கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 பிப்ரவரி, 2016

ஞாபகம் - நினைவு



தற்செயலாக ஒரு விதியை

கண்டுபிடித்தேன்

 
‘நினைவுக்கும், ஞாபகத்திற்கும்’ இடையேயுள்ள LEXICON வேறுபாடுகளோ, Etymological விளக்கங்களில் கிடைக்கும் வியாக்கியானங்களில் அக்கறையில்லை

ஞாபகம் தப்பி விட்டது
நினைவு மறந்து விட்டது

எழுதமுடியாதவற்றை
TRANSITION EFFECT
என்று சொல்லி விடலாம்
எழுதியவற்றை கவிதை என்று
பொய் சொல்லலாம்
பகடி செய்யலாம்

கிழித்தவற்றை,
ஒட்டிப் பார்க்கலாம்
தைத்தும் பார்க்கலாம்

என்றைக்கோ
காலியான லஞ்ச் பாக்ஸை
தினம் தினம் சுமந்து செல்கிறேன்

எதற்கோ   
சிரிக்க ஒரு காரணமிருக்கிறது
அழுதிட ஒரு காரணமிருக்கிறது

 வலி கொஞ்சம் கொஞ்சமாய் 
முன்னேறி விபரீதத்தை நிகழ்த்தும்.

அஞ்சலிக் கட்டுரைகளில் 
எழுத்துப்பிழை இருக்கலாம் 
தவறில்லை.

ஆங்!!
ஞாபகம் வந்துவிட்டது
நினைவு தப்பிவிட்டது எனக்கு


ஜீவ கரிகாலன்
lonely - deviant art



வியாழன், 14 ஜனவரி, 2016

சிவில் சமூகத்தில் நாஷ்டா தயாரிக்கும் முறை



இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எந்தப் பக்கம் ( E-BOOK VERSION )
Preface
உன் பெயரென்ன
XXXXX XXXXXX
ஓ அந்த சாதியா
You’re Admitted.

Content
1.கொஞ்சம் சமூகப் பிரச்சினை
2.கொஞ்சம் அரசியல்
3.கலாச்சாரம்
4.அரசியல்
5.மதம்
6.சாதி
7.போகி
8.பொங்கல்
9.மாட்டுப் பொங்கல்
10. ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு – ஏறுதழுவுதல் – பொங்கல் விழா
என்ன வேணும்னாலும் சொல்லு

“கவிதை சொல்லவா? கனவை சொல்லவா””
“கணக்கு சொல்லு”
”தோடா நான் என்ன ரஸ்ஸல் மாணவனா”
உனக்குத் தெரிஞ்சத சொல்லு

நான் சொல்லப் போறது
இடியாப்பம் செய்யும் முறை

A –என்றால் மாட்டுக் கறி கூடாதுன்னு சொல்லனும்
இடியாப்பத்துக்கு பாயா தான வேண்டும்??
B-என்றால் ஜல்லிக்கட்டு கூடாதுன்னு சொல்லனும்
C-என்றால் மாட்டுத்தோல் ஏற்றுமதி வேண்டாம்னு சொல்லனும்

A, B,C  மூணுக்குமே எதிரா நிக்கிறவனின் பெயரென்ன

ஏ மற்றும் பி க்கு மட்டும் எதிரா நிற்பவனின்
கணக்கு தான் வெற்றி பெற்ற சூத்திரம்

”ஏ”க்கு ஏற்றுக் கொண்டு, “பீ”க்கு இசைவு சொல்லும்
முட்டாள்களால் ஒன்றும் நிகழப்போவதில்லை

“ஏ”க்கு எதிர்ப்பு தெரிவித்து, “பீ” இசைவு சொல்பவன்
தோழர்களாக அறியப்படுவான் (”சீ”க்களின் ஆசீர்வாதத்தில்)

“ஏ”க்கு எதிர்ப்பு தெரிவித்து, “பீ” எதிர்ப்பு சொல்பவன்
கண்டு கொள்ளப்படமாட்டான் (”சீ”க்களின் ஆசீர்வாதத்தில்)

“ஏ”க்கு எதிர்ப்பு தெரிவித்து, “பீ” எதிர்ப்பு தெரிவித்து
“சீ”யையும் எதிர்ப்பவர்கள்
குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கும் அல்லது
பைத்தியமாகிக் கொண்டிருப்பார்கள்

“சீ”க்கள் நடத்தும் அரசாங்கத்தில்
காளைகளுக்கு காயடிப்பதும்,
சுவற்றுக்கு வண்ணம் பூசுவதும் இயல்பு

சிவப்பு தூசி படிந்தால் காவி
காவியில் மாசு படிந்தால் கருப்பு

“ஐயோ வகுப்பு மாதிரி உட்கார்ந்துட்டேன்”






செவ்வாய், 1 டிசம்பர், 2015

சட்டம் வரையறுத்த மரியாதை நிமித்தம்



தேசிய கீதத்திற்கு
மரியாதை செலுத்தாதது குற்றமில்லை,
எந்த மதத்தின்
பூஜாதிஸ்தோத்திரதொழுகை
சப்தங்களுங்கும்,
புனிதமாக்கப் பட்ட
மொழியை, இனத்தைப்
போற்றுமுணர்ச்சிக் கவிகளுக்கு
நீங்கள் கோஷம் போடுவது
அவசியமில்லை…
எந்தப் புனிதங்களும் இல்லா உலகில்,
யாரையும் மதிக்கத் தேவையில்லை.

ஆனால் அந்த
வார்டு கவுன்சிலருக்கு நீங்கள்
மரியாதை செலுத்தாவிடின்

இன்றிரவுக்குள் கொல்லப்படலாம்

வியாழன், 15 அக்டோபர், 2015

இன்னுமொரு கடைசி விருந்து பாக்கியிருக்கிறது

சந்தோஷமாய் இருந்த முட்டாள் நான்

செல்லோவின் தந்தி மீட்டல்கள்
அபஸ்வரமாய் ஒலிக்கும் நாளொன்றில்
நாளொன்றைப் பரிசளித்தாய்
எனக்காய்.
அதில் ஸ்னேகமும், இறுதித் தழுவலும்
ஆறுதல்களாக இருக்காது
கோள்களின் அலைவரிசையில்
ஆர்பரிக்கும் கடல் சீற்றம்
சற்று முன்னர் இருந்த நிசப்தத்தில்
மடித்து வைக்கப்பட்டிருந்ததே.
பிசகிய மனமாக துடித்துக் கொண்டிருக்கும்
ரிக்டர் அளவுகோலின்
நீட்டிப் பிளந்த அதிர்வுகளின்
விளைவாக
புதையுண்டதும் உண்டு
கரை கண்டதும் உண்டு
பாதாதி கேஷம் பாடுவோனுக்கு
காலடிச் சுவடு தெரியமலா போகும்


அந்த விரல் அறுபடாது

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பஜ்ஜி-சொஜ்ஜி -- எத்தனையாவதோ??


ஒரு DISTORTED கவிதையும் - ஒரு ILLUSTRATIONம்
இளங்கோ - REDEFINED



என்னளவில் - கவிதை எழுத முயற்சித்தவைகளை எல்லாம் அடியோடு நிறுத்திய பின்பு தான் கவிதை மொழியுடனான நெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. Xpress கமெண்டுகளைக் கேட்கும் மின்னுலகில் கவிதைகளைப் போகிறபோக்கில் வாசித்துச்செல்லுதலில் உடன்பாடு இல்லாததால் நிதானமாகவும், குறைவாகவும் வாசித்து வருகிறேன். இருந்தபோதும் கவிதையையோ அல்லது வேறு எந்த கலைவடிவங்கள் குறித்தும் பேசுவதற்கான குறைந்தபட்ச தைரியத்தை ஓவியங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
**

ஒருவனின் கவிதைச் செயல்பாடுகளில் இருக்கும் தொடர்ச்சி சுவாரஸ்யம் அளிப்பவையா?? சுவாரஸ்யம் என்ற அடிப்படையை தவிர்த்தால் கூட, தொடர்ச்சியான ஒரு வடிவம், தொனி, சொற்கள், ஏன் தத்துவங்கள் கூட நீர்த்து தான் போகின்றது. அவை STATIC ஆக இருந்தால்.

இளங்கோ (கவிதைக்காரன்), இவனுடைய கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பவும் - விவாதங்கள் செய்துவருவதும், எங்களுக்கிடையேயான வரவு – செலவுச் சிட்டை போலே அடிக்கடி மாற்றிக் கொள்ளப்படும். நிறையவே விமர்சனங்கள் செய்வதுண்டு, சில சமயம் அலுப்பூட்டும் படிமங்களில் நொந்து கொள்வதுமுண்டு – இந்தக் குதிரையை ஃபாலோ செய்யும் பாவ்ன்களின் மூன்று கட்ட நகர்வுகள் மீதும் குற்றச்சாட்டு வைப்பதுண்டு. ஆனால் அசலான ஒரு கலைஞனுக்கு நிகர்வது தான் இவையெல்லாம். இதுவரை தனிப்பட்ட வியாக்யானங்கள். இவரது கவிதை ஒன்றைப் பொதுவில் வைத்துப் பேசினால் என்ன என்று தோன்றியது.

**

இளங்கோவிடம் – நேற்று கேட்டேன், உங்களை உங்கள கவிதைகளின் தற்போதைய இருப்பிடத்தை Dislocate செய்ய முடியுமா என்று? 

மெட்ரோ கவிதைகள் எழுதிய இளங்கோவாக இல்லை என்று சிலர் இவரை விம்ர்சிப்பது போன்றே, இளங்கோ தற்பொழுது நிற்கின்ற இடத்தை திடுமென மாற்றிவிட்டால் எப்படியிருக்கும் என்று பார்த்தேன். இதற்கு முன் அவர் எழுதிய ஐ ஆம் சாரிகவிதைகளில் அதற்கான முயற்சி இருந்தது. சென்ற Pleats அமர்வில் அதுபற்றி விவாதித்தோம். நேற்றைக்கு இளங்கோ எழுதியிருந்த கவிதையைக் குறித்து நான் எழுத முனைவதற்கு காரணம் அவர் அப்படி தன்னை DISLOCATE செய்துவிட்டார் என்று நம்புகிறேன்.

கவிதை நல்லா இருக்கு – நல்லா இல்லை – என்பது போன்ற தீர்ப்புகள் இயங்கும் வெளி வேறு. இது ஒரு ஜீன் டெஸ்ட்.


ரொம்ப காலமா..
*
இந்த இரவை பசியோட கடத்தனும்னு தீர்மானம் செஞ்சப்போ
பசி என்னக் கொஞ்சங் கொஞ்சமா சாப்பிடத் தொடங்கிச்சு
இத வேடிக்கைப் பார்க்கிற 'நான்' வெளியே நிக்கனும்
உடம்போட பெயர் அழியறத மூளைக்குத் தகவல் அனுப்பனும்
ரெண்டுமே வெவ்வேற கருத்துங்கற கட்டளை எங்கருந்து வருதுன்னு ஞாபகத்தைக் கேக்கறேன்
கட்டுமானத்தைக் குலைக்கும்போது ஒரே சீர்ல அது சரியாது -ங்கற சமிக்ஞையின் திசையிலேருந்து வர்ற குரலை இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்டிருக்கேன்
பாதி நிரம்பின வயிறோட, 'கனவைத் தேடு - நிற்காதே போ 'ன்னு கையசைச்சு என்ன விரட்டுது, என் பசி
அய்யோ..! 'என் பசின்னு' சொல்லிட்டேனே-ங்கற பதட்டத்துல மொழிய மறக்கறேன்
சிக்மண்ட் ஃபிராயிடுன்னு ஒரு பெரியவர் இங்க பக்கத்து ஊருல நகுலன்ற புனைப்பேர்ல கடைசி காலத்துல தனியா வாழ்ந்திட்டிருந்தாரு
ஆனா அவரு என் மொழிக்காரர் கிடையாது
அவரோட வீடு இருக்கிற இடம் தெரியும்
பலமுறை கதவைத் தட்டிட்டு அது முழுசா திறக்கறதுக்குள்ள பயத்துல ஓடி வந்திருக்கேன்
வாசல்ல மௌனின்னு பேர் பலகை கூட இருக்கும்
இப்போ முழுசா மொழி மறந்து ஒரேயடியா தீர்ந்து போறதுக்குள்ள அந்த வீட்டோட கொல்லைப்புறத்துக்கு எப்படியாவது போயிடனும்
காஞ்ச சருகு சத்தங்கள உருட்டுற கனவோட அடையாளம் - அங்க வாசனை இல்லாம மட்கி கிடக்குதுன்னு ராமச்சந்திரன் சொன்னான்
எந்த ராமச்சந்திரன்?-ன்னு கேக்க கூடாதுல்ல..!
'பசிக்கு' வயிறு ரொம்பிருச்சு
காதுக்கு தான் சுத்தமா சாப்பாடே இல்ல
மே மாசம் ஆரம்பிச்சதும் கொளுத்த போற வெயில்ல தலையில துண்ட போட்டுக்கிட்டு
இத பொய்யின்னு எப்படி கத்தறது
சே..!
முதல் ஷிப்டு சங்கு சத்தத்தை நகலெடுக்குது இந்தப் பசியோட ஏப்பம்
வெளியே நிக்கிற 'நான் '-ஐ உள்ள கூப்பிட முடியல
உடம்பு மறந்து போச்சு
பசி சத்தம் காத அடைக்குதுன்னு இனி சொல்ல முடியாதே
சருகோட வாசனைல பேரு மட்கி போற அடையாளத்தை புதுசா அடுக்கி அத ஒரே சீர்ல குலைக்கிறதுக்கு
கனவையெல்லாம் தேடச்சொல்லி கிளாஸ் எடுக்க வேண்டாம்ன்னு
சிக்மண்ட் தாத்தாக்கிட்ட தகவல கடத்த
ராமச்சந்திரன அனுப்பி வச்சா..
அவன் மௌனியோட வாசல்ல போயி பேசாம உட்கார்ந்துட்டான் ரொம்ப காலமா

- கவிதைக்காரன் இளங்கோ

 *******

இளங்கோ என்ன செய்திருக்கிறான் இங்கே?? வேறு வடிவம், சொற்கள், படிமங்கள் இவற்றைக் குறித்து தனித்தனியாக பேசாமல் – ஒட்டுமொத்தமாக இந்தக் கவிதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் இது ஒரு DISTORTED FORM. அப்படியென்றால் ??

SKILL ஒரு தொந்தரவாக நவீன கவிஞனுக்கு இருக்கிறதா என்று ஒரு கேள்வி எழுந்தது. POST MODERN ERA – அதற்கான வெளியைத் தருகிறதா? ,  ஒரு ஓவியரோடு ஒர் இரவில் ஆரம்பித்த அவரது ஓவியமொன்றை பார்த்துக் கொண்டே இருந்தேன் – அவர் தொடர்ச்சியாக வரைந்த  17 மணி நேர உழைப்பில் உருவாக்கிய கான்வாசில் அவர் அதிகச் சிரமங்களை எடுத்துக் கொண்டது இதற்குத் தான் - DISTORTION... அங்கு ஒரு போலியான ட்ரிப்பிங்கை உருவாக்கினார். 

புரிந்து கொண்டேன்.
அதற்குப் பெயர் தான் Distortion.

இளங்கோவின் இந்தக் கவிதை ஒரு டிஸ்டார்சன் ஃபார்ம் தான், தனது கவிதைகளுக்கு இல்லஸ்ட்ரேஷனாக நவீன ஓவியங்களைத் தொடர்ந்து போடும் இளங்கோவின் இந்தக் கவிதைக்கு நான் ஒரு விபரணைப் படைப்பைத் தேர்வு செய்கிறேன். பிகாஸோவின் குவெர்னிகா ஓவியத்தின் தொடர்ச்சியாக அவர் வரைந்த அழும் பெண் (WEEPING WOMEN) ஓவியம். க்யூபிசம் பற்றிப் பேசும் போது எல்லோர் நினைவுக்கும் வருவது குவெர்னிகா ஓவியம் தான். அடுத்ததாக அவர் வரைந்த ஓவியம் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டிய அவசியம் பிகாஸோவுக்கு ஏன் வந்தது?? இதைச் செய்யாவிட்டால், குவெர்னிகா மாஸ்டர் பீஸ் ஆகியிருக்குமா?? 

ஒரு பெண் அழுகின்ற VISUAL , ஒரு போரின் நினைவுகளாகுமா?? நேரடியாக ஆகாது தான். ஆனால் ஒரு யூனிட் வலியை பிரபஞ்சப்படுத்தும் போது (பொதுத்தன்மைப் படுத்தும் போது) அது ஒரு ஊரின், நாட்டின், உலகின் வலியாக தன்னை represent செய்து கொள்கிறது.

தனிமனிதனின் ராட்சஸ, அகோரப் பசி அதைச் செய்கிறது – இதற்கு முன் எழுதிய அவர் கவிதையை மாஸ்டர் பீஸ் ஆக்குகிறது. தன்னை
DISLOCATE செய்து, தன் நண்பர்களுடன் (ஃபாலோயர்ஸ்) முரண்படுகிறது. 

ஒரு கவிதைக்கான விளக்கம் கொடுப்பதை விட துயரமான வேலை ஒரு கவிஞனுக்கு இருந்துவிடாது, இன்றைய முகநூல் பதிவேற்றங்களில் இரண்டைத் தவிர்த்தால் கவிதைக்கு நல்லது - ஒன்று விளக்கம் தருவது, அதை விட முக்கியமான ஒன்று கவிதைக்கு TAG செய்வது..

Well done Elango - உங்களுக்கு ஒரு முட்டை போண்டா, அப்புறம் ஒரு மசால் போண்டா. எனக்கு மசால் போண்டா மட்டும்.



---

பஜ்ஜி -சொஜ்ஜி இன்னும் வேற FLAVOR-இல்
ஜீவ கரிகாலன்



சனி, 8 பிப்ரவரி, 2014

தனியறைக் கொலைக் களம்

புதிதாய் வாங்கிய மின்விசிறியின்
டெசிபல்கள் செவிடாக்கிய பின்னும்
மிச்சமிருக்கிறது அவள்
சொல்லாத வார்த்தையின் ஒலி
தற்கொலைக் கருவிகளான
எழுதுபொருட்களைக் கொண்டு
கொண்டை ஊசிப் பயணம்
ஆறுதல் கிடைக்காத வெறுமையில்
சுயவதை மட்டுமே தீர்வாக இருக்கிறது.
கவிதைகளின் வழியெ இறந்து பார்த்தபின்
பிழைகள் வழியே ஜனனம் நேரிடுகிறது.
நீண்டு தனித்த மலைப்பாதையில்
என்னைத் தொலைக்க நினைக்கும் நேரம்
கைகளுக்கு வலிப்பு..

நிர ந்தரமா கட்டும்

-ஜீவ.கரிகாலன்

திங்கள், 27 ஜனவரி, 2014

பெஷினா!!

பெஷினா!!


சொல்ல மறந்துவிட்டேனே!! வேறு யாரையும் விட நான் உன்னை
பைத்தியமாகக் காதலிக்கிறேன்.

- ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

பாதையில்

உடல் எடை சுமையாகும்
ஆன்மாவின் பொழுதுகள் அவை
 .
நானென்கிற கர்வம்
நோய்மையில் கரைந்திட,
எஞ்சியிருந்த
ஒரு சொல் தான்
நம்பிக்கை கோபுரத்தின்
அஸ்திவாரம் தகர்க்கிறது

அசைவுகளில் எல்லாம்
தசைகள் உதிர்வதாய் பெருவலி ஒன்று

செவிடாகும் வரம் கேட்கத் தூண்டும்
அகத்தின் தப்பித்தலுக்கான வேண்டுதல்கள்
பேரிரைச்சலுடன் இரைகின்றன.
இமைகளுக்கு முன்னே
சூன்ய இருள்.

இத்தனையும் கடந்து வாழப் பணிக்கும் மூளையின்
அபைத்திய நிலைக்கு
ஒரு பிடி அன்புச் சோறாவது போடுங்கள்
வாழ்ந்து தொலையட்டும்

-ஜீவ.கரிகாலன்

திங்கள், 30 செப்டம்பர், 2013

Facebook - certainly not a poetry - 002



Certainly not a poetry - 002

Facebook

அந்தப் பிச்சைக்காரன் ?- வேண்டாம் - 8 லைக்ஸ்+2 கமெண்ட்ஸ்
கடல்? - வேண்டாம் - 15 லைக்ஸ் +2 கமெண்ட்ஸ்
மழை? - ஒகே ஆனால் மழை நிற்பதற்குள் - 50 லைக்ஸ்
ரோஜா?- ஓகே - 30 -40 லைக்ஸ் + 10-12 கமெண்ட்ஸ்
வேறு பூக்கள்? - சுமார் - 20-30 லைக்ஸ் + 50 கமெண்ட்ஸ்
அரசியல் - டேஞ்சர் - 50 லைக்ஸ் + 100 கெட்டவார்த்தைகள் கமெண்ட்ஸ்
இலக்கியம் -ஓகே ட்ரை - 15 -20 லைக்ஸ் + 2 கமெண்ட்ஸ்
சாமி - கார்த்திகை வரை காத்திரு - 50 லைக்ஸ் + 10 கமெண்ட்ஸ்
காதல் - டன் - 60-70 லைக்ஸ் + 35 கமெண்ட்ஸ்
முத்தம் - சூப்பர் சாய்ஸ் - 40 லைக்ஸ் + 10 பிரைவேட் மெசேஜ் + 20 கமெண்ட்ஸ்
காமம் - அட்வாண்டேஜ் - 10 லைக்ஸ் + 40 பிரைவேட் மெசெஜ் + 10 எதிரி + 2 கமெண்ட்ஸ்
அனுஷ்கா - பெஸ்ட் சாய்ஸ் - 100 - 110 லைக்ஸ் + 25 ஷேர்ஸ் + 74 கமெண்ட்ஸ்


நம் கவிஞனின் உழைப்பில்
இந்தியப் பங்குச் சந்தையில்
லிஸ்டிங் செய்ய யோசிக்கிறதாம்
ஃபேஸ்புக் !!!!!!!!!!!!!!!!!!1

certainly not - #Poetry - 001

certainly not - #Poetry

மழை

மழைக்கான இரவில் நகரம்
தன் கர்வம் இழந்துவிடுகிறது.

அல்பத் தும்மலுக்கு ஐநூறு ரூபாய்
மருத்துவரும் கால் கிலோ மாத்திரையும்;
அடுத்த நாள் Obituaryஇல் வரும்
விபத்துச் செய்திகளின் எண்ணிக்கை;
காயப்போட இடமில்லா அபார்ட்மெண்டில்
Dryer வேலை செய்யா
செமி ஆட்டோமெடிக் வாசிங் மெஷின்கள்;
இருந்தாலும்,
மழை நிற்பதற்குள்
கவிதையை முகநூலில் ஏற்றிவிட்டால்,
எப்படியும்
40 லைக்குகள் வாங்கிவிடலாம்

இத்தனை பட்டியல்களிலும்
ஒன்றிரண்டு ஞாயங்கள் இருக்கின்றன..
எப்படியாவது போரில் தண்ணீர் வந்துடும்..

சடசடவென
பெய்துக் கொண்டிருக்கிறது
நகரத்தின் மழை

-ஜீவ.கரிகாலன்

அல்லி பிறந்த கதை




அல்லி....
உன் சிலிர் கரங்கள் பற்றும்
என் உடலின் ஆன்மா
தகித்துக் கொண்டிருக்கிறது.

செய்ய வேண்டிய சாகசங்களை
நியூரான்கள் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கின்றன.
மூளைக்கு காய்ச்சல் வருவதற்குள்
உன் நகத்தின் பிறையைத்
தடவிப் பார்க்கவாது அனுமதி

கரை தெரியா நடுக்கடலினுள்
நான்.
என் நீலமாக நீ...
என் தவமெல்லாம்
ஆயுள் முழுக்க
உன் மீது நீந்திக்கொண்டிருக்கும்
வரமே!!

அல்லி...
உன் கோழிமுட்டைக் கண்களில்
என்னை அலட்சியம் செய்து பார்க்கிறாயே
உன் பெயர் சொல்லும் வேளையிலெல்லாம்
கண்ணயர்ந்துவிடுகிறாய்
ஒழுங்காக நடி!!

உப்பு தடவிய மாங்காய் துண்டுகளை
நீ கடிக்கும் போது அல்ல
உன் திருமண அழைப்பை
நீட்டியப் புன்னகை தான்
அஷ்டக்கோணல்...

அல்லி ...
அந்த கணமே
உன்னை அவளிடம் இருந்து தான்
பிரித்து எடுத்துக் கொண்டேன்.
நாம் ஒரு புனைவுலகில்
சாம்ராஜ்யம் செய்கிறோம்
தட்டான்களாக

சனி, 8 ஜூன், 2013

மது

மது - பட்டியல்


ஒரு மதுக் குடுவையின் துணை
நட்பினைக் கொடுக்கிறது,
கண்டு களித்து, உண்டு செறித்து
இலக்கியம் பேசி, பாடி, உமிழ்ந்து
வாந்தி எடுத்து, கழுவி விட்டு
முத்தம் கொடுத்து,
அள்ளிக் கொடுக்கிறது வாக்குறுதிகளை
பின்னர் அவதூறு எழுப்பி,
விவாதம் செய்து,
வன்சொல் பேசி, கைகள் நீட்டி
சட்டையைக் கிழித்து
நட்பு முறிகிறது, பகை பிறக்கிறது 

ஆனால் இது மது இல்லாமலும் நடக்கிறது

ஞாயிறு, 5 மே, 2013

கால இயந்திரம்

1.  இப்படிக்கு நான்


இன்று மே 05 2013,
நாளை மே 05 1945
காலங்காலமாய் பேசிவந்த
புனைவுகள் பொசுங்கப் போகின்றன
ஊழிக்காலத்திற்கும், கற்காலத்திற்கும்
இடையே கட்டங்கள் கட்டி
சதுரங்கம் விளையாடி மகிழ்வேன்.
நீங்கள் யாவருமே காய்களாக!!
இப்படிக்கு கடவுள் ஜெக்தீஷ்



***********************************
2. காலம் “0”

இன்று தான் டைம் ஜீரோவாம்
இன்று ஒரு கொலை நடக்க இருக்கிறது, 
முதல் முயற்சி இதே நாள் மே மாதம் 1927
அடுத்த முயற்சி இதே நாள் மே மாதம் 2014
இன்று நடக்க இருக்கும் கொலை :
தொடங்கும் நேரம் இன்னும் சற்று நேரத்தில் 
முடியும் நேரம் இன்னும் சற்று ஒளி ஆண்டுகளில்
ஆனால் கொலை மட்டும் நிச்சயம்

- ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

என்ன சம்பந்தம்??


கந்து வட்டி அசலுக்காக
தன் பெட்டிக் கடையை விற்றவனுக்கும்
சைபரஸில் வங்கியை முடக்கி வைத்திருக்கும்
ஐரோப்பிய யூனியனுக்கும் என்ன சம்பந்தம்??

புகழூர் தொழிற்சாலையில்
வேலை பார்த்துக் கிடைத்த உபகாரப் பணம் பற்றி
பனமாவில் முகவரி இல்லாத கம்பெனியின்
ஃபண்ட் மேனேஜருக்கு தகவல் எப்படிப் போய்
சேருகிறது?

தர்மபுரி ஜாதிக் கலவரத்திற்கு
கண்டனம் சொல்லும் பிரிட்டனின் சதுரங்கத்தில்
டெஸ்கோவுக்கும், ஆர்.பி.எஸ்க்கும், வேறு சிலவற்றிட்கும்
இந்தியாவின் பெயில் அவுட் கிடைத்துவிடுமா?

நோவர்டிஸை துரத்தி விட்ட
இந்தியாவின் கைகளில்
எத்தனை ஆராய்ச்சிக் கூடங்கள்
தமக்கு இத்தனை எலிகள் இன்னும் வேண்டும் என்று
ஆருடம் சொல்லப் போகின்றன??

மருத்துவ உபகரணம் என்று
இறக்குமதியாகும் பொம்மைகளில்
சுங்கவரித் துறையின் டார்கெட்டுகளை
எத்தனை ஆண்டுகளில் நிவர்த்தி செய்யும்
சீனா??

இன்று சாப்பிட்ட மோர் மிளகாய் வற்றலுக்கும்
நாளை நடக்கவிருக்கும் அண்ணாச்சியின் தற்கொலைக்கும்
அடுத்தநாள் பங்குச்சந்தைப் பட்டியலில்
சேரவிருக்கும் வால்மார்ட்டிற்கும் என்ன சம்பந்தம்??

--ஜீவ.கரிகாலன்