வியாழன், 20 ஏப்ரல், 2017

23வதாக எட்டிப்பார்த்தவர்

23வதாக எட்டிப்பார்த்தவர்

ஓவியம் : கணபதி சுப்ரமணியம்




”ஹனி”

“சொல்டா”

அந்த மாலையில் அதற்கு மேல் பேசிக்கொண்டவைகளை நான் என் நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஏன் என்று கூட கேட்காதீர்கள் நினைவில் அவை யாவும் வந்துவிடக்கூடாது என்பதில் தான் என் அத்தனை பிரயர்த்தனமும் இருக்கிறது. நகரம் அந்தப் பேரிடருக்குப் பின் ஒவ்வொரு நாளும் துயிலும் காலம் நீண்டுவிட்டது போன்ற தோற்றம் மிகுந்திருக்கிறது.

லட்சம் கிலோமீட்டர் ஓடி முடித்து, மீண்டும் முதலில் இருந்து சுற்ற ஆரம்பித்த என் இருசக்கரவாகனத்தின் மீட்டர், கூடுதலாக மேலும் இருபத்தைந்தாயிரம் கிலோமீட்டர் பயணித்துவிட்டது. ஆயிரக்கணக்கில் மைல்களைக் கடந்துவிடுவதெல்லாம் பயணமாகிவிடுமா?. உண்மையில் பயணம் என்பது அச்சத்தைக் களையவேண்டும். அபயம் தருவதே பயணத்தின் இயல்பு. ஆனால் நான் பயணிக்கவில்லை, இராட்டினச் சுற்றாகச் சுற்றிக்கொண்டே இருக்கிறேன். அதைப் பயணம் என்று சொல்ல முடியாது, போதை என்றும் சொல்ல முடியாது வேண்டுமானால் மயக்கம் என்று சொல்லலாம்.
வேறு எங்கேயாவது மனதைச் செலுத்த வேண்டும். அவற்றை மறக்க இயலாது, ஆனால் கலைத்துப்போட முடியும். அன்றைய பயணத்தில் ஜீ சொன்ன வார்த்தைகளை அசை போட்டுப் பார்த்தால், அது ஒன்று தான் இப்போது என்னிடம் இருக்கும் ஒரே உபாயம். களையமுடியாதவற்றை இப்போது கலைத்துப்போட்டுவிடலாம்.
முடியுமா?

பேரிடரின் பதட்டம் தனியாத அந்த பெருநகரத்தின் மாலை கொஞ்சம் ஈரப்பதத்தையும், நிறையவே பயத்தையும் கொண்டிருந்தது. விபத்தில் முதலுதவி அளித்ததாக ஒட்டுப்போட்டிருந்த தார்ச்சாலைகள், அப்புறப்படுத்தாத முறிந்து போன மரங்கள், உடைந்து போன தடுப்புச்சுவர்கள், பறந்து சென்று விழுந்த விளம்பரத்தட்டிகளை ஒவ்வொன்றாகக் கடந்து கொண்டிருந்தேன்.

இன்றைய மாலையைத் தவிர எல்லா பொழுதுகளையும் கலைத்துப்போட்டுப் பார்க்க இயலுமா? இயலுமெனில் இந்த நகரத்தின் நம்பிக்கையைப் போல் நானும் மீண்டெழுவேன்.

”ஹனீ”

“சொல்லுடா”

“உன்கிட்ட ஒன்னு கேட்கனும்”

இல்லை மருந்துண்ணும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்கிற கதை தான். அதற்கு மேல் யோசிக்கக் கூடாது என்று தீர்கமாக முடிவு பண்ணினால் மீண்டும் மீண்டும் இதையே தான் நினைத்துப் பார்க்க வேண்டி வரும்.

“என்ன கேட்கப்போற”

“நான் கேக்குறன்னு கோச்சுக்காத பொறுமையா பதில் சொல்லு”

சிரிப்பு தான் வந்தது. சிரித்தபடியே சிக்னலைப் பார்க்காமல் கடக்க முற்பட, குறுக்கே வேகமாகப் பாய்ந்த மினிடோர் வேனில் இருந்து ஒருவர் குட் ஈவ்னிங் என்று பொருள் தரும் எதுகை மோனையுடைய இரண்டொரு சொற்களை உதிர்த்துச் சென்றார். அங்கிருந்தபடியே என்னைக் கைகாட்டித் திட்டிக்கொண்டிருந்தக் காவலரை என் கைநீட்டி வணக்கம் தெரிவித்தேன். அது என்னை உள்ளூர்க்காரன் தான் என்றும் தெரியாமல் கடந்து வந்துவிட்டேன் என்றும் காவலருக்கு உணர்த்தும் உடல்மொழி. என்னைக் கடந்து செல்ல அனுமதிப்பார் என்று தோன்றியது.

உலகில் எல்லோர் மீதும் ஒரு நம்பிக்கையும் அனுமானமும் தோன்றிவிடுகிறது. இப்படியான அனுமானங்கள் தான் உறவுகளை, பகையை, நம்பிக்கையை, குரோதத்தை, பக்தியை, காதலை உருவாக்கிறது. எல்லாமே கற்பிதங்கள் தான். ஆயிரமாயிரமாண்டுகளாக நடமாடிக்கொண்டிருக்கும் சகமனிதர்கள் மீதான அனுமானங்களின் சுவடுகளே இப்படி கற்பிதங்களாகின. என்னை அவர் தடுக்கப்போவதில்லை. ஆனால் அவள் தடுத்தாள்.

 “ச்சீ”

“ஹனீ பொறுமையா இரு முழுசா என்னப் பேசவிடு”

“ஷட் அப்”

நான் தடுக்கப்பட்டேன், அவளால்.

குறுக்கே வாகனம் எதுவும் வராமல் இருந்தாலும், சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். சலசலத்துப் போன டூவீலரின் வலதுபுற இண்டிக்கேட்டர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. வாகனம் ஓட்டும் போது அது பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும், அதை ஒட்டுவதற்கோ, அறுத்தெறியவோ தோன்றவில்லை.

“ஏன்டீ இப்படி எரிஞ்சு விழுற. கொஞ்சம் பொறுமையா கேளு”

“…”

“என் நெலமைய யோசிச்சிப்பார்த்தியா”

சிக்னல் மரம் பச்சையை உமிழ்ந்தது. சிக்னலைக் கடந்து பாலத்தில் ஏறினேன். நூறு சீ சீ இஞ்சின் எட்டு வருட உழைப்பில் தன் பெரும்பான்மையான வாழ்நாளை இழந்துவிட்டேன் என்று என்னிடம் சொல்லி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் வண்டி மாற்றிடும் எண்ணம் இப்போது இல்லை. பாலத்தில் ஏறும்போதே அன்றை இரவு நானும் ஜீயும் இந்த பாலத்தைக் கடந்து சென்றது நினைவிற்குள் வந்தது. அவளை விட ஜீயின் அண்மையை நேசித்திருக்கிறேன். இப்போது மனம் விட்டுச் சொல்லலாமே இனி யார் தான் தடுப்பார்கள். இன்றைய பொழுதில் நான் என எதை நம்பிக்கொண்டிருக்கிறேனோ அதன் வடிவத்தை அதிகம் செதுக்கியவர் ஜீ தான். இவளைப் போலவே அவரும் ஒரு புள்ளியில் என்னிடமிருந்து விலகிவிட்டார். யாரும் யாரிடமிருந்து விலகுவதற்கு காரணங்கள் தேவையில்லை அந்த காலம் அல்லது அந்த கணங்கள் மட்டும் போதும். உண்மையில் அவை சில விநாடிகளே. நானும் அவரை விட்டு விலக சில விநாடிகளே போதும். அவளை விட்டு விலகவும் அவ்விநாடிகளே போதும். பாலத்தின் மையத்தில் செல்லும் பொழுது வண்டியை ஓரங்கட்டினேன்.

“லீனியர்னு ஒன்னு இருக்காடா”

“ஏன் ஜீ அப்படி சொல்றிங்க”

“உன்னால நேர்கோட்டுல நீ பார்த்தத அப்படியே வரிசையா சொல்ல முடியுமா?”

“ஏன் ஜீ.. தாராளமா சொல்லாம்”

“எங்க இந்த நைட்டுல அப்படியே உன் கண்ணில் படுறத லீனியரா சொல்லு பார்ப்போம்”

ஒரு பயணம் முடித்து ஜீயுடன் நகருக்குள் திரும்பிக்கொண்டிருக்கையில் இதே சிக்னலைக் கடந்து இந்த பாலத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது தான் இப்படி பேசிக்கொண்டிருந்தோம். எதார்த்தவாதம் குறித்தும் நேர்கோட்டுத்தன்மை குறித்தும் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் மனதில் நிழலாடின. ஒரு ஓவியராக அவற்றை அபத்தமான கற்பிதங்கள் என்று சாடினார். அதை நிரூபித்தும் காட்டினார். கலையை கலையாக மட்டும் பார்த்தால் போதும் என்பது அவரது கோட்பாடு. மக்களுக்கான கலை என்று சொல்வது வெறும் பிரச்சாரமே என்றும் அவர் சொல்லிக்கொண்டிருப்பார். இதே பாலத்தைக் கடந்து கொண்டிருக்கையில் தான் என்னை நேர்கோட்டில் நான் கவனிப்பதைச் சொல்லச் சொன்னார்.

“பாலம், திசைகாட்டி, இலவச எமர்ஜென்சி போன் பூத், சாலைக்கு நடுவே நடப்பட்டிருக்கும் சிறு புங்க மரங்கள், குரோட்டன்கள், தார்ச்சாலையின் ஒளிரும் ஃப்ளோர்சண்ட் எல்லைக் கோடுகள், எல்.ஈ.டீ நியான் விளக்குகளில் ஒளிரும் அரசின் விளம்பரப்பலகைகள், விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள்”

மஞ்சள் விளக்குகள்  என்று சொல்லும் போது நானும் ஜீயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஏதோ ஒன்றை கவனிக்காமல் விட்டுவிட்டதையோ அல்லது எதையோ கவனிக்காமல் போனதையோ மறந்தோம். காரினில் லதா மங்கேஷ்கரும், ஹரிஹரனும் பாட ஆரம்பித்து இருந்தார்கள்.
மீண்டும் சொல்லிப் பார்த்தேன்.

ஒளிரும் அரசின் விளம்பரப்பலகைகள், விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள்.
சட்டென ஏதோ பொறி தட்டியது போல் உணர்ந்தோம். அடுத்ததாக வரும் இடைவெளியைப் பயன்படுத்தி வாகனம் யூ டர்ன் அடித்தது.

விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள், காரின் விளக்கொளி (ஹை பீம்), காக்பிட், டாஷ் போர்ட், ஸ்டியரிங், கார் பெர்ஃப்யூம். சிரித்தேன். அவரும் சிரித்தார். நாங்கள் எதை கவனிக்காமல் கடந்து வந்தோம்.

அது லதா மங்கேஸ்கர் இல்லை ஆஷா போஸ்லே என்று திருத்திக்கொண்டேன். ஆஷாவின் பெங்காலி போர்ஷன் – இளையராஜாவின் பியானோ சப்தம் மட்டும். பியானோ சப்தம் மட்டும். எங்கள் கண்முன் அந்த காட்சித் தெரிந்தது.

“உன்னால் நேர்கோட்டில் எல்லாவற்றையும் சரியாகச் சொல்லிவிடமுடியுமா” என்று மறுபடியும் என்னிடம் கேட்டார்.

லீனியர் என்பது ஒரு மாயா என்றேன். இருவரும் சிரித்தோம். ஏனெனில் அது ஒரு அற்புதக் காட்சி, அதை நாங்கள் கவனிக்காமல் கடந்து வந்தோமா? இல்லை எங்கள் லீனியர் கற்பிதத்தில் அந்தக் காட்சி கியூவில் வரிசையாக வந்து நிற்கத் தாமதமாகியதா.
அந்தப் பாலத்தில் மஞ்சள் விளக்குகள் இல்லை, எல்.ஈ.டி. வெள்ளை விளக்குகள், ஏதோ மின்சார இணைப்புக் கோளாறோ அல்லது அற்புத அனுபவத்திற்கான ஒரு துளி வரமோ எங்கள் கண்களுக்கு அந்தக் காட்சி கிட்டியது. ஞாயிறு நள்ளிரவு என்பதால் எந்த வாகனமும் எங்கள் கண்ணில் தென்படவில்லை.

பாலம், எல்.ஈ.டி விளக்குகள், மின்சார இணைப்பில் ஏற்பட்டிருக்கும் ஏதோ ஒரு கோளாறு காரணமாக அடுத்தடுத்த விளக்குகள் மாற்றி மாற்றி எரிவதும் அணைவதுமாக இருக்கின்றது. அந்தக் காட்சியை நாங்கள் கவனித்திருந்தோம், ஆனால் அதை உணர்வதற்கு தாமதமாகிவிட்டது.

பாலத்தின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு காரிலிந்து இறங்கினோம்.
அருகருகே இருக்கின்ற இரு விளக்குகளில் ஒன்று எரியும் போது மற்றொன்று அணைந்தும், மற்றொன்று அணையும் போது அடுத்தது எரிந்தும் அந்தப் பாலத்தை ஒரு மேடைக்கச்சேரியாகக் காட்டிக் கொண்டிருந்தது. மேடைக்கச்சேரி என்று நான் சொன்னதும் அவர் வேகமாகக் காரினுள் சென்று கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பாடலை மறுபடியும் ஒலிபரப்பினார். அதிகப்பட்ச ஓசையுடன், அந்தி பியானோ இசை மெய்சிலிர்க்க ஒலித்தது.

“நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” அப்போது தான் அவளோடு பழக ஆரம்பித்து இருந்தேன். அவள் பாடுவாளா என்று நினைத்துப் பார்த்தேன். இளையராஜாவின் அந்த பாடல் இப்படி தான் ஏகாந்தமான சூழலில் இசைக்கப்பட்டிருக்குமா?

அதில் வரும் பியானோ போர்ஷன் இப்படி தான் இருந்திருக்கும் எனத் தோன்றியது. அது அந்த பாலத்தில் நிகழ்ந்த இசைக் கச்சேரியாகவே தோன்றியது.

நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்கவேடம் இனி போதும் கண்ணே.

ரசனையான வாழ்வு அத்தனை எளிதானதா என்றால் அது மிக எளிதானது. ஆனால் என் நண்பர் சொல்வது தான் சரி, BEING SIMPLE IS THE TOUGHEST THING.

என் மனம் பதிவு செய்ததைச்சொல்லும் பாணியிலும், தடுமாற்றத்திலும், வேட்கையிலும், தொந்தரவிலும், அயற்சியிலும், அதை வெளிப்படுத்தும் ஆசையிலும், அற்பணிப்பிலும் உணர்ந்து கொண்டதும் இதுதான். EXPRESSIONISM என்றும் IMPRESSIONISM என்றும் அவர் சொல்லிக்கொடுத்தவை அன்று தான், இதே இடத்தில் தன் எனக்குப் புரிய ஆரம்பித்தது அல்லது உணர ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் நான் அந்த பியானோவில் தான் நிற்கிறேனோ என்று தோன்றியது. என் முன்னே இருக்கின்ற விளக்கு அணையும் போது, நானும் தடுமாறினேன். அவர் என்னை விட்டுத் தள்ளிச்சென்று சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். எனக்கும் எதுவோ தேவையாக இருந்தது. ஏனோ அவளை நிணைக்கலானேன். அவள் வசீகரமானவள் தான். ஆனாலும் வேறு என்னவோ ஒரு காரனம் இருந்தது. அதையும் தாண்டி அவளை நான் மோகித்த கணம் அங்கிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். அந்த விநாடிகளை நான் இந்த பாலத்திலிருந்து தான் எடுத்துக் கொண்டேன்.

இப்போதும் இதே பாலம் தான், இன்று அதற்கு நேர் மாறான எண்ணம். அவர் உடைத்துப் போட்ட நேர்கோட்டுப் பார்வையைக் கொண்டு இவற்றை உணர்கிறேன்:
இன்று மாலை அவள் என்னைப் பிரியவில்லை. எப்போதோ பிரியத் தயாராக இருந்திருக்கிறாள். அதற்கான விநாடியைக் காரணமாக நான் தான் தாமதமாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

அன்று நிறுத்திய அதே இடத்திற்கு எதிர்புறம் என் டூவீலரை நிறுத்திவிட்டு, அந்த பாலத்தின் விளிம்பில் நின்றபடி எட்டிப்பார்க்கலானேன். நகரம் இருளை நைட்டியாக அணிந்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லிப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. இந்த உவமை எக்ஸ்ப்ரெஸனிசமா? இம்ப்ரெசனிஸமா? கலை, காதல் இரண்டும் மயக்குகிறது, போதையை விட மோசமானது, வீரியமானது. அப்படியே குதித்து விடலாமா என்றும் தோன்றியது. திடீரென்று அந்த புறநகர்பகுதியில் ஓங்கியிருந்த சில கட்டடங்களில் நியான் விளம்பரப்பலகைகள் எரிய ஆரம்பித்தன. ஒருவாரம் கழித்து இந்த புறநகர் பகுதிக்கு மின்சார இணைப்புக் கிடைத்திருக்கிறது. நகரம் தன்னை மீண்டுவிட்டதாய் புறநகர் வரை அறிவித்துவிட்டது. எனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? புதிதாய் எழ முடியுமா? குதிப்பதற்கு அஞ்சி பிதற்றுகிறேனா? மீண்டும் சிரிப்பு வந்தது.

கடற்காற்று வீசும் அந்த மாலையில் பாலத்திற்குக் கீழே ஒரு தண்டவாளத்திற்கு இணையாக புதிதாகப்போடப்பட்ட சேதமடையாத தார்ச்சாலையும் நீண்டுச் சென்றது, எல் வடிவ வாய்க்கால் சாக்கடையாக இருந்தாலும். சில நாரைகளும், சில அன்றில் பறவைகள் அமர்ந்திருந்தன, தங்கள் சாபத்திற்குப்பின்னும் நீரை சாக்கடையாக்கிய அந்த நகரம் உயிர்த்தெழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தன.

திடீரென்று மற்றொரு தலையும் பாலத்தின் கீழே எட்டிப்பார்த்தது. நான் பார்த்துக்கொண்டிருப்பது அவனைத் தொந்தரவு செய்திருக்கும் போல, நான் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று அங்குமிங்கும் துலாவிக்கொண்டிருந்தான். நான் அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, அவனாக எதையோ கண்டதைப்போல புருவத்தை உயர்த்தினான். அப்படியென்ன இருக்கிறது என்று நானும் திரும்பி நோக்கினேன். எங்கள் பின்னால் ஒரு கார் வந்து நின்றது.

அன்று நாங்கள் வந்த காரைப் போன்றே மற்றொரு காரிலிருந்து இறங்கிய ஓட்டுனர் வேகமாக இறங்கி வந்து எட்டிப்பார்க்கலானான். எதையோ கண்டு திருப்தியடைந்தவன் போல் மீண்டும் காருக்குச் சென்றான். ஆனால் வண்டியில் ஏறுவதற்கு பதிலாக, கதவைத் திறந்துவிட்டான்.

அவளை எங்கோ பார்த்திருக்கிறேன். பெரிய கண்ணாடியும், வயலெட் நிறத்தில் ஒரு காட்டன் புடவையும் அணிந்திருந்தாள், எங்கள் இருவரையும் பொருட்படுத்தப்போவதில்லை என்கிற யூகம் அவளைத் திமிர்ப்பிடித்தவளாக காட்டியது நேராக அருகில் வந்து அவளும் பாலத்தில் இருந்து எட்டிப்பார்க்கலானாள். என்னிடம் அவள் என்ன பார்க்கிறேன் என்று கேட்பாளோ என்று ஆவலோடு இருந்தேன். கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்ல வேண்டும். அவள் எதுவும் கேட்கவில்லை, என் வலதுபுறத்தில் பாலத்தின் சுவரைப் பிடித்தபடி கீழே பார்க்கலானாள். அந்த சேலையை எப்படி இத்தனை லாவகமாகவும், இறுக்கமாகவும் கட்டியிருக்க முடியும் என்று வியந்தேன். அவளுக்கு எப்படியும் 35 வயது இருக்கலாம் குறிப்பிடத்தகுந்த அழகு என்று சொல்லமுடியாது, அவள் என்னிடம் பேசினால் அவளை மானசீகமாகப் பேரழகி என்றும் சொல்லலாம்.

அந்த ட்ரைவர் அவளுக்கு மிக அருகில் நெருக்கமாக நின்று கீழே பார்த்தபடி அவள் காதருகில் சென்று ஏதோ சொன்னான். என்னால் இதற்குமேல் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.


அதற்குள் முதுகில் ஒரு நகைக்கடை போர்டைச் சுமந்து நடந்து கொண்டிருக்கும் நவீன சுமைத்தூக்கி, அந்த பலகையைக் கழட்டிவிட்டபடி வேடிக்கை பார்க்கும் கூட்டத்திற்குள் கலந்தான். மற்றவர்களுக்கு காட்சிப்பொருளாய் நடமாடும் இவன் குறைந்தபட்சம் ஒரு டிகிரியாவது முடித்திருக்க வேண்டும், கையால் இழுக்கப்படும் ரிக்சாக்களை ஒழித்ததை இன்னமும் பெருமை பேசிக்கொள்பவர்கள் பேதியில் போக. அவனும் எட்டிப்பார்க்கலானான். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அவனையும் எங்கேயோ பார்த்திருக்கிறேன். சூரியன் மறைந்தாலும் இன்னும் வெளிச்சத்தடங்கள் வானில் இருப்பதால் அப்படி ஒன்னும் இருட்டாகவில்லை. பல நாட்களுக்குப் பின்னர் இன்று தான் நகரம் வெயிலில் தன்னை உலர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆறாவதாக ஏழாவதாக எட்டாவதாக வாக்கிங் சென்று கொண்டிருந்த அரை நிக்கர் அணிந்திருக்கும் மேட்டுக்குடி, குறுந்தாடி அங்கிள்கள் கலந்து கொண்டனர். பேசிக்கொண்டே வந்தவர்கள் பாலத்திலிருந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்ததும் நிசப்தமானார்கள். ஒருவர் மட்டும் கையை நீட்டிச் சுட்டிக் கொண்டிருந்தார். அப்படி என்ன தான் பார்க்கிறார்கள் என்று நானும் குனிந்தேன். அன்றில் பறவைகள் எங்களை ஆச்சரியமாகப் பார்க்க ஆரம்பித்தன.

ஒன்பதாவதாக டீஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்த ஒரு பெண், பத்தாவதாக குள்ள உருவமுடைய ஒரு மனிதன், பதினோரவதாக, குறுக்கே பையை அணிந்திருந்த தன்னை 24 மணிநேர உத்தியோகஸ்தராகக் காட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கம் இருப்பதாலேயே தானும் கலந்து கொள்வதாக நவீன பூணூலாக மாறியிருக்கும் ஹெட்போனில் யாரிடமோ காரணம் சொல்லிக்கொண்டு இந்த கூட்டத்திற்குள் கலந்தான்.

வேகமாக சென்று கொண்டிருந்த கே.டீ.எம் பைக் ஒன்றும் நின்றது. ஓட்டிக்கொண்டிருப்பவன் மேல் விகரமாதித்யனின் வேதாளம் போல் அமர்ந்திருந்த ஒருத்தியும், ஓட்டிவந்தவனும் இறங்கிவந்தார்கள் அத்தனை முக்கியமானதா இது? அவள் தோளில் கைபோட்ட படி இடைவெளி இல்லாதபடி இடையோடு இணைத்தபடி இருவரும் கீழே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் எல்லோரையும் நான் ஏற்கனவே சந்தித்தது போல் இருக்கிறது, அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் எல்லோருமே எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நோக்கும் திசையில் ஒவ்வொருவரும் வேறுவேறு விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஏன் இந்த பாலம் இத்தனை விசித்திரமாக இருக்கிறது.

இன்னொரு பழைய பத்மினி கார் ஒன்றும் நின்றது, அதைத் தொடர்ந்து ஒரு புல்லட்டும் – தொப்புளுக்கும் மேலே பேண்ட்டினை டக் செய்திருந்த ஆங்கிலோ இந்திய பாணியில் இருக்கும் ஒருவர் காரிலிருந்தும், என்னைப் போல இரண்டு மடங்கு பருமனான ஒருத்தன் புல்லட்டிலிருந்தும் இறங்கினார்கள். புல்லட்டிலிருந்து பாலத்திற்கு வருவதற்குள் இருவருக்கும் மூச்சு வாங்கியது.

நகரம் அதற்குள் அத்தனை இயல்பு நிலைக்கு மாறிவிட்டதா. எல்லோரும் மிக இயல்பாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் இன்று மாலை அப்படி என்னிடம் பேசாமல் இருந்திருந்தால், நான் ஏன் இங்கே வந்து நிற்கப்போகிறேன். நான் நிற்பதனால் தானே இவர்களும். அதற்குள் மூன்று சைக்கிள் பாலத்தின் மேலேறிக் கொண்டிருந்தது எங்கள் எதிர்புறம், சைக்கிள் ஓட்டுவது ஏன் இத்தனை லக்ஸுரியாக மாறிவிட்டது. மிகவும் நவீன சைக்கிள், ஆரஞ்சு வண்ண ஹெல்மெட், சைக்ளிங் டீஷர்ட், ட்ரவுசர்ஸ், கைகளில் க்ளவுஸ், சைக்கிளின் தண்டில் ஒரு தண்ணீர் புட்டி, ஸ்போர்ட்ஸ் வாட்ச், ஷூக்கள் இந்த மாலையிலும் கூலிங்கிளாஸ் என இரண்டு ஆண்களும் ஒரு யுவதியும். சைக்கிளை நிறுத்திவிட்டு, எங்கள் கூட்டத்தில் ஐக்கியமானார்கள். இப்படி சைக்கிள் ஓட்டுவது லக்ஸுரியாகவும், மேட்டிமையானதாலும் தான் சைக்கிள் வியாபாரம் இன்னும் நிலைத்திருக்கிறது. ஒரு சாம்பல் நிற பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டரினை நிறுத்திய சிவப்பு நிற சேலை கட்டியிருக்கும் மற்றொரு பெண் ஒருத்தியும் கலந்து கொண்டாள். அவளது அடர்த்தியான சிகையும் கண்களும் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்தது, என்னைப் பார்த்தபடியே என்னருகே வந்து அவளும் கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த வாகனத்தை ஒட்டியே மற்றொரு பல்சர் வந்து நின்றது இருவரும் கண்ணாடி அணிந்திருந்த மாணவர்கள் பார்ப்பதற்கு எங்கேயோ ட்யூசன் சென்று வருவது போன்ற தோற்றம். ஊர்ந்து வரும் எம்80 வாகனம் ஒட்டி வந்த வீரபத்ரன் அண்ணாச்சி அப்பளப் பாக்கெட் புதரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஆயிரஞ்சோலிய வச்சுக்கிட்டு அவரும் அக்கறையோடு பாலத்திலிருந்து எட்டிப்பார்க்க ஆரம்பித்தார். எதைப் பார்க்கிறார் என்று தான் தெரியவில்லை.

வௌவால்களும், சிறு பறவைகளும் சற்று அதிகமாகவே பறப்பது போன்ற உணர்வு, இன்றைக்கு தானே இவற்றை கவனிக்கிறாய் என்று மனதிற்குள்ளிருந்து மற்றொரு முரண்படும் குரல். இந்த மனதிற்குள் ஒலிக்கும் குரல் மட்டும் பெண் குரலாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும், எந்த ஏமாற்றத்தையும் சகித்துக்கொண்டு வாழமுடியும் அல்லவா. “பைத்தியக்காரத்தனமான ஆசை” என்று மறுபடியும் முரண்படும் அந்தக் குரல்.

‘அது பெண்குரல் அல்லவா?’

என் முதுக்குக்குப் பின்னால் ஒரு ஆண் மிக நெருங்கி நிற்பது போன்ற உணர்வு. “தள்ளிவிட்டுறப் போறான் ஜாக்கிரதை”

மீண்டும் ஒரு பெண்குரல் – அது அவளின் குரலா – இல்லை.

பின்னாடி நிற்பவனைத் திரும்பிப்பார்த்தேன். அவன் எனக்கு மிகப்பரிச்சயமானவன் ஆனால் என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை, தொண்டைவரை வந்து விட்டது. ஏதாவது பேசலாமா என்று முயன்றேன். ஆனால் அவன் கண்கள் சிவந்திருந்தன, முகத்தில் ஏமாற்றம், விரக்தி, வெறுப்பு, அவமானம் என எல்லாமும் வெளிப்பட்டது. என்னைப்பார்த்ததும் அவன் உடைந்து போனவனாய்க் குமுறினான். அப்போதும் மற்றவர்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்குள் அப்போது தான் ஒரு புரிதல் ஏற்பட்டது. ஆனால் அது விபரீதமல்லவா. அவனைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

“வேண்டம்டா அது உன்னால முடியாது.. நீ தியரிய தப்பா யூஸ் பண்ணுற”



மறுபடியும் என்னுள்ளேயிருந்து முரண்படும் குரல் ஆனால் இப்போது ஜீயின் குரல்.

அந்தக் குரல் ஒலித்தது தான் தாமதம், நான் அவனிடமிருந்து சற்று விலகிக்கொண்டேன். அது புரிந்தவனாக நேரடியாக அந்தச் சுவற்றில் ஏறிக் கீழே குதித்தான். தொப்பென்று சப்தம் கேட்டது, புள்ளினங்கள் கரைந்து கொண்டு மேலெழும்பின, அங்கங்கு வேறு வேறு இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவன் விழுந்த இடத்தைப் பார்த்தார்கள்.
நான் திரும்பவில்லை, கீழிருந்தப் பறவைகள் இப்போது என் தலைக்கும் மேலே வட்டமடித்துக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அது மறுபடியும் கீழ் நோக்கி இறங்கத் தொடங்கியது. எந்தவித சப்தமும் இல்லாமல் மனிதர்கள் அவரவர் வாகனங்களை எடுத்துக்கொண்டு கிளம்பலானார்கள். சில நிமிடங்களில் அந்தப்பாலம் வெறுமையாகியது. மின்சாரம் வந்துவிட்டதால் பாலத்தின் விளக்குகள் எறிய ஆரம்பித்துவிட்டன. ஆனால் அதில் ஒன்று விட்ட அடுத்த விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன, நான் என் டூவீலரை எடுத்துக்கொண்டு இயக்காமல் இறக்கத்தில் அப்படியே உருட்டியபடி இறங்கலானேன். மறுபடியும் பியானோ சப்தம் ஒலிக்க ஆரம்பித்தது.

அந்த பாலத்தில் சோகமான கீதம் ஒன்று இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.



- ஜீவ கரிகாலன்
  ( நன்றி:ஏப்ரல் மாதக் காக்கைச் சிறகினிலே இதழ்)









வியாழன், 13 ஏப்ரல், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 8

கழுத

அவரை அன்று பார்க்கும் போது மிகுந்த மலர்ச்சியுடன் காணப்பட்டார். உங்களைப் புரிய வைக்க ஏனோ உவமை கிட்டவில்லை. ஆமாம் நான் ஏன் புரிய வைக்கப் பிரயாசப்படனும். அவர் என்னை எப்போதும் ஒரு மண் சார்ந்த பிணைப்பு இருப்பதால் “தம்பீ” என்று தான் எப்போதும் அழைப்பார். அது என்னை, நான் பிறந்த மண்ணை, என் சமூகத்தை, என் வாழ்வியலை, நம்பிக்கையை எல்லாவற்றிட்கும் சேர்த்து இணைக்கின்ற ஒரு கயிறு. பிரித்தானிய பேக்கரியில் சுடச்சுட வாங்கிய மிருதுவான பன்னில் வெண்ணையைத் தடவும் உங்களுக்குக் கடுமையான பசியும், அதே சமயம் பன்னின் முதல் கடியில் ஈடுகட்ட இயலா சுவையை தியானித்து செய்யும் பொறுமை கொண்டவராக என்னை இந்த அரசியலில் என்னை வாரிக்கொண்டார். ஊருக்கு வரும்போதெல்லாம் போதனைகள் என்னை மிருதுவான ரொட்டித்துண்டைப் பார்ப்பது போன்ற கனிவு அவர் கண்களில் தெரியும்.

“தம்பீ!!”

“ஐயா சொல்லுங்க ஐயா.”

வீடு வரை அவரை இறக்கிவிடுமாறு கேட்டிட தான் என்னை அழைப்பதாகப் புரிந்தது. என் தாமதத்தை வீட்டிற்குத் தெரியப்படுத்தினேன்.
காரில் ஏசியைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டார்.

“தம்பி…”

“ஐயா”

“தலைவரிடம் உன்னைப் பத்தி நேத்து திடீர்னு பேச வேண்டியிருந்துச்சு”

திடீரென்று தலைவரிடம் என்னைப்பத்தி என்றவுடன், மகிழ்ச்சியில் வாகனம் மழையில்லாமல் வைப்பரைப் போட்டது.

“தலைவரிடம் சொல்லிவிட்டேன்.. தம்பி நம்ம ஆள்தான் என்று… தம்பிக்காக ஒரு முக்கியமான வேலை ஒன்றைக் கொடுக்கனும்னும் சொல்லிருக்கேன்”

தலைவர் என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. தலைவரிடம் எந்தன் பெயர் சொன்னால் போதாதா?. எத்தனை நாட்கள் அவரை வியந்து பார்த்திருப்போம். இன்று நம் பெயரை தலைவரிடம் சொல்லிவிட்டாரே. இதற்கு என்ன கைமாறு செய்யலாம். பணமெல்லாம் கொடுத்தா கோபப்படுவாரே என்று தோன்றியது.

“தம்பி கைவசம் ஏதாவது காசு வச்சுருக்கியா.. ஒரு பத்தாயிரம் தேவை”
என்னடா இது நம் மனதில் நினைக்கவும். அவர் கேட்கவும் அதிசயமாக இருக்கிறதே. என்னை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னதற்கு பணம் கேட்கிறாரா. இல்லவே இல்லை. அவர் அப்படியானவர் இல்லை. ஏதோ ஒரு பிரச்சினையாக இருக்கும் , நமக்காக இவ்ளோ செய்பவர் இது கூட செய்யாவிட்டால் எப்படி. கட்சியின் மூத்த பேச்சாளர் இவர். இருந்தாலும் வண்டிக்கான மாதத் தவணை கெட்ட இன்னும் ஒருவாரம் இருக்குது. ஓய்வில்லாம ஓட்டுனா பணத்தை கொடுத்திடலாம். தலைவர்கிட்ட சொன்னதுக்கு பணத்தைக் கடனாவ கேக்குறது.

“ஐயா வீட்டுல. பணம் இருக்கு. எடுத்துக்கொடுத்துட்டு ட்ராப் பண்றேன்”
வீட்டிற்குள் சென்று பீரோவில் எடுத்து எண்ணிவிட்டு வந்தேன். காபியைக் குடித்துமுடித்தவர்.

“பாப்பா ரொம்ப அழகா இருக்க.. இப்பதான் தம்பிய பத்தி தலைவர்கிட்ட சொல்லிருக்கேன், தம்பி நம்ம ஆள்தான்னு.. முக்கியமான வேலைகேட்ருக்கேன். நம்மாளுக்கு நாம செய்யாம எப்படி… நகைநட்டு வாங்கனும்ல”

“ஐயா அவ க்ரிஸ்டியன்” இரவில் விற்காத காய்ந்து போன ரொட்டியை, அடுத்த நாள் காலை ஆகாரமாக வெறுமனே சாப்பிடக்கொடுத்தால்?

காரில் அவர் வீட்டுக்கு....
நாட்டு நடப்புகளைப் பேசியபடி வந்தார். அவர் வீட்டிற்கு அருகிலே வந்து, இறக்கிவிட்டேன்

“தம்பி”

“சொல்லுங்க ஐயா”

“ஒரு முக்கியமான விஷயம்”

“ரகசியமா இருக்கனும்”

“சொல்லுங்க ஐயா.. கண்டிப்பா வெளிய போகாது”

“தலைவர்… சில முக்கியமான பொறுப்புகளை நம்மாட்களுக்குகொடுக்கனும்னு திட்டம் போட்ருக்கார்…. நான் உன் பேரை சொல்லலாமான்னு யோசிக்கிறேன். நாளைக்கு நமக்கும் சொந்தமா நாலு தொழில் வேண்டும்ல.. ”

“….”

“ இதத்தான் கார்ல ஏறுனப்பவே சொல்லனும்னு நெனச்சுக்கிட்ருந்தேன்… இப்பவாச்சும் ஞாபகம் வந்துச்சே.. நாளைக்கு காலைல போன் பண்ணு. தலைவர பாக்கும் போது ஏதாச்சும் சொல்லி வைப்போம்.” படக்கென்று காரிலிருந்து கீழே இறங்கி கால்களின் விழுந்தேன்..

“நமக்குள்ள என்னப்பா நீ என் புள்ள மாதிரி.. ஒருநா உங்க வீட்டுக்கு வாரேன். அப்ப வெலாவரியாப் பேசுவோம்”

பிக்கப்பிற்காக கால் வந்தது, மொபைல் போனில் அக்செப்ட் பண்ணினேன். ஜீ.பீ.எஸ்ஸில் காட்டிய இடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். முட்டுச்சந்து வந்தது, வந்த வழியே திரும்பும்போது. ஐயா சொன்னது ஞாபகம் வந்தது.. இருந்தாலும் ஏதோ இடிப்பது போல தோன்றியது.

காரை ஓரங்கட்டிவிட்டு போன் பண்ணினேன் மனைவிக்கு
“கழுத… விஷயம் தெரியுமா…”

“சொல்லு”

“ஐயா என்னைப் பத்தி இன்னைக்கு தலைவர்கிட்டப் பேசுனாறாம்.”


- ஜீவ கரிகாலன்


சனி, 8 ஏப்ரல், 2017

வீணாய்ப்போனவர்களின் கதை - 7

செப்டம்பர் மாதம் 04ஆம் தேதி.

ன்று நிலவொளி இத்தனைப் பிரகாசமாயிருந்திருக்கக் கூடாது. அவளோடு வாழ்வதைப் பற்றிய பெருங்கனவின் நிறைவேறாத் துயரத்தை, என் எதிரிலிருக்கும் அந்த பரந்துக்கிடக்கும் ஏரியில் தெள்ளத்தெளிவாய் தெரிவதற்குக் காரனமாக மேகமற்றத் தனிமையில் நீரில் தன் பிம்பத்தை மீன்களுக்குப் புணரத்தரும் நிலவின் வெளிச்சமே கட்டுங்கடங்கா கொந்தளிப்பை என்னுள் எழுப்ப ஆரம்பித்துவிட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் தொழிலில் நாம் செய்த அடிப்படை வேலைகளே மேலே மேலே உந்தவைத்து எங்கேயோ நம்மை நகர்த்திக்கொண்டு போய்விடுகிறது. சட்டென லிஃப்டினைப் போல வாழ்க்கையில் உயரப்பறத்தல் ஆர்கஸமாவதைப் போன்ற பரவசமடைதலைத் தருதல் தான் ஆனால் அது தற்காலிகமானது. ஆனால் மேலே சென்று கொண்டிருக்கும்போது அதெல்லாம் பிடிபடுவதில்லை. இறங்கும் போதும் பரவசத்தோடு இருந்தால் படிக்கட்டுகள் கூட சட்டென விலகி, நம்மைத் தள்ளிவிடும். 

முத்தங்களற்ற இயக்கத்தைப் போல வாழ்க்கை பரிசளித்தவைகளின் யாதொரு உறைகளும் இன்னும் பிரிக்கப்படவேயில்லை. இந்தக் கோடை வாஸஸ்தலத்தில் என் பின்னணியில் ஒரு அபஸ்வரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது அதை உங்களால் கேட்க முடியாது, ஒருவேளை அது உங்களுக்கு இதமான மெல்லிசையாகவோ, இரவினைச் சூடேற்றும் இசையாகவோ இருக்கலாம். அது எனக்கு அபஸ்வரம்.

ரிசார்ட்டின் புல்தரையில் தனியாக ஒரு இருக்கையில் கால்நீட்டியபடி, அந்த ஏரியைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்னை நீங்கள் வெற்றி பெற்றவனாகவோ, பைத்தியக்காரனாகவோ, குடிகாரனாகவோ அல்லது இன்னும் சற்று நேரத்தில் தற்கொலைக்குத் தயாராக இருப்பவனாகவோ என்னை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை இவ்வனைத்துமே உண்மையாக இருக்கலாம். உங்களுக்கு நான் மட்டும் அவளைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினால், நீங்கள் என் மீது இரக்கப்படுவதை விட்டுவிட்டு அவள் மீது ஆர்வம் கொள்வீர்கள். உலகிலேயே மிகவும் வசீகரமான, காமத்தை நொடிப்பொழுதில் தூண்டும் வல்லமை பெற்ற, கோபத்தைப் பொசுக்கும் ஆகிருதியுடைய, தீர்கமான, எதையும் சட்டென எடைபோட்டுவிடும், பொய் சொல்ல அவசியமற்ற, ஒரேயொரு முறை கூட மன்னிக்கத் தயாராகாத, ஆனால் உங்களை வாழவைப்பதற்கான ஆசிர்வாதத்தை அளிக்கும் பரிவான ஒரு பார்வையை வைத்திருக்கும் அவளது கண்களைப் பற்றி நீங்களும் ஒருநாள் என்னைப் போல் புலம்புவீர்கள். 

சைவனென்றால் பாதாதி கேசம் தான் வர்ணிக்க வேண்டுமென்றாலும், அவள் பாதங்களை எனக்கு அவள் காட்டியதேயில்லை, அவள் அணிந்திருக்கும் உடையை சற்றே மேலே தூக்கி அவள் கால்களை தரிசிக்கும் போதெல்லாம், ”சீ ஃபெட்டிஷ்” என்று அவள் என்னை அறைந்து விடுவாள். ஒருமுறை கூட அப்படித்தான் ……

ஆனால் இப்போது நான் உங்களுக்கு கதையல்லவா சொல்லிக்கொண்டிருக்கிறேன்? ஆமாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஒருவன் இரவில், நடுங்கும் குளிரில், காலி மதுக்கோப்பைகளோடு பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டியது தானே! இந்தக் கதையை நீங்கள் தெரிந்து கொள்வதன் வாயிலாக உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. என் சோகத்தைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன். ஒருவேளை அதைத் தெரிந்துக்கொண்டு “நீ ஒரு முட்டாள்” என நீங்கள் என்னைச் சொல்லலாம் அல்லது “அவள் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என நீங்கள் சொல்லலாம். அது கூடப்பரவாயில்லை என் மீது தேவையற்ற கருணை, இரக்கம், பரிதாபம் காட்டுவது கூடப்பரவாயில்லை, எனக்கு ஆறுதலாய் இருப்பதாய் நினைத்து அவளைக் குறைகூறிவிடாதீர்கள். அதற்கு உரிமையில்லை. ஆனால் நீங்களும் என்னைப் போன்ற தவறிழைக்காதீர்கள். பின்னர் ஒருநாள் நீங்களும் இப்படி என்னைப்போலவே உட்கார்ந்து வருந்திக்கொண்டு இருப்பீர்கள், வாழ்வை வெறுத்து முடித்து இருப்பீர்கள், தற்கொலை எண்ணம் உங்களுக்கு வந்து செல்லலாம்.

நில்லுங்கள் பயந்து ஓடாதீர்கள். நான் தான் என் கதையை உங்களுக்குச் சொல்லவில்லையே. நீங்களாக எதுவுமே தெரிந்துகொள்ள முடியாது. நீங்களாகத் தெரிந்து கொண்டதைத் தவறென உணருங்கள். உங்களால் இதிலிருந்து விடுபட முடியும்.

ஹாஹஹ்ஹா.. நீங்கள் இதில் சிக்கவில்லை என்றால் உங்களுக்குப் பிரச்சினையே இல்லை. உலகெங்கும் இப்படி காதல் கதைகள் புவிவெப்பமடைதலைப் போலவே அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதில் மலிந்துபோன ஒன்றாகவே இதை எடுத்துக்கொள்ளுங்கள். என் தோழி ஒருத்தி கிரேட் பேரியர் ரீஃப் பற்றியக் கதையை, அதன் மாறிவிட்ட இயற்கைச் சூழலை உருக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்த போது, நான் என்னையே நினைத்துக்கொண்டிருந்தேன். காதல் நித்தியத்திற்கு இட்டுச்செல்கிறது என்று நம்பியிருந்தும் மனிதத்தவறுகளால் நாம் வாழும் கூடான இந்த நீலக்கோள் தன்னைத் தானே அழித்துக்கொண்டிருப்பது போல் என் கேவலமான எண்ணங்களால் நான் என்னையே அழித்துக்கொண்டிருப்பதாக என் தோழி சொன்னவற்றை கவனிக்காமல் நான் எங்கேயோ கவனித்துக்கொண்டிருந்தேன். நீங்களும் அவ்வாறே நான் சொல்வதை கவனிக்காமல் எளிதாக என்னைக் கடந்து செல்லலாம். மலைகள் சுரண்டப்படுவதை, ஆற்று மணல் கடத்தப்படுவதை, சதுப்பு நிலங்கள் கபளீகரம் செய்வதை நாம் ஹெட்போன் அணிந்து கொண்டு ஜாக்கிங் ஸ்யூட்டில் கடந்து செல்வது போல just like that கடந்து செல்லலாம்.

எனக்காகப் பரிவு கொள்பவர்களே! உங்களுக்காக ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். இதில் துயரம் மிகுந்து இருக்கிறது, வலி, சோதனை, ஏமாற்றம் எல்லாமும் மலிந்து தான் இருக்கின்றன. ஆனால் உண்மையில் சில விஷயங்களை ஆழ்ந்து நோக்கினால், அசல் என்பது பொய்யின் சூக்கும உடலுக்குள் வாசம் செய்கிறது. இப்போது எனது முகத்தில் புன்னகை பூத்திருக்கிறது கவனித்தீர்களா?

இtதனை அபஸ்வர இசை என்று சொல்கிறேனே இது உண்மையில் உங்களுக்குக் கேட்கும் அதே மெல்லிசை தான். ஆனால் இதை அபஸ்வரம் என்று பெயரிட்டு எனக்கு மட்டும் உரியதாக வைத்திருக்கிறேன். இந்தப் பெயர் வைத்ததால் தான் உங்கள் ப்ளூட்டூத் பற்கள் இரவல் கேட்காமல் இருக்கிறது இந்தப்பாடலை. இந்த Possessiveness தான் என் வாழ்க்கையை சூன்யமாக்கியது என்பதை உணர்ந்து கொண்டால், நீங்கள் ஒருவேளை உங்கள் உறவுகளை அசலாக நேசிக்கக் கற்று கொள்ளலாம். ஏன் நானே அப்படித்தானே, அந்த தனிமை, ஏமாற்றம், வலி, சோதனை எல்லாமும் தான் என் வாழ்க்கையில் வேறு எந்த வலியும், சோதனையும், அவமானமும், பற்றும், துரோகமும் என்னை செயலிழக்க, நம்பிக்கையிழக்கச் செய்யாமல் காபந்து செய்துகொண்டிருக்கும் அவள் தந்த பரிசு. எல்லாவற்றிட்கும் மேல் அவள் என் நினைவுகளில் பூரணமாகத் தங்கியிருக்கிறாள். இத்தனை முழுமையாக அவள் தன்னையே உணர்ந்திருக்க மாட்டாள். அவள் அதனை எனக்குப் பரிசாகத் தந்திருக்கிறாள்.

இப்போதும் உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம், "இப்படியான ஒரு பைத்தியக்காரன் எப்படி தற்கொலை செய்யாமலிருக்கலாம்?” என்று, அது தப்பேயில்லை எனக்கும் அதே ஆச்சரியம் தான்..

ஆனால் அவள் எனக்கு ஒரு உறுதிமொழி அளித்திருக்கிறாள், “உன் தலையில் மயிர்கள் இருக்குமோ இல்லையோ, உன் வாய்களில் பற்கள் இருக்குமோ இல்லையோ, உன்னை இறுக்கப்பற்றியபடி அழுத்தமாக உனக்கு நான் ஒரு முத்தம் கொடுக்காமல், நீ சாகவே மாட்டாய்” என்று சொல்லியிருக்கின்றாள். அதை நான் இப்போதும் நம்புகிறேன்.

அதனால் தான் இந்த உன்மத்த நிலையிலும், எப்படியான மனக்கொந்தளிப்பும் சற்றைக்கெல்லாம் அடங்கிவிடுகிறது. பேசுவதற்குத் துணையாக காலி மதுக்கோப்பைகளே போதுமானதாக இருக்கிறது. போதாதைக்கு நிலாவைப் புணர்ந்து கொண்டிருக்கும் மீன் குஞ்சுகள் அவ்வப்போது என்னைப் பார்த்து ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லுகின்றன. ஆனால் அது எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும் விஷயம் தான். உங்களுக்கும் சொல்கிறேன்.

 “வாழ்க்கை மிக அழகானது”

- ஜீவ கரிகாலன்

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 6

 குரோதம்


மாநகரத்தின் புகழ்பெற்ற அந்த ஷாப்பிங் மாலில் திடீரென அத்தனை களேபரம், பலரும் என்னைச் சுற்றி ’உச்’ கொட்டியபடி, பரிதாபப்பட்டபடி, பகடி செய்தபடி சூழ்ந்துகொண்டிருக்க பத்துபதினைந்து செல்போன் கேமிராக்கள் என்னைப் படமெடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் நான் எங்கேயும் ஓடவில்லை ஏனெனில் ஒரு அழகான யுவதி என் வலது காலினை ஏந்திக்கொண்டிருக்கிறாள். அழகான யுவதிக்கும் எனக்கும் ஒரு மாலில் என்ன நிகழ்கிறது என நீங்கள் பார்ப்பது என்னை மேலும் எரிச்சலடையச் செய்கிறது. அது என் கால்களில் ஊற்றப்பட்டிருக்கும் ஆண்ட்டிசெப்டிக் மருந்தைவிட அதிக எரிச்சலைத் தருகிறது. இரத்தத்தை துடைத்து விட்டு கால்களில் ஆண்ட்டிசெப்டிக் ஊற்றிக்கட்டுப்போட்டு முதலுதவி செய்த இந்த பெயர் தெரியாத கண்ணம்மாவைத் தவிர உங்கள் எல்லோர் மேலும் எனக்கு எரிச்சல் இருக்கிறது.

இப்போது அந்த மீனைக் கொல்லாமல் வந்துவிட்ட எரிச்சல் வேறு.
இரண்டாம் நாளும் அந்த மாலிற்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் நான் அந்த பெடிக்யூர் கடையோடு சண்டைபோட வந்திருக்கிறேன் என்ற சமாதானம் செய்ய மாலின் பணியாளர்கள் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிக்கொண்டு என்னைப் பிந்தொடர்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் அந்தப் பெயர் தெரியாத கண்ணம்மாவைத் தேடினேன். காணவில்லை. மீண்டும் அவனிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். காயப்பட்ட கால்களை தண்னீருக்குள் விடக்கூடாது என்றான். எனது இடது காலை மட்டும் நீட்டினால், காசைக் குறைப்பாயா என்றேன். சக மனிதர்களிடமிருந்து எந்தத்தொடுதலுமற்ற ஜீவியாய் இருக்கேனென என்னை உற்றுநோக்கிக் கழிவிரக்கம் கொண்டிருக்கிறான் எனத் தெரிந்தது. யாரோ ஒருவன் என் மீது செலுத்தும் இரக்கம் கூட என்னை ஹிம்சிக்கிறது.

“ஐம்பது ரூபா தாங்க வேறு ஏதும் ரிசிப்ட் கேக்காதிங்க” என்றான்.
இரக்கம் என்பது அப்படித்தான் அதன் மறுமுனை ஒரு ’சந்தர்ப்பம்’ என்கிற ஆதாயம் கொண்டிருக்கிறது.

கோடையில் இறுக்கமான உடைகளணிந்த யுவதிகள் சில நூறுபேரை என் சிறுமூளை பார்த்துக்களித்ததில் ஏறிப்போயிருந்த உஷ்ணம் யாவும் என் இடது காலின் மயிர்க்கால் வழியே வெளியேறிக்கொண்டிருந்தது. மீன்கள் மொய்மொய்யென இடைத்தேர்தலில் வேலை செய்யும் எம்.எல்.ஏக்களாய் என் காலில் மொத்துக்கொண்டிருந்தன.

“இதுவரைக்கும் எந்த மீனும் யாரையும் கடிச்சதில்ல ப்ரோ” என்றான். விநோதமாகத் தான் இருந்தது. அதன் அறிவியல் பெயர் காரா ரூஃபா என்பார்கள். அது எப்படி இரத்தம் வருமளவு கடிக்கப்போகிறது?
மாறிவரும் நுகர்வுக்கலாச்சாரம் எல்லாவிதத்திலும் காசு பார்க்க பழக்கிவிட்டிருக்கிறது. சதுரகிரியில் நண்பர்களோடு மலைஏறி இறங்கும் போது நொந்துபோன கால்களை அந்த நதியில் மீன்களிடம் கடிக்கக்கொடுங்கள் என்று ஒரு சுக்குநீர்க்காரன் சொல்ல, நாங்களும் செய்தோம். வலி பறந்துவிட்டது. அது சாதாரண ஐயிரை மீன் தான். ஆனால் இம்மாதிரியான ஸ்டால்களில் கிடைப்பது டாக்டர் ஃபிஷ் என்றழைக்கப்படும் காரா ரூஃபா. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாலிலும் இதற்கான ஸ்டால்கள் இருக்கின்றன. வீட்டுற்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சுவிட்டது ஒத்தடம் கொடுத்தது எல்லாம் போயே போச்சு. மசாஜ் செய்திடக்கூட 100,150 ரூபாய்க்கு ஒரு நாற்காலி போதும். பதினைந்து நிமிடங்கள் நல்ல சேவை செய்கிறது. அதற்குப் பின்னர் இன்னும் ”கொஞ்ச நேரம்டி” என்றாலோ, ”என் கண்ணுல்ல, ஐயோ உன் கைக்கு மோதிரம் செஞ்சுப் போடனும், ஐயோ பாவம் போதும்மா உன் கை வேற நோகுது நான் சமாளிச்சுக்கிறேன், உன் கைகள்ள ஒரு ஹீலிங் பவர் இருக்கு ஹனி” என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு கூடுதலாக கொசுறு மசாஜ் கிடைக்காது. மீண்டும் ஒரு முறை 150 ரூபாய் கொடுத்து அதனுடன் ஒப்பந்தம் போடனும்.

ஏழெட்டு நிமிஷம் ஆகியிருக்கும். கால்கள் ஊற ஆரம்பிச்சுது. எந்தப்பிரச்சினையும் இல்லை. பலர் என்னை வேடிக்கைப் பார்த்த அவலத்திற்காகவே இன்னொரு முறை நானா? மீனான்னு? பார்த்துவிட முடியு பண்ணி தான் இன்றும் வந்தேன். இத்தனை நேரம் ஒன்றும் ஆகாததால் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று, ’நேற்றுக் கடிச்சது மீனா தான் இருக்குமோ அல்லது வேறு என்னவாக இருக்கும்’ என்று நினைத்த கணமே, மறுபடியும் உயிர் போகும் வலி. இந்த முறை இரண்டு துளைகள். இரத்தம் பீறிட்டு வர. அவன் என்னைத் தூக்கிவிட்டான்.

அருகிலிருந்தவர்கள் கத்தினார்கள். நேற்றைக்கு விட இன்று கூட்டமும், செல்போன் படப்பிடிப்பும் அதிகமாகியது. இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. என்னைக் கடித்த மீன் எது என்று தெரியவில்லை.

கூட்டம் கூட ஆரம்பிக்க. தலை சுற்றியது. முதலுதவி செய்ய ஒரு தடித்த சஃபாரி சூட் ஆசாமி வந்தான். அவனைப் பார்த்ததுமே, சற்று மூர்ச்சையடைந்தால் தேவலை என்று நினைத்………

மூன்றாம் நாள்.

மனம் மிகுந்த மனவுளைச்சலாக இருந்தது. எனக்கிருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் நான் எதனைக் குறிப்பிட்டுச் சொல்ல உங்களிடம்? அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வந்தது. அதிநவீன ட்ராவ்லர் படகு ஒன்று இறக்குமதி செய்துக்கொண்டிருக்கிறோம். உதிரிபாகங்களாகக் கொண்டுவது அதற்கு சுங்கவரியைக் குறைத்து க்ளியர் செய்துவிட்டு அதனை அசெம்பிள் செய்துக்கொடுத்துவிட்டால், வாடிக்கையாளருக்கு நல்ல லாபம். இந்த யோசனையைக் கொடுத்தது நான் தான். இதனால் பெரிய ப்ராஜக்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நிர்வாகம் நிச்சயமாக நல்ல சம்பளம் ஏற்றிக்கொடுக்கலாம், ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
கப்பல் இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடும். அதற்குள் காயங்கள் ஆறிவிடனும்.

நான்காவது நாள் –

ஏற்கனவே இரண்டு முறை ட்டீ.ட்டீ. ஊசி போட்டுருக்கிறேன். மீன்கடிக்கு ட்டி, ட்டி ஊசிப் போட்டவர்கள் யாரும் இருக்கிறார்களா? 
இதுபோன்ற தரமற்ற பெடிக்யூர் பார்லர்களால் ஹெபடைடிஸ் ஸீ தொற்றுகிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஸ்டால் ஓனர் யாரென்று கேட்டு அவர்களிடம் ஏதாவது பிரச்சினை பண்ணும் எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. மறுபடியும் நான் மாலில் செல்கிறேன். என்னைப் பலருக்கு அடையாளம் தெரிந்திருக்கிறது, ஏதோ நாளிதழில் கூட இந்த மீன்கடியைப் பற்றி ஒரு கட்டம் கட்டிப்போட்டிருந்தார்களாம். என்னைப் பின்தொடர்ந்து சிலர் வந்தார்கள்.

இரு கால்களிலும் கட்டுடன் நான் ராஜா மாதிரி நடந்து சென்றேன். இம்முறை அவனிடம் ஒரேயொரு கை மட்டும் என்று ஐம்பது ரூபாய் நீட்டினேன்.

அவன் முடியாது என்றான்.

சண்டையிட ஆரம்பிக்கவும் கூட்டம் கூடியது. மாலில் இருந்து வெளியேற்றினாலும் பரவாயில்லை என்று நான் அவனிடம் சண்டையைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் முதல் நாள் முதலுதவி செய்தவள் வந்துவிட்டாள். கனக்கச்சிதமான அந்தக் கருப்பு யூனிஃபார்ம், என்னை ஜெண்டில்மேனாக நடந்து கொள்ளச் சொல்லாமல் சொல்லியது.
இருநூறு ரூபாய் கொடுத்தேன். நூறு ரூபாய்க்கான ரிசிப்ட் கிடைத்தது. தொட்டியில் வழக்கமான இடத்தில் உட்காராமல் வேறு பக்கம் அமர்ந்தேன். சற்றுத் திரும்பினால், எல்லோரும் கைகளில் செல்ஃபோனுடன் தயாராக இருந்தார்கள். சிகரெட்டிற்கு பதிலாய் பட்டாசு வைக்கும் ஜனகராஜ் போல என்னை நான் உணர்ந்தேன். அந்த சிரிப்புக் காட்சி உண்மையில் எத்தனை வலி மிக்கது என்று தோன்றிற்று. எல்லா மீன்களும் எதிர்புறத்தில் கும்பலாகச் சுற்றிக்கொண்டிருந்தன. நான் நீரில் கையை நீட்ட, அங்கே நிசப்தம் படுபயங்கரமாய் இருந்ததும் என்னைத் திகிலூட்ட ஆரம்பித்தது. தண்ணீர்ல் வைத்த வேகத்தில் கையை மேலே எடுத்துவிட எல்லோரும் சிரித்தார்கள்.

 “ஃபக்”

செத்தாலும் பரவாயில்லை என்று நீரில் கைவிட்டேன். ஒன்றன் பின் ஒன்றாக மீன்கள் மொய்க்க ஆரம்பித்தது. மூளைக்குள் ஒரு புது பரவசம். நான் இருக்கும் நான்காம் தளம் தனியாக சுழல்வதைப் போன்ற பரவசம். எல்லா மீன்களும் மொய்த்ததாக நினைத்துக் கொண்டிருந்த தருணம். ஒற்றை மீன் மட்டும் உடலை ஆட்டியபடி நான் இருக்கும் இடத்திலிருந்து எதிர்புறத்தில் நீர்ல் நின்றுக்கொண்டு என்னை பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் வெறி இருப்பதாகத் தோன்றியது. மிகத்துடிப்பாக இருந்தது, அதே இடத்திலிருந்து நகராமல் உடலை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தது. 


கூட்டம் என் மிக அருகில் வந்து சூழ்ந்துகொண்டது. ஒரு சிறுவன் அந்த மீன் மட்டும் தனியாக இருக்கிறது என்று சுட்டிக்காட்ட எல்லோரும் அதை ஜூம் செய்து படம் பிடித்தார்கள்.


எல்லோரும் நோக்கியது தான் தாமதம். சர்ரென நீரைக் கிழித்துக்கொண்டு வந்து என் மோதிர விரலைக் கடிக்க, ரத்தம் பீய்ச்சியடிக்க.. கத்திக்கொண்டு எழுந்தேன். கூட்டமே பதறியடித்து என்னோடு சேர்ந்து மிரண்டார்கள்.
***
“ட்ராய்லர் போட்னா என்னன்னு தெரியுமாடா தாயோளி”

“சார்.. என்ன சார் இப்படி பேசுறிங்க. நான் ரூல் 9 பாஸ் பண்ணிருக்கேன். ஏ.ஸி கிட்ட கம்ப்ளையன் பண்ணுவன்”

“வேற எப்படி கர்த்தரேன்னு உங்கிட்ட மண்டி போடச் சொல்றியா…. இந்த கஸ்டம்ஸ்லாம் மேல போடுற சட்டை தான், சட்டையக் கழட்டுனா இது மீனவ ஒடம்புதாம்லே. ஒனக்குத் தெரிமா - கடலெல்லாம் எங்களுக்குச் சாமிலே, எங்க ஆத்தா மாதிரிலே. அக்ஸெசரிஸ்னு கள்ளத்தனமா இம்போர்ட் பண்ணி அசெம்பிள் பண்ணி விக்குறியே அது என்ன தெரியுமா? அது கடலைக் கற்பழிக்குற அரக்கனோட ஆண்குறிலே.. உங்களையெல்லாம் அவ்ளோ ஈஸியா விடமாட்டேன்”

- ஜீவ கரிகாலன்


வியாழன், 6 ஏப்ரல், 2017

வீணாய்ப்போனவர்களின் கதை - 5

உச்ச நடிகர்

பெரிய அளவில் ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த கஃபேயினைத் தடை செய்ய வேண்டுமென. இது சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கான உரிமையை மறுப்பதால் சர்வதே அளவில் தொழில் நடத்தும் மற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு இந்த விவகாரம் எடுத்துச்செல்லப்படும் என்று மிரட்டல் வர, அரசு தடை விதிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. காணாமல் போன அந்த உச்ச நடிகரைத் தேடி நாடே கொந்தளித்தது. எல்லோரும் பெரிய பெரிய பட்டங்களைப் பறக்கவிட்டு விமானங்கள் பறப்பதை இடையூறு செய்தனர்.

அஸ்ட்ரல் கஃபே நிறுவனம் எந்நேரமும் தாக்குதலுக்குள்ளாக்கப்படலாம் என்று அரசாங்கத்திடம் போதிய பாதுகாப்பைக் கேட்டிருந்தாலும், எப்படியாவது தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய. அந்நிறுவனத்தின் உயர்மட்ட ஆர்.என்.டி குழு கூட்டம் கூடியது. எப்படி அது சாத்தியமானது என்று யாருக்கும் தெரியவில்லை. அவரது உடல்திறன் சரியாக இருந்ததால் தான் அவரை அனுமதித்தோம் என்று பணி அதிகாரிகள் சான்றிதழைக் காண்பித்தார்கள்.
உலகத்தின் தலையாய METAPHYSICAL COLLIDER என்று அழைக்கப்பட்டு வந்த ஆஸ்ட்ரல் கஃபே உண்மையில் ஒரு டெலிபோர்டல் ஆய்வுகளுக்காக உரிமம் பெற்ற நிறுவனம் மட்டுமே, அதன் நிதித்தேவைகளுக்காக கேளிக்கைச் சுற்றுலா மையமாக இந்த உடலை விட்டு வெளியேறி சுற்றிவரும் அனுபவத்திற்கான ரிசார்டினை இந்தியாவில் முதன்முதலாகத் திறந்தது. தொடங்கி இரண்டே வருடங்களான இந்த கஃபேயிற்கு இதுவரை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பேர்கள் முன்பதிவு செய்திருக்கின்றனர். உலக அளவில் மிகக்கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கும் MOST HATRED COMPANY.

பூமிக்குள்ளாக உடலை விட்டு விட்டு வெளியே உலாவிட்டு வரலாம். அதிகப்பட்சம் மூன்று நாட்கள் தான். ஆர்வமாக முன்பதிவு செய்த அந்த உச்ச நடிகர் ஆஸ்ட்ரல் பயணத்தை ஆரம்பித்து 6 நாட்களாகியும் இன்னும் எந்த முன்னேற்றமும் ஆகாததால். அதற்குப் பின்னர் யாரும் உள்ளே செல்லவில்லை. அந்த இடமே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கப்போகும் பலூன் போல அழுத்தத்தால் ஊதிக்கொண்டிருந்தது.
புலனாய்வு அதிகாரிகள், சர்வதேச புலனாய்வு அதிகாரிகள் என எல்லோரும் தேடிக்கொண்டிருந்தனர்.

தொலைக்காட்சி விவாதங்கள் சூடுபிடிக்கப் பறந்தன, வரப்போகும் அடுத்த திரைப்படத்தை வெற்றி பெறச்செய்யும் யுக்தியென அவரது போட்டி ரசிகர்கள் நக்கலடித்தனர். அதேசமயம் அறிவியல் நிறுவனமாகத் தம்மைக் காட்டிக்கொண்டிருக்கும் டெபிபோர்ட்டல் கார்ப் மீது நிறையவே விமர்சனங்களை விஞ்ஞானிகள் வைத்தார்கள்.

இதற்காக தாய்லாந்திருந்து செயல்படும் நிறுவனம் சில வேலைகளில் இறங்கியது. சமூக ஊடகத்தின் வாயிலாக இந்தச் செய்திகுறித்துப் பேசிய ஒட்டுமொத்த ஜனங்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டன, அவர்களைப் பேசச்செய்யும் ஜெனரேட்டர்கள் மற்றும் அதிகம் பரவச்செய்யும் ட்ரான்ஸ்ஃபார் மனிதர்கள் குறித்த தகவல் திரட்டப்பட்டு ஒரு பெரிய தொகை பங்கிடப்பட்டது. உச்சநடிகரின் பயோ மெட்ரிக் தகவல்களை வைத்திருந்த தேசிய தகவல்கள் பாதுக்காக்கும் கிட்டங்கியில் அவரது தகவல்கள் கரெப்ட் செய்யப்பட்டது குறித்து சில சப்பாணி ஊடகங்கள் மட்டுமே குரல்கொடுத்தன, சமூக ஊடகக்கடத்திகள் அதை கண்டுகொள்ளாமல் தடுத்தனர்.

உச்சநடிகரின் க்ளோனுடன் களவாடப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை பொருத்தி சரிபார்த்தனர். எல்லாம் சரியாக இருந்தது. இருந்தபோதும் அவரை உச்ச நடிகராகவே மாற்றிட சில காலம் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் என்பதால், மக்களை நம்புவதற்காக ஏதாவது செய்ய வேண்டும்.

அரசியல் அழுத்தங்கள் வேறு அந்த நிறுவனத்திற்கு அதிகமாகிக் கொண்டிருந்தது. தன் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அது பிரகடனம் செய்தது. இருந்தாலும் உச்சநடிகரை ஒப்படைப்பதாக வாக்குக்கொடுத்தது. இதற்காக உயர்மட்ட ரகசியக் குழு ஒரு தனி கமிட்டியை உருவாக்கியது. அவர்கள் சினிமா ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து மாஸ் ஹீரோக்களின் நடவடிக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர். சில தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த அந்த மற்றொரு நடிகரைப் பற்றித் தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இருவருக்குமான அத்தனை ஒற்றுமைகள் இருந்தன. அந்த ஹீரோவை ஆனால் மக்கள் மறந்துவிட்டனர், அவரது ஃபார்முலாவில் தான் இவரும் தொழிலில் முன்னேறியவர் என்பதால் அந்த நிறுவனம் தன் செயல்திட்டத்தைத் தொடங்கியது.

இறுதியில் அந்த குழுவின் பரிந்துரை மற்றும் கவனிப்பிற்கிணங்க சமூக ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. உச்சநடிகர் இமயமலையில் தியானத்தில் இருக்கிறார் என்று தகவல்களை ஷேர் செய்ய ஆரம்பித்தன, இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் பேச்சு எடுபடவில்லை. ரசிகர்கள் நம்ப ஆரம்பித்தார்கள், அவர்களுக்குப் பழைய உச்ச நடிகர் கூட இதே போன்ற ஆன்மீக நம்பிக்கை உடையவர் அவரைப் போன்ற அம்சங்களை உடைய இவரும் அவ்வாறான ஆன்மீகப் பயணத்தில் இருப்பதாகவே நம்பவைக்க ஆரம்பித்தனர்.

வேகவேகமாக காலிடருக்குள் தியானம் இருக்கக் கூடாது என்கிற விதிமுறையை வாடிக்கையாளருக்கான ஒப்பந்தப்படிவத்தில் ஏற்றப்பட்டது. க்ளோன் வெற்றிகரமாகத் தயாரானதும் அதனை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். உச்சபச்ச நடிகர் ஆனாலும் யாருடனும் பேசாமலிருப்பதை சில ஊடகங்கள் சந்தேகம் எழுப்பினாலும், எல்லா இடத்திலும் பணம் விளையாண்டுக்கொண்டிருந்தது.
ஒருவழியாக ஒரு முன்னணி ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றினை அந்த நிறுவனமே ஏற்பாடு செய்ந்திருந்தது, கேள்வி பதிலிற்கான ஸ்க்ரிப்டுகளை ஏற்கனவே க்ளோனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தது நிறுவனம். அக்கேள்விகளில் அந்நிறுவனத்தின் எதிர்காலப் பாதுகாப்பும் , சில திடீர் சந்தர்ப்பவாத லாபங்களும் பொதித்து வைக்கப்பட்டிருந்தன, அந்த க்ளோனாகிய உச்ச நடிகரையே தூதுவராக நிறுவும் திட்டமும் அதிலிருந்தது.

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று ஆரம்பித்த கேள்வி, மிகச்சரியாக பதில்சொல்லிக்கொண்டிருந்தது அது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த விபத்து நடந்தது. க்ளோன் தன் சிந்தனையிலிருந்து ஸ்க்ரிப்ட்டில் எழுதப்படாத பதில் ஒன்றைத் தந்தது.

“ நின்று போன உங்கள் திரைப்படத்தை எப்போது மறுபடியும் தொடங்குவீர்கள்? ”

“இல்லை இப்போது வேறு திட்டங்கள் இருக்கிறது”

“அப்படியா ஆச்சரியமாக இருக்கிறது.. அந்தப்படம் அவ்வளவு தானா?”.  ஸ்க்ரிபிடிலிருந்து விலகிய பதிலை ஊர்ஜிதம் பண்ண முயற்சித்தாள் நிகழ்வை நடத்தியவள். 

“ஆம் அவ்வளவு தான் முக்கியமான திட்டமிருக்கிறது”

“அப்படியானால் அது என்ன திட்டம் என்று சொல்ல முடியுமா?”

“இமயத்தில் ஆழ்ந்த யோகத்திலிருக்கும் போது என் பிறவி நோக்கம் புரிந்தது. ஆகவே நான் அரசியலில் இறங்கப்போகிறேன். அடுத்த வாரமே புதுக்கட்சித் தொடங்குகிறேன்”

பல ஆண்டுகளாகக் கேட்டிடாத அந்தச் சப்தம் மீண்டும் நாடு முழுக்க கேட்க ஆரம்பித்தது.

“தலைவா!!! எங்களை ஆளப் பிறந்த ஆண்டவா!!”

ஜீவ கரிகாலன்