வியாழன், 11 ஜூன், 2020

It அது butt ஆனால் (ஸ்வாமிஜி டேல்ஸ் - 02)


ரு அறிமுக எழுத்தாளர் அல்லது நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளரின் சுமாரான புத்தகம் குறித்து பேசுவதற்கு நாஞ்சில் நாடன் அழைக்கப்பட்டிருந்தார் என்றால், அவர் உரையின் இறுதியில் வழக்கமாக ஒரு உதாரணம் இருக்கும். ஒரு மூத்த எழுத்தாளனாக தென்னை மரத்தில் ஏற விரும்பும் எழுத்தாளரின் புட்டத்தில் கை வைத்து மேலேற்றுவதற்கு கொஞ்சம் தள்ளி விடுவோம் அதற்கு மேல் ஏறுவது அவர்களின் சாமார்த்தியம் என்பார். ஆனால் உரையின் போது புட்டம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தமாட்டார். புத்தகத்தில் கோளாறு இருக்கின்றது என்பதை அப்போது புரிந்து கொள்ளலாம். இரண்டு மூன்று முறை நான் இந்த உதாரணத்தைக் கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் அப்படியான நூல் ஒன்றை பொறுப்புடன் நாம் பாராட்ட வேண்டிய சூழல் வந்தபோது நாஞ்சில் நாடனைத் தான் நினைக்க வேண்டும். ஆனால் எனக்கோ சாமியின் நினைவு வந்தது.

2008 என்று நினைக்கிறேன். சந்தான சாமி அவன். சாட்சாத் தூத்துக்குடியான் என்றாலும் ஏலே என்று சொல்வதைத் தவிர அவனது ஊர் வழக்கு எதுவென்று கண்டு கொள்ள முடியாது. அதற்கு இரண்டு காரணம்.

1. தொழபுழ தொழபுழா என்று வேகவேகமாகப் பேசுவதும்

2. பேச ஆரம்பித்தால் நிற்காமல் இருப்பதும்

3. இல்லை அப்படியெல்லாம் இரண்டோடு நின்று போகாது... இது எல்லாவற்றையும் விட முக்கியக் காரணம். டவுன் பஸ்ஸில் போகும் போது ஊரில் குழாய் கத்தும் சப்தத்திற்கு இணையாக கொரியன் மொபைலில் ஒலிக்கும் wwe ஹார்ட் ராக் ரிங்டோனைப் போன்ற 119 டெசிபல் வரை கத்திப் பேசும் திறமை உள்ளவன்.

நான்கு, ஐந்து என்கிற காரணம் என்கிற காரணமிருந்தாலும் அது தனி எபிஸோட் எழுத முடிந்தால் எழுதிக்கொள்ளலாம். நாம் பேசப்போவது அதைப்பற்றியல்ல. மீண்டும் நாஞ்சிலார் ஞாபகம் வந்தது,  ஒருமுறை என்னிடம் அந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கத்தில் ஒரு 12 முதல் 15 % பகுதிகளை துண்டாக வெட்டியிருந்தால் ஒரு அருமையான நாவலாக அது தொடர்ந்து பேசப்பட்டிருக்கும் என்று சொன்னார், வேறு சில சந்தர்பங்களிலும் அதையே சொன்னார். ஆகவே விசயத்திற்கு வருகிறேன்.

சென்னை மீனம்பாக்கத்தை ஒட்டியிருக்கும் பகுதி ஸ்லம் என்றும் ஆக்கிரமிப்பு பகுதியென்றும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பல தசாப்தங்களாக தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கு இருக்கும் ஓட்டு வங்கியைக் காரணம்காட்டி விமான நிலையம் விரிவாக்கத்தின் போது கூட ஒரு அங்குலமளவும் அப்புறப்படுத்த முடியாமல் குடியிருப்பாகவே இருந்து வருகிறது.

அவர்களின் பிரதான வருமானம் விமானநிலையத்தை ஒட்டியே இருந்து வருகிறது. 90% வீடுகளும் தங்களது மேல்தள அல்லது கீழ்தள அல்லது முழுமையாகவோ கார்கோ நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். உலகில் உள்ள பல நாடுகளில் தன் கிளைகளை வைத்திருக்கும் நிறுவனம் கூட அப்படி ஒரு சந்தடியான சந்துக்குள் தனது கிளையை வைத்திருக்கும். ஏனெனில் அங்கு நடைபெறும் வர்த்தகம் எல்லாமே குறித்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதாலும் அவையெல்லாம் அக்குடியிருப்பில் இருந்து பன்னாட்டு சரக்ககம் நடை தூரத்தில் தான் என்பதாலும் தான். அதுபோக அங்கிருக்கும் பலரும் அந்நிறுவனங்களில் ஓட்டுனராகவோ, சுமை தூக்குபவர்கள் அல்லது உதவியாளராகவோ பெரும்பாலும் இருப்பார்கள்.

நானும் அவ்வாறான நிறுவனத்தில் தான் வேலைக்குச் சேர்ந்தேன். பழவந்தாங்கலில் தங்கும் அறையும் மீனம்பாக்கத்தில் வேலை செய்யும் நிறுவனமும்.

“நீ தான் புதுசா வந்துருக்கற மேனேஜரா” என்றான் அருண். ஆள் மட்டும் சிவப்பாக இருந்தால், நீ தான் ஜாக்ஸன் துரையா என்று பதிலுக்கு கேட்டிருப்பேன். என்ன ஆணவம் அவன் கேள்வியில்?

ஆனால் அது தான் என் மீதான அவன் அன்பு காட்டும் விதம் என்பதையும் விரைவில் புரிந்துகொண்டேன். வயது 20ஐ கடந்திருக்கும் அவ்வளவு தான். எப்போது படிப்பை நிறுத்தினாய் என்று கேட்டால் ஏழாவதிலோ ஒன்பதாவதிலோ என்று பதில் வரும். அப்பா இல்லை. ஒரு வீடு மட்டும் தான், வீடு என்கிற பெயரிலான ஒரு நான்கு தடுப்பும் ஒரு கூரையும். ஆனால் ஆள் - படு சமர்த்தன். வேலை அத்தனையும் படு வேகம்.

அவன் எங்களைப் போன்ற நான்கைந்து அலுவலகத்திற்கு ஏற்றுமதிக்கான பெட்டிகள் வந்தால் ஏற்ற இறக்க மட்டும் வந்து போவான். வண்டி தெருவிற்குள் நுழையும்போதே அவனைப் போன்ற லோடர்கள் எந்த நிறுவனம் என்று கேட்டுவிடுவார்கள். சாலையில் இருக்கும் டூவிலர் எருமைகளையும், நிஜ எருமைகளையும் ஒருங்கே ஓரங்கட்டி சின்ன யானையை அல்லது 407ஐ அலுவலக வாசலில் நிப்பாட்டுவதற்குள். ட்ரைவரையோ, எருமையையோ அல்லது வேறு யாராவது கடந்து செல்பவர்களையோ ’**தா‘ போன்ற உயர்தர வடிகட்டப்பட்ட வார்த்தைகளால் அலங்கரித்துவிடுவான்.

சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் தான். சந்தான சாமிக்கு ஏற்போர்ட் உள்ளே செல்வதற்கு லைசன்ஸ் இருந்தது. அந்த நான்கு பேர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பாஸ் கிடைக்கும் இரண்டாவது ஆள் அவன். நமக்கோ டாக்குமெண்டேஷன் தான் பணி. எப்போதும் மரியாதையாக நடந்து கொள்ளும் அருண், அன்று அலுவகம் வந்துகொண்டிருந்த என்னிடம்,

“த்தா பொழைக்க தெரியாத ஆளா இருக்கியே சார்”

“ஏண்டா என்னாச்சு”

“மேனேஜர் சாமி இருக்கான்ல”

அவன் எல்லாரையும் மானேஜர் என்று தான் அழைப்பான் போல. “ஆமா அவனுக்கு என்னப்பா?”

“உனக்கு எதுவும் தெர்யாதா. அவன் ஸூபர்வைஸர் ஆகிட்டான்பா”

“என்னது”

“போ.. போ பாக்கும்போது நீ தான் நெறய பட்ச்சவனாட்டம் இருந்த. பொழைக்க தெர்யாத ஆளா இருக்கியே.. இப்படியே மானேஜரா இருந்துக்கோ”

அவன் ஏன் தான் எனக்காக இத்தனை தூரம் வருத்தப்பட்டானோ தெரியாது.  சரக்குகளை சுங்க அதிகாரிகளின் ஒப்புதல் வாங்க உள்ளே செல்வதற்கு தேவை தான் அந்த நுழைவுச் சீட்டு, அவர்களை பொதுவாக ஸூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வார்கள் அவனைப் பொறுத்தவரை அபப்டியான ப்ரொமோஷன் எனக்கு இல்லாமல் போனதற்கு மிகவும் வருந்தியதாகப் புரிந்தது. அதிகப் பழக்கமில்லையென்றாலும் அவனை நான் டா போட்டு அழைத்தது கிடையாது, கரூரிலிருந்து வந்தவன் என்பதால் பொதுவாக மரியாதையுடன் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். யாராக இருந்தாலும் இந்த மரியாதை மிக முக்கியம் தான் இல்லாவிட்டால், அவன் சாமியை அன்று அடிக்கும் அளவிற்கு போயிருக்க மாட்டான்.

அவன் அடிக்கும் அளவு உச்சத்திற்கு போனதும், நான் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சரியான நேரம் என்பதால் சாமியை நான் காப்பாற்றிவிட்டேன்.

“சார் நீ வந்ததால தான் அந்தாள வுட்டுட்டு போறேன், இல்லன்னா”

“இல்லன்னா என்னலே, பண்ணுவ” நம்மாளும் தூத்துக்குடி அல்லவா?

“த்தா.... உன்னை... சாவட்ச்சிருவேன்”

யப்பா சாமி கொஞ்சம் உள்ளற போங்க.. கதவை சாத்துங்க ராபின் சார் என்று இருவரையும் தனியாகப் பிரித்தோம்.

“இப்ப என்னதாம்ப்பா உன் பிரச்சன”

“சார் அசிங்கமா பேஸறான் சார் அந்த ஆளு, சொல்லி வைங்க ஏரியாண்ட வரமுடியாம பண்ணிடுவேன்”

 “நான் என்னலே உன்னைய தப்பா பேசுனேன்” கதவை திறந்து ஆத்திரத்தோடு சாமியும் வந்துவிட, நானும் ராபினும் அவர்களிருவரையும் பிரித்து வைத்தோம்.

 “யப்பா அருண்.. சாமி என்ன தப்பா பேசினார்னு சொல்லு தப்பா இருந்தா மன்னிப்பு கேட்க சொல்றேன்”

“அப்படிலாம் இவண்ட்ட கேட்டுட்டு என்னால வேலை பார்க்க முடியாது, உங்களால முடிஞ்சத பார்த்துக்கங்க”

“பார்த்திங்களா சார் அந்த ஆளை..  காலைல பொட்டி வந்துச்சேன்னு ஒன்னொன்னா இறக்கி வச்சேன்..”

“நான் என்னலே பண்ணேன்”

“யோவ் பேசாம வெய்ட் பண்ணுங்க... நீ சொல்லு அருண்”

“என்னைய பார்த்து குண்டி தெரியுதுடா அருண்ணு கத்தி பேசுறான் சார் இந்த ஆளு”

“குண்டினா கெட்டவார்த்தையாலே.. சாரத்தை மேல ஏத்திவிட்டு வேலைபாருன்னு தான சொல்லவந்தேன்”

“சாரம்னு சொன்னா அவனுக்கு என்ன தெரியும், தப்பா புரிஞ்சிருப்பான்ல. 

யப்பா அருணு சாரம்னா நீ உடுத்திருக்கிற லுங்கி தாம்பா ”

“அத விடு சார்.. அவன் என்னைய பார்த்து எப்படி சார் குண்டி தெரிதுன்னு கத்தலாம்”

வேறுவழி தெரியவில்லை, சாமி மன்னிப்பு தான் கேட்க வேண்டும். சாமியும் அப்படி இறங்கிப் போகுற ஆள் இல்லை. வீணான பிரச்சனை அதுவும் ஒரு ஏப்ரல் மாதத்தில், மே மாதம் வந்தால் இன்க்ரீமெண்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாமி மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு என்பது துளியும் இல்லாத போது அருணை சமாதானப்படுத்தவே முயன்றேன்.

“தம்பி தூத்துக்குடி சின்ன ஊருப்பா, நீயெல்லாம் சிட்டில வாழ்றவன் பாரு பின்னாடியே ஏர்போர்ட். நாளைக்கு நீ அங்க கூட லோட்மேனா போகலாம். தூத்துக்குடில இருக்கற ஆளு அவன். சின்ன ஊருப்பா அது.. இதெல்லாம் கொஞ்ச கொஞ்சமா கத்துக்குவாரு. இனிமே அவர் இப்படி சொல்லாம நான் பார்த்துக்கிறேன். நீ இப்ப சமாதனமா போயிரு எனக்காக”

அவனுக்கு அந்த சமாதானம் ஏதோ போதுமானதா இருந்தது. “சரி சார் சொல்லி வையி, உனக்காக தான் அந்த ஆள வுடுறேன்”

கீழே இறங்கிக் கொண்டிருந்த அவனை நிறுத்தி இன்னொன்றையும் கேட்டேன்.

“சரிப்பா எனக்கு ஒரு சந்தேகம். கீழ குனிஞ்சி பெட்டி அடுக்கிட்டு இருக்கற, ட்ரெஸ்ஸ மேல இழுத்துக் கட்டுன்னு வேற எப்படி உனக்கு புரிய வைக்கிறது”

“சூ_து தெரியுதுன்னு சொன்னா இன்னாவாம் சார்.”

சாமியின் முகம் வெளுத்துவிட்டது. நான் தனியாக அறைக்குச் சென்று சுவற்றில் முட்டிக்கொண்டேன். அவர்கள் மூர்கத்தை வைத்துப் பார்த்திருக்கையில் சற்று தாமதித்திருந்தாலும் பெரிய கலவரமாக மாறியிருக்கும். அடுத்த நாள் அலுவலகம் வரும்வழியில் இடைமறித்த அருண்.

“அந்த ஆளு சாரி கேட்டான் சார். நமக்கும் மட்டும் அந்த ஆளு மேல என்ன காண்டு இருக்கப்போவுது. நீ மட்டும் சூப்பர்வைஸரா ஆயிருந்தா இந்த பிரச்சனை வந்துருக்குமா”

***

நாஞ்சிலார் அவ்வாறான வாழ்த்துரை வழங்கும்போது நான் வேண்டிக்கொள்வது எல்லாம் ஒருநாளும் அருண் ஒரு கவிதைத் தொகுப்போ, சிறுகதைத் தொகுப்போ எழுதிவிடக் கூடாது என்று தான்.