வெள்ளி, 28 மே, 2021

எண்ணும்மை 4 - நல்லூழும் நலம்விரும்பியும்

 “உனது பதிவுகளில் வைரமுத்துவை ஏன் வறுத்தெடுக்கிறாய். அவரை விமர்சித்தால் திமுகவிலிருந்து உனக்குப் பகை வரும் என்று சொல்கிறார்கள். நசிந்து கொண்டிருக்கின்ற தொழிலுக்கு கழக ஆட்சியிலாவது லைப்ரரி ஆர்டர் கிடைக்குமென்றால் இப்படியா பதிவுகள் போடுகிறாய்” என்று ஒரு நல விரும்பி என்னை அழைத்துப் பேசினார். 

நலம்விரும்பி என்கிற பெயரில் இங்கே என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் இல்லையா?

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த க்ரூப் எடு

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த கோர்ஸ் எடு

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த காலேஜ், இந்த வேலை, இந்த பொண்ணு/ இந்த பையன செலக்ட் பண்ணு

என்று ஆரம்பித்து

உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இந்த இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி எடு, இந்த கம்பெனில சீட்டு போடு, இந்த இடத்தை வாங்கிப் போடு, இந்த ஸ்கூல்க்கு விண்ணப்பி என்று இன்னொரு சக்கரத்தில் நம்மை தள்ளிவிடுவார்கள் பின்பு அதிலும் நலம் விரும்பிகள். நாமும் நலம் விரும்பிகளாக பலருக்கு..

வைரமுத்து திமுகவோடு நல்லுறவைப் பேணி பாதுகாப்பவராக இருந்தாலும், இன்றைய அரசாட்சியில் அவர் பங்கு என்ன? அவர் என்ன கட்சிக்காக பிரச்சாரம் செய்தவரா? திமுகவின் பரம வைரிகளான அதிமுக ஆட்சி செய்யும்போதே, அதுவும் ஆண்டாள் குறித்த சர்ச்சையிலேயே அவரை யாரும் கைது செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் அவருக்காகத் தெருவில் இறங்கிப் போராடினார். பா.ஜ.க தருண் விஜயோடு நெருக்கத்திலிருப்பவர்,  நரேந்திர மோடியின் கவிதைகளை வெளியிட்டவர், ரஜினியோடு நெருக்கமாக இருந்தவர். ஒரு பொது ஆளாகவும் தன்னை நிறுவிக்கொண்டவர். அதாவது எல்லோருக்கும் நல விரும்பி..



உண்மையான திமுக நல விரும்பிகள் வைரமுத்துவை ஆதரிப்பது தங்களது விசுவாசத்தின் செயல்பாடு என்று நினைக்கிறார்கள். நான் இதை ஒருபோதும் நம்புவதில்லை. எனக்கு வைரமுத்து விருது வாங்குவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அது சேட்டன்களின் இலக்கிய விழுமியம் சார்ந்த பிரச்சினை. ஆனால் இத்தனை குமுறல்களுக்கும் கேள்விகளுக்கும் எந்தவித பயமும் கொள்ளாமல் ஒருவரால் அடுத்தடுத்து நகர்ந்து முன்னேறி போக முடிவதும். பெருந்தொற்று காலத்திலும் தனது பாதுகாப்பிற்காக முதல்வரைச் சந்திப்பதுமாக தன்னை மிகவும் கவனத்தோடு இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டவனாகக் காட்டுவது தான் எதிர்ப்பைக் காட்டத் தூண்டுவது.

நலம்விரும்பிகள் அமரத்துவம் பெற்றவர்கள்

நம் சமூகத்தில் நலம் விரும்பிகளின் உண்மையான பங்கு என்ன?

“இப்படியே ஆள் ஆளுக்கு பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி, மொதல்ல ஆக வேண்டியது என்னனு பார்ப்பம்” என்கிற வசனத்தைப் பேசும் மூன்றாம் நபர் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறார். சுயமாக ஆர்டர் பண்ணத் தெரியாத நமக்கு, பக்கத்து டேபிளில் ருசித்து சாப்பிடுபவர் நலம் விரும்பி ஆகிறார். நம்மாலும் ஒரு நலன் விரும்பியல்லாமல் வாழ முடிவதில்லை.

ப்ளாக் எழுதும் ஆரம்ப காலத்தில், நான் நிறையவே நலம்விரும்பிகளைத் தேடி வைத்திருந்தேன். ஒரு இடுகையை பதிவேற்றியதும் ஒவ்வொருவருக்கும் இதை யாஹூ, ரெடிஃப் மெஸஞ்சர்கள், ஆர்குட் இன்பாக்ஸ், மின்னஞ்சல் என அனுப்பிவிட்டு ஒவ்வொருவருக்கு போனில் அழைத்தும் வாசித்துக் கருத்திடச் சொல்லிக் கேட்பேன். அத்தனை பேரும் எனக்கு நலவிரும்பிகள் என நினைத்துக் கொண்டேன். 

நலம்விரும்பிகள் நாம் விரும்பும் பதில்களைத் தருபவர்கள்

“மொதல்ல நீ புக்ஸ் வாசிடா என்றோ.. நீயே எழுதனத படிச்சுப்பாரு” என்றோ சொல்வாரில்லை. குறை, விமர்சனம் சொல்பவர்களை நாம் நலவிரும்பிகளாகவும் கொள்வதில்லை.

ஒரு கட்டத்தில் நான் கோவைக்கு சென்றபோது என் நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்லலாம் என்று முடிவெடுத்து முகவரி கேட்க அழைத்தால்..

“நான் படிச்சிட்டு சொல்றண்டா” என்று நான் ஏதும் பேசுவதற்கு முன்னரே அழைப்பைத் துண்டித்தான். அதனாலெல்லாம் திருந்திவிடவில்லை சமூக ஊடகங்களில் ஒத்த மனநிலையோடு இருப்பவர்களை இன்னும் தொந்தரவு செய்தபடி தான் இருக்கிறேன். என்ன இந்த எண்ணிக்கை மீச்சிறியது.

நலம் விரும்பி எனும் வேள்வி

உண்மையில் ஒருநல விரும்பியாக இருக்க விரும்புபவன், கசப்பாகத் தான் இருப்பான். நான் அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் அவ்வாறு தான் இருக்கிறேன். இதனால் எனக்குப் பிரியமான நண்பர் ஒருவர் தான் எழுதுவதை நிறுத்த நீ தான் காரணம் என்றார். மிகக்கடினமான விமர்சனம் அது. சில காலம் நான் அவரோடு பேசாமலே இருந்தேன். உண்மையில் அவர் என் நலன்விரும்பியாக ஏன் இருக்கக்கூடாது. நான் ஏன் சர்கரை தூவிய மாத்திரையாக இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொள்வேன். என் சுபாவம் நான் அக்கறை கொண்டவர்களோடு அப்படி இருக்கமுடிவதில்லை. சில சமயம் நானே தவறிழைத்திருப்பேன்.

அண்மையில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிவரும் கட்டுரைகளில் மகிழ்ச்சி குறித்த தத்துவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. அதன் மையம் நாம் மகிழ்ச்சி குறித்து அதிகக் கவலைப்படுகின்றோம். 

நல்லது, நன்மை, வெற்றிபயக்கும் காரியங்களை பிரார்த்தனைகளை உடன்படுதலை செய்யவே துணிகிறோம். தமது குழந்தைகளின் வெற்றிக்காக தாம் தோல்விபெறும்/துக்கத்தை/நிம்மதியற்ற வாழ்வுக்கு நலம்விரும்பிகளாக பொறுப்பேற்கிறோம். தமது குழந்தையின் யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள், அவரை வெற்றி பெற ஓட்டளியுங்கள், அவர் கல்விபெற கடனளியுங்கள் என்று நலம்விரும்பிகளை நாடுகிறோம்.

நம்பிக்கையின் கருவி நலம்விரும்பி

நலம் விரும்பியாகத்தான் காலையில் தினசரி பலன்கள், பங்குவர்த்தகப் பரிந்துரைகள், ஹவுஸ்ஹோல்ட் விற்பனை விளம்பரங்கள், குண்டாக/சர்கரை/இரத்த அழுத்தம் குறைய ஆலோசனைகள், மனநலப்பயிற்சி வகுப்புகள், போர்னோ சைட்கள், யூட்யூப் சமையல் குறிப்புகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், வாக்குறுதிகள், நலத்திட்டங்கள். 

முறையான அரச ஆவணங்கள் நமக்கு கல்வெட்டுகள் வாயிலாகத் தான் கிடைக்க ஆரம்பித்தது என்பதை வைத்துக்கொண்டு (சோழர்கால கல்வெட்டுச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு)யோசித்தால், அத்தனை விதமான வரிகளைத் தாண்டி, நிலவுடமையாளர்களின் அதிகாரத்தைத் தாண்டியும் எல்லா வர்கக்குடிகளும் தம்மை இன்றுவரை சமூகத்தில் அங்கம் வகிக்க, அது எந்த நலவிரும்பிகளையும் நம்பாதது காரணமாகியிருக்கும். எல்லா துயர்களையும், ஒடுக்குதல்களையும், வலிகளையும் தாங்கிக்கொண்டு தன்னை தக்கவைப்பதற்கான முனைப்பு (survival instinct) மட்டுமே. அவர்கள் நலவிரும்பிகள் பற்றிய சரித்திரக்கதைகளில் வரும் துணைப்பாத்திரங்கள் மட்டுமே.

நலம்விரும்பி எனும் சித்திரவதை

இப்படித்தான் ஒருநாள், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வற்ற ஊரடங்கையும் அதற்கு ஆயத்தமாக்க மக்களின் நலன்விரும்பிய அரசு ஒன்னரை நாள் கடைகளைத் திறந்துவைக்கச் சொல்ல, ஒட்டுமொத்த நலன்விரும்பிகளும் ஒன்றாய் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடிக் கொண்டிருந்தது செய்திகளில் ஒளிபரப்ப என்னோடு படித்த ஒரு நலன்விரும்பி என்னை அழைத்தான்.

ரவை, சேமியா, நூடல்ஸ் பாக்கெட்டிற்காக சண்டைபோட்டு முண்டியடித்துக் கொண்டிருந்த மக்களோடு நின்று கொண்டிருந்த நான் அவன் அழைப்பை லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி நின்றுகொண்டிருக்க

“மச்சான் எப்படிடா இருக்க”

“நல்லாதாண்டா இருக்கேன், ஊரு முழுக்க கொரோனாவாம் அதான் கேட்டேன் ”

“ஆமா திங்க கெழமல இருந்து லாக்டவுன் தான, கொஞ்சம் கொஞ்சமா கட்டுப்படும்.. சரிடா நான் அப்புறமா கூப்டுறேன்.. கடைல கூட்டமா இருக்குடா”

“பாத்துடா.. முக்கவசம்லாம் அணிந்து இருக்கதான”

அவன் அரசியலில் சேர்ந்துவிட்டதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். அவனது அக்கறையில் தொனித்திருந்த ஆங்கிலக்கலப்பற்ற தமிழ் எனக்கு அதனை நினைவூட்டியது.

“ஆமாண்டா டபுள் மாஸ்க்தான் போட்டுருக்கேன்”

“பார்த்துடா இரட்டை முகக்கவசம் போட்டா மட்டும் போதாது. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன் பாதுகாப்பான உடலுறவை மெயிண்ட்டெய்ன் பண்ணு”

 “என்னதெ”

நாமும் யாருக்கோ நலவிரும்பியாக இருந்தே ஆகவேண்டும். நமக்கும் சிலர் இருந்தே ஆகவேண்டும் அதுவே விதி.

என் நண்பனின் நலம்விரும்பி அவனை ஆங்கிலக்கலப்பற்ற தமிழைப் பேசச் சொல்லியிருக்கலாம். ஆனால் கூடுதலாக அதிலிருக்கும் அபாயங்களையும் உணர்த்தியிருக்கனும். சமூக இடைவெளிக்கு பாதுகாப்பான உடலுறவு அர்த்தம் ஆகியது போல். 

நலம்விரும்பி எனும் நல்லூழ்

வைரமுத்துவைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு வியாக்கியானங்கள் உலவுகின்றன. அவர் மட்டும் திமுகவின் நலம்விரும்பியாக இருந்தால் நிச்சயம் பாதுகாப்பான .. நல்லுறவை வளர்க்கவும், முதல்வரின் மீதிருக்கும் அபிமானத்திற்காகவும் நிச்சயம் அவரைச் சந்தித்திருக்கமாட்டார். சரி பொள்ளாச்சியிலே இத்தனைக்குப் பிறகும் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ போல நமக்கிருக்கும் நலவிரும்பிகள் நம்மைக் காப்பாற்றுவர்கள் என்கிற நம்பிக்கை நம்ம வைரத்திற்கு அதற்காக இவ்வளவு உழைக்க வேண்டியிருப்பது இந்த எழுத்துச்சமூகத்திற்கு நல்லூழ் தான்.


வியாழன், 27 மே, 2021

எண்ணும்மை - 3 கருத்துரிமையும் கமர்கட்டும்

 : அப்போ எல்லைகளை கொண்டு வருவதில் நீங்க தீர்மானமா இருக்கிங்க?

 : எங்களது peace keeping army மக்களை பத்திரமா கூட்டிட்டுப் போயிடுவாங்க.. எல்லாம் தீவிரவாதிங்களால தாமதமாகிடுச்சு

: அவுங்களை தீவிரவாதிங்கன்னு சொல்லாதிங்க

: அப்போ அவுங்கள எப்படிக் கூப்படனும்னு சொல்லுங்க

: உங்க peace keeping army கையில் ஆயுதங்கள ஏந்திட்டு, மக்களை வலுக்கட்டாயமா திரும்ப அனுப்ப ரெடியா இருக்காங்க இல்லையா.. அப்போ அந்த மக்கள் உங்க ஆர்மிய எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா?

நீங்க வைக்கிற இந்த பேர் இருக்கு தெரியுமா தீவிரவாதிகள், அகதிகள், கிளர்ச்சியாளர்கள்னு.. உங்களுக்குப் பிடிக்காத மாதிரி பேரை வச்சுட்டு அவுங்கள கேள்வி கேட்க விடாம தடுக்கறிங்க...

***

இப்படி  வசனங்கள் வரும் ஒரு தமிழ்படத்திற்கு சென்ஸார் வாங்கிட முடியுமா? கருத்துரிமைப் போராளிகளால். கருத்துரிமை போராட்டம் எனும் பெயரில் ஈழப் படுகொலையை சிங்களப் பேரினவாதத்தின் அதற்குத் துணை போன அரசாங்கங்களின், நாடுகளின், சித்தாதங்களின் எந்த ஒரு சிறு செங்கல்லையும் சுட்டாமல் ஒட்டுமொத்தமாய் பழிபோடுவது தமிழினம் என்கிற இன அடிப்படையிலான உரிமை மீட்பு மற்றும் உணர்வுப் போராட்டத்தை.

தமிழினம் எனும் உணர்வு பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. சாதிகளின் வேரைப் பற்றித்  “தமிழண்டா” என்று சொல்லும் ஆழமற்ற மேல் அடுக்குகளை, பூஞ்சைகளை மட்டும் கண்டறிந்து அதனை வைத்தே அரசியல் பழித்து வெற்றி பெற முடியும். அதன் ஆயுள் குறைந்து வருவது வேறு விஷயம். இங்கே நான் முன்வைப்பது கருத்துரிமைக்கான அரிதாரங்களை மட்டுமே.

***

ஹாட்ஸ்டார் + டிஸ்னி ப்ளஸில் வெளிவந்துள்ள அவெஞ்சர்ஸ் வரிசை படங்களின் Spin-off தான் ஃபால்கன் மற்றும் விண்டர் சோல்ஜர். கேப்டன் அமெரிக்காவாக உருவெடுக்க ஒரு கருப்பினத்தவனின் உளப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அசத்தலான தொடர் தான் இது.  மேற்கண்ட வசனத்தை இந்த தொடரின் கடைசிப் பகுதியில் பார்க்கலாம். (ஸ்பாய்லர் அலெர்ட்**)

End Gameல் தனது போராட்ட வாழ்க்கையை முடிவுக்கு வந்துவிட்டதாக உணரும் ஸ்டீவ் ரோஜர்ஸ் எனும் வெள்ளையர் தமது கேடையத்தை சுமப்பதற்கு சரியான ஆள் என்று தேர்வு செய்யும் நபர் (தனது நண்பர் பக்கியை விட பொறுத்தமானவராக) சாம் வில்சன் தான் (ஃபால்கன்). ஆனால் அவரால் அந்த கேடையத்தை வைத்திருக்க முடியவில்லை மாறாக மக்கள் ஏற்கும்படியான ஒரு கேப்டன் அமெரிக்காவாக மற்றொரு வெள்ளையரை அரசாங்கம் தேர்வு செய்கிறது (paul walker). 



CAP is BACK என்கிற விளம்பரத்தோடு நிறைய Merchandise ஆகிறது. (அப்துல்கலாமிற்கு நாம் Merchandise செய்யாமல் ஒரு சந்தை வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டோம் அல்லது அக்னிச் சிறகுகள் ஒரு எளிய உதாரணம். இன்னும் இந்திய அரசியலில் அது உருவாகவில்லையோ). இந்த தேசியவாத சந்தைச் சாகுபடி ஒரு கருப்பினத்தவனுக்கு கிடைக்காது என்கிற தயக்கத்தை, உயிரோடு வாழும் மற்றொரு கருப்பின சூப்பர் சோல்ஜர் (ப்ராட்லி) தன் கதையின் மூலம் உறுதிப்படுத்துகிறார். 

மற்றொரு பக்கம் போராளிகளுக்கு ஆயுதமாக அவர்களையே சூப்பர் சோல்ஜர்களாக உருவெடுக்க வைக்கும் சீரம்களைக் கொடுத்து அவர்களைப் பயன்படுத்துகிறார், ஷீல்ட் எனும் உளவு அமைப்பின் ஏஜெண்ட்டான கார்ட்டர். இங்கே பவர் ப்ரோக்கராக மறைமுகமாக செயல்படும் ஏஜெண்ட் கார்ட்டரை யாராலும் கண்டரியமுடியாது. இறுதியில் தன் காரியங்களை சாதிப்பதற்கு அல்லது சாதித்துவிட்ட பின்னர் தான் உருவாக்கிய போராளியையே ஏஜெண்ட் கார்ட்டர் கொல்கிறார். இறுதியில் அரசாங்கம் அவருக்கு மிக உயர்ந்த பதவி ஒன்றைக் கொடுக்கிறது.

போராளிகள் எப்படி உருவாகிறார்கள் எனும் பகுதி இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றாக சேர்ந்து வாழ்பவர்களை அதிகாரம் இவர்கள் குடிகள் இவர்கள் அகதிகள் எனப் பிரிக்கிறது. அகதிகள் மீட்பு என்கிற பெயரில் நடக்கும் இனச் சுத்தகரிப்பு அல்லது புதிய எல்லைகளை வகுக்கும் அணிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆட்களைத் தேர்வு செய்து அவர்களை சூப்பர் சோல்ஜர் ஆக்குகிறார் பவர் ப்ரோக்கர். இறுதியில் ஒரு பக்கம் பவர் ப்ரோக்கராலும், இன்னொரு புறம் இனவாத கூட்டு அரசாங்கங்களாலும் மற்றும் சூப்பர் ஹீரோக்களாலும் தோற்கடித்துக் கொல்லப்படுகிறார்கள். அதற்கும் மேலாக அவர்களை ஆதரித்த பொது மக்களையும் மொத்தமாகக் கைது செய்கிறார்கள்.

இப்படியான திரைப்படங்கள் உங்களுக்கு வேறு ஒரு வரலாற்றை நினைவில் கொண்டு வரலாம். அது வெகுஜனங்களுக்கான திரைப்படங்களின் வடிவமே, தேசியவாதம் பேசும் படங்களில் அல்லது உலகத்தைக் காப்பாற்றப் போராடும் அமெரிக்க பிரதிநிதிகளின் படங்களில், எதிர்முகாமில் இருப்பவர்களை ( அது டைனசரோ, ஏலியனோ, எதிர்காலத்தவனோ, புரட்சியாளனோ)** அவர்களது தரப்பினைப் பேசும் அத்தியாயங்கள் மட்டுமே கதையின் வலிமையைக் கூட்டும். 

**அது இயற்கை விதிகளை மீற அறிவியல் எனும் பெயரில் லாபம் சம்பாதிப்பதோ, உலகத்தின் வளங்களை நாசமாக்கும், பாழ்படுத்தும் காரணத்தாலோ, ஏதேச்சதிகாரம், மதம் அல்லது  சலுகைசார் முதலாளித்துவத்தாலோ {crony capitalistic} எதிரிகளைச் சம்பாதிக்கும் மனித குலத்தின், தேசியவாதத்தின் மகத்துவத்தின் எதிர்விளைவு.

***

The family man, 800, madaras cafe, With You, Without You, DAM 999 உள்ளிட்ட படங்களுக்கு எதிர்ப்பு வரும் என்பது தெரியாதது ஒன்றுமல்ல. ஆனால் சென்ஸார் போர்டின் தணிக்கை, ஈழ ஆதரவு அரசியலை வெளிப்படையாகப் பேசும் ஒரு வெகுஜனத் திரைப்படத்திற்கு ஒப்பாக இருக்குமா?. இங்கே சென்சாரில் ஒரு சரிசமமான தணிக்கைக் கொள்கை அல்லது சென்சார் அற்ற திரைப்படங்களுக்கான வாய்ப்பு கிட்டும்போது. கருத்து சுதந்திரத்திற்கான போராளிகளின் நிலைப்பாடு அப்படியே எதிர்திசையில் இருக்கவும் வாய்ப்புள்ளது.

அதுவரை மொக்கை படங்களின் கதாநாயகனின் பெயராக பிரபாகரன் என்கிற தமிழினத்தின் 100% உத்தரவாதமுள்ள Merchandise இருக்கவே செய்கிறது. இல்லை காலா போன்ற அற்புதமான திரைப்படத்தை அந்த அரசியலோடு துளியும் ஒத்தே போகாத ரஜனியை வைத்து எடுத்துத் தொலைக்க வேண்டும் (நல்லவேளையாக தூத்துக்குடி கலவரம் குறித்த ரஜினியின் உளறல் அவரை முதல்வராக்க சாத்தியமுள்ள ஒரு பொன்னான வாய்ப்பை இழந்தது). குறியீடுகளைக் கொண்டு இசைப்ப்ரியாவையும் பாலச்சந்திரனையும் காண்பிக்க வேண்டும்.

ஏற்றத்தாழ்வற்ற நிலை வரும்வரை(பொருள், சமுகநீதி) இடஒதுக்கீடு எனும் equaliser எத்தனை முக்கியமோ, அவ்வாறே கருத்துரிமை சார்ந்த விதத்திலும் ஒரு check and balance தேவைப்படுகிறது.

 800 படம் போஸ்டர்களிலேயே நின்றுபோய்விட்டது. ஆங்கிலத்தில் எடுக்கையில் யாரால் தடுக்க முடியும், ஆனால் இந்த தடை உருவாக்கும் விளம்பரம் மூலதனமாகும் சூட்சுமம். அது ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ வெளிவரும்போது, தமிழினம் குறித்த சித்தரிப்பு (திரைப்படத்திற்கு வெளியேயும் - படத்தை தடை கோரும் அரசியலும் இதில் அடங்கும்) உலக அரங்கில் ஒரு பொதுபுத்தியை மேலும் மேலும் கட்டியெழுப்பும். சரி இது conspiracy theory என்று விட்டுவிடுவோம்.

தடை செய்வது தீர்வாகாது எனினும் தடை குறித்த போராட்டங்களை, எதிர்ப்புகளை அனுமதித்து தான் ஆகவேண்டும். அரசியல் வாய்ப்பு அற்ற அல்லது வற்றாத அரசியல் வாய்ப்பு தருகின்ற ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளின் அதிகப்பட்ச  உரிமை தடைக்கான கோரல் மட்டுமே. இதனைத் தாண்டும் ஒவ்வொரு மில்லிமீட்டர் போராட்டமும் லத்தியால் கற்களால் வழக்குகளால் அடக்கப்பட்டிருக்கும் ஆட்கொணர்வு மனுக்களால், CCTV கேமிராக்களால் மட்டுமே உயிர்பிழைத்த முகிலன்கள் அல்லது நம்பிக்கைகள்.

எனது நிலைப்பாடு இவற்றைத் தடைசெய்வதைக் காட்டிலும் அமேசான் செயலியை ஒரு Campaign செய்து குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் unsubscribeகளை ஒரே நாளில் செய்து காண்பித்தால் அதன் விளைவுகள் வீரியமாயிருக்கும். இந்த விஷயம் பேசுவதற்கு அதன் சந்தை தான் காரணமென்றால், சந்தையைக் கொண்டு மட்டுமே பதில் சொல்ல முடியும். இதைவிடுத்து விட்டு சமந்தாவை மட்டும் ட்ரோல் செய்து கொண்டிருப்பது அவர்கள் உருவாக்கும் பொதுபுத்தியை மேலும் வலிமையாக்கும்.

பெரும்பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈழ யுத்தத்தின் தமிழ் சார்புநிலையில் இருந்து ஒரு படம் எடுக்கத் தயாராகும் நாள் வரை அப்படியான ஒரு படத்தை எடுத்து உலக வெகுஜன பார்வையாளருக்குக் கொண்டு போக முடியாது என்பதை இந்நாளில் என்னால் உணர் முடிகிறது. எது என்ன இந்நாள் என்றீர்களா? போரில் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை வைத்து ஒரு குறும்படத்தை தயாரித்தவன் நான். அதன் ஷூட்டிங் நடந்து இன்றோடு நான்காண்டுகள் ஆகின்றன. இன்றுவரை வெளியிட முடியவில்லை என்பதற்கு அரசியல் ஒரு காரணமேயில்லை சந்தை மட்டுமே காரணம். நானும் கடன் கொடுத்தவரை கமர்கட் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.


ஜீவ கரிகாலன்

திங்கள், 24 மே, 2021

எண்ணும்மை - 02 வாய்ப்பும் இழப்பும்

 

“ஜே.கே.. அவனை ப்ளூக்ராஸ்ல புடிச்சுக்கொடுக்கனும் ஜே.கே...” என்று தான் அன்றைய பொழுதின் முதல் பேச்சாக இருந்தது. நாகலாபுரத்தில் ஆறு ஏழு நாய்கள் வளர்த்த பந்தம் இன்று வரை எங்கு சென்றாலும் அவர்களுடன் தொடர்ந்து வருகிறது. முதன்முறை எங்களோடு சதுரகிரிக்கு மலையேற துணைவந்த சொக்கநாதன், அடுத்த முறை சில ஆண்டுகள் கழித்து வந்த போதும் சொக்கநாதன் எங்களைக் கண்டுகொண்டது என்பது முன்னர் சொன்ன பந்தத்தின் உச்சபட்ச உதாரணம். 

 இப்போது வசிக்கும் ஏரியாவில் உள்ள பசங்களுடன் நான்காண்டு கால சகவாசம்.. ஏரியாவில் மூத்த பையன், எல்லோருக்கும் காட் ஃபாதர் கவர் பாய் தான்.. முன்னோடி, மூத்தவரென்றாலும் அன்பு காட்டுவதிலும் பொஸஸிவிலும் இவர் எல்லோரையும் விட அதிகம். இப்போது பழு வந்த காரணத்தினோலோ காயம்பட்டபோது மருந்து போட்டதன் எரிச்சல் காரணமாகவோ என் மீது கோபமிருக்கலாம். 

அகிலா தோழர் என்னை விட ஒரு படி மேல்.. எத்தனை நோய்மையுற்றாலும் அவர்களை ஆறுதலாய் தடவிக்கொடுக்கத் தவறுவதேயில்லை. அதுவும் கொரோனா காலத்திலிருந்து கவர் பாய் என்னிடம் முழுமையாக நட்பை துண்டித்துவிட்டான்.. இத்தனைக்கும் அன்றாடம் பிஸ்கட் பாக்கெட் முழுமையாக அவனுக்கு என்றே போட்டாலும், நான் அங்கே இருந்தால் உண்ண மாட்டான். எழுந்து திரும்பிப் படுத்துக் கொள்வான். நாங்கள் வசிக்கும் மூன்றாம் தெரிவிலிருந்து முழுமையாக அவனது இருப்பிடமான இரண்டாம் தெருவிலேயே தங்கிவிட்டான். அங்கிருக்கும் அம்மு அவனை ஏற்கனவே கடித்துவைத்துவிட்டதால் ஏற்பட்ட காயம் முழுமையாக ஆறிவிடும் முன், புதிதாக அவனுக்கு கழுத்தில் ஒரு காயம் ஏற்பட்டிருந்தது. அப்போதும் அவன் என்னைக் கண்டால் விலகிப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 

எங்கள் தெருவில் தப்பி பிழைத்த குட்டியொன்று பழுவோடு மிக நெருக்கமாய் பழக ஆரம்பிக்க அவன் இங்கே செட்டிலாகிவிட்டான். அது போல கொரோனா காலத்தில் புதிதாக இருவர்  உள்ளே நுழைந்து குட்டியோடு உணவுக்காக சண்டையிட, இப்போது அவர்களுக்கும் தனிப்பங்கு கிடைக்க அவர்களும் சற்றுத் தள்ளி அவர்களுக்கான இடத்தை பிடித்துக் கொண்டு எங்கள் தெரிவிலேயே செட்டிலாகிவிட்டார்கள்.

கவர்பாய் நன்றாக துருதுருவாக போக்கிரியாக சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் அவனை யாராலும் எதிர்க்க முடியாது, சேர்ந்தார் போல் இரண்டு அல்லது மூன்று குத்தாவாலாக்களை கூட அவன் துரத்திவிடுவான். அவன் தனித்த குரலில் குரைப்பதற்கு பதிலாய் ஒரு ஸ்வரமொன்றை எழுப்புவான். எப்படியாகினும் மூன்றாம் தெருவை முழுமையாக ராஜ்ஜியம் செய்தவன் அவன். திடிரென பாதி வளர்ந்த குட்டியாகத்தான் ஒரு கருப்பு வெள்ளை துள்ளல் பயலைக் கண்டேன்.. வாலை ஆட்டும் வேகத்திலிருந்து அவன் நல்ல ஆரோக்கியமானவன் என்று உணர்ந்தோம். முதன்முதலாக ரௌடிக்கு அஞ்சாமல் அவனை மீறி எங்கள் அலுவலகம் அருகே வந்து உட்கார்ந்து வாங்கித் தின்றுவிட்டுக் கிளம்பிவிடுவான். அவனது ரவுடி ரதோர் ஆனது. ”ரவுடிப்பயலே” என்று கொஞ்சுவதை அவன் அங்கீகரித்தான். போடும் பிஸ்கட்டை அவன் சாப்பிடாமல் அவனது கேர்ள் ஃப்ரண்டை அழைத்து வந்து சாப்பிட வைத்து உடன் செல்வான். இந்த மாதிரி நடவடிக்கையை இதற்கு முன் எந்த பயல்களிடமும் கண்டதில்லை. 

நாங்கள் வசிக்கும் பகுதியில் நிலத்தில் குடில் போட்டு தங்கி வேலை செய்து பிழைப்பவர்கள் ஆண் நாயை வளர்ப்பதில்லை, அவர்கள் நாய்க்குட்டியை சிட்டியில் விற்பனை செய்ய முடியும் என்பதும் ஒரு காரணம். ஏற்கனவே ரவுடியின் கேர்ள் ஃப்ரண்ட் கடந்த ஆண்டு போட்ட குட்டியில் பிழைத்தவை விற்கப்பட்டன. குட்டியை இழந்த அது மிகவும் மூர்க்கமானது. அதற்குள் கார்ப்பரேஷன் ஆட்கள் ரவுடிக்கு அறுவைசிகிச்சை செய்து திருப்பி அனுப்பிவிட்டனர். அதற்கு பின்னர் அவன் பழைய சுறுசுறுப்பை இழந்துவிட்ட போதிலும் நம் மீது இருந்த பிணைப்பை 1% கூட இழக்காமல் இருந்தான். இப்போது அவன் முழுமையாக முதல் தெருவில் வசித்து வந்தான். பழைய பேப்பர் கடை அண்ணாச்சி அதே தெருவில் கிட்டத்தட்ட ஐந்தாறு பேருக்கு மேலாக கவனித்து வந்தார்.  ஆனால் ரவுடி அவர்களிடமிருந்து தனித்தே இருந்தான். ஆப்ரேஷன் செய்த பின்னர் அவன் மனிதர்களிடம் நெருங்குவதில்லை. அண்ணாச்சி, என்னைத் தவிர, அகிலா, இளங்கோவிடம் மட்டும் வாலாட்டுவான். என்னிடம் மட்டும் கையிலிருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை அவன் விடவேயில்லை. 

இரண்டாம் தெருவில் கவர் பாய் மற்றும் அம்முவும், குறுக்குத் தெருவில் இரட்டையர்களில் ஒருவன் கார்ப்பரேஷன் பண்ண அறுவை சிகிச்சையில் சீழ் வடிந்து செத்துப்போக. கருப்பு வெள்ளை சங்கரி மட்டுமே வசித்து வந்தாள். அது ஒரு ப்ளாட் மட்டுமே, தற்காலிகமாக சென்னை சில்க்ஸ் பார்க்கிங் வைத்துள்ளது. முதல் தெரு வாசிகளாக கைவிடப்பட்ட கலப்பினத்தான் ஒருத்தனும், ஒரு சோம்பேறி வெள்ளையன், இரண்டு கருப்பர்கள், இட்லிக்கடை கருப்பன் போக ஒரு திருட்டு வெள்ளையன் (வீடு புகுந்து திருடி நிறைய அடி வாங்கியிருக்கிறான்) தான் இருந்தார்கள். பின்னர் ரவுடி ரத்தோர் குழுவோடு இல்லாமல் தனியாய் இருப்பான். நாய்கள் ஒரு Pack animal தான் எத்தனை சண்டையிட்டாலும் அவர்களுக்குள்ளே ஒரு குழு இருக்கும். பார்க் தாண்டி ஒரு இடத்தில் ஏழெட்டு பேர்கள் இருப்பார்கள் அவர்கள் கதையே தனி. அருகிலிருந்த வீட்டு விலங்குகள் காப்பகம் (PET Boarding) திடீரென இடம்பெயர, திரும்ப அழைக்கப்படாத விலங்குகளை ஒரே இடத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் ஒருகுழுவாக இருப்பதால் அவர்கள் அங்கேயே வாழ்ந்துவருகிறார்கள். எந்த குழுவிலிருந்து பிரிந்துவந்தவனோ அல்லது கைவிடப்பட்டவனோ தெரியாது ரவுடி தனித்தே இருந்தான். ஒரு சீஸனில் உடனிருந்த சங்கரியும் இப்போது அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அருகே வருவதில்லை. தவிர உடம்பும் தடிமனாக போய்விட்டது.

***

அன்று காலை என்னை எழுப்பியது ரவுடியைப் பற்றி சொல்லத்தான். திடீரென அதற்கு முந்தைய நாள் எங்கள் தெருவிலிருந்தவர்களை விரட்டிவிட்டு எங்கள் வீட்டுக்கருகே வந்து உட்கார்ந்துவிட்டான். பழுவைப் பார்த்து குறைத்தபடியே இருந்தான். உணவு கொடுத்து கொஞ்சம் அவனை சாந்தப்படுத்திவிட்டுப் போ என்று அதட்டியதும் போய்விட்டான். அன்றிரவு முழுதுமே பெருஞ்சப்தங்கள் சொல்லப்போனால் அந்த வாரம் முழுக்கவே சண்டை சச்சரவுகளோடே இருந்தது. குட்டி, பழு, ரவுடி உள்ளிட்ட எல்லோருக்கும் காயமிருந்தது. 

ஆனால் பிரச்சனை எல்லா நாய்களிடையே அல்ல ஒரேயொருத்தனால் தான்.

அகிலா அந்த சம்பவத்தை சொல்லும்போதே நடுங்கிதான் விட்டார். “நம்ம ரவுடி பத்தி சந்தேகப்பட்டது சரிதான். அவன் காலைல சங்கரியோட எல்லா குட்டிங்களையும் கடிச்சிட்டான்... நாங்க விரட்டினாலும் போகலை”

மிகமோசமாக மூன்று குட்டிகளையும் கடித்து குதற, எப்படியோ அகிலாவும் வேறொரு பெண்மணியும் சேர்ந்து அவனை விரட்டிவிட்டு படுகாயம்பட்ட குட்டிகளைத் தூக்கி சென்னை சில்க்ஸ் கதவருகே கொண்டு ஒளித்து வைத்தார்கள். குட்டிகளைக் கடித்து குதறிய இடம் சென்னை சில்க்ஸ் பார்க்கிங். காலையிலேயே அவன் மூர்கமாக சுற்றிக் கொண்டிருந்தான். மெயின்ரோடு உட்பட மூன்று தெருவிலும் எங்கெங்கெல்லாமோ சென்று வெவ்வேறு நாய்களைக் கடித்துக் கொண்டிருந்தான்.

கோவிட்காலத்தில் சோறு வைப்பவர்கள் அநேகர் வெளிவருவதில்லை, சிலர் ஊர் சென்றுவிட்டார்கள், சிலருக்கு இயலவில்லை. பழையபேப்பர் கடை அண்ணாச்சியும் அவ்வப்போது வந்து சோறு போட்டுவிட்டுச் செல்வார். ஆனாலும் நான் உட்பட ஏதோ ஒருநாள் அல்லது ஞாயிறு உணவு போடாமலேயே விட்டுவிடுவதுண்டு. கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலே இந்த அசாதாரணச்சூழல் தொடங்கிவிட்டது அல்லவா? ஏன் என்றே புரியாத வண்ணம் ரவுடி மூர்கமாக ஆகியிருந்தான். ஆனால் அவன் உண்ணாமல் இருந்தால் மூர்கமாகிவிடுவான் என்று தோன்றியதால் ப்ளூ க்ராஸ் வரும்வரை அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவன் அப்போது வசிக்குமிடம், உயர்த்திக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மூன்றடுக்கு வீட்டுப்புறம். அங்கு போய் நான் நின்றால் போதும் என் கூடவே வந்துவிடுவான், நேராக என் வீட்டருகே வந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, கொஞ்சம் சாப்பாடோ பிஸ்கட்டோ சாப்பிட்டு மீதம் வைத்துவிட்டு சென்றிடுவான். இவ்வாறு முந்தின நாளிலிருந்து நான்கைந்து முறை செய்துவிட்டேன். 

காலையில் பதிவு செய்த ப்ளூகராஸ், சுமார் இரண்டு மணிக்கு வந்தது. சென்னை சில்க்ஸ் பின்கதவருகே வைத்திருந்த குட்டிகள் இல்லை என்றதும் அவர்கள் கிளம்பிப்போவதாக போனில் சொல்ல, மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைக் கூட்டி வந்தோம். ப்ளூ கிராஸைப் பொறுத்தமட்டிலும் புகார் செய்யப்படாத எந்த ஒரு உயிரையும் அல்லது volunteer இல்லாத எந்த ஒரு பிராணையையும் எடுத்துவருவதில்லை. அதற்கு வேறு ஒரு வழக்கு காரணம். இதைக் காரணம் சொல்லி அவர்கள் வெறி பிடித்து கடிக்க வரும் ரவுடியைக் கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்.

பின்னர் ஒரு பணியாளரை எனது வாகனத்தில் வைத்துக் கூட்டிச் சென்று காண்பித்தேன். கண் முன்னே ஒரு வெள்ளையனை ரவுடி கடித்துத் துரத்திக்கொண்டு இருந்தான். வாகனத்தை அழைத்துவரச் சொன்னார் அதற்குள் அப்பகுதி மக்களும் அங்கே கூட அவர்கள் முதலாவதாக அந்த சங்கரியைப் பிடிக்கச்சொன்னார்கள். சென்ற வருடமே அது ஒரு பெண்ணைக் கடித்துவிட்டிருந்தது. அது தன் குட்டிகளைப் காப்பதற்காகத் தான் அப்படிச் செய்தது என்று ஒருபுறம் சொல்லி அதனை விட்டுவிடச் சொல்லி பேசினார்கள். 

எல்லா நாய்களையும் பிடிக்க வேண்டுமெனில் 195க்கு(கார்ப்பரேஷன்) அழையுங்கள் என்று அவர்கள் கிளம்பத்தயாராக. இல்லை ஏதோ ஒன்றையாவது பிடிச்சிடுங்க என்று பேசி, ரவுடி அமரும் இடத்தைக் காண்பித்தேன். அவன் தொந்தரவில்லாதவன் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அவன் மூன்று நாட்களாய் பலரையும் கடித்துவருவதை நானே அறிவேன், ஆகவே அவர்கள் ரவுடியை தான் பிடிக்கவேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன். வீட்டருகே சென்ற அடுத்த நிமிடமே சுருக்கைக் கொண்டு இழுத்து வந்தார்கள். கயிறைக் கட்டி இழுத்து வந்துவிட்டார்கள், ஆரம்பத்தில் அவர்களோடு நடந்த வந்த ரௌடி என்னைப்பார்த்ததும், முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்.. தரையில் படுத்து அப்படி உருண்டும் எந்த சப்தமும் வரவில்லை. அதற்குப் பின்னர் தான் அவன் மீது வலை போட்டி இழுத்து வந்தனர். சட்டென அவனைக் கூண்டினுள் அடைத்தனர். அதற்குள் அங்கிருப்போர்கள் அந்த தாய் நாயையும் இழுத்துப்போக சொல்ல, இன்னொரு புகாரை ப்ளூ க்ராஸிற்கு அனுப்பினால் இப்போதே பிடித்துச் செல்கிறோம் என்றார்கள். 

ஏற்கனவே அது வருவோர் போவோரையெல்லாம் குரைத்து விரட்டிக் கொண்டே இருந்தது. பொதுவாக குட்டியிடும் எல்லா நாய்களும் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்பதால் இதைவிட்டுவிடுவோமா என்று தோன்றியது. இத்தனைக்கும் சங்கரி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருந்தாள். ரவுடியைப் பிடித்து போட்டதை நேரிலும் பார்த்தாள். அந்த குட்டிகளை மீட்டுத் தருவதற்கோ என்னவோ அந்த தெருவில் நின்றிருந்த ஒவ்வொருவர் முன்னரும் நின்று முகத்தை நேரிட்டுக்கொண்டிருந்தாள். 

குட்டியைக் காணாத விஷயத்தை சொன்னபோது,  “அந்த மூன்றுமே செத்துப்போச்சு நாந்தான் குப்பைல போட்டுட்டு கார்ப்பரேஷன்காரங்க கிட்ட அள்ளிட்டுப்போகச் சொன்னேன்” என்றார். கடந்த ஒருவாரமாக அகிலாவும் நானும் தினமும் சத்துமாவு, பிரெட் என எதாவது ஒன்றை வைத்துவிட்டு வருவோம். எல்லோரையும் விரட்டும் சங்கரி, எங்களை ஒருமுறை கூட சந்தேகித்ததில்லை. எப்படியிருந்தாலும் நமக்காக அதனை விட்டுவிடுவது நல்லதா அல்லது அதற்கும் ஒரு புகார் பதிவு செய்வமா என யோசிக்கையில், அதனிடம் கடிவாங்கிய பெண்மணியும் அவ்விடம் வந்து சேர்ந்தார். 

“ அதோட குட்டிங்கள தூக்கிடுவாங்கன்னு பயத்துல தான கட்ச்சிது, நாம காசுக்கு விக்கிறோம்னு தெர்ஞ்சா இப்படியா நம்பளாண்ட வந்து வாலாட்டிகினு நிக்கும்”

ப்ளூக்ராஸ் வாகனத்தை அனுப்பிவைத்தேன். ரவுடிக்கு எப்ப இருந்து கிறுக்கு பிடிச்சது என்று விசாரிக்கையில், ரவுடிக்கு இவ்வாறு ஆனதற்கு நானும் ஒரு காரணமெனத் தெரிந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக டைகர் பிஸ்கட்டிற்கு பதிலாய் (3ஆம் தெருவில் கருப்பன், ரவுடியத் தவிர பெரும்பாலும் அங்கிருக்கும் நான்கைந்து பேருக்கும் எதுவும் போடுவதில்லை, எப்போதாவது ஒரு சோம்பேறி வெள்ளையன் மட்டும் முழுப்பாக்கெட் பிஸ்கட் போடு என வாலாட்டுவான்). ரஸ்க் வாங்கி (பட்ஜெட் காரணமாய்) இவனுக்கும் கொஞ்சம் மற்றவர்களுக்கு ஒன்னொன்றாகப் போட்டுக்கொண்டே குட்டிங்களுக்கும் மீதத்தைப் போட்டு வர, பின்தொடர்ந்து வந்த கருப்பனையும் ரவுடியையும் சங்கரி குரைத்தது. கருப்பன் ஓடிவிடுவான், ரவுடி அந்த காரெக்டரில்லை என்பதால் நிறையவே கடிவாங்கினான். அன்றிரவிலிருந்து தான் ரவுடி மற்ற எல்லா நாய்களையும் கடிக்க ஆரம்பித்தான் என்று புரிந்தது. ஆரம்பத்திலிருந்தே ரவுடிக்கு பிஸ்கட் வைத்தால் கவர்பாய்க்கு கடுமையான கோபம் வரும்.. ஆனால் அன்றோ கவர்பாயின் கழுத்தில் கடித்துவைத்திருக்கிறான். கவர்பாய் பேசாத காரணம் புரிந்தது. ரவுடி கடிபட்ட காரணம் தெரிந்தது. ரவுடி கடிப்பதைக் கண்டு ஓடிப்போன குட்டி உள்ளிட்ட மற்றவர்கள் அவர்களிடத்தில் வந்து சேர்ந்தனர். சங்கரி பார்க்கிங்கிற்குள் அங்குமிங்குமாய் நடந்துக்கொண்டிருந்தது, துயரமிக்க ஒரு கழுதைப்புலியின் ரௌத்திரத்துடன் தென்பட்டது. முழுமையாக ரவுடியை மறக்க விரும்பினேன்.

ரவுடி மனிதத் தொடுதலை விரும்பியவன் மற்றவர்களைப் போல் எந்த மனிதரையும் அவன் குரைத்ததில்லை. தழுவிக்கொள்வான். கால்களைப் பிடித்துக் கொள்வான். இரண்டு கால்களிலேயே சில நொடிகள் வரை நிற்பான். வேகவேகமாக வாலாடும். இந்த ஊரடங்கு காலத்தில் மனிதர்களுக்கு மட்டும் இவை நடக்கவில்லை என்பதை மட்டும் உணர முடிகிறது. ஒருவேளை என்னை அல்லது அண்ணாச்சியைத் தவிர, இவனை அத்தனை எளிதாகப் பிடித்துக் கொடுக்க முடியாது. 

இருந்தாலும் குழந்தைகள் நடமாடும் தெருவில் என்று எத்தனை குரல்கள் ஒலித்தன. நாய்களற்ற தெருவிலும் குழந்தைகள் ஒருபோதும் வந்து விளையாடப்போவதில்லை. தொற்று முடிந்தாலும். நமக்கு விலங்குகளை விட மனிதர்களிடம் நிறையவே பயமிருக்கிறது. இருப்பினும் மனிதர்களைக் கடித்த விரட்டுகின்ற சங்கரி தப்பித்துக் கொண்டது. ரவுடி பிடிபட்டான். என்னைப் பொறுத்தவரை இந்த குழப்பம் தான் நிதர்சனம், இந்த குழப்பம் தான் பெரு வெடிப்பு. இந்த குழப்பத்திலிருந்து ஒரு ஒழுங்கை உருவாக்குவது தான் உயிர்வளி, இந்த ஒழுங்கு தான் புவியீர்ப்புவிசை. இந்த குழப்பமும் ஒழுங்கும் எண் 8 ஐப் போன்றது, தொடக்கம் முடிவு புலனாகாது.

விரல்களைப் பிடித்தபடி இருக்கும் டிஜிட்டல் உயிர்வளிமானி தரும் வாய்ப்பில் யார்யாரெல்லாம் எங்கெல்லாமோ உயிரைக் கையில் பிடித்தபடி இருப்பதைக் காண்கிறோம். ரவுடிக்கு மட்டுமல்ல நிச்சயமற்ற வாழ்க்கை. பிரியமான ஒன்றை, நாம் மிகவும் நேசிக்கின்ற ஒன்றை தூக்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இன்றைய உலகம் எல்லோரு முன்பும் உருவாக்கி வைத்திருக்கிறது. வாய்ப்புகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. சிலருக்கு தாயம் விழுந்து ஆட்டம் தொடங்கும் முன்னர் பலர் வீடு சேர்ந்துவிட்டார்கள். சிலர் வெட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சோழியை சுழற்றுவது தான் இருப்பா? அல்லது அபத்தமா? அல்லது இரண்டுமா. 

இந்த நிச்சயமற்ற தன்மை கொரோனாவிற்கு பின்னர் தான் வந்துள்ளது என்று என்னை நம்பவைப்பது புள்ளிவிவரங்களா? உடல்நிலையா? தலைப்புச் செய்திகளா? மெஸெஞ்செர்களா? அரசியல் தலைவர்களா? மருத்துவர்களா? தொழில்முனைவோர்களா? மதமா?

அகிலா ப்ளூ கிராஸில் சிலரைத் தெரிந்து வைத்துள்ளார். கோவிட்காலம் முடிந்ததும் ரவுடியைப் பார்க்கச்செல்லலாம் என்கிற நிம்மதியுடன் அன்று உறங்கியிருப்பேன். இரண்டு நாள் கழித்து பால் வாங்கச் செல்கையில் முகம் முழுக்க காயங்களோடு ஒன்றும் அந்த அளவிற்கு காயமில்லாத மற்றொன்றுமாக இரண்டு குட்டிகள் உயிர் பிழைத்து விளையாண்டு கொண்டிருந்ததைக் கண்டேன். கடைக்குச் சென்று பிஸ்கட் வாங்கிப் போடுகையில் ஒரு கருப்பு குட்டி ரவுடியைப் போன்றே ரெண்டு கால்களையும் தூக்கி நிற்க முயன்றான். 

என் காதுக்குள் யாரோ சோழியை உருட்டும் சத்தம் பலமாகக் கேட்டது. இளங்கோவுடன் தேனீர் அருந்த செல்லும் முன் இந்த செய்தியைப் பகிர வேண்டும்..


வியாழன், 20 மே, 2021

எண்ணும்மை

 


எண்ணும்மை :

பரனோயாவும் நாஸ்டால்ஜியாவும்..


இந்த மூன்றாம் உலகப்போரில் கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் தோற்றுக்கொண்டிருக்கின்ற மனித குலம் தன் வீட்டினையே பதுங்குகுழியெனக் கருதி ஒளிந்து கொண்டிருக்கிறது. முழுமையாக இல்லை என்றாலும் அதை முழுமை என்றே சொல்லலாம்.. சில தெருக்கள் முழுவதுமாக சீல் செய்யப்பட்டிருக்கின்றன, போக்குவரத்து தொன்னூறு சதவீதம் இல்லை. நமக்குத் தெரிந்தவர்கள், நம் வீட்டினர் என பலியானவர்கள் எண்ணிக்கை அச்சுருத்திக் கொண்டிருக்கிறது.

மொபைல் சார்ஜர்கள் பழுதானாலோ இண்டர்நெட் வேலை செய்யாமலிருந்தாலோ 2000களில் வாழ ஆரம்பித்துவிடுகிறோம், மின்சாரமில்லையெனில் இன்னும் பின்னே சென்றுவிடுகிறோம். ஆண்ட்ராய்டு டேப்ளாய்டு லூடோக்களில் தாயக்கட்டை அல்லது சோழிகள் உருளும் சப்தங்களை ஒருபுறம் அப்கிரேடு செய்ய யாரேனும் ஒரு டெக்கி வேலை செய்து கொண்டிருக்கலாம். ஒரு நாளின் அடர்த்தி கூடியிருக்கிறது சிலருக்கு, பலருக்கு நீண்டிருக்கிறது. காலிங் பெல்லை அழுத்துவது கொரோனாவாக இருக்கலாம் என்கிற அச்சத்திற்கு இடையில் நினைத்துப் பார்க்க என்ன இருக்கிறது. அசட்டு மனம் தானே இது சர்கரை குறைபாடு உள்ளவனின் நினைப்பிலிருக்கும் இனிப்பைப் போல நினைவுகள் இந்த துயரத்திலும் ஆறுதலாகவும் தான் இருக்கிறது. சில நேரம் சீழ் பிடித்து இருக்கும் புண்ணை பிதுக்குவதாகவும் நினைவுகளில் ஒரு அபாயம் இருக்கிறது. நிகழ்காலத்துடன் எதனை ஒப்பிட்டாலும் அது இனிப்பு தான். 

எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. சொல்லாமல் விட்ட காதலை, செலுத்தாமல் விட்ட கடனை, பெறாமல் விட்ட அன்பை, அந்த புளியமரத்து பயத்தை அதற்கு ஒப்பான சாமியாடி மீதான பயத்தை, யாரையோ அடிக்காமல் விட்ட ரௌத்திரத்தை. அந்த ப்ரியமான வெக்கையை, பிசுபிசுத்த பனியை, அழுக்காக்கி மகிழவைத்த மழையை. உயிரை உணர வைத்த முதல் வலியை, முதல் பசியை, முதல் காயத்தை, முதல் தோல்வியை, முதல் துரோகத்தை என எல்லோருக்கும் பொதுவான ஒரு வாழ்க்கை எத்தனை நேர்மையானது. ஏழை பணக்காரன் உள்ளிட்ட வர்க்க, சாதி, மத பேதங்களைக் கடந்தும் ஒரு பொதுவான தனிப்பட்ட வாழ்க்கை ஒவ்வொருத்தருக்குமே உள்ளது. இதில் எந்த அனுபவமும் தனித்த ஒருத்தருக்கேயானது என்று எதுவுமில்லை.

இதை தான் அறிஞர் ஆனந்த கூமாரசாமி “....but every person is a special kind of artist” உணர்ந்திருக்கிறார். நான் இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன் நினைவுக்கு இடம் கொடுக்கும் வாழ்க்கை கிடைக்கப்பெற்ற எல்லோருமே கலைஞன் தான்.. 

வாழ்வில் நல்ல ரசனையோடு செய்யப்படும் எந்த வினையும் அதன் நேர்த்தியில் அல்ல அதன் ஈடுபாட்டிலிருந்தே கலைக்கான புள்ளியும் தொடங்குகிறது. நல்ல ரசித்து ருசித்து வாழ்வதை விட தனியாக கலை ஒன்று என்று இருக்கிறதா என்ன? 

அது தனித்தது
அதனாலேயே

 அது உடனிருக்கும்


ஜீவ கரிகாலன்