ஒரு கட்டத்தில்
முழுக்க முழுக்க பொதுவுடைமைச் சித்தாந்தத்தை மட்டும் விரும்பி வந்தேன், அதுவே உண்மையான சமூக நீதியைப் பெற்றுத் தரும்
என நம்பினேன். தனியார்மயமும், கட்டற்ற சந்தைப் பொருளாதாரம் நமது சமூகத்திற்கு
மிகப் பெரிய ஆபத்து என்று நினைத்து வந்தேன்.
மராட்டியத்தின்
சங்கிலி எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் தான் அஷோக் காடே, இன்று கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் அவரது பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்த்து
வருகின்றனர்(DAS Offshore Engineers Pvt Ltd ), மேலும் அவர் வைத்திருக்கும் கார்ப்பரேட் பண்ணையிலும் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை
பார்த்து வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அந்தப் பகுதியில் வாழும் உயர்
சாதியினர் ஆவார்கள்.
அஷோக் காடே செருப்பு
தைக்கும் தொழிலை செய்து வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்தவர். வறுமையில் வாடிய குடும்பத்தில் அவர் தன் வெற்றிப்
பயணத்தைத் தொடங்கிய இடம் இது தான்: ஒரு மழை நாளில் தொழில் செய்ய முடியாது போன தன்
தந்தையால் அன்றைய உணவுக்கு வழி தேடிக் கொடுக்க முடியவில்லை, அடுத்த நாள் தன் கணிதத் தேர்வை வெற்று வயிற்றுடன் எழுதினார். அந்தக் கணிதத் தேர்வில் அவர் பசி அவருக்கு
நூற்றுக்கு நூறைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவர் வறுமை அவர் பள்ளியில்
தொடர்வதைத் தடுத்து நிறுத்தியது.
அதில் சோர்ந்து விடாத அஷோக் காடே, வேலை தேடி
மும்பை சென்றார், துறைமுகம் சார்ந்த பணியில் ஆரம்பித்த இவர் பயணம், ஜெர்மனியில்
சில காலம் வேலை பார்த்து தன் திறன்களை, தொழிலறிவு போன்றவற்றை வளர்க்க உதவியது. அது அவரை
1992ல் தன் வேலையைத் துறந்து சொந்தமாக தொழிலைத் தொடங்கிட நம்பிக்கையைக் கொடுத்தது. இன்று 150க்கும்
மேற்பட்ட பொறியாளர்களுக்கும் வேலை கொடுத்துள்ளது இவர் நிறுவனம். தான் வாழ்ந்த
கிராம்த்திற்கு திருப்பி செய்ய வேண்டும் என்று விரும்பிய அஷோக் காடே அந்த ஊரில் 80
ஏக்கர் பண்ணையை நிறுவி தன் கிராம மக்களுக்கு வேலையளித்தார். அவர் உள்ளே செல்ல
அனுமதி மறுக்கப்பட்ட கோயிலையே அவர் புதிப்பித்து அந்தச் சமூகத்திற்கு சாதியிலிருந்து
கிடைத்த சமூக விடுதலையை பதிவு செய்துள்ளார். அஷோக் காடே தலித் சமுதாயத்தின் மிகப்
பெரிய தலித் தொழிலதிபராக இன்று முன்னுதாரணமாக வாழ்கிறார்.
பொருளாதாரத்தில்,
இப்படிப்பட்ட சாத்தியங்களை உருவாக்கிக் கொடுக்கும் சந்தை சாதிப்
பிரிவினைகளிலிருந்து வெளி வரும் சூழலை உருவாக்குகிறது. இந்த தடைகளற்ற சந்தை
யாரையும் உள்ளே வர, வர்த்தகம் செய்ய, முன்னேற வாய்ப்பளிக்கிறது என்றால் இந்த
அமைப்பைக் குறை சொல்வது தவறு. அமெரிக்காவின் பென்னிசில்வேனியா பல்கலைக்கழகம் செய்த
ஆய்வில் ,இன்று இதே சங்கிலி மாவட்டத்தில் 17க்கும் மேற்பட்ட தலித் தொழிலதிபர்கள்
இருக்கின்றனர் என்றுத் தெரிய வருகிறது. இவர்கள் தொழிலில் குறிப்பிடத் தகுந்த
எண்ணிக்கையில் உயர் சாதி வகுப்பினர்கள் வேலை பார்த்து வருகின்றனர் என்பது தான் மிக
முக்கியத்துவம் வாய்ந்தது.
உத்திரப்
பிரதேசத்திலும் இன்றையப் பொருளாதாரச் சூழலில் தங்களது சமூக நிலைகளில்
(தாழ்த்தப்பட்ட நிலை) இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட ஆய்வை CASI கண்டறிந்துள்ளது. தலித்துகள் கையில் இருக்கும்
முதல், சாதிக்கு எதிரான ஆயுதமாக உபயோகிக்க முடியும் என்று சாத்தியப் படுத்தியுள்ளன
இந்த ஆய்வுகள். மேலும் இந்த ஆய்வில், இன்று டெல்லியில் உள்ள நவீன வர்த்தகக்
கட்டிடங்களில் பணியாட்களாக தலித்துகளின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில்
தலித்துகள் அல்லாதோர் தான் இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.
தலித் நலன்களுக்காகவே
உருவான DICCI எனப்படும்
தலித்துகளுக்கான வர்த்தக மற்றும் தொழில் அமைப்பு இந்தியாவின் எல்லா மூலைகளிலும்
தலித்துகளுக்கான தொழில் வாய்ப்புகளில் உதவி செய்து வருகிறது. சங்கிலி மாவட்டத்தைப்
போல இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றம் நிகழுமாயின், மிகப் பெரிய அளவில்
சாதி பற்றிய நம் வேற்றுமைகள் மறையும் என்பது நிதர்சனம். அதற்கு சந்தைப்
பொருளாதாரம் மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது என்பதை மறுக்க முடியவில்லை.
முதலாளித்துவமோ,
தளர்த்தி வைக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரமோ தலித் நலனைக் கொள்கையாகக் கொண்டவையல்ல
தான், ஆனால் சரியான முறையில் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் சாதிப்
பாகுபாடுகளை, வேற்றுமைகளை ஏன் சாதியமைப்பையே மாற்றியமைக்கும் என்பதும் நிதர்சனம்.
- ஆதாரம் டைம்ஸ் ஆஃப்
இந்தியா, சந்திர பான் பிரசாத்தின்(தலித் இதழியலாளர்) பல்வேறு கட்டுரைகளை முன்
வைத்து
பஜ்ஜி-சொஜ்ஜி
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக