1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி |
இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச் சக்திவாய்ந்த ஊடகமாகவே நமது நாட்டின் அரசியலில் அங்கம் வகிப்பதால் இது அரசியல் பேசும் கட்டுரையாய் உங்களுக்குத் தெரியலாம். திரைப்படங்களின் மூலம் அரசியல் வளர்ந்த மாநிலம் என்று நம் மாநிலத்தினையும், ஆந்திராவையும் முதன்மையாகச் சொல்லலாம் , அமைச்சர்களை உருவாக்குவதிலிருந்து, கலாச்சார மாற்றம், பழக்கவழக்கங்களின் மாற்றம், நுகர்வுப் பண்புகளின் மாற்றம் என திரைப்படங்களின் தாக்கம் மிக இருக்கிறதென்பதை யாரும் மறுக்க இயலாது.
1911 புரட்சி :- உலகிலேயே மிகப் பிரபலமான கமர்சியல் ஹீரோக்களில் ஒருவரான "ஜாக்கி சானின் " 100வது படம். 25 படம், 50 படங்களுக்கே மகா பந்தா காட்டும் நாயகர்களுக்கு மத்தியில் தனது நூறாவது படத்தினை தன இனத்தின் பெருமையை , அவர்களின் வரலாற்றைக் காட்டும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் ஜாக்கிக்கு ஒரு பெரிய மலர்கொத்து.
Oneline
படம் 1911 -இல் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது, கியுங்(Qing Dynasty ) அரசாட்சிக்கெதிராய்ப் போராடும் ஒரு புரட்சி பற்றிய வரலாற்றுக் கதை இது.
கதை
1911 புரட்சி என்பது (Xinhai புரட்சி) சீனாவில் நடந்த ஒரு உள்நாட்டுப் போர், Huang Xing (ஜாக்கி) தளபதியாகவும் , Sun Yat-sen தலைவராகவும் உருவாக்கியப் புரட்சி படை கொண்டு சீனாவை குடியரசாக்கும் வரலாற்றுப் பதிவு தான்.
எனது பார்வை
படம் தொடங்கும் போதே ஒரு பெண்மணி சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மரணதண்டனை வழங்கும் காட்சி.இவ்வினத்தின் சுதந்திரத்திற்கு சிந்தப்படும் முதல் துளி இரத்தம் எனது என்று, கடைசி மூச்சை சுவாசிக்கும் போதே நம் மனம் ஈர்த்துவிடுகிறது.
நம் தற்போதைய சூழலில் இப்படம் பார்க்கும் போது வரும் உணர்வுகள் யாவற்றையும் பார்க்கும் பொது தமிழனாய் இருப்போர் ஈழ விடுதலை பற்றி ஒரு கணமாவது சிந்திப்பீர்கள். இந்தியன் என்று சொல்வோர் கூட கஷ்மீர் முசுலீம்களையோ, மத்திய - கிழக்குப் பிரதேச நக்சல்,மாவோயிஸ்ட் , மலைவாழ் அல்லது பழங்குடிகளையோ எண்ணுவர். அப்படி எண்ணாதோர் காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டனாக இருக்கக் கடவுக.
Sun Yat-sen மேலை நாடுகளுக்குச் சென்று தமது நாட்டில் நடைபெறும் அரசின் மக்கள் விரோத போக்கை சுட்டிக் காடும் வேலையைச் செய்வார் ( ஆண்டன் பாலசிங்கம்). புரட்சியை நடத்தும் வேலை அவர் நண்பரான ஜாக்கிக்கு கொடுக்கப் படும் (தலைவர்).கியுங்(Qing Dynasty ) ராணியோ உள்நாட்டுப்போர், ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டைப் பற்றிக் கவலைப் படாது (தனக்குத் தான் மெஜாரிட்டி என்கிற நினைப்பு) தன இஷ்டப்படி முடிவுகளை எடுக்கிறாள். ஆனால் அவளின் படைத் தலைவனோ அரசிடம் இருந்து புரட்சியாளர்களை துரத்துகிறேன் என்று அரசிடமிருந்து மிக அதிகமாக பணம் பிடுங்குகிறான். நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது, கடன் சுமை பெருகி வருகிறது, ஆக உள்நாட்டுக் கலவரத்தைக் கட்டுப் படுத்த தனக்கு இன்னமும் அதிக பணம் தேவை படுகிறது. இங்கு தான் இங்கிலாந்து தன் சுயலாபத்தை கணக்கில் கொண்டு, உள்நாட்டு மக்களின் உணர்வை மதியாமல் அரசியலைத் துவக்குகிறது , ராணிக்கு உதவி செய்வதாய் அதாவது கடனளிப்பதாய்க் கூறி, சீன இரயில்வேயினை அடகு கேட்கிறது .( நிற்க, நான் இங்கிலாந்து என்று தான் சொன்னேன், இந்தியா என்று தோன்றினால் நான் பொறுப்பல்ல). மிக முக்கியமாய் சொல்ல வேண்டியது, இந்தப் படத்தில் புரட்சியாளர்கள் நடத்தும் புரட்சிக்காக செலவிடும் பணத்தை வழங்கும் அயல் நாட்டுச் சீனர்கள் , நம் ஐரோப்பா,ஆஸ்திரேலியா, கனடா வாழ் ஈழத் தமிழரின் உள்ளங்களை எனக்கு நினைவுக்கு கொண்டுவருகின்றனர். வெறும் ஆயுதத்தால் மட்டும் புரட்சி ஒன்றும் செய்ய முடியாது.
அதே சமயம் Sun Yat-sen தன் நாட்டில் நடைபெறும் அநீதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துரைத்து, தன் நாட்டில் தன் மன்னரால் அடகுவைக்க முற்படும் ரயில்வேத் துறையை காப்பாற்ற போராடுகிறார். ஒரு கட்டத்தில், புரட்சிப்படை கைகள் ஓங்க ஆரம்பிக்க 1912 பிப்ரவரியில் மன்னராட்சி கவிழ்ந்து குடியரசு ஓங்குகிறது. குடியரசுச் சீனாவில் முதல் தலைவராக சென்னும் , இராணுவத் தளபதியாக ஜாக்கியும் தேர்ந்தெடுக்கப் பட.நாட்டின் மக்கள் ஆட்சி நிலைபெற தன் பதவியையும் விட்டுக் கொடுக்கிறார். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நண்பர்களின் கனவினை மறுபடியும் திரும்பி பார்க்குமாறு அப்படம் முடிகிறது.
"தமிழனைப் பற்றிப் பேசும் படம்" நிறைய இடங்களில் திரித்துக் கூறி, போதி தர்மனை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டு (அதற்கும் மேல் போதி தர்மனின் வரலாற்றிலும் பல பிழைகள்), வெறும் வியாபரத்திற்க்காக கொணரும் தமிழ் உணர்வுகளை விட (7 -ஆம் அறிவு) , நமது போராட்டம் பற்றிய கனவுகளையும், தியாகங்களையும் அவர்களின் (சீனர்களின்) வரலாற்றைச் சித்தரிப்பதிலேயே நம்மை உணர வைத்திருக்கும் இந்தப் படம். இந்த(ஈழ) உணர்வைக் கொணர ஜாக்கி மெனக்கடவில்லை என்றாலும், உலகின் அனைத்துப் புரட்சியிலும் உள்ள மைய உணர்வை நன்றாகக் காட்டியிருப்பதே போதுமானது. பல இடங்களில் Sun Yat-sen ஆக வரும் மனிதரின் வசனங்கள் படத்தின் ஆணி வேர்.
இப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் பெரிய முயற்சி, நூறு ஆண்டுகள் பின் சென்றபின்பு ஒரு கணம் கூட நாம் வெளியே வராதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒளிப்பதிவாளர்.இப்படத்தில் கதை சொல்லும் முறை சற்று நமக்கு (தமிழ்படுத்துதலில்) பிடிபடவில்லை என்றாலும் ஒரு பெரிய வரலாற்றை ஒன்னேகால் மணி நேரத்தில் சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதால், படம் சில நேரங்களில் டாக்குமெண்டரி போலே தோன்றுகிறது.
* ஒவ்வொரு புரட்சியின் தீர்வையும், ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் துரோகம் தான் தீர்மானிக்கிறது (நம் கதைகளில் துரோகம் இளைக்க நம் இனத்திலே பலர் உண்டு ), இங்கு துரோகம் நல்லவேளை புரட்சிப்படையிடம் இல்லை.
*ஜாக்கியின் காதல் திணிக்கப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது (போதிய அவகாசம் இல்லாததால்).
*நூறாவது படமாய் இருந்தாலும் தனக்கு இப்படத்தில் அதிகமாக முக்கியத்துவம் தராத நேர்மையினை நம் ஆட்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா??
*அவதார் படம் கூட அடிப்படைக் கதையில் மாவோயிஸ்ட்களின் போராட்டத்தில் உள்ள நியாங்கள் பற்றி பேசுவதாய்த் தோன்றும், இப்படம் ஈழ வரலாற்றோடு எவ்வளவு ஒத்துப் போகிறது , ஆனால் இந்த மாபெரும் குடியரசு எப்படி இலங்கைக்கு உதவுகிறது.
* " திருப்பி அடிக்கணும் " என்கிற வசனத்திற்கு கைதட்டிய ரசிகப் பெருமக்களே (நான் உட்பட), உண்மையான ஈழ உணர்வு பற்றி ஒரு சீனன் நமக்கு படம் எடுத்து தந்திருக்கிறான் தவறாமல் பார்த்து விடுங்கள் , ஈழத் தமிழன் பற்றிய படங்களான "எல்லாளன்" போன்ற திரைப் படங்களை இந்தியம் அனுமதிக்காது, ஆக இந்தப் படத்தையாவது பாருங்கள்.
* புரட்சியில் ஆயுதப் படையைக் காட்டிலும், அரசியல் பகடை தான் முக்கிய ஆயுதம் என்று உணர்த்தும் இந்தப் படம்.
ஜாக்கி சான் தன் நடிப்பிலும், படைப்பிலும் பல தூரங்களைக் கடந்து விட்டார், ஜாக்கி சான் ரசிகர்கள் முக்கியமாக இப்படத்தினைப் ஒரு கலைஞனுக்குச் செய்ய வேண்டிய மரியாதையும் கூட.
மொத்தத்தில் இப்படம் தமிழர்களுக்கானச் சீனனின் வரலாறு
காக்க கடி
1 .இது நீங்கள் பார்க்கும் சாட்சாத் ஜாக்கிசானின் படம் அல்ல
2 . படம் பார்க்கும் முன் சீன வரலாற்றை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், இல்லையேல் சீனப் பெயர்கள் புரியாமல் தடுமாற ,கொஞ்சம் விளங்க ஆரம்பிக்கும் போது படம் முடிந்து விடும்.
இப்பொழுதுதான் இந்த படத்தை பார்க்கலாம்னு நினைத்தேன்.அதற்குள் ஒரு அருமையான அறிமுகம் + விமர்சனம் வழங்கிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
பதிலளிநீக்குதங்கள் அளவிற்கு எனக்கு உலக சினிமா பரிச்சயம் இல்லை நண்பா!!, இருந்தாலும் உங்கள் கருத்தினை ஊக்கமாக ஏற்றுக் கொள்கிறேன்
பதிலளிநீக்கு