மஹாபலிபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஹாபலிபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜனவரி, 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 54 நோவா வெள்ளமும் கோவர்தனகிரியும்


              கோவர்தனகிரி குகைச் சிற்பம் - மாமல்லை சிற்பங்கள்




கோவர்தனகிரி சிற்பம் மாமல்லை

து போன்ற ஓவிய மற்றும் சிற்பக் கலை உருவாக்கங்கள் செய்வதற்கு எப்போதுமே நல்லதொரு மூலப் பிரதி(அல்லது கருப்பொருள்) கிடைக்க வேண்டும். வரலாறு தன்னை காலத்திற்கும் தக்க வைப்பதற்காக அது தன்னை வலிமையாகப் பதிவு செய்து கொள்ள முயல்கிறது, அது உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை தன்னை தக்க வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. இந்த முனைப்பு ஆதிமனிதனின் குகைச் சிற்பங்களில் இருந்து, இன்று நாம் பார்க்கும் மிகப்பெரிய கட்டுமான பிரம்மாண்டங்கள் வரை சாத்தியமாக்கியிருக்கிறது. விண்வெளிப் பயணங்களும் அவ்வாறான ஒரு வரலாற்றுப் பதிவை எண்ணிப் பார்க்காமல் தொடங்குவது இல்லை.

மனிதன் தன் ஆயுளை வரலாற்றின் மூலம் நீட்டிக்கும் ஆசைக்கு கொடுத்த
உழைப்பின் பலன் தான் கலை வெளிப்பாடு.  கதைகளின் வழியே தலைமுறை தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வந்த வரலாறுகளில் பல வர்ணங்கள் பூசப் பட்டிருக்கின்றன. அப்படிப் பூசப்பட்டு, பிரம்மாண்டம் செய்யப்பட்டு, சில மூடத்தனங்கள், சில புதிர்கள் என புனையப்பட்டு அதை புனிதமாகக் கொண்டாடுவதற்காய் அதை கண்ணாடிப் பேழையிலும் வைத்து விட்டனர். இந்த உண்மைகளை அகழ்ந்து எடுக்க பலர் முயற்சித்துக் கொண்டிருந்தாலும், சிலர் அதைத் தோண்ட அனுமதிப்பதில்லை, சிலர் அந்த முறைமையைப் பரிகசிக்கிறார்கள்.


பாரசீக வரலாற்றறிஞனால் கொண்டு
வரப்பட்ட உலக வரலாற்றில் நோவா
வெள்ளத்தைப் போன்ற கதை 15ம் நூற்றாண்டு
ஆனால் உலகம் முழுக்க உள்ள ஆதி புராணங்களில் பல ஒற்றுமைகள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் உலகம் முழுமைக்கும் உள்ள புராணங்கள ஒரே ஒரு உண்மையைத் தான் மறைத்துக் (உணர்த்தி) கொண்டிருக்கின்றன. இந்தப் புராணங்களுக்கு மத்தியில் இருக்கும், ஒற்றுமை தான் மனித இனத்தையே ஒன்றாக இணைக்கிறது. நோவா வெள்ளம் பற்றிய கதை பைபிளின் வழியே உலகம் முழுதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இதற்கு முன்னோடியான ஒரு புராணம் இருக்கிறது. புராணம் தான் முன்னோடியே தவிர இந்த நோவா வெள்ளம் என்று குறிப்பிடப்படும் காலத்திற்கு இணையாக இந்த கோவர்தனகிரிப் பெருவெள்ளத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

14ம் நூற்றாண்டு- நோவா வெள்ளம் - சித்தரிப்பு
நமது மதக் கொள்கைகளோ அல்லது கல்வி முறையோ இது போன்ற ஒப்பிடல்களை அடியோடுப் புறக்கணிக்கலாம். விக்கிப்பீடியா தகவல்களை வைத்து இது போன்ற கட்டுரைகள் எழுதுவது பலருக்கு அபத்தமாகக் கூடத் தோன்றலாம். இந்த கட்டுரையின் அடிப்படை புராணத்தின் அல்லது வரலாற்றின் ACCURACYஐ வைத்து அல்ல, ஆனால் இவை இந்த புராணத்தின் வழியே தோன்றிய கலை படைப்புகளின் மெய்ப்பொருளான ஆன்மாவைக் (SOUL) கண்டடையும் முயற்சி இது. (வெற்றி தோல்விகளைப் பற்றிய அக்கறையில்லா முயற்சி). 

எதற்காக இது போன்ற வெள்ளத்தைப் பற்றிய காட்சி பல புராணங்களில் இருக்கிறது என்பதற்கு கண்டிப்பாக ஒரே ஒரு LOGIC தான் இருக்க முடியும். கடவுள் இருக்கிறார் என்பதை EVOLUTION (பரிணாமக்) கொள்கைகளில் முரண்படும் வாதங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்ததால். கடவுளின் சக்தியை நிரூபிப்பதற்காகத் தேவைப்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது தான் பெருவெள்ளம், பெரு வெள்ளம் என்பது உலகத்தில் பலமுறை நடந்துள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். POLAR SHIFT, POLAR WANDER, போன்ற அறிவியல் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது 10500 BCE வாக்கில் ஒரு பெரிய வெள்ளம் பூமியைச் சூழ்ந்திருக்கிறது, 4500 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் பெருவெள்ளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, CLOUD BURST போன்ற விபத்துகளைக் கூட எண்ணிக்கை அளவில் இன்றுள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் பல மடங்கு குறைந்திருந்த காலத்தில் மனித இனத்தை அழிக்க வல்ல வெள்ளம் சிறிய அளவாக ஒப்பீட்டு அளவில் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதில் இறைவனின் அருளால் உலகின் உயிர்கள் காக்கப் படுகின்றன என்கிற தத்துவம் போதிக்கப்பட்டிருக்கிறது

தொன்மையான நாகரிகங்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பெரு வெள்ளம் பற்றியக் குறிப்புகளைக் காண முடிகிறது. இப்போது பெரு வெள்ளக் கதையை பட்டியலிடுவோம்.
  • கிருத்துவம் நம்பும் பைபிள் கதையான நோவா பெருவெள்ளம்.
  • கிஷே -மாயன்களின் வழிவந்தவர்களிடம் இன்னும் இது போன்ற கதைகளை இன்னும் பார்க்க முடிகிறது.
  •  நமது கோவர்த்தனகிரி கதையிலும் இந்தப் பெருவெள்ளத்திலிருந்து மக்களை க்ரிஷ்ணன் காப்பதாகவே வருகின்றது. 
  •  மாண்டியா என்ற தெற்கு ஈராக்கியப் பழங்குடிகளிடமும் இதே கதை உள்ளது, அதில் மோசஸ் மற்றும் இயேசுவை தவறான தூதுவர்கள் என்றும் நோவாவை மட்டும் உண்மையான தூதுவனாக நம்புகிறார்கள்.
  • கிருத்துவம் நம்பும் பைபிள் கதையான நோவா பெருவெள்ளம் போலவே மெசபடோமிய மற்றும் சுமேரிய நகரங்களிலும், இது போன்ற ஒரு பெருவெள்ளம் தான் நகரங்களை அழிக்கப் போகின்றதென தேவ தூதனிடமிருந்து ஒரு எச்சரிக்கை வந்ததாகச் சொல்கிறது -
  •  - இதைப் பற்றி பாரசீக மன்னனாகிய தைமூரின் மகனின் ஆணைக்கிணங்க - பாரசீக வரலாற்றிஞன்(Hafiz-I-Abru) எழுதிய உலக வரலாற்று நூலில் இதே போன்ற பெருவெள்ளம் பற்றிய கதையாக வரலாறு வருகிறது.
நிற்க:
    - உலக வரலாற்றில்  கடற்கோளால் அழிந்த நகரங்களும் நம் சங்கத் தமிழ் மதுரையையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா??

அப்படிப்பட்ட ஒரு அழிவைப் பற்றிய செய்தியையும், இறைவனின் காத்தலையும் சொல்லும் மற்றுமொரு பிரம்மாண்டப் படைப்பு தான் மாமல்லையின் கோவர்தனகிரிச் சிற்பக் காட்சி. இறுதியில் மாமல்லையே அப்படியொரு  பேரழிவைச் சந்தித்திருக்கிறது என்பது தான் துயரமான நிகழ்வாகிவிட்டது.

பெருவெள்ளத்தைக் காட்டும் அத்தனை புராணங்களிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது. பூமியில் வாழ்ந்த பல உயிர்கள் ஒரு பேராபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறன, அந்த தப்பித்தலுக்கான காரணம் FITTEST என்று அறிவியல் நோக்குடனும், இறைவன் என்று பக்தி நோக்குடனும் சொல்வது மனித இனம் மட்டுமே என்கிற பேருண்மை தான் அது.

அடுத்தப் பதிவில் சிற்பங்களோடு பேசுவோம். 

உங்களது கருத்துகளை தெரிவித்தால் நான் பெரிதும் ஊக்கமடைவேன்

- ஜீவ.கரிகாலன்

திங்கள், 23 டிசம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 51, கொற்றவையின் காலம்

கொற்றவையின் காலம்


முதல் பகுதியைப் பார்க்க

மாமல்லை அர்ஜூனன் தபசு வழியாக மேலேறினால் பழைய கலங்கரை விளக்கத்திற்கு கீழே இருக்கும் குகைக் கோயிலில் தான் மகிஷாசுரமர்த்தினியின் போர் சிற்பக் காட்சித் தொகுதி அமைந்திருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆட்சியில் கடைசியாக செதுக்கப்பட்ட தொகுதி என்று ஒரு வழிக்காட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன், அது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

மகிஷாசுரனை எதிர்த்து கொற்றவை செய்யும் உக்கிரமான போர்க் காட்சி புடைப்புச் சிற்பமாக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுதும் பல கோயில்களில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் மஹிஷாசுரமர்தினியின் சிற்பமும், போர் காட்சியும் படைக்கப்பட்டுள்ளது, வராக சிற்பமத் தொகுதியை நாம் பார்த்தது போலவே மற்ற படைப்புகளில் இருந்து மாமல்லையின் படைப்புகள் எவ்வளவு தூரம் வித்தியாசமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இந்த சிற்பங்கள் கடலில் இருந்து வீசும் உப்புக் காற்றினாலும், தொழிற்சாலை மற்றும் வாகனங்களின் மாசினாலும் தன் பொலிவை இழந்து கொண்டே இருக்கின்றன என்பதும் வருத்தப் படவைக்கும் விஷயம்.

இந்த போர் காட்சி சிற்பங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஓவியர் சந்ருவின் ஓவியம் எனும் மொழி, நா.பாலுச்சாமியின் அர்ஜூனன் தபசு போன்ற நூல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது, இவற்றோடு இணையம் வாயிலாக கொற்றவையின் பல்வேறு சிற்பங்களைப் பார்த்து வரலாம். இணையத்தில் கிடைக்கும் பல்வேறு கொற்றவை குறித்த சிற்பங்களில் மகிஷாசுரனின் சிரத்தை வெட்டிய பின்பு இருக்கும் காட்சி தான் உருவாக்கப் பட்டுள்ளது. மாமல்லையின் சிற்பங்கள் தான் அந்தப் போரின் உச்ச கட்டத்தை காட்சிப் படுத்தியுள்ளது.

மகிஷாசுரமர்தினி சிற்பத் தொகுதி, மாமல்லை


அர்ஜூனன் தபசு எனும் நூலில் இந்த போர் காட்சியானது நாகர்ஜுனகொண்டாவில் உள்ள ஒரு போர்க் காட்சியோடு ஒப்பிடப்பட்டு, இரண்டு போர் காட்சிகளுக்கும் இடையேயான ஒற்றுமையை ஆசிரியர் கூறுகிறார் (பக்கம்:395), இது ஒரு முக்கியமான ஒப்பிடல். இது பல்லவ மன்னர்களின் கலைத் தேடல்களைப் பற்றிய ஒரு பிரக்ஞையை நம் மனதில் உருவாக்கிவிடுகிறது. இந்த தேடலைச் சாதாரணமான தேடல் என்று எண்ணிவிட முடியாது, ஏனென்றால் அந்தத் தேடலின் காலம் முழுமை பெற ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருந்தது என்று சொல்லலாம். இதற்கு ஆதாரமாகத் தான் கிட்டதட்ட 200 (590லிருந்து -730 வரை)ஆண்டுகளாக , அதாவது ஏழு தலைமுறைகளாக ஒரு கலை அதன் முழு வேகத்தில் இயங்க வேண்டுமட்டும் தேவைப்படும் ஒரு அதியுன்னத லட்சியத்தை அவர்கள் மனதில் வைத்திருந்தனர். மன்னர்களும் சிற்பத்துறையில் வல்லுனர்களாகவே இருந்துள்ளனர்கள் என்றும் தெரிந்து கொள்ள இடம் வகுக்கிறது.  ஏனென்றால் இங்கிருக்கும் முக்கிய சிற்பப் படைப்புகள் 02ம் நூற்றாண்டு வாக்கில் உருவான மாபெரும் கலைப் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு( நாகர்ஜுனகோண்டா, மகேந்திரபுரி, அஜந்தா- எல்லோரா) ஒரு நாட்டினையே கலைவளமிக்க நாடாக உருவாக்கி வந்திருந்தனர் இந்த பல்லவ மன்னர்கள். சிற்பங்கள், ஓவியங்கள், ஆடைகள் நெசவு என பல்லவர்களின் தேசம் சிறப்புற்றிருந்தது. இந்த தாகம் தான் அங்கோர்வாட் எனும் உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான படைப்பின் அடித்தளம்.

இந்த சிற்பத் தொகுதியில் நாம் பார்க்கும் காட்சி போரின் உச்சக்கட்டம்; மகிடன் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் காட்சி உடனிருக்கும் அசுரர்கள் யாவரும் தோல்வி முகத்தோடு இருக்க, மகிடன் மட்டும் அடுத்தடுத்த தந்திரங்களை கையாண்டு கொற்றவையோடு போர் புரியும் பாவனையுடன் இருக்கிறான். தன் இடக் காலை சிறிது மடக்கி, வலக்காலை சாய்வாக ஊன்றி ஒரு கையில் ஆயுதத்தைத் தூக்கியபடியும் மற்றொரு கையால் அதைத் தாங்கியபடியும் நிற்கின்றான். புராணத்தின் படி பல உருவங்கள் மாறி உருப்பெற்று போர் புரிகின்றான்.  எல்லா நிலைகளிலும் உக்கிரமான  போர் புரியும் கொற்றவை மற்றும் அவளது கணங்கள் சூழந்த படை வெற்றி பெற்று வருகிறது. இறுதியில் மகிடனும் கொற்றவையும் நேருக்கு நேர் போர் புரிகிறார்கள்.

சிற்பக் காட்சியில் நீங்கள் பாருங்கள் கொற்றவையின் படையைச் சேர்ந்த கணங்கள் முகத்தில் இறுதி வெற்றியை நோக்கி முன்னேறும் பரவசம் தெரியும், கொற்றவையின் முக்கிய படை வீரராக முன்னே நின்று போர் செய்யும் மற்றொரு பெண் கையில் வாளினைச் சுழற்றியபடி கீழே அமர்ந்து எழும் நிலையிலும், ஒரு அசுரன் தேவியின் தாக்குதலில் உயிரிழந்து கீழே விழும் காட்சியும் நம்மை ஒரு நிமிடம் போர்க் காட்சியை நம்மை பயமுறுத்தத் தான் செய்கிறது என்பது உண்மை, மகிடனின் பின்புறம் நிற்கும் சில அசுரர்கள் புற முதுகுக் காட்டி போகிறார்கள். மகிடனின் சிற்பம் அழகுணர்வையும் (Aesthetic) தருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் ஒரு தாக்குதலில் இருந்து தந்திரத்தால் தப்பித்து அடுத்த தாக்குதலைத் தொடங்குவதற்கு எத்தனிப்பது போல மகிடனின் சிலை அமைந்திருப்பது ஒரு சிற்பத் தொகுதி மூலமாக கடத்தப்படும் அற்புத உணர்வு, ANTI-HEROக்களின் பலம் தான் HEROக்களின் திறனை வெளிக்கொணரப் பயன்படுகிறது என்பதால் தானோ மகிடனின் சிற்பம் அத்தனை கலையுணர்வோடு நம்மைக் கவர்கிறது??

கொற்றவை போர் புரியும் காட்சி, தன் நான்கு ஜோடி கைகளில் ஒரு கை வில்லினை ஏந்திக் கொண்டும் மற்றொரு கை அடுத்த அம்பை எடுப்பதற்கும் தயாராக இருக்க, மற்ற கரங்களிலெல்லாம் பல ஆயுதங்கள் இருக்கின்றன. சிவனிடமிருந்து பெற்ற சூலம், விஷ்னுவிடம் பெற்றிருந்த சக்கரம், பிரம்மனிடம் பெற்றிருந்த வில் அம்பு , இவற்றுடன் கதை, வட்டு, கேடயம், சுருக்குக் கயிறு, சங்கு என இருக்கின்றது. கொற்றவை மற்றும் போர் புரியும் மற்ற யாவரின் கைகளிலிம் உலோகங்களால் ஆன ஆயுதம் என்று சொல்லப் போனால் வாளாக மட்டும் இருக்கக் கூடும் மற்ற ஆயுதங்கள் யாவும் உலோகமின்றி தயாரிக்கக் கூடியதே அவை கற்களாலும், மரத்தினாலும், யானைத் தந்தத்தினாலும், கடற்பாறைகள்/ஓடுகள்/விலங்கினங்களின் எலும்பினைக் கொண்டோ தயாரிக்கப் படும் (புராணத்தின் படி இந்திரனின் ஆயுதமான வஜ்ரமும் ஒரு முனிவரின் தியாகத்தால் அவரது முதுகெலும்பில் இருந்து எடுக்கப்பட்டது தான்). அதே சமயம் வாள்களும் கற்களினால் வடிக்கப் பட்டிருக்கின்றன, அவை வரலாற்றிட்கு முந்தைய காலக் கட்டத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இந்த சிற்பக் காட்சியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மொத்த ஆயுதங்களையும் கணக்கில் கொண்டால் இந்தப் புராணம் உலோகக் காலத்திற்கு (Metal Age)முந்தைய காலக்கட்டத்தையே குறிக்கின்றது என்பது இந்த மாமல்லையின் சிற்பக்காட்சி வாயிலாகவும், அதனையொட்டி வாசித்த சில புத்தகங்கள் மட்டும், இணைய வாசிப்பினையும் வைத்து வரும் முடிவு.. எதற்காக நான் இந்த முடிவுக்கு வர வேண்டும்?? என்ன அவசியம் இருக்கிறது ? என்று நீங்கள் கேட்டால் - நான் மீண்டும் சொல்லப் போவது  - புராணம் எனும் கருவியில் புதைத்து வைத்து தலைமுறை, தலைமுறைகளில் ஒளிந்திருக்கும் நமது வரலாறுகள், இன்றைய காலத்தின் தேவை என்பதை நான் உணர்வதாலேயே. ஆக கொற்றவையின் காலமாக நாம் வழிபடுவது 10000 ஆண்டுகள் பழமையானது என்று சொல்வதற்கு இடமிருக்கிறது

ஆம், ஆங்கிலத்தில் Syncretism என்று ஒரு சொல் உள்ளது, அது பல்மத தன்மைக் கொண்ட ஒரு பொருளையோ, தத்துவத்தையோ அல்லது சடங்கினையோ குறிக்கும் தன்மை. இந்தியத் துணைக் கண்டம் போன்ற  பெரும் நிலப்பரப்பு பல்வேறு வகையான வழிபாடுகள் மற்றும் சடங்குகளையும், மத நடவடிக்கைகளாலும் பல்வேறு மாறுதல்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டே உருவானது தான் என்பதை பல வரலாற்றாய்வாளர்கள் கருதுவதற்கு இந்த SYNCRETISM எனும் பரிமாணம் தான் அடிப்படை. இந்த அடிப்படை தான் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு நான்கு திசைகளில் இருக்கும் பல்வேறு வித்தியாசங்களுக்கும் மத்தியிலும் ஒரு மையப் புள்ளியை கண்டுணர வகை செய்கிறது. இதற்கு கொற்றவை வழிபாடும் ஒரு எடுத்துக் காட்டு என்று சொல்ல இடமிருக்கிறது. ஆனால் இந்த வழிபாடு வாயிலாகக் கிடைக்கும் ஒரு உண்மை தமிழர்களின் தொன்மையை இந்த மண்ணில் மிக முக்கியமான ஆதாரத்தோடு நிரூபிக்கிறது அதை அடுத்தப் பகுதியில் காண்போம்...



9ம் நூற்றாண்டு சிற்பம் - ஜாவா தீவு
இந்தோனேஷியா
ப்ரூக்லின் அருங்காட்சியகம் - 18ம் நூற்றாண்டு ஓவியம்
image courtesy: Wikipedia

நன்றி
ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மகிஷாசுர மர்தினி - நமது வரலாற்றில்



போர் மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான் வரலாற்றை வாசிக்கத் தூண்டும் வஸ்துக்கள். புராணங்கள், இதிகாசங்கள், மத வரலாறு, கலைப் படைப்பு என வரலாற்றின் அடுத்த அத்தியாயங்கள் இந்த இரண்டில் ஒன்றைப் பற்றியபடி தான் அடுத்தடுத்து நகர்கின்றன. அதே சமயம் ,

வரலாறு என்பது உண்மை மீது சுதை பூசி, வெள்ளையடித்து, வர்ணம் தீட்டுவது...
*அதிகாரம் கொண்டு சுரண்டிப் பார்த்தால், உண்மையை உயிருடன் மீட்க முடியாது.
*சில சமயம் அந்த உண்மையை மீட்பதாய் சொல்லி,  அவற்றின் மீது SAND BLAST செய்யப் படலாம்
*காலத்தின் கணக்குகளில் எல்லா லேயர்களும் உரிந்து நிர்வாணம் அடைந்து விடும்

#நாம் செய்ய வேண்டியது எல்லாம் 35 மார்க் வாங்கி பாஸாகிவிட வேண்டும் என்பது தான்..
***************************************
கொஞ்சம் பெரிய இடைவெளி தான் மாமல்லை சிற்பங்களைப் பற்றி பேசுவது என்பது என்னைப் பொருத்தவரை எந்த அளவு மகிழ்ச்சி தரக்கூடியதோ, அதே அளவு பொறுப்பினையும் தந்துவிடுகிறது. தவறான விவரனைகள் ஜோடனைகளான வார்த்தைகளிலோ, தவறான குறிப்புகள் அல்லது தரவுகளையோ தந்து செல்லும் கட்டுரையாக இருப்பது மிக ஆபத்தானது. வாசிப்பின் சௌகரியத்திற்காக வரலாறு மட்டுமல்ல தவறான பின்புலத்தோடும், சரியான அளவீடுகள் கொண்டு பார்க்கப்படாத அறிவியல் தகவல்களும் கூட ஒட்டு மொத்தமாக நோக்கத்தை சிதறடித்து விடும்.
அது எப்படி அறிவியல் முடிவுகள்/தகவல்கள் கூட ஒரு கலை விமர்சனம் பற்றிய தீர்ப்புகள்/வரைவுகள்/கருத்துகளுக்கு ஆபத்தாகின்றன என்றால், அது அப்படித் தான்:

 ரோமன் தகவல் களஞ்சியத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் நிறைய அறிவியல் கூற்றுகள், தேற்றங்கள், கண்டுபிடிப்புகள் பொய்த்துப் போயிருக்கும் அல்லது காலாவதியாயிருக்கும். இதற்கு காரணம் அறிவியல் தன்னை பாம்புச் சட்டையைக் கழட்டுவது போல் தன்னிடமிருந்தே தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தேர்ந்த உயர்ரக மற்றும் எளிமைப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அறிவியலை எந்தப் பக்கமும் எளிதில் சாய்த்து விடுகிறது.


சரி, உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?? மாமல்லை சிற்பங்கள் பற்றிப் பேசுவதற்கு எதற்கு இத்தனை சுத்தி வளைப்புகள் என்று கேட்கிறீர்களா??
ஆமாங்க அரசியல் இருக்கு, புரானங்களை இப்படிப் பார்ப்பதற்கு உங்கள் மனம் இடமளிக்கிறதா என்று உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்க ஒரு வழி:
அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றைப் பதிந்து வைப்பதற்கான Toolகள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். . இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் இதிகாசம் மட்டும் புராணங்களை அன்றைய வரலாற்றை தொகுக்கப் பயன்படுத்திருக்கும் கருவியாக நான் பார்க்கிறேன், என்ன அவற்றிற்கு அழகியல்(Aesthetic) மற்றும் கலை(Artistic) முலாம்கள் பூசப்பட்டிருக்கும். என்னளவில் தெளிவாக சொல்ல முடிந்ததெல்லாம் பெரிய புராணம் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவனம் என்று சொல்ல முடியும், ஆனால் இன்றைய அறிவியல் மற்றும் கல்விக் கொள்கைக்கு அவை எதிரானது. நிற்க.. மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள் புராணங்களும், இதிகாசங்களும் முன்வைக்கும் வரலாற்று செய்திகள் இன்றைய கல்விக் கொள்கைகளின் காரணமாகவே நீக்கப் படுகின்றன.


”இது என்ன அபத்தம் கல்வியைச் சாடுகிறாய்?” என்ற கேள்வி வரலாம். பின்நவீனத்துவம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனையான குறியீட்டுத் தன்மை எனும் படிமம் நமது புராண,இதிகாச/பக்தி இலக்கியங்களில் கூட நிறைந்திருக்கிறது. பாரதத்தில் யமுனா நதிக்கரையோர யாதவப் பெண்களுடனே உல்லாசமாக வாழும் கிருஷ்ணன் தன் கையில் வைத்திருக்கும் குழல் மாடு மேயத்தலின் போது பாடுவதற்காக வைத்திருக்கிறான், பலராமர் ஏந்திக் கொண்டிருக்கும் ஏர் உழவனுக்கானது.. ஒரு உழவனும், ஆயரும் சேர்ந்து வாழ்ந்த யமுனா நதிக்கரையின் வாழ்வியலை இது போன்ற ஆயுதங்களைப் பற்றிய அறிவினைக் கொண்டு  தெரிந்து கொள்ளலாம், ஒரு விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டுமென்றால் அதற்கு முக்கியப்பங்கு மாடுகளுக்கு தான் இருந்தது என்பது இன்றளவும் கூட உண்மையான விஷயம் தான்.. ஆற்றோரங்களிலே விவசாயம் எனும் தொழில் மூலம் நாகரிகம் அடைந்து விட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக அவர்கள்(க்ருஷ்ண - பலராமன்) காட்டப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அவதாரங்களிலும் ஹீரோக்களின் வதம் செய்யும் ஆய்தங்களைல் கொண்டு அவர்கள் வாழ்ந்திருப்பதாய் நம்பப்படும் காலத்தை நாம் புரிந்து கொள்ள இடமளிக்கிறது.. Symbolism என்பதை நவீன இறக்குமதிச் சிந்தனையாகப் பார்ப்பது எத்தனை கயமைத் தன்மை கொண்டது. தசாவாதாரத்தில் தனது உடல் பலத்தால் முதல் மூன்று அவதாரங்களிலும், நான்காவது அவதாரத்தில் நகங்களாலும் வதம் செய்திருப்பது மிகப் பழமையான  காலத்தை காட்டுகிறது (Pre-Historic Times: Upper Paleolithic to Neolythic), அடுத்து ஞானவதம் (வாமண) அதற்கடுத்த காலம் கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனிடமிருந்து உலோகக் காலம் ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து  வருபவை வில், அம்பு, சக்கரம் என்றெல்லாம் கொண்டு வரும் குறியீடுகள் காலத்தை கண்டரிய உதவும்.


இப்படித் தான் மஹிசாசுரனை வதம் செய்யும் துர்கையின் சக்தியை வியந்து பார்ப்பதோடு அவள் காலத்தின் போர் செய்தியை, இந்த சிற்பத் தொகுதியின் உதவியோடு தெரிந்த கொள்ள இடமிருந்தால் தேடுவதும் /பரப்புவதும்; இல்லா விட்டால் கலை விமர்சனம் செய்வதோடும் நகர்ந்து விடுதல் நல்லது தான். அப்படிப் பட்ட ஒரு முக்கியமான சிற்பத் தொகுதி தான்  மகிஷாசுரமர்த்தினி செய்யும் யுத்தக் காட்சி, இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று தனியாகவே மாமல்லை சென்று திரும்பி வந்தது உண்டு. அதுவும் வெறும் மகிஷாசுர மர்த்தினியின் சிற்பக் காட்சியை மட்டும் பார்த்து விட்டு (சில மணி நேரங்கள்) கிளம்பி வந்துள்ளேன்.


அடுத்தப் பகுதியில் மகிஷியின் சிற்பத் தொகுதியை அருகில் நின்று பார்ப்போம்...

ஜீவ.கரிகாலன்

சனி, 7 செப்டம்பர், 2013

வராக மண்டபம்: ஈகோவும், எகோவும். - மகாபலிபுரம் -07

வராக மண்டபத்து ஈகோவும், எகோவும்

மகாபலிபுரம் 07- பஜ்ஜி சொஜ்ஜி - 35


இது முழுமையாக சிற்பங்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் என்று நான் எழுத ஆரம்பிக்கவில்லை. சிற்பங்கள் பேசும் மொழியினை, அதன் பின் புலக் கதையினை, சிற்பத்தின் மனநிலையை, அதை நவீனச் சூழலுக்கு ஏற்ப ஒரு சாமாண்யன்யனால் அனுகக்கூடிய வாய்ப்புகளைப் பற்றியே இதுவரை தேடியிருக்கிறோம். இந்தச் சிற்பங்களின் வாயிலாக வரலாற்றில் நடந்திருக்கும் ஏதேனும் ஒரு பிழை அல்லது தவறு என முடிவுக்கு வரும் SPACEஐக் கூட அதே சிற்பங்கள் தான் தருகிறதே.. அது தான் வரலாற்றின் தன்மையே அது சார்பற்றது, அதை எந்தத் திசையில் இருந்தும் பார்ப்பதற்கு அதை அனுமதிக்கும். இவ்வாறே புராணங்களை வரலாற்றை அணுகும் விதம் போல நெருங்கினால் எந்த தீங்கும் இல்லை.

 யுத்தம் என்பது உலகின் எங்கோ ஒரு புள்ளியில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது, 300 -400 ஆண்டுகளுக்கு முன்பு Super power நாடுகளாக இருந்த இந்திய/சீன நாடுகளில் ஒவ்வொரு பிராந்தியமும் போர்ச் சூழல் கொண்டதாகவே இருந்து வந்தன, இன்றைய சூப்பர் பவர்களான அமெரிக்க மற்றும் ரஷ்யா அதைத் தான் செய்துக் கொண்டிருக்கின்றன. நாகர்கள் மீதான தெய்வங்களின் தொடர்ந்த யுத்த கணக்குகள் கூட, அதை சிற்பங்கள்/புராணங்கள் வாயிலாகக் காட்டிய கலைஞர்களின் முயற்சியில் தான் சாத்தியமாகிறது, இந்த கலைப் பதிவுகளே!! இப்புராணங்களுக்கும், கலைப் படைப்புகளுக்கும் எதிரான அரசியலை முன் வைக்கும் இடத்தையும் தாமாகத் திட்டமிட்டே தருகின்றன.

வராக மண்டப்த்தின் நாற்புறத்திலும் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து வெளியே வர முடியாமல், இன்னும் சில நேரம் அங்கு தங்க வைக்க மற்றுமொரு விசயம் இருக்கிறது, அதற்கு நீங்கள் அன்னாந்துப் பார்க்க  வேண்டும். அட!! இது சாதாரண ஸ்ரீசக்ரம் தானே என்று சொல்லலாம், அது தான் சரி, வாயில் வழியாக சென்றதும் அர்த்த மண்டபத்தின் கூரையில் செதுக்கப் பட்டிருக்கும் மூன்று தாமரைகள் (விரிந்த நிலையில் இருக்குமாறு Bird's iye viewல்), பக்தி மார்கத்தின் ஸ்ரீசக்ரமான இவற்றின் வண்ணங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றது, காவி வண்ணம் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கு கீழ் நின்று நீங்கள் சப்தமிட்டால், அதன் ரிங்கார எதிரொலிதான் இந்த மண்டபத்தின் மற்றுமொரு சிறப்பு, வெவ்வேறு இசை கேட்கும் வகையான தூண்கள் எல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டது தான். ஆனால் இதில் சாதாரன எதிரொலியாக அல்லாமல், ஒரு சங்கு அல்லது இரண்டு மணி ஓசைகளுக்கு இடையே ஆன ஒரு ரிங்காரம்(இது கூட சரியான பதமா என்று தெரியவில்லை). அதன் ஓசை நமது அசையின் மாத்திரை நீளத்தை விட மிக அதிக நேரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் சரியான Syllable(அசை)யினை மிகச் சரியாக சொல்ல வேண்டும்.

நான் ஒரு பத்து பதினைந்து முறை, வெவ்வேறு இடங்களில் இருந்து எதிரொலி கேட்டேன், “ஓம்” என்பது மிக முக்கியமான அசை என்பதை மறுக்க முடியுமா.. நான் இப்படி கத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு guide-உடன் வந்திருந்த ஒரு கொரிய நாட்டவன், என்ன Mantra சொல்ல வேண்டும் என்றான், "Whatever the syllable you like?" என்றேன். வெறும் “ம்” என்றான். அது“ம்ம்ம்ம்ம்”  என்று எவ்வளவு நேரம் ஒலித்துக் கொண்டே இருந்தது!!??.அவன் சென்ற பின்னர், மீண்டும் தனித்தே முயற்சித்துக் கொண்டிருந்தேன். மற்றொரு வடநாட்டவனும் என்னிடம் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்று விசாரித்தான், சொன்னேன். அவ்வளவு தான் ஆவணி அவிட்டம் போல காயத்ரி மந்திரம் சொல்லிப் பார்த்தான், ஒரு ஓசையும் திருப்பிக் கேட்கவில்லை.

ஒரு எதிரொலியும் கேட்காததால் -என்னைப் பார்த்தான். “you are looking for the idol not his voice”என்றேன், சிரித்தான். மறுபடியும் ”ஓம்” என்று மட்டும் சொல்லிப் பார்த்திருக்கலாம், after-all மறுபடியும் ஒரு முன் பின் தெரியாத மனிதனிடம் தோல்வியடைவதா என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.  There is no place for Echo when Ego exists.

ஆனால் இந்த வடநாட்டவனுக்கு மட்டுமல்ல, என்னுடன் வந்த மொத்த குடும்பத்திற்கும் இது கிடைக்கவில்லை. என்னுடன் என் தங்கை மட்டும் சித்தி மட்டும் மீண்டும் மீண்டும் அதைக் கேட்டு ரசித்தோம். உண்மையில் என் குடும்பத்தினர் போல பலருக்கு அதில் நாட்டமில்லையா அல்லது அதில் அதிசயப்படுவதற்கோ அல்லது ஆச்சரியப் படுவதற்கோ ஏதுமில்லை என்று நினைக்கிறார்களா?? தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் தான் சரியென்றால் எனக்கு இது மேலும் ஒரு fiction..

ஆனால் நான் சொல்வதும் சரிதான், cymatics பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறிர்களா? ஒளி வடியம் போன்று ஒலியின் வடிவத்தை அறிவது, உண்மையில் முதன் முதலில் இது உணரும் (திறணாக)பயிர்ச்சியாக இருந்தது, இன்றைய நவீன அறிவியல் தான் இதை அறியும் திறனாக மாற்றியிருக்கிறது. சமஸ்கிருதத்தின் அக்‌ஷரம், நமது மொழியின் அசை என்ற அலகுக்கு ஒத்தானது.

ஓம், ஸ்ரீ போன்ற எல்லா அக்‌ஷரங்களுக்கும் ஒரு வடிவம் இருக்கிறது. இன்றைய அறிவிலறிஞர்கள் இந்த ஓம் எனும் அசையின் வடிவமாக இந்த ஸ்ரீயந்திரத்தின் வடிவத்தைக் காட்டுகின்றனர். இணையத் தரவுகளிலே நாமும் இதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம், இதற்கான மென்பொருளான டோனோ ஸ்கோப்பினை தரவிரக்கம் செய்து நாமும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

அந்த ஸ்ரீயந்திரம், சக்கரம் அல்லது தாமரை எனப்படும் வேலைப்பாட்டிற்கு கீழே நின்று ஓம் என்று கூறினால் உங்களால் மிக துல்லியமாக ஒரு ரிங்கார எதிரொலியைக் கேட்க முடியும், அதை யார் செய்தாலும் கேட்க முடியும். இந்த கலைப் படைப்பு யாரையும் பாகுபடுத்திப் பார்க்கவில்லை, நமக்கு தான் நம்பிக்கை இல்லை, ஓற்றுமை இல்லை, அன்பு இல்லை, பொறுமை இல்லை, சந்தோஷம் இல்லை , தேடல் இல்லை - பின்னர் வாய்ப்புகள் இருந்தும் கொடுப்பினை இல்லை.

அடுத்த பதிவில் கொஞ்சம் மலையேறுவோம் மகிஷாசுரமர்த்தினி காத்துக் கொண்டிருக்கிறாள்.

தொடரும்

ஜீவ.கரிகாலன்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

வாள் நட்சத்திரம் எனும் CRUXன் கதை - மகாபலிபுரம் -06

வாள் நட்சத்திரம் CRUX - த்ரிவிகர்ம சிற்பத் தொகுதி - மகாபலிபுரம் -06

(பஜ்ஜி சொஜ்ஜி - 33 சிற்பம் ஓவியம் ரசனை)

கவனிக்க : இது  ஒரு வால் நட்சத்திரம் அல்ல, வாள் நட்சத்திரம் ஆகும்

என்னடா இது நட்சத்திரக் கூட்டத்தைக் காண்பித்து ஒரு சிற்பத்தின் குறியீடாகக் காட்டுகின்றேனே என்று குழப்பம் அடைய வேண்டாம். இதைக் குறியீடாக நான் புனைவு கொள்ளும் போது தான் இந்த சிற்பத் தொகுதியின் பிரம்மாண்டம் விஸ்தீரனமாகின்றது.
குறிப்பு: வலது புறம் கீழ் இருப்பவன் இந்திரன் (வாளின் பிடியில் கைவைத்தபடி)

சென்ற பதிவில் நாம் விவரித்தோமே!! விஸ்வரூபம் கொண்ட திருமாலின் இரண்டடிகளைக் கண்டு அசூரர்கள் கவலை கொண்டிருக்க அவர்களைப் பார்த்துக் கொண்டு சற்றுத் திரும்பியபடி இருக்கும் சிற்பமான இந்திரனைக் கொல்லத் துடிப்பது போல அந்தரத்தில் நிலையில்லாத ஒருவன் கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரியும்.

அவனை நன்றாகப் பார்த்தால், அவன் தொங்கிக் கொண்டிருக்கும் உயரம், தேவர்களான சூரியன், சந்திரன் ஆகிய இருவருக்குமான மேலோகம் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம், ஆனால அவன் அதே திசையில் தொங்கவில்லை, மேலுலகத்தில் ஈர்ப்பு விசை இல்லை என்றாலும் அவன் மற்றவர்களுக்கு எதிரான திசையில் தொங்குவது போல் தெரிகிறது... இந்தச் சிற்பத் தொகுப்பைப் பற்றி சில நூலகள் மற்றும் இணையம் வாயிலாகத் தேடியதில் ஒரே மாதிரியான தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை, அதாவது அங்குத் தொங்கிய வண்ணம் இருப்பவனைப் பற்றி பல்வேறு கருத்துகள் வருகின்றன, முனைவர் சா.பாலுச்சாமியின் ”அர்ச்சுனன் தபசு” எனும் நூலில் அவனை நமுச்சி எனும் அசுரனாகவும், அவனை மகாபலியின் மகன் என்றும் கூறுகின்றார். ஆனால் மாபலிச் சக்ரவர்த்தியின் ஒரே மகன் என்று சொல்லப் படுபவன் பானாசுரன் என்று சொல்லப் படுகிறது.

சில நூல்களில் மாபலியின் மகனாக வாமணன் மீது கோபம் கொண்டு வருபவனை, வாமணன் எட்டி உதைத்து விட அவன் அந்தர லோகத்தில் பறக்கிறான் என்று சொல்லப் படுகிறது, நான் ஏற்கும் கூற்றாக இவனை திரிசங்கு என்று வைத்துக் கொள்ளவே இச்சிர்பம் இடமளிக்கிறது. திரிசங்கு எனப்படும் மன்னன் பூதவுடலோடு சொர்க்கம் செல்லும் பேராசையில், விஷ்வாமித்ரரின் ஆசை பெற்று சொர்கத்திற்கு செல்லும் பொழுது அவன் இந்திரனால் தடுக்கப் படுகிறான், பின்னர் அவனுக்கு மேலுலகமும் அல்லாமல் பூவுலகும் இல்லாமல் அந்தரத்தில் ஒரு சொர்க்கம் விஸ்வாமித்ரரால் சிருஸ்டித்துத் தரப் படுகிறது. அந்த திரிசங்கு தான் மகாபலியின் அசுர கணங்களை எதிர்க்க தயாராக இருக்கும் இந்திரனின் சிலைக்கு மேலே கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருக்கும் சிற்பம் என்று சொல்வது சிறப்பான பதிலாகக் கிடைக்கிறது.

Fiction:
புராணங்களில் மறைந்திருக்கும் அல்லது மறைந்திருப்பதாகத் தோன்றும் குறியீடுகள் யாவுமே சமகாலத்து வாசிப்பிற்கான இடத்தை அளிக்கின்றன என்பது என் கருத்து, அதன் மூலம் நமது அறிவியல், சமூகப், பொருளாதார வாழ்க்கை முறைமை பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன. அசுரர்கள் யாவருக்கும் (தலித்தியக்) குறியீடுகள் பொருந்திப் போகின்றன, இணையத்தில் மகாபலியை நான்காம வர்ணத்தைச் சேர்ந்தவனாகவே காட்டுகின்றனர், இராவணனை அந்தனர் என்று சொல்லியும் கேட்டிருக்கிறேன், பிறப்பால வேறு வர்ணத்தைச் சார்ந்தவன் வேறு தொழில்களில் இருப்பதை இப்புராணங்கள் காட்டுகிறது. கிருஷ்ணனும், பலராமனும், வராக மூர்த்தியும், மாருதியும் நான்காம் வர்ணம் தானே!! இறைவனுக்கு பெரும்பாலும் நடக்கும் திருமணம், பெரும்பாலும் வேறு ஒரு குடி(Clan)யைச் சேர்ந்த தலைவியோடு தான். ஆனால் அவர்கள் ஏன் அசுரர்களாகவே சித்தரிக்கப் படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறதே!! அதே சமயம் அவர்கள் எல்லோருமே வினை முடித்து நட்சத்திரமாகுவதாகவும், இறைவனோடு சேர்ந்து விடுவதாகவும் வருகின்றது.

இந்த நட்சத்திரம் பற்றி தானே போன தொடரில் விவாதித்தோம் எதற்காக நட்சத்திரத்தின் குறியீடாக அங்கு அந்தரத்தில் தொங்குபவனைக் காட்டினோம்?? திரிசங்கு என்று சொல்லப் படுதல் ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை வெறும் கட்டுக்கதை என்று புறக்கணித்தல் ஆகாது, உலகம் முழுவதுமுள்ள பண்டையக் கலாச்சாரங்களில் த்ரிசங்கு என்று சொல்லப் படும் நட்சத்திரக் கூட்டம் பற்றிய புராணக் க்தைகளும், நம்பிக்கைகளும் இருக்கின்றன.

சொல்லப் போனால் கி.மு 15ம் நூற்றாண்டுக்கு முந்தைய பாபிலோனிய, கிரேக்க, எகிப்திய சீன் நாகரிகங்களிலும், தொல் ஆஸ்திரேலியப் பழங்குடி, மாயன், அரிஜெண்டினா என்று இந்த நட்சத்திரக் கூட்டம் (CRUX) பற்றிய கதைகள் இருக்கின்றன.இன்று வரை இந்த ந்ட்சத்திரக் கூட்டத்தின் முக்கியத்துவம் இருக்கிறது, இதை நீங்கள் இந்த நாட்டுக் கொடிகளில் காணலாம்.


எப்படி இந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்தது என்று பார்த்தோமேயானால்? அதற்கு கிடைக்கும் விடை மிக எளிமையானது, இரவு நேரங்களில் சம வெளியிலோ அல்லது பாலைவனத்திலோ ஏன் முக்கியமாக கடல் பயணங்களில் கூட இந்த நட்சத்திரக் கூட்டம் தான் தெற்கு திசையினைக் காட்ட உதவும், அதனால் தான் இதனை Southern Cross என்றும் சொல்லுவர்.  கிரேக்க மற்றும் எகிப்திய நாகரிகங்கள் அதை ஒரு (இறந்த பின்னும் அவர்களைக் காக்கும்)அரசன் கையில் வாள் ஏந்தி நிற்பது போல உருவகப் படுத்தினர், என்ன இத்தொகுப்பில் தொங்கும் திரிசங்கும் அப்படித் தானே இருக்கிறான். சமீபத்தில் இந்தக் கதையினை (Ancient Aliens) எனும் tv Seriesலும் இதைப் பார்த்தேன்.

சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் அவன் தலை கீழாகத் தான் தொங்கிய படி இருப்பான், நமது நம்பிக்கைகளின் படி 88 நட்சத்திரக் கூட்டம் இருக்கும் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் (அது உண்மையில் நட்சத்திரத் தொகுப்பு) தானே பெயர் சொல்லியுள்ளோம், அப்படியென்றால் இந்த CRUX  எனும் நட்சத்திரக் கூட்டம் என்ன நட்சத்திரமாக இருக்கும், அந்த 22வது நட்சத்திரமா ?? ஆமாம் அதன் பெயர் என்ன திருவோணம்...

அட அது தான் திருவோணம்!!! வாமணனின் மூன்றாவது அடியால தலைக்கணம் ஒழித்த மாபலிச் சகரவர்த்தி, இறந்த பின் தன் பாட்டனாராகிய பிரகலாதனைப் போன்று நட்சத்திரமாக இறைவன் வரமளிக்கிறார், அது தான் திருவோணம் என்று கூறுகின்றனரே என்றும் கேள்வி எழுந்தது என்னுள். ஆம் அதுவும் சரி தான் பிரகலாதன், மாபலியைப் போல நட்சத்திரமாகுவதும், திரிசங்கு எனும் நட்சத்திரமும் அவர்களோடு சேர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் CRUX என்பது நட்சத்திரக் கூட்டம் தானே!! இப்படி வெவ்வேறு புராணங்களில்; நம்பிக்கைகளில் நட்சத்திரங்களும், மண்டலமும், வெளியுமாக பரந்து கிடக்கும் பாரத நம்பிக்கைகள் ஒரு மதத்திற்கானவை மட்டுமன்று, ஏனென்றால் இந்நாடு பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிகப் பெரியது..

ஒரு சிற்பத் தொகுதியானது, புராணத்தின் கதையினை மெருகூட்டி செதுக்கப்பட்டப் படைப்பாகவே இருக்கிறது என்று நான் உணர்கிறேன். ஆனால் புவியில் துருவ மாற்றம் மற்றும் பூமியின் சுற்றுப்பாதையின் இடப்பெயர்வு என்று 26000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழக்கூடிய shift-ஆக இதைப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் ஏற்றுக் கொள்ள இடமளிக்கிறது. இதைத் தான் Precession of Equinox என்று சொல்வார்கள். அந்த 26000 வருடங்களுக்கு ஒரு முறை பூமியின் நிலத்தட்டுகளிலும் பெரியதொரு மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆன்மிகம் மற்றும் புராணங்களில் மட்டுமல்லாது எல்லா பேரிடர்களிலும், துயரங்களிலும் இறைவன் மீது இருக்கும் நம்பிக்கை தான் கடைசி முயற்சியாக இருக்க முடியும், சமீபத்தில் ரிஷிகேசில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஒரு கோயிலின் மணியைப் பிடித்தாவாறே பல மணிநேரங்கள் தொங்கிக் கொண்டிருந்தவனை நினைவு கூர்ந்தேன்.


தொடரும்....

ஜீவ.கரிகாலன்

ஒரு திருத்தம் :ஒரு திருத்தம் : //சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் ”அவன் தலை கீழாகத் தான் தொங்கிய படி இருப்பான்” // இதில் மாற்றுக் கருத்தும் இருக்கிறது , நட்சத்திரங்களை இணைத்து வரையும் பொழுது அவன் கையில் வாள் ஏந்தியபடி தான் இருப்பான், ஒரு சமவெளியில் நின்று இதைப் பார்க்கும் பொழுது அவன் தலை கீழாய் தொங்குவான் என்கிற உருவாகம் சரியானது என்று சொல்ல முடியாது.
ஒருவேளை அவன் தெற்கு திசை நோக்கி வாள் நீட்டி இருப்பதால்... அது இச்சிற்பத் தொகுதியில் வடிக்கப் பெறும் போது தெற்குத் திசையினைக் குறிப்பதற்குப் பயன்பட்டிருக்கும்.

தகவலுக்கு நன்றி.ராஜகுரு ஜீவானந்தம்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

விஸ்வரூபம் - த்ரிவிகர்ம சிற்பத் தொகுதி - மகாபலிபுரம் -05

(பஜ்ஜி சொஜ்ஜி - 32 சிற்பம் ஓவியம் ரசனை)

           விஸ்வரூபம்

வெறும் உற்று நோக்குதலில் ஆரம்பித்தது தான், ஆனால் இப்பொழுது சிலைகள் என்னோடு பேச ஆரம்பித்து விட்டன, ஏனென்றால் புராணங்களை தொன்மை வடிவத்திலேயே பார்க்காமல் என் இன்றைய வாழ்வோடு பொருத்திப் படுத்திப் பார்க்க முடிகின்றது, அதனை அறிவியல் தத்துவத்துடனோ அல்லது முரண்களுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு அலாதிப் பிரியம் இருக்கிறது.

ஆயிரமாண்டுகளைத் தாண்டி நிற்கும் இது போன்ற கலை படைப்புகள் வரலாற்றைத் தாண்டி வேறு என்னவெல்லாம் சொல்கின்றன?. அதை அறிந்து கொள்ளப் பெரிய அளவிலான சிற்ப அறிவோ, புராண-வேத ஞானமோ, இல்லை அறிவியல் கோட்பாடுகளையோ அறிந்திடாத சாமான்யனாலும் எவ்வளவு தான் ஒன்றிட முடியுமோ?

விஸ்வரூபம் என்பது மனிதன் தன் அகந்தையை அழிக்க உதவும் காட்சி, அகந்தை அழியும் போது அவன் இதுவரை வாழ்வில் தீர்மானித்து வைத்த அத்தனை ஒப்பீடுகளும், வேறுபாடுகளும், சுயகௌரவமும் அழிந்து போய் விடும் தான் என்பது ஒன்றுமில்லை என்று தெரிந்து கொள்ளும் பொழுது. தன் கர்வத்தை அழிப்பதற்கு, தான் ஒன்றும் விஷேடமானவனில்லை, தன்னால் மட்டும் எல்லாம் முடிவதில்லை என்று எண்ணுவதற்கு, நாம் சிறியவனாக, வரியவனாக தெரிவதற்கு நம்க்கு முன் ஒரு பிரம்மாண்டம் இருக்க வேண்டும், அந்த பிரம்மாண்டம் நம் கண்களுக்கு புலனாவதில்லை எறும்பினைப் போன்று.

  ஆம், எறும்பின் பார்வையில் எதிரில் நிற்கும் நமது முழு உருவமும் தெரியுமா என்ன?? ஆனால் இங்கு ஒரு ரூபம் விஸ்வரூபம் அடைந்திருக்கிறது என்பதை உணர மட்டும் முடியும், ஏனென்றால் நாம் எல்லோரும் அகந்தை ஒழியவே விரும்புகிறோம், அதுவே உன்னதமான தேடலாக ஒரு மனிதனுக்கு இருக்க முடியும். தன்னைப் பற்றி இனிமேல் வியப்பதற்கோ, பேசுவதற்கோ இனி ஒன்றுமில்லை என்று உணரும் கணம் தான் எத்தனை விஷேசமானது?? - கடினமானது.. அதை ஒரு மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ படுத்துக் கொண்டே ஒரு அகண்ட குடையாய் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை பார்க்கும் போதும் நிகழும், அந்தக் குடைக்குப் பின்னும் மிகப்பெரிய பிரபஞ்சத்தை நாம் உணரும் பொழுது அதே மாதிரி அகந்தை அழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வராக மண்டபத்தின் இடப்பக்கச் சுவற்றில் இருக்கும் த்ரிவிகர்ம சிலைத் தொகுப்பில் இப்படி உலகை வென்ற பேரரசனினின் அகந்தை அழிந்த காட்சி புடைக்கப் பட்டிருக்கிறது. இந்தச் சிற்பக் காட்சி வடிப்பதற்கு மிகக் கடினமான நிகழ்வாக பதிந்துள்ளது என்பது மறுக்கமுடியா உண்மை. காரணம் இதை காட்சிப்படுத்தத் தேவைப் படும் கற்பனைத் திரன் தான் இதற்கு அடிப்படை, மகாபலியினை வதம் செய்யும் பொருட்டு இரண்டடியில் உலகத்தையும், விண்ணையும் அளக்கும் வாமனனின் விஸ்வருபத்தை வடிக்க வேண்டும் என்றால் எளிதாகக் கிட்டுமா கற்பனை.

இந்தப் 19ம் நூற்றாண்டு நேபாள ஓவியத்தில் பார்க்கும் பொழுது, மூன்று கால்கள் மட்டுமே தெரியும், மூன்று அடிகளையும் காட்சிப் படுத்த வேண்டும் என்பதால் முதல் அடியை நிலத்திலும், இரண்டாம் அடியை விண்ணிலும், மூன்றாம் அடியை மூன்றாவதாக ஒரு காலினைக் கொண்டு மகாபலியின் தலையில் வைப்பதாக இதன் ஓவியர் கற்பனை செய்திருக்கிறார். மிகக் கடினமான கற்பனை தான், ஆனாலும் மூன்றாவது காலுக்கு இணையாக மற்றொரு காலினை இவரால் காட்ட முடியாது போய் விட்டது. ஏனென்றால் அது நான்காவது அடி என்று சொல்லிவிடும், அதற்காக வெறும் மூன்று கால்களை மட்டும் வரைந்து வைத்துள்ளார் ஓவியர்.

மகாபலிபுரம் எனும் பெயர்க் காரணத்திற்கான மகாபலியின் சிற்பத் தொகுதி இந்த வராக மண்டபத்தில் தான் அமைந்திருக்கிறது, குரு சுக்ராச்சாரியாவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, அந்தணச் சிறுவனான வாமனனிடம் வாக்கு கொடுக்கிறான். வாமனன் விஸ்வரூபம் எடுக்க முதலடியில் உலகையும், இரண்டாமடியில் விண்ணையும் அளக்கிறான். இதே போன்று தத்ரூபமாக வராக மண்டபத்தில் அந்த இரண்டடியினையும் வைத்து விட்ட திருமாலின் விஸ்வரூபம் படைக்கப் பட்டுள்ளது, அப்படியென்றால் மூன்றாவது அடி??

மூன்றாவது அடி இங்கே தேவைப்படுமா என்ன? தன் கர்வம் அழிந்து சக உயிர்களில் ஒருவனாக தன்னை ஒரு பேரரசன் உணர்ந்து கொள்ளும் இடம் தானே மூன்றாவது அடி, மூன்றாவது அடி என்பது அவன் தலையில் அல்ல தலைக்கணத்தில். திருமாலின் இடப்புறம் அமர்ந்திருக்கும் சிலை தான் ம்காபலியாக இருக்க வேண்டும் அவனது இடப் புறம் குரு சுகராச்சாரியராகவும் காலின் வலது புறம் இருப்பவர்கள் மகாபலியின் ஆரவாரங்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம, அல்லது நாக ராஜனும், இந்திரனும் என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்திரன் தன் உடைவாளில் கை வைத்திருக்கிறான். ஒருவேளை இந்த அவதாரம் வாயிலாக சகோதரனாகிய திருமாலினை சரணடையாவிட்டால் அவனிடம் போர் செய்யும் பொருட்டு இப்படி வாளினில் கை வைத்த படி இருக்கலாம்.

மொத்தம் மூன்று வரிசைகளில் இச்சிற்பத் தொகுதி படைக்கப் பட்டிருக்கிறது, அதில் கீழ் வரிசையில் நமக்கு வலப்புறம் உள்ள இந்திரனைத் தவிர மற்ற மூவரும் துயரில் இருப்பதாகக் காட்டுகிறது. இந்திரனுக்கு சொர்கத்தை மீட்டுத் தரும் பொருட்டு தான் வாமன அவதாரத்தினை இறைவன் எடுப்பதால் அந்தச் சிற்பம் இந்திரனாகவே இருக்கட்டும். மேலிருக்கும் முதல் வரிசையில் மொத்தம் மூன்று சிற்பங்கள், நமக்கு இடப்புறத்தில் தாமரையில் அமர்ந்திருப்பது சிவன், தாமரை மீது அவர் அமர்ந்தபடி ஆசி வழ்ங்குவது போல் படைக்கப் பட்டிருக்கிறது, அதற்கு எதிரே மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் விண்ணில் அடியெடுத்து வைத்த விஸ்வரூபப் பெருமானின் பாதம் தொட்டு வணங்குவது போன்று படைக்கப் பட்டிருக்கிறது, பிரம்ம தேவனும் தாமரை மீதமர்ந்தபடி பக்தியோடு திருமாலின் திருவடியை வணங்க அவருக்கு எதிரே கையில் நீர்க்குடத்தோடு ஒரு கரடி உருவம் ஒன்று, திருவடிக்குப் பாதாபிஷேகம் செய்ய கொணர்ந்து வந்தது போல் இருக்கின்றது, அது பிரம்ம தேவனுக்கு உதவியாக இருக்கலாம். அந்தக் கரடி , இமயத்தின் அரசனாகிய சம்புவதன் (ஜாம்பவானாக இருக்கக் கூடும்), இரண்டடியில் உலகை அளந்த இறைவனை ஏழுமுறைச் சுற்றி வலம் வந்ததாகக் கதை இருக்கிறது அல்லவா??

இராண்டாம் வரிசையில் எதிரெதிரே இரண்டு தேவர்கள், பார்த்தவுடனே எளிதாகச் சொல்லிவிடலாம அவர்கள் சூரியன் சந்திரனென்று. மேலே நாம் விவரித்த நேபாளச் சித்திரத்தில் விண்ணை அளப்பதற்காக உயர்த்தியிருக்கம் காலகளை தமது கரங்களில் ஒன்றைக் கொண்டு பற்றியிருப்பது போல் வரையப் பட்டிருக்கும். அது அவர் தன் கால்களை அந்தரத்தில் தூக்கியிருப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஒரு கரம் காலினை பிடித்துக் கொண்டிருக்கும், இந்தச் சிற்பத் தொகுதியில் அப்படியல்ல, ஒரு காலினைத் தூக்குவதற்கு ஏதுவாக தனது வலது கரத்தினையும் தூக்கியிருப்பது போல் காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் (well balanced), நாட்டிய முத்திரை போல.

தன் எட்டுக் கரங்களில் இரு கரங்களைத் தவிர சக்கரம், சங்கு, குத்துவாள், வாள், கேடயம் மற்றும் வில் ஆகிய ஆயுதங்களை ஏந்திய படியும், ஒன்றினை காலைனைத் தூக்குவதற்கு ஏதுவாக மேலே தூக்கியபடியும், மற்றொன்றினால் ஆசி வழங்க்வும் செய்யும் விஸ்வரூபத்தின் அழகு இதற்கு ஒப்ப வேறெந்தச் சிற்பத் தொகுதியிலும் கிடைக்கவில்லை (இணையம் வாயிலாக மட்டுமே தேடினேன் என்பது வருத்தமே!!). சிலவற்றை பின்னிணைப்பாகத் தருகிறேன். புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் குகைச் சிற்பங்களை இதற்கு ஒப்பாகவும் தனிச் சிறப்புடனும் வியப்பதற்கு இடமுண்டு, ஆனால் மாமல்லையைப் போல் நாமக்கலில் ஒரு பார்வையாளனுக்கு அனுமதியில்லை அங்கு வழிபடப்பட்டுக் கொண்டிருக்கிறது, புதுக் கோட்டையிலோ அழிந்துக் கொண்டிருக்கிறது..

ஆனால் இந்தச் சிற்பத் தொகுதியில் எனக்குக் கிடைக்கும் புனைவுக்கான இடம் இங்கு இல்லையோ என அஞ்சினேன்...... நல்ல வேளை, என் Fictionக்கு இடமளித்தான்.... இரண்டாம் வரிசையில் தலைகீழாக ஈர்ப்புவிசைக்கு எதிராக கையில் குறுவாள் ஏந்தியபடி ஒருவன். பரவசத்துடன் அதை அடுத்த பகுதியில் சொல்ல விரும்புகிறேன்....அதுவரை உங்களுக்கு அவனைப் பற்றி ஒரு துப்பு இந்தப் படத்தில்.
அந்தரத்தில் தொங்கும் பேரரசன்





பிற வாமனச் சிற்பங்கள்:
-------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் குகை சிற்பம்
Taken at Rani ki Vav, Patan, Gujarat.





கோசல சிற்பம் -கர்நாடகா





பட்டடக்கல் சிற்பம் - கர்நாடகா





வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 30, கஜலட்சுமி எனும் தலைவியின் நீராடல்

 #சிற்பம்/ஓவியம் -ரசனை - 03 /           மகாபலிபுரம்

      வராக மண்டபம் - கஜலட்சுமி மற்றும் பூமாதேவி

முதல் பகுதி

முதல் பகுதியில் நாம் பார்த்த கொற்றவை சிற்பத்திற்கு சமமாக, கர்பகிரஹத்தின் வலப்பக்கம் இருக்கும் கஜலட்சுமியின் சிற்பம் மிக அழகுணர்ச்சி உடையது. இதன் இடது பக்கம் இருக்கும் துர்கை சிற்பம் தரும் உணர்வுகளில் இருந்து மிகவும் வேறுபட்ட உணர்வை கஜலட்சுமியின் சிற்பம் தருகிறது. இந்த காட்சியானது கஜலட்சுமியின் நீராடல், இதைப் புனித நீராடல் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். இத்தொகுதியில் யானை குடங்களில் தண்ணீர் மொண்டு தன் எஜமானியைக் குளிர்விப்பதும், தோழிகள் மலர்ந்த முகத்துடன் பூக்களும், வாசனை திரவியங்களும், மலர்களும் கொண்டு தலைவியை குளிர்விப்பது மிகவும் அழகியல் ததும்பும் காட்சியாகத் தோன்றுகிறது.

கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரை இருக்கை முழுவதுமாக மலர்ந்திருக்கிறது. இந்த நிலையானது,  தேவி தலைவனை எதிர்கொள்ளும் முன்னே ஆயத்தமாகி இருக்கும் பாவனையாக என்னிடம் காட்டுகின்றது. அதனால் தான் தாமரை முழுவதுமாக மலர்ந்திருக்கும் நிலை எனக்கு ஒரு குறியீடாகத் தோன்றுகிறது.



இந்தப் புரிதலில் ஒருவேளை உங்களுக்கும் எனக்கும் சில பிரச்சினைகள் வரலாம், எவ்வாறு நாங்கள் வணங்கும் தேவியை இப்படித் தவறாக நீ பார்க்கிறாய் என்று கூட யாரேனும் கேட்கலாம்?. இறைவழிபாடு மீது எனக்கும் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் சிற்பங்கள் வெறுமனே வணங்குவதற்கு என்று மட்டும் தோன்றவில்லை. அந்தச் சிற்பம் மீது ஆடைகள் சாத்தி வணங்குவதைக் கூட நான் வன்முறையாகத் தான் பார்க்கிறேன். இந்த இடைவெளி தான் கலைஞர்களை மக்கள், தங்களிடம் இருந்து அந்நியப் படுத்தும் இடமாக நான் பார்க்கிறேன், இது இன்றைய நவீன கலைஞர்களுக்கும் பொருந்தும் நிலை தான்.

என்னைப் பொருத்தவரை சிற்பங்களில் தெரியும் நிர்வாணம் நமது தொன்மையைப் பேசுகின்றது. இது போன்ற சிற்பங்களின் வாயிலாக மட்டுமே  நாம் வழிபடும் தெய்வங்களை நமது வரலாற்றோடு இணைத்துப் பார்க்க சாதாரன மனிதர்களாலும் முடிகிறது. அவற்றின் வாயிலாக புராணங்களை நிதானமாக அனுக முடிகின்றது. இது இன்னும் சில கதவுகளைக் கடந்து நமக்கும் புராணத்திற்குமான இடைவெளியை குறைக்க உதவும். சரி, மீண்டும் கஜலட்சுமியைப் பார்க்கச் செல்வோம்.

இந்தப் புனித நீராடல் ஒரு தலைவியை, தலைவனோடு வழியனுப்புதல் பொருட்டு நடக்கும் ஒரு சடங்கினைப் போன்ற காட்சியைத் தருகின்றதால் , தலைவியை -அதாவது கஜலட்சுமி எனும் தத்துவம் பற்றி நாம் சிறிது கவனிக்க வேண்டிய அவசியம் வருகிறது, அவள் சமுத்திரத்தின் மகள் என்றும், செல்வத்தின் மூலம் என்றும் கிடைக்கிறது. கடலில் இருக்கும் செல்வம் பற்றி இன்னும் அறிவியலாலேயே முழுவதும் அறிந்து கொள்ள முடியவில்லை தானே!!

ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில் இது போன்ற குறியீடுகளைப் பற்றியும் பேச்சு எழுந்தது, நிறையவே நம் பழைய கலைகளில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி பேசினார். கடல் என்று பல இடங்களில் புராணம் காட்டுவதும் ஒரு குறியீடு தான், அவர்கள் ‘அண்டத்தையே கடல்’ என்று குறிக்கிறார்கள் என்றார். அப்படியென்றால் திருப்பாற்கடலில் மலையைக் கடையும் கதை - அவை எல்லாமுமே ஒரு குறியீடுதான், சமுத்திரம் என்பது அண்டமாக, அதில் பாற்கடல் எனும் ஒரு பகுதி மட்டும் (மில்கிவே) உருவாகிறது, கடைதல் என்பதே ஒரு பிக்பேங்க மாதிரி என்றார் அவர். இது அறிவியல் பார்வையில் அபத்தமாகத் தோன்றினாலும், அந்தக் குறியீடுகள் என்ற பதம் ஆற்றும் செயல், முக்கியமாக புராணத்தின் மையத்தை (நம்பிக்கை) தகர்க்கிறது என்றால் அவை ஏன் அறிவியலாகவும் இருக்கக் கூடாது என்று எண்ணிப் பார்க்க இடமளிக்கிறது (Art is a Science). சிறிய எறும்புகளுக்கு நம் உருவம் புலப்படாதது போல் நம்மாலும் பார்க்க இயலாத பரிமாணங்கள் இருக்கத் தானே செய்கின்றன, இந்த மர்மம் கலைகளாகவே எடுத்துரைக்கவும் படுகின்றன (Science is an Art).

இந்தச் சிற்பத்தில் கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரைக்குக் கீழே அலைகள் இருப்பதை கவனித்துப் பாருங்கள்!! கடலில் தாமரை மலருமா என்ன?? புராணங்களின் படி இது பாற்கடல், அப்படியென்றால் இந்தக் குறியீடு இன்னும் பல விளக்கங்களைக் கோருவதற்கு இடமளிக்கின்றது.

அதுபோல காலங்காலமாக நாம் புராணங்களில் அழித்து வரும் நாகர்கள் குறியீடுகளா? அது என்ன வரலாற்றை எல்லாம் சொல்கிறது என்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இம்மல்லைச் சிற்பங்கள் வேறு சில இடங்கள் குறிப்புணர்த்துகின்றன, அதைப் பற்றி வேறு ஒரு பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரில் குறியீடு, சரித்திரம், புராணம் பற்றியெல்லாம் பேசினாலும், ஒரு சாதாரண பார்வையாளனாய் என்னை அல்லது என்னைப் போன்றவர்களை இச்சிற்பங்கள் எப்படிக் கவர்கிறது? அதை எப்படி எல்லாம் நாம் பார்த்து ரசிக்க இடமளிக்கிறது? அதனோடு எவ்வாறு உரையாட முடியும் என்கிற நிலைகளை புனைவோடு நிரப்புவதற்கு தான் முயற்சி செய்து வருகிறேன்

மீண்டும் சிற்பக் காட்சிக்கே வருவோம், இதைக் குறியீடாகப் பார்க்காமல், புராணமாகவும் பார்க்காமல் அந்தச் சிற்பத் தொகுதியின்(panel) objects. அதாவது மையமாக இருக்கும் தேவியின் பின்புறம் நிற்கும் யானைகள், தோழிகளின் கைகளில் இருக்கும்  பொருட்கள் எல்லாம், அவளை ஒரு tribal (பழங்குடி) இனத் தலைவியாக அடையாளம் காட்டுகிறது - முக்கியமாக தோழமையுடன் அருகில் நிற்கும் யானைகள். அவ்வாறன்றி ஒரு பழங்குடி இனத்திற்கே அவள் மணமுடித்து சென்றிருக்கலாம். அவள் தலைவனை (திருமால்) மணமுடித்தோ அல்லது வினை முடித்து அகத்தே திரும்புபவனை (அவதாரம் முடித்து) எதிர்நோக்குவதற்காக தலைவி தயாராகிக் கொண்டிருக்கிறாள் மிக அழகாக, நறுமணத்துடன்.

அந்தத் தலைவன் எப்படி தலைவியை அடைந்திருக்கிறான்?, எப்படி வினை முடித்திருக்கிறான் ?அல்லது எந்த அவதாரத்தில் இருந்து திரும்புகிறான்? என்பதை அருகில் இருக்கும்  சிற்பக் காட்சி விளக்குகிறது.

?அடுத்த பகுதியில் அதை தரிசிப்போம்
ஜீவ.கரிகாலன்..........

தெரியுமா உங்களுக்கு:
பல்லவர்களுக்கும் பவுத்த சமயத்திற்கும் தொடர்பு இருந்தமைக்குப் பல சான்றுகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் கஜலட்சுமியைப் போன்ற சித்திரம் புத்தனின் பிறப்பைக் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது.

19ம் நூற்றாண்டு படங்களில் திருப்பாற்கடல் பற்றிய ஓவியங்கள் - ஓவியர் பெயர் தெரியவில்லை.







செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 29, #சிற்பம்/ஓவியம் -ரசனை - 02 / மஹாபலிபுரம்

  #சிற்பம்/ஓவியம் -ரசனை - 02 /  மஹாபலிபுரம்  -



02.வராக மண்டபம்

உலகின் தலைசிறந்த சிற்பங்களினூடே நான் என்ன செய்யப் போகிறேன்?அல்லது என்னால் என்ன செய்து விட முடியும்? நான் என்ன வரலாற்றாய்வாளனா? நான் - கல்வெட்டு, சிற்ப சாத்திரம் மட்டுமல்ல இறை வழிபாடு, புராண அறிவு என்று கூட பெரிதாகக் கற்றுக் கொள்ளாதவன். ஆனால் கொஞ்ச நாட்களாக என்னால் சிற்பங்களோடு பேச முடிகிறது, என் கற்பனையை இங்கே காட்சிப்படுத்திப் பார்க்க முடிகிறது, சில புதிய கதைகளை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடிகிறது. ஏடுகள், நவீன தியான முறைகள் போன்றவற்றில் கிடைக்காத அமைதி சித்திரங்களோடும், சிற்பங்களோடும் நான் இருக்கையில் கிடைக்கின்றது. இவற்றோடு என்னால் மட்டுமல்ல, உங்களாலும் பேச முடியும், சிரிக்க முடியும், உரையாட முடியும். அலங்காரச் சொற்களால் நிறைந்த போலித் தன்மை நிறைந்த மனிதர்களிடையேயான உரையாடல்களில் இல்லாத நிர்வாணம் தான் நம்மிடம் உண்மைகளைப் பற்றிப் பேசும், அதுவும் நிறையவே பேசும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான் காது கொடுத்துக் கேட்க வேண்டும், அதற்காகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்ம் -உற்று நோக்குதல் தான் சிற்பம் பயிலும் மொழி.

முதற்பகுதியில் திருமூர்த்தி குகைக் கோயிலைப் பார்த்தோம்!! இப்பொழுது நாம் செல்வது வராக மண்டபத்தில், திருமூர்த்திக் கோயிலில் இருந்து தென் புறமாகக் குன்றிலிருந்து கீழிறங்கி நடக்கும் பொழுது, முதலில் வருவது விநாயகர் சன்னதி, பெரும்பாலும் பூட்டப்பட்டு இருக்கும் அறையில் கம்பிகளின் ஊடே ஐங்கரன் அருள்பாளிக்கிறார், அங்கே மட்டும் இறைவனாக இருப்பதால் இன்று வரை கன்னத்தில் ஒத்திக் கொண்டு நகர்ந்து விடுகிறேன். கொஞ்சம் அவ்வழியே மேலேறினால் முதலில் வருவது வராக மண்டபம். இதை நான் சன்னதி என்று சொல்லவே விரும்புகிறேன்.


வராக மண்டபம் முன் தோற்றத்தில் நான்கு தூண்களால் ஆன மண்டபமாக குடையப்பட்டிருக்கிறது, இரண்டு தூண்கள் முழுமையாகவும், இரண்டு பாதி மட்டும் செதுக்கப்பட்டும் இருக்கும், நான்கு தூண்களும் யாளியின் முதுகில் நிற்பது போல வடிக்கப்பட்டிருக்கும். மண்டபத்திற்குள் நுழையும் பொழுதே நாம் இதில் கால் நனைப்பதற்கு ஏதுவாக வாயிலின் முகப்பில் ஒரு தொட்டி போன்ற அமைப்பு தோற்றமளிக்கிறது. இது தற்கால மல்லைக்கு மிக முக்கியமான மண்டபம், மஹாபலிபுரம் என்ற பெயருக்கு பொருந்தும் சிற்பம் இச்சன்னதியில் இருப்பதால், இதைக் கட்டிய மன்னன், இதைத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதியிருக்கிறான். இதன் காரணமாகவே இச்சன்னதியில் நுழைவதற்கு கால்களைச் சுத்தம் செய்ய ஏதுவாக ஒரு தொட்டியும் அமைக்கப்ப்ட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.


உள்ளே மூலவருக்கான சன்னதி வழக்கம் போல வெற்றிடத்துட்ன் இருந்தாலும், அதைச் சுற்றிலும் மொத்தம் நான்கு புடைப்புச் சிற்பக் காட்சிகள் இருக்கும். ஒன்று வராகச் சிற்பம், இரண்டு  மஹாபலி-வாமன சிற்பம், மூன்று -கஜலட்சுமியின் சிற்பம், நான்கு-துர்கை. இது போக கர்பகிரகத்தின் வெளிப் புறத்தில் இரு மருங்கிலும் துவார பாலகர்களின் சிலை இருக்கும், அது போக இந்த மண்டபத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அது பெரும்பாலும், வந்து செல்லும் அநேகருக்கும், ஏன் பல வழிகாட்டிகளும் அறிந்திடவில்லை, இல்லை அதைப் பற்றி சட்டை செய்து கொள்ளாமலே இருக்கலாம். இதனாலேயே நான் சில மணி நேரம் வரை அந்த மண்டபத்தில் சிற்பங்களோடு தேங்கியபடி நின்றிருந்தேன்.

முதலில் துர்கையை தரிசிப்போம், பல்லவர் சிற்பங்களில் துர்கைக்கு மிக உயர்ந்த இடம் உண்டு, பெரிய அளவில் ராஜ்ஜியத்திற்கான போர்ச் சூழலில் எதிரிகளால், பல்லவர்கள் ஆண்டு வந்த 2  9ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் இருந்து வந்ததால். கொற்றவை அவர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெருகிறாள். கொற்றவை வழிப்பாட்டை, காளியுடன் சேர்த்து பலர் குழப்பிக் கொள்கின்றனர். கொற்றவை வேறு, காளி வேறு - கொற்றவையை நோக்கும் பொழுது அவளது இனம்(CLAN) குறித்த வரையறைகளை ஒருவரால் குறிக்க முடியும், காளியோடு அப்படி பொருத்திப் பார்க்க முடியாது. சுருக்கமாக சொல்லப் போனால், கொற்றவை மனித வரலாற்றோடு மிக நெருக்கம் கொண்டவை, அவை புனையப்பட்டதாகக் கூறினாலுமே நெருக்கமுடையது தான்.
படத்தில் இருப்பது போல, மையத்தில் இருக்கும் துர்கை, பக்தனுக்காக காட்சியளிப்பது போன்ற நிலையில்(வரமளிக்கும்), தாமரை போன்ற பீடத்தில் நின்றவாறு புடைக்கப் பட்டிருக்கிறது. நான்கு கரமுடையவளாக, சங்கையும், வட்டினையும் ஏந்தியபடி நிற்க அவள் இடது புறம் அவளை நமஸ்கரிக்கும் சிற்பமும் அதற்கு நேரே எதிரே தன் தலையை வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு பலியாளின் சிற்பமும் இருக்கின்றது. போர்க் காலங்களில் இத்தகைய பலி கொடுக்கும் சம்பவங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இது மிகவும் உணர்ச்சியமயமான சிற்பக் காட்சி எனலாம். துர்கை பலியாகின்றவனுக்கு அருள் செய்யக் காட்சியளிக்கும் அதே வேளை, நான்கு கனங்கள் இந்தக் காட்சிக்கும் பின்புலத்தில் அதாவது இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பூதகணங்களாக படைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் இருக்கும் நான்கு பூதகணங்களை, இரண்டு விதமாக என்னால் பார்க்க முடிகிறது. அதாவது பூதகணங்கள் ஒரு உயிர் பிரிவதைக் (அவர்கள் உலகமான மேலுலகத்திற்கு வருவதால்) கொண்டாடுவதைக் காட்சிப் படுத்த அவர்கள் நடனம் ஆடுவது போல மெய்மறந்த நிலையில் கொண்டாடும் காட்சியாகத் தோன்றியது. அது ஒருவேளை - நான்கு கணங்களும் சேர்ந்து போடும் ஆட்டமாகவும் இருக்கக் கூடும். அதேநேரம் - அங்கே ஒரே ஒரு பூதகணம் மட்டும் துள்ளிக் குதித்து வர இருக்கும் புதிய ஆன்மாவை எதிர்பார்த்து மகிழ்வதாகவும், நடனமாடுவதாகுவும்(கூத்து) புரிந்து கொள்ளலாம். நான் இரண்டாவதாக சொன்னது போல் பார்ப்பது தான் இந்தச் சிற்பக் காட்சியை மிகவும் முக்கியமாகக் காட்டுகிறது, அதாவது ஒரே சிற்பத்தின் பல்வேறு நிலைகள் படக்காட்சி போல விரிகின்றது, காமிக்ஸ் கதைகளுக்கெல்லாம் முன்னோடியாக இவற்றைப் பார்க்கலாம். தன்னைத் தானே பலியிடல் தான் இந்த சிற்பக் காட்சியின் மையக்கரு என்பதை உணர முடிகிறது.

யுத்தகளத்தில் வெற்றிக்காக விழும்/பிரியும் முதல் உயிர் அந்த நாட்டின் சரித்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா பண்டைய நாகரிகங்களிலும் (மாயன்,எகிப்திய) இது போன்ற உயிர்ப்பலிச் சடங்குகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். யுத்தத்தின் போது, காலாட்படையில் முதல் சில வரிசைகளில் அணிவகுத்துச் செல்லும் எல்லோருமே கிட்டதட்ட பலி கொடுக்கப்படுபவர்கள் தான். இப்படிக் கொடுத்துதான் சாம்ராஜ்யங்கள் உருவாக்கப் படுகின்றன. இதைப் போன்ற சடங்குகளை பின்னாளில் வரும் சமூகத்திற்கு ஆதாரப் படுத்துவதற்காக மட்டுமன்று, மிகவும் சக்தி வாய்ந்த, புனிதம் மிக்க இந்த மண்டபத்தில் ஒரு பலி கொடுக்கும் நிகழ்வையும் பதிந்ததன் மூலம் அவன் போன்ற எண்ணற்ற வீரர்களுக்கு அம்மன்னன் அஞ்சலி செலுத்துகின்றான்.



இன்றும் இது போன்ற உயிர்ப்பலிகள் நம் காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன, ஆனால் தேசத்திற்காக தன்னைத் தானே கொடுப்பவர்கள் என்ற தியாக நிலை எல்லாம் மாறிவிட்டது. இதுவரை ஒரு அரசு நிகழ்த்தும், அரசின் நலனுக்காக நிகழ்ந்து வந்த இது போன்ற பலிகள், இன்று நிறுவனங்களின் லாபத்திற்காக, வளர்ச்சி என்ற பெயரில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்ற அரசியல் சிந்தனையும் அம்மண்டபத்தின் உள்ளே வந்து போனது. ஏனென்றால் நான் சிற்பத்தினோடு பேசுகிறேன், “உங்கள் காலத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது தெரியுமா?? நீ எங்களைக் குறை கூறாதே” என்று அந்தப் பலியாள் என்னைப் பார்த்து அரசியல் பேசியது.


அந்த மண்டபத்திற்குள் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன?? அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்

அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்
(உங்கள் கருத்துகள் அவசியம்)
ஜீவ.கரிகாலன்

(சிற்பம் பற்றிய எந்தத் தவறான புரிதல்களாக இப்பதிவில் கண்டறிந்தால் தெரியப் படுத்தவும்)

சனி, 20 ஜூலை, 2013

பஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்


பஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொல்லப் போனால் focused ஆக எதையும் எழுதாமல் வேறு வேறு தலைப்புகளில் எழுதுவதில் ப்ளாக் ரீடர்ஸ் இந்த 6 மாதங்களில் எனக்கு முன்பிருந்ததை விட 1 மடங்கு அதிகமானார்களே தவிர உறுப்படியாக ஒரு consistency-யுடன் எழுத முடியவில்லை என்ற குறை இருக்கவே செய்கிறது. ஆகவே பஜ்ஜி- சொஜ்ஜி சங்கத்தை களைத்து விட்டு எதையாவது உளறாமல் ஒரு தலைப்பு எடுத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று அவசரகால சபதம் ஒன்றை எடுத்துள்ளேன். So வகைகளை # போட்டு பயன்படுத்தி பகுத்துக் கொள்ளலாம்.


# சிற்பம்/ஓவியம் - ரசனை

எனது பள்ளிக் காலங்களில் எதைப் பார்த்து பயந்து இருந்தேனோ, ஒளிந்து கொண்டேனோ,(அறிவியல் படங்கள் வரையப் பிடிக்காமல் தான் வணிகப் பாடத்தை தேர்ந்தெடுத்தேன்)  இன்று அதே ஓவியங்கள் மீதும் சிற்பங்கள் மீதும் தீராக் காதலோடு இருக்கிறேன். உண்மையில் இதற்காகவாது தேசாந்திரம் சென்று பல கோயில்களையும் சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்கிற  பேராசை என்னுள் இருக்கிறது.

உண்மையில் நான் முதல் முறை மஹாபலிபுரம் வந்த போது, அது ஒரு போரிங்  பிக்னிக் ஸ்பாட்டாகவே எனக்குத் தோன்றியது; “வெறும் சிற்பங்களைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?” என்று தோன்றியது; நண்பர்களோடு சென்று கடற்கரை மணலில் அமர்ந்து பேசிவிட்டு திரும்பியதே போதும் என்று இருந்தது. மற்ற படி பெரும்பான்மையான மக்களைப் போலவே, நாம் பார்க்கும் சிற்பங்களில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தாலே போதும், டிஜிட்டல் யுகத்தில் பிரிண்ட் போட அவசியம் இல்லாததால் சகட்டு மேனிக்கு நிழற்படங்கள் எடுத்துக் கொள்கிறோம். யானையின் தந்தத்தை பிடித்தவாறு, சிங்கத்தில் சவாரி செய்தவாறு,  கருவறைக்குள் சென்று கடவுள் போஸ் கொடுத்தவாறு கடந்து விடுகிறோம் மஹாபலிபுரத்தை. இந்த நகரத்தினை ஓரளவுக்கு களவு செய்யும் காதலர்கள் தான் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.

      ஆனால் முதன் முதலாக சிவகாமியின் சபதம் வாசித்து முடிக்கையிலேயே மீண்டும் மஹாபலிபுரம் செல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். அதை வாசித்த மனநிலை ஒரு ஃபிக்‌ஷனை உள்வாங்கியிருக்கிறது. ஆடும் பெண் சிலைகளில் சிவகாமியைத் தேடினேன்.  ஆயனச் சிற்பியின் உளியின் ஓசை அகச்செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. கருவறைக்குள் இல்லாத தெய்வங்களில் ஏசுவிற்கும் இடம் இருக்குமோ என்ற கல்கியின் உணர்வுகள் வராமல் இல்லை. சரித்திரத்தில் ரோமானியர்களும், பிற நாட்டினர்களும் வணிகம் பொருட்டு பல நூறு வருடங்கள் முன்னரே வந்து சென்ற மண்ணில் கடலலைகள் சரித்திரம் பேசின, ஆனாலும்  இவை எல்லாம் புனைவே. அதுவும், வேறு ஒருவருடைய புனைவு.

     இன்னும் சில சரித்திர புத்தகங்கள் வாசித்தேன், அருமையான கலைஞர்களின் நட்புக் கிட்டியது ஓவியங்கள் குறித்தும் சில புத்தகங்கள் வாசித்தேன். மீண்டும் சென்றேன் மஹாபலிபுரத்திற்கு, ஒரு மன்னன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டியும் தன்னையும், தன் மண்ணின் பெருமை என தான் நம்பியதையும், தன் அரசாட்சியை மக்களுக்கு சொல்ல முடியுமென்றால் அது கலைகளின் வழியே தானே சாத்தியமாகிறது ??. அதனால் தான் பல்லவ நாட்டின் முக்கியமான துறைமுகமாக விளங்கிய இவ்வூரிலேயே இந்தப் பணிகளை அவன் துவங்கியிருக்கிறான் என்று தோன்றியது.

தொடர்ந்து வரும் எல்லா ஞாயிறுகளிலும் மாமல்லபுரம் செல்ல ஆரம்பித்தேன். இந்த நாட்களில் சிற்பங்களோடு இப்பொழுது என்னால் பழகவே முடிகிறது, கலைகளின் வழியே நான் பிரதானமாக எழுதி வரும் இதற்கு சம்பந்தமே இல்லாத பொருளாதார கட்டுரைகளுக்கோ, சமூகக் கட்டுரைகளுக்கோ, அறிவியல் புனைவுகளுக்கோ அந்த சிற்பங்கள் உதவக் கூடும் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. வராக மண்டபத்தில் எதிரொலித்த என் குரலின் மாத்திரைகளில் இருந்த விநோதம் என் கதைகளில் பயன்படலாம்; கடற்கரைக் கோயிலில் ஜலகிரிடை செய்யும் மாய சிற்பங்கள் என் கனவுகளைச் சூறையாடலாம்; அர்ஜுனனனின் தவக் கோலம் என் சுயம் பற்றிய சிந்தனைகளை மறு கட்டமைக்கலாம்; பாண்டவ ரதத்தில் படைக்கப்பட்டிருக்கும் சில காதல் காட்சிகள் என் வாழ்விலும் வரலாம்; நகரத்தை சுற்றியிருக்கும் ஆறு போலே ஒரு அரசியல் என்னைச் சூழலாம். நகரத்திலிருந்து அப்புறப் படுத்தப் பட்டிருக்கும் பல பவுத்த, சமண சின்னங்களைப் போல நான் கூட என் கனவுப் பாதையில் இருந்து தூக்கி எறியப் படலாம் தான்.

இதனால் தான் நான் மாமல்லபுரம் பற்றி கொஞ்சம் பதிவிட விரும்புகிறேன். இவையாவும் என் ரசனைகள். என் நுகர்வு:


01. மஹாபலிபுரம் - திருமூர்த்தி குகை
கோயிலின் வெளித் தோற்றம்
மஹாபலிபுரத்தில் ரசித்துப் பார்ப்பதற்கு என பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளாத இடம் என்றால் அது இந்த திருமூர்த்தி குகை தான். அர்ஜுனன் தபசு செய்யும் குன்றின் கீழ் திசையில் இருக்கின்றது, இந்தக் கோயிலின் புறத்தோற்றம் மூன்று அறைகளாகத் தெரியும்.இதற்கு இடபுறம் துர்கையின் சிலை ஒன்று இருக்கிறது. இது 07ஆம் நூற்றாண்டில் உருவானது என்று கல்வெட்டு கூறுகிறது. திருமூர்த்தி என்பது சிவனைக் குறிக்கும், மூன்று அறைகளிலும் ஒரே மாதிரியான புடைப்புச் சிற்பங்கள் பார்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றும். அதன் மைய அறையில் ஒரு லிங்கம் பதியப்பட்டிருக்கும்.

முதலில் நாங்கள் சென்ற குழுவில் இருந்தவர்கள் பார்ப்பதற்கு மூன்றுமே ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்கள் உற்று கவனித்தால் தான் தெரியும், மூன்று அறைகளிலும் உள்ள சிற்பங்களில் இருக்கும் சிலைகள் காட்சிப்படுத்துபவை என்ன என்று மையத்தில் நின்ற நிலையில் ஒரு சிலை, இட, வல புறங்களில் அமர்ந்த நிலையில் இரு சிலைகள். மையத்தில் இருக்கும் சிலை திருமூர்த்தி - சிவன் என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடியும். முதல் அறையில் சிவனுக்கு இட புறம் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையின் நெற்றியில் இருக்கும் நாமம் இன்னும் சிதிலமடையாததால் (மற்ற அறைகளில் இருக்கும் சிற்பங்களில் நாமம் தெரியவில்லை) விஷ்னு என்று கண்டு கொள்ளலாம்.

பின்னர் விஷ்னுவிற்கு சமமான ஆண் தெய்வமாக பிரம்மன் ஒருவனே இருக்க முடியும் (சைவ மரபில்) என்பது தெளிவு.  ஆக, இந்த மூன்று அறைகளையும் மாற்றி மாற்றி கவனிக்கும் பொழுது. இந்த குகை ஒரு ஒளிக்காட்சி(அனிமேஷன்) போன்ற ஒரு பிம்பத்தை மனதில் ஏற்படுத்துகிறது.

புராணங்களின் அறிவு எனக்கு பெரிதாக  இல்லை தான், மற்ற மதத்தில் இருப்பவர்களுக்கு கிடைப்பது போல் (அவர்களாக இறைவனுக்கு என்று நாட்களை ஒதுக்குவது), என் மதம் என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோளையோ, கட்டளையினையோ பிறப்பித்தது இல்லை. சில நேரங்களில் பெரியவர்கள் மூலம் அதை ஊட்டும் பொழுது, நான் அதை மறுத்தும்  வெளி வந்து விடுகிறேன்.

ஆயினும் இவற்றை தெரிந்து கொள்ள குழந்தைமை எனும் அற்புதப் பருவம்  இடம் கொடுத்தது, கதைகளின் வடிவில் என் அன்னையிடம், என் பாட்டியிடம் இருந்தன .அங்கிருந்து மனதில் புதைந்த பாத்திரங்கள் பின்னர் இந்த நாள் வரை காத்திருந்து வெளியே எழுந்தது . யார் பெரியவன் என்கிற போட்டியில் சிவனின் ஆதி, அந்தம் தேடி புறப்பட்ட விஷ்னுவும், பிரம்மனும் இறுதியில் தோற்று, தன் தோல்வியை ஒப்புக் கொண்டு , சரணடைந்து, வரம் பெற்ற காட்சிகளாய் விரிந்தது இந்த சிற்பங்கள். காமிக்ஸ் எனும் படக் கதை போல, ஒரு புராணக் கதையினை எலிமையாக நினைவுகளிலில் இருந்து பின்னர் மீட்டெளச் செய்தது.

கீழேயுள்ள படத்தில் கவனித்தால் தெரியும், அந்த மூன்று காட்சிகளிலும், முதல் அறையில் சிவனிடம் உபதேசம் பெருவது போலவும், அடுத்த  காட்சியில் பூஜிப்பது(நமஸ்கரிப்பது போலவும்), மூன்றாம் அறையில் இறைவன் அருள் செய்வது போலவும் முடிகிறது.


நம்மைப் போன்றவர்கள், சிற்பங்களை ரசிப்பதற்கு அதன் தொழிற்நுட்பங்கள் பற்றிய அறிவு கூட தேவையில்லை, அது உணர்த்தும், காட்சி படுத்தும் செய்திகள், வரலாறு பற்றிய பின்புலம் அறிந்திருந்தாலே போதும். மஹாபலிபுரத்தில் இப்படி நிறையக் கதைகள் இருக்கின்றன, இங்கே இருந்து நோவா வெள்ளம் பற்றி கூட சிந்திக்க முடிகின்றது (வரும் தொடர்களில் இது பற்றி பதிவு செய்கிறேன்).

நீங்கள் யாரேனும் திருமூர்த்தி குகையில் இதைப் போன்ற காட்சியை உணர்ந்து இருந்தால் சொல்லுங்கள், ஒருவேளை உங்களுக்கு அவர் வேறு கடவுளர் போலவோ!! அல்லது வேறு புராணம் என்று கூடத் தெரியலாம். கலை அப்படிப் பட்டது தான், அது அத்தனை பரிமாணங்கள் உடையது.


அடுத்த பகுதியில் வராக மண்டபம் பற்றி காண்போம்.

சிற்பம்/ஓவியம் - ரசனை
தொடரும்....






முதல் அறை

                                           இரண்டாம் அறை                                               மூன்றாம் அறை