வெள்ளி, 23 டிசம்பர், 2011

காத்திருக்கும் காலங்கள்

என்றுமே நிகழாது  ............
எப்படியும் நிறைவேறாது ............
ஒரு போதும் இயலாது என்று தெரிந்தும்.......... 
அவள் -ஏதோ ஒரு 
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் பிறவாத குழந்தையாய், 
வாழ்ந்து முடித்த ஒரு ஆத்மாவாய்,
காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரேயொரு  கணமாய்,
வின்னாய், காற்றாய், வாசனையாய் இருக்கும் 
அவள் - ஏதோ ஒரு 
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

மனித வாடையை உணர முடியாத் 
காதல் கொண்டவள் - உருவத்தில் 
என் தாயின் சாயல் கொண்டவள்,
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

உடல் என்ற கவர்ச்சிக்கும் - அப்பாலே   
உள்ளம் என்ற உணர்வுக்கும் -மேலே 
 ஒரு எச்சமான உயிர்த்துடிப்புடன் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.


மொழியால் சொல்லாத உரையாடலில் 
கைகளால் கூடாத ஒரு தழுவலை 
எச்சில் படாத முத்தங்காளால் - பொழியும் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

என்பிறப்பினையே நின்று  பார்த்தவள்- என்
நிறத்தையும் அழகையும்- ஒருபோதும்
 பார்க்க விரும்பாத விரதம் கொண்ட 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளை ஊரே பழித்தபோதும்
 கொல்லச் சொல்லி கொன்றபோதும்
 தடுக்க முயலாத என் மவுனத்திலும் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

கருவிலேயே கலைக்கப்பட்ட - என் காதலி 
இன்னும் பிறவாமல், காத்திருக்கவும் முடியாமல் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

என் கல்லூரிக் காலங்களில் ஆண்டுமலருக்காக நான் எழுதிய சிறுகதையின் வேறு வடிவம் தான் இது .... (ஆண்டு மலரில் நிராகரிக்கப்பட்டது)
கரிகாலன் 

சனி, 17 டிசம்பர், 2011

Nostalgia

என் நண்பர் சொன்ன இந்த மந்திர வார்த்தை "Nostalgia" , நினைவு மீட்டல் - நம் பசுமையான நினைவுகளுக்கு திரும்பி நாம் இழந்துவிட்டதை திரும்பி பார்ப்பது அன்றாடம் நாம் சந்திக்கும் வலிகளுக்கும் , காயங்களுக்கும் எவ்வளவு பெரிய மருந்து?? இப்பகுதியில் நாம் இழந்து விட்டதை பற்றி கொஞ்சம் எழுதுகிறேன்.

இதில் நம்மையும் மறந்து, நமக்கே தெரியாமல், காலத்தை வென்ற சில கருப்பு வெள்ளைப் பாடல்களை பற்றி முதலில் நான் பதிய விரும்புகிறேன்.எனக்கு பிடித்த தாலாட்டுகள் 
1 .  என் அம்மா என்றும் என்னுள் இருப்பாள், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் , எந்த பாமர எழையும் தன தாய்க்கு ராஜ தன என்று உணர்த்தும் பாடல்.

படம்:கணவனே கண் கண்ட தெய்வம் ,பி.சுஷீலா ..இசை :மெல்லிசை மன்னர்2.மாடி மனை வேண்டாம், கோடி செல்வம் வேண்டாம் -வளரும் பிறையே நீ போதும் !!!!! வேறு என்ன சொல்ல ?? பட்டுக் கோட்டையார் தமிழ் உலகம் மறக்கக் கூடாத ஒரு உன்னத கலைஞர்."நாளை உலகம் நல்லோர்கள் கையில்" தாய் தாலாட்டும் பொது நாட்டைப் பற்றிய கவலையும் தன தாய்ப்பாலுடன் ஊட்டும் வழக்கம் நம்மிடையே உண்டு என்பதை இந்த வரிகளின் மூலம் நாம் அறியலாம்.

படம் : பதிபக்தி , பட்டுக் கோட்டையார், பி.சுஷீலா ..இசை :மெல்லிசை மன்னர்3 . சில நேரங்களில் தாயானவள் தன் மகளுக்கோ மகனுக்கோ தந்தையுடன் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளில் இப்படிப்பட்ட தாலாட்டுகள் பாட வேண்டியிருக்கிறது, பாடல் குழந்தைக்கு மட்டுமில்லை தந்தைக்கும் சேர்த்துத் தான்.
படம் : வண்ணக்கிளி4 . தாய்க்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ இந்தக் காலத்தில் ஆனால் அவள் எந்த காலத்திலும் நமக்காக தாங்கும் வலியினை அறிவியலாளே அறிய முடியாது.... ஆனால் அவளோ  மண்ணுக்கு மரம் பாரமா?? என்று உவமை கொண்டு தன் குழந்தைப் பார்த்து பாடுகிறாள்.. அப்படிப் பாடும் தாய் மட்டும் தான் உலகில் உள்ள ஒரே கடவுள் என்று நாமும் நம்புவோம்5. பானுமதியின் கம்பீரக் குரலில் அருமையான வரிகள், நடிப்பிலும் மிக எளிமையாக நம்மை படத்தில் ஒன்ற வைப்பார்.
படம் : அன்னை


6. சுசிலாவின் குரலும்,மெல்லிசை மன்னரின் இசையும் கண்ணதாசனுடன் இனைந்து உருவாக்கிய மிக அழகான படைப்புகளில் ஒன்று, தாலாட்டுகளில் மிகப் பிரபலம் .


7. இறைவனே இந்த பாடலிக் கேட்டாலும் தனக்கு தாய் இல்லையே என்று வருத்தமடையும் தேனிசை கானம்.

8.பாசமலர் இந்த பாடலில் சிவாஜி , சாவித்ரியின் நடிப்பில் அண்ணன் - தங்கை பாசம் தான் நமக்கு காட்சியாக்கப் படுகிறது... ஆனால், இது ஒரு அற்புதமான தாலாட்டு "சிறகில் எனை மூடி, அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா" என்று தன ஆற்றாமையை பாடிக் கொண்டும், தன் அண்ணன் தன் மகளை எப்படியெல்லாம் சீராட்டுவார் , என்று அசைக்க முடியாத நமது குடும்பச் சமுதாயத்தை இப்பாடலில் காணலாம் 9 .இந்த பாடலும் முன்னர் சொன்ன பாடல் போலத் தான், நமது குடும்ப வாழ்வில் தாயிற்கு அடுத்தப்படியான உறவான தாய் மாமனை பற்றி பாடுகிறது. ஆனால், இந்த கதைக்களம் வறுமையில், பெண்களின் நிலை மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த காலத்தில் இருக்கும். ஒருதடவையாவது கண்ணீர் சிந்தாத கண்களில் கண்டிப்பாக கோளாறு இருக்கும் .
படம் : பராசக்தி 10. தாலாட்டு ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, படம் :பார்த்தால் பசி தீரும் 

11 . தாலாட்டு பாடும் போதே தன் சொந்த சோகத்தையும் இணைத்துப்  பாடுவது தாலாட்டு வகைகளில் உண்டு , தான் காதலில் ஏமார்ந்ததாய் நினைவு கூறும் ஒரு தாலாட்டு. பாடலின் சிறப்பு PBS என்ற ஒரே காரணம்.
படம் : வாழ்க்கை படகு


12.நல்லதங்காளின் கதையைப் போலே உருவான இந்த சிவப்பு படத்தில் வரும் இந்தப் பாடல் எந்த வறுமையிலும், வேதனையிலும் தங்கள் பிள்ளையை சீரட்டுவதும், எளிமையாய் வாழ்வதும் தெரியும் . படம்: துலாபாரம் 


13.தந்தை ஒருவன் அந்த இறைவன் ஆவணும் அன்னை இல்லாதவன் - TMS காலத்தை வெல்லும் குரல் ஜீவனோடு வாழும் பாடல். படம்: எங்க மாமா


14.பாசமுள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் ....
படம் : பாபு


15 . தாய்மை கொண்ட எவரும் தாய் தான், தாலாட்டுகளில் தவிர்க்க முடியாத அத்தை (அல்லது செவிலித் தாய் ) பாடும் தாலாட்டு. படம் : கற்பகம்16 . (நேரடியான காணொளி கிடைக்க வில்லை) தாய்/செவிலித் தாய் குழந்தைப் பாடும் தாலாட்டுகளில் எவ்வளவு அறிவுரைகள் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் பார்க்கலாம்.
எத்தனையோ முறை, நான் - என் வாழ்வில் இடறி விழும் போதெல்லாம் "புயலைக் கண்டு அஞ்ச மாட்டேன் , முயன்று நானே வீரன் ஆவேன்" என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு மீண்டும் எழுந்து வந்துள்ளேன் - தாய்மார்கள் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான பாடல் இதுவே !!!இன்னும் சில பாடல்கள் கிடைக்கவில்லை, இந்த தொகுப்பினை எனது புதிய நண்பர் வனமாமலைக்கு சமர்ப்பிக்கிறேன் 

புதன், 14 டிசம்பர், 2011

ஒருமைப்பாட்டை சிதைத்து விடாதீர்கள்!- பழ. நெடுமாறன்


 
பழ. நெடுமாறன் - அவர்களின் முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்த ஒரு அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது 

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று குரலெழுப்பி, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்த கேரள அரசியல்வாதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்திருப்பதுடன், கேரள அரசு குறிப்பிட்டிருப்பதுபோல, நில அதிர்வுகளால் அணைக்கு ஆபத்து என்கிற கருத்தையும் நிராகரித்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் ஆரம்பம் முதலே, கேரள அரசு வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கிறது என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை நிராகரிப்பதில் முனைப்பும் காட்டி வருகிறது.
கேரள மாநில சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் 9-12-11 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு.
புதிய அணை கட்டப்படும்வரை இப்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்.
2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இந்தத் தீர்மானம் முற்றிலும் எதிரானதாகும். எனவே, உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு கேரள அரசும் ஒட்டுமொத்த சட்டமன்றமும் அனைத்துக் கட்சிகளும் உள்ளாகியுள்ளன.
இந்த இரண்டு கோரிக்கைகளை உள்ளடக்கிய, இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, புதிய அணை கட்டப்பட்டாலும் தமிழகத்துக்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டுகூட குறையாமல் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். கேரளத்துக்குப் பாதுகாப்பு, தமிழகத்துக்குத் தண்ணீர் என்ற புதிய முழக்கத்தையும் அறிவித்துள்ளார்.
கேரள அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்துக்கு நேரானவையாகும். திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்தபோது அதில் குமரிமாவட்டம் இணைந்திருந்தது. அப்போது நெய்யாறு என்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் இடதுபுற கால்வாயின் மூலம் திருவாங்கூர் பகுதிக்கு 19,100 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது. இதில் 9,200 ஏக்கர் நிலம் 1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டபோது தமிழகத்தின் பகுதியாயிற்று. ஆனால், இந்த நிலத்துக்கு அளிக்க வேண்டிய நீரைத் தர கேரளம் பிடிவாதமாக மறுக்கிறது. இந்தக் கேரளமா புதிய அணைகட்டி பெரியாற்று நீரை நமக்குத் தரப்போகிறது?
தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்று ஒருபுறம் கூறும் கேரள அரசு ஆனந்த் குழுவிடம் செப்டம்பர் மாதம் அளித்துள்ள மனுவின் 37-ம் பக்கத்தில் ""முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்துக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே, அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது'' என்றும், அந்த அறிக்கையின் 23-ம் பக்கத்தில் ""தமிழகத்துக்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தது ஆகும்'' எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதாவது கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகம் எப்படித் தர மறுக்கிறதோ அதைப்போல கேரளமும் எதிர்காலத்தில் செய்யும் என்பதுதான் இதன் உட்கருத்து.
புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளம் வலியுறுத்துவது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். புதிய அணை கட்டப்பட்டால் இப்போது உள்ள அணையின் மீது 999 ஆண்டுகளுக்கு நமக்குள்ள உரிமை பறிபோகும். புதிய அணையை தற்போதைய அணைக்குக் கீழே கட்டினால், அதிலிருந்து நமக்குத் தண்ணீர் தருவது என்பது மிகமிகக் குறையும். புதிய அணையின் மீது கேரள அரசின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்.
இப்போதுள்ள அணையை வலுப்படுத்தும் பணியைச் செய்யவிடாமல் 21 ஆண்டுகாலம் இழுத்தடித்தார்கள். புதிய அணை கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் இழுத்தடிப்பார்களோ தெரியாது.
புதியதாகப் போடப்படவேண்டிய ஒப்பந்தம் மிகக் குறைந்த ஆண்டுகளுக்கே போடப்படும். இப்போதைய குத்தகைப் பணம் மற்றும் மின் உற்பத்திக்கான கட்டணம் ஆகியவற்றை அதிகமாகக் கொடுக்க நேரிடும். பணிகள் முடியும்வரை நீர்மட்டம் 120 அடியில் இருக்கும்.
இதன் விளைவாக தென் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அணை பலவீனமாக இருக்கிறது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யான குற்றச்சாட்டு என்பதை அம்மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் கேரள உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள கீழ்க்கண்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்துக்கும் அணையின் பாதுகாப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அணை உடைந்தாலும் அதன் நீர் அதற்குக் கீழ் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகளுக்குப் போய்ச் சேரும். இந்த அணைகள் அந்தத் தண்ணீரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றவையாகும். செறுதோணி அணையின் நீரைத் திறந்துவிட்டால் நேராக அரபிக்கடலுக்குச் சென்றுவிடும் என்று அவர் கேரள அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியாறு ஆற்றுப் பகுதியில் இருந்து 450 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டோம் என்றும் அட்வகேட் ஜெனரல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அணை உடைந்தால் 4 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் செத்து மிதப்பார்கள் என இடைவிடாது புளுகித் தள்ளிய கேரள அரசு 450 குடும்பங்களை மட்டும் வெளியேற்றியிருக்கிறது என்று கூறியதன் மூலம் அது இதுவரை கூறிவந்த பொய் அம்பலமாகிவிட்டது.
கேரள மாநில இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையைச் சென்றடைய 4 மணிநேரமும், செறுதோணி அணை மூலம் அரபிக் கடலைச் சென்றடைய 10 முதல் 12 மணி நேரமும் பிடிக்கும். எனவே மக்களுக்கு எத்தகைய அபாயமும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தன் உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துகள் சதித்திட்டமும், துரோகமும் கலந்தது. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால், விசாரணை நடத்திய, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரைக் கொண்ட ஆயம் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துகள் திருப்திகரமாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, உச்ச நீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையமும் ஆராய்ந்து வருவதால், நாங்கள் இதில் தலையிட மாட்டோம் என கேரள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜே.பி. கோஷியும் அறிவித்திருக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், அதன் நீரை இடுக்கி அணை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். எனவே, பயப்பட வேண்டிய தேவையில்லை. அணை உடைந்தாலும் 106 அடிக்குமேல்தான் உடையும். அவ்வாறு உடையும்போது 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேறும். அவ்வாறு வெளியேறும் நீர் நேராக இடுக்கி அணைக்குப் போகும் வகையில்தான் அணையின் அமைப்பு உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும். எனவே அணை உடைந்தால் வெளியேறும் நீர் முழுவதையும் இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும்.
அணை உடையும் நிலை ஏற்பட்டாலும் தண்ணீர் முழுவதும் அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில்தான் விழும். அங்கு எந்தச் சமவெளிப் பகுதியும் இல்லை. பெரியாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பெரியாறு அணைக்கு மேல்தான் உள்ளன. பெரியாறு அணை நீர் இவற்றுக்குள் ஒருபோதும் செல்லாது.
பெரியாறு அணையின் நீர்க்கசிவு அதிகம் இருப்பது அபாயகரமானது என்றும் கேரளம் குற்றம் சாட்டுகிறது. அணைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீர்க்கசிவு நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆகும்.
முல்லைப் பெரியாறு அணையில் நிமிடத்துக்கு 45 லிட்டர்தான் நீர்க்கசிவு ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நீர்க்கசிவில் இது 5-ல் ஒரு பகுதியாகும். எனவே இது அபாயம் அற்றது.
உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு கூறும்வரை காத்திருக்காமல் அணை உடைந்து பல லட்சம் மக்கள் பலியாவார்கள் என இடைவிடாது கூப்பாடு போடும் கேரள அரசு பெரியாறு அணைப்பகுதியில் படகு சவாரியை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை. பெரியாறு அணையில் கேரள வனத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றின் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், படகு சவாரி செய்கின்றனர். அணை உடையப்போகிறது என்பது உண்மையாக இருந்தால், படகு சவாரியை உடனடியாக கேரள அரசு நிறுத்தியிருக்க வேண்டுமே, ஏன் இதுவரை, நிறுத்தவில்லை?
9-12-11 அன்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் அணை உடைந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என உச்ச நீதிமன்றத்தையே மிரட்டும் அளவுக்குச் சென்றிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் குழு பெரியாறு அணைப் பிரச்னை குறித்து முழுமையாகப் பரிசோதனை செய்து வருகிறது. இக்குழு அணையின் வலிமை குறித்து, நன்கு ஆராய்ந்து தனக்கு அறிக்கை தருவதற்காக மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவுத்துறை, பாபா அணுஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலையம் போன்ற அமைப்புகளின் சேவையைப் பயன்படுத்தியுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் பெரியாறு அணை நீருக்குள் மூழ்கியும் மேலும் பல்வேறுவிதமான சோதனைகளை மேற்கொண்டும் நவீன சாதனங்களைப் பயன்படுத்தியும் உண்மையைக் கண்டறிந்து, ஆனந்த் குழுவினரிடம் கடந்த 5-12-11 அன்று அளித்துவிட்டனர்.
இந்தக் குழுவின் ஆய்வு வேலைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.1.38 கோடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அணை வலிமையாக இருப்பதாக இந்த அறிக்கையில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை அறிந்த கேரள அரசியல்வாதிகள், அவசரஅவசரமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அளித்து, உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தனக்கு எதிராகத் தீர்ப்புச் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அச்சத்தின் காரணமாக அதை எப்படியாவது தடுப்பதற்குக் கேரளம் திட்டமிட்டுள்ளது. கேரளத்தின் சூழ்ச்சிவலையில் சிக்கி தமிழகம் பேச்சுவார்த்தைக்குப் போனால், அதைக் காரணமாகக் காட்டி உச்ச நீதிமன்றத்தை எத்தகைய முடிவும் எடுக்கவிடாமல் தடுக்க முடியும். நல்ல வேளையாக தமிழக அரசு இந்த சூழ்ச்சி வலையில் சிக்க மறுத்துவிட்டது.
1984-ம் ஆண்டில் சோவியத் நாட்டுக்குச் செல்லக்கூடிய நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது சோவியத் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகாலமாக பாலைவனமாக இருந்த ஒரு பகுதியில் அண்டை மாநிலத்தில் இருந்து ஆற்று நீரைக் கால்வாய் வெட்டிக் கொண்டுவந்து சோலைவனமாக்கிவிட்டதை நான் பார்த்தேன்.
துர்க்மேனிய குடியரசுக்கு நான் சென்றபோது வியப்பூட்டும் இக்காட்சியை நேரில் கண்டேன். வறண்ட பாலைவனமாக இருந்த துர்க்மேனியாவுக்கு அண்டை மாநிலத்தில் ஓடும் அமுதாரியா ஆற்றின் நீரை 1,400 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டி திருப்பிக்கொண்டுவந்து மகத்தான சாதனை செய்திருக்கிறார்கள்.
இதன் விளைவாக 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. லெனின்-காரகம் கால்வாய் என்று அழைக்கப்படும் இந்தக் கால்வாய் உண்மையில் பெரிய ஆறு ஆகும். இதில் கப்பல்கள்கூட செல்லுகின்றன. இந்த ஆற்றை வெட்டுவதற்கு சோவியத் நாட்டிலிருந்த பல்வேறு தேசிய இனமக்களும் ஒன்றுசேர்ந்து அளித்த ஒத்துழைப்பும், உழைப்பு மட்டுமே காரணம் அல்ல, அந்த மக்கள் உண்மையான மார்க்சியவாதிகளாக இருந்ததுதான் முக்கியமான காரணமாகும்.
தேசிய ஒருமைப்பாடு பற்றி வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் கட்சியும், விவசாயிகள்-பாட்டாளி வர்க்க நலன் பற்றி ஓயாது பேசும் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியும் இணைந்து பொய்யான தளத்தின் மேல் நின்று பெரியாறு அணைநீரை தமிழக விவசாயிகள் பயன்படுத்தவிடாமல் தடுத்து வருகின்றன. இந்தியா ஒரே நாடு, மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இவர்கள் பேசுவது உண்மையானால் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவது ஏன்?
சோவியத் திருநாடு உடைந்து சிதறியதற்கு வேறு காரணங்கள் இருந்தன. இந்த நிலைமை நீடிக்குமானால், இந்தியா உடைந்து சிதறுவதற்கு உம்மன்சாண்டிகளும், அச்சுதானந்தன்களும்தான் முழுமையான காரணமாக இருப்பார்கள்!
          

செவ்வாய், 13 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு


மேதா பட்கர் கூட முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவுக்கு ஆதரவு கொடுக்கிறார், 
மாற்று அரசியல் பற்றி சொல்லித் தரும் தமிழ் இயக்கங்களோ தங்களுக்குள் ஒன்று படாமல் தனித்து நின்றே போராடி அரசியல் மட்டுமே செய்கின்றனர்.. 

மலையாளிகளையே வெறுக்க சொல்லித் தரும் அரசியல் சரி தானா என்று புரியவில்லை?  ஈழத்து தலைவன் பிரபாகரனுக்கு ஒரு மலையாளியை விட யார் அதிகமாய் ஆதரவு கொடுத்தது. நேற்று வரை சகோதரன் போல் பழகிய ஒரு சக தொழிலாளியை வஞ்சிக்கத் தொடங்கியாகிவிட்டது, சுற்றியிருக்கும் தேநீர் கடைகளில் கூட மலையாளியின் கடை தவிர்த்து, வெந்நீர் ஊற்றும் தமிழன் கடைகளை நோக்கினால் ஒன்று தேவர் டீ ஸ்டால், மற்றொன்று காமராஜர் டீ ஸ்டால், இன்னொன்று அம்பேத்கர் டீ ஸ்டால், தமிழன் என்ற ஒரே கோட்டிற்குள் நாமெலாம் வந்துவிடத் தயாரா??.....

வெள்ளி, 9 டிசம்பர், 2011

புத்தகப் பார்வை -2 சில்லறை வணிகம்

-- அன்புடையீர் அனைவருக்கும் என் வணக்கம் ,


சில்லறை வணிகம்
சுதேசி - வெளியீடு - ஆசிரியர் - வானமாமலை 

அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம், மாறி வரும் நுகர்வு கலாசாரம் நம்மை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறது என்று எளியோருக்கும் புரியும் வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆசிரியர் கூறியுள்ளார். 

அந்நிய நேரடி முதலீடு என்றால் என்ன?
சில்லறை வணிகங்கள் என்பன யாவை?
இந்தியாவில் தற்போதைய சில்லறை வணிகச் சந்தையின் மதிப்பு என்ன ? அதன் வேலை வாய்ப்பு ? அதன் சமூக சூழல்.
அந்நிய நேரடி முதலீட்டால் ஏற்படும் விபரீதங்கள் யாவை?
         உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் 
         சமுதாய சீர்கேடு
         கலாசார சீர்கேடு 
         வேலையின்மை 
 என அந்நிய நேரடி முதலீட்டை நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை எளிமையான உதாரணங்களோடும் , ஆதாரங்களோடும் , முக்கியமாய் வரலாற்று பிண்ணனியோடும் சொல்லியிருக்கிறார்.

மேலும், நாம் நுகர்வு விசயத்தில் கவனம் கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும், எதிர்காலத்தில் வரும் இது போன்று வரும் பிரச்சனைகளுக்கு ஆயத்தம் ஆக வேணிடிய சூழலைக் குறித்தும் சுருக்கமாக கூறுகிறார்.

மொத்தத்தில் சிறு வணிகம் செய்வோர் மற்றும் இல்லாமல் , நுகர்வுப் பண்பை நவீனமாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவரும், சமூக வலைதளங்களில் சம்மூக அக்கறையுடன் விவாதம் செய்வதில் பிரியமுள்ளோரும் படிக்க வேண்டிய புத்தகம் 

படிக்கும் பண்பு நம்மிடையே வெகுவாகவே குறைந்துவிட்டதால் இந்த மாதிரியான   புத்தகங்கள் பற்றிய நம் பார்வை மாற வேண்டும், இலக்கியம் தாண்டியும் நாம் புத்தகங்கள் வாங்க வேண்டும் 


Published by
Swadeshi Jagaran Manch, Tamil Nadu
Books available at
K Block, No. 75, 14th Street,
Anna Nagar East, Chennai - 600 102
Phone : 94448 35513 / 9443140930
Email: swadeshiseithi@yahoo.co.in

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

நான் ஐயப்பனைக் குற்றம் சொல்லவில்லை - பாகம் 1

நான் ஐயப்பனைக் குற்றம் சொல்லவில்லை - பாகம் 1


இது ஒரு சாமான்யன் சொல்லும் மாற்றம் பற்றியக் கதை 


எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றம் ஏன் இங்கே பதிவாக்கப் பட வேண்டும்?நானும் சமூகக் கடலின் ஒரு துளி தானே! சாமான்யர்களின் ஒருவன் தானே! எனக்குள் இருக்கும் மாற்றம் ஒரு சமூக மாற்றத்தின் அடையாளமாய் ஏன் இருக்கக் கூடாது? என்று தோன்றியதில் தான் இதை எழுதுகிறேன்.

மனிதன் தன் வாழ்கையில் எந்த ஒன்றை அடைவதற்காக  ஏறாத மலை ஏறி, எதையோ தேடி அடைந்ததாய் நினைத்துக் கொண்டும் , நம்பிக் கொண்டும் தன் வாழ்க்கையை வடிவமைத்துக்  கொள்கிறான்??  இந்தக் கட்டுரையை எழுதும் நான் நாத்திகன் அல்ல, ஆனால் என்னை அந்த ஒரு சித்தாந்தத்தில் தள்ளும் வேலையை போலி ஆன்மீக வாதிகளும், எதற்கும் உதவாத சடங்குகளும், மதவாதங்களும் , சாதிப் பிரிவினைகளும் தான் செய்து கொண்டிருக்கின்றன. 

சபரிமலை - தென்னிந்திய ஆண்களின் புனிதத் தளம். கோடான கோடி பக்தர்களை ஆட்கொண்ட ருத்ர மூர்த்தி சபரி சாஸ்தா, ஏழைப் பங்காளன் அய்யன் ஐயப்பன், மதங்களைக் கடந்தவன் காட்சி தரும் புனித ஸ்தலம் என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.

இந்த யாத்திரைக்கு நாம் சில நாட்கள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து நம் வயிற்றையும், புலன்களையும் கட்டுப்படுத்தி, பக்தியுடன், தூய்மையுடன் ஒரு மலைப் பயணம் செய்து வரும் போது, அந்த இயற்கை அழகிலும், இறைவன் நமக்கு அருள் செய்வான் என்கிற உறுதியான நம்பிக்கையும் நமக்கு battery- recharge செய்யப்பட்டது போல் ஒரு உணர்வைத் தருகின்றன. எனினும் கடும் விரதம் இருந்து, கடன் வாங்கி கஷ்டப்பட்டு தனக்கு ஒரு விடிவுகாலம் வேண்டும் என்று நம்பிக்கையுடன் செல்லும் சில பக்தர்கள் அந்த மலையிலேயே தங்கள் உயிரை விட்டு, தங்கள் குடும்பங்களுக்கு இன்னல் தருகின்றனரே ?? இது ஏன் ?? அவர்கள் குடும்பம் அதன் பின் யாரால் காப்பாற்றப் படும்??

இன்று நாம் சபரிமலை செல்வது அவசியம் தானா? 
நாம் என்று அரசியல் ரீதியாக நான் தமிழனையேச் சொன்னாலும், ஆண்டவனை நம்பி சிலரின் சுயநலன்களுக்காக பலியாடாகும் யாவருக்கும் இது பொருந்தும். 

நானும் என் முதல் வருடத்தில் எந்த ஒரு பெரிய கஷ்டமும் இன்றி சென்றபொழுது, மெய்மறந்து நின்றேன் , ஐயப்பன் சந்நிதானத்தில் நின்று தரிசிக்கவே நொடிகள் தராத அந்த கோயிலில், அய்யன் முன் உட்கார்ந்து எழும் அளவு எனக்கு கிடைத்த அனுமதியில் அதை பாக்கியமாய்க் கருதி என்னையும் மறந்து அழுதேன், என் குருசாமிக்கு சன்னிதானத்தில் கிடைத்த அறிமுகங்கள் மூலம் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எல்லா தரிசனமும் சிறப்பாய் நடந்து முடிந்தது.அதை நினைக்கும் பொழுது சுகமான ஒரு பயணமாகவே தோன்றியது.

இரண்டாம் முறை நான் செல்லும் பொழுது தான் எங்கள் ஊரார்களுடன்  செல்லும் பொழுது தான் நான் சபரிமலயினைப் பற்றி உணர ஆரம்பித்தேன். அதிலும், ஓய்வே இல்லாமல் பெரும்பாதையில் வந்த நான், சபரிமலையில் ஏறத் திராணியற்று நிற்க, என்னை (95  கிலோ) என்னுடன் வந்த இரு சாமிகள் என் தோள்களில் முட்டுக் கொடுத்து தூக்கிச் சென்றனர் , ஒருவர் என் அண்டை வீட்டு நடுத்தர வயது கொண்டவர், மற்றொருவன் என் பள்ளித் தோழன் சாரதி (50 கிலோவுக்கும் குறைந்தவன்) எங்கள் கூட்டத்தில் எல்லோருக்கும் உதவிகள் செய்து,என்னையும் தாங்கிக் கொண்டு மற்றொரு கையில் பூஜை நெய்யும் கொண்டு வந்தான்.

 சபரிமலையின் சிறப்பே அந்த மலையின் இயற்கை அழகும் அதன் கடுமையும் தான், என்ன தான் வசதிகள் செய்து கொடுத்தாலும் அந்த மலையின் கடினத்தை யாராலும் மாற்ற முடியாது, அந்தக் கடினம் இருக்கும் வரை தான் அம்மலையின் கூட்டம் கட்டுக் கடங்காது போய்க்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன் 


அந்த மலையின் சிறப்பே அது தான், அவ்வளவு கடுமையான மலைகளில் நம் மீதுள்ள நம்பிக்கை குன்றி, பக்தியைத் தவிர வேறு வழியில்லாமல் ஐயப்பனை மட்டுமே நினைத்து கண்ணீர் விட்டு, உருகி, மெய் மறந்து, பார்ப்போரை எல்லாம் அய்யனாக நினைத்து, சந்நிதானம் சென்று தரிசிக்கும் வேளைகளில் நம்மை பாண்டி என்று ஏளனப் படுத்தும் காவலர்களையும், ஐயப்பனுக்கு பூஜை செய்யும் நம்பூதரிகளையும், ஒரு இயற்கைப் பேரழகை கற்பழிக்கும் அவல நிலையையும் பார்க்க நேரும் போதும்.. எல்லாவற்றிற்கும் மேல் பல வருடங்களாக ஏமாற்றி வரும் மகர ஜோதி எனும் ஏமாற்று தந்திரமும்... தத்வமசி எனும் மிகப் பெரிய ஆன்மீகத் தத்துவத்தை பொய்த்துப் போக வைத்து விட்டன ..நானும் என் முதல் வருடத்தில் யாரோ ஒருவருக்கு கிடைக்க வேண்டிய தரிசனத்தினை எனக்குப் பயன்படுத்தியதன் பாவம் தான் இரண்டாம் வருடம் எனக்கு நேர்ந்த கசப்பான சம்பவங்கள்.

நான் சென்ற இரண்டாம் ஆண்டு , என் கண் முன்னே கிட்ட தட்ட 5 பேரின் சடலங்களயாவது நான் பார்த்திருப்பேன், அருந்த மின்சாரம் தாக்கி இரண்டு பேர், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்ற போதும் சிகிச்சை செய்ய அனுமதிக்க தாமதித்ததால் ஒருவர், எல்லாவற்றிற்கும் மேல் பதினெட்டு படிகளில் தூக்கி விடும் பொழுது இடறி விழுந்த ஒரு மனிதர் ஒரு முதிய பாட்டியை தள்ளிவிட அந்த பாட்டியும் ஆவலுடன் நின்றிருந்த ஒரு சிறுவனும் படிகளில் விழுந்து மரணம் என்று என் நெஞ்சை உறைய வைக்க, அந்த கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி மிதி பட்டு, அடி பட்டு , தங்களுக்குள் சண்டையிட்டு, தன்னுடன் அழைத்து வந்த குழந்தைகளை இம்சித்து , அன்று நேர்ந்த துன்பங்கள் முழுதும் சொல்ல என்னால் முடியாது.(தான் நேரடியாக பாதிக்கப் படாதவரை வேறு யாவரின் துன்பங்களும் நம்மால் உணர முடியாது என்ற பேருண்மையையும் அப்பொழுதுக்  கற்றுக் கொண்டேன்)

நான் இதை எழுதுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அன்று தான் எனக்குத் தெரிந்தது, 'சன்னிதானத்திற்குள்  ஒரு மரணம் நிகழ்ந்தால் அந்தக் கதவுகள் அடைக்கப் பட்டு சன்னிதானம் முழுக்க கழுவி விடப்பட்டு சில பூஜைகள் செய்தபின் தான் திறக்கப் படுமாம்', என்ன கேவலம்.??. இறந்த ஒரு பக்தனின் உயிர் ஒரு தெய்வத்திற்கு தீட்டு ஆகும் என்றால், இறைவன் எப்படி மோட்சம் கொடுப்பான் எங்களுக்கு ???? அன்றிரவு ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை நடை சாத்தப் பட்டதால், நெருக்கடி மிகவும் ஏற்பட்டது (அந்த வருடத்தில்   மகர ஜோதிக்கு அடுத்து அன்று தான் அதிக கூட்டம் வந்ததாகத் தகவல்)..பதினோரு மணி வரை நீட்டிக்கப் பட்டு இருந்தாலும், அளவுக்கதிகமான தள்ளு முள்ளு ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கனோர் காயம் பட்டனர்.

எனினும் இந்த நெரிசலில் பல கொடி பிடித்த மலையாளச் சாமிகளும், போன வருடம் நான் சென்ற கூட்டம் போல் செல்வாக்கு பெற்ற கூட்டமும் குறுக்குவழியில்(வலப்புறமாய்) சென்றது. நாங்களும் கூட அப்படி செல்ல எத்தனித்தோம், அப்பொழுது நான் கண்ட காட்சி தான் என்னை மிகவும் பாதித்தது. ஒரு மூன்று வயது குழந்தையுடன் வலப்புறமாய் நுழைய முயன்ற ஒரு நடுத்தர ஆந்திர மாநில சாமியைக் கண்டுபிடித்து, அங்கு நின்றிருந்த கமாண்டோ காவலர்கள் அவரை  கன்னத்தில் அறைந்து வெளியே வந்து இட்டனர், தன் தந்தை அடி வாங்கும் காட்சியைப்  பார்த்த அச்சிறுமி மிகவும் அலறினாள், ஆனால் அவன் முயற்சிப்பதை நிறுத்தவில்லை, ஒரு துணை ராணுவப் பாதுகாவலருக்கு வேண்டிய ஒரு மலையாளக் கூட்டமொன்று  எளிதாக உட்புகந்து செல்ல, அவர்களுடன் கலந்து கொண்டே அந்த தெலுங்குச் சாமி உள்ளே சென்றார். தங்களுடன் வேறு யாரோ உடன் வருகிறார் என்று புரிந்துக் கொண்ட ஒரு மலையாளச் சாமி, சன்னிதானத்தில் உள்ள தத்வமசி எனும் {யாவுளும் இருப்பது நீயே (இறைவன்) }  தத்துவத்தின் பொருளை உணர்த்து,  தன்னுடன் வந்த " கள்ளம் செய்த ஒரு தெலுங்குச் சேட்டனை " அங்கு நின்றிருந்த அதே கமாண்டோ சேட்டனிடம் பிடித்துக் கொடுக்க, அவனும், அவனுடைய குழந்தையும் மிருகத்தனமாய் தூக்கி எறியப்பட்டனர், மலையாளத்தில் அவனை திட்டியவை எனக்கு புரியவில்லை "ஒரு வேளை இல்லாத கடவுளைப் பார்க்க குறுக்கு வழியாடா உங்களுக்கு??" என்று இருக்கலாம்.

தன் தந்தையை அடிக்கும் போது தடுத்த அச்சிறுமிக்கும் வாயில் காயம் ஏற்ப்பட, இரத்தத் துளிகளை துடைத்துவிட்டு அவர் மறுபடியும் கியுவுக்குள் சென்றார்.என் மனம் கடும் உளைச்சலுக்குள் சென்றது. ஐயப்பன் என்ற மந்திரம் அப்படி நமக்கு என்ன செய்துவிடும் ? என்று தோன்றியது, எந்த ஒரு நாளிதழ்களிலும் அன்று நடந்த  சம்பவங்கள் (10 பேர் மரணமுற்றதாக சன்னிதானத்தின் மருத்துவமனையில் எனக்கும் முதலுதவி அளிக்கும் போது சொல்லிக்கொண்டிருந்தனர்) பற்றி வரவில்லை. பத்திரிக்கைகள் அன்று ஏற்பட்ட மரணங்களை கோடிட்டு காட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகளை சொல்லியிருந்தால், நெஞ்சை உழுக்கிய மகர ஜோதி விபத்து  நிகழ்ந்திருக்காது. இது ஒரு வகையில் தேவஸ்தானம் ஏற்படுத்திய கொலையே!!


உண்மையில் ஐயப்பன் தான் கோடீசுவர நம்பூதரிகளிடமும், அரசியலிலும், இனவாதங்களிலும் சிக்கி தானும் - தன் வனமும் அழுக்காவதை உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறான்.

ஏனோ அன்று துளிர்ந்த ஒரு துளி பகுத்தறிவோ, இல்லை மரண பயமோ என்னை அந்த வரிசையை விட்டு விலகி சன்னிதானம்  செல்லாமல் விடுதிக்குச் செல்ல பணித்தது, எல்லோரிடமும் நான் தரிசனம் செய்ததாய் பொய் சொன்னேன். அலுப்பில் அன்றிரவு நான் உடனேத் தூங்கிப் போனாலும் , விடியும் போது பெருத்த பாரத்துடன் விழித்தேன்,குற்றவுணர்வுடன் தவித்தேன். அப்பொழுது எல்லோரின் நெய்த் தேங்காயும் உடைக்கப் பட்டது, என் முறை வந்ததும் எங்கள் குருசாமி என் விரதம் மிகவும் சுத்தமாய் இருந்திருக்கிறது என்று சொல்லி என்னை பாஸாக்கினார். ஆனால் என்னையே தாங்கி வந்த என் பள்ளித் தோழன் மலையிறங்கிய இரண்டு மாதங்களுக்குள், எங்கள் ஊர் ஐயப்பன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள சாலையில் ஒரு லாரியின் சக்கரங்களுக்கு இரையாகினான். எட்டு வருடங்களாய் அவன் கொண்டிருந்த பக்தி அவன் குடும்ப பாரங்களை இனித் தாங்க போவதில்லை.

யேசுதாசைப் போலவே அரிவராசனம் பாடும் என் நண்பனின் மரணம் கூட அந்த சன்னதியில் நிகழ்ந்திருந்தால், அவன் ஆசைப்பட்ட மரணம் (அங்கேயே இறப்பவர்களுக்கு மோட்சம் என்று அவன் அடிக்கடி எனக்கு சொல்லி வந்தான்) கிட்டியிருக்கும், எங்கள் ஊரார்க்கும் அந்த பயம் சிலருக்காவது என்னைப்போல் கேள்வி எழுப்பியிருக்கும். எங்கள் ஊரின் ஐயப்பன் கோயிலில் எல்லா எலக்ட்ரிகல் வேலையும் செய்து, பக்தர்களுக்கும் மிகவும் பரிட்சயமான அந்த   
சாமி இல்லாமல் இந்த வருடம் அவர்கள் செல்லும் பயணம் கண்டிப்பாக பேரிழப்பாக இருக்கும்.


சன்னிதானத்தில் அடி வாங்கிய சிறுமியின் இரத்தத் துளியும், என் நண்பனின் மரணமும் என்னை ஆன்மீகத்திலிருந்து என்னை எங்கெல்லாம் இட்டுச் செல்லும் ??? 


அடுத்தப் பதிவு - அய்யப்பனைச் சூழ்ந்துள்ள அரசியல் மற்றும் ஐயப்பனின் சன்னிதானத்தில் மறைந்துள்ள தமிழரின் பாரம்பரியம் .......


நன்றி 
கரிகாலன் 

(யாரையாவது என் பதிவு புண்படுத்தினால் மன்னிக்கவும்)செவ்வாய், 29 நவம்பர், 2011

தலைவன் இருக்கிறான்

சேலம்: சிங்களப் பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் என்று கவிஞர் அறிவுமதி கூறினார்.

வீரம், அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலை புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும்.

திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைப் புலிகளிடம் சிறைபட்டுவிட்டான். கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில் சில வருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும் என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம் தலைவரிடம் சென்றது.

தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது. குறிப்பிட்ட ஒருநாளில், சிங்கள் வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப விஷயங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் ரயில் நிலையத்துக்கு அந்தப் பெண்ணை புலிகள் அழைத்துச் சென்றனர்.

ஆனால், ஏதோ காரணத்தால் அன்று அந்த ரயில் வரவில்லை. என்ன செய்வது?, ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது? என்று பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள்.

தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண் தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார். அந்த பெண் தன் கணவனுடன் தங்க விரும்பினாள். அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள்.

இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண்.

கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும் எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா?. இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது.

அந்தப் பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல. இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார்.

நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பெளத்த மத குரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மத குருவிடமும் சொன்னான் அந்த சிங்கள ராணுவ வீரன்.

என் கணவன், மாமியார், மத குரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்நோட்டத்தில் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு நின்றாள்.

அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு ராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த ராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார்.

பெண்ணின் கண்ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும், மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான் கண்டுள்ளேன், ஆனால் பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்றார் அறிவுமதி.

தலைவன் இருக்கிறான் 

திங்கள், 28 நவம்பர், 2011

ஆட்டோகிராப் ( நிறைவுக் கதை) - நிலவுக்கும் களங்கம்


            நிசப்தம் குடிகொண்டிருந்த அந்த அறையின் அமைதியை குலைக்கும் விதம் அந்த கருப்பு நிற பழைய டெலிபோன் சப்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அன்று தனக்கு மிகவும் மோசமான நாள் என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டும் , அந்த அழைப்பு தனக்கு வரும் என்று தெரிந்ததால், பயத்துடன் காத்திருந்த அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை நீலா மெதுவாக போனை எடுத்து காதில் வைத்தாள்.

              நீலா- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்று ஒரு மாதம் தான் ஆகியுள்ளது ,  அம்மாவட்டத்தில் விருதிற்காக பரிசீலிக்கப்பட்ட பல ஆண் ஆசிரியர்களையும் தாண்டி அவ்விருது நிலாவை கௌரவப்படுத்தியது. அப்பொழுது மாவட்டக் கல்வி அதிகாரியையும் மீறி கல்வி அமைச்சரிடம் சென்று இடைநிலைப் பள்ளியினை, உயர்நிலைப் பள்ளியாக்க நீலா டீச்சர் எடுத்த போராட்டங்களும், அவள் மீது வளர்ந்து வந்த செல்வாக்கும், இன்று அந்த அதிகாரி நீலாவை வஞ்சம் தீர்ப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை அமைந்தது . பள்ளியின் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தார்.


எல்லா ஆசிரியர்களும் பள்ளியின் பெயர் ரொம்ப கெட்டுப் போனதாய் வருத்தம் தெரிவித்தனர்.இதில் சண்முகம் வாத்தியார் தன் வெறுப்பினை வெளிக்காட்ட யோசனை சொல்வது போல ஆரம்பித்தார்,
"பேசாம,  நம்ம பள்ளி இடைநிலைப் பள்ளியாகவே இருந்திருக்கலாம்" என்று புலம்ப,

"உங்க ஊருக்கு ஹைஸ்கூல் வந்ததனால தான் இப்ப கெடுதலாக்கும்? " என்று காட்டமாய் அவனைப் பார்த்து நீலா  கேட்டாள் ,

அதற்கு - ஆறுமுகம் வாத்தியார், "ஆமா மேடம், அந்த 2 பேரும் வீடு திரும்பலேன்னா, ஜாதிக் கலவரமே வந்துருக்கும் தெரியுமில்ல " என்று எகத்தாளமாய் பேச,

"சண்முகம் சார்! உங்க வகுப்பு மாணவி அவள், நீங்க எல்லாரையும் ஒழுங்க கண்காணிக்காம இப்போ பொறுப்பில்லாம பதில் சொல்றிங்க" என்று சற்று கோபாமாகவே அவனைப் பார்த்துக் கேட்டாள்.

 "ஆமா, நான் தான் காரணம், இனிமே ஒவ்வொரு பொண்ணு வீட்டுக்கும் போய் வாட்ச்மேன் வேலை தான் பார்க்கணும் " -சண்முகம் வாத்தியார்,

மேலும் ,"ரெண்டு ஸ்கூலா பிரிச்சிரிந்தா இந்த அவலம் வந்திருக்குமா? , இல்லைன்னா ,எட்டாம் வகுப்புக்கு மேல பசங்கள மட்டும் வச்சு பள்ளிக்கூடம் நடத்தியிருக்கலாம், அதை விட்டுட்டு இந்த மலைக்காட்டு கிராமத்துல வயசுக்கு வந்த பொண்ணுங்கள எல்லாம் படிக்க வச்சு இப்ப என்ன பெருசா மாறப் போகுது?, இதுல இவுங்களுக்கு கேம்ஸ் பீரியட் வேற, அந்த பெருமாயி இருக்காளே, அவளுக்கு  மனசுல பெரிய பீ.டி உஷான்னு நினைப்பு, அரை டவுசரு போட்டுக்கிட்டு ஓட்டப் பந்தயம், கபடின்னு ஊர் ஊரா சுத்துவா- எனக்கு அப்போதே பயம் வந்துச்சு "

"சார்! நீங்க உங்க பசங்கள சரியா கவனிக்காம, ஏதேதோ காரணம் சொல்லறிங்க? இனிமேலாவது நாம் என்ன செய்யலாம்னு சொல்றீங்களா? நாம் எடுக்கும் முடிவுகள் பற்றி நான் D.E.O கிட்ட சொல்லணும் " நீலா,

"மேடம் மறுபடியும் நீங்க எம்மேலேயே பழிய சுமத்துறிங்க, நீங்க தான் வயசுக்கு வந்த பெண்களைக்கூட விளையாட அனுமதிக்கிரிங்க, நீங்க தான் கண்டிப்பா நடந்துக்கணும். அவுங்க வந்தோமா படிச்சோமான்னு தான் இருக்கணும் " என்று மீண்டும் நீலா மீதே குற்றம் சுமத்தினார்.

           அந்த மீட்டிங்கில் ஒரு முடிவு எடுக்கப் பட்டது , பிரேம், பெருமாயி இருவரையும் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர், ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளவோ தடை செய்யப்பட்டது , சந்தேகம் வருமாதிரியான மாணவர்களைப் பற்றி ஒரு பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது . அப்படி சந்தேகத்தில் உள்ளோர்கள் யாவரும் பாரபட்சமின்றி 'களை' எடுக்கப் பட வேண்டும் என்று சண்முகம் பிடிவாதமாய் நின்றார்.


           அப்படி தயாரிக்கப் பட்ட பட்டியலில் முதல் ஆளாக வெண்ணிலா இருந்தாள், வெண்ணிலா நன்றாகப் படிப்பாள், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என்று எல்லா போட்டிகளிலும் முதலிடம் வாங்குவாள், பெருமாயியின் தோழி, சக விளையாட்டு வீராங்கனை. மேலும் ஒரு முக்கிய காரணம் காட்டி அவளைப் பள்ளியில் இருந்து நீக்கிவிடுமாறு சண்முகம் வாத்தியார் கூறினார்.

            அந்தக் காரணத்தை அறிந்த நீலாவோ கோபத்ஹ்டின் உச்சிக்கே சென்றாள் பின்னர் சற்றுக் கட்டுப்படுத்திக் கொண்டே, "அவளை டிஸ்மிஸ் செய்வது அவள் வாழ்க்கையை பாழாக்கி விடுமே , நாம் வேண்டுமானால் அவள் பெற்றோர்களை அழைத்துப் பேசலாமே" என்று நீலா சொல்ல,

"அவளை பள்ளிலேயே வச்சிங்கன்னா இன்னும் பல பிரச்சனைகள சந்திக்க வேண்டியது வரும்" என்று ஆணித்தரமாக எச்சரித்தார்.

             சண்முகம் வாத்தியார் மற்ற எல்லா ஆசிரியர்களையும் வெண்ணிலாவை பள்ளியில் இருந்த வெளியேற்ற வேண்டியதன் அவசரத்தை விளக்கினார்.எல்லோரும் ஒப்புக் கொண்டனர், நீலாவின் நிலைமையோ மிகவும் தர்ம சங்கடமானது, வெண்ணிலா நல்ல பெண், படிப்பிலும் கெட்டி இப்படி எதுவும் செய்ய மாட்டாள் என்று அவளுக்கு ஒரு திடமான  நம்பிக்கை இருந்தது , எல்லாவற்றிற்கும் மேல் சண்முகம் வாத்தியாரின் கொடூர எண்ணங்கள் அவளை மிகவும் எரிச்சலடையச் செய்தன.  வெண்ணிலா பெருமாயியின் தோழி என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமல்லாது, ஒரு பூப்படைந்த பெண் தொடர்ந்து 6 மாதங்கள் பள்ளிக்கு வருவது அவருக்கு சாதரணமாகத் தெரியவில்லை, அந்த பட்டிக்காட்டுப் பள்ளியில் பூப்படைந்த பெண்கள் யாவரும் அந்த நாட்களில் ஒன்றிரண்டு நாள் விடுமுறை எடுப்பது வழக்கமாய் இருந்தது, இதை எப்பொழுதும் கூர்ந்து கவனிக்கும் சண்முகம், ஆறு மாதங்களுக்கு முன்னரே அவள் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்றிருந்ததால், அவள் விடுப்பின்றி வாரத்தின் ஆறு நாட்களும் வருவது சந்தேகத்தைக் கொடுத்தது. அவர் சொன்னதை மற்ற ஆசிரியர்களும் ஆமோதித்தனர்.

               வெண்ணிலாவும் விளையாட்டுகளில் பங்கேற்ப்பவள் என்பதால் பெருமாயியைப் போலவே சட்டையும்,கால் சட்டையும் அணிந்து பயிற்சி செய்வதையும், அவள் நிறைய ஆண்களோடு பேசிப் பழகுவதையும் ,எல்லாவற்றிற்கும் மேல் "அவள் நடத்தையே சரியில்லை'' என்றும் அடுக்கிக் கொண்டிருந்தார் .

"வெண்ணிலாவை நானே விசாரிக்கிறேன் அதன் பின் நாம் முடிவெடுப்போம்" என்று நீலா அவரிடம் சொல்லி, "இதைப் பற்றி வேறு யாருடனும் விவாதிக்க வேண்டாம்" என்றும் தீர்கமாய் சொல்லிவிட்டாள்.

                 அன்றிரவு , ஒரு வாரமாய் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை ஒரு கணம் நினைத்து பார்த்தாள், நடந்தவை யாவும் சினிமாவில் வந்ததைப் போலவே இருந்தன. அன்று காலை- திங்கட்கிழமை என்பதால் எப்போதும் போல கொடி ஏற்றத்துடன் பள்ளி ஆரம்பித்தது, சற்றும் எதிர்பாராமல் திடீரென்று ஒரு கூட்டம் ஆவேசத்துடன் பள்ளிக்குள் வந்து , பள்ளியின் வாசலில் கூச்சல் போட்டுக் கொண்டும், உதவித் தலைமை ஆசிரியருடன் பயங்கரமாக வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.

        'என்ன விஷயம் ?' என்று கேட்கச் சென்ற தலைமை ஆசிரியர் மீது அந்தக் கூட்டத்தின் கோபம் திரும்பிக் கொள்ள, அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது, இன்று பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்று.'ஒன்பதாவது படிக்கும் பெருமாயி என்கிற பெண்ணும், 10ஆம் வகுப்பு படிக்கும் பிரேம்குமார் என்கிற பையனும் ஓடிப் போயினர்' என்றத் தகவல் தான் அது. பெருமாயி  படிக்கும் ஒன்பதாம் வகுப்பு 'D' செக்சனின் வகுப்பாசிரியர் என்பதால் உதவி ஆசிரியர் சண்முகம் மீது அம்மக்கள் அதிக வெறியுடன் இருந்தனர். அதே நேரம் பிரேம்குமாரின் சொந்தமும் திரண்டு வந்தது பள்ளிக்குள், கொஞ்ச நேரத்தில் இரண்டு கோஷ்டிகளும் செய்து கொண்டிருந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.  பெருமாயியின் தாய் மாமன் ஒரு கத்தியைக் கொண்டு பிரேம்குமாரின் தந்தையைக் குத்த முயற்சித்தான் நல்ல வேளையாக அங்கு வந்த காவலர் ஒருவர் அவனை தடுத்தார் , பிரச்சனையை சமாளிக்க ஒரே வழி போலீஸ் தான் என்பதை முன்னரே உணர்ந்து காவல் நிலையம் சென்று யாரேனும் அங்கு அழைத்து வர பியூனை அனுப்பியதால் இங்கே பெரும் பிரச்னை தவிர்க்கப்பட்டது.

       காவல்துறை ஆய்வாளர் அங்கு  வந்து அவர்களை முதலில் கண்டித்து, பின்னர் சமதானப் படுத்தினார். சற்று நேரத்தில் எல்லோரையும் பள்ளிக்கு வெளியே அனுப்பினார். ஓடிப்போன மாணவர்களை பிடித்துத் தருமாறு போலீசில் விண்ணப்பம் வைத்தார் தலைமை ஆசிரியர். சற்றைக்கெல்லாம், அந்த ஊரில் அந்த மாணவர்கள் ஓடிப்போன விஷயம் காட்டுத் தீயாக பரவியது. இரண்டு பேரும்  வெவ்வேறு ஜாதிக் காரர்கள் என்பதால் பிரச்சினை பெரிதாகி எதாவது ஜாதிக்கலவரம் ஆகிவிடுமோ என்று ஊரில் பதட்டம் நிலவியது. பள்ளியிலும் , இந்தப் பிரச்சனையை முன்னிட்டு மாணவர்கள் ஸ்ட்ரைக் பண்ணலாம் என்று பியூன் மூர்த்தி யூகித்து வந்தான்.

       ஒரே நாளில் ஊர்ப் பெரியவர்கள், அந்தக் குடும்பத்தினர்கள், காவல் துறையினர் என எல்லோரும் தலைமை ஆசிரியரிடம் பல கேள்விகள் எழுப்பி விட்டனர். எல்லாவற்றிற்கும் மேல், இந்த விஷயம் மாவட்ட தலைமை அதிகாரியிடம் சென்றடைந்தால் தன் பெயருக்கு பெறும் பங்கம் நேருமே  என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவரும் போனில் அழைத்து தன் வஞ்சம் தீர்த்துக் கொண்டிருந்தார், யாரோ அதற்குள் அவருக்கு இந்த செய்தி பற்றி அவரிடம் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தாள். ஒரு வழியாக இரண்டு நாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு அவரை டீ.ஈ.ஓ பணித்தார். அந்த ஊரிலும் எப்போது வேண்டுமானாலும் ஜாதிக் கலவரம் வந்து விடும் என்ற அபாயம் இருப்பதால், நீலாவுக்கும் அந்த முடிவு நல்ல முடிவாகத் தோன்றியது.

           நீலாவுக்குத் தெரியும் ,'அவருடைய வகுப்பு மாணவி தான் இப்படி செய்திருக்கிறாள்' என்ற ஒரே காரணத்தால் தான் உதவித் தலைமை ஆசிரியர் சண்முகம் சற்று அடக்கி வாசிக்கிறார்,  இல்லாவிட்டால் - தான் அரும்பாடுபட்டு முயற்சித்த தலைமை ஆசிரியர் பதவிக்குத் தடையாய் நின்ற தன்னை இந்த விஷயத்தை வைத்து வஞ்சம் தீர்த்திருப்பார் . 

               ஏனென்றால், அந்த ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே  இருந்த இடைநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்க அனுமதி கிடைத்த போது, இரண்டு பள்ளியாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனிப் பள்ளியை இருந்தால் தனக்கும் தலைமை ஆசிரியர் பதவி கிடைக்கும் என்று அவர் வைத்திருந்த திட்டம், நீலாவின் திடமான முடிவிலும், முயற்சியிலும் ஒரே உயர்நிலைப் பள்ளியாக மாறியது.

                   தன் வாழ்க்கையிலும், தன் பன்னிரண்டு வயதில் ஒருவனை நம்பி மோசம் போனதை எண்ணிப் பார்த்தாள்,  தான் முதலில் ஒருத்தனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி வந்ததும், ஒரு வாரத்தில் தனியாக குடும்பம் நடத்த பயந்து தன்னை அப்படியே விட்டுவிட்டு வேறு ஊர் ஓடிய தன் பழைய காதலனும், தன்னை அடித்து உதைத்த பெற்றோர்களும் நினைவிற்கு வந்தனர். அந்த அறியாத வயதுக் காதல், இரண்டு வருடங்கள் தன் படிப்பை முடக்கி விட்டதையும்,  பிறகு தன் தாய் மாமனின் அறிவுரைப்படி தன் படிப்பை தொடங்கச் சம்மதம் பெற்று வரும் போது, சமூகம் தன்னை அழைத்த பெயர்களான "ஓடுகாலி, மூதேவி, மோசம் போனவ " என்று தன்னை பழித்ததையும் நினைத்துப் பார்த்தாள். பல வருடங்களுக்கு முன் பெண்களுக்கு நேர்ந்துக் கொண்டிருக்கும் இம்மாதிரியான கொடுமைகள் இன்னும் தொடர்வதை எண்ணி பெருமாயியின் நிலையை எண்ணிக் கவலை கொண்டாள், அதற்கேற்றாற்போல் பெருமாயி , பிரேமுடன் ஓடிப்போன இரண்டாவது நாளே அவனால் கைவிடப்பட்டாள், முதலில் பெருமாயி வீடு வந்து சேர்ந்தாள், போலிசுக்குச் சென்ற பிரச்சினை கூட பணம் கொடுத்து சரி செய்யப்பட்டது, இருவரும் அவர்களுடைய வீடு திரும்பினர். ஊரிலும் கூட அமைதி திரும்பியது , ஆனால் பள்ளியில் மட்டும் அந்தச் சம்பவம் பல கொடுமைகள் நடைபெறக் காரணமாய் அமைந்தது.

                                       அடுத்தநாள் மதியவேளை, வெண்ணிலாவைத் தன் அறைக்கு நீலா அழைத்தாள், சற்றுக் கடுமையான குரலுடன் வெண்ணிலாவை நோக்கி  "கடைசியா உனக்கு எப்போ தீட்டு வந்தது" என்று அதட்ட , வெண்ணிலா - கண்களில் கண்ணீருடன்  - "மிஸ் என்னை மன்னிச்சிடுங்க மிஸ் " என்று அழுதாள் ,
 "அழாமல் ஒழுங்கா உண்மையச் சொல்லு !! இல்லன்னா பள்ளியிலிருந்தே உன்னை அனுப்பிடுவோம்"என்றாள் நீலா.
 மறுபடியும், வெண்ணிலா அழுதுக் கொண்டே, "மிஸ் என்னை மன்னிச்சிடுங்க மிஸ் !! எங்க அய்யாவுக்கு நெறைய கடன் இருந்துச்சு, அதனால நான் வயசுக்கு வந்ததா பொய் சொல்லி தெரட்டி  வச்சு மொய்ப் பணம் சேர்த்து கடனக் கட்டுச்சு ,அதனால தான் நான் காலாண்டுத் தேர்வுல லீவு போட்டேன், நான் இன்னும் வயசுக்கே வரல. என்னை ஒன்னும் செஞ்சுராதிங்க மிஸ்." என்று கதறினாள். நீலாவால் அதற்கு மேல் ஒன்னும் கேட்க முடியவில்லை , அந்த இடத்திலேயே சிறிது நேரம் கல்லாய் நின்றாள் .
 
             வெண்ணிலாவை வகுப்பிற்கு அனுப்பிவிட்டு,  தன் பழையக் காதலன், பிரேம் குமார், சண்முகம் வாத்தியார், டீ.ஈ.ஓ என்று நான்கு பேருக்கும் இணையாக நான்கு தலைவலி மாத்திரைகளை வாங்கி வர தன் பியூனை பணித்தவாறே, மறுபடியும் தலையில் கை வைத்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

பாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்

நிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு,


நிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர்  செந்தமிழனுக்கு,

பெருமையுடன் ஒரு முதல் வரிசை ரசிகனின் பார்வையும் பாராட்டுகளும்,

முதலில் இது ஒரு வெற்றிப் படம் என்றுத் தெரிந்து கொண்டேன், வந்தேறிகளை நேரடியாக எதிர்க்கும் படம் என்பதால் மட்டுமல்ல, இப்படி ஒரு படைப்பு நம் மொழியில் உருவானதே ஒரு வெற்றிதான்.

அநேகமாக டாப் டென்னில் வரும் அனைத்து படங்களும் பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமானப் படம் என்று இருந்தாலும் , கதைக்குள் நம்மை கரையவைக்கும் மந்திரப் படைப்புகள்(திரைப் படங்கள்) மிகச்சில மட்டுமே உள்ளன, அந்தமிகச் சில படைப்புகளில் ஒரு சிறந்த படைப்பு எனச் சொல்லும் திருப்திக்காக இதை அரிய படைப்பு எனலாம். இந்த பார்வையை எழுதும் அதே வேளையில், இந்தப் படம் வணிகரீதியாக சந்தித்துக்கொண்டிருக்கும் சிக்கல்களை நினைக்கையில் தாங்க முடியா வலி ஒன்றும் கூடவே இருக்கிறது...

வலி ஏன்? இன்றைய சினிமாச் சந்தை -  கார்ப்பரேட் முதலாளிகளிடமும், அரசியல்வியாதிகளிடமும், மசாலா ரசனைகளிலும் சிக்கியதால், இன்று புதியவர்கள், புரட்சியாளர்கள், திரைப்படங்களை நல்லதொரு ஊடகமாக்க நினைக்கும் கலைஞர்கள் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்று தங்கள் கட்டுரையை முகநூலில் இன்று வாசிக்கும் போதே நன்று புரிந்துகொண்டேன், தங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட 1911  படத்திற்கு கிடைத்த வரவேற்பை பற்றியும் எழுதியிருந்தீர்கள், அந்தப் படம் கூட (வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களைச் சொல்லாமல் ஒரு வரலாற்றுப் புரட்சியைத் தான் சித்தரிக்கிறது) இங்கு பெரும் தோல்வி அடைந்தாலும், அவர்கள் ஊரில் நல்ல மதிப்பையும் வெற்றியைப் பெற்றதன் காரணம் அவர்களுக்கு தெரிந்திருந்த அந்த வரலாறு. இந்த படம் பற்றிய அறிவு நமக்கு சிறிதேனுமிருந்தால் மட்டுமே கதைக்குள் நாமும் அமர முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சில வணிகரீதியான் (economical  advantage) சாதகங்கள் தங்களுக்கு இருப்பின் நீங்கள் இமாலய வெற்றியை வெகுஜனங்களிடம் இந்தப் படத்தின் மூலம் எட்டியிருப்பீர்கள், இப்பொழுதும் உங்கள் வெற்றி அத்தகையது தான் - ஏனெனில்,எத்தனையோ மாபெரும் கலைஞர்கள் இருக்கும் இந்தத் துறையில் இந்த அளவுக்கு தனது முதல் படைப்பில் எடுத்திருக்கும் கடுமுயற்சி, எம்மைப் போன்ற எளிய பார்வையாளனுக்கும் புலப்படுவதில் நீங்கள் பெரிய சிகரத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.


எங்கே இந்தப் படம் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கத் தவறிவிடுமோ? என்கிற பயமும் எனக்கு இருக்கிறது, ஒரு பொழுதுபோக்கில் கூட முழு ஈடுபாடற்ற சமுதாயம் (சினிமாவிற்கு கூட மிகத் தாமதமாக வந்துவிட்டு படத்தினை புரிந்து கொள்ள முடியாது கம்மென்ட் அடிப்பது) தங்கள் படங்களை பார்க்கும் கண்ணோட்டம் சரியாக இருக்கவேண்டும் என்று வேறு பயம் தருகிறது, இதற்கு நான் மிகவும் ரசித்த "வாகை சூட வா" படத்தின் தோல்வியும் ஒரு மண்ணுக்கும் உதவாத சில சூப்பர் ஹீரோக்களின் வசூல் ரிப்போர்ட்டுகளும் தான் காரணம்.

தங்கள் படத்தை பார்த்த முதல் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் படத்தில் எனக்கு தோன்றிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,  இந்தக் கதைக்களத்திற்க்கான உங்கள் உழைப்பு மற்றும் தேர்வுக்கே மிகுந்த பாராட்டுகள், முட்புதர்கள், செம்மண் நிலம், கண்மாய் என வறண்டு போன வானம் பார்த்த பூமியின் வெப்பம், குளிரூட்டப் பட்டுள்ள அறையிலும் எனக்கு உஷ்ணத்துடன் இருந்தது.

தோள்களில் சுமந்துகொண்டு காமிரா அலைந்து திரிந்து எங்களுக்காக படமாக்கிய விதம் மிக அருமை, கண்மாயில் எதிர்த்தண்ணியில் பாயும் மீன்கள், தோல் உறிக்கப்படும் மாடு என்று எல்லா காட்சிகளையும் எந்த மிகைப் படுத்துதலில்லாமல் தந்தமைக்கு நன்றி. மேலும், வீரர்கள் எறியும் அம்புகளுடனும், வேல்களுடனும் பயணிக்கும் காமிரா கோணங்களும், கம்ப்யுட்டர் சித்து விளையாட்டுகளையும்  தவிர்த்தமைக்கு பெரிய கும்பிடு. எளியோரின் போர் முறை எளிமையாகவே இருந்தது தான் மிகப் பெரிய பலம்.

இசை, அந்த கால நினைவுகளை கொண்டுவரவில்லையே என்றாலும், நீங்கள் அதையும் justify  பண்ணியதாகவே தோன்றுகிறது. இந்த கால இசைக் கருவிகளைக்  கொண்டே அந்தக்  கால  மனிதர்களின் உணர்வுகளை கொண்டு வந்துவிடுகிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெறும் தாரை தப்பட்டை சப்தங்கள் பண்டைய காலம் போன்றே இருந்தால், கண்டிப்பாக நாம் இந்த படத்தின் சீரியஸ் கட்டங்களை உணரமுடிவது கொஞ்சம் சிரமம் தான்.ஆதலால் ஒரு harmonious string நாம் விருப்பான கட்டங்களில் தேவைப் படுகிறது. 

படத்தில் பாலைமறவனின் வசனங்கள் மற்றும் அவர் தலைவனுக்கு சொல்லும் உபதேசங்கள், மற்றும் பாலை பற்றி அவர் சொல்லும் கதையும் விதமும் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டியது, ஷம்மு மற்றும் அவள் தோழிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம், அடிமைகள் இல்லாத இனமாக நம்மை காட்டியிருப்பது எல்லாம் இன்றைய தமிழர்கள் (குறிப்பாக சாதி, வர்க்க அரசியிலால் பாழ்படுத்தப்படும் இளைஞர்கள்) பார்க்கவேண்டியது.


எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கம், புலி பற்றி முல்லைக்கொடித் தலைவர் தன வீரர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதம் தான், இந்தப் படம் பேசும் அரசியலாக நான் உணர்கிறேன், "சிங்கம் வலிமையானது தான், ஆனால் பசியும் , வலியும் தாங்காது, ஆனால் புலி பசியையும் தாங்கும், பதுங்கியும் தாக்கும்"என்று சொல்லும்போது உணர்சிபெருக்கு கண்ணீரை உருமாறும் யதார்த்தம் " இருக்கிறது, "நீங்கள் யாரும் தலைவனின் கட்டளைக்கு காத்திருக்கத் தேவையில்லை தனித் தனியாக போராடுங்கள் " எனும் இடங்களில் உணர்ச்சிகள் கட்டுப்படவில்லை, இதை சாதுரியமாக திமிர் பிடித்த தணிக்கை நண்பர்களிடமிருந்து புரியா வண்ணம் கொணர்ந்த உமக்கு மேலும் ஒரு மலர்மாலை.

மேலே சொன்ன இந்த அரசியலைப் பேசத் தான் நாம் 2000 வருடங்கள் முன்னோக்கிப் போகவேண்டியுள்ளது."திருப்பி அடிக்கனும்னு" (7aam அறிவு ) சொல்லும் உணர்வு கூட இன்று கமர்சியல் ஃபார்முலாக்கலாக மட்டுமே வெகுஜனங்களிடம் மிஞ்சுகிறது, அந்தப் படங்களில் சென்னை சூப்பர் கிங்க்சுக்காக கை தட்டும் ரசிகனைப் போலவே என்னை நான் உணர்ந்தேனே தவிர எந்த ஒரு ஆழ்ந்த உணர்விலும் அல்ல .

உடன்போக்கு, ஆநிரைகவர்தல், வழிப்பறி, மீன்பிடித்தல், பறை, காதல், வானசாத்திரம், கள்வெறி, மயக்கம் என இலக்கிய அடித்தளங்கள் இப்படத்தில் வலுவாக இருந்தது, என்ன வசன உச்சரிப்பில் ஷம்மு நிறைய தடுமாறியிருப்பதாய் தோன்றியது (ஒருவேளை இது என் தவறான கணிப்பாகவும் இருக்கலாம்). மீண்டும் ஒருமுறை இந்தப் படத்திற்கு உழைத்த எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், வாழ்ந்து காட்டிய நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். பாடல்களில் பாலையின் தீம் சாங்கும், முதல் பாடலும் நன்றாக இருக்கிறது .

திரு.செந்தமிழன் அவர்களே!!
உங்களுக்கு நிற்க ஒரு அடி மண் மட்டும் தானா, இந்த மாதொரு படைப்பின் மூலம் எங்கள் மனதில் நின்றுவிட்டீர்கள்.....இந்தப்படம் கண்டிப்பாய் வெற்றிபெறும், எங்களுக்கு மேலும் பல நல்ல படைப்புகளை தருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்

எமது முகநூல், ப்ளாகர் நண்பர்களே!!  நல்ல படைப்பை ஊடகங்கள் வணிகரீதியாக ஏற்காவிடினும் , நமது முயற்சிகூட பெருமளவு கைகொடுக்கும் , தயவு செய்து இந்தப்படம் பார்த்து தேவையற்ற மசாலா, தழுவல் படங்களைப் பார்த்த பாவங்களை கழுவுங்கள்.படத்தை பாருங்கள் திரையில்.......
Screens  in  Tamilnadu  காக்கா கடி:

*பாலை படத்தின் இறுதிப் போர் காட்சி தான் படத்தின் முக்கிய அம்சம் என்பதால் இதில் முல்லைக்கொடி கிராமத்தில் இருந்து வரும் ஒரு சொற்பக் கூட்டம் 5 -6  வீரர்கள் செய்வதை போரை நாம் எண்ணுவது கடினம் தான் என்றாலும், இனக்குழுக்களுக்கு மத்தியில் நடக்கும் போர் இப்படித் தான் இருக்கும் என்று நம்புவது தகும்.

*கொஞ்சம் " பாலை" (திணை)பற்றிய அறிவுடன் படம் பார்ப்பது நல்லது, ஒன்னும் தெரியவில்லை என்றால் எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகங்களை பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Sangam_landscape  உதவக்கூடும்

*எனக்கு இந்தப் படம் மிக வேகமாக சென்றுகொண்டிருப்பதாய் தோன்றியது, பலர் இதை ரொம்ப ஊர்ந்து செல்லும் கதை என்று நொந்து கொள்ளும் லாஜிக் எனக்குப் புரியவில்லை, (what else you need எனி kuthu song or santhaanam??)

* எங்கேயாவது சில இடங்களில் எனது பார்வை மிகைப்படுத்தியிருந்தால், என்னை மன்னிக்கவும்  .. எளிமையாய் சொல்லும் கலை மிகக் கடினம் என்று பாலை படத்தில் புரிந்துகொண்டேன்.--
அன்புடன் 
J .கரிகாலன் 

ஞாயிறு, 20 நவம்பர், 2011

1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி

1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி
1911-XINHAI REVOLUTION

இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச் சக்திவாய்ந்த ஊடகமாகவே நமது நாட்டின் அரசியலில் அங்கம் வகிப்பதால் இது அரசியல் பேசும் கட்டுரையாய் உங்களுக்குத் தெரியலாம். திரைப்படங்களின் மூலம் அரசியல் வளர்ந்த மாநிலம் என்று நம் மாநிலத்தினையும், ஆந்திராவையும் முதன்மையாகச் சொல்லலாம் , அமைச்சர்களை  உருவாக்குவதிலிருந்து, கலாச்சார மாற்றம், பழக்கவழக்கங்களின் மாற்றம், நுகர்வுப் பண்புகளின் மாற்றம் என திரைப்படங்களின் தாக்கம் மிக இருக்கிறதென்பதை யாரும் மறுக்க இயலாது.


1911  புரட்சி  :- உலகிலேயே மிகப் பிரபலமான கமர்சியல் ஹீரோக்களில் ஒருவரான "ஜாக்கி சானின் " 100வது படம். 25  படம், 50  படங்களுக்கே மகா பந்தா காட்டும் நாயகர்களுக்கு மத்தியில் தனது நூறாவது படத்தினை தன இனத்தின் பெருமையை , அவர்களின் வரலாற்றைக் காட்டும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் ஜாக்கிக்கு ஒரு பெரிய மலர்கொத்து.

Oneline
படம் 1911 -இல் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது, கியுங்(Qing Dynasty ) அரசாட்சிக்கெதிராய்ப்  போராடும் ஒரு புரட்சி பற்றிய வரலாற்றுக் கதை இது.


கதை


1911  புரட்சி என்பது (Xinhai புரட்சி) சீனாவில் நடந்த ஒரு உள்நாட்டுப் போர், Huang Xing (ஜாக்கி) தளபதியாகவும் , Sun Yat-sen  தலைவராகவும் உருவாக்கியப் புரட்சி படை கொண்டு சீனாவை குடியரசாக்கும் வரலாற்றுப் பதிவு தான்.

எனது பார்வை  


படம் தொடங்கும் போதே ஒரு பெண்மணி சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மரணதண்டனை வழங்கும் காட்சி.இவ்வினத்தின் சுதந்திரத்திற்கு சிந்தப்படும் முதல் துளி இரத்தம் எனது என்று, கடைசி மூச்சை சுவாசிக்கும் போதே நம் மனம் ஈர்த்துவிடுகிறது.

  நம் தற்போதைய சூழலில் இப்படம் பார்க்கும் போது வரும் உணர்வுகள் யாவற்றையும் பார்க்கும் பொது தமிழனாய் இருப்போர் ஈழ விடுதலை பற்றி ஒரு கணமாவது சிந்திப்பீர்கள். இந்தியன் என்று சொல்வோர் கூட கஷ்மீர் முசுலீம்களையோ, மத்திய - கிழக்குப் பிரதேச நக்சல்,மாவோயிஸ்ட் , மலைவாழ் அல்லது பழங்குடிகளையோ எண்ணுவர். அப்படி எண்ணாதோர் காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டனாக இருக்கக் கடவுக.

  Sun Yat-sen மேலை நாடுகளுக்குச் சென்று தமது நாட்டில் நடைபெறும் அரசின் மக்கள் விரோத போக்கை சுட்டிக் காடும் வேலையைச் செய்வார் ( ஆண்டன் பாலசிங்கம்). புரட்சியை நடத்தும் வேலை அவர் நண்பரான ஜாக்கிக்கு கொடுக்கப் படும் (தலைவர்).கியுங்(Qing Dynasty ) ராணியோ உள்நாட்டுப்போர், ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டைப்  பற்றிக் கவலைப் படாது (தனக்குத் தான் மெஜாரிட்டி என்கிற நினைப்பு) தன இஷ்டப்படி முடிவுகளை எடுக்கிறாள். ஆனால் அவளின் படைத் தலைவனோ அரசிடம் இருந்து புரட்சியாளர்களை துரத்துகிறேன் என்று அரசிடமிருந்து மிக அதிகமாக பணம் பிடுங்குகிறான். நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது, கடன் சுமை பெருகி வருகிறது, ஆக உள்நாட்டுக் கலவரத்தைக் கட்டுப் படுத்த தனக்கு இன்னமும் அதிக பணம் தேவை படுகிறது. இங்கு தான் இங்கிலாந்து தன் சுயலாபத்தை கணக்கில் கொண்டு, உள்நாட்டு மக்களின் உணர்வை மதியாமல் அரசியலைத் துவக்குகிறது , ராணிக்கு உதவி செய்வதாய் அதாவது கடனளிப்பதாய்க் கூறி, சீன இரயில்வேயினை அடகு கேட்கிறது .( நிற்க, நான் இங்கிலாந்து என்று தான் சொன்னேன், இந்தியா என்று தோன்றினால் நான் பொறுப்பல்ல). மிக முக்கியமாய் சொல்ல வேண்டியது, இந்தப் படத்தில் புரட்சியாளர்கள் நடத்தும் புரட்சிக்காக செலவிடும் பணத்தை வழங்கும் அயல் நாட்டுச் சீனர்கள் , நம் ஐரோப்பா,ஆஸ்திரேலியா, கனடா வாழ் ஈழத் தமிழரின் உள்ளங்களை எனக்கு நினைவுக்கு கொண்டுவருகின்றனர். வெறும் ஆயுதத்தால் மட்டும் புரட்சி ஒன்றும் செய்ய முடியாது.

       அதே சமயம் Sun Yat-sen தன் நாட்டில் நடைபெறும் அநீதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துரைத்து, தன் நாட்டில் தன் மன்னரால் அடகுவைக்க முற்படும் ரயில்வேத் துறையை காப்பாற்ற போராடுகிறார். ஒரு கட்டத்தில், புரட்சிப்படை கைகள் ஓங்க ஆரம்பிக்க 1912 பிப்ரவரியில் மன்னராட்சி கவிழ்ந்து குடியரசு ஓங்குகிறது. குடியரசுச் சீனாவில் முதல் தலைவராக  சென்னும் , இராணுவத் தளபதியாக ஜாக்கியும் தேர்ந்தெடுக்கப் பட.நாட்டின் மக்கள் ஆட்சி நிலைபெற தன் பதவியையும் விட்டுக் கொடுக்கிறார். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நண்பர்களின் கனவினை மறுபடியும் திரும்பி பார்க்குமாறு அப்படம் முடிகிறது.

       "தமிழனைப் பற்றிப் பேசும் படம்" நிறைய இடங்களில் திரித்துக் கூறி, போதி தர்மனை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டு (அதற்கும் மேல் போதி தர்மனின் வரலாற்றிலும் பல பிழைகள்), வெறும் வியாபரத்திற்க்காக கொணரும் தமிழ் உணர்வுகளை விட (7 -ஆம் அறிவு) , நமது போராட்டம் பற்றிய கனவுகளையும், தியாகங்களையும் அவர்களின் (சீனர்களின்) வரலாற்றைச் சித்தரிப்பதிலேயே நம்மை உணர வைத்திருக்கும் இந்தப் படம். இந்த(ஈழ) உணர்வைக் கொணர ஜாக்கி மெனக்கடவில்லை என்றாலும், உலகின் அனைத்துப் புரட்சியிலும் உள்ள மைய உணர்வை நன்றாகக் காட்டியிருப்பதே போதுமானது. பல இடங்களில் Sun Yat-sen ஆக வரும் மனிதரின் வசனங்கள் படத்தின் ஆணி வேர்.


    இப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் பெரிய முயற்சி, நூறு ஆண்டுகள் பின் சென்றபின்பு ஒரு கணம் கூட நாம் வெளியே வராதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒளிப்பதிவாளர்.இப்படத்தில் கதை சொல்லும் முறை சற்று நமக்கு (தமிழ்படுத்துதலில்) பிடிபடவில்லை என்றாலும் ஒரு பெரிய வரலாற்றை ஒன்னேகால் மணி நேரத்தில் சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதால், படம் சில நேரங்களில் டாக்குமெண்டரி போலே தோன்றுகிறது.

* ஒவ்வொரு புரட்சியின் தீர்வையும், ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் துரோகம் தான் தீர்மானிக்கிறது (நம் கதைகளில் துரோகம் இளைக்க நம் இனத்திலே பலர் உண்டு ), இங்கு துரோகம் நல்லவேளை புரட்சிப்படையிடம் இல்லை.

*ஜாக்கியின் காதல் திணிக்கப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது (போதிய அவகாசம் இல்லாததால்).

*நூறாவது படமாய் இருந்தாலும் தனக்கு இப்படத்தில் அதிகமாக முக்கியத்துவம் தராத நேர்மையினை நம் ஆட்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா??

*அவதார் படம் கூட அடிப்படைக் கதையில் மாவோயிஸ்ட்களின் போராட்டத்தில் உள்ள நியாங்கள் பற்றி பேசுவதாய்த் தோன்றும், இப்படம் ஈழ வரலாற்றோடு எவ்வளவு ஒத்துப் போகிறது , ஆனால் இந்த மாபெரும் குடியரசு எப்படி இலங்கைக்கு உதவுகிறது.

* " திருப்பி அடிக்கணும் " என்கிற வசனத்திற்கு கைதட்டிய ரசிகப் பெருமக்களே (நான் உட்பட), உண்மையான ஈழ உணர்வு பற்றி ஒரு சீனன் நமக்கு படம் எடுத்து தந்திருக்கிறான் தவறாமல் பார்த்து விடுங்கள் , ஈழத் தமிழன் பற்றிய படங்களான "எல்லாளன்" போன்ற திரைப் படங்களை இந்தியம் அனுமதிக்காது, ஆக இந்தப் படத்தையாவது பாருங்கள்.

* புரட்சியில் ஆயுதப் படையைக் காட்டிலும், அரசியல் பகடை தான் முக்கிய ஆயுதம் என்று உணர்த்தும் இந்தப் படம்.

ஜாக்கி சான் தன் நடிப்பிலும், படைப்பிலும் பல தூரங்களைக் கடந்து விட்டார், ஜாக்கி சான் ரசிகர்கள் முக்கியமாக இப்படத்தினைப் ஒரு கலைஞனுக்குச் செய்ய வேண்டிய மரியாதையும் கூட.

மொத்தத்தில் இப்படம் தமிழர்களுக்கானச் சீனனின் வரலாறு

காக்க கடி 


1 .இது நீங்கள் பார்க்கும் சாட்சாத் ஜாக்கிசானின் படம் அல்ல
2 . படம் பார்க்கும் முன் சீன வரலாற்றை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், இல்லையேல் சீனப் பெயர்கள் புரியாமல் தடுமாற ,கொஞ்சம் விளங்க ஆரம்பிக்கும் போது படம் முடிந்து விடும்.