ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

என்ன சம்பந்தம்??


கந்து வட்டி அசலுக்காக
தன் பெட்டிக் கடையை விற்றவனுக்கும்
சைபரஸில் வங்கியை முடக்கி வைத்திருக்கும்
ஐரோப்பிய யூனியனுக்கும் என்ன சம்பந்தம்??

புகழூர் தொழிற்சாலையில்
வேலை பார்த்துக் கிடைத்த உபகாரப் பணம் பற்றி
பனமாவில் முகவரி இல்லாத கம்பெனியின்
ஃபண்ட் மேனேஜருக்கு தகவல் எப்படிப் போய்
சேருகிறது?

தர்மபுரி ஜாதிக் கலவரத்திற்கு
கண்டனம் சொல்லும் பிரிட்டனின் சதுரங்கத்தில்
டெஸ்கோவுக்கும், ஆர்.பி.எஸ்க்கும், வேறு சிலவற்றிட்கும்
இந்தியாவின் பெயில் அவுட் கிடைத்துவிடுமா?

நோவர்டிஸை துரத்தி விட்ட
இந்தியாவின் கைகளில்
எத்தனை ஆராய்ச்சிக் கூடங்கள்
தமக்கு இத்தனை எலிகள் இன்னும் வேண்டும் என்று
ஆருடம் சொல்லப் போகின்றன??

மருத்துவ உபகரணம் என்று
இறக்குமதியாகும் பொம்மைகளில்
சுங்கவரித் துறையின் டார்கெட்டுகளை
எத்தனை ஆண்டுகளில் நிவர்த்தி செய்யும்
சீனா??

இன்று சாப்பிட்ட மோர் மிளகாய் வற்றலுக்கும்
நாளை நடக்கவிருக்கும் அண்ணாச்சியின் தற்கொலைக்கும்
அடுத்தநாள் பங்குச்சந்தைப் பட்டியலில்
சேரவிருக்கும் வால்மார்ட்டிற்கும் என்ன சம்பந்தம்??

--ஜீவ.கரிகாலன்

1 கருத்து: