வெள்ளி, 27 டிசம்பர், 2013

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் - பஜ்ஜி-சொஜ்ஜி - 52

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் 


கிராஃபிக் நாவலுக்கும்,காமிக்ஸிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? "என்னடா இன்னும் காமிக்ஸ் வாசிச்சுக்கிட்டு இருக்கிற?" என்று என்னைக் கேட்கும் நண்பர்களுக்குத் தெரியாது தமிழ்நாட்டின் காமிக்ஸ் சாம்ராஜ்யம் பற்றி. விக்கிப்பீடியாவில் சென்று டெக்ஸ்வில்லர் என்று தேடினால் அந்த ஸ்பானிய கௌபாய்க்கு தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பற்றிய தகவல் இருக்கும். பெரிய ஹீரோக்களான டெக்ஸ், லக்கிலுக்,ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி மட்டுமின்றி காமிக்ஸ் உலகில் பெரிதாக சோபிக்க முடியாத மாயஜால மன்னன் மான்ட்ரேக், கார்த், ப்ளாஸ்மா போன்றவர்களுக்கும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ரசிகர்கள். ஆனால், 25-15 வருடங்களுக்கு முன்பு யாரெல்லாம் வாசித்து வந்தார்களோ, இன்றும் அவர்கள் தான்  தமிழ் காமிக்ஸ் வாசிக்கும் பெரும்பான்மையானவர்கள்.

சீரியஸ் Literature இல் இல்லாத மரியாதை இதுபோனற படக்கதை Illustratorகளுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே, காமிக்ஸ் ரசிகர்களின் taste என்னவென்று உங்களுக்குத் தெரியும். காரணம் இந்த illustratorகளை மதிக்கக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் விஜயனின் முயற்சிகள் தான்,  Aurelio Galleppini, Jesus Blasco போன்ற Illustratorகள் பற்றி காலச்சுவடு எனக்கு அறிமுகமாகும் முன்னரே தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் இன்று வரை illustratorகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மரபினை சிறுபத்திரிக்கைகளில் பார்க்கவில்லை, அதில் விஜயன் மிகக் கவனமாய் செயல்பட்டிருக்கிறார்.

 கிராஃபிக் நாவல் என்றால் அட்டைப்படம், வண்ணங்கள், பக்கங்கள் என எல்லாவற்றிலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் அது கிராஃபிக்ஸ் நாவலுக்கான விளக்கமல்ல. கிராஃபிக்ஸ் நாவலும் காமிக்ஸ் இதழில் வருவது தான், ஆனால் மற்ற தொடர்களைப் போன்று ஒரு கதாநாயகரின் சாகசம் என்றில்லாமல் ஒரு தனிக் கதை மட்டும் காமிக்ஸில் வருவதை கிராஃபிக் நாவல் என்று தெரிந்து கொள்ளலாம். அது காமிக்ஸ் எனும் வடிவத்திற்காக எழுதப்படாமல், எழுதி வைத்திருந்த நாவலை கிராஃபிக்ஸ் ஃபார்மில் கொண்டு வருவது என்று எளிதாகச் சொல்லலாம். சில பப்ளிகேஷன்ஸ் தனிப் பிரதியாய் ஒரு கிராஃபிக்ஸ் நாவலை உருவாக்கும், அதே சமயம் இவை தொடராகவும் வரும். முதன்முதலில் அமெரிக்காவில் 1960லிருந்தே புளங்கப்பட்ட வார்த்தை தான் கிராஃபிக்ஸ் நாவல் - நமக்கு இப்போது தான் அறிமுகமாகிறது.


சமீபத்தில் நான் வாசித்த ’சன்ஷைன்’ கிராஃபிக்‌ஸ் நாவலான  -”சிப்பாயின் சுவடுகள்” வாசித்த பின், கிராஃபிக்ஸ் நாவலின் scope பற்றி உணர்ந்தேன். கதை ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை, தொடர்ச்சியாக வாசித்து வந்த காமிக்ஸ்களைப் போன்றில்லாமல் அதிரடி தாக்குதல்கள், கொடூர முகம் கொண்ட வில்லன்கள், பஞ்ச் வசனங்கள் என எதுவில்லாமல் ஒர் சோகப் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் கதைக்களமது. 70களில் இருந்த ரயில் பாதை செல்லும் தாய்லாந்தின் நெல் வயல்கள், மறு ஆக்கம் பெற்ற ஜெர்மனியின் பெர்லின் என காட்டும் Landscapeகளிலிருந்து. கதையில் வரும் FLASHBACK காட்சிகளிலிருந்து, கதை நடக்கும் காலத்திற்கு பயணிக்கும் காட்சிகளின் கிராஃபிக் யுக்திகளை உணரும் பொழுது, உங்களுக்கு ஒரு திரைப்படத்தின் அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

 தாய்லாந்து வயல் வெளி  

  இந்த பீரியட் நாவல் வழியாக கிடைக்கப்பெறும் சில செய்திகள், நமக்குத் தெரியாத வரலாறு தான். ஆனாலும் ஒரு நாட்டுப் புரட்சியில் மற்றொரு நாடு தலையிடுவதும், அக்கிரமம் செய்வதும், அதே அணியில் ஒரு துரோகி - இன்னொரு நாட்டின் தலைவன் ஆக்கப்படுவதும். இனப்படுகொலை, அத்துமீறல்கள், ஊழல் என்பனவற்றை இயல்பாகத் துப்பறியும் ஒரு ரிப்போர்ட்டரின் கதையாக உருவாக்கப் பட்டிருக்கின்றது. 1963 வியன்னா ஒப்பந்தம் போன்று  உலக விஷயங்களைப் பேசும் இந்நாவலில் சுவாரஸ்யம் என்பது வேறு ஒரு தனிச்சுவை .

இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும் அது - மீண்டும் தேவனின் கதைகளோ, சுஜாதா, அ.மி போன்றோரின் கதைகள், இது போன்ற கிராஃபிக் நாவலாக வரும் சாத்தியம் உருவாகலாம் அல்லது சில பப்ளிஷர்கள் test drive பண்ணுவார்கள்.-ஜீவ.கரிகாலன்

திங்கள், 23 டிசம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 51, கொற்றவையின் காலம்

கொற்றவையின் காலம்


முதல் பகுதியைப் பார்க்க

மாமல்லை அர்ஜூனன் தபசு வழியாக மேலேறினால் பழைய கலங்கரை விளக்கத்திற்கு கீழே இருக்கும் குகைக் கோயிலில் தான் மகிஷாசுரமர்த்தினியின் போர் சிற்பக் காட்சித் தொகுதி அமைந்திருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆட்சியில் கடைசியாக செதுக்கப்பட்ட தொகுதி என்று ஒரு வழிக்காட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன், அது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

மகிஷாசுரனை எதிர்த்து கொற்றவை செய்யும் உக்கிரமான போர்க் காட்சி புடைப்புச் சிற்பமாக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுதும் பல கோயில்களில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் மஹிஷாசுரமர்தினியின் சிற்பமும், போர் காட்சியும் படைக்கப்பட்டுள்ளது, வராக சிற்பமத் தொகுதியை நாம் பார்த்தது போலவே மற்ற படைப்புகளில் இருந்து மாமல்லையின் படைப்புகள் எவ்வளவு தூரம் வித்தியாசமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இந்த சிற்பங்கள் கடலில் இருந்து வீசும் உப்புக் காற்றினாலும், தொழிற்சாலை மற்றும் வாகனங்களின் மாசினாலும் தன் பொலிவை இழந்து கொண்டே இருக்கின்றன என்பதும் வருத்தப் படவைக்கும் விஷயம்.

இந்த போர் காட்சி சிற்பங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஓவியர் சந்ருவின் ஓவியம் எனும் மொழி, நா.பாலுச்சாமியின் அர்ஜூனன் தபசு போன்ற நூல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது, இவற்றோடு இணையம் வாயிலாக கொற்றவையின் பல்வேறு சிற்பங்களைப் பார்த்து வரலாம். இணையத்தில் கிடைக்கும் பல்வேறு கொற்றவை குறித்த சிற்பங்களில் மகிஷாசுரனின் சிரத்தை வெட்டிய பின்பு இருக்கும் காட்சி தான் உருவாக்கப் பட்டுள்ளது. மாமல்லையின் சிற்பங்கள் தான் அந்தப் போரின் உச்ச கட்டத்தை காட்சிப் படுத்தியுள்ளது.

மகிஷாசுரமர்தினி சிற்பத் தொகுதி, மாமல்லை


அர்ஜூனன் தபசு எனும் நூலில் இந்த போர் காட்சியானது நாகர்ஜுனகொண்டாவில் உள்ள ஒரு போர்க் காட்சியோடு ஒப்பிடப்பட்டு, இரண்டு போர் காட்சிகளுக்கும் இடையேயான ஒற்றுமையை ஆசிரியர் கூறுகிறார் (பக்கம்:395), இது ஒரு முக்கியமான ஒப்பிடல். இது பல்லவ மன்னர்களின் கலைத் தேடல்களைப் பற்றிய ஒரு பிரக்ஞையை நம் மனதில் உருவாக்கிவிடுகிறது. இந்த தேடலைச் சாதாரணமான தேடல் என்று எண்ணிவிட முடியாது, ஏனென்றால் அந்தத் தேடலின் காலம் முழுமை பெற ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருந்தது என்று சொல்லலாம். இதற்கு ஆதாரமாகத் தான் கிட்டதட்ட 200 (590லிருந்து -730 வரை)ஆண்டுகளாக , அதாவது ஏழு தலைமுறைகளாக ஒரு கலை அதன் முழு வேகத்தில் இயங்க வேண்டுமட்டும் தேவைப்படும் ஒரு அதியுன்னத லட்சியத்தை அவர்கள் மனதில் வைத்திருந்தனர். மன்னர்களும் சிற்பத்துறையில் வல்லுனர்களாகவே இருந்துள்ளனர்கள் என்றும் தெரிந்து கொள்ள இடம் வகுக்கிறது.  ஏனென்றால் இங்கிருக்கும் முக்கிய சிற்பப் படைப்புகள் 02ம் நூற்றாண்டு வாக்கில் உருவான மாபெரும் கலைப் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு( நாகர்ஜுனகோண்டா, மகேந்திரபுரி, அஜந்தா- எல்லோரா) ஒரு நாட்டினையே கலைவளமிக்க நாடாக உருவாக்கி வந்திருந்தனர் இந்த பல்லவ மன்னர்கள். சிற்பங்கள், ஓவியங்கள், ஆடைகள் நெசவு என பல்லவர்களின் தேசம் சிறப்புற்றிருந்தது. இந்த தாகம் தான் அங்கோர்வாட் எனும் உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான படைப்பின் அடித்தளம்.

இந்த சிற்பத் தொகுதியில் நாம் பார்க்கும் காட்சி போரின் உச்சக்கட்டம்; மகிடன் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் காட்சி உடனிருக்கும் அசுரர்கள் யாவரும் தோல்வி முகத்தோடு இருக்க, மகிடன் மட்டும் அடுத்தடுத்த தந்திரங்களை கையாண்டு கொற்றவையோடு போர் புரியும் பாவனையுடன் இருக்கிறான். தன் இடக் காலை சிறிது மடக்கி, வலக்காலை சாய்வாக ஊன்றி ஒரு கையில் ஆயுதத்தைத் தூக்கியபடியும் மற்றொரு கையால் அதைத் தாங்கியபடியும் நிற்கின்றான். புராணத்தின் படி பல உருவங்கள் மாறி உருப்பெற்று போர் புரிகின்றான்.  எல்லா நிலைகளிலும் உக்கிரமான  போர் புரியும் கொற்றவை மற்றும் அவளது கணங்கள் சூழந்த படை வெற்றி பெற்று வருகிறது. இறுதியில் மகிடனும் கொற்றவையும் நேருக்கு நேர் போர் புரிகிறார்கள்.

சிற்பக் காட்சியில் நீங்கள் பாருங்கள் கொற்றவையின் படையைச் சேர்ந்த கணங்கள் முகத்தில் இறுதி வெற்றியை நோக்கி முன்னேறும் பரவசம் தெரியும், கொற்றவையின் முக்கிய படை வீரராக முன்னே நின்று போர் செய்யும் மற்றொரு பெண் கையில் வாளினைச் சுழற்றியபடி கீழே அமர்ந்து எழும் நிலையிலும், ஒரு அசுரன் தேவியின் தாக்குதலில் உயிரிழந்து கீழே விழும் காட்சியும் நம்மை ஒரு நிமிடம் போர்க் காட்சியை நம்மை பயமுறுத்தத் தான் செய்கிறது என்பது உண்மை, மகிடனின் பின்புறம் நிற்கும் சில அசுரர்கள் புற முதுகுக் காட்டி போகிறார்கள். மகிடனின் சிற்பம் அழகுணர்வையும் (Aesthetic) தருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் ஒரு தாக்குதலில் இருந்து தந்திரத்தால் தப்பித்து அடுத்த தாக்குதலைத் தொடங்குவதற்கு எத்தனிப்பது போல மகிடனின் சிலை அமைந்திருப்பது ஒரு சிற்பத் தொகுதி மூலமாக கடத்தப்படும் அற்புத உணர்வு, ANTI-HEROக்களின் பலம் தான் HEROக்களின் திறனை வெளிக்கொணரப் பயன்படுகிறது என்பதால் தானோ மகிடனின் சிற்பம் அத்தனை கலையுணர்வோடு நம்மைக் கவர்கிறது??

கொற்றவை போர் புரியும் காட்சி, தன் நான்கு ஜோடி கைகளில் ஒரு கை வில்லினை ஏந்திக் கொண்டும் மற்றொரு கை அடுத்த அம்பை எடுப்பதற்கும் தயாராக இருக்க, மற்ற கரங்களிலெல்லாம் பல ஆயுதங்கள் இருக்கின்றன. சிவனிடமிருந்து பெற்ற சூலம், விஷ்னுவிடம் பெற்றிருந்த சக்கரம், பிரம்மனிடம் பெற்றிருந்த வில் அம்பு , இவற்றுடன் கதை, வட்டு, கேடயம், சுருக்குக் கயிறு, சங்கு என இருக்கின்றது. கொற்றவை மற்றும் போர் புரியும் மற்ற யாவரின் கைகளிலிம் உலோகங்களால் ஆன ஆயுதம் என்று சொல்லப் போனால் வாளாக மட்டும் இருக்கக் கூடும் மற்ற ஆயுதங்கள் யாவும் உலோகமின்றி தயாரிக்கக் கூடியதே அவை கற்களாலும், மரத்தினாலும், யானைத் தந்தத்தினாலும், கடற்பாறைகள்/ஓடுகள்/விலங்கினங்களின் எலும்பினைக் கொண்டோ தயாரிக்கப் படும் (புராணத்தின் படி இந்திரனின் ஆயுதமான வஜ்ரமும் ஒரு முனிவரின் தியாகத்தால் அவரது முதுகெலும்பில் இருந்து எடுக்கப்பட்டது தான்). அதே சமயம் வாள்களும் கற்களினால் வடிக்கப் பட்டிருக்கின்றன, அவை வரலாற்றிட்கு முந்தைய காலக் கட்டத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இந்த சிற்பக் காட்சியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மொத்த ஆயுதங்களையும் கணக்கில் கொண்டால் இந்தப் புராணம் உலோகக் காலத்திற்கு (Metal Age)முந்தைய காலக்கட்டத்தையே குறிக்கின்றது என்பது இந்த மாமல்லையின் சிற்பக்காட்சி வாயிலாகவும், அதனையொட்டி வாசித்த சில புத்தகங்கள் மட்டும், இணைய வாசிப்பினையும் வைத்து வரும் முடிவு.. எதற்காக நான் இந்த முடிவுக்கு வர வேண்டும்?? என்ன அவசியம் இருக்கிறது ? என்று நீங்கள் கேட்டால் - நான் மீண்டும் சொல்லப் போவது  - புராணம் எனும் கருவியில் புதைத்து வைத்து தலைமுறை, தலைமுறைகளில் ஒளிந்திருக்கும் நமது வரலாறுகள், இன்றைய காலத்தின் தேவை என்பதை நான் உணர்வதாலேயே. ஆக கொற்றவையின் காலமாக நாம் வழிபடுவது 10000 ஆண்டுகள் பழமையானது என்று சொல்வதற்கு இடமிருக்கிறது

ஆம், ஆங்கிலத்தில் Syncretism என்று ஒரு சொல் உள்ளது, அது பல்மத தன்மைக் கொண்ட ஒரு பொருளையோ, தத்துவத்தையோ அல்லது சடங்கினையோ குறிக்கும் தன்மை. இந்தியத் துணைக் கண்டம் போன்ற  பெரும் நிலப்பரப்பு பல்வேறு வகையான வழிபாடுகள் மற்றும் சடங்குகளையும், மத நடவடிக்கைகளாலும் பல்வேறு மாறுதல்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டே உருவானது தான் என்பதை பல வரலாற்றாய்வாளர்கள் கருதுவதற்கு இந்த SYNCRETISM எனும் பரிமாணம் தான் அடிப்படை. இந்த அடிப்படை தான் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு நான்கு திசைகளில் இருக்கும் பல்வேறு வித்தியாசங்களுக்கும் மத்தியிலும் ஒரு மையப் புள்ளியை கண்டுணர வகை செய்கிறது. இதற்கு கொற்றவை வழிபாடும் ஒரு எடுத்துக் காட்டு என்று சொல்ல இடமிருக்கிறது. ஆனால் இந்த வழிபாடு வாயிலாகக் கிடைக்கும் ஒரு உண்மை தமிழர்களின் தொன்மையை இந்த மண்ணில் மிக முக்கியமான ஆதாரத்தோடு நிரூபிக்கிறது அதை அடுத்தப் பகுதியில் காண்போம்...9ம் நூற்றாண்டு சிற்பம் - ஜாவா தீவு
இந்தோனேஷியா
ப்ரூக்லின் அருங்காட்சியகம் - 18ம் நூற்றாண்டு ஓவியம்
image courtesy: Wikipedia

நன்றி
ஜீவ.கரிகாலன்

வியாழன், 19 டிசம்பர், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 50 - சுவாரஸ்யம் எனும் அஜினா மோட்டோஇணையத்தில் தொடர்ந்து எழுதுவது என்பது சாதாரணமான விசயம் இல்லை, தள்ளுவண்டி பவன்களின் வியாபரத்தைப் பார்த்து பொறாமைப் படும் மனநிலையை சற்று ஆராய்ந்து பார்த்தீர்களாயின், நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் வியாபாரம் முடித்து 2000-3000 வரை கையில் கொண்டு போகும் ஒரு திருவண்ணாமலை பிரஜையோ, வடநாட்டு இளைஞனோ நம் கண்களில் ஆச்சரியமாகப் படுவதுண்டு. ஆனால் அவன் கார்ப்பரேஷன், போலீஸ் மாமுல்( அதிலும் தின வசூல் மற்றும் மாதச் சந்தா), ஏறி இறங்கும் காய்கறி விலையில். மழை, கார்த்திகை, புரட்டாசி மாத விரதக் காலங்கள் போன்ற இடர்களையும் தாண்டி வீட்டிற்குப் போனதும் உறங்குபவனா?? அடுத்த நாளுக்கு தேவையானவற்றை வாங்கி வைப்பது, ஊறல் போடுவது, காய்கள் வெட்டுவது என்ற உற்பத்தி சார்ந்த வேலைகளும் அவனுக்கு 08 மணி நேரம் இருக்கும். உற்பத்தி, பண்டங்களை சேல்ஸ் பாயிண்ட்டிற்கு அனுப்பும் தளவாட வேலைகள் என 16 மணி நேரமாவது உழைக்கிறான் என்பதை நாம் உணர்வது கிடையாது.

தினசரி ப்ளாக் எழுதும் என் நண்பர்களையும், சில வலைப்பதிவர்களையும் பார்க்கும் பொழுது இன்னும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் அன்றைய சமாச்சாரங்களை பிடிப்பதைக் காட்டிலும் கஷ்டமான விஷயம் இரண்டு இருக்கிறது.

முதலாவது - கிடைக்கும் மேட்டரை, எப்படி முலாம் பூசி, வெங்காயம் தூவி , சாஸ் வைத்து என்று ஏதோ ஒரு வண்ணத்தோடு கலந்து கொடுக்கும் ஓபனிங் வரிகளைத் தேர்ந்தெடுப்பது தான் (அதாவது எங்கிருந்து தொடங்குவது என்று). தொடர்ந்து எழுதலில் மட்டுமே இந்த வடிவம் அவர்களுக்கு எளிதாகக் கைகூடும். பெரும்பாலான வாசகர்கள் அலுவலகத்தில் Alt + Tab கீகளில் கை வைத்துக் கொண்டே தான் வாசிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருப்பதால், சொல்ல வேண்டிய மேட்டரில் அதிகப்பட்ச இன்ட்ரஸ்டிங் ஸ்பாட்-ஐ நாடி பிடித்துக் கண்டுபிடித்து எழுத ஆரம்பிக்கிறார்கள். இது தொடர்ந்து எழுதும் பளாகருக்கு சாதாரன(ண)மாகி விடுகிறது.

இரண்டாவது - இது மிக முக்கியமானது அவர்கள் குடும்பத்தை சமாளிப்பது,    “ இராப்பாடி மாதிரி லொட்டு லோட்டுன்னு தட்டுறான்” என்பன போன்ற விமர்சனங்களை எல்லாம் கடந்து சென்று நிற்பது, வா.மணிகண்டன் போன்று அடிக்கடி பைக்ல விழுந்து எந்திரிப்பவர்களுக்கு வீட்டில் இரவு விழிப்பதற்கான எதிர்ப்பை சமாளிப்பது எத்தனைக் கடினம்??

மூன்றாவது  -


அதான் முதலிலேயே இரண்டு காரணங்கள் என்று தானே சொன்னேன்.. மூன்றாவது என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் இந்தப் பதிவு ப்ளாகரின் மெனக்கெடல் மற்றும் அவர்களின் தொழில் ரகசியம் பற்றி அலசுவதற்காக அல்ல.

****************

இப்படி உரைநடை எளிமையாக, சின்ன சின்ன அங்கதங்கள் மற்றும் ஆங்கிலக் கலப்புடன் இருக்கும் சுவாரஸ்ய எழுத்து உண்மையில் ஆரோக்கியமானதா?? இது கிட்டதட்ட ப்ளாக் எழுத்து என்பது போல் மாறி விட்டது. ஒரு முக்கிய எழுத்தாளாரிடம் பேசும் பொழுது இது போன்ற எழுத்துகள் தமிழ் உரைநடையை முற்றிலுமாக அழித்து விடும் என்று கவலைப் பட்டார், ஏனென்றால் இன்னும் சில ஆண்டுகளில் வலை எழுத்தே அதிகம் கவனம் கொள்ளப் படும் என்பது அவரது நம்பிக்கை. அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பொதுவாகவே வலையெழுத்து என்பதால் நெடும் பதிவாக எழுதுவது மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால் அதைக் குற்றம் சொல்லவும் முடியாது, ஒருவருக்கு சுருங்கச் சொல்ல வருகின்றது என்பதில் எந்தத் தவறும் இருப்பதாக என்னால் கருத முடியவைல்லை.

ஆனால் அவர் மொழியின் அழகை -உரைநடையின் CONTENT மீது வாசகர்களுக்கு வரும் தவறான மோகம், மெல்ல மெல்ல வாசிப்பின் தரத்தை கரையான்கள் போல் கரைத்து விடும் என்று சொன்னார். இதை அப்படியே புறக்கணிக்க முடியாது, ஏனென்றால் என் வலைதளத்தில் இருக்கும் எழுத்துப் பிழைகளைப் பார்த்தாலே தெரியும். சாதாரணமாக எந்த மெனக்கெடலும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய முடிவதால், பிழைகளைப் பற்றிய அக்கறை குன்றி விடுகிறது (கு.பட்சம் :- பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியம் செய்தல்).

இந்த வடிவம் பாக்கெட் நாவல் காலத்தில் இருந்தே இருக்கிறது என்று இந்த வடிவத்தின் வரலாற்றை ஆராய்வதும் முக்கியமானதே, 1960-1970களில் இருந்த தீவிர இலக்கிய எழுத்தாளர்களின் உரைநடையின் தரத்தை மட்டுமல்ல அன்றைய CONTENTஐ பார்த்தோமேயானால், இன்றைய நிலையில் அதுவும் குறிப்பாக non-Fiction எழுத்துகள் குறிப்பிடும் படியாக இல்லவே இல்லை. ஆனால் இந்த Parellel journey இருந்தே வருகின்றது.

ஒரு பக்கம் தீவிரமாக வரலாற்று நாவல்கள் கல்கி, சாண்டில்யன், விக்ரமாதித்தன், அகிலன் = இன்னொரு பக்கம் சு.ரா, தி,ஜ, மௌனி, நகுலன், கி.ரா, அ.மி என்கிற வரிசை சரியாகவே அமைந்தது. பின்னர் - பாக்கெட் நாவல், பாலகுமாரன், சுஜாதா (சுஜாதாவை ஒரு வரிசைக்குள் அடக்க முடியாது, இது பெரும்பான்மையான வாசகர்களை அடைந்திருக்கும் எழுத்தை வைத்து கோர்த்திருந்த வரிசை) அவர்களோடும் தொடர்ந்து வந்த தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

இப்பொழுது கமர்சியல் எழுத்து என்று சொல்லப்படும், வெகுஜனத்திற்கு எளிதில் சென்றடையும் எழுத்து இணையத்தை நன்கு பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. தீவிர இலக்கிய எழுத்தும் உயிரோசை, மலைகள், வல்லினம் போன்ற வலைதளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அன்றிருந்த தீவிர இலக்கியப் படைப்புகளைப் போல, இன்றும் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குரியதே!!

ஏனென்றால் இன்னமும் க்ளாசிக் நாவல்கள் தான் அதிகப்படியான ரீப்ரிண்டுகள் போடப் படுகின்றன. ஓவியங்கள் - சிற்பங்கள் பற்றி 1970களிலும், 1990களிலும் பேசிக் கொண்டிருந்தவர்கள் தான் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள் (வெங்கட சாமிநாதன், இந்திரன், சி,மோகன், ரவி.சுப்ரமணியம்). ஆனால் வணிக எழுத்து இன்று வரை வணிகம் செய்து கொண்டு தான் இருக்கிறது. இணைய எழுத்தினையோ, சுவாரஸ்யமாக எழுதுவதையோ குறை சொல்வதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. உடம்பு நன்றாக இருக்கும் வரை, மருத்தவரிடம் செல்லும் அவசியம் வரும் வரை நம் சமையலில் அஜினோ மோட்டோ போட்டுக் கொள்ளலாம். காலம் எல்லா மாயங்களையும்  நிராகரித்து விடும். எஞ்சி விடுவது அசலான, உண்மையை பிரதிபலிக்கும், வலிமையான படைப்புகள் மட்டுமே, அவை மட்டுமே CLASSIC என்று போற்றப் படும்.சிலருக்கு 30, சிலருக்கு 35, சிலருக்கு 40-60என எந்த வயதிலாவது கட்டுப்பாடு செய்து கொள்ளத் தோன்றும், அப்பொசுது மாறிக் கொள்வார்கள்... So இணைய எழுத்தாளன், முகநூல் எழுத்தாளன் என்றெல்லாம் சொல்லி எரிச்சலூட்டாதீர்கள் நண்பர்களே!!
*************************************

நீங்கள் காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாயின் உங்களுக்கு நான் எழுதப் போகின்றவை புரியும். (குறிப்பாக முத்து மற்றும் லயன் காமிக்ஸ் வாசகர்களுக்கு)

காமிக்ஸ் கதைகளை விட கதைக்கு முன்னே -பின்னே வரும் சமாச்சாரங்கள் எனக்கு அலாதி தான், ஹார் லைன், காமிக்ஸ் -டைம், ட்ரையிலர், மாதம் ஒரு வாசகர் போன்றவை தரும் பரவசம் எப்போதுமே ஹையர் தான். மூன்றாம் வகுப்பு படிக்கையிலேயே - என்னையும் அறியாமல் என்னுள் நுழைந்து விட்ட சில ஆங்கிலச் சொற்களெல்லாம் - விஜயன் மாம்ஸின் எழுத்தினாலே தான்.  நேராக ஒரு கோடு, முழுதாக ஒரு வட்டம் கூட வரையத் தெரியாத மக்குப் பையனாகிய எனக்கு டெக்ஸின் ஓவியங்கள் பற்றி, ஏஜெண்ட் XIIIன் சோகம் ததும்பும் இமேஜ்கள், ஓவிய பாணிகள் -வெளிநாட்டில் ஓவியர்களுக்கு இருக்கும் மதிப்பு பற்றியெல்லாம் நம்ம விஜயன் சாப் எழுதிய வரிகளே, நான் சித்திரங்கள் மீது காதல் கொள்ளச் செய்தது.

என்னிடம் பழகும் சில பேருக்கு மட்டும் தான், என்னோட ஹ்யூமர், டைமிங் ஜோக்குகள், சுய-எள்ளல் மற்றும் ரசனை பற்றித் தெரியும்(ஆமா தற்புகழ்ச்சி தான்). அவை எல்லாவற்றிட்கும் காரணம் இந்த ஆசான் விஜயன் தான். இந்த வாயில் கதவு தான், என் சிறுவயதில் நான் பார்த்த உலகின் சாளரம். எத்தனை சோகமான நேரங்களிலும் விட்டு (ஜோக்கு) அடிப்பது நம்ம விஜயனின் அசாத்திய திறமை தான்

அதற்கு ஒரு எ.கா:  (சமீபத்தில் வந்திருந்த ஒரு சிப்பாயின் சுவடுகள் - கிராபிக் நாவலின் - ஆசிரியர் பக்கமான காமிக்ஸ் டைமிலிருந்து :

 கடந்த 2 மாதங்கள் முன்பாகவே சலூனில் வில்லன்களின் தாடையில் டெக்ஸ் விடும் குத்துக்களின் பாணியில் - காகித விலைகளும் - அயல்நாட்டுப் பணங்களின் மதிப்பும் நம்மைத் துவைத்துக் காயப்போட்டு வருவதால் -புக்கின் விலையினை உயர்த்தாமல் தாக்குப் பிடிப்பது துளியும் முடியவில்லை
(டெயில் பீஸ்: இனி தொடர்ந்து காமிக்ஸ் பற்றிய பதிவுகள் போடலாம் என்று நினைக்கிறேன், எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்)

நன்றி
ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மகிஷாசுர மர்தினி - நமது வரலாற்றில்போர் மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான் வரலாற்றை வாசிக்கத் தூண்டும் வஸ்துக்கள். புராணங்கள், இதிகாசங்கள், மத வரலாறு, கலைப் படைப்பு என வரலாற்றின் அடுத்த அத்தியாயங்கள் இந்த இரண்டில் ஒன்றைப் பற்றியபடி தான் அடுத்தடுத்து நகர்கின்றன. அதே சமயம் ,

வரலாறு என்பது உண்மை மீது சுதை பூசி, வெள்ளையடித்து, வர்ணம் தீட்டுவது...
*அதிகாரம் கொண்டு சுரண்டிப் பார்த்தால், உண்மையை உயிருடன் மீட்க முடியாது.
*சில சமயம் அந்த உண்மையை மீட்பதாய் சொல்லி,  அவற்றின் மீது SAND BLAST செய்யப் படலாம்
*காலத்தின் கணக்குகளில் எல்லா லேயர்களும் உரிந்து நிர்வாணம் அடைந்து விடும்

#நாம் செய்ய வேண்டியது எல்லாம் 35 மார்க் வாங்கி பாஸாகிவிட வேண்டும் என்பது தான்..
***************************************
கொஞ்சம் பெரிய இடைவெளி தான் மாமல்லை சிற்பங்களைப் பற்றி பேசுவது என்பது என்னைப் பொருத்தவரை எந்த அளவு மகிழ்ச்சி தரக்கூடியதோ, அதே அளவு பொறுப்பினையும் தந்துவிடுகிறது. தவறான விவரனைகள் ஜோடனைகளான வார்த்தைகளிலோ, தவறான குறிப்புகள் அல்லது தரவுகளையோ தந்து செல்லும் கட்டுரையாக இருப்பது மிக ஆபத்தானது. வாசிப்பின் சௌகரியத்திற்காக வரலாறு மட்டுமல்ல தவறான பின்புலத்தோடும், சரியான அளவீடுகள் கொண்டு பார்க்கப்படாத அறிவியல் தகவல்களும் கூட ஒட்டு மொத்தமாக நோக்கத்தை சிதறடித்து விடும்.
அது எப்படி அறிவியல் முடிவுகள்/தகவல்கள் கூட ஒரு கலை விமர்சனம் பற்றிய தீர்ப்புகள்/வரைவுகள்/கருத்துகளுக்கு ஆபத்தாகின்றன என்றால், அது அப்படித் தான்:

 ரோமன் தகவல் களஞ்சியத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் நிறைய அறிவியல் கூற்றுகள், தேற்றங்கள், கண்டுபிடிப்புகள் பொய்த்துப் போயிருக்கும் அல்லது காலாவதியாயிருக்கும். இதற்கு காரணம் அறிவியல் தன்னை பாம்புச் சட்டையைக் கழட்டுவது போல் தன்னிடமிருந்தே தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தேர்ந்த உயர்ரக மற்றும் எளிமைப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அறிவியலை எந்தப் பக்கமும் எளிதில் சாய்த்து விடுகிறது.


சரி, உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?? மாமல்லை சிற்பங்கள் பற்றிப் பேசுவதற்கு எதற்கு இத்தனை சுத்தி வளைப்புகள் என்று கேட்கிறீர்களா??
ஆமாங்க அரசியல் இருக்கு, புரானங்களை இப்படிப் பார்ப்பதற்கு உங்கள் மனம் இடமளிக்கிறதா என்று உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்க ஒரு வழி:
அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றைப் பதிந்து வைப்பதற்கான Toolகள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். . இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் இதிகாசம் மட்டும் புராணங்களை அன்றைய வரலாற்றை தொகுக்கப் பயன்படுத்திருக்கும் கருவியாக நான் பார்க்கிறேன், என்ன அவற்றிற்கு அழகியல்(Aesthetic) மற்றும் கலை(Artistic) முலாம்கள் பூசப்பட்டிருக்கும். என்னளவில் தெளிவாக சொல்ல முடிந்ததெல்லாம் பெரிய புராணம் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவனம் என்று சொல்ல முடியும், ஆனால் இன்றைய அறிவியல் மற்றும் கல்விக் கொள்கைக்கு அவை எதிரானது. நிற்க.. மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள் புராணங்களும், இதிகாசங்களும் முன்வைக்கும் வரலாற்று செய்திகள் இன்றைய கல்விக் கொள்கைகளின் காரணமாகவே நீக்கப் படுகின்றன.


”இது என்ன அபத்தம் கல்வியைச் சாடுகிறாய்?” என்ற கேள்வி வரலாம். பின்நவீனத்துவம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனையான குறியீட்டுத் தன்மை எனும் படிமம் நமது புராண,இதிகாச/பக்தி இலக்கியங்களில் கூட நிறைந்திருக்கிறது. பாரதத்தில் யமுனா நதிக்கரையோர யாதவப் பெண்களுடனே உல்லாசமாக வாழும் கிருஷ்ணன் தன் கையில் வைத்திருக்கும் குழல் மாடு மேயத்தலின் போது பாடுவதற்காக வைத்திருக்கிறான், பலராமர் ஏந்திக் கொண்டிருக்கும் ஏர் உழவனுக்கானது.. ஒரு உழவனும், ஆயரும் சேர்ந்து வாழ்ந்த யமுனா நதிக்கரையின் வாழ்வியலை இது போன்ற ஆயுதங்களைப் பற்றிய அறிவினைக் கொண்டு  தெரிந்து கொள்ளலாம், ஒரு விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டுமென்றால் அதற்கு முக்கியப்பங்கு மாடுகளுக்கு தான் இருந்தது என்பது இன்றளவும் கூட உண்மையான விஷயம் தான்.. ஆற்றோரங்களிலே விவசாயம் எனும் தொழில் மூலம் நாகரிகம் அடைந்து விட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக அவர்கள்(க்ருஷ்ண - பலராமன்) காட்டப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அவதாரங்களிலும் ஹீரோக்களின் வதம் செய்யும் ஆய்தங்களைல் கொண்டு அவர்கள் வாழ்ந்திருப்பதாய் நம்பப்படும் காலத்தை நாம் புரிந்து கொள்ள இடமளிக்கிறது.. Symbolism என்பதை நவீன இறக்குமதிச் சிந்தனையாகப் பார்ப்பது எத்தனை கயமைத் தன்மை கொண்டது. தசாவாதாரத்தில் தனது உடல் பலத்தால் முதல் மூன்று அவதாரங்களிலும், நான்காவது அவதாரத்தில் நகங்களாலும் வதம் செய்திருப்பது மிகப் பழமையான  காலத்தை காட்டுகிறது (Pre-Historic Times: Upper Paleolithic to Neolythic), அடுத்து ஞானவதம் (வாமண) அதற்கடுத்த காலம் கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனிடமிருந்து உலோகக் காலம் ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து  வருபவை வில், அம்பு, சக்கரம் என்றெல்லாம் கொண்டு வரும் குறியீடுகள் காலத்தை கண்டரிய உதவும்.


இப்படித் தான் மஹிசாசுரனை வதம் செய்யும் துர்கையின் சக்தியை வியந்து பார்ப்பதோடு அவள் காலத்தின் போர் செய்தியை, இந்த சிற்பத் தொகுதியின் உதவியோடு தெரிந்த கொள்ள இடமிருந்தால் தேடுவதும் /பரப்புவதும்; இல்லா விட்டால் கலை விமர்சனம் செய்வதோடும் நகர்ந்து விடுதல் நல்லது தான். அப்படிப் பட்ட ஒரு முக்கியமான சிற்பத் தொகுதி தான்  மகிஷாசுரமர்த்தினி செய்யும் யுத்தக் காட்சி, இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று தனியாகவே மாமல்லை சென்று திரும்பி வந்தது உண்டு. அதுவும் வெறும் மகிஷாசுர மர்த்தினியின் சிற்பக் காட்சியை மட்டும் பார்த்து விட்டு (சில மணி நேரங்கள்) கிளம்பி வந்துள்ளேன்.


அடுத்தப் பகுதியில் மகிஷியின் சிற்பத் தொகுதியை அருகில் நின்று பார்ப்போம்...

ஜீவ.கரிகாலன்