புத்தக விமர்சன்ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சன்ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை

பஜ்ஜி -சொஜ்ஜி - 47

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை



இந்த புத்தகத்தின் திறனாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்றிரவு வீடு திரும்புகையில் நள்ளிரவு மணி 12.30 இருக்கும், இடையில் நண்பர் பாலாவை வீட்டில் சேர்த்து விட்டு என் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். நான் மட்டும் தனியாக தெருக்களின் வழியே குறுக்கு வழியில் சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு வளைவில் திரும்பியவுடன் வண்டியை நிறுத்திவிட்டேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ.. அந்த நேரம் நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன்.. ஆம், ஏதோ ஒரு நள்ளிரவில், ஏதோ ஒரு நகரத்தில் (நான்கைந்து- நகரங்களில் நான் தங்கியிருக்கிறேன்) இருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே இருந்தது. வேறு எந்த பிரக்ஞையும் இல்லை.
எல்லா நகரங்களுமே கிட்டதட்ட இரவில் இப்படித்தான் ஒரே மாதிரியான விளக்கொளி, நாய்கள், நிசப்தம் என்ற ஒழுங்கில் இருக்கின்றன. நான் எப்படி இந்த இக்கட்டில் இருந்து வீடு திரும்பப் போகின்றேன்.....???

**************************

சுஜாதா எழுதிய புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்கள் என்று ஒரு பத்து பேரிடம் பட்டியலை வாங்கிப் பாருங்கள், பெரும்பாலோனோர்களின் பட்டியலில் ஒரு புத்தகம் இடம் பெற்றிருக்கும் -அது ஸ்ரீரங்கத்து தேவதைகள். அவர் கொஞ்சம் கூட சிரமப்படாமல் எழுதியிருக்க வேண்டிய புத்தகம் இது. அவருடைய Nostalgic பக்கங்கள் தான், ஆனால் ஒரு மனிதன் இழந்துவிட்ட தன் பால்யங்கள், தனக்குத் திரும்பவும் கிடைக்காத சந்தோஷங்கள், காணாமல் போன பழமையின் சுவடுகள் போன்ற சமாச்சாரங்கள், நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அக்ரகாரத்து நினைவுகள் கூட நமக்கு நெருக்கமான புத்தகமாகப் பிடித்துப் போகக் காரணமாயின.

அப்படிப் பட்ட ஒரு புத்தகமாகத்தான் எனது favorite பட்டியலில் சேர்ந்து கொண்டது இந்த புத்தகம். அந்த புத்தகத்தின் பெயர்  “நம்மோடு தான் பேசுகிறார்கள்”. இரண்டு நண்பர்களின் உரையாடல்கள் தான் இந்த தொகுப்பு. இவர்கள் நண்பர்கள் என்பதால் தான் அவர்களுக்கு இடையே இருக்கும் மீடியத்தில் எந்த வித அலங்காரமும் இன்றி(?) எளிமையாக உரையாடல் நடந்தேறக் காரணமாகிறது, ஆனால் அலங்காரம் பற்றிய உரையாடல்கள்  இதில் அதிகம் இருக்கிறது என்பது வேறு விஷயம் (அதைப் பற்றி பல கட்டுரைகள் வந்துவிட்டன). இதைப் பற்றி நான் கூட முன்னரே ஒரு பதிவு செய்திருக்கிறேன். இப்படி இரண்டு ஆத்மார்த்தமான நண்பர்கள் முன் வைக்கும் உரையாடல்களும், அவர்கள் கையாளுகிற மொழியும் தான் நம்மையும் அவர்கள் அருகில் சம்மணமிட்டு அமர வைத்து, கலந்து கொள்ள வைக்கிறது.

அப்படி அவர்கள் நம்மோடு என்னதான் பேசுகிறார்கள்?? என்று கவனிக்கும் போது முதலில் மிகச் சாதாரணமாய் தோன்றுகிற விசயங்கள் தான் நமக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் அவை எதற்கு அப்படி ஒருமித்து க்யூவில் நிற்கின்றன என்று மறுமுறை வாசிக்கும் பொழுது தான் விளங்க ஆரம்பித்தது. கடந்து செல்ல முடியாத வலிகள் தான் இந்த தொகுப்பிற்கான உந்துதல் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது நவீன உலகில் பிழைப்பதை மட்டுமே வாழ்க்கையாக நம்பிவிட்டு நாம் அப்புறப்படுத்திவிட்ட கலையுணர்வு மற்றும் தொன்மைகள் மீது நமக்கிருக்கும் கடமைகளை எண்ணி அவர்கள் வருந்தியிருப்பதைக் காட்டுகிறது. எவ்வளவு எளிதாக சுவர் ஓவியங்கள் மீது நமது பெயரை எழுதி அதை சேதப்படுத்தும் மனநிலை பொது ஜனங்களுக்கு உருவாகிவிட்டது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பொறுப்பற்றச் சமுதாயம் மீது, இளைஞர்கள் மீது தமது கோபத்தையும், ஆற்றாமையும் வெளிப்படுத்தி எத்தனையோ எழுத்துகளையோ பார்த்துவிட்டாயிற்று, இவர்கள் என்னப் பேசப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா?? ஆம் அவர்களும் மீட்டெடுப்பைப் பற்றித் தான் பேசுகிறார்கள். ஆனால் இந்த மீட்டெடுப்பு ஒரு புரட்சிப் படையை உருவாக்கி நம் அரும்பெரும் பொக்கிசங்களைக் காப்பதோ அல்லது மீட்டெடுப்பதோ அன்று. இயல்பான வளர்ச்சியில் இருந்து, திடீரென்று ஒரு அசுர வேகத்தில் நமக்கு ஏற்பட்ட வளர்ச்சி நிலை, அறிவியல் தொடர்பு சாதனங்கள், மேலைநாட்டு மோகங்கள் கட்டிபோட்டு விட்ட நம் கண்களை அவிழ்த்து விடுவது தான் இந்த மீட்டெடுப்பு.

இங்கேயும் எப்படி உலகமயமாக்கல் பற்றிய உரையாடல் வந்து விட்டதே என்று சலிப்படையத் தேவையில்லை. உலகமயமாக்கல் பற்றி நேரிடையாக அவர்கள் பேசவில்லை, அவற்றின் நல்லது கெட்டது பற்றிய உரையாடல்கள் நடத்தவில்லை, இந்த தொன்மையான தேசம், தன் கலைத் தன்மையை உலகம் முழுக்க வியாபித்திருந்த காலம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் இந்த உலகமயமாக்கல் தந்திருக்கும் வளர்ச்சியில் நமது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் அதீத மாற்றங்கள் தான் எவ்வளவு பெரிய இடைவெளிகளை விட்டிருக்கிறது என்று இத்தொகுப்பு பேசுகிறது, நம்மோடுதான்.

செவ்வியல் கலைகளை நோக்கித் தேடியலையும் பயணம் என்பது ஏதோ சில கலைஞர்களுக்கானது மட்டுமல்ல, நமது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதே சமோசா கடை, அதே காபி கடையைத் தேடிச் சென்று அருந்துவதைப் போலத் தான் என்று நம்மைவிட்டு அந்நியப்படாமல், வாசகர்களாகிய நம்மையும் அவர்கள் தேடலில், உரையாடலில் இணைத்துக் கொள்கிறார்கள் இந்த கலைஞர்கள்.

சமோசா, காபிக் கடை  என்றும் தஞ்சாவூர் கோயில், ஓவியங்கள், பேராசிரியர் இராமனுஜம் மீட்டெடுத்த ஒரு நாடகம் என்று ஆரம்பிக்கின்ற உரையாடல் ரசனை என்றால் என்ன? அலங்காரம் என்றால் என்ன? கலையுணர்வு என்றால் என்ன? thought process என்றால் என்ன? என்ற கேள்விகளைக் கேட்டுவிடுகின்றனர். சரியாக ஒவ்வொரு கேள்வியாய் நாம் பயணிக்கிற வழியும் சுவாரஸ்யமாகத் தான் செல்கிறது, தேர்த் திருவிழா, கோலங்கள், அம்மாவின் கலையுணர்வு, அப்பாவுடன் உரையாடல், பிராண்டிங் பற்றிய உரையாடல், ஸ்ரீதர் படத்தின் வண்ணங்களின் நேர்த்தி என்றெல்லாம் நம்மை ஒரே மூச்சில் வாசிக்க வைக்கத் தூண்டுகின்றன. முதன் முறை வாசிக்கும் போது உங்களுக்கு இந்த சுவாரஸ்யங்கள் மட்டுமே தென்படலாம், இவர்கள் அடுக்கும் கேள்விகளை கோர்த்துக் கொண்டே வந்தால் தெரியும் அவர்கள் மிகவும் திட்டமிட்டு பின்னப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு தான் இத்தனை எளிமையாகத் தோற்றமளிக்கிறது.

கலை உணர்வு ஒரு மீடியத்தைத் தேடி அது உருப்பெரும் முன் அது எப்படி இருக்கிறது என்ற உரையாடலைப் பதிவு செய்வதற்கான முயற்சி தான் அது, thought process & intellectual thought process பற்றிய பதிவுகள் தான் அவை, ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் பற்றி கலைஞர்கள் பேசிக் கொள்ளலாம், ஆனால் நம் போன்ற வாசகர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு சமோசா கடை, ஊர்த் திருவிழா, ஸ்ரீதர்,பாலா திரைப்படங்கள், சின்ன யானை வழியாகக் கூட்டி வருகிறார்கள். இப்போது அந்த கேள்வியை உற்று கவனிக்கலாம் அல்லவா??ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் எழுகிறது. இது இந்த நண்பர்களின் வெற்றி

இப்புத்தகம் வாசித்தவுடன், முழுமையாக நாம் எத்தனையோ சந்தோசங்களை பறிகொடுத்து விட்டு நிற்கிறோம் என்ற வெறுமை அப்பிக் கொள்கிறது. எங்கேயோ ஓடுகிறோம், தேடிகிறோம், ஏதோ கிடைத்துவிட்டதாக மகிழ்வடைகிறோம், ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைவானதா அல்லது உண்மையானதா என்றால் இல்லை. அது எப்படி மகிழ்ச்சியானதாக இல்லை என்ற பட்டியலும் இந்த புத்தகத்தில் கிடைக்கிறது.

*1980களில் தஞ்சை சுவோரோவியங்கள் மீது Distember பூசும் பொழுது, சாலையில் நின்று போராடிய மனங்கள் இன்று எந்த அக்கறையும் காட்டாமல் வெறும் இஞ்சினியர்களாய் மட்டும் எண்ணிக்கை காட்டுகிறது.

*மஹாராஸ்ட்டிராவில் 450க்கும் மேற்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆர்ட் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. (ஆனால் நம்மூரில்???)

*பரவலாக இயல்பாக இருந்த தொழிலை  அரிதாக்கி, இது அரிதாகிவிட்டது காப்பாற்ற நான் மட்டுமே மிச்சம் என்று கொள்ளையடிக்கும் பண்பாட்டுக் காவலர்கள்

இது போன்ற கேள்விகள் எழுப்பும் தாக்கம் எளிதில் சொல்லி விட முடியாது தான். ஆனால் ஒரு பொறுப்புணர்வைத் தூண்டும், ஆனால் செயல்பாடுகளைக் கோருமா என்கிற கேள்வி Out of the context தான். அதே சமயம் செயல்பாடுகளைத் தூண்டும் என்பது உறுதி, “ஒரு சாதாரணமான, ஒரு இயல்பான, ஒரு சந்தோஷ்மான, ஒரு முழுமையான வாழ்க்கையை வாழக்கூடிய ஒவ்வொருத்தனுமே ஒரு படைப்பாளி, ஒரு நல்ல இயக்குமுடன் கூடிய படைப்பைப் படைப்பவன்”, இதை மனதிற்குள் கோயில் கட்டி இறைவனுக்கு சேவை செய்த முக்கிய நாயன்மார்களுள் ஒருவரான பூசலார் நாயனாருடன் இந்த உரையாடல் முடிவடைகிறது.

அதற்குப் பின்னர் இருக்கும் அரூபம் பற்றிய பதிவுகள் இந்த கருத்துகளோடு முழுதும் ஒத்த நிலையில் தான் முழுமையாக நாம் ஒன்ற முடியும், அது நவீன ஓவியங்களோடு பரிச்சயமாகத் தேவைப்படும் மனநிலை.
*******************************
ஒரு மனநிலை ஓர் இரவில் ஒரு பத்து நிமிடம் என் இயக்கத்தை, என்னை ஒரே இடத்தில் நிறுத்தியிருக்கிறது. நிச்சயமாய் இது மரணம் இல்லை, இது விபத்து இல்லை உறுதியாக இது தியானமும் இல்லை. இந்த புத்தகத்தின் தாக்கம் இல்லை என்று என்னால் சொல்லிவிட முடியவில்லை ( இரண்டு முறை வாசித்திருந்தேன்), ஏனேன்றால் எனக்குள் உரையாடல் நிகழத் துவங்கியிருந்தது. நான் அந்த நேரத்தில் எதை மறந்திருந்தேன் என்பதை உறுதிப் படுத்த வேண்டியிருந்தது. நான் முதலில் என்னை யார் என்று நினைவில் கொள்ள வேண்டுமா?? அல்லது எனது முகவரி எங்கு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா??

இப்போதைக்கு என் முகவரி மட்டும் போதும் என்று நினைத்தேன், ஆனால் பிரயோஜனம் இல்லை. எங்கிருந்து வந்தோம் என்று கூட மறந்து விட்டது. சரி, நான் யார்?? என்றெல்லாம் கேள்வி கேட்பது எனக்கே ”கொஞ்சம் ஓவரா போறோமா??” என்று கேட்க வைத்தது. கொஞ்ச நாட்களாக SELF பற்றிய விவாதங்களில் வேறு நிறைய கலந்து கொண்டேன், ஒரே ஒரு வழி தான் இருந்தது, நான் மறந்து விட்டது மற்றும் நினைவில் மீந்து கொண்டு இருப்பது இவ்விரண்டிற்கும் இருக்கும் இடைவெளி பற்றி கொஞ்சம் கவனிப்பது

ஆம், சற்று நேரத்தில் அந்த இடைவெளி நன்கு புலப்பட ஆரம்பித்தது, இடையே இருப்பது கொஞ்ச தூரம் தான், வண்டியை எடுத்துக் கொண்டு செல்வோம் என்பது தான் அது. பயணப்பட்டால் வேறு ஏதாவது ஸ்தூலங்கள் நமக்கு நியூரான்களுக்கு SMS அனுப்பி ஞாபகம் கொள்ள வைக்கும் என்று தோன்றியது. சில தெருக்கள் தாண்டும் வரை இல்லாத ஞாபகம், ஒரு விமானத்தில் ஒலியைக் கொண்டு - இது சென்னை கண்டிப்பாக 2008க்குப் பிறகு (2008ல் தான் நான் சென்னை வந்தேன்) என்று முடிவுக்கு கொண்டு வந்தது. பின்னர் கூவத்தின் நாற்றம், ஆஹா இது ஜாஃபர்கான் பேட் என்று ஞாபகம் அளித்தது. அப்படியெ கத்திப்பாரா வரை ஒரே Mental work தான், வண்டியை ஓட்டியது எல்லாமுமே -Sub-conscious தான். கத்திப்பாரா பாலத்தில் இருந்த சோடியம் விளக்கொளி, இரவல் நிலவொலி, மெட்ரோ ரயில் கட்டுமானச் சத்தங்கள், வாகனங்கள் இல்லாத சாலைகள் எல்லாமுமே ஒரு கம்போஷிசனாகி... என்னை மீட்டுத் தந்தன.

“நீ காளிதாசன் எனும் இயற்பெயர் கொண்ட ஜீவ கரிகாலன், படா குண்டன், லாஜிஸ்ட்க்ஸில் வேலை பார்க்கிற, அம்மா உன்னை வசைபாட வீட்டில் காத்திருக்கிறாள், வீட்டிற்கு போனதும் பாலாவுக்கு //am reached//என்று தகவல் கொடு, அந்த நிகழ்வைப் பற்றி ஒரு பதிவிடு , முக்கியமா மூனு ட்ரை ஜாமூன் சாப்பிட்டிருக்கிற ENO போட்டுக்கோ” என்று என்னை சகஜநிலைக்குத் திருப்பியது.

இந்தப் பதிவில் வரும் ஒர் இரவில் நடந்த கதையினை இவர்கள் தொகுப்பில் இறுதியாகப் பேசிய ஓவியத்தின் ILLUSTRATION ஆக நான் செய்திருக்கிறேன் (ஆனால் இது உண்மைச் சம்பவமும் கூட). ஏனென்றால் இந்த தமிழ்ச் சூழலில் ILLUSTRATION பற்றிய உரையாடல்களைக் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை,  நாம் ஏன் ஓவியத்திற்கு ILLUSTRATION ஆக கதைகள் சொல்லக் கூடாது என்று தோன்றியது.

பல புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன, வெகு சில புத்தகங்கள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நான் கொண்டாடுகிறேன் இந்த புத்தகத்தை, இவர் படைப்புகளைப் பற்றி பேசுவதற்கான பயிற்சியை, அந்த SPACEஇனை அவரிடம் இருந்தே எடுத்துக் கொள்கிறேன், இந்தப் புத்தகம் வழியாக இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்கையில், அரூபம் எனும் கடைசிப் பகுதியில் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுந்து தான், இந்தப் பதிவை எழுதுகிறேன்.
நன்றி

புத்தகம் : நம்மோடுதான் பேசுகிறார்கள்
ஆசிரியர்கள் : சீனிவாசன் - பாலசுப்ரமணியன்
பதிப்பகம் - வம்சி

திங்கள், 20 மே, 2013

தூப்புக்காரி - பார்வை

தூப்புக்காரி

- இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்

தத்துக் கொடுக்கப்பட்ட தன் குழந்தையை தத்தெடுத்தவர்களிடம் இருந்து திரும்ப வாங்கியதும், தத்தெடுத்தவர்கள் அவளுக்கு போட்டிருக்கும் புது ஆடையைப் பார்த்து “இது முள் மாதிரி உடம்புல குத்துமே, என் செல்லத்திற்கு இது வேணாம்” என்று சொல்லும் இடத்தில் பூவரசிக்கு இருக்கும் நம்பிக்கையில், அன்பில், திமிரில் அது வரை விரவியிருந்த லேசான வலி சட்டென கண்ணீர் துளிகளாய் அகன்று முற்று பெறுகிறது கதையோடு.

கண்டிப்பாக இந்த நூல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்று நம்புகிறேன். மனித மலத்தை மனிதனே அள்ளுவது “ஒரு காலத்துல தான்” என்று சொல்லித் திரியும் மனிதர்கள் இந்த சமகால பதிவாக வந்துள்ள இந்த கதையினைப் படிக்க வேண்டும். வெறும் புனைவாக இல்லாமல் இந்த கதை கொணர்ந்திருக்கும் அவலங்களின் ஆவனம்  என்றென்றும் நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் கரும் புள்ளியாக இருக்கும். வெறும் பாரம்பரியமான, புனிதமான, ஆன்மீக பலம் பெற்ற, ஜனநாயக நாட்டின் உடலில் போர்த்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள சீழ்வடியும் கொப்புளமாய் ஒரு சாரரை இழி நிலைக்கு தள்ளப்பட்ட தேசம் இது என்று உலகம் வியந்தோம்பும்.

கதையில் பீ, குண்டி, தூம இரத்தம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கும் அந்த மலம் அள்ளும் இடத்தை விவரிக்கும் இடத்தில் முகச்சுளிவோ, ஓங்கரிப்போ(வாந்தியோ) ஏற்பட்டிருந்தால் குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் வருந்துவதற்கு இவ்வுலகில் முக்கியமான சில தவறுகள் இருக்கின்றன. தினம் தினம் குளித்து உன் அழுக்கினைப் போக்கி ஊரினை நாறடிக்கும் பிரதிநிதியாக இருக்கும் நாம், அந்த துப்புரவு தொழிலாளர்களைக் காணும் போது மூக்கைப் பொத்திக் கொண்டோ, இல்லை விலகியோ கடந்து செல்வோமாயின் அதற்கும் நாம் தான் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கதைக் களமாக நாஞ்சில் தேசத்து கிராமம் இருக்கிறது. தூப்புக்காரியில் துப்புரவுத் தொழில் செய்யும் பாத்திரங்களின் வழியே சாதி, ஆணாதிக்கம், அதிகாரம், சமூக அவலங்கள் என பேச வைத்திருக்கிறார். மாரி பேசும் வாக்கியங்களில் மலர்வதியின் கோபமும், கேள்விகளும்,யதார்த்தமும், பகுத்தறிவும், தத்துவமும் கலந்து வருகிறது. அது இந்தக் கதைக்கு பொறுத்தமில்லாமல், அதே சமயம் அதை வைப்பதற்கான அவசியமும் இருக்கிறது. நாஞ்சில் தமிழென்பதால் ஒரு அகராதியும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் காதலை எந்த சமரசமும் இன்றி யதார்த்தமாகப் படைத்திருக்கிறார், பூவரசி தோல்வியுறும் ஒவ்வொரு முறையும் வலி எளிதாக வாசகனுக்கு கடத்தி விடுகிறது. அதுவும் செருப்பில்லாமல் பூவரசி கழிவறைக்குள் மலம் அள்ள நுழையும் இடம் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது என்றால், மாரி மலம் அள்ளி குப்பை கூடையில் போட்டு அதைச் சுமந்து வ்ரும் பொழுது வடிந்து வரும் மலநீர் அவன் வாயிலும் நுழைகிறது என்று சாதாரணமாகச் சொல்லிப் போகும் இடத்தில் ஏற்படும் அதிர்வுகள் மிக மிக வீரியம். றோஸ்லினின் கடவுளோ, பூவரசியின், மாரியின் கடவுளர் யாவரும் இவர்களுக்கு உதவப் போவதுமில்லை.

இந்த நாவலிலும் ஒரு புளியமரம் வருகிறது, அதுவும் பீக்காட்டின் பகுதியாகக் காணப்படுகிறது. சின்னஞ்சிறு வயதில் கழிவறைகள் இல்லாத ஊரில் மலம் கழிக்கும் வேளைகளின் துயரங்கள் இருக்கின்றன, ஆனால் அப்பொழுது இப்படி ஒருவரின் மலத்தை ஒன்னொருவர் சுமக்க வேண்டியது இல்லை. ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் அடையாளக் கற்கள். நாகரிகத்தின், நகரங்களின் விளைவாக உருவாகும் கழிவறைகளுக்கென வேறு தொழில் செய்து வந்த சாதியினருக்கு கூடுதல் தகுதியாக இந்த வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது என்று தான் நம்புகிறேன். ஆனால் வேறு சாதியில் பிறந்தவளைக் கூட ஏழ்மை அந்த வேலையைச் செய்ய வைக்கின்றது என்பது முக்கியமான ஆவனம்.  “பொருள்(பணம்)”தான் மிகப் பிரதானமான மாற்றங்களை எல்லாம் வரலாற்றில் தீட்டுகிறது என்பதும் உண்மை.

கனகம் தன் மகளைத் தூப்புக்காரியாக்கும் இடத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாசிக்கும் பொழுது இதயம் அதன் எடையை பல விகிதங்களில் அதிகரித்துக் கொண்டிருந்தது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாய மக்களின் திருமண வரதட்சனை அளவு மிக அதிகமாக இருக்கும் வழக்கம் உள்ளது. ஆக, பூவரசியின் தாய் கனகம் நாடார் சமூகத்தைச் சேர்ந்திருந்தும் தூப்புக் காரியாக வேலைக்கு சேர்ந்தவள், தன் மகளை மாற்றி விடுகிறாள்: அது போல அந்த மாவட்டத்தில் உணவுப் பயிர்களை அழித்து ரப்பர் தோப்பு அமைக்கும் முறைகளை கடுமையாகச் சாடுகிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்த காதலில், பெண்ணின் தவறு மட்டும் ஏன் காட்டிக் கொடுக்கிறது போனற வாக்கியங்கள் இந்த புத்தகத்தின் பெண்ணியக் கருத்துகளுக்கு சான்று. இடையிடையே கவி நடையும் வருகிறது. பெண்ணின் காதலை கூடவௌம் இல்லாமல், குறையவும் இல்லாமல் யதார்த்தமாக பதிவு செய்தது போல் நான் வாசித்து உணர்ந்தேன். அதில் மிக முக்கியமான காட்சியாக தன் தாய் உடல்நலக் குறைவில் அல்லலுறும் பொழுது கவலை கொண்டாலும், பூவரசியின் காமப் போராட்டத்தை அந்த இடத்தில் பதிவு செய்திருப்பது கதையின் உச்சம்


//மலத்தை பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்கூட்டத்திற்கு மத்தியில் உணவு சாப்பிடும் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மனுஷிகளில் ஒருவராகத்தான் என் அம்மா இருந்தார்.
தன்னை அசுத்தப்படுத்திக்கொண்டு தன் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்ட அம்மாவைப் போன்ற பெண்களுக்கான சமர்ப்பணம்தான் இந்த நாவல்//  என்று இந்த நாவலுக்கான முகாந்திரத்தை தன் கதை மூலம் முன் வைக்கும் மலர்வதிக்கு என் பாராட்டுகள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வட இந்திய அளவில் இப்பொழுது நிறைய தலித் தொழிலதிபர்கள் (அஷோக் காடே போன்ற!!) மற்ற சாதியினருக்கும் வேலை போட்டுக் கொடுக்கும் நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், இப்பொது டெல்லி போன்ற பெருநகரங்களின் வணிக மால்களில் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ளும் பல பிரிவினரும் கூட வணிக விடுதிகளில், மருத்துவமனைகளில்  துப்புரவு வேலை செய்யத் தொடங்கியது எனும் செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள் ?  ஏழ்மையில் வாழ்பவனுக்கு சாதி அடையாளம் என்ற ஒன்று தேவையில்லை. ஆனால் மனிதன் ஏதொ ஒரு பிரிவினையை ஏற்படுத்தி மக்களிடையே இடைவெளி ஏற்படுத்துகிறான், இதுவும் வியாபாரம் தான் இதிலும் ஒரு பக்கம் கொழுத்த லாபம் இருக்கிறது.  இந்த சமூகத்திற்கு பொருளாதார விடுதலை  மட்டுமே உண்மையான விடுதலை எங்கிருக்கிறது என்பதைத் தெளிவாய்க் காட்ட முடியும். 

அது போல மாரி  பூவரசியின் கரம் பிடித்தவுடன் எங்கே சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேறுவானோ என்று தான் என்னை எதிர்பார்க்க வைத்தது, முடிவினில் இருக்கும் வலி இந்த எதிர்பார்ப்பினால் பன்மடங்காய் பெருகியது.  அதனால் இப்படி தேற்றிக் கொண்டேன் பரவாயில்லை மாரியின் விருப்பப்படி அவர்கள் குழந்தை இந்த துப்புரவு தொழிலார்களின் நிலை மாற்ற புரட்சி செய்யட்டும்!!

- ஜீவ.கரிகாலன்



திங்கள், 24 டிசம்பர், 2012

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள்

 புத்தக விமர்சனம்



சமன்விதா(
SAMANWITA) என்ற திட்டம் ஒரிசாவிலுள்ள கோம்னா எனும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில், தொண்டு செய்வதற்காக இறங்கிய ஒரு சில பிரபல நிறுவனங்களின் அரசு சாரா தொண்டு அமைப்புகளால் (NGO) 1978  1980ல் தீவிரமாக் கொண்டு வந்து செயல்படுத்தப் பட்ட திட்டம் ஆகும். இதன் படி , அங்குள்ள குடியானவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மாடுகள் யாவும் இப்போதைய நிலைமையை விட அதிகம் பால் சுரக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி, மாடுகளுக்கு ஜெர்ஸி காளைகளின் உயிரணுக்கள் செலுத்தப் பட்டன, மேலும் அவர்களுக்கு தங்கள் மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதற்கு ஒரு ஏக்கர் நிலமும் அதில் பயிரிடுவதற்கு எனும் subabul  (கொன்றை மரம் போலிருக்கும் பூர்விகம்: ஐரோப்பா ஜெர்மனி) மரம் வைத்திடும் திட்டமும், அதற்காக சொற்ப ரூபாய்கள் ஊதியமும் கொடுக்கப் பட்டது.

அதே வேளை அந்தப் பகுதியில் பிரபலமான காரியார் எனும் காளை இனத்தை (நம் ஊர் காங்கேயம் காளை போன்ற சிறப்பு வாய்ந்த காரியார் காளை) இதே அமைப்பினர் விதையறுப்பு செய்து அடுத்த கன்று உருவாகுவதை முற்றிலுமாகவே தடுத்து விட்டார்கள், இன்று அந்த கார்யார் காளை இனம் முழுதுமாய் அழிந்துவிட்டது. அதற்கு பதிலாக உருவாக்கியிருந்த ஜெர்ஸியினமோ குறைவான பால் உற்பத்தியை கொடுத்ததுடன், பெரிய அளவில் கன்றுகள் இறந்து விட்டன, இறுதியில் அந்த திட்டத்தை படு தோல்வியடையச் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்த்து, ஒருமுறை வெட்டிவிட்ட(வெட்டிவிட அறிவுறுத்தப்பட்டு) subabul  மரங்கள் யாவும் மறுபடியும் தளைக்காமல் போக, புதிய கலப்பினம் மற்றும் புது வகை subabul மரங்கள் மூலம் வறுமை ஒழிப்பு என்ற குறிக்கோளில் கொண்டு வரப்பட்ட சமன்விதா (Samanwita) திட்டமும் அடுத்த மூன்று வருடங்களில் முடிவுக்கு வந்தது.

CAG எனப்படும் மத்திய தனிக்கைக் குழு செய்த கிராமப் புற மேம்பாட்டிற்காக செயல்பட்ட திட்டங்களில், சோதனை முறையில் தணிக்கை செய்ய அதில் செயல்நோக்கத்திற்காக அல்லாமல் திருப்பிவிடப்பட்ட நிதிகளைக் கொண்ட திட்டங்களுக்கான பட்டியலில் சமன்விதாவும் இருந்தது (16 கோடிக்கும் மேலேயுள்ள திட்டம்). அதில் குறிப்பிட்ட ஒரு தொண்டு நிறுவனமான BAIFக்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருந்தது). இந்த வீணாய்ப் போன திட்டம் ஏற்படுத்திய வறட்சி பத்தாண்டுகள் வரை நேரிடையாக அந்த மாவட்டத்தில் பாதித்திருக்க, திட்டம் தோல்வியுற்றாலும் இதில் பலனடைந்த நிறுவனமோ?........ தொடர்ந்து படியுங்கள்

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள் –முதலில் இந்த புத்தகம் பற்றி சிலாகித்து எழுத வேண்டிய அவசியம்இது 1996ல் வெளி வந்திருந்தாலும் இன்றளவும் நம் நாட்டின் வறுமையைப் பற்றிய முக்கிய ஆவனமாக இந்நூல் திகழ்கிறது. இன்றைய நிலையிலும் வறுமைக்கான அளவீடுகளை மிக முரணான வகையில் அமைத்து வைத்திருக்கும் நம் அரசின் போக்கிற்கு பின்னால் என்னவெல்லாம் இருக்கலாம் என்று யோசிக்க வைக்கும் நூல். வறுமையை ஒழிப்பதற்கு பதிலாய் வறுமைக் கோட்டின் எல்லையை கொஞ்சம் தளர்த்திக் கீழ் இறக்கி வைத்து சில விழுக்காடுகளை விழுங்கிக் கொள்ளலாம் என்று சிந்திக்கும் அரசின் இன்றைய நிலை இப்படி இருக்க பெரிதாக ஏதும் விழிப்புணர்வொ, நவீன ஊடகங்கள் இல்லாத அன்றைய நாட்களிலேயே வறுமையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சிப் பணி எந்த அளவு இருந்து வருகிறது என்று அவர்கள் தோலுரிக்கும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.

 நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புள்ளி விவரங்களோடு ஒவ்வொரு காலாண்டும் உலகிற்கு அறிவித்துக் கொண்டே இருக்கிறது நம் அரசு. ஆனால் நம் நாட்டின் வளர்ச்சியில் உள்ள புள்ளி விவரங்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் இந்த தேசத்தில் பெரும் பகுதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?, இந்த தேசத்தின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான ஊடகங்கள் இந்தியாவின் வளர்ச்சியைப் பேசும் போது, ஒரு பெரிய அளவிலான மக்களின் வாழ்க்கை முறை மறைக்கப் பட்டு வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ? னீங்கள் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

மகசேசே போன்ற உயர்ந்த விருதுகளாக மொத்தம் பதிமூன்று விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் திரு.P.சாய்நாத் அவர்கள் தொகுத்திருக்கும் இந்த புத்தகம் வாயிலாக தனிப்பட்ட முறையில் இன்றிருக்கும் பொறுப்பற்ற ஊடக மாந்தர்கள் இதன் சிறப்பை உணர வேண்டும், அன்றைய நிலையிலேயே ஊடகங்களின் பொறுப்பற்ற நிலையை பெரிதும் கண்டித்திருந்திருக்கிறார். அதனால் தான் அவர் தன்னை ஒரு தன்னிச்சையான எழுத்தாளராகவே (free lance  journalist) நிறுவிக் கொண்டு தான் இந்த புத்தகம் எழுதுகிறார்.
இந்த புத்தகம் இந்தியாவின் ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது. மொத்தம் உள்ள் 68 கட்டுரைகளும் வறட்சியையும், பஞ்சத்தையும் காரணமாக வைத்துக் கொண்டு நடக்கும் அதிகார வர்கங்களின் சுரண்டல்களையும், சீர்குலைந்த சமூக அமைப்புகளையும் மிக தைரியமாக ஆவனப் படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, பிஹார், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் என அவர் நம் நாட்டின் கடை நிலையில் உள்ள 5% சதவீதத்தினரை சந்தித்திருக்கிறார். கிட்டதட்ட 80000 கி.மீ வெவ்வேறு 16 வகையான வாகனங்களில் பயணித்த இவர், நடை பயணமாகவே நடந்த தூரம் மட்டும் கிட்ட தட்ட 4000 கி.மீ.

இது போன்ற பயணக் கட்டுரைகளில் பொதுவாக அவர்கள் சந்தித்த பெரிய இயற்கை பேரழிவுகளையோ, நோய்களையோ, விபத்துகளையோ தான் ஆய்வுப் படுத்தும் விதமாக அமைக்காமல் அம்மக்களின் தினசரி வாழ்க்கையை, அவர்கள் வாழும் முறையை பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் வளர்ச்சி என்று இத்தனை ஆண்டுகளாய் நமக்கு கிடைத்தவை எல்லாம் மிகச் சாதாரணமான எச்சங்கள் தான் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு பெருங்கூட்டம் ஒன்று “நம்மை ஒரு மக்களரசு தான் நிர்வகிக்கின்றது என்று கூட தெரியாமல் வாழ்வது புலனாகிறது. பஞ்சம், வறுமை, உடல்நலக் குறைவு, கல்வியின் இக்கட்டான நிலை என்று பகுப்பாய்வு செய்து அதை சமூகத்தின் சூழலோடு கணக்கிடப்பட்டுள்ளது.

கணக்கிடப்பட்டுள்ளது என்ற கருத்தை இங்கு சொல்லக் காரணம், வெறும் செய்தி ஆவனமாக மட்டும் இவை உபயோகப்பட்டு நின்று விடக் கூடாது என்று, அவர் தன்னுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் புள்ளியல் விவரங்களோடும், ஒப்பீடுகளோடும் சொல்கிறார். ஆதலால் இவர் சென்று வந்திருக்கும் டெல்லி, கேரளா, உத்திர பிரதேச மாநிலத்தின் தரவுகளும் ஒரு குறிப்பாக பயன் பட்டிருக்கின்றன. இவை யாவுமே ஒவ்வொரு கட்டுரையினை வாசிக்கும் பொழுதும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எளிமையான மொழி நடையில் எழுதப் பட்டிருக்கின்றன. வறட்சியை தவறான கணக்கிடுதலில் உள்ள தீமையையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்கிறார். எ.கா: கலாஹந்தி மாவட்டத்தில் (ஒரிஸ்ஸா) மொத்த நாட்டின் சராசரி மழை அளவை {800 மி.மீ} விடவும் அதிகம் {1250மி.மீ}, ஆனால் அங்கே வறட்சியைக் காரணம் காட்டி நீர்ப் பாசனத்திற்காக ஒதுக்கப் படும் தொகையென்பது தேவையற்றது. இந்த நிதி ஆதரத்திற்காகத் தான் தங்கள் ஊரிலேயே வறட்சியை விரும்புகின்றனரா ??


அண்டை மாநிலமான கேரளாவோடு ஒப்பிடுகையில், தமிழநாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பனையேறியான ரத்னபாண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்புக் கவசமும் இல்லை. சராசரியாக இருபது-இருபத்தைந்தடியுள்ள பனை மரமாக தினமும் நாற்பது மரங்கள் ஏறி இறங்கினால் தான் அவருக்கு மாதச் சம்பளமாக மாதம் ரூ.600/- கிடைக்கும், இந்த சொற்ப வருமானத்திற்காக அவர் பாதுகாப்பில்லாமல் ஏறும் படிகளை கணக்கிட்டால் அதன் உயரம் 5000 அடிக்கும் மேலே வரும், அது கிட்ட தட்ட 240 மாடிகள் ஏறுவதற்கு சமம், இத்தனை வருடங்கள் அவர் வேலை பார்த்து வந்தாலும் அவர் ஒரு பனை மரத்திற்கு கூட உரிமையற்றவராகவே இருக்கிறார். அதே ராம்நாடில் (இன்றளவும்) நடைபெற்று வரும் மிளகாய் வியாபாரத்தை  பார்க்கும் பொழுது, ஒரு அற்பத் தொகையை விவசாயிக்கு முன்பணமாகக் கொடுத்து மொத்த வற்றலையும் ஏமாற்றும் மண்டி ஆட்களும், கைகளில் துண்டு போட்டு பேரம் பேசி ஏமாற்றும் தரகர்களின் செயல்களும் நமக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி தருபவை. இப்படி ஒரு தட்டு மக்களின் வறுமையை முதலீடாகக் கொண்டு சுரண்டி வாழும் சமூகத்தை வெளிக்கொணரும் அத்தனை கட்டுரைகளும் நம் சமூகம் இவ்வளவு ஆபத்தானதா என்று அச்சத்தை மூட்டுகிறது.

வரும் வார இறுதியை உல்லாசமாய் கழிப்பதே குறிக்கோளாய் வாழும் பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் உயர்ந்து போன, நவீன வாழ்க்கை முறை என்பது தான் இந்த நாட்டின் நிலை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதைப் படித்தால் புரிந்து கொள்வார்கள், இந்தியா என்பது வேறு, இந்தியர்கள் வேறு என்று.

இக்கட்டுரையின் முதலில் சொன்ன திட்டத்தை (ஒரிஸ்ஸா - சமன்விதா) கையாண்டுக் கொண்டிருந்த தொண்டு நிறுவனம் BAIF, அன்று (1978) பெற்ற மூன்று கோடி நிதியைக் கொண்டு நிர்மானிப்பதாய் இருந்த செயற்கை முறை விலங்குகள் கருத்தரிப்பு நிலையங்கள் சுமார் 250ம் உண்மையில் கிராம மேம்பாட்டிற்கு என்று ஏதும் செய்யவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு சொல்லியது என்பதை நினைவில் வைத்து அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை இணையத்தில் தேடிய பொழுது வந்த அதிர்ச்சி, Bharathiyo Agro Industrial Foundation – இன்று BAIF Development Research Foundation என்ற பெயரில் இது வரை 60000 கிராமங்களில் செய்திருக்கும் உற்பத்தியின் அளவு மட்டும் (GDP) 2500 கோடி என்று பார்த்தபோது தான் இந்த புத்த்கத்தின் தலைப்பு எவ்வளவு பொருத்தமாய் போய்விட்டதே!! என்று வருந்துகிறேன்.
            
புத்தகத்தின் பெயர் : Everybody Loves a Good Drought
ஆசிரியர்          : P.Sainath
வெளியீடு         : Penguin Books
விலை            : Rs.399/-


- நன்றி 
ஜீவ.கரிகாலன்