வியாழன், 27 மார்ச், 2014

இந்த வருடம் என்ன செய்யலாம்??


ஏதோ நாம் எழுதும் கட்டுரைகள் அங்கங்கே பத்திரிக்கைகளின் வரும் பொழுது கிடைக்கும் சந்தோஷத்தோடு நிவர்த்தி செய்து கொள்ளலாம் தான். சிலர் என் மீது வைத்த நம்பிக்கைகளுக்கு நான் செயல் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அழுத்தம் என் மனதில் ஏற்கனவே இருந்து தான். இதைப் பதிவதின் மூலம் இன்னமும் வீரியமாகவே செயல்படுவேன். ஏற்கனவே நான் செய்திருந்த ஸ்டெரிலைட் ஆலை குறித்த கட்டுரை தான் எமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதும் மிகையல்ல.

ஆம் இந்த ஆண்டு முழுதும் நான் களத்தில் இருக்கப் போகிறேன், இதைப் பற்றிப் பேசும் போது ஒரு பக்கம் அளவிலா சந்தோஷமும், பொதுவில் சொல்லி விட்டதால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய நிர்பந்தமும் ஏற்படும் என்பதால் தான் இந்தப் பதிவு.

சுற்றுச்சூழல் தொடர்பான, இயற்கை விவசாயம் தொடர்பான ஆவனப் படங்களும், கட்டுரைகளும் இனி தொடர்ந்து நம் வலை தளத்தில் பதிவேற்றப் படும். கட்டுரைகள் மட்டுமன்றி இதற்காக நான் சுற்றியலைந்த இடங்கள் குறித்த பதிவுகள், அதற்கான செலவு, பயண அனுபவம் என எல்லாவற்றையும் தொடர்ந்து பதிவிட உத்தேசித்துள்ளேன்.

சுற்றுச் சூழல் தொடர்பாக ஸ்டெரிலைட் மற்றும் நன்னிலம் - மீத்தேன் கால்வாய் பற்றிய கட்டுரைகளும், இயற்கை விவசாயம் குறித்த பதிவுகளுமாக இரண்டு வேலைகளாக பிரித்து செய்வதென ஏற்பாடு. இதில் ஒரு பாதி வேலைகளுக்காக எனக்கு sponsor கிடைத்திருக்கிறது என்பது தான் என்னை உத்வேகத்துடன் நகர்த்திச் செல்லும் விஷயம். நண்பர்கள் யாரேனும் என்னுடன் சேர்ந்து பயணம் செய்ய விரும்பினாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அது முதல் சுற்று முடிவடைந்த பின்னர் தான்.

இந்த வழியில் எனது அடுத்த பதிவு என் களப்பணி பற்றிய செய்தியில் இருந்து ஆரம்பிக்கும்.

வேறென்ன வேண்டும் உங்கள் வாழ்த்துகளைத் தவிர??

-
ஜீவ.கரிகாலன்




செவ்வாய், 25 மார்ச், 2014

பஜ்ஜி-சொஜ்ஜி - 65 / கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

ஒரு நாள் சகோதரர் அகரமுதல்வன் வீட்டிற்கு சென்றிருந்தேன், அவர் தன் ஊருக்கு(ஈழம்) மிகவும் நெருக்கமான பழக்க வழக்கங்கள் உடையவர்களாக திருநெல்வேலி மற்றும் நாஞ்சில் பகுதி மக்களின் வழக்குகள் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்படியென்றால் “தங்கள் வீட்டில் சொதி செய்வீர்களா” என்றேன்?? .  “சொதி இல்லாமல் எங்கள் தினம் முடியாது” என்றார்.

அடுத்த வாரமே அவர் வீட்டிற்கு மதிய உணவுக்கு சென்றோம், சொதி என்றால் அது திருநெல்வேலி சொதியில்லை, கொழுப்புச் சத்து குறைந்த நாகர்கோயில் சொதி என்று சொல்லலாம். சொதியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மச்சம் சமைத்திருக்கிறேன் என்றார், எனக்குத் தூக்கி வாரி விட்டது. “நான் தான் சைவம் என்று சொன்னேனே” என்றேன்.  அவரோ அதை விளங்காதது போல் “அதனால் என்ன??” என்று கேட்டுவிட்டு, அடுத்ததாக சுதாரித்தபடி “நீங்கள் மரக்கறி” உண்பவரா என்று கேட்டார். “ஆம்” என்றேன், அந்த அளவிற்கு எனக்குத் தான் எனக்கு தமிழ் தெரிந்திருந்தது என்ற வெட்கம் வேறு. பின்னர் ஒரு வழியாக எனக்கு அவசரத் தயாரிப்பாக உருளைக்கிழங்கு சமைத்து வழங்கப் பட்டது அருமையான, மறுக்க முடியாத விருந்து.

சைவம், மரக்கறி இதில் எது சரியான பதம்?

சைவ மதத்தைத் தழுவிய எத்தனையோ சமூகங்கள் எல்லோருமே ஏன் புலால் உணவு சாப்பிடுபவர்களாகவும், குறைந்த எண்ணிக்கையுள்ளவர்கள் மட்டுமே சைவர்களாக இருக்கின்றனரே என்கிற குழப்பமும் வந்தது. இப்போதைக்கு சில வெள்ளாளர்கள் சமூகத்தினரும்(திருநெல்வேலி, தஞ்சை, தொண்டை மண்டல, தேனி பகுதியைவ் சேர்ந்த வெள்ளாளர்கள்), முதலியார்களில் ஒரு பிரிவும், தென்னிந்திய பிராமிணர்களும் (பல வடமாநிலங்களில் பிராமிணர்கள் அசைவம் சாப்பிடுவதை தங்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்), அதே நேரம் இங்கே வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடும் நபர்கள் வேறு கணக்கு.

ஒரு காலத்தில் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி காலம் அல்லது ஆறாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை மிகப் பரவலாக சமண மதம் தமிழகத்தில் பரவி இருந்ததே புலால் உண்ணாமை எனும் கொள்கை தென்னிந்தியாவில், குறிப்பாக அது தமிழகத்தில் நன்கு பரவிட காரணமாக அமைந்தது. பின்னர் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் வரவாலும், மூவேந்தர்களும் வைதீக மதத்தை ஏற்றுக் கொண்டபடியாலும் மெல்ல, மெல்ல என்றில்லாமல் அம்மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேரின. தன் சக்தியை, மக்களை, அரசியல் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது சமண மதம். இருப்பினும் ஆழமாகப் பொதிந்து போன பல சமண மதக் கொள்கைகள் நமது வைதீக மதத்தோடு இணைந்து கொண்டன. திருஞானசம்பந்தரும் அப்படித் தான் வைணவத்திலிருந்து சைவராக மாறுகிறார் என்பதை நீங்களும் அறிவீர்கள். சமணத்தில் முக்கியமான ஒரு கொள்கையான “புலால் உண்ணாமை” தமிழகத்தின் சில சமூகப் பிரிவில் நன்றாக வேரூண்றியது. அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகள் இல்லாத மதத்திலும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டனர். சமூக அமைப்பில் மிகுந்த செல்வாக்குடையவர்களாகவும், சொத்துகள் கொண்டவராகவும் இருந்த அம்மக்களின் உணவுப் பழக்க வழக்கம், பின்னர் தனித்துவமிக்கதாகவும். ஆச்சாரம், உன்னதம் என்ற கற்பிதங்களோடும் கலாச்சாரத்தோடு இணைந்தன. அசைவம் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். மரக்கறி உண்ணும் சைவர்கள் தான் சைவர்கள் என்றும், பிறர் அசைவர்கள் என்றும் பகுக்கப்பட்டது. பின்னர் புலால் உணவு எனும் பதமே அசைவம் என்று கருத்தாக்கம் கொள்ளப்பட்டது.

அது போலவே வேறுபாடுகளை வளர்ப்பதற்கும் இந்த உணவுப்பழக்கம் உதவிட, High Class Vegetarian என்கிற போர்டுகள் உருவாகின. அதனாலெல்லாம் தீங்கு இல்லை, ஆனால் சமகாலத்தில் TO LET ONLY FOR VEGETARIANS / BRAHMINS என்கிற பிற்போக்கு வாசகங்களெல்லாம் வாழ்வியல் சுதந்திரத்தின் மீதான கோபத்தைக் கிளரி விடவே செய்கின்றன

நானும் வெஜிடேரியன் தான். மன்னிக்க, நானும் மரக்கறி உண்பவன் தான் எதற்கான இந்த அரசியல் பேசுகிறேன் என்றால் இன்னுமொரு குட்டிக் கதை(சம்பவம்) சொல்வதற்கு தான்.

நேற்று, என் நண்பர் ஒருவரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல திண்டுக்கல் தலப்பாகட்டி நாயுடு உணவகத்திற்கு சென்றேன். அந்த நண்பரோடு நான் எங்கு சென்றாலுமே அன்று எனக்கு ஒரு ப்ளாக் போஸ்ட் போடுமளவுக்ககு நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்றாலும், basically சோம்பேறியாகிய நான் அப்படிப் போடுவதில்லை. நேற்று அவரோடு உணவகம் செல்லும் வாய்ப்பு கிட்டியதால் வயிற்றை நன்கு தயார் செய்து கொண்டேன், இனி நடக்கப் போகின்றவைகளை நான் இப்படி எழுதிக் கொண்டிருப்பேன் என்று எனக்கு மட்டும் தெரியுமா என்ன??.

அந்த மதிய வேளையில் மாங்கு மாங்கு என்று அங்கு தின்று கொண்டிருந்தவர்கள் என்னை உசுப்பேற்றி விட, புலால் உணவிற்கு இணையாக நாமும் களத்தில் குதிப்போம் என்ற சபதத்தோடு - வரிசையாக ஆர்டர் பண்ணின சைவ, மன்னிக்க மரக்கறி ஐட்டங்கள் யாவுமே தற்காலிக இல்லை லிஸ்டில் தான் இருந்தன, இன்னும் சில ஐட்டங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டிருந்தன போலும். அந்த அளவிற்கு அந்த உணவகத்திற்கு செல்பவர்கள் 100% PURE NON-VEGETARIAN ஆக இருந்து வந்ததால் இப்படி கேட்பவற்றிற்கெல்லாம் இல்லை என்று சொல்லு வந்தனர்.  அப்போதாவது நான் கொஞ்சம் உஷாராக் இருந்திருக்கலாம் தான்.

புலால் உணவிற்கு இணையான(விலையிலும் வண்ணத்திலும்) காளானை தேர்ந்தெடுத்தேன். காளான் பிரியாணியும் இல்லை என்று சொல்ல, “ காளானில் எதையாவது கொடு” என்று அன்புடன் ஆர்டர் செய்தேன். நல்ல ஒரு லோடு ஜீரா ரைஸும், காளான் மஞ்சுரியனுமாக விழுங்கிவிட்டு, அலுவலகம் திரும்பினேன். ஆரம்பத்தில் ஏதோ மூக்கு அரிப்பது போன்ற உணர்வு, திரும்ப அலுவலகம் வரும்பொழுது, உதடு தடித்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர, அப்படியே மேஜையில் சாய்ந்தேன். ஒரு மணி நேரமாவது இருக்கும், விழித்த போது தான் என் முகத்தில் மாற்றங்கள் இருப்பதாக உணர்ந்தேன், கண்ணாடியில் பார்த்தால் முகம், கண், மூக்கு என்று சிவந்தும் வீக்கத்துடனும் இருந்தது.

காளான் விருந்துக்கு 600 ரூபாய் கட்டணம் மூன்று நாள் மாத்திரை, இரண்டு அவில் ஊசி, ஒரு நாள் விடுப்பு என்றெல்லாம் விளைவுகள் ஆயின. வீட்டிற்கு சென்றால் பயந்து விடுவார்கள் என்று மிகத் தாமதமாக தான் சென்றேன், பதறித் தான் போனார்கள். நல்ல கொடை வேறு கூடுதலாகக் கிடைத்தது.

நண்பர்களும் என்னை இப்படியெல்லாம்ஆற்றுப் படுத்தினர்
*தலப்பாகட்டி போய் வெஜ் ஐட்டம் கேட்டல்ல அதனாலத் தான் வந்துருக்கும் போல.
*கல்யாணம் ஆயிருக்கு இல்லன்னா அட்லீஸ்ட் கேர்ள் ஃபிரண்டு இருக்குன்னா கூட கொஞ்சம் ஸுவாரஸ்யமா கதை போயிருக்கும்
என்ற கமெண்டுகள் வேறு.

ஊசி போடும் டாக்டர் என் கதையைக் கேட்டு வயிறு வலிக்க சிரித்தார், அந்த கதை ஒன்னும் அவ்வளவு பெரிய ஜோக்காக அமையவில்லை என்ற போதும் அவர் சிரிப்பதற்கு வேறு ஏதாவது கதை இருக்கலாம் என்று நினைத்துவிட்டேன்.

இந்த வேதனையிலும் நான் கண்டுகொண்ட உண்மை இதுதான், அத்தனை கோரமாக என் முகம் மாறியதாகத் தோன்றியது என் குடும்பத்தினருக்கான, என் நண்பர்களுக்கான, என்னைத் தெரிந்தவர்களுக்கான என் முகம் தான். ஒரு மணி நேரம் சாலையில் அந்த கோர முகத்துடன் நான் பயணிக்கும் பொழுது என்னைக் கடந்த சில ஆயிரம் மனிதர்களிடம் ஒரு பாடம் கற்றேன். இந்த நெருக்கடி மிகுந்த வாழ்வில் வேடிக்கை பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும், அனுதாபப்படுத்துவதற்கும் ஏன் கேலி செய்வதற்குக் கூட நேரம் தராத பரபரப்பான உலகில் தான் நாம் பிரதிநிதியாகி இருக்கிறோம். இந்த அடுக்குகளில் வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு எல்லாமே தற்காலிகம் தான். ஒரு பத்து நிமிடம் நடக்கலாம் என்று நினைத்தவன், ஒரு மணி நேரமாவது தெருக்களில் நடந்திருப்பேன்.

மனதில் இருந்த பலவிதமான எண்ணங்கள், கேள்விகள் ஒன்றை ஒன்று அடித்துக் கொன்று தின்றுவிட்டன. காலியான மனதுடன் வீடு திரும்பினேன். இத்தோடு இயன்றவரை ஹோட்டல் உணவிற்கு இடம் கொடுக்கப்படாது என்று சங்கல்ப்பம் செய்து கொண்டேன்.

எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம் என்னவென்றால், கொஞ்சம் கூட hygienic இல்லாத சாலையோரக் கையேந்தி பவன்களில் கொடுக்கும் 20 ரூபாய் காளான்கள் கொடுக்காத இந்த பக்கவிளைவை, சொகுசு இருக்கையில் இருந்து சில நூறு ரூபாய் கொடுத்து சாப்பிடுவதால் ஏற்படுகின்றது எனும் logic என்ன??


- ஜீவ.கரிகாலன்