செவ்வாய், 2 ஏப்ரல், 2013

திசை



சரியாகச் சொல்லப் போனால் இந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் அவளிடம் நாற்பது ஐம்பது முறையாவது "ப்ளீஸ் கேட்டிருப்பேன், அவள் கண்டிப்பாக வந்துவிடுவாள் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.  அந்த ரெஸ்டாரெண்ட் உள்ளே அடிக்கடி சென்று அந்த டேபிளிள் யாராவது அமர்ந்து விடுவார்களோ என்று பார்த்துக் கொண்டேன். இழவெடுத்த மேனேஜர் “என்னாச்சு !! இன்னைக்கு என்ன கால்ஸ்என்று சேல்ஸ் ரிப்போர்ட் கேட்டுக் கொண்டிருந்தான். பதில் சொல்லி முடிக்கும் முன்னே அவள் சாலையில் வருவதைப் பார்த்துவிட்டேன்.

மானேஜரோடு பேசியதில் வியர்த்திருந்தது, அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். அவள் என்னைப் பார்க்கும் போது “என்ன நினைத்திருப்பாள்?. “இவனிடம் இப்படி மாட்டிக் கொண்டுவிட்டோமேஎன்றா?, “நறுக்குன்னு இன்னைக்கே எல்லாவற்றையும் தீர்த்துவிடனும் என்றா?, “பாவமாக இருக்கிறது, ஆனால் இரக்கப் பட்டால் அதை அவன் advantage  ஆக எடுத்துக் கொள்வானோ என்றா?. அவள் நினைப்பதை எப்படி என்னால் கண்டுபிடிக்க முடியும்?. அவள் என்ன லீனியர் ஈக்வேஷனா, இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என மாற்றி மாற்றி அவள் இதைத் தான் நினைத்திருப்பாள் என்று கூற.

 “வேலை இருக்கிறது, இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று என்னிடம் சொன்னாளே!! ஆனால் அவள் குறைந்தது அரை மணி நேரமாவது மேக்கப் போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் எப்படி இருந்திருப்பாள், தளர்வடைந்திருந்த தோள்களில் சோர்வைக் கண்டுபிடிக்கத் தெரியாதவனா நான்?
இல்லை காது மடல்களைத் தாண்டி இறங்கியிருக்கும் முடிக் கற்றைகளின் எண்ணிக்கை அரியாதவனா நான்? மஞ்சள் சுடிதாரில் இன்று தான் அவளை நான் பார்க்கிறேன். மஞ்சள் சுடிதார், வெள்ளை துப்பட்டாவோடு, தன் கூந்தலை முடித்து வைத்திருந்த விதமும் இதுவரை நான் அவளிடம் கண்டிராதது. ஒருவேளை பியூட்டி பார்லர் போய் வந்திருப்பாளா

எந்த சினிமா காட்சியோடவும் இணைத்துச் சொல்ல முடியவில்லை, இந்த மாலை வேளையில் நாங்கள் பரிமாரிக் கொண்ட பார்வையைப் பற்றி எப்படி சொல்வது. பிண்ணனி இசையில்லை, ஸ்பெசல் எஃபக்ட்ஸ் இல்லை, கனவும் இல்லை. ஆனால், ஒரு பெண் எனக்காக சில மணித்துளிகளை ஒதுக்கியிருக்கிறாள் என்ற உணர்வு என்னை என்னவோ செய்துக் கொண்டிருந்தது. அதுவும் தன்னை அலங்காரம் செய்துக் கொண்டு. சில விழாக்களில் அவள் உதட்டுச் சாயம் பூசியிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று எனக்காக, நான் ரசிப்பதற்காக அல்லது நான் வருந்துவதற்காக. இன்னும் அவள் சாலையைக் கடக்கவில்லை, ஒன்றிரண்டு வாகனங்களை தன்னைக் கடந்து போக அனுமதித்தால். நகர்ந்து சென்ற வாகனங்களுக்கு ஊடாக அவள் புன்னகையை கவனித்தேன்.

இது வரை அவள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எளிமையாக “ஹாய் சொல்லியிருக்கிறேன். இன்று எதற்காக அதைக் கூட சொல்லிப் பார்த்து ஒத்திகை செய்துக் கொள்கிறேன் என்று தெரியவில்லை. கடந்து வருகிறாள் சாலையை, ஒரு படி இறங்கி வந்து அவளிடம் “ஹாய் சொன்னேன். என் குரலை உற்று கவனித்ததில் நான் அவளிடம் இன்று பிச்சை கேட்கும் தொனியில் தான் பேசுகிறேன் என்று உணர்த்தியது. அவளிடம் தானே பரவாயில்லை. பதிலுக்கு ஹாய் சொன்னாள், புன்னகை செய்தேன். கைகளை முறுக்கினேன். “சரி லேட்டாகுது, நாம் அப்புறமா இன்னோர் நாள் பார்க்கலாமா ப்ளீஸ் என்றாள்.

 “என்னது லேட்டா!! அப்புறம் ஏன் இந்த மேக்கப்?? என்று அவளைக் கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் கேட்க முடியவில்லை, அவளிடம் எப்படிக் கெஞ்ச வேண்டும் என்று யோசித்தேன். நான் இப்போது உணரும் அவஸ்தையை ஏ.ஆர். ரஹுமான் இசையில் ஒரு பத்து வருடம் கழித்து மணிரத்னம் தான் விசுவல் ஆக்க முடியும் என்று தோன்றியது. இன்னொரு தடவை “ப்ளீஸ் என்றேன், “இது தான் லாஸ்ட் என்றேன், அப்புறம் தலையை சொறிந்தேன்.சரி வா என்றாள்!!. அவள் முன்னே இறங்கி சென்றாள், பின்னே...அவள் பின்னே, நெருங்கியபடி நானும் தொடர்ந்தேன். அவள் மீது ஒரு செயற்கை மனம் இருந்தது, ஆனால் எனக்குப் பிடித்திருந்தது.  முக்கியமான ஒன்றை நான் என் நண்பர்களிடம் கேட்க மறந்துவிட்டேன். அது என்னவென்றால் காதலியைக் கூட்டிச் செல்கையில் அவளோடு ஒரே சீட்டில் அமர்ந்து சாப்பிடனுமா, இல்லை எதிர் திசையில் அமர வேண்டுமா ??.
எதிரெதிரே அமர்ந்தோம். இப்படித் தான் அன்றும் என் எதிரே அமர்ந்திருந்தாள்...........

(தொடரும்......)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக