ஞாயிறு, 27 ஜூலை, 2014

பஜ்ஜி -சொஜ்ஜி - 72 யாவரும் நிகழ்வு - 23

 “நம்மோடு தான் பேசுகிறார்கள் நூல் விமர்சனம்”
டிஸ்கவரி புக் சிற்றரங்கம்; 26/07/14 - மாலை 06.30


யாவரும்.காம் நடத்திய 23ஆம் கூட்டம் குறித்து எழுத முடியாத அளவுக்கு ஒரு நிறைவினைத் தருகிறது, உண்மையைச் சொல்லப் போனால் இரண்டு நாட்களாக இரவில் கூட இந்த நிகழ்வினை சரியாக நடத்துவோமா என்ற அச்சத்துடனேயே கண்ணதாசனுக்கு நேரங்கெட்ட நேரத்தில் கூட போனில் அழைத்துப் பேசுவேன். எனது புதிய நண்பரான திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெய்யிடம் தான் இந்த நிகழ்வினைப் பற்றி பேசி புலம்பிக் கொண்டிருந்தேன். அவர் அதற்கு பதில் சொன்னார் “இந்தக் கூட்டம் முடிவடையும் போது எப்படி முடிவடையும் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார். உண்மையில் இத்தனை நிறைவு தரும் என்று நினைத்துக் கூட பார்க்கவேயில்லை. இங்கிருந்து மிக கவனமாகவும், மிக நேர்த்தியுடனும், நேர்மையுடனும் பயணிக்க வேண்டும் என்று எங்களை சிந்திக்க வைத்தது. இதைத் தான் இக்கூட்டத்தின் நிறைவு என்று பார்க்கிறேன்.

சரியாக 06.30 மணிக்கு வேல்கண்ணனின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வு. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் 06.30 என்று ஈவெண்டில் போட்டு 06.30க்கே ஆரம்பித்தது இதுவே முதன் முறை என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இந்த நூலின் ஆசிரியர்கள் இருவருமே ஓவியர்கள் தான். முழுவதும் கலை மற்றும் சமூக வாழ்வியல் குறித்த உரையாடல்களாக பதிவு செய்திருக்கும் இந்த புத்தகம் பற்றி பேசுவதற்கு எல்லோருமே கவிஞர்களாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பது எங்கள் குழுவின் தீர்மானமாக இருந்தது.

ஏனென்றால் ஓவியம் என்பது ஆதி மொழி, கவிதை என்பதோ ஒரு மொழியில் இயங்குகின்ற தனி மொழி இந்த துறைகளுக்குள் இருக்கும் ஒரு தொடர்பினைப் புரிந்துகொள்ள முடிகிறது, தீர்மானமாக கவிஞர்களையே அழைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

எங்கள் அண்ணன் அய்யப்பமாதவன் இந்த புத்தகத்தில் சிதறிக் கிடக்கின்ற நுன்விஷயங்களையும், உரையாடலின் தொனி குறித்தும் பேசினார். மஹாராஷ்ட்ராவில் உள்ளவர்களின் இயல்பான வாழ்வியலையும், அவர்களின் கலைகள் மீதான் ஆர்வம் குறித்து நூலில் பேசப்பட்டிருக்கும் செய்தியோடு, அந்த புத்தகத்தின் அத்தியாயம் இப்படி முடிகிறது :

// தமிழகத்தின் எளிய உணவு, VALUE ADDED FOOD ஆக மாறிப் போனதைப் போல நடை, உடை, பாவனையும் மாறிப்போய்விட்டதைத் தொடர்ந்து கலை சம்பந்தமான படிப்புகள் அற்றுப்போய் எல்லா குழந்தைகளும் டாக்டராகவும், இன்ஜினியராகவும் இருக்கும் பட்சத்தில் மற்ற தொழில்களுக்கு நம் காப்பாளரை போல் பிற தேசத்திலிருந்து அழைத்து வரப்படும் நபர்கள், VALUE ADDED SERVICE ஆகவே இருப்பார்களேயன்றி இயல்பும், எளிமையும், தூய்மையும், மேம்பாடும் புலம் பெயர்ந்தால் மட்டுமே காணக்கிடைக்கும்//

சமகாலத்தில் அம்மா உணவகம் இருக்கின்ற பொழுது நல்லபடியாக கலைகளை வளர்த்தெடுக்கும், ஈடுபாடு கொண்ட சமூகம் வருமா என்கிற laughterஐ முன்வைத்து விட்டுச் சென்றார்.

இந்தக் கூட்டத்தில் அனைவருமே அதிகம் எதிர்பார்த்தது அகரமுதல்வனின் பேச்சைத் தான் என்பதில் எனக்கும் ஐயமே இல்லை, இந்த புத்தகம் பேசிவந்த அரசியல், சமூகம், கலையுணர்வு என்பதை வேறு ஒரு நிலத்திற்குள் வைத்தும் பேச முடியும் என்பதை நிரூபத்துக் காட்டினார். கலையின் வடிவமானது ஒவ்வொரு நிலத்திற்குள்ளும் வேறுபட்டாலும், அதன் ஜீவன் பொதுமையானதே. அகரமுதல்வனின் பேச்சு அங்கிருப்போரை மிகுந்த இறுக்கத்திற்குள்ளாக்கியதை என்னால் அவதானிக்க முடிந்தது. “அட!! இவா நம்மாளுக தாண்டா” என்று நூலின் ஆசிரியர்களை சொல்லும் கணத்தில் அகரமுதல்வன் இணைத்திருக்கும் விதமானதை எத்தனை பரிமாணங்களில் சிந்திக்க முடிகிறது என்பது வியப்பு. அதே நேரம் அது வலியினை தரக்கூடியது ஆசிரியர் பாலசுப்ரமணியம் ஒருபக்கம் நிறைவினையும் இன்னொரு பக்கம் வலியினை சுமந்து அமர்ந்திருந்ததை என்னால் உணர் முடிந்தது.

ராஜேந்திரச் சோழனின் 1000ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில் இந்த கலை, சிற்பம் ஓவியம் குறித்து பேசுவதையும், முன்னதன் நீட்சியாகப் பார்க்க முடிகிறது என்று தன் உரையை முடித்து வைத்தார்.

அமிர்தம் சூர்யாவுக்கென்ற தனி பாணி, அவருக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது என்பது உண்மை, அது எதிர்வினையாகவும் இருக்கக் கூடும் என்பதும் உண்மை. சூர்யா புத்தகத்தின் வடிவத்தினை, அதன் கூர்மையான சொல்லாடல்களை, அதன் கட்டுமானங்களை என எல்லாவற்றையும் தன் அனுபவத்தோடு இணைத்து அந்த புத்தகத்தின் உள்ளே நுழைத்துச் சென்றார். கோயிலின் தத்துவம், குடும்ப உறவு, அரூப ஓவியங்கள் என தன் வீட்டிற்குள்ளே நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு இந்நூலின் பேசப்பட்ட விசயங்களைக் கோர்த்துப் பேசியது பலரையும் ஈர்த்தது என்பதில் ஐயமில்லை.
அதிலும் அந்நூலில் வரும் அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் குறித்த பதிவினை எப்படி எளிமையாக புரியும் படி “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, கோழிக் குஞ்சு வந்ததென்று” பாடல் வழியாக ஆசிரியர்கள் மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதனை தன் இளைய மகனோடு நடந்த உரையாடலையும் அதைக் கவிதையாக மாற்றிய அனுபவத்தையும் சொல்லிய விதம் கலையினை எவ்வளவு எளிமையான இடத்திலும் பார்க்க முடியும் என்பதாக இருந்தது.

யவனிகா ஸ்ரீராம் பேசுவதற்கு முன் அவர் சென்ற கூட்டத்தில் விட்டுச் சென்ற கேள்வியை மறுபடியும் தூசி தட்டி எடுத்துக் கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் யவனிகா அண்ணன் பேசிய விதம் எல்லோருக்குமே புதிதாக இருந்திருக்கும். இந்நூலின் மையச் சரடினை எடுத்துப் போட்டவர்: “கலைகளும் பண்பாடும் அழிந்தொழிந்துக் கொண்டிருக்கும் சமூகத்தில், மீட்கப்படுவதற்கான கடைசி முயற்சியாகக் கூட ஒரு இயக்கம் தோன்றவில்லையே என்கிற கவலையைப் பதிந்துள்ளனர்”.

கலைவடிவம் யாரால் காபந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது, யார் அதை வேறு வடிவத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர், இதை எப்படி மீட்டெடுக்க முடியும் என்கிற விதையை ஊன்ற முடியும் என்பது போன்ற தொனியில் பேசத்தொடங்கிய அவர் ஓவியங்களின் பல்வேறு நிலங்களையும், அது எப்படி மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற பகிர்வுகளையும் மிக சுவாரஸ்யமாகப் பதிந்தார். ஸ்ரீநிவாசனின் நினைவுகளில் இருக்கும் அந்தக்கால தமிழ்படங்களின் செவ்வியல் பண்புகளும் சுவாரஸ்யங்களுமாக தன் அனுவத்தையும் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, பானுமதி, ஜெமினி, சிவாஜி என்கிற நடிகர்கள் வழியே பேசிய விதம் அரங்கினை அதுவரை இருந்த இறுக்கத்தில் இருந்து ஒரு சில நிமிடங்கள் வேறு எங்கோ கூட்டிச் சென்ற விதமாக இருந்தது. இந்த இடத்தில் சினிமாட்டிக்காக “அரங்கம் அதிர்ந்தது” என்று சொல்வதும் அழகு தான்.

சமகாலத்தின் தமிழ்மனம் சினிமாவில் வயப்பட்டிருக்கும் விதமும், செவ்வியல் பண்புள்ள கலைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அம்சங்கள் குறித்தும் பேசினார். தனது அரசியல் பார்வைகள் வழியாக மட்டும் பார்க்காமல் ஒரு சார்புமற்ற கலைஞனாய் பொதுவில் நின்று பேசியதாய் அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதே உண்மை. செவ்வியல் கலைகள் குறித்துப் பேசும் பொழுது, “நம் இன்றைய படைப்புகளை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத மேலை நாட்டினர், குறுந்தொகை போன்ற க்ளாசிக்களைப் பேசும் பொழுது வியக்கின்றனர்” என்று இவர் முன்வைக்கும் போதே கோயில்களை வெறும் மதச்சின்னமாகப் பார்க்கும் அரசியல்வாதிகள் மற்றும் முற்போக்குவாதிகளுமே இன்னும் புரிந்து கொள்வதற்கான் வெளியை இந்த புத்தகம் பேசுகிறது என்று சொல்ல முடிகிறது.

பவா செல்லதுரை பேசாமல் இக்கூட்டம் நிறைவடையாது என்று நண்பர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். நிறைவானது. அமிர்தம் சூர்யா சொன்னது போல, இந்த அற்புதமான நண்பர்கள் நடத்திய எளிய ஏற்புரையில் அன்பைத் தவிர வேறொன்றும் கலையின் ஜீவனாக இருக்க முடியாது என்றெ நம்பிவிடத் தோன்றியது.

இறுதியில் பேசிய ஸ்ரீநிவாசன் மூன்று நான்கு வாக்கியங்களில் ஏற்கனவே இறுகிப்போயிருந்த மனதை இன்னமும் கட்டிப்போட்டு விட்டார். மேலைநாடுகளுக்கு நம் கலைகளைக் கொண்டு செல்லும் விற்பன்னர்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்று ஆரம்பித்தார். மிஞ்சியிருக்கின்ற எச்சங்களிலும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போகின்ற சூழலில் இன்னமும் 30, 40 ஆண்டுகளாவது பேசிக் கொண்டுதான் இருக்கப் போகின்றோமா என்று கேள்வியெழுப்பியபடி முடித்துக் கொண்டார். ஸ்ரீநிவாசன் எழுப்பிய குறியீடுகளின் கனைகள் இன்னமும் என்னை எத்தனை நாளைக்கு தூங்க விடாமல் செய்யுமோ???

நிகழ்வுக்கு வந்திருந்த பவா சார், சைலஜா, சூரியதாஸ் அண்ணன், இயக்குனர் கீரா, நண்பர் கார்த்திக் இராமனுஜன், பரிதி, நண்பர் சொக்கலிங்கம், கவிஞர் கோசின்ரா, நண்பர் ஷான் கருப்பசாமி, கவிஞர் நரன், நண்பர் பாஸ்கரன், நண்பர் கவிஞர் ஆரா, என் ஆசிரியர் வானமாமலை என எல்லோருக்கும் என் நன்றிகள். 

முதன்முதலாக இந்த அரங்கினை ஒளிப்பதிவு செய்தோம். கிட்டதட்ட மூன்றரை மணிநேரம் இந்த காணொளியை எடுத்த அந்த மனிதர் இறுதியாகக் கண்ணதாசனிடம் சொன்னார் “சார், இவ்ளோ நேரம் எடுத்தேன், கைகள் வலிக்கவேயில்லை சார்”

நன்றி

சனி, 26 ஜூலை, 2014

பஜ்ஜி சொஜ்ஜி - 71 - யாவரும்.காம் - தல வரலாறு, மன்னிக்க தள வரலாறு...

யாவரும்.காம் எனும் அமைப்பை உருவாக்கி இரண்டரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, 25ஆவது நிகழ்ச்சி வெகு விரைவில் நடத்தவிருக்கிறோம். ஆனால் இது வரை எங்கள் அமைப்பு என்ன நோக்கம் கொண்டது? அது எப்படி உருவாகியது என்கிற விஷயத்தை எல்லாம் இதுவரை யாரிடமும் சொல்லியதில்லை. எங்கள் செயல்பாடுகள் மூலமே நாங்கள் யார் என்பதை இது வரை அறிவிப்பது என்பதில் உறுதியாக இருந்தோம். இப்போது அதைப்பற்றி சொன்னாலோ அல்லது எழுதினாலோ கேட்பதற்கும் கருத்து சொல்வதற்குமான நட்புகளைப் பெற்றிருப்பதால் இப்பதிவைத் தொடர்கிறேன்.

யாவரும்.காம் அமைப்பை உருவாக்கும் போது உடனிருந்த நண்பர்களான வேல்கண்ணன், சாத்தப்பன், அன்பு சிவன், கண்ணதாசன், பாலா இளம்பிறை ஆகிய என் நண்பர்களில் இன்று அன்பு சிவன் இல்லை L. வாசகர்களாக (வேல்கண்ணனின் படைப்புகள் மட்டுமே அவ்வப்பொழுது வெளியாகிக் கொண்டிருந்தது சில இதழ்களில்) மட்டுமே நாங்கள் இந்தக் குழுவை ஆரம்பித்தோம். எங்கள் வாசிப்பை எப்படி விரிந்த தளத்திற்குள் கொண்டு செல்வது? எங்களுக்கு விருப்பமுடைய படைப்பாளிகளோடு நாங்கள் அருகில் செல்வதற்கான ஊடகமாகவும் தான் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினோ. ஒவ்வொரு கூட்டமும் கூட பெரும்பாலும் எங்கள் வாசிப்பினை அடிப்படையாய் வைத்து தான், விவாதிக்கப்பட்டு தேர்வு செய்கிறோம். இந்த நண்பர்களோடு, அமிர்தம் சூர்யா, இளங்கோ, ரமேஷ் ரக்சன், அகரமுதல்வன் ஆகிய நால்வரும் தொடர்ந்து கொடுத்து வரும் அதரவு மேற்சொன்ன நண்பர்களுக்கு இணையானதே.

*

இது போக எங்களை ஊக்கப்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவர் இருக்கிறார். அவர் எங்களுக்கு நிகழ்வுகளின் போது மட்டுமல்லாது, அவற்றிற்கு வெளியேயும் தனிப்பட்ட எங்களது எழுத்து, வாசிப்பு மீதும் அக்கறை கொண்டவர். ஒவ்வொரு முறை எங்கள் கூட்டத்திற்கு அவர் வரும் பொழுதும் அவருடன் , அவர் தங்கியிருக்கும் இடத்திற்கே சென்று பேசிவிட்டு வருவோம். ஒவ்வொரு முறையும் அவர் எங்கள் கூட்டத்தில் பேசியவற்றில் ஏதாவது ஒன்றை உண்டு செரித்து நெடு நாட்கள் அவற்றை விவாதிப்பதுண்டு. நான் பெரும்பாலும் அவற்றை கவிதைக்காரன் இளங்கோவிடம் எடுத்து வைக்கும் குறிப்புகளில் இருந்து ஏதாவது ஒன்றை விவாதிப்பதிலேயே எங்கள் பல நாட்கள் சென்றிருக்கின்றன என்பது உண்மை.

சென்ற முறை தன் கவிதைத் தொகுப்பிற்கான விமர்சன அரங்கின் போது தமது கவிதைகள் எப்போதும் வேறொரு நிலத்தில் நிகழ்வதற்கான காரணமென “இன்றைய சூழலில் தமிழகத்தில் லேண்ட்ஸ்கேப்” என்பதே இல்லை என்றார். போகிற போக்கில் ஒரு கவிஞன் இப்படிப்பட்ட சொல்லினை உதிர்த்துவிட்டு சென்றுவிட முடியுமா என்ன?? அப்படி இயல்பாகவே ஒரு கவிஞன் உதிர்த்துவிட்டுச் சென்றாலும், அதை வாசகன் அப்படியேவா எடுத்துக் கொள்வான்? அவர் சொன்ன விஷயம் – மிகவும் ஆழமானதே – ஒரு நிலத்தில் நின்று கொண்டே அதற்கு நிலக்காட்சியே இல்லை என்று எப்படிச் சொல்ல முடிகிறது அவரால்?? என்றால் சாத்தியமிருக்கிறது.

ஆம் சாத்தியமிருக்கிறது – ஒரு தலைநகரம் வருடத்திற்கு சில கிலோமீட்டர்களை விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டே நீண்டுக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் வாழ்வோரெல்லாம் நகர் வாழ்க்கையிலே மனதைப் பரிகொடுத்து இருக்கின்றனர். நகரத்திற்குள் தங்களை இயக்கத்தெரிந்த புத்திசாலிகள் – நகரத்தின் விலையினையும் ஏற்றிவிட்டு,  – என் சொந்த ஊரிலும் சென்று உழவு நிலத்தை விற்கத் துணிகிறான். அதுவும் சென்னையின் விலையில். இதை அவனுக்கு சாத்தியப்படுத்துகிற சக்தி உண்மையில் ஒரு கொள்ளை நோய் என்பதை உணரமாட்டர்கள். இன்னும் சில காலத்திற்கு. வரைபடத்தில் கூட காணக்கிடைக்காத கிராமமான என் ஊரான நாகலாபுரத்திலும் சில கோடிகளுக்கு விவசாய நிலமானது, அதுவும் சென்னையின் புறநகர் பகுதிகளின் விலைக்கு நிகராக விற்கப்படுகிறது. அப்படியென்றால் நிஜத்தில் தலைநகருக்கும் என் கிராமத்திற்கும் இடையே இருக்கின்ற சில நூறு கிலோமீட்டர்கள் எங்கே போனது. இதைத் தான் கவிஞன் சொன்ன “தமிழ்கத்தின் லேண்ட்ஸ்கேப் மறைந்துவிட்டது” என்கிற வார்த்தையோடு என்னை பொருத்திப் பார்க்கச் செய்தது... அவர் தான் கவிஞர் யவனிகா ஸ்ரீராம்.
 


*

நாங்கள் இத்தனை பேரும் இணைந்த கதை என்ற ஒன்றிருக்கின்றதல்லவா? மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அந்த பெரிய பதிப்பகம் நடத்திய புத்தக வெளியீட்டு விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன், நிகழ்வு ஆரம்பிப்பதற்கு வெகு நேரம் முன்னரே வந்து தேநீர் கடையில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் பொழுது தான் ஃபேஸ்புக்கில் பார்த்த முகங்கள் இவர்களென ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டோம். சாத்தப்பன், வேல்கண்ணன், அன்புசிவன், பாலா, கண்ணதாசன் என எல்லோருமே இணைந்ததும், சந்தித்ததும் கூட இந்தப் புள்ளியில் தான். அந்தப் புள்ளி எடுத்துக் கொடுத்த வார்த்தை தான் ”யாவரும்” எனும் சொல், இன்னும் பல திட்டங்களையும் லட்சியங்களையும் கொண்டு பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த உயிர் சொல்லுக்கு உயிர் கொடுத்தவர் தான் கவிஞர் அய்யப்ப மாதவன் - நாங்கள் இணைந்த புள்ளி.

- ஜீவ கரிகாலன்

புதன், 23 ஜூலை, 2014

தந்தைமை

(கல்கியில் வெளியான எனது சிறுகதை)

நள்ளிரவு பன்னிரெண்டைத் தாண்டியும் அந்த வால்வோ பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தேன் . அது ஒரு தனியார் பஸ் கம்பெனியின் பார்சல் அலுவலகம், என்னுடன் அந்த பேருந்தில் ஏறுவதற்காக நான்கு பெண்களும், சில, பல மூட்டைகளும் காத்துக்கொண்டிருந்தன. அந்த நிறுவனத்தின் மற்ற ஆம்னி பேருந்துகள் கிளம்பி குறைந்த்து 01.30 மணி நேரமாவது ஆயிருக்கும். இது சொகுசு வால்வோ என்பதனால் தாமதமாகவே கிளம்பி வருகிறது, கிட்டதட்ட மற்ற பேருந்துகளோடு ஒப்பிடும் போது இரண்டு மணி நேரம் தாமதமாகக் கிளம்பினாலும் சென்னைக்குள் முதலில் நுழைவது இந்த வால்வோ பேருந்து தான்.

மழைக்கான எத்தனிப்போடு மேகம் கூடிக் கொண்டிருந்ததால், நட்சத்திரங்கள் மறைந்து இருந்தன. லேசான காற்று பதமாகவும் மேகத்தைக் கலைக்காத பொறுமையுடனும் ஊர்ந்து கொண்டிருந்தது. பேருந்தில் செல்வதற்கு தயராய் வெளியே எடுத்து வைக்கப் பட்டிருந்த இரண்டு மூட்டைகளுக்கு இடையேயான பொந்தினுள் தன் உடலைப் புகுத்தியிருந்த நாய் ஒன்று அழகாகத் தலையை மட்டும் மூட்டையில் வைத்து மிகச் சௌகரியமாய் படுத்திருந்தது, நமக்கும் இன்றைக்கு இதே போன்ற ஒரு சௌகரியமான தூக்கம் வேண்டுமென்று பிள்ளையாருக்கு ஒரு ஸ்மைலி போட்டு வேண்டுகோள் செய்தேன்.

இரைச்சலின்றி வந்து சேர்ந்த வால்வோ பேருந்தினுள் அவசரமாக நுழைந்தேன் மற்ற நால்வருக்கும் முன்பாக, நீல வண்ண விளக்கின் வெளிச்சத்தில் – ஜன்னலோர இருக்கை எண் 20. என் சீட்டில் ஒரு பெண் அமர்ந்திருந்தார், தனியாளாக வந்தாலே இந்த அவஸ்தையை எதிர் கொள்ள வேண்டுமென்பது எழுதப்படாத விதி.

“என்னங்க இது என் சீட்…. எங்க மாறி உக்காரணும்னு சொல்லுங்க?”

“கடைசி வரிசைல மட்டும் உட்கார மாட்டேன், அதுல சாய முடியாது.” என் வாழ்க்கையில் அடிக்கடி வால்வோ வாய்ப்புகள் கிடைக்காது என்றெல்லாம் சொல்ல வந்து நிறுத்திக்கொண்டேன்.

அப்போது தான் அந்தப் பேருந்தினுள் கவனித்தேன் கடைசி வரிசையில் இருந்த நான்கு ஆண்களைத் தவிர மூன்று ஆண்கள் தங்கள் ஜோடியுடன் அமர்ந்திருந்தனர். எனக்கு அவ்வளவு எளிதாக மாற்று இருக்கை கிடைக்காது. என் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணியின் இருக்கை கடைசி வரிசைக்கு முந்தைய வரிசை அதில் 11 அல்லது 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி இருந்தாள், எனது இருக்கைக்கு அருகிலிருக்கும் அந்தப் பெண்ணின் மகளுக்கும் பத்து வயது தான் இருக்கும். நான் ரிசர்வ் செய்த சீட்டிலோ அல்லது அந்தக் கடைசி வரிசைக்கு முந்தைய சீட்டிலோ அமர வேண்டும்.

என் சீட்டையே விட்டுத் தரலாமென்று அதை அவருக்கு விட்டுக் கொடுத்து விட்டு பின்பக்கம் சென்றேன். அங்கே அந்தச் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள், உள்ளே நுழைய முற்பட்ட என்னைத் தடுத்து நிறுத்திய அச்சிறுமியின் தாய்.

“அது லேடீஸ் சீட்டுங்க”   
அப்பெண்மணியின் பார்வையிலே என்னைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகத் தோன்றியது. அவளிடம் வாதம் செய்ய விரும்பவில்லை. நான் என் சீட்டுக்கே திரும்பினேன்.

“சார்.. ப்ளீஸ் சார்!!”

“ஏங்க அவங்க அத லேடீஸ் சீட்டுன்னு சொல்றாங்க – நீங்க தான் உட்காரணமுமாம்”

“சார் நான் போய் அங்க உட்கார்ந்தா, இவ அழுகுறா சார்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்”

“நான் என்னம்மா செய்யட்டும் – அந்தம்மா பிரச்னை செய்யுறாங்கல்ல, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா வால்வோல ஏறி வந்தேன்”

என் குரல் உயர்ந்ததும், பேருந்தில் இருந்தோர், தூக்கம் கலைவதால் ‘உச்’ கொட்டத் தொடங்கினர். அந்தப் பெண்மணி அவ்விருக்கை அருகே சென்று என்னிடம், “சார்!! இங்க வாங்க. சின்னப் பொண்ணு தானே” என்று சொன்னாள். மீண்டும் சென்றேன். அதற்குள்ளாக இரு பெண்களுக்கும் வாக்கு வாதம் முற்றியது.

“நான் லேடீஸ் சீட்டுன்னு சொல்லி தான் –புக் பண்ணுனேன்”

“அவ சின்னப் பொண்ணு தானங்க!!”

“ஏன் உங்க பொண்ணு கூட தான் சின்னப் பொண்ணு, அவர அங்கனையே உக்கார சொல்லுங்க”

“ஏன் ஹஸ்பெண்ட் லாஸ்ட் ரோல இருக்கார். ஒன்னு இவர உள்ள விடுங்க இல்லாட்டி என் ஹஸ்பெண்ட இங்க உட்காரச் சொல்லிட்டு நான் லாஸ்ட்ல போறேன்”

நானும் அந்தப் பெண்மணியும் கடைசி இருக்கையைப் பார்த்தோம், அநேகமாக எங்களுக்குள் நடந்து வரும் விவாதத்தை கவனிக்காத ஒரே பயணி அப்பெண்ணின் கணவராகத் தான் இருக்க வேண்டும். குறட்டை சத்தமே பலமாக இருந்தது.

ஆனால் இந்த முறை அந்தப் பெண் புதிய யுக்தியைக் கையாண்டார், குரலை சற்று தாழ்த்திக் கொண்டு.

“என் பொண்ணு இப்போ மேஜராயிட்டா” என்றாள். கொஞ்சம் கூட தாமதியாமல்,
“என் பொண்ணும் தான்” என்றாள் என் இருக்கையைக் கேட்டவளும்.

”ஏங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்? என்னையப் பார்த்தா என்னன்னு உங்களுக்குத் தோணுது? ஆம்பிளைங்கனாலே மோசமாதான் நடப்பாங்களா?” என் குரலின் சத்தம் கேட்டு பேருந்தினுள் வெள்ளை விளக்கும் எறிய ஆரம்பித்தது. எனக்கு ஆதரவாக சில ஆண் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. இறுதி முயற்சியாக தனக்குப் பக்கத்திலிருக்கும் மற்றொரு பெண்ணிற்கு அருகிலிருக்கும் சீட்டில் என்னை அமர வைக்கலாமா என்று அப்பெண்ணிடம் கேட்டுப் பார்த்தாள், அவளும் தலையை இடமிருந்து வலமாக ஆட்டினாள்.
“ஒண்ணு என் பக்கத்துலேயே உட்காரட்டும், இல்லை கீழ பெட் விரிச்சு படுக்க வச்சுக்கோங்க” என்றேன்.

தன் மகளை எழுப்பிவிட்டாள், நான் உள்ளே சென்று அமர்ந்துகொண்டேன். அவளுக்குப் போர்த்திவிடுவது போல் அச்சிறுமியின் காதினில் முணுமுணுத்து விட்டு தம் இருக்கையில் அமர்ந்தாள். அச்சிறுமியும் இடதுபக்க ஓரமாக ஒடுங்கிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். அவள் தாயோ இன்னும் என்னைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டும், தம் கையில் இருந்த ஸ்மார்ட்போனில் அந்த ஆம்னி பஸ் கம்பெனி இணையதளத்தில் புகார் செய்து கொண்டும் இருந்தாள்.

ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும் போட்து கூட இப்படி இடம் மாற்றித் தரச் சொல்லி ஒரு பெண் தம்மை இம்சித்ததாகச் சொல்லியிருக்கிறான் என் நண்பன். அவன் அடிக்கடி விமானத்தில் செல்வான், நமக்கு இந்த வால்வோ பயணமே அரிதுதான். இதிலும் இப்படி மூட் அவுட் செய்கிறார்களே என்று எரிச்சலாக இருந்தது. தூக்கத்தில் என் இடது கையை வைக்கும் பிடியில் வைக்க, அதில் வைத்திருந்த தன் கையை விருட்டென்று எடுத்தாள் அச்சிறுமி, சங்கடமான சூழ்நிலையை உருவாகி விட்டது. இருக்கையின் வலது ஓரத்தில் என் பெரிய உருவத்தை எவ்வளவு தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைத்தேன்.

ஒரு அரை மணி நேரம் தான் கடந்திருக்கும், ஏதோ இரண்டு பேர்கள் சண்டையிட்டுக் கொள்வது போல் காதில் விழுந்தது. கண்களை திறந்தால் பேருந்தின் அனைத்து விளக்குகளும் எறியவிடப்பட்டிருந்தன. என்னுடன் பேருந்தில் ஏறிய நான்கு பெண்களின் ஒருவர் தான், தன் பின்னால் அமர்ந்திருந்த ஒரு ஆணோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த ஆண் முன்னே இருக்கும் பெண்ணின் காலை உரசியதாக அந்தப் பெண்மணி சண்டையிட்டாள், அந்த ஆணுடன் வந்த பெண் அவருக்கு பதிலாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். தூக்கத்திலிருந்து கலையாதவனாய் என்னைப் போலவே இரண்டு பெண்களின் சண்டையை அந்த மனிதன் கவனித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் மீது குற்றம் சுமத்தியவள், தன்னோடு வந்த மற்ற மூன்று பேரையும் துணைக்கு சேர்த்துக்கொண்டாள். சுவாரஸ்யமாகத் தான் சண்டை போய்க் கொண்டிருந்தது, அதை கவனித்துக்கொண்டிருந்த எனக்குள் என்ன தோன்றியதோ தெரியவில்லை? ஆனால் இந்த சண்டையை வைத்து என்னையும் யாராவது பார்ப்பார்களா என்று தோன்றியது. என்னருகிலிருக்கும் சிறுமியின் தாயினைப் பார்த்தேன் அவள் என்னை ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்தாள் போலும். அதே நேரம் இந்த இருக்கையை மாற்றிக் கொடுத்த பெண்ணும் எழுந்து என்னை நோட்டம் விட்டாள். அதற்குள் அந்த சண்டை ஓய்ந்திருந்தது, அந்த மனிதர் தன் செருப்பைக் கழட்டிப் போட்டதன் காரணமே அத்தனை சண்டைகளுக்கும் மூலமாய் அமைந்தது என்று பஞ்சாயத்து முடிந்தது.

இது போன்ற ஒரு இரவை நான் எதிர்பார்க்கவில்லை, இத்தனை அசாதாரணமான சூழலா? அன்றைய நாளின் அலைச்சலிலும், பேருந்துக்காகக் காத்திருந்த சோர்விலும் படுத்தவுடன் தூங்க வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் அந்த இரு பெண்களும் என்னைப் பார்த்த விதத்தையும், பேசிய வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் மீது வெறுப்பு கூடியது. இருந்தாலும் இந்தச் சிறுமியிடம் நான் என்ன செய்வேன் என்று நினைத்துக்கொண்டாளோ என்று அவள் தாயைப் பார்த்தேன். அவள் எங்கள் இருவரையும் பார்த்தபடி தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள். இனிமேல் இவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் நான் தூங்க முடியாது என்று கண்களை மூடினேன்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும், அப்போது தான் தூங்கியிருப்பேன். என் தலையில் யாரோ ஓங்கித் தட்டுவது போல் ஒரு ஓசை.

“அட நான் ஒன்னும் செய்யலப்பா!!” என்று கத்தியபடி எழுந்தேன். பேருந்து ஒரு பயணவழி விடுதியில் நின்றிருந்தது. பேருந்தின் ஜன்னல்களின் கீழே தம் கைகளால் ஓங்கித் தட்டியபடி ஒருவன் பயணிகளை எழுப்பிக் கொண்டிருந்தான். அவன் தட்டியதற்குத் தான் நான் அப்படிக் கத்தினேனோ என்று எண்ணினேன். இருந்தபோதும் அவ்வளவு சத்தம் போட்டிருக்க மாட்டேன் என்று நம்பினேன். பேருந்தினுள் இருந்து யாரும் இறங்கியது மாதிரி தெரியவில்லை. சிறுநீர் வரவில்லையென்றாலும் கூட அவன் எழுப்பும் வேகத்தில் நமக்குப் போக வேண்டும் தோன்றிவிடும். நான் எழுந்ததைக் கண்டு அந்தச் சிறுமியே வழி விட்டாள், அவள் தாய் இன்னும் என்னை முறைப்பதை விடவில்லை.

இரண்டு ரூபாய் வாட்டர் பாக்கெட்டில் காவேரி என்று எழுதியிருந்தது, முகம் கழுவிக் கொண்டு, கொஞ்சம் குடித்தபடி, கழிப்பிடம் சென்றேன். அவன் மூன்று விரல்களை நீட்டினான், போய் வந்தேன். பத்து ரூபாய் கொடுத்து ஒரு டீயை வாங்கி வாயில் வைத்தால், ப்ளீச்சிங் பவுடர் வாசம். யாராவது பார்க்கிறார்களா என்று ஒரமாகச் சென்று அந்தக் கப்பை வீசிவிட்டுக் கோபமாக நடந்தேன். கையில் தாராளமாகக் காசு இருந்தால் அந்த ரெட்டை அர்த்தப் பாடல்கள் மொத்தக் கேசட்டையும் வாங்கி தீயிட்டுக் கொளுத்தியிருப்பேன் என்று எனக்குள்ளேயே அவர்களை மிரட்டியபடி உள்ளே சென்றேன். மீண்டும் அந்த சிறுமியை எழுப்பாமல் உள்ளே நுழைந்து விடுவோம் என்று முயற்சித்தேன், முடியவில்லை. திடீரென்று, அவள் தொடையில் ஒரு தட்டு தட்டினாள் அவள் தாய். அவள் திடுக்கிட்டு விழித்து எனக்கு இடம் கொடுத்தாள். அவள் தாய் மீது எல்லையற்ற கோபம் வந்தது.

“என்னமோ இவுங்க தான், அதிசயமா பிள்ளை பெத்த மாதிரி..” என்று அவள் காதில் விழுமளவு முனகினேன். பதிலெதுவும் வரவில்லை. வெகுநேரமாகியும் மனம் அமைதி பெறவில்லை. முடிந்தளவு ஒரு பக்கமாக சாய்ந்தே படுத்துக்கொண்டேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

விழித்துப் பார்த்த பொழுது பேருந்து சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நுழைந்தது. இடது தோளில் ஈரத்தை உணர்ந்தேன், அச்சிறுமி என் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தாய் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். என் டீஷர்டில் அவளது எச்சில் இடது தோளை நனைத்து இருந்தது. சட்டென எனது தோளைக்கொண்டே அவளை நகர்த்திவிட்டு நான் என் இருக்கையில் சாய்ந்துவிட.


“அப்பா….” என்று சிணுங்கிக் கொண்டே தோளில் சாய்ந்தாள். தனது இடது கரத்தையும் கொண்டு என்னைப் பற்றிக் கொண்டாள். வெளிச்சம் ஜன்னலின் வழியே என் மீது விழுந்தது.

- ஜீவ.கரிகாலன்