திங்கள், 30 நவம்பர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 89 // WACKY RACES

சின்ன வயதில் பார்த்து ரசிச்ச கார்டூன் தொடர்களில் இதுவும் முக்கியமான ஒரு நிகழ்வு தான். 


கேபிள் டிவி மீது ஒரு வெறி கொண்ட காலம். 24 மணி நேரமும் கார்டூன்களே ஒளிபரப்பப்படும் என்று ஒரு சேனல் வரப்போகிறதை கேபிள்காரரிடம் தெரிந்த கொண்ட எனக்கு தூக்கமே வரவில்லை, ஆலிஸ் இன் வெண்டர்லாண்ட், டக் டேல்ஸ், ஜங்கிள் புக் மட்டுமே பார்த்து வந்த நான் கனவுலகில் மிதந்த ஞாபகம் இன்னமும் இருக்கிறது.


ஒரு காலத்தில் தியேட்டரில் டிக்கட் கிழிப்பவருக்கும், ரீல் ஓட்டுபவனுக்கும் ஊருக்குள் இருந்த மரியாதை என் அப்பாவும், நாடகக்காரர்களுக்கு இருந்த மரியாதையை கதைசொல்லி தாத்தாவும் கேட்டறிந்திருக்கிறேன். அப்போது கேபிள்காரரிடமிருந்தது. அவருக்கு குழந்தைகள் சல்யூட் போடுவது போல், சந்தாதார எஜமானிகள் வீட்டுக்கு வீடு டீ சாப்பிடச் சொல்லும் மரியாதையெல்லாம் கேபிள்கார அங்கிள்களுக்கு இருந்து வந்தன.
கார்டூன் நெட்வொர்க் மீது பைத்தியக் காதலாய் இருந்த நாட்கள் கல்லூரி காலம் வரை தொடர்ந்தது. அதற்கு மேல் வீட்டிலிருந்த அதிகாரம் எல்லாம் பறிக்கப்பட்டுப் போனது. ஒன்பதாம், பத்தாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம், மதிய உணவுக்காகச் சாப்பிட வீட்டிற்கு வரும் போது பார்க்கும் வேக்கி ரேஸஸ் வெறி பிடித்துப் பார்த்து வந்த தொடர், வெறும் 15-20 நிமிடங்கள் தான். ஸ்கூபியிடமிருந்து மட்லியின் ரசிகனாக என்னை நான் மாற்றிக் கொண்டது மதமாற்றத்திற்கு இணையானது தான்.

ஞாயிற்றுக்கிழமைகளை ஒரு மணி நேர நிகழ்வு ஒன்று அதன் பெயர் ஸ்கூபி’ஸ் ஆல்ஸ்டார் லாஃப்பா லிம்பிக்ஸ் அதே WACKY RACES CONCEPT தான். ஆனால் இந்த லிம்பிக்ஸ் ஒரு ஒலிம்பிக்ஸ் கேம் மாதிரி, அதில் ஹானா பார்பரா புரொடக்‌ஷனில் இருக்கும் பதினாநான்கோ பதினைந்தோ தொடர்களில் இருக்கும் கேரக்டர்கள் பங்கேற்கும். மொத்தம் மூன்று அணியாக, ஸ்கூபு டூபியின் தலைமையிலான அணியும், டஸ்டர்ட் அண்ட் மட்லியின் தலைமையிலான அணியும் டீமும், யோகியின் (யோகர்ட்டின்) தலைமையிலான அணியும். இது வெங்கட் பிரபு படத்தின் Spoofing காட்சிகளை ரசிப்பதற்கு ஏற்கனவே நீங்கள் தமிழ் சினிமாவின் வெறிபிடித்த ரசிகர்களின் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிற தலையாய விதிமுறையைப் போலவே, கார்ட்டூன் நெட்வொர்க்கின் பிரதானமான தொடர்களை பார்த்து வருவராக இருக்க வேண்டும்.

மொத்தம் வெளியிட்ட 24 தொடர்களையும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் யார் ஜெயிக்கிறார்கள் என்று நோட்டிலெல்லாம் எழுதி வைத்திருந்த காலம். ஆரம்பத்தில் தொடரில் பிரதானமாக ஸ்கூபியின் அணியினர்கள் மட்டுமே தொடர்ந்து ஜெயித்து வர ஆரம்பிக்க சலிப்பு ஏற்பட ஆரம்பிக்க, அதற்குப் பின்னர் யோகி, மட்லி அணியினருக்கும் வெற்றி வாய்ப்புகள் வழங்கப் பட்டது. இந்த தொடருக்கென்று பல சிறப்புகள் இருக்கின்றன, இதை SUR_REALISTIC சாரத்தோடு கட்டுரையாக எழுதக்கூட முயற்சிக்கலாம். ஆனால் இப்பொதைக்கு அது நம் நோக்கமில்லை – இந்த சீஸனுக்கு சம்பந்தமில்லாதது.

அப்புறம் ஏன் சம்பந்தமில்லாம கார்ட்டூன் நிகழ்ச்சியப் பற்றிப் பேசுகின்றேனே என்று நினைக்காதிங்க, சம்பந்தப் படுத்திப் பேசப் போறேன்.

இங்கயும் ஒரு லிம்பிக்ஸ் கதை , புக்லிம்பிக்ஸோ(Booklympics) அல்லது லித்லிம்பிக்ஸோ(Litlympics) பேர் வச்சுக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக, புத்தகக் கண்காட்சியில் பார்த்து வரும் இலக்கிய நூல்களின் விற்பனை மையங்கள் இப்படி மூன்று தலைகளை பிரதானமாக வைத்து தான் நடைபெற்று வருகிறது. இப்போது நான்காவது அணியாக உதிரிகளை சேர்த்துவைத்துக் கொண்டு ஒரு நண்பர் களம் இறங்கியிருக்கிறார். ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளையும், எரிச்சல்களையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.


ரேஸிற்கான வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டும், புதிப்பிக்கப்பட்டும், Re-model செய்யப்பட்டும், சில புதிய வாகங்களோடும் தயாரிக்கொண்டிருக்கின்றன. மூன்றாண்டுகளாக இவரோடு சேர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால், நல்லதொரு வாகனத்தை இழுத்துக் கொண்டு வர நாங்களும் ஆயத்தமாகிவிட்டோம்.. வாழ்த்துகள் வேடியப்பன் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்திற்கு  .

சனி, 28 நவம்பர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 88 கோபுவுக்கு KUDOS

சூடாக இரு கோப்பைத் தேநீருக்காக இரண்டு, மூன்று முறை ஸ்விட்ச் ஆன் செய்ய வேண்டியிருந்தது எலக்ட்ரிக் கெட்டிலை. அவனைப் பற்றி கொஞ்சம் எழுத வேண்டியிருந்தது. நட்போ, ப்ரியமோ, ரஸனையோ சொல்வதற்கு எத்தனையோ இருக்கின்றன ஆனால் அவை ரகஸியமாக என்னுள் வைத்துக் கொண்டு வேறு திசைக்கு செல்கிறேன். எனக்கு எதிர்புறமாய் அவனும், ஆகவே தான் அவன் ரகஸியம் இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பவர்களுக்குச் சமர்பிக்கிறான். நானோ ரகஸியத்தைப் பாதுகாத்துக் கொண்டதாய் நம்புகிறேன்.

அவன் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்குவான் என்ற நம்பிக்கையிருக்கிறது, அந்தத் துணிச்சலை நான் உணர்கிறேன். அதன் மேல் அவனுக்கு நம்பிக்கையுமில்லை, அக்கறையுமில்லை. இருந்தும் புன்னகைக்கவும், பகிர்ந்து கொள்ளவும் நிறைய இருக்கின்றன ரகசியமாய்.

கோபுவிடம் பேசுவதற்கு முன்பு ம.ரா ஐயாவிடம் ஒரு நீண்ட உரையாடலுக்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வருடம் அப்படித்தான் எங்களிருவரையும்  பல அரிய மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

கோபுவிடம் MASONIC ART ஒன்று ILLUSTRATION பண்ணுங்க என்று கேட்டோம். அது அழகியலாக மட்டுமோ அல்லது அடர்த்தியாகவோ இருக்கக்கூடாது என்றும் தோன்றியது. 

Umberto Eco, Don Brown-லிருந்து ரூஸ்வெல்ட், விவேகானந்தர், மேரி மாதா, High Renaisance-னு பேச ஆரம்பித்தோம். என் மனதிலிருந்த எந்த Geometrical design-ம் என்னைத் தாண்டி போகவில்லை. ஆனால் ஒரு விபரணைப் படம் அதன் வெற்றியை ஈட்டியிருக்கிறது, அதோடு நானும் பயணப் பட்டிருக்கிறேன். சிவனின் லிங்கத்தை எப்படி Phallus என்றும், சாபத்தால் உருவான இந்திரனின் குறிகள் (yonic) கண்களாகத் தெரிவதை நம் புராணங்களில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம்.. மூன்றாவது கண்ணினை All seeing eye ஆகப் பார்க்க முடியுமா என்றால், முடியும் என்று ஒரு Virtual installation நடந்த தருணம் மிக முக்கியமானது.

ஒரு அட்டைப் படத்துக்குள் இருந்து சொல்லப்படம் கதை மேற்கு நோக்கி பயணித்தாலும், நகரத்தில் வசிக்கும் ரமேஷும், சொந்த மண்ணில் காலூன்றிக் கொண்டோ, பற்றித் தொங்கியபடியே இருக்காமல். நகரத்துவாசியாகி இடமாறுதல்களைச் சகித்துக் கொண்டிருக்கிறான். அதனால் தான் அவனால் ஒரு பெண்ணை ஆழ்ந்து தரிசிக்க முடிகிறது. தரிசித்தல் எனும் பதம் அவனுக்கு சகிக்கக் கூடியதா என்று தெரியவில்லை. நான் அடைந்த சந்தோஷம் கோபுவிடமிருந்து.....

புனிதமெனச் சொல்லும் மேரி மாதாவின் நீலமும், பீனிக்ஸ் என்றும், யகோவா என்றும் சாத்தானென்றும் சொல்லப்படும் மேற்குலகத்தின் வண்ணம் சாம்பல் (சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பறவை). புராணங்களில் இருக்கும் Syncretism (பல்மதக் கட்டமைப்பு) தான், அதன் ரகசியங்களை விட சுவாரஸியமானவை….

ஆதலால் ரகசியம் இருப்பதாய் …. நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு


சனி, 7 நவம்பர், 2015

யாருக்கான தீபாவளியைக் கொண்டாடுகிறோம் / பஜ்ஜி - சொஜ்ஜி 87


இப்படி மழையோடு தீபாவளியைப் பார்த்துப் பல வருடங்களாகி விட்டது அல்லவா? நாம் பண்ணும் அத்தனை அட்டுழியங்களையும் ஏற்றுக் கொண்டும், பொறுத்துக் கொண்டும் பருவத்தை மீண்டும் தன் சரியான கட்டங்களில் இந்த வருடம் கொண்டு சேர்த்திருக்கின்றது இயற்கை. அதைப் பயன்படுத்தத் தான் நாம் தகுதியற்று இருக்கிறோம். SEZ, SMART CITY, குவாரி, REAL ESTATE தொழில் முனைவோர்களின் கையில் இருக்கிறது.


மழை பெய்தால் மட்டும் என்ன? இயற்கை கருணை மிக்கது தான். நாம் தான் மழை பெய்யாத இந்த மூன்று வருடங்களுக்குள் பல ஏரிகளையும் குளத்தையும் விழுங்கிவிட்டோம். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை உயிர்ப்போடு இருந்த வேடந்தாங்கல் ஏரியின் கதை இன்று கவலைக்கிடம். கடந்த மூன்று வருடமாக ஒவ்வொரு சீஸனும் நானும் கண்ணதாசனும் சென்று வருகையில் ஏமாற்றத்துடன் தான் திரும்பினோம். வேடந்தாங்கலில் தேநீர் கடை வைத்திருக்கும் ஒருவர் பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி அந்த ஏரிக்கு தண்ணீர் ஆதாரமாக இருக்கும் பல வாய்க்கால்கள் பற்றி அவர் பட்டியலிட்டார். முதலில் தூர் வாராமல் அவற்றை விட்டுவிடுவது, அப்புறம் அவ்விடத்தை ரியல் எஸ்டேட் வியாதிகளின் கைக்குள் சிக்குகின்றன. வெகு சீக்கிரமே அந்த தேநீர் கடை முதலாளி சென்னையின் மாநகரத்தெருக்களில் பாணிபூரி விற்றுக் கொண்டிருக்கலாம். கட்டட வேலைக்குச் சென்றால் அவரை அடையாளம் காண்பது கடினம்.

சென்னையின் பெருங்குடி சதுப்பு நிலம், வேகமாக வளர்ந்து வரும் தேசமென்று பீற்றிக் கொள்ளும் அத்தனை தேசிய/இனவாத குடிமகன்களுக்கும் அவமானப் படவேண்டிய விஷயம். தகவல் தொழில்நுட்பத்துறையின் அதிவேக வளர்ச்சி எனும் வீக்கத்திற்காக கொடுத்த மிகப்பெரிய விலை. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக போடப்பட்ட ரிங் ரோடுகள் உருவாக்கிய எதிர்விளைவுகள் மிகவும் நாசகரமானது. வேளச்சேரி தாம்பரம் சாலையிலிருந்து பழைய மகாபலிபுர சாலைக்கு குறுக்காகச் செல்லும் சாலையில் செல்லும் போது அதை உணர முடியும். சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒரு ஃபெலிக்கான் பறவையை ஆயிரக்கணக்கான வாகனங்கள் எளிதாகக் கடந்து செல்கின்றன. அந்தச் சாலையில் ஒரு VIEW POINT ஒன்று வைத்திருக்கும் அபத்தத்தை ரசித்து சிரிக்க முடியவில்லை. தினம் தினம் வளர்ந்து கொண்டிருக்கும் குப்பை மேடு சதுப்பு நிலத்தின் பெரும்பான்மையை தனதாக்கிக் கொண்டது. அங்கிருந்து பல்லாவரம் செல்லும் சாலையின் மறுபுறம் உள்ள குளத்தின் அருகே ஒரு 9 மாடிக் கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இன்னும் எத்தனை அடுக்குமாடிக் கட்டட விபத்துகளைச் சந்திக்க இருக்கிறோமோ தெரியவில்லை.


திரும்பவும் கிடைக்கப் போகாத காட்சி -குத்தம்பாக்கம்
ராஜேஸ்வரி இஞ்சினியரிங் காலேஜ் கட்டப்பட்டிருக்கும் ஒரு நீர்த்தேக்கம் கூட இப்படித்தான், ஏரிக்கு நீரைக் கொண்டு வரும் வாய்க்கால்களிடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றது. மதகுகளைச் சுற்றி ரியல் எஸ்டேட் போர்டுகள் அந்த நீர்த்தேக்கத்தை மறைத்தபடி இருக்கின்றன, ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள குத்தம்பாக்கம் எனும் கிராமம், தன்னிறைவு பெற்ற கிராமமாக பிபிசி தொலைக்காட்சி வரை ஆவனப்படுத்தப்பட்ட கிராமம் ( நம்மில் பலபேருக்குத் தெரியாத மாதிரி கிராமம்). தொழிற்சாலைகளின் வரவுகள் அந்த கிராமத்தினை இன்னும் சில ஆண்டுகளில் மாற்றிவிடும். அங்கிருக்கும் விவசாயிகளுக்கு இருந்த பாசன வசதி வளர்ச்சி எனும் பெயரில் பிடுங்கப்பட்டு விட்டது.

நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் போரூர் ஏரி இதில் ஒரு மிகச்சிறந்த உதாரணம், மக்களின் கண்களுக்கு முன்னரே அந்த ஏரி சூறையாடப்பட்டிருக்கிறது. 

இத்தனை மழைக்குப் பின்னரும் அதில் சொல்லிக்கொள்ளும்படி நீரில்லை.  “மே 17, நாம் தமிழர்கள்” போன்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கையிலெடுத்தப் போராட்டம். உள்ளூர் மக்களின் ஆதரவைக் கூடப் பெறவில்லை. கூடிய சீக்கிரத்தில், ராமச்சந்திரா மருத்துவமனை வாகனங்களை நிறுத்துமிடம் என்கிற போர்டினைப் பார்க்கும் அவலம் ஏற்படலாம். இல்லை இலவச சிகிச்சை என்று சொல்லப்படும் பொதுநல என்.ஜீ.ஓ மூடிமறைப்பு பணிகள் நடைபெறும் இடமாக மாற்றப்படலாம். நான் வசிக்கும் வீட்டைச் சுற்றி மட்டும் 50 பேக்கெஜ்ட் வாட்டர் நிறுவனங்கள் இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் என்பது சுவாரஸ்யமும் அபத்தமும் கலந்த ஒரு ஆவல் எனக்குள்.

இந்த மழையை , தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது.. மேலும் மேலும் மாசுபடுத்திக் கொண்டாடுவதா..?


  • மரங்களை வெட்டுவதில் இருந்து காப்பாற்றப் போகும் மீட்பராய் உள்ளே நுழைந்த நெகிழி எனும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதனை அசுரனாக மாற்றியிருக்கிறது. நெகிழியைக் கடிந்து கொண்டு என்னப் பயன்?  • ஆற்று மணலைச் சுரண்டி விட்டு ஊற்றுத் தண்ணீருக்கும் வழியற்ற நிலையில் எந்த உரிமையுடன் அண்டை மாநிலங்களிடமிருந்து தண்ணீர் பெற முடியும்?


  • பருவம் பொய்த்த மழை மீண்டும் பருவமழையாகப் பெய்துக்கொண்டிருக்கிறது… டெங்கு பயத்தில் ஒதுங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களாகவாது நாம் இருந்துவிட்டுப் போகலாம், மழையில் நனைந்து, மழையைக் கொண்டாடி கவிதை எழுதும் என்னைப் போன்ற முட்டாள்கள் வாழும் தேசத்தில். இந்த உலகம் யாருக்கான உலகம்? இந்த தேசம்?இந்த மொழி? இயற்கை வளங்கள், இந்தப் பண்டிகைகள் யாருக்கானது?? என்ற கேள்வியே அபத்தமானதோ என்று என்னைப் பகடி செய்கிறது

தனது கார்களில் இன்னும் சன் கட்ரோல் பிலிமை எடுக்க அவசியமில்லை என்று கருப்புக் கண்ணாடியோடே காரில் சுற்றிக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களுக்கான உலகம். அவர்கள் செய்யும் தொழிலுக்கான, அரசியலுக்கான உலகம். இந்த மழை, மண், காற்று எல்லாமுமே அவர்களுக்கானது?  இந்த தீபாவளியும் அவர்களுக்கானது.
-
ஜீவ கரிகாலன்
(ஏதாவது NOSTALGIC பக்கமாகத் தான் இதை எழுதலாமென்று தான் நினைத்திருந்தேன் மன்னிக்க)

வியாழன், 5 நவம்பர், 2015

Virtual Exhibitionhttp://timesofindia.indiatimes.com/india/Man-hurls-footwear-at-former-national-security-adviser-M-K-Narayanan-in-Chennai/articleshow/49663203.cms
Image 1
Medium: Oil on canvas
Dimensions: 18 x 21 3/4 in. (45.7 x 55.2 cm)
Classification: Paintings
Artist : Vincent Van Gogh
Title : ShoesImage 2
Medium: Online user friendly app
Dimensions: Flexible
Classification: Fake Art 
Artist : Polling Joker
Title : Common Man's Politicshttp://www.business-standard.com/article/current-affairs/i-have-a-file-on-you-m-k-narayanan-114070400684_1.html

புதன், 4 நவம்பர், 2015

ப.தியாகு - அவசரக்காரன்

யாரோடும் விரோதமில்லாதவன்
***

அக்டோபர் மாதக் கணையாழியில் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கும் முன் ஒவ்வொரு கவிதையாக வாசித்து வந்தார்கள். பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ப.தியாகுவின் இந்தக் கவிதை மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது… 

இந்தக் கடைசி வரி இத்தனை வலி மிக்கதா? கண்களை மூடுவது – திறப்பதற்கு நண்பா!!...

“வெள்ளி இழைகளை”
விழிகளையுரசும் நெருக்கத்தில்
காணப்பிடிக்கும்
சேரும் இடைவெளியில்
தன்னை
வலுவற்றதாய் மாற்றிக்கொண்டு
குழந்தையின்
மென்கரங்களில் மோதி முறியும்
வெள்ளிக் கம்பிகளை அறிவேன்
ரயிலின்
ஜன்னலோர இருக்கையை
வேண்டிப் பெற்று
உச்சியில்
கிளைகள் போல் பரந்திருக்கும் வானை
தாங்கி நிற்கும் வெள்ளித் தண்டை
வியந்துகொண்டிருக்கையில்
தாழ மறுக்கும் என் இமைகளுக்கப்பாலும்
திணிப்பதற்கேயொரு
திரையிருப்பதை
பக்கத்து இருக்கையிலிருப்பவன்தான்
அறியத் தந்தான்
'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'

நேரில் வந்து பரிசை வாங்குகிறேன் என்றவனிடம், வீண் செலவு செய்யாதே என்று கண்டித்தேன். உலகில் ஒருவனுக்காக நான், குணா, தியாகு ஆகியோர்கள் பேசிக் கொண்டிருந்த நினைவுகள் பாரத்துடன் அழுத்துகின்றன. உன் பெயர் எழுத வைத்திருக்கும் காசோலையில் யார் பெயரும் எழுதிட முடியாது. வெறுமனே சமூக ஊடகம் இணைத்து வைத்திருந்தது என்று சொல்ல முடியவில்லை தியாகு!! எல்லாவற்றையும் மறந்து, கடந்து செல்லப் பழக்கப்பட்ட மனம் தான் மனிதனுடையது. நான் கூட இதை எழுதுவது இவற்றைக் கடப்பதற்குத் தானா என்று அச்சமுறுகிறேன். 

மிருகங்களுக்கு இருக்கின்றதா என்று தெரியாது, இத்தகைய மரணங்களில் மனிதன் தன் இருப்பைப் பற்றிய பயத்தை அடைகிறான். அது மட்டுமே வலி என்பது உளவியல் கூறும் உண்மை.

நீயும் உன் நண்பனுக்காக எழுதியிருந்தாய்!!

சமாதானத்தின் மடி
***
சதா இரையும்
உன் பேத்தல்கள் அனைத்தும்
அடக்கிக்கொண்டுவிட்டன
சிறு முனகலில்
வேட்கையோடு நீ
சரித்துக்கொள்ளும் 'வோத்கா'
உள்ளத்து ரணங்களின்
சீழோடு வினையாற்றி
இமைப்பீலிகள் நனையப்பொங்கும் கண்ணீராகும்
வேதி விளைவுகளுக்கு
அவசியங்கள் இல்லை இனி
தங்க முட்டைகளென்று பொய்யுரைத்து
வாழ்க்கை உனக்குக் கையளித்த
வெறும் கூழாங்கற்களை
ஒற்றைத் தேகமாக்கி விட்டெறிந்து
பின் எங்குறைவாய் உயிரால்,
ஏமாற்றங்களும் வாதைகளும்
வந்து தீண்டா
மரணத்தின் மடியிலன்றி.

- (நண்பன் ராம்நாத்-ன் நினைவுக்கு)

சாதாரணமாகக் கடந்து சென்ற வரிகளெல்லாம் இன்று கணக்கிறதே நெஞ்சில். ஜாடைப் பேச்சு பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் என்னை வேறு ஏதோ சொல்லப் பணிக்கிறதே தியாகு.

'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'

மழை இன்னும் வேகமாகப் பெய்கின்றது தியாகு…

ஞாயிறு, 1 நவம்பர், 2015

Interpretation of “Creation of Adam” by Michelangelo Buanarotti held at land mass near river Coovam
தேவாலயத்தின் ஆடம்பர தட்டுகள்
இரண்டினில்
கட்டளையின் பெயரில்
நமக்கு உணவு பரிமாறப்படுகிறது

அதை நான் மஃபின் என்றேன்
நீயோ அது கப்பிகேக் என்கிறாய்
இரண்டும் பேக்டு 
உணவு தானே என்றேன் -இருந்தும்
இரண்டும் வேறு வேறு 
கேக்ஸ் தானே என்றாய்
பிறகு
நீயாக வருத்தமடைகிறாய்
கோபம் கொள்கிறாய்        
டைனிங் டேபிளின்
எனது இருக்கையில் மை ஊற்றப்படுகிறது.

கிரீடம் உன் தலையில்

எப்படியோ தெரியவில்லை
உன் அரசாட்சியின் புதிய ஏற்பாடுகள்
அப்பத்தை இடம்பெயறச் செய்கின்றன
வைன் ஊற்றப்பட்ட கப்பிக் கேக்
புனிதமாக்கப்படுகிறது

ஜெர்ரி பழங்களில் இருக்கும் அக்ரலிக்
வண்ணங்களை
நான் விஷம் எனப் பிரச்சாரம் செய்கிறேன்.

நித்தமும் போஷித்து வரும்
உனது தற்கால எதிரியின்
வேண்டுகோள் இதுதான்.
சிலுவையில் அறை,
கல்லால் அடி,
எப்படியோ கொன்று போடு

ஆனால் சாப்பிட்டாயா என்று
மட்டும் கேட்காதே!!
***
க்ளிஷே இல்லை
இது வைனில் ஊற்றிவைக்கப்பட்ட

வந்தனம் – ஆமென்.

ஜீவ கரிகாலன்