செவ்வாய், 30 ஜூலை, 2013

#டூரிங் டாக்கீஸ் -01 / நெஞ்சே எழு....காதல் அழியாது


சினிமா விமர்சனம் எழுத வேண்டும் என்று நான் இந்த பிளாக் ஆரம்பிக்கவில்லை, ஆனால் என்னை பாதித்த கலை படைப்பு என்று எதை நான் உணர்ந்தாலும், அதை நான் எழுதலாம் என்று தான் இப்பொழுது சினிமாவையும் சேர்த்துக் கொள்கிறேன். ஆகவே, லைவ் ஓபனிங் டே கமெண்ட்ஸ், இண்டெர்வெல் ரெவியூ, இன்ஸ்டண்ட் அப்டேட்ஸ், கலெக்‌ஷன் ரெக்கார்ட், ஓபனிங் ஹிஸ்டரி என்றெல்லாம் எழுதாமல் எந்தக் காலமாக, எந்த மொழியில் எடுக்கப் பட்டதாக இருந்தாலும் அதைப் பற்றி எழுதலாம் என்று தான் தீர்மானம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் இன்று மரியான் படம் பார்த்து விட்டு வந்தேன், இங்கிருந்தே தொடங்குகிறேன்
*********************************************************************************
 மரியான் - எனது பார்வை, அனுபவம்ஆள்-அரவமற்ற பாலை நிலத்தில் ஒன்பது நாட்கள் உயிர் வாழ்ந்திட முடியுமா? உயிர் எந்த கணமும் பிரியலாம் என்ற நிலையில் அவன் திசை தெரியா சுடுமணலில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியுமா??  அந்தப் பாலைவனத்தில் ஏன் ஒரு சாமியால் (ஜெகன்) முடியாததை, மரியானால் மட்டும் செய்ய முடிகிறது?? எப்படி அவன் மட்டும் பாலைவனத்தைக் கடக்கிறான்?  பாலைவனத்தில் அலைவதை விட “சாவது பெரும் வரம்” என்று மாய்த்துக் கொள்ளாமல் உயிரைச் சுமந்து செல்ல பலம் தரும் சக்தி எது

கண் முன்னே சிறுத்தை வந்து நிற்கவும், அவநம்பிக்கையின் உச்சம் தன் உடலை மூர்ச்சையாக்குகிறது. உயிர் துடிப்பில் ஒரே ஒரு மந்திரம் ஜெபிக்கப் பட்டு வருகிறது பனிமலர்”. பனிமலரும் ஜபிக்கிறாள் சர்ச்சிற்கு வெளியே (!!) மரியான்என்று. பாலை வனத்தில் பல ஆயிரம் மைல் தாண்டி, உயிர் பிரிந்து செல்ல எத்தனிக்கும் பாதையை, பனிமலரின் வியர்த்திருக்கும் தாவனியின் நிழல் அடைக்கின்றது. மரியான் விழிக்கின்றான், கண்முன்னே பனிமலர்.

 “நெஞ்சே எழு .... நெஞ்சே எழு.... நெஞ்சே எழு...
பனிமலருக்கு இடம் கொடுத்த ( ப.ம: உன் நெஞ்சு தான் காலி கிரவுண்டுன்னு சொன்ன, மரியான் :அதான் நீ பிளாட் போட்டுட்டியே) வரண்டு கொண்டிருக்கும் நெஞ்சம் எழுந்தால் மட்டும் போதுமே, உடலை இழுக்கும் சக்தி அந்த நெஞ்சத்தில் தானே இருக்கிறது?? மரியான் நடக்கிறான்... தத்தி தத்தி, சில சமயம் கைகளையும் ஊன்றி, கொதிக்கும் சுடுமணலில் அடுத்த அடியை அவன் எடுத்து வைத்துக் கொண்டே இருப்பது தான் அவனுக்குக் கிடைக்கும் ஒரே ஆறுதல், நடந்து கொண்டே இருக்கிறான், பனிமலர் அவனை நடத்துகிறாள்.

 “ஆயிரம் சூரியன் சுட்டாலும்,
கருணையின் வர்ணம் கலைந்தாலும்,
வான் வரை அதர்மம் ஆண்டாலும்,
மனிதன் அன்பை மறந்தாலும்.........

அவன் மறுபடியும் முயல்கிறான், நடக்கிறான், காதல் அவனை நடத்துகிறது, பனிமலர் அவனை நடத்துகிறாள். அவன் அடைந்துவிட்டான். 
 “உன் காதல் அழியாது..
நெஞ்சே எழு ..நெஞ்சே எழு .... நெஞ்சே எழு... “


* ரோஜா படத்தில் மதுபாலாவைப் போல,
* இல்லை இல்லை வினை பொருட்டு தலைவன் வேறு நிலம் செல்லும்  தலைவனை ஏங்கும் ஏதோ ஒரு அகத்திணை துறையைப் போல.
* அல்கெமிஸ்ட் நாவலில் கூட ஃபாத்திமா பாலை நிலத்தின் பெண்கள், தாங்கள் வாழும் நிச்சயமற்ற உலகில், தங்கள கணவனைப் பிரிந்து வாழும் துயரின் கொடுமைக்கு ஒப்பாக
* நம் கடற்புறத்து மீனவர்கள் வாழ்வில் அன்றாடம் இருக்கும் அச்சம் போல..

ஒரு பெண்ணின் அன்பை விட உலகில் வேறு என்னப் பெரிய விஷயம் இருக்கிறது அடைவதற்கு?? அதனால் தானே நாம் எல்லோரும் வீடு திரும்புகிறோம்?? . இந்தப் படம் வெளிவந்த அன்றே ஒரு மாதிரியான மிக்ஸட் ரெவியூவினைப் பார்த்தேன். நான் எந்த வகையறா ரசிகன் என்பதும் எனக்கே இதுவரை தெரியாது. இருந்தாலும் விமர்சனங்களை இந்தப் படம் முடிந்த பின் எப்படி பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டும்

# படம் பார்ப்பதற்கு வெகு ஸ்லோவாக இருக்கிறது, செகண்ட் ஹால்ஃப் ஆமை போல ஊர்கிறது என்று சிலர் விமர்சித்தார்கள். ஹரி படம் போல ஸ்கிரீனில் நாலு கட்டம் கட்டி காட்சிகளை வேகமாக நகர்த்திவிடுதலில் என்ன அனுபவம் இருக்கின்றது எனக்குப் புரியவில்லை? மரியான் மனதில் தங்கி நிற்கிறான், தனுஷ் எனும் தமிழின் முக்கிய கலைஞன் இங்கிருந்து இன்னும் பல உயரங்கள் செல்வார் என்று உள்ளிருக்கும் ரசிகாத்மா சொல்கிறது. பனிமலர் கண்களாலேயே, புருவங்களாலேயே மிகப் பிரகாசமாக மரியானைக் காதலிக்கிறாள், அவனுக்காக காத்திருக்கிறாள். அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி போன்ற கதாப் பாத்திரத்தை தேர்ந்தெடுத்தது கச்சிதம்.

#நான் அமர்ந்திருந்த வரிசையில் அநேகம் பேர் இந்த படத்தை ஒரே மொக்கை மொக்கை என்று விமர்சித்தார்கள், ஏன் அடிக்கடி மொக்கை “மொக்கைஎன்று பேசி வருகிறோம். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஹாஸ்யமில்லா, இரட்டை அர்த்தக் காமெடி, நக்கல் பாணி(கலாய்த்தல்) காமெடிகளிலேயே நாம் மொன்னையாகி விட்டு நமது அளவீடுகளைத் தொலைத்து விட்டோமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதனால் பரவாயில்லை, தனுஷும் படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களில் நடிக்கவும் தானே செய்கிறார்

#பாடல்கள் அந்த அளவிற்கு இல்லை, பீ.ஜி.எம் மோசம் என்றெல்லாம் சொன்னார்கள். வழக்கம் போல இசைப்புயல் கேட்கக் கேட்கத் தான் தெரியும் என்று நண்பர் ஜெகன் சொல்வது போல், படத்தோடு ஒன்றிக் கேட்க முடிகின்றது, கடல் படத்திலிருந்து ஒரே பின்புலம் கொண்ட இந்த படத்தில் இருக்கும் பாடல்கள் எத்தனை தூரம் வேறுபட்டு இருக்கிறது. இந்தப் படத்திறகு ஓட்டு கேட்பது போலே இந்தக் கட்டுரை போய்க் கொண்டிருப்பது ஏனென்றால் , இதுவரை நான் பார்த்த அத்தனை நெகடிவ் விமர்சனங்கள். அதனால் தானே என்னவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி சென்றான், நிறைவாகத் திரும்புகிறேன்.

# கடற்புறத்தே எடுத்த படங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்த இயற்கை படத்தின் Back Drop ஒரு கற்பனைத் துறைமுகமாகவே எடுக்கப்பட்டிருக்கும், மற்றபடி நீர்பறவை, கடல் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒரே நிலம் தான் இந்தப் படத்திலும் வருகிறது. திருச்செந்தூரை ஒட்டிய கடற்புறம், மனப்பாடு வரை நீள்கிறது. (கடற்புறம் யாவும் நாஞ்சில் தேசம் அன்று), ஜோ டீ குருஸ் வசனம் என்பதால் அந்த ஊர் பாஷை மற்ற இரு படங்களை விடத் தேவலாம் என்று சொல்ல முடியும்.. மீனவர்களின் பின்புலத்தை மிகச் சரியாகக் காட்டியிருக்கும் படம் முதல் பாதி முழுக்க மீன் எங்காவது சமைக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றது, எல்லா இடமும் சிலுவை மயமாகவும் இருக்கிறது. பனிமலரின் தந்தை சரியான தேர்வு, ஆனால் எந்த சர்சிலும் ஒரு ஃபாதர் கூட ஸ்கிரீனில் தெரியவில்லை, இது ஏதேச்சையா நடந்ததா? இல்லை திட்டமிட்டா என்று தெரியவில்லை.  மேலும், ஒரு பாடல் காட்சியில் (புயலில் படகில் சென்ற தனுஷை நினைத்தபடி பாடும் பாடல்) சோகத்தில் பனிமலர் கடற்கரையில் ஒரு சூரிய அஸ்தமனம் பார்ப்பது போல வருகிறது, வங்காள விரிகுடாவில் எப்படி சூரிய அஸ்தமன்ம் பார்க்க முடியும் என்று தெரியவில்லை ஒரு வேளை நான் தான் தவறாகப் பார்த்து விட்டேனா??

#கடல் திரைபடத்தில் திடீரென கடலை கேரளா போல் ஒரு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டாக (ஆலப்புழாவைக் காண்பித்து) காட்சிப் படுத்தியிருப்பார்கள். சில காட்சிகளில் கதாநாயகன் கேரள வல்லத்தில் தான் வலம் வருவார், அழகியல் என்று பார்ப்பவர்களை முட்டாளாக்குவது மிகக் கொடுமையான் விஷயம். அதே போல இலங்கைக்காரன் சுட்டான் என்பதை, கதையின் மையக் கருவாக ஒரு மரணம் இருந்திருந்தும், இலங்கை எனும் பதத்தைக் கூட சொல்லாது விட்ட தமிழுணர்வு அது. நீர்ப்பறவை போல் இங்கே இல்லை.  “சிங்களவனுக சுட்டுட்டானுக என்றே சொல்லப்படுகிறது. ஜோவையும், இயக்குனரையும் இதற்காகவே பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும். ஜோ டி குருஸிடம் இருமுறை பேசியிருக்கிறேன், ஒரு முறை அவர் பேச்சினைக் கேட்டிருக்கிறேன் இந்தியக் கடல் அரசியலும், கடல் வாழ்வும் பற்றி அறிந்து வைத்துள்ள மிகச் சில மனிதர்களில் ஒருவர் அல்லவா இவர்!! அதனால் தான் கடலோடு ஒன்றிப் போதல் சாத்தியமாகிறது. 

தனுஷ் கடலைப் பார்க்கும் பொழுது “ஆத்தா” என்று சொல்கிறாரே, நவநாகரிக நவீனச் சிந்தனைகளில் ஒன்றான இகோ ஃபெமினிசம்(ECO Feminism) இது தான். கடலை இயற்கையாக பயந்து, வணங்கி, பெண் போல் உருவகம் செய்து அன்னையாக்கி, கடலாத்தா, கடலம்மா என்று சொல்லி பின்னர் அது கடல் மாதாவுமாகக் கூட மாறுகிறது. பெண்ணையும் இயறகையை போற்றுவது போலே மதிக்க வேண்டும் என்பது தான் இகோ ஃபெமினிசம். அந்த பெண் தான் போராடி வெல்லும் சக்தியை இறுதியில் மரியானுக்குத் தருகிறாள்.
*******************************************************************************

அப்புறமாக மரியான் படத்தில் அதிகமாக வைக்கப்பட்டுள்ள அரசியல் விமர்சனம், பன்னாட்டு நிறுவனங்கள் உண்டாக்கிய பஞ்சத்தால் உருவான தீவிரவாதிகளைக் கெட்டவர்களாக காண்பித்திருப்பது என்கிற தீவிரமான விமர்சனம்.
·         மரியான் என்பது தனியாள், வீடு திரும்ப நினைக்கும் ஒரு கூலித் தொழிலாளி. தன் குடும்பத்தினை வறுமையில் இருந்து மீட்பதற்காக தன்னேயே அடகு வைப்பவன். அந்தத் தனிமனிதனின் காதல் முன்னால் பன்னாட்டுக் கம்பெனியென்ன, புரட்சியாளர்களின் கொள்கை எது குறுக்கே வந்தால் அவனுக்கு என்ன?
·         இரண்டாவது அவன் ஒரு சிறிய போராட்டக் குழுவில் சிக்குவதால் தான் தப்பிக்க முடிகிறது, இதுவே ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் அதிகாரியாக ஒரு வில்லன் இருந்தால், ஒரு சாமான்யன் தப்பித்தல் சாத்தியம் ஆகுமா என்ன? இல்லை அதற்கு பஞ்ச் பேசும் சூப்பர் ஹீரோக்களை அமர்த்த வேண்டும்.
·         இந்தப் விஷயத்தில் மிகக் கவனமாக பன்னாட்டு நிறுவனத்தின் அட்டுழியங்களை ஒரு தீவிரவாதி பேசும் வசனங்கள் வழியாக பதிவு செய்யவும் தவறவில்லை இயக்குனர்.
·         பனிமலரின் பாத்திர அமைப்பு, பூ பார்வதியாகவே என்னைக் கவர்ந்துவிட்டவரின் மேல் இருந்த கவனம் பல மடங்கு அதிகமாகிவிட்டது. எத்தனை dignified ஆக ஒரு பெண் பாத்திரத்தை அமைக்க முடியும் என்பதை இந்த படத்தில் பதிவு செய்துள்ளனர். அவள் மரியான் வந்துவிடுவான் என்று சொல்கின்ற கணம் மிக அழகானது.
·         பனிமலர் “என்னால தான் நீ இவ்ளோ கஷ்டப்பட்ட?? அழுகிறாள்
மரியான் “ உன்னால இல்ல, உனக்காக


 காதல் அழியாது... நெஞ்சே எழு
#டூரிங் டாக்கீஸ்
அடுத்த ஷோவில் ஸ்பானியப் படம் பார்ப்போம்
ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி- 27 #பகடி - 01 / துபாய் to டோங்ரி -விமர்சனம்

(இது தொடர்ந்து இயங்கும் தமிழ் முகநூல் பதிவர்களுக்கானது....)

  துபாய் to டோங்ரி -விமர்சனம் (100% இலக்கியம்)

இந்தக் கதையில் இரண்டு நபர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களாக காண்பிக்கப்படுகிறது. முதலாமவர் நல்ல செல்வாக்கு மிகுந்த, படித்த,  பெருமதிப்புடைய, நம் சமூகத்தில் ஒரு முக்கியமான நபர் என்ற தோற்றமும் பரவலாக இருக்கிறது. ஆகவே அவர் தானே கதாநாயகனாக இருக்க வேண்டும். இரண்டாம் நபர் தன் முகம் காட்டும் பொழுது, மிகவும் வன்மமாகஆபாசமாக சித்தரிக்கப்படுகிறது. வன்மம், ஆபாசம்,மிரட்டல் என மிகத் தீவிரமாக அவர் செயல்படுகிறார், முதலாமவரிடத்தில் ஏமாந்து வந்த பல நபர் இரண்டாமவரோடு சேர்ந்து கொள்கிறார்கள்.

இப்படிச் சேர்ந்து கொண்ட கூட்டங்களைக் கண்டு வெறுப்படையும் முதலாம் நபர் தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டத்தையும் நம்பப் பிடிக்காமல் அவர்களைத் துரத்திவிட்டு புதிய நட்பு  அரண் ஒன்றை அமைக்கிறார். அவர்கள் வெறும் அரணாக மட்டுமில்லாமல் அதன் மீதேறி அம்பை எய்கின்றனர். மறுபுறமும் இருந்து அம்பு வருகிறது. முதலாம் நபர் துரத்திய நபர்கள், இரண்டாமவரையும் சேராமல் வெறுமனே வேடிக்கை பார்த்து வருகின்றனர். சில அம்புகள் அப்படி வேடிக்கை பார்ப்பவர்களது மூக்கை அறுத்து விடவும் செய்கின்றன.

இதை திடீரென்று போர் நடக்கின்றது என்று ஒரு முரசு அறிவிக்கின்றது, இருபுறமும் உள்ளவர்கள் ஆமால்லஎன்று உச்கொட்டி, பின்னர் தங்களை போர் வீரர்கள் என்று அறிவித்துக் கொள்கின்றனர்.அது போன்ற போர் உலகம் அதுவரை சந்தித்திராதது. திடீரென்று சில் அம்புகள் சம்பந்தமே இல்லாத வண்ணத்தில் அவர்களுக்கு குறுக்கேயும் கூட சென்று, வந்து கொண்டிருந்தது.

இந்த போர நடக்கும் காட்சிக்கு மேலே ஒரே புறாக்களின் கூட்டம், கால்களில் செய்திகளைச் சுமந்தபடி, இப்படிப் பறக்க ஆரம்பித்த சற்றை நாட்களிலேயே புறாக்கள் கொழுத்து விடுகின்றன, இருந்தும் அப்புறாக்களை அந்த இரண்டு பிரதான நபர்களும் கூரைக்கு சென்றாவது விட்டெரிந்து பறக்க வைக்கின்றனர். இதில் பல காலமாய் பாழ் நிலம் உழுது வந்த வேளாளர்கள், கோமணம் கட்டிக் கொண்டு அந்த ஊரில் நடக்கும் போரை வேடிக்கை பார்த்துக் களிப்புடன் இருக்க ஆரம்பித்தனர், ச்ற்றைக்கெல்லாம் அண்டை ஊருக்கும் தெரிய வர, நானும் வேளாளன் தான், நானும் போர் வீரன் தான் என்றபடி ஊருக்கும் வர ஆரம்பித்தனர், இந்த அஞ்சல் புறாவை வாடகைக்கு கொடுக்கும் பணக்கார கம்பெனிகள் கூட அந்த போர்க்கலத்தைப் பார்க்க கூட்டம் வருகிறது என்று தெரிந்து கொண்டு நிறைய நிறைய மிளகா பஜ்ஜி, பானி பூரி, பஞ்சு மிட்டய், டெல்லி அப்பளக் கடைகளை ஸ்டால் வைத்தது அங்கே இரண்டு மூன்று ராட்டிணம் கூட இருந்தது. ஆனால் பொதுக் கழிப்பிடம் தான் இல்லவே இல்லை. எல்லாருமே அதற்காகக் கவலைப் படவில்லை, அதே சமயம் எல்லோரும் நல்லபடி தின்று, கழித்து வாழ்ந்தார்கள். அவ்விருவர்களும் சண்டையை நிறுத்த் விரும்பினால், அருகில் இருக்கும் தளபதிகளே அவர்களை காலி செய்து விடும் அளவுக்கு போர் உக்கிரமானது.

அந்த நல்ல பிரபலம், கெட்டவர் போலாவும். அந்த கெட்ட மனிதர் உத்தமர் போலவும் , அடுத்த நாளே... ( ஆங்.... அது என்ன சொல்வார்கள்???? ஹா கிடைத்துவிட்டது சொல்கிறேன்...அடுத்த நாளே அதற்கு வைஸ் வெர்சாவாகவும் நிறைய ட்விஸ்டுகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன.

அப்பொழுது , அங்கே ஒரு டாணாக் காரரும் வந்து சேர்ந்தார். அவரிடம் ஒரு குண்டுச் சிறுவன் பஞ்சு மிட்டாய் ஒன்று வாங்கிக் கொடுத்தபடி, இன்னொன்றை கடித்தபடியே அவரிடம் ஒன்று கேட்டான்,  “என்ன ஆச்சு அங்கிள்??, நீங்க ஏதுவுமே அவுங்கள பண்ணலையா??” என்று, அதற்கு அவர் தன்னை சிறந்த அதிகாரியாக கைகளைக் கட்டியபடி, தன் கால் முன் பாதத்தை ஊன்றி தரையில் வைத்துக் கொண்டு  உரத்த குரலில் சொன்னார்.
 “தம்பி....!!! இது ஒரு அண்டர் வேர்ல்ட் வார் (Under World War), இந்த தாதாக்கள் அவுங்களுக்குள்ளாகவே சண்டை போட்டு அவுங்களாகவே ஆஃப் ஆயிடுவாங்க நாம் ஒண்ணுமே செய்யத் தேவையில்லை” என்றார். அப்பொழுது இந்தக் கதைக்கே சம்பந்தமில்லாத ஒரு ராஜாளிப் பருந்து பறந்து சென்றது..


இது துபாய் டூ டோங்கிரி என்று வந்த, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆங்கில புத்தகத்திற்கு, கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் நான் எழுதிய புத்தக விமர்சனம்.ஹி ஹி ஹி
தொடர்வேனுங்க


வியாழன், 25 ஜூலை, 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -01 / All Seeing Eye

(புதிய தொடர்)

எல்லாவற்றையும் பார்க்கும் கண்கள் (All Seeing Eye)

 “நாம செய்றது எல்லாத்தையும் மேலெ ஒருத்தன் பார்த்துக்கிட்டு இருக்கிறான்ல அவன் பதில் சொல்லுவான்” என்று கடவுளை நோக்கி நாம் சொல்லுவோமே அந்தக் கண்களைப் பற்றியல்ல இந்தக் கட்டுரை. ஆங்கில திரில்லர் படங்களைப் போல அல்லது ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல உலகின் அத்தனைப் பகுதியினையும் ஒரே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்பும் ஒரு அசுர சக்தியின் கண்களாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

எதற்காக இதைப் பற்றி பேச வேண்டிய அவசரம் என்றால், அவசரம் தான் இது பேச வேண்டிய நேரம் தான். ஒரு வகையில் எல்லா நாடுகளுமே தம்மை ஒரு வலிமையான நாடாக உலகில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரயர்த்தனம் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, ரஷ்யாவிடம் மட்டும் தான் அந்த சாத்தியம் இருந்தது. ஆனால் பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் அடைய முடியாத ரஷ்யாவை பின்னுக்கே தள்ளிவிட்டு சீனா எதிரில் நிற்கிறது, மற்ற ஐரோப்பிய, ஆசிய எல்லாமும் இதற்குப் பின்னர் தான் வருகிறது.

National Treasure படத்தில் வரும் இந்த  All Seeing Eye, அதாவது கட்டி முடிக்கப் படாத பிரமிட் ஒன்றின் முகட்டின் மீது அமைந்திருக்கும் இந்த ஒற்றைக் கண்ணானது அமெரிக்காவின் சின்னம் ஆனது. அது அமெரிக்கா கரன்சியான டாலர் நோட்டிலும் இருக்கும் அதன் அடியில் ஒரு வாக்கியம் Novus Ordo Seclorum அப்படியென்றால் "New Order of the Ages". அதாவது இது free mason என்று அழைக்கப்படும் ஐரோப்பிய சகோதர்கள் சபையின் முக்கிய குறிக்கோளான புதிய உலகை படைப்போம் (New Old Order) என்ற கொள்கையை ஒத்து இருக்கிறது. அதாவது இந்த சபையினரால் தான் கனவு தேசமான அமெரிக்கா எனும் நாடே உருவாக்கப்பட்டது என்றும் கூறுவார்கள் (G.W.வாசிங்டனில் இருந்து அமெரிக்கா Free Mason வசம் வந்தது என்று நம்பப்படுகிறது). அதற்கேற்றார் போல் இன்றைய அதிபரான ஒபாமா வரை தனது முதல் அதிபர் உரையில் உலகை நல்ல முறையில் ஆள வேண்டும் என்று தன்னை உலகின் பிரதிநிதியாக பாவிக்கும் வழக்கம் இருக்கிறது.இங்கு மறுபடியும் அமெரிக்க சினிமாக்களைப் பற்றியும் பேச வேண்டும், பெரும்பான்மையான படங்களில் உலகிற்கு வரும் ஆபத்துகளை எல்லாம் அமெரிக்காவே ரட்சிப்பது போல இருக்கும். இந்த லட்சியத்தில் இன்றைய நிலையில் கிட்டதட்ட ஒரு நூறு ஆண்டுகள் வந்த அமெரிக்காவின் வெற்றிப் பயணத்தில் 2008 பொருளாதாரச் சரிவு மட்டும் அமெரிக்காவிற்கு ஏற்படாமல் இருந்திருந்தால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளுக்குள் உலகின் ஒரே நாட்டாமையாக அமெரிக்கா வந்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஆனால் அந்தச் சரிவில் அமெரிக்கா பெரிய அளவில் நிலை குலைந்துப் போனது. அங்கிருக்கும் பல குடிமகன்களுக்கும் நமது அரசு, நமது வாழ்க்கை முறை, நமது எதிர்காலம் குறித்த கேள்விகள் எழத் தொடங்கின.

ஒரு சில மனிதர்கள் தன் தேசமாக இருப்பினும் அது செய்யும் கேடுகளை உலகிற்கு வெளிக்கொணர முயற்சித்தனர். அதில் இரண்டு பேர்கள் மிக முக்கியமானவர்கள் :
அசாஞ்சே

ஸ்னொடென்
இந்த இருவரும் தங்கள் உயிருக்கு  இருக்கும் ஆபத்தினையும் பொருட்படுத்தாது அமெரிக்காவின் உண்மை முகத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி மற்ற நாடுகளை எச்சரித்தனர். இது 2008ல் வந்தப் பொருளாதார சரிவிற்கு பின் இன்னும் எத்தனை தூரம் அமெரிக்கா தன் எதிர்காலத் திட்டங்களை வீரியத்துடன் கொண்டு வர இருக்கிறது என்பதை உணர்த்தியது. தமிழ் ஈழத்தை தகர்ப்பதிலிருந்து, தென் அமெரிக்க வளங்களைச் சுரண்டுவது, சீனாவை சமாளிப்பது, வடகொரியாவைக் கைக்குள் கொண்டு வருவது, இந்தியாவில் தன் கோட்டையை எழுப்புவது என்று பல திட்டங்களை வெளிக் கொணர்ந்தது. இதில் அமெரிக்கா - இந்தியாவில் வைத்திருக்கும் திட்டங்கள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகவே செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்தியா போன்ற மனிதவள மிக்க ஜனநாயக நாட்டினைக் கைபற்றுவதிலேயே தனது உலகை ஆளும் கனவில் ஒரு பெரும்பகுதி முடிந்து விடும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. அதற்கான திட்டத்தில் முதல் படியாக, அமெரிக்கா இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு கையினையும், பாதுகாப்பில் மற்றொரு கையினையும் வைத்து விட்டது.

முதலில் வால்மார்ட், டெஸ்கோ போன்ற சில்லறை வணிக முதலைகள் பத்து ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் ஒரு பெரிய கபளீகரம் செய்து விடும். அது நம் நாட்டின் பெரும்பானமையான மக்களை சொந்தத் தொழிலிருந்து, Salary class மக்களாக மாற்றிவிடும் என்பதால், நம் நாடு பின்னர் சுதாரித்தாலும் கூட திரும்பி எழுவதற்கு பல வருடங்கள் ஆகலாம், ஏன் அதுவும் கூட முடியாமல் போகலாம்.

மேலும் நடைமுறையில் இருக்கும் அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா நம்மீது மேற்சொன்ன இரண்டு வகையான நெருக்கடியும் கொடுக்க முடியம், ஒன்று நம் ஆயுத பலத்தை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் (இது ஒப்பந்ததின் நேரடிச் செயல்பாடு), இரண்டாவது இதற்காக ஒரு பெரும் தொகையினை அமெரிக்க பாண்ட்களில் குறைந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தது மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது. அதாவது அந்த நாட்டின் பெரும் வணிக் மையங்களை அழைத்து வந்து நம் உள்ளூர் சந்தையை சூரையாடச் செய்வது.

அத்தனைக்கும் மேலே மொத்த இந்தியர்களின் கோப்புகளையும் அமெரிக்கா தன் வசப்படுத்தும் முயற்சி தான் All Seeing Eye என்று சொல்ல் வருகிறேன். அது எப்படி சாத்தியம் என்று சொல்கிறீர்களா?? அது தான் Aadhar அட்டை.
அந்நியன் படத்தில் விக்ரம் சொல்வது போலே “உங்க மொத்த Databaseம் எங்கிட்ட இருக்குது டா!!!” என்று அமெரிக்கா சொல்லாத செய்தியைத் தான் ஸ்நோடென் சொல்கிறார்.

அது எப்படி சாத்தியம்  என்கிறீர்களா ?? 

அதற்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள்
ஜீவ.கரிகாலன்


புதன், 24 ஜூலை, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி #மனிதர்கள் - நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்??


நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்??

(இது சாப்ளினைப் பற்றிய பதிவு அல்ல)


ஒரு வாரமாக அடித்துக் கொண்டிருந்த ஃபேஸ்புக் புயலில் இந்த வாக்கியம் அலையடித்துக் கொண்டிருந்தது. இயந்திரத் தனமான உலகத்தில் தகவல் தொழில் நுட்பம் நம்மை இறுகக் கட்டிப் போட்டு விட்டு குறைந்தபட்சம் பத்து - பதினைந்து வருடம் ஆகிவிட்டது. அலைபேசியை மணந்து கொண்டு நமது தனிமை விலை போய்விட்டது. போனை எடுத்ததும் முதல் பேச்சே “எங்கே இருக்கிற?” போன்ற கேள்விகள் நம்மை சாதாரணமாகவே பொய் பேச வைத்து விடுகிறது. உலகம் முழுவதையும் ஒரு அலைவரிசையில் இணைக்கும் சாத்தியம் அறிவியலால் நிகழ்ந்து விட்ட போதிலும், சக மனிதர்களோடு நம் அலைவரிசை டியூனிங் ஆவது மிக அரிதாகிவிட்டது.

ரயில் சினேகிதம் என்கிற வார்த்தையெல்லாம் காலப்போக்கில் கரைந்து விடும் என்பது உறுதி. செல்போன் அந்த வேலையை உறுதியாகச் செய்யும். செல்போன் இருக்கையில் உனக்கு அருகில் அமர்ந்து இருப்பவன் என்றும் அறியப் படாமலே போய் விடுகிறான். அவன் வாழ்வின் சுவாரஸ்யங்கள் உனக்குப் பிடிபடப் போவதில்லை. ஒரு திடீர் நட்பில், எதிர்பாரா உதவி என்பது எல்லாம் சாத்தியமே இல்லாது போய்விடும். அரசியல், சினிமா, புத்தகம், ஆன்மீகம் என்றெல்லாம் தெரியாதவர்களோடு பேசுவதற்கு சலூன் கடைகள் மட்டும் தான் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் இப்போது நகரங்களில் இருக்கும் சலூன்கள் எல்லாம் நவீன வகை எலைட் சலூன்கள் ஆகிப் போய்விட, தெரியாத வட மாநிலத்து ஊழியரிடம், அரைகுறை ஆங்கிலம்-ஹிந்தி கலந்து கட்டிங்கா? சேவிங்கா என்று புரிய வைப்பதிலேயே அலுப்பு வந்து விடுகிறது.

ஆதித்யா, இசையருவி தான் சிரிப்பதற்கு இடமளிக்கும் போல, இதுவும் கூட தொழில்நுட்பத்தின் சாதனை தான் ஒரு படத்தினை துண்டு துண்டாக வெட்டி பாடலை, காமெடியை என்று பிரித்து கொடுத்து, அதுவும் சீக்கிரமே புளித்துப் போந் விடுகிறது. இந்த இறுக்கத்திலிருந்து சமூக வலைதளங்கள் வாயிலாவது நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் வெகு சீக்கிரமே பெரிய வன்முறைகளையும், விரோதங்களையும், ஏமாற்றங்களையும் தருகிறது. இதை எல்லாவற்றையும் தாண்டியும் ஒரு மனிதனுக்கு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும், கொஞ்சமாவது மற்ற மனிதர்களோடு பழகவும் இடமளிக்கவும் செய்கிறது என்று நாம் மகிழ்வுறலாம். கலை மட்டுமே ஒருவனுக்கு இந்த விடுதலையை முழுமையாகச் சாத்தியப் படுத்திகிறது,  கவிதை, ஓவியம், இசை, சமையல் என எந்த கலையினையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

------------------------------------------------------------------------

அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நட்பில் இருப்பவர், அவர் தமிழகத்தில் வாசகர்களிடையே நன்கு அறியப்பட்ட கவிஞர். அவரோடு பல வார இறுதி நாட்களில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு நானும் சேர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இங்கே நான் அவரது கவிதைகள் பற்றி பேச வரவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, எளிதில் யாருக்கும் கைவரப் பெறா கலை. உண்மையில் யாரையும் காயப் படுத்தாத எள்ளல், டைமிங்கான போட்டு வாங்கல், எதிர் கேள்வியில் சாய்த்தல், உல்டாவான ரைமிங் என அவ்வளவு எளிமையாக கையாள்வார்.

சென்ற வாரம் அப்படித் தான் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டிற்கு சென்றிருந்தேன், அங்கே நண்பர் கவிஞர் அமிர்தம் சூர்யா சிறுகதைகள் குறித்து மிக அருமையாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் கையில் இரு சிறு தாள் இருந்தது, அதில் பேச வேண்டியவற்றை குறிப்பெடுத்து வைத்திருந்தார். கிட்ட தட்ட பேசி முடிக்கும் தருவாயில் ஃபார்மலாக சொல்லும் “எனக்கு அவ்வளவாக பேச வராது” எனும் சடங்கை அவரும் சொல்லும் பொழுது, அங்கே வந்திருந்த திரு.பாரதி கிருஷ்ணக்குமாரை குறிப்பிட்டு:

 “பாரதி கிருஷ்ணக்குமார் இங்கே வந்திருக்கிறார், என்னால் அவரை போலவெல்லாம் சிறப்பாக உரையாற்ற முடியாது. என் கையில் இருக்கும் குறிப்பினை யாராவது பிடுங்கிக் கொண்டால், அவ்வளவு தான்.  அதற்கு மேல் என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது” என்றார் அமிர்தம் சூர்யா. அடுத்த நொடியே,
“அதே மாதிரி தான் பாரதி கிருஷ்ணகுமாரிடம் போய் ஒரு தாளைக்  கொடுத்து அதைப் பார்த்துப் பேசச் சொல்லுங்கள், அதற்கு மேல அவராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியாது” என்ற கமெண்ட் வந்தது, அந்தக் கவிஞர் தான் அதைச் சொன்னார்.

ஒரு நிமிடம் அந்த கூட்டமே அதை ரசித்து சிரித்தது. நிற்க, அதிர்ந்து சிரிக்கவில்லை, ரசித்து சிரித்தார்கள்.இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா?? நிறைய இருக்கிறது. சில புன்னகைகளின் நினைவுகள், நாம் விழுந்து விழுந்து சிரித்த கணத்தைக் காட்டிலும் நிலைத்து இருக்கும். Humor Sense  என்பது வெறுமனே laughter அல்ல. இந்த வகையில் தான் நான் பெரும்பாலும் சந்தானம் மற்றும் வடிவேலு(ஆனால் ஆரம்ப கால வடிவேலுவிற்கு மட்டும்  நான் ரசிகன் ) காமெடிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. இங்கே நகைச்சுவையில் high class, low class என்ற standard பற்றி எழுத நான் முனைய வில்லை. ஒரு பண்பட்ட ஹியூமர் சென்ஸ் தரும் நிறைவைப் பற்றி தான் எழுதுகிறேன்.

தனிப்பட்ட முறையில் தெரிந்ததாலேயே சொல்கிறேன், அவருக்கு மட்டும் இந்த நகைச்சுவை உணர்வு இல்லாமல் போனால் அவர் வாழ்வின் துயரங்களை, வலிகளை எப்படி கடந்து செல்ல முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத, அவர் கவிதைகள் அவர் பாதையில் எங்காவது நிற்கும் இடத்தில் எல்லாம் பிறக்கின்றன, அந்தப் பாதை எவ்வளவு கரடு, முரடாக வலி நிரம்பியதாக, நோய்மை கலந்து, ஏமாற்றம் தந்து, துரோகங்களாலும், சில பிரிவுகளாலும் நிரம்பியிருந்தாலும் அவர் தன் ஹியூமர் சென்ஸ் மூலமாகவே இதைக் கடக்கிறார். நான் வெறுமனே அந்த சம்பவத்தோடு இந்தப் பதிவை முடித்திருப்பேன், அதற்குள் நேற்று நடந்த சம்பவம் இந்தப் பதிவுக்கு மிகவும் தேவைப் படுகிறது.

அவருக்குப் பிரியமான ஒருவர் அன்பளிப்பாக கொடுத்திருந்த விலையுயர்ந்த செல்போன் ஒன்று அவர் நண்பர் அறையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது களவாடப் பட்டிருக்கிறது. களவாடிய திருடன் செல்போனை எடுத்து விட்டு திரும்ப செல்லும் அவசரத்தில் தன் செருப்பை மறந்து வைத்து விட்டுச் சென்றிருக்கிறான். இந்நிலையில் தன் செல்போன் காணாமல் போனதை அவர் முகநூலில் நண்பர்களுக்குப் பதிவிடும் பொழுது, “என் செல்போனை எடுத்து சென்றவன் அணிந்து வந்த செருப்பை விட்டு விட்டான், அவன் திரும்பி அதை எடுப்பதற்கு வருவான் என்று காத்திருக்கிறேன்” என்று தன் சோகத்தில் கூட ஒரு நகைச்சுவையுணர்வு இழையோடுவதை அவதானிக்கிறேன். சமீபத்தில் வந்திருக்கும் இவரது கவிதைத் தொகுப்பில் கூட அவரது humor ஐ ரசித்தேன். உண்மையில் அது மிகவும் அவநம்பிக்கை தரும் வாழ்வின் தருணம். (மன்னிக்க அந்த கவிதையை நான் இங்கே பதிய இயலாது - தொகுப்பு : குரல்வளையில் இறங்கும் ஆறு). ஆம், அந்தக் கவிஞன், என் நண்பர் அய்யப்ப மாதவன் தான்.

வாழ்வில் அவர் பெற்றிருக்கும் அனுபவங்கள் தான் அந்த நகைச்சுவை உணர்வை பக்குவமாக அளித்திருக்கும், இதனால் சில இடங்களில் அவருக்கு பகைமை கூட தோன்றிருக்கலாம், ஏதேனும் இழப்புகள் கூட ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் இந்த உலகு நல்ல நகைச்சுவைக்கு எதிரானதும் கூட என்று சாப்ளினின் சோகமான வாழ்க்கை எனக்கு உணர்த்தியிருக்கிறது.

வேறு சில மனிதர்களோடு
இன்னொரு பதிவில் உங்களுடன்
ஜீவ.கரிகாலன்.


சனி, 20 ஜூலை, 2013

பஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்


பஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொல்லப் போனால் focused ஆக எதையும் எழுதாமல் வேறு வேறு தலைப்புகளில் எழுதுவதில் ப்ளாக் ரீடர்ஸ் இந்த 6 மாதங்களில் எனக்கு முன்பிருந்ததை விட 1 மடங்கு அதிகமானார்களே தவிர உறுப்படியாக ஒரு consistency-யுடன் எழுத முடியவில்லை என்ற குறை இருக்கவே செய்கிறது. ஆகவே பஜ்ஜி- சொஜ்ஜி சங்கத்தை களைத்து விட்டு எதையாவது உளறாமல் ஒரு தலைப்பு எடுத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று அவசரகால சபதம் ஒன்றை எடுத்துள்ளேன். So வகைகளை # போட்டு பயன்படுத்தி பகுத்துக் கொள்ளலாம்.


# சிற்பம்/ஓவியம் - ரசனை

எனது பள்ளிக் காலங்களில் எதைப் பார்த்து பயந்து இருந்தேனோ, ஒளிந்து கொண்டேனோ,(அறிவியல் படங்கள் வரையப் பிடிக்காமல் தான் வணிகப் பாடத்தை தேர்ந்தெடுத்தேன்)  இன்று அதே ஓவியங்கள் மீதும் சிற்பங்கள் மீதும் தீராக் காதலோடு இருக்கிறேன். உண்மையில் இதற்காகவாது தேசாந்திரம் சென்று பல கோயில்களையும் சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்கிற  பேராசை என்னுள் இருக்கிறது.

உண்மையில் நான் முதல் முறை மஹாபலிபுரம் வந்த போது, அது ஒரு போரிங்  பிக்னிக் ஸ்பாட்டாகவே எனக்குத் தோன்றியது; “வெறும் சிற்பங்களைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?” என்று தோன்றியது; நண்பர்களோடு சென்று கடற்கரை மணலில் அமர்ந்து பேசிவிட்டு திரும்பியதே போதும் என்று இருந்தது. மற்ற படி பெரும்பான்மையான மக்களைப் போலவே, நாம் பார்க்கும் சிற்பங்களில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தாலே போதும், டிஜிட்டல் யுகத்தில் பிரிண்ட் போட அவசியம் இல்லாததால் சகட்டு மேனிக்கு நிழற்படங்கள் எடுத்துக் கொள்கிறோம். யானையின் தந்தத்தை பிடித்தவாறு, சிங்கத்தில் சவாரி செய்தவாறு,  கருவறைக்குள் சென்று கடவுள் போஸ் கொடுத்தவாறு கடந்து விடுகிறோம் மஹாபலிபுரத்தை. இந்த நகரத்தினை ஓரளவுக்கு களவு செய்யும் காதலர்கள் தான் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.

      ஆனால் முதன் முதலாக சிவகாமியின் சபதம் வாசித்து முடிக்கையிலேயே மீண்டும் மஹாபலிபுரம் செல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். அதை வாசித்த மனநிலை ஒரு ஃபிக்‌ஷனை உள்வாங்கியிருக்கிறது. ஆடும் பெண் சிலைகளில் சிவகாமியைத் தேடினேன்.  ஆயனச் சிற்பியின் உளியின் ஓசை அகச்செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. கருவறைக்குள் இல்லாத தெய்வங்களில் ஏசுவிற்கும் இடம் இருக்குமோ என்ற கல்கியின் உணர்வுகள் வராமல் இல்லை. சரித்திரத்தில் ரோமானியர்களும், பிற நாட்டினர்களும் வணிகம் பொருட்டு பல நூறு வருடங்கள் முன்னரே வந்து சென்ற மண்ணில் கடலலைகள் சரித்திரம் பேசின, ஆனாலும்  இவை எல்லாம் புனைவே. அதுவும், வேறு ஒருவருடைய புனைவு.

     இன்னும் சில சரித்திர புத்தகங்கள் வாசித்தேன், அருமையான கலைஞர்களின் நட்புக் கிட்டியது ஓவியங்கள் குறித்தும் சில புத்தகங்கள் வாசித்தேன். மீண்டும் சென்றேன் மஹாபலிபுரத்திற்கு, ஒரு மன்னன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டியும் தன்னையும், தன் மண்ணின் பெருமை என தான் நம்பியதையும், தன் அரசாட்சியை மக்களுக்கு சொல்ல முடியுமென்றால் அது கலைகளின் வழியே தானே சாத்தியமாகிறது ??. அதனால் தான் பல்லவ நாட்டின் முக்கியமான துறைமுகமாக விளங்கிய இவ்வூரிலேயே இந்தப் பணிகளை அவன் துவங்கியிருக்கிறான் என்று தோன்றியது.

தொடர்ந்து வரும் எல்லா ஞாயிறுகளிலும் மாமல்லபுரம் செல்ல ஆரம்பித்தேன். இந்த நாட்களில் சிற்பங்களோடு இப்பொழுது என்னால் பழகவே முடிகிறது, கலைகளின் வழியே நான் பிரதானமாக எழுதி வரும் இதற்கு சம்பந்தமே இல்லாத பொருளாதார கட்டுரைகளுக்கோ, சமூகக் கட்டுரைகளுக்கோ, அறிவியல் புனைவுகளுக்கோ அந்த சிற்பங்கள் உதவக் கூடும் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. வராக மண்டபத்தில் எதிரொலித்த என் குரலின் மாத்திரைகளில் இருந்த விநோதம் என் கதைகளில் பயன்படலாம்; கடற்கரைக் கோயிலில் ஜலகிரிடை செய்யும் மாய சிற்பங்கள் என் கனவுகளைச் சூறையாடலாம்; அர்ஜுனனனின் தவக் கோலம் என் சுயம் பற்றிய சிந்தனைகளை மறு கட்டமைக்கலாம்; பாண்டவ ரதத்தில் படைக்கப்பட்டிருக்கும் சில காதல் காட்சிகள் என் வாழ்விலும் வரலாம்; நகரத்தை சுற்றியிருக்கும் ஆறு போலே ஒரு அரசியல் என்னைச் சூழலாம். நகரத்திலிருந்து அப்புறப் படுத்தப் பட்டிருக்கும் பல பவுத்த, சமண சின்னங்களைப் போல நான் கூட என் கனவுப் பாதையில் இருந்து தூக்கி எறியப் படலாம் தான்.

இதனால் தான் நான் மாமல்லபுரம் பற்றி கொஞ்சம் பதிவிட விரும்புகிறேன். இவையாவும் என் ரசனைகள். என் நுகர்வு:


01. மஹாபலிபுரம் - திருமூர்த்தி குகை
கோயிலின் வெளித் தோற்றம்
மஹாபலிபுரத்தில் ரசித்துப் பார்ப்பதற்கு என பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளாத இடம் என்றால் அது இந்த திருமூர்த்தி குகை தான். அர்ஜுனன் தபசு செய்யும் குன்றின் கீழ் திசையில் இருக்கின்றது, இந்தக் கோயிலின் புறத்தோற்றம் மூன்று அறைகளாகத் தெரியும்.இதற்கு இடபுறம் துர்கையின் சிலை ஒன்று இருக்கிறது. இது 07ஆம் நூற்றாண்டில் உருவானது என்று கல்வெட்டு கூறுகிறது. திருமூர்த்தி என்பது சிவனைக் குறிக்கும், மூன்று அறைகளிலும் ஒரே மாதிரியான புடைப்புச் சிற்பங்கள் பார்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றும். அதன் மைய அறையில் ஒரு லிங்கம் பதியப்பட்டிருக்கும்.

முதலில் நாங்கள் சென்ற குழுவில் இருந்தவர்கள் பார்ப்பதற்கு மூன்றுமே ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்கள் உற்று கவனித்தால் தான் தெரியும், மூன்று அறைகளிலும் உள்ள சிற்பங்களில் இருக்கும் சிலைகள் காட்சிப்படுத்துபவை என்ன என்று மையத்தில் நின்ற நிலையில் ஒரு சிலை, இட, வல புறங்களில் அமர்ந்த நிலையில் இரு சிலைகள். மையத்தில் இருக்கும் சிலை திருமூர்த்தி - சிவன் என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடியும். முதல் அறையில் சிவனுக்கு இட புறம் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையின் நெற்றியில் இருக்கும் நாமம் இன்னும் சிதிலமடையாததால் (மற்ற அறைகளில் இருக்கும் சிற்பங்களில் நாமம் தெரியவில்லை) விஷ்னு என்று கண்டு கொள்ளலாம்.

பின்னர் விஷ்னுவிற்கு சமமான ஆண் தெய்வமாக பிரம்மன் ஒருவனே இருக்க முடியும் (சைவ மரபில்) என்பது தெளிவு.  ஆக, இந்த மூன்று அறைகளையும் மாற்றி மாற்றி கவனிக்கும் பொழுது. இந்த குகை ஒரு ஒளிக்காட்சி(அனிமேஷன்) போன்ற ஒரு பிம்பத்தை மனதில் ஏற்படுத்துகிறது.

புராணங்களின் அறிவு எனக்கு பெரிதாக  இல்லை தான், மற்ற மதத்தில் இருப்பவர்களுக்கு கிடைப்பது போல் (அவர்களாக இறைவனுக்கு என்று நாட்களை ஒதுக்குவது), என் மதம் என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோளையோ, கட்டளையினையோ பிறப்பித்தது இல்லை. சில நேரங்களில் பெரியவர்கள் மூலம் அதை ஊட்டும் பொழுது, நான் அதை மறுத்தும்  வெளி வந்து விடுகிறேன்.

ஆயினும் இவற்றை தெரிந்து கொள்ள குழந்தைமை எனும் அற்புதப் பருவம்  இடம் கொடுத்தது, கதைகளின் வடிவில் என் அன்னையிடம், என் பாட்டியிடம் இருந்தன .அங்கிருந்து மனதில் புதைந்த பாத்திரங்கள் பின்னர் இந்த நாள் வரை காத்திருந்து வெளியே எழுந்தது . யார் பெரியவன் என்கிற போட்டியில் சிவனின் ஆதி, அந்தம் தேடி புறப்பட்ட விஷ்னுவும், பிரம்மனும் இறுதியில் தோற்று, தன் தோல்வியை ஒப்புக் கொண்டு , சரணடைந்து, வரம் பெற்ற காட்சிகளாய் விரிந்தது இந்த சிற்பங்கள். காமிக்ஸ் எனும் படக் கதை போல, ஒரு புராணக் கதையினை எலிமையாக நினைவுகளிலில் இருந்து பின்னர் மீட்டெளச் செய்தது.

கீழேயுள்ள படத்தில் கவனித்தால் தெரியும், அந்த மூன்று காட்சிகளிலும், முதல் அறையில் சிவனிடம் உபதேசம் பெருவது போலவும், அடுத்த  காட்சியில் பூஜிப்பது(நமஸ்கரிப்பது போலவும்), மூன்றாம் அறையில் இறைவன் அருள் செய்வது போலவும் முடிகிறது.


நம்மைப் போன்றவர்கள், சிற்பங்களை ரசிப்பதற்கு அதன் தொழிற்நுட்பங்கள் பற்றிய அறிவு கூட தேவையில்லை, அது உணர்த்தும், காட்சி படுத்தும் செய்திகள், வரலாறு பற்றிய பின்புலம் அறிந்திருந்தாலே போதும். மஹாபலிபுரத்தில் இப்படி நிறையக் கதைகள் இருக்கின்றன, இங்கே இருந்து நோவா வெள்ளம் பற்றி கூட சிந்திக்க முடிகின்றது (வரும் தொடர்களில் இது பற்றி பதிவு செய்கிறேன்).

நீங்கள் யாரேனும் திருமூர்த்தி குகையில் இதைப் போன்ற காட்சியை உணர்ந்து இருந்தால் சொல்லுங்கள், ஒருவேளை உங்களுக்கு அவர் வேறு கடவுளர் போலவோ!! அல்லது வேறு புராணம் என்று கூடத் தெரியலாம். கலை அப்படிப் பட்டது தான், அது அத்தனை பரிமாணங்கள் உடையது.


அடுத்த பகுதியில் வராக மண்டபம் பற்றி காண்போம்.

சிற்பம்/ஓவியம் - ரசனை
தொடரும்....


முதல் அறை

                                           இரண்டாம் அறை                                               மூன்றாம் அறை

செவ்வாய், 9 ஜூலை, 2013

பஜ்ஜி சொஜ்ஜி - 24 // சிங்கம் -04 (இலங்கையில் இந்திய அரசு)

       

 இலங்கையில் இந்திய அரசு
 -- A film by Ministry of External Affairs India


கொஞ்ச நாள் இடைவெளி விட்டிருக்கோமே எழுதும்போது ஏதாவது நல்ல விஷயமா எழுதலாம்னு உட்கார்ந்தா??? தாங்க முடியாத அளவு மூட் அவுட்.
ஏன் என்னாச்சு??>>>

நம் நாட்டில் எத்தனை பேருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இருக்கு என்பது தெரியும்?? மத்திய அமைச்சகம் என்றால் நமக்கெல்லாம் என்ன தெரியும் ?? 1.பாஸ்போர்ட் கொடுக்கும் Authority . 2. ஒரு சிங், குஜராத்தி அல்லது மலையாளி மீனவன் என்று யாராவது வேறு நாட்டு கடல் எல்லைக்குள் சிக்கிக் கொண்டாலோ அல்லது பிரச்சினையில் மாட்டிக் கொண்டாலோ ஒருவர் வந்து போவார் ஒரு வயதானவர். 3. நம்ம ஊர்க் காரங்க யாராவது அரபு, மலேசியா போன்ற தேசத்தில் அடிமைகளாகவோ, கைதிகளாகவோ சிக்கிக் கொண்டால் உடனே கலை நிகழ்ச்சிகளை பார்க்க அயல் நாட்டிற்குக் கிளம்பும் ஒரு நிபுணரைக் கொண்ட குழு தான் அமைச்சரகம். 4. இது போக த்ம்முடன் வரும் IAS அதிகாரிகளுக்குப் பதிலாக பண முதலைகளையும், பன்னாட்டு நிறுவன அதிபர்களோடும் செல்லும் பாலிஸி ஏஜண்ட்கள் என்றெல்லாம் அவர்களைச் சாடுவதால் நமக்கு ஒன்றும் நிகழ்ந்து விடப் போவதில்லை.

இன்றைய நிலையில் ஈழப் படுகொலை - காங்கிரஸ் எனும் தேசியக் கட்சியை தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் விரட்டிவிடுவது என்பது உறுதி. இணையம் வாயிலாக பல பிரச்சாரங்கள் செய்து பார்த்தும் சோர்ந்து விட்டது.  அவ்வப்பொழுது பெஙக்ளூரில் வைத்து ஆயுத பயிற்சி கொடுக்கும் நம் ராணுவம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். இன்று தனித் தனி அணியாக பல்வேறு இயக்கங்கள் ஈழ இனப் படுகொலை பற்றி பேசினாலும், அண்டை மாநிலங்களில் இது பற்றிய பதிவு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று கொண்டுதான் இருக்கிறது.

காங்கிரஸ் செய்து வந்த எல்லா துரோகங்களையும் மீடியாக்கள் துணை புரிந்தன அது தமிழக வரலாற்றுப் பதிவில் ஒரு முக்கிய நிகழ்வான மாணவர்களின் போராட்டத்தையும் இருட்டடிப்பு செய்தது, சமூக வலை தளங்களைத் தவிர. சிங்களனை இந்திய வம்சாவளியாகக் காட்டியும் தமிழகத்தை தனிமைப் படுத்தியது. இதற்கு நம்முடன் வாழும் துரோகிகளும் உடன் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பது வேறு விஷயம். ஆனால் தமிழகத்தின் பிரதிநிதிகளாக எந்த இயக்கங்களிலிருந்து (தமிழக பா.ஜ.கவாக இருந்தாலும் கூட) குரல் வந்தாலும் அதனை அலட்சியம் செய்ய மற்ற மாநில மக்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். அந்த விருப்பத்தின் காரணமாக மத்திய அரசின் மூளையில் உதித்த அடுத்த திட்டம் தான் ஆவனப் படம்.


இந்திய வெளியுறவு அமைச்சகம் இலங்கையில் செய்ததாகக் காட்டும் மறுசீரமைப்புப் பணிகளைப் பற்றிய ஆவனப் படம் தற்பொழுது (தமிழில்) பொதிகை தொலைகாட்சியில் ஒலி பரப்பப்பட்டுள்ளது. இது அநேகமாக திரையரங்குகளிலும் ஒளிபரப்பப் படலாம்.ஆவனப் படத்தின் இறுதியில் Thank you Govt of India என்று ஒரு ஈழச் சிறுவன் கடற்கரை மணலில் எழுதி வைப்பது போல் காட்சி முடிகிறது.

மிக மோசமான பொய்ப் பிரச்சாரம் மூலம் ஓட்டு வங்கியை குறிவைத்து (இலங்கையிலும் வேறு தேர்தல்!!) எடுக்கப் பட்டுள்ள படம் இது..

நாம் அனைவரும் முட்டாள்களல்ல இந்த படத்தினைப் பார்த்து நம்பிட, அதே சமயம் இந்த பொய்யாவணப் படத்திற்கு எதிரான பிரச்சாரமும் தொடங்க வேண்டும் என்பதும் அவசியம்..

மிக மோசமான பொய்ப் பிரச்சாரம் மூலம் ஓட்டு வங்கியை குறிவைத்து (இலங்கையிலும் வேறு தேர்தல்!!) எடுக்கப் பட்டுள்ள படம் இது.நாம் அனைவரும் முட்டாள்களல்ல இந்த படத்தினைப் பார்த்து நம்பிட, அதே சமயம் இந்த பொய்யாவணப் படத்திற்கு எதிரான பிரச்சாரமும் தொடங்க வேண்டும் என்பதும் அவசியம்.மிக மோசமான பொய்ப் பிரச்சாரம் மூலம் ஓட்டு வங்கியை குறிவைத்து (இலங்கையிலும் வேறு தேர்தல்!!) எடுக்கப் பட்டுள்ள படம் இது..

நாம் அனைவரும் முட்டாள்களல்ல இந்த படத்தினைப் பார்த்து நம்பிட, அதே சமயம் இந்த பொய்யாவணப் படத்திற்கு எதிரான பிரச்சாரமும் தொடங்க வேண்டும் என்பதும் அவசியம்..

இந்த சுட்டியை அழுத்தவும் http://www.youtube.com/watch?v=WMHie_vc_aQ

ஜூலை 08-09 ல் தேசிய பாதுகாபு அலோசகர் செய்த இலங்கை விஜயத்தின் பயணக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.
http://www.mea.gov.in/press-releases.htm?dtl/21921/National+Security+Advisers+visit+to+Srilanka

இந்தக் குறிப்புகளில் பார்த்தீர்களாயின் இலங்கையில் வட பகுதியில் ஏற்ப்பட்டுள்ள சீரழிவை வெறும் Internal Conflict என்று காட்டி இனப்படுகொலை என்பதை கான்க்ரீட் போட்டு மறைக்கிறது. ராமநாதபுரத்தில் வரவேண்டிய ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தொழிற் மையத்தை இலங்கைகு தத்துக் கொடுத்திருப்பதாக தன் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

இனப்படுகொலைக்குப் பின்னே நடத்தும் இது போன்ற ஈனச் செயல்கள், நம் நாட்டின் தேசிய சின்னமான மூன்று சிங்கங்களின் பின்னே மறைந்திருக்கும் சிங்கத்தின் சாயலை  அந்தக் கார்டூன் ஓவியமாகவே சித்தரித்துக் காட்டுகிறது.

//The National Security Adviser conveyed to the Sri Lankan leadership the Government of India’s views on the recent political developments and called for early political settlement and national reconciliation through the meaningful devolution of power so to ensure that all citizens of Sri Lanka, including the Sri Lankan Tamil community, would lead a life marked by equality, justice, dignity and self-respect.In this context, he also emphasized the need for adhering to the commitments made by the Sri Lankan Government to India and the International Community on a political settlement in Sri Lanka that would go beyond the 13th Amendment. He also expressed the hope that elections to the Northern Provincial Council would be held in a free, fair and credible manner.//

இந்த பிரச்சாரத்தை நாம் எப்படி எதிர்கொள்(ல்ல)ளப் போகின்றோம், அந்த ஆவனப் படத்தின் கீழ் ஒரு கண்டனமாக நம் கருத்தை இடுவது குறைந்தபட்ச செயலாக்கம்.(தொடரும்)
ஜீவ.கரிகாலன்