கே.மாதவனின் வண்ணங்களோடு கொண்டாடுவோம் பொங்கலை
படம் எண்:01 |
பொங்கலுக்காக ஒரு இணையத்திற்கு கட்டுரை ஒன்று அனுப்பி வைத்தேன் - பொங்கலிலேயே அப்லோடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லை அதை யாவரும்.காமிலாவது பதிவேற்றியிருப்பேன். என்ன செய்வது இந்த ஃபுல் டைம் இலக்ஸ் சேவை என்றெல்லாம் சொல்லி பிழைப்பு நடத்த முடியாது அல்லவா?? அவர்களுக்கு வேறு எதாவது வேலை இருக்கும், பதிவேற்றவில்லை. சரி, அவர்களுக்கு வேறு கட்டுரை தரலாம் என்ற தகவலைச் சொல்லி விட்டு இதை பதிவேற்றுகிறேன்.
நினைவுகூறல் என்பது மனிதனின் மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று, ஏனென்றால் இன்றைய வரலாறு என்பது மறந்து போனவைகளின் எச்சமாகத் தான் இருக்கிறது. ஆம் நம் நினைவில் விட்டு நீங்காது என்று சொல்லிக் கொண்டிருந்த எத்தனையோ விசயங்களை முழுவதுமாக மறந்து போகும் அளவிற்கு சாத்தியமுள்ள உலகில் தான் நாம் வாழ்கிறோம். இப்போது நம் நினைவுகூறல் ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றி, அக்கலைஞனை நினைவு கூர்வது வெறும் மரியாதை தரும் செயலாக மட்டும் நின்று விடாமல், மீட்டெடுத்தல் அல்லது ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற இரண்டு விதங்களில் இன்றைய சமகலை மீதான நிலையை நிறுத்துப் பார்க்க வைக்கும். அப்படி நம் நினைவில் இருந்து அநேகமாக மறந்து போன அந்த முக்கியமான கலைஞன் தான் திரு.கே.மாதவன் அவர்கள்.
படம் எண்:11 |
ஒரு பக்கம் நவீன ஓவியங்களுக்கான தொடக்கம் கே.சி.எஸ்.பணிக்கரிடமிருந்து ஒரு இயக்கமாக உருவெடுத்த காலக்கட்டம், அதே காலத்தில் வெகுஜனங்களைச் சென்றடைந்த ஒரு கலைஞரும் மிக முக்கியமானவர். ஏனெனில் ஒரு நல்ல கலை மரபினில் இது போன்ற ஒரு சமமான பயணத்தின் மூலம் தான் ஒரு சமூகம் தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளும். எப்படியிருந்தாலும் POPULAR ART என்பது ஓவியனை முன்னிறுத்தும் கலையாக இல்லாமல், தன் அழகியலை, செய்நேர்த்தியை, தொழில்நுட்பத்தை படைப்பின் உபப்பொருளாகவோ அல்லது விளம்பரமாகவோ தன்னை காட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் popular artistகளை மக்கள் கொண்டாடிய காலம் தான் கே.மாதவனையும் மற்ற Illustratorகளையும் கொண்டாடி வந்த மரபாகத் தொடர்ந்தது.
விபரணப் படங்கள் (Illustrations):
படம் எண்: 12 |
படம் எண் : 14 |
கனடா நாட்டு கலைவரலாற்று அறிஞரான ஸ்டீஃபன் இங்க்லீஸ் தனது கட்டுரைகளில் மாதவனை ’தென்னிந்தியாவின் நார்மன் ராக்வெல்’ என்று குறிப்பிடுகிறார். கே.மாதவனின் ஓவியங்களை உலக மேடையில் சரியான தளத்தில் கொண்டு போயிருந்தால், நார்மனை “அமெரிக்காவின் மாதவன்” என்றும் குறிப்பிட்டிருப்பார் என்று எழுதுகிறார் (ஆதாரம்:http://www.tasveerghar.net/). இது ஒரு முக்கிய கட்டுரையாகும், யார் வரைந்தது என்று கூட நாம் அறிந்திராமல் வருடம் முடிந்த பின்னும் நாட்காட்டி அட்டைக்கும்(காலண்டரில் வரும் பக்தி ஓவியங்கள்) பூஜை செய்யும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. கோயில் சிற்பங்களாகட்டும், இது போன்ற காலண்டர் ஓவியங்கள், பொம்மைச் சிலைகள் ஆகட்டும் யாருக்கும் அதன் படைப்பாளியைத் தேடி அறிய வேண்டிய நிர்பந்தம் இந்த மண்ணில் இல்லை. இந்த சூழ்நிலையிலும் மாதவன் வெகுஜனங்களைக் கவர்ந்தவராகவே இருந்தார், அது மற்ற ஓவியர்களையும் கொண்டாடுவதற்கு வெகுஜனத்தை பழக்கியிருந்தது. (படம் எண்:11,12,13)
வாழ்த்து அட்டைகள்:
கே.மாதவன் யாரென்று தெரியாமலேயே அவரது ஓவியங்களைக் கொண்டாடியிருக்கிறோம். காலண்டர் ஓவியங்களாக, சினிமா போஸ்டர்களாக, பொங்கள் வாழ்த்து அட்டை வடிவிலாக என்று, 70களுக்குப் பின்னும் 90களின் ஆரம்பம் வரை கே.மாதவனின் வாழ்த்துஅட்டை ஓவியங்கள் நமக்கு நினைவில் இருக்கலாம். ஒரு கிராமத்தின் குடும்பம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து இவர் வரைந்த ஓவியங்கள் உள்ள வாழ்த்து அட்டைகள்(படம் எண்:01) மறக்க இயலாதது. இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தில் சூரியனுக்குப் படைக்கும் பொங்கல் சடங்கு மட்டுமல்ல, விளைநிலங்களும் அருகித் தான் போய் விடும், அது போன்ற சூழலில் இந்த ஓவியங்கள் நாம் பொங்கலை இப்படியெல்லாம் கொண்டாடியிருக்கின்றோமா என்று வியக்க வைக்கும்.
படம் எண் :16 |
படம் எண்:15 |
கே.மாதவன் |
எனக்கும் ஒரு சின்ன வாழ்த்து அட்டை வந்தது, பெரிய பரிச்சயம் இல்லாத நண்பரிடமிருந்து.
என் வலைப்பூவிற்கு வந்து செல்லும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!!! உங்கள் குடும்பம் என்றும் சந்தோஷமும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்
-
ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக