் எங்களுக்கு ???? அன்றிரவு ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை நடை சாத்தப் பட்டதால், நெருக்கடி மிகவும் ஏற்பட்டது (அந்த வருடத்தில்   மகர ஜோதிக்கு அடுத்து அன்று தான் அதிக கூட்டம் வந்ததாகத் தகவல்)..பதினோரு மணி வரை நீட்டிக்கப் பட்டு இருந்தாலும், அளவுக்கதிகமான தள்ளு முள்ளு ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கனோர் காயம் பட்டனர்.

எனினும் இந்த நெரிசலில் பல கொடி பிடித்த மலையாளச் சாமிகளும், போன வருடம் நான் சென்ற கூட்டம் போல் செல்வாக்கு பெற்ற கூட்டமும் குறுக்குவழியில்(வலப்புறமாய்) சென்றது. நாங்களும் கூட அப்படி செல்ல எத்தனித்தோம், அப்பொழுது நான் கண்ட காட்சி தான் என்னை மிகவும் பாதித்தது. ஒரு மூன்று வயது குழந்தையுடன் வலப்புறமாய் நுழைய முயன்ற ஒரு நடுத்தர ஆந்திர மாநில சாமியைக் கண்டுபிடித்து, அங்கு நின்றிருந்த கமாண்டோ காவலர்கள் அவரை  கன்னத்தில் அறைந்து வெளியே வந்து இட்டனர், தன் தந்தை அடி வாங்கும் காட்சியைப்  பார்த்த அச்சிறுமி மிகவும் அலறினாள், ஆனால் அவன் முயற்சிப்பதை நிறுத்தவில்லை, ஒரு துணை ராணுவப் பாதுகாவலருக்கு வேண்டிய ஒரு மலையாளக் கூட்டமொன்று  எளிதாக உட்புகந்து செல்ல, அவர்களுடன் கலந்து கொண்டே அந்த தெலுங்குச் சாமி உள்ளே சென்றார். தங்களுடன் வேறு யாரோ உடன் வருகிறார் என்று புரிந்துக் கொண்ட ஒரு மலையாளச் சாமி, சன்னிதானத்தில் உள்ள தத்வமசி எனும் {யாவுளும் இருப்பது நீயே (இறைவன்) }  தத்துவத்தின் பொருளை உணர்த்து,  தன்னுடன் வந்த " கள்ளம் செய்த ஒரு தெலுங்குச் சேட்டனை " அங்கு நின்றிருந்த அதே கமாண்டோ சேட்டனிடம் பிடித்துக் கொடுக்க, அவனும், அவனுடைய குழந்தையும் மிருகத்தனமாய் தூக்கி எறியப்பட்டனர், மலையாளத்தில் அவனை திட்டியவை எனக்கு புரியவில்லை "ஒரு வேளை இல்லாத கடவுளைப் பார்க்க குறுக்கு வழியாடா உங்களுக்கு??" என்று இருக்கலாம்.

தன் தந்தையை அடிக்கும் போது தடுத்த அச்சிறுமிக்கும் வாயில் காயம் ஏற்ப்பட, இரத்தத் துளிகளை துடைத்துவிட்டு அவர் மறுபடியும் கியுவுக்குள் சென்றார்.என் மனம் கடும் உளைச்சலுக்குள் சென்றது. ஐயப்பன் என்ற மந்திரம் அப்படி நமக்கு என்ன செய்துவிடும் ? என்று தோன்றியது, எந்த ஒரு நாளிதழ்களிலும் அன்று நடந்த  சம்பவங்கள் (10 பேர் மரணமுற்றதாக சன்னிதானத்தின் மருத்துவமனையில் எனக்கும் முதலுதவி அளிக்கும் போது சொல்லிக்கொண்டிருந்தனர்) பற்றி வரவில்லை. பத்திரிக்கைகள் அன்று ஏற்பட்ட மரணங்களை கோடிட்டு காட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகளை சொல்லியிருந்தால், நெஞ்சை உழுக்கிய மகர ஜோதி விபத்து  நிகழ்ந்திருக்காது. இது ஒரு வகையில் தேவஸ்தானம் ஏற்படுத்திய கொலையே!!


உண்மையில் ஐயப்பன் தான் கோடீசுவர நம்பூதரிகளிடமும், அரசியலிலும், இனவாதங்களிலும் சிக்கி தானும் - தன் வனமும் அழுக்காவதை உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறான்.

ஏனோ அன்று துளிர்ந்த ஒரு துளி பகுத்தறிவோ, இல்லை மரண பயமோ என்னை அந்த வரிசையை விட்டு விலகி சன்னிதானம்  செல்லாமல் விடுதிக்குச் செல்ல பணித்தது, எல்லோரிடமும் நான் தரிசனம் செய்ததாய் பொய் சொன்னேன். அலுப்பில் அன்றிரவு நான் உடனேத் தூங்கிப் போனாலும் , விடியும் போது பெருத்த பாரத்துடன் விழித்தேன்,குற்றவுணர்வுடன் தவித்தேன். அப்பொழுது எல்லோரின் நெய்த் தேங்காயும் உடைக்கப் பட்டது, என் முறை வந்ததும் எங்கள் குருசாமி என் விரதம் மிகவும் சுத்தமாய் இருந்திருக்கிறது என்று சொல்லி என்னை பாஸாக்கினார். ஆனால் என்னையே தாங்கி வந்த என் பள்ளித் தோழன் மலையிறங்கிய இரண்டு மாதங்களுக்குள், எங்கள் ஊர் ஐயப்பன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள சாலையில் ஒரு லாரியின் சக்கரங்களுக்கு இரையாகினான். எட்டு வருடங்களாய் அவன் கொண்டிருந்த பக்தி அவன் குடும்ப பாரங்களை இனித் தாங்க போவதில்லை.

யேசுதாசைப் போலவே அரிவராசனம் பாடும் என் நண்பனின் மரணம் கூட அந்த சன்னதியில் நிகழ்ந்திருந்தால், அவன் ஆசைப்பட்ட மரணம் (அங்கேயே இறப்பவர்களுக்கு மோட்சம் என்று அவன் அடிக்கடி எனக்கு சொல்லி வந்தான்) கிட்டியிருக்கும், எங்கள் ஊரார்க்கும் அந்த பயம் சிலருக்காவது என்னைப்போல் கேள்வி எழுப்பியிருக்கும். எங்கள் ஊரின் ஐயப்பன் கோயிலில் எல்லா எலக்ட்ரிகல் வேலையும் செய்து, பக்தர்களுக்கும் மிகவும் பரிட்சயமான அந்த   
சாமி இல்லாமல் இந்த வருடம் அவர்கள் செல்லும் பயணம் கண்டிப்பாக பேரிழப்பாக இருக்கும்.


சன்னிதானத்தில் அடி வாங்கிய சிறுமியின் இரத்தத் துளியும், என் நண்பனின் மரணமும் என்னை ஆன்மீகத்திலிருந்து என்னை எங்கெல்லாம் இட்டுச் செல்லும் ??? 


அடுத்தப் பதிவு - அய்யப்பனைச் சூழ்ந்துள்ள அரசியல் மற்றும் ஐயப்பனின் சன்னிதானத்தில் மறைந்துள்ள தமிழரின் பாரம்பரியம் .......


நன்றி 
கரிகாலன் 

(யாரையாவது என் பதிவு புண்படுத்தினால் மன்னிக்கவும்)