திங்கள், 22 ஏப்ரல், 2013

ஐயப்ப மாதவன் கவிதைகள் : நண்பனின் துயர்

எப்போதும் போலவே ரயில்களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறாள்
மாதச்சம்பளத்தை எண்ணி வாங்குவதற்காகவே ராஜி
சில வருடங்களாகவே நன்கு பழகிவருகிறேன்
மிருதுகொண்ட உள்ளத்திற்காய்
எப்படியாவது பார்த்துபேசிவிடுவதுண்டு இருவருக்குமிடையிலான
தேநீர்கோப்பைக்களுக்கிடையில
ஒவ்வொரு உறிஞ்சுதலுக்குமிடையில்
நான் அவளுக்கான அன்பில் அக்கறைகொள்வேன்
அவள் எனக்கான அன்பில் அக்கறைகொள்வாள்
நான் அவள் காதலனுடன் நண்பனாக இருந்தேன்
அவள் என் காதலனுடன் தோழியாக இருந்தாள்
நண்பனும் தோழியும் எங்களுக்கிடையே
ஊடல்களை தீர்த்துக்கொள்ள விழைந்தனர்
ராஜி அவள் பெயரில் என் காதலை உணர்ந்துபோது
உயரப்பறக்கும் பட்டத்தின் வாலில் மகிழ்வேன்
திட்டமிட்டதுபோல் சில நாட்களாய் அழைத்திருக்கவில்லை
தேநீர் விடுதிக்கு வருபவள் வரவுமில்லை
அன்றிரவு ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை
ராஜி ஏறி இறங்கும் ரயிலின்
தண்டவாளத்திற்குள் உயிரை விடுவாளென்று
இரும்புச்சக்கரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவள்
தேநீர் பருக வரும் ராஜிபோல இல்லை
நான் அழவே இல்லை
இது வேறு ராஜி என்று நினைத்துக்கொண்டேன்
ஆனால் அவள் எனக்கு இப்போது அழைப்பதில்லை
அந்த தேநீர்கடைக்கு வருவதுமில்லை
என் ராஜிதான் இறந்திருப்பாள் போலும்
அவளைக் காணாத கண்களில் அவள் காதலுனும்
என் காதலியும் கரைந்துபோயிருந்தார்கள்.

நண்பனின் ஆறுதலுக்காய்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக