புதன், 23 பிப்ரவரி, 2011

நாத்திகர்களுக்கு ஒரு கடிதம் - (சதுரகிரி மலைப் பயணக் கட்டுரை ) பகுதி - 1


 நாத்திகர்களுக்கு ஒரு கடிதம் :

          என் அன்புக்குரிய நாத்திகனே!! உன் இனத்தில் இருந்து நான் விடுபட்டு கிட்ட தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்று உனக்கு நான் ஒரு சேதி சொல்ல விரும்புகிறேன்.கடவுளை நம்பும் பல மதத் தலைவர்களை - ஆன்மிகவாதிகளை விட உருப்படியான வாழ்க்கை வாழும் நல்லவனே. ஆண்மேகாதுக்கு சிறந்த வழி தான் நாத்தீகமோ!! உன்னுடன் சேர்ந்து கடவுள் இல்லை என்று சொன்ன நான், இன்று உனக்கு கடவுளை பற்றி சொல்கிறேன்.

           இதை நான் மதவாதிகளுக்கு சொன்னால் என்னை ஏளனம் செய்வார்கள், எட்டி உதைப்பார்கள். ஆனால் நீயோ நான் சொல்வதை மறுத்தளித்து பேசுவதற்காகவாவது ,முழுவதும் கேட்பாய். 

    கடவுள் இருந்த நல்லா இருக்கும், அவர் இருத்தலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு தெரியாத, புரியாத வரை அது கடவுள் இல்லை , It's all an intelligent design என்ற எண்ணங்கள் ஒரு புறமும், கடவுளை பற்றிய அதீத கற்பனையுடன் மத விளக்கங்கள் சொல்லும் மனிதர்கள் மறு புறமும் இருக்க , இந்த சதுரகிரிப் பயணம் மூலம் என் மனம் அடைந்த ஒரு உணர்வை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்து ஆரம்பிக்கிறேன்.

யார் கடவுள்???
            பொதுவாக, நம் பெற்றோர் சொல்லிக் கொடுத்த முறையில் கைகளை கூப்பிக் கொண்டு, மண்டியிட்டு, மந்திரம் சொல்லி, ஜபித்து ,நாம் குழந்தைகளாய்  இருக்கும் பொழுது நமக்கும் கடவுளுக்கும் கொண்ட தொடர்பு உருவானது. வெளியில் சென்று கல்வி பயிலும் போது, சிந்தனை வளர்க்கும் போது கடவுளை பற்றிய சந்தேகம் உருவாகும்.ஆக, நம்பிக்கை மற்றும் சிந்தனை ஆகிய இரண்டு புள்ளிக்கும் மத்தியில் தான் நம் கடவுள் மறைந்திருக்கிறார்.

          அறிவுக்கும்,உணர்வுக்கும் இடையில் கடவுள் தன இருத்தலை ரகசியப் படுத்தியுள்ளார்.இங்கே, அறிவியல் கடவுளை பொய்ப்பிக்கும் வேலையில் மிகவும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.ஆனால், கடவுள் என்ற பெயரில் பல்வேறு மார்க்கங்களிலும், மதங்களிலும் மக்கள் தங்களை அர்ப்பனிப்பதும் பெருகி வருகிறது.

     இருத்தல்(existence ) என்ற ஒரு இல்லையெனில், அதை பற்றிய சர்ச்சை எப்படி உருவாகும்??? எனது தான் கேள்வி {இந்த கேள்வியை சற்று கூர்ந்து கவனியுங்கள்}.உதாரணம்: நான் எழுதும் இந்த இடுகையில் (blog) எந்த ஒரு வீடியோ காட்சியும் இல்லை என்று நீங்கள் உணர்ந்தீர்களா? ஆம் இல்லை தான் ஆனால் வீடியோ காட்சி என்பது (the existence of video file is somewhere) எங்கேயோ ஒரு இடத்தில் இல்லது அல்லவா ? இந்த எளிய உதாரணம் உங்களுக்கு புரியவில்லையா ? அப்படித் தான் கடவுள் என்பதும் மிகவும் எளிமையான ஒரு விஷயம் தான் நமது அறிவினால் எட்டிப் பிடிக்க முடியவில்லை.

நம்பிக்கை தான் கடவுள், அன்பு தான் கடவுள், தாய் தான் கடவுள், இயற்க்கை தான் கடவுள், மாயை தான் கடவுள் - மேலும் மனிதன் உருவாக்கிய உருவங்களும், கதைகளும், சிற்பங்களும், இசை தான் கடவுள், இல்லை மதந்தான் கடவுள் என்று கடவுள் பயணிக்கும் எல்லா எல்லைகளிலும், அந்த எல்லா எல்லைகளிலும் கடவுளின் இருத்தல் தான் சூட்சுமம் ஆனது.

       அன்புள்ள நாத்திகனே !!! கடவுள் என்ற பெயரில் மற்றொருவன் கோயிலை இடிப்பதும், பழிப்பதும், அழிப்பதும் மதவாதிகளின் வேலை,ஏன் தெரியுமா ??நாங்கள் வணங்கும் கடவுள் சிவனோ , அல்லாவோ, பெருமாளோ, இயேசுவோ, புத்தனாகவோ இருக்கலாம், நீ வணங்கும் கடவுள் பெயர் தான் "இல்லை " மிகவும் சூட்சுமமாக உனக்குள்ளும் மறைந்து இருக்கிறார்.கடவுள் உன்னுடன் மிகவும் துன்பப் படாமல் அழகாக வாழ்ந்து வருகிறார்.பெரியார் சொல்லும் வெங்காயம் போலத் தான், மதவாதிகள் சொல்லும் கடவுளை உரித்து உரித்து பார்த்தால் ஒன்றும் இல்லை - நமக்கு கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது.ஆனால் கடவுளோ அறிவியல் சொல்லும் வெற்றிடமாய் (vaccum) கூட ஒரு தன்மையை உணர்த்துகிறார்.(எம்ப்டிநேச்ஸ்)

     கடவுள் இல்லை என்று சொல்லும் போது, உனக்குள்ளும் வந்து போகிறார்.(when you try to say 'there is no god', he travels in you  -its promise). 

    ஆனால், நீ சொல்வது தான் சரி-  'கடவுள் இல்லை' என்பதில், மற்றொரு அர்த்தமும் இருக்கிறது, இன்று வரை நாமும் , நம் மதங்களும்  சொல்லும் கடவுளை பற்றிய அதனை கருத்துகளும், சம்பாசனைகளும், பாடிய ஓசைகளும், எழுதிய நூல்களிலும் நம்மால் கடவுளை உணர்த்தவோ இல்லை உணரவோ முடியவில்லை.ஏனெனில், அந்த ஒன்று எல்லாவற்றையும் கடந்தது.அப்படி உணர்ந்த ஒருவன் மவுனத்தில் மட்டுமே இருப்பான்.(He don't need any language). அந்த விவரிப்புக்கு( definition ) அப்பாற்பட்ட ஒன்றினை தான் நாம் கடவுள் என்கிறோம். அதை உணர்ந்தவன் தான் சித்தன்(saint ) ஆகிறான் - அவனைத் தேடி என் பயணம் அல்ல, ஆனால் என்னைத் தேடி அவன் தரிசனம் கிடைத்தது.அது தான் இரண்டாம் முறை சென்ற சதுரகிரி மலைப் பயணம்.

(நான் யாரையும் என் கட்டுரையை நம்ப சொல்லவில்லை - உணர்ந்தவர்கள் எனது அடுத்த பகுதியை படிக்கலாம்)

(தொடரும்) - சதுரகிரி மாலைப் பயணக் கட்டுரை   - 2-ஆம் பகுதியில் 


புதன், 16 பிப்ரவரி, 2011

ஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன்:கருணாநிதி X      மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றேநினைத்து விட்டார்.அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்றுசொன்னாலும்ஆச்சரிய படுவதற்கு இல்லை.

என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில்சேவையை கொண்டுவந்தது ராசாவா?மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகுமூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தைஇங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்றுவெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவேநுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில்நுட்பவளமான 1G அல்லது 2Gஅலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது.

 ஆனால்உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்துஉரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டியஇன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்குபேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை.குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிகநிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது.இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார்60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமானமக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன.ஆனால் பயன்படுத்துவோரின்எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம்வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை,வங்கி செக்யூரிட்டிடெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையைதொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்.டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது.எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒருநாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY)பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின்மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்குசெலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒருவருடத்திற்கு12x10,800 = 1,29,600 கோடிகள்.2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போகுறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்குவெறும் 15 நிமிடங்கள்கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்னஎன்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்குஅதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாககிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவேமுடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினிகாண்பிப்பது"INFINITIVE". நான்தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிடஇன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம்அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்துஇருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லைஎன்றுதான் ஒவ்வொருமக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாகயாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனதுசொந்தநாட்டுமக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Abovemiddle cl-ass" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும்,ஏழை மக்கள்மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும்.மனிதாபிமானம், மனிதநேயம்மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்தஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனைகைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும்அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்கமுன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்குசேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டுநிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவதுபல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களைசென்று அடைந்துள்ளது.
துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலானநிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர்பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லைஎன்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டிஇல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்றபெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட்நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால்சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விடமேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்றபோட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளைஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம்நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்துஇருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனதுபங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்றநாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரியஅச்சுறுத்தல்.
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்புசம்பந்தபட்ட, கைபற்றபட்டஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறைகடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில்ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தையஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும்முறைகேடு.
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறைஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம்செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில்ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்தஉலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதைபிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடிமௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவைஇந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடுசெய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால்ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்றுஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களைகண்டிருக்கலாம்.
துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தைசேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்குவாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒருமுறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்தஉதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின்விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தைஉறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில்விட்டு செல்கின்றனர்.
இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்தஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதைபிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரைகுறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தையசொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின்விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இதுமட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல்எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான்செய்கின்றனர்.அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிகசெயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும்செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும்.குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிகவிகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்தஏழை, பணக்காரன்இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால்அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும்மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம்வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்புஎன்னும் மூலதனத்தைமறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான்இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையானவரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இதுநிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கைதரமும் மாறபோவதில்லை.
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதைஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள்உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவேதெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான்போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX ,Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்தஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில்சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

என் நண்பர் ஜகன் அனுப்பிய மின் கடிதப் பிரதி தான் இது !!

நன்றி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பொக்கை வாய் முத்தம்


        விடிந்தவுடன் ஒரு சராசரி மனிதன் வேண்டுவது,ஒவ்வொரு நாளும் நாம் நிம்மதியாய் தூங்க வேண்டும் என்பது தான். ஆனால் நாம் இரவு படுக்கும் போது, ஏதோ ஒரு காரணி நம் தூக்கம் வருவதற்கு தடையாக இருக்கிறது. ஒரு காலத்தில் வீட்டுப் பாடங்கள் தடையாய் நிற்கும், பின்னர் பரீட்சை பற்றிய பயம் , கொஞ்சம் வயதான பின்பு எதிர்பால் ஈர்ப்பில் தூக்கம் தடை படும், காதல் ,வேலை, திருமணம் என நம் சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் நமது அடுத்த இலக்கு நம் தூக்கத்தினை தடை செய்யும்.

        நானும் அப்படித் தான், எப்பொழுதும் அவளுடன் செய்யும் காதலுக்கு இடைவெளியில் எப்போதாவது வாழ்க்கை பற்றிய எண்ணங்களும் வந்து தூக்கத்தினை தடை செய்யும். இன்றும் அப்படித் தான், தூக்கம் வருவதற்கு முன்னே நானே   வடிவமைத்த கனவும் , அதில் அவளும், எங்களுக்கான கற்பனை உலகமும் தயாரானது. என்னருகில் வந்து ஆவலாய் பேச ஆரம்பிக்க அவள் முற்பட்ட போது, முகத்தில் சில்லென்ற நீரை ஊற்றியது போல் ஏன் வாழ்க்கை பற்றிய பயமும், என்னுடைய பொருளாதார இலக்குகளும் என்னை சூழ்ந்தன.

      போர்த்தியிருந்த போர்வையினை விலக்கிவிட்டு அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முயன்றேன். எதற்காக என் போராட்டம்? யாருக்காக நான் வாழ்ந்து காட்ட வேண்டும்? எந்தச் சமுதாயம் வேறு வேலை வெட்டி இன்றி என்னையே பார்த்துக் கொண்டு வருகிறது? தன் இறப்பினை குறித்து விட்டு பிறக்கும் மனிதனாகிய நான் இடையில் அடையப் போவது என்ன? என்று குறைந்த மின் அழுத்தத்தில் சுற்றும் மின்விசிறி போல் என் மனம் அலை பாய்ந்தது.

     இவ்வாறு அயர்ந்து, சோர்ந்து மெல்ல தூக்கம் எனும் பயணத்தினை தொடங்கினேன், இந்த முறை என் இளவரசியை பற்றிய அக்கறை இல்லை, ஒருவேளை நான் எந்த அரிதாரமும் பூசாமல் , கையிலே எந்த பணமும் செலவு செய்ய இல்லாததாலோ  என்னவோ அவள் அப்பொழுது வரவில்லை.ஆனால், எவ்வளவு பணம் கட்டியும் , யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி எடுத்தும் கிடைத்திடாத ஒரு புல்லரிப்பு அக்கணத்தில் எனக்கு ஏற்ப்பட்டது. இந்த இடுகையை எழுதும் போதும் கூட அதை என் ..........ஆத்மார்த்தமான உணர்வு என்று பெயரிட்டு அழைக்க தோன்றுகிறது. எல்லாம், எனக்கு கிடைத்த அந்த பொக்கை வாய்  முத்தத்தின் விளைவு தான்.

     அந்த முத்தம் கொடுத்த பொக்கை வாயின் சொந்தக்காரி என் ஆச்சி தான், இன்னும் அவளுக்கு சில பற்கள் உள்ளது என்றாலும், என் கனவில் அவள் கொடுத்தது பொக்கை வாய் முத்தம் தான். அந்த எச்சில் இன்னும் என் கன்னங்களிலும் தொட முடியாத என் இதயத்திலும் படிந்திருப்பதாக உணர்கிறேன்.

    ஆச்சி, என் அம்மாவின் அன்னை. நிரம்ப பழகியது இல்லை, ஒவ்வொரு விடுமுறையிலும் பார்க்கும் ஒரு விருந்தினராய் தான் அவள் எனக்கு உறவு .அவள் என் பால்ய வயதில் தூக்கி வளர்த்ததை என் அம்மா சொல்லுவாள்,  என்னை அவள் சீராட்டியது என் மூளையால் ஞாபகம் கொண்டு ஆதரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. என் தந்தையின் அன்னையோ, நான் பிறக்கும் முன் இறந்ததால், இன்று எனக்கு முத்தம் அளிக்கும் வாய்ப்பு அவளுக்கு கிட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

   அவள் என்னை உச்சிமுகர்ந்து கொடுத்த முத்தம், என் அம்மாவிடம் கூட எனக்கு கிடைக்காதது.அவள் எதற்க்காக எனக்கு கொடுத்தாள்? என்று தெரியவில்லை, நான் என்ன ஜில்லா கலெக்டரா சாதனைகள் செய்ய ?? கண்டிப்பா அது என் திருமண நாளாக தான் இருக்க வேண்டும். என் காதலியை  மனம் முடிக்கும் கனவில் கூட எனக்கு இவ்வளவு புத்துணர்வு ஏற்ப்பட்டதில்லை. இந்த கனவு எனக்கு என்ன காரணம் சொல்ல முற்படுகிறது?

    தாயின் தாய் கொண்டுள்ள தாய்மையின் சிறப்பை அளவிட முடியாது, அதை என் நண்பனின் (பிரதீப்) பாட்டியிடம் இருந்தும் நான் உணர்ந்துள்ளேன்.அன்பு என்பது எத்தனை பலவீனமானது என்பதை இந்த பாட்டிகளிடம் இருந்து தான் உணர்கிறேன்.தேய்ந்து போன எலும்பினையும், சுருங்கிய தோலினையும் ,மங்கிய பார்வை கொண்டும் தன் பேரன்/பேத்திக்கென செய்யும் சமையலில் ஒவ்வொரு அரிசியிலும் அவள் அக்கறை இருக்கும், பிரதிபலன்களை எதிர்பாராமல்.

    தாய் எதையும் எதிர்பார்காதவள் என்றாலும், நாம் பயின்று வரும் கல்வியில் இருந்து சினிமாவரை தாயை பார்க்கும் பக்குவத்தை சொல்லிவருகிறது (  தந்தையின் நிலை பாவம் தான்), எனவே நாம் அவளுக்கு உரியனவற்றை செய்துவருகிறோம்.  ஆனால் நம் பாட்டிகளின் நிலை வேறு, அதுவும் உடல் நிலை குன்றியவள் என்றால் அவ்வளவு தான் . இன்னும் நம் கிராமங்களில், எத்தனையோ வீட்டில் திண்ணை தான் கிழவிகளின் இருப்பிடமாக பார்க்கிறோம். ( நகரங்களில் தான் அவுங்க அவசியமே இல்லையே). அப்படி இருந்தும், பாசத்தில் ஒரு எள்ளளவும் குறை இன்றி தன் பேரனை கொஞ்சுவர்.

     அவர்கள் மூன்றாவது தலைமுறையினை பார்ப்பதாலோ என்னவோ, வேகமாக மாறிவரும் உலகம் அவர்களை மிகவும் பயத்திற்கு உள்ளாக்கும், மாற்றங்கள் அவர்களை சித்திரவதை படுத்தும் நிலையும் ஏற்படலாம். பொதுவாக, அவர்களின் உபயோகம் குறைய, குறைய நமக்கு ஒரு அலட்சியம் அவர்கள் மேல் வந்துவிடுகிறது. வாரம் ஒருமுறை, ஒரு போன் பண்ணி, "எப்படி இருக்கே ?" என்ற இரண்டு வார்த்தை கேட்டாலும் - கண்டிப்பாக அவளுக்கு ஒரு வாரம் தாக்கு பிடிக்கும் நிலை கொடுக்கும் என்றாலும், facebook, blog ,sms என்று வேலைப் பழுவில் நாம் மறந்து விடுவோம்!!!

      ஆனால் , அவளை நாம் பார்த்தாலும், பார்க்காமல் சென்றாலும், பணிவிடை செய்தாலும், திட்டினாலும், அலட்சியப் படுத்தினாலும், நிராகரித்தாலும்,தலையை தொட்டுத் தடவ முற்படும் போது நாம் எக்கி நின்றாலும், நகைத்தாலும், அவள் காலத்தினை ஏளனம் செய்தாலும், அது அவளை ஒன்னும் செய்யாது. நமது சிரிப்புக்காக  - நாம் குழந்தையாய் இருக்கும் போது தன்னை முகம் மாற்றி கோமாளியாய் காட்டியவள் தானே அவள்? நம் தாயின் பிரசவ வேதனையை - தன் மனதில் நிறுத்தி - மீண்டும் செத்துப் பிறந்தவள் தானே அவள்? அவள் கோபப் படமாட்டாள், பாசத்துடன் நம் தலைமயிரை தடவிக் கொடுக்கவே ஆசைப்படுவாள்.
  
      என்றாவது ஒருநாள் நமக்கு வாழ்க்கையை பற்றிய பாடத்தினை முதன் முதலில் கற்றுத் தருபவள் அவள் தானே? ஆம், அவள் தன் இழப்பின் மூலம், தான் இருத்த திண்ணையின், கட்டிலின் வெற்றிடத்தைக் காட்டி சொல்வாளே ஒரு மவுன நீதியினை.
அது தான் இந்த சமுதாயத்தில் நமக்கு பாட்டி என்பவள் ஒரு பொக்கிஷம் என்பதை உணர்த்தும். அவள் ஊட்டிய சோறு, சொல்லிய கதையுடன் , காட்டிய வெற்றிடம் சொல்லும் தேவையற்ற ஆசையின் சொற்ப வாழ்நாளினை.

     அடைந்தது, அடையாதது என்ற எல்லா பாகுபாடும் ஒரு வெற்றிடத்தில் தான் முடியும் என்பதை அந்த பொக்கை வாய் முத்தம் எனக்கு உணர்த்தியது. காலை எழுந்து பார்த்தேன், தலையணை நனைந்திருந்தது, உள்ளமோ குளிர்ந்திருந்தது. ஆச்சி, இன்று நான் உனக்கு புடவை வாங்கி வருவேன்.

    

      

வியாழன், 10 பிப்ரவரி, 2011

காணாமல் போனவர்கள் பற்றிய கதை - Part-1

        திடீரென்று கோமாவில் இருந்து விழித்தது போல், காலக்கிரமத்தில் நாம் தொலைத்த/ இழந்த / மறந்த மனிதர்கள் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். இப்போது நான் உள்ளது சென்னையாய் இருந்தாலும், என் கிராமங்களில் தொலைந்து போன மனிதர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு அல்லது பட்டியல்.

1 . முதல் நபர் :-
கையிலே நீண்ட ஒரு கம்புடன் தெருவில் செல்லும் ஒரு அழுக்கு சட்டைக்காரன் அவன் , அவனை சுற்றி ஒரு குழந்தைகள் கூட்டம் எப்போதும் இருக்கும். பெயர் அது தானா என்று சரியாக தெரியாது ? -சவ்வு மிட்டாய் என்று வைத்து கொள்வோம்- ஆரஞ்சு, சிகப்பு கலரில் ஒரு கம்பின் மேல் ஒட்டியிருக்கும்.ஆம் , இன்றைய hygienic பற்றி விழிப்புணர்வு/தேவை/அவசியம் இல்லாத காலத்தில் தான் அப்படிப் பட்ட ஒரு இனிப்பு மிகப் பிரபலம் - அந்த கம்பின் மேற்புறத்தில் (மேற்ச்சொன்ன) அவ்வண்ணங்களில் மைதா கோந்து போன்ற பசையுடன் ஒட்டியிருக்கும்  -சொல்லப் போனால் அது 5 நிமிடம் மென்ற பபுள் கம்மின் பக்குவத்தில் தான் இருக்கும்.

அந்த இனிப்பின் விற்பனை யுக்தி தான், அவனது  இழப்பை தற்பொழுது எனக்கு ஞாபகப் படுத்தியுள்ளது.ஆம், அந்த கோந்தினை பிய்த்து - வாட்ச், மீன், நாணயம்,பொட்டு எனப் பல்வேறு வடிவங்களில் சிறுவர்களின் கையிலிலோ இல்லை கன்னத்திலோ ஒட்டி விடுவான்.

சிறுவர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலே, அடம் பிடித்து ,திருடி, நண்பனிடம் வாங்கி என கூட்டமாக அம்மிட்டாயை வாங்கி தங்கள் உடம்பில் ஒட்டி மகிழ்வர்.சில சமயம், அதை ஒட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் சிலர் அடி வாங்கிய துயர சம்பவமும், அதை பிய்த்து தின்ற ஆசிரியரின் சாகசமும் நடந்ததுண்டு.

இதில் முக்கியமாக குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் - அச்சிறுவர்கள் அனைவரும் அந்த சவ்வு மீட்டாய் - தொழில் அதிபர் cum விற்பனையாளரை "மாமா" என்று உறவு சொல்லி தான் அழைப்பர்.. .அந்த மாமாவும் அக்கூட்டத்தில் காசில்லாமல் வந்து நிற்கும் சிறுவனை முதலில் விரட்டிவிட்டு, தன் விற்பனை முடிந்தவுடன் கொஞ்சம் மிட்டாயை எடுத்து அக்குழந்தைக்கு மீசையாய் வைத்து விட்டு போவான்..

அறிவிப்பு 

  • இவர் எனக்கு தெரிந்து காணமல் போன வருடம் 1990
  • கடைசியாக இவரை நான் பார்த்த இடம் , தூத்துக்குடி மாவட்டம் - நாகலாபுரம் எனும் கிராமம்.
  • கடைசியாக பார்த்த பொழுது - கையிலே ஒரு சின்ன காகிதத் துண்டினை வைத்து ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தார்.(அந்த காகிதத்தில் big -fun -bubble gum என்று இருந்தது)

பின் குறிப்பு :
இந்த மாமாவைப் பற்றி எனக்கு ஞாபகப் படுத்திய குடிமகன் - கொஞ்ச நேரத்திற்கு முன் நான் கை வைத்த ஒரு பேருந்தின் கைப்பிடியில், ஒரு சூவிங் கம்மினை ஒட்ட வைத்திருந்தான்.     

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

வீர நாயக்கன் -5 )


               ஆள் அரவமற்ற அந்த ஏரியை சுற்றி இருந்த அப்பகுதி, நிசப்தமாய் இருந்தது,நிலவின் ஒளியில் வெள்ளிப் பாளமிட்டு அலங்கரிக்கப் பட்ட அக்குளம், அங்கு வீசிய தென்றலின் காரணமாய் சிறு சிறு அலைகளை எழுப்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. குளத்தின் மேல் பரப்பில் நீந்திக் கொண்டிருந்த கெண்டை மீன்கள் யாவும்  வெள்ளி நிற ஆடை தரித்தது போல் நிலவின் பாலொளியில் தம்மைக் காட்டிக் கொண்டிருந்தன.

'தொப்' என்று ஒரு சத்தம், அப்பகுதியின் நிசப்தத்தை கலைப்பது போல் அக்குளத்தில் இருந்து எழுந்தது.தம்மை விட வேகமாக நீந்தி வரும் மானிடனைக் காண, நீர் பரப்பில் இருந்த மீன்கள் கொஞ்சம் எழும்பி குதித்து அம்மனிதன் யார் என்று பார்த்தன, நம் வீரன் தான் நீந்தி வருகிறான்.அன்று மட்டும் ஏன் இந்த திடீர் உற்சாகம் இவனுள் ?தமக்காகவே நிலவை ஆண்டவன் படைத்தது போல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.நிலவின் பிம்பம் ஒரு பெண்ணின் வதனமாய் தெரிந்தது.அவள் யார் என்று புதிர் போடுதல் இக்கதையில் தேவையற்ற ஒன்று.ஆம், அவள் தான் கோதை!

      

இயற்கை அழகு என்பதும் கூட ஒரு மாயை தான், அதன் இருத்தல் என்றுமே உள்ளது.மனிதர்களாகிய நாம் தான் நமது வாழ்க்கையின் கோரப் பிடியில் அந்த இருத்தலை மறந்து, நம் மனதின் நிலைக்கு ஏற்றவாறு இயற்கையை உணர்கிறோம்.வீரனும் மனிதன் தானே, அவன் நித்தமும் நடந்து செல்லும் குளக்கரையில் ,இந்த நிலவும், மீனும், நிசப்தமும் கூட அவனுக்கு பரிட்சயம் ஆனது தானே!ஆனால் அவன் அவற்றை முதன் முதலாக பார்ப்பது போல் ரசித்துக் கொண்டு தான் கற்ற இலக்கியப் பாடல்களை ஒன்றிரண்டு பாடிக் கொண்டிருந்தான்.வேடனாகப் பிறந்தும் அவ்வினத் தலைவனின் உறவுக்காரனாய்  பிறந்ததால், அவன் இளம் பிராயத்தில் ஒரு பாட சாலை சென்று குருவிடம் கொஞ்சம் கல்வி பயின்றான்,ஆனாலும் தான் படித்தவற்றை வெளியே காட்டி தன்னை மற்றோர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு இல்லாதவன் அவன்.அன்று மட்டும் ,தன்னை ஒரு பக்குவமிக்க புலவன் போல் நினைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும் ,தன்னையே மறந்து நீந்திக் கொண்டிருந்தான்.

                வீரன் தன் ஈர உடையுடன் கரை ஏறி ஒரு விசில் ஒன்று அடிக்க தான் வளர்த்த நாய் நான்கு கால் பாய்ச்சலில் வந்து அவன் காலடியில் நின்றது.தனக்கு என்ன நேர்ந்தது என்று தன் நாய்க்கு விளக்க ஆரம்பித்தான்,"ஏலேய் ஒய்யா!! என்னடா அப்படி பார்க்குற!" என்று தன் நாயை அழைக்க, அது அவனை ஆச்சரியமாக பார்த்தது.தன் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசமான நாள் இது வரை இருந்ததில்லை என்று வியந்து கொண்டான். தன் கூட்டத்தில் உள்ள குறி சொல்லும் கிழவி , தன்னால் தான் சமூகத்திற்கு விடிவு காலம் வரப் போவதாகவும், அதுவும் ஒரு மேற்க்குடியை சேர்ந்த ஒரு எழிலரசி தான் அதற்கு காரணமாவாள் என்று பல முறை சொல்லும் வாக்கு மெய்யாகுமோ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான்.. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
                       அன்று,  அப்புலியை கொன்ற பின்னர் தான் தன் எதிரில் உள்ள அப்பெண்ணை  அவன் கண்டான். அவள் கண்களில் கண்ணீரும், ஆச்சரியமும் , கனிவும், கண்ணியமும் அவனுக்கு ஒளியாய் தெரிந்தது.குறி சொல்லும் கிழவி மறுபடியும் தன் முன்னே வந்து ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அதை கடந்து இரண்டடி முன்னே சென்று அவளை நோக்கினான்.

                           தான் காப்பாற்றப் பட்ட அடுத்த நொடி அங்கே செத்துக் கொண்டிருக்கும் புலியை பரிவுடன் நோக்கிய அவள் கண்களை கண்டு பிரமிப்புற்றான்.தன்னை காப்பாற்றியமைக்கு நன்றி சொல்லும் போது ஒலித்த அவள் குரல் யாழிசையாய் கேட்டது, அதற்கு பின் அவனை பாராட்டிய முத்தரசனின் குரலோ, அவளின் தந்தையின் குரலோ,  பொம்மனின் குரலோ , ஏன் அருகிலிருந்து குறைத்துக் கொண்டிருந்த அவன் நாய் ஒய்யனின் குரல் கூட அவனுக்கு கேட்கவில்லை. நனைந்த உடையுடன் அக்குளத்தின் கரையில் அமர்ந்திருக்கும் போது கூட அவனுக்கு அவளின் குரல் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

அவன் நினைவில் வந்த அவள் குரல் எனும் யாழிசையில், அவன் கவி இயற்றத் தொடங்கினான்.

" நிலவின் நிழலும் வெண்நிறமோ ?
அந்நிழலும் வருவது பகல் பொழுதோ?
உன்னை நான் பார்க்க மழை வருமோ !!"...

என்று தன்னை கவிஞனாய் இவ்வுலகுக்கு அறிமுகப் படுத்தினான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

              கோதை அன்று புலியினால் ஏற்பட்ட பீதியில் உணவு உண்ணாமல் துயிலச் சென்றுவிட்டாள் என்று அவளின் அன்னை அவளை வற்புறுத்தாமல் சென்று விட்டாள்.
கோதையின் தந்தையும் அன்று நடந்த சம்பவத்தை நினைத்து மனம் கொதித்து இருந்தார்.புலி வேட்டையாடிய அவ்விளைஞனுக்கு பாண்டியனின் பரிசில் பெற்றுத்தருவதாய் வாக்களித்திருந்த முத்தரசன், இனி தன்னை பழி வாங்க எவ்வாறெல்லாம் முயற்சிப்பான்? அவனை எப்படி சமாளிக்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
             புலி வேட்டையாடிய இளைஞனுக்கு பாராட்டு விழா நடத்தும் பொருட்டும், கோயில் மற்றும் குளம் கட்டுமானத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து வரவும் அந்த ஊரிலே சிறிது நாள் தங்கி இருப்பதாக - ஓலை ஒன்றை பாண்டியனின் ராஜாங்க மந்திரிக்கு அனுப்பினான் முத்தரசன்.தான் உண்மையிலே அவ்வூரில் தங்குவதற்கு காரணம் அக்கோயிலா? குளமா? இல்லை பழி வாங்கவேண்டிய அந்த ஆலய அர்ச்சகர் -தன்னுடைய எதிரி நம்பியா ? இல்லை அந்த வேட்டையாடிய வீரனா? என்று நாம் யோசித்தால், முத்தரசனின் கை அக்கோயிலில் செதுக்கி கொண்டிருந்த ஒரு ஆடலரசியின் சிலையின் இடுப்பில் வைத்திருந்த கையில் இருந்து அவன் காம நோயில் ஆட்கொள்ளப் பட்டதை உணர்த்தியது.

அந்த பௌர்ணமி இரவில், வீரன், ராகவ நம்பி, முத்தரசன் ஆகிய மூவரும் ஒவ்வொரு கோணத்தில் கோதையை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, வீரன் செய்த அந்த புலி வேட்டை அவ்வூரில் புரட்சி ஏற்படுத்தும் நாள் வெகு தூரம் இல்லை என்றவாறு காய்ந்து  கொண்டிருந்தது...


தொடரும்    (தொடரும்)