செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 17 ஜீன்ஸ் அணிவது ஆபத்து

(கடந்த ஆறு மாதமாக நான் ஜீன்ஸ் பேண்ட்டோ, டெனிம் சர்ட்டோ அணிவதில்லை -எதற்காக என்றால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காகத் தான்)

Clothing isn't designed to give us a shape that we don't have, and that's where people get in trouble
- Some one
(*படங்களைப் பார்ப்பதற்கு படத்தை கிளிக் செய்யவும்)

பார்ட்டி வேர், கேசுவல்ஸ், செமி கேசுவல்ஸ் என்று உடைகளைப் பகுத்துப் பார்த்து நாம் அதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகின்றது. "வெறும் உடை தானே அதற்கு ஏன் இத்தனைக் கூப்பாடு?" என்று வியக்காதீர்கள். நமது அன்றாட வாழ்வில் ஜீன்ஸ் வெகு சாதாரணமாக உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.  ஜீன்ஸ் நம் நாட்டின் பாரம்பரிய உடை என்று யாராவது வருங்காலங்களில் சொன்னால் கூட ஆச்சரியம் வருவதற்கில்லை.

ஜீன்ஸ் எனப்படும் பருத்தி ஆடைகள், மலைவாசத் தளங்களிலோ, குளிர் பிரதேசத்திலோ அணிந்து கொள்ளுதலை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.
மற்றபடி ஜீன்ஸ் மிக மிக ஆபத்தான ஒரு ஆடையாக அதைப் பற்றி தெரிந்து கொள்வது தேவையாயிற்று. ஜீன்ஸ் வந்த பிறகு இருபாலரும் அதை எளிதாக ஏற்றுக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர், இப்பொழுது மிக இறுக்கமான ஆடையாக அணிகிறார்க்ள். முதலில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வரும் ஆபத்துகளும், இரண்டாவதாக சுழலில், பொருளாதாரத்தில், செய்முறையில் உள்ள ஆபத்தையும் என விவாதிப்போம்.

இறுக்கமான ஆடையாக ஜீன்ஸை அணிவதில் என்ன பலன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தால், ஒரு பலனுமில்லை, எனும் பதில் தான் வருகிறது. கவர்ச்சி, அழகு எனும் பெயரில், ஜீன்ஸ் ஆடையை உடலோடு இறுக்கமாய் அணிவது, நமது உடல் அமைப்பை வெளியே எடுத்துக் காட்டும் வேலை ஒன்றை மட்டுமே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் நவீன யுகத்தில் இறுக்கமான ஆடை அணியும் வழக்கம் கலாச்சாரமாக மாறிட ஜீன்ஸின் பங்கு தலையாயது. இதனால் வரும் நோய்களின் பட்டியலும் மிகப் பெரியது.

*இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகள் தொடைகளில் ஏற்படுத்தும் வியர்வை மற்றும் அழுத்தம் காரணமாக பித்தப் பை, அண்டம் போன்றவற்றில் தொற்றுநோய் (infection) பரவலாம். அடிவயிற்று வலி காரணமாகக் குடல் வலி, ஆண்களுக்கு உறுப்புகளில் எரிச்சல், வியர்வைக் கொப்புளம் போன்றவற்றோடு விதைகளின் இடமாற்றம்meralgia paresthetica போன்ற நரம்புக் கோளாறுகள், lipoatrophia semicircularis என்பன போன்ற நோய்கள் வரும் அபாயம் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிரஃப் பத்திரிக்கைக்காக எடுத்த ஒரு ஆராய்ச்சியில் 2000 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர் (2012ல்). அவர்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளைத் தொடர்ந்து உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். அதன் முடிவில் பத்தில் ஒருவர் ஆடையை அசௌகரியாகக் கருதி அதைத் தவிர்க்கும் மனநிலையில் இருந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட பாதி பேருக்கு இரைப்பை மற்றும் பாலுறுப்புகளில் தொற்று நோயால்(infection) பாதிக்கப் பட்டனர், கால்வாசி பேருக்கு இரு தொடைகளுக்கு மத்தியில் படை இருந்தது, ஐந்தில் ஒருவருக்கு விதை இடமாற்றமாகியிருந்தது, பலருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருந்தது. இங்கிலாந்திலேயே இத்தனை ஆபத்துகளையும் தீங்குகளையும் தரும் ஜீன்ஸ் ஆடைகள் இந்தியாவின் தட்பவெப்பத்தில் எத்தனைக் கேடுகளைத் தரும் என்பது எல்லாருக்கும் எளிதில் விளங்கக் கூடியதே..

jeans weaving

சூழலுக்கும், பொருளாதாரத்திலும் எத்தனைக் கெடுதல் தருகிறது:


ஜீன்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு எத்தனைக் கெடுதல் தரும் என்று பார்க்கும் பொழுது முதலில் உலகின் ஜீன்ஸ் உற்பத்தியைப் பற்றிய விவரங்களைப் பார்க்க வேண்டும் (பார்க்க பட்டியல் 1). அவற்றுள் கிட்டதட்ட 60% சதவீத உற்பத்தியை ஆசிய நாடுகளே கொண்டுள்ளது. இந்த பட்டியல் வளர்ச்சியைக் கணக்கிட்டு ஒரு தொழிற் கூட்டமைப்பில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தான். ஆனால், இவை நமக்கு கொடுக்கும் அதிர்ச்சிகளோ ஏராளம். இதன்மூலம் வளர்ச்சி என்பது மிகவும் கேள்விக்குரியதாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். உலகில் உள்ள பிரபலமான எல்லா வகை ஜீன்ஸ் பிராண்டுகளும் நம் நாட்டில் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா (killer, denim, trigger போன்றன கர்நாடகாவில் தான் தயாராகின்றன)

1.உலகில் உள்ள நாடுகளில் 21% சதவீத உற்பத்தியும், 4.5 சதவீத வளர்ச்சியும் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. மிகப் பெரிய தொழிற்துறையாகவும் ஜீன்ஸ் உற்பத்தி இருக்கின்றது.

2.ஒரு ஜீன்ஸ் துணிக்கான பருத்தியைக் உற்பத்தி/கொள்முதல் செய்ய 6800 லிட்டர் தேவைப்படுகிறது, ஒரு டெனிம் துணியினை நீலச் சாயத்தில் ஊறல் போட்டு நிறம் மாற்றிடத் தேவைப்படும் நீர் மற்ற துணிகளை சாயம் போடுவதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றது.

3.ஜீன்ஸ் துணிக்கான கொள்முதல் செய்யப்படும் பஞ்சின் பற்றாக் குறையை, விலையேற்றத்தை சமாளித்துக் காப்பதற்கு பஞ்சின் தேவை அதிகமாகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளித்திட முதல் அழைப்பாக BT பருத்திகளை இறக்குவார்கள்.

4.இந்தியாவில் பருத்தி உற்பத்திற்கு 5% சதவீத நிலத்திலேயே பயரிடப்படுகிறது, ஆனால் இந்த உற்பத்திக்காக நாட்டின் 25% இருந்து 50% வரை சில பூச்சிக் கொல்லி மருந்து பருத்தி உற்பத்திக்காகவே பயன்படுத்தப் படுவதால் நிலத்தின் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது.

கடலில் கலக்கும் பியர்ல் ஆற்றின் நீல நிறம்
5.நீல நிறத்திறகாக எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறைகள் தான் மிக மிக ஆபத்தானது. இதற்காக உபயோகிக்கப் படும் சிந்தடிக் சாயங்கள் (முந்தைய காலத்தில் தாவரங்களிலிருந்து சாயம் எடுத்துவரப் பட்டது) பெரிய அளவில் ஆசியா நாடுகளில் நீர்நிலைகள் மாசுபடக் காரணமாக இருக்கின்றது. சீனா, இந்தோனெசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பாயும் நதிகளில் பல நிறங்கள் இருக்கின்றது. சீனாவில் Guang Zhou நகரில் உள்ள Pearl எனும் நதி நிறம் மாறிய அவலம் உலகின் மிகப் பெரிய தொழில் நகரம் என்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்நகரத்தின் வரலாற்றில் இருக்கிறது

6. ஆற்று நீரில் கலந்த சாயங்கள், பல குளங்களைத் தொடக் கூட இயலாதவாறு குடிநீர் பிரச்சனையையும், விவசாயம் பண்ண முடியாத சூழலையும் உருவாக்கிவிட்டது.

7.இதில் ஆபரணங்களாகத் தொங்கவிடப் படும் உலோக துணைக் கருவிகள் (accessories) தவறான உடைக் கண்ணோட்டத்தையும், ஆடை மீது அதிக விலை கொடுப்பதும் நடக்கின்றது.

8.ஜீன்ஸ் ஆடைகளை சாயமிட்டு முடித்தவுடன் செய்யப் படும் வண்ணநீக்கம் பற்றியும் 
sand blast
தெரிந்துக் கொள்ளவேண்டும், இதைSand Blast என்று சொல்லுவார்கள். அதாவது ஜீன்ஸ் ஆடை/துணி குழாய் வழியாக ஆடை மீது பக்குவப்படுத்தப்பட்ட மணலை ஆடைகளின் மீது சூடாக உயர் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட குழாய் மூலம் செலுத்தி ஆடைகளில் நிறத்தை மங்கச் செய்கின்றனர். ஆனால் இந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு நிறைய பக்கவிளைவுகளும், உடல் பிரச்சனைகளும் வருகின்றன. பல மேலை நாடுகளில் இந்த பணி செய்வதற்கு தடை வந்துவிட்டது, ஆகவே இதை முற்றிலுமாக ஆசியா நாடுகள் தான் செய்து வருகின்றன

 நமது பலம் என்ன? நமக்கு உகந்தது என்ன? என்றும் தெரியாமல் இருக்கின்றோம். இப்பொழுது eco-friendly ஜீன்ஸ் உற்பத்தி என ஆர்கானிக் காட்டன் மற்றும் உற்பத்தி முறையில் உள்ள மாற்றங்கள் செய்து சந்தையில் விலையுயர்ந்த ஜீன்ஸ்களை கொணர்ந்துவிட்டனர்.  

ஜீன்ஸ் ஆடையின் உளவியலே ஒரு வெளிக்காட்டுதலியல் (exhibitionism)  தான் அதாவது, ஜீன்ஸ் பேண்ட் என்றால் துணி என்பதற்கும் மேலே அதில் இருக்கும் லேபிள், உலோக பட்டன்கள், ஜிப் மற்றும் பட்டன்களின் அளவு, சில அலங்கார சங்கிலி, அலங்கார எம்பிராய்டரி மற்றும் பிரிண்டுகள் முதலியன சேர்ந்தது ஆகும். அதன் லேபிள் தான் ஜீன்ஸ் பேண்ட்டின் அதி முக்கிய பாகம் எனக் கருத முடியும், அதை வைத்து தான் பெரும்பான்மையான பேண்ட்கள் வாங்கப் படுகின்றன. அதாவது பிராண்ட் ஃப்ரீக்காக நம்மை வைத்திருக்கிறது.இதை வைத்துக் கொண்டு ஜீன்ஸ் ஆடைகள் வெறும் மோகத்தையும், பகட்டையும் அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவிற்கு எளிதில் வரலாம். ஏனெனில் இந்தியாவில் 80% ஜீன்ஸ் உற்பத்தி லேபிள் செய்து தான் விற்கப் படுகின்றன.

டாம் ரியான் என்பவர் கண்டுபிடித்துள்ள சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஜீன்ஸ் என்று டைட்டானியம் டை ஆக்ஸைடால் பூசப்பட்ட ஜீன்ஸ் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது என்று ஜீன்ஸ் மோகம் கொண்டு வாதாடினால் மீண்டும் 2-8 வரை வாசிக்கவும்.


கோக், பெப்சி போன்ற பானங்களை ஒதுக்கும் விழிப்புணர்வு இப்பொழுது ஓரளவு இருப்பதால், ஜீன்ஸ் பற்றிய உண்மையைப் பரப்புவதும் அவசியமாகிறது. ஜீன்ஸ் அணிவது உங்கள் சுதந்திரம் தான், ஆனால் அது அவசியமா??

 பட்டியல் 1
பிரதேசம்
ஜீன்ஸ் துணி தயாரிக்கும்  டெனிம் தொழிற்சாலைகள்
ஆசியா (சீனா)
297
ஆசியா(மற்றவை)
104
வட அமெரிக்கா
019
ஐரோப்பா
41
லத்தீன் அமெரிக்கா
46
ஆப்பிரிக்கா
15
ஆஸ்திரேலியா
01
        ***மொத்தம் 543 தொழிற்சாலைகள்
நன்றி
ஜீவ கரிகாலன்

பஜ்ஜி-சொஜ்ஜி 
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக