ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் குறித்து நான் எழுதி வைத்த என் அனுபவங்கள் பற்றிய குறிப்பு தொலைந்துபோன பின் மறுபடியும் எழுதுகிறேன். எனினும், இந்த புத்தகத்தின் மீதான என் பார்வையை, கொஞ்சமும் அயர்ச்சி இன்றி என்னால் எழுத முடிகிறது .. ஆனால் எனது பார்வைகளை, என் விமர்சனத்தை கவிஞருக்கும்,உங்களுக்கும் சூடாகப் பரிமாற இயலவில்லை என்பதில் ஒரு வருத்தம் தான்.
ஏனென்றால் இனி நான் எழுதப் போகும் வரிகளுக்காக மீண்டும் சில கவிதைகளை வாசிக்க வேண்டுமென்றாலும், முதல் முறை படித்த போது கிடைத்த புத்துணர்வு போல் மீண்டும் அதே உணர்வு கிடைக்க வேண்டும் என்பது இயலாதது தானே!! .சரி, என் பார்வையைத் தொடங்குகிறேன்.
நேரடியாக கவிதைக்குள் செல்கிறேன், "நதியோடிய கவிதாவின் முகம்" என்ற கவிதையில் சொல்லும் மரணம் மிகக் கொடுமையானது. அக்கவிதையில் வரும் கவிதாவின் தற்கொலையால் பிதுங்கிய விழிகளை உணராது, அவள் பெயரை முனுமுனுக்கும் குடிகார கணவனும், மரணத்தை அறியாமல் விளையாடும் தொட்டில் குழந்தையும் எந்த ஒரு கற்பனையும், மிகைப் படுத்துதலும் இல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் விதம் நெஞ்சைக் கசக்கும் உண்மையே அதில் கவிதை மிகைப் படுத்தியோ இல்லை கற்பனைக்காகவோ ஒரு எழுத்தைக் கூட சேர்க்கவில்லை.. உண்மையை அழுத்தமாக சொல்லிவிடுதலோடு கவிதையும் நின்று விடுகிறது . அதற்கு நேர் மாறாக, "ஆப்பிளுக்கும் ஓடும் ரயில்" என்ற தலைப்பே முதலில் சொன்ன கவிதையின் யதார்த்தத்தை விட்டு விலகி எவ்வளவு தூரம் பயணம் பட்டிருப்பது என்பதை நாம் எளிதாக உணரலாம். ஆக, ஒரு வாசகன் இந்த புத்தகத்தில் மேற்கொள்ளும் பயணம் ( வாசிப்பை பயணம் என்று சொல்லுவது குறித்து விவாதம் வராது என்று நம்புகிறேன்) மிகவும் புத்துணர்ச்சி மிக்கது.
அய்யப்ப மாதவன் அவர்களுடைய நான்காவது புத்தகத்தை நான் வாசிக்கிறேன். பொதுவாக நண்பர்கள் மத்தியில் அவரது நடை மிகவும் கடினம் என்பது போன்ற வாதங்களை நான் பலமுறை கேட்டதுண்டு. என் வரையில் எனக்கு தோன்றுவதெல்லாம், அவரது நடை மிகவும் எளிமையானதே, ஆனால் அவர் கவிதை சொல்லும் பாணியில் சில சட்டெனப் போட்டுடைக்கும் நிஜ உலகை மையப்படுத்தி , சில தன்னுணர்வைச் சொல்லும் இயற்கைத் தோற்றம் பற்றியும் , சில கவிதைகள் பிம்பங்களுக்கும், அஃறினைக்கும் வியாபித்திருக்கும் பௌதீக அழகு பற்றியும் , பல கவிதைகள் வறுமையின் கோரப் பிடியிலும் தளராத அறிவுப் பசியையும், எப்போதும் மனம் வீசும் காதலும் என்பன போன்ற Micro Elements பற்றியெல்லாம் நாம் புரிந்து கொள்ள நமக்கு சில நேரம் பிடிக்கும்( மறுமுறைப் படித்து பார்க்க வேண்டும்), இல்லாவிட்டால் கூட கவிதை உலகில் ஒரு வாசகனாகவாது நெடும் பயணம் சென்றிருக்கவேண்டும் .. ஏனென்றால், என்ன தான் தினமும் நாம் வாகனம் ஓட்டிச் செல்பவனாய் இருந்தாலும், மலை பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் நாம் வாகனம் ஒட்டிய பின் நம் தோள்களை நாமே தட்டுவது போல், இது போன்ற நவீனத்துவப் படைப்புகளை வாசிப்பதும் மறக்க இயலாதவையே. இந்தத் தொகுப்பில் கூட சில கொண்ட ஊசிகளில் வளைவதை நாம் மறக்க முடியாது,(முப்பது ரூபாயில் இளமை மீட்கலாம், ருதுவின் காலம், நதியோடிய கவிதாவின் முகம் போன்ற கவிதைகளில் தெரியும் அதிர்ச்சி)
அதே சமயம், அவர் சமூகப் பார்வை மிகவும் எவ்வளவு கூர்மை வாய்ந்தது என்பதை சில வார்த்தைகளில் நாம் எளிதில் கண்டு கொள்ளலாம், கீழே பாருங்கள்
1 . கிளிசலாடை படர்ந்த இடுப்பில் அமர்ந்து நிர்வாணம் மறைக்கும் குரங்கு
2 . விற்பனையாளன் விற்காத கதவுகளின் கதவற்ற வீடுகளைக் கற்பனித்துக் கொண்டிருக்கிறான்.
மேலே சொன்ன இரண்டு வரிகளின் வீரியத்தை எவ்வளவு எளிதாக உணர முடிகிறது. அவரது நடை கடினம் என்று சொல்லப் படுவதன் மீதான எனது எதிர்வினையை இந்த பத்தியில் பதிவு செய்கிறேன்.
அடுத்தது காதல், கவிஞரின் காதல் அவரை எப்படி எல்லாம் ஆட்டுவித்திருக்கிறது என்பது மிகக் சுவாரஸ்யமாய் சொல்லப் பட்டிருக்கிறது. மஞ்சளழகில் அவர் கண்ட உயிர்ப்பின் காட்சியிலிருந்தும், காதலியை தேவதை ஆக்கி அவளுடன் குழந்தையாகி விடுவதும், பெரும் அண்டம் பற்றிய அறிவு கொண்டிருந்தும் -அவளை அடைவதையே பூரணமாய்க் கொள்வதும், அவளோடு இருந்த அபூர்வக் காதலின் வெள்ள நீர் பாய்ச்சலில் எட்ட முடியாத ஆழத்தில் புதைகின்ற செயல்களும்,இயற்கையின் படைப்புகளை அவளை அறிந்து /அவளுள் அவளாகவே ததும்புவதும் என தன் காதலைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்
இதில் அம்முவின் பிம்பமும் , மழைச் சிறுமியும், சித்திரப் பெண்ணும், புத்தனை போன்ற அவளின் மேலாடையும் கூட அவர் கண்ட காதல் கணங்களின் சாட்சிப் பொருள்களே. நிலாவிடனான உரையாடலிலும், சில்லிட்ட அந்தியிலும், ஜெமினி பாலத்திலும் இந்தக் கவிதைகளின் சாயல் ஒருமுறையாவது நமக்கு வந்து போவது நிதர்சனம்.
ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - அந்த ஆப்பிள் அடக்கி வைத்திருக்கும் ரயிலும், அதன் பயணமும் தந்த கவிதை உணர்வானது, இந்த தொகுப்பில் எனக்கு கிடைத்த ஒரு உச்ச கட்ட திருப்தி.
ஏனென்றால் ,கடவுள் என்பது (ஜென் உலகில்) ஒரு தன்மையாக மட்டுமே சித்தரிக்கப் படுகிறது, இங்கு பிரச்னையே கடவுளை ஒரு பொருளைப் போல் பார்க்க ஆரம்பித்த நிலையில் இருந்து தான். ஜென் என்று தன்மையைத் தான் வலியுறுத்துகிறது ,எனக்கு இந்த ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் சொல்வது, ஆப்பிள் என்ற பொருளை அல்ல, அது கவிஞர் மட்டுமே துல்லியமாய் உணர்ந்த ஆப்பிள் எனும் தன்மை ...Object சொல்லும் subject இதுவே.
இக்கவிதையின் முன்னுரை சற்று கனமானதாக இருக்கும், தான் சொல்ல வேண்டிய மிக முக்கியமான கவிதைகளை அவர் சொல்ல முடியாமல் போனதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான தடைகளை உருவாக்கிய சூழலையும், சமூகத்தையும் சாடியிருக்கிறார்... வழிகளுக்கு மருந்தாக காதலையும் , காமத்தையும் விரவியிருப்பதாய் சொல்கிறார். ஆனால்,அடக்கி வைத்த பேருணர்வின் எச்சங்கள் அவரையும் மீறி இந்தத் தொகுப்பில் தஞ்சம் புகுந்துவிட்டன. சொல்லப் போனால், காதல் ஒரு பட்டு நூலைப் போல் கவிதைகளை கோர்க்கத் தான் செய்திருக்கிறது. இறுப்பினும் நாம் அவர் "மூடிவைத்திருக்கும் இறுக்கங்களைத் தளர்த்திச் சொல்ல விரும்புகிற எந்த உணர்வையும் உரக்க சொல்லுங்கள்" என்று ஆதரவளிக்க வேண்டுகிறேன். பேனா மட்டுமே எந்தத் தடைகளும் உடைக்கும் கூர்மையான ஆயுதம் என்று நமக்கு தெரியாதா என்ன?? என் ஆதரவுக் குரலை இதில் நான் உங்களுக்கு பதிவு செய்கிறேன்.
மிக முக்கிமாய் நான் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இந்த புத்தகத்தின் அட்டைபடம் குறித்து , இத் தொகுப்பு முழுக்க நம் மண் சார்ந்த , நமது மரபு, சூழல், காதல் போன்ற விசயங்கள் சொல்லும் தொகுப்பிற்கு அயல் நாட்டு அழகியின் ஆப்பிள் நிர்வாணம் ஒன்றும் justify பண்ணியதாய் எனக்குத் தோன்றவில்லை. ஒரு மிகச் சாதரான கவர்ச்சியைக் கொண்ட டவுன்லோட் அட்டைபடம் அந்த விசித்திர ஆப்பிளின் உணர்வைக் கொடுக்காமல், வாசகனுக்குத் தேவையற்ற எதிர்பார்ப்பை கொடுத்திருக்கலாம்.
அதனால் தான் என் பார்வையில் கூட ஜென் வாசம் வீசும் அந்த அறிவு ஆப்பிளை, வெறுமையில் தற்கொலை செய்த அந்த கவிதாவிற்கு கொடுக்கவே விருப்பம்.. நான் கொடுத்தாலும் வாங்குவதற்கு அவள் என்ன ஏவாளா?? இல்லை நான் தான் ஆதி மனிதனா??
நன்றி
ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக