சனி, 16 பிப்ரவரி, 2013

ரூபம், விஸ்வரூபம், அரூபம்

(விஸ்வரூபம்-தணிக்கை-விமர்சனம்-அரசியல்-தடை-இசுலாம்)

முதலில் எல்லோரும் சொல்லிக் கொள்வது போல நானும் கமல் ரசிகர் தான், கமலிடம் தான் நான் கம்யூனிசம், அறிவியல், சிந்தனை என பல விசயங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன் ஒரு வழியில் என்னை அதிகமாகப் பாதித்த மனிதர்களுல் ஒருவராக கமல்ஹாசனைச் சொல்வேன். கம்ல்ஹாசனின் வழியாகத் தான் காந்தி, கார்லமார்க்ஸ், சாப்ளின், பெரியார் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டேன்.
விமர்சனம் செய்யும் முன்பே சொல்ல வேண்டியது இதைத்தான் கதக் நடனக் காட்சிக்காகவே இந்தப் படத்திற்கு செல்லலாம், பாடல், இசை, கமலின் பாவனைகள் என மயக்கிவிட்டது. அதற்கு நேர்மாறாய் முதல் சண்டைக் காட்சியின் பிரமிப்பு... பிரமிப்பு... என உச்சகட்ட க்ளைமேக்ஸ் காட்சிக்காக காத்திருந்து ஏமாந்தேன். வெறும் இடைவெளி போலெ படம் முடிந்துவிட்டது... இனி என் விமர்சனம்


ரூபம், விஸ்வரூபம், அரூபம்



ஒரு திரைப்படம் இத்தனை நாட்களாக சொல்லப் போனால் ஒரு மாதமாகவே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று, போராட்டங்கள், தடை, தீர்ப்பு, மறு-தீர்ப்பு, அரசியலாக்கப்பட்டு வெகுஜனமக்களாலே வாய்மொழியால் விமர்சிக்கப்பட்டு, பேசப்பட்டே விளம்பரமாகி வெற்றி அடைந்துள்ளது. இந்த படம் குறித்த பார்வையும், அதன் அரசியலும், கலையில் இன்றைய தேவை குறித்தும் கீழே விவாதிப்போம். இதில் கேபிள், டிடிஎச் பிரச்சினை விவாதிக்கப் படபோவதில்லை

விஸ்வரூபம்:
உலக நாயகன் என்ற பட்டமும், ஆஸ்கார் நாயகன் என்கிற கனவுப் பட்டமும் ஒரு நல்ல கலைஞனை உச்சகட்ட அபாயகரமான முயற்சியை செய்ய வைத்திருக்கிறது என்பது மிகையல்ல. ஒரு எளிய பார்வையாளனாக இந்தப் படம் பார்க்க செல்லும் ஒரு பாமரன் எந்த அளவு நல்லபடியாக வெளியே வருவான் என்று தெரியவில்லை. அவ்வளவு கடினமான திரைக்கதையில், அறிவியல் பின்புலமுள்ள (அணுக்கதிர்வீச்சு) கதையில், பரிச்சயமே இல்லாத தலிபான்களின் ஆப்கன் பகுதி, மெதுவாக நகர்ந்து செல்லும் கதையமைப்பிலும், பாதி வசனங்கள் ஆங்கிலமும், அரேபிய வசனங்களும் என திரை அரங்கில் பார்க்கும் பலருக்கும் இந்தப் படம் சலீப்பூட்டுபவையாக இருந்தாலும். ஊடகங்களும், இசுலாமிய அமைப்புகளும் ஏற்படுத்திக் கொடுத்த விளம்பரத்தில் வண்டி கட்டி திருவிழாவிற்கு செல்வது போல, தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இப்படத்தைக் காண மக்கள் சென்று வந்தது என இந்தக் கட்டுரை வரை விஸ்வரூபம் படம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இருந்தபோதும் கமலஹாசன் ரசிகர்களுக்கும், வித்தியாசமான, கலையம்சம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் சிறந்த படங்கள் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு நிறைவான படமாகவும் இருக்கின்றது. ஆனால் அந்தப் படம்தி ஆப்கன்எனும் நாவலைத் தழுவி எடுக்கப் பட்டிருக்கிறது என்றும் விமர்சனம் வருகிறது.

தேவையற்ற செயலாக தன்னை ஒரு செக்யூலர் என்றும், பகுத்தறிவுவாதி (நம் ஊர் பகுத்தறிவுவாதிகளுக்கு தான் நாத்தீகம் என்பது இந்து மத எதிர்ப்பும், மற்ற மதச் சடங்குகளை விமர்சிக்கும் தைரியம் அற்றவர்கள் தானே!!) என்றும் தன்னை நிறுவிக் கொண்ட கமல், போதிய அளவு விளம்பரங்களை டிடிஎச் பிரச்சினையிலேயே சந்தித்திருந்தபோதும். தணிக்கை செய்யப்பட்டு அனுமதி கிடைத்த படத்திற்கு தம் இசுலாமிய சகோதர அமைப்புகளை அழைத்துச் சென்று படத்தை திரையிட்டு காண்பித்து விஸ்வரூபத்தை கிணறு வெட்ட கிளம்பிய விஸ்வபூதமாக்கிவிட்டார். உடனேயே சில அரசியல் லாபங்களுக்காக காய்கள் நகர்த்தப்பட்டு இது தடை, 144 உத்தரவு, போஸ்டர் கிளிப்பு, திரையரங்கு முதலாளிகள் மிரட்டப் படுதல், கல்வீச்சு, ரசிகர்கள் போராட்டம், முகநூல் புரட்சி, ஊடகங்களில் டீ.ஆர்.பி என பலருக்கும் வேலை வைத்துவிட்டது. கடைசியில் தன் மொத்த சொத்தையே விலை கொடுக்க வேண்டி வருகிறது என்று சொல்வதோடு நில்லாமல் இந்த நாட்டை விட்டே செல்ல வேண்டி வரும் என்று உச்சக்கட்டத்திற்கு குமுற இந்தப் பிரச்சினை தேசியப் பிரச்சினை ஆகியது.

காவேரியில் இருந்து தண்ணீர் கேட்டு வரண்டு கொண்டிருக்கும் மருத நிலங்களைப் பற்றி புறந்தள்ளிவிட்டு மத்திய அமைச்சர்கள் ஒரு மாநில அரசின் அராஜக போக்கை கண்டித்துக் கொண்டிருந்தனர். தன் சக பகுத்தறிவுவாதி கமலஹாசனுக்கு நேரிடையான ஆதரவை தெரிவித்து தமது இசுலாமிய சகோதரத்துவத்தையும், ஓட்டு வங்கியையும் இழக்க விரும்பாதவராக கருணாநிதியோ தமிழக முதல்வர், கமலஹாசன் மீது கொண்ட தனிப் பகைமையாலும், ஜெயா டீவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையை தராததாலும் தான் படத்திற்கு தடை விதித்தார் என்று அறைகூவல் விடுத்தார். தமிழகத்தில் பற்றி எரிந்த பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி துளியும் கவலை கொள்ளாத டெல்லி  ஊடகங்கள் (கூடங்குளம், முல்லைப் பெரியாறு, காவேரி பிரச்சினைகள், இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சினை குறித்து) தமிழகம் பற்றி பேசிக்கொண்டேயிருந்தது. ஒரு பக்கம் தமிழக அரசும் உயர்நீதி மன்றம் தடையை நீக்கிய மறுநாளே மேல்முறையீடு செய்து தடை செய்து தடை உத்தரவு வாங்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக பொதுவாக ஊடகங்களுக்குத் தலைகாட்டாத தமிழக முதல்வரும், ஒரு நீண்ட விளக்கத்தை ஊடகங்களுக்கு தந்து, தனக்கும் ஜெயா டீவிக்கும் சம்பந்தமே இல்லையென்று உறுதி கூறினார்.

உண்மையில் இவை யாவிலும் பாதித்தவர்கள் நடுத்தர குடும்பத்தினர் மட்டுமே, அவர்களுக்கு இது வெறும் குழப்பமாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது. தங்கள் குடும்ப அட்டையை புதுப்பிக்கும் பணியையும், இறுதித் தேர்வுக்கு குழந்தைகளை தயார் செய்யும் பணியையும் மறந்துவிட்டு இன்னும் விஸ்வரூபம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பது மிகையல்ல.

ரூபம்:
இந்தப் படம் சர்வேதச அரசியலை மையமாக வைத்து சற்றே குழப்பம் தரும் திரைக்கதையுடன் அமைந்திருக்கிறது தலிபான்களின் தீவிரவாதம், கல்வி மற்றும் அமைதியை விரும்பும் ஆப்கன் மக்கள், ரெட்கிராஸ் அமைப்புகள், சில வியாபாரிகளின்(பாகிஸ்தான் இசுலாமியர்) வியாபார ஒத்துழைப்பு (கள்ளக் கடத்தல், ஆயுத பேரம், போதைப் பொருள்) அவர்களையும், பொதுமக்களையும் கணக்கு பார்க்காமல் சுட்டுத் தள்ளும் நேட்டோ(NATO) படைகள், தீவிரவாதிகளுக்கு உதவும் அமெரிக்க வாழ் இந்தியர், FBIக்கு உதவும் இந்திய ஆபிஸர், அணு ஆயுதம், கதிர்வீச்சு என்ற பல விசயங்களைக் கலையம்சத்துடன், பல நவீன தொழிற்நுட்பத்துடன் பேசியிருக்கும் இந்தியச் சந்தையின் முக்கியப் படம் என்பது உண்மை.

ஆனால் இந்தப் பிரச்சினையின் தீவரம் நம் சமூகத்திற்கு இத்தனை தாக்குதல்களைக் கொணர்ந்திருக்கிறது
1.       ஒரு தனிமனித் தாக்குதல்
2.       கலை மீதான விமர்சனம்
3.       இறையான்மை மற்றும் சமூக பாதுகாப்பு
4.       அரசியல் சூழல்

கமல்ஹாசன் தனிமனிதனாக எத்தனையோ தாக்குதல்களையும், மிரட்டல்களையும் சந்தித்தாலும் இறுதியில் அவர் தன் படத்தை வெற்றியடையச் செய்து விட்டார். எந்த பெரிய பிரமோஷன்களும் இல்லாமல் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றியை குவித்திருக்கிறது விஸ்வரூபம். ஆனால் இவர் கூறியிருந்த  “கலாச்சார தீவிரவாதம்குறித்த கருத்துகள். இனி ஒவ்வொரு சர்ச்சைக்குறிய படத்தின் மீதும் கேள்விகளை எழுப்பும் என்பது ஆனால் மறுக்கமுடியாத்து.

சமூகப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை தகர்க்க குறிவைக்கும் படங்களை அரசு தடை செய்வது சரிதானா? என்கிற விவாதம் பெரிய கேள்விக்குரியது:
இசுலாமியர்களை பயங்கரவாதிகளாகக் காட்டும் காட்சியமைப்பு நமக்கு சமூக அச்சுறுத்தலை தருகிறது என்றால், பெரும்பானமையான படங்களில் கதாநாயகர்கள் குடிப்பதும், பெண்கள் மீதான வக்கிரங்களைத் தூண்டும் காட்சிகளும் எந்த சமூகப் பாதுகாப்பைத் தருகின்றன. இதே கமல்ஹாசன் தன் படங்களில் பலமுறை விமர்சித்த, கேலி செய்த இந்து கடவுள்களுக்காகவும், மத நம்பிக்கையாளர்களுக்காகவும் மன்னிப்பு கேட்பாரா? படத்தின் காட்சிகளை எடிட் செய்வாரா? இல்லை நாத்திகம் பேசினாலும்  “ஹோலி குரான்என்று சொல்ல அனுமதிக்கும் இவர் செக்யூலர் கொள்கை “ஹோலி கீதாஎன்ற சொல்ல அனுமதிக்குமா?. இத்தனை அரைவேக்காட்டுத் தனத்திலும் இந்து மதத்தை நிந்திக்கும் போது இருந்த சகிப்புத் தன்மை சரிதானா? இசுலாமியர்கள் பெரும்பகுதி வாழும் கேரளாவில் கூட இசுலாமியர்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதும் இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படும்.

இனிமேல் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு கமல்ஹாசன் தான் விதை விதைத்துள்ளார் என்பது அவர் வாயிலே வந்த உண்மை. இனி கலைகளுக்கான விதிமுறைகள் வலுப்பெறுமா?? தளர்த்தப் படுமா?? என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய பெரிய விவாதங்கள் நடைபெறும் என்பது ஒருவகையில் நல்லதும் கூட. எம்.எஃப்.ஹுசைன் மீது எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகள் தவறு என்றால், சல்மான் ருஷ்டியை தடை செய்வதும் தவறு தான். இது போன்ற கலை விசயத்திலும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு தருவது முற்றிலும் கேலிக்குரியது. இங்கு பொதுவான வரையறை உடைய தணிக்கை முறை ஒன்று தேவைப் படுகிறது. என்னதான் பொய்யுரைகளும், கவர்ச்சியும் ஈர்க்கப்பட்டாலும் அவை காலத்தால் நீர்த்துப் போய்விடும்.

அரூபம்:


அரூபம்:
இப்படத்தை எதிர்க்க குரான் ஓதும் ஒருவர் கொலை செய்ய மாட்டார் என்பதும், தமிழ் பேசும் தீவிரவாதி என்று யாரும் இல்லை என்று வந்த எதிர்ப்புகளையும் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது. தலிபான்கள் இசுலாமியர்கள் இல்லையா? தலிபான்கள் செய்தவை மனிதத் தொண்டா? அதே சமயம் தலிபான்கள் கொன்று வந்த அப்பாவி மக்கள் கூட இசுலாமியர்கள் தானே!!?? மிக புத்திசாலித்தனமாக தலிபான்களுக்கு வலை விரிக்கும் ரா உளவுத்துறை அதிகாரியையும் இசுலாமியராக கமல்ஹாசன் ஈடுகட்டியிருக்கும் விதம் இங்கு எடுபடாமல் போய்விட்டது ஆச்சரியமாக இருக்கிறதா?? இங்கு தான் இந்தப் படம் மிக முக்கிய இடத்தை தொடுகிறது அது தான் தேசியம்எனும் கொள்கை

 “தேசம் என்பது இன்றைய சூழலில், அதுவும் உலகமயமாக்கப் பட்ட பின்பு தான் தன் எல்லைகளை இழந்துவிட்டதாக எண்ணிவிட வேண்டாம். சுதந்திரம் வாங்கும் முன்பே இருந்த பிரிவினைவாதம் இன்னும் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது. பள்ளிக்கூடங்களின் பாடச்சுமைகளில் பாடங்களாக இருந்த சமுக ஒழுக்கமும், தேசப்பற்றும் சுமையென் கீழிறக்கி வைக்கப் பட்டுள்ளது. கமல்ஹாசனின் தேசத்தை நேசிக்கும் இசுலாமியர்கள்/இந்தியர்கள் இப்படத்தை ஆதரவு தருவார்கள் என்று அறைகூவல் விடுத்தது தான் மிக அதிகமாக விமர்சனம் செய்யப் பட்டது. ஒரு காஷ்மீரிய முஸ்லீம் ரா அதிகாரியாக காண்பித்தை கிண்டல் செய்தனர், விமர்சனம் செய்தனர். சகலாகலா வல்லவனின் சக சகாக்களே(திராவிட இயக்கத்தினரே) முதலில் இவரை புறந்தள்ளினர், தேசத்தை விட தம் மதம் தான் பெரிதது என்கிற வாதம் சில இடங்களில் முன்வைக்கப்பட்டன. உண்மையில் தேசிய ஒருமைப்பாடு பற்றிய பெரிய கேள்விக் குறி ஒன்று எதிர்காலத்தில் இருந்து நம் கண்முன்னே விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அதே சமயம், தாலிபான்களின் பிரச்சினை சமகாலத்தில் விவாதிக்கப் படவேண்டிய அம்சமே இல்லை. கமலஹாசன் தனது ஹாலிவுட், மற்றும் ஆஸ்கர் கனவுகளுக்கு வைக்கும் துருப்புச் சீட்டாக தலிபான் திரைக்கதையை அமைத்துள்ளார், ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல அமெரிக்க கொடி பறக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் நிறையக் காணலாம், அதுபோல கலாச்சாரத் தீவிரவாதம் எனும் பதம் விவாதிக்கப் பட்டது

உண்மையில் கலாச்சாரத் தீவிரவாதம்:
நிஜத்தில் உலகைச் சிவப்புக் குடைக்குள் ஆள முயற்சித்த ரஷ்யாவைப் பின் தொடர்ந்த அமெரிக்காவும் சரிந்து விழுந்துவிட்டது. கம்யுனிச-முதலாளித்துவம், உலகமயமாக்கல் என்ற இரண்டு கட்டங்களைக் கடந்து அடுத்த பரிமாணத்தில் இருக்கிறது சுதந்திர சந்தையில் இந்தியா, சீனா தேசங்களைத் தவிர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தில் தான் இருக்கின்றன. அமெரிக்கா காலூன்றி நிற்பதற்கு இந்த சீனாவும், இந்தியாவின் சந்தை தேவைப்படுகின்றது.

இந்தியாவின் சந்தையை முழுதும் எடுத்துக் கொள்ளத் தான் குடும்ப அமைப்பை குலைத்து, தனிமனித சுகபோகத்தின் மீது மாயையை உண்டு பண்ணி, அவன் சேமிப்பைப் பிடுங்கி, நுகர்வுப் பண்பை மாற்றியமைத்து, நடுத்தர மக்களின் மூளை நியூரான்களில் ஆடம்பர, அழகுப் பொருட்களின் பட்டியலும், பிராண்ட் மாயை உண்டு பண்ணி இதன் பொருட்டு மக்களைப் பணத்தைத் தேடியலையும் இயந்திரமாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவைப் போல ஒவ்வொரு தனிமனிதனையையும் தனி அடையாளமாக வைத்திருக்கும் அரசைப் போலே, நமது நலத்திட்டங்களும் இலவசங்களுக்கு இடப்பெயர்வதும் அமெரிக்கக் கனவு என்பதில் ஐயமில்லை. இனி ரொக்கமாகப் பெறும் மானியங்கள் வால்மார்டில் ஸ்வைப் செய்யப்படும் அவலம் 2020க்கும் முன்னரே நடக்கலாம். ஏன் விஸ்வரூபம் விமர்சனத்தில் வால்மார்ட் பற்றி பேசப்படுகிறது என்ற கேள்வி எழுகிறதா??
இங்கே நூறு கோடிகள் கொடுத்து படம் உருவாக்கும் தேவை நம் சமூகத்திற்கு என்ன அவசியம் இருக்கிறது? கலையுணர்வு மிக்க நல்ல தரமான ஈரானிய, கொரியத் திரைப்படங்கள் சில லட்சங்களிலேயே எடுக்கப் பட, ஹாலிவுட் தரம் என்பது மோகம் தானே!! இப்படித் தான் அமெரிக்காவை விரும்பி நகல் செய்யும் திரைப்பட கலையுருவாக்கங்களைப் போலவே, நமது கலாச்சாரங்கள் (நுகர்வே இப்பொழுது பிரதானக் கலாச்சாரம்) பொலிவிழந்து திசை மாறிச் செல்ல ஆரம்பிக்கும். இந்த நுகர்வு கலாச்சாரம் தான் கலாச்சாரத் தீவிரவாதம் என்று மிகச் சரியாகப் பொருத்தி விடலாம்.

இதற்கு(கலைப் படைப்பு) தடைக்கல்லாக அரசு மற்றும் சட்டம் இருப்பதும், மதம் இருப்பதும் அவசியமற்றது, நல்ல விவாதங்களிலும், விழிப்புணர்வு மூலமாக நாம் தவிர்க்கக் கூடியவை இவை. இந்தப் படத்தின் நுட்பங்களில் ஒழிந்துக் கொண்டிருக்கும் அரூபப் படிமங்கள் விபரீதமானவை, உலகத்தரம் என்று அமெரிக்காவைக் குறிவைக்கும் கலை தாகம் விபரிதமானது தான் அதனால் இனி கலாச்சாரம் குறித்த கவனம் தேவைப் படும். இந்த சுதந்திரச் சந்தையில், எகிப்து போன்ற தேசங்களில் முதலாளித்துவத்திற்கு எதிராக மக்களை ஒன்று சேர்த்து புரட்சி செய்வது இசுலாம் தான். இங்கே கலாச்சார தீவிரவாதம் காலத்தின் அவசியமாகிறது. நமது பொருளாதாரக் மறுகட்டமைப்பிற்கும் இது தேவைப் படுகிறது

வெறும் விஷ்வரூபம் மட்டுமல்ல வால்மார்ட்டும் மக்களாலேயே தவிர்க்கக் கூடியது தான் இதற்கென்று அரசும் சட்டங்களும் தேவையேயில்லை!!!







புதன், 6 பிப்ரவரி, 2013

டேவிட் - விமர்சனம்



டேவிட் - ஒரு பெயர் இரண்டு வாழ்க்கை.

இரண்டு நிறைவான வெவ்வேறு கதைகளை non-linear திரைக்கதைக்குள்ளே படமாக்கிட தேவைப் படும் ஒரு அம்சமாக  “டேவிட்” எனும் ஒற்றைப் பெயரைக் கொண்டு இணைகிறது.

அவ்வளவு தானா!! வெறும் பெயர் என்ற  ஒற்றைப் புள்ளியில் எப்படி இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் உள்ள கதைகள் இணைகிறது? என்பது முக்கியமல்ல.

 டேவிட் - என்ற பெயர் மூலம் ஒரு கிருத்தவ மனநிலையில், மதத்தின் பால் ஏற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை காட்சிப் படுத்துகிறார் இயக்குனர். ஒரு பக்கம் பாதிரியாரின் மகனாக ஜீவாவின் வெளிநாட்டு மோகம், கிருத்துவ போதனைகளின் மீதுள்ள வெறுப்பு, இசையில் தான் அடைய வேண்டிய இலக்கு என்று ஒரு டேவிடின் கதை நகர, தன் திருமணம் நின்று போன நிலையில், முழுநேரக் குடிகாரனாக எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கேரக்டர் விக்ரமிற்கு, எப்போதும் குடிகாரனாகத் திரியும் அவர் இறந்து போன தன் தந்தையுடன் கற்பனையாக உரையாடுவதைப் போலே தன் நண்பனின் வருங்கால மனைவி தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொள்கிறான்.

விக்ரம், ஜீவா என்ற நிரூபித்துவிட்ட கலைஞர்களின் நடிப்பிற்கு மார்க் போடுவது என் வேலை இல்லை. ஆனால் ஒரு குடிகரனாக ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஸ்டைலில் அங்கங்கே மறைத்து வைத்திருக்கும் மதுவைக் குடிப்பதுமாகவே இருந்திருந்தாலும் விகரமின் casual performance சலிப்பு ஏற்படுத்தவில்லை.   அதிலும், போதையிலேயே ஸ்கூட்டர் ஓட்டும் காட்சி மிகவும் ரசிக்க வைக்கிறது. நாசர், விக்ரமின் அப்பாவாக வரும் சௌரப் சுக்லா, தபு, லாரா தத்தா என்று பெரிய castingஐ வைத்துக் கொண்டு பிசிறில்லாமல் கதை சொல்லியதே பாராட்டக்குரியது. ஆனால் தியேட்டரில் அனேகமாக அந்தப் படத்தை ரசித்த சிலரில் ஒருவனாக மட்டுமே என்னை நான் உணர்ந்தேன். நிறைய பேருக்கு கதை நகரும் வேகம் குறைவாக இருப்பதாக அலுப்பை “உச்” கொட்டினர். ஆனால் இரண்டு தனித் தனிக் கதைகளாக எடுத்துக் கொண்டால் இயக்குனர் கதையைத் தாண்டி ஒரு அங்குலம் கூட சொல்லவில்லை என்று உணரலாம்(ஹிந்தியில் மூன்று கதைகள்).

ஒரு கதை ஜாலியாக பயணிக்கிறது கிறுக்கு சாண்டா போன்ற காமிக் சிரிப்புகள் பிடிக்கவில்லையென்றால் படத்தில் கிடைக்கும் ஹாப்பி எண்டிங் கிட்டாமல் ஜீவாவின் வலியோடு வீட்டிற்கு சென்றிருப்போம். இயக்குனர் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை, எங்கும் மிகைப் படுத்துதல் இல்லை, பம்பாய் வாழ் தமிழராக பார்க்கும் போது நமக்கு அந்நியப்படவில்லை ஏனெனில் துப்பாக்கி போன்ற படத்தில் இல்லாத நம்பகத்தன்மை - களம் மும்பை தான் என்று.

அது போலத் தான் விக்ரம் வரும் காட்சிகளில் கோவாவைப் பார்க்கும் பொழுது நீர்ப்பறவை, கடல் போன்ற சலிப்பூட்டும் அலையோசையைக் காட்டிலும் இது அழகான கதையாகவே இருக்கிறது. நன்றாக கிறுத்துவ வாசம் வீசும் திரைக்கதை -ஆமாம் அது தான் இந்தப் படத்தை நிறைவாகச் செய்திருக்கிறது, அதற்காக ஆலப்புழாவை கோவா என்று காட்டினால் நம்புவார்கள் என்று இயக்குனர் நினைத்திருப்பது தான் பரிதாபம்.


சில வசனங்கள் மிகக் கூர்மை :-

”என்ன மதம்”
“கிரிஸ்டியன்”
“கிரிஸ்டியன்னா, எந்தக் கிரிஸ்டியன் நாடாரா! செட்டியாரா! முதலியாரா?”

பல வசனங்கள் , கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கும் மேலே ம்யூட் செய்யும் அளவுக்கு சென்ஸேசனலாக இருந்திருக்கின்றன,


தபு, லாரா தத்தா, ஜீவாவின் தங்கை என பெண்களின் வாழ்க்கையைக் காட்டியிருக்கும் விதத்தில் வரும் சில அதிர்ச்சிகள், கிருத்தவக் குடும்பங்களில் கலாச்சார மாற்றங்களின் வேகம் அதிகம் என்றும் சில இடங்கள் காட்டுகிறது யதார்த்தம். ஜீவா தன் தந்தையை அவமானப் படுத்திய இந்து மதவாத அமைப்பினரின் தலைவரை ஒருவன் சுடும் பொழுது, அந்த கிளைமேக்ஸ் காட்சியில் எந்த வசனமோ, ஹீரோயிசமோ அல்லது குண்டடிப் பட்டவருக்கு இரத்தம் கொடுப்பது போன்ற செண்டிமெண்டு காட்சியோ இல்லாமல்,  வெறும் கண்ணீருடன் திரும்பும் காட்சிக்காகவே இந்தப் படம் பார்க்கலாம்.



- ஜீவ.கரிகாலன்