ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

நினைவுகள்

மூளையைக் குத்திக் கிழிக்கும்
உன் நினைவுகள் மீண்டும் மீண்டும் 
வந்துப் போகின்றன .....

இமைகளின் கதவில்கூட 
என்னையும் மீறி 
உன் சித்திரம் தான் இருக்கிறது 
அழிக்கவே முடியாமல்.

என் அகச்செவியோ உன் குரலை 
மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறது,
அதில் முதன் முதலில் என் 
பெயர் சொன்ன உன் தொனி
மட்டும்  மாறாமல்.

பேசுகின்ற வார்த்தை இடுக்குகளில் 
வரும் மௌனக் காலங்களிலும் 
உன் பெயர் தான் பாராயணம்.

உண்ணும் உணவில் கூட 
உன் மயிர் தான் என் தேடல்.
வளர்க்கும் பூச்செடிக்கு கூட 
உன் வருகை பற்றி மட்டும் 
சொல்லி வருகிறேன்.

உன் பதில் வரும் வரை 
இது முற்று பெறாதக் கவிதை 

சனி, 18 பிப்ரவரி, 2012

குலசாமி             "செண்பகமே செண்பகமே" என்றப் பாடல் அந்தப் பேருந்தில் உள்ள டீவியில் ஓடிக்கொண்டிருந்தது, பேரிரைச்சல் தரும் ஹாரன் ஒலியில் ஒரு மண் லாரியைக் கடந்து லாலாப்பேட்டை பாலத்தில் அந்த அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருத்தது. முசிறியிலிருந்து கரூர் சென்றுக் கொண்டிருந்த அப்பேருந்தில் முன் வரிசையில் இருந்த மூன்று முகங்கள் மட்டும் பேரதிர்ச்சியுடனும், குழப்பத்துடனும், ஒருவருக்கொருவர் பேசாமலும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

                   
                             அவர்கள் பயந்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக அசோக் தன் கட்டுப்பாட்டை இழந்து வந்தான். அவன் கண்களிலே நீர், தரை தாரையாக வடிந்துக் கொண்டிருந்தது. அவனை எப்போதும் அணைத்துக் கொள்ளும் தாய் கூட கலவரமடைந்த முகத்துடன் சற்று தள்ளியே இருந்தார். அசோக்கின் தந்தை தான் அவன் அருகிலே அமர்ந்து, அவன் தலையிலே  கை வைத்துக் கொண்டு அவனை சமாதானப்படுத்தி வந்தார் ,"கண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல கரூர் வந்துரும்பா அமைதியா பொறுத்திருப்பா ....... கொஞ்சம் பொறுமையா இருப்பா , பயப்படாதைய்யா " என்று அவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டே வந்தார் . அசோக்கோ தன்னால் முடியவில்லை என்றும் "ஒன்னு அவளை பஸ்ஸில் இருந்து இறக்குங்க இல்லை என்னை இறக்குங்க" என்று சொல்லிவிட்டு பற்களை கடித்துக் கொண்டிருந்தான்.தனக்கு பின்னால் இரண்டு சீட் தள்ளி ஒரு இளம்வயதுப் பெண்ணும் அவள் பெற்றோரும் இருந்தனர். அவர்களை அவ்வப்பொழுது திரும்பித் திரும்பிப் பார்த்தக் கொண்டிருந்தான் அசோக்.


                      வேறுவழியில்லை என்று கண்களால் அவன் அம்மா சைகை செய்தாள். "சித்தலவாய் இன்னும் அஞ்சு நிமிசத்தில் வந்துவிடும் கொஞ்சம் பொறுத்துக்கோ ராசா" என்று அவனிடம் அவன் அம்மா கெஞ்சினாள். அசோக் தன்னை மிகவும் இழந்திருந்தான், தன்னிடம் பேசிய தன் அம்மாவை அவன் முறைத்த விதம் முற்றிலுமாய் மாறியிருந்தது."சொன்னாப் புரியாது உனக்கு ?" என்றுக் கத்தினான். பேருந்திலிருப்போர் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். சித்தலவாய் நகரம்  உள்ளே பேருந்து நுழைந்தது ,"இதோ இறங்கிடலாம் பா " என்றபடி அவன் தந்தை கண்டக்டரிடம் கை அசைத்தார். பேருந்து நிற்கும் முன்னர், அந்த இருக்கைக்கு பின்னால் இரண்டு இருக்கை தள்ளி இருந்த தாய் ,தந்தை ,மகள் ஆகிய மூவரில் , அதன் குடும்பத் தலைவரிடம் சென்று அவர் பேசுக் கொடுத்தார். முதலில் 'தன் மகளைப் பற்றி இவர் ஏன் கேட்கிறார் ?' என்றாவறே பார்த்த அவர் பெற்றோர் . அசோக்கின் தந்தைக் கூறியதைக் கேட்டு ஆச்சரியப் பட்டனர். அந்தப் பெண்ணும் அவரையும் பின்னர், அசோக்கையும் பார்த்து திடுக்கிட்டுப் பதுங்கினாள். அதற்குள் பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்று விட்டதால், அவன் அம்மாவும் அவனும் முதலில் இறங்கினர். புறப்படத் தாரை இருந்த பேருந்தில், "எல்லாம் இரத்தினகிரீசுவரர்" துணை என்று அவன் தந்தை, அவளுடையத் தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பேருந்திலிருந்து இறங்கினார்.


                     அசோக் இப்போது கொஞ்சம் நிதானம் அடைந்திருத்தான், ஆனால் அவன் அம்மாவோ தன் சேலை முகத்தைக் கொண்டு கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். மறுபடியும் நாம் பேருந்தில் போனால் நன்றாக இருக்காது என்று உணர்ந்த அவர் தந்தை, ஒரு வாடகைக் கார் பிடித்தார். யாரும் யாருடனும் பேசாமல் அந்தக் காரினுள் நுழைந்தனர். அசோக் தனியாக முன் சீட்டில் அமர்ந்தான், அவன் முழுதுமாக நிதானப் பட்டு விட்டாலும் சலனத்துடனும் கொஞ்சம் குழப்பத்துடனும் காணப் பட்டான். காரில் தனிமைப் பட்டு விட்டதால், அவன் தாய் தான் தேக்கிவைத்திருந்த கண்ணீரை எல்லாம் வடித்துக் கொண்டிருந்தாள். அவர் தந்தை மட்டும் கல்லாய்ச் சமைந்திருந்தார். 

                           மூவரும் அப்போது முசிறியிலே நடந்தச் சம்பவத்தை மறுபடியும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

(தொடரும் )

வியாழன், 9 பிப்ரவரி, 2012

முத்தம் ......முத்தம் என்றால் என்ன ??
வெறும் இதழ் கொண்டு 
முத்திரை பதிக்கும் அஞ்சலின்
சொல்லும் செய்திதான் என்ன ?

எச்சில் கொண்டு ஈரம்
கொடுக்கும் பசை தனில்
ஒட்டிக் கொள்ளும்
உறவுகளும் யாவை ??

இச் என்ற சப்தத்திலோ
வேறொரு ஒலியிலோ
அவை மீட்டு வரும்
நினைவுகள் யாவை ??

எனக்கு யார் முதலில்
முத்தம் கொடுத்தது ??

மலடிப் பட்டம் தவிர்த்த
என் தாயா??

தன் குலத்தின் நீட்சியைக்
கண்ட என் தந்தையா??

தொப்புள் கொடி அறுத்தவளை
அன்று நான் உதைக்க,
எனை உச்சி முகர்ந்த
என் ஆச்சியா? பாட்டனா ?

சொல்லிக் கொடுத்த
"அ" சரியாக வந்ததால் -எனை
அள்ளி அணைத்த டீச்சரா?

வீட்டில் சுட்ட பணியாரத்தை
திருடி வந்து யாசகமிட,
எனைக் கண்ணனாய்ப் பார்த்த
பிச்சைக் காரக் கிழவியா??
இல்லை நான் வளர்த்த நாயா ??

இவைகளை எல்லாம் 
மறந்து உன் எச்சிலுக்காக 
பிச்சை எடுக்கிறேனே !!!
அதில் என்ன சிறப்பு 
இருக்கிறது????

பாட்டி என்பவள் பிரபஞ்சம்நீ பூமியைச் சுற்றும் நிலா தானே ?
இங்கே உன் பூமியின் எண்ணிக்கை 
ஒன்றுக்கும் மேல் - அது 
உன் மகன்களின் எண்ணிக்கை.

நீ ஒரு சூரியன் தானே?
உன்னை மையம் கொண்டு தான்
உன் குடும்பமே சுற்றிக்
கொண்டிருக்கும் வரையறுக்கப்பட்ட
இடைவெளிகளில் .

நீ ஒரு வால் நட்சத்திரம் தானே ?
உன் விழுதலில் தான்
உயிர் தோன்றல்கள்
சாத்தியப் பட்டுள்ளன .

நீ ஒரு விண்மீன் தானே??
ஒரு நிலாப் பெண்ணின்
இல்லாமையில் மட்டும் ஊருக்குத்
தெரியும் உன் அருமை.

நீ ஒரு விடிவெள்ளி தானே!!
வாழ்க்கையின் ஒவ்வொரு
குழப்பத்திலும் என்
நம்பிக்கையின் திசை
உன்னை வைத்துத் தான்
தீர்மானிக்கப் படும் .

நீ ஒரு கிரகம் தானே!!
பாசம் என்ற ஒரே
நீள் வட்டப் பாதை
தானே உன்னுடையது??

காய்ச்சல் நிவாரணி
அனலடிக்கும் காய்ச்சலில்
ஊறிக் கொண்டிருக்கும்
என் உடலில், இன்றைய கனவில் 
நிச்சயத்திருக்கும் அவளோடுடனான
காதல் காட்சிகள் யாவும் 
நீர்த்துப் போய்விட்டன !!

இப்போதையத் தேவை,
நல்ல மருந்து மட்டுமே 
ஆக வேண்டினேன் ,

என் தாயின்  

வெதுவெதுப்பான கரங்களும்

ஒரு வெள்ளை நிற உப மாத்திரையும்

நாய்க்கு என்ன பெயர் ?


 
        இன்று தீபாவளி அல்லவா ?அண்ணன் இன்று தான் வெளிநாட்டிலிருந்து நம் வீட்டிற்கு வருகிறான், எத்தனையோப் பிரச்சனைகளுக்குப் பின் இங்கு வருகிறான். உடன் அண்ணியும் வருகிறாள், அண்ணியை இதுவரை போட்டோவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அண்ணனின் திருமணம் வெளிநாட்டிலே நடந்துவிட்டதால் எங்களால் அங்கு போக முடியவில்லை.

       அண்ணியின் குடும்பமும் அமெரிக்காவிலே இருப்பதால்,  அண்ணன் அங்கேயே திருமணம் செய்து கொண்டான். தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணையே விரும்புவதாக அன்று என் அம்மாவிடம் கூறிய பொழுது, அம்மா எவ்வளவு துடித்தாள்?? வேலைக்கு சென்ற ஒரு மாதத்திலே தான் காதலிப்பதாய் சொன்ன போது, "உன் வயசுக்கு வந்த தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு அப்புறமா நீ உன் வாழ்க்கைய பத்தி யோசிக்கலாமே!! நான் என்ன தடையா பண்ண போறேன்?, உன் அப்பா போனதுக்கப்புறம் நீ தான நம்ம குடும்பத்த காப்பத்துவன்னு நம்பி அப்பாவோட எல்லா பணத்தையும் உன் படிப்புக்கு செலவழிச்சேன் , ஆனா வேலைக்கு போன மூனே மாசத்துல, உனக்கு கல்யாணம் கேட்டா உன் தங்கச்சியோட வழி தான் என்ன ??" என்று ஆற்றாமையில் அழுதுக் கொண்டே அவனிடம் கேட்க,"இன்னும் மூனே மாசத்துல எங்களுக்கு திருமணம் நடந்தாகணும் எனக்கு வேறு விசா ப்ராப்ளம், அவுங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம், அமெரிக்காவிலே எங்கள் திருமணம் நடந்துவிடும் , போட்டோஸ் அனுப்பி வைக்குறேன், கல்யாணச் செலவு இருப்பதால் ஒரு ஆறு மாசம் கழிச்சு தான் பணம் அனுப்புவேன்" என்று தெளிவாக பதில் சொல்லினான்.அண்ணன் எப்பவும் அப்படித் தான் முதல் கேள்விக்கு சொல்லும் பதிலில் மூன்று கேள்விக்கான விடையாவது இருக்கும். அவன் பேசிவிட்டால் நம்மால் திரும்பி அவனிடம் யாரும் எதுவும் கேட்க முடியாது.

       அன்று அம்மாவிற்கு வந்த நெஞ்சு வலி பற்றி அண்ணாவிடம் சொல்லணும் போல் இருந்தது, அண்ணாவிற்கு போன் பண்ணும் காசு அம்மாவின் மருந்துக்குத் தான் சரியாக இருந்தது என்பதால் அவனுக்குச் சொல்ல முடியவில்லை. 'எனக்கு என்ன நடக்கிறது?' என்றே அன்று புரியவில்லை, அம்மா என்னை மீண்டும் பள்ளியில் சேர்ந்துப் படிக்கச் சொன்னாள், ஏனெனில் , மூன்று வருடங்களிற்கு முன் அண்ணனின் படிப்பிற்காக என் படிப்பு நிறுத்தப் பட்டது,  பத்தாவதில் முன்னூற்று என்பது மதிப்பெண் எடுத்திருந்தேன், அண்ணாவின் இஞ்சினீரிங் படிப்பிற்காக என் படிப்பை நிப்பாட்டும் போது அண்ணனுக்காகத் தானே என்று சந்தோசமாய் விட்டுக் கொடுத்தேன், ஏனென்றால் அண்ணன் தான் எனக்கு தோழன். என் அப்பாவின் முகம் கூட எனக்கு சரியாக ஞாபகம் இல்லாததால் என் அண்ணன் தான், எனக்குத் தெரிந்த ஒரே ஆண், இல்லையில்லை எனக்குத் தெரிந்து இன்னொருவனும் இருக்கிறான். அவன் என் மாமா பையன். நான், அண்ணன், மாமா பையன் என மூவரும் தான் எங்கள் சிறுவயது விடுமுறையை எப்பொழுதும்  ஒன்றாகக் கழித்து வந்தோம்.


                  நானும், என அண்ணனும் எல்லா விடுமுறைக்கும் அவன் வீட்டிற்குத் தான் செல்வோம். அந்த வீட்டில், அவன் தான் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. அவன் வீடு தான் அந்த ஊரிலேயே மிகப் பெரியது. பெரிய வீட்டுப் பையன் என்கிற திமிர் இருந்தாலும் எங்களோடு மிக அன்போடு பழகுவான், அத்தையும், மாமாவும் கூட எங்களுக்கு நிறைய செல்லம் கொடுத்தனர். அந்த ஒரு மாத விடுமுறையும் எங்களது  ஒரே வேலை, ஒரே குறிக்கோள்  விளையாட்டுதான். எந்நேரமும் கூச்சலும், கும்மாளமுமாய் தான் அந்த வீடு காட்சியளிக்கும். நாங்கள் வாழும் வீடு வாடகை வீடு, அம்மா வங்கியில் ஒரு கடைநிலை ஊழியர், நாளுக்கு நாள் அதிகரிக்கும் செலவுகளைச் சரி செய்ய, எங்கள் அம்மா நாங்கள் வாழும் வீட்டின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்தாள், எங்களால் என மாமன் மகன் போல் விளையாட முடியாது, எங்கள் வீட்டில் அவன் வீட்டில் உள்ளது போல் நாய்கள் கிடையாது , அவனுக்கு நாய் என்றால் பிடிக்கும் என்பதால் அவன் தந்தை ஆறு நாய்களை அவனுக்காக என்றே வாங்கினாராம், ஒவ்வொன்றும் ஒரு கலரில் இருக்கும் - அதனால் அந்தக் கலரை வைத்தே அதற்க்கு பெயர் வைத்து விட்டோம் blacky ,whity ,rosy ,lilly , browny , லிட்டில் browny என்பன அந்தப் பெயர்கள். எல்லாம் என அண்ணனின் யோசனை தான். ஆம், அவன் ஒவ்வொரு நாய் வாங்கும் போதும் எங்களுக்கு கடிதம் போடுவான் அண்ணன் தான் பெயர் தேர்ந்து எடுத்துக் கொடுப்பான். பெரும்பாலும், என் அண்ணனும், அத்தானும் ஆங்கிலத்தில் தான் கடிதம் எழுதிக் கொள்வார்கள், நான் அண்ணனிடம் "அத்தான் என்ன எழுதியிருக்கான்" என்று ஆசையாய்க் கேட்பேன். அவன் நாய் வாங்கியதைச் சொல்லும் போது என் அண்ணனுக்கு மிகவும் வருத்தம்  இருக்கும். எங்கள் இருவருக்கும் 'நம் வீட்டிலும் ஒரு நாயாவது வளர்க்க வேண்டும்' என்று.
            விடுமுறைக்கு அவன் வீட்டிற்கு சென்றால் பெரும்பாலும் எங்கள் விளையாட்டு அந்த நாய்களுடன் தான். என் அத்தை பையன் நாயோடு கட்டிப் புரண்டு விளையாடினாலும் அவை ஒன்றும் செய்யாது. அவன் சொன்னதெல்லாம் செய்யும் அந்த browny நாய். ஒரு நாள் அதை வைத்து என்னை கடிக்கச் சொல்லி மிரட்டினான். ஆனால் நானோ அலறிக்கொண்டே மாமாவிடம் சென்றேன். மாமா அவனை அடித்தார், அத்தை மாமாவோடு சண்டையிட்டார். எங்கள் விடுமுறை அந்த வருடம் பாதியிலே நின்றது, ஊருக்குச் சென்றோம், அந்த விடுமுறை எங்களுக்கு பெரும் துயரமான நாட்களாய் சென்றது. எப்படியாவது நாம் ஒரு நாய் வாங்குவோம் என அடிக்கடி என்னை தேற்றிவிட்டு எனக்கு வேறு ஏதாவது கதை சொல்லுவான். ஆனால், இதைப் பற்றி என் அம்மாவிடம் சொன்னால் அடி தான் விழும். ஒரு முறை தெருவில் போன ஒரு சின்னக் குட்டியைத் தூக்கிவந்து , இதை நாம் வளர்க்கலாம் என்று அண்ணன் சொல்ல எங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை. ஆனால், வேலை சென்றுத் திரும்பிய என் அம்மா, என் அண்ணனை அடி,அடி என அடித்தாள். அழுதுக் கொண்டே படுத்திருந்த அண்ணனின் கன்னங்களைத் தடவிக் கொண்டே "நாயும் வேண்டாம் , ஒன்னும் வேண்டாம் " என்று நான் சொல்ல, "இல்லை ஒரு நாள் நான் பெரியவனானதும் அவனை விட நிறைய நாய் வாங்கலாம் "என்று எனக்கு சொன்னான் என் அண்ணன்.எங்கள் இருவரின் ஆசையும் ஒரு நாயாவது வாங்கவேண்டும் என்று மீண்டும் தோன்றியது.


              அடுத்த நாள், என் மாமன் மகனிடமிருந்து கடிதம் வந்தது, அதில் எனக்கெனத் தனியாக தமிழில் நான்கு வரி இருந்தது . தன்னை மன்னிக்குமாறு அதில் கேட்டிருந்தான், "இந்த வருடம் விடுமுறையில் நாம் கொண்டாட்டமாய்க் களிப்போம்" என்றான். மேலும், அவன் வீட்டில் ஒரு பூனை வாங்கியிருப்பதாகவும், நான் தான் பெயர் வைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் என் பெயரை வைத்துவிடுவதாகவும் கூறியிருந்தான். எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இப்போது நாயுடன், பூனை பற்றிய கனவுகளோடு எதிர்பாத்து இருந்தோம்.. ஆனால், என்னால் அடுத்த வருடம்  என்னால் செல்ல முடியவில்லை. நான் வயதிற்கு வந்துவிட்டதால் இனி நான் வீட்டை விட்டு வெளியே போகலாகாது என்று உணர்ந்தேன். என் அண்ணன் மட்டும் பத்து நாள் சென்று வந்தான்.


        நாட்கள் கரைந்துக் கொண்டே இருந்தன, அண்ணன் எங்களை விட்டு கல்லூரிக்குப் பிரிந்து செல்லும் போது, என்னை அப்படிக் கட்டிக் கொண்டு அழுதான். அப்பொழுதெல்லாம் எனக்கென்றே தனியாக லெட்டர் போடுவான் , அதிலும் எங்கள் கணவு வீடு ,நாய் , பூனை பற்றியே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் அண்ணன் என்னிடமிருந்து விலகிக் கொண்டிருந்தான். சில மாதங்களில், என் அண்ணன் பணத்தேவைக்காக மட்டுமே லெட்டர் போட ஆரம்பித்தான். நாய், பூனை ஆகியோருடன் நானும் அவன் வாழ்க்கையில் மறைந்துக் கொண்டிருந்தேன். பின்னர், அவன் படிப்பிற்காக என் படிப்பை துறந்தேன், அம்மா சொல்லுவாள்," உன் அண்ணன் பெரியவனாகி, உன்னை ராஜா வீட்ல கட்டி வைப்பான் "என்று. நன்றாகப் படித்த என் அண்ணன் கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றான், ஒரு நாள் அம்மாவிடம் "தன் வகுப்புத் தோழியின் குடும்பம் அமெரிக்காவில் இருக்கிறது அவர்கள் எனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்கிறார்கள்" என்றான்.


       அம்மா எனக்குச் சேர்த்த அத்தனை நகைகளையும் விற்றுக் கொடுத்தாள், அவன் சென்ற மூன்றே மாதத்தில் திருமணமும் செய்துவிட்டான். எங்களுக்கு ஒரு CDயும், நாலைந்து போட்டக்களையும் அனுப்பினான். அண்ணன் அமெரிக்கா சென்ற பின் எவ்வளவு வெள்ளையாகி விட்டான்?.
அண்ணன் வீட்டிற்கு வருவதாய் போன் பண்ணினான். இரண்டு நாள்கள் தங்கியிருப்பதாய் சொன்னான். எல்லா சோகங்களையும் மறந்து விட்டு இன்று அண்ணன் வருகைக்காக காத்து இருந்தோம். அண்ணனுக்கு நான் ஒரு இன்ப அதிர்ச்சி தரப் போகின்றேன் என் கையில் இப்பொழுது இருப்பது ஒரு நாய்க் குட்டி, ஆம் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு நாய்க் குட்டி வாங்கிவிட்டேன். என் மாமன் மகன் தன் ஏழாவது நாய்க்கு வைக்கப் போகும் பெயர் என்று சொல்லி, இன்று வரை அவன் வாங்காமலே போய்விட்டான்.அத்தோடு அவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடமும் ஆகிவிட்டது. அந்த நாயின் பெயர் "tiger ", ஆனால் என் அண்ணன் தான் இந்த நாயை முதலில் tiger என்று கூப்பிட வேண்டும் என்று அதைக் கூப்பிடாமலே வைத்திருந்தேன்.
           எங்கள் வீட்டிற்கு முன் கார் வந்து நிற்பது, அதுவே முதல் முறை. காரில் இருந்து வெள்ளைக்காரன் போல் அண்ணன் இறங்கினான், அவள் கைப்பிடித்தே அண்ணியும் இறங்கினார். அண்ணி சினிமாவில் வரும் ஹீரோனி போல தன் முடியை பரப்பி விட்டிருந்தாள்.அப்பொழுது நினைத்தேன், நான் கொஞ்ச நேரம் ஈரம் காய்வதற்காக தலையை விரித்துப் போட்டிருந்தால் கூட"மூதேவி மூதேவி" என்று என்னை முறை என் அம்மா அடித்திருக்கிறாள்? என்று ஏளனத்துடன் என் அம்மாவைப் பார்த்தேன். அம்மா தன் மகனை, மருமகளுடன் பார்க்கும் சந்தோசத்தில் தன்னையே மறந்திருந்தாள்.


   பல வருடங்களுக்குப் பிறகு என் தலையில் கைவைத்து என் அண்ணன் என்னை வருடினான். இப்படித்தான் என் அண்ணன் நாயினையும் வருடுவான். அப்போதுதான், அணைக்கு நான் வாங்கிய நாயின் ஞாபகம் வந்தது. இரண்டு பேரும் ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசிக் கொண்டிருக்க, "அண்ணா, நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்கா பாருங்க ??" என்று சொன்னவாறே எந்தக் குட்டி நாயைத் தூக்கி காட்டினேன். நாயைப் பார்த்த உடனே வந்த சந்தோசத்தில், எட்டு வருடம் முன்பு பார்த்த என் அண்ணனாய் மாறினான் என் அண்ணன்.


           "ஹே!!! எப்படி டீ இதக் கொண்டு வந்த அம்மா அடிக்கல ??" என்றபடி ஆவலோடு அதை வாங்க வந்தான். "நீ தான் அதற்கு பேர் வைக்கணும்" என்று நான் சொல்லிக் கொண்டே அவனிடம் நீட்ட.."நோ! டியர் ..டொன்ட் டச் திஸ், திஸ் டாக் இஸ் டிர்ட்டி.. இஃப் யு டச் திஸ் யு வில் கெட் இன்ஃ பேக்டட்" என்று கத்தினாள். அவள் கத்தியது எனக்குப் புரியவில்லை. மேலும், "மோஸ்ட் இம்பார்டெண்ட்லி திஸ் இஸ் யுவர் வெட்டிங் சூட்.. டோன்'ட் ஸ்டைன் திஸ்" என்று அண்ணி சொன்னாள், அதுவும் எனக்குப் புரியவில்லை.


         அப்போது நாயை வாங்குவதற்காகக் கையை நீட்டிய என் அண்ணன், சட்டென்று அண்ணியின் கணவனாய்  மாறி அந்த நாயை வாங்காமல் பின் சென்று அமர்ந்துக் கொண்டான். அதற்குப் பின், அவன் அந்த நாயையும், என்னையும் கவனிக்கவே இல்லை. அவன் ஒவ்வொரு செயலையும் அண்ணியின் பார்வையில் ஒப்புதல் வாங்கிவிட்டுத் தான் செய்துக் கொண்டிருந்தான்.


    அம்மா சுட்ட வடையில் இரண்டாவது வடையை எடுக்கும் போது கூட, "டொன்'ட் ஹேவ் இட், வாட் கைண்ட் ஒப் ஆயில் ஆர் தே யுசிங்??  ஒன் இஸ் ஜஸ்ட் எனாஃப்" என்று தடுத்தாள் அண்ணி. இரண்டு நாட்கள் தங்குவதாய்ச் சொன்ன அவன் மதிய உணவு முடித்ததும் கிளம்பினான். அம்மாவும் அதிர்ச்சியில் இருந்ததால் அவளால் ஒன்றுமே பேச முடியவில்லை. கிளம்பும்போது அண்ணன் கையில் திணித்த பணத்தை வேண்டாம் என்று அம்மா பிடிவாதமாய் மறுத்துவிட்டதால், என் கையில் திணித்து விட்டு கார் நோக்கி சென்றான். இப்பொழுது அந்த நாய்க்கு என் மாமா மகன் சொன்னதைச் செய்யும் நாயின் பெயரான browny  என்று பெயர் வைத்தேன்.


அந்த browny கையை ஆட்டியபடி காரில் அவளோடு சென்றுவிட்டது.சனி, 4 பிப்ரவரி, 2012

மெரீனா: படம் சொல்லும் பாடம்:


மெரீனா :- நல்ல ஒரு எதிர்பார்ப்போடு வந்துள்ள படம், எதிர்பார்ப்புகளுக்கு குறை வைக்கவில்லை. படம் முழுவதும் மெரினாவிலே நடப்பதாய் இருக்கவேண்டும் என்பதால், இயக்குனர் பல இடங்களில் கதையினை மேலோட்டமாய்ச் சொல்வதும், சில இடங்களில் வரும் சின்ன சின்ன flashback-களும் வைத்துள்ளார்.

ஒளிப்பதிவில் மிகவும் சிரத்தை எடுத்து, பல கோணங்களில் மெரினாவை காட்டியிருப்பது அருமை, ஒளிப்பதிவாளர் கிடைத்த ஒரே தளமான கடற்கரையில் மழை,வெயில் , அந்தி, இரவு என்று நம்மை மெரினாவை காதலிக்க வைத்துள்ளார். பாடல்கள் எதுவும் இன்னும் எனக்கு சரியாக மனதில் ஒட்டவில்லை.

பக்கடா மற்றும் அவன் நண்பர்கள் - அவர்களுக்குள் ஏற்ப்படும் சண்டை, கூட்டுத் தொழில் உடன்படிக்கை, வியாபரத் தந்திரம், விளையாட்டு, குறும்புகள் , கல்வி மீது கொண்ட ஆசை என்று பாசிடிவான விசயங்களில் படம் பயணித்ததர்க்காக மட்டுமே இயக்குனருக்கு ஒரு மலர் செண்டு தர வேண்டும். குதிரைக் காரர்கள், பிச்சைக்காரகள், மன நலம் குன்றியவர்கள் என்று சமூகத்தால் புறக்கணிக்கப் பட்ட மனிதர்களிடையே இருக்கும் அன்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிவகார்த்திக்- ஓவியா காதல் காட்சி,அவன் நண்பனின் தத்துவங்கள், மெரீனா வியாபார்கள் கலாய்த்தல், காதல் காட்சியில் ஏற்ப்படும் திருப்பம் என்றும் சுவாரசியத்திற்கும், சிரிப்பு வீடுகளுக்கும் பஞ்சமில்லை. 

இன்று நாம் பார்க்கும் எத்தனையோ முதியவர்கள் பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். "அவர்களுக்கு பின் உள்ள கதை எவ்வளவு கொடூரமாய் இருக்கும் ?? "என்று கற்பனை செய்ய முடியவில்லை... "குடும்பம் எனும் தத்துவம் எப்படியெல்லாம் இங்கே சீரழிகிறது "என்று யோசிக்க வைக்கிறது .தன் பெற்றோரை இழிநிலைக்கு ஆளாக்கும் எந்த கொடியவனும், அவனை விட கொடுமையான ஒரு மகனை வளர்ப்பான் என்பது மட்டும் நிச்சயம்.


படம் முதல் பாதியில் police தேடும் சிறுவனைப் பற்றியே பின்னப்பட்டு , அது எடுத்துச் செல்லும் lead  கதையும் , இடைவேளைக்கு பின் எங்கே போகிறது என்பதை நாம் யூகிப்பது கடினம். அதனால் ,கொஞ்சம் திரைக்கதையில் சறுக்கிய மாதிரி தோன்றினாலும்( ஒரே சீராக படம் பயணிப்பதாய் எனக்குத் தோன்றவில்லை) மெரினா மற்றுமொரு அழுத்தமான படைப்பு.


போஸ்ட்மன் கதாப்பாத்திரமும், பிச்சைக்கார தாத்தா கதாப் பாத்திரமும் படத்தின் பெரிய தூண்கள் என்று மறுக்க இயலாது , நாட்டியாமாடும் சிறுமி சில இடங்களில் மனதைத் தொடுகிறாள். பக்கடா வின் "உஸ்ஸு" எனச் சொல்லும் மேனரிசமும், தத்தா இறந்தவுடனும் , நண்பனின் பிரிவிலும் மிக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.


படம் சொல்லும் பாடம் பெற்றவர்களை அலட்சியப்படுத்தும் மகன்களுக்கு ஒரு பாடம், சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மனிதர்கள் மீதான நம் தவறான பார்வைக்கும் ஒரு பாடம்.
"எத்தனை பெரிய நல்ல படமாய் இருந்தாலும் ரீமேக்கிட அவசியம் இல்லை, நம் வாழ்வியலில் இன்னும் சொல்லப்படாத கதைகள், காண்பிக்கப் படாத தளங்கள் இன்னும் நிறைய உள்ளன என்று மற்ற படைப்பாளிகளுக்கும் ஒரு பாடம்... .......  


அங்காடித் தெரு போன்று மெரினாவும் பேசப் படும்.