திங்கள், 29 நவம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 2

முத்தனின் வருகை

பச்சைப் பட்டாடை உடுத்தும் வயல்வெளிகள் இல்லாதிருந்தாலும், கிணற்று நீர்,கண்மாய் பாசனத்தின் மூலம் உழவு செய்யும் அச்சிற்றூரின் பூர்விகக் குடிகள், உழைப்பதற்கு என்றும் அஞ்சாதோர்.அவர்கள் வீடு கிராமத்தில் இருந்தாலும், தங்கள் வயலிலும் ஒரு குடில் அமைத்து அதில் வசிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். தங்கள் வாழ்க்கையில் அவர்கள் குழுவாகவே எந்த ஒரு நிகழ்விலும், அதாவது வயலில் நாற்று நடவது,அறுவடை, சந்தைக்கு கொண்டு செல்லுதல்,விழாக்கள் என கூட்டாக சேர்ந்து வாழும் பழக்கம் மிகுந்தவர்கள்.இன்றளவும் திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் வசிக்கும் சோழிய வெள்ளாளர்களை கூறலாம், அவர்கள் வாழும் குலமான 'மூன்று ஊர் எண்பத்து நான்கு மந்தை' என்று ஒரு கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகின்றனர், இதே சாதியில் பிறந்தாலும் இந்த மூன்று ஊரை அடிப்படையாய்க் கொண்ட ஏதாவது ஒரு குடும்பத்தை தவிர வேறு ஒருவருடன் திருமண பந்தம் ஏற்படுத்த மாட்டார்கள்.

கிழக்கு வெளுக்கும் அந்த வேளையில், மங்கிய வெளிச்சத்தில், ஒரு கிழவி தன் சிறிய வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்தாள்,அவ்வழியே புதிதாக கட்டப் பட்டு வரும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த கோதை அக்கிழவியை பார்த்துக் கொண்டே,வரப்பு மீது நடந்து வந்தாள்.அப்பொழுது அவள் கண்ட காட்சியை அவளை என்னமோ செய்தது.

அக்கிழவி தன் வயலில் நாற்று நடும் போது பக்கத்திலே ஒரு சர்ப்பம் ஒன்று தலை நிமிர்ந்து அவளை பார்த்தபடி இருக்க, அந்நாகத்திடம் தன் சொந்த கதையை பாடிக் கொன்டிருந்தாள்.

வீரம் வெளைஞ்ச மண்ணு -எவ்
வீச்சருவா சாமி நின்னு,
வில்லுக் கொடி காப்பதற்கு
வின்னுலுகம் தேடி கொண்டு

பாசம் நெறஞ்ச மண்ணு
பாண்டியன் புடிச்ச மண்ணு
நீர்நாட்டு கொடிக்காகத்தான்
நிலத்துல சாஞ்சதடி,
எம் மகன் மூச்சும் ஒஞ்சதடி.

எம்புருசன் , பெத்த மவன்
நாட்டுக்காக போரிடத்தான்;
நாசமான காலன் வந்து
என்னை நட்டாத்தில் சிக்க விட்டான்

நடவு செய்ய யாரும் இல்ல,
இந்த நாகம் தானே எம்புள்ள .....

 என்று பாடிக் கொண்டிருக்க அவள் கதையை கேட்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தது.

வரப்பில் வந்துக் கொண்டிருந்த கோதை சர்பத்தினைக் கண்டதால் மூர்ச்சை அடைந்தாள்.அதைப் பார்த்த அக்கிழவி வேகமாக வரப்பின் மீது ஏறி அங்கு மயங்கிய நிலையில் இருந்த கோதையை தூக்கினாள்.கிட்டத்தட்ட ௮௦ வயது இருக்கும் அக்கிழவி கோதையை மிகவும் எளிதாக தூக்கிக் கொண்டு வரப்பிலே நடந்தாள். தன் தோளினில் தொங்கிக் கொண்டிருக்கும் கோதையை எண்ணி ,"ஒரு செண்பகப்பூ மாலையை தோளில் போட்டது போல் இருக்கிறதே, இந்த பருவக்கொடியை சூடப் போகும் வஞ்சி வீரன் யாரோ??"என்று அக்கிழவி தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அருகில் இருந்த ஒரு வேப்பமரத்து நிழலில் அவளைக் கிடத்தினாள்.

வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த நீரில் தன் சேலை நுனியை நனைத்து வந்து கோதையின் முகத்தில் கொஞ்சம் தெளித்து விட்டு, தன் சேலையைக் கொண்டு துடைத்துவிட்டாள்,சிறிது சிறிதாக தெளிவடைந்த கோதை அக்கிழவியை பார்த்ததும் சற்று பயந்தவாறே நோக்கினாள்."ஏ - ஆயி, காலையிலே சோறு உண்ணாமல் இப்படி வெயிலில் வரலாமா ? செண்பகப்பூ வெயிலில் பட்டால் வாடிடுமே "என்று நமட்டுச் சிரிப்புடன் வருத்தப்படுவதுபோல் கூறினாள் அக்கிழவி.

அவள் கூறியதை கேளாமல் சர்ப்பத்தை பற்றே பீதியிலேயே அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தாள்."அந்த பாம்பு தானே! அப்பவே போயிடுச்சு... பாம்புக்கு இப்படி பயப்படலாமா? அதுவும் நம்மள மாதிரிதான் நாம ஏதாவது துன்புறுத்தும் வரை அது நம்மள ஒன்னும் பண்ணாது" என்று சமாதானம் பண்ண வந்த அக்கிழவியை சுட்டெரிக்குமாறு நோக்கினாள்."ஏய்- ஆத்தி, அந்தணப் பெண்ணுக்கும் இவ்வளவு கோபம் வருமா??, எனக்கு ஏன் பொல்லாப்பு, சரி தாயி!! நீயா பத்திரமாப் போய் சேர், எனக்கு இன்னும் நடவு வேலை இருக்கு நான் வரேன்" என்று அவ்விடத்தில் இருந்து கிளம்பினாள்.

கிழவி அங்கிருந்து சென்றவுடன், கோதை அவ்வூரில் புதுப்பித்துக் கட்டிக்  கொண்டிருக்கும்,'பிரசன்னா வெங்கடேசப் பெருமாளின்' கோயிலுக்கு சென்றாள். அங்கே இருந்த ஒரு கற்குவியலின் மேலே அமர்ந்து, அக்கிழவி சொன்னதை நினைத்துப் பார்த்தாள்,"சர்ப்பம் என்ன செய்யும்.??." .

சர்ப்பம் என்ன செய்யும்??,  பாவம் என்பதன் அர்த்தம் கூடத் தெரியாத அப்பெண்ணின் வாழ்க்கையை சூன்யமாக்கியது ஒரு சர்ப்பம் தானே!புன்னகையை இதழில் ஒட்டி வைத்திருக்கும் முகமுடைய பெண்ணின் இதயத்தில் பாரம் இருக்க காரணமும் ஒரு சர்ப்பம் தானே!தன் பெயரான கோதை லக்ஷ்மி, வெறும் கொத்தாய் ஆனதன் காரணமும் ஒரு சர்ப்பம் தானே!மனமே புரியாமல் மனதால் விதவையாகப் பட்டிருந்த கோதையை - பேதை ஆக்கியதும் ஒரு சர்ப்பம் தானே!

இப்போது உங்களுக்கு புரியும் சர்பத்தினை பார்த்தவுடன் ஏன் மூர்ச்சை அடைந்தாள் என்பது  , ஆனால் இதே சர்ப்பம் தான் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தினை ஏற்படுத்த போகிறது என்பது தெரியாமல் அவள் அன்று முழுதும் மவுனத்திலே அமர்ந்தாள்.

உடம்பெல்லாம் சந்தனம் பூசிக்கொண்டு, தனது ஒடிந்த காலினை ஒரு மூங்கில் குச்சியின் உதவியால் ஊன்றி எடுத்து, இளம்பிராயத்தைக் கடந்த ஒரு ஆஜானுபாகுவான தோற்றமுடைய முத்தன், பெருமாள் கோயிலின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.முத்தன், இவனை நொண்டி முத்தன் என்றும் ஊர் அழைக்கும்.

தொடரும்

சனி, 27 நவம்பர், 2010

ஊடகம்- இந்தியாவின் இன்னொரு அவலம்

மீடியா- இன்று ஊடகம் தன் முகத்தினை முழுவதுமாக வியாபாரத்தினை மையப் படுத்தி வருகிறது .

ஒரு முக்கிய செய்தி கீழ்க்கண்ட இந்த 13 காட்சிகளிலும் இல்லை:

காட்சி 1.மும்பை தீவரவாதி தாக்குதல் நடக்கும் போது நேரடி அலைவரிசை காண்பித்து, ஓட்டலில் தங்கிய தீவிரவாதிகளுக்கு உதவியும் புரிந்து விட்டு. இந்த விசேஷ(?) செய்தியை உங்களுக்கு முதலில் தரும் எங்கள் சேனல் என்று லிப்ஸ்டிக் புன்னகையுடன் ஒரு காட்சி.

காட்சி 2 .ஐஸ்வர்யா-அபிசேக் திருமணம் நடந்த மூன்று நாட்களும் நேரடி அலைவரிசை செய்த அணைத்து செய்தி நிறுவனங்களின் TRP யும் எகிறியது என்று அதை அரை பக்க விளம்பரப் படுத்திய தமிழ் நாளிதழ் ஒன்றின் மீதிருந்த வாழைக்காய் பஜ்ஜி !!.

காட்சி 3. ஏதோ ஒரு புரட்சி எழுத்தாளன் அல்லது பசிவுடயவன் - அவன் காஷ்மீரிய குடிமகனாகவோ, இல்லை ஈழத் தமிழனாகவோ இல்லை அது நானாகவோ இருக்கலாம்- இவன் அனுப்பிய தன் இனத்தின் அழிவைப் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்ட கட்டுரையை, கொட்டாவி விட்டுக் கொண்டே வாசித்து விட்டு,தன் மனைவியிடம் என்ன சமையல்? என்ன உடை அணிந்திருக்கிறாய் என்று கொஞ்சி பேசிக் கொண்டிருக்க.(அவள் மனைவி தான் என்று நிச்சயமாய் எனக்கு தெரியாது)

காட்சி 4 . ஒரு வாசகன் எழுதிய இலக்கிய  நயமிக்க வெண்பாவினையும், மற்றொரு வாசகன் எழுதிய அவன் வசிக்கும் ஊரின் அவல நிலை பற்றிய குறிப்பையும், இன்னுமொரு புதிய எழுத்தாளன் நூற்றி ஏழாவது தடவையாக முயற்சி செய்த ஒரு மாணவனின் சிறுகதையும் குப்பைக் கூடையை நிரப்பிக் கொண்டிருக்க, எலியானவின் படத்தை முன் அட்டையில் போட்டு,அனுஷ்காவின் படத்தினை நடுப்பக்தில் போடவும் முடிவெடுத்து சிகிரெட்டை அணைக்கும் எடிட்டர்

காட்சி 5 . தன் எடுத்த படத்தை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தே ஆகவேண்டும் என்று சட்டம் போடாத குறையாய் ப்ரோமோசன் வேலைகள் செய்யும் மீடியாவின் சிறப்பு காட்சி "தி மேகிங் ஆப் எந்திரன் மறு ஒளிபரப்பு "

காட்சி 6 . "எல்லா கோயிலுக்கும் சென்று யாகம் நடத்தும்,எல்லா இந்து பண்டிகையும் கொண்டாடும் ஜெயலலிதாவுக்கு எனன அருகதை இருக்கிறது பெரியாரைப் பற்றியும் பகுத்தறிவையும் பற்றிப் பேச" என்று கலைஞர் சாடும் காட்சி கலைஞர் டிவியில், "பகுத்தறிவு- என்று சொல்லிக் கொண்டு தஞ்சை கோயிலுக்கு பின் வாசலில் சென்று, மஞ்சள் துண்டுடுத்தி வலம் வரும்,குல தெய்வ வழிபாடு கொள்ளும், ஓட்டுக்காக நோன்பு கஞ்சி குடித்து இசுலாமிய நம்பிக்கையும் கொள்ளும் கலைஞருக்கு  என்ன அருகதை" என்று ஜெய செய்திகளில் அலற, பெரியாரிஸ்டுகள் தாங்கள் யார் பக்கம் என்று தெரியாமல் ராசிபலன் பார்க்கும் ஒரு  காட்சி.

காட்சி 7.   நாமும் ஆரம்பித்தோமடா ஒரு தனியார் சேனல் என்று விஜயகாந்த், ராமதாஸ்,தங்கபாலு,திருமா என எல்லோரும் அண்டப் புழுகு புழுகிக்கொண்டிருக்க, ஒரு அனல் பறக்கும் விளம்பரம் ஒன்று பாருங்கள் ,"விரைவில் விஜய.டி.ராஜேந்தரின் 'குறள் டிவி' "

காட்சி 8. சுதந்திர தின ஸ்பெஷல் - வைகைப் புயல் வடிவேலு - ஒரு சிறப்பு பேட்டி;
நடிகை -களவானி ஓவியாவின் அடுத்த இலக்கு; கலைஞர் பெயர் வைத்த மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி;(ஆ .... ரிமோட் வேலை செய்யாததால்) DD national-இல் பாரதப் பிரதமர்  குண்டு துளைக்காத கூண்டில் அடைபட்டுக் கொண்டு, தேசிய பாதுகாப்பில் இந்த அரசு எவ்வளவு சாதனைகள் செய்தது என்று அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசி முடிக்கும் முன்னர் ரிமோட் வேலை செய்ய, காதலில் அதிகம் சொதப்புவது யார்  ஆண்களா ?பெண்களா? என்று சன் டிவியில் சாலமன் அவர்களும்- கலைஞர் டிவியில் லியோனியும், ஜெய டிவியில் இன்னோர் பேராசிரியரும் நடத்தும்(நாட்டுக்கு மிகவும் தேவையான) பட்டி மன்றம் .விஜய் டிவியில் ஜாக்கிசான் படம் , கார்ட்டூனில் ஸ்கூபி டூவும், போகோவில் - வீர் ஹனுமனும், சுட்டி டிவியில் டோராவும் ஓட ....ஆங் இன்றைய ஸ்பெசல் என்ன தெரியுமா இந்தியா தொலைக் காட்சியில் முதன்முறையாக BF ஒளிபரப்பினர்.BF - அதாங்க best friend

காட்சி 9 : சலூன் கடை இந்தியா வாங்கிய மினி உலக கோப்பை மறு ஒளிபரப்பை (72 ம்   முறை) பார்த்துக் கொண்டே ஒருவன் தலை கொடுக்க, ஸ்பெக்ட்ரம் ராஜா(புனைப் பெயர்) ஊழல் தொகை(உண்மையில் அது இழப்புத் தொகை - ஊழல் தொகை அல்ல) 176 ஆயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று கடைக்காரர் தலை கொடுத்தவனிடம் கேட்டார்.அடுத்து வரப் போகும் ஆள் தந்தியின் சினிமா விளம்பரம் பார்க்க, அந்த செய்தித் தாளின் மறுபக்கம் போட்ட 60 வயது கிழவியும் ,25 வயது வாலிபனும் செய்த திருமணம் பற்றிய செய்தியை இன்னொருவன் எட்டிப் பார்த்து படித்துக் கொண்டிருந்தான்

காட்சி 10௦: FM ரேடியோவில் traffic updates கேட்டுக் கொண்டே சென்று விபத்துக்குள்ளான ஒரு ஆள் அடிபட்டு முழுவதும் இறப்பதற்குள், செய்தி கிடைத்தது என படம் எடுக்க ஒருவன் சென்றான்.

காட்சி 11 : மேதாவியாய் தன்னை காட்டிக்கொள்ள (கொல்ல) நினைத்த ஒரு காளிதாசனும் , அழகான கட்டுரைகளால் மனம் கவரும் ஹெமந்தும் ப்ளாக் எழுதிக்கொண்டிருக்க(http://hemanththiru.blogspot.com/).ஏதோ ஒரு தர்கவாதி நீலப் படங்களை பதிவிறக்கம் செய்திக் கொண்டிருந்தான்.இன்னொருவன், என்னதான் நல்ல எழுதினாலும் சாரு நிவேதிதாவின் எழுத்தை படிக்க மாட்டேன் என்ற சத்தியத்தை மீறி படித்து முடித்து புலம்பிக் கொண்டிருந்தான்."ச்சே !! ஒரு மீரா ஷாம்பூவுக்காக, புதிய தலை முறை வாங்காமல் இதை வாங்கி வைத்துவிட்டேனே  " என்று புலம்பியவாறே.

காட்சி 12 .நித்தியானந்தாவைப் பற்றி ப்றேமானந்தாவிடம் கேட்பது ஒரு இதழிலும், காமக் கொடுரனின் சல்லாபங்களை ஒவ்வொரு வரியை விவரித்து இன்னொரு இதழிலும், ரியல் எஸ்டேட்,pothys, joy alukkaas தவிர ஒரு மண்ணும் விளங்காத ஒரு இதழும் மிகப் பிரபலமாக விற்றுத் தள்ளுகிறது ஏகப்பட்ட பிரதிகளை.

காட்சி 13 .எப்போதும் போல் பரிந்துரைக்கப் பட்ட பங்குகளை வாங்காமல் இருக்க உதவிய பேப்பர் போடும் பையனுக்கு 5 ரூபாய் இனாம், அவன் அன்று தாமதமாக பேப்பர் போட்டதால் அந்த பங்குகளை வாங்காமல் விட, நிபிட்டி 200௦௦ பாய்ண்ட்ஸ் டவுன் -எல்லாம் டிவியில் காட்டிய கொரியப் போர்.

சிறப்புக் காட்சி :
*ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்ல;
*சன் மியூசிக் -BIG FM பாடல்களும் அல்ல;
*நெக்ஸ்லைட்டுகளின் துண்டுப் பிரசூரமோ - வீடியோவோ அல்ல;
*பிரணாப்,லாலு, ராகுல் , சோனியா,அத்வானியின் பீலாக்களும் அல்ல;
*ஏன், நித்தம் அறைகூவல் விடும் ஹோம் ஜிம் செட்டும் அல்ல, யுனானி மருந்தும் அல்ல;
*கிரிக்கெட் மாட்ச்சும் அல்ல ;
*உலகம் அழியும் பிரளயம் வந்து விட்டது(time for second coming), தேவனிடம் வாருங்கள் எனும் பிராத்தனையும் அல்ல,
*discovery of India-Micheal woods or Black hole theory- S.Hawking என டிஸ்கவரி சேனல் தமிழ் உல்டாக்களும் அல்ல;அந்த முக்கிய செய்தி யாதெனில் :
>>>>>>>>>>> வனிதா விஜயக் குமார் தன் அப்பா,அம்மா, அண்ணா பற்றி குடும்ப நிகழ்வுகளை அம்பலமாக்கப் போகிறார்.

என்ன கொடுமை சரவணா இது ?????????

சனி, 20 நவம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 1

 கதை முன்னோட்டம்

 13 -ஆம் நூற்றாண்டின் பாதியில் இக்கதை ஆரம்பிக்கிறது.....................


பகுதி -1 குளக்கரையில் ஒரு ஆபத்து

நித்திரைக்கு செல்ல வேகமாக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான் கதிரவன்.பறவை எழுப்பும் சத்தம் தவிர அந்த ரம்மியமான சூழலை கெடுப்பதற்கு அவ்வேளையில் பொதுவாக யாரும் வருவதில்லை.ஆனால், அன்று மட்டும் அந்த வறண்ட காட்டுப் பகுதியில் சிறிது பதட்டம் நிலவிக் கொண்டிருந்தது.ஆம்பிராவதி நதியிலிருந்து 30 காத தொலைவில் உள்ள சிறிதும் அடர்த்தியற்ற ஆனால் ஆபத்தான அந்த காடு, அப்பொழுது அசாதரணமான தோற்றம் கொண்டிருந்தது.

அங்கிருந்த ஒரு குளக்கரைக்கு குளிக்க சென்ற சிலர் எதையோ விரட்டிக் கொண்டு வந்தனர்.கையில் அம்புடனும், வேலுடனும் மூன்று வாலிபர்களும் ஒரே ஒரு வேலினை ஏந்திக் கொண்டு ஒரு தோற்றத்தில் மிக சாதரணமான(இளைத்த தேகத்துடன்) ஒரு இளைஞனும் யாரையோ தாக்க ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு முன்னாலே அந்த குளத்தில் தாகம் தணிக்கச் சென்ற ஒரு புலி.ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டு, அந்நால்வரில் யார் நமக்கு முதல் விருந்து என்று நோட்டம் விட்டபடி உறுமிக் கொண்டிருந்தது.நால்வரும் வேடர்களாக இருந்தாலும்,பொழுது சாய்ந்த களைப்பிலும்,எதிர்பாராத இந்த சந்திப்பிலும்(புலியுடன்) சற்று பதட்டமடைந்து இருந்தனர்.எனினும், பொம்மன் எனும் வேடன் ஒருவன் கையிலிருந்த அந்த வில்லிலிருந்து ஒரு அம்பு நேராக புலியின் காலில் ஒன்றினை பதம் பார்த்தது.

கழுத்துக்கு வைத்த குறி காலில் பட்டதில், கொஞ்சம் நிதானம் தவறினான்,மறுபடியும் சுதாரிப்பதற்குள் அவன் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்தது அப்புலி.இந்த தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத போதிலும் கையில் வேல் மட்டும் ஏந்திய அந்த இளைஞன் புலியின் இடுப்பில் தன் வேலினால் குத்தினான்.சட்டென்று புலி அவனை நோக்கித் திரும்பியது.அவன் சுதாரித்துக் கொண்டு பாய்வதற்கு வந்த புலியிடம் லாவகமாக தப்பி அந்த குளக்கரை மேட்டில் ஓட்டம் பிடித்தான்.

அந்த புலியோ அம்மூவரையும் விட்டு விட்டு ,ஓட்டமெடுத்த அந்த இளைஞனைத் துரத்தியது.அம்முவரும் புலியின் பின்னரே தொடர்ந்து வந்து அம்பேய்தினாலும் அங்கங்கு காயப்படுதியவாறு உராய்ந்துச் சென்றதே தவிர அதன் துரத்தலை நிறுத்தவில்லை. ஆனால் அந்த வேட இளைஞனோ குளக்கரையின் சரிவான பகுதிகளில் புயலென ஓடினான்.அச் சரிவில் புலியினால் சரியாக காலினை ஊன்ற முடியவில்லை.

அவர்களுக்கு இடையே இருந்த தூரம் அதிகரிக்க, அங்கு அருகில் இருந்த ஒரு குன்றின் பாறையை பிடித்து தாவி ஏறினான்.துரத்தி வந்த அந்த புலியினைக் காணவில்லை, எண்ணெயில் தெறிக்கும் கடுகு போல் படபடத்துக் கொண்டிருந்த அவன் இதயத் துடிப்பு அப்பொழுதும் அடங்கவில்லை.சட்டென்று,வேகமாக அச்சிறிய குன்றின் உச்சியில் ஏறி, புலி எங்கு சென்றது என்று நோட்டம் விட்டான்.அவனுடன் வந்த மூவரும் பாறையில் நின்றவனைக் கண்டு நிம்மதியுடன் அவனை நோக்கி விரைந்தனர்

"ஏலே!! வீரா.. சரிதாம் ...புலியை விட உனக்கு சடுதியா ஓடத் தெரியும்னு நிருபிச்சிட்ட,, கீழ இறங்கி வா, ராவோட ஊருக்குள்ள போவம் " என்றவாறே அவன் தோழனான பொம்மன் அவனிடம்  சொல்லிக் கொண்டே அக்குன்றருகே சென்றான்.கொஞ்சம் நிதானத்துக்கு வந்த வீரனின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், பொம்மன் மறுபடியும் கத்தினான்."வீரா !!! புலி உமக்கு பின்னால நிக்குதுலே !! குதிச்சு வந்துடு !!! பெருமாளே...நீ தான் காப்பத்தொனும் "என்று உரக்க அலறினான்.

"எங்கப்பா ஆஆ "என்றவாறே திரும்பிக் கூட பார்க்காமல் அப்பாறையில் இருந்து வீரனும் குதிக்க,அவன் மேலேயே அப்புலியும் குதித்தது.40 அடி உயரத்திலிருந்து தொப்பென விழும் சத்தம் அம்மூவரின் நெஞ்சிலும் ஊசி இறங்குவது போல் இருந்தது.கண்களை திறத்து பார்க்கும் போது, கால் பங்கு உயிருடன்,கழுத்தில் வேலுடனும் உடம்பெல்லாம் குருதியுடனும் உறுமிக்கொண்டே இருந்தது அப்புலி.

வீரனோ,அப்பாறையில் இருந்த ஒரு இடுக்கில் ஒரே கையினை பிடித்து தொங்கியவாறே அந்த புலியை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.எல்லோரும் அதிசயமாக அவ்வீரனை பார்த்துக் கொண்டிருந்தனர்."எப்பே !! நீ நெசமாலும் வீரன்தான்" என்று சிரித்தவாறே பொம்மன் அவனை பார்த்து சொல்ல.

வீரன் "உன்னை கொல்ல வந்த புலியை தான நான் குத்த,அது என்னை துரத்தியது..தொங்கிகிட்டு இருக்கிற என்னை தூக்கிவிடுரிகளா, இல்லை அந்த பாவப் பட்ட புலியோட நானும் போய்ச் சேரட்டுமா" என்றான்". கிடுகிடுவென அப்பாறை மீது ஏறி அவனை காப்பாற்றியவாறே,"ஏ வீரா!! அந்த புலிய ஒரே போடுல கொன்னுட்டு பரிதாபமா படுற ?? ஏய் !நீ சாதிச்சிட்ட டோய்! " என்றான் பொம்மன்.

"உசிரு மேல உள்ள பயம் டா! இனி என்னை எவனும் குறை கூறி சிரிக்க மாட்டிங்களே??!"என்றவாறே தன் மீது இருந்த சிராய்ப்புகளில் எச்சிலை தடவிக் கொண்டு அந்த புலியை நோக்கினான்.

இந்த புலி வேட்டையில் இருந்து தான் அவ்வூருக்கு ஆரம்பித்தது ஒரு மிகப்பெரிய மாற்றம்..அங்கு ஆட்சிசெய்து வந்த மன்னனுக்கும் அவ்வூரிலேயே ஒரு தலைவலி ஆரம்பித்தது. ஒரு சாதாரண குடிமகனுக்கு  நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் காலமும் நெருங்கி வந்தது.எல்லாம் அந்த சேரநாட்டின் சிறு கிராமமான வெள்ளியனை எனும் ஊரில் தான்.வெள்ளியனை எனும் சிற்றூர் சேர நாட்டில்,ஆம்பிராவதி ஆற்றில் இருந்து சுமார் 30௦ காத தூரம் தெற்க்கே செல்லும் காட்டு பகுதியின் தொடக்கத்தில் உள்ளது.அவ்வூர் முழுதுமாக நிர்மாணிக்கப் படவில்லை சில ரகசியக் காரணங்களுக்காக அங்கிருக்கும் காட்டு பகுதியில் அவ்வூர் நிர்மாணிக்கப் பட்டுவந்தது.இந்த சிற்றூர் பல அரசியல் முடிச்சுகளின் கூடாரமாய் அப்போது இருந்தது.

இந்நிலையில் அவ்வூரின் கிழக்கு பகுதியில் உள்ள கோயிலை ஒட்டிய குடியிருப்பில், எந்த பாவமும் தெரியாத ஒரு பூவை ஒருத்தியை நாம் காணப் போகிறோம், அவள்  கோதை என்ற பெயர் கொண்ட பேதை ஒருத்தி - அப்பொழுது பூக்களை தோரனமாக்கி கொண்டிருந்தாள்.யாருக்குத் தெரியும்? தான் நித்தம் தொழும் தன் தெய்வமான பெருமாள் ஒரு பெருஞ்சோதனையினை தனக்கு தருவார் என்று தெரியாமல், அப்பெருமானுக்கு மாலையை தொடுத்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்
கரி-காளி.

(உங்கள் விமர்சங்கள் வரவேற்க்கப்படுகின்றன )

புதன், 17 நவம்பர், 2010

சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பனை பற்றிய என் பதிவு பாடல்களுடன், கீழே சொடுக்கவும்
   http://kaalidossan.hpage.com

1942 - sabarimalai

now


Please dont lit and keep the holy place clean, already the green environment of sabarimala is diminishing.

click the below link for sabarimala-satellite view
map

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஒரு கதை முன்னோட்டம்

சாண்டில்யன்,கல்கி ஆகியோரின் பாதிப்பு இல்லாமல் என்னால் எழுத முடியாது என்றாலும்,இலக்கிய உலகுக்கு சுஜாதா எனும் சாளரம் இன்றி இன்றைய சாமானியர்கள் அவ்வளவு எளிதாக நுழைய முடியாது.எனினும் சரித்திரத்தின் மீதான ஆவல் எனக்கு கமலஹாசனிடம் இருந்து தான் தொடங்கியது.திரு.கமல் அவரின் ரசிகர்கள் கூட தேடலில் ஊறி இருப்பார்கள் என்று இப்ப்போது எனக்கு விளங்குகிறது.(நம்மவர் படத்தின் வரலாற்று ஆசிரியருக்கும் என் நன்றி)

இந்த மூன்று நபர்களின் தாக்கத்தால் உருவான என் எழுத்து ஓரளவுக்கு என் வட்டத்தில் உள்ளோர் தந்த உற்சாகத்திலும்,ஊக்கத்திலும் நான் இந்நாவலை எழுத முயற்சிக்க வைத்தது.கிட்ட தட்ட 20 ,25 சிறுகதைகள் எழுதி வைத்து அதன் மூலம் முகவரி கிடைக்கும் முன்னர் இந்த நாவல் எழுதும் ஆசை வந்ததன் காரணம்,இதன் காரணமாய் நான் வாசிக்க இருக்கும் நூல்களின் எண்ணிக்கை தான்.ஆம்,இது ஒரு சரித்திர நாவல்.

இப்போதைக்கு இந்நாவலை சிறு குறிப்பாகவும், சில விளக்கங்களுடன்(ஆசிரியர் தலையீட்டுடன் ) ஆரம்பிக்கறேன்.உங்களது ஊக்கத்துடன் விமர்சனம் தான் எனக்கு மிகவும் தேவை.

இந்நாவலின் நோக்கம்,
1 .பொதுவாக மக்களுக்கு தெரியாமல் போன ஒரு சிறிய கோயில்,ஏரி மற்றும் அந்த ஊருக்கு வந்தேறிய மக்களின் அடையாளத்தை இம்மண்ணிற்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.எனது நாவலின் தலைவன் ஒரு சேனைத் தளபதியோ,இல்லை ஒரு இளவரசனோ இல்லை, அவன் சாதாரண குடிமகன் .
2 .அது மட்டுமின்றி உலக அளவில் தமிழின் மதிப்பு உயர்ந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும்,ஈழ தேசத்திலும் தமிழனின் நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.
எம்மொழி உணர்வை, அதன் சிறப்பை, எம்மக்களின் மாண்பை நான் சித்தரிப்பதை வைத்து,கடைக் கோடியில் வாழும் தமிழன் கூட தமிழ் உணர்வில் எப்படி இருப்பான் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்.

மேலும் உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்,சரித்திரத்தை கரைத்து குடித்தவன் அல்ல நான். ஆகவே ஒரு வரலாற்று உண்மையினைச் சார்ந்து தான் இக்கதை ஓட்டம் சென்று கொண்டிருக்கும் ..இந்த அடிப்படை உண்மையிலேயே ஒரு சர்ச்சை இருப்பதால் ,ஒருவேளை எழுதும் போதே கதைக்களத்தினை மாற்றிஎழுதும் சூழல் ஏற்படலாம்.(ஹி ஹி... ஏனெனில், இது தான் என் முதல் நாவல் )

(இந்நாவலை முடித்தவுடன் உடனடியாக நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன் )

நன்றி:
சோழ தேசத்தை பற்றிய தகவல்களுக்கு எனது தோழன் ரமேஷுக்கும், கதை நடக்கும் களமான சேர தேசத்தை பற்றி களப் பனி செய்து தகவல்களை கொடுத்துவரும் என் கல்லூரித் தோழன் திரு.அருண்குமார் நாட்டாமை அவர்களுக்கும் என் நன்றி.என் வலைப்பதிவை பார்த்து வரும் உங்களுக்கும் என் நன்றி

சமர்ப்பணம்:
அழிந்து கொண்டிருக்கும் எம்மின மக்களின் கண்ணீருக்கும், வேதனைக்கும் இந்த புதினம்  மூலம் கிடைக்கும் நற்பெயரையும்,பாராட்டையும் சமர்பிக்கிறேன்.

நன்றி

இப்படிக்கு
கரி_காளி 


கதை :
தலைப்பு :   "வீர நாயக்கன்  "