புதன், 5 பிப்ரவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை



சென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன் பண்டிகை அதற்குள் இருக்கும் சமகாலத்திற்கான செய்தியை அல்லது பண்பாட்டு வழக்கினை நமது வழக்கமான முறையில் தேடப் போகிறோம், எனது சிற்பங்களைப் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அந்த pattern எளிதாக புரியும். 

அதாவது ஒரு புராணத்தின் மைய நீரோட்டத்திலிருந்து இன்றைய கல்வி முறையிலிருந்து நோக்கும் பொழுது ஒத்துக் கொள்ளும் அளவிற்கு அதில் உள்ள புனைவுகளை அகற்றிப் பார்த்து விட்டு அதனுள் இருந்து சமகாலத்திற்கு கடத்தப் படும் செய்தியை புனைவாகவாது எடுத்துப் பார்ப்பது அல்லது அதை இந்த புராணங்களோடு ஒத்துப் போகும் பல்வேறு நாகரிக, அரசு மற்றும் இனக்குழுக்களின் வாழ்வில் இருந்து எடுத்து ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியாகும். நிற்க.

காமராஜனான - மன்மதகாமரசனைப் பற்றியும், ரதிதேவியைப் பற்றியும் எண்ணற்ற தகவல்கள் புராண மற்றும் கலை படைப்புகள் வழியே வெளிதெரிகின்றன. இனையத்தில் தேடினால் காமன் பண்டிகை பற்றிய செய்தியை தெரிந்துகொள்ளலாம், விக்கிபீடியா கட்டுரையில் நிறைவாகத் தகவல்கள் இருக்கின்றன.

க்யூபிட் - வில்
கிரேக்க ரோமானிய நாகரிகம்
பண்டைய நாகரிகங்களின் ஒத்த தன்மைகள் என்று 
மன்மதன் - வில் அமைப்பு
க்யூபிட், எரோஸ் (CUPID,EROS &PSYCHE) போன்ற க்ரேக்க, மற்றும் கதைகளை நமது நாட்டின் மன்மதன் மற்றும் ரதி பற்றிய கதையோடு பொருத்திப் பார்க்கலாம், அத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பிட்டு சொல்லப் போனால் இரண்டு காதல் தேவதைகளும் தங்கள் ஆயுதமாகக் கொள்வது வில்லினைத் தான். இரண்டு புராணங்களிலும் அதாவது க்யூபிட் கையிலும், மன்மதனின் கையிலும் இருக்கும் வில்லின் பெயர் re-curve bow என்பது அசாதாரணமான ஒற்றுமை. வரலாற்றில் முகலாயர்கள் தான் இது போன்ற வில்லினை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற வாதத்தை இது பொய் ஆக்குகின்றது(இந்த கட்டுரைக்கு அவசியப்படாத தகவல் என்பதால் இத்துடன் நிறுத்தி விடலாம்). க்யூபிட், மன்மதன் இருவருமே அந்த வில்லினை மற்ற உயிர்களிடம் காதல் ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

கிரேக்க ரோமானியப் புராணத்திலும் சரி, இந்தியப் புராணங்களின்படியும் சரி இந்த பண்டைய நாகரிங்களிலெல்லாம் ஒரே போன்ற படைப்பிலக்கிய மற்றும் கலைக் கூறுகள் இருக்கின்றன என்பதற்கு ரதி, மன்மதனின் சிலைகளே பெரும் ஆவனம்.

சிவனின் கடும் கோபத்திற்கு ஆளாகும் நிலை மன்மதனுக்கு ஏற்பட்டுவிடுகிறது, மன்மதன் அவன் கடமையை மட்டும் செய்கிறவன். அதாவது காதலை பிறரின் மனதில் உண்டாக்குவதே அவன் தொழில். ஆழ்ந்த நிஷ்டையில் இருக்கும் சிவனைத் தழுவ முடியாத நிலையில், தேவி பார்வதி மன்மத ராஜனை சிவனின் தவம் கலைக்க வேண்டுகிறாள். மன்மதன் தன் தொழிலை எப்பொழுதும் செய்வது போல் சிவனின் மார்பு மீது தனது காமபானத்தை விடுகிறான். நிஷ்டை கலைந்த சிவபெருமான, பார்வதியிடம் செல்லாது தன் தவத்தைக் கலைத்த மன்மதனை தன் மூன்றாவது கண்ணால் எரித்து விடுகிறான்.

அதனால் உயிர்கள் அனைத்தும் யாரையும் காதலிக்கும் திறனையும், புலனையும் இழந்திருந்தனர். தன் காதலனை இழந்த ரதி சிவனிடம் சென்று முறையிட்டு தன் காதலனை திருப்பித் தருமாறு வேண்டுகிறாள். இறுதியில் அவளது போராட்டம் வெல்கிறது, எல்லோரும் தொடர்ந்து காதலித்து கொள்ள மீண்டும் வழி கிடைத்து விடுகிறது. ஆனால் ஒரு நிபந்தனை சிவனிடமிருந்து.

ரதி மயில் வாகனத்தில்- காஞ்சி
காமாண்டியாகக் கொண்டாடப்படும் மன்மதன் மீது அளவில்லாத காதல் வயப்பட்ட ரதிதேவி சிவனிடம் தன் காதலனை உயிர்பித்து தரச் சொல்லி மன்றாடிக் கேட்கிறாள். ரதியின் தவத்திற்கு இசைந்த  கடவுள் மனமதன் உயிர்த்தெழுவான் என்றும், ஆனாலும் அவன் அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று சிவன் விமோச்சனம் அளிக்க கதை முடிகிறது. வசந்த பஞ்சமியிலிருந்து அடுத்து வரும் பவுர்ணமி வரை டெல்டா மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வந்த இவ்விழா இப்போது வெகுவாக சுருங்கிவிட்டது. கடைசி நாளான மன்மதனை எரித்தல் நிகழ்வு மட்டும் சில கிராமங்களில் நடைபெறுகின்றன என்பது துயரமான செய்தி தான்.

இந்த புராணத்தின் கூறுகள் தான் சமகாலத்தோடு எப்படியெல்லாம் பொருந்திப் போகின்றன தெரியுமா? காதல் எந்த காலத்திற்கும் ஒரே மாதிரியான துடிப்பில் தான் இயங்குகிறது, காதலுக்காக தன்னை இழப்பது, போர் செய்வது, பழிக்கு ஆளாதல், பைத்திய நிலைக்கு ஆளாதல் என்று எந்த காலத்திலும் காதலால் ஏற்படும் விபரீதங்கள் இவை. 

காதலர் தினம் என்று கொண்டாடுவதற்கு காமன் பண்டிகையின் அடிப்படையாய் இருக்கும் புராணத்தில் வரும் காதல் எப்படிப்பட்டது? தன் காதலனுக்காக கடவுளிடமே வாதம் செய்யும் துணிச்சல் மட்டுமின்றி, தன் காதலை ஜெயிக்க வைக்கும் முறை தான் நிறைவான காரணம் ஆகின்றது.
காதலுக்கு பொதுவாகக் கிளம்பும் எதிர்ப்பில் ஜெயிக்க முடியாமல் தோற்றுப் போகும் காதலர்களுல் ஒருவர் மட்டும் மடிந்து போகும் போது, இன்னொருவருக்கு மனம் பிறழ்ந்து போகின்ற நிலை எப்படிப் பட்டது, அவர்கள் தன் காதலரின் மரணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருப்பதாலேயே அவர்கள் நிகழும் உலகிலிருந்து தான் ஸ்தூலமாக இருந்தாலும் தன்னை தம் காதலர் இல்லாத உலகில் இருந்து அப்புறப் படுத்தி விடுகின்றனர். அதுவே பைத்திய நிலை.

நினைத்துப் பாருங்கள், சிவன் வரமென ரதிக்கு அளித்திருக்கும் சாபத்தினை. “இனி அவன் கண்களுக்கு மட்டும் புலப்படுமாறு உயிர்பித்து வருவான் “ என்று சிவன் வர்ம கொடுக்கிறார். அது எப்படிப்பட்ட நிலையென்றால் 

  • ஸ்தூலமாக இல்லாத ஒருவரோடு ரதியானவள் எப்படி உறவாட முடியும்?
  • ரதி மன்மதனோடு பேசும் போதோ, காதல் மொழி கெஞ்சும் போதோ மற்றவர் கண்களுக்கு ரதி எப்படித் தெரிந்திடுவாள்?? 
  • அப்படி ரதி தனிமையிலேயே யாரோடாவது பேசுவது போல் தொடர்ந்து வாழ்வாளாயின் அவளை இவ்வுலகம் எப்படியெல்லாம் பார்த்திருக்கும்?? 
  • பேதையாய்?? பைத்தியமாய்?? புத்தி சுவாதீனம் இல்லாதவளாய்? ஆனால் இதை வரமெனப் பெற்றிருந்த ரதி தன் காதல் வாழ்க்கையை நிம்மதியாகத் தானே அனுபவிக்கிறாள். இப்படிப்பட்ட காதலின் அழுத்தமான நிலையை, காதலைப் போற்றும் பண்டிகை தானே காமன் பண்டிகை.
துவாரபாலகர்கள் எப்படி கம்பீரத்தன்மையுள்ள பாத்திரங்களை சிலையாக வடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றனரோ, ரதி மற்றும் மன்மதனின் பாத்திரங்கள் சைவ மற்றும் வைணவக் கோயில் சிற்பங்களில் அழகியலுக்கான முக்கியமான பாத்திரங்களாகின, ROMANTICISM எனும் அழகியலின் உச்சபட்ச பரிசோதனைகளை மன்மதன் மற்றும் ரதி சிற்பங்களின் வழியே முயன்று பார்த்தனர், ஈரோடு மாவட்டம் தாரமங்கலம் கோயில் சிற்பம் அதற்கொரு எடுத்துக் காட்டு.

நண்பனிடம் கேட்டேன் “உங்க ஊருக்கு இந்த வருடம் போவோமாடா காமாண்டித் திருவிழாவை பார்க்கலாம்??”.

தனது கிராமத்தில் முன்பிருந்த நிலையில் அந்த விழாவுக்கு ஒப்பாக ஒரு பத்து சதவீதம் கூட இப்போதெல்லாம் நடைபெறுவதில்லை என்று வருத்தப்பட்டான். இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரியாது? ஒரு வேளை சில காலத்திலேயே ஏதாவது ஒரு ஷாப்பிங் மாலில் இது போன்ற பண்டிகைகள் மீட்டெடுக்கப்பட்டு சந்தைப் படுத்தப்படலாம். நாமும் NOSTALGIA என்றவாறு நிழற்படங்கள் எடுத்து இணையத்திலேற்றி வைப்போம்.

மன்மதன் தாரமங்கலம்

- ஜீவ.கரிகாலன்

1 கருத்து: