#மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூன், 2018

ஓய்வு பெறும் சுமை தாங்கி


வெறும் ஒரு கிலோ அல்வாவை ஒரு கல்யாண வீட்டு கும்பலுக்கே பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது நான் இதுவரை பார்த்த மனிதர்களில் என் சித்தியால் மட்டுமே முடியும்.

தாய்மாமாவின் வீட்டு கிரஹப்பிரவேசத்தில் தான் முதலில் அதனை கவனித்தேன், அந்த வீட்டிற்கு அவள் பெயரைச் சூட்டியிருந்தார். அதற்கான காரணம் என்ன என அம்மாவைக் கேட்டபோது அம்மா சித்தியைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள், அப்போது அவள் ஒரு தொடர்கதை படம் பார்த்திருந்ததால் என்னால் அதை தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்தது.

சித்தியைப் பார்த்தாலே, சந்தோஷ் நாராயணனின் ராக் பேண்ட் வாசிக்கும் “நெருப்புடா…” போன்ற ஒரு ஹெவி மெட்டல் பாடல் அச்சுருத்தும். அதிகப்பட்சம் ரெண்டே வார்த்தை தான் “ சீ… நாயே” எப்பேற்பட்ட குறும்பும் வாலைச் சுருட்டிவிடும். சிறுவர்களுக்கு தான் என்றில்லை, சில சமயம் சித்தியோடு பேசிவிட்டு என் தங்கையிடம் “போடி உன் அம்மா எப்பவும் இப்படியே இருக்கா” என்று அழுத அம்மாவையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் டெரர் மனுஷியாகவே வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறாள்.
ஆனாலும் அம்மா மட்டுமே சித்தியை நெருப்பு காலத்திற்கு முந்தைய சித்தியைத் தெரிந்தவள். இருவரும் குற்றாலத்தில் மலைமீது ஓட்டப்பந்தையம் வைப்பது முதல், சுடுகின்ற எண்ணைச் சட்டியில் கைவிட்டு வடையை எடுக்கும் சாகசங்கள் போல பல எபிஸோட்கள் கதை சொல்லியிருக்கிறாள்.

குடும்பத்தில் எப்பேற்பட்ட சிக்கலுக்கும் அவளிடம் ஒரு தீர்வு இருப்பதை நான் அறிந்து கொண்ட காலத்தில் சித்திக்கு காதோரம் நரைத்திருந்தது. மிக அழகானவள். அவளது சிரிப்புச் சத்தம் பிரத்யேகமானது. அதிக நேரம் சிரிக்க மாட்டாள் ஆனால் அவளே சிரித்துவிட்டாள் எனில் அது குடும்பத்தின் உச்சபச்ச மகிழ்ச்சியின் விளைவாக இருக்கும். ஆனால் பட்டென்று அழுதும் விடுவாள், அதெப்படி குடும்பத் தேரினை இழுப்பவள் இப்படி இலகுவாக இருக்கமுடியும் என்று நினைக்காதீர்கள். அவள் தனக்கு வரும் சோதனைக்கெல்லாம் அசந்துபோவதில்லை. ஆனால் நகைக்கடை விளம்பரத்திலோ, வாஷிங் பவுடர் விளம்பரத்திலோ வரும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கோ கண்ணீர் வழிந்தோடும். மற்றபடி தன் கையில் இரண்டு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தும், வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைக்குச் சென்றாள். அந்த கையிலிருக்கும் நீண்டத் தழும்பு, தன் வாழ்க்கையில் அவள் செய்திருக்கின்ற நிறைய தியாகங்களின் தடயமாக இருக்கிறது.

சுறுசுறுப்பு என்கிற சொல்லைப் பொதுவாக நெல்லை மாவட்ட பெண்கள் எல்லோரிடமும் பொதுவாகக் காணலாம், அதற்கென சிறப்பு குரோம்சோமகள் இருக்குமோ என்னவோ, இன்றுவரை அந்த ரகத்திலும் சற்று கூடுதலான பிறவியாய் அவளைப்பார்க்க முடிகிறது.

அந்த காலத்தில் 26, 27 வயதுவரை ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் அது குடும்பத்தின் மிகக் கடினமான நிலை தான்.
சித்தி என் அம்மாவின் முதல் தங்கை, தாத்தா ஒரு ஏட்டையா. ரொம்பவே ஞாயவானாக இருந்ததால், அவருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள், எங்கள் அம்மாவைத் தவிர மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் என அவர்கள் படிப்பு திருமணம் எல்லாமே கேள்விக்குறியாகிட, பட்டப்படிப்பை முடித்த என் சித்தி குடும்பப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு வேலைக்கு சென்றிருந்தார். முதலில் ஒரு நாளிதழில் எடிட்டோரியலில் பின்னர் அரசு வங்கியிலும் வேலை கிடைத்தது. குடும்பச்சுமை தேர்போல உயரமாகவும் பாரமாகவும் இருக்க, அந்த தேரை தன் வேலை என்கிற வடம் கொண்டு ஒற்றை ஆளாய் பல வருடங்கள் இழுத்து வந்திருக்கிறாள்.

அதனாலேயே அவள் தனிரகமாய் வாழ வேண்டிய கட்டாயம் இருந்திருக்கலாம்.

என்னதான் சித்தியை கஞ்சாம்பட்டி என்று பலரும் கிண்டல் செய்தாலும் அதை அவள் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்கும் அவளது மறுபக்கம் தெரியும். இருவருமே அரசு உத்தியோகம் பார்த்தாலும் ஆடம்பரச் செலவு என்பது துளியுமற்ற அக்குடும்பத்தில், மற்றவர்களுக்கு உதவி என்று சொல்லும்போது மிகப்பெரிய உதவியெல்லாம் செய்திருக்கிறார், இதில் சித்தப்பாவும் ஜெண்டில் மேனாக ஸ்கோர் செய்துவிடுகிறார். குடும்பத்தினர், தூரத்து சொந்தம் என்று மட்டுமல்லாது தன்னுடன் வேலை பார்க்கும் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட இப்படி நிறைய செய்திருக்கிறார்.

தனிப்பட்ட மனுஷியாய் பார்க்கும்போது சாதாரண மனிதர்களுக்கு மத்தியில் உலாவும் ஒரு அசாதாரணப் பெண்.
***

நடிகையர் திலகம் படம் பார்த்த களிப்பில் சில ஜெமினிகணேசன் பாடல்களை யூட்யூபிவிட்டதில் அந்தப் பாடலைக் கேட்டேன். ஹெல்லொ மிஸ்டர் ஜமீந்தாரில் ஒரு பாடல் “காதல் நிலவே கண்மணி ராதா” என்று ஜெமினி தெரு ஓரத்தில் நின்றபடி, மாடியிலிருந்து பாடலை ரசிக்கும் சாவித்திரியைப் பார்த்து ஆடுவார். அருமையான மேற்கத்திய இசையின் அடிநாதத்தில் மெல்லிசையாகி உருவான பாடல் இது..

ஒருநாள் அந்தப் பாடலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் சித்தப்பா. சித்தப்பா ஒரு போலீஸ், ஒரு காலத்தில் அவர் சிரிக்கவே சிரிக்காத மனிதர் என்கிற கற்பிதம் இருந்தது. நல்ல உயரம் இருந்தாலும் தொப்பை இல்லாததால் மஃப்டியில் இருந்தால் போலீஸாகவெல்லாம் கற்பனை செய்ய முடியாது.

வேண்டுமானால் தென்காசியில் வாழும் யாரோ ஒரு கண்ணியவான் என்று கடந்து செல்லலாம். அன்று இந்தப்பாடலை டீ வியில் லயித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், “என்ன சித்தப்பா முதல் காதல் ஞாபகமா” என்று கேட்டுவிட, ஆமாம் என்று சொன்னார். வேறு யாரோ ஒருவர் காரணமாக இருப்பார்கள் என்று ஆர்வமாக பதிலுக்கு காத்திருந்தால், ’அது வேறுயாருமில்லை உன் சித்தி தான்’ என்றார். நீங்கள் தான் உறவினராச்சே ஏன் இப்படி ஏக்கமாக வீட்டைச் சுற்றி, வீட்டைச் சுற்றி வந்தீங்க என்று நக்கலாகக் கேட்க, ”:எல்லாம் உன்னால தான் டா” என்றார்
ஏற்கனவே உறவினரான சித்தப்பாவோடு சில ஆண்டுகளுக்கு முன்னரே பேசி வைத்திருந்ததால், திருமணத்திற்கான நிர்பந்தத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் துரிதப்படுத்த, ஏழு ஆண்டுகளாய் காத்திருந்து பிரசவத்திற்காக வந்திருந்த அம்மாவைக் காரணம் காட்டி சற்றுத் தள்ளிப்போட வேண்டும் என சித்தி சொல்லியிருக்கிறாள். பெரிய பூகம்பமே கிளம்பியிருந்தும் சித்தப்பா ஒரு ஜெண்டில்மேனாக காத்திருந்திருக்கிறார். இதற்காக அவள் திருமணம் ஒரு ஆண்டுக்கும் மேலே தள்ளிப்போயிருக்கிறது. இந்த ஜெமினிகணேசன் சாகசங்களுக்கு காரணம் நானாகிய வரலாறு ஒன்றிருக்கிறது. 

பிறப்பதற்கு முன்னாலிருந்தே பலபேரோட லவ்ஸில் குறுக்கப்புகும் பழக்கம் இருப்பதை வரலாற்றில் பதிய முடியும் போல.

***

ஆதிச் சமூகத்திலிருந்து பெண்கள் உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் அந்தந்தக் காலக்கட்டத்தின் பொதுபுத்திகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தளைகளைத் தாண்டி பொறுப்பேற்பவர்கள் அரிது. அப்படியானவர்கள் என்றுமே பிறரது வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து போவார்கள்.

அதே சமயம் அத்தகைய திடம் உள்ளவர்களுக்கு தான் மலை போன்ற சோதனைகளும் வந்து சேர்கின்றன. ’அமைப்பு’ என்கிற விசித்திரம் அது.
தங்கையின் திருமணத்தின் போது தங்கைக்குச் சமமாக அவளையும் நிறைய காமிராவில் பதிவு செய்தேன்.. கண்டமேனிக்கும் போட்டோ எடுக்கிறேன் என்று அவளே திட்டக்கூடும், ஆனாலும் வியூ ஃபைண்டரில் அவளது நிம்மதியை, பதட்டத்தை, சந்தோசத்தை கவனிக்கும் நொடிகளில் பெரும்பாலும்  அதை படம்பிடிக்கத் தவறினேன். ஏன் எனில் அவள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் கை தேர்ந்தவள்.

ஒரு நீண்ட வாழ்க்கைக்கு எத்தனை பக்குவங்கள் தேவை பாருங்கள். முதலாவது பல நேரங்களில் மகிழ்ச்சியாய் இருப்பது போல காட்டிக்கொண்டிருக்க வைக்கவும் சொல்கிறது. சில நேரங்களில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் அதையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் சொல்கிறது. இரண்டாவதும் ஒரு மனிதரின் வாழ்க்கையில் சாத்தியம் எனில் வாழ்க்கை அவருக்கு அத்தனை கடினமான பயணம் செய்திருக்கிறது என்று அர்த்தம், அன்றைக்கு சித்தியிடம் அப்படியான ஒரு அமைதி இருந்தது.

நேற்றுடன் பணி நிறைவு செய்து ரிட்டையர்ட் ஆகிறாள். அதற்கான விழாவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்த்தேன். அதே ப்ராண்டட் சிரிப்புடன் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தாள். தனது வேலை மூலம் இன்று ஆறு குடும்பங்களாக இருக்கின்ற, அன்றைய ஒரே குடும்பத்திற்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவள். எத்தனையோ வலிகளையும் சோதனைகளையும் கடந்து தன் பணியை நிறைவு செய்துவிட்டாள். இன்றைக்கு காலை அந்த அவசர கால உப்புமா (அவளது உப்புமா என் ஃபேவரைட்) செய்யத் தேவையில்லை என்றாலும், செய்வதற்கும் காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எழுதத் தெரிந்தவன் என்கிற ஒரேயொரு தகுதி மட்டும் உடையவனால் என்ன செய்ய முடியும்.

நீ வைத்த சீனித்தண்ணிக்கு நன்றியும், நலமோடு வாழ பிரார்த்தனைகளும்.

Stay calm and long live chithi!! Love u

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்

பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்



நான் இவனைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருக்கிறேன். வாழ்வில் ஃபீனிக்ஸ் பறவை போன்று ஒரு லட்சியத்திற்காக பறந்து கொண்டே இருப்பவர்களை நாம் பொதுவாக வரலாற்று புத்தகங்களில் தான் பார்ப்போம், சாதனைக் கதைகளாக, வெற்றியடைந்தவர்களின் வரலாற்றில், அவர்கள் சந்தித்தப் பிரச்சினைகள், அடைந்த அவமானங்கள், அவர்களுக்கு நேர்ந்த தோல்விகள், விபத்துகள் என்றெல்லாம் வாசித்திருப்போம், ஆனால் அவர்கள் மட்டும் தான் சாதிப்பதற்காகவே பிறந்தது போல எண்ணுவதால் Inspireஆகும் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிட்டுவதில்லை, You can win, The monk who sold my ferrari, Ijobs எல்லாம் after-all ஒரு best book sellerகள் தான். அதே சமயம் நம்மிடம் இருந்து ஒருவர் அப்படி படிப்படியாக முன்னேறுவதை அவதானிப்பதும் மிகக் கடினம், ஏனென்றால் நம்மிடையே இருக்கும் ஒருவனின் வீரியத்தை, திறமையினை நாம் கண்டு கொள்வதேயில்லை, இல்லை அவனை de-motivate  செய்யும் factorஆகவே பெரும்பாலும் இருக்கிறோம். இது தான் நம் சமூகத்தின் பொதுவான பாங்கு என்று கருதுகிறேன். இது சமூகம் தாண்டி ஒரு தேசிய நோயாகவும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் நம்மிடமிருந்து ஒருவன் சாதிப்பதைக் கண்டு அகமகிழும் போது, நாமும் ஆசிர்வதிக்கப் படுகிறோம் என்பது நமக்குத் தெரியாமலே நடந்து விடுகிறது. ஒருவரைப் பாராட்டும்பொழுது (வெறுமனே முகஸ்துதியாகவோ!! அல்லது ஜால்ராவாகவோ இல்லாமல்) நாமும் அவர்களோடு சேர்ந்து தூண்டப் படுகிறோம், பாரட்டப்படுவது மட்டுமல்ல பாராட்டுவதுமே self-motivation tool தான். IPL சிக்ஸருக்காக கிடைக்கும் கைதட்டல்கள், ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு கிடைப்பதில்லை, ஒரு 50 seater conferenceஇல் கிடைக்கும் சொற்பக் கைதட்டல்களின் மதிப்பை அளவிட முடியாது.

 இன்றைய உலகில் சாதனை என்பதைக் கூட சரியான எடை-நிறை போட்டு சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது, ஏனென்றால் இது power starகளின் காலம், கலை தாகமும், கலையுணர்வும் உள்ள எத்தனையோ கலைஞர்கள் எட்ட முடியாத உயரங்களை சில power starகள் எட்டிவிட்டு சாதனையாகக் காட்டிக் கொள்வார்கள். 480க்கும் மேலே மதிப்பெண் வாங்கிய மாணவர்களாக பள்ளியில் சேர்த்து வெற்றி கொள்ளும் power starகளின் காலமிது. இரு நண்பர்களில் - படிப்பில், உழைப்பில், திறனில் எல்லாம் சமமாக இருந்தும் ஒருவன் தேர்ந்தெடுத்த துறை தகவல் தொழில் நுட்பமாகவும் இன்னொருவனுக்கு வேறு ஒரு அறிவியல் பாடமாகவும் இருக்க, ஒருவனுடைய வாழ்க்கையை இன்னொருவன் அடைந்திருக்கும் பொருளாதார அந்தஸ்துகளை வைத்து மதிப்பிட்டு இவன் சாதித்துவிட்டான் என்று ஒப்பிட்டுப் பார்த்து சொல்லும் அபாயகரமான சமூகத்தின் கதிர்வீச்சிலிருந்து கருப்பாம்பூச்சியாக போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்பது சாதாரணம் அல்ல.

அப்படிப்பட்ட ஒரு cockroach தான் என் நண்பன், அவனை நான் ஒரு பூச்சியோடு ஒப்பிடுகிறேன் என்று அவன் வருத்தப்பட மாட்டான், கருப்பாம்பூச்சி சுமார் 40-50 கோடி ஆண்டுகளாக பூமியில் நடந்த பல்வேறு மாறுதல்களையும் , பேரழிவுகளையும் தாண்டி நிலைத்து வாழ்ந்து வரும் ஒரு அதிசயம். இன்றைய மோசமான சுற்றுப்புற சூழலில் ஏற்படும் எந்தப் பேரழிவிலும் தப்பிப் பிழைக்கும் சாத்தியம் இதற்கு அதிகம், ஏனென்றால் எந்த முதுகெழும்புள்ள மற்ற உயிரினங்களைக் காட்டிலும் higher radiation resistance கொண்ட ஜீவன் அது, ஆனால் அது எங்காவது நடக்கும் போது ஒரு சிறிய விபத்தில் தலைகவிழ்ந்து விட்டால் அதோகதி தான், உயிரோடு இருக்கும் போதே எறும்புகளுக்கு இரையாகிவிடும். அதைத் தலைகீழாக வைத்துக் கொண்டே குற்றுயிரும் கொலையுயிருமாக எறும்புக் கூட்டம் நைட் supperக்கு எடுத்துச் சென்று விடும். அது போலத் தான், நாமும் லட்சியத்தினை நோக்கி பயணிக்கும் பொழுது தலைகவிழ்ந்து(அதாவது நம்பிக்கை இழந்து விட்டால்) விட்டால் அவ்வளவு தான். நம்மை பரிகசித்து, ரேட்டிங் செய்து, மார்க் போட்டு கோமாளியாக்கி விடும் இந்த சமூகம், சமூகம் என்ன சமூகம் நம்முடன் இருப்பவர்களே அதைச் செய்வார்கள், சிலருக்கு சொந்தக் குடும்பத்திலேயே தடைகள் இருக்கும்.

ஆனால், இது போன்ற அவமானங்கள், எடை போடுதல், தோல்விகள், ஆலோசனைகள், அறிவுரைகள், எல்லாவற்றையும் விட முக்கியமானதாக சமரசம் செய்து கொள்ளுதல் போன்ற எந்தக் கதிர்வீச்சிலும் பாதிப்படையாத ஒருவன் வரலாற்றின் உண்மையான ஏட்டில் இடம் பெறுகிறான், இவனும் அப்படித் தான். இதைப் போன்ற லட்சியவாதிகள் மீது விமர்சனங்களும் வரவே செய்யும், அது காந்தி, பாரதி போன்றோரின் வாழ்க்கை மீது படிந்திருக்கும் விமர்சனங்களைப் பார்த்தால் தெரியும்.. அவர்கள் அது போன்ற விமர்சனங்களுக்காக பயப்படவில்லை, அதை நிராகரிக்க தன் நேரத்தை செலவு செய்யவும் இல்லை, ஒன்று அதைப் பார்த்து புன்முறுவல் செய்ய வேண்டும் அல்லது ஏளனமாகப் பார்க்க வேண்டும். ஆனால் அந்தப் பக்குவமும் எளிதில் வந்து விடாது அல்லவா?? யாரையும் காக்கா பிடிக்கும் அவசியமோ!! பனிந்து போகும் சமரசமோ கொள்ளாத இவன் எத்தனை இடத்தில் பந்தாடப் பட்டிருந்தான்?? எல்லா இடத்திலும் இவனைக் கோபக் காரன் என்று விமர்சனம் செய்தார்கள். இன்று அவன் சிரிக்கக் கற்றுக் கொண்டான்.

ஆனால் அவ்வளவு லேசில் கிடைப்பதில்லை இது போன்ற புன்னகை, மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பள்ளியில் படித்த அவனுக்கு மருத்துவப்படிப்பிற்கான சீட் கிடைக்கும் அளவு மதிப்பெண் கிட்டவில்லை, ஆனால் Improvement option இருந்த போதும், தனது கனவினை விஸ்தீரனப்படுத்தி நுன்னுயிரியலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தன் இலக்கினை வைத்தான். வாழ்வில் எல்லோருக்கும் வரும் இடைஞ்சல்கள், கவனச் சிதறல்கள் எல்லாம் இங்கேயும் வந்து போயின, தன்னை முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதியை, முனைவர் படிப்பில் சேறும் முன்னரே பெற்றிருக்கிறான் என்று என்னால் சொல்ல முடியும். வருங்காலத்தில் அவன் வெறும் வெற்றியடைந்த ஒரு முனைவராக மட்டுமின்றி பலருக்கு வழிகாட்டுபவனாகவும், முக்கியமான சூழலியலாளனாகவும் வருவான் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஏனென்றால் , முனைவர் பட்டத்திற்காக அவன் நுழைவதற்கு மட்டும் அவன் எடுத்துக் கொண்டு பிரயர்த்தனம் இந்த அரசாங்கத்தின் system மீது உமிழ்ந்து விடத் தோன்றுகிறது.

கிட்டதட்ட ஐந்து கல்லூரிகள் இடம்பெயர்ந்து தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டான், இங்கேயும் எண்ணற்ற இன்னல்கள் இருக்கின்றன, சமீபத்தில் அவன் ஒரு paper presentationக்காக சீனா செல்லும் வாய்ப்பினைப் பெற்றான், ஆனால் அதற்கான clearance மற்றும் அரசு அளிக்கிம் subsidies மற்றும் reimbursmentகளைப் பெற்றிட அவன் போராடிய முறையினை உடனிருந்தே கவனிக்கிறேன். இப்பொழுது அவனிடம் ஒரு நிதானம் இருக்கிறது( இது அவன் ஆன்மீக பலம்), தன்னம்பிக்கையிலே ஒரு துளி கூட இழக்கவில்லை (தன்னை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள இதுவும் ஒரு காரணம் என்கிறான்) ஆனால் போராட வேண்டிய களமோ மிகப் பெரியது. பத்து வருடங்களாக படிப்பு என்னும் பெயரில் தவமிருக்கின்றான். அவன் இன்று தன்னை மட்டுமல்லாது தன்னைப் போல வருடங்கள் பாராது முனைவர் பட்டத்திற்காக தவம் செய்யும் எத்தனையோ மனிதர்களின் தவத்தினையும் மதிக்கிறான். ஆனால் இந்தச் சமூகம் இவனை de-motivate செய்யாமல் பார்த்துக் கொள்ளும் கடமையினை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

ஆராய்ச்சியாளர்களாக தன்னை அறிவியலிடம் ஒப்படைத்துக் கொண்ட எத்தனையோ இந்திய அறிஞர்கள் இந்த இந்திய system செய்யும் குளறுபடிகளிலும், புதிர்களிலும் தோல்வியுற்றிருப்பார்கள் என்று அவதானிக்க முடிகிறது. ஆனால் அவ்வப்பொழுது சிலர் வெற்றியும் அடைகின்றார்கள், எல்லா கோப்புகளையும் , மேஜைகளையும், அப்ளிகேஷன்களிலும் அடிபட்டு வெளியே தெரிந்து, போராடி வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் சரித்திரத்திற்கு இவர்கள் தேவைப் படுகிறார்கள்.

HISTORY NEEDS YOU MY FRIEND



(தொடரும்)


வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி -சொஜ்ஜி -28, #மனிதர்கள் / முத்துக் கருப்பனும் - குட்டிச் செல்வமும்

#மனிதர்கள் -02
முத்துக் கருப்பனும் - குட்டிச் செல்வமும்

என் பால்யத்தில் எனக்கு இருந்த முதல் தோழனின் பெயர் செல்வம். எங்கள் வீட்டிற்கு எதிர் வீடு. பெயர் மட்டும் தான் செல்வம் மற்றபடி வீட்டின் நிலைமை அவனுக்கு போர்த்தியிருந்த உடையெல்லாம் ஏழ்மையாகத் தான் இருக்கும். எங்கள் வீட்டிற்கு அவன் விளையாட வருவான், என்ன தான் நான் அவனை விட வசதியாக இருந்தாலும், வீட்டில் நான் கேட்பதெல்லாம் எனக்குக் கிடைத்தாலும் அவனைப் பார்த்து ஆச்சரியப் படவே செய்வேன்.அவனுக்கு சுதந்திரம் இருந்தது, அவன் வெயிலில் நடமாடலாம், விளையாடலாம். அடுத்தவ்ர் வீட்டிற்குள் செல்லலாம். அந்த வீட்டின் பற்பசையைத் திங்கலாம், அடுத்த வீட்டில் தாராளமாக திண்பண்டம் வாங்கலாம், அவனுக்கு அவன் வீட்டில் அடி கிடைத்தாலும், அவன் சந்தோஷமாகவே இருப்பான். நானும் சந்தோசமாகத் தான் இருந்தேன், ஆனால் அவனுக்கு இருக்கும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் எனக்கு இல்லை.

செல்வத்திற்கு ஒரு அண்ணன் உண்டு அவனை விட நான்கு வயதுப் பெரியவன், எட்டு வயதிலேயே மெட்ராசுக்கு வேலைக்கு சென்றுவிட்டான் என்று செல்வம் சொல்லுவான். லீவுக்கு, திருவிழாவிற்கு அவன் வரும்பொழுது நான் பார்த்திருக்கிறேன். அவனும், அவன் நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது விளையாடிக் கொண்டே இருப்பான். எங்கள் வீட்டிற்கு எல்லாம் அவன் வர மாட்டான், அவன் மெட்ராசில் இருக்கிறான் அல்லவா? அந்த மிதப்பு, எங்கள் வீட்டில் ஒளியும்,ஒலியும் போட்டால் கூட அவன் வர மாட்டான். அவனைப் பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும், அவன் அடிக்கடி என் நண்பனை அடித்து அழ வைப்பான். தெருவில் கிட்டிப்புல் போல ஏதாவது விளையாடுகையில் அவன் நிறைய பேரோடு சண்டையிட்டிருக்கிறான். ஏன், என் அண்ணன் - அவனும் மெட்ராஸ் தான் ,(பெரியப்பா மகன்) அவனோடு ஒரு நாள் எங்கள் கோயில் வாசலில் கட்டிப் புரண்டு சண்டையிட்டான். என் அண்ணனும் நன்றாகத் தான் சண்டையிடுவான். ஆனால் நான் பயந்தபடி  கோயிலுக்குள் சென்று மறைந்து கொண்டேன். சொல்ல வந்த விஷயமே இது தான் செல்வத்தின் அண்ணனுடைய பெயரே செல்வம் தான்!!.

எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து திண்ணைகள் இருக்கும், மூன்று வீட்டிற்க்குள், இரண்டு வீட்டிற்கு வெளியே. பள்ளி இல்லாத் நாட்களில், ப்ரஷில் டூத் பேஸ்ட் வைத்துக் கொண்டு திண்ணையின் விளிம்பில் நின்றபடி சிறுநீர் கழித்து விட்டு, செல்வம் வீட்டை வேடிக்கை பார்ப்பது தான் என் வாடிக்கை. அவன் பால் வாங்கச் செல்வது, கடைக்கு செல்வது, அவனுடைய அம்மா பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் எடுப்பது, செல்வம் அடி வாங்குவது என பார்த்துக் கொண்டிருப்பேன். அவங்க அம்மா வீட்டில் இரண்டு செல்வம் இருக்கும் பொழுது எப்படி அழைக்கிறாள், சமாளிக்கிறாள் என்ற சந்தேகம் வருவது உண்டு. “ச்செல்வ்வம்” என்று செல்வத்தினை “ச்”, “வ்” மாத்திரைகளைக் கூட சேர்த்துக் குறைத்து சொல்வதில் அவள் உபதேச்ங்கள், இல்லை இல்லை அவள் ஏவல்கள், வசவுகள், கூப்பாடுகள் எல்லாம் சரியான செல்வத்தைத் தேர்ந்தெடுத்து விடும். அந்த மந்திரம் எங்களுக்குப் புரியவில்லை. சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொண்டு அவள் அண்ணனை அழைத்த இடத்தில் என் நண்பன் நின்றால் , ”சொளவாலே(முறம்) ரெண்டு மாத்து மாத்து” விழும்.

ஆனால் இந்தக் குழப்பம் மற்ற சனங்களுக்கு வருவதில்லை என் நண்பனை நாங்கள் குட்டிச் செல்வம் என்று அழைத்து வந்தோம். ஆனால அவனைக் குட்டிச் செல்வம் என்று அழைப்பது கூட ஏதாவது ஆதாயம் இருந்தால் தான், கடைக்குப் போகனும், சினிமா கொட்டகையில் என்ன படம் மாத்தியிருக்காங்க என்று போய் பார்த்துச் சொல்லனும், கொஞ்சம் ஏதாவது கைவேலை ஆகணும், கோயிலில் சக்கரைப் பொங்கல் வாங்கித் தரணும் என்கிற ஆதாயங்கள் இருந்தால் மட்டுமே அவன் குட்டிச் செல்வம். மற்றபடி, அவன் பெயர் சொங்கி தான், அந்த தெரு விடுமுறை நாட்களில் நூறு தடவையாவது சொங்கி என்ற பெயரைச் சொல்லி அழைக்கும், “லே சொங்கி மரத்துல் இருந்து கீழ இறங்கு”, ”ஏ சொங்கி டவுசர, மேலே ஏத்திக் கெட்டு”, “சொங்கி!! நடமாடுற சந்துல மூத்திரம் பெய்யாதடா”என்று அவன் சொங்கியாகவே வலம் வருவான். நானும் எப்பவாவது சண்டை வந்தால் அவனை அப்படிச் சொல்லி விட்டு ஓடி விடுவேன், மற்றபடி அவனைக் குட்டிச் செல்வம் என்று அழைப்பது நானும், என் அம்மாவும் தான். ஏனென்றால் என் அம்மா நான் விரும்புவதை அறிந்திருப்பாள் என்று நம்பினேன்.

வாழ்க்கை திசை மாறிச் செல்கிறது, என்பதை அறியும் வயதில்லை அது. அந்தக் கரிசல் மண்ணின் சூழலில் குடும்பங்கள் பிழைப்பு தேடி புலம் பெயர்வது மிகச் சாதாரணம் என்று புரிய வந்த வயதில். 10,15 வருடங்களுக்குப் பின்னர் எங்கள் ஊர் திரும்பிய வலி மிகுந்த நேரம். கிராமம், தெரு, வீடு எல்லாம் சுருங்கிப் போனதாய் காட்சியளித்தது, எங்கள் குடும்பத்தில் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. நானும் எட்டு வயது வரை வாழ்ந்த ஊரில்லையா, எனக்கு இருந்த ஒரே உறவான செல்வம் வீட்டில் இருப்பதாக அவன் அம்மா கூறினார். கொஞ்சம் அனுப்பி வையுங்களேன் என்று நான் கேட்க, அவனைப் பார்த்து அதிர்ந்தேன்.

அவனும் பிழைப்பதற்காக சென்னையில் தான் குடியிருப்பதாக அவன் அம்மா என்னிடம் சொன்னார், அவன் பார்ப்பதற்கு அப்படி இல்லை 25 வயதிலேயே முதுமையாகத் தோன்றினான். அவன் ஏதோ ஒரு விபத்தினை சந்தித்திருக்க வேண்டும், பற்கள் சிலவற்றைக் காணவில்லை, சில நொருங்கியிருந்தன, முதலில் என்னோடு அவன் பேச விரும்பவில்லை, நான் சகஜமாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததும், மெதுவாகப் பேச ஆரம்பித்தான், அவன் கைகளில் இருந்த தழும்பைப் பார்த்தேன் அது அப்படியே இருந்தது. அவனை சொங்கி என்று சொல்லிப் பார்த்தால் என்னோடு சகஜமாகப் பேசுவானோ என்று தோன்றியது, ஆனால் அழைக்க மனம் வரவில்லை. அவனுக்கும் பேசத் தோன்றவில்லை, ஒரு வேளை நான் மறந்து போயிருக்கலாம், அல்லது அவன் தடுமாறியிருக்கலாம். அவன் அண்ணனை விசாரித்தேன் அவன் இங்கே வருவதில்லை என்றான். அதற்கு மேல் அவனோடு பேச முடியவில்லை, அவன் ஒரு திண்டில் அமர்ந்து கொண்டு எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான், (வறுமையைத் தாண்டிய ஏதோ ஒரு பாதிப்பு எவன் முகத்தில் அப்பயிருந்தது) “செல்வம்” என்று இருமுறை அழைத்திருந்த அவள் தாய். அடுத்து “சொங்கி” என்று அழைப்பாளோ என்று எதிர்பார்த்தேன். அவள் அழைக்கவில்லை அவள் விட்டு விட்டாள். எனக்குப் புரியவில்லை எதற்காக அவள் ஒரே பெயரை தன் இரு மகன்களுக்கும் வைக்க வேண்டும்?”என்று.


***********************************************************************

கடந்த வாரம் சனிக்கிழமை மாலை(27/07/2013), மா.அரங்கநாதன் 80 என்ற நிகழ்வில், அவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் கன்னட மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா நடந்தேறியது. அதில் பல இலக்கிய ஆளுமைகளை ஒருங்கே காண முடிந்தது. எஸ்.சண்முகத்தின் உரையை கேட்பதற்காகத் தான் நான் கூட்டத்திற்கே சென்றிருந்தேன், ஏனென்றால் மா.அரங்கநாதனின் ஓரிரு சிறுகதைகள் மட்டுமே அதுவரை வாசித்திருந்தேன், நிகழ்வின் முடிவில் நாம் இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை என்பது போல் தோன்றியது. ஆளுமைகள் ஒவ்வொருவரும் மா.அவின் கதைகளை தாங்கள் எவ்வாறு பார்ப்பதாக வெவேறு விதமாக பேசினர். மு.தருமர், ரவிசுப்ரமணியம்(நிகழ்வின் ஏற்பாட்டாளர்), மகேந்திரன், ஜமாலன், எஸ்.சண்முகம், தேணுகா என்று ஒரு படைப்பாளரை வெவ்வேறு தளத்தில், வெவ்வேறு சிந்தனைகளில் அமர்த்திப் பேசினர்.



ஒரு உண்மையான, நல்ல படைப்பாளியை எத்தனை இடத்தில் வைத்துப் பார்க்க முடியும் என்று உணர்ந்தேன், அல்லது ஒரு படைப்பாளி ஒவ்வொருவரின் பார்வையின் கோணத்திலும் எத்தனை தூரம் வித்தியாசப் பட்டு இருக்கிறான் என்று தெரிந்தது. மா.அரங்கநாதன். மௌனியும்,சு.ராவும் இணையும் இடத்தில் ஒருவர் பார்க்கிறார், சமகாலத்தின் தலை சிறந்த சில புனைவிலக்கியத்தின் ஒப்புமையோடும், சிறுபான்மையினருக்கு எதிராக ஆதிக்கம் செய்யும் பெரும்பாண்மையினருக்கு இடையில் தன்னை சிக்கித் தவிக்கும் தனி மனிதனாக நிறுத்தியும் முத்துக்கருப்பனை பல இடங்களில் ஒவ்வொருவரும் வைத்துப் பார்த்ததை நானும் பார்த்தேன்.
***************************************************************************
 தேணுகா, இதுவரை அவர் பேச்சை நான் கேட்டது கிடையாது, ஓவியம், இசை, சிற்பம், இலக்கியம், சமூகம் என்று பரந்த நிலையில் அவர் அனுபவங்களை முத்துக்கருப்பனின் வாழ்க்கையோடு கோர்த்துச் சொன்ன விதம் மறக்க இயலாது. முத்துக்கருப்பன் என்ற பெயர் எப்படி சமூகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் கதையில் பிரதிபலிக்கிறது என்று அன்றைய கிராமத்து மக்களின் பெயர்கள் பற்றி பேச ஆரம்பித்தார். அதில் என் நண்பன் குட்டிச் செல்வன் வீட்டில் இருந்த ரகசியமும் வெளிப்பட்டது. ஒரு காலத்தில்-  கிராமங்களில் வாழும் நம் வழக்கில் இது போன்ற ஒரே பெயர் வைக்கும் வழக்கம் இருந்ததைப் பற்றிக் கூறுகிறார்.

பிறக்கும் குழந்தையெல்லாம் வீட்டில் தங்கிப் போனால், ஆண் குழந்தை பிறந்தால் இந்தப் பெயர், பெண் குழந்தை பிறந்தால் இந்தப் பெயர் முன்னரே வேண்டிக் கொள்வார்களாம், அடுத்தடித்து வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முத்து மாரி என்றோ, அல்லது ஆண் குழந்தைகளுக்கு மாரிமுத்து என்றோ பெயரோ தொடர்ந்து வைத்து விடுவார்கள். அப்படித் தான் இந்த முத்துக் கருப்பனின் பெயரும் வெவ்வேறு சூழலுக்கும், கதைக் களத்திற்கு ஒத்து வருகிறது என்றவாறு பேசினார்.

நல்ல இலக்கியம் என்பது வாழ்வை எத்தனை அழகாகக் காட்டுகிறது?, வேறு கோணத்தைக் காட்டுகிறது?? அல்லது அத்தனை அறிவார்த்த முறையில் அல்லது உளவியல் ரீதியாக அனுகுகிறது? என்பதை விட எத்தனை தூரம் இயல்பாக, உண்மையாக பிரதிபலிக்கிறது? என்பது தான் முக்கியம் என்று என்னளவில் தோன்றியது, அது தான் மக்களுக்கான இலக்கியம். முத்துக் கருப்பன் போல, ஒரு குட்டிச் செல்வமும் வாழ்க்கையைப் பற்றி எனக்கு முக்கியப் பாடம் ஒன்றை அளித்திருக்கிறான் என்பது மட்டும் உண்மை.


தொடரும்
ஜீவ.கரிகாலன்








புதன், 24 ஜூலை, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி #மனிதர்கள் - நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்??


நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்??

(இது சாப்ளினைப் பற்றிய பதிவு அல்ல)


ஒரு வாரமாக அடித்துக் கொண்டிருந்த ஃபேஸ்புக் புயலில் இந்த வாக்கியம் அலையடித்துக் கொண்டிருந்தது. இயந்திரத் தனமான உலகத்தில் தகவல் தொழில் நுட்பம் நம்மை இறுகக் கட்டிப் போட்டு விட்டு குறைந்தபட்சம் பத்து - பதினைந்து வருடம் ஆகிவிட்டது. அலைபேசியை மணந்து கொண்டு நமது தனிமை விலை போய்விட்டது. போனை எடுத்ததும் முதல் பேச்சே “எங்கே இருக்கிற?” போன்ற கேள்விகள் நம்மை சாதாரணமாகவே பொய் பேச வைத்து விடுகிறது. உலகம் முழுவதையும் ஒரு அலைவரிசையில் இணைக்கும் சாத்தியம் அறிவியலால் நிகழ்ந்து விட்ட போதிலும், சக மனிதர்களோடு நம் அலைவரிசை டியூனிங் ஆவது மிக அரிதாகிவிட்டது.

ரயில் சினேகிதம் என்கிற வார்த்தையெல்லாம் காலப்போக்கில் கரைந்து விடும் என்பது உறுதி. செல்போன் அந்த வேலையை உறுதியாகச் செய்யும். செல்போன் இருக்கையில் உனக்கு அருகில் அமர்ந்து இருப்பவன் என்றும் அறியப் படாமலே போய் விடுகிறான். அவன் வாழ்வின் சுவாரஸ்யங்கள் உனக்குப் பிடிபடப் போவதில்லை. ஒரு திடீர் நட்பில், எதிர்பாரா உதவி என்பது எல்லாம் சாத்தியமே இல்லாது போய்விடும். அரசியல், சினிமா, புத்தகம், ஆன்மீகம் என்றெல்லாம் தெரியாதவர்களோடு பேசுவதற்கு சலூன் கடைகள் மட்டும் தான் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் இப்போது நகரங்களில் இருக்கும் சலூன்கள் எல்லாம் நவீன வகை எலைட் சலூன்கள் ஆகிப் போய்விட, தெரியாத வட மாநிலத்து ஊழியரிடம், அரைகுறை ஆங்கிலம்-ஹிந்தி கலந்து கட்டிங்கா? சேவிங்கா என்று புரிய வைப்பதிலேயே அலுப்பு வந்து விடுகிறது.

ஆதித்யா, இசையருவி தான் சிரிப்பதற்கு இடமளிக்கும் போல, இதுவும் கூட தொழில்நுட்பத்தின் சாதனை தான் ஒரு படத்தினை துண்டு துண்டாக வெட்டி பாடலை, காமெடியை என்று பிரித்து கொடுத்து, அதுவும் சீக்கிரமே புளித்துப் போந் விடுகிறது. இந்த இறுக்கத்திலிருந்து சமூக வலைதளங்கள் வாயிலாவது நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் வெகு சீக்கிரமே பெரிய வன்முறைகளையும், விரோதங்களையும், ஏமாற்றங்களையும் தருகிறது. இதை எல்லாவற்றையும் தாண்டியும் ஒரு மனிதனுக்கு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும், கொஞ்சமாவது மற்ற மனிதர்களோடு பழகவும் இடமளிக்கவும் செய்கிறது என்று நாம் மகிழ்வுறலாம். கலை மட்டுமே ஒருவனுக்கு இந்த விடுதலையை முழுமையாகச் சாத்தியப் படுத்திகிறது,  கவிதை, ஓவியம், இசை, சமையல் என எந்த கலையினையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

------------------------------------------------------------------------

அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நட்பில் இருப்பவர், அவர் தமிழகத்தில் வாசகர்களிடையே நன்கு அறியப்பட்ட கவிஞர். அவரோடு பல வார இறுதி நாட்களில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு நானும் சேர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இங்கே நான் அவரது கவிதைகள் பற்றி பேச வரவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, எளிதில் யாருக்கும் கைவரப் பெறா கலை. உண்மையில் யாரையும் காயப் படுத்தாத எள்ளல், டைமிங்கான போட்டு வாங்கல், எதிர் கேள்வியில் சாய்த்தல், உல்டாவான ரைமிங் என அவ்வளவு எளிமையாக கையாள்வார்.

சென்ற வாரம் அப்படித் தான் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டிற்கு சென்றிருந்தேன், அங்கே நண்பர் கவிஞர் அமிர்தம் சூர்யா சிறுகதைகள் குறித்து மிக அருமையாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் கையில் இரு சிறு தாள் இருந்தது, அதில் பேச வேண்டியவற்றை குறிப்பெடுத்து வைத்திருந்தார். கிட்ட தட்ட பேசி முடிக்கும் தருவாயில் ஃபார்மலாக சொல்லும் “எனக்கு அவ்வளவாக பேச வராது” எனும் சடங்கை அவரும் சொல்லும் பொழுது, அங்கே வந்திருந்த திரு.பாரதி கிருஷ்ணக்குமாரை குறிப்பிட்டு:

 “பாரதி கிருஷ்ணக்குமார் இங்கே வந்திருக்கிறார், என்னால் அவரை போலவெல்லாம் சிறப்பாக உரையாற்ற முடியாது. என் கையில் இருக்கும் குறிப்பினை யாராவது பிடுங்கிக் கொண்டால், அவ்வளவு தான்.  அதற்கு மேல் என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது” என்றார் அமிர்தம் சூர்யா. அடுத்த நொடியே,
“அதே மாதிரி தான் பாரதி கிருஷ்ணகுமாரிடம் போய் ஒரு தாளைக்  கொடுத்து அதைப் பார்த்துப் பேசச் சொல்லுங்கள், அதற்கு மேல அவராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியாது” என்ற கமெண்ட் வந்தது, அந்தக் கவிஞர் தான் அதைச் சொன்னார்.

ஒரு நிமிடம் அந்த கூட்டமே அதை ரசித்து சிரித்தது. நிற்க, அதிர்ந்து சிரிக்கவில்லை, ரசித்து சிரித்தார்கள்.இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா?? நிறைய இருக்கிறது. சில புன்னகைகளின் நினைவுகள், நாம் விழுந்து விழுந்து சிரித்த கணத்தைக் காட்டிலும் நிலைத்து இருக்கும். Humor Sense  என்பது வெறுமனே laughter அல்ல. இந்த வகையில் தான் நான் பெரும்பாலும் சந்தானம் மற்றும் வடிவேலு(ஆனால் ஆரம்ப கால வடிவேலுவிற்கு மட்டும்  நான் ரசிகன் ) காமெடிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. இங்கே நகைச்சுவையில் high class, low class என்ற standard பற்றி எழுத நான் முனைய வில்லை. ஒரு பண்பட்ட ஹியூமர் சென்ஸ் தரும் நிறைவைப் பற்றி தான் எழுதுகிறேன்.

தனிப்பட்ட முறையில் தெரிந்ததாலேயே சொல்கிறேன், அவருக்கு மட்டும் இந்த நகைச்சுவை உணர்வு இல்லாமல் போனால் அவர் வாழ்வின் துயரங்களை, வலிகளை எப்படி கடந்து செல்ல முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத, அவர் கவிதைகள் அவர் பாதையில் எங்காவது நிற்கும் இடத்தில் எல்லாம் பிறக்கின்றன, அந்தப் பாதை எவ்வளவு கரடு, முரடாக வலி நிரம்பியதாக, நோய்மை கலந்து, ஏமாற்றம் தந்து, துரோகங்களாலும், சில பிரிவுகளாலும் நிரம்பியிருந்தாலும் அவர் தன் ஹியூமர் சென்ஸ் மூலமாகவே இதைக் கடக்கிறார். நான் வெறுமனே அந்த சம்பவத்தோடு இந்தப் பதிவை முடித்திருப்பேன், அதற்குள் நேற்று நடந்த சம்பவம் இந்தப் பதிவுக்கு மிகவும் தேவைப் படுகிறது.

அவருக்குப் பிரியமான ஒருவர் அன்பளிப்பாக கொடுத்திருந்த விலையுயர்ந்த செல்போன் ஒன்று அவர் நண்பர் அறையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது களவாடப் பட்டிருக்கிறது. களவாடிய திருடன் செல்போனை எடுத்து விட்டு திரும்ப செல்லும் அவசரத்தில் தன் செருப்பை மறந்து வைத்து விட்டுச் சென்றிருக்கிறான். இந்நிலையில் தன் செல்போன் காணாமல் போனதை அவர் முகநூலில் நண்பர்களுக்குப் பதிவிடும் பொழுது, “என் செல்போனை எடுத்து சென்றவன் அணிந்து வந்த செருப்பை விட்டு விட்டான், அவன் திரும்பி அதை எடுப்பதற்கு வருவான் என்று காத்திருக்கிறேன்” என்று தன் சோகத்தில் கூட ஒரு நகைச்சுவையுணர்வு இழையோடுவதை அவதானிக்கிறேன். சமீபத்தில் வந்திருக்கும் இவரது கவிதைத் தொகுப்பில் கூட அவரது humor ஐ ரசித்தேன். உண்மையில் அது மிகவும் அவநம்பிக்கை தரும் வாழ்வின் தருணம். (மன்னிக்க அந்த கவிதையை நான் இங்கே பதிய இயலாது - தொகுப்பு : குரல்வளையில் இறங்கும் ஆறு). ஆம், அந்தக் கவிஞன், என் நண்பர் அய்யப்ப மாதவன் தான்.

வாழ்வில் அவர் பெற்றிருக்கும் அனுபவங்கள் தான் அந்த நகைச்சுவை உணர்வை பக்குவமாக அளித்திருக்கும், இதனால் சில இடங்களில் அவருக்கு பகைமை கூட தோன்றிருக்கலாம், ஏதேனும் இழப்புகள் கூட ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் இந்த உலகு நல்ல நகைச்சுவைக்கு எதிரானதும் கூட என்று சாப்ளினின் சோகமான வாழ்க்கை எனக்கு உணர்த்தியிருக்கிறது.





வேறு சில மனிதர்களோடு
இன்னொரு பதிவில் உங்களுடன்
ஜீவ.கரிகாலன்.