செவ்வாய், 22 மே, 2012

ஃபிளாஸ் பாக் -1




ஃபிளாஸ் பாக் -1


கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த காலங்களில் ஏதாவது ஒரு காதல் பேசும் திரைப் படங்கள் வெளிவந்து பல காதல்களை கனிய , உதிர, உணர வைத்திருக்கும் .. ... அதுவும் கல்லூரியை கதைக் களமாக வைத்து வரும் படங்கள் என்றால் அதன் பாதிப்பே அதி பயங்கரமானது தான் ...

நான் கல்லூரி படிக்கும் போது வந்த திரைப் படம் சேரனின் ஆட்டோகிராப் - (சிலர் கமலா, லத்திகா என்று காதல் கதையுடன் முதல் பாதியும், இரண்டாம் பாதியில் வரும் சிநேகா என்ற தோழியுடன் இரண்டாம் பாதையும் பயணிக்கும்). என் நண்பர்களில் பெரும்பாலோர் "சிநேகா போல ஒரு தோழி இருந்தால் எப்படி இருக்கும்" என்று கற்பனை/தவம் செய்துக் கொண்டிருந்தனர்.

பட்டாம்பூச்சிக் காதல் போல பள்ளிக் காதலும், பூக்களால் கோர்த்த வண்ணச் சித்திரமாய் கல்லூரிக் காதலும், வாழ்க்கையை மீட்டெடுக்கும் தோழமையும் நாம் வாழுகின்ற/நமக்கு நேர்கின்ற சாதாரண சூழல்களை பிண்ணிக் கொண்டு மனத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்களோடு எங்களை மலைக்க வைத்த சினிமா. எங்கள் வகுப்பில் ஆண், பெண் என்ற பேதமின்றி (கிராமம் என்பதால் அது அதிசயம் ) எல்லோரும் சேர்ந்து ரசித்தோம்.

1 . "கிழக்கே பார்ப்பேன்" என்ற பாடலும், "ஒவ்வொருப் பூக்களுமே" என்றப் பாடல்களை பாடாத நாட்களில் மட்டுமே கல்லூரிப் பேருந்து ஓடாமல் இருந்தது, அன்றெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகள்.
2 . சில காதல்கள் சாதாரண கிராமத்து பெண்களையும் கோபிகா ஆக்கியது, ஆட்டோகிராப்பை அடுத்து வந்த எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் எங்கள் கல்லூரிப் பெண்களின் ஈரம் படிந்திருக்கும் கூந்தலில் கோபிகாக்கள் தெரிந்தனர்.
3 . சில காதல்கள் சினேகாவை அடையாளம் காட்டி கிள்ளி எறியப் பட்டது "(நாம இனிமேல் சேரன் , சிநேகா மாதிரி இருப்போம் "என்று காதலை நட்பாக சில புத்திசாலிப் பெண்கள் மாற்றிவிட ..சில ஆண்கள் மட்டும் இயக்குனர் சேரனை வசை பாடிக் கொண்டிருந்தனர்.
4 .இந்தப் படம் பார்க்க மிகவும் கண்டிப்பான அந்தக் கல்லூரியிலேயே எல்லா டிபார்த்மன்ட்டுகளிலும் மாஸ் கட் அடித்து சென்றனர்.
5 . படத்தில் வராத "ரொம்ப ரொம்ப மோசமுங்க பொம்பள ஜாதி" என்றப் பாடல் மினிபஸ்களில் திரும்ப திரும்ப தேய்க்கப் பட்டு கொண்டாடப் பட்டது.
6 .எங்கள் கல்லூரி வாழ்க்கையோடு கலந்துவிட்டப் படம் அது , நாங்கள் பட்டம் வாங்கி செல்லும் பொழுது கண்ணீர்த் தாரைகளுடன் வெளியேறும் பொழுது "ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! என்று நெஞ்சைக் கசக்கியது.

இன்றும் எங்காவது இந்தப் படத்தின் பாடல்களைப் பார்க்கும் பொழுது , கல்லூரிக்குள் சென்று அமர்ந்து விடுகிறது என் மனம். என் இரு நண்பர்கள், எங்களுடைய காதல்கள் ,எங்கள் நட்பு என நிலவு போல ஒரே கணத்தில் வளர்ந்து தேயும்...அப்பொழுது நான் , எங்கள் வகுப்பு இருக்கையில்அமர்ந்து இரும்பு மேஜையில் ஒரு ருபாய் காசைக் கொண்டு எங்கள் எழுவர் நட்பின் முதல் பெயர்களை சுரண்டிப் பதிந்திருந்த எங்கள் குழுவின் பெயரை (KAMP) தடவிப் பார்க்கிறேன்.


மெல்லிய மனித உணர்வுகளில் வாழும் உள்ளங்களுக்கான அந்தப் படம், அதன் நினைவுகள் என்னை விட்டு எந்நாளும் அகலாது ...நான் நெடுங்காலமாய் வைத்திருந்த காலர் டியூன் "மனமே நலமா, உந்தன் மாற்றங்கள் சுகமா" என்ற கியூட் சாங்
 

புதன், 16 மே, 2012

A tribute to my lovely poet.


...இலக்கியத்தை கொண்டு சேர்க்க வேண்டிய பத்திரிக்கைகள் எல்லாம் இன்று முகநூல் வலைப்பேச்சுகளுக்கு (தங்கள் வியாபாரத்திற்காக) தங்கள் பத்திரிக்கையில் சில பக்கங்கள் தருகின்றன. அவை கொண்டு சேர்க்க வேண்டிய இலக்கியத்தை ஒரு கவிஞன் செய்கிறான். அவருக்கு என் சில வரிகள் சமர்ப்பணங்கள் 



.                       அவர் ஒரு மாபெரும் கவிஞர், எந்நேரமும் கவிதைகளோடு ஆலிங்கனம் செய்துக் கொண்டிருப்பார், அவரை அவர்  கவிதைகளில் இருந்து பிரித்தே எடுக்க முடியாது. அவர் ஒரு மாமரம், தினம் தினம் திகட்டும் கனிகளைத் தருபவர் .. அம்மரத்தில் சிந்தனைப் பூக்கள் மலர்ந்து, அது கவிதைக் கனிகளாய் மாறும்.

                   அதில் ஒன்று ஒன்று ஜென் கனி , மற்றொன்று குழந்தைக் கனி , மற்றொன்று காதல் கனி , சில காமக் கனி, சில விளையாட்டுக் கனி, சில உரைநடைக் கனி, சில நட்புக் கனி , சில துயரக் கனி , சில பலவண்ணக் கனி, அவர் ஒரு கவிமாமரம்.

                         இன்றும் அவருக்கு கிளைகளாய், சிறு கன்றாய் பல கவிஞர்கள் முளைத்தனர். அவர்களின் கனிகளுக்கு இவரே அன்பெனும் அடிவேரில் உயிர் சத்துக் கொடுக்கிறார், சில வெட்டுபட்ட கிளைகளுக்கு கவிதைகளால் பச்சையம் கொண்டு உயிர்கொடுக்கிறார். அவரது கிளைகளில் பல தேசங்களின் பறவைகள் இளைப்பாறுகின்றன.  
               
                     சில பறவைகள் அங்கேயே கூடு கட்டி இருக்கின்றன. சில பறவைகள் அந்தக் கவிதைக் கனியின் விதைகளை பல இடங்களுக்குப் பரப்புகின்றன.அங்கே எழும் மரங்களும் மாமரத்தின் கிளைகளே. மாமரமாய் மாறிய அவன், பறவைகளுக்காகவே கனி தருகிறான். பறவைகளின் உணவாகவும், அதன் எச்சங்களாகவும், அதுவே சில மரங்களின் விதையாகவும் ஆகின்றன. கனிகளும் , பறவைகளும் , அவனாகிய அம்மரமும் ஒன்றே அவர்களைப் பிரிக்க முடியாது. அல்லது அந்த மரத்தின் பாகங்களே அந்தப் பறவைகள்.

                        சில நேரம் சில மனிதர்கள் வருகின்றனர் அந்த மாமரத்தின் கனிகளைப் பறவைகளுக்குத் தருவதற்காக அதன் கனிகளைக் கேட்கின்றனர், அதற்கு பதிலாய் மூன்று குடம் நீருற்றும் உடன்படிக்கைத் தருகின்றனர்.. நீர் என்ற விலைக்கு கனிகள் தரும் காரணம், அம்மரம் உயிர்த்தலில் இன்னும் கனிகள் தரவேண்டும் என்பதே. ஆனால் கனியை வாங்கும் சிலர் அதை யாருக்கும் உண்ணத் தராமல் அழுகிப் போகக் காரணமாகின்றனர். பறவைகள் சில அதைக் கண்டு உயிர் கசிகின்றது ... கவிமரமோ தினமும் கனிகளைத் தந்து கொண்டே இருக்கிறது. இதைப் பற்றிக் கவலைப் படாத கவிமாமரம் கனிகளை மட்டுமே தந்துக் கொண்டிருக்கின்றன, சில நேர்ணகளில்  அதன் மேல் விழும் கோடாரிக் காயங்களின் ரணத்திலும் அது தரும் கனிகள் இனிப்பாகவே இருக்கின்றன.  


              அந்த மாமரத்தின் நீருக்காக பறவைகள் கானம் பாடுகிறது. இனி கவிமாமரத்திற்கு நீர்க் குடங்கள் தேவையில்லை .... கார் முகில்கள் ஒருமித்து மாமரத்தை குளிர்விக்க, ஒன்றுடன் ஒன்று  புணர ஆரம்பித்துவிட்டன..... இனி மழை பெய்யும் எனப் பறவைகள் ஆரவாரமிட்டு கவிஞனின் கிளை மடியில் நிம்மதியுடன் அமர்ந்து விட, முகில்கள் புணர்ந்தும் மழை பெய்ய தாமதித்தது.  

ஒரே கரி(யா) பறவை முகில்களிடம் சொன்னது , "ஓ முகில்களே புணர்ந்தது போதும் பொழியுங்கள் இங்கே உங்களுக்குப் பரிசாய் எங்கள் மரம் மழைக்கனியைப் பிரசவிக்கும்" ..... மழை பொழிய ஆரம்பித்தது . 


A tribute to my lovely poet....

செவ்வாய், 15 மே, 2012

சீனத்து நிலையும் சென்னையின் விலையும்




சீனத்து நிலையும் சென்னையின் விலையும்


               முதல் தகவல் : ஒரு இணைய இதழில் வந்த செய்தி - உலகில் உள்ள நாடுகளில் நகரமயமாக்கலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா தான் என்றும், இந்தியாவில் நகரமயமாக்கலில் முதல் இடத்தில் இருப்பது நம் சென்னை தான். நம் நாட்டில் 30௦% மக்கட் தொகை வசிக்கும் மக்கட்தொகை 2030க்குள் நாற்பது சதவீதம் அளவிற்கு போய்விடும் என்றும் , சென்னையிலோ மக்கட் தொகை தமிழகத்தின் தமிழகத்தின் தற்போதைய மக்கட்தொகையில் 53% இருக்கிறது என்றும், அதுவும் கூட 2030இல் 67 % ஆகிவிடும் - என்ற செய்தி உள்ளது.


                          இரண்டாம் தகவல்: CNN money - "Beware of China's Epic Property Bubble " எனும் கட்டுரை சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் வீழ்ச்சியைப் பற்றிய தகவல்களை எச்சரிக்கையாக அளித்துள்ளது. இதில் "சீனாவில் அசுர வளர்ச்சி அடைந்த கட்டுமானம், அசையா சொத்துகள் , ரியல் எஸ்டேட் , ஹவுசிங் என எல்லாத் துறைகளிலும் பெருத்த சரிவு ஒன்று வரும் என்று எதிர்பார்ப்பதால் சீனாவை அடிப்படையாய் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

         மேலே சொன்ன இரு தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தோன்றுகிறதா ?? தொடர்ந்து படியுங்கள்

*****

               மூன்றாம் தகவல்: தேசியக் குற்றப் பதிவேடுகளில் இருந்து ஒரு புள்ளிவிவரம் கடுமையான அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. அது என்னவென்றால், தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளின் எண்ணிக்கை தான், இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒன்று தமிழகத்தில் தான் நடப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. அதில் பெரும்பான்மையான தற்கொலைகள் வறுமையின் காரணமாய் நிகழ்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.தமிழகத்தில் அதிகமாக தற்கொலைகள் நிகழும் இடம் கூட சென்னையே என்று அந்த புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.


ஒருபக்கம் விவசாயிகள் தற்கொலை, தினக்கூலிகள் தற்கொலை என்று கிராமங்களில் இருக்க மற்றொரு புறம் நகரத்தின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு, சிக்கனமாய் எளிய வாழ்க்கை நடத்தினாலும் நிம்மதியாய் வாழ முடியாமல் தினம் தினமும் செத்துப் பிழைக்கும் எதோ ஒரு நடுத்தரக் குடும்பம் பற்றிய செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. அவற்றின் சோகச் சித்திரங்கள் நம் நகரத்தின் வரலாற்றில் அழிக்க முடியாதது.

தற்கொலை நிகழ்வதற்கு முன்னர் ஒரு மனிதன் வாழ்வின் தன் வாழ்வில் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுகிறான், அவனது கனவுகள் , நம்பிக்கை, ஆசைகள் ஆகியன எல்லாம் அவனை விட்டு வெளி சென்று மடிந்த பின்னர் தான், அவனும் தற்கொலைக்கு முயல்கிறான். இந்தப் புள்ளிவிவரம் சொல்லிய விஷயத்தை கூர்ந்து நோக்கினால் இன்னொரு விஷயம் புலப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பீகார்,ஒரிசா போன்ற சில வட கிழக்கு மாநிலங்களைக் காட்டிலும் சென்னையில் தற்கொலை எண்ணிக்கை அதிகம் என்றால் என்ன காரணமாக இருக்கும்??

நகரமயமாதல் (நரகமயமாதல் )

           வேகமாக மாறி வரும் கலாசாரத் தேவைகளுக்கும்,கல்வித் தேவைகளும், கிராமப் புறங்களில் அழிந்து வரும் விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களும் நகரமயமாதலை நியாயப் படுத்துகின்றன. ஏன் ?? ஒரு நல்ல விவசாயக் குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் கூட தன் கல்வியைக் காரணம் காட்டி விவசாயத்தை புறக்கணித்துவிட்டு நகரம் நோக்கி தான் பயணிக்கிறான். ஆனால்  அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகத் தான் நகரத்தில் அவனுக்குத் துயரங்கள் நேர்கிறது. நகரத்தின் செலவீனங்களை அடக்கத் தெரியாமல், அவசியத்திற்கு அப்பாற்பட்ட செல்போன், டிவி, ஃ பிரிட்ஜ், ஏ.சீஎன எல்லாமும் அவனுக்கு தேவைப் படுகின்றன.


                 ஆனால் நகரத்தில் மத்திய தர வர்க்கம் இன்று படும் இன்னல்களில் முதன்மையானது அவர்களுக்கான இருப்பிடம். ஒரு நபர் வருமானத்தில் சாதாரணமாக 50 %வரை குடியிருப்பதற்கான வாடகையாக ஒரு நடுத்தர வர்க்க மனிதன் கொடுக்கிறான். கல்வியிலிருந்து, உணவுப் பழக்க வழக்கங்கள் வரை நமக்கு செயற்கையாக, ஆடம்பரமாக நம்மை ஆட்டுவித்து செலவுகளுக்கு ஈடு செய்ய முடியாமல் ஒவ்வொரு மாதமும் இது தவிக்கும் தொடர்கதையாகச் செல்கிறது.

           இதில் இப்பொழுது, வாடகை வீட்டில் வசிப்போர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம் . ஒரு மனிதனுக்கு குடியிருப்பதற்கான இடம் என்பது ஒரு அடிப்படை உரிமை ஆகும், உலக சுகாதார அமைப்பு இதற்கான குறைந்தபட்ச தரத்தை நிர்ணயித்துள்ளது, அதில் பிரதிநிதி நாடுகள் (இந்தியா உட்பட ) கையெழுத்திட்டன. ஐ.நாவின் சட்டங்களில் ஆர்டிகிள் 25 விவரிக்கும் அடிப்படை மனித உரிமையில் வரும் Minimum space for Dwelling , "ஒரு மனிதன் வசிப்பதற்கு குறைந்தபட்ச இடமாக முன்னூற்றைம்பது சதுர அடிகளாவது (350 sq feet ) இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே போல சுகாதர்ரம், குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் எல்லோருக்கும் அடிப்படை உரிமை என்றும் சொல்லியுள்ளது. இந்த ஊரில்(சென்னையில் ) வாடகைக்கு இருப்போரின் நிலைமையைப் பாருங்கள் எட்டுக்கு பத்து அடிகொண்ட ஒரே ஒரு ரூமில் ஒரு குடித்தனத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் (குறைந்தபட்சம்) கொடுக்க வேண்டிய கொடுமை , இதில் பல குடித்தனங்களுக்கிடையே பங்கிடப்படும் மின்சாரம் , தண்ணீர் என்று 200 -இலிருந்து 500 வரை வாங்கிக் கொண்டு , எல்லாவற்றிற்கும் மேல் மின்சாரத்திற்கு என இப்பொழுது ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் வாங்குகிறார்கள்.


         மின்சாரம் திருடுவது குற்றம் என்று சொல்லும் நம் அரசாங்கங்கள், இதுபோன்ற மின்சாரக் கொள்ளையினை கண்டு கொள்ளாதது ஏனோ ? சட்டம் இருப்பதை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை(Sections 142 and 146 of the Electricity Act 2003, இதன் படி மின்சாரக் கட்டணம் அதிகம் வசூலிப்பவர்களிடம் ஒரு லட்சம் அபராதமும் மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும்). ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு வீட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடும் தைரியமும் , நேரமும் , வசதியும் இருக்கின்றது ?? எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தோ அல்லது தற்பொழுது குடியிருக்கும் வீட்டை விட தொலைவிலோ அல்லது வசதிக் குறைந்த வீட்டிற்கோ இடம் பெயருகின்றனர்.

          சக மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்காத , அன்பு வைக்காத மனிதர்கள் வாழும் பணத்தை மட்டுமே அளவுகோலாய் கொண்ட சமூகம், இந்த நகரத்தை நாம் வாழத் தகுதியற்றதாக்கி விடுகிறது.. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஒரு தலையங்கம் , "கட்டிற்கடங்காத உயரத்தில் செல்லும் தொழில் முன்னேற்றமும் , நகரமயமாதலும் , சுற்றுப் புற சீர்கேடும் சமீபத்தில் வாழும் தகுதியை இழந்துக் கொண்டிருக்கும் பெங்களூரு" என்று 'பசுமை நகரத்தையே' சாடியது. இன்று பெங்களூரில் முன்பு போல மிதமான தட்ப வெப்ப நிலை இருப்பதில்லை, கணக்கிலடங்கா வாகனக் கூட்டம் கார்டன் நகரத்தை, கார்பன் நகரம் ஆக்கிவிட்டது.

            பொருளாதரத்தில், வணிகத்தில் , அறிவியலில் ஒரு விதி ஒன்று இருக்கிறது அதற்குப் பெயர் "லைஃப் சைக்கிள்". எந்த ஒரு ஏற்றத்தையும் தொடர்ந்து ஒரு இறக்கமும் வரும் எனபதுதான் அது, அதுவே கட்டுக்கடங்காத ஏற்றம் உள்ள சந்தையில், சரிவும் மிகப் பெரியதாகவே இருக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் நடந்துக் கொண்டிருக்கும் அபார்ட்மென்ட் புரட்சி மிகவும் அசுர வளர்ச்சியில் போய்க் கொண்டிருக்கிறது, அதுவும் மெட்ரோ ரயில் திட்டம் போன்ற உயர்வசதி உள்கட்டமைப்புகள் எல்லாம் நகரத்தில் உள்ள நடுத்தர மற்றும் பாமர மக்களை வெகுவாக பாதித்து நகரத்தில் வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகி வருகிறது, வங்கியில் கடன் பெற்று வாங்கும் அதிக மதிப்புடைய அப்பார்ட்மென்ட்டுகள் கடனை கட்ட முடியாத சூழ்நிலைக்கு பலர் தள்ளப் படுகின்றனர்.


            நகரவாழ்க்கை தாக்குபிடிக்காமல் கிராமங்களுக்குத் திரும்ப அவர்களுக்கு விவசாயம் செய்யும் சூழ்நிலையும் இல்லை, ஏன் விவசாய நிலங்களும் பிளாட்களாக ஆரம்பித்துவிட்டன.எங்கும் நகர முடியாத சூழ்நிலைக் கைதி தன் வாழ்வை முடித்துக் கொள்ள யத்தனிக்கிறான். சமூகத்தின் ஒரு நடுத்தர வர்க்கம் முழுதமாக பாதிக்கப் படும் பொழுது, அந்தப் பாவம் நகரத்தின் அடுக்குமாடிகளையும் குறிவைக்கும்.

******



சீனாவிலுள்ள காலியாக இருக்கும் ஒரு வணிக வளாகம்: விக்கிபீடியா




2 . உலகப் பொருளாதரத்தில் அசுர வேகத்தில் முன்னேறிய மாபெரும் சக்தி என வரலாறு படைத்த சீனா, தன்னை கம்யுனிச நாடாக அரிதாரம் பூசிக் கொண்டாலும்அது ஒரு உலகமயமாக்களில் உருவான மாபெரும் வணிகப் பிரதேசமாய்தன் நாட்டிற்குள் அந்நிய முதலீட்டை அனுமதித்தது. அமெரிக்காவின் நுகர்வு சந்தைக்கான உற்பத்தியும்,அவர்கள் நுகர்விற்கு மூலாதாரமான சேமிப்பும் சீனாவிடம் இருந்தே பெருமளவு பெறப்பட்டனஅமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காணும் போதே சீனாவும் ஆட ஆரம்பித்தது. ஆனால் உலக அரங்கில் அதன்உற்பத்தியை மேற்கோளிட்டு தன் விற்பனை குறைந்து வருவதை சிவப்புத் துணிக்குள் மறைத்து வைத்திருந்தது.


ஆனால் இன்றோ கட்டுமானத் துறையில் உயர்-விலை - வருமானம் விகிதமும் (high price -income ratio), விலை - வாடகை விகிதமும்(price - rental ratio) கட்டுக்கடங்காத உயரத்தில் சென்று ஆறு கோடியே நாற்பது லட்சம் அபார்ட்மேன்டுகள் காலியாக உள்ளன.இது ஒன்றே அந்த நாட்டின் முழுக் கட்டுமானத் துறையினையும் வலுவிழக்கப் போதுமான சவாலாகும். இது மிகப் பெரிய பொருளாதாரப் பாடமாக உலக அரங்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும்இதற்கு தொடக்கப் புள்ளியாய் அமைந்தது ஒரு எளிய காரணமே, அது கீழே தரப்பட்டுள்ளது.

*******

நம் நாட்டிலும் இந்த நிலை நீடித்துக் கொண்டே போனால் நகர வாழ்க்கையில் தாக்குப் பிடிக்க தற்கொலையைத் தாண்டும் வாழும் வைர நெஞ்சங்கள் இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் வசிக்கும் ஓரளவு அடிப்படை வசதி கொண்ட இடத்தை விட்டுப் புலம் பெயர்வார்கள். அந்த மத்திய வர்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இன்று டெல்லி,பம்பாய்,கொல்கத்தா,சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் சபிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளான பல்லாயிரம் மக்கள் வாழும் இடங்களான தாராவி(மும்பை)பால்ஸ்வா(டெல்லி),நொச்சிக்குப்பம்(சென்னை),ராஜேந்திரநகர் (பெங்களூரு) பாசந்தி (கொல்கத்தா) போன்ற இடங்களில் இடம் பெயரும் நிலைக்கு ஆளாவார்கள்.. குடிசை ஒழிப்பு வாரியம் என்பது அமைச்சருக்கான ஒரு பதவி வாய்ப்பாக மட்டுமே இருக்கும்.

*******

நம் நாட்டின் ரியல் எஸ்டேட்கட்டுமானங்கள் வளர்ச்சி ஒரு நீர்குமிழியைப் போலே பெரிதாகிக் கொண்டிருக்கசீனாவைத் தொடர்ந்து நம் நாட்டிலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளும்வணிக மையங்களும்மால்களும் காற்றுவாங்க ஆரம்பிக்கும்ஆனால் அதன் விலையோ அல்லது வாடகையோ மட்டும் குறையவே குறையாது. ஒரு அரசாங்கம் நாட்டின் விளிம்பு நிலை மத்திய வர்கத்தின் கவலைகளை பார்வையிடாமல் (அக்கறை கொள்ளாமல்)ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானச் சந்தையின் அசுர வளர்ச்சிக்கு உதவி புரிந்ததால் தான் இந்த தேக்க நிலை உருவானது என்பதை நீங்கள் உணர வேண்டும்.ஏற்கனவே நான் சொன்னது போல,இந்த மிகப் பெரிய பொருளாதார சிக்கல் அடிப்படையில் ஒரு எளிய காரணத்தை பின்புலமாக கொண்டது.

ஒரு உதாரணத்திற்காக சென்னையில் ஒரு சதுரஅடியின் விலை 700 ரூபாயிலிருந்து, 3000, 3500 ரூபாயிலிருந்து எனப் புறநகர் பகுதியிலும், 10000 /- 12000 /- என நகரத்தின் முக்கியமான இடங்களில் ஏறிக்கொண்டே போகிறது. இது அதிக எண்ணிக்கையில் நாள் தோறும் மக்கள் குடியேறும் ஒரு மாநகரத்தின் நிலை என்று ஏற்றுக் கொண்டாலும். சில சிறு நகரங்களில் கூட இது போன்ற நிலை இருப்பது நம்மை எல்லாம் தலை சுற்ற வைக்கும், ஆம், கரூர் நகரத்தில் மையப் பகுதியில் சதுர அடி ரூபாய் 10000இலிருந்து 20000வரை வரை போகின்றது என்ற தகவலை ஒப்பிட்டு பாருங்கள், செயற்கையான ஏற்றம் தான் இந்த சந்தையினை கட்டுக்கடங்காத உயரத்தில் கொண்டு போய்விட்டது.


காரணம் :

தன் சக மனிதனை வாழ விடாமல் தடுக்கும் எந்த ஒரு சமூகமும்,அதே காரணத்தால் தான் மிகப் பெரும் பின் விளைவுகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதே அந்தக் காரணம் ஆகும். அன்று சீனா செய்த தவறுக்கு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இன்று நம் ஊரிலும் அளவிற்கு அதிகமாய் வீட்டு வாடகை வசூலித்துஅடிப்படை வசதிகளை பலபேருக்கு எட்டாக் கனியாக்குபவர்களுக்கும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டகுளிரூட்டிய ஷாப்பிங் மால்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.


நகரத்தில் வசிக்க ஒருவனுக்கு அடிப்படை வசதி கூட தர மறுக்கும் சமுதாயத்தில் இப்படிப் பட்ட நீர்க்குமிழிகள் வந்து தான் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும் .இது மாற்றுப் பொருளாதாரத்தின் தேவையை உணரச் செய்யும்.

இரண்டு செய்திகளுக்கு உள்ள சம்பந்தம் இப்பொழுது தெரிகிறதா ???

இந்த மாதிரியான சூழ்நிலையில் யாரும் நகரத்தை விட்டோ, அல்லது செய்கின்ற தொழிலை விட்டோ உடனடியாக வேறு எதுவும் செய்ய முடியாது. நாட்டின் பொருளாதராக் கொள்கைகளும் ஒரே நாளில் மாற்றி அதனால் பலன் பெற முடியாது. ஆக, இதைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் கடன் கிடைக்கிறதே என்று சொல்லி அதிக தொகை கொடுத்து பிளாட் வாங்குவதை யோசிக்க வேண்டும். அளவுக்கதிகமான செலவீனங்களைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் சகமனிதர்களையும் அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். எந்த மாற்றமும் ஒரு புள்ளியில் இருந்து தான் தொடங்குகிறது, அது தொடங்கட்டும். 


--ஜீவ.கரிகாலன் 












வியாழன், 10 மே, 2012

புதிய நீதிக் கதைகள் - 1/ஆப்ரேசன் காதல்




ஒரு ஜாலி ஸ்டோரி   


"டேய் எங்கடா போற , நில்லுடா??"- என்று முருகனைப் பார்த்து அதி புத்திசாலி பிரபாகர் கேட்டான்.

மொட்டைமாடியின் விளிம்புச் சுவற்றில் ஏறி தன் இரு அகல கைகளையும் விரித்தான் முருகன்,

" அவ தான் என்னை வேணாம்னு சொல்லிட்டாளே!! ஐ டோன்ட் வான்ட் டு பி அலைவ் மோர் டா , அவ இல்லாத லைஃப என்னால நினைத்துக் கூட பார்க்க முடியாது"
மேலிருந்து குதிக்க யத்தனித்தான்.

"முருகா பட் நான்  நெனைச்சுப் பார்க்கிறேன் டா!!" என்றான் பிரபாகர்  நம்பிக்கையுடன்    , முருகன் பிரபாகரைத் திரும்பிப் பார்த்தான்.  பிரபாகர் அவனிடம்  "பிலீவ் மி நாம் இன்னொரு முறை ட்ரை பண்ணுவோம், அவ என்ன பேரழகியாடா ??" என்றான்...

மேலும் அவன் முருகனுக்கு நம்பிக்கை தரும் விதமாக 
"ப்ளீஸ் கீழே இறங்குடா ",  
"நாளைக்கு எப்படியும் குண்டன் வருவான் அவன்கிட்டே ஐடியா கேட்போம், அவனும் நல்ல ஐடியா தருவான் , தெரியும்ல குண்டன் ரொம்ப புத்திசாலிடா நிச்சயம் வொர்கவுட் ஆகும்" என்று கூற , முருகன் மனதை தேற்றிக் கொண்டு கீழிறங்கினான்..

நீதி : ஒரு முறை தற்கொலையைக் கைவிட்டவன் மறுமுறை செய்ய மாட்டான்.

குண்டன் ஐடியா கொடுக்க, தூது போகும் பிளானை பிரபாகர் எக்சிக்யூட் பண்ண "ஆப்ரேசன் முருகன்" ஆரம்பமானது, ஆபரேசன் பீரியட் ஒரு செமஸ்டர், லோகேசன் தினமும் அக்கவுண்ட்ஸ் டியூசன் சென்டரில், ஆபரேசன்ஆரம்பமானது குண்டனின் ஐடியாப்படி.

அடுத்து செமஸ்டர் லீவு முடிந்து திரும்பிய சமயம், அந்த வகுப்பறையே அதிர்ந்தது, முருகனுடன் சேர்ந்து. அது வெறும் ஆப்ரேசன் அல்ல முருகனுக்கு வைத்த ஆப்பு ரேசன் என்று. 

ஆம் "குண்டன் புத்திசாலி, அவன் சொன்னால் வொர்கவுட் ஆயிடும்" என்று சொன்னேனில்லையா? அப்புறம் என்ன ஆயிற்று என்கிறீர்களா? அதற்கு முன்னரே சொல்லியிருந்தேனே "பிரபாகர் அதிபுத்திசாலி" என்றும் அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா??

ஒரிஜினல் நீதி :ஒரு முறை தற்கொலையைக் கைவிட்டவன் மறுமுறை செய்ய மாட்டான், ஆனால் கொலை செய்வான் ..


கொலைக்கான டார்கெட் : kundan_romeo@yahoo.co.இன், குண்டனை முருகன் துரத்த ஆரம்பித்தான் ..

கொடுமைக்காரி



கனவுக்குள் மட்டும்
வந்து என் காது மடல் கடிப்பாய்!!


திரும்பி பார்க்க ஆகும் ,
கணங்களை விட வேகமாய்
மறைவாய்

கூட்டத்தில் சென்றால் மட்டும்
என் பெயர் சொல்லி அழைப்பாய்!!

யாரென்று தெரியாமல் நான்
படும் பாட்டை ரசிப்பாய் !!

இமை மூடும் வேளைகள் மட்டும்
எனை கடந்து போவாய் !!

எனைக் கொல்கின்ற வேலையில்
விரதம் போல் இருப்பாய் !!

நீ ஒரு கொடுமைக்காரி
 -





கொசு 

பிரளயம்



2012 - பிரளயம்


காந்தப் புலத்தின் திசையானது
தலைகீழாய் மாறிடுமாம் -
அது பிரளயம் என்று பெயர்
கொண்டு மையம் கொள்ளுமாம் .

ஆயிரமாண்டுகளாய் வளர்த்து
வந்த அறிவியல் மரம் ஒன்று,
அடியோடுப் பெயர்ந்து விடுமாம் -
அடிப்படையே முற்றிலுமாய் மாறிவிடுமாம்.

கதிரவனின் கடுஞ்சூடு, புயலாய் மாறிட
அதனைச்சுற்றி வந்து மையல் கொண் ட
திங்களும், செவ்வாயும், வெப்பப்புயலில்
புணர்ந்து பின் மடிந்து விடுமாம்.

நீரிருந்த வெற்றிடத்தின் பூமித்தகடுகள்
ஒன்றோடொன்று உடைத்து
ஆழியைப் பெயர்த்திடுமாம்,
ஆழ்குழாய் கிணறு கொண்ட
நகரங்கள் மூழ்கும் வரை..

மனிதம் சேர்த்து வைத்த
அமிலங்களும், அனுக்கதிர்களும் -
உடன்போக்கிருந்து, கலவி கொண்டு
உமிழ்ந்துவிடுமாம்
கதிரியக்க விந்துக்களை!!

பஞ்ச பூதங்களும் கூட்டணி
அமைத்து பிரபஞ்சக் கட்சியிலிருந்து,
பூமியை நீக்கிட அசுரப் போர்
தொடுத்தும் - தோற்றிடுமாம்
மனிதம் முன்னே !!!!

அன்று நல்ல நேரம் பார்த்து
வந்த பிரளயத்தை முந்தியது மனிதமே.
ஆம் ,முந்தைய நாளில்தான் முடிந்தது
மூன்றாம் உலகப் போர் - இன்று
பூமி வெறும் வெற்றிடம் தானே!!- .....
 -

என் உடல் ..

எனக்கும் என் உடலுக்கும் 
உண்டான தசம வேறுபாடுகள் 
புலப்பட்டுக் கொண்டே இருக்கின்றன 

பல முறை படுக்கையில் 
சாய்ந்திருக்கும் என் உடலை நான்
அமர்ந்து கொண்டே
பார்க்கிறேன் ..
ஒரு உஷ்ணத்தின்
ஜீவனில்
இயங்குகிற
இயந்திரக் கூடு
என் உடல் ..

நான் அந்த உடலா ???
இல்லை அந்த உஷ்ணமா??
உடலையும்
உஷ்ணத்தையும்
சாட்சியாக கவனிக்கும்
நான் யார்??

யார் என்ற கேள்விக்கு
பதில் தெரிந்தாலும்
புரிந்து கொள்ளும்
அறிவு !!
உடலின் பாகமா
உயிரின் நீட்சியா !!

அந்த
கடிகார அலாரச்
சத்தம் !!
உடலுக்குள் இணைத்து
உலகுக்குள் அனுப்பியது

செம்மொழிப் பூங்கா



செயற்கையாக அழகு தரும் 
இயற்கையின் படிமம்.

கண்களைக் குளிர்விப்பதர்க்கான
எல்லா முகப்பூச்சும் செய்தபடி.

மிதிபட்டும் மோட்சம் கிட்டா
உயர்ந்த ஜாதிப் புல்வெளியில்,

தண்ணீரில் கரணம் செய்து
பெடையோடு குலாவும் பறவைகளோடு,

ஓங்கியதால் உண்டான நிழலில்
வேர் போல் பிண்ணிக் கொள்ளும்
மனிதத்தின் ஒரே உயிர்ப்பான
காதல் மொழி பேசும் இனம்

கவிதை எழுத வந்த என்னை
வேற்றுக் கிரகவாசி போல்
எரிச்சலோடுப் பார்த்தது

நித்தியமான உலகம்

நித்தியமான உலகம் எப்போதும் 
அங்கேயே அப்படியே இருக்கிறது !!
அதன் இருத்தலை அறியும் நிகழ்வுகள்
தான் மாறிக் கொண்டே இருக்கிறது!!
அது முதலில் தட்டையாய் 
அதன் பின்னர் வட்டமாய்
அதற்கும் பின்னர் கோளமாய்
மாறிக்கொண்டே வருகிறது.
இங்கு எது சாதனை?
மனிதன் -
இருத்தலை உணர்ந்ததா??
வடிவத்தை கண்டுபிடித்ததா??
வடிவத்துள் ஒரு இருத்தலை அடக்கியதா??
அறிவியல் கண்டுபிடித்துக்
கொண்டே இருக்கிறது -
அதன் இருத்தலோ எப்போதிருந்தோ
இருக்கின்றது.
நித்தியமான உலகம் மாறிக் கொண்டே
இருக்கிறது!!
மாற்றம் மட்டுமே மனிதனுக்கு உகந்தது !!

மரணம்

ஒரே ஒரு மரணம் தான்

புரட்சியைத் தூண்டி விடுகிறது, 
சந்தர்ப்பவாதிகளை சம்பாதிக்க 
வைத்து விடுகிறது ,

அரசியலில் காய் நகர்த்துகிறது,
பிறக் கொலைகள், தற்கொலைகள்
நடப்பதற்கும், பின் தடுப்பதற்கும் -
காரணமாகிறது.

வேசிகள், விதவைகள், தலைவர்கள்
மனலம் குன்றிவர்கள், மருத்துவர்கள்
சமூக விரோதிகள்,நாத்திகர்கள்
உருவாகுவதற்கு விடையாகிறது.

ஆட்சி மாறவும், காட்சி மாறவும்
மாநிலம் பிரிவதற்கும், நாடு பிரிவதற்கும்
என் உலகப் போருக்கும்
பின்னால் இருக்கிறது...

அந்தக் கொடூர மரணம் தான்,
எப்படி உருவாக்கியது
என் புத்தரை ??

புறம்


காமம் முற்றிய மூளையின் 
ஒவ்வொரு நியூரான்களும் 
நீர்த்துப் போகின்றன......
பூவாசம் வீசும் பட்டுடல்
கண் முன்னிருந்தும் ;
கண்ணியம் என்ற பெயர் வைத்து
கண் பார்த்து பேசச் சொல்லும்
சமூக ஒழுக்கத்தில் ....

நரம்புகளை இழுக்கும் புளித்துப்
போன ஒரு கோப்பை போதைக்கும்;
ஆழ்ந்த சுவாசங்களால் நெளிந்து
போன உயிர் முடிச்சுகளுக்கும்
இடையே உள்ள -

ஒரு கணத்தில் மரிக்கிறேன்,
மறு கணத்தில் பிறக்கிறேன்

புத்தனாக செய்தல்



நீ அறுத்தெறிந்த உறவுகள்,
தாண்டிச் சென்ற உணர்வுகளை 
சாட்சியாய் வை !!
உன்னை புத்தனாக மாற்றும்
வேலையும் ஒரு ஒப்பனையே !!
கடமையைக் கடந்து, துறவில்
நாட்டும் வெற்றிக் கொடியும்
ஒரு மாய பிம்பமே ..
புத்தானக்கும் அறிவு பெற்றது
தான் நீ முதலில் கற்ற
தவறானப் பாடம் !!

ஆம்..
அறிவு அப்படித்தான் பேசும்
பாசத்தை மாயை என்றும்
நேசத்தை நிழல் என்றும்
பக்தியை பொய் என்றும்
காதலை கானல் நீர் என்றும்

துயரங்களில் அமிழ்ந்த
நம் புகையும் மனதில்
அறிவு என்ற சாமரம் வீசினால்
வாழ்க்கையே நெருப்பாய் மாறும்

அறிவியலும், எந்தச் சித்தாந்தமும்
சாம்பல் என்று பெயர் தான் சொல்லும் ,
அதன் விறகுகளின் உயிர்த் தியாகங்கள்
அதற்குத் தேவையில்லை..

எதுவும் மாயையில்லை !!!
இவை இல்லாமை தான் மாயை !!
புத்தனைச் செய்தல் புத்தன் ஆகாது ..

உலகம் உணர்வுகளின் விசையில்
தான் சுற்றி வருகிறது என்றுணர
இரு துளிக் கண்ணீர் போதும்

"நிலாக் காலம் "

தேய்ந்து மறையும் - பின் மீண்டும் வளரும் ... வாழ்வின் இன்ப துன்பங்கள் சரி பாதியாய் உணர்த்தும் இயற்கை தத்துவம் - நிலா.
அது தான் "நிலாக் காலம் "

இன்றிருக்கும் அபார்ட்மென் கலாச்சாரத்தில் நிலவைப் பார்க்கும் வழக்கமே குறைந்து விட்டது, கயிற்றுக் கட்டில்களிலோ, பாய் விரித்தோ இல்லை திண்ணையில் அமர்ந்தோ மனதில் எதுவுமற்று 
வயலில் செய்த வேலை களைப்பு தீர நிலவைப் பார்க்கும் வழக்கம் இன்று கிராமங்களில் கூட பெரும்பாலும் குறைந்துவிட்டது. மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்துவிட்டான், ஆனால் நமக்கும் நிலவுக்குமான தூரம் அதிகரித்து விட்டது. நிலாச் சோறு - நம் நாகரிக பர்கர்களோடு போட்டி போட முடியவில்லை.

இரவில் வீட்டு முற்றத்தில் ஆற்று மண் பரப்பி, அதில் அமர்ந்து நிலவுடன் கலந்து சின்ன சின்ன விளையாட்டும், கொஞ்சம் பாட்டும் பாடிய நாட்கள் நினைவுகளில் மட்டுமே இருக்கிறது. காசு கொடுத்து ரிசோர்ட்டுகளில் வாங்கும் கடற்கரை காற்றும், நிலவொளியும் கூட அந்த நிம்மதிக்கு ஈடில்லை .
நிலாக்காலங்களில் வீட்டு முற்றத்தில் தூங்கும் போது வீசும் வேப்ப மரக் காற்றும் இல்லை, வீட்டைத் திறத்து வைத்து தூங்கும் திராணியும் இல்லை.

மீண்டும் வராத அந்நிலாக்காலத்தில் மீண்டு வர மனமில்லை.........

ஜென் மனம்



சூட்சுமமான முடிச்சுகளில் தான் 
சுவாரசியம் தங்கியிருக்கும்,

திறந்திருக்கும் பைகளை
எட்டிப் பார்க்க யாரும் இலர் .


பசி என்ற ஒன்றில்லாத பொழுது
ருசி என்ற ஒன்றும் ;

மௌனம் என்ற ஒன்றில்லாத பொது
இசை என்ற ஒன்றும் ;

துயரம் என்ற ஒன்றில்லாத பொழுது
கடவுள் என்ற ஒன்றும்

ரசனை என்ற ஒன்றில்லாத பொது
கவிதை என்ற ஒன்றும் ;

மரணம் ஒன்றில்லாத பொழுது
ஞானம் என்ற ஒன்றும் ;

காமம் என்ற ஒன்றில்லாத பொழுது
காதல் என்ற ஒன்றும் ;

நமக்குத் தேவையேயில்லை ....

அவை கண்களுக்கு புலப்பட்டும் ,
அறிவுக்குள் -
மறைந்திருக்கும் புதையல்களே !!

சூன்யத்தில் காலூன்றும் மனமே !!
நீ முழுமையின் பிம்பத்தை
அதில் உணர்வாயா ??

என் மகளாய் மாறிவிடு

நேர்த்தியாய் எடுத்த வகிடு 
கலைந்ததால் நீ மேலும் 
அழகாகிறாய்!!

இன்று விழுந்த உன் 
அரிசிப்பல் ஓட்டை உன்னை
தேவதை ஆக்குகிறது !!

வியர்த்து இருக்கும்
ரோசாக் கரங்களின் மென்மை
அப்படியே இருக்கிறது !!

கொசுக்கள் கடித்து, தடித்த
மென் கழுத்துப் பகுதி
மெருகு கூடி இருக்கிறது !!

மஞ்சள் நிற
பொட்டிட்ட கன்னங்கள்
பால்மனம் வீசுகிறது !!

அழிந்துப் போனச் சாந்தின்
தடம் புருவங்களில் சிறிது
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது !!

உன் மழலைக் குறும்புகள்
யாவும் - என் ஜென்மத்தின்
அர்த்தம் ஆகின்றன

உன் கொஞ்சு மொழிக்கும்
உன் பிஞ்சு இதழ் முத்தத்திற்கும்
என் ஆயுள் முழுதும்
விலையாகின்றன !!

உன் பவளச் சிரிப்பிற்காக
என் வாழ்க்கையை அர்பணிக்க
நான் சூழுரைத்துள்ளேன் !!

அம்மா நீ என் மகளாய்
மாறிவிடு !!

புதன், 9 மே, 2012

யார் அந்த நிலவு ??




பரிதி வெயிலில் சருகாகி 
எஞ்சிய உடம்பின் வெப்பம் ,
அவளில்லாத மாலையை 
தகிக்க முடியாமல் போனது !

இறைவன் அளித்த பரிசாய் 
நகரத்தில் எஞ்சியிருக்கும் 
ஒரே நிம்மதி 
நிலாவைப் பார்ப்பது தான்!!

அன்று -
எனக்கான நிலவு ஒன்று 
முழு முகம் காட்டிக் கொண்டு ,
தென்னை மரக் காற்றோடு 
சரசரவெனப் புணர்ந்து 
சன்னல் வழியே 
பச்சை வாசத்துடன் 
என்னை வெள்ளிப் பாலால்
நனைத்தது.


பால் நிலவொளி கொடுத்த 
பாலுணர்வு நரம்புகளின் 
வழியே -அவள் முகம் 
தெரிந்தது என் மூளையில்!!

நிலவை என்னுள்ளிருந்து
வெளியெடுத்து வீசி ,
மிஞ்சியிருக்கும் மங்கிய 
ஒளியில் அவள் அங்கம் 
புலனாகிட , 
குளிர் தென்றலும் 
வெப்பத் தனல் மூட்டியது 

நினைவுகளில் அவளிருப்பதால் 
சுகிக்க முடியாத நிலவு ..
இன்றும் என் 
கவிதை எழுதாதப் பக்கங்களின் 
பாடு பொருளானது :(


ஞாயிறு, 6 மே, 2012

என் ஊர் நாகலாபுரம்



            சொந்த ஊரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அமர்ந்திருக்கிறேன், நமது நாடு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுதான். கிராமத்தில் பிழைக்க வழியில்லாமல் நகரத்தை அண்டிப் பிழைக்கும் நரக வாழ்வில் நாம் இழந்துவிடுவது எத்தனையோ உள்ளன, அதில் ஒன்று நம் இயல்பு. பத்துப் பதினைந்து தலைமுறைகளாக நிலத்தில் காலூன்றி விவசாயக் கறை படிந்த கிராம வாழ்வை, மழை மீட்டும் மாலைப் பொழுதிலோ, முழு நிலவுக் காலங்களிலோ நினைத்துப் பார்ப்போம்.

            என் ஊர், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின், விளாத்திக்குளம் தாலுகாவில் உள்ள நாகலாபுரம் என்ற தேய்ந்து போன கிராமம். கிராமியம் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கும் இவ்வூரை விழுங்குவதற்கு ரியல் எஸ்டேட் வெள்ளை உடைகள் அலைந்துக் கொண்டிருக்கும் கிராமம்.இதன் வரலாறு குறைந்தது ஆயிரம் வருடங்களாவது, எனக்குத் தெரிந்து 800 ஆண்டுகளுக்கான கதையினை தேடிப்பிடித்துள்ளேன். இந்த ஊரின் சந்தை இதன் தொன்மையை வரலாற்றில் இருந்து எடுத்துக் காண்பிக்கிறது இன்றளவும்.

             பாளையக்காரர்கள் ஆட்சி செய்தபோது, புதூர் சமஸ்தானத்தில் இருந்த இக்கிராமத்தில் பல சமுதாயங்கள் இருந்து வந்தன. இன்று பல சமுதாயங்கள் அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டன. அதற்கு மிக முக்கிய காரணம் கரிசல் மண்ணில் அடிக்கடி ஏற்பட்டுவிடும் பஞ்சம் ( மூன்று ஆண்டுகள் வரை ஒரு மழை கூட இல்லாது போகும் சாபம் கொண்ட மண் , அருகிலிருக்கும் வேம்பாறு எனும் கிராமத்தில் வருடத்திற்கு இருபதிலிருந்து - இருபத்தைந்து நாட்கள் மட்டுமே நீர் வரத்து இருக்கும் என்றால் அங்கு விவசாயம் இருக்கும் ). 

               இந்த மண்ணில் தான் தமிழ் இஸ்லாமியப் புலவர்களுள் முதல்வரான உமறு புலவர் பிறந்தார், இவர் பின்னர் எட்டயபுர சமீனில் அரசகவியாக வாழ்ந்துவந்தார். கட்டபொம்மனின் பாசறை இந்த ஊரிலே இருந்து வந்தது, அதற்கான வரலாற்றுச் சான்றுகள் சென்னை அருங்காட்சியத்திலிருக்கும் ஜக்கம்மா சிலை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஊர் என்று ஒரு குறிப்பைக்கானலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சியில், கலெக்டர் ஜாக்சன் துறையின் ஊழலை பட்டியலிட்டு சென்னை மாகணத்தில் நிரூபித்த கட்டபொம்மனின் அமைச்சர் தானாதிப் பிள்ளையின் ஊரென்றும் சொல்லுவர், இதற்கு பழிவாங்கும் பொருட்டு அடுத்த கலெக்டர் இவரைப் பிடித்து, இவ்வூர் சந்தைக்கு எதிரே உள்ள மரத்தடியில் சிரச்சேதம் செய்து உடலை மட்டும் அங்கேயே போட்டுவிட்ட வரலாறும் உண்டு ( அவர தலையை எடுத்துக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வைத்து பொது மக்கள் அனைவரையும் கட்டயாமாக பார்க்க வைத்தனர் என்றும் சொல்லுவர்)

இந்த ஊருக்கு அருகில் புகழ்பெற்ற "இருக்கன்குடி மாரியம்மன் கோவில்" உள்ளது. இந்த ஊரின் கிழக்கிலே வாழ்ந்து வந்த "ரெட்டியப்பட்டி குருநாதர்" மடம், (Tnagar ரங்கநாதன் தெருவில் உள்ள ரெட்டியப்பட்டி குருநாதர் மடம் அவர் அறவே விரும்பாத ஆடம்பரத்தை  பளிங்கு மாளிகைக்குள் அவருக்கு திணித்துக் கொண்டிருக்கிறது, அந்த ஊர் மட்டும் தேய்ந்துக் கொண்டே இருக்கிறது ).அந்தக் கரிசல் மண்ணில் வாழ்ந்து வந்த மக்களின் நம்பிக்கையில் கலந்த ஒரு விஷயம். அந்த ஊரின் தனிச் சிறப்பாய் நான் நினைப்பது ஊரின் உள்ளே பள்ளிவாசலும், சர்ச்சும் அதைச் சுற்றிப் பல கோயில்களும் அதன் நம்பிக்கைகளும் அமைதியாக வாழ்வது தான். 

     இன்று உமறுபுலவருக்கு என்று மணிமண்டபம் உள்ளது, பல கோயில்கள் உள்ளன எனினும் ஒரு கல்லூரி இல்லை, ஒரு தொழிற் கூடம் இல்லை, அடர்ந்துக் கிடக்கும் கருவேல மரங்கள் இதன் சொற்ப மண்வளத்தையும் உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. முதலிலெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் ஊர்த்திருவிழாக்களை நம்பி தான் அந்த ஊரில் பொருளாதார இயக்கமே இருந்து வந்தது, இன்றளவும் கூட அந்த ஊர் திருவிழாக்களில் பல ஊர்களில் இருந்து தம் கிராமத்தை அடைந்து , கரிசல் வாசத்தை முகர்ந்து செல்லும் குடும்பங்கள் பல உள்ளன. ஊரின் விவாசாயம் பற்றி நான் எண்ணிப்பார்க்கும் இதே வேளையில், அந்த ஊரின் கடைசி விவசாயி யாரென கேட்பாரற்று வளர்ந்து கிடக்கும் சொளத்தட்டைகள் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருக்கலாம்.

Tamil Post-Modern Literature - Listing


Iyyappa Madhavan

Iyyappa Madhavan (Tamil :அய்யப்ப மாதவன் )a well known poet in Modern Tamil Literature Born on 18.04.1966, in a small village called Nattarasankottai of Sivagangai district, Tamilnadu, South India.
Initially he wrote his first Haiku story in the name of Idhaya Geetha(10 haiku were selected in Sahitya Akademi's Book of Haikucollections). He wrote 10 Books in the genre of Post Modern literature. This includes a Short Story collection.
Books 1. Theeyin pinam - Annam Publishers 2. Mazhaikkup piragum Mazhai 3. Naanenbathu veroruvan 4. Neerveli 5. Piragoru naal kodai 6. Es. Bullet - Kaalachuvadu Punlishers 7. Nisi Agaval - Aazhi Publishers 8. Sollil Vizhundha Kanam - Aazhi Publishers 9. Thaanai Nirambum Kinatradi (Short Story collection) 10.Appilukkul Odum Rayil (ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்) - Uyirmmai Publishers


வெள்ளி, 4 மே, 2012

"மேரி சுமந்த சிலுவை"



கணேசக் குமாரனின் - பெருந்திணைக்காரன் (சிறுகதைத் தொகுப்பு ) - (புத்தக மதிப்புரை )






-------------------------------------------------------------------------------------------------------------------------


"மேரி சுமந்த சிலுவை" என்று இந்தக் கட்டுரைக்கு தலைப்பு வைக்க விளையும் போதே, என் மனதில் இறுக்கமான வலி ஒன்றும் உடனே வந்து ஒட்டிக் கொள்கிறது.


என்னைப் போன்ற ஒரு வாசகன் சிறுகதைகளில் அதிகப்பட்சம் எதிர்பார்க்கும் விசயமே திருப்பங்கள் தான், இந்தத் தொகுப்பில் மிகவும் அபாயகரமான திருப்பங்கள் வந்துக் கொண்டே இருக்கின்றன, அவையாவுமே கொண்டை ஊசி வளைவுகளாக இருக்கின்றன. ஒவ்வொரு கதாப் பாத்திரமும் நம் சமூகம் விரித்த மாய வலையில் சிக்கி அவல நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு சோக இழையை அடிநாதமாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. விதி, சூழ்ச்சி, இயற்கை, நோய்மை என ஏதோ ஒன்று ஒரு மனிதனை உருக்குலைப்பதை நாம் எல்லாக் கதைகளிலும் உணரலாம்.


புறத் திணைகளில் வரும் பொருந்தாக் காமம் தான் "பெருந்திணை" என்று அழைக்கப் படும், ஆனால் அது உள்ளுணர்வுகளைச் சொல்வதால் "புறத்தில்" சேராது என்று பலர் கூறுவதுண்டு, அதேசமயம் அகத் திணையிலும் சேராமல் இருக்கிறது (கைக்கிளைத் தினையும் அப்படியே). இப்படி இருபுறங்களும் மறுக்கப் பட்ட கையறு நிலை போலத் தான் இந்த கதைத் தொகுப்பும் வேவேவேறு சூழலில் இருக்கும் கையறு நிலையிலேயே மையம் கொள்கிறது. மனச் சிதறலில் மாறிய தாயும், காட்டினையிழந்த யானையும் , குடும்பமே துரத்திய திருநங்கையும், ஒரு வறுமை நோய்த் தீண்டிய கவிஞனும் , உடை விற்கும் ஒரு அபலையும், ஒரு முதிர் கண்ணியும், சித்தப்பாவை காதலிக்கும் பரமுவும் , மாநகரத்தில் வசிக்கும் சாபம் பெற்றவனின் தனிமையும், இளம் வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவளின் துயரங்களையும் எல்லாம் சேர்த்து ; புகழிலும், செல்வாக்கிலும், அதிகாரத்திலும், தன் முழு உருவம் காட்டாத கலாசாரத்திலும் ஊறிய உல்லாச சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்துப் பதிந்துள்ளார்.




அவரது கதாப்பாத்திரங்கள் யாவிலும் நேர்மை ஒன்று தென்படுகிறது, நேர்மை என்பதை விட வைராக்கியம் என்றோ, திமிர், செருக்கு என்று சொல்வதும் சிறப்பு.


முதல் கதை, ஒரு மனிதனுக்கு தன் தாய் தான் "காதல்"என்ற உணர்வின் முழு முதல் விதையென உணர்த்துகிறது. தாயின் இல்லாமை அவனோடு சேர்ந்து நம்மையும் உருக்குகிறது, உருக்குலைக்கிறது. மறுபடியும், அவன் தாயினைக் கண்ட பின் அவனின் மாற்றம் (சங்கிலியால் பிணைக்கும் நிலை ) யதார்த்தம் என்றால்; தாயுடன் அவன் மழையில் நனையும் பொழுது, அவர்களை மூடியிருக்கும் கார்முகில் அவன் நினைவில் கருவாக மாற , அவன் குழந்தையாக மாற்றம் பெற்று தாயை தொடுகிறான், அவன் தாயின் உடலுக்குள் செழுத்துவதும். அவன் தாயின் உடலோடு அங்கமாய் இருப்பதும் அறமே !!. இக்கதையை வாசித்து முடிக்கும் பொழுது "ஒரு பள்ளத்தில் வீழ்ந்து விட்டோமோ ? "என்று தோன்றினாலும், ஒரு சிறிய நிதானத்தின் மூலம் அக்கதையில் பூரணம் வெளிப்படுவதைப் பார்க்கலாம். தாயைப் பிணைக்கப் பட்ட சங்கிலி பின்னர் அறுந்தெறியப்படுகிறது .


கொம்பன் எனும் சிறுகதையில் வரும் "போர்" காட்சி மிகவும் குறிப்பிடவேண்டியது , அனேகமாக நான் வாசித்துவிட்ட எந்த ஒரு சரித்திர நாவலிலும் இவ்வளவு தூரம் வாள் உரையும் சப்தமும் , யானைகள் , மனிதர்களின் ஓலமும் , இரத்தமும் கண்டதில்லை(சங்க இலக்கியங்கள் தவிர்த்து). பரணி இலக்கியங்களுக்கு ஈடாக தோற்றவனின் பக்கம் நிற்கும் இந்தப் புலவனின் புதுப் பார்வை , " நமக்குப் போரின் இரத்தவாடையைக் கொண்டும், மனிதப் பலிகளின் எண்ணிக்கையைக் கொண்டும் நம் சமூகப் பெருமை பேசக் கூடாது " என்று நமக்கும் தோன்றச் செய்யும் அதே வேளையில் , அந்த மன்னராட்சியிலிருந்து, இன்றைய நாகரிக கேலிச் சமூகம் வரை அழிந்துவரும் விலங்கினத்தின் ஒரு கடைசிப் பிரதிநிதியாய் மாண்ட "கொம்பன்" எனும் யானை மூலம் மனிதமாக நாம் பரினாமித்ததின் மற்றொரு மோசமான விளைவாக இதைக் காட்டுகிறது


மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவன் தன் குடும்பத்தில் இருந்தால்கூட ஒதுக்கத் தயங்காத பெற்றோர்களும், சொந்தங்களும் வாழும் சமூகக் கட்டமைப்பில் எப்படி அந்த சகாயத்தை நேசிக்கவும் ஒருவன் இருக்க முடிகிறது என்று அடுத்து சிந்திக்க ? பணத்திற்காக உடலை விற்கும் ஒரு பெண் ராணியாகவே இருக்கிறாள்!! அவளே ஒருவனிடம் மனத்தை எதிர்பார்க்கும் பொழுது அவள் கனவில் சீழ் படிகிறது, தண்டவாளம் நோக்கி செல்கிறாள். தண்டவாளங்கள் பிரித்த உடல்களுக்கும் தலைகளுக்கும் நடுவே இப்படி எத்தனைக் காதல்கள் நசுங்கியிருக்கும் ??




தன் எழுத்துகளுக்காகவே வாழ்ந்துக் கொண்டிருப்பவனை விட ஒரு பத்து ரூபாய் விலை உயர்ந்தது என்று நெஞ்சடைக்கும் கதை தான் "கையறு மனம்" , இதற்கு கூட கண்ணீர் வராத என் கண்கள் குருடாகட்டும். பாடல்கள் நிரம்பிய ஆறாவது கதை ஒன்று தான், முடியும் பொழுது கொஞ்சம் நிம்மதி கொடுத்தது. அடுத்ததாக, புறவொழுக்கத்தின் எதிர் புறம் நிற்கும் "பெருந்தினைக்காரன்", ராணுவத்தில் பணிபுரியும் சித்தப்பாவின் அன்பிற்கும், அண்ணன் மகன் பரமுவின் அன்பிற்கும் இடையே இருந்த வேறுபாடுகளைக் கூடத் தெளிவாய்க் காணலாம். ஒருவன் தன் வேலையின் காரணமாய் தெரிந்துவைத்தப் பழக்கமும், மற்றொருவன் தனக்கு விளைந்ததை மட்டும் ஏற்றுக் கொண்டு அதில் உண்மையாய் வாழ்வதைப் பார்க்கலாம். பரமு தன் சித்தப்பாவாக மாறுவது, தவமிருக்கும் ரிஷிகள் கடவுளாக மாறுவது போல் பௌதீகமே !!


மாநகரத்தில் வாழ்வதே ஒரு மனிதனுக்கு சாபம் தான் என்றாலும், வறுமையும், தனிமையும் இரு கரங்களாய் தொண்டைப் பிடிக்கும் பொழுது அவன் விதி சமைக்கும் விருந்தாகிறான், அவன் பெரும்பாலும் இலக்கியத்திலோ அல்லது இலக்கியம் சார்ந்த இடத்திலோ வசிப்பவனாகவும் இருக்கிறான் (உன்மத்தம் பூவில் பெய்யும் மழை - மிகவும் ரசித்த தலைப்பு ). தன் உடல் தோற்றத்தினால், பருவம் தாண்டியும் மனமாகாதவள் - அழகு என்ற அர்த்தமற்ற போதையில் சிக்கி சுயத்தை இழந்த நம் பண்பாட்டின் பிரதிநிதியாகிறாள்.


ஸ்பானியர்களின் தங்கவேட்டை , கண்டிப்பாக எல்லோரையும் "அட!!" போட வைக்கும். அந்தக் கதை சொல்லும் விதமும், கதையில் திடீரென்று முளைக்கும் கொலம்பசும் ஆச்சரியமாய் இருந்தாலும் .. இல்லாத தங்கத்தின் மீது பேராசை கொண்டு நடந்த உயிர்ப்பலிகள் மிகக் கொடூரமானவையே !!.. கொடுரம் சிறிதும் பிசகாமல் இருக்க குருதி குடிக்கப்பட்டுவிட்டது.


கடைசியாய் வரும் கதையில் வன்புணர்வுக்கு ஆளான மேரி மனச்சிதைவு பெற்று, தன் குடும்பத்தையும் பிரிகிறாள்(தொலைந்துப் போகிறாள் ). அவளை அவ்வூரில் தேர்தல் பணிக்காக வந்த சில ராணுவத்தினர் மறுபடியும் பலாத்காரம் செய்ய அவளும் கருவுருகிறாள், அவளைத் தன் இறந்துபோன பேத்தியின் இடத்தில் வைத்து அவளை வளர்க்கிறாள். இந்தக் கதையில் வரும் மேரி கரைதல் அகிலாண்டேஸ்வரிக்கு எதிரானவள், சமூகம் இந்த அழகு என்கிற அளவுகோலில் ஒரு பெண்ணை எந்த அளவிற்கு நசுக்கிகிறது என்பதற்கு ஏழாம் கதையில் வரும் அகிலாண்டேஸ்வரியும், கடைசிக் காதில் வரும் மேரியும் போதும்.முதலாமவள் தன் அழகில்லாமை எனும் தர்கத்தில், ஆயிரம் அவமானங்களுக்குப் பின் தன் கட்டுப்பாடுகளை எல்லாம் ஒரு நாள் ஒருவனிடம் இழக்கிறாள், அதே அழகிற்கு கூலியாக மேரி சிலுவை சுமக்கிறாள்.




சமூகத்தில் ஒதுக்கப் பட்ட , புறக்கணிக்கப் பட்ட்டவர்களைப் பற்றிய கதைத் தொகுப்பில் சில மெல்லிய மனதை அன்பு வெளிக்குள் நட்சத்திரமாய் தன் கதைகளில் தெளித்திருக்கிறார். முதல் கதையில் வரும் மகன், சகாயத்தை நேசிக்கும் பாலு, சித்தப்பாவை காதலிக்கும் பரமு, மேரியை அரவணைக்கும் கிழவி என்ற பாத்திரம் மூலம் எத்துனை துன்பங்களிலும், அன்பின் மீதுள்ள நம்பிக்கை தான் வாழ்வை இயக்குகிறது ஏறுப் புலனாகிறது.


முக்கியமாக அவர் கதை சொல்லும் விதம் மிகவும் ஈர்த்தது, ஒரு நிகழ்வைச் சொல்லி அடுத்த ஒன்றை விட்டு, அதற்கு முந்தைய நிகழ்வு ஒன்றை சொல்லி ஆங்கில எழுத்தான "V " என்ற வடிவத்தில் இருக்கிறது.
உதாரணம் :-
வேறு ஒரு ஊரில் தொலைந்துப் போன , ஏற்கனவே மனநலம் குன்றிய மேரியின் நிலையில் அவள் நடுத்தேரிவில் படுத்திருக்கும் கோலத்தில் ஆரம்பித்து(இடதுபக்க தொடக்கம் ) , அடுத்த பத்தியில் மேரிக்கு முதலில் என்ன நேர்ந்தது என்பதில் தொடங்குகிறது ((வலது பக்க தொடக்கம் ), இரண்டு கதைகளில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மேரி எப்படித் தொலைந்தால்(கீழிருக்கும் மையப் புள்ளி என்ற மத்தியில் முடிகிறது.இந்த மாறுதலான பயணமும் கதையை வசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்தத் தொகுப்பில் அடுத்த சிறப்பாய் நான் சொல்ல விளைவது அவர் சொல்லாடல்கள் நான் மிகவும் ரசித்த சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கவிதைத் தழும்புகள் இருப்பதாய் நான் உணர்கிறேன்.
"மேரியை சிலுவை முழுமையாய் மூடும் தருணம் அவள் மார்புகளில் பால் வந்துக்கொண்டிருந்தது "
"ஆற்றில் அங்கங்கே மணல் தோண்டியதில் அம்மைத் தழும்புகள் நிறைந்திருந்தன"
"எப்படியாவது பாவம் தொலைந்தால் போதும் என்று வருபவர்கள் பிச்சை போடுவதால் பாவம் தீர்ந்துவிடும் என்றெண்ணி காசினை எறிந்து புதியபாவம் பெற்றுக் கொள்வார்கள் என்பதும் மிகச்சரியே ??"
"அம்மா நீர் சூலம் எடுத்து நீரைக் குத்தினாள், மழையைப் பிடுங்கி எறிந்தாள்".

அவர் கதைகளில் சில திருப்பங்கள் ஒரே வார்த்தையில் நிகழ்ந்துவிடுகின்றன, அதை கவனிக்காமல் விட்டு விட்டால் கதைத் திசைமாறி செல்வதை உணர முடியாமல் குழம்ப நேரிடும் , கையறு நிலையில் வரும் "இவன் தீர்மானித்தான்" எனும் சொற்களில் ஒரு மனிதன் ஒரு சூழ்நிலையில் தனக்கு நேரும் மிகப் பெரிய மனப் போராட்டத்தை கடந்து விளைவுகளைத் தீர்மானித்து எடுக்கும் முடிவை அடக்கி வைத்துள்ளார். உண்மையில் கையறு நிலையின் உச்ச நிலை நமக்குப் புலனாகும்.




இது வரை வந்த சிறுகதைத் தொகுப்புகளில் பெருந்திணைக்காரன் தனக்கென்ற ஒரு இடத்தில் கம்பீரமாக இருப்பான் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. மேரி சுமந்த சிலுவைகள் மிகவும் பாரமானது, துயர்மிக்கது, மனித வாழ்வில் துயரங்கள் தான் சந்தோசம் பற்றிய அளவீடுகளை கணிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை மேரியை ரட்சிக்கும் ஆண்டவனாக ஒரு கிழவி வாழ்வதில் தெரிகிறது . இந்தத் தொகுப்பின் , எல்லாக் கதைகளிலும் விரவியிருக்கும் வலிகள் தான் இந்தப் படைப்பின் வெற்றிக்கு சாட்சி சொல்லும்.


வெளியீடு : உயிரெழுத்துப் பதிப்பகம்