இன்று மடிப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..
எனக்கும் அறிவியலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்றாலும், இந்தவாரம் எந்த சினிமாவும் புதிதாய்த் திரையிடப் படாததால் அங்கு செல்ல நேரம் இருந்தது. அறிவியல் கண்காட்சி பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருந்தது , மைதானத்திலோ "ரிங்க ரிங்கா ரிங்க ரிங்கா" என்பனப் போன்ற பின் நவீனத்துவப் பாடலுக்கு மாணவர்கள் நடனமாடிக் கொண்டு இருந்தனர். அந்த மேடைக்கு பின் "அட்மிசன் நடைபெறுகிறது" என்கிற ஜொலிக்கும் பேனர் விளம்பரத்தில் "Without Donation" என்கிற ஜென் தத்துவம் அடங்கி இருந்தது.
சின்னச் சின்ன வாண்டுகள் கூட மிக ஆர்வமாய் அறிவியலோடு விளையாடிக் கொண்டிருந்தனர். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட சோலார் விளக்கு மாதிரியையும், முல்லைப் பெரியாறு பற்றியும் பேச வைத்திருக்கும் குறிப்பை மனனம் செய்து முடித்திருந்தாள். ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் "அப்துல் கலாம் சிந்தித்த இந்திய நதிகள் இணைப்பு" என்று சொல்லிக்கொண்டும், "பாரதியை யார்?" என்று நான் கேட்டதற்கும் சொன்னான். இன்னொருவன், சென்னைக்குள் செயற்கை அணையை உருவாக்கி அதை ராலேகான் சித்தியாய் போல் ஆக்குவதாய்ச் சவால் இட்டுக்கொண்டிருந்தான் அந்த வகுப்பில் இந்த வருடம் புத்திதாய் முளைத்த தலைவர் "பவர் ஸ்டார் அண்ணா ஹசாரே"யின் படம் ஒட்டியிருந்தது .
கிராமம் தன்னிறைவு அடைதல் பற்றியும்; சுற்றுப் புறச் சூழல்,மாசுக்கட்டுப்பாடு பற்றியும் அநேகமாக எல்லா மாணவர்களும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர் ; கோக் ,குர்குரே போன்ற நச்சுத் தீவனங்களின் விளைவு பற்றியும், பயோ காஸ் பற்றியும் அநேகம் பேர் தெரிந்து வைத்து இருந்தனர். அந்தப் பள்ளியின் ஒவ்வொரு மாணவனும் அறிவியலுக்காகவே நேர்ந்துவிட்டதைப் போல் நின்றுக் கொண்டிருந்தனர். எங்கள் கிராமங்களில் அதே பாடங்களைப் படிக்கும் (சமச்சீரல்லவா ??) எம் கிராமத்து மாணவர்கள் இந்த அறிவியல் அறிவினைப் பெற்றிருபார்களா என்று ???
தன் பிள்ளைகள், இந்த மூன்று நாட்களுக்காகத் தன்னை முப்பது நாட்களாய் இம்சித்தக் கதையை ஒருவருக்குச் சொல்லிக் கொண்ட படியே ஒருவர் நகர்ந்து சென்றார், Energy efficiency பற்றி பேசிக் கொண்டிருந்த ஒரு அறையில் குண்டு பல்புக்கு பதிலா - CFL பல்ப்ஸ் போட்டிருக்கலாமே என்று தன் சமயோசித அறிவை மற்றவர்களுக்குக் காட்டினார். மேலும், ஒரு நாகரிக மனிதர் நான்காம் வகுப்பு சிறுமியின் ப்ராஜெக்ட் சரியில்லை என்று அவள் நீட்டிய கருத்து புத்தகத்தில் கையொப்பமிட்டு தன் பண்பை வெளிப்படுத்தினார். கல்வியில் நீதி போதனை வகுப்புகள் இல்லாமல் போனதன் நினைவையும், மனிதனுக்கு தேவை அற்றுப் போன வாழ்வியல் உணர்வுகள் பற்றியும் கவலை வந்தது ..
அடுத்ததாக ஒரு அறையில் நுழைந்தேன்- அதுவும் மின்சார உற்பத்தி பற்றிய அறையாகத் தான் இருந்தது . அந்த அறையின் கடைசியில் இரண்டு பக்கம் கூடங்குளம் , கல்பாக்கம் ஆகியவற்றின் மாதிரிகளும் நடுவில் காற்றாலையின் மாதிரியும் வைக்கப் பட்டிருந்தது. இரண்டு grand decorationகளுக்கு மத்தியில் ஒரு எளிமையான ப்ராஜெக்ட் -ஆக காட்சி அளித்தது. அதை உருவாக்கிய மாணவர்கள்(11 -ஆம் வகுப்பு) அந்த பிராஜக்ட் பற்றி செய்முறை விளக்கிக் கொண்டிருந்தனர்.
அணுவுலை மாதிரிகளை உருவாக்கிய மாணவர்கள் இந்தியாவின் முன்னேற்றம் பற்றி, தமிழகத்திலுள்ள நகரங்களில் எல்லாம் மின்சாரம் தடையின்று கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர், நடுவில் இருக்கும் மாணவனோ அனுவுலைகளினால் உள்ள ஆபத்தைப் பற்றியும், விவசாயம் பற்றியும், இயற்கையாக நமக்கு மின்சாரம் உருவாக்குவதனால் ஏற்ப்படும் நிலை பற்றியும் சொல்லி கொண்டிருந்தான். ஒரு மனிதனின் அடிப்படை சித்தாந்தம் ஆசிரியரின் கையிலா?? பெற்றவர்களின் கையிலா? என்றக் கேள்வி என்னுள் எழுவதை நிறுத்த முடிவதில்லை.
'ஒரே வகுப்பிற்குள் எப்படி இந்த மாறுபட்ட ஐடியாலஜிகள் சாத்தியமானது?' என்று வியப்புற்றேன், "கல்வி ஒரே மாதிரி போதனை செய்யப் படும் பொழுது, பெற்றோர்கள் ஊட்டும் அறிவு தானே இதைக் கொடுக்கிறது? பெற்றவர்கள் தான் தன் மகனின் சிந்தனையைக் கூட தீர்மானிக்கிறார்களா? " என்று யோசித்துக் கொண்டே நான் வெளியே செல்லும் போது ஒரு எனக்குள் எழுந்தது இன்னொரு யோசனை, மீண்டும் அங்கு சென்று நடுவில் இருந்த (காற்றாலை) சிறுவனிடம் "உன் பெயரென்ன??" என்றுக் கேட்டேன். அவன் "முஹம்மது" என்றான், அவனுக்கு இருமருங்கிலும் இருந்த அந்த இரு சிறுவர்களிடமும் அவர்கள் பெயரைக் கேட்டேன், அவர்களும் சொன்னார்கள் .
(முடிந்தது)
என் நண்பன் தன்னைப் பிக்கப் செய்வதற்காக என்னை அவசரமாக அழைத்தான் .. அப்போது மடிப்பாக்கத்திலிருந்த நான், நங்கநல்லூர் வழியாக மீனம்பாக்கம் சென்று அவனை பிக்கப் செய்தேன்.
அந்த அணுவுலைகளின் மாதிரியை உருவாக்கிய அந்த சிறுவர்களின் பெயரை நான் கதையில் சேர்க்க மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்... ஆனால் நான் உங்களிடம் கூற விரும்புவது என்னவென்றால் எந்த ஒரு சிறுவனையும், ஒரு மனிதனாக மாற்றும் வேலையை அவனைச் சூழ்ந்த சமுதாயம் தான் மிகுந்த அக்கறையுடன் செய்துக் கொண்டிருக்கிறது. சரிதானே
மிகச் சரியனதுதான் நண்பரே...
பதிலளிநீக்கு