ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 அக்டோபர், 2017

ஓர் ஓவியனின் தற்கொலை என்பது?

https://www.youtube.com/watch?v=BPq2R89o8aM&feature=share

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவனின் தற்கொலை என்பது பொதுவாக நடைபெறும் மற்ற தற்கொலைகளைப் போன்றது தானா? இதென்ன தற்கொலைகளில் ரேட்டிங் வைக்கிறேன் என்று கேட்கலாம்.
உலகில் அதிகம் தற்கொலைகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அனிதாவின் தற்கொலையோ, இளவரசனின் தற்கொலையோ அல்லது நெல்லையில் நடந்த தற்கொலையோ (அந்தக் குழந்தையை எரித்தது தற்கொலை அல்ல) அதற்குப் பின்னால் இருக்கின்ற உலகியல் அழுத்தங்கள், ஒரு கலைஞனுக்குப் பிரதானமாக இருக்காது. எல்லாமே விலைமதிப்பற்ற உயிர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்ற போதும், கலையை நம்பிய மாணவனின் தற்கொலை என்பது சமூகத்தின் மிகப்பெரும் தோல்வியை முன்கூட்டியே அறிவிக்கிறது.
***
பிரகாஷ் தன் நண்பர்களுக்கு அனுப்பிய வீடியோவைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியதெல்லாம். சமூகத்தின் இது போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து வெளியே பேசவேண்டிய கலைஞனையே அந்த அரசியல் கொல்கிறது எனில் அசலான தோல்வி யாருடையது?
**
வாழ்வில் பொருளாதாரத்தைத் தேடியோ, பொருண்மையை மையப்படுத்தி மட்டும் கனவு காணாதவர்கள் தான் நுண்கலையைத் தேடி அலைவார்கள், இசையோ ஓவியமோ திரைப்படமோ நடனமோ எழுத்தோ அவர்கள் கனவு தான் அவர்களின் வாழ்க்கை முறையை வடிவமைக்கிறது.
பொறியாளராகவோ, மருத்துவனாகவோ வணிக மேலாண்மை போலவோ முயற்சிக்கும் மற்ற மாணவர்களின் உந்து சக்தியோ, நோக்கமோ, வாழும் முறையோ மேற்சொன்ன நுண்கலையைத் தேடும் மாணவர்களோடு ஒப்பிட முடியாது.
பெரும்பாலும் அவர்கள் anti-realistic ஆகக் கூடச் சொல்லப்படலாம். ஆனால் அவர்கள் வறுமைக்கும், அவமானத்திற்கும் தோல்விகளுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல, சமீபத்தில் நான் சந்தித்த சில முன்னாள் ஓவியக்கல்லூரி மாணவர்களில் சிலர் முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்கள். இருந்த போதும் கல்வி கற்கும் போதே ஒரு கலைஞன் தற்கொலை செய்கிறான் என்பதற்கு நேரடியான காரணம் ஒன்று இருந்திருக்கும்/கலாம்.
கலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது மற்றுமொரு உண்மை. கலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது கலை என்று அவன் நம்பியிருப்பதன் சூழலின், அரசியலின், சந்தையின், தத்துவத்தின் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவற்றைக் கடந்து நிற்பது தான் கலையாக இருக்க முடியும். ஆனால் “தோற்கடிக்கப்பட்டிருக்கிறது”.
***
இரண்டாயிரத்திற்குப் பிறகான இந்திய வரலாற்றில் மெரினா புரட்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அதற்கு வித்திட்டவர்கள் ஓவியக் கல்லூரி மாணவர்கள். அவர்களில் ஒருவன் தான் தன் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறான். கலையால் மட்டும் தான் உணர்வுகளைக் கடத்திச் சென்று தகுந்த வேறு யாருக்கும் ஊட்டிட முடியும். அறிவால் செய்ய முடியாததைக் கலையால் மட்டுமே செய்ய முடியும்.
இவரது மரணம் நிச்சயமாக அரசு கலை கவின் கல்லூரியின் ஒரு செங்கலையாவது நகர்த்திடத் தான் செய்யும்.
ஆனால் இன்று கலையை அரசியல் நசுக்குகிறது, மதம் நசுக்குகிறது, அதிகாரம், பேதமை, பொருளாதாரம் நசுக்குகிறது.
இவற்றிலிருந்தெல்லாம் மீட்சி நிகழுமாயின் அதுவும் கலையால் தான் நிகழும். அதுவே நம்பிக்கை வளர்க்கும் கலை.
ஒரு கலைஞனின் இத்தகையக் கொடும்மரணம் இனத்தின் புற்றுநோயை ஊர்ஜிதம் செய்யும் பயாப்ஸி ரிப்போர்ட் மட்டுமே.
இது வெறும் ஓவியர்கள் உலகு மட்டும் என்று தனியாக அந்நியப்படுத்தும் மற்றவர்கள்......


ஜீவ கரிகாலன்

ஞாயிறு, 1 நவம்பர், 2015

Interpretation of “Creation of Adam” by Michelangelo Buanarotti held at land mass near river Coovam




தேவாலயத்தின் ஆடம்பர தட்டுகள்
இரண்டினில்
கட்டளையின் பெயரில்
நமக்கு உணவு பரிமாறப்படுகிறது

அதை நான் மஃபின் என்றேன்
நீயோ அது கப்பிகேக் என்கிறாய்
இரண்டும் பேக்டு 
உணவு தானே என்றேன் -இருந்தும்
இரண்டும் வேறு வேறு 
கேக்ஸ் தானே என்றாய்
பிறகு
நீயாக வருத்தமடைகிறாய்
கோபம் கொள்கிறாய்        
டைனிங் டேபிளின்
எனது இருக்கையில் மை ஊற்றப்படுகிறது.

கிரீடம் உன் தலையில்

எப்படியோ தெரியவில்லை
உன் அரசாட்சியின் புதிய ஏற்பாடுகள்
அப்பத்தை இடம்பெயறச் செய்கின்றன
வைன் ஊற்றப்பட்ட கப்பிக் கேக்
புனிதமாக்கப்படுகிறது

ஜெர்ரி பழங்களில் இருக்கும் அக்ரலிக்
வண்ணங்களை
நான் விஷம் எனப் பிரச்சாரம் செய்கிறேன்.

நித்தமும் போஷித்து வரும்
உனது தற்கால எதிரியின்
வேண்டுகோள் இதுதான்.
சிலுவையில் அறை,
கல்லால் அடி,
எப்படியோ கொன்று போடு

ஆனால் சாப்பிட்டாயா என்று
மட்டும் கேட்காதே!!
***
க்ளிஷே இல்லை
இது வைனில் ஊற்றிவைக்கப்பட்ட

வந்தனம் – ஆமென்.

ஜீவ கரிகாலன்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மகிஷாசுர மர்தினி - நமது வரலாற்றில்



போர் மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான் வரலாற்றை வாசிக்கத் தூண்டும் வஸ்துக்கள். புராணங்கள், இதிகாசங்கள், மத வரலாறு, கலைப் படைப்பு என வரலாற்றின் அடுத்த அத்தியாயங்கள் இந்த இரண்டில் ஒன்றைப் பற்றியபடி தான் அடுத்தடுத்து நகர்கின்றன. அதே சமயம் ,

வரலாறு என்பது உண்மை மீது சுதை பூசி, வெள்ளையடித்து, வர்ணம் தீட்டுவது...
*அதிகாரம் கொண்டு சுரண்டிப் பார்த்தால், உண்மையை உயிருடன் மீட்க முடியாது.
*சில சமயம் அந்த உண்மையை மீட்பதாய் சொல்லி,  அவற்றின் மீது SAND BLAST செய்யப் படலாம்
*காலத்தின் கணக்குகளில் எல்லா லேயர்களும் உரிந்து நிர்வாணம் அடைந்து விடும்

#நாம் செய்ய வேண்டியது எல்லாம் 35 மார்க் வாங்கி பாஸாகிவிட வேண்டும் என்பது தான்..
***************************************
கொஞ்சம் பெரிய இடைவெளி தான் மாமல்லை சிற்பங்களைப் பற்றி பேசுவது என்பது என்னைப் பொருத்தவரை எந்த அளவு மகிழ்ச்சி தரக்கூடியதோ, அதே அளவு பொறுப்பினையும் தந்துவிடுகிறது. தவறான விவரனைகள் ஜோடனைகளான வார்த்தைகளிலோ, தவறான குறிப்புகள் அல்லது தரவுகளையோ தந்து செல்லும் கட்டுரையாக இருப்பது மிக ஆபத்தானது. வாசிப்பின் சௌகரியத்திற்காக வரலாறு மட்டுமல்ல தவறான பின்புலத்தோடும், சரியான அளவீடுகள் கொண்டு பார்க்கப்படாத அறிவியல் தகவல்களும் கூட ஒட்டு மொத்தமாக நோக்கத்தை சிதறடித்து விடும்.
அது எப்படி அறிவியல் முடிவுகள்/தகவல்கள் கூட ஒரு கலை விமர்சனம் பற்றிய தீர்ப்புகள்/வரைவுகள்/கருத்துகளுக்கு ஆபத்தாகின்றன என்றால், அது அப்படித் தான்:

 ரோமன் தகவல் களஞ்சியத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் நிறைய அறிவியல் கூற்றுகள், தேற்றங்கள், கண்டுபிடிப்புகள் பொய்த்துப் போயிருக்கும் அல்லது காலாவதியாயிருக்கும். இதற்கு காரணம் அறிவியல் தன்னை பாம்புச் சட்டையைக் கழட்டுவது போல் தன்னிடமிருந்தே தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தேர்ந்த உயர்ரக மற்றும் எளிமைப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அறிவியலை எந்தப் பக்கமும் எளிதில் சாய்த்து விடுகிறது.


சரி, உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?? மாமல்லை சிற்பங்கள் பற்றிப் பேசுவதற்கு எதற்கு இத்தனை சுத்தி வளைப்புகள் என்று கேட்கிறீர்களா??
ஆமாங்க அரசியல் இருக்கு, புரானங்களை இப்படிப் பார்ப்பதற்கு உங்கள் மனம் இடமளிக்கிறதா என்று உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்க ஒரு வழி:
அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றைப் பதிந்து வைப்பதற்கான Toolகள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். . இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் இதிகாசம் மட்டும் புராணங்களை அன்றைய வரலாற்றை தொகுக்கப் பயன்படுத்திருக்கும் கருவியாக நான் பார்க்கிறேன், என்ன அவற்றிற்கு அழகியல்(Aesthetic) மற்றும் கலை(Artistic) முலாம்கள் பூசப்பட்டிருக்கும். என்னளவில் தெளிவாக சொல்ல முடிந்ததெல்லாம் பெரிய புராணம் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவனம் என்று சொல்ல முடியும், ஆனால் இன்றைய அறிவியல் மற்றும் கல்விக் கொள்கைக்கு அவை எதிரானது. நிற்க.. மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள் புராணங்களும், இதிகாசங்களும் முன்வைக்கும் வரலாற்று செய்திகள் இன்றைய கல்விக் கொள்கைகளின் காரணமாகவே நீக்கப் படுகின்றன.


”இது என்ன அபத்தம் கல்வியைச் சாடுகிறாய்?” என்ற கேள்வி வரலாம். பின்நவீனத்துவம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனையான குறியீட்டுத் தன்மை எனும் படிமம் நமது புராண,இதிகாச/பக்தி இலக்கியங்களில் கூட நிறைந்திருக்கிறது. பாரதத்தில் யமுனா நதிக்கரையோர யாதவப் பெண்களுடனே உல்லாசமாக வாழும் கிருஷ்ணன் தன் கையில் வைத்திருக்கும் குழல் மாடு மேயத்தலின் போது பாடுவதற்காக வைத்திருக்கிறான், பலராமர் ஏந்திக் கொண்டிருக்கும் ஏர் உழவனுக்கானது.. ஒரு உழவனும், ஆயரும் சேர்ந்து வாழ்ந்த யமுனா நதிக்கரையின் வாழ்வியலை இது போன்ற ஆயுதங்களைப் பற்றிய அறிவினைக் கொண்டு  தெரிந்து கொள்ளலாம், ஒரு விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டுமென்றால் அதற்கு முக்கியப்பங்கு மாடுகளுக்கு தான் இருந்தது என்பது இன்றளவும் கூட உண்மையான விஷயம் தான்.. ஆற்றோரங்களிலே விவசாயம் எனும் தொழில் மூலம் நாகரிகம் அடைந்து விட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக அவர்கள்(க்ருஷ்ண - பலராமன்) காட்டப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அவதாரங்களிலும் ஹீரோக்களின் வதம் செய்யும் ஆய்தங்களைல் கொண்டு அவர்கள் வாழ்ந்திருப்பதாய் நம்பப்படும் காலத்தை நாம் புரிந்து கொள்ள இடமளிக்கிறது.. Symbolism என்பதை நவீன இறக்குமதிச் சிந்தனையாகப் பார்ப்பது எத்தனை கயமைத் தன்மை கொண்டது. தசாவாதாரத்தில் தனது உடல் பலத்தால் முதல் மூன்று அவதாரங்களிலும், நான்காவது அவதாரத்தில் நகங்களாலும் வதம் செய்திருப்பது மிகப் பழமையான  காலத்தை காட்டுகிறது (Pre-Historic Times: Upper Paleolithic to Neolythic), அடுத்து ஞானவதம் (வாமண) அதற்கடுத்த காலம் கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனிடமிருந்து உலோகக் காலம் ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து  வருபவை வில், அம்பு, சக்கரம் என்றெல்லாம் கொண்டு வரும் குறியீடுகள் காலத்தை கண்டரிய உதவும்.


இப்படித் தான் மஹிசாசுரனை வதம் செய்யும் துர்கையின் சக்தியை வியந்து பார்ப்பதோடு அவள் காலத்தின் போர் செய்தியை, இந்த சிற்பத் தொகுதியின் உதவியோடு தெரிந்த கொள்ள இடமிருந்தால் தேடுவதும் /பரப்புவதும்; இல்லா விட்டால் கலை விமர்சனம் செய்வதோடும் நகர்ந்து விடுதல் நல்லது தான். அப்படிப் பட்ட ஒரு முக்கியமான சிற்பத் தொகுதி தான்  மகிஷாசுரமர்த்தினி செய்யும் யுத்தக் காட்சி, இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று தனியாகவே மாமல்லை சென்று திரும்பி வந்தது உண்டு. அதுவும் வெறும் மகிஷாசுர மர்த்தினியின் சிற்பக் காட்சியை மட்டும் பார்த்து விட்டு (சில மணி நேரங்கள்) கிளம்பி வந்துள்ளேன்.


அடுத்தப் பகுதியில் மகிஷியின் சிற்பத் தொகுதியை அருகில் நின்று பார்ப்போம்...

ஜீவ.கரிகாலன்

திங்கள், 28 அக்டோபர், 2013

அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சிவனின் காதல்



காதல் தரும் துயரத்தில் மீள முடியாத நிலை அது, உலகையே அழித்து விடச் சொல்லும் வெறி மட்டுமே அதில் மேலோங்கியிருக்கும். அதுவரை கண்களுக்கு அழகாக பிரசன்னமாகியிருந்த இயற்கையின் அழகுகள் எல்லாம் வெறுப்பாக மாறி விடும். எத்தனை கனவுகள்?, எத்தனை போராட்டங்கள் ? எல்லாமுமே ஒரு வாழ்வுக்கான ஆரம்பத்திற்காகத் தான், ஆனால் அப்படி துளிர் விட்ட காதல் தான், அதற்குள் கருகிப் போனது எத்தனை கொடுமையானது??

இனம் மாறித் திருமணம் செய்து கொண்டது தானே ஒரு சமூகத்திற்கு அவமானகரமாய்ப் போய்விட்டது? ஒட்டுமொத்த நாடும் ஒரு காதலைப் புறக்கணித்தது.  காதலில் மூழ்காமல் இருந்தது பாசப்போராட்டம், இறுதியில் தான் வாழும் சமூகம் தன்னை அவமதிப்பதைத் தாளாது தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குத் தூண்டியது. ஒரு பக்கம் தன் காதலி இறந்த சோகமும், மற்றொரு பக்கம் தங்களை ஒதுக்கிய, தூற்றிய சமூகத்தின் கோபமும். காதல் தரும் துயரத்தில் ஆற்ற முடியாத கோபம் இது, சர்வமும் நிர்மூலமாக்கப் பட்டது.

தீக்கிரையான தன் காதலியின் உடல் கருகித் தான் கிடக்கிறது. தனது வலிமையான தோள்களை கெஞ்சிடச் சொல்லிப் பணித்த அந்த மென்மையான உடலும், கருமையான விழிகளும் கருகித் தான் கிடக்கிறது. தன் ஏழ்மையை, கடின வாழ்க்கை முறையினை, தன் குறைகளை என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட மேன்மை பொருந்திய அரசிளங்குமரி தன்னை விட்டு அகன்று விட்டாள்.

”நம் இத்தனைக் கால காதல் வாழ்க்கையில் அதிகப்பட்சமாய் ஒரேயொரு கடுஞ்சொல், ஆனால் அது உண்மையாகிப் போய்விடும் என்று யாருக்குத் தெரியும்?. அந்த சொல்லுக்கு மட்டும் என்ன அப்படிப்பட்ட சக்தி? அப்படியென்றால் எத்தனை முறை சொல்லியிருப்பேன், ’நீயின்றி நானில்லை ’ என. ஒருவேளை நானும் இறந்து விட்டேனா என்ன??.
’நீ என்னுள் பாதி’ என்றேனே, இனி எப்படி உனக்கு நான் இடம் தருவது? நீ எப்படி என் இடம் பெயர்வாய்??”...

 ”சொல் தாட்சாயினி!! நீ ஏன் அப்படி செய்தாய்”.
 ”என் ஒரு பாதியாகிய நீ மரித்துப் போன பின்பு நான் மட்டும் எப்படி சிவம்?? நான் என்பது இனி ஒரு சவம். எனினும், இப்பொழுதும் உன்னை விட்டு என்னால் பிரிய முடியாது.”

தன் கையில் வைத்திருந்த சூலத்தால், கருகிய நிலையில் இறந்து போன சதியின் உடலை ஏந்திய படி எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் நாடு முழுதும் அலைந்து திரிகிறான்...

இப்படி ஒரு ஓவியத்தில் மறைந்திருந்த முன் கதையானது என் கண் முன்னே வந்து போனது, புராணக் காலங்களில் இருந்தே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் தனியுலகத்தின் பொது எதிரியாகவே சமூகம் இருந்து வருகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இது புராணச் செய்தியாக இருந்தாலும் இதை வரையும் மனநிலை எப்படி இருந்திருக்கும்? சூலத்தின் கூர்மைகளில் கிழிந்தபடி தொங்கும் சதியின் நிலை அவ்வோவியருக்கு எத்தனை துயரத்தை தந்திருக்கும்?

அந்த ச(வி)தியின் கோடுகளே, சிவனை உலகைப் பற்றிய பிரக்ஞை இல்லாத ஒரு மனிதனாகவும், தன் காதலி சவமாக இருக்கும் நிலையினை மறந்தவனாகவும், தான் எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாதவனாகவும் இருக்குமாறு அவன் முகத்தின் வெளிறியத்தன்மை காணப்படுகிறது. பின்னர் ஒருநாள் மரணம் பற்றியத் தெளிவு, வாழ்வினை மீச்சிறிய ஒரு  குறிக்கோள் ஒன்றின் பகுதியாகவும் எல்லையற்ற,  முடிவற்ற ஒரு வாழ்வின் ஒரு துளியாகவும் இருக்கும் பிறவியின் மீது ஒரு தெளிவு உண்டாகிறது. பின்னர் இந்தக் காதலே இவர்களை புராணங்களின் வாயிலாக வழிபடச் செய்யும் தெய்வங்களாக்கிறது என்பது வேறு கதையாகின்றது. இப்போது, இந்தக் கதையைப் போலவே இந்நாட்டில் காதல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது, இன்றைய போராட்டங்கள் நாளைய வரலாறாக மாறவே செய்யும்..



கிட்டதட்ட இவ்வோவியம் வரைந்து முடித்த நிலையில் ஓவியருக்கு கிடைத்திருக்கும் அமைதி நிலை. இதைக் கடக்கும் பொழுது நமக்கும் தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது, அந்த நீண்ட நெடிய துயருக்குப் பின் வரும் அமைதி நிலை, அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது!. எத்தனை யுகங்களானாலும் இன்னும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நிம்மதியில் விளையும் அமைதி தான் அது.

18ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஒரு ஓவியம் தான் இது,
நீர்வண்ணங்களைக் கொண்டு காகிதத்தில் வரையப்பெற்ற இவ்வோவியத்தில் தங்கத்தினையும் அழகிற்காகப் பயன்படுத்தியுள்ளார் இதை வரைந்தவர். இதை வரைந்தவர் பெயர் தெரியவில்லை, இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா பகுதியில் வரையப்படும் மினியேச்சர் ஓவியங்கள். இப்போது இந்த ஓவியம்  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அரசுப் பொருட்காட்சியில் வைக்கப் பட்டுள்ளது. அதை மீட்டுக் கொண்டு வர நம்மால் ஏதும் செய்ய முடியாது தான், மீண்டும் கொண்டு வந்து நம் நாட்டில் வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஆனால் நம் அருங்காட்சியங்களில் படிந்திருக்கும் தூசிகள் அவ்வோவியத்தில் வேறு யாரின் படத்தினையும் கூடுதலாக வரைந்து விடக் கூடும்

இந்த ஓவியத்தைப் பார்த்துச் செல்லும்  ஒரு அமெரிக்கனுக்கு இந்தப் புராணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதல் என்பது உலகில் ஒன்று தானே!! சிவனின் துயரம் எந்த மொழி பேசுபவனுக்கும் புரியும்.


(பஜ்ஜி -சொஜ்ஜி - 44, ஓவியம் -01)
ஜீவ,கரிகாலன்