வெள்ளி, 28 மே, 2021

எண்ணும்மை 4 - நல்லூழும் நலம்விரும்பியும்

 “உனது பதிவுகளில் வைரமுத்துவை ஏன் வறுத்தெடுக்கிறாய். அவரை விமர்சித்தால் திமுகவிலிருந்து உனக்குப் பகை வரும் என்று சொல்கிறார்கள். நசிந்து கொண்டிருக்கின்ற தொழிலுக்கு கழக ஆட்சியிலாவது லைப்ரரி ஆர்டர் கிடைக்குமென்றால் இப்படியா பதிவுகள் போடுகிறாய்” என்று ஒரு நல விரும்பி என்னை அழைத்துப் பேசினார். 

நலம்விரும்பி என்கிற பெயரில் இங்கே என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் இல்லையா?

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த க்ரூப் எடு

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த கோர்ஸ் எடு

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த காலேஜ், இந்த வேலை, இந்த பொண்ணு/ இந்த பையன செலக்ட் பண்ணு

என்று ஆரம்பித்து

உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இந்த இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி எடு, இந்த கம்பெனில சீட்டு போடு, இந்த இடத்தை வாங்கிப் போடு, இந்த ஸ்கூல்க்கு விண்ணப்பி என்று இன்னொரு சக்கரத்தில் நம்மை தள்ளிவிடுவார்கள் பின்பு அதிலும் நலம் விரும்பிகள். நாமும் நலம் விரும்பிகளாக பலருக்கு..

வைரமுத்து திமுகவோடு நல்லுறவைப் பேணி பாதுகாப்பவராக இருந்தாலும், இன்றைய அரசாட்சியில் அவர் பங்கு என்ன? அவர் என்ன கட்சிக்காக பிரச்சாரம் செய்தவரா? திமுகவின் பரம வைரிகளான அதிமுக ஆட்சி செய்யும்போதே, அதுவும் ஆண்டாள் குறித்த சர்ச்சையிலேயே அவரை யாரும் கைது செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் அவருக்காகத் தெருவில் இறங்கிப் போராடினார். பா.ஜ.க தருண் விஜயோடு நெருக்கத்திலிருப்பவர்,  நரேந்திர மோடியின் கவிதைகளை வெளியிட்டவர், ரஜினியோடு நெருக்கமாக இருந்தவர். ஒரு பொது ஆளாகவும் தன்னை நிறுவிக்கொண்டவர். அதாவது எல்லோருக்கும் நல விரும்பி..



உண்மையான திமுக நல விரும்பிகள் வைரமுத்துவை ஆதரிப்பது தங்களது விசுவாசத்தின் செயல்பாடு என்று நினைக்கிறார்கள். நான் இதை ஒருபோதும் நம்புவதில்லை. எனக்கு வைரமுத்து விருது வாங்குவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அது சேட்டன்களின் இலக்கிய விழுமியம் சார்ந்த பிரச்சினை. ஆனால் இத்தனை குமுறல்களுக்கும் கேள்விகளுக்கும் எந்தவித பயமும் கொள்ளாமல் ஒருவரால் அடுத்தடுத்து நகர்ந்து முன்னேறி போக முடிவதும். பெருந்தொற்று காலத்திலும் தனது பாதுகாப்பிற்காக முதல்வரைச் சந்திப்பதுமாக தன்னை மிகவும் கவனத்தோடு இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டவனாகக் காட்டுவது தான் எதிர்ப்பைக் காட்டத் தூண்டுவது.

நலம்விரும்பிகள் அமரத்துவம் பெற்றவர்கள்

நம் சமூகத்தில் நலம் விரும்பிகளின் உண்மையான பங்கு என்ன?

“இப்படியே ஆள் ஆளுக்கு பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி, மொதல்ல ஆக வேண்டியது என்னனு பார்ப்பம்” என்கிற வசனத்தைப் பேசும் மூன்றாம் நபர் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறார். சுயமாக ஆர்டர் பண்ணத் தெரியாத நமக்கு, பக்கத்து டேபிளில் ருசித்து சாப்பிடுபவர் நலம் விரும்பி ஆகிறார். நம்மாலும் ஒரு நலன் விரும்பியல்லாமல் வாழ முடிவதில்லை.

ப்ளாக் எழுதும் ஆரம்ப காலத்தில், நான் நிறையவே நலம்விரும்பிகளைத் தேடி வைத்திருந்தேன். ஒரு இடுகையை பதிவேற்றியதும் ஒவ்வொருவருக்கும் இதை யாஹூ, ரெடிஃப் மெஸஞ்சர்கள், ஆர்குட் இன்பாக்ஸ், மின்னஞ்சல் என அனுப்பிவிட்டு ஒவ்வொருவருக்கு போனில் அழைத்தும் வாசித்துக் கருத்திடச் சொல்லிக் கேட்பேன். அத்தனை பேரும் எனக்கு நலவிரும்பிகள் என நினைத்துக் கொண்டேன். 

நலம்விரும்பிகள் நாம் விரும்பும் பதில்களைத் தருபவர்கள்

“மொதல்ல நீ புக்ஸ் வாசிடா என்றோ.. நீயே எழுதனத படிச்சுப்பாரு” என்றோ சொல்வாரில்லை. குறை, விமர்சனம் சொல்பவர்களை நாம் நலவிரும்பிகளாகவும் கொள்வதில்லை.

ஒரு கட்டத்தில் நான் கோவைக்கு சென்றபோது என் நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்லலாம் என்று முடிவெடுத்து முகவரி கேட்க அழைத்தால்..

“நான் படிச்சிட்டு சொல்றண்டா” என்று நான் ஏதும் பேசுவதற்கு முன்னரே அழைப்பைத் துண்டித்தான். அதனாலெல்லாம் திருந்திவிடவில்லை சமூக ஊடகங்களில் ஒத்த மனநிலையோடு இருப்பவர்களை இன்னும் தொந்தரவு செய்தபடி தான் இருக்கிறேன். என்ன இந்த எண்ணிக்கை மீச்சிறியது.

நலம் விரும்பி எனும் வேள்வி

உண்மையில் ஒருநல விரும்பியாக இருக்க விரும்புபவன், கசப்பாகத் தான் இருப்பான். நான் அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் அவ்வாறு தான் இருக்கிறேன். இதனால் எனக்குப் பிரியமான நண்பர் ஒருவர் தான் எழுதுவதை நிறுத்த நீ தான் காரணம் என்றார். மிகக்கடினமான விமர்சனம் அது. சில காலம் நான் அவரோடு பேசாமலே இருந்தேன். உண்மையில் அவர் என் நலன்விரும்பியாக ஏன் இருக்கக்கூடாது. நான் ஏன் சர்கரை தூவிய மாத்திரையாக இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொள்வேன். என் சுபாவம் நான் அக்கறை கொண்டவர்களோடு அப்படி இருக்கமுடிவதில்லை. சில சமயம் நானே தவறிழைத்திருப்பேன்.

அண்மையில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிவரும் கட்டுரைகளில் மகிழ்ச்சி குறித்த தத்துவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. அதன் மையம் நாம் மகிழ்ச்சி குறித்து அதிகக் கவலைப்படுகின்றோம். 

நல்லது, நன்மை, வெற்றிபயக்கும் காரியங்களை பிரார்த்தனைகளை உடன்படுதலை செய்யவே துணிகிறோம். தமது குழந்தைகளின் வெற்றிக்காக தாம் தோல்விபெறும்/துக்கத்தை/நிம்மதியற்ற வாழ்வுக்கு நலம்விரும்பிகளாக பொறுப்பேற்கிறோம். தமது குழந்தையின் யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள், அவரை வெற்றி பெற ஓட்டளியுங்கள், அவர் கல்விபெற கடனளியுங்கள் என்று நலம்விரும்பிகளை நாடுகிறோம்.

நம்பிக்கையின் கருவி நலம்விரும்பி

நலம் விரும்பியாகத்தான் காலையில் தினசரி பலன்கள், பங்குவர்த்தகப் பரிந்துரைகள், ஹவுஸ்ஹோல்ட் விற்பனை விளம்பரங்கள், குண்டாக/சர்கரை/இரத்த அழுத்தம் குறைய ஆலோசனைகள், மனநலப்பயிற்சி வகுப்புகள், போர்னோ சைட்கள், யூட்யூப் சமையல் குறிப்புகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், வாக்குறுதிகள், நலத்திட்டங்கள். 

முறையான அரச ஆவணங்கள் நமக்கு கல்வெட்டுகள் வாயிலாகத் தான் கிடைக்க ஆரம்பித்தது என்பதை வைத்துக்கொண்டு (சோழர்கால கல்வெட்டுச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு)யோசித்தால், அத்தனை விதமான வரிகளைத் தாண்டி, நிலவுடமையாளர்களின் அதிகாரத்தைத் தாண்டியும் எல்லா வர்கக்குடிகளும் தம்மை இன்றுவரை சமூகத்தில் அங்கம் வகிக்க, அது எந்த நலவிரும்பிகளையும் நம்பாதது காரணமாகியிருக்கும். எல்லா துயர்களையும், ஒடுக்குதல்களையும், வலிகளையும் தாங்கிக்கொண்டு தன்னை தக்கவைப்பதற்கான முனைப்பு (survival instinct) மட்டுமே. அவர்கள் நலவிரும்பிகள் பற்றிய சரித்திரக்கதைகளில் வரும் துணைப்பாத்திரங்கள் மட்டுமே.

நலம்விரும்பி எனும் சித்திரவதை

இப்படித்தான் ஒருநாள், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வற்ற ஊரடங்கையும் அதற்கு ஆயத்தமாக்க மக்களின் நலன்விரும்பிய அரசு ஒன்னரை நாள் கடைகளைத் திறந்துவைக்கச் சொல்ல, ஒட்டுமொத்த நலன்விரும்பிகளும் ஒன்றாய் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடிக் கொண்டிருந்தது செய்திகளில் ஒளிபரப்ப என்னோடு படித்த ஒரு நலன்விரும்பி என்னை அழைத்தான்.

ரவை, சேமியா, நூடல்ஸ் பாக்கெட்டிற்காக சண்டைபோட்டு முண்டியடித்துக் கொண்டிருந்த மக்களோடு நின்று கொண்டிருந்த நான் அவன் அழைப்பை லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி நின்றுகொண்டிருக்க

“மச்சான் எப்படிடா இருக்க”

“நல்லாதாண்டா இருக்கேன், ஊரு முழுக்க கொரோனாவாம் அதான் கேட்டேன் ”

“ஆமா திங்க கெழமல இருந்து லாக்டவுன் தான, கொஞ்சம் கொஞ்சமா கட்டுப்படும்.. சரிடா நான் அப்புறமா கூப்டுறேன்.. கடைல கூட்டமா இருக்குடா”

“பாத்துடா.. முக்கவசம்லாம் அணிந்து இருக்கதான”

அவன் அரசியலில் சேர்ந்துவிட்டதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். அவனது அக்கறையில் தொனித்திருந்த ஆங்கிலக்கலப்பற்ற தமிழ் எனக்கு அதனை நினைவூட்டியது.

“ஆமாண்டா டபுள் மாஸ்க்தான் போட்டுருக்கேன்”

“பார்த்துடா இரட்டை முகக்கவசம் போட்டா மட்டும் போதாது. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன் பாதுகாப்பான உடலுறவை மெயிண்ட்டெய்ன் பண்ணு”

 “என்னதெ”

நாமும் யாருக்கோ நலவிரும்பியாக இருந்தே ஆகவேண்டும். நமக்கும் சிலர் இருந்தே ஆகவேண்டும் அதுவே விதி.

என் நண்பனின் நலம்விரும்பி அவனை ஆங்கிலக்கலப்பற்ற தமிழைப் பேசச் சொல்லியிருக்கலாம். ஆனால் கூடுதலாக அதிலிருக்கும் அபாயங்களையும் உணர்த்தியிருக்கனும். சமூக இடைவெளிக்கு பாதுகாப்பான உடலுறவு அர்த்தம் ஆகியது போல். 

நலம்விரும்பி எனும் நல்லூழ்

வைரமுத்துவைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு வியாக்கியானங்கள் உலவுகின்றன. அவர் மட்டும் திமுகவின் நலம்விரும்பியாக இருந்தால் நிச்சயம் பாதுகாப்பான .. நல்லுறவை வளர்க்கவும், முதல்வரின் மீதிருக்கும் அபிமானத்திற்காகவும் நிச்சயம் அவரைச் சந்தித்திருக்கமாட்டார். சரி பொள்ளாச்சியிலே இத்தனைக்குப் பிறகும் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ போல நமக்கிருக்கும் நலவிரும்பிகள் நம்மைக் காப்பாற்றுவர்கள் என்கிற நம்பிக்கை நம்ம வைரத்திற்கு அதற்காக இவ்வளவு உழைக்க வேண்டியிருப்பது இந்த எழுத்துச்சமூகத்திற்கு நல்லூழ் தான்.


வியாழன், 27 மே, 2021

எண்ணும்மை - 3 கருத்துரிமையும் கமர்கட்டும்

 : அப்போ எல்லைகளை கொண்டு வருவதில் நீங்க தீர்மானமா இருக்கிங்க?

 : எங்களது peace keeping army மக்களை பத்திரமா கூட்டிட்டுப் போயிடுவாங்க.. எல்லாம் தீவிரவாதிங்களால தாமதமாகிடுச்சு

: அவுங்களை தீவிரவாதிங்கன்னு சொல்லாதிங்க

: அப்போ அவுங்கள எப்படிக் கூப்படனும்னு சொல்லுங்க

: உங்க peace keeping army கையில் ஆயுதங்கள ஏந்திட்டு, மக்களை வலுக்கட்டாயமா திரும்ப அனுப்ப ரெடியா இருக்காங்க இல்லையா.. அப்போ அந்த மக்கள் உங்க ஆர்மிய எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா?

நீங்க வைக்கிற இந்த பேர் இருக்கு தெரியுமா தீவிரவாதிகள், அகதிகள், கிளர்ச்சியாளர்கள்னு.. உங்களுக்குப் பிடிக்காத மாதிரி பேரை வச்சுட்டு அவுங்கள கேள்வி கேட்க விடாம தடுக்கறிங்க...

***

இப்படி  வசனங்கள் வரும் ஒரு தமிழ்படத்திற்கு சென்ஸார் வாங்கிட முடியுமா? கருத்துரிமைப் போராளிகளால். கருத்துரிமை போராட்டம் எனும் பெயரில் ஈழப் படுகொலையை சிங்களப் பேரினவாதத்தின் அதற்குத் துணை போன அரசாங்கங்களின், நாடுகளின், சித்தாதங்களின் எந்த ஒரு சிறு செங்கல்லையும் சுட்டாமல் ஒட்டுமொத்தமாய் பழிபோடுவது தமிழினம் என்கிற இன அடிப்படையிலான உரிமை மீட்பு மற்றும் உணர்வுப் போராட்டத்தை.

தமிழினம் எனும் உணர்வு பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. சாதிகளின் வேரைப் பற்றித்  “தமிழண்டா” என்று சொல்லும் ஆழமற்ற மேல் அடுக்குகளை, பூஞ்சைகளை மட்டும் கண்டறிந்து அதனை வைத்தே அரசியல் பழித்து வெற்றி பெற முடியும். அதன் ஆயுள் குறைந்து வருவது வேறு விஷயம். இங்கே நான் முன்வைப்பது கருத்துரிமைக்கான அரிதாரங்களை மட்டுமே.

***

ஹாட்ஸ்டார் + டிஸ்னி ப்ளஸில் வெளிவந்துள்ள அவெஞ்சர்ஸ் வரிசை படங்களின் Spin-off தான் ஃபால்கன் மற்றும் விண்டர் சோல்ஜர். கேப்டன் அமெரிக்காவாக உருவெடுக்க ஒரு கருப்பினத்தவனின் உளப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அசத்தலான தொடர் தான் இது.  மேற்கண்ட வசனத்தை இந்த தொடரின் கடைசிப் பகுதியில் பார்க்கலாம். (ஸ்பாய்லர் அலெர்ட்**)

End Gameல் தனது போராட்ட வாழ்க்கையை முடிவுக்கு வந்துவிட்டதாக உணரும் ஸ்டீவ் ரோஜர்ஸ் எனும் வெள்ளையர் தமது கேடையத்தை சுமப்பதற்கு சரியான ஆள் என்று தேர்வு செய்யும் நபர் (தனது நண்பர் பக்கியை விட பொறுத்தமானவராக) சாம் வில்சன் தான் (ஃபால்கன்). ஆனால் அவரால் அந்த கேடையத்தை வைத்திருக்க முடியவில்லை மாறாக மக்கள் ஏற்கும்படியான ஒரு கேப்டன் அமெரிக்காவாக மற்றொரு வெள்ளையரை அரசாங்கம் தேர்வு செய்கிறது (paul walker). 



CAP is BACK என்கிற விளம்பரத்தோடு நிறைய Merchandise ஆகிறது. (அப்துல்கலாமிற்கு நாம் Merchandise செய்யாமல் ஒரு சந்தை வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டோம் அல்லது அக்னிச் சிறகுகள் ஒரு எளிய உதாரணம். இன்னும் இந்திய அரசியலில் அது உருவாகவில்லையோ). இந்த தேசியவாத சந்தைச் சாகுபடி ஒரு கருப்பினத்தவனுக்கு கிடைக்காது என்கிற தயக்கத்தை, உயிரோடு வாழும் மற்றொரு கருப்பின சூப்பர் சோல்ஜர் (ப்ராட்லி) தன் கதையின் மூலம் உறுதிப்படுத்துகிறார். 

மற்றொரு பக்கம் போராளிகளுக்கு ஆயுதமாக அவர்களையே சூப்பர் சோல்ஜர்களாக உருவெடுக்க வைக்கும் சீரம்களைக் கொடுத்து அவர்களைப் பயன்படுத்துகிறார், ஷீல்ட் எனும் உளவு அமைப்பின் ஏஜெண்ட்டான கார்ட்டர். இங்கே பவர் ப்ரோக்கராக மறைமுகமாக செயல்படும் ஏஜெண்ட் கார்ட்டரை யாராலும் கண்டரியமுடியாது. இறுதியில் தன் காரியங்களை சாதிப்பதற்கு அல்லது சாதித்துவிட்ட பின்னர் தான் உருவாக்கிய போராளியையே ஏஜெண்ட் கார்ட்டர் கொல்கிறார். இறுதியில் அரசாங்கம் அவருக்கு மிக உயர்ந்த பதவி ஒன்றைக் கொடுக்கிறது.

போராளிகள் எப்படி உருவாகிறார்கள் எனும் பகுதி இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றாக சேர்ந்து வாழ்பவர்களை அதிகாரம் இவர்கள் குடிகள் இவர்கள் அகதிகள் எனப் பிரிக்கிறது. அகதிகள் மீட்பு என்கிற பெயரில் நடக்கும் இனச் சுத்தகரிப்பு அல்லது புதிய எல்லைகளை வகுக்கும் அணிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆட்களைத் தேர்வு செய்து அவர்களை சூப்பர் சோல்ஜர் ஆக்குகிறார் பவர் ப்ரோக்கர். இறுதியில் ஒரு பக்கம் பவர் ப்ரோக்கராலும், இன்னொரு புறம் இனவாத கூட்டு அரசாங்கங்களாலும் மற்றும் சூப்பர் ஹீரோக்களாலும் தோற்கடித்துக் கொல்லப்படுகிறார்கள். அதற்கும் மேலாக அவர்களை ஆதரித்த பொது மக்களையும் மொத்தமாகக் கைது செய்கிறார்கள்.

இப்படியான திரைப்படங்கள் உங்களுக்கு வேறு ஒரு வரலாற்றை நினைவில் கொண்டு வரலாம். அது வெகுஜனங்களுக்கான திரைப்படங்களின் வடிவமே, தேசியவாதம் பேசும் படங்களில் அல்லது உலகத்தைக் காப்பாற்றப் போராடும் அமெரிக்க பிரதிநிதிகளின் படங்களில், எதிர்முகாமில் இருப்பவர்களை ( அது டைனசரோ, ஏலியனோ, எதிர்காலத்தவனோ, புரட்சியாளனோ)** அவர்களது தரப்பினைப் பேசும் அத்தியாயங்கள் மட்டுமே கதையின் வலிமையைக் கூட்டும். 

**அது இயற்கை விதிகளை மீற அறிவியல் எனும் பெயரில் லாபம் சம்பாதிப்பதோ, உலகத்தின் வளங்களை நாசமாக்கும், பாழ்படுத்தும் காரணத்தாலோ, ஏதேச்சதிகாரம், மதம் அல்லது  சலுகைசார் முதலாளித்துவத்தாலோ {crony capitalistic} எதிரிகளைச் சம்பாதிக்கும் மனித குலத்தின், தேசியவாதத்தின் மகத்துவத்தின் எதிர்விளைவு.

***

The family man, 800, madaras cafe, With You, Without You, DAM 999 உள்ளிட்ட படங்களுக்கு எதிர்ப்பு வரும் என்பது தெரியாதது ஒன்றுமல்ல. ஆனால் சென்ஸார் போர்டின் தணிக்கை, ஈழ ஆதரவு அரசியலை வெளிப்படையாகப் பேசும் ஒரு வெகுஜனத் திரைப்படத்திற்கு ஒப்பாக இருக்குமா?. இங்கே சென்சாரில் ஒரு சரிசமமான தணிக்கைக் கொள்கை அல்லது சென்சார் அற்ற திரைப்படங்களுக்கான வாய்ப்பு கிட்டும்போது. கருத்து சுதந்திரத்திற்கான போராளிகளின் நிலைப்பாடு அப்படியே எதிர்திசையில் இருக்கவும் வாய்ப்புள்ளது.

அதுவரை மொக்கை படங்களின் கதாநாயகனின் பெயராக பிரபாகரன் என்கிற தமிழினத்தின் 100% உத்தரவாதமுள்ள Merchandise இருக்கவே செய்கிறது. இல்லை காலா போன்ற அற்புதமான திரைப்படத்தை அந்த அரசியலோடு துளியும் ஒத்தே போகாத ரஜனியை வைத்து எடுத்துத் தொலைக்க வேண்டும் (நல்லவேளையாக தூத்துக்குடி கலவரம் குறித்த ரஜினியின் உளறல் அவரை முதல்வராக்க சாத்தியமுள்ள ஒரு பொன்னான வாய்ப்பை இழந்தது). குறியீடுகளைக் கொண்டு இசைப்ப்ரியாவையும் பாலச்சந்திரனையும் காண்பிக்க வேண்டும்.

ஏற்றத்தாழ்வற்ற நிலை வரும்வரை(பொருள், சமுகநீதி) இடஒதுக்கீடு எனும் equaliser எத்தனை முக்கியமோ, அவ்வாறே கருத்துரிமை சார்ந்த விதத்திலும் ஒரு check and balance தேவைப்படுகிறது.

 800 படம் போஸ்டர்களிலேயே நின்றுபோய்விட்டது. ஆங்கிலத்தில் எடுக்கையில் யாரால் தடுக்க முடியும், ஆனால் இந்த தடை உருவாக்கும் விளம்பரம் மூலதனமாகும் சூட்சுமம். அது ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ வெளிவரும்போது, தமிழினம் குறித்த சித்தரிப்பு (திரைப்படத்திற்கு வெளியேயும் - படத்தை தடை கோரும் அரசியலும் இதில் அடங்கும்) உலக அரங்கில் ஒரு பொதுபுத்தியை மேலும் மேலும் கட்டியெழுப்பும். சரி இது conspiracy theory என்று விட்டுவிடுவோம்.

தடை செய்வது தீர்வாகாது எனினும் தடை குறித்த போராட்டங்களை, எதிர்ப்புகளை அனுமதித்து தான் ஆகவேண்டும். அரசியல் வாய்ப்பு அற்ற அல்லது வற்றாத அரசியல் வாய்ப்பு தருகின்ற ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளின் அதிகப்பட்ச  உரிமை தடைக்கான கோரல் மட்டுமே. இதனைத் தாண்டும் ஒவ்வொரு மில்லிமீட்டர் போராட்டமும் லத்தியால் கற்களால் வழக்குகளால் அடக்கப்பட்டிருக்கும் ஆட்கொணர்வு மனுக்களால், CCTV கேமிராக்களால் மட்டுமே உயிர்பிழைத்த முகிலன்கள் அல்லது நம்பிக்கைகள்.

எனது நிலைப்பாடு இவற்றைத் தடைசெய்வதைக் காட்டிலும் அமேசான் செயலியை ஒரு Campaign செய்து குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் unsubscribeகளை ஒரே நாளில் செய்து காண்பித்தால் அதன் விளைவுகள் வீரியமாயிருக்கும். இந்த விஷயம் பேசுவதற்கு அதன் சந்தை தான் காரணமென்றால், சந்தையைக் கொண்டு மட்டுமே பதில் சொல்ல முடியும். இதைவிடுத்து விட்டு சமந்தாவை மட்டும் ட்ரோல் செய்து கொண்டிருப்பது அவர்கள் உருவாக்கும் பொதுபுத்தியை மேலும் வலிமையாக்கும்.

பெரும்பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈழ யுத்தத்தின் தமிழ் சார்புநிலையில் இருந்து ஒரு படம் எடுக்கத் தயாராகும் நாள் வரை அப்படியான ஒரு படத்தை எடுத்து உலக வெகுஜன பார்வையாளருக்குக் கொண்டு போக முடியாது என்பதை இந்நாளில் என்னால் உணர் முடிகிறது. எது என்ன இந்நாள் என்றீர்களா? போரில் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை வைத்து ஒரு குறும்படத்தை தயாரித்தவன் நான். அதன் ஷூட்டிங் நடந்து இன்றோடு நான்காண்டுகள் ஆகின்றன. இன்றுவரை வெளியிட முடியவில்லை என்பதற்கு அரசியல் ஒரு காரணமேயில்லை சந்தை மட்டுமே காரணம். நானும் கடன் கொடுத்தவரை கமர்கட் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.


ஜீவ கரிகாலன்

திங்கள், 24 மே, 2021

எண்ணும்மை - 02 வாய்ப்பும் இழப்பும்

 

“ஜே.கே.. அவனை ப்ளூக்ராஸ்ல புடிச்சுக்கொடுக்கனும் ஜே.கே...” என்று தான் அன்றைய பொழுதின் முதல் பேச்சாக இருந்தது. நாகலாபுரத்தில் ஆறு ஏழு நாய்கள் வளர்த்த பந்தம் இன்று வரை எங்கு சென்றாலும் அவர்களுடன் தொடர்ந்து வருகிறது. முதன்முறை எங்களோடு சதுரகிரிக்கு மலையேற துணைவந்த சொக்கநாதன், அடுத்த முறை சில ஆண்டுகள் கழித்து வந்த போதும் சொக்கநாதன் எங்களைக் கண்டுகொண்டது என்பது முன்னர் சொன்ன பந்தத்தின் உச்சபட்ச உதாரணம். 

 இப்போது வசிக்கும் ஏரியாவில் உள்ள பசங்களுடன் நான்காண்டு கால சகவாசம்.. ஏரியாவில் மூத்த பையன், எல்லோருக்கும் காட் ஃபாதர் கவர் பாய் தான்.. முன்னோடி, மூத்தவரென்றாலும் அன்பு காட்டுவதிலும் பொஸஸிவிலும் இவர் எல்லோரையும் விட அதிகம். இப்போது பழு வந்த காரணத்தினோலோ காயம்பட்டபோது மருந்து போட்டதன் எரிச்சல் காரணமாகவோ என் மீது கோபமிருக்கலாம். 

அகிலா தோழர் என்னை விட ஒரு படி மேல்.. எத்தனை நோய்மையுற்றாலும் அவர்களை ஆறுதலாய் தடவிக்கொடுக்கத் தவறுவதேயில்லை. அதுவும் கொரோனா காலத்திலிருந்து கவர் பாய் என்னிடம் முழுமையாக நட்பை துண்டித்துவிட்டான்.. இத்தனைக்கும் அன்றாடம் பிஸ்கட் பாக்கெட் முழுமையாக அவனுக்கு என்றே போட்டாலும், நான் அங்கே இருந்தால் உண்ண மாட்டான். எழுந்து திரும்பிப் படுத்துக் கொள்வான். நாங்கள் வசிக்கும் மூன்றாம் தெரிவிலிருந்து முழுமையாக அவனது இருப்பிடமான இரண்டாம் தெருவிலேயே தங்கிவிட்டான். அங்கிருக்கும் அம்மு அவனை ஏற்கனவே கடித்துவைத்துவிட்டதால் ஏற்பட்ட காயம் முழுமையாக ஆறிவிடும் முன், புதிதாக அவனுக்கு கழுத்தில் ஒரு காயம் ஏற்பட்டிருந்தது. அப்போதும் அவன் என்னைக் கண்டால் விலகிப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 

எங்கள் தெருவில் தப்பி பிழைத்த குட்டியொன்று பழுவோடு மிக நெருக்கமாய் பழக ஆரம்பிக்க அவன் இங்கே செட்டிலாகிவிட்டான். அது போல கொரோனா காலத்தில் புதிதாக இருவர்  உள்ளே நுழைந்து குட்டியோடு உணவுக்காக சண்டையிட, இப்போது அவர்களுக்கும் தனிப்பங்கு கிடைக்க அவர்களும் சற்றுத் தள்ளி அவர்களுக்கான இடத்தை பிடித்துக் கொண்டு எங்கள் தெரிவிலேயே செட்டிலாகிவிட்டார்கள்.

கவர்பாய் நன்றாக துருதுருவாக போக்கிரியாக சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் அவனை யாராலும் எதிர்க்க முடியாது, சேர்ந்தார் போல் இரண்டு அல்லது மூன்று குத்தாவாலாக்களை கூட அவன் துரத்திவிடுவான். அவன் தனித்த குரலில் குரைப்பதற்கு பதிலாய் ஒரு ஸ்வரமொன்றை எழுப்புவான். எப்படியாகினும் மூன்றாம் தெருவை முழுமையாக ராஜ்ஜியம் செய்தவன் அவன். திடிரென பாதி வளர்ந்த குட்டியாகத்தான் ஒரு கருப்பு வெள்ளை துள்ளல் பயலைக் கண்டேன்.. வாலை ஆட்டும் வேகத்திலிருந்து அவன் நல்ல ஆரோக்கியமானவன் என்று உணர்ந்தோம். முதன்முதலாக ரௌடிக்கு அஞ்சாமல் அவனை மீறி எங்கள் அலுவலகம் அருகே வந்து உட்கார்ந்து வாங்கித் தின்றுவிட்டுக் கிளம்பிவிடுவான். அவனது ரவுடி ரதோர் ஆனது. ”ரவுடிப்பயலே” என்று கொஞ்சுவதை அவன் அங்கீகரித்தான். போடும் பிஸ்கட்டை அவன் சாப்பிடாமல் அவனது கேர்ள் ஃப்ரண்டை அழைத்து வந்து சாப்பிட வைத்து உடன் செல்வான். இந்த மாதிரி நடவடிக்கையை இதற்கு முன் எந்த பயல்களிடமும் கண்டதில்லை. 

நாங்கள் வசிக்கும் பகுதியில் நிலத்தில் குடில் போட்டு தங்கி வேலை செய்து பிழைப்பவர்கள் ஆண் நாயை வளர்ப்பதில்லை, அவர்கள் நாய்க்குட்டியை சிட்டியில் விற்பனை செய்ய முடியும் என்பதும் ஒரு காரணம். ஏற்கனவே ரவுடியின் கேர்ள் ஃப்ரண்ட் கடந்த ஆண்டு போட்ட குட்டியில் பிழைத்தவை விற்கப்பட்டன. குட்டியை இழந்த அது மிகவும் மூர்க்கமானது. அதற்குள் கார்ப்பரேஷன் ஆட்கள் ரவுடிக்கு அறுவைசிகிச்சை செய்து திருப்பி அனுப்பிவிட்டனர். அதற்கு பின்னர் அவன் பழைய சுறுசுறுப்பை இழந்துவிட்ட போதிலும் நம் மீது இருந்த பிணைப்பை 1% கூட இழக்காமல் இருந்தான். இப்போது அவன் முழுமையாக முதல் தெருவில் வசித்து வந்தான். பழைய பேப்பர் கடை அண்ணாச்சி அதே தெருவில் கிட்டத்தட்ட ஐந்தாறு பேருக்கு மேலாக கவனித்து வந்தார்.  ஆனால் ரவுடி அவர்களிடமிருந்து தனித்தே இருந்தான். ஆப்ரேஷன் செய்த பின்னர் அவன் மனிதர்களிடம் நெருங்குவதில்லை. அண்ணாச்சி, என்னைத் தவிர, அகிலா, இளங்கோவிடம் மட்டும் வாலாட்டுவான். என்னிடம் மட்டும் கையிலிருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை அவன் விடவேயில்லை. 

இரண்டாம் தெருவில் கவர் பாய் மற்றும் அம்முவும், குறுக்குத் தெருவில் இரட்டையர்களில் ஒருவன் கார்ப்பரேஷன் பண்ண அறுவை சிகிச்சையில் சீழ் வடிந்து செத்துப்போக. கருப்பு வெள்ளை சங்கரி மட்டுமே வசித்து வந்தாள். அது ஒரு ப்ளாட் மட்டுமே, தற்காலிகமாக சென்னை சில்க்ஸ் பார்க்கிங் வைத்துள்ளது. முதல் தெரு வாசிகளாக கைவிடப்பட்ட கலப்பினத்தான் ஒருத்தனும், ஒரு சோம்பேறி வெள்ளையன், இரண்டு கருப்பர்கள், இட்லிக்கடை கருப்பன் போக ஒரு திருட்டு வெள்ளையன் (வீடு புகுந்து திருடி நிறைய அடி வாங்கியிருக்கிறான்) தான் இருந்தார்கள். பின்னர் ரவுடி ரத்தோர் குழுவோடு இல்லாமல் தனியாய் இருப்பான். நாய்கள் ஒரு Pack animal தான் எத்தனை சண்டையிட்டாலும் அவர்களுக்குள்ளே ஒரு குழு இருக்கும். பார்க் தாண்டி ஒரு இடத்தில் ஏழெட்டு பேர்கள் இருப்பார்கள் அவர்கள் கதையே தனி. அருகிலிருந்த வீட்டு விலங்குகள் காப்பகம் (PET Boarding) திடீரென இடம்பெயர, திரும்ப அழைக்கப்படாத விலங்குகளை ஒரே இடத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் ஒருகுழுவாக இருப்பதால் அவர்கள் அங்கேயே வாழ்ந்துவருகிறார்கள். எந்த குழுவிலிருந்து பிரிந்துவந்தவனோ அல்லது கைவிடப்பட்டவனோ தெரியாது ரவுடி தனித்தே இருந்தான். ஒரு சீஸனில் உடனிருந்த சங்கரியும் இப்போது அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அருகே வருவதில்லை. தவிர உடம்பும் தடிமனாக போய்விட்டது.

***

அன்று காலை என்னை எழுப்பியது ரவுடியைப் பற்றி சொல்லத்தான். திடீரென அதற்கு முந்தைய நாள் எங்கள் தெருவிலிருந்தவர்களை விரட்டிவிட்டு எங்கள் வீட்டுக்கருகே வந்து உட்கார்ந்துவிட்டான். பழுவைப் பார்த்து குறைத்தபடியே இருந்தான். உணவு கொடுத்து கொஞ்சம் அவனை சாந்தப்படுத்திவிட்டுப் போ என்று அதட்டியதும் போய்விட்டான். அன்றிரவு முழுதுமே பெருஞ்சப்தங்கள் சொல்லப்போனால் அந்த வாரம் முழுக்கவே சண்டை சச்சரவுகளோடே இருந்தது. குட்டி, பழு, ரவுடி உள்ளிட்ட எல்லோருக்கும் காயமிருந்தது. 

ஆனால் பிரச்சனை எல்லா நாய்களிடையே அல்ல ஒரேயொருத்தனால் தான்.

அகிலா அந்த சம்பவத்தை சொல்லும்போதே நடுங்கிதான் விட்டார். “நம்ம ரவுடி பத்தி சந்தேகப்பட்டது சரிதான். அவன் காலைல சங்கரியோட எல்லா குட்டிங்களையும் கடிச்சிட்டான்... நாங்க விரட்டினாலும் போகலை”

மிகமோசமாக மூன்று குட்டிகளையும் கடித்து குதற, எப்படியோ அகிலாவும் வேறொரு பெண்மணியும் சேர்ந்து அவனை விரட்டிவிட்டு படுகாயம்பட்ட குட்டிகளைத் தூக்கி சென்னை சில்க்ஸ் கதவருகே கொண்டு ஒளித்து வைத்தார்கள். குட்டிகளைக் கடித்து குதறிய இடம் சென்னை சில்க்ஸ் பார்க்கிங். காலையிலேயே அவன் மூர்கமாக சுற்றிக் கொண்டிருந்தான். மெயின்ரோடு உட்பட மூன்று தெருவிலும் எங்கெங்கெல்லாமோ சென்று வெவ்வேறு நாய்களைக் கடித்துக் கொண்டிருந்தான்.

கோவிட்காலத்தில் சோறு வைப்பவர்கள் அநேகர் வெளிவருவதில்லை, சிலர் ஊர் சென்றுவிட்டார்கள், சிலருக்கு இயலவில்லை. பழையபேப்பர் கடை அண்ணாச்சியும் அவ்வப்போது வந்து சோறு போட்டுவிட்டுச் செல்வார். ஆனாலும் நான் உட்பட ஏதோ ஒருநாள் அல்லது ஞாயிறு உணவு போடாமலேயே விட்டுவிடுவதுண்டு. கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலே இந்த அசாதாரணச்சூழல் தொடங்கிவிட்டது அல்லவா? ஏன் என்றே புரியாத வண்ணம் ரவுடி மூர்கமாக ஆகியிருந்தான். ஆனால் அவன் உண்ணாமல் இருந்தால் மூர்கமாகிவிடுவான் என்று தோன்றியதால் ப்ளூ க்ராஸ் வரும்வரை அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவன் அப்போது வசிக்குமிடம், உயர்த்திக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மூன்றடுக்கு வீட்டுப்புறம். அங்கு போய் நான் நின்றால் போதும் என் கூடவே வந்துவிடுவான், நேராக என் வீட்டருகே வந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, கொஞ்சம் சாப்பாடோ பிஸ்கட்டோ சாப்பிட்டு மீதம் வைத்துவிட்டு சென்றிடுவான். இவ்வாறு முந்தின நாளிலிருந்து நான்கைந்து முறை செய்துவிட்டேன். 

காலையில் பதிவு செய்த ப்ளூகராஸ், சுமார் இரண்டு மணிக்கு வந்தது. சென்னை சில்க்ஸ் பின்கதவருகே வைத்திருந்த குட்டிகள் இல்லை என்றதும் அவர்கள் கிளம்பிப்போவதாக போனில் சொல்ல, மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைக் கூட்டி வந்தோம். ப்ளூ கிராஸைப் பொறுத்தமட்டிலும் புகார் செய்யப்படாத எந்த ஒரு உயிரையும் அல்லது volunteer இல்லாத எந்த ஒரு பிராணையையும் எடுத்துவருவதில்லை. அதற்கு வேறு ஒரு வழக்கு காரணம். இதைக் காரணம் சொல்லி அவர்கள் வெறி பிடித்து கடிக்க வரும் ரவுடியைக் கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்.

பின்னர் ஒரு பணியாளரை எனது வாகனத்தில் வைத்துக் கூட்டிச் சென்று காண்பித்தேன். கண் முன்னே ஒரு வெள்ளையனை ரவுடி கடித்துத் துரத்திக்கொண்டு இருந்தான். வாகனத்தை அழைத்துவரச் சொன்னார் அதற்குள் அப்பகுதி மக்களும் அங்கே கூட அவர்கள் முதலாவதாக அந்த சங்கரியைப் பிடிக்கச்சொன்னார்கள். சென்ற வருடமே அது ஒரு பெண்ணைக் கடித்துவிட்டிருந்தது. அது தன் குட்டிகளைப் காப்பதற்காகத் தான் அப்படிச் செய்தது என்று ஒருபுறம் சொல்லி அதனை விட்டுவிடச் சொல்லி பேசினார்கள். 

எல்லா நாய்களையும் பிடிக்க வேண்டுமெனில் 195க்கு(கார்ப்பரேஷன்) அழையுங்கள் என்று அவர்கள் கிளம்பத்தயாராக. இல்லை ஏதோ ஒன்றையாவது பிடிச்சிடுங்க என்று பேசி, ரவுடி அமரும் இடத்தைக் காண்பித்தேன். அவன் தொந்தரவில்லாதவன் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அவன் மூன்று நாட்களாய் பலரையும் கடித்துவருவதை நானே அறிவேன், ஆகவே அவர்கள் ரவுடியை தான் பிடிக்கவேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன். வீட்டருகே சென்ற அடுத்த நிமிடமே சுருக்கைக் கொண்டு இழுத்து வந்தார்கள். கயிறைக் கட்டி இழுத்து வந்துவிட்டார்கள், ஆரம்பத்தில் அவர்களோடு நடந்த வந்த ரௌடி என்னைப்பார்த்ததும், முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்.. தரையில் படுத்து அப்படி உருண்டும் எந்த சப்தமும் வரவில்லை. அதற்குப் பின்னர் தான் அவன் மீது வலை போட்டி இழுத்து வந்தனர். சட்டென அவனைக் கூண்டினுள் அடைத்தனர். அதற்குள் அங்கிருப்போர்கள் அந்த தாய் நாயையும் இழுத்துப்போக சொல்ல, இன்னொரு புகாரை ப்ளூ க்ராஸிற்கு அனுப்பினால் இப்போதே பிடித்துச் செல்கிறோம் என்றார்கள். 

ஏற்கனவே அது வருவோர் போவோரையெல்லாம் குரைத்து விரட்டிக் கொண்டே இருந்தது. பொதுவாக குட்டியிடும் எல்லா நாய்களும் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்பதால் இதைவிட்டுவிடுவோமா என்று தோன்றியது. இத்தனைக்கும் சங்கரி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருந்தாள். ரவுடியைப் பிடித்து போட்டதை நேரிலும் பார்த்தாள். அந்த குட்டிகளை மீட்டுத் தருவதற்கோ என்னவோ அந்த தெருவில் நின்றிருந்த ஒவ்வொருவர் முன்னரும் நின்று முகத்தை நேரிட்டுக்கொண்டிருந்தாள். 

குட்டியைக் காணாத விஷயத்தை சொன்னபோது,  “அந்த மூன்றுமே செத்துப்போச்சு நாந்தான் குப்பைல போட்டுட்டு கார்ப்பரேஷன்காரங்க கிட்ட அள்ளிட்டுப்போகச் சொன்னேன்” என்றார். கடந்த ஒருவாரமாக அகிலாவும் நானும் தினமும் சத்துமாவு, பிரெட் என எதாவது ஒன்றை வைத்துவிட்டு வருவோம். எல்லோரையும் விரட்டும் சங்கரி, எங்களை ஒருமுறை கூட சந்தேகித்ததில்லை. எப்படியிருந்தாலும் நமக்காக அதனை விட்டுவிடுவது நல்லதா அல்லது அதற்கும் ஒரு புகார் பதிவு செய்வமா என யோசிக்கையில், அதனிடம் கடிவாங்கிய பெண்மணியும் அவ்விடம் வந்து சேர்ந்தார். 

“ அதோட குட்டிங்கள தூக்கிடுவாங்கன்னு பயத்துல தான கட்ச்சிது, நாம காசுக்கு விக்கிறோம்னு தெர்ஞ்சா இப்படியா நம்பளாண்ட வந்து வாலாட்டிகினு நிக்கும்”

ப்ளூக்ராஸ் வாகனத்தை அனுப்பிவைத்தேன். ரவுடிக்கு எப்ப இருந்து கிறுக்கு பிடிச்சது என்று விசாரிக்கையில், ரவுடிக்கு இவ்வாறு ஆனதற்கு நானும் ஒரு காரணமெனத் தெரிந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக டைகர் பிஸ்கட்டிற்கு பதிலாய் (3ஆம் தெருவில் கருப்பன், ரவுடியத் தவிர பெரும்பாலும் அங்கிருக்கும் நான்கைந்து பேருக்கும் எதுவும் போடுவதில்லை, எப்போதாவது ஒரு சோம்பேறி வெள்ளையன் மட்டும் முழுப்பாக்கெட் பிஸ்கட் போடு என வாலாட்டுவான்). ரஸ்க் வாங்கி (பட்ஜெட் காரணமாய்) இவனுக்கும் கொஞ்சம் மற்றவர்களுக்கு ஒன்னொன்றாகப் போட்டுக்கொண்டே குட்டிங்களுக்கும் மீதத்தைப் போட்டு வர, பின்தொடர்ந்து வந்த கருப்பனையும் ரவுடியையும் சங்கரி குரைத்தது. கருப்பன் ஓடிவிடுவான், ரவுடி அந்த காரெக்டரில்லை என்பதால் நிறையவே கடிவாங்கினான். அன்றிரவிலிருந்து தான் ரவுடி மற்ற எல்லா நாய்களையும் கடிக்க ஆரம்பித்தான் என்று புரிந்தது. ஆரம்பத்திலிருந்தே ரவுடிக்கு பிஸ்கட் வைத்தால் கவர்பாய்க்கு கடுமையான கோபம் வரும்.. ஆனால் அன்றோ கவர்பாயின் கழுத்தில் கடித்துவைத்திருக்கிறான். கவர்பாய் பேசாத காரணம் புரிந்தது. ரவுடி கடிபட்ட காரணம் தெரிந்தது. ரவுடி கடிப்பதைக் கண்டு ஓடிப்போன குட்டி உள்ளிட்ட மற்றவர்கள் அவர்களிடத்தில் வந்து சேர்ந்தனர். சங்கரி பார்க்கிங்கிற்குள் அங்குமிங்குமாய் நடந்துக்கொண்டிருந்தது, துயரமிக்க ஒரு கழுதைப்புலியின் ரௌத்திரத்துடன் தென்பட்டது. முழுமையாக ரவுடியை மறக்க விரும்பினேன்.

ரவுடி மனிதத் தொடுதலை விரும்பியவன் மற்றவர்களைப் போல் எந்த மனிதரையும் அவன் குரைத்ததில்லை. தழுவிக்கொள்வான். கால்களைப் பிடித்துக் கொள்வான். இரண்டு கால்களிலேயே சில நொடிகள் வரை நிற்பான். வேகவேகமாக வாலாடும். இந்த ஊரடங்கு காலத்தில் மனிதர்களுக்கு மட்டும் இவை நடக்கவில்லை என்பதை மட்டும் உணர முடிகிறது. ஒருவேளை என்னை அல்லது அண்ணாச்சியைத் தவிர, இவனை அத்தனை எளிதாகப் பிடித்துக் கொடுக்க முடியாது. 

இருந்தாலும் குழந்தைகள் நடமாடும் தெருவில் என்று எத்தனை குரல்கள் ஒலித்தன. நாய்களற்ற தெருவிலும் குழந்தைகள் ஒருபோதும் வந்து விளையாடப்போவதில்லை. தொற்று முடிந்தாலும். நமக்கு விலங்குகளை விட மனிதர்களிடம் நிறையவே பயமிருக்கிறது. இருப்பினும் மனிதர்களைக் கடித்த விரட்டுகின்ற சங்கரி தப்பித்துக் கொண்டது. ரவுடி பிடிபட்டான். என்னைப் பொறுத்தவரை இந்த குழப்பம் தான் நிதர்சனம், இந்த குழப்பம் தான் பெரு வெடிப்பு. இந்த குழப்பத்திலிருந்து ஒரு ஒழுங்கை உருவாக்குவது தான் உயிர்வளி, இந்த ஒழுங்கு தான் புவியீர்ப்புவிசை. இந்த குழப்பமும் ஒழுங்கும் எண் 8 ஐப் போன்றது, தொடக்கம் முடிவு புலனாகாது.

விரல்களைப் பிடித்தபடி இருக்கும் டிஜிட்டல் உயிர்வளிமானி தரும் வாய்ப்பில் யார்யாரெல்லாம் எங்கெல்லாமோ உயிரைக் கையில் பிடித்தபடி இருப்பதைக் காண்கிறோம். ரவுடிக்கு மட்டுமல்ல நிச்சயமற்ற வாழ்க்கை. பிரியமான ஒன்றை, நாம் மிகவும் நேசிக்கின்ற ஒன்றை தூக்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இன்றைய உலகம் எல்லோரு முன்பும் உருவாக்கி வைத்திருக்கிறது. வாய்ப்புகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. சிலருக்கு தாயம் விழுந்து ஆட்டம் தொடங்கும் முன்னர் பலர் வீடு சேர்ந்துவிட்டார்கள். சிலர் வெட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சோழியை சுழற்றுவது தான் இருப்பா? அல்லது அபத்தமா? அல்லது இரண்டுமா. 

இந்த நிச்சயமற்ற தன்மை கொரோனாவிற்கு பின்னர் தான் வந்துள்ளது என்று என்னை நம்பவைப்பது புள்ளிவிவரங்களா? உடல்நிலையா? தலைப்புச் செய்திகளா? மெஸெஞ்செர்களா? அரசியல் தலைவர்களா? மருத்துவர்களா? தொழில்முனைவோர்களா? மதமா?

அகிலா ப்ளூ கிராஸில் சிலரைத் தெரிந்து வைத்துள்ளார். கோவிட்காலம் முடிந்ததும் ரவுடியைப் பார்க்கச்செல்லலாம் என்கிற நிம்மதியுடன் அன்று உறங்கியிருப்பேன். இரண்டு நாள் கழித்து பால் வாங்கச் செல்கையில் முகம் முழுக்க காயங்களோடு ஒன்றும் அந்த அளவிற்கு காயமில்லாத மற்றொன்றுமாக இரண்டு குட்டிகள் உயிர் பிழைத்து விளையாண்டு கொண்டிருந்ததைக் கண்டேன். கடைக்குச் சென்று பிஸ்கட் வாங்கிப் போடுகையில் ஒரு கருப்பு குட்டி ரவுடியைப் போன்றே ரெண்டு கால்களையும் தூக்கி நிற்க முயன்றான். 

என் காதுக்குள் யாரோ சோழியை உருட்டும் சத்தம் பலமாகக் கேட்டது. இளங்கோவுடன் தேனீர் அருந்த செல்லும் முன் இந்த செய்தியைப் பகிர வேண்டும்..


வியாழன், 20 மே, 2021

எண்ணும்மை

 


எண்ணும்மை :

பரனோயாவும் நாஸ்டால்ஜியாவும்..


இந்த மூன்றாம் உலகப்போரில் கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் தோற்றுக்கொண்டிருக்கின்ற மனித குலம் தன் வீட்டினையே பதுங்குகுழியெனக் கருதி ஒளிந்து கொண்டிருக்கிறது. முழுமையாக இல்லை என்றாலும் அதை முழுமை என்றே சொல்லலாம்.. சில தெருக்கள் முழுவதுமாக சீல் செய்யப்பட்டிருக்கின்றன, போக்குவரத்து தொன்னூறு சதவீதம் இல்லை. நமக்குத் தெரிந்தவர்கள், நம் வீட்டினர் என பலியானவர்கள் எண்ணிக்கை அச்சுருத்திக் கொண்டிருக்கிறது.

மொபைல் சார்ஜர்கள் பழுதானாலோ இண்டர்நெட் வேலை செய்யாமலிருந்தாலோ 2000களில் வாழ ஆரம்பித்துவிடுகிறோம், மின்சாரமில்லையெனில் இன்னும் பின்னே சென்றுவிடுகிறோம். ஆண்ட்ராய்டு டேப்ளாய்டு லூடோக்களில் தாயக்கட்டை அல்லது சோழிகள் உருளும் சப்தங்களை ஒருபுறம் அப்கிரேடு செய்ய யாரேனும் ஒரு டெக்கி வேலை செய்து கொண்டிருக்கலாம். ஒரு நாளின் அடர்த்தி கூடியிருக்கிறது சிலருக்கு, பலருக்கு நீண்டிருக்கிறது. காலிங் பெல்லை அழுத்துவது கொரோனாவாக இருக்கலாம் என்கிற அச்சத்திற்கு இடையில் நினைத்துப் பார்க்க என்ன இருக்கிறது. அசட்டு மனம் தானே இது சர்கரை குறைபாடு உள்ளவனின் நினைப்பிலிருக்கும் இனிப்பைப் போல நினைவுகள் இந்த துயரத்திலும் ஆறுதலாகவும் தான் இருக்கிறது. சில நேரம் சீழ் பிடித்து இருக்கும் புண்ணை பிதுக்குவதாகவும் நினைவுகளில் ஒரு அபாயம் இருக்கிறது. நிகழ்காலத்துடன் எதனை ஒப்பிட்டாலும் அது இனிப்பு தான். 

எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. சொல்லாமல் விட்ட காதலை, செலுத்தாமல் விட்ட கடனை, பெறாமல் விட்ட அன்பை, அந்த புளியமரத்து பயத்தை அதற்கு ஒப்பான சாமியாடி மீதான பயத்தை, யாரையோ அடிக்காமல் விட்ட ரௌத்திரத்தை. அந்த ப்ரியமான வெக்கையை, பிசுபிசுத்த பனியை, அழுக்காக்கி மகிழவைத்த மழையை. உயிரை உணர வைத்த முதல் வலியை, முதல் பசியை, முதல் காயத்தை, முதல் தோல்வியை, முதல் துரோகத்தை என எல்லோருக்கும் பொதுவான ஒரு வாழ்க்கை எத்தனை நேர்மையானது. ஏழை பணக்காரன் உள்ளிட்ட வர்க்க, சாதி, மத பேதங்களைக் கடந்தும் ஒரு பொதுவான தனிப்பட்ட வாழ்க்கை ஒவ்வொருத்தருக்குமே உள்ளது. இதில் எந்த அனுபவமும் தனித்த ஒருத்தருக்கேயானது என்று எதுவுமில்லை.

இதை தான் அறிஞர் ஆனந்த கூமாரசாமி “....but every person is a special kind of artist” உணர்ந்திருக்கிறார். நான் இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன் நினைவுக்கு இடம் கொடுக்கும் வாழ்க்கை கிடைக்கப்பெற்ற எல்லோருமே கலைஞன் தான்.. 

வாழ்வில் நல்ல ரசனையோடு செய்யப்படும் எந்த வினையும் அதன் நேர்த்தியில் அல்ல அதன் ஈடுபாட்டிலிருந்தே கலைக்கான புள்ளியும் தொடங்குகிறது. நல்ல ரசித்து ருசித்து வாழ்வதை விட தனியாக கலை ஒன்று என்று இருக்கிறதா என்ன? 

அது தனித்தது
அதனாலேயே

 அது உடனிருக்கும்


ஜீவ கரிகாலன்

வியாழன், 11 ஜூன், 2020

It அது butt ஆனால் (ஸ்வாமிஜி டேல்ஸ் - 02)


ரு அறிமுக எழுத்தாளர் அல்லது நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளரின் சுமாரான புத்தகம் குறித்து பேசுவதற்கு நாஞ்சில் நாடன் அழைக்கப்பட்டிருந்தார் என்றால், அவர் உரையின் இறுதியில் வழக்கமாக ஒரு உதாரணம் இருக்கும். ஒரு மூத்த எழுத்தாளனாக தென்னை மரத்தில் ஏற விரும்பும் எழுத்தாளரின் புட்டத்தில் கை வைத்து மேலேற்றுவதற்கு கொஞ்சம் தள்ளி விடுவோம் அதற்கு மேல் ஏறுவது அவர்களின் சாமார்த்தியம் என்பார். ஆனால் உரையின் போது புட்டம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தமாட்டார். புத்தகத்தில் கோளாறு இருக்கின்றது என்பதை அப்போது புரிந்து கொள்ளலாம். இரண்டு மூன்று முறை நான் இந்த உதாரணத்தைக் கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் அப்படியான நூல் ஒன்றை பொறுப்புடன் நாம் பாராட்ட வேண்டிய சூழல் வந்தபோது நாஞ்சில் நாடனைத் தான் நினைக்க வேண்டும். ஆனால் எனக்கோ சாமியின் நினைவு வந்தது.

2008 என்று நினைக்கிறேன். சந்தான சாமி அவன். சாட்சாத் தூத்துக்குடியான் என்றாலும் ஏலே என்று சொல்வதைத் தவிர அவனது ஊர் வழக்கு எதுவென்று கண்டு கொள்ள முடியாது. அதற்கு இரண்டு காரணம்.

1. தொழபுழ தொழபுழா என்று வேகவேகமாகப் பேசுவதும்

2. பேச ஆரம்பித்தால் நிற்காமல் இருப்பதும்

3. இல்லை அப்படியெல்லாம் இரண்டோடு நின்று போகாது... இது எல்லாவற்றையும் விட முக்கியக் காரணம். டவுன் பஸ்ஸில் போகும் போது ஊரில் குழாய் கத்தும் சப்தத்திற்கு இணையாக கொரியன் மொபைலில் ஒலிக்கும் wwe ஹார்ட் ராக் ரிங்டோனைப் போன்ற 119 டெசிபல் வரை கத்திப் பேசும் திறமை உள்ளவன்.

நான்கு, ஐந்து என்கிற காரணம் என்கிற காரணமிருந்தாலும் அது தனி எபிஸோட் எழுத முடிந்தால் எழுதிக்கொள்ளலாம். நாம் பேசப்போவது அதைப்பற்றியல்ல. மீண்டும் நாஞ்சிலார் ஞாபகம் வந்தது,  ஒருமுறை என்னிடம் அந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கத்தில் ஒரு 12 முதல் 15 % பகுதிகளை துண்டாக வெட்டியிருந்தால் ஒரு அருமையான நாவலாக அது தொடர்ந்து பேசப்பட்டிருக்கும் என்று சொன்னார், வேறு சில சந்தர்பங்களிலும் அதையே சொன்னார். ஆகவே விசயத்திற்கு வருகிறேன்.

சென்னை மீனம்பாக்கத்தை ஒட்டியிருக்கும் பகுதி ஸ்லம் என்றும் ஆக்கிரமிப்பு பகுதியென்றும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பல தசாப்தங்களாக தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கு இருக்கும் ஓட்டு வங்கியைக் காரணம்காட்டி விமான நிலையம் விரிவாக்கத்தின் போது கூட ஒரு அங்குலமளவும் அப்புறப்படுத்த முடியாமல் குடியிருப்பாகவே இருந்து வருகிறது.

அவர்களின் பிரதான வருமானம் விமானநிலையத்தை ஒட்டியே இருந்து வருகிறது. 90% வீடுகளும் தங்களது மேல்தள அல்லது கீழ்தள அல்லது முழுமையாகவோ கார்கோ நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். உலகில் உள்ள பல நாடுகளில் தன் கிளைகளை வைத்திருக்கும் நிறுவனம் கூட அப்படி ஒரு சந்தடியான சந்துக்குள் தனது கிளையை வைத்திருக்கும். ஏனெனில் அங்கு நடைபெறும் வர்த்தகம் எல்லாமே குறித்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதாலும் அவையெல்லாம் அக்குடியிருப்பில் இருந்து பன்னாட்டு சரக்ககம் நடை தூரத்தில் தான் என்பதாலும் தான். அதுபோக அங்கிருக்கும் பலரும் அந்நிறுவனங்களில் ஓட்டுனராகவோ, சுமை தூக்குபவர்கள் அல்லது உதவியாளராகவோ பெரும்பாலும் இருப்பார்கள்.

நானும் அவ்வாறான நிறுவனத்தில் தான் வேலைக்குச் சேர்ந்தேன். பழவந்தாங்கலில் தங்கும் அறையும் மீனம்பாக்கத்தில் வேலை செய்யும் நிறுவனமும்.

“நீ தான் புதுசா வந்துருக்கற மேனேஜரா” என்றான் அருண். ஆள் மட்டும் சிவப்பாக இருந்தால், நீ தான் ஜாக்ஸன் துரையா என்று பதிலுக்கு கேட்டிருப்பேன். என்ன ஆணவம் அவன் கேள்வியில்?

ஆனால் அது தான் என் மீதான அவன் அன்பு காட்டும் விதம் என்பதையும் விரைவில் புரிந்துகொண்டேன். வயது 20ஐ கடந்திருக்கும் அவ்வளவு தான். எப்போது படிப்பை நிறுத்தினாய் என்று கேட்டால் ஏழாவதிலோ ஒன்பதாவதிலோ என்று பதில் வரும். அப்பா இல்லை. ஒரு வீடு மட்டும் தான், வீடு என்கிற பெயரிலான ஒரு நான்கு தடுப்பும் ஒரு கூரையும். ஆனால் ஆள் - படு சமர்த்தன். வேலை அத்தனையும் படு வேகம்.

அவன் எங்களைப் போன்ற நான்கைந்து அலுவலகத்திற்கு ஏற்றுமதிக்கான பெட்டிகள் வந்தால் ஏற்ற இறக்க மட்டும் வந்து போவான். வண்டி தெருவிற்குள் நுழையும்போதே அவனைப் போன்ற லோடர்கள் எந்த நிறுவனம் என்று கேட்டுவிடுவார்கள். சாலையில் இருக்கும் டூவிலர் எருமைகளையும், நிஜ எருமைகளையும் ஒருங்கே ஓரங்கட்டி சின்ன யானையை அல்லது 407ஐ அலுவலக வாசலில் நிப்பாட்டுவதற்குள். ட்ரைவரையோ, எருமையையோ அல்லது வேறு யாராவது கடந்து செல்பவர்களையோ ’**தா‘ போன்ற உயர்தர வடிகட்டப்பட்ட வார்த்தைகளால் அலங்கரித்துவிடுவான்.

சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் தான். சந்தான சாமிக்கு ஏற்போர்ட் உள்ளே செல்வதற்கு லைசன்ஸ் இருந்தது. அந்த நான்கு பேர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பாஸ் கிடைக்கும் இரண்டாவது ஆள் அவன். நமக்கோ டாக்குமெண்டேஷன் தான் பணி. எப்போதும் மரியாதையாக நடந்து கொள்ளும் அருண், அன்று அலுவகம் வந்துகொண்டிருந்த என்னிடம்,

“த்தா பொழைக்க தெரியாத ஆளா இருக்கியே சார்”

“ஏண்டா என்னாச்சு”

“மேனேஜர் சாமி இருக்கான்ல”

அவன் எல்லாரையும் மானேஜர் என்று தான் அழைப்பான் போல. “ஆமா அவனுக்கு என்னப்பா?”

“உனக்கு எதுவும் தெர்யாதா. அவன் ஸூபர்வைஸர் ஆகிட்டான்பா”

“என்னது”

“போ.. போ பாக்கும்போது நீ தான் நெறய பட்ச்சவனாட்டம் இருந்த. பொழைக்க தெர்யாத ஆளா இருக்கியே.. இப்படியே மானேஜரா இருந்துக்கோ”

அவன் ஏன் தான் எனக்காக இத்தனை தூரம் வருத்தப்பட்டானோ தெரியாது.  சரக்குகளை சுங்க அதிகாரிகளின் ஒப்புதல் வாங்க உள்ளே செல்வதற்கு தேவை தான் அந்த நுழைவுச் சீட்டு, அவர்களை பொதுவாக ஸூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வார்கள் அவனைப் பொறுத்தவரை அபப்டியான ப்ரொமோஷன் எனக்கு இல்லாமல் போனதற்கு மிகவும் வருந்தியதாகப் புரிந்தது. அதிகப் பழக்கமில்லையென்றாலும் அவனை நான் டா போட்டு அழைத்தது கிடையாது, கரூரிலிருந்து வந்தவன் என்பதால் பொதுவாக மரியாதையுடன் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். யாராக இருந்தாலும் இந்த மரியாதை மிக முக்கியம் தான் இல்லாவிட்டால், அவன் சாமியை அன்று அடிக்கும் அளவிற்கு போயிருக்க மாட்டான்.

அவன் அடிக்கும் அளவு உச்சத்திற்கு போனதும், நான் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சரியான நேரம் என்பதால் சாமியை நான் காப்பாற்றிவிட்டேன்.

“சார் நீ வந்ததால தான் அந்தாள வுட்டுட்டு போறேன், இல்லன்னா”

“இல்லன்னா என்னலே, பண்ணுவ” நம்மாளும் தூத்துக்குடி அல்லவா?

“த்தா.... உன்னை... சாவட்ச்சிருவேன்”

யப்பா சாமி கொஞ்சம் உள்ளற போங்க.. கதவை சாத்துங்க ராபின் சார் என்று இருவரையும் தனியாகப் பிரித்தோம்.

“இப்ப என்னதாம்ப்பா உன் பிரச்சன”

“சார் அசிங்கமா பேஸறான் சார் அந்த ஆளு, சொல்லி வைங்க ஏரியாண்ட வரமுடியாம பண்ணிடுவேன்”

 “நான் என்னலே உன்னைய தப்பா பேசுனேன்” கதவை திறந்து ஆத்திரத்தோடு சாமியும் வந்துவிட, நானும் ராபினும் அவர்களிருவரையும் பிரித்து வைத்தோம்.

 “யப்பா அருண்.. சாமி என்ன தப்பா பேசினார்னு சொல்லு தப்பா இருந்தா மன்னிப்பு கேட்க சொல்றேன்”

“அப்படிலாம் இவண்ட்ட கேட்டுட்டு என்னால வேலை பார்க்க முடியாது, உங்களால முடிஞ்சத பார்த்துக்கங்க”

“பார்த்திங்களா சார் அந்த ஆளை..  காலைல பொட்டி வந்துச்சேன்னு ஒன்னொன்னா இறக்கி வச்சேன்..”

“நான் என்னலே பண்ணேன்”

“யோவ் பேசாம வெய்ட் பண்ணுங்க... நீ சொல்லு அருண்”

“என்னைய பார்த்து குண்டி தெரியுதுடா அருண்ணு கத்தி பேசுறான் சார் இந்த ஆளு”

“குண்டினா கெட்டவார்த்தையாலே.. சாரத்தை மேல ஏத்திவிட்டு வேலைபாருன்னு தான சொல்லவந்தேன்”

“சாரம்னு சொன்னா அவனுக்கு என்ன தெரியும், தப்பா புரிஞ்சிருப்பான்ல. 

யப்பா அருணு சாரம்னா நீ உடுத்திருக்கிற லுங்கி தாம்பா ”

“அத விடு சார்.. அவன் என்னைய பார்த்து எப்படி சார் குண்டி தெரிதுன்னு கத்தலாம்”

வேறுவழி தெரியவில்லை, சாமி மன்னிப்பு தான் கேட்க வேண்டும். சாமியும் அப்படி இறங்கிப் போகுற ஆள் இல்லை. வீணான பிரச்சனை அதுவும் ஒரு ஏப்ரல் மாதத்தில், மே மாதம் வந்தால் இன்க்ரீமெண்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாமி மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு என்பது துளியும் இல்லாத போது அருணை சமாதானப்படுத்தவே முயன்றேன்.

“தம்பி தூத்துக்குடி சின்ன ஊருப்பா, நீயெல்லாம் சிட்டில வாழ்றவன் பாரு பின்னாடியே ஏர்போர்ட். நாளைக்கு நீ அங்க கூட லோட்மேனா போகலாம். தூத்துக்குடில இருக்கற ஆளு அவன். சின்ன ஊருப்பா அது.. இதெல்லாம் கொஞ்ச கொஞ்சமா கத்துக்குவாரு. இனிமே அவர் இப்படி சொல்லாம நான் பார்த்துக்கிறேன். நீ இப்ப சமாதனமா போயிரு எனக்காக”

அவனுக்கு அந்த சமாதானம் ஏதோ போதுமானதா இருந்தது. “சரி சார் சொல்லி வையி, உனக்காக தான் அந்த ஆள வுடுறேன்”

கீழே இறங்கிக் கொண்டிருந்த அவனை நிறுத்தி இன்னொன்றையும் கேட்டேன்.

“சரிப்பா எனக்கு ஒரு சந்தேகம். கீழ குனிஞ்சி பெட்டி அடுக்கிட்டு இருக்கற, ட்ரெஸ்ஸ மேல இழுத்துக் கட்டுன்னு வேற எப்படி உனக்கு புரிய வைக்கிறது”

“சூ_து தெரியுதுன்னு சொன்னா இன்னாவாம் சார்.”

சாமியின் முகம் வெளுத்துவிட்டது. நான் தனியாக அறைக்குச் சென்று சுவற்றில் முட்டிக்கொண்டேன். அவர்கள் மூர்கத்தை வைத்துப் பார்த்திருக்கையில் சற்று தாமதித்திருந்தாலும் பெரிய கலவரமாக மாறியிருக்கும். அடுத்த நாள் அலுவலகம் வரும்வழியில் இடைமறித்த அருண்.

“அந்த ஆளு சாரி கேட்டான் சார். நமக்கும் மட்டும் அந்த ஆளு மேல என்ன காண்டு இருக்கப்போவுது. நீ மட்டும் சூப்பர்வைஸரா ஆயிருந்தா இந்த பிரச்சனை வந்துருக்குமா”

***

நாஞ்சிலார் அவ்வாறான வாழ்த்துரை வழங்கும்போது நான் வேண்டிக்கொள்வது எல்லாம் ஒருநாளும் அருண் ஒரு கவிதைத் தொகுப்போ, சிறுகதைத் தொகுப்போ எழுதிவிடக் கூடாது என்று தான்.


 


 


 

செவ்வாய், 5 மே, 2020

ஸ்வாமிஜி டேல்ஸ் # 01



ங்களுக்கு லொம்பார்ட் லூர்துசாமியை தெரியுமா? அதென்ன லொம்பார்ட் என்கிறீர்களா. இந்தியாவில் +2 பாஸானால் போதும் எக்ஸிகியூட்டிவ் ஆகிவிடலாம் என்றொரு காலம் இருந்தது அல்லவா. அவன் இன்றைக்கும் என் நினைவில் படிந்திருக்கும் அந்நாள் மனிதர்களின் ஒரு சித்திரம்.  டை, ஷூ, செல்ஃபோன், விசிட்டிங் கார்ட், சிகரெட் நாற்றம், அல்சர் வயிறு, பாக்கெட்டில் ரெண்டு மூணு செண்டர் ஃப்ரஷ் சகிதம் எல்லோருக்கும் நண்பனாக  வாழ்வில் ஏதோ ஒருமுறை ஆபத்தில் உதவுவதற்காக தவணை முறையில் நமக்கு நாமே சூடு போட வைக்கின்ற தனியார் வங்கியின் ஆரம்பகால அமோக விளைச்சலும் அறுவடையும் நம்ம லூர்துசாமி போன்ற எக்ஸிகியூட்டிவால் தான் அன்று நடந்தேறியது.  

அவன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் ?  ஒரு மேலாளராகவா, இன்னும் எக்ஸிகியூட்டிவாகவோ, இல்லை அரசு வேலை (அ) வங்கியில் வேலை கிடைத்திருக்குமா, இல்லை சொந்த தொழில் ஆரம்பித்து இருப்பானோ அல்லது அதுவும் நின்று போய் ஏதோ ஒரு தொழில் நகரத்தின் நிறுவனங்களில் அண்டியிருப்பானா? கவிஞனாகவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த ஒல்லியான, உயரமுமற்ற நாலு முழ வேட்டிக்காரன். கொஞ்சம் புது நிறமாக கன்னத்தில் குழி விழும் முகத்தோடு இருந்தாலும் பெண்கள் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை. அவனுக்கு கீழே வேலைப் பார்க்கும் யாராவது இதயம் முரளியாக இருந்தார்கள் என்றால் தாவித் தாவி அடிப்பான்.  ‘சம்பாதிக்கற வயசுல்ல அதான்....’ அவனைப் பொறுத்தவரை அவனுக்கு பிராஞ்ச் மேனேஜர் தான் உச்சபச்ச அதிகாரம். போலீஸிடம் கூட அதைதான் சொல்வான். ”எங்க மேனேஜர் யாருன்னு தெரியும்ல - அவரு ரைட்டர் ராஜேஷ்குமார் பையன்’. இந்தக் காரணத்திற்கெல்லாம் போலீஸ் அவனை மேற்கொண்டு போக அனுமதி கொடுத்ததும் மாயம் தான். இப்படியான மாயம் தான் அவன் கஸ்டமர்களை உருவாக்குவதும். மாவுமில் வைத்திருக்கும் அண்ணாச்சி எடுத்த நான்காவது நாளிலேயே ஹோண்டா பேஷன் டூவிலரை விற்றுவிட்டார், வந்த விலைக்கே. அவருக்கு எப்பவும் - ஹெவி ட்யூட்டி டி.வி.எஸ் 50 தான்.

சாதாரணமாக ரெண்டு சீலிங் ஃபேன், மூனு டேபிள் 12 பிளாஸ்டிக் ஸ்டூல் சகிதம் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் ஒரு செந்தில் மெஸ்ஸில், இந்த லொம்பார்ட் லூர்து வாங்கிக் கொடுத்த ஒரு பெர்சனல் லோன் தான் பக்கத்திலுருக்கும் வெற்றிலை சீவல் கடையை ஆக்கிரமிப்பு செய்ய செந்தில் மெஸ் ஓனரை தூண்டிவிடச் செய்யும் வஸ்து. கூடுதலாக இரண்டு புதிய டேபிள்கள், மொத்தம் ஆறு வால் ஹாங்கிங் பேன், சுவரெல்லாம் வால் பேப்பர், புதிதாக செவ்வக வடிவ பாய்லர் அளவில் சிறிய கண்ணாடி கிளாஸ், பெப்ஸிக்கு ஒரு குளிர்சாதனப்பெட்டியும் (அதில் அடுத்த நாள் வரை ஆக வேண்டிய சட்னியும் இருக்கும்), அண்ணாச்சிக்கு ஹேர் ஸ்டைலும், வெள்ளை சட்டையும் கூட மாறியிருக்கும். வெற்றிலைக் கடை வைச்சிருந்த அம்மா, கிச்சனில் மாஸ்டருக்கு உதவியாக மாறியிருப்பார். அண்ணாச்சி ரிலையன்ஸ் பவர் ஐ.பி.ஓ வந்த புதிதில் டீமேட் அக்கவுண்ட் பண்ணியிருப்பார். ஆறு மாதத்திற்குள் பெருங்கடனும் வாங்கியிருப்பார். லொம்பார்ட் லூர்து அப்போதும் ம்யூச்சுவல் ஃபண்டுகளை வாங்க அவரை கன்வின்ஸ் செய்திருப்பான். 

இன்ஃபேக்ட் லூர்து பெயரைச் சொல்லி சாப்பிடும்போது, ஓட்டல் அண்ணாச்சியே நன்கு கவனித்திருக்கலாம். அண்ணாச்சிக்கு இரத்தத்தில் சர்க்கரை வந்தது கூட இயற்கையே, அவர் அரசாங்க மருத்துவமனையிலோ அல்லது அவர் கடைக்கு வரும் யாரோ ஒருத்தரின் உறவினர் வைத்திருக்கும் நல்ல தனியார் மருத்துவமனையிலோ அவர் சேர்ந்து சிகிச்சை பெற்றிருக்கலாம். லூர்து தான் அவருக்கு ஹெல்த் பாலிஸி எடுத்திருந்தாரே.. அப்போதெல்லாம் தர்ம ஆஸ்பத்திரி என்றே அரசு மருத்துவமனைகளை சொல்லி வந்தார்கள், அந்த காலத்தில் நடக்கும் அறுவை சிகிச்சைக்கு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியிலிருந்து அரசு மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு பணம் போகாது. அரசே பார்த்துக்கொள்ளும். ஆனால் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் க்ளைமுக்காக மாநகரகத்திலிருந்து தன் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்த மருத்துவமனையில் சேர்ந்திருக்க வேண்டாம்.

அண்ணாச்சியின் கால் எடுக்கப்பட்டதற்கும், கடன் சுமை தாங்க முடியாமல் மூடப்பட்ட கடையின் வாசலில் கூடையில் செல்போன் விற்கும் வெற்றிலைக்காரி அம்மாவுக்கும் லொம்பார்ட் லூர்துக்கும் சம்பந்தமில்லை. ஏனென்றால் லொம்பார்ட் லூர்துக்கும், கே.வி.கமாத்-ஐ தெரியாது, அவருக்கும் லூர்துசாமியை தெரியாது.

நான் மட்டுமே அவனை தேடிக் கொண்டிருக்கிறேன்.


வெள்ளி, 17 ஏப்ரல், 2020

ஜான்சி மேடம்

நாகலாபுரத்திலிருந்து, கரூர் வந்தவுடன். அருகிலிருக்கின்ற ஒரு பள்ளிக்கூடம் என்கிற வகையில் பெரிய சந்தோசம். லஞ்சிற்கு வீட்டிற்கு வந்துவிடலாம். அது ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியின் கிளை வெள்ளியனையில் இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே.

நானும் தம்பியும் பள்ளியில் சேர்ந்தோம்.

பெரிய மிஸ், பெரிய மாஸ்டர் தெரியுமா என்று பூதாகரமான விசயத்தைப் பற்றி முதலில் எனக்கு விளக்கியவன் செல்வராஜ், முஷ்டகிணத்துப்பட்டி என நினைக்கிறேன். இரண்டு பேரும் பெரிய ஸ்கூல்ல இருந்து பைக்லயே வருவாங்க, எல்லாத்தையும் கேள்வி கேட்டு அடிச்சு தொம்சம் பண்ணிடுவாங்க என்றான்.

நான்லாம் டவுசர்லயே போயிடுவேன். அப்பதான் விடுவாங்க. உனக்கும் தப்பிக்கனுனா மொதல்ல அடிக்கும் போதே போயிடு என்றான்.

முதன்முதலில் அவர்களைப் பார்க்கும் போதே, எனக்கும் வந்துவிடும் என உறுதியாகத் தெரிந்தது. எதற்கும் டவுசர் நனையாமல் போயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு ரெண்டு டம்ளர் தண்ணிக் குடிச்சு வைச்சேன்.

பெரிய மிஸ்ஸுக்கே இவ்ளோ பயம்னா, மாஸ்டருக்கு. மாஸ்டர் பற்றி இன்னொரு நாள் பேசுறேன். மிஸ் வந்ததுமே செல்வராஜ் தன் காதுகளைப் பரிசளித்தான். அந்த கிராமத்துல் ஐம்பது ரூபாய், அறுபது ரூபாய் ஃபீஸ் தான் கட்டணம், பெரிதாக நிர்பந்தம் இருக்காது. மூணு மாசம் வரை நிலுவையில் உள்ள கேஸ் ஒரு பாடு இருக்கும்.

தெற்கு மாவட்டங்களில் நாடார் சமுதாயம் ஒரு கூட்டு முதலைப் போட்டோ அல்லது தனி ஆளாகவோ ஒரு பாடசாலையை ஒவ்வொரு ஊருக்கும் திறந்து வைத்திருந்தார்கள், அந்த எண்ணிக்கை 60-70களிலேயே கணிசமாக இருந்தது. அதற்கு முன்னர் கிருஸ்தவ பள்ளிகள் தான், சில விவேகனந்தா, ராமகிருஷ்ண மடங்களும் இருந்தன என்று சொல்லாவிட்டால் Pseudo Secular ஆகிவிடுவேன். ஆனால் அந்த ஊரில் அப்படியான பெரும்பான்மைச் சமூகம் கல்வியின் முக்கியத்துவத்தை (பிற்பாடு - அதுவே கோழிப்பண்ணை, ஈமூ பண்ணை வளர்ப்பது போன்ற தொழிலாக மாறி, சாதி வளர்ப்பிலும் பங்காற்றி வருவது தனிக்கதை) உணர்வதற்கு முன்பாகவே தன் ஊருக்காக ஒரு ஆங்கிலப்பள்ளியை கொண்டு வந்திருந்தார் ஆறுமகம் மாஸ்டர். அதற்கு ஒரே காரணம் எங்கள் ஜான்சி மிஸ் தான்.

எத்தனை நினைவுகள் ??

என் அருகே வரும்போது ஒர் க்யூட்டிகுரா வாசம் இருந்தது. ராஜபாளையம் செம்மண்ணும் கரிசல் மண்ணும் இருக்கற இடம்தான். எங்க மிஸ் கரிசல் மண். எதற்கும் தயாராக ஆயுதங்களை விரைப்பாகவே வைத்திருந்தேன் அன்றிலிருந்து ஒரு அடி வாங்குவதற்கு நான்கு வருடங்கள் ஆகியிருந்தது. அவுங்களோட பெட் மாதிரி தான் இருந்தேன். திருச்சிக்கு ஒரு க்விஸ் காம்பிடிஷன்க்கு அழைச்சிட்டுப் போனாங்க, மடியில் தான் உறங்கினேன். முதன் முதலில் சில்லி பரோட்டா வாங்கிக் கொடுத்தாங்க.

ஆறாம் வகுப்பிற்கு விவேகானந்தா பள்ளிக்கு மாற்றம் கேட்கும்போது அனுப்பமாட்டேன் காளிதாஸ் என் பையன் என்று சொன்னாங்க.
ஆறாம் வகுப்பில் முதல் மிட்டெர்மிலேயே பயாலஜியில் ஃபெயில் (மிஸ்ஸோட சப்ஜெக்ட்), கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆகுதுன்னு ஒரு அடி. முதல் அடி. அதற்கப்புறம் நிறைய அடி. மிஸ்ஸோட பையன் ஷாம். ரெண்டு பேரும் சேர்ந்தே அடி வாங்கியிருக்கிறோம். என்னா அடி. அப்படி வகை தொகையில்லாம அடி வாங்கினாலும், பாட்டு பாடுறது, நடனம் ஆடுறது, நாடகம் போடுறதுன்னு ஒவ்வொரு மாசமுமே ஏதாவது ஒரு போட்டியில் கலந்துக்கிட்டே இருப்பேன்.

அப்படியே வண்டி ஓடிடுச்சு, எட்டாம் வகுப்பு முடிக்கும்போது அம்மா அப்பாக்கு வேலை போனது. கவர்மெண்ட் ஸ்கூலுக்குப் போகலாம் என்று டீசீ கேட்க எங்க அம்மா போனபோது, தரவே மாட்டேன் ஃபீஸே நாங்க இனி கேட்கலை, ரெண்டு பேரும் படிக்கட்டும். நீங்களும் ஸ்கூல்ல ஆஃபிஸ் ட்யூட்டி பாருங்க என்று சொன்னார்கள்.

நானும் தம்பியும் தான் ஒரு வரட்டு கவுரவத்தில் (வேற என்ன சொல்றது, நம்ம டிசைன்னு சொல்லிக்கலாமா) டீஸியை வாங்கிக் கொண்டு அரசுப்பள்ளியில் சேர்ந்தோம். அப்படி இப்படின்னு வாழ்க்கை கீழ்யே தள்ளிக்கொண்டு போக 414 மார்க்கை வாங்கிட்டு, மிஸ்கிட்ட போய் காண்பித்தேன். தன் மகனாக நெற்றியில் ஒன்று கொடுத்து ப்ளெஸ் பண்ணாங்க, சென்னையில் கம்பெனி செகரட்ரிஷிப் இண்டெரில் ஒரு  க்ரூப் க்ளியர் பண்ண சேதி கூட வூட்டுக்குத் தெரியாது. நம்ம ஏரியா இது இல்லைன்னு தோணுது.

எழுத்தா சோறு போடும்னு எத்தனை பேரு கேட்ருந்தாலும், என்னை நானே ஒரு முறை கூட அப்படிக் கேட்டதில்லை. இங்கன அப்படி இப்படி எழுதிக்கிட்டு இருக்கற நான் ஜீவிக்கறது கொஞ்சம் நஞ்சம் நான் எழுதுனதால தான். அதற்கு மாஸ்டருக்கும், ஜான்சி மேடத்துக்கும் நான் எப்பவும் கடன் பட்டிருக்கிறேன்.
சாதிய கட்டுமானத்தில் அல்லது கல்வியை 100% வணிகப்படுத்த இயலாத பள்ளி வரலாற்றில் நிற்காது. மேடமும் ரிடையர்டாகிட்டாங்க. செயல்படாத அந்த பள்ளி வளாகத்தின் மாடியில் தான் இன்னமும் வசிக்கிறார்கள். ஒருநாள் வீட்டிற்கு வெளியே துவைத்துக் கொண்டிருந்தபடி இருந்த அவுங்களைப் பார்க்கையில் மிகவும் பாரமாக இருந்தது. எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது, நாங்கள் வசித்துவந்த வீட்டின் உரிமையாளரின் மகன் எங்க கூட தான் படித்து வந்தான். அவனை அவன் பிறந்த சமூகத்தாரால் அப்போது உருவான பள்ளிக்கு ஒரு ஆண்டு முழுக்க பேருந்து கட்டணம் கிடையாது என்றெல்லாம் சொல்லி அவர்கள் அந்தப் பள்ளியை வளர்த்தெடுத்தார்கள்.
நான் படித்த பள்ளிக்கு எத்தனையோ குற்றச்சாட்டுகள் கூட இருக்கலாம். இன்று அரசியல் வழி சமூகத்தைப் பார்க்கும்போது தான் தெரிகிறது, கல்வியால் மட்டுமே விடிவு என்று சொன்னதை உணர்ந்தவர்கள், செய்து காட்டிய ஒரு முன்மாதிரிப்பள்ளி தான் அது என்று.

பத்தி எழுத்துகளை புத்தகமாகப் போட்டால் நான் அதை மாஸ்டருக்கும் ஜான்சி மேடத்திற்கும் தான் சமர்பிப்பேன்.

பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம்

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

அது ஒரு கனவு மட்டுமே - ஜீவ கரிகாலன்

ஓவியம் : ஜியோகொமோ பாட்ரி
*


ண்களில் எரிச்சல், கடுமையாகச் சிவந்து கண்ணாடியில் பார்ப்பதற்கு ஏலியன் போல மாற்றியிருந்தது. இந்தச் சில வருடங்களில் இன்ஸோம்னியா மிகச் சாதாரணமான நோயாகிவிட்டது. தூக்க மாத்திரைகள் விழுங்கியும் அவை வேலை செய்யாமல் போகவே, இந்த நிலைக்கு ஆளாகிவிட்டேன். என்ன தூங்கத்தானே முடியாமல் போனது? உண்மையில் இது நோயே அல்ல, என் கையில் இருக்கும் செல்ஃபோனைக் கூட எனது நோயாகவோ, பலவீனமாகவோ சொல்லலாம். வறண்டுக்கொண்டிருக்கும் குளத்தின் சேற்றில் மனம் நீச்சலடிக்கின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவரிடம் கேட்டிருந்த அப்பாயின்ட்மெண்ட் இன்றுதான்.

காலைக் கடமைகளை முடித்த வேகத்தில் கிளம்பலானேன். லிஃப்ட் நான்கு நாட்களாக வேலைச் செய்யவில்லை. பதினான்கு மாடியும் கீழே இறங்க வேண்டியிருந்தது.

மாடிப்படிகளிலேயே கியூவில் மனிதர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். பலநாட்கள் லிஃப்டிற்கான கியூவில் இருப்பதற்கு பதிலாக இறங்கிவிடும் பழக்கம் இருப்பதால் இதிலொன்றும் பெரிய சங்கடம் ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து தூங்காமல் இருப்பதால் கால் இடறிக் கீழே விழுந்துவிடக்கூடாது என்கிற பதட்டம் இருக்கிறது.

என்ன ஆகிவிட்டது இந்த நாட்டிற்கு? பத்து நாட்களுக்குள் நாட்டின் நிலைமை இப்படி மாறிவிட்டது? எனக்கு ஞாபகம் இருக்கிறது. எனது பால்ய வயதில் அணுகுண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தது. அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அப்பா வேலைப் பார்த்த பஞ்சாலைப் போல, பல பஞ்சாலைகள் ஏற்றுமதி செய்ய இயலாமல் தங்கள் இயக்கத்தை நிறுத்திக்கொண்டன. எங்கள் அப்பா மேலாளர் என்பதால் அவரை மிரட்டிய அந்த மில்லின் சகத் தொழிலாளர்கள், மில் இழுத்து மூடப்படுவதற்கு முன்புவரையும் அப்பாவோடு அத்தனை இணக்கமாக இருந்து வந்தார்கள். 

அத்தொழிலாளர்களோடு சைக்கிளில் போய் வந்திருக்கிறேன். ஆனால் அவர்கள், என் அப்பாவும் வேலை இழந்திருக்கிறார் என்பதைக் கூட அறியாமல் அவரை மிரட்டினார்கள். இன்னும் அதெல்லாம் ஞாபகமிருக்கிறது.

ஆனால் அவர்களோடு சேர்ந்து பின்னாட்களில் நான் சில அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். எனக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். அந்த மந்த நிலையில், பின்னர் பெரிய அளவில் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு உலகமயமாதலை ஏற்றுக்கொள்ளும்வரை புதிய வேலை வாய்ப்புகள் திண்டாட்டமாக இருந்ததும் என் ஞாபகத்திற்கு வருகிறது. அதே சமயம் அரசின் கொள்கை மாற்றத்தை என் தலைமுறையினர் மிகச் சரியாகப் பயன்படுத்தி அவற்றைக் காண ஆரம்பித்ததும் அடைந்ததும்தான் அசூர வளர்ச்சி எனப்பட்டது. அதுதான் என்னைத் தூங்கவிடாமல் தடுக்கும் காரணமாக மாறியிருக்கிறது.

*
  தினான்கு மாடிகள் கீழிறங்குவதற்குள் தலைச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. முதுமை பற்றிய பயம் வரும் இந்த வயசிலே இவ்வசாதாரணமான சூழலை நான் மீண்டும் காண்கிறேன்.

பையில் வைத்திருக்கின்ற தண்ணீரைக் குடித்துவிட்டால்? இந்த நாள் முழுக்கத் தேவைப்படும். எனவே அடுக்குமாடிக் குடியிறுப்பின் பொது குழாயில் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்றுத் தோன்றியது. லிஃப்டிற்கு பின்பக்கம் சென்றேன். அங்கே தண்ணீருக்காக பெரிய வரிசை நின்றுக்கொண்டிருந்தது. நாடு அசாதாரண சூழ்நிலையில் சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது.

ஏற்கனவே தூங்காத அலுப்பில் உடலின் எடை கூடிய உணர்வு. கண்களைப் போல் கால்களும் வீங்கியிருந்தன. வெட்டாத நகங்கள் ஏனோ கூசிக்கொண்டிருந்தன. மனம் உட்பட, ஏதோ உரசல்களையும் கீறல்களையும் உணர்ந்துகொண்டிருந்தேன்.

நகரத்தின் முக்கியப் புள்ளிகள் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள வீட்டு வசதி வாரியத்திற்கே இப்படி நிலைமை என்றால், நகரின் மையத்தில் இருப்பவர்களுக்கும், அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருக்கக்கூடும் என்று அச்சமூட்டியது.

‘தேசத்தைப் பற்றி அவதியுற இப்போது என்ன அவசரம்?’

அடிக்கடி எனக்குள், அது கேட்கும் கேள்வித்தான். முதலில் நான் உறங்க வேண்டும் உறங்கிய பின்னர்தான் யோசிக்க வேண்டும்.

என்ன யோசிக்க?

நான் யாருக்காக கவலையுறுவது என.

பின்மண்டையில் மட்டுமே இருக்கும் கொஞ்ச முடிகளை வெளியே தெரியுமாறு தொப்பியை சற்று மேலே தூக்கிவிட்டபடி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

*

த்து நாட்களில் எப்படி மாறிவிட்டது இந்த நாடு?

அதிலும் கடந்த நான்கு தினங்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டது. எனது இளமை காலத்தை ஞாபகப்படுத்துகிறது இந்த மனித வரிசை.

இந்நகரத்தில் அரசியல் கூட்டங்களைப் போலவும், பேரிடர் நிவாரணங்கள், புதுப்பட வெளியீடு மற்றும் பண்டிகைக்கு ஊர் திரும்பும் நாட்களில் தான் இப்படிக் கூட்டங்களைப் பார்க்க முடியும். இந்தக் கூட்டங்களை கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக இதுவரை எங்கேயும் கண்டதில்லை. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் சாரைசாரையாக கூச்சலிட்டபடி சென்றுக்கொண்டிருக்கின்றனர். என்னால் மட்டும் எப்படி மக்களுடன் உறவாட முடியவில்லை? ஒவ்வொரு தசாப்தங்களிலும் ஒரு டஜன் உறவுகளை இழந்திருக்கிறேன்.

இப்போது என்னையும் மீறி இழப்பு நேரிட்டிருக்கிறது. அது அநேகமாக என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பாக இருக்கக்கூடும்.

அது அரசாங்கத்தின் தேசியத் தகவலியல் மையத்தின் கட்டடம்.

பெருந்திரளாக ஒரு கூட்டம் கோஷம் போட்டுக்கொண்டிருக்கிறது.  நான் செல்ல வேண்டிய க்ளினிக்கை கடக்க இந்தக் கூட்டத்தை எப்படியாவது கடக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த எகிப்து புரட்சியைப் போன்று இளைஞர்களாய் ஆவேசத்துடன் திரண்டிருந்தார்கள். அது சமூக ஊடகம் வாயிலாகத் துவங்கிய முதல் போராட்டம். போராட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ‘ஆப்களை’ கூட பயன்படுத்த இயலாது. மின்சாரம் இல்லை. இப்போது சமூக ஊடகம் கைவசம் இல்லாமலும் போராட முடியும் என நிரூபித்திருக்கிறார்கள்.

அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அமைதிப்படையோ, துணை ராணுவமோ ஆயுதம் ஏந்தித் தயாராக இருந்தது. தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஒட்டி இப்படியான கொதிநிலை இருந்தது. பின்னர், தைப் புரட்சி நடந்து கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகளாகிவிட்டன. அதற்கப்புறமும் வந்த சில கூட்டங்கள்.

மிகவும் அரிதானக் காட்சியாக ஒருவன் கைகளில் போஸ்டர்கள் கொண்டு வந்து அந்தக் கட்டடத்தின் கம்பிகளில் பசைத் தடவி ஒட்ட ஆரம்பித்தான். பழுப்பு நிறச் சட்டை அணிந்திருந்தான். அதே நிறத்தில் பலரும் சட்டையை அணிந்திருந்தனர். அவர்களை வேடிக்கைப் பார்க்கச் சொல்லியது மனம்.

At last the cloud war proved it We are just stray dogs

FUCK OFF NIC

US kicked Us

Fall of the Nation leads to The Rise of Neo-Communism

WE ARE PURPLE

என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் பதாகைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் தென்பட்டன. நியோ கம்யூனிஸ்ட் என்று சொல்பவர்கள் பர்பிள் நிறத்தில் உடை அணிந்திருந்தனர். உடனேயே எனக்கு கவிஞன் யவனிகாவும் பார்லே அக்ரோவின் கேஃப் க்யூபா விளம்பரமும் மாண்டேஜ்களாக வந்து சென்றது. இப்போதெல்லாம் எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன். முரண்படுகிறேன்.

ஏன்?

எனினும் கூட்டத்தைப் பார்க்கும்பொழுதும் எவ்வளவோ தூரம் இதையெல்லாம் விட்டு ஒதுங்கி வந்தாகிற்று. மீண்டும் திரும்பும் எண்ணம் எங்கோ துளிர்விட்டாலும் அதை விடுக்கவே புத்தி சொல்கிறது. விரைவில் இங்கே ஒரு கலவரம் நடக்கும் அறிகுறி தென்பட்டதால், அவர்களை விட்டு வேகமாகவே கடந்து சென்றேன். தொப்பியை நன்றாகக் கீழே சாய்த்துக்கொண்டு முகத்தை மறைத்தபடி, மக்களுக்கு என்னை யாரென்று தெரியாவிட்டாலும் காவலர்கள் யாரேனும் என்னைத் தெரிந்து வைத்திருந்தால் மீண்டும் பிரச்சனை ஆகிவிடும். ஆகவே தலையைக் கவிழ்ந்தபடியே நகர்ந்துக்கொண்டிருந்தேன்.

*
  காம்ரேட், சகா, தோழர், ஜி, உடன்பிறப்பே, இரத்தத்தின் இரத்தமே, ஆதார் கார்டின் 12 இலக்க UIDயாகவும்எத்தனை பெயர்கள் என் பெயருக்கு பதிலாக என்னை அழைத்திருக்கின்றன. UIDஇன் எண்ணே எனக்குப் பெயராக G 8971 என்கிற கைதி வாழ்க்கையும் அதில் அடக்கம்.

இப்போது எனக்கு என்னப் பெயர் வைக்கப் போகிறது இந்தச் சமூகம்?

வெறும் தூக்கம் தொலைத்தவனா? 

பைத்தியக்காரனா?

இல்லை வேறு ஏதும் நோய்கொண்டவனா?

எப்படி இருந்தாலும் எனது அடுத்தப் பெயர் நோய்மையைச் சுட்டித்தான். சுட்டி அழைத்திட யார் இருக்கிறார்கள்? இருந்தவர்கள் இல்லாமல் போய் பத்து நாட்களாகிவிட்டது.

க்ளினிக் இருந்த டாக்டர்ஸ் ப்ளாசாவிற்கு செல்ல பதிமூன்று மாடிகள்.

இங்கேயும் லிஃப்ட் வேலை செய்யாது. பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருக்கும் இந்தக் கட்டடத்திற்கே மின்சார வசதி இல்லாமல் போனது ஆச்சரியமே. அரசாங்கம் மிகக் கடுமையாக மின்சாரத்தைச் சிக்கனம் பண்ணுகிறது. நகரத்தின் மொத்தக் குடிநீர் விநியோகத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள், மொத்தம் கையிறுப்பில் உள்ள சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு விநியோகிக்கின்றன. அரசின் அத்தனைப் பணிகளும் முறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கையில் இருக்கின்றன.

அக்கட்டடத்தின் வளைந்து நெளிந்து செல்லும் மாடிப்படிக்கட்டுகளை அண்ணாந்து பார்க்கையில், அது ஒரு கண்ணாடி பதித்த டூமை தேடிச் செல்லும் கைசுற்று முறுக்கு போன்ற வடிவத்தில் இருந்தது. கீழிருந்து மேலே தெரியும் டூமின் ஏதோ ஒரு கரும்புள்ளியாய் தெரிந்தேன். பன்னிரெண்டாம் மாடியில் ஒரு பெண்மணி ஏறிக்கொண்டிருந்தாள். அவள்தான் டாக்டராக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

பதிமூன்று மாடிகள் ஏறுவதற்குள், தன் வாழ்நாளில் மேலும் ஒரு தசாப்தத்தைக் குறைத்த சலிப்பு அப்பிக்கொண்டது. தண்ணீர் பாட்டிலில் இருந்து கொஞ்சம் வாய் நனைத்துக்கொண்டு  ஒரு சப்ளிமெண்ட் மாத்திரையை எடுத்துக்கொண்டேன். எல்லாமுமே தன்னிடம் இருந்து வெகு வேகமாகக் குறைந்து வருகிறது என்கிற அச்சம் வேறு. யாரிடமாவது தண்ணீர் இரவல் கேட்டால் கூட கொலை செய்யத்தூண்டுவது போல பார்க்க ஆரம்பித்துவிட்ட உலகு இது.

நாற்பத்தைந்திற்கும் மேலாகிவிட்ட உடல், இன்னும் ரெண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் எப்படி இருக்கும் என்று இப்போதே உணர முடிகிறது. இன்னும் இரண்டுமுறை வரச்சொல்லி வீட்டிற்கும் க்ளினிக்கிற்கும் வந்தால் எனக்கு வயது அறுபதைத் தாண்டிவிடும். மூச்சிரைத்தபடியே, க்ளினிக் வரவேற்பில் எனது டோக்கனை (மீண்டும் டோக்கன் சிஸ்டம்) காண்பிக்க, நான் உள்ளே அனுப்பப்பட்டேன்.

அந்தப் பெண் மனநல மருத்துவர் என் வணக்கத்திற்கு பதில் சொல்லவில்லை. மாடிப்படிகள் ஏறி வந்ததால் மார்பு சற்று மேலும் கீழுமாக ஏறி இறங்கியது. ஏனோ கண்களை மேலே எடுக்கவேண்டும் என்று புத்தி உரைத்தாலும், அவளது பெரிய மார்புகள் ஏறி இறங்குவது விளையாட்டாக இருந்தது. மறுகணமே அவமானமாகவும் இருந்தது.

இவளை எங்கோ நான் பார்த்திருக்கிறேன். பார்த்த முகமாகத்தான் இருக்கிறது. இருந்தால் மட்டும் என்ன, இப்போதைக்கு நம் பிரச்சனை தான் முக்கியம்.

என் பார்வையை நேராக்க, எனது குறிப்பும் சிவந்திருந்த கண்களும் அவள் பேச்சைத் தொடங்குவதற்குப் போதுமானதாய் இருந்தது.

எத்தனை நாளா தூங்கல மிஸ்டர்?”

அவளைப் பார்க்கவில்லை. பார்த்தால் அவள் யாரென்று யோசிக்கத் தூண்டும், இல்லையென்றால் தூண்டும். தூண்டிவிடக் கூடாது ஆகவே நான்கு விரலை நீட்டினேன்.

என்ன பிரச்சனை? ஏன் தூங்க முடியல?

எனக்குத் திக்குவாய் உண்டு என்பதை இந்நேரம் புரிந்திருப்பாள்.

“ஒரு டேபிளும் ஒரு சேரும் தான் காரணம்”

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக என்னைச் சோதித்துக்கொண்டிருந்தாள். மூன்றாவது முறையாக எனது பிரச்சனையை நேர்க்கோட்டில் சொல்லச் சொன்னாள். விவரித்தேன்.

ஆனால் அவள் என் நோயைத் தீர்ப்பதைக் காட்டிலும், என் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதில்தான் ஆர்வமாக இருந்தாள். எனது சிறை அனுபவங்களைச் சொல்வதும், குடும்பத்திலிருந்து தனித்துவிடப்பட்ட கதையையும் சொல்வது எனக்கிருக்கும் நோயைச் சொல்வதைக் காட்டிலும் கொடூரமானது. எல்லாவற்றையுமே ஆர்வமாகக் கேட்டுக்கொண்டாள். அவள் எனக்கு மருந்தாக எழுதிக் கொடுத்தது யாவுமே விலை உயர்ந்தவை. ஆனால் எனது அவ்வளவு நேர பொறுமைக்கான பரிசாகவோ கரிசனமாகவோ எழுதித் தருகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும். சப்ளிமெண்டுகளுக்கு பதிலாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமானால் பெரும் பணக்காரனாக இருத்தல் வேண்டும் இல்லாவிட்டால் அரசின் அனுமதி பெற வேண்டும். கடைசியான வாய்ப்பு சீக்காளி ஆக வேண்டும். அதுவும் அவ்வளவு எளிதாக மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள்.

அவள் தாராள மனம் கொண்டவள் என்று சொல்லும்போது மீண்டும் என் பார்வை கழுத்துக்குக் கீழே இறங்கியது.

அடுத்த நாளே இரண்டாவது அமர்வுக்கு வரச் சொல்லியிருக்கிறாள். முதலில் குணமடைவேன் என்பதை விட, நான் உணவு சமைத்து சாப்பிடப் போகிறேன் என்பதுதான் மகிழ்ச்சி. பொதுவாகக் குடும்பஸ்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சமைத்து உண்பதற்கான ரேஷன், அரசிடம் இருந்து கிடைக்கும். ஆனால் என்னைப் போன்ற பிரம்மச்சாரிகளுக்கு சொத்து என்றும் எதுவும் கிடையாது. அதே போல் அவர்கள் வாழ்க்கையில் சமையல் என்றும் எதுவும் கிடையாது. எல்லாமுமே அரசாங்கத்தின் செலவுதான். வார நாட்களில் உணவுக்குப் பதிலாக அரசே தருவிக்கும் சப்ளிமெண்ட் மாத்திரைகளும் விடுமுறையின்போது அரசின் கேண்டீன்களில் பெற்றுக்கொள்ளலாம். சமைப்பதற்கு, நோயாளியாக அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். குறிப்பு மருந்துச்சீட்டுடன் நோயாளியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எப்படியிருந்தாலும் நேரமாகிவிட்டதால், அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும்.

*
நெல்வயல்களுக்கு மத்தியில் தவழ்ந்த என் பால்ய நினைவு, அரிசிக்காக எப்படி ஏங்குகிறது? வேறென்ன செய்ய முடியும் நம்மால்? ஒரேடியாக இந்திய அரசு ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தியையும் ஆப்பிரிக்காவிற்கு மாற்றிவிட்டது.

என் வாழ்க்கையில் பணியைத் தவிர மீதமிருந்த நேரங்களில் அவள் மட்டுமே இருந்தாள். இப்போது அவளைத் தேடாமல் நான் என்ன புலம்பிக்கொண்டிருக்கிறேன்?

‘க்ளவுட் வார்’ என்று பேசிக்கொள்கிறார்கள்.

மூன்றாம் உலக நாடுகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தினை இந்தியா உள்ளிட்ட பிரிக் நாடுகள் வல்லரசுகளை எதிர்த்ததால் இந்த யுத்தம் தொடங்கியிருக்கிறது. பனிப்போரைப் போன்று இது ‘மேகப் போராம்’ ஒரு நண்பர் சொன்னார். க்ளவுட் யுத்தத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பை நினைக்க நினைக்க சிரிப்பு வருகிறது.

இந்திய அரசு, மற்ற ப்ரிக் நாடுகளுடன் இணைந்து போர்க்கால நடவடிக்கையாக, தகவல் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறதாம். இன்றோடு பத்து நாட்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு என எல்லாமும் தொண்ணூறு விழுக்காடு போய்விட்டது. எனது பால்யத்தில் அமெரிக்கா விதித்தப் பொருளாதரத் தடையைவிட மோசமான காலக்கட்டம் இது. எங்கே பார்த்தாலும் அதிநவீனத் துப்பாக்கிகளுடன் காவலர்கள் ரோந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

வல்லரசுகள் எதிர்பார்ப்பெல்லாம், மூன்றாம் உலக நாடுகளின் பிதாமகர்களின் அடிபணிதல் தான். ஆனால் அடிபணிய விரும்பாத நாடுகள் ஒட்டுமொத்தமாக தங்கள் தகவல்களைச் சேமித்து வைத்த நான்கு இலக்க சேட்டிலைட்கள் பத்து நாட்களுக்கு முன்னர் சாம்பலாகிவிட்டன. அது தான் இந்தப் பிரச்சனையின் மூலக் காரணம்.

மீதமிருக்கின்ற செயற்கைக் கோள்களைக் காப்பாற்றவும் மீதமிருக்கின்ற மின்வெளிகளின் தகவல்களுக்கான கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்நாடுகள் வந்துவிட்டன.

DATA- RATIONING என்கிற திட்டத்தை அமுல்படுத்த பதினான்கு நாடுகள் தங்கள் நாட்டின் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பங்களை ஒழுங்குப்படுத்த முடிவு செய்து அதனைச் செயல்படுத்துவதற்கு மட்டும் இத்தனை நாட்கள் ஆகிவிட்டன. அதற்குள் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மூடிவிட்டன. போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் விநியோகம், உணவு, கல்விச்சாலை, மின்சாரம், இணையம் என எல்லாமுமே முடக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலே பண விநியோகம் முழுமையாகக் குறைந்து போனது.

யாரிடமும் கையிறுப்பு இல்லை. சப்ளிமெண்ட்டுகளுக்கு பழகிய மக்கள் ஒருவாறு சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.

*
ன் புத்தகத்தைப் பற்றிய என்னவளது விமர்சனம், என்றாவது ஒருநாள் அவளை விட்டுவிட்டுச் சென்றுவிடுவேன் என்பதுதான். ஆனால் அவளிடம் அதற்கு நான் மறுப்பு சொல்லவில்லை. லட்சியவாதத்திற்கு இரையாகித்தான் என் வாழ்க்கையின் பெரும்பகுதி இழப்பைச் சந்தித்தேன். அவள் ஒரு சேபியோ செக்ஸுவல். என் அறிவையும், வாசிப்பையும் என் தத்துவங்களையுமே அவள் அதிகமாக விரும்பினாள்.  தியரி டியரிஎன்று என்னைக் கொஞ்சுவாள்.

நான் இப்போது பயப்படுவது என்னவென்றால் அவள் என்னை இந்தச் சூழலில் எங்கேயாவது என் பழைய போராட்டக் குழுக்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்துவிடுவேன் என்று நினைத்திருக்கலாம். அதனாலேயே அவள் அடிக்கடி சொல்லி வந்தது போல், நான் எங்காவது சென்றிருப்பேன் என்னைத் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கலாம். அல்லது என்னைத் தேடி என்னைப் போலவே அலைந்து கொண்டிருக்கலாம்.

சே...சே... அவளுக்கு என் நிலை வந்திருக்காது. வந்துவிடவும் கூடாது.

அரசு இயக்கிக்கொண்டிருந்த சப்ளிமெண்டரி உணவு பூத்களும் தேசியத் தகவலியல் மையமும் 24 மணி நேரமும் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது. இதற்கு எதிராக பல நிறுவனங்களின் அதிபர்கள் அரசாங்கங்களை மிரட்டிக்கொண்டு ஒரு புறமும், பலப் புரட்சி இயக்கங்கள் திடீரென முளைத்து அரசாங்கமே நிறுவனங்களை நடத்தச் சொல்லி மறுபுறமும் போராட்டம் செய்து வருகின்றன.

இத்தனை மோசமான சூழலில் எனக்கு இருக்கும் நோயைப் பற்றி வெளியே சொன்னால் யாரும் பரிதாபம்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இப்போது என் நோய்தான் இந்த நாட்டின் நோயாகவும் இருக்கிறது. இங்கே தான் என் நிதானம் தவறிய நிலையில் நான் இருக்கிறேன். என் உடல் என் மனநிலைக்கு எதிராக, ஒத்துழைக்க மறுக்கிறது.

என்னுடைய இணையம் முடக்கப்பட்டதுடன் எனது மின்னஞ்சல் சேவை, கைப்பேசி இணையச் சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒருமுறை பத்தாண்டுகளுக்கு முன்பு ஜீமெயில் வேறு ஒரு நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டபோது அனைத்து மெயில் கணக்குகளும் கட்டணம் கேட்டு தங்கள் சேவையை நிறுத்திக்கொண்ட ஞாபகம் வந்து போனது. அதற்குப் பின்னர் வேறு சில நிறுவனங்கள் போட்டிக்கு வந்தும், மக்கள் தங்கள் உடலோடு பொருத்தியிருந்த சிம்லெஸ் காகிள்களை விட்டுவிட்டு மீண்டும் மொபைல் சேவைக்குத் திரும்பியிருந்தனர். இந்த நிலை குறித்த அச்சம் முன்னரே எனக்கு வந்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் வந்துவிடும் என எதிர்பார்க்கவில்லை. வந்துவிட்டது.

அப்போதிருந்தே நம் வீட்டு வாடகை போல், வருமான வரிபோல், இமெயில்களுக்கும், தகவல்களைச் சேமிப்பதற்கும் இடப் பற்றாக்குறை அதிகமாக ஆரம்பித்தது அல்லது சூதாடப்பட்டது.

திடீரென்று ஸ்மார்ட் ஃபோன் இப்போது வெறும் ஃபோனாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போன்று மாறிவிட்டது.

அடுத்த நாளிலிருந்து நான்கு மணிநேர சேவையாக, நிறுத்தப்பட்ட எல்லாச் சேவைகளும் தொடங்கப்படலாம் என்கிற செய்தி ஆறுதலானது தான். படிப்படியாக நேரம் அதிகரிக்கலாம் என்றும் செய்தி பரவியது. எந்தத் தகவல் தொடர்பு சாதனமும் இல்லாமல் எப்படி இந்தச் செய்தி பரவியது என்றுதான் ஆச்சரியம். என்னைவிட பதினைந்து வயதாவது குறைந்த அந்த மருத்துவர் என்னைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருந்ததைப் போன்றே.

நிறைய டெலிவிஷன் சேனல்கள், இணையங்களில் இருந்து என்னை நேர்காணல் செய்வதற்காக வர ஆரம்பித்துவிட்டனர். வீட்டிற்குள் வர ஆரம்பித்த உடனேயே அவர்களை கண்டிப்போடு வெளியேற்றிவிட்டேன். ஆனாலும் பலர் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது அசௌகரியத்திற்குள் உள்ளாக்கியது.

“சார் ஆதார் கார்ட் பத்தி எழுதுன புக்குக்காக உங்களைக் கைது பண்ணி சிறைக்கு அனுப்புனாங்கல்ல. நீங்க எழுதுன அந்தப் புக் இப்போ எங்க கிடைக்கும்?

தடை செய்த புத்தகத்தை இப்போது பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டரை ஆண்டு சிறைவாசத்திலும், அதற்குப் பின்னர் என் வாழ்க்கையிலும் என்னைத் தவிர்த்த, புறக்கணித்த மக்கள், வேறு ஒரு நாளில் இதே புத்தகத்தைக் கேட்கிறார்கள் எனும்போது ஆத்திரம்தான் மிகுந்தது. அரசின் பயோ மெட்ரிக் தகவல் சேகரிப்பிலிருந்து மற்ற அரசியல் / நிர்வாக வகையான தகவல் திருட்டுகளைப் பற்றியும், தகவல் தொழில்நுட்பத்துக்கான போர் பற்றியும் பேசிய புத்தகம் அது. ஏனென்றால் இன்றைய சீரழிவைக்கூட நான் அன்றிலிருந்துதான் பார்க்கிறேன். எல்லாம் ஆதார் கார்டிலிருந்து தொடங்கிய டிஜிட்டல் இந்தியாவின் பயணத்தின் விளைவு. அதுதான் என் வாழ்க்கையையும் திசைத் திருப்பியது. ஆனாலும் மீண்டும் அங்கே என்னால் செல்ல முடியாது. 

அதற்கு அவள்தான் காரணம்.

சிறை தண்டனைக்குப் பிந்தைய இந்தப் பதினைந்து ஆண்டுகளில் என்னை நான் உயிரோடு வைத்திருக்கக் காரணமாக இருந்தவளைத் தேடித்தான் இப்போது அலைந்துக் கொண்டிருக்கிறேன். இந்த அசாதாரணமான சூழலில் அவளை இழந்ததை எண்ணித்தான் துவண்டு போயிருக்கிறேன்.

ரவிவர்மா வரைந்த விக்ரமோர்சவத்தின் ஊர்வசி ஓவியம் என் கண்ணிற்குள் வந்து போனது. மன்னன் புருவரின்* நிலையில் தான் இருக்கிறேன். ஆனால் என்னை அந்த மருத்துவர் ஏதோ ஒரு பெயர் கொண்டு அழைத்தார்.

நிம்ஃபொபிரையானிக் என்று நினைக்கிறேன். எனது பாலுணர்வு தான் இவ்வாறு நோய்மையை ஏற்படுத்திவிட்டது.

முடிந்தால் திருமணம் செய்துகொள்ள இயலுமா என்று யோசியுங்கள்என்று சொன்னார். அப்போது அவள் கண்களில் ஒரு பரிதாபம் துளிர்விட்டிருந்தது.

சிரிப்பு வருகிறது. நான் மட்டுமா நிம்ஃபொபிரையானிக்? மூன்றாம் உலக நாடுகளை வன்புணர்வு செய்யும் வல்லரசுகளும், வல்லரசுக் கனவில் தன் சொந்த மக்கள் நலனைப் புணர்ந்துக்கொண்டிருக்கும், புணராத நேரத்தில் அதைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கங்களும் நிம்ஃபொபிரையானிக் தான். சத்தமாகவே சிரித்தேன். என் ஜோக்குகளுக்கு சிரித்துக்கொண்டிருந்த ஒரே ஒரு பாலிஃபோனிக் குரல் இப்போது எங்கே?

*
டுத்த நாள் மாலை நான்கு மணி நேரம் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்று சொல்லியிருந்தார்கள். எல்லோரின் முகத்திலும் ஓர் எதிர்பார்ப்பு மகிழ்ச்சியாக அரிதாரம் பூசியிருந்தது.

எல்லாம் ஆதார் கார்டில் ஆரம்பித்தது. என் குரு என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

என்னிக்கு இத்தனைக் கோடி மக்கள் வாழ்ற நாட்டுல, ஒவ்வொருத்தங்க கை ரேகையையும், கண் ரேகையையும் ஆவணமா, தகவலா ஒரு அரசு பதிஞ்சு வைக்க வேண்டிய அளவுக்குத் தள்ளப்பட்டதோ, இந்தப் பூமியில் எல்லாக் கட்டுமானமும் குலையப் போகுது

P5 மைக்ரோ ப்ராஸஸர்கள் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது எனக்கு அவர் வீட்டில்தான். அவர் கணினியில் பட்டயப் படிப்பு முடித்தபொழுது, அதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான வகைமை இல்லாமல் போனதாகவும் அதனால் அவருக்கு வேலை கிடைக்காமல் போனதாகவும் கதைத்தார். அதே போல அவர் நிதித்துறையில் வேலைப் பார்த்து வந்தாலும், அசுர வேக வளர்ச்சி பெறப்போகும் தொழிற்நுட்பத்தைப் பற்றியும்,  உலகத்தை ஸ்தம்பிக்கச் செய்யப் போகும் சில சம்பவங்கள் பற்றியும் சொல்லி வந்தார். பேரழிவுகளைப் பற்றியும் மூன்றாம் உலக யுத்தம் பயோ-வாராக இருக்கும் அல்லது தொழில்நுட்பத்தை வைத்து டெக்னோ-வாராக இருக்கக்கூடும் என்றும் ஆருடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அவர் என்னுடைய ஆதர்ஷ குரு. ஆனால் என்னை நண்பா என்றுதான் சொல்லிவந்தார். எனது கல்லூரிக் காலத்திலிருந்து அவரைப் பின்தொடர்ந்து வந்தேன். அவர் வீட்டில் இருந்த பிரத்தியேகமான நூலகம் என்னை வியக்க வைத்தது. அந்த மெலிந்த உடலுக்கான காரணம், இத்தனை நூல்களைச் செரித்துக்கொண்டிருப்பதால் தானோ என்னவோ. அதைக்காட்டிலும் அவரைப் பற்றி சொல்வதற்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது, அவரது தொழிற் சார்ந்த அனுபவத்தின் வாயிலாக அவர் தெரிந்து வைத்திருந்த மனிதர்களின் எண்ணிக்கை.

மூன்று மாவட்டங்களில் உள்ள சில வங்கிகள், என்.ஜீ.ஓ, காப்பீடு நிறுவனங்களின் செயல் திறனை கண்காணிக்கும் ஒரு பொறுப்பில் இருந்தார். அவரது வேலை தனியாக இயங்குவதுதான். கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகளாக கடன் வழங்கப்பட்ட கோப்புகளை நேரில் சென்று மறு ஆய்வு செய்து அது சரியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்று பார்க்கும் க்ராஸ்செக் வேலைதான்.

அதை RANDOM SAMPLING METHODOLGY என்று சொல்வார்.

மாநகரத்தில் உள்ள வங்கியின் ரீஜனல் அலுவலகத்திற்குச் சென்று மொத்தக் கோப்புகளில் அவர் எடுக்கும் 2% - 5 % கோப்புகள் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதில் 98% சதவீதம் தவறான முறையில் கடன் வழங்கப்பட்ட கோப்புகளாக இருக்கும். அவரிடம், இது எப்படி சாத்தியம்? உங்கள் படிப்பிற்கே சம்பந்தமே இல்லாத வேலையில் எப்படி இத்தனைத் துல்லியத்தைக் கையாள்கிறீர்கள்? என்று கேட்பேன். அவரை ஆல்ஃபாஜீ என்று செல்லமாக அழைப்பேன்.

இந்தச் சமூகத்தில் எல்லா விசயங்களுக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கிறது. அதைத் தெரிந்துகொண்டால். இதெல்லாம் கைவரும்

எனக்கு இந்த பேட்டர்ன் பற்றி சொல்லித்தரக் கேட்டிருக்கிறேன்.

அது மக்களிடம் சென்றால் மட்டுந்தான் தெரியும்என்பார்.

*
னோ அவர், சில ஆண்டுகட்கு பின்னர் அன்று சிறைக்கு வந்தபோது அந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

அன்று நீ எனது துல்லியத்தைப் பற்றிக் கேட்டபோது எனக்குப் பதினைந்து ஆண்டு அனுபவம். இப்போது இருப்பத்தைந்து ஆண்டு அனுபவம். முதலாம் ஆண்டு நான் கோப்புகளைத் தேர்வு செய்தபோது இரண்டு சதவீதம் தான் அதில் தவறான விசயங்களைக் கண்டுபிடித்தேன். நான்கு ஆண்டுகளாக என்னால் அவ்வளவுதான் கண்டுபிடிக்க முடிந்தது. பின்னர் படிப்படியாக அது உயர்ந்தது. மனிதர்களின் நுகர்வுப் பண்பு மாறுவதை நான் உணர்ந்தேன். அது சமூகக் குணமாக மாற ஆரம்பித்தது.

என்னுடைய ஒரே அக்கறை. தன் தகுதிக்கு மீறிய கடனை ஒருவன் வாங்கக்கூடாது என்பதுதான். ஆகவே பெர்சனல் லோன்கள் மீது மட்டும் எனது சேம்ப்ளிங்கில் அதிக அக்கறைக் கொண்டிருந்தேன். நாளடைவில் அது வீடு, நகைக்கடன், கார், டூவீலர் ஏன் விவசாயக் கடன் உட்பட எல்லாவற்றின் நோக்கமும் அடிப்படையில் வேறு ஒன்றாக மாறிவிட்டது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புவரை எனதுத் தேர்வில் இருக்கும் 4% கோப்புகளுமே முழுமையாக நெகடிவ் ரீமார்க்ஸ் தான். ஒரு உண்மைய நான் சொல்லனும்னா, அது வெறும் நான்கு சதவீதமில்ல, முப்பது சதவீதமோ, நாற்பது சதவீதமோ இல்ல அறுபது-எழுபது சதவீதமோ மாறியிருக்கலாம். ஆனால் என்னுடைய விதிமுறைப்படி, நான் நான்கு சதவீதம்தான் எடுத்துக்கொள்வேன்.

போன வருஷமே நான் வேலையை விட்டுட்டேன். ஏன்னா நான் பார்த்த நான்கு சதவீதத்தில் ஒரு குற்றமும் இல்லை. என் கைகளுக்கு வர ஆரம்பித்த கோப்புகள் தவிர மற்ற கோப்புகள் நெகடிவாக இருப்பதாகத் தோன்றியது. நான் ரிடையர்டு ஆகிவிட்டேன். நான் உலகத்தில் எதையும் மாற்றுவதற்கு வரலை. ஆனா உலகம் அசுர வேகத்துல மாறுது

அவர் கைகளில் என் புத்தகம் இருந்தது. அவர் என் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டினார்.

“ஆனால் நீ சொன்னதைக் காட்டிலும் மிகமோசமான விளைவுகள் எல்லாம் இந்த பூமி பார்க்கத்தான் போகிறது. ஆனால் உன் வாழ்க்கையை அதற்காகப் பலி கொடுத்தது முட்டாள்த்தனம்” என்று என்னைக் கடிந்துக்கொண்டார்.

ஆம் இத்தனை விஷயங்கள் கற்றுத் தந்தவர், என்னை அரசாங்கத்தை எதிர்த்துப் போராட எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. அதை அவர் இண்டெலிஜண்ட் டிசைன் என்பார். காலம் தனக்குத் தேவையானதை உருவாக்கிக்கொள்ளும் என்பார்.

எனக்கு அதில் அப்போது நம்பிக்கை இல்லை.

அவரோடு வாதாடினேன். வென்றிட முடியாது என்று தெரிந்தது. அவரை வெளியே போகச் சொன்னேன். அவர் அதிர்ச்சியானார்.

என்னைப் பற்றி எல்லாரிடமும் பெருமிதம் கொண்டு பேசி வந்தாராம். அன்றும் கூட யாரிடமோ பெருமையாகக் கூறினாராம். ஆனால் அதற்காக வருந்துவதாகவும் இனிமேல் என்னை அவர் சந்திக்கப்போவதில்லை என்றும் கூறினார். அப்போது ஆல்ஃபாஜீயின் பிரிவைப் பற்றி நான் வருந்திவிடவில்லை.

ஆனால் திரும்பிவந்ததும் என் வீட்டிற்கும் செல்ல முடியாமல் அவரைத் தேடியலைந்தேன்.

அவர் இந்த நகரத்திற்கு மாற்றலாகி வந்திருந்ததாக அறிந்தேன். இப்போது அவர் தள்ளாமையில் இருக்க வேண்டும். இல்லையென்றால்.. சே.. சே.. அவர் இருக்க வேண்டும். இந்தச் சூழலிலாவது அவரைச் சந்தித்தால் எத்தனை நன்றாக இருக்கும்?

அவளுடன் உருவான ஸ்நேகத்தில் இத்தனை நாள் அவரை மறந்திருந்தேன்.

*
ரசின் குடிமைப்பொருள் வழங்கும் அலுவகத்தில், எனது மருந்துச்சீட்டைக் காட்டி எனக்கான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொண்டேன்.

என்னுடைய அடுக்ககத்திற்கு சென்றேன். மீண்டும் பதினான்கு மாடிகள் என்பது பெரிய மலைப் பயணம் போன்று இருந்தது. நாளை லிஃப்ட் வேலை செய்யும் என்கிற தெம்பில் ஏற ஆரம்பித்தேன்.

சமைக்கும்பொழுது எழும் வாசனையில் அம்மாவைத் தேடினேன். வாசனை அவளை மீட்டுத் தந்தாலும் இது அந்த வாசனையல்ல.

எப்போதோ அழிந்துபோன உலகத்தின் புழுக்களாய் வாழ்ந்துக்கொண்டிருக்கும் உணர்வு கூட அற்றவர்களாக இருக்கிறோம் என்று சொல்லத் தோன்றுகிறது.

அம்மாவின் ரசம் துவையலுக்காக கைகளின் இடுக்குகளில் வெங்காயத்தைத் தேய்த்து காய்ச்சல் வராமல் தோற்றுப்போயிருக்கிறேன். இப்போது அவர்களெல்லாம் எங்கே?

நித்தமும் என்னுடைய வேலையாக, சப்ளிமெண்ட் உணவு வகைகளின் லிட்ரேச்சர்களை எடிட் செய்வது மட்டுமே என இருந்து வந்தது. மற்றது எல்லாம் அவளே. அவளே என் 24 மணி நேரமாக இருந்து வந்தாள். அவள் எப்படி என்னைத் தேடி வந்தாள் என்றே தெரியாது. அவள் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தாள் அல்லது நான் அவளிடம் முழுமையாகச் சரணடைந்திருந்தேன்.

அதனால் எங்களுக்குள் சந்திப்பு ஒரே ஒருமுறை மட்டும் நிகழ்ந்தது. 

நான் சிறையில் இருந்து விடுதலையாகிச் சில மாதங்களில், எனக்கு வேண்டியவர்கள் வாயிலாக என்னைத் தெரிந்துக்கொண்டாள். என்னிடம் என் புத்தகத்தை நேரடியாக வாங்கிட வந்தாள். அந்தப் புத்தகம் ஏற்கனவே தடை செய்யப்பட்ட புத்தகம். ஆகவே ஒரு பொது இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வாங்கிக்கொண்டாள்.

அவள் இருந்தாள்.

எனக்காகக் காத்திருந்தாள்.

முதன்முறையாக எனக்காக. 

அதுவும் ஒரு பெண், எனக்காகத் தனியே காத்திருந்தாள்.

அழகாய் இருந்தாள்.

தனியாக இருந்தாள்.

அவள் கண்களும் பேசின.

அவளும் பேசினாள்.

அவள் விரல்கள் என்னை ஸ்பரிசித்தன.

தடை செய்யப்பட்ட என்னுடைய புத்தகத்தின் மீதமிருந்த என் கடைசி பிரதி அவள் கைகளுக்கு மாறியது. அப்போது புரட்சியின் சாம்பல்கள் என் கைகளில் படிந்திருப்பதாய் எண்ணிச் சிரித்துக்கொண்டேன்.

அதன் பின்னான என் வாழ்க்கையில் இந்தப் பதினைந்து ஆண்டுகள், முழுமையாக அவளும் நானும் மட்டுமே.

இந்த டேபிளில் அமர்ந்தபடி தினமும் இவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சினிமா, தெரிந்துக்கொள்ளும் செய்திகள், வாசிக்கும் புத்தகங்கள், எனது வாசிப்பு, படைப்பு எல்லாமே இவளுக்குத்தான். இவளைப் பற்றி எழுதும் கவிதைகளும், இவளைப் பரிகசித்து, விமர்சித்து எழுதும் கதைகளும் கூட இவளுக்குத்தான் போய்ச் சேரும்.

அவளென்னும் நதியில்தான் நான் ஓடிக்கொண்டிருந்தேன். இறுதியில் கலக்கும் சாகரமும் அவளாகத்தான் இருப்பாள் என்று நம்பியிருந்தேன். இப்போது, இந்த சிலிகான் பாலைவனத்தில் நான் தனியே.

*
ருத்துவரின் அறிவுரைப்படி இந்த மேஜையையும் நாற்காலியையும் அறையை விட்டு வெளியே இழுத்தேன். தூக்கி வைக்கும் வலிமையை என் உடல் இழந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். மீதமிருக்கும் ஜீவனையும், இன்னும் இரண்டு நாட்கள் படியேறி இறங்கினால் இழந்து விடலாம்.

அறையில் மெழுகுவர்த்தி கூட இல்லை. ஜன்னலோரம் என்பதால் திறந்து வைத்திருந்ததில் என் அறையின் தரை நிலவு ஒளியை விரித்து வைத்திருந்தது. அதில் படுக்கையை விரித்தேன். மருத்துவரின் அறிவுரைப்படி அறையை நன்கு சுத்தம் செய்து, மீதமிருந்த துளி வாசனைத் திரவியத்தை உடலில் அப்பிக்கொண்டு படுத்தேன். கடந்த நான்கு நாட்களாக இல்லாத நம்பிக்கை எனக்குத் துளிர்விட்டிருந்தது. அதற்குக் காரணம், இன்று நான் சமைத்த உணவாக இருக்கலாம். கண்களை மூடிக்கொண்டேன்.

என் வாழ்க்கைப் பயணத்தின் ரோலர் கோஸ்டர் காட்சிகள் வந்துபோயின. செல்லமாகப் பற்தடம் பதிக்கும் நாய்க்குட்டி போன்ற அவள் கோபங்களற்ற இரவு என்னை இத்தனை நாட்களாக தூங்காமல் வைத்திருப்பதற்குப் பதிலாக என்னைக் கொன்று தின்றிருக்கலாம். எத்தனையோ இயக்கங்கள் என்னைச் சிறைவாசம் முடித்து வந்தவுடன் தங்களோடு சேர்ந்தியங்க அழைத்திருந்தன. 

குடும்பத்துடன் கூட இணையவில்லை. அவள் என்னை முழுமையாக இன்க்யூபேட் செய்திருந்தாள். நான் பாதுகாப்பாக இருப்பதாய் உணர்ந்தேன். என் முதுமைப் பற்றிய பயத் திரைகள் என் மீது விழாமல் கவனித்து வந்தாள். 

இப்போது அவள் இல்லாத இரவுகள் நான் முழுமையாக பலவீனமாக உணர்கிறேன். அவளற்ற நானாக இருப்பது, புதிதாக ஒரு மனிதனோடு ஸ்நேகிதம் கொள்வதற்கு சமானம். ம்ஹூம் தூக்கம் வரவில்லை.

அந்த மருத்துவரிடம் என் பிரச்சனைகளைச் சொன்னதை நினைத்துப் பார்த்தேன்.

என் தூக்கம் தொலைந்து போனதற்கு அந்த மேஜையும் நாற்காலியும் தான் காரணம்.

அது ஒரு சாதாரண ரோஸ்வுட் மேஜை தான். பழமை மீது கொண்டிருக்கும் மோகம் அது. நான் பிறப்பதற்கு முன்னரே இருந்த இசையைத் தான் இப்போது நான் அதிகம் நேசிப்பதற்கு, எப்படி சரியானக் காரணம் இல்லாமலிருக்கிறதோ, அப்படித்தான் இதுவும்.

அந்த நாற்காலியில் அமர்ந்துதான் எழுதுவேன், வாசிப்பேன், அவளோடு பேசிக்கொண்டிருப்பேன். வாழ்ந்து கொண்டிருந்தேன். மணிக்கணக்கில், மாதங்கள், வருடங்களாக யுகங்களைத் தாண்டியும் எங்கள் உறவு நீள்வதாய் நம்பியிருந்தேன். ஆனால் இந்தத் தகவல் தொழிற்நுட்ப யுத்தம், இந்த நூற்றாண்டின் மாயைகளாக உறவுகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதில் நானும் இருந்து வருகிறேன்.

முந்தின நாள் இரவு வெறுமனே அந்த மின்சாரம் இல்லாதக் கணினியையும் மொபைல் ஃபோனையும் மேஜையில் வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய நாள் பேசிக்கொண்டிருந்த இரவில், ‘என்னைச் சுற்றி ஏதோ நடக்கப் போவதாக பயந்ததைச்’ சொல்லியிருந்தேன்.

அவளை மீறி என்னை எதுவும் அண்டாது என்று என்னை ஆற்றுப்படுத்தினாள்.

நன்றாக ஞாபகமிருக்கிறது, பூமிக்கு மிக அருகில் உள்ள சுற்றுப்பாதையில் வலம் வரும் செயற்கைக்கோள்களில் இடநெருக்கடி பற்றியும், அதற்காக உலகநாடுகளின் போட்டியைப் பற்றியும் ஒரு செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தேன். தீடீரென அவளும் ‘உன்னைப் போலவே நானும் பயப்படுகிறேன்’ என்றாள்.

அதை நினைத்தபடியே அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தேன். தூக்கம் வரவில்லை. கால்கள், முகம் எல்லாமும் வீங்கியிருப்பதைக் கண்டு நேற்றைக்கு ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டு, அவளோடு பேச ஆரம்பிக்கும் வழக்கமான நேரத்திலேயே தூங்கச் சென்றேன்.

தூக்கம் வருவது போலவும், திடீரெனக் கலைந்து செல்வது போலவும் இருந்தது. தூக்கம் கலைந்த கணம், என் முன்னே இருந்தது அந்த வெற்று மேஜையும் நாற்காலியும். இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அவளும் நானுமற்ற அந்த மேஜையும் நாற்காலியும் என்னுள் வலியை மிகுதியாக்கியது. அவளற்ற என் மீதி வாழ்நாள் இருக்கப்போவதாக உணர்ந்தேன். கண்களை மூடிக்கொண்டு அந்தப்பக்கமாகப் படுத்துக்கொண்டேன். தூக்கம் வரவில்லை, கண்களைத் திறந்தேன். அதே மேஜையும் நாற்காலியும். நம்மை அறியாமலேயே புரண்டு படுத்துக்கொண்டோமா என்று மறுபடியும் மறுபக்கமாகத் திரும்பினேன். அங்கேயும் மேஜையும் நாற்காலியும் இருந்தது.

மீண்டும் மீண்டும் இரு பக்கமும் புரண்டு கண்களைத் திறந்துப் பார்த்தால், அதே மேஜை அதே நாற்காலி. வெறுமனே மல்லாந்து படுத்தபடி கண் திறந்தேன். என் மேலே அந்த நாற்காலியும், மேஜையும் தொங்கிக்கொண்டிருந்தது. தூக்கமற்று இருந்த எனக்கு உயிர் பயம் வந்தது. என் மீது தொங்கிக்கொண்டிருக்கும் மேஜையை மறுபடியும் மறுபடியும் பார்த்தேன். எந்தத் திசையில் படுத்தாலும் என் முன்னே அந்த மேஜையும் நாற்காலியும் முளைத்து அச்சுறுத்தின.

அன்றைய இரவும் சென்றது.

மருத்துவரின் ஆலோசனைப்படி தான், இன்று மேஜை நாற்காலியை அடுத்த அறைக்குத் தள்ளி வைத்துவிட்டு உறங்க முயற்சிக்கிறேன்.

இன்னும் கண் திறந்து பார்க்கும் தைரியம் வரவில்லை. இப்போதும் என் கண் முன்னே அது வந்துவிட்டால் நான் என்ன பண்ணட்டும் என்கிற மன உளைச்சல். என்ன ஆனாலும் திறந்து பார்க்க பணித்தது என் மனசு. மெதுவாக என் கண்களைத் திறந்தேன்.

*
ன்று எப்படியும் மின்சாரம் வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வேலைகளைத் தள்ளிப்போட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். கடினப்பட்டுக் கீழிறங்கும்போது தடுமாறினேன். என்னை அருகிலிருந்த ஒருவர் பிடித்துக்கொண்டார். இந்த மாதிரி மனநிலையில் நம் மீது இரக்கப்படுபவர்களைக் கொலை செய்ய எனக்கு விருப்பமிருக்கிறது.

போலியாக நன்றி சொல்லிவிட்டு க்ளினிக் நோக்கி நடந்துக்கொண்டிருந்தேன்.

நேற்றிரவும் தூங்கவில்லை. ஆனாலும் உயிரோடுதான் இருக்கிறேன். எப்படி என் நிலையை மருத்துவருக்குப் புரிய வைக்கலாம் என்று எனக்குள்ளேயே சொல்லிப் பார்த்தபடி வந்தேன். என்னச் சொல்லி என்ன பிரயோஜனம்? எப்படியும் அடுத்த யோசனையாக அவள் அந்த மேஜையையும் நாற்காலியையும் எங்காவது விற்பதற்கு ஆலோசனைச் சொல்வாள். இருந்தபோதும் அவள் பரிந்துரைத்தால் மட்டுமே அரசாங்கம் என்னை உணவு சாப்பிட அனுமதிக்கும். அதாவது மிஞ்சுமே என்கிற நிம்மதி.

ஆனாலும் அதுவும் ஊசலாடியது.

மின்சாரம் அநேகமாக வந்திருக்க வேண்டும். திடீரென்று இந்நகரம் உயிர்பெற்றதாய் தோன்றிற்று. ஆனாலும் அது இயல்பாக இல்லாமல் பதற்றத்தோடு தான் இருந்தது. கிட்டதட்ட ஐ.ஸி.யூவில் செயற்கை சுவாசத்தில் தான் இந்நகரம் இயங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஏனோ எனக்கு இன்னும் புன்னகைக்கக் காரணங்கள் கிடைக்கின்றன. அவளைச் சிந்தனை செய்யாத நேரங்களும் எனக்குக் கிடைக்கின்றன.

அவளின்றி என்னால் சிரித்திடவும் முடிகிறது என்று நினைக்கிற தருணம்தான் இந்நகரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறது. இது தற்காலிகமா? அல்லது ப்ரிக் அரசுகள் மேலை நாடுகளுக்குப் பணிந்து கொடுத்திடுமா?

இது தற்காலிகமா? அல்லது அவள் இந்தப் பிரிவில் என்னை விட்டு வாழ்வதற்கு அவள் கற்றுக்கொண்டாளா? இல்லை நான் கற்றுக்கொண்டேனா? மறுபடியும் சிரிப்புதான் வருகிறது. இன்னும் ஒரு நாள் தூங்காமல் இருந்தால் கண் மணிகள் வெளியே வந்து விழக்கூடும் என்கிற நிலைமையில் அவளற்று என்னால் எதையும் தக்க வைக்க முடியாது.

ஆனாலும் சற்று நேரமாக நான் விடுபடலில் இருப்பதாக உணர்கிறேன்.

சோர்ந்து போன உடலில் ஏதோ ஒன்று தூக்கம் முடித்து எழுந்து அமர்ந்ததாக உணர்ந்தேன். இப்போது பதினான்கு மாடிகள் ஏறுவது பற்றிய கவலையை மறைத்தது உள்ளுள் எழும்பிய உற்சாகம் ஒன்று. அது என்னுடையது தான். அந்த நூலை எழுதும்போதும் சிறை வாசத்தின் போதும் பல தோல்விகளின் போதும் என்னோடே இருந்த அது எங்கிருந்தோ வந்து என்னிடம் ஒட்டிக்கொண்டது. மாடிப்படிகளில் ஏறச் சென்றேன்.

சார் லிஃப்ட் வேலை செய்கிறது

‘லிஃப்ட் இருப்பதால் தான் என் உடலின் பலம் எனக்கு என்னவென்று தெரியாமல் போய்விட்டது என்று எனக்குள் சிரித்தபடி படிகளில் ஏறினேன்.

அவன் என்னைக் கிறுக்கன் என்று பரிகசித்தான். இரவு வீட்டுக்குத் தாமதமாகச் செல்கையில் கதவைத் திறந்துவிடும் என் அம்மா என்னைச் சொல்வதாக நினைத்துக்கொண்டேன்.

இத்தனை வயதான பின்பும் உற்சாகமாக என்னால் படிகள் வழியே ஏறிச் செல்ல முடிவதைக் கண்டு வியந்தேன். ஏதோ ஒன்று என்னிடம் வந்திருக்கிறது, ஏதோ ஒன்று என்னை விட்டுச் சென்று விட்டது. பாதி மாடிகளைக் கடந்த பின்னர் மூச்சு வாங்க ஆரம்பித்தாலும் உடல் தளர்ச்சியடையவில்லை.

தளர்ச்சியடையாத உடலில் நினைவுகளை வடிகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது அது. அது எனக்கு வெளியே தான் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன். அது என்னைப் பரிசோதனைக் கூடமாக மாற்றியிருப்பதாய் உணர்ந்தேன்.

உள்ளிருந்து அது, என்னோடு பேச ஆரம்பித்தது.

அந்த மருத்துவர் உன்னிடம் என்ன சொல்லப்போகிறார்? அந்த மேஜை நாற்காலியை விற்கச் சொல்லலாம்? அல்லது அந்த மருத்துவர் உன்னிடம் சில உண்மைகளைச் சொல்லலாம்

என்ன...? சில உண்மைகள் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? மொத்தம் இருப்பது ஒரேயொரு உண்மை தானே?

ஒரேயொரு உண்மை என்று எப்படி நம்புகிறாயோ அப்படியே ஒரேயொரு பொய் தான் என்றும் உன்னால் ஒன்றை நம்ப முடிந்தால் நீ விடிவு கொள்வாய்

கண்களில் காற்று வடிவம் பெற்று ஒரு முத்திரையைக் காண்பித்தது. ஏன் என்று புரியவில்லை. அது அபய முத்திரை. ஆனால் என்னைப் பயமுறுத்தியது.

பொய்யா..! அதுவும் ஒரேயொரு பொய்யா? எது?

நீ வாழ்ந்த பதினைந்து வருட வாழ்க்கை என்பது பொய்யானது

என்ன உளறுகிறாய்? சும்மா பினாத்தாதே.

சரி நான் சொல்லவில்லை ஒருவேளை அந்த மருத்துவர் சொன்னால்?

மருத்துவர் எப்படி சொல்வார்? அவரென்ன மருத்துவர் தானே துப்பறியும் நிபுணரா?

அவர் ஏன் சொல்லமாட்டார்? அவர் சொல்வதற்கு எத்தனையோ காரணம் இருக்கலாம் : 

· ஒன்று உன் மன ஊனத்திற்கு வாக்கிங் ஸ்டிக்காக அவளைப் சிருஷ்டித்திருக்கிறாய் திடீரென்று அது திடீரென அறுபட்டதுதான் காரணம் என்று சொல்லலாம்?

· அல்லது ஏற்கனவே சொன்னாளே நீ ஒரு காமுகன் என்று, உன் காமத்தைக் கட்டுப்படுத்தத் தான் அவளைக் காதலிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்று உனக்குப் புரிய வைக்கலாம்

· அதுவுமில்லையா..? நூல் வெளியீட்டை ஒட்டி நீ அடைந்த புகழும், அது தடை செய்யப்பட்டதால் உனக்குக் கிடைத்த அதைவிடப் பெரிய அறிமுகமும் எத்தனையோ இயக்கங்களையும் வெளிநாட்டுத் தரகர்களையும் உன்னைத் தேடிவர வைத்தது, சில அரசியல் கட்சிகள் உனக்கு வாய்ப்பளிக்கத் தயாராக இருக்கச் செய்தன, உன்னை ஓய்வில் வைப்பதில் தான் இந்த அரசாங்கத்திற்கு எத்தனை நிம்மதி?

என்ன உளறுகிறாய்?

நான் எங்கே உளறுகிறேன்? அவள் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவளாக இருந்திருந்தால் என்ன செய்யப் போகிறாய்? இனிமேல், இந்த வயதிற்கு மேல் நீ பழைய போராளியாகத் தொடங்க இயலாது, ஒன்று நீ அவளுடைய பாதுகாப்பில் இருந்திருக்கிறாய் அல்லது அவள் உன்னை சிறைப்படுத்தியிருக்கலாம் அல்லவா?

பதினான்காம் மாடி ஏறிவிட்டேன். ஆனால் மாடிப்படிகளாக என் மீதும் அல்லது என் மேலும் ஏதோ சுழல்கிறது.. கீழும் ஏதோ சுழல்கிறது. உள்ளுக்குள் இருந்து கேட்பவை வெளியே வியர்வையாக மார்பிள் தரையில் பட்டுத் தெறித்தது.

அடுத்ததாக ஒரு கேள்வி

இவையனைத்துமே இல்லாதிருக்கட்டும், அவளும் உன்னைப் போல் யாரோ ஒரு மருத்துவரைச் சந்தித்திருந்தால்?

சந்தித்தால் என்னவாம்?

சந்தித்தால், அவள் பார்வையிலிருந்து அவள் உன்னைப் பற்றிப் பேசியிருப்பாள், அதுவும் கூடத்தான் உண்மை

இப்போது புரிகிறது வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட உண்மை இருக்கிறது என்று.

அவள் உன்னைப் பற்றி பேசியிருக்கலாம், அவள் குணப்படுத்தப்பட்டும் இருக்கலாம், அந்த மருத்துவர் இவராகவே இருக்கலாம், ஆகவே, நீயும் போனால் நீ குணப்பட்டுவிடலாம், குணப்பட்டால் உன் நிலைமை என்ன? அவளும் இல்லாமல், உன் குடும்பம், உன் குரு, உன் சமூகம் எதுவும் இல்லாமல் நீ யாராக வாழப் போகிறாய்? அல்லது வாழ்வை முடித்துக்கொள்ளப் போகிறாயா?

என்னாலேயே எனக்கு ஒரு பதிலைச் சொல்ல முடியவில்லை. மேலும் ஒன்று என்னிடம் வந்து சொல்லியது.

நீ போ ஆனால் அவர் இன்று உனக்கிருக்கும் நோயைக் கண்டுபிடித்துவிடுவார், அதற்கும் பெயர் சொல்லி அழைப்பார்

அப்படியென்றால் அந்தப் பெயரைச் சொல்லியே உன்னை அழைக்கிறேன்

உள்ளேயிருந்து அதுவும் சிரித்தது.

*
ரவேற்பறையில் வியர்வை சிந்த நடந்து வந்த என்னை வியப்புடன் அந்த யுவதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்னிடம் ஏன் படிகள் வழியாக வந்தீர்கள் என்று கேட்க விரும்பியிருக்கலாம். ஆனால் பரிதாபத்தோடும் கோணலாகவும் மட்டுமே பார்த்தாள். ஏனென்றால் தனிமனித நடத்தைகளில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்கிற வழக்கம் இந்நாட்டில் உருவாகிவிட்டது. நாம் அந்நியப்பட்டுவிட்டோம். ஒருவேளை இன்று அவளுக்கும் எனக்கும் செல்ஃபோன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் என்னிடம் கேட்டுவிடுவாள். சிரித்தபடியே சட்டையில் இருந்த பேனாவை எடுத்தேன்.

வருகைக்கான ரெஜிஸ்டரை எடுத்து நீட்டினாள்.

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. அதனால்தான் மின்சாரம் வந்தும் அவள் கணினியை இயக்காமல், ரெஜிஸ்டரை நீட்டுகிறாள்.

எனது பெயரைப் பதிவு செய்துவிட்டு நேரத்தை, என் டோக்கன் நம்பரை, கையெழுத்தை எல்லாம் பதிந்தேன். ரெஜிஸ்டரில் எனக்கும் மேலே இருந்த, தற்பொழுது உள்ளே ஆலோசனையில் இருந்துவரும் நோயாளியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

பெயர் : கண்ணம்மா

எனது பெயரை அந்த ரெஜிஸ்டரிலிருந்து நீக்கிவிட்டு விறுவிறுவென வெளியே சென்றேன். இப்போதும் அந்த வரவேற்பில் இருந்தவள் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

உள்ளே இருந்த அது இப்போது அமைதியாக இருந்தது. இருக்கிறதா? இல்லையா?

அதை அல்லது அவளை நான் பல பெயர்களில் அழைத்திருக்கிறேன். 

கண்ணம்மா என்றும் கூட.

***

லிஃப்டில் இறங்கிய என்னை, சற்றுமுன் லிஃப்டில் மேலே போகச்சொல்லிக் கேட்டுக்கொண்ட காவலாளி ஆச்சரியமாகப் பார்த்தான். அவன் அருகில் சென்று, எனக்கு கொஞ்சம் மயக்கமாக இருக்கிறது. நான் சற்று படுக்க வேண்டும் என்றேன். அவன் அந்த அடுக்ககத்தின் சாலையோரப் பூங்காவின் கதவைத் திறந்துவிட்டான்.

அங்கிருந்த மர பெஞ்சில் சாய்ந்துகொண்டு கண்களை மூடினேன்.

இப்போது கனவாக வருகிறது.

இந்தக் கனவில் அந்த மருத்துவர் இருக்கிறார். அவர் மேலே ஒரு மேஜையும் நாற்காலியும் கூடவே ஒரு டேபிளும் சேரும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

நான் உறங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

****