வியாழன், 29 நவம்பர், 2012

பஜ்ஜி-சொஜ்ஜி-08/ தேசிய முதலீட்டு வாரியம்


ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.(குறள் 740, அதிகாரம் - நாடு )

சமீபத்தில் மத்திய அரசின் திட்டக் குழுப் பரிந்துரைத்த புதிய வாரியம் பற்றிய அறிவிப்பைக் காண்கையில், பொய்யா மொழிப் புலவர் இன்றைய நிலையை உணர்ந்து தான் அன்றே இப்படி சொல்லியிருப்பாரோ? என்று இந்த குறள் ஞாபகம் வருகிறது. இக்குறளுக்கு விளக்கம் இக்கட்டுரையின் இறுதியில் விளங்கும். தினமும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கை வளங்கள் மிக்க பாரதத் திருநாட்டின் இன்றைய நிலையில், மக்களுக்காக சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் ??!! திட்டக் குழுவை சேர்ந்த மான்டெக் சிங் அலுவாலியா அவர்களின் மற்றுமொரு மக்கள் விரோத திட்டம் தான் இந்த தேசிய முதலீட்டு வாரியம் எனப்படும் National Investment Board(NIB) உருவாக்குவது. இன்று காங்கிரஸ் அரசிற்குள்ளே புகைச்சலை கிளப்பியிருக்கின்றது, மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் திருமதி.ஜெயந்தி நடராஜன் இதற்கான முதல் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

NIB என்றால் என்ன?. முதலில் இது சிறிய தொழில் நிறுவனங்களுக்கோ அல்லது நேரடியாக மக்களுக்குப் பயன்படும் என்ற எந்த நம்பிக்கையையும் கொள்ள வேண்டாம். அதாவது பெரிய அளவில் முயற்சித்து கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள் எல்லாம் தேசத்தின் வளர்ச்சியைப் பின்நோக்கிக் கொண்டு செல்ல, தேசிய ஜன(பண)நாயக கூட்டணி இப்பொழுது தன் கவனத்தை உள்கட்டமைப்பில் தீவிரம் செலுத்தி வருகிறது. இது போன்ற முதலீட்டோடு உள்கட்டமைப்பு என்ற மாயத் தோற்றத்தில் தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வரப்போகின்றது என்பது ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று தான். ஆனால்இதே வாயிலை சற்று அகலப் படுத்தி, சாலை அமைத்தால் என்ன? என்று விவாதித்து கொண்டு வந்துள்ள மற்றுமொரு அபாயம் தான் இந்த வாரியம். இவ்வாரியம், நம் நாட்டிற்குள் ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்த ஒரு பணிக்கும் அல்லது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கும் எதேச்சையான அதிகாரம் வழங்கும் அமைப்பாக இருக்கம்படி நம் திட்டக் குழுவானது பரிந்துரைத்துள்ளது.

இந்த திட்டமானது சாலைகள், சுரங்கங்கள், மின்சாரம், இயற்கைவாயு, பெட்ரோலியம், துறைமுகம் மற்றும் ரயில்வே போன்ற திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று வரையறுத்துள்ளது. அதாவது, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படவேண்டிய முக்கியத் துறைகளுக்கு வாங்க வேண்டிய ஒப்புதல்களை எந்த அமைச்சகத்திற்கும் செல்லாமல் நேரடியாக இந்த புறவழிச் சாலை மூலம் (bye pass road) இந்த வாரியத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதை மக்கள் மற்றும் தேச நலனுக்காக அறிவித்த மத்திய அரசிற்கு, எதிர்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் முன்பே தன் அமைச்சகத்திலும், கூட்டணியிலும் புகைச்சல் கிளம்பியது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த திட்டம் கிட்டதட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பெரிய முதலீட்டாளர்களால் கோரப்பட்டு வந்துள்ளது. இதற்கான அடித்தளம் கடந்த ஜூன் மாதமே நமது பிரதமரால் உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீட்டை கண்கானிக்கும் திட்டம் (Investment Tracking System) ஒன்றை அமைக்கும் பொழுது யாருக்கும் இது போன்ற ஒரு வாரியம் ஒன்று அமைக்கப் படும் என்கிற எச்சரிக்கை வரவில்லை, இப்போது இந்த வாரியம் பிரதம்ர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கேபினட் அமைச்சர்களையும் உறுப்பினராகக் கொண்டு செயல்படும் நிலையில் இருக்கிறது.

பத்திரிக்கைகள் மற்றும் எதிர்கட்சிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கையில் இதை வளர்ச்சிக்கான படியாக எடுத்துரைக்கிறது மக்கள் நலனையும், தேசிய நலனையும் தனித் தனியாக பாவிக்கும் திட்டக் குழு. இதற்காக மத்திய அரசு முன் வைக்கும் காரணங்களாக சில புள்ளி விவரங்கள் தருகிறது. அதாவது உலகிலேயே தொழில் தொடங்குவதற்காக மிகவும் கடினமான முறைகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் (185 நாடுகள்) நம் நாடு 132ஆவது இடத்தில் இருக்கிறது என்று உலக வங்கியின் புள்ளிவிவரத்தினை முன்வைக்கிறது. பெரிய அளவில் நம் தேசத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் முறைகளை இந்தத் திட்டம் மாற்றிவிடும் என்றும் சொல்கின்றனர். நிதியமைச்சகம் கைவந்த வேகத்தில் கொண்டு வந்திருக்கும் இந்த திட்டம் நேரடியாக மற்ற அமைச்சகங்களின் அதிகாரத்தைக் குறைப்பதோடு, யாருடைய கருத்தையும் கேட்கப் போவதில்லை அதுபோல சுற்றுச்சூழல் விஷயங்கள், நில ஒதுக்கீடு, மக்களை வேறு இடங்களில் இடம் பெயரச் செய்யும் அதிகாரம் என மிக சக்தி வாய்ந்த அமைப்பாக இருக்கும். இதன்படி தனித்தனி அமைச்சகம், மாநில அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகளின் எந்த ஒரு தலையீடும் இனி இருக்காது.

இந்த வாரியத்தின் பெயர் ஒன்றே போதும் இதன் விளைவுகளைத் தெளிவாக நமக்கு உணர்த்தும். இது வெறும் தேசிய முதலீட்டு வாரியம் தான், தேசிய ஒப்புதல் வாரியமோ அல்லது உள்கட்டமைப்பு வாரியமோ அல்ல, அதாவது முதலீட்டை மட்டுமே மையமாக வைத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாரியமானது ஒரே தேனீர் விருந்திலோ இல்லை கேபினட் சந்திப்பிலோ எல்லா அமைச்சர்களையும், சில அதிகாரிகளிடமும் கையெழுத்து வாங்கி எந்த ஒரு பூதத்தையும் கிணறு வெட்ட கிளப்பிவிடும். இந்த வாரியம் பெரிய முதலீடுகளை செயல்படுத்துவதில் இருக்கும் களைகளாகக் கருதுவது பல்வேறு மையங்களில் இருக்கும் அனுமதியைத் தானே தவிர, வேறு எந்த அடிவேரில் இருக்கும் பிரச்சனைகளையும் அல்ல.

ஒரு உதாரணமாக தற்பொழுது மத்திய அரசு தொடங்கவிருக்கும் நியூட்ரினோ அணு ஆராய்ச்சிக் கூடம்(neutrino obsevatory) தேனி அருகேயுள்ள மலைப்பகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை எடுத்துக் கொள்வோம், இதைச் செயல் படுத்தும் ஏழு அணுவாராய்ச்சி நிறுவனங்களும் இந்தத் திட்டத்தை (1350 கோடி) தொடங்கும் முன்பு பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப் பட்டு சுற்றுப் புறச் சூழல் அனுமதி, பழங்குடியினரை அப்புறப் படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு காரணங்களினால் தாமதமாகி, நீலகிரி மலையில் செயல்படுத்த முயற்சித்து அதுவும் முடியாமல், சுருளி அருவியிருக்கும் வனப் பகுதியிலும் அணுமதி கிட்டாது போகவே இறுதியாக போடி மலைப் பகுதியில் எல்லா அனுமதியையும் பெற்றது. இப்போதும் பல ஆபத்துகள், கிட்டதட்ட நாற்பது அணைகள், வனப் பகுதி, பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்ற அருகிலே இருக்கும் சதுரகிரி மூலிகை மலைத்தொடர் போன்றன இருந்தாலும், இதுவே NIB போன்ற வாரியம் இருந்திருந்தால் மக்கள் வாழும் பகுதிகளில் கூட இந்த ஆய்வுக் கூடம் செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். இந்த மிகப் பெரிய ஆபத்தைக் கொஞ்சம் கூட உணரவில்லையெனில் கூடங்குளம் போன்ற எந்த ஒரு பகுதியிலும் மக்களை அப்புறப்படுத்தவும், அவர்கள் நிலத்தை கையகப்படுத்தவும் ஜனநாயக ரீதியான மரபு பற்றிய பேச்சே எழாது என்பது மிகப் பெரிய அச்சமாகிறது. இன்று தேசிய நலன் என்ற போதிலும் உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கு கொடுக்கப் பட வேண்டிய முக்கியத்துவம் இனி தார்மீக ரீதியாக (பெயரளவிலும்) கொடுக்க வேண்டியதில்லை.

இதுவரை மக்களுக்குப் பயன்படும் சேவைகளான் மின்சாரம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, நிலக்கரிச் சுரங்கங்களில் எல்லாம் PPP எனப்படும் அரசு-தனியார் கூட்டு சரியாக செயல்படவில்லை என்ற குற்றம் வலுத்து வரும் நிலையில், இது போன்ற வாரியங்கள் அமைந்தால் இதை முழுவதுமாக தனியார் கைக்கு மாற்றுவதில் பெருத்த சிரமமிருக்காது, இதை அந்நிய நிறுவனங்களும் எளிதாக கைப்பற்றும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இதற்கென   கிளம்பி வரும் எந்த எதிர்ப்பையும் சட்டை செய்யப் போவதில்லை நம் நடுவண் அரசு. “இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெரிய முதலீடுகளுக்கான வாய்ப்பை உருவாக்காவிட்டால் உலகம் முழுவதும் இருந்து நமக்கு வர வேண்டிய முதலீடு வராமல் போகும்என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார்.

இதன் வாயிலாக நடுவன் அரசு மொத்த நாட்டையும் உலக வங்கியிடமோ, IMF-இடமோ அடகு வைப்பதற்குச் சமம் என்று இதை எதிர்க்கும் சில வல்லுனர்கள் முன் வைக்கின்றனர். மேலும் இதை “உலக வங்கியிடம் சரணடையத் தேவையான கடைசி முயற்சி என்று இதன் மூன்று நேரடி நடவடிக்கைகளை பட்டியலிடுகின்றனர்.
1.           உலக வங்கியிடம் உள்ள நடப்பு கணக்கில் பெரிய பற்றாக்குறையை உருவாக்கியது(2003-04). இதை தனது செயல் திறனற்ற கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் சாத்தியப்படுத்தியது.
2.           இரண்டாவதாக இதைத் தொடர்ந்து உருவாக்கிய நிதிப் பற்றாக்குறை. திவாலாகும் நிலை வந்துவிடும் என்று தெரிந்தும் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு சரியான மாற்றுத் திட்டங்களையும் அறிவிக்காமல் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் எப்படி தன் திட்டங்களை செயல் படுத்த விரும்பியதோ அதே வழியில் தொடர்ந்தது.
3.           கடைசிப் படியாக உள்கட்டமைப்புக்காக பெரிய அளவில் கடன் வாங்கியும், அயல்நாட்டு நிறுவனங்களை PPP (அரசு-தனியார் கூட்டு) மூலம் அனுமதித்து, அதை மத்திய லஞ்ச ஒழிப்புக் கமிஷன் மற்றும் மத்திய தணிக்கை அலுவலகத்தின் அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்துவிடும் பணியை செய்துக் கொண்டிருக்கிறது, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து திரும்பப்பெறும் முதலீடு, IMF மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து பெறப் படும் கடன்கள் அந்நிய நிறுவனங்களிடம் சென்றுவிடும்.
(நாம் வாங்கிய கடனில், நல்ல லாபத்தில் தொழில் செய்து நம்மையும் கடனாளியாக்கிவிட்டு திரும்பவும் உலகவங்கியிடம் அடமானம் வைப்பது இதை உறுதியாக்கிவிடும்.) இதில் நிதியமைச்சர் சொன்ன பல லட்சம் கோடி முதலீடு என்பது மிகப்பெரிய கடன் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் தடையின்றி நிறைவேற்றிட உதவும் அமைப்பு தான் இந்த வாரியம் (NIB). இது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வேறு எந்த செயலகத்தின் தடையும் இருக்காது. இப்பொழுது மத்திய தணிக்கைக் குழு கொடுத்து வந்த இடர்களுக்காக, அதன் அமைப்பை மாற்றி அமைப்பது (பாம்பின் பல்லைப் பிடுங்குவதைப் போல), இனி கேள்வி கேட்பதற்கு யாருமற்ற நிலையைக் கொணர்ந்து விடும் என்பதும் உறுதி.

இறுதியாக இந்த வாரியம் அமைக்க நடுவன் அரசு சொல்லும் “வளர்ச்சி என்னும் சொல்லை சற்று ஆராய வேண்டும், நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக சொல்லும் காரணங்களில் மையமாக இருப்பது பொது மக்களின் நலன். பொது மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட இறுக்கமான கொள்கைகள் (tighten policies) யாவும் தேசிய வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது என்று குறை கூறினால், நம் நாட்டை எந்தத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பது அதிமுக்கியம்  என்று கேள்வியெழுப்புதல் இங்கே அவசியம்.
முதலில் சொன்ன குறளுக்கு விளக்கம்: நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும். (குறள் 740). வள்ளுவர் சொன்னது பொய்யா மொழியே!!

***********************************************************

இதை ஹிந்து, பிசினஸ் லைன், சி.என்.பி.சி போன்ற மீடியாக்கள் வரவேற்கின்றன, இன்னும் நமது ஹைவேஸ் தன் கூட்டாளார்களுக்கு(contractors) 9000ஆயிரம் கோடி இன்னும் பாக்கி வைத்துள்ளது, அதன் காரணமாக எத்தனையோ வளர்ச்சிப் பணிகளும், உள்கட்டமைப்புகளும் நிறைவேறாமல் இருக்கின்றன என்று முன் வைக்கும் பிரச்சனைகளையும் மறுக்க முடியாது.


#TAG
இதைப் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலாக - மான்புமிகு நிதியமைச்சர் ப.சிதம்பரம், “இது போன்ற ஒரு வாரியம் மட்டும் நம் நாட்டில் விரைவாக ஆரம்பிக்கப் பட்டால், நம் நாட்டில் முதலீடு செய்வதற்காக தேங்கியிருக்கும் சுமார் 1.45 லட்சம் கோடிகள் உடனே வெளிவந்துவிடும் என்று சொல்கிறார். (அந்த 1.76 லட்சம் கோடிகளைப் பற்றிய உண்மை எப்போது வெளிவரும்?)

- ஜீவ.கரிகாலன்

நன்றி: சுதேசிச் செய்தி

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பஜ்ஜி –சொஜ்ஜி -07




     தொடர்ந்து தம் அடித்துக் கொண்டிருப்பவர்கள் என்றாவது ஒரு நாள் திடிரென்று தனது புகைப் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் பொழுது இது தான் கடைசி சிகரெட் என்று சொல்லி கடைசிப் பஞ்சு வரை இழுத்து குடிப்பார்கள், அவர்கள் கண்டிப்பாக தன் பழக்கத்தை மறுபடியும் தொடர்வார்கள் என்று சொல்லலாம். அதுபோலத் தான் நானும், மறுபடியும் டயட் இருக்கவேண்டும் என்று சங்கல்பம் எடுக்கும் நாளில் எல்லாம் வெளுத்துக் கட்டிவிடுவேன். இன்றும் அப்படித் தான் கடைசியாக அடையார் ஆனந்த பவன் சென்று வேண்டுமென்பதை வாங்கி தின்னும் முடிவுடன் உள்ளே சென்றேன்

      ஏற்கனவே சில்லி பரோட்டா சாப்பிடும் பொழுது பல்லில் ஸ்டேப்லர் பின் மாட்டிக் கொண்ட சம்பவம் நடந்து ஆறு மாதம் தான் ஆகிறது, சில நாட்கள் முன்னர் சென்ட்ரல் ஸ்டேசன் சரவண பவன் பிரியாணி சாப்பிட்டு மனதைப் பறிகொடுத்ததால், முதலில் பிரியாணியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று பில்லிங் கியூவில் நிற்கும் பொழுது அலுவலகத்திற்கு பெர்மிஷன் போட்டு செல்லும் ரேசன் கடை கியூவாக கண் முன்னே வந்து நின்றது. ஞாயிறு மதியம் வந்து தினமும் நம் வீட்டில் கிடைக்கும் சாதாரண சவுத் இண்டியன் மீல்ஸை வாங்கி உண்ணும் குடும்ப நண்பர்களை பார்க்கும் பொழுது ஆச்சரியமும், கவலையும் ஒரு சேர வந்தது. 
ஆச்சரியம் அந்த அளவிற்கு ஒரு சாதாரண சாம்பார், ரசம் சாப்பிடக் கூட இத்தனை பணம் செலவழிக்க நாம் மாறிவிட்டோமா? சமையல் அந்த அளவு வெறுக்கும் கலையாக போய்விட்டதா? சோம்பல் பெருகி விட்டதா?; 
கவலை ஒருவேளை ருசிக்காகத்தான் வருகிறது இந்தக் கூட்டம் என்றால், நம் பாரம்பரிய சமையல் அந்த அளவு அருகிவிட்டதா?? 

     இதற்கிடையில் பில்லிங் கியூ, டெலிவரி கியூவெல்லாம் தாண்டி திரைப்படங்களில் வரும் ஜெயில் கைதி போல் அள்ளி வைத்த 85 ரூபாய் (உனக்கு இது வேணும்) பிரியாணியை வாயில் வைக்கும் கணம் என் முகம் மலர்ந்து(?) பிடித்த அபிநயங்களும், முத்ராக்களும் சொல்லின “என் அம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி இனி உன் சமையலில் இனி குறை சொல்ல மாட்டேன்” என்று சத்தியம் செய்வேன் . எதிர் டேபிளில் இதே முகத்துடன் என்னோடு சேர்ந்து கியூவில் சண்டை (*01) போட்டு தயிர் சாதம் வாங்கியவரின் முகம் அதே அஷ்ட கோணலுடன்..கவனியுங்கள் அது வெறும் தயிர் சாதம் தான்..

***************************************************************************
        தயிர் என்றவுடன் தான் ஞாபகம் வருகிறது, தயிர், பால் போன்ற நம் தினசரி உணவில் முக்கிய இடம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய பாக்கெட் பாலோ, தயிரோ தன் நிலை திரியாமலே கெட்டு விடுகிறது. இதை எல்லோரும் கவனித்திருக்கலாம், அதாவது பாலோ, தயிரோ கெட்டுவிட்டால் ஏற்படும் நிறமாற்றம்  வருவதில்லை, ஆனால் உட்கொள்ளும் போது தான் வித்தியாசம் தெரிகிறது. ஏன் இந்த நிலைஎன்று அலசிப் பார்க்கும் போது தான் சில விபரீதங்கள் தெரிய வருகிறது.
 
தீவிரமாக பதப்படுத்தும் செயல்முறைகளில் என்னென்ன ரசாயனக் கலப்படங்கள் நிகழ்கின்றன என்று ஒரு பட்டியல் எடுத்தேன் தலை சுற்றியது. செயற்கை முறையில் உருவாக்கிய பகுதிப்பொருட்கள் (components) இந்த வெண்ணை நீக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட பாலில் இருக்கின்றன அவை யாவும் ஒன்று பதப்படுத்தும் முறையிலோ அல்லது பசுக்களின் வழியாகவோ கலந்து இத்தகைய கொடிய உணவாக பாலை மாற்றிவிட்டன. ஆண்டிபயோடிக் மருந்து, அளவிற்கு அதிகமான இரத்த அணுக்கள் (சாதாரணமாக 1 லிட்டர் பாலில் 15 லட்சம் வெள்ளை அணுக்கள் வரை இருக்கும்), இரைப்பை-குடலுக்குரிய புரதக் கூறுகளில் இருக்கும் கலப்படம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட rBGH, மற்றும் பாலுடன் கலக்கும் சீழில் இருக்கும் அணுக்களின் அபிரிதமான எண்ணிக்கை. என்ன வியப்பாக இருக்கிறதா? அதிகமாக பால் கறப்பதற்காக மரபணு மாற்றம் செய்தும், விஷேச உணவு வகைகளும்(*02) உருவாக்கிய மாடுகளில் சுரக்கும் பாலில் இருக்கும் அதிகப்படியான சீழ் செல்களின் எண்ணிக்கை என உரைய வைக்கிறது அந்த பட்டியல்.

மாஸ்டிடிஸ் எனும் நோய் மாடுகளுக்கு வருகிறது, அதுவும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பால் மாடுகளின் உணவாலும், இயந்திரம் கொண்டு அதீதமாக கறப்பதாலும் அவற்றிற்கு நம்பமுடியாத அளவிற்கு அழற்சி நோய் இருக்கிறது. அதன் காம்புகள் சிவந்து, வீங்கி, சீழ் படியும் நிலை. அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலோடு கலந்து வரும் சீழ் தடை செய்யப் படவில்லை (நம் அரசின் guideline count எத்தனை என்று தெரியாது).அதிகப் பாலிற்காக மாடுகளைப் சித்ரவதைப்படுத்துவது, பசுவை உணவுக்காகக் கொல்வதைக் காட்டிலும் கொடியது!  இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் புற்று நோய் வரை இட்டுச் செல்லும் என்றால், வேறு நோய்களைப் பற்றிய பட்டியல் அவசியமே இல்லாதது.

நீங்களே யோசியுங்கள் நூறு நாட்கள் கெடாத பால் என்று விளம்பரப் படுத்துகிறார்களே!! நூறு நாட்கள் கெடாமல் இருப்பது பால் தான ஐயா!!?? “ நிறைய பால் குடி, தோனி மாதிரி வருவ என்று யாராவது சொன்னால் இனி நம்பாதீர்கள் (பாலும் சரி தோனியும் சரி), இனி வரும் தொடர்களில் பால், பசு மாடு பற்றி இன்னும் சொல்கிறேன்.

*********************************************************************

 இந்த லிங்கை சொடுக்கவும்
http://in.news.yahoo.com/three-iim-indore-students-expelled-consuming-drugs-hostel-183000586.html

ஒரு உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆண்டு தோறும் படிக்கும் சில நூறு மாணவர்களில்  இத்தகைய நடத்தையுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?? ஒரு மேலாண்மை உயர்கல்வி படிக்கும் ஒருவன் போதைக்கு அடிமையாகிறான் என்றால் உண்மையில் கல்வி என்பது என்ன?? அதுசரி ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்ய மதுக்கடை வைத்து பிழைப்பு செய்யும் அரசுகள் நம்மிடம் இருக்கையில் இதனால் என்ன பெரிய தீங்கு என்ன கேள்வி எழும்??


*01 இப்போதெல்லாம் நம் ஊர் ஹோட்டலில் கூட தமிழில் ஆர்டர் செய்ய முடிவதில்லை, அங்கெல்லாம் வட இந்தியர்கள் இருப்பதால் உணவு சரியில்லை, தாமதமாகிறது என்று என்ன சொன்னாலும் “பெப்பேஎன்று தலையாட்டி விட்டு செல்கிறார்கள்.
*02 கரவை மாடுகளுக்கு என்று விஷேசமாக கொடுக்கப் படும் தீவனம் கூட ஒரு பெரிய உணவுச் சங்கிலியை அறுக்கின்றது வெறும் பொருளாதார லாபங்களுக்காக


இன்னும் சூடாக, சுவையாக தருகிறேன் வாசிப்பவர்கள் யாரேனும் விமர்சனம் செய்யுங்கப்பா!!
ஜீவ.கரிகாலன்


வியாழன், 22 நவம்பர், 2012

பிதற்றல்கள் -3

வார்த்தை ஆதியிலே இருந்தது,
"ஆதி" வார்த்தையாய் இருக்கவில்லை.

சூட்சுமமான மொழி பிறந்தது
மொழிக்குள் சித்திரம் இருந்தது
சித்திரமே ஆதி மொழியாம் 

”இருந்தது” என்று சொன்ன காலம் 
இன்னமும் முடியவில்லை,
முடியவேண்டிய காலம் 
எப்போதோ தொடங்கிவிட்டது.

காலம் அலகிடவே வந்தது
வெறும் வார்த்தையாக,
வார்தைக்குள் அடங்கிய காலத்தில்
ஆதி என்பது மாயை

எல்லாமே மாயை
எல்லாமே கடவுள்
எல்லாமே காதல்
எல்லாமே வார்த்தை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தனிமையில் காதல் அப்படித்தான் 
நிரம்பி வழிந்தாலும் கூட
வெறுமையைப் பற்றியிருக்கும்

வெறும் தனிமையிலோ
வெறுமையை ஊற்றினாலும்
தனல் எரிந்துக் கொண்டிருக்கும்

தனல் - அது 
காதலின் ஆல்டர் ஈகோ

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  அது உயிருடன் தான் நடமாடுகிறது
  அதன் நடமாட்டம் தான் உயிராகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இது வெறும் வாழ்க்கை

 அது புயல் தான் - இன்று
 வெற்றிடம் தேடிக் கொண்டிருக்கிறது.
 அதுவும் தானாய் வருவதில்லை.

 அது இருந்தால் தான்
 இயக்கம்  உருவாகும்
 அதுவும் தீர்ந்திடத் தான்
 வெற்றிடம் உருவாகும்.

 ஒரே ஒரு இயக்கம் தான்
 முழுதாய் தீர்ந்திட வேண்டும்,
 இல்லாவிடில் -
 இயங்கிக் கொண்டே
 சாகக் கடவுக.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஜீவ.கரிகாலன்




செவ்வாய், 20 நவம்பர், 2012

பஜ்ஜி-சொஜ்ஜி-06 மூங்கில் சைக்கிள்


      உலகெங்கும் சத்தமே இல்லாமல் பிரபலாமாகிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றவுடன் ஐபோன்-05ஆ? புதிய ரக சொகுசுக்காரா ?அல்லது ஏதும் ரோபோவா? என்றெல்லாம் தானே யோசிக்கத் தோன்றுகிறது?, ஆனால் அதுவல்ல. இது மூங்கில் சைக்கிள் என்று சொல்லப்படும் BAMBIKE-ஐப் பற்றியது. உலகெங்குமே பல்வேறு இடங்களில் இந்த மூங்கில் சைக்கிளை வடிவமைக்கும் சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகின்றன(கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஃபிலடெல்பியாவில் இதற்கென பிரத்தியோக ஆய்வுக் கூடங்கள் இருகின்றன. நமது நாட்டிலும் பெங்களூரைச் சேர்ந்த விஜய் சர்மா எனும் உட்புற வடிவமைப்பாளர் (interior designer) தனது சொந்த முயற்சியில் இந்த BAMBIKE என்ற பெயர் வைத்துள்ள மூங்கில் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.

       தனது தந்தையுடன் சேர்ந்து கற்றுக்கொண்ட மர தச்சுவேலை தான் இதை உருவாக்குவதற்கு காரனம் என்று தன் தந்தையை நினைத்துப் பார்க்கிறார். தான் படித்துக் கொண்டிருந்தாலும் தன் தந்தையுடன் சேர்ந்து பார்க்கும் தொழில் தன் குடும்பத்திற்கு நிதி அளிப்பதுடன், தனக்கும் எதிற்காலத்தில் கைகொடுக்கும் என்று தன் குலத்தொழிலை நம்பியதாகவும் சொல்கிறார். இப்போது நம் நாடு மட்டுமின்றி, பல தேசங்களில் நடைபெற்று வரும் கண்காட்சியில் இவர் வடிவமைத்த சைக்கிளும் முக்கிய இடம் பிடித்து வருகிறது. தன் ஆர்வத்திற்கு ஏற்றார் போல் தன் கல்வி அமைந்ததும் இதை சாத்தியமாக்கியது என்றும் சொல்கிறார்.(அதன் விவரம் கீழே)

  மூங்கில் சைக்கிள் என்றால் என்ன ?  மூங்கில் சைக்கிள் என்பது ஒரு திட்டம், முழுவதுமாக அன்று, சைக்கிள் பாகங்களில் எவ்வளவு அதிகப்பட்சம் மாற்றக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்பையும் பயனபடுத்துவது தான். பொதுவாக, சைக்கிளின் தண்டு, கம்பிகள், கைப்பிடி, பின்னிருக்கை என எஃகு, அலுமினியம் போன்ற உலோகங்களுக்குப் பதிலாக இங்கே உறுதியான மூங்கில் உபயோகிக்கப் படுகிறது.

  ”மூங்கில் சைக்கிள்- மிகவும் உறுதியானது அதை கம்பிகளுக்கு இணையான உறுதி என்றும், அதிர்வுகளைத் தாங்குவதில் அது உலோகங்களைக் காட்டிலும் அதிகப் பயனுள்ளது என்றும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அதன் தோற்றமும் கவர்ச்சியுடன் இருப்பதோடு, இது ஒரு கைவினைப் பொருளாக  இருக்கும் என்பதால் இதை ஓட்டும் பொழுது நமக்கு ஒரு பெருமை இருக்கும் என்றும் கூறுகிறார் சர்மா. நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் மூங்கில் வீடுகளிலே குடியிருப்பதைச் சுட்டிக் காட்டுவது இதன் உறுதித் தன்மைக்கு மற்றுமொரு ஆவனம்.

இந்த சைக்கிள் தற்பொழுது அறிவியல் பூர்வமாக BSA சைக்கிள்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இதன் வடிவமைப்பிற்கு ஜப்பானின் தொழிற்துறை அளவீடுகளில் தேர்ச்சி பெற்று சாலைகளில் ஓடுவதற்கான அனைத்து துகுதியையும் பெற்றுவிட்டன. ஆனால் இதைப் பெருவாரியான வணிக உற்பத்திக்காக தயாரிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன அதாவது இதற்கு மூலப் பொருளான மூங்கில் ஒரே மாதிரியானத் தரத்தில், வடிவத்தில், உறுதியில் கிடைக்க வேண்டும். அதே சமயம் இயற்கையின் வாழ்க்கை சக்கரத்தில்(life cycle) காடுகளில் இருக்கும் மூங்கிலுக்கு மிகப் பெரிய அளவில் வனத்தை பாதுகாப்பதிலும், உணவுச் சங்கிலியில் இடம் பெறுவதிலும் பங்கு இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

     ஆனால் இன்று இருக்கும் நவீன ரக சைக்கிளின் சிறப்பம்சங்களோடு ஒப்பிட்டால் இதன் செயல்திறன் குறைவாக இருக்கும் என்று கருதினால், இந்த மூங்கில் சைக்கிளிற்கு இருக்கும் வரவேற்பை மேற்கத்திய நாகுகளில் பார்க்க வேண்டும். இந்த சைக்கிளை ஓட்டுவதை அவர்கள் பெருமையாகவும், சிறப்பாகவும் நம்புவதை உணரலாம். ஆனால் இதை எல்லோரும் பயன்படுத்தும் அளவிற்கு விலை குறைந்ததாக மாற்றினாலே இதன் சந்தை விரிவடையும். ஆப்பிரிக்காவில் இது போல சைக்கிளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தன்னார்வத்துடன் பலர் இதை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல். மேலும் ஆப்பிரிகாவில், இந்த மூங்கில் சைக்கிள் தனியாக உழைப்பை மையப்படுத்தி (labour intensive) ஒரு சிறு தொழிலுக்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

     ஆனால் இந்தக் கட்டுரையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது என் நன்பர் சொன்னார், “அது என்ன இகோ ஃபிரெண்ட்லி(eco-friendly) சைக்கிள்?  முதலில் நாமெல்லாம் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தாலே எது இகோ ஃபிரெண்ட்லி தானே!! என்றார், மறுக்கமுடியவில்லை. நமக்கு சைக்கிள் ஓட்டும் பழக்கம் நாளடைவில் வெகு வேகமாக குறைந்து வருகிறது என்பது நோரு சமயம் உன்மையே, இன்று சரியான சாலை வசதி இல்லாத கிராமங்களில் கூட இதே நிலைமை தான். ஆக, நமக்குத் தேவையான மாற்றம் மிகப்பெரியது.

   சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் அரசு ஏற்றும் போது நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் நிலை எப்படி இருந்தது தெரியுமா? அலுவலகம், டீக்கடை, சலூன்,பேருந்து நிறுத்தம், பெட்ரோல் பங்க், கோயில்கள், ஏன் வாகன நெரிசலில் ஊர்ந்து கொண்டிருக்கும் போதும் மக்களிடம் ஒரு ஆவேச அலை இருந்தது, பேச்சில் ஒரு கொந்தளிப்பும், மனவுளைச்சலும் இருந்தது. “மக்கள் விரோத அரசு”, “துரோகம் செய்த அரசு, “நாட்டில் புரட்சி உருவாக வேண்டும்,  என்றெல்லாம் எங்கு காணினும் பேச்சு இருந்தது. சிலர் தங்கள் வாகனங்களுக்கு தற்காலிக விடுமுறை கொடுத்து விட்டு பொது வாகனங்களில், பேருந்தில், ரயிலில் சென்று வர ஆரம்பித்தனர்.

     எல்லா கொந்தளிப்பும், ஆவேசமும் எங்கே போனது என்றே தெரியவில்லை, எல்லாம் பழகி விட்டது அதற்கு பின் டீசல் விலை, சிறிய அளவில் பெட்ரோல் விலை என்றெல்லாம் பார்த்தாகிவிட்டது, இதன் விளைவாக சாதாரன நடமாடும் வண்டிகளில் இருக்கும் கையேந்தி பவன் முதல் சரவண பவன் வரை விலையேற்றம் வந்தது, டீக்கடை முதல் ஷேர் ஆட்டோ வரை எல்லாமே ஏறிவிட்டது, அதே சமயம் எல்லாவற்றையும் நாம் பழகிவிட்டோம். நமது நாட்டில் மிகப் பெரிய பலமே நம் மக்களின் சகிப்புத் தன்மை தான்.

       ஆனால் நம் சகிப்புத் தன்மையை அப்படி உடனே மெச்சிவிட முடியாது, அடுத்த தெருவில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு கூட இருசக்கர வாகனம் என்று நம் பழக்கத்தை ஏதாவது மாற்றியிருக்கிறோமா என்றால் இல்லை. இதில் பண விரயம், உடல் நலக் கேடு, சோம்பேறித் தனம், சுற்றுச் சூழல் கேடு, பொருளாதார சீர்கேடு (எந்த ஒரு ஆற்றலையும் வீனாகப் பயன்படுத்துவது பொருளாதரத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும்). நமது அரசின் செயல்பாட்டை விமர்சிக்கும் போது மட்டும் நான் எத்தனை நாட்டு அரசுகளோடு விமர்சிக்கிறோம்? அதுபோல நம்மையும் அது போல சில அயல்தேசத்து மக்களோடு ஒப்பிடலாமா?

         ஜப்பான், சீனா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி என்ற எல்லா நாடுகளிலும் இன்று சைக்கிள் தான் ஒரு பிரதானமான வாகனமாக இருந்து வருகிறது, ஆனால் நம் நகரங்களிலோ தொடர்ந்து சைக்கிள் உலாவும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகில் உள்ள பெரிய நகரங்களில் எல்லாம் சைக்கிள்களை பகிர்ந்து கொள்ளும் திட்டம் அமுல் படுத்தியாகிவிட்டது, இதன்படி சைக்கிளை ஓட்டுவதற்கு முன்பணம் செலுத்தி நீங்கள் பதிவு செய்துவிட்டு, ஒரு சிறுதொகையை வைப்பு நிதியாக கொடுத்துவிட்டு நகரமெங்கும் பல இடங்களில் இருக்கும் சைக்கிள் காப்பகத்தில் எங்கு வேண்டுமானலும் எடுத்துக் கொண்டு, நம் உபயோகித்த பின்பு வேறு எந்த நிலையத்திலாவது விட்டு விடலாம். சீனாவின் மிகப்பெரிய தொழில் நகரங்களுள் ஒன்றான ஹாங்ஜோவில் கிட்டதட்ட 2050 சைக்கிள் நிலையங்கள் உள்ளன, இத்திட்டம் வாசிங்டன், லண்டன், மெல்போர்ன், மெக்சிகோ போன்ற எல்லாநாட்டின் நகரங்களில் பெரிதும் வரவேற்க்கப் பட்டு அமுல் படுத்தப் பட்டுள்ளன, மும்பையில் கூட வெறும் இரண்டு நிலையங்கள் வைத்து, அதன் மூலம் இந்த பட்டியலிலும் நம் நாடு இடம்பெறுகிறது. நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில் சராசரி இயந்திர வாகனத்தின் பயனத்தை விட, சைக்கிள் பயணமே அதிகம் செய்யப்படுகிறது என்பது ஐரோப்பிய கலாச்சாரம் கூட எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை உணரலாம்.

           ஒவ்வொரு தேசமும் சைக்கிளை உபயோகப் படுத்துவதற்கான காரணம் என்ன்வென்று பார்த்தால் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது, சீனாவில் மற்ற வாகனங்களை நிறுத்திவதற்கு நகரங்களில் இடமில்லை அதாவது இடநெரிசல், ஜப்பானில் உள்ள மக்களுக்கு எப்பொழுதும் சேமிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது, இதில் நிறையவே சேமிக்கிறார்கள், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இயற்கையைப் பாதுகாக்க வாகனங்களைத் தவிர்த்துவிட்டு சைக்கிளை உபயோகிக்க அறிவுறுத்தப் படுகின்றனர் பொது மக்கள். பொதுவாக எல்லா நாட்டிலும் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஓட்டும் சைக்கிளால் நம் உடலில் குறையும் கலோரிகளின் எண்ணிக்கை தான் எல்லொருக்குமே பெரிதும் ஈர்க்கும் விஷயம், அதுவும் நம் நாடு என்றால் எல்லா காரணங்களுமே அவசியம் தான்.

      மூங்கில் சைக்கிள் விலை அதிகமாக இருக்கிறது என்று சொல்லும் மக்கள் தம் ஒரு வருட இருசக்கர வாகனத்தின் செலவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் இது போன்ற பழக்கத்தை மக்களாகவே ஏற்றுக் கொண்டு, விலை குறைந்த, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, உறுதியான மூங்கில் சைக்கிளில் நகரத்தில் வலம் வந்து நம் பணத்தையும் மிச்சப் படுத்தி, உடல் நலத்தையும் பேணலாம். எந்த தேசத்தின் கனவிற்கும் முதலில் காலடி எடுத்து வைத்து மாற்றத்தை முதலில் கொண்டு வரும் பங்கு வெகுஜனத்தைச் சார்ந்ததே.
**************
        இதன் வடிவமைப்பாளர் படித்த Centre for Environmental Planning and Technology, அஹமதபாதில் இயங்கி வரும் இந்த பல்கலைகழகம் கட்டுமானத் துறையில் பல்வேறு பிரிவுகளிலும், கிராம மேம்பாடு, நகர மேம்பாடு என்று பல்வேறு புதிய பாடத் திட்டங்களைக் கொண்டுள்ளது, இன்றைய உலகில் தமது பாதையை மிகவும் குறிப்பிட்ட தளத்தில் இயக்கி வெற்றி காண விரும்பும் இளைஞர்கள் இந்த பல்கலைகழகம் வழங்கும் படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு : http://www.cept.ac.in/.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளிமண்டலத்தில் ஊடுருவும் புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தும் சுற்றுச்சூழல் காவலனாக மூங்கில் காடுகள் விளங்குகின்றன. மூங்கில் காடுகளின் பாதுகாப்பு நம் நாட்டிற்கு மிக முக்கியம்.

 எப்படியோ என் உடம்பு குறைய சைக்கிள் வாங்கலாம் என்று முடிவு பண்ணும் போது, ஒரு கட்டுரை எழுதியாகி விட்டது


பஜ்ஜி-சொஜ்ஜிஇன்னும் சுவையுடன் அடுத்த வாரம்ஜீவ.கரிகாலன்

(நன்றி:சுதேசி செய்தி)

சனி, 10 நவம்பர், 2012

இருத்தலின் முரண்


.

 வாழ்தலின் நிறைவு மரணம்
 விழித்தல் கூட ஒரு தூக்கம்
 கவிதை யாவும் ஒரு நகர்தல்
 பயணம் என்பது ஒரு நிறுத்தம்.
 தேடல் தான் சுவாரஸ்யம்
 வெற்றி என்பது மயக்கம்
 தோல்விகள் யாவும் வெற்றி
 அணு தான் பிரபஞ்சம்
 வெளி யாவுமே ஒரு மூச்சு 
 காமம் தான் இங்கே  பள்ளம்
 காதல் அதன் ஏணி
 கடவுள் என்பது அதன் பிம்பம்

  மௌனம் என்பதும் வார்த்தை
  உயிர்வாழ்தல் ஒருஅவஸ்தை
  அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
  இரைந்துகிடக்கும் நிம்மதி
  உயிர்ப்பான மரணமே வாழ்தல்

(பஜ்ஜி-சொஜ்ஜி-5) சிவகாசி தீபாவளிப் பட்டாசு



இப்போதெல்லாம் தீபாவளியைக் கொண்டாடுவதில் பழைய நாட்டம் இருப்பதில்லை, சென்ற வருடம் வரை தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்கும்,  திரும்பி வருவதற்கும் டிக்கெட் எடுப்பதே பிரம்ம பிரயர்த்தனம். இதில் கூடுதல் லீவு, அலுவலகத்தின் வேலைகளை சரி கட்டுதல், பற்றாக்குறை போனஸ் போன்ற விஷயங்களையும் சகித்துக் கொண்டு ஊருக்குச் சென்று இங்கே பார்க்கும் அதே பட்டிமன்றம், சிறப்பு படம் பார்த்து அலுத்து போய் திரும்பி வருகிறோம், தீபாவளி மீதே ஒரு எரிச்சல் வந்து விடுகிறது.

என் பள்ளிக் காலங்களில் எல்லாம் தீபாவளி என்பது ஒரு வருடத்திற்கான கொண்டாட்டத்தின் கனவு, பொங்கல், தேர் திருவிழா, கார்த்திகை தீபம் என எல்லாவற்றையும் தாண்டி தீபாவளி மேல் ஒரு மோகம் இருந்தது. என் நண்பர்கள் சிலர் வீட்டில் அன்று தான் காலை டிஃபனாக இட்லி/தோசை கிடைக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் (அது வறுமை என்று சொல்லிட முடியாது, அவர்களின் உழைப்பிற்கு என்றுமே சோறு தான் உகந்ததாகக் கருதுவதால், இட்லி,தோசை,பூரி போன்றவை மற்ற நாட்களில் செய்வது கிடையாது).

ஆடி மாசமே துனி எடுத்து தைப்பவர்கள் தான் புத்திசாலிகள், எங்களைப் போன்று போனஸ் வந்து தான் துனி எடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய தடை ஒன்று இருக்கும், அது டைலர் எனும் திடீர்க் கடவுளின் அனுக்கிரஹத்தைப் பொருத்தது. அவசரகதியாய் அவரை பின் தொடர்ந்து நச்சரித்து வந்தால், பேண்ட் ஜிப்பை உள்ளே வைத்து தைத்துக் கொடுத்துவிடுவார்,  “அண்ணே! அண்ணே!” என்று கெஞ்சிக் கூத்தாடி வாங்க வேண்டும், என் வாழ்க்கையில் இப்படிப் பட்ட அலைக்கழித்தலில் இரண்டுமூன்று தீபாவளிகள் கொடுமையாய் சென்று விட்டன. 

ஒரு தீபாவளியன்று, நாங்கள் எடுத்திருந்த எம்.ஜி.ஆர் பேண்ட் சர்ட்(சிவப்பு மேல் சட்டை,கருப்பு கால் சட்டை) துனி தீபாவளி காலை அன்று தான் தருகிறேன் என்று குடுத்த வாக்குறுதியை அந்த டைலர் நிறைவேற்ற வில்லை. எங்கள் வீட்டில் எல்லாம் புதுத் துனியுடுத்திய பின்பு தான் பட்டாசு வெடிக்கனும் என்று அம்மா சொல்வார்கள்.ஆனால் அன்று காலை டைலர் கடைக்கு சென்ற பின்,  அவர் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வாஎன்றபடி சொல்லிக் கொண்டே இருந்தார். என் அம்மா கூட  “இந்த தடவை நீ பட்டாசு வெடிச்சுக்க அப்புறமா புதுத்துனியுடித்துக்கலாம்என்று சமாதானம் சொன்னாலும் நான் கேட்கவில்லை, கண்ணீர் தாரை தாரையாக வடிந்துக் கொண்டிருந்தது. ஒரு இருபது, இருபத்தைந்து முறை டைலர் கடைக்கு சென்றிருப்பேன், அன்று கிடைக்கவில்லை. வேறு வழியின்றி என் தம்பியுடன் சென்று அன்றிரவு பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டோம். டைலரை மன்னித்தாகிவிட்டது, துனியும் அடுத்த நாள் தான் வந்தது. யாருமே புதுத் துனி அணியாத கார்த்திகை தீபத்தில் நாம் அணியலாம் என்று சமாளித்துக் கொண்டேன். ஆனால் அந்த அனுபவமே பிற்பாடு என் வாழ்க்கையில் கடன் கேட்டு நிற்க வேண்டிய சூழல்களில் எல்லாம் பொறுமையைத் தந்தது. அவர்கள் என்னைக் காத்திருக்கும் வேளையிலெல்லாம் நான் ’அண்ணா டைலரை’ தான் ஞாபகப் படுத்திக் கொள்வேன்.

தீபாவளி வருகிறது என்றால் ஒரு மாதம் முன்பே அதன் கொண்டாட்டம் எங்களுக்குள் ஆரம்பித்துவிடும், நம் அண்டை வீட்டில் யாராவது துப்பாக்கி வாங்க மாட்டார்களா என்று எதிர்பார்ப்போம், அப்படி வாங்கி விட்டால் தானே நம்மாலும் அடம் பிடிக்க முடியும். நம் வாலிப வயதில் கொண்டாட்டங்கள் வேறு மாதிரியாக இருக்கும்,வெடியைக் கையில் தூக்கிப் போடுவது, பற்ற வைத்துவிட்டு மெதுவாக நடந்து வருவது, புதுத் துனியுடுத்தியதை அவளுக்கு காண்பிக்க கிறுக்குத் தனம் செய்வது, அவளின் புத்தாடையை நண்பர்களுக்கு வர்ணிப்பது என்று பட்டியல் நீளும், இதில் சினிமா ரசிகனாக மாறிவிட்டால் அது வேறு மாதிரியான கொண்டாட்டத்திற்கு இட்டுச் செல்லும். ஆனால், இங்கே நகரத்தில் இவையெல்லாம் இருந்தும் இல்லாமல் போனது போல் இருக்கிறது, தியேட்டரையும்,டீவியையும் தாண்டிய கொண்டாட்டங்கள் எதுவுமே தென்படவில்லை, ஒவ்வொரு வீட்டிலும் வான வேடிக்கை நிகழ்கிறது, நாலாயிரம்ஐந்தாயிரம் என பட்டாசிற்கு செலவு செய்கின்றனர். ஆனால் அதற்கு நிகரான மகிழ்ச்சியைத் தருகிறதா என்ன?? 

சில தீபாவளிகளில் நிறையப் பட்டாசு வகைகள் இருக்கும், அண்டை வீட்டினரோடு, நண்பர்களோடு சேர்ந்து தான் வெடித்திருக்கிறோம், இன்று சில அபார்ட்மெண்டில் அப்படிப் பட்ட மனப்பாங்கு இருப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. ஆனால் சிவகாசி வெடி விபத்து போன்ற காரணங்களை முன் வைத்து தீபாவளியைத் தவிர்ப்போம் என்ற கூச்சல்களையும் கேட்டுக் கொண்டு தான் சகித்திட முடிவதில்லை. பட்டாசு வெடிக்கும் பழக்கம் இன்று தீபாவளிக்கு மட்டுமில்லை, எல்லாப் பண்டிகைகளுக்கும், விழாக்களுக்கும் , கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்துகிறோம்

சிவகாசிகோவிபட்டி போன்ற கந்தக பூமியில் இது போன்ற பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ஒன்றும் அரசால் உருவாக்கப் படவில்லை, விவசாயம், பிற தொழில்கள் என்று எதுவுமே நிலையாக இல்லாத இந்த மண்ணில், பட்டாசுத் தொழில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளை வைத்து உருவானது தான். அந்த மண்ணில் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாகப் பிறந்த மக்கள் அந்தத் தொழிலைப் பிடித்துக் கொண்டனர், இது கந்தக பூமி வேறு. அவ்வூர் மக்களாலேயே திறந்து வைக்கப் பட்ட சந்தையாக, சிறு முதலீட்டில் ஆயிரக் கணக்கில் தொழிற்சாலைகளைத் தொடங்கினர், அங்கே ( நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்) தொழிலாளர்களுக்கு இணையான உழைப்பை முதல் போட்டவனும் செய்து வந்தான். அந்த மண்ணில் வறுமைக்கு இதுவே மிகப் பெரிய தீர்வாக பல ஊர்களில் மக்களைப் புலம் பெயராமல் காத்தது. ஒரு பெரிய சமூக முதலீட்டில் (social capital) தான் சிவகாசி, கோவில்பட்டி போன்ற கிராமங்கள் இன்று தலை நிமிர்ந்து இந்திய வரை படத்தில் தங்கள் பெயரையும் காட்டிக்கொண்டன. அரசு செய்ததெல்லாம் வரிவிதிப்பு மட்டுமே.

இப்படி ஒரு வறண்ட பிரதேசத்தில், அந்த மண்ணின் மைந்தர்களாளே உருவாகிய ஒரு தொழில், ஒரு உழைப்பைச் சார்ந்து (labour intensive), தங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை (infrastrucure)உருவாக்கிய, மேலும் கல்வி நிறுவனங்கள் பலவற்றை அன்று கொடையளித்த தொழில் (நாடார் சமூக கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு ஒரு அரசின் செயல்பாட்டைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது) என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. சிவகாசி மட்டுமல்ல, கரூர், திருப்பூர் போன்ற எந்த தொழில் நகரமும் நம் நாட்டில் அரசால் உருவாக்கப் படவில்லை, இந்த SEZ, SIPCOT போன்ற மண்டலங்கள் எல்லாம் சமூகமே தனக்காக உருவாக்கியவை தான்.

இப்படியெல்லாம் தொடங்கிய போதிலும், அதன் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணம் தான் பிரச்சினைக்குரியது. அடுத்த தலைமுறை முதலாளிகளாக தங்கள் தொழிலை நகர்த்திய போது அவர்களுக்குச் சமூகம் மீது இருந்த அக்கறை இருக்கவில்லை, இங்கு தான் அரசு தன்னை நுழைத்திருக்க வேண்டும். ஒரு பொருளாதார மண்டலம் உருவாகுவதை மட்டும் ஒரு அரசு உணர்ந்தால் அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வேலையில் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். இங்கே முதலாளிகளுக்கும், உழைப்பவர்களுக்கும் இடைவேளை வந்து விடுகிறது, அது பெரிதாகிக் கொண்டும் இருக்கிறது. அரசு தன் கடமைகளை வெறும் ஒரு சம்பிரதாயமாகவே கையாண்டிருக்கும் குட்டி சிங்கப்பூர் என்று சொல்லப் பட்டாலும், சில சொகுசு பீ.எம்.டபுல்-யூ கார்களுக்குப் பின் இருப்பதெல்லாம் வறுமையின் கால் தடங்கள் தான்.

எனக்குத் தெரிந்து ஒரு எட்டாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெரும் விபத்தில் சுதாரித்திருந்தால் கூட இன்று ஒரு பெரிய விபத்து நிகழ்ந்திருக்காது. இப்படி மறுபடியும், மறுபடியும் பொய்ச் செய்தியை பத்திரிக்கைகளுக்கு சொல்லும் அவசியம் இருக்காது. எனக்குத் தெரிந்த ஒரு உள்ளூர் வாசியின் மூலம் நான் கேட்டிருந்த உயிரிழப்போடு, ஊடகங்களில் வந்த பட்டியல் மிகச் சொற்பம் தான். ஒரு வாரம் கழித்து மருத்துவமனையில் பிரிந்த உயிருக்கு இழப்பீடு கிடைக்காது போயிருந்தால்?? நீங்கள் பார்த்திருக்கீர்களா பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் Staff busஇல் செல்வதை? கைகளில் கொரியன் மொபைலில் பாட்டுக் கொண்டே பயணிக்கின்றனர். அவர்கள் வாழ்வு இன்னும் அதே ஆபத்தில் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. அதை விடப் பெரிய ஆபத்தும் வரப் போகின்றன.

சீனா பட்டாசுகள் சந்தைக்கு வந்துவிட்டன, சில தனியார் ஜாம்பவான்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டு வைத்து தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டன, நம் நாட்டின் 800 கோடி ரூபாய் சந்தை இன்னும் சில நாட்களில் சிலர் கைகளுக்குச் சென்று விடும். அது போலவே சீனப் பட்டாசுகளின் மோகம் நம் பண விரயத்தின் அளவை நீட்டிக்கலாம். இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அந்தத் தொழிலாளர்களின் நிலை எப்படியிருக்கும் ? இந்தத் தொழில் வளரத் தொடங்கியக் காலக் கட்டத்திலோ அல்லது 1990-91 போன்ற கட்டத்திலோ எந்த ஒரு தேவையான செயல்பாட்டையும் செய்யாத அரசைத் தான் சொல்ல வேண்டும்.

மற்றபடி உங்கள் தீபாவளியில் புதிதாக வாங்கியிருக்கும் எல்.சீ.டீ டீவியில், குளோப் ஜாமூனைக் கடித்துக் கொண்டு எந்த நிகழ்ச்சியைப் பார்த்துச் சந்தோசமடைந்தாலும் எனக்கும் மகிழ்ச்சியே!! என் அம்மா இன்று கத்திரிக்காயில் பஜ்ஜி போடலாமா என்று முயற்சிக்கிறார் நான் பீ.டீ கத்திரிக்காய் பற்றி அடுத்த தொடரில் சொல்கிறேன், வரட்டுமா!!

பஜ்ஜி -சொஜ்ஜி இன்னமும்
ஜீவ.கரிகாலன்



வியாழன், 8 நவம்பர், 2012

கவிஞர் வேல்கண்ணனின் “பச்சையம்”


பச்சையம்

(உயிரெழுத்து - நவம்பர் இதழில் வந்த வேல்கண்ணனின் கவிதை ஏற்படுத்திய தாக்கம் குறித்து என் பதிவு)

வலி தரும் என்றூ வாசிக்கின்ற எல்லாக் கவிகளுமே வலியைத் தருவதில்லை, கவிதையில் வரும் வலி, ரணம் என்ற சொற்களெல்லாம் வலியை காட்சிப் படுத்த விரும்பியவையே, அதனால் உணர்த்த முடிவதில்லை என்பது என் எண்ணம்!! நம் வாழ்கையில் நடந்த துயரங்களை கவிதையாய் சொல்லும் போது கூட  பெரும்பாலும் அது செய்தியாகத் தான் இருக்கிறது. ஏன் இதைச் சொல்கிறேன் என்று தெரியவில்லை. வலியை அறிவுக்கு உணரச்செய்வதற்கும் வலியை கடத்துவதற்குமான ஆழ்ந்த வித்தியாசத்தை இன்று நான் உணர்கிறேன்


பச்சையம் 

அவனின் மருத்துவப் பரிசோதனையின் 

முடிவிற்கு காத்திருந்தது 
இந்த ஆற்றங்கரையோர 
மரத்தனடியில் தான் 
முடிவில் மரம் அதிர்ந்தது 

அவனின் தொடர் சிகிச்சையில்  
இளைப்பாறலும் 
வலி குறைந்த நேரங்களிலும் 
இங்கே தான் நின்றிருப்போம் 
மொத்தப் பிணியையும்  
இம்மரமே உறிஞ்சிக்கொள்வதை 
போல  சாய்ந்தே நின்றிருப்பான் 

அவனின் 
அறுவை சிகிச்சையின் 
போது நின்றிருந்தேன் 
தனியாக தளிர்களையும் கிள்ளாமல்

அவனின்
சாம்பலை ஆற்றில் கரைக்கும்
இந்த கணம்
மரம் பச்சையத்தை கவிழ்க்கிறது



கவிஞர் வேல்கண்ணன்
ஒவ்வொரு விடியலிலும் தொடங்கும் ”நம் அஸ்தமனத்திற்கான பதில் இன்றுதானா ?”  என்ற மறைந்திருக்கும் கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாத புதிர் தான் , (அதில் சிலருக்கு ”ஆம்” என்ற பதில் வெகு சீக்கிரம் வந்துவிடுகிறது).உலகில் உள்ள யாவரும் தன் வாழ்நாளில் மரணத்தின் கால்களுக்கு மண்டியிட்டு தானே பணிய வேண்டும் என்றுணர்ந்தால் ”தான்” எனும் கர்வம் அழிந்துவிடும். 


      நம் மனவோட்டத்தோடு மரங்களும், காற்றுமாகிய இயற்கை உரையாடும் திறன் பெற்றது தான் என்று நாம் எப்போதாவது உணர்ந்திருப்போம். இந்தக் கவிதையில் இதைப் போன்று தான் மரணம் குறித்து எதிர்பார்க்கப்பட்ட ஒரு தகவலால் அந்தக் குடும்பம் உறைந்து போகும் நிலையினை ஒரு மரம் மீது ஏற்றப்பட்டு நின்றுக் கொண்டிருக்கிறது, அந்த மரத்தின் வாயிலாக சோகமும், வேதனையும் நமக்கு பரிமாறப் படுகிறது.

நம் வாழ்வில் என்றோ பாதித்த மரணத்தின் நிழல் எல்லாம் கண்முன்னே வந்து போகிறது. இந்த transformation தானாகவே நிகழ்கிறது. காரணம் கவிதையின் மையம் உறவின் மரணத்தைப் பற்றுக் கொண்டதால் தான். மரம், பச்சையம்,இலை,காலம் என எல்லாமே உலகிற்காக மறைந்துவிட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது... 

//அவனின் 
  அறுவை சிகிச்சையின் போது 
  நின்றிருந்தேன் தனியாக 
  தளிர்களையும் கிள்ளாமல்//  நோய்மையை எதிர்கொள்வதற்கு நிகரானது அதனை தன் தோள்களில் தாங்கிக் கொள்வது, எந்த தளிரையும் கிள்ள முடியாத அளவு தன் தவிப்பை எழுதும் நிலை தான் கவிதையிலேயேபாரம் மிக்கது.


அண்ணனின் பிணியைத் தாங்கி நின்ற மரம், உண்மையில் அவர் பிரிவுக்குப் பின்பு அந்த மரத்தினை அவர் தழுவியிருப்பதாய்க் காட்டுகிறது. வேல்கண்ணனின் இந்தக் கவிதை மிக முக்கியமானதாக பலரால் கவனிக்கப் படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்தக் கவிதை மூலம் அவரது தொகுப்பை வெகு சீக்கிரம் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று பதிவு செய்கிறேன். அவர் அண்ணனின் ஆசிர்வாதம் அதை  நல்லபடியாக சாதித்துக்காட்டும்.


நன்றி.

(பிழை இருப்பின் மன்னிக்க)