திங்கள், 27 ஜனவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி - 58 / NAKED EYE VS CAMERA

NAKED EYE VS CAMERA


தொடர்ந்து ஒரு பத்து நாள் எழுதாமல் விட்டால் கூட நம்மை வாசிக்கும் அந்த 50 பேர்களில் கணிசமானவர்களை தவற விடக் கூடும். வேறு வழியில்லை தொடர்ந்து எழுதுவது என்பது சாதாரண விஷயமன்று, ஆனால் இப்படி எழுதிக் கொண்டிருந்ததால் மட்டுமே நம் எழுத்தின் வடிவம் மாறுவதை கண்ணுற முடிகிறது. இதே வலைப்பூவில் ஆரம்பகாலத்தில் எழுதிய பதிவுகளைப் பார்க்கும் பொழுது எவ்வளவு அபத்தமாக மொழியைக் கையாண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஆனால் அவற்றை நீக்குவதற்கு விரும்பவில்லை, அந்த எழுத்துகளும் அப்படியே இருக்கட்டும். இன்று மிகத் தெளிவான வடிவத்தில் நான் எழுதுகிறேன் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், இப்படித் தான் பயிற்சியில் எல்லாமே தேறி வருகிறது என்று சொல்ல முடியும். இன்னமும் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கவே செய்கின்றன. இதையெல்லாம் சற்று பொறுமையாக கவனித்தால் பிழைகள் நீக்கி நல்லதொரு பதிவாக மாற்ற முடியும். ஆனால் இந்த SELF PUBLISHING தொழில்நுட்பம் அசட்டையான உணர்வையும் தந்துவிடுகிறது.

இங்கு தான் எழுத்தாளர்கள் பதிவர்கள் என்று வேறுபடுவதாக சொல்கிறார்கள், அதிலும் ஞாயம் இருக்கவே செய்கிறது. பதிவர்கள் வந்த பின்பு மொழி மீது அது நிறைய பாதிப்பைத் தருகிறது.  ’கட்டுரைகள் என்பதன் வடிவம் வெகுவாக மாறிவிட்டிருக்கிறது’ என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒரு தொழில்நுட்பம அவ்வளவு எளிதாக மொழியைச் சிதைத்து விடுகிறது என்பதை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முடியாது என்றாலும் இது போன்ற அஜாக்கிரதையான எழுத்து மற்றும் இணையத்தில் வாசிப்பவர்களுக்காக எழுதப் படும் எழுத்து மொழியை சிதைக்கிறது என்பதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. தொழில்நுட்பத்திற்குப் பழக்கப்படாத, ஏற்றுக்கொள்ளாத மொழி தான் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்பது என் கருத்து.

காமிராக்களைக் கொண்டு குகை ஓவியங்களை ரசிப்பதை ரசனையற்ற தன்மை என்றும் NAKED EYEன் புனிதம் பற்றிப் பேசுவது உணர்ச்சிவயப்பட்ட நிலையே. தொழில்நுட்பங்களை சரியாகக் கையாள்வதைப் பற்றியே பேச வேண்டும் இல்லையென்றால் மாற்று தொழில்நுட்பம் பற்றி. லிபிக்களைப் பற்றி ஜெ.மோ பேசும் போது கூட ஒரேடியாக, கண்மூடித்தனமாக அவரை திட்டியதற்கும் கூட வருந்தவே செய்கிறேன். அது மிக முக்கியமான விவாதமும் கூட.
.
எதற்காக இத்தனை சீரியஸாக ஒரு கட்டுரை எழுதவேண்டும், Bit risky கூட. மொழி பற்றி ஏதாவது தவறாக கூறினால் பொதுவில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இருந்தும் ஏன் எழுதுகிறேன் என்றால் என் எழுத்திற்கு கிடைத்த ஒரு சின்ன அங்கீகாரம் தான். வா.மணிகண்டனோடு பேசும் பொழுதெல்லாம் (www.nisaptham.com) வலைப்பூவில் எழுதும் எழுத்திற்கு அத்தனை RESPONSE இருக்கிறதா என்றெல்லாம வியந்திருக்கிறேன், சந்தேகப்பட்டிருக்கிறேன். பத்து மணி நேரத்தில் - ஒரு மாணவருக்கு கிடைத்த உதவித்தொகை(1 லட்சம்), எங்கள் முதல் வெளியீட்டிற்கு கிடைத்த (லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் - சிறுகதைத் தொகுப்பு) வரவேற்பை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இணைய எழுத்தின் வீரியம் என்னால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.

“வாசிப்பவர்களுக்குத் தோதான மொழியைக் கையாள்வது, சுவாரஸ்யமான நடையில் எழுதுவது, எளிமையாக எழுதுவது எல்லாம் எழுத்தா?” என்று கேட்பவர்களை பரிதாபமாக பார்க்கத் தோன்றுகிறது. ஒருவனுக்கு மொழிப் பரிச்சயமில்லாமல் தொடந்து வெற்றிகரமாக எளிமையான நடையில் எழுத முடியாது, அவ்வாறென்றால் வெகு சீக்கிரத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடும். வாசகர்-எழுத்தாளர் என்று சொற்பிரயோகம் இருந்தாலும் இணையத்தில் அது போன்ற ஒரு பெரிய பிரிவு எல்லாம் இல்லை. மொழி கைகூடினால் யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும், கைகூடாவிட்டாலும் விருப்பமும் உழைப்பும் இருந்தாலே போதும். அதனால் தான் இணைய எழுத்து மீது பல எழுத்தாளர்களுக்கு கடுங்கோபம் வருகிறது, ஏனென்றால் அவர்கள் updation இல்லாமலோ சரியான தரவுகள் இல்லாமலோ சீக்கிரமாக நீர்த்துப் போவார்கள். 

”திடீரென்று உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன்” என்று ஒருவர் அறிமுகமாகும் போது, அதுவரை இல்லாத கவனம் நம் எழுத்து மீது வந்து விடுகிறது. அதாவது அடுத்தப் பதிவினை எழுதுவதற்கே தயக்கம் வருகிறது. கவனமாக எழுத வேண்டும், முடிந்த அளவிற்கு பிழைகளின்றி எழுத வேண்டும். சரி இந்தப் பதிவை என்னை சந்திக்க வந்த அந்த வாசகருக்கு நன்றி சொல்வதற்காக சமர்பிக்கிறேன்.

- ஜீவ.கரிகாலன்

3 கருத்துகள்:

  1. //காமிராக்களைக் கொண்டு குகை ஓவியங்களை ரசிப்பதை ரசனையற்ற தன்மை என்றும் NAKED EYEன் புனிதம் பற்றிப் பேசுவது உணர்ச்சிவயப்பட்ட நிலையே. //
    மேலே உள்ள கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.. ஆனால் கண்களை விட மிகச்சிறந்த காமிரா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது என் அசாத்திய (கண்மூடித்தனமான ?!!) நம்பிக்ககைகளில் ஒன்று.... ஓவியம், நடனம், சிற்பம் போன்ற கலைகளை கண்களால் மட்டுமே நம்முடைய அந்த நேரத்து ரசனையுடன் உணர முடியும்... அந்த உணர்வுகளை எந்த காமிராவாலும் வெளிப்படுத்திட இயலாது... நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பும் ஒரு நண்பனை அவனுக்காக பேருந்து அல்லது ரயில் நிலையத்தில் காத்திருக்கும்போது, அவன் வரும்திசை நோக்கி கண்கள் தவமிருக்கும்போது அவன் வரும்போது ஏற்படும் உணர்ச்சிப்பிரவாகத்தை, அந்த நிமிடத்தில் ஏற்படும் துள்ளலை எந்த புகைப்படத்தாலும் காட்டிட இயலாது என்னு நம்புகிறேன்..... இது நிச்சயம் மாறுபடலாம்...

    உங்கள் பதிவினை விடாது துரத்தி வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒரு துளி என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்,

      கண்களைப் பற்றி நான் குறைவாகச் சொல்லவில்லை, காமிராக்களைக் கொண்டு ரசிப்பதைத் தான் சொல்கிறேன்....

      காமிராக்கள் ஒரு ஆடி தான், அது உங்கள் கண்களுக்கு இன்னும் புலனாகாத பல அழகுகளையும் அற்புதங்களையும் கொணரும்.

      உங்கள ரசனை அழகு தான்

      நீக்கு
  2. //ஒரு தொழில்நுட்பம அவ்வளவு எளிதாக மொழியைச் சிதைத்து விடுகிறது என்பதை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முடியாது என்றாலும் இது போன்ற அஜாக்கிரதையான எழுத்து மற்றும் இணையத்தில் வாசிப்பவர்களுக்காக எழுதப் படும் எழுத்து மொழியை சிதைக்கிறது என்பதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. தொழில்நுட்பத்திற்குப் பழக்கப்படாத, ஏற்றுக்கொள்ளாத மொழி தான் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்பது என் கருத்து.//

    100% சத்தியமான Statement.... (நவீன) தொழில்நுட்பத்துக்குப் பழக்கப்படாத மொழி நிச்சயமாக தன்னை புதுப்பித்துக்கொண்டு சிலிர்த்து நிற்பதில்லை... உதாரணமாக ”சாமுராய்” என்ற ஜப்பானிய வார்த்தையைக் கூறலாம்... தொழில்நுட்பம் சென்றடையாத மொழிகள் நம் கண்முன்பே அழிந்து வருவதை நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்... உதாரணமாக வடக்கு அந்தமானில் பேசப்பட்டு வந்த ”Aka-Bo”-வைக் கூறலாம்....
    இவ்வகையில், தமிழ் மொழியை புதிய தொழில்நுட்பங்களில் அறிமுகப்படுத்துவதோடு நில்லாது இன்னும் அதிகமாக பயன்படுத்துவும் செய்ய வேண்டும்... அப்போதுதான் அதன் புதிய பரிமாணங்கள் (Dimensions)அனைவரையும் சென்றடையும்... இதுவரை யாருடைய கண்ணுக்கும் புலப்படாத சில விடயங்கள் எப்போதாவது ஏதோ ஒரு பரிமாணத்தில் பதிதாகத் தெரியக்கூடும்....
    நல்ல பதிவு....
    தொடர்க....

    பதிலளிநீக்கு