கவிதைத் தொகுப்பு : தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்
வெளியீடு : உயிரெழுத்து பதிப்பகம்
கவிதை தொகுப்பு பற்றிய என் பார்வை எவ்வளவு தூரம் ரசிக்கும்படியும் ஆழமாகவும் இருக்கப் போகிறது என்ற என்னுடைய Maturity கொடுத்த சந்தேகத்தையும் தாண்டி ஒரு தைரியம் இருக்கிறது.இது கவிஞருக்கும் வாசகனுக்கும் இடையேயான ஒரு சந்திப்புத்தான், கவிதைகள் ஒரு கடைக்கோடி ரசிகனுக்கு என்ன சொல்கிறது என்பதை உணரலாம் அல்லது இதற்கு எதிர் வினையாக தற்கால இலக்கியங்களில் அதே கடைக்கோடி வாசகன் எப்படிப் புரிந்து கொள்கிறான் என்கிற உண்மை புலப்படலாம். என் வாசக அனுபவம் மேலும் பல வாசகர்களை இந்த புத்தகத்தை வாங்கச்செய்யும் என நம்புகிறேன்.
இதற்கு மற்றொரு பலமான காரணமும் உள்ளது, இன்னும் நம் ஊரில் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது, உடனே தொலைகாட்சி,கிரிக்கெட், சினிமா என்று காரணங்கள் கூறினாலும். நான் நினைப்பது என்னவென்றால், ஒரு வாசகன் தனக்கு யார் என்று தெரியாத படைப்பாளிகளிடம் தன் பணம் செலவு செய்ய அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை, இது தவறானது தான்.. ஆனால் இன்றைய சினிமாவும் இப்படித்தானே இருக்கிறது. எத்தனை நல்ல கலை படைப்புகள் நம் ஊர் திரை அரங்கங்களுக்கு வராமல் போகிறது. ஆக, இந்த நவீன உலகத்தில் முகநூல் போன்ற இணையப் பிடிகளில் சிக்கிய பின்னரும் படைப்பாளிகளுக்கும் - வாசகர்களுக்கும் இடையேயான தூரம் தான் இன்றைய படைப்புலகப் பிரச்சனை. இதனால் நல்ல புத்தகங்கள் கண்ணில் படாமல் போவதும், அதை விட கொடுமையாய் -வாசகர்கள் தவறான வழிகாட்டுதல்கள் மூலம் திசை திருப்பப் படுகிறார்கள்.
இனி என் பார்வையை என் நண்பர்களுக்கும், கவிஞர் ஆத்மார்த்தி அவர்களுக்கும் சமர்பிக்கிறேன்
தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்
ஒரே வரியில்: எளிமையாய், அருமையாய், ருசிகரமாய், புதுப்புது யுக்திகளில், வெவ்வேறு தளங்களில் பாய்ந்து பாய்ந்து செல்லும் ஒரு Pegasus.
( அவர் கவிதை எவ்வளவு எளிமையாக இருந்தது என்பதை உணர்ந்ததால் எனக்கும் மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்பது போல் இருக்கிறது, எளிமையாய் சொல்லுதல் எவ்வளவு கடினம் என்பதை நான் இங்கு உணர்கிறேன்).
இக்கவிதைத் தொகுப்பினை என்னை வாங்குமாறு சிபாரிசு செய்தவர் தோழர்,கவிஞர் அய்யப்ப மாதவன் அவருக்கு என் நன்றிகள்.ஒரே ஒரு மணிநேரத்தில் ஒருவனை தன் ரசிகனாய் மாற்றிப் பிரசவித்து விட்டார் கவிஞர் ஆத்மார்த்தி, கண்காட்சியில் இருந்து பிராட்வே சென்று அங்கு இருந்து பேருந்தில் பழவந்தாங்கல் செல்வதற்குள் கவிதையை படித்தாகி விட்டது, சில கவிதைகளுக்கு நிசப்தம் வேண்டும், சில கவிதைகள் எங்கு வேண்டுமானாலும் வாசிக்க முடியும் - இந்தப் புத்தகமும் அப்படித்தான்.நானும் என் நண்பர் கண்ணதாசனும், இதைப் படி ,அதைப் படி என எங்களுக்குள் விவாதித்துக் கொண்டே முடித்து விட்டோம்.
ஒவ்வொரு கவிதையும் வேறு வேறு பரிமாணங்களில், வேறு வேறு தளங்களைத் தொட்டுக் கொண்டே செல்கிறது. உதாரணமாய்ச் சொல்வதானால் இத்தொகுப்பினில்-புத்தனும், பத்மப்பிரியாவும், சைத்தானும் , செயற்கைப் பெண்ணும் அருகருகே வசிக்கின்றனர்.பதிற்றுப் பத்து, எட்டுத் தொகை போன்ற தொகைக் கணக்கு கவிதைகள் Fresh, "கடிதம் 10 ", "செல்பேசி 10 " , "மரம் என்ற ஒன்று" என சுவாரசியம் மிகுந்த கவிதை மாலைகள் தொகுக்கப் பட்டு இருக்கின்றன.
சிதறிக் கிடக்கும் ஜென் தத்துவங்களுக்கு( புத்தன் தனிமை, புள்ளி,சொல் மறதி, மீள் வினை, மரணம், ஏகாந்தம் ) மத்தியில் , சில நவீன அழகியலும் { இழை, காற்று, நதி;மீளா வனம் , கிளிக் பால்யம்), திடீரென்று சமூகத்தின் அங்கங்களில் சாட்டையடிக்கும் (கடவுள் மாதிரி, கனவில் வந்த மிருகம், கரைகள், கடவுளைப் பற்றி மூன்று கவிதைகள், தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் (இதில் கரைகள் கவிதையில் அவர் சாடும் முறை மிகவும் கூர்மை "எப்படிப் போதும்/ பிண்டச் சோறு/ தகப்பனுக்கு பிடித்ததாய் /எதையாவது கொண்டு வந்திருக்கலாம்?? ")} கவிதைகளும், புதுப் புது யுக்திகளோடு சொல்லும் மற்ற கவிதைகளும், காதல், கலவிக் கவிதைகளும் என்னை மிகவும் ஈர்த்து விட்டன
எளிமையாக இருப்பதால் ஒவ்வொரு கவிதையிலிருந்து, மற்றொரு கவிதைக்கு செல்கையில் உணர்வுத் தாவல்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன
எனினும், என்னால் வெளியே வர முடியாத அதிர்ச்சி பெண் செய்தல் என்ற கவிதையின் கடைசி வரிகள் "உயிர் குடிக்கும் கொடுமை புரிகிறது. எல்லாவற்றிற்கும் மேல் "பெண் செய்தலில்" - காதல் ஏற்படுத்தும் வடு எவ்வளவு அவநம்பிக்கை வாழ்க்கையில் கொண்டு வந்து விடுகிறது?? "உன் காதல் " எனும் கவிதை ஈரமானது
அதே போல் "அவனும் அவளும்" சொல்லும் ஒரு சராசரி மனிதனின் அன்றாடக் காமச் சங்கடங்களை, கலவிப் பெரும் பசி உடையவன் காமாந்தகனாகவும் - சிருபசிவுடயவன் கவிஞனாகவும் எனக்குத் தோன்றுகிறது !! சிறுபசி ஆற்றுதல் பெரும்பசி நேராமல் தடுக்கும் தானே ??
செல்பேசி10௦ என்கிற கவிதை 10 ஆம் என்னை கடந்த பின்னும் மற்றொரு 10 ஏனோ ???
அது கடிதம் பத்து போல் "௦0" பதில் தவறாக வந்த "10"? இல்லை அது நவீனத்துவத்தின் நீட்சியா?? இல்லை தங்களது கண்டுபிடிப்பா ?? ஒருவேளை எனக்கு இன்னும் பயிற்சி போதவில்லையா ??
கவிஞரே, உங்கள் தொகுப்பில் ஒரு வாசகன் பரவசமடைகிற எல்லா வித்தைகளும்செய்யும் மந்திரப் பொடிகள் உங்கள் பெரும்பான்மையான கவிதைகளில் தூவப்பட்டிருக்கின்றன என்பதை உணர்கிறேன். வாழ்த்துகள்.
நண்பர்களே!! எளிமையாய்ச் சென்றடைகிறது என்று சொல்வதால் நீங்கள் வகைப் பிரிக்க வேண்டாம்.. ஒரு ரசிகனை எளிமையாய்ச் சென்றடைவது அவ்வளவு இயல்பானது அல்ல
இது இவரது முதல் படைப்பு என்று வாசித்த பின் தான் எனக்குத் தெரிய வந்தது , இந்த கண்காட்சியில் முதல் தடவையாய் பிரசுரிக்கும் ஒரு படைப்பாளரின் புத்தகங்களை பார்வையில் வைக்காமல் இருந்த உயிரெழுத்து பதிப்பகம் இதை கவனம் கொள்ள வேண்டும்.( நான் தேடிக் கிடைக்காமல் , stall sales person எழுந்து வந்து தேடி எடுத்துக் கொடுத்தார்). புதிய வரவுகளைக் கண்டிப்பாக எல்லோர் கண்ணிலும் படுமாறு வைத்தல் எவ்வளவு அவசியம் என்றும் சொல்ல விரும்புகிறேன்.
அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்,
உங்கள் நண்பன்
ஜீவ. கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக