திங்கள், 23 பிப்ரவரி, 2015

பஜ்ஜி-சொஜ்ஜி -- எத்தனையாவதோ??


ஒரு DISTORTED கவிதையும் - ஒரு ILLUSTRATIONம்
இளங்கோ - REDEFINED



என்னளவில் - கவிதை எழுத முயற்சித்தவைகளை எல்லாம் அடியோடு நிறுத்திய பின்பு தான் கவிதை மொழியுடனான நெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. Xpress கமெண்டுகளைக் கேட்கும் மின்னுலகில் கவிதைகளைப் போகிறபோக்கில் வாசித்துச்செல்லுதலில் உடன்பாடு இல்லாததால் நிதானமாகவும், குறைவாகவும் வாசித்து வருகிறேன். இருந்தபோதும் கவிதையையோ அல்லது வேறு எந்த கலைவடிவங்கள் குறித்தும் பேசுவதற்கான குறைந்தபட்ச தைரியத்தை ஓவியங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
**

ஒருவனின் கவிதைச் செயல்பாடுகளில் இருக்கும் தொடர்ச்சி சுவாரஸ்யம் அளிப்பவையா?? சுவாரஸ்யம் என்ற அடிப்படையை தவிர்த்தால் கூட, தொடர்ச்சியான ஒரு வடிவம், தொனி, சொற்கள், ஏன் தத்துவங்கள் கூட நீர்த்து தான் போகின்றது. அவை STATIC ஆக இருந்தால்.

இளங்கோ (கவிதைக்காரன்), இவனுடைய கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பவும் - விவாதங்கள் செய்துவருவதும், எங்களுக்கிடையேயான வரவு – செலவுச் சிட்டை போலே அடிக்கடி மாற்றிக் கொள்ளப்படும். நிறையவே விமர்சனங்கள் செய்வதுண்டு, சில சமயம் அலுப்பூட்டும் படிமங்களில் நொந்து கொள்வதுமுண்டு – இந்தக் குதிரையை ஃபாலோ செய்யும் பாவ்ன்களின் மூன்று கட்ட நகர்வுகள் மீதும் குற்றச்சாட்டு வைப்பதுண்டு. ஆனால் அசலான ஒரு கலைஞனுக்கு நிகர்வது தான் இவையெல்லாம். இதுவரை தனிப்பட்ட வியாக்யானங்கள். இவரது கவிதை ஒன்றைப் பொதுவில் வைத்துப் பேசினால் என்ன என்று தோன்றியது.

**

இளங்கோவிடம் – நேற்று கேட்டேன், உங்களை உங்கள கவிதைகளின் தற்போதைய இருப்பிடத்தை Dislocate செய்ய முடியுமா என்று? 

மெட்ரோ கவிதைகள் எழுதிய இளங்கோவாக இல்லை என்று சிலர் இவரை விம்ர்சிப்பது போன்றே, இளங்கோ தற்பொழுது நிற்கின்ற இடத்தை திடுமென மாற்றிவிட்டால் எப்படியிருக்கும் என்று பார்த்தேன். இதற்கு முன் அவர் எழுதிய ஐ ஆம் சாரிகவிதைகளில் அதற்கான முயற்சி இருந்தது. சென்ற Pleats அமர்வில் அதுபற்றி விவாதித்தோம். நேற்றைக்கு இளங்கோ எழுதியிருந்த கவிதையைக் குறித்து நான் எழுத முனைவதற்கு காரணம் அவர் அப்படி தன்னை DISLOCATE செய்துவிட்டார் என்று நம்புகிறேன்.

கவிதை நல்லா இருக்கு – நல்லா இல்லை – என்பது போன்ற தீர்ப்புகள் இயங்கும் வெளி வேறு. இது ஒரு ஜீன் டெஸ்ட்.


ரொம்ப காலமா..
*
இந்த இரவை பசியோட கடத்தனும்னு தீர்மானம் செஞ்சப்போ
பசி என்னக் கொஞ்சங் கொஞ்சமா சாப்பிடத் தொடங்கிச்சு
இத வேடிக்கைப் பார்க்கிற 'நான்' வெளியே நிக்கனும்
உடம்போட பெயர் அழியறத மூளைக்குத் தகவல் அனுப்பனும்
ரெண்டுமே வெவ்வேற கருத்துங்கற கட்டளை எங்கருந்து வருதுன்னு ஞாபகத்தைக் கேக்கறேன்
கட்டுமானத்தைக் குலைக்கும்போது ஒரே சீர்ல அது சரியாது -ங்கற சமிக்ஞையின் திசையிலேருந்து வர்ற குரலை இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்டிருக்கேன்
பாதி நிரம்பின வயிறோட, 'கனவைத் தேடு - நிற்காதே போ 'ன்னு கையசைச்சு என்ன விரட்டுது, என் பசி
அய்யோ..! 'என் பசின்னு' சொல்லிட்டேனே-ங்கற பதட்டத்துல மொழிய மறக்கறேன்
சிக்மண்ட் ஃபிராயிடுன்னு ஒரு பெரியவர் இங்க பக்கத்து ஊருல நகுலன்ற புனைப்பேர்ல கடைசி காலத்துல தனியா வாழ்ந்திட்டிருந்தாரு
ஆனா அவரு என் மொழிக்காரர் கிடையாது
அவரோட வீடு இருக்கிற இடம் தெரியும்
பலமுறை கதவைத் தட்டிட்டு அது முழுசா திறக்கறதுக்குள்ள பயத்துல ஓடி வந்திருக்கேன்
வாசல்ல மௌனின்னு பேர் பலகை கூட இருக்கும்
இப்போ முழுசா மொழி மறந்து ஒரேயடியா தீர்ந்து போறதுக்குள்ள அந்த வீட்டோட கொல்லைப்புறத்துக்கு எப்படியாவது போயிடனும்
காஞ்ச சருகு சத்தங்கள உருட்டுற கனவோட அடையாளம் - அங்க வாசனை இல்லாம மட்கி கிடக்குதுன்னு ராமச்சந்திரன் சொன்னான்
எந்த ராமச்சந்திரன்?-ன்னு கேக்க கூடாதுல்ல..!
'பசிக்கு' வயிறு ரொம்பிருச்சு
காதுக்கு தான் சுத்தமா சாப்பாடே இல்ல
மே மாசம் ஆரம்பிச்சதும் கொளுத்த போற வெயில்ல தலையில துண்ட போட்டுக்கிட்டு
இத பொய்யின்னு எப்படி கத்தறது
சே..!
முதல் ஷிப்டு சங்கு சத்தத்தை நகலெடுக்குது இந்தப் பசியோட ஏப்பம்
வெளியே நிக்கிற 'நான் '-ஐ உள்ள கூப்பிட முடியல
உடம்பு மறந்து போச்சு
பசி சத்தம் காத அடைக்குதுன்னு இனி சொல்ல முடியாதே
சருகோட வாசனைல பேரு மட்கி போற அடையாளத்தை புதுசா அடுக்கி அத ஒரே சீர்ல குலைக்கிறதுக்கு
கனவையெல்லாம் தேடச்சொல்லி கிளாஸ் எடுக்க வேண்டாம்ன்னு
சிக்மண்ட் தாத்தாக்கிட்ட தகவல கடத்த
ராமச்சந்திரன அனுப்பி வச்சா..
அவன் மௌனியோட வாசல்ல போயி பேசாம உட்கார்ந்துட்டான் ரொம்ப காலமா

- கவிதைக்காரன் இளங்கோ

 *******

இளங்கோ என்ன செய்திருக்கிறான் இங்கே?? வேறு வடிவம், சொற்கள், படிமங்கள் இவற்றைக் குறித்து தனித்தனியாக பேசாமல் – ஒட்டுமொத்தமாக இந்தக் கவிதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் இது ஒரு DISTORTED FORM. அப்படியென்றால் ??

SKILL ஒரு தொந்தரவாக நவீன கவிஞனுக்கு இருக்கிறதா என்று ஒரு கேள்வி எழுந்தது. POST MODERN ERA – அதற்கான வெளியைத் தருகிறதா? ,  ஒரு ஓவியரோடு ஒர் இரவில் ஆரம்பித்த அவரது ஓவியமொன்றை பார்த்துக் கொண்டே இருந்தேன் – அவர் தொடர்ச்சியாக வரைந்த  17 மணி நேர உழைப்பில் உருவாக்கிய கான்வாசில் அவர் அதிகச் சிரமங்களை எடுத்துக் கொண்டது இதற்குத் தான் - DISTORTION... அங்கு ஒரு போலியான ட்ரிப்பிங்கை உருவாக்கினார். 

புரிந்து கொண்டேன்.
அதற்குப் பெயர் தான் Distortion.

இளங்கோவின் இந்தக் கவிதை ஒரு டிஸ்டார்சன் ஃபார்ம் தான், தனது கவிதைகளுக்கு இல்லஸ்ட்ரேஷனாக நவீன ஓவியங்களைத் தொடர்ந்து போடும் இளங்கோவின் இந்தக் கவிதைக்கு நான் ஒரு விபரணைப் படைப்பைத் தேர்வு செய்கிறேன். பிகாஸோவின் குவெர்னிகா ஓவியத்தின் தொடர்ச்சியாக அவர் வரைந்த அழும் பெண் (WEEPING WOMEN) ஓவியம். க்யூபிசம் பற்றிப் பேசும் போது எல்லோர் நினைவுக்கும் வருவது குவெர்னிகா ஓவியம் தான். அடுத்ததாக அவர் வரைந்த ஓவியம் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டிய அவசியம் பிகாஸோவுக்கு ஏன் வந்தது?? இதைச் செய்யாவிட்டால், குவெர்னிகா மாஸ்டர் பீஸ் ஆகியிருக்குமா?? 

ஒரு பெண் அழுகின்ற VISUAL , ஒரு போரின் நினைவுகளாகுமா?? நேரடியாக ஆகாது தான். ஆனால் ஒரு யூனிட் வலியை பிரபஞ்சப்படுத்தும் போது (பொதுத்தன்மைப் படுத்தும் போது) அது ஒரு ஊரின், நாட்டின், உலகின் வலியாக தன்னை represent செய்து கொள்கிறது.

தனிமனிதனின் ராட்சஸ, அகோரப் பசி அதைச் செய்கிறது – இதற்கு முன் எழுதிய அவர் கவிதையை மாஸ்டர் பீஸ் ஆக்குகிறது. தன்னை
DISLOCATE செய்து, தன் நண்பர்களுடன் (ஃபாலோயர்ஸ்) முரண்படுகிறது. 

ஒரு கவிதைக்கான விளக்கம் கொடுப்பதை விட துயரமான வேலை ஒரு கவிஞனுக்கு இருந்துவிடாது, இன்றைய முகநூல் பதிவேற்றங்களில் இரண்டைத் தவிர்த்தால் கவிதைக்கு நல்லது - ஒன்று விளக்கம் தருவது, அதை விட முக்கியமான ஒன்று கவிதைக்கு TAG செய்வது..

Well done Elango - உங்களுக்கு ஒரு முட்டை போண்டா, அப்புறம் ஒரு மசால் போண்டா. எனக்கு மசால் போண்டா மட்டும்.



---

பஜ்ஜி -சொஜ்ஜி இன்னும் வேற FLAVOR-இல்
ஜீவ கரிகாலன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக